LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[101-125]

பாடல் 101 - திருச்செந்தூர்
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி
தனதான தந்த தனதான தந்த
     தனதான தந்த ...... தனதான
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
     மிகவானி லிந்து ...... வெயில்காய 
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
     வினைமாதர் தந்தம் ...... வசைகூற 
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
     கொடிதான துன்ப ...... மயல்தீர 
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
     குறைதீர வந்து ...... குறுகாயோ 
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
     வழிபாடு தந்த ...... மதியாளா 
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
     வடிவேலெ றிந்த ...... அதிதீரா 
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
     மடியாரி டைஞ்சல் ...... களைவோனே 
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
     அலைவாயு கந்த ...... பெருமாளே.
வீரனாம் மன்மதன் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, நிதானமான தென்றல் காற்று வந்து தீப்போல வீசிப் பொருந்த, வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்ந்த மாலைப் பொழுதினிலே நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவு கொண்டு உன்னை அறிந்து, உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார்களின் துயரைக் களைபவனே, அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே. 
* மன்மதனின் ஐந்து மலர்க்கணைகள்: தாமரை, முல்லை, மாம்பூ, அசோகம், நீலோற்பலம்.
பாடல் 101 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தந்தா தந்தா தந்தா தந்தா
     தந்தா தந்தத் ...... தனதான
வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்
     மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை 
மென்கே சந்தா னென்றே கொண்டார்
     மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி 
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்
     வன்பே துன்பப் ...... படலாமோ 
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா
     வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் 
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்
     குன்றாள் கொங்கைக் ...... கினியோனே 
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
     ரும்போய் மங்கப் ...... பொருகோபா 
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்
     கன்றே வும்பர்க் ...... கொருநாதா 
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
     கந்தா செந்திற் ...... பெருமாளே.
கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன் - இவற்றை ஒத்த கண்கள், பால், மென்மையான வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள், இருளை ஒத்த மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது மாதர்களின் மென்மையான தோள்களைத் தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி, வங்காள நாடு, சோனக நாடு*, சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய் வம்பிலே கொடிய துன்பத்தைப் படலாமோ? வலிமை மிகுந்த தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே, வந்து இந்த நொடியிலேயே என்னை ஆண்டருள்வாயாக. வாசனை மிக்க பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும் வள்ளிமலையில் வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே, சூரனுக்கு அரணாக விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும், பட்டு அழியும்படியாக போர் செய்த சினத்தை உடையவனே, எலும்புகளும் கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய், தேவர்களின் ஒப்பற்ற தலைவனே, சங்குகள் தவழும் கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே, கந்தனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சோனகம் 56 தேசங்கள் சேர்ந்த பாரத நாட்டில் ஒரு தேசம்.
பாடல் 103 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -
தந்த தானன தானன தந்த தானன தானன
     தந்த தானன தானன ...... தனதான
வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு
     வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன் 
வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை
     வென்ற சாயக மோகரு ...... விளையோகண் 
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத
     சங்க மாதர்ப யோதர ...... மதில்மூழ்கு 
சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
     தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே 
பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்
     பண்டு போலம ராவதி ...... குடியேறப் 
பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை
     பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே 
செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
     திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே 
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
     செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.
விரும்பத் தக்க தாமரை மலரோ, கொடிய விஷமோ, கயல் மீனோ, பெரிய இன்பக் கடலோ, மாவடுவின் பிளவோ, முன்பு வெந்து போன பழைய மன்மதன் சிவபெருமான் மீது செலுத்தி வென்ற அம்போ, கரு விளை மலரோ அந்தக் கண்கள்? யாவரும் அடைக்கலம் புகும் இடமோ, யம தூதர்களுடைய மனமோ என்று சொல்லக் கூடிய, மோக வெறி பிடித்த சேர்க்கையையே நாடும் விலைமாதர்களுடைய மார்பகங்களில் மூழ்குகின்ற எண்ணம் அழிய, உனது இரண்டு, கூதள மலர்களின் நறு மணமுள்ள மாலை தோய்ந்துள்ள, தண்டைகள் விளங்கும் திருவடிகளை நீ அளிப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? ஐந்து பெரிய பாதகங்களையும்* செய்யும் தாருகன் என்னும் யமனை ஒத்த அசுரன் பொடியாகும்படியும், தேவர்கள் முன்பு இருந்தபடியே பொன்னுலகத்தில் குடி ஏறவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனையும், திருமாலையும் பயப்படாதீர்கள் என்று கூறி, மாயையில் வல்ல (கிரவுஞ்ச) மலை கேடு அடைந்து பொடியாகவும் வேலைச் செலுத்திய இளையவனே. சிவந்த சடைக்காட்டின் மேலே, கங்கை, குருக்கத்தி, ஆத்தி, சந்திரன் இவைகளைச் சூடிய தலைவராகிய சிவ பெருமான் அளித்த பெரிய செல்வமே, செண்பக வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்ததும், பெரிய மதில்கள் சூழ்ந்ததுமான திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சம்பரன் என்ற அசுரனை தன் மறு பிறவியில் கொன்றவன் மன்மதன்.
** திரிபுரங்களையும் எரித்தவரான புராரி சிவபெருமான்.
*** ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
பாடல் 104 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன
     தனதன தத்தா தத்தன ...... தனதான
அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு
     மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார 
அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள
     வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன் 
பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய
     பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின் 
பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு
     ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே 
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்
     பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப் 
பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை
     புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே 
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்
     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென் 
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை
     யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.
பரந்த வினை வசத்துக்கு* உட்பட்ட ஆறு சமயத்தவரோடும்** அஞ்சாது தடுத்து வாதம் செய்யும் அறிவு இல்லாதவனும், பரந்த மார்பை உடைய, அழகிய அகில் மணமுள்ள, கஸ்தூரி இவை உள்ள ஒப்பற்ற படுக்கையில் தாம் கையில் பெற்ற பொருளின் அளவுக்குத் தக்கபடி அன்பு காட்டும் வேசியருடைய நட்பிலே தடுமாறும் ஓர் அறிவை உடைய (புழுப்போன்ற) நான். பகல், இரவு எப்போதும் பணி செய்து, (பற்றுக்களை) முழுதும் விட்டவர் அடையும் பரம சொரூபமாயும், ஜோதி வடிவமாயும், சிவ மயமாயுமுள்ள உனது பழனித் தலத்துக்குப் போய், பிறவி என்கின்ற வினை நீங்க, தேன் துளிர்க்கின்ற வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பி உள்ள நல்ல திருவடிகளைப் பற்றும் நாள் எனக்குக் கிடைக்குமா? சீகாழி என்னும் தலத்துக்கு அழகும் பெருமையும் பெருகவும், சரணம் அடைந்த மதுரைக் கூன் பாண்டிய அரசனுடைய வெப்புநோய் தணியவும், விளங்கும் திருநீற்றால் கோரைப் புல்லாகிய பாய்களை உடுத்திய சமணர்களை வென்று, அவர்கள் கழுவில் ஏறவும், வாதம் செய்து வெற்றி பெற்ற ஆற்றல் உடையவனே (திருஞான சம்பந்தனே), வஞ்சனை உடைய, குதிரை முகம் கொண்ட பெண் பூதத்தின் வசத்தே நடுவில் அகப்பட்ட புலவர்களில் ஒருவராகிய நக்கீரருக்கு*** உதவி புரிந்த வேந்தனே, மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட திருமாலின் மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே, வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள், இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை (ஞான சம்பந்தராகத் தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே. 
* வினைகள்: மூன்று வகையான ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்பனவும், இரண்டு வகையான நல்வினை, தீவினை என்பனவும் ஆகும்.
** சட் சமயங்கள்:உட் சமயங்கள் (6): வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம்.புறச் சமயங்கள் (6): உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்.
*** குதிரை முகமுடைய ஒரு பெண் பூதம், சிவ பூஜையில் தவறியவர்களை ஒரு குகையில் அடைத்து, ஆயிரம் பேர் சேர்ந்ததும் கொன்று தின்னும். குகையில் சிக்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகன் மகிழ்ந்து வேலால் குகையையும் பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும் மற்ற புலவர்களையும் விடுவித்தான்.
பாடல் 105 - பழநி
ராகம் - .....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
அணிபட் டணுகித் திணிபட் டமனத்
     தவர்விட் டவிழிக் ...... கணையாலும் 
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
     தவன்விட் டமலர்க் ...... கணையாலும் 
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
     பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும் 
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
     பெறுதற் கருளைத் ...... தரவேணும் 
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
     கனியைக் கணியுற் ...... றிடுவோனே 
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
     கருதிச் சிறைவைத் ...... திடுவோனே 
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
     பரிவுற் றொருசொற் ...... பகர்வோனே 
பவளத் தவளக் கனகப் புரிசைப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.
வரிசையாக நின்று, அருகில் வந்து, கல்நெஞ்சுடைய பொதுமாதர் என்னை மயக்கச் செலுத்தும் விழிகளாகிய அம்புகளினாலும், வண்டுகள் சுற்றி மொய்க்கும் கரும்பு வில்லை உடைய செல்வந்தனாகிய மன்மதன் விடுத்த மலர் அம்புகளினாலும், மன நோய் அடைந்து, அறிவு நீங்கி, கேடுற்று, யமனையே அடையச் செய்திடும் தீய குணங்கள் நிறைந்து, இந்த உயிரானது மாண்டு போகும் பிறவியாகிய சமுத்திரத்தை விடுத்து நீங்கி, உயர்ந்த நன்முக்தியை நான் பெறுவதற்கு, நீ திருவருள் தந்தருள வேண்டும். வேங்கை மரத்தின் நல்ல உருவை எடுத்து மலைக்கன்னியாகிய வள்ளியை அடையக் கருதி அவளிடம் சென்றவனே, தாமரையில் அமரும் பிரமனை, பிரணவத்தின் உரையைச் சொல்லமாட்டாத காரணத்திற்காக சிறைச்சாலையில் அடைத்தவனே, பாம்பையும் கங்கை நதியையும் சடையில் அணியும் அந்த சிவபிரான் துதிசெய்ய, அவரிடம் அன்பு கொண்டு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்தவனே, பவள நிறம், வெண்ணிறம், பொன்னிறம் உள்ள மதில்கள் சூழ்ந்த பழநியில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே. 
பாடல் 106 - பழநி
ராகம் - .....; தாளம் - ........
தனன தனதனன தந்தத்த தந்ததன
     தனன தனதனன தந்தத்த தந்ததன
          தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான
அதல விதலமுத லந்தத்த லங்களென
     அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென
          அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு 
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
     அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென
          அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம் 
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி
     ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி
          லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன் 
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென
     மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்
          உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ 
ததத ததததத தந்தத்த தந்ததத
     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி 
சகக சககெணக தந்தத்த குங்கெணக
     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
          தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம் 
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக
     அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு
          பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி 
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு
     கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்
          பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
அதலம் விதலம் முதலான அந்தக் கீழ்* ஏழு உலகங்கள் எனவும், இப்பூமி எனவும், தேவர்களின் அண்டங்களான மேல்* ஏழு உலகங்கள் எனவும், சகல கடல்கள் எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும் முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட மந்திரங்கள் எனவும், சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள்** எனவும், அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை, எனது உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை நீ முன்பு வந்து உதவி அருள, இடைவிடாத அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக, இசை வடிவப் பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ் என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை நம்ப மாட்டேன். ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி என்ற சந்தத்துக்கேற்ற தாளத்தில் பதலை திமிலை முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப, எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்க, போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள் ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச, போரை வென்று மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின் பெருமாளே. 
* கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.
** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
பாடல் 107 - பழநி
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - அங்கதாளம் - 8 - எடுப்பு 1/2 தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான
அபகார நிந்தைபட் ...... டுழலாதே
