LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்கி (Kalki ) -கள்வனின் காதலி

திருப்பதி யாத்திரை

                                     திருப்பதி யாத்திரை

திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமானுக்கு உலகத்திலே நாம் எங்கும் கேட்டறியாத ஓர் அபூர்வமான சபலம் இருந்து வருகிறது. தம்மிடம் வரும் பக்தர்களின் தலையை மொட்டையடித்துப் பார்ப்பதில் அவருக்கு ஒரு திருப்தி. வேறே எங்கேயாவது மொட்டையடித்துக் கொண்டு வந்தால் பிரயோஜனமில்லை. அவருடைய சந்நிதியிலேயே மொட்டையடித்துக் கொண்டு தலைமயிரையும் அவ்விடமே தான் அர்ப்பணம் செய்யவேண்டும். சாதாரணமாய்க் குழந்தைகளை அப்படிப் பார்ப்பதிலேதான் அவருக்கு அத்தியந்த ஆசை. ஆனால் சில சமயம் மீசை முளைத்த, தலை நரைத்த பெரியவர்களுங் கூட அங்கே போனதும் கடவுளுக்கு நாம் குழந்தைகள் தானே என்ற எண்ணத்திலே தலையை மொட்டையடித்துக் கொண்டு விடுகிறார்கள். "சாமியாவது, பூதமாவது? அப்படி ஒரு சாமி இருந்தால், அவர் தான் என்னை வணங்கட்டுமே? நான் ஏன் அவரை வணங்க வேண்டும்?" என்று பேசும் பகுத்தறிவுப் பெரியவர்கள் கூடத் திருப்பதிக்குப் போனதும் பகுத்தறிவெல்லாம் பறந்துபோகத் தலையை மழுங்கச் சிரைத்துக் கொண்டு விடுகிறார்கள். கூந்தல் வளரும் தைலங்கள் தடவி அருமையாக வளர்த்த அளகபாரத்தை எத்தனையோ ஸ்திரீகள் அங்கே பறிகொடுத்து விட்டு வருகிறார்கள்.

     அந்த வருஷம் கல்யாணியின் தகப்பனார் திருச்சிற்றம்பலம் பிள்ளைக்குக் குடும்பத்துடனே திருப்பதி போய் வர வேணுமென்ற விருப்பம் ஏற்பட்டது. தலை மொட்டையடிப்பதற்கு அவருடைய இளைய தாரத்தின் குழந்தைகள் ஏராளமாய் இருந்தார்கள். வெங்கடேசப் பெருமாளுக்குக் குடும்பத்திலே வேண்டுதலும் இருந்தது. கல்யாணி அவ்வளவு பெரிய சொத்துக்காரியா யிருக்கும் போது, செலவுக்குப் பணத்துக்குத்தான் என்ன குறைவு? திருப்பதிக்குப் போய் வந்து, விமரிசையாகக் 'கம்ப சேர்வை' நடத்தி, கூத்துவைக்க வேணுமென்றும் அவர் முடிவு செய்திருந்தார். கல்யாணியிடம் இதைப் பிரஸ்தாபித்தபோது, அவள் ஆவலுடன் தானும் வருவதாகத் தெரிவித்தாள்.

     கல்யாணி பூங்குளத்துக்கு வந்து மூன்று மாதம் ஆயிற்று. ஆரம்பத்தில் முத்தையனைச் சந்தித்துப் பேசியதன் பயனாக அவளுடைய உள்ளத்தில் சிறிது அமைதி ஏற்பட்டிருந்தது. நாளாக ஆக அந்த அமைதி குன்றி, பரபரப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. "முத்தையன் ஏன் இன்னும் வரவில்லை? அவன் எங்கே போனான்? என்ன செய்கிறான்?" என்று அவள் உள்ளம் ஒவ்வொரு கணமும் கேட்டுக் கொண்டிருந்தது. அவனைப் பார்க்க வேணுமென்ற தாபத்தினால் அவளுடைய தாபம் மிதமிஞ்சிப் போகாத வண்ணம் ஒருவாறு ஆறுதல் அளித்து வந்தது அந்த நதிக்கரைப் பிரதேசந்தான். இந்த இரண்டு மூன்று மாத காலமாகக் கல்யாணி பழையபடி கொள்ளிடக்கரை வனதேவதையாக விளங்கினாள். தினந்தவறினாலும் அவள் நதிக்குக் குளிக்கப் போவது தவறுவதில்லை. அப்படிப் போகிறவள் திரும்பி வீட்டுக்கு வர அவசரப்படுவதுமில்லை. நெடுநேரம் காடுகளில் சுற்றிக் கொண்டிருப்பாள். அவள் கன்னிப் பருவத்தில் பழம் பறித்துத் தின்ற நாவல் மரம், இலந்தை மரம் இருக்குமிடமெல்லாம் இப்போதும் தேடிச் செல்வாள்; கிளைகளை உலுக்குவாள். உதிர்ந்த பழங்களை ஓடிஓடிப் பொறுக்கிச் சேர்ப்பாள். அப்போது முத்தையனுடைய ஞாபகம் வந்து விடும். அப்படியே தரையில் உட்கார்ந்து பகற்கனவில் ஆழ்ந்து விடுவாள். ஐயோ! தன்னை மட்டும் முத்தையனுக்குக் கட்டிக் கொடுத்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்த மயமாக இருந்திருக்கும்?

