|
||||||||
தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும் - உத்தரப் பிரதேசத்திலிருந்து எழுந்த கோரிக்கை! |
||||||||
![]() உத்தரப் பிரதேசத்தில் மகா கும்பமேளா சமயத்தில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலைக்கு அறிமுக விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை பாஷா சங்கம், மத்தியக் கலாச்சாரத் துறை, சென்னையின் சிஐசிடியுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இதழ் நடத்தியது. இதில், உத்தரப் பிரதேசத்தின் தமிழ் அதிகாரிகள் பங்கேற்றனர். திருக்குறள் மொழிபெயர்ப்பு நூலை, வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கமத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (சிஐசிடி) வெளியீடான அதன் அறிமுக விழாவும் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றித் துவக்கப்பட்ட விழாவில் திருவள்ளுவரின் சிறிய உருவச் சிலையும், இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலும் சிஐசிடி சார்பில் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டன. உ.பி.யில் திருவள்ளுவர் சிலை அமைக்க முதன்முதலில் கோரிய பாஷா சங்கத்தின் பொதுச் செயலாளரான மறைந்த கே.சி.கவுடுவின் மனைவி ரேகா கவுரை விருந்தினர்கள் பாராட்டி விழாவில் கவுரவித்தனர்.
உ.பி.யின் பிரயாக்ராஜில் மொழிகளைப் பாலமாக்கி தேச ஒற்றுமைக்காக 49 வருடங்களாகச் செயல்படும் பொதுநல அமைப்பு பாஷா சங்கம். இதன் சார்பில் கடந்த 34 வருடங்களாக பிரயாக்ராஜில் சிலை வைக்கக் கோரப்பட்டு வந்தது.
இறுதியில் பிரயாக்ராஜில் டிஐஜியாக அமர்த்தப்பட்ட தமிழரான டாக்டர்.என்.கொளஞ்சி முயற்சியால், மகா கும்பமேளா சமயத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. அதோடு, பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருந்த விழா நடைபெறவில்லை. இதற்கு மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கில் குவிந்த மக்கள் நெரிசல் காரணமானது. இதனால், சிலைக்கான அறிமுக விழாவை பாஷா சங்கம், மத்தியக் கலாச்சாரத் துறை, அலகாபாத் அருங்காட்சியகம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் ஆகியோருடன் ’இந்து தமிழ் திசை’ நாளேடும் இணைந்து நடத்தின.
பிரயாக்ராஜின் டிஐஜியான முனைவர்.என்.கொளஞ்சி தன் உரையில், “வெறும் ஏழு வார்த்தைகளின் ஒரு குறள் ஆழமான கருத்துகளைக் கொண்டது. பிரதமர் அறிமுகப்படுத்திய யோகா தினம் போல், உலகத் திருக்குறள் அல்லது திருவள்ளுவர் நாள் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். கல்வித் திட்டத்தில் தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குறளையாவது போதிக்க வேண்டும்.
நம் நாட்டின் தேசியப் பறவை, விலங்கு, மலரைப் போல், தேசிய நூலாகத் திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும். வட இந்தியாவில் ஒரு மனிதன் பிறக்கும்போதே இறைவனால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாக நம்பிக்கை உண்டு. ஆனால், ‘தெய்வத்தால் ஆகாதெனினும்’ எனும் குறளின்படி இறைவனால் முடியாததையும் மனிதர் தன் முயற்சியால் வெல்ல முடியும். எனவே, இங்குள்ளவர்கள் ஒரு நாளுக்கு ஒரு குறளாவது படித்தறிவது நல்லது’ எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற விழாவில் வாரணாசியின் மண்டல ஆணையரான எஸ்.ராஜலிங்கம் பேசுகையில், “இங்குத் திருவள்ளுவர் சிலை நிறுவக் கோரிய பாஷா சங்கம், அதற்காக உதவிய இந்து தமிழ் திசை மற்றும் டிஐஜி கொளஞ்சி ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
அறம், பொருள், இன்பம் என அனைத்தின் மீதும் 1330 குறள் எழுதியது திருவள்ளுவரின் தனித்துவம். அவர் தம் குறளில் தமிழ் எனும் வார்த்தையை எங்குமே பயன்படுத்தவில்லை. இதுபோன்ற காரணங்களால்தான் அது உலகப் பொதுமறையாகக் கருதப்படுகிறது. தமிழகத்துக்கு வந்த மகாத்மா காந்தி மூலமொழியான தமிழைக் கற்று திருக்குறளைப் படிப்பேன் எனத் தெரிவித்தார்.
நன்றி - இந்து தமிழ் திசை
https://www.hindutamil.in/news/india/1363987-inauguration-ceremony-of-thiruvalluvar-statue-held-in-prayagraj.html
|
||||||||
by hemavathi on 02 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|