     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே 
உபதேச மந்திரப் ...... பொருளாலே
     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ 
இபமாமு கன்தனக் ...... கிளையோனே
     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா 
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா
     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.
பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும், நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்) உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த* நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே. 
* முருகனிடமிருந்து ஜெபமாலையை பெற்ற நிகழ்ச்சி அருணகிரியார் வாழ்வில் நடைபெற்றது.
பாடல் 108 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதன தானத் தான தனத்தத்
     தனதன தானத் தான தனத்தத்
          தனதன தானத் தான தனத்தத் ...... தனதான
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
     பலவித கோலச் சேலை யுடுத்திட்
          டலர்குழ லோதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்
     திருநுதல் நீவிப் பாளி தபொட்டிட்
          டகில்புழு காரச் சேறு தனத்திட் ...... டலர்வேளின் 
சுரதவி நோதப் பார்வை மையிட்டுத்
     தருணக லாரத் தோடை தரித்துத்
          தொழிலிடு தோளுக் கேற வரித்திட் ...... டிளைஞோர்மார் 
துறவினர் சோரச் சோர நகைத்துப்
     பொருள்கவர் மாதர்க் காசை யளித்தற்
          றுயரற வேபொற் பாத மெனக்குத் ...... தருவாயே 
கிரியலை வாரிச் சூர ரிரத்தப்
     புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்
          கிரணவை வேல்புத் தேளிர் பிழைக்கத் ...... தொடுவோனே 
கெருவித கோலப் பார தனத்துக்
     குறமகள் பாதச் சேக ரசொர்க்கக்
          கிளிதெய்வ யானைக் கேபு யவெற்பைத் ...... தருவோனே 
பரிமள நீபத் தாரொ டுவெட்சித்
     தொடைபுனை சேவற் கேத னதுத்திப்
          பணியகல் பீடத் தோகை மயிற்பொற் ...... பரியோனே 
பனிமல ரோடைச் சேலு களித்துக்
     ககனம ளாவிப் போய்வ ருவெற்றிப்
          பழநியில் வாழ்பொற் கோம ளசத்திப் ...... பெருமாளே.
மஞ்சள் வாசனை சேர்ந்த நீரில் குளித்து, பலவிதமான வண்ணச் சேலைகளை உடுத்து, மலரணிந்த கூந்தல் மயிரை சிக்கெடுத்துச் சீவி முடித்து, சுருண்டுள்ள (அந்தக் குழலுடன்) நெருங்கிப் போர் புரிகின்ற காதணியைத் தரித்து, அழகிய நெற்றியைச் சீர்படத் துடைத்து, பச்சைக் கற்பூரம் கலந்த பொட்டை இட்டு, அகில், புனுகு இவை நிரம்பிய குழம்பை மார்பில் பூசி, மலர்க்கணை ஏந்திய மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறியவாறு காமத்தை எழுப்பி விநோதங்களைக் காட்டும் கண்களில் மையைப் பூசி, அப்போது அலர்ந்த செங்கழு நீர் மாலையைச் சூடி, வேசைத் தொழில் செய்யும் தோளுக்குப் பொருந்தும் வகையில் நிரம்ப அலங்கரித்து, இளைஞர்கள் முதல் துறவிகள் வரை அனைவரும் தளரத் தளரச் சிரித்து, பொருளைக் கவர்கின்ற விலைமாதர் மேல் ஆசை வைத்தலாகிய துன்பம் நீங்கவே, உனது அழகிய திருவடிகளை அருள்வாயாக. மலைகளிலும், அலைகளுடன் கூடிய கடலிலும் இருந்த அசுரர்களுடைய ரத்தக் கடலில் முழுகி, பேய்கள் (உடல்களைத் துய்த்து) இன்புறுமாறும், தேவர்கள் பிழைத்து உய்யுமாறும், ஒளி வீசும் கூரிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, செருக்கு உறத் தக்க, அழகிய, கனமான மார்பகத்தை உடைய குறமகளாம் வள்ளி நாயகியின் திருவடியைத் தலை மேல் சூடியவனே, விண் உலகில் வளர்ந்த கிளி போன்ற தேவயானைக்கே மலை போன்ற தோள்களைக் கொடுப்பவனே, நறுமணம் உள்ள கடப்ப மாலையோடு, வெட்சி மாலையை அணிந்துள்ள சேவல் கொடியோனே, படத்தில் பொறிகளை உடைய பாம்பு அஞ்சி அகல்கின்ற, ஆசனம் போல் விளங்கும் கலாப மயில் என்கின்ற அழகிய குதிரை போன்ற வாகனத்தைக் கொண்டவனே, குளிர்ந்த மலர் ஓடையில் சேல் மீன்கள் களிப்புடன் ஆகாயம் வரை எட்டிப் பார்த்துத் திரும்பி வரும் வெற்றிப் பழனி மலையில் வாழ்கின்ற, ஒளியும் அழகும் பூண்ட ஞான சக்திப் பெருமாளே. 
(இந்தப் பாடலில் வேல், மயில், சேவல், தேவயானை, வள்ளியம்மை, கடம்பு, வெட்சி, திருவடி யாவும் வருகின்றன).
பாடல் 109 - பழநி
ராகம் - பிலஹரி ; தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2, 
தகதிமி-2, தகதிமிதக-3 
- எடுப்பு - அதீதம்
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்
     அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும் 
தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன்
     தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே 
எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்
     இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம் 
பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை
     பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.
ஆசையை விருத்தி செய்கின்ற இந்த வாழ்க்கையில், சரசம் செய்யும் மனைவியும் சுற்றத்தாரும், நண்பர்களும், இன்பம் நல்கும் குழந்தைகளும், வாழ்கின்ற செழிப்பான நாடும், குடிபுகுந்த ஊரும் நிரந்தரம் என்று மனம் நினைக்கும் பொய் எண்ணத்தை நினைக்காமல் உன்னையே நினைத்தும் துதித்தும், வழிபடுகின்றதுமான தொழிலை எனக்கு நீ தர வேண்டும். ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு ஏறிய சிவபெருமானின் செவிக்குள் புகுமாறு வேத மந்திரத்தை உபதேசம் மொழிந்தருளிய இனிய நாவினை உடையவனே, தினைப்புனத்தின் பரணில் இருந்த வள்ளியின் இருபாதங்களையும் தாங்கிய திருமுடியை உடையவனே, தேவேந்திரன் செய்த தவத்தினால் அவதரித்த தேவயானை கணவனாகக் கொண்ட பன்னிரு புயத்தோனே, பழனியில் வாழும் பெருமாளே. 
பாடல் 110 - பழநி
ராகம் - பெளளி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 - எடுப்பு 1/2 தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் 
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் 
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் 
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் 
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் 
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா 
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
     படியதிர வேந டந்த ...... கழல்வீரா 
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.
இந்த பூமியிலே பிறந்து குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞனாய் அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழிகளே பேசி அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து வயதும் பதினாறு ஆகி, சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளையே நினைந்து துதிக்காமல், மாதர்களின் மீது ஆசை மிகுந்து அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரிகின்ற அடியேனை, உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த பார்வதியின் குமாரனே பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மேல் ஏறி விளங்கி பூமி அதிரவே வலம் வந்த வீரக் கழல் அணிந்த வீரனே மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் என விளங்கி பழனிமலையில் வீற்ற பெருமாளே. 
பாடல் 111 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனா தனதத்த தனதனா தனதத்த
     தனதனா தனதத்த ...... தனதான
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு
     ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி 
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை
     யதிகமா வுதவிக்கை ...... வளையாலே 
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ
     ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ 
டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து
     ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும் 
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி
     மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா 
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க
     மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா 
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி
     பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி 
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற
     பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.
அறவழி இல்லாத தொழிலைக் கற்று, கொடுமை பூண்ட வேலைப் போல் கூரிய கண்ணைச் செலுத்தி, உள்ளத்தில் அறிவு என்பதை நீக்கி, விலை பேசி, படுக்கையின் மேல் சேர்த்து, தமது பவளம் போன்ற சிவந்த வாய் அமுதத்தை அதிகமாகத் தந்து, உறவு கூறிக் கொண்டு, வளைக் கையாலே உடலை இறுகத் தழுவிக் கொண்டு, உலையில் இட்ட மெழுகு போல் உருக்கம் காட்டும் விலைமாதர்களோடு கூடி உருகி வருகின்ற ஒழுக்கம், காம நாடகம் என்கின்ற பித்த மயக்கம் என்னை விட்டுத் தொலையுமாறு ஒப்பற்ற முக்தி இன்பத்தைத் தரவேண்டும். வேடர் குலத்து மாது, ஒப்பற்ற பரிசுத்தமான, தாமரையில் வாழும் லக்ஷ்மியாகிய மயில் போன்றவளாம் வள்ளியைத் தழுவுகின்ற வெட்சி மாலை புனைந்த அழகிய மார்பனே, திகைத்து மயங்கி நின்ற அசுரன் மலை போல உருகி விழும்படி, சிறந்த மயில் மீது ஏறிய கொடுமையான வடிவேலனே, பறைகளை விரும்பும் ருத்ரி, கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவள், பரமராகிய சிவபெருமான் பக்கத்தில் உறைகின்ற சக்தி, எமது தாய், பழம்பொருளாக நிற்கும் பார்வதி, துர்க்கை, பெரிய நாயகி* என்னும் பெயரை உடையவள் ஈன்ற, பழனி மா மலையில் வீற்றிருக்கும், பெருமாளே. 
* பழநிமலை அடிவாரத்தின் மேற்கேயுள்ள தலத்தில் எழுந்தருளியுள்ள தேவியின் பெயர் பெரிய நாயகி ஆகும்.
பாடல் 112 - பழநி
ராகம் - ....; தாளம் -
தானா தனதன தானா தனதன
     தானா தனதன ...... தனதான
ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
     யாலே யமுதெனு ...... மொழியாலே 
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
     யாலே மணமலி ...... குழலாலே 
சூதா ரிளமுலை யாலே யழகிய
     தோடா ரிருகுழை ...... யதனாலே 
சோரா மயல்தரு மானா ருறவிடர்
     சூழா வகையருள் ...... புரிவாயே 
போதா ரிருகழல் சூழா ததுதொழில்
     பூணா தெதிருற ...... மதியாதே 
போரா டியஅதி சூரா பொறுபொறு
     போகா தெனஅடு ...... திறலோனே 
வேதா வுடனெடு மாலா னவனறி
     யாதா ரருளிய ...... குமரேசா 
வீரா புரிவரு கோவே பழநியுள்
     வேலா இமையவர் ...... பெருமாளே.
தற்பெருமைப் பேச்சு பேசும் பொது மகளிர் காட்டும் ஆடம்பரக் கண்களாலும், அமுதைப் போன்ற இனிய பேச்சாலும், ஆழ்ந்த அழகிய சிரிப்பாலும், உடுக்கை போன்ற இடுப்பாலும், வாசனை மிகுந்த கூந்தலாலும், சூதாடும் கருவி போன்ற இளமையான மார்பகத்தாலும், அழகிய தோடுகள் அணிந்த இரண்டு செவிகளாலும், தளராத மயக்கம் தருகின்ற விலைமாதர்களின் உறவால் வரும் துன்பங்கள் என்னைச் சூழாத வண்ணம் அருள் புரிவாயாக. மலர் நிறைந்த திருவடிகளைச் சிந்தியாமலும், பணியும் தொழிலை மேற்கொள்ளாமலும், எதிரே வந்து மோதுவதைப் பற்றி நினைக்காமலும் போர் செய்ய வந்த அதி சூரனை பொறு பொறு (தீய வழியில்) போகாதே என்று கூறி அவனை அழித்த வல்லமை வாய்ந்தவனே, பிரமனுடன், நீண்ட திருமாலாலும் அறியாதவாரகிய சிவபெருமான் பெற்றருளிய குமரேசனே, வீரைநகரில்* எழுந்தருளியிருக்கும் தலைவனே, பழனியில் இருக்கும் வேலனே, தேவர்கள் பெருமாளே. 
* வீரைநகர் திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத் தலம்.இப்பாடல் திருவாவினன்குடியின் கீழும் தரப்பட்டுள்ளது.
பாடல் 113 - பழநி
ராகம் - ....; தாளம் -
தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
          தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆல காலமெ னக்கொலை முற்றிய
     வேல தாமென மிக்கவி ழிக்கடை
          யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை 
ஆர வாணைமெ யிட்டும றித்துவி
     கார மோகமெ ழுப்பிய தற்குற
          வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச் 
சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
     மாள வேசிலு கிட்டும ருட்டியெ
          சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர் 
தாக போகமொ ழித்துஉ னக்கடி
     யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
          தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே 
வால மாமதி மத்தமெ ருக்கறு
     காறு பூளைத ரித்தச டைத்திரு
          வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே 
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
     வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
          வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே 
நாலு வேதந விற்றுமு றைப்பயில்
     வீணை நாதனு ரைத்தவ னத்திடை
          நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே 
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
     சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
          ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே.
ஆலகால நஞ்சு என்னும்படியும், கொலைத் தொழில் முதிர்ந்த வேற்படை என்று சொல்லும்படியும் உள்ள மிகக் கொடிய கடைக் கண்ணாலும் மோகத்தை விளைவித்து பலவித வகையில் இளைஞர்களை நிரம்ப ஆணைகளை உண்மை போலக் கூறி, அவர்களை எங்கும் போக விடாமல் தடுத்து, பொல்லாத ஆசையை உண்டுபண்ணி, அதற்கு வசப்பட்ட பேர்வழிகளை தங்கள் கைவசப்படுத்தி, அனேக விதங்களாக, மிகவும் காம மயக்கத்தைத் தந்து, அவர்களுடைய கையில் உள்ள பொருள் அத்தனையும் வற்றிப் போகும்படி சண்டை செய்தும், மயக்கியும், சாதி வேற்றுமை இல்லாமல் மனிதர்களைத் தழுவித் திரிகின்ற விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி, உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு, உனது இரண்டு திருவடிகளை தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக. முற்றாத இளம் பிறை, ஊமத்த மலர், எருக்கு, அறுகு, கங்கை ஆறு, பூளைப்பூ ஆகியவற்றை அணிந்துள்ள சடையைக் கொண்ட மதுரைப் பிரான் ஆகிய சொக்கேசர் ஈன்றருளிய அற்புதமான முருகோனே, மாய மானாக வந்த மா¡£சனையும், அரக்கர்களையும் வெற்றி கொண்டவரும், வாலியின் மார்பைத் தொளைக்கும் வண்ணம் வில்லை ஏந்தி அம்பை எய்தவரும், மற்போருக்குப் பொருந்திய புயத்தை உடையவருமான (ராமனாகிய) திருமாலின் மருகனே, நான்கு வேதங்களையும் சொல்லப்பட்ட முறைப்படி பயின்று நவில்கின்ற, வீணை ஏந்திய நாரதர் குறிப்பிட்டு உரைத்த (வள்ளி மலைக்) காட்டினிடையே தேடி ஓடிச் சென்று குறத்தியாகிய வள்ளியைக் கொண்டு வந்தவனே, தென்னையும் பலாவும் பழுத்து உதிர்க்கும் சோலைகள் சூழ்ந்த பழனி என்னும் ஊரில் சிறந்த ஞான பூரண சக்தியாகிய வேலாயுதத்தைத் தரித்தருளும் பெருமாளே. 
பாடல் 114 - பழநி
ராகம் - மோகனம் / நாட்டைகுறிஞ்சி; தாளம் - கண்டசாபு - 2 1/2
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தந்ததான
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி 
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் 
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் 
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ 
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே 
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா 
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் 
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.
'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே', 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய ஈசனே', 'என் பெருமை உனது பெருமை' என்று கூறியும் ஏழையடியார்களின் மனத்துயர் ஏன் எப்படி வந்தது என்று முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை யார்தாம் புகழ்வார்கள்? வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய் வேலனே அழகிய நீலமயில் வாகனனே உமையாள் பெற்ற முருகவேளே அசுரர்கள் அனைவருடனும் என்னுடைய தீவினையாவும் மடிந்தொழிய நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே கோபித்து வந்த பெரும் அசுரன் (கஜமுகாசுரன்) உயிரை உண்ட ஆனைமுகத் தேவரின் தம்பியே மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும் அழகு நிறைந்த பழநிவாழும் குமரனே பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே முருகனே, தம்பிரானே. 