     தினம் ஒரு தடவை பாழடைந்த கோவிலுக்குச் சென்று பார்ப்பாள். ஒவ்வொரு நாளும், "இன்றைக்கு வந்திருப்பானோ?" என்ற அடங்காத ஆவலுடனே செல்வாள். படபடவென்று அடித்துக் கொள்ளும் மார்பை அமுக்கிப் பிடித்துக் கொண்டு போய்ப் பார்ப்பாள். முத்தையன் வழக்கமாய் உட்காரும் மேடை வெறியதாயிருக்கக் கண்டதும் அவள் நெஞ்சு துணுக்கமடையும். ஒரு வேளை தன்னை அலைக்கழிப்பதற்காகப் பக்கத்தில் எங்கேயாவது ஒளிந்திருப்பானோ என்று கூட நாலா புறமும் தேடிப் பார்ப்பாள்.

     ஏன் இன்னும் வரவில்லை? அபிராமியை ஒரு தடவை பார்த்து வரவேணுமென்றுதானே போனான்? பார்த்தானோ இல்லையோ? ஒரு வேளை அவள் அவனைப் பிரிய மாட்டேன் என்று சொல்லிவிட்டாளோ? இருவருமாகக் கப்பலேறிப் போய் விட்டார்களோ?

     சகிக்க முடியாத இந்த எண்ணம் தோன்றும் போது அவளுக்கு அபிராமியின் மீது கோபம் அசாத்தியமாக வரும். அந்தப் பாழும் அபிராமியினாலேதான் தன்னுடைய வாழ்க்கை பாழானதெல்லாம்! அவள் எதற்காக பிறந்தாள்? அவள் பிறக்கவேண்டியது அவசியமென்றால் தன்னை எதற்காகப் பகவான் படைக்கவேணும்?

     இப்படி ஒவ்வொரு நாளும் கல்யாணிக்கு முடிவில்லாத ஒரு யுகமாகப் போய்க் கொண்டிருந்தது. இத்தகைய சந்தர்ப்பத்திலேதான் திருச்சிற்றம்பலம் பிள்ளை குடும்ப சகிதமாகத் திருப்பதி யாத்திரை கிளம்பினார். ஆடி பிறந்து நடவு ஆரம்பமாகிவிட்டால் அப்புறம் எங்கும் கிளம்ப முடியாதென்றும் யாத்திரை புறப்பட இது தான் சரியான தருணம் என்றும் அவர் எண்ணினார்.

     நாளுக்கு நாள் உள்ளக் கிளர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்த கல்யாணிக்குத் தான் பூங்குளத்திலேயே இன்னும் இருந்தால் பைத்தியமே பிடித்துவிடும் போல் தோன்றிற்று. யாத்திரை கிளம்பிச் சென்றால், பல இடங்களைப் பார்ப்பதில் சிறிது மனத்தைச் செலுத்தலாமல்லவா? ஒரு வேளை போகுமிடங்களில் ஏதாவது முத்தையனைப் பற்றிய செய்தி காதில் விழுந்தாலும் விழலாமல்லவா - இந்த எண்ணத்துடனே தான் கல்யாணியும் திருப்பதிக்குக் கிளம்பச் சித்தமானாள்.

     குறிப்பிட்ட நல்ல நாளில் திருச்சிற்றம்பலம் பிள்ளையின் குடும்பம் திருப்பதிக்குப் பிரயாணமாயிற்று. 

by C.Malarvizhi   on 29 Feb 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.