பாடல் 115 - பழநி
ராகம் - ....; தாளம் -
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
  தானத் தனந்ததன தானத் தனந்ததன
    தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
      தானத் தனந்ததன தானத் தனந்ததன
        தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
          தானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான
இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
  கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்
    தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
      ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
        யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர
          வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி 
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு
  வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
    திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்
      தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக
        மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை
          மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச் 
சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம
  னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது
    பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ
      ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்
        தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி
          னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச் 
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
  யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய
    இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி
      நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது
        சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை
          பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும் 
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
  தாதத் தனந்ததன தானத் தனந்ததன
    செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
      தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
        தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
          தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித் 
திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
  வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு
    சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
      மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி
        சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
          நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா 
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக
  னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு
    முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக
      ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக
        மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
          மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய ...... மருமகனாகி 
வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக
  ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி
    யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி
      யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய
        வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
          வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ...... வருபெருமாளே.
இந்தப் பூவுலகத்தில் மனித வித்தாகத் தோன்றி, அழுது, பெரு மூச்சு விட்டுத் திணறித் (தாயின்) மடிமீது கிடந்து, தவழ்ந்து, கால்களைத் தத்தித் தத்தித் தளர் நடையிட்டு, தெருவில் ஓடித் திரிந்து, புதுமையான கோடிக்கணக்கான நூல்களை இங்குச் சிறப்புப்படி கற்றுக் கொண்டு, பதினாறு வயது ஆனதும், இளமைப் பருவத்துக்குரிய குணங்களில் பயிற்சியுள்ள அழகிய பெண்களுடன் நட்பு கொண்டு, கரும்பு வில்லினையும் அரிய மலர்களையுமுடைய மன்மத சேஷ்டையால் சோர்வடைந்து, பல வகையாக கலம்பகம் முதலிய நூல்களை (செல்வந்தர்கள் மீது) பாடி, அவர்களைப் புகழ்ந்து, பல திக்குகளிலும் திசை முடிவு வரை சென்று அதிகமாகப் பொருள் தேடி, நல்ல வாசனை கமழும் மலர்ப்படுக்கைகளில் உறங்கி, (விலைமாதர்களது) இன்பத்தை நல்கும் ஆசையில் உருகி, திரட்சியான மார்பகங்களின் இடையே முழுகிக் கிடந்து, காம மயக்கத்தோடு அழுந்திக் கிடந்து, சில நோய்கள் வந்து மூடி, நல்லறிவு கெட்டுக் கிடக்கும் போது, யமன் (என்னைத்) தொடர்ந்து வந்து பாசக் கயிற்றால் கட்டி உயிரைக் கொண்டு போகும் போது என்னைப் பெற்றவர்கள் சுற்றி நின்று அழவும், சுற்றத்தார்கள் மிக அழவும், இவர் ஊராருக்கு ஒரு நாளும் அடங்கியதில்லை, நமனுக்கு இன்று அடங்குமாறு இனி உயிர் நிலை பெறாது, இவருக்கு பிரமன் இன்றோடு அழியும்படி விதித்திருக்கிறான், (முன் எழுதியது போல்) யமன் ஓலை வர இன்று இறந்து விட்டார் என்று சிலர் கூறவும், நாழிகை ஆயிற்று, சுடலைக்கு எடுங்கள் என்று சிலர் சொல்லவும், ஓடிச் சென்று திட்டமிட்டபடி புதிய பறைகள் ஆகிய வாத்தியங்களை முழக்கவும், சுடுகாட்டுக்குச் சென்று, உடல் நன்கு வெந்து நீறாவதற்கு வரட்டி முதலியவற்றை அடுக்கி, அந்த நெருப்பில் எரிந்து போனார் என்று துயரத்தோடு ஒருவரை ஒருவர் கட்டி அழுது, தண்ணீரில் முழுகி விடுபட்டுப் போகும் பாசத்தினின்றும் விலகி, உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து, உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும். தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாதத் தனந்ததன தானத் தனந்ததன செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிண் என்று ஒலிக்கும்படி ஒப்பற்ற மயிலின் மீது ஏறி வந்து, வலிமையில் தேர்ந்த ரதத்தின் மீது வந்த அரக்கர்கள் இறந்து படுமாறு சண்டை செய்து, கடலை வற்றச் செய்து, ஏழு மலைகளையும் பிளந்து நின்ற சித்த* மூர்த்தியே, தேவர்களுக்கு எல்லாம் மேலான தலைவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களைச் சேர்ந்து இன்பத் திருவிளையாடல்களைச் செய்து (உனது தோள்களில்) நறு மணம் படிந்துள்ள தூய்மையானவனே, பார்வதிக்கு ஒரு முத்து என்னும்படியாக முளைத்தும், குருநாதக் குழந்தை என்று பேர் பெற்றும், ஓடி விளையாடிக் கடப்ப மலரை அணிந்தும் உள்ள திருமார்பனே. மதங்களை மிகவும் பொழிகின்ற யானை முகம் உடைய கணபதியின் பின்பு உதித்த குக மூர்த்தியே குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும், மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர் மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி, வற்றாத தேன் போலக் கருணையைப் பூண்டு, வேத நூல்களை ஓதி நன்கு பயின்று தமிழை ஆராய்ந்து (தேவாரப்) பாமாலைகளைத் தந்தைக்குச் சூட்டிய (திருஞானசம்பந்தாராக வந்த) ஐயனே, பரம் பொருளை இன்னது என்று (உலகத்தோர்க்கு) அறிவித்து, உயிரைச் சூழ்ந்திருக்கும் அருட் பெருஞ் சோதியாக விளங்கி, துதி நூல்களைப் பெற்றணிந்த, வேலாயுதத்தை ஏந்தி விளங்கும் தோள் கூட்டங்களை உடையவனே, வாசனை உள்ள புனுகு எப்போதும் கமழும் பழநிப் பதியில் வீற்றிருப்பதில் மகிழ்ந்து அடியார்களின் ஆவிக்குள் நின்று உலவி வரும் பெருமாளே. 
* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர். அடியார்களின் சித்தத்தைக் கொள்ளை அடிப்பதால் இந்தப் பெயர்.
பாடல் 116 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தானான தனதனன
     தனதனன தனதனன தானான தனதனன
          தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான
இரவியென வடவையென ஆலால விடமதென
     உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
          இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ 
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
     யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
          இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச 
அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
     அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
          அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள் 
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
     அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை
          யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே 
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
     பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
          நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே 
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
     கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
          நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா 
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
     படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
          பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா 
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
     வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
          பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.
சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகாத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும் கொடிய வடிவை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தின் மேலே செல்லும் சந்திரனும் வர, ரதி தேவியின் கணவனாகிய மன்மதன் முதல் நாலு மலர்ப்பாணங்களைச் செலுத்த, அவனது வெற்றிச் சின்னமான (எக்காளமாகிய) குயில் கூவ, ஏழு கடலாகிய, அவனுடைய முரச வாத்தியத்தின் இசையும், புல்லாங் குழலின் ஓசையும், மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகளின் ஓசையும் நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும் பாய்ந்து போராடவும், காம வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை மொழிகளைப் பேசி நகையாடவும், அரகர என்று இப்பெண் படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது மிக மிகக் கடினம். அமுதமும் மயிலும் போன்று எப்போதும் இருக்கும் என் மகள் இந்த நிலை எல்லாம் கருதி எல்லோரிடமும் பகைமைப் போர் செய்கின்றாள். மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும், மிகவும் மெலிந்து போனாள். இப்பெண் திக்கற்றவள். இவள் தலை விதி இங்ஙனம் இருந்த போதிலும் உன்னை விட்டு நீங்குதல் என்பது முடியாது. இவளை அடிமை கொள்ளுவது உன்னுடைய பொறுப்பேயாகும். காதல் தணியாத, தன்னந் தனியளாகிய அந்தப் பெண்ணை அணைந்து ஆட்கொள்ளுமாறு, இனிமையுடன் ஓங்கார வடிவத்தோடு கூடிய மயிலின் மேல் (முருகா) நீ வந்து அருளுக. மலையில் பசுக் கூட்டங்கள் எல்லாம் துதி செய்து தம்மைச் சூழந்து வர, ஒப்பற்ற மருத மரத்தையும், போர் புரிந்து கொல்வதற்காக வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொன்று, பசுக்கள் அழியுமாறு மழை பெய்வது தடைபட, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த, தாமரை போன்ற கரங்களை உடைய கோபாலனின் மருகனே, மாசு இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச எழுந்தருளும் குமரி, கெளரி, காளி, பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி, நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே, கடலும், மலையும், அசுரர் கூட்டமாகிய பெரிய படையும் தவிடு பொடியாகவும், தேவர்கள் துன்பம் நீங்கவும், வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த தாமரை மலர் போன்ற திருக் கரங்களை உடையவனே, முருகனே, நான்கு வேதங்களிலும் வல்ல ஞான ஒளியினருக்கு அணிகலமாக விளங்குபவனே, மயில் வீரனே, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவைச் சேறு நிரம்பி வளர்கின்ற மார்பகங்களை உடைய மங்கை, குறப் பெண்ணாகிய வள்ளி மகிழும் இன்பத் திருவிளையாடல்களைச் செய்தவனே, வாக்கு வல்லமை நிறைந்த, சுவை நிரம்பிய நூலாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராக வந்து) உலகுக்குத் தந்தருளியவனே, பழனிப் பதியில் எழுந்தருளியுள்ள கோலாகலமானவனே, தேவர்களின் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், குயில், மன்மதன், மலர்ப் பாணங்கள், கடல் ஓசை, குழல் ஓசை, மாடுகளின் மணி ஓசை, மகளிர் வசைப் பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 117 - பழநி
ராகம் - .....; தாளம் -
தனதனன தானான தானதன தந்த
     தனதனன தானான தானதன தந்த
          தனதனன தானான தானதன தந்த ...... தனதான
இருகனக மாமேரு வோகளப துங்க
     கடகடின பாடீர வாரமுத கும்ப
          மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ 
இலகுமல ரேவாளி யாகியஅ நங்க
     னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த
          இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல் 
பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து
     தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து
          பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப் 
பிணியினக மேயான பாழுடலை நம்பி
     உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு
          பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ 
கருணையுமை மாதேவி காரணிய நந்த
     சயனகளி கூராரி சோதரிபு ரந்த
          கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலா 
கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு
     மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு
          கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே 
பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து
     கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு
          பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா 
பலமலர்க ளேதூவி யாரணந வின்று
     பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து
          பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே.
இரண்டு பொன் மயமான பெரிய மேரு மலையோ? கலவைச் சந்தனம் அணிந்த, பரிசுத்தமான, பச்சைக் கற்பூரம் அணிந்த, கச்சை அணிந்த அமுத கலசத்துக்கு சமானமென்று கூறப்படும் இளநீரோ? துதிக்கையை உடைய மலை எனப்படும் யானை போன்ற இரண்டு குன்றுகளோ? சிறந்த மலர்களையே கணைகளாகக் கொண்ட மன்மதனுடைய அழகிய கி¡£டம்தானோ? என்று ஒப்பிட்டுச் சொல்லும்படி மிக வளர்ந்துள்ள இள மார்பகங்களையுடைய மின்னலைப் போன்ற பொது மகளிரின் காம வலையில் அகப்பட்டு, அந்த மோகம் குறைவு படாமல், தாராள மனத்துடன் ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்* நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி, தினமும் (இங்ஙனம்) இரந்து நிலை காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி, உயிரைப் பயனிலதாக நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ? கருணை நிறைந்த பார்வதி, எல்லாவற்றுக்கும் காரணமானவள், ஆதிசேஷன் மேல் துயில் மகிழ்ச்சியுடன் கொள்ளும் திருமாலின் சகோதரியானவள், திரிபுரம் எரித்த சிவபெருமானுடன் (நடனத்தில்) போட்டியிட்ட காளி, (இமய) மலை அரசின் குமாரி பெற்ற குழந்தையே, கருடனோடு போட்டியிடுவது போல உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும் பெரிய மாட மேடைகளும் துலங்குகின்ற கலிசை என்னும் ஊரில் உள்ள காவேரி சேவகன்** என்ற மன்னனிடத்தில் அன்பு பூண்டவனே, கடலிடையே பாதக அசுரர்கள் விழுந்து கதறவும், இந்திரனுடைய உள்ளத்து எண்ணம் பலித்தது என்று அவன் மகிழ்ந்து (தேவலோகத்துக்குச்) செல்ல, மயில் மீது எழுந்தருளி வந்த குமரேசனே, பல விதமான மலர்களைத் தூவி, வேதங்களை ஓதித் துதி செய்து தேவர்கள் சூழ நின்று நாள் தோறும் மகிழ்ந்து நிற்க, பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும் பெருமாளே. 
* ஐந்து தேவ தருக்கள்: சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.
** கலிசை என்னும் ஊரில் அக்காலத்துத் தலைவனாக இருந்த ஒரு அன்பன். அருணகிரிநாதரின் நண்பன்.
பாடல் 118 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்
     திளகிப் புளகித் ...... திடுமாதர் 
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்
     றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத் 
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்
     தழுவிக் கடிசுற் ...... றணைமீதே 
சருவிச் சருவிக் குனகித் தனகித்
     தவமற் றுழலக் ...... கடவேனோ 
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்
     குரியத் திருமைத் ...... துனவேளே 
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்
     றசுரக் கிளையைப் ...... பொருவோனே 
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்
     பயனுற் றறியப் ...... பகர்வோனே 
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.
இரண்டு செப்புக் குடங்கள் போலவும், மலை போலவும், வட்ட வடிவுடன் விளங்கி இளகிப் பூரிக்கும் பெண்களுடைய இடைக்கு அழகிய சுமையாக உள்ள மார்பகங்களைப் பெறும் பொருட்டு அவர்களுடன் நட்பு கொண்டு, நெருங்கி அணுகி, அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ, (அவர்கள்) தருகின்ற உடல் இன்பத்தை அடைந்து, வாயிதழ் ஊறலை உண்டு, (அவர்களைத்) தழுவி, வாசனை உலவுகின்ற படுக்கையின் மேலே, காம லீலைகளை இடைவிடாமல் செய்து, கொஞ்சிப் பேசி, உள்ளம் களித்து, தவ நிலையை விட்டு திரியக் கடவேனோ? திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய* தலைவனே, வெற்றி உள்ள சேவல் ஆகிய நல்ல கொடியை ஏந்தி, எதிர்த்து வந்த அசுரர்களுடைய கூட்டத்தைத் தாக்கியவனே, அன்பு பூண்டு சிவனுக்கு, அருள் பாலிக்கும் நல்ல பிரணவப் பொருளை அதன் பயனை உணர்த்தும் வகையில் உபதேசித்தவனே, வாயு மண்டலம் வரை நிறைந்திருக்கும் உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.
பாடல் 119 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதன தனதன தந்த தானன
     தனதன தனதன தந்த தானன
          தனதன தனதன தந்த தானன ...... தனதான
இலகிய களபசு கந்த வாடையின்
     ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ
          இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக் 
கலவியி லவரவர் தங்கள் வாய்தனி
     லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
          கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே 
சிலைதரு குறவர்ம டந்தை நாயகி
     தினைவன மதனிலு கந்த நாயகி
          திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா 
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ
     அயிலயி லதனையு கந்த நாயக
          குருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே.
விளங்குகின்ற சந்தனக் கலவைகளின் நறுமணம் வீச, கஸ்தூரியை (தம் மார்பில்) மகிழ்ச்சியுடன் பூசியும், வெற்றிலைச் சுருளையும் பாக்கின் பிளவையும் உண்டு, அதை இன்பகரமான பேச்சுடன் புணர்ச்சியின் போது (தங்களிடம்) வந்துள்ள அவரவருடைய வாயில் இடுபவரும், பற்பல எண்ணங்களை உடைய விலைமாதர்கள் மீதுள்ள பற்றினை நான் விட்டு விடும் அந்த நாள் எது என்று சொல்லுவாயாக. (வள்ளி) மலை தந்த குறவர் மகளான வள்ளி நாயகி, தினைப் புனத்தில் நீ விருப்பம் கொண்ட நாயகியின் திரண்ட மார்பகங்களைத் தழுவிய நாயகனே, சிவலோகனே. கொலைத் தொழிலைச் செய்யும் அசுரர் கூட்டத்தினர் மாண்டு அழியும்படி கூரிய வேலாயுதத்தை மகிழ்ந்து தோளில் ஏந்தும் நாயகனே, குரு மூர்த்தியே, பழனி மலையில் என்றும் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 120 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதான
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு
     மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே 
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு
     மிலகியக ரும்பு ...... மயலாலே 
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து
     நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால் 
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த
     நினைவொடுமி றந்து ...... படலாமோ 
புலவினைய ளைந்து படுமணிக லந்து
     புதுமலர ணிந்த ...... கதிர்வேலா 
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை
     பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா 
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த
     பருமயில டைந்த ...... குகவீரா 
பணைபணிசி றந்த தரளமணி சிந்து
     பழநிமலை வந்த ...... பெருமாளே.
கனிந்த பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட பேச்சும், இரவில் தூங்கும் இரண்டு கண்கள் என்னும் விஷமும், முகத்தின் மேல் (முகத்தை மலரென்று நினைத்து) இசை ஒலிக்கும் வண்டும், இளம் மார்பகங்களாகிய மொட்டுக்களும், கரும்பைப் போல் விளங்கும் தோளும் (கொண்ட என் மகள்) காம மயக்கம் கொண்டு, நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, கரு நிறம் அடைந்து, வேதனைப்பட்டு, நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும், மன்மதன் காரணமாக, தனது நிலை அழிந்து போகும் மனதில், அவளது தலைவர் குடி புகுந்த நினைவு ஒன்றையே கொண்டு இவள் இறந்து படுதல் நீதியாகுமோ? புலாலை மிகவும் குதறிக் கலந்ததும், ஒலிக்கின்ற மணியுடனே புதிய மலர்களைத் தரித்ததுமான, ஒளி வீசும் வேலை ஏந்தியவனே. புனுகு நறு மணம் வீச குற மகள் வள்ளியின் குரும்பை போன்ற மார்பகங்கள் தாக்குதலால் மொட்டு விரிந்த மலர் மாலை அணிந்த மார்பனே, பல நிறங்கள் நெருங்கியதாய், சிறப்பான சிறகுகள் பரந்து ஒளிரும் பருத்த மயிலை வாகனமாக அடைந்துள்ள குக வீரனே, வேலைப்பாட்டுக்கு ஏற்ற சிறந்த முத்து மணிகளை மூங்கில்கள் உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.நிலவு, மன்மதன் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 121 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனத்தான தனதனன தனத்தான தனதனன
     தனத்தான தனதனன ...... தனதான
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
     ஒருக்காலு நெகிழ்வதிலை ...... யெனவேசூள் 
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம
     துடைத்தாய்பின் வருகுமவ ...... ரெதிரேபோய்ப் 
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல
     படப்பேசி யுறுபொருள்கொள் ...... விலைமாதர் 
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
     பதத்தாள மயிலின்மிசை ...... வரவேணும் 
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
     தரத்தாடல் புரியுமரி ...... மருகோனே 
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
     தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வே 
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது
     செயித்தோடி வருபழநி ...... யமர்வோனே 
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
     திருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.
உயிரானது இந்த உடம்பை விட்டுப் பிரிகின்றவரை உம்மைக் கூடியிருக்கும் தொழிலை ஒருக்காலும் நழுவ விட மாட்டேன் என்று சபதம் செய்து, முன்பு தாம் சேர்ந்திருந்த ஆடவர்களை வெறுத்து விலக்கி, பொன் முதலிய பொருள்களை அடையப் பெற்று, பின்னர் வருபவர்களின் எதிரில் சென்று, ரகசிய வார்த்தைகளைப் பேசி, அவர்களுக்கு விருப்பமானச் சொற்களைப் பலவாறு கூறி, அவர்களிடம் உள்ள பொருளைக் கொள்ளை கொள்ளும் பொது மகளிர்கள் காட்டும் பருத்த அங்க அவயவங்களாகிய வலையில் வசப் படுதலை தவிர்த்து என்னை ஆண்டருள, மணிகள் புனைந்த பாதங்களையுடைய மயிலின் மேல் வந்தருள வேண்டும். தயிரைத் திருடுபவன் என்ற அந்த மொழி நிந்தையைப் புகல்கின்ற கோபிகளுடன் திருவிளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே, (சம்பந்தரின் திருநெறித் தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி, திருவிடை மருதூர், வேதரணியம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே, வயல்களில் உள்ள சேல் மீன்கள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களுடன் போரிடச் சென்று, மிக்கு எழும் போரைப் புரிந்து வெற்றி பெற்றுத் திரும்பி ஓடி வரும் பழனியில் வீற்றிருப்பவனே, தினைப் புனத்தைக் காவல் புரிய வல்ல குறவர் மகளான வள்ளியின் மார்பைத் தழுவும் திருத் தோளனே, தேவர்கள் தொழுகின்ற பெருமாளே. 
பாடல் 122 - பழநி
ராகம் - ஸெளராஷ்டிரம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
தகதிமிதக-3
தனதனன தான தந்த ...... தனதான
     தனதனன தான தந்த ...... தனதான
உலகபசு பாச தொந்த ...... மதுவான
     உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் 
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்
     மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் 
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே
     சரவணப வாமு குந்தன் ...... மருகோனே 
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே
     பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் எனது புத்திநிலை கெடாதவாறு உனது திருவருளைத் தந்தருள்வாயாக. கங்கை நீர், அறுகம்புல், பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே, சரவணபவனே, திருமாலின் மருமகனே, பல கலைகளாலும், சிவாகமங்களாலும் புகழப்படுவோனே, பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 123 - பழநி
ராகம் - பேகடா; தாளம் - அங்கதாளம் - 11 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2 
தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
     தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே
     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே 
பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
     பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ 
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே
     தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே 
விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே
     விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.
ஒரு வேளை கூட உனது இரண்டு திருவடிகளிலும் அன்பையே வைத்து அறிய மாட்டேன். உன் பழநிமலை என்னும் பதியினை வணங்கி அறியமாட்டேன். இப்பெரிய பூமியில் உயர்ந்ததும், அருமையானதுமான வாழ்க்கையை முற்றுமாக யான் குறிக்கொள்ளவில்லை. (இவ்வளவு குறைகளிருந்தும்) பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன். என் ஆசைப்பாடுகளை ஒழிக்க மாட்டேனோ? பாவத் தொழில்களையே செய்யும் அசுரர்களின் ஊர்களை சூறாவளி போல் வீசியடித்த பெருமாளே, உனை வணங்கி வழிபடுகின்ற அடியார்களுக்கு காவற்காரனாக இருந்து உதவும் பெருமாளே, வெற்றிக் கவிகளை உலகுக்கு உதவிய அற்புத மூர்த்தியாகிய (ஞானசம்பந்தப்)* பெருமாளே, வீரம் வாய்ந்த குறவர்களின் மகள் வள்ளிக்கு தக்க சமயத்தில் காவலாயிருந்த பெருமாளே. 
* முருகனே ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்தார் என்று பல இடங்களில் அருணகிரியார் கூறுகிறார்.
பாடல் 124 - பழநி
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் - 5 
தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 - திஸ்ர ரூபகம்
தனதன தனன தான தனதன தனன தான
     தனதன தனன தான ...... தனதான
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
     ஒருகுண வழியு றாத ...... பொறியாளர் 
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
     உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின் 
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
     மறைவரி னனைய கோல ...... மதுவாக 
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
     வடிவுற அருளி பாத ...... மருள்வாயே 
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்
     திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன் 
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத
     திருநட மருளு நாத ...... னருள்பாலா 
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி
     துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே 
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி
     தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய மத ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை உடையவர்களுமான மக்கள் இந்த உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து கொண்டே வந்து, இறுதியாக அனைவரும் யமனுடைய நரகத்தில் சென்று வீழ்வர். அந்த நிலை முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து, நல்வினை, தீவினை என்ற இருவினைக் கடலில் உளைந்து மறைவர். இத்தகைய மனிதர்களின் கோலம் அவ்வாறாக, (யான் அவ்வாறு அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக திருநீற்றைத் தந்து, நல்ல நிலையை நான் அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. திரிபுரம் எரிந்து விழவும், கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் எரிந்து விழவும் புன்சிரிப்பாலும், நெற்றியிலுள்ள திருக்கண்ணாலும் அருள் புரிந்த மெய்ஞ்ஞான குருநாதனும், லக்ஷ்மி, ஸரஸ்வதி, மஹேஸ்வரி ஆகியோரது தலைவர்களாகிய திருமால், பிரமன், ருத்திரன் ஆகியோர் ஓதிப் போற்ற திரு நடனம் ஆடி அருளிய நாதன் சிவபிரான் அருளிய குழந்தையே, தேவர்கள் தலைவன் இந்திரனும், பிரமனும், திருமாலும் முறையிட்டு உன்னடி பணிய, அசுர கோடிகள் தூளாகுமாறு செலுத்திய மெய்ஞ்ஞான சக்தி வேலாயுதனே, சுகம் பாலிக்கும் குறமகள் வள்ளியின் மணவாளன் என்று வேதங்கள் பலவும் போற்றிப் புகழ, பழமை வாய்ந்த பழநிப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 125 - பழநி
ராகம் - ....; தாளம் -
தான தான தனத்தன தத்தன
     தான தான தனத்தன தத்தன
          தான தான தனத்தன தத்தன ...... தனதான
ஓடி யோடி யழைத்துவ ரச்சில
     சேடி மார்கள் பசப்பஅ தற்குமு
          னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி 
நீடு வாச நிறைத்தஅ கிற்புழு
     கோட மீது திமிர்த்தத னத்தினில்
          நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ 
நாடி வாயும் வயற்றலை யிற்புன
     லோடை மீதி னிலத்ததி வட்கையி
          னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங் 
கோடு லாவி யமுத்துநி ரைத்தவை
     காவுர் நாட தனிற்பழ நிப்பதி
          கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே.
இளைஞர்களை ஓடி ஓடி அழைத்துவரவும், சில தோழிகள் பசப்பு மொழிகள் கூறி உபசரிக்கவும், அதற்கு முன்பு கூந்தலை வாரிச் சுருட்டி அழகாக முடிக்கவும், வெற்றிலைச் சுருளைத் திருத்தவும், நிறைந்த வாசனையை உடைய அகில், புனுகு முதலிய நறுமணம் மிகுதியாகப் பூசப்பட்ட மார்பகங்களின் மீது ஆசை வைத்து தழுவிக்கொள்ளும் பொது மகளிரின் உறவு ஓர் உறவாகுமோ? வளமை தானாகவே அமைந்த வயலிலும், நீரோடைகளிலும், இன்புறத்தக்க நிலப்பரப்பிலும், வண்டுகள் மலர்களிலிருந்த தேனை உண்டு நாத கீதத்தை இசைத்து இசைபாடும், சங்குகள் உலாவும், முத்துக்கள் வரிசையாக விளங்கும் வைகாவூர் நாட்டினில் பழநித் தலத்தில், குற்றமில்லாத வள்ளிப் பிராட்டியைத் தழுவி அருள் புரிகின்ற பெருமாளே.

பாடல் 101 - திருச்செந்தூர்
ராகம் - மாண்ட்; தாளம் - ஆதி

தனதான தந்த தனதான தந்த     தனதான தந்த ...... தனதான

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த     மிகவானி லிந்து ...... வெயில்காய 
மிதவாடை வந்து தழல்போல வொன்ற     வினைமாதர் தந்தம் ...... வசைகூற 
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட     கொடிதான துன்ப ...... மயல்தீர 
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து     குறைதீர வந்து ...... குறுகாயோ 
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து     வழிபாடு தந்த ...... மதியாளா 
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச     வடிவேலெ றிந்த ...... அதிதீரா 
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு     மடியாரி டைஞ்சல் ...... களைவோனே 
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து     அலைவாயு கந்த ...... பெருமாளே.

வீரனாம் மன்மதன் ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,* ஆகாயத்தில் நிலவு அதிகமாக வெயில் போலக் காய, நிதானமான தென்றல் காற்று வந்து தீப்போல வீசிப் பொருந்த, வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம் வசை மொழிகளைக் கூற, குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும் (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய நான் அடைந்த கொடிய துன்ப விரக மயக்கம் தீர, குளிர்ந்த மாலைப் பொழுதினிலே நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து என் குறையைத் தீர்க்க வந்து அணுகமாட்டாயா? இள மானை உகந்து ஏந்தும் இறைவன் சிவபிரான் (உன் உபதேசம் பெற்று) மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே, கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்) வீழ்ந்து படவும், அலைகடல் கொந்தளித்து அஞ்சவும், கூரிய வேலை வீசிய அதி தீரனே, அறிவு கொண்டு உன்னை அறிந்து, உனது இரு தாள்களையும் வணங்கும் அடியார்களின் துயரைக் களைபவனே, அழகிய செம்பொன் மயில்மீது அமர்ந்து திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும் பெருமாளே. 
* மன்மதனின் ஐந்து மலர்க்கணைகள்: தாமரை, முல்லை, மாம்பூ, அசோகம், நீலோற்பலம்.

பாடல் 101 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தந்தா தந்தா தந்தா தந்தா     தந்தா தந்தத் ...... தனதான

வெங்கா ளம்பா ணஞ்சேல் கண்பால்     மென்பா கஞ்சொற் ...... குயில்மாலை 
மென்கே சந்தா னென்றே கொண்டார்     மென்றோ ளொன்றப் ...... பொருள்தேடி 
வங்கா ளஞ்சோ னஞ்சீ னம்போய்     வன்பே துன்பப் ...... படலாமோ 
மைந்தா ருந்தோள் மைந்தா அந்தா     வந்தே யிந்தப் ...... பொழுதாள்வாய் 
கொங்கார் பைந்தே னுண்டே வண்டார்     குன்றாள் கொங்கைக் ...... கினியோனே 
குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ     ரும்போய் மங்கப் ...... பொருகோபா 
கங்கா ளஞ்சேர் மொய்ம்பா ரன்பார்     கன்றே வும்பர்க் ...... கொருநாதா 
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்     கந்தா செந்திற் ...... பெருமாளே.

கொடிய நஞ்சு, அம்பு, சேல் மீன் - இவற்றை ஒத்த கண்கள், பால், மென்மையான வெல்லப்பாகு போன்ற இனிமையான, குயிலை நிகர்க்கும் சொற்கள், இருளை ஒத்த மெல்லிய கூந்தல்தான் என்று இவ்வகையாகக் கொண்டுள்ள பொது மாதர்களின் மென்மையான தோள்களைத் தழுவுவதற்காகப் பொருள் தேட வேண்டி, வங்காள நாடு, சோனக நாடு*, சீனா முதலிய தூரமான இடங்களுக்குப் போய் வம்பிலே கொடிய துன்பத்தைப் படலாமோ? வலிமை மிகுந்த தோள்களைக் கொண்ட குமரனே, அழகனே, வந்து இந்த நொடியிலேயே என்னை ஆண்டருள்வாயாக. வாசனை மிக்க பசுந்தேனை உண்டே வண்டுகள் நிரம்பும் வள்ளிமலையில் வசிக்கும் வள்ளியின் மார்பை இனிமையாக அணைவோனே, சூரனுக்கு அரணாக விளங்கிய ஏழு மலைகளும், ஏழு கடல்களும், அந்தச் சூரனும், பட்டு அழியும்படியாக போர் செய்த சினத்தை உடையவனே, எலும்புகளும் கபாலமும் சேர்ந்த மாலையை அணிந்த தோளை உடைய சிவனாரின் அன்பு நிறைந்த குழந்தாய், தேவர்களின் ஒப்பற்ற தலைவனே, சங்குகள் தவழும் கடலின் தெற்குக்கரையில் இருக்க வந்தவனே, கந்தனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சோனகம் 56 தேசங்கள் சேர்ந்த பாரத நாட்டில் ஒரு தேசம்.

பாடல் 103 - திருச்செந்தூர்
ராகம் - ....; தாளம் -

தந்த தானன தானன தந்த தானன தானன     தந்த தானன தானன ...... தனதான

வெஞ்ச ரோருக மோகடு நஞ்ச மோகய லோநெடு     வின்ப சாகர மோவடு ...... வகிரோமுன் 
வெந்து போனபு ராதன சம்ப ராரிபு ராரியை     வென்ற சாயக மோகரு ...... விளையோகண் 
தஞ்ச மோயம தூதுவர் நெஞ்ச மோவெனு மாமத     சங்க மாதர்ப யோதர ...... மதில்மூழ்கு 
சங்கை யோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு     தண்டை சேர்கழ லீவது ...... மொருநாளே 
பஞ்ச பாதக தாருக தண்ட னீறெழ வானவர்     பண்டு போலம ராவதி ...... குடியேறப் 
பங்க யாசனர் கேசவ ரஞ்ச லேயென மால்வரை     பங்க நீறெழ வேல்விடு ...... மிளையோனே 
செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி     திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே 
செண்ப காடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு     செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே.

விரும்பத் தக்க தாமரை மலரோ, கொடிய விஷமோ, கயல் மீனோ, பெரிய இன்பக் கடலோ, மாவடுவின் பிளவோ, முன்பு வெந்து போன பழைய மன்மதன் சிவபெருமான் மீது செலுத்தி வென்ற அம்போ, கரு விளை மலரோ அந்தக் கண்கள்? யாவரும் அடைக்கலம் புகும் இடமோ, யம தூதர்களுடைய மனமோ என்று சொல்லக் கூடிய, மோக வெறி பிடித்த சேர்க்கையையே நாடும் விலைமாதர்களுடைய மார்பகங்களில் மூழ்குகின்ற எண்ணம் அழிய, உனது இரண்டு, கூதள மலர்களின் நறு மணமுள்ள மாலை தோய்ந்துள்ள, தண்டைகள் விளங்கும் திருவடிகளை நீ அளிப்பதாகிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ? ஐந்து பெரிய பாதகங்களையும்* செய்யும் தாருகன் என்னும் யமனை ஒத்த அசுரன் பொடியாகும்படியும், தேவர்கள் முன்பு இருந்தபடியே பொன்னுலகத்தில் குடி ஏறவும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனையும், திருமாலையும் பயப்படாதீர்கள் என்று கூறி, மாயையில் வல்ல (கிரவுஞ்ச) மலை கேடு அடைந்து பொடியாகவும் வேலைச் செலுத்திய இளையவனே. சிவந்த சடைக்காட்டின் மேலே, கங்கை, குருக்கத்தி, ஆத்தி, சந்திரன் இவைகளைச் சூடிய தலைவராகிய சிவ பெருமான் அளித்த பெரிய செல்வமே, செண்பக வனங்கள் நிறைந்துள்ளதும், உயர்ந்ததும், பெரிய மதில்கள் சூழ்ந்ததுமான திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சம்பரன் என்ற அசுரனை தன் மறு பிறவியில் கொன்றவன் மன்மதன்.
** திரிபுரங்களையும் எரித்தவரான புராரி சிவபெருமான்.
*** ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.

பாடல் 104 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன     தனதன தத்தா தத்தன ...... தனதான

அகல்வினை யுட்சார் சட்சம யிகளொடு வெட்கா தட்கிடு     மறிவிலி வித்தா ரத்தன ...... மவிகார 
அகில்கமழ் கத்தூ ரித்தனி யணைமிசை கைக்கா சுக்கள     வருள்பவர் நட்பே கொட்புறு ...... மொருபோதன் 
பகலிர விற்போ திற்பணி பணியற விட்டா ரெட்டிய     பரமம யச்சோ திச்சிவ ...... மயமாநின் 
பழநித னிற்போ யுற்பவ வினைவிள கட்சேர் வெட்சிகு     ரவுபயில் நற்றாள் பற்றுவ ...... தொருநாளே 
புகலிவ னப்பே றப்புகல் மதுரைமன் வெப்பா றத்திகழ்     பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப் 
பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கோ தைக்கிடை     புலவரில் நக்கீ ரர்க்குத ...... வியவேளே 
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை யிட்டே சுட்டருள்     எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்வென் 
றிடரற முப்பால் செப்பிய கவிதையின் மிக்கா ரத்தினை     யெழுதிவ னத்தே யெற்றிய ...... பெருமாளே.

பரந்த வினை வசத்துக்கு* உட்பட்ட ஆறு சமயத்தவரோடும்** அஞ்சாது தடுத்து வாதம் செய்யும் அறிவு இல்லாதவனும், பரந்த மார்பை உடைய, அழகிய அகில் மணமுள்ள, கஸ்தூரி இவை உள்ள ஒப்பற்ற படுக்கையில் தாம் கையில் பெற்ற பொருளின் அளவுக்குத் தக்கபடி அன்பு காட்டும் வேசியருடைய நட்பிலே தடுமாறும் ஓர் அறிவை உடைய (புழுப்போன்ற) நான். பகல், இரவு எப்போதும் பணி செய்து, (பற்றுக்களை) முழுதும் விட்டவர் அடையும் பரம சொரூபமாயும், ஜோதி வடிவமாயும், சிவ மயமாயுமுள்ள உனது பழனித் தலத்துக்குப் போய், பிறவி என்கின்ற வினை நீங்க, தேன் துளிர்க்கின்ற வெட்சி, குரா என்னும் மலர்கள் நிரம்பி உள்ள நல்ல திருவடிகளைப் பற்றும் நாள் எனக்குக் கிடைக்குமா? சீகாழி என்னும் தலத்துக்கு அழகும் பெருமையும் பெருகவும், சரணம் அடைந்த மதுரைக் கூன் பாண்டிய அரசனுடைய வெப்புநோய் தணியவும், விளங்கும் திருநீற்றால் கோரைப் புல்லாகிய பாய்களை உடுத்திய சமணர்களை வென்று, அவர்கள் கழுவில் ஏறவும், வாதம் செய்து வெற்றி பெற்ற ஆற்றல் உடையவனே (திருஞான சம்பந்தனே), வஞ்சனை உடைய, குதிரை முகம் கொண்ட பெண் பூதத்தின் வசத்தே நடுவில் அகப்பட்ட புலவர்களில் ஒருவராகிய நக்கீரருக்கு*** உதவி புரிந்த வேந்தனே, மாறுபட்ட பெரிய திரிபுரங்கள் தூளாகி விழ புன்னகை பூத்தே சுட்டு எரித்து அருள் புரிந்தவரும், ஏழு உலகங்களையும் உண்ட திருமாலின் மைத்துனருமாகிய சிவபெருமானின் குழந்தையே, வெற்றி கொண்டு துன்பம் நீங்கும்படி (அறம், பொருள், இன்பம் என்ற) முப்பால் கூறும் திருக்குறளினும் மேலாகிய தேவாரத்தை (ஞான சம்பந்தராகத் தோன்றி) ஏட்டிலே எழுதி வைகை ஆற்றில் எதிர் ஏற விட்ட பெருமாளே. 
* வினைகள்: மூன்று வகையான ஆகாமியம், சஞ்சிதம், பிராரப்தம் என்பனவும், இரண்டு வகையான நல்வினை, தீவினை என்பனவும் ஆகும்.
** சட் சமயங்கள்:உட் சமயங்கள் (6): வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், சைவம்.புறச் சமயங்கள் (6): உலகாயதம், புத்தம், சமணம், மீமாம்சை, பாஞ்சராத்திரம், பாட்டாசாரியம்.
*** குதிரை முகமுடைய ஒரு பெண் பூதம், சிவ பூஜையில் தவறியவர்களை ஒரு குகையில் அடைத்து, ஆயிரம் பேர் சேர்ந்ததும் கொன்று தின்னும். குகையில் சிக்கிய நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாட, முருகன் மகிழ்ந்து வேலால் குகையையும் பூதத்தையும் பிளந்து, நக்கீரரையும் மற்ற புலவர்களையும் விடுவித்தான்.

பாடல் 105 - பழநி
ராகம் - .....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

அணிபட் டணுகித் திணிபட் டமனத்     தவர்விட் டவிழிக் ...... கணையாலும் 
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்     தவன்விட் டமலர்க் ...... கணையாலும் 
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்     பெறுமக் குணமுற் ...... றுயிர்மாளும் 
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்     பெறுதற் கருளைத் ...... தரவேணும் 
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்     கனியைக் கணியுற் ...... றிடுவோனே 
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்     கருதிச் சிறைவைத் ...... திடுவோனே 
பணியப் பணியப் பரமர்ப் பரவப்     பரிவுற் றொருசொற் ...... பகர்வோனே 
பவளத் தவளக் கனகப் புரிசைப்     பழநிக் குமரப் ...... பெருமாளே.

வரிசையாக நின்று, அருகில் வந்து, கல்நெஞ்சுடைய பொதுமாதர் என்னை மயக்கச் செலுத்தும் விழிகளாகிய அம்புகளினாலும், வண்டுகள் சுற்றி மொய்க்கும் கரும்பு வில்லை உடைய செல்வந்தனாகிய மன்மதன் விடுத்த மலர் அம்புகளினாலும், மன நோய் அடைந்து, அறிவு நீங்கி, கேடுற்று, யமனையே அடையச் செய்திடும் தீய குணங்கள் நிறைந்து, இந்த உயிரானது மாண்டு போகும் பிறவியாகிய சமுத்திரத்தை விடுத்து நீங்கி, உயர்ந்த நன்முக்தியை நான் பெறுவதற்கு, நீ திருவருள் தந்தருள வேண்டும். வேங்கை மரத்தின் நல்ல உருவை எடுத்து மலைக்கன்னியாகிய வள்ளியை அடையக் கருதி அவளிடம் சென்றவனே, தாமரையில் அமரும் பிரமனை, பிரணவத்தின் உரையைச் சொல்லமாட்டாத காரணத்திற்காக சிறைச்சாலையில் அடைத்தவனே, பாம்பையும் கங்கை நதியையும் சடையில் அணியும் அந்த சிவபிரான் துதிசெய்ய, அவரிடம் அன்பு கொண்டு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை உபதேசம் செய்தவனே, பவள நிறம், வெண்ணிறம், பொன்னிறம் உள்ள மதில்கள் சூழ்ந்த பழநியில் எழுந்தருளியுள்ள குமரப் பெருமாளே. 

பாடல் 106 - பழநி
ராகம் - .....; தாளம் - ........

தனன தனதனன தந்தத்த தந்ததன     தனன தனதனன தந்தத்த தந்ததன          தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான

அதல விதலமுத லந்தத்த லங்களென     அவனி யெனஅமரர் அண்டத்த கண்டமென          அகில சலதியென எண்டிக்குள் விண்டுவென ...... அங்கிபாநு 
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென     அறையு மறையெனஅ ருந்தத்து வங்களென          அணுவி லணுவெனநி றைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம் 
உதய மெழஇருள்வி டிந்தக்க ணந்தனிலி     ருதய கமலமுகி ழங்கட்ட விழ்ந்துணர்வி          லுணரு மநுபவம னம்பெற்றி டும்படியை ...... வந்துநீமுன் 
உதவ இயலினியல் செஞ்சொற்ப்ர பந்தமென     மதுர கவிகளில்ம னம்பற்றி ருந்துபுகழ்          உரிய அடிமையுனை யன்றிப்ப்ர பஞ்சமதை ...... நம்புவேனோ 
ததத ததததத தந்தத்த தந்ததத     திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி          தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி 
சகக சககெணக தந்தத்த குங்கெணக     டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி          தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம் 
பதலை திமிலைதுடி தம்பட்ட மும்பெருக     அகில நிசிசரர்ந டுங்கக்கொ டுங்கழுகு          பரிய குடர்பழுவெ லும்பைப்பி டுங்கரண ...... துங்ககாளி 
பவுரி யிடநரிபு லம்பப்ப ருந்திறகு     கவரி யிடஇகலை வென்றுச்சி கண்டிதனில்          பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.

அதலம் விதலம் முதலான அந்தக் கீழ்* ஏழு உலகங்கள் எனவும், இப்பூமி எனவும், தேவர்களின் அண்டங்களான மேல்* ஏழு உலகங்கள் எனவும், சகல கடல்கள் எனவும், எட்டுத் திசைகளிலுள்ள மலைகள் எனவும், அக்கினி, சூரியன், குளிர்ந்த கிரணங்களை உடைய சந்திரன் (என்னும் முச்சுடர்கள்) எனவும், ஒன்றோடு ஒன்று சந்தித்து ஒற்றுமைப்பட்ட மந்திரங்கள் எனவும், சிறப்பாக ஓதுகின்ற வேதம் எனவும், அருமையாகச் சொல்லப்படும் (96) தத்துவப் பொருள்கள்** எனவும், அணுவுக்குள் அணு எனவும், இங்ஙனம் எங்கும் நிறை பொருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை, எனது உள்ளத்தில் தோன்றி விளங்கவும், அஞ்ஞானம் என்ற இருள் ஒழிந்து அந்தக் கணமே இதயத் தாமரை எனப்படும் மொட்டு அங்கே கட்டு நீங்கி, உணர்விலே உணரப்படும்படியான அநுபவ ஞானத்தை நான் பெற்றிடும் வகையை நீ முன்பு வந்து உதவி அருள, இடைவிடாத அன்பால் அருமையான இனிய சொற்களால் ஆன நூலாக, இசை வடிவப் பாக்களாகிய மதுர கவிகளில் மனம் ஆசை வைத்துத் திருப்புகழ் என்னும் சந்தப் பாவால் பாடும் உரிமைப் பாக்கியத்தைப் பெற்ற அடிமையாகிய நான் உன்னை அல்லால் இவ்வுலக வாழ்வினை நம்ப மாட்டேன். ததத ததததத தந்தத்த தந்ததத திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு திந்திதோதி சகக சககெணக தந்தத்த குங்கெணக டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி என்ற சந்தத்துக்கேற்ற தாளத்தில் பதலை திமிலை முதலிய பறைகள், தம்பட்டம் இவை ஒலிகளை எழுப்ப, எவ்விடத்திலும் உள்ள அசுரர்கள் நடுக்கம் கொள்ள, கொடிய கழுகுகள் (பிணங்களின்) பருத்த குடல்களையும் விலா எலும்புகளையும் பிடுங்க, போர்க்களத்து வெற்றிக் காளி களி நடனம் புரிய, நரிகள் ஊளையிட, பருந்துகளின் சிறகுகள் சாமரம் வீச, போரை வென்று மயிலின் மேல் பழனி மலை மீது வந்து அமர்ந்துள்ள, தேவர்களின் பெருமாளே. 
* கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம்.
** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

பாடல் 107 - பழநி
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - அங்கதாளம் - 8 - எடுப்பு 1/2 தள்ளி தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3

தனதான தந்தனத் ...... தனதான     தனதான தந்தனத் ...... தனதான

அபகார நிந்தைபட் ...... டுழலாதே     அறியாத வஞ்சரைக் ...... குறியாதே 
உபதேச மந்திரப் ...... பொருளாலே     உனைநானி னைந்தருட் ...... பெறுவேனோ 
இபமாமு கன்தனக் ...... கிளையோனே     இமவான்ம டந்தையுத் ...... தமிபாலா 
ஜெபமாலை தந்தசற் ...... குருநாதா     திருவாவி னன்குடிப் ...... பெருமாளே.

பிறர்க்குச் செய்த தீமைகளினால் நிந்தனைக்கு ஆளாகி அலையாமலும், நன்னெறியை அறியாத வஞ்சகர்களிடம் சேராமலும், நீ எனக்கருளிய உபதேச மந்திரத்தின் பொருளையே துணையாகக் கொண்டு உன்னையே நான் நினைந்து உன் திருவருளைப் பெற மாட்டேனோ? யானையின் சிறந்த முகத்தை உடைய வினாயகன் தனக்குத் தம்பியானவனே இமயராஜன் மகளாம் (பார்வதி என்னும்) உத்தமியின் பிள்ளையே ஜெபம் செய்யக்கூடிய மாலையை எனக்களித்த* நல்ல குரு நாதனே திருவாவினன்குடி என்னும் பதிக்குப் பெருமாளே. 
* முருகனிடமிருந்து ஜெபமாலையை பெற்ற நிகழ்ச்சி அருணகிரியார் வாழ்வில் நடைபெற்றது.

பாடல் 108 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதன தானத் தான தனத்தத்     தனதன தானத் தான தனத்தத்          தனதன தானத் தான தனத்தத் ...... தனதான

அரிசன வாடைச் சேர்வை குளித்துப்     பலவித கோலச் சேலை யுடுத்திட்          டலர்குழ லோதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 
அமர்பொரு காதுக் கோலை திருத்தித்     திருநுதல் நீவிப் பாளி தபொட்டிட்          டகில்புழு காரச் சேறு தனத்திட் ...... டலர்வேளின் 
சுரதவி நோதப் பார்வை மையிட்டுத்     தருணக லாரத் தோடை தரித்துத்          தொழிலிடு தோளுக் கேற வரித்திட் ...... டிளைஞோர்மார் 
துறவினர் சோரச் சோர நகைத்துப்     பொருள்கவர் மாதர்க் காசை யளித்தற்          றுயரற வேபொற் பாத மெனக்குத் ...... தருவாயே 
கிரியலை வாரிச் சூர ரிரத்தப்     புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்          கிரணவை வேல்புத் தேளிர் பிழைக்கத் ...... தொடுவோனே 
கெருவித கோலப் பார தனத்துக்     குறமகள் பாதச் சேக ரசொர்க்கக்          கிளிதெய்வ யானைக் கேபு யவெற்பைத் ...... தருவோனே 
பரிமள நீபத் தாரொ டுவெட்சித்     தொடைபுனை சேவற் கேத னதுத்திப்          பணியகல் பீடத் தோகை மயிற்பொற் ...... பரியோனே 
பனிமல ரோடைச் சேலு களித்துக்     ககனம ளாவிப் போய்வ ருவெற்றிப்          பழநியில் வாழ்பொற் கோம ளசத்திப் ...... பெருமாளே.

மஞ்சள் வாசனை சேர்ந்த நீரில் குளித்து, பலவிதமான வண்ணச் சேலைகளை உடுத்து, மலரணிந்த கூந்தல் மயிரை சிக்கெடுத்துச் சீவி முடித்து, சுருண்டுள்ள (அந்தக் குழலுடன்) நெருங்கிப் போர் புரிகின்ற காதணியைத் தரித்து, அழகிய நெற்றியைச் சீர்படத் துடைத்து, பச்சைக் கற்பூரம் கலந்த பொட்டை இட்டு, அகில், புனுகு இவை நிரம்பிய குழம்பை மார்பில் பூசி, மலர்க்கணை ஏந்திய மன்மதனின் காம சாஸ்திரத்தில் கூறியவாறு காமத்தை எழுப்பி விநோதங்களைக் காட்டும் கண்களில் மையைப் பூசி, அப்போது அலர்ந்த செங்கழு நீர் மாலையைச் சூடி, வேசைத் தொழில் செய்யும் தோளுக்குப் பொருந்தும் வகையில் நிரம்ப அலங்கரித்து, இளைஞர்கள் முதல் துறவிகள் வரை அனைவரும் தளரத் தளரச் சிரித்து, பொருளைக் கவர்கின்ற விலைமாதர் மேல் ஆசை வைத்தலாகிய துன்பம் நீங்கவே, உனது அழகிய திருவடிகளை அருள்வாயாக. மலைகளிலும், அலைகளுடன் கூடிய கடலிலும் இருந்த அசுரர்களுடைய ரத்தக் கடலில் முழுகி, பேய்கள் (உடல்களைத் துய்த்து) இன்புறுமாறும், தேவர்கள் பிழைத்து உய்யுமாறும், ஒளி வீசும் கூரிய வேலாயுதத்தைச் செலுத்தியவனே, செருக்கு உறத் தக்க, அழகிய, கனமான மார்பகத்தை உடைய குறமகளாம் வள்ளி நாயகியின் திருவடியைத் தலை மேல் சூடியவனே, விண் உலகில் வளர்ந்த கிளி போன்ற தேவயானைக்கே மலை போன்ற தோள்களைக் கொடுப்பவனே, நறுமணம் உள்ள கடப்ப மாலையோடு, வெட்சி மாலையை அணிந்துள்ள சேவல் கொடியோனே, படத்தில் பொறிகளை உடைய பாம்பு அஞ்சி அகல்கின்ற, ஆசனம் போல் விளங்கும் கலாப மயில் என்கின்ற அழகிய குதிரை போன்ற வாகனத்தைக் கொண்டவனே, குளிர்ந்த மலர் ஓடையில் சேல் மீன்கள் களிப்புடன் ஆகாயம் வரை எட்டிப் பார்த்துத் திரும்பி வரும் வெற்றிப் பழனி மலையில் வாழ்கின்ற, ஒளியும் அழகும் பூண்ட ஞான சக்திப் பெருமாளே. 
(இந்தப் பாடலில் வேல், மயில், சேவல், தேவயானை, வள்ளியம்மை, கடம்பு, வெட்சி, திருவடி யாவும் வருகின்றன).

பாடல் 109 - பழநி
ராகம் - பிலஹரி ; தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3 - எடுப்பு - அதீதம்

தனத்த தானன தனதன தனதன ...... தனதான

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு ...... முறவோரும்     அடுத்த பேர்களு மிதமுறு மகவோடு ...... வளநாடும் 
தரித்த வூருமெ யெனமன நினைவது ...... நினையாதுன்     தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே 
எருத்தி லேறிய இறையவர் செவிபுக ...... வுபதேசம்     இசைத்த நாவின இதணுறு குறமக ...... ளிருபாதம் 
பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை     பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை ...... பெருமாளே.

ஆசையை விருத்தி செய்கின்ற இந்த வாழ்க்கையில், சரசம் செய்யும் மனைவியும் சுற்றத்தாரும், நண்பர்களும், இன்பம் நல்கும் குழந்தைகளும், வாழ்கின்ற செழிப்பான நாடும், குடிபுகுந்த ஊரும் நிரந்தரம் என்று மனம் நினைக்கும் பொய் எண்ணத்தை நினைக்காமல் உன்னையே நினைத்தும் துதித்தும், வழிபடுகின்றதுமான தொழிலை எனக்கு நீ தர வேண்டும். ரிஷபமாகிய நந்தியை வாகனமாகக் கொண்டு ஏறிய சிவபெருமானின் செவிக்குள் புகுமாறு வேத மந்திரத்தை உபதேசம் மொழிந்தருளிய இனிய நாவினை உடையவனே, தினைப்புனத்தின் பரணில் இருந்த வள்ளியின் இருபாதங்களையும் தாங்கிய திருமுடியை உடையவனே, தேவேந்திரன் செய்த தவத்தினால் அவதரித்த தேவயானை கணவனாகக் கொண்ட பன்னிரு புயத்தோனே, பழனியில் வாழும் பெருமாளே. 

பாடல் 110 - பழநி
ராகம் - பெளளி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 - எடுப்பு 1/2 தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த ...... தனதான

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து     அழகுபெற வேந டந்து ...... இளைஞோனாய் 
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று     அதிவிதம தாய்வ ளர்ந்து ...... பதினாறாய் 
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்     திருவடிக ளேநி னைந்து ...... துதியாமல் 
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று     திரியுமடி யேனை யுன்ற ...... னடிசேராய் 
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை     மணிமுடியின் மீத ணிந்த ...... மகதேவர் 
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த     மலைமகள்கு மார துங்க ...... வடிவேலா 
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து     படியதிர வேந டந்த ...... கழல்வீரா 
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து     பழநிமலை மேல மர்ந்த ...... பெருமாளே.

இந்த பூமியிலே பிறந்து குழந்தை எனத் தவழ்ந்து அழகு பெறும் வகையில் நடை பழகி இளைஞனாய் அரிய மழலைச் சொல்லே மிகுந்து வர குதலை மொழிகளே பேசி அதிக விதமாக வயதுக்கு ஒப்ப வளர்ந்து வயதும் பதினாறு ஆகி, சைவ நூல்கள், சிவ ஆகமங்கள், மிக்க வேதங்களை ஓதும் அன்பர்களுடைய திருவடிகளையே நினைந்து துதிக்காமல், மாதர்களின் மீது ஆசை மிகுந்து அதன் காரணமாக மிக்க கவலையுடன் அலைந்து திரிகின்ற அடியேனை, உனது திருவடிகளில் சேர்க்க மாட்டாயா? சும்மா இரு என்ற மெளன உபதேசம் செய்த சம்பு, பிறைச்சந்திரன், அறுகம்புல், கங்கை, தும்பைப்பூ தன் மணி முடியின் மேலணிந்த மகாதேவர், மனமகிழும்படி அவரை அணைத்துக்கொண்டு அவரது இடப்புறத்தில் வந்தமர்ந்த பார்வதியின் குமாரனே பரிசுத்தமும் கூர்மையும் உடைய வேலினை உடையவனே இவ்வுலகைச் சுற்றிவரவே ஆசை கொண்டு மயிலின் மேல் ஏறி விளங்கி பூமி அதிரவே வலம் வந்த வீரக் கழல் அணிந்த வீரனே மோட்ச வீட்டில் பொருந்தி நின்று முருகன் என விளங்கி பழனிமலையில் வீற்ற பெருமாளே. 

பாடல் 111 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனா தனதத்த தனதனா தனதத்த     தனதனா தனதத்த ...... தனதான

அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டு     ளறிவுதா னறவைத்து ...... விலைபேசி 
அமளிமீ தினில்வைத்து பவளவா யமுதத்தை     யதிகமா வுதவிக்கை ...... வளையாலே 
உறவினா லுடலத்தை யிறுகவே தழுவிக்கொ     ளுலையிலே மெழுகொத்த ...... மடவாரோ 
டுருகியே வருபெற்றி மதனநா டகபித்து     ஒழியுமா றொருமுத்தி ...... தரவேணும் 
மறவர்மா தொருரத்ந விமலகோ கநகத்தி     மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா 
மருள்நிசா சரன்வெற்பி லுருகிவீழ் வுறமிக்க     மயிலிலே றியவுக்ர ...... வடிவேலா 
பறைகள்பே ணியருத்ரி கரியகா ரளகத்தி     பரமர்பா லுறைசத்தி ...... யெமதாயி 
பழையபார் வதிகொற்றி பெரியநா யகிபெற்ற     பழநிமா மலையுற்ற ...... பெருமாளே.

அறவழி இல்லாத தொழிலைக் கற்று, கொடுமை பூண்ட வேலைப் போல் கூரிய கண்ணைச் செலுத்தி, உள்ளத்தில் அறிவு என்பதை நீக்கி, விலை பேசி, படுக்கையின் மேல் சேர்த்து, தமது பவளம் போன்ற சிவந்த வாய் அமுதத்தை அதிகமாகத் தந்து, உறவு கூறிக் கொண்டு, வளைக் கையாலே உடலை இறுகத் தழுவிக் கொண்டு, உலையில் இட்ட மெழுகு போல் உருக்கம் காட்டும் விலைமாதர்களோடு கூடி உருகி வருகின்ற ஒழுக்கம், காம நாடகம் என்கின்ற பித்த மயக்கம் என்னை விட்டுத் தொலையுமாறு ஒப்பற்ற முக்தி இன்பத்தைத் தரவேண்டும். வேடர் குலத்து மாது, ஒப்பற்ற பரிசுத்தமான, தாமரையில் வாழும் லக்ஷ்மியாகிய மயில் போன்றவளாம் வள்ளியைத் தழுவுகின்ற வெட்சி மாலை புனைந்த அழகிய மார்பனே, திகைத்து மயங்கி நின்ற அசுரன் மலை போல உருகி விழும்படி, சிறந்த மயில் மீது ஏறிய கொடுமையான வடிவேலனே, பறைகளை விரும்பும் ருத்ரி, கரிய மேகம் போன்ற கூந்தலை உடையவள், பரமராகிய சிவபெருமான் பக்கத்தில் உறைகின்ற சக்தி, எமது தாய், பழம்பொருளாக நிற்கும் பார்வதி, துர்க்கை, பெரிய நாயகி* என்னும் பெயரை உடையவள் ஈன்ற, பழனி மா மலையில் வீற்றிருக்கும், பெருமாளே. 
* பழநிமலை அடிவாரத்தின் மேற்கேயுள்ள தலத்தில் எழுந்தருளியுள்ள தேவியின் பெயர் பெரிய நாயகி ஆகும்.

பாடல் 112 - பழநி
ராகம் - ....; தாளம் -

தானா தனதன தானா தனதன     தானா தனதன ...... தனதான

ஆதா ளிகள்புரி கோலா கலவிழி     யாலே யமுதெனு ...... மொழியாலே 
ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை     யாலே மணமலி ...... குழலாலே 
சூதா ரிளமுலை யாலே யழகிய     தோடா ரிருகுழை ...... யதனாலே 
சோரா மயல்தரு மானா ருறவிடர்     சூழா வகையருள் ...... புரிவாயே 
போதா ரிருகழல் சூழா ததுதொழில்     பூணா தெதிருற ...... மதியாதே 
போரா டியஅதி சூரா பொறுபொறு     போகா தெனஅடு ...... திறலோனே 
வேதா வுடனெடு மாலா னவனறி     யாதா ரருளிய ...... குமரேசா 
வீரா புரிவரு கோவே பழநியுள்     வேலா இமையவர் ...... பெருமாளே.

தற்பெருமைப் பேச்சு பேசும் பொது மகளிர் காட்டும் ஆடம்பரக் கண்களாலும், அமுதைப் போன்ற இனிய பேச்சாலும், ஆழ்ந்த அழகிய சிரிப்பாலும், உடுக்கை போன்ற இடுப்பாலும், வாசனை மிகுந்த கூந்தலாலும், சூதாடும் கருவி போன்ற இளமையான மார்பகத்தாலும், அழகிய தோடுகள் அணிந்த இரண்டு செவிகளாலும், தளராத மயக்கம் தருகின்ற விலைமாதர்களின் உறவால் வரும் துன்பங்கள் என்னைச் சூழாத வண்ணம் அருள் புரிவாயாக. மலர் நிறைந்த திருவடிகளைச் சிந்தியாமலும், பணியும் தொழிலை மேற்கொள்ளாமலும், எதிரே வந்து மோதுவதைப் பற்றி நினைக்காமலும் போர் செய்ய வந்த அதி சூரனை பொறு பொறு (தீய வழியில்) போகாதே என்று கூறி அவனை அழித்த வல்லமை வாய்ந்தவனே, பிரமனுடன், நீண்ட திருமாலாலும் அறியாதவாரகிய சிவபெருமான் பெற்றருளிய குமரேசனே, வீரைநகரில்* எழுந்தருளியிருக்கும் தலைவனே, பழனியில் இருக்கும் வேலனே, தேவர்கள் பெருமாளே. 
* வீரைநகர் திருப்பெருந்துறைக்கு மேற்கே உள்ள ஒரு சிவத் தலம்.இப்பாடல் திருவாவினன்குடியின் கீழும் தரப்பட்டுள்ளது.

பாடல் 113 - பழநி
ராகம் - ....; தாளம் -

தான தானன தத்தன தத்தன     தான தானன தத்தன தத்தன          தான தானன தத்தன தத்தன ...... தனதான

ஆல காலமெ னக்கொலை முற்றிய     வேல தாமென மிக்கவி ழிக்கடை          யாலு மோகம்வி ளைத்துவி தத்துட ...... னிளைஞோரை 
ஆர வாணைமெ யிட்டும றித்துவி     கார மோகமெ ழுப்பிய தற்குற          வான பேரைய கப்படு வித்ததி ...... விதமாகச் 
சால மாலைய ளித்தவர் கைப்பொருள்     மாள வேசிலு கிட்டும ருட்டியெ          சாதி பேதம றத்தழு வித்திரி ...... மடமாதர் 
தாக போகமொ ழித்துஉ னக்கடி     யானென் வேள்விமு கத்தவ முற்றிரு          தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட ...... அருள்வாயே 
வால மாமதி மத்தமெ ருக்கறு     காறு பூளைத ரித்தச டைத்திரு          வால வாயன ளித்தரு ளற்புத ...... முருகோனே 
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்     வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு          வாளி யேவிய மற்புய னச்சுதன் ...... மருகோனே 
நாலு வேதந விற்றுமு றைப்பயில்     வீணை நாதனு ரைத்தவ னத்திடை          நாடி யோடிகு றத்தித னைக்கொடு ...... வருவோனே 
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்     சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு          ஞான பூரண சத்தித ரித்தருள் ...... பெருமாளே.

ஆலகால நஞ்சு என்னும்படியும், கொலைத் தொழில் முதிர்ந்த வேற்படை என்று சொல்லும்படியும் உள்ள மிகக் கொடிய கடைக் கண்ணாலும் மோகத்தை விளைவித்து பலவித வகையில் இளைஞர்களை நிரம்ப ஆணைகளை உண்மை போலக் கூறி, அவர்களை எங்கும் போக விடாமல் தடுத்து, பொல்லாத ஆசையை உண்டுபண்ணி, அதற்கு வசப்பட்ட பேர்வழிகளை தங்கள் கைவசப்படுத்தி, அனேக விதங்களாக, மிகவும் காம மயக்கத்தைத் தந்து, அவர்களுடைய கையில் உள்ள பொருள் அத்தனையும் வற்றிப் போகும்படி சண்டை செய்தும், மயக்கியும், சாதி வேற்றுமை இல்லாமல் மனிதர்களைத் தழுவித் திரிகின்ற விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி, உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற் கொண்டு, உனது இரண்டு திருவடிகளை தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக. முற்றாத இளம் பிறை, ஊமத்த மலர், எருக்கு, அறுகு, கங்கை ஆறு, பூளைப்பூ ஆகியவற்றை அணிந்துள்ள சடையைக் கொண்ட மதுரைப் பிரான் ஆகிய சொக்கேசர் ஈன்றருளிய அற்புதமான முருகோனே, மாய மானாக வந்த மா¡£சனையும், அரக்கர்களையும் வெற்றி கொண்டவரும், வாலியின் மார்பைத் தொளைக்கும் வண்ணம் வில்லை ஏந்தி அம்பை எய்தவரும், மற்போருக்குப் பொருந்திய புயத்தை உடையவருமான (ராமனாகிய) திருமாலின் மருகனே, நான்கு வேதங்களையும் சொல்லப்பட்ட முறைப்படி பயின்று நவில்கின்ற, வீணை ஏந்திய நாரதர் குறிப்பிட்டு உரைத்த (வள்ளி மலைக்) காட்டினிடையே தேடி ஓடிச் சென்று குறத்தியாகிய வள்ளியைக் கொண்டு வந்தவனே, தென்னையும் பலாவும் பழுத்து உதிர்க்கும் சோலைகள் சூழ்ந்த பழனி என்னும் ஊரில் சிறந்த ஞான பூரண சக்தியாகிய வேலாயுதத்தைத் தரித்தருளும் பெருமாளே. 

பாடல் 114 - பழநி
ராகம் - மோகனம் / நாட்டைகுறிஞ்சி; தாளம் - கண்டசாபு - 2 1/2

தானதன தானதன தானதன தானதன     தானதன தானதன ...... தந்ததான

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி 
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும் 
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும் 
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ 
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே 
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா 
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ் 
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை சொல்லி திருநீற்றை உடலிலே பூசி அணியும் பெரும் தவசிகள்தம் பாதமலர்களைச் சூடும் அடியவர்களின் திருவடியே துணையென்று கடைப்பிடித்தும், தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே', 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய ஈசனே', 'என் பெருமை உனது பெருமை' என்று கூறியும் ஏழையடியார்களின் மனத்துயர் ஏன் எப்படி வந்தது என்று முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை யார்தாம் புகழ்வார்கள்? வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? திருநீறு துலங்கும் பொன்னார் மேனியுடையாய் வேலனே அழகிய நீலமயில் வாகனனே உமையாள் பெற்ற முருகவேளே அசுரர்கள் அனைவருடனும் என்னுடைய தீவினையாவும் மடிந்தொழிய நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே கோபித்து வந்த பெரும் அசுரன் (கஜமுகாசுரன்) உயிரை உண்ட ஆனைமுகத் தேவரின் தம்பியே மலைச்சிகரம் வான்முகட்டைத் தொடும் அழகு நிறைந்த பழநிவாழும் குமரனே பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே முருகனே, தம்பிரானே. 

பாடல் 115 - பழநி
ராகம் - ....; தாளம் -

தத்தா தனத்ததன தத்தா தனத்ததன  தானத் தனந்ததன தானத் தனந்ததன    தத்தா தனத்ததன தத்தா தனத்ததன      தானத் தனந்ததன தானத் தனந்ததன        தத்தா தனத்ததன தத்தா தனத்ததன          தானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான

இத்தா ரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது  கேவிக் கிடந்துமடி மீதிற் றவழ்ந்தடிகள்    தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்      ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை        யிச்சீர் பயிற்றவய தெட்டொ டுமெட்டுவர          வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்க ...... ளுடனுறவாகி 
இக்கார் சரத்துமத னுக்கே இளைத்துவெகு  வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல    திக்கோ டுதிக்குவரை மட்டோ டிமிக்கபொருள்      தேடிச் சுகந்தஅணை மீதிற் றுயின்றுசுக        மிட்டா தரத்துருகி வட்டார் முலைக்குளிடை          மூழ்கிக் கிடந்துமய லாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச் 
சத்தா னபுத்தியது கெட்டே கிடக்கநம  னோடித் தொடர்ந்துகயி றாடிக் கொளும்பொழுது    பெற்றோர் கள்சுற்றியழ வுற்றார் கள்மெத்தஅழ      ஊருக் கடங்கலிலர் காலற் கடங்கவுயிர்        தக்கா திவர்க்குமய னிட்டான் விதிப்படியி          னோலைப் பழம்படியி னாலிற் றிறந்ததென ...... எடுமெனவோடிச் 
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை  யேகிச் சடம்பெரிது வேகப் புடஞ்சமைய    இட்டே யனற்குளெரி பட்டா ரெனத்தழுவி      நீரிற் படிந்துவிடு பாசத் தகன்றுனது        சற்போ தகப்பதும முற்றே தமிழ்க்கவிதை          பேசிப் பணிந்துருகு நேசத் தையின்றுதர ...... இனிவரவேணும் 
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத  தாதத் தனந்ததன தானத் தனந்ததன    செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு      தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக        தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு          தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித் 
திட்டே ரதத்தசுரர் பட்டே விழப்பொருது  வேலைத் தொளைந்துவரை யேழைப் பிளந்துவரு    சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை      மீதிற் புணர்ந்துசுக லீலைக் கதம்பமணி        சுத்தா வுமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு          நாதக் குழந்தையென வோடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா 
மத்தா மதக்களிறு பிற்றா னுதித்தகுக  னேதத் திலங்கையினி லாதிக்க முண்டதொரு    முட்டா ளரக்கர்தலை யிற்றே விழக்கணைக      ளேதொட் டகொண்டலுரு வாகிச் சுமந்ததிக        மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை          மார்பிற் புணர்ந்தரகு ராமற் குமன்புடைய ...... மருமகனாகி 
வற்றா மதுக்கருணை யுற்றே மறைக்கலைக  ளோதித் தெரிந்துதமிழ் சோதித் தலங்கலணி    யத்தா பரத்தையறி வித்தா விசுற்றுமொளி      யாகிப் ப்ரபந்தமணி வேல்தொட் டமைந்தபுய        வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி          வாழ்வுக் குகந்தடிய ராவிக் குள்நின்றுலவி ...... வருபெருமாளே.

இந்தப் பூவுலகத்தில் மனித வித்தாகத் தோன்றி, அழுது, பெரு மூச்சு விட்டுத் திணறித் (தாயின்) மடிமீது கிடந்து, தவழ்ந்து, கால்களைத் தத்தித் தத்தித் தளர் நடையிட்டு, தெருவில் ஓடித் திரிந்து, புதுமையான கோடிக்கணக்கான நூல்களை இங்குச் சிறப்புப்படி கற்றுக் கொண்டு, பதினாறு வயது ஆனதும், இளமைப் பருவத்துக்குரிய குணங்களில் பயிற்சியுள்ள அழகிய பெண்களுடன் நட்பு கொண்டு, கரும்பு வில்லினையும் அரிய மலர்களையுமுடைய மன்மத சேஷ்டையால் சோர்வடைந்து, பல வகையாக கலம்பகம் முதலிய நூல்களை (செல்வந்தர்கள் மீது) பாடி, அவர்களைப் புகழ்ந்து, பல திக்குகளிலும் திசை முடிவு வரை சென்று அதிகமாகப் பொருள் தேடி, நல்ல வாசனை கமழும் மலர்ப்படுக்கைகளில் உறங்கி, (விலைமாதர்களது) இன்பத்தை நல்கும் ஆசையில் உருகி, திரட்சியான மார்பகங்களின் இடையே முழுகிக் கிடந்து, காம மயக்கத்தோடு அழுந்திக் கிடந்து, சில நோய்கள் வந்து மூடி, நல்லறிவு கெட்டுக் கிடக்கும் போது, யமன் (என்னைத்) தொடர்ந்து வந்து பாசக் கயிற்றால் கட்டி உயிரைக் கொண்டு போகும் போது என்னைப் பெற்றவர்கள் சுற்றி நின்று அழவும், சுற்றத்தார்கள் மிக அழவும், இவர் ஊராருக்கு ஒரு நாளும் அடங்கியதில்லை, நமனுக்கு இன்று அடங்குமாறு இனி உயிர் நிலை பெறாது, இவருக்கு பிரமன் இன்றோடு அழியும்படி விதித்திருக்கிறான், (முன் எழுதியது போல்) யமன் ஓலை வர இன்று இறந்து விட்டார் என்று சிலர் கூறவும், நாழிகை ஆயிற்று, சுடலைக்கு எடுங்கள் என்று சிலர் சொல்லவும், ஓடிச் சென்று திட்டமிட்டபடி புதிய பறைகள் ஆகிய வாத்தியங்களை முழக்கவும், சுடுகாட்டுக்குச் சென்று, உடல் நன்கு வெந்து நீறாவதற்கு வரட்டி முதலியவற்றை அடுக்கி, அந்த நெருப்பில் எரிந்து போனார் என்று துயரத்தோடு ஒருவரை ஒருவர் கட்டி அழுது, தண்ணீரில் முழுகி விடுபட்டுப் போகும் பாசத்தினின்றும் விலகி, உன்னுடைய உண்மை ஞானத்துக்கு உறைவிடமான திருவடித் தாமரைகளைப் பற்றுக் கோடாக அடைந்து தமிழ்க் கவிதைகளை ஓதிப் பணிந்து, உருகும்படியான அன்பை இன்று அடியேனுக்குத் தர இனி வந்தருள வேண்டும். தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத தாதத் தனந்ததன தானத் தனந்ததன செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிண் என்று ஒலிக்கும்படி ஒப்பற்ற மயிலின் மீது ஏறி வந்து, வலிமையில் தேர்ந்த ரதத்தின் மீது வந்த அரக்கர்கள் இறந்து படுமாறு சண்டை செய்து, கடலை வற்றச் செய்து, ஏழு மலைகளையும் பிளந்து நின்ற சித்த* மூர்த்தியே, தேவர்களுக்கு எல்லாம் மேலான தலைவனே, குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களைச் சேர்ந்து இன்பத் திருவிளையாடல்களைச் செய்து (உனது தோள்களில்) நறு மணம் படிந்துள்ள தூய்மையானவனே, பார்வதிக்கு ஒரு முத்து என்னும்படியாக முளைத்தும், குருநாதக் குழந்தை என்று பேர் பெற்றும், ஓடி விளையாடிக் கடப்ப மலரை அணிந்தும் உள்ள திருமார்பனே. மதங்களை மிகவும் பொழிகின்ற யானை முகம் உடைய கணபதியின் பின்பு உதித்த குக மூர்த்தியே குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும், மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர் மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி, வற்றாத தேன் போலக் கருணையைப் பூண்டு, வேத நூல்களை ஓதி நன்கு பயின்று தமிழை ஆராய்ந்து (தேவாரப்) பாமாலைகளைத் தந்தைக்குச் சூட்டிய (திருஞானசம்பந்தாராக வந்த) ஐயனே, பரம் பொருளை இன்னது என்று (உலகத்தோர்க்கு) அறிவித்து, உயிரைச் சூழ்ந்திருக்கும் அருட் பெருஞ் சோதியாக விளங்கி, துதி நூல்களைப் பெற்றணிந்த, வேலாயுதத்தை ஏந்தி விளங்கும் தோள் கூட்டங்களை உடையவனே, வாசனை உள்ள புனுகு எப்போதும் கமழும் பழநிப் பதியில் வீற்றிருப்பதில் மகிழ்ந்து அடியார்களின் ஆவிக்குள் நின்று உலவி வரும் பெருமாளே. 
* சித்தன் முருகனுக்கு ஒரு பெயர். அடியார்களின் சித்தத்தைக் கொள்ளை அடிப்பதால் இந்தப் பெயர்.

பாடல் 116 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தனதனன தானான தனதனன     தனதனன தனதனன தானான தனதனன          தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான

இரவியென வடவையென ஆலால விடமதென     உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர          இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி ...... லதுகூவ 
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி     யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென          இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ...... வசைபேச 
அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது     அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்          அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ...... மெலிவானாள் 
அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது     அடிமைகொள வுனதுபரம் ஆறாத வொருதனிமை          யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை ...... வருவாயே 
நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு     பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்          நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ...... மருகோனே 
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி     கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி          நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ...... யருள்பாலா 
பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி     படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத          பதுமகர தலமுருக நால்வேத கரரணிக ...... மயில்வீரா 
பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை     வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர          பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் ...... பெருமாளே.

சூரியன் என்று கூறும்படியும், வடவைமுகாத் தீ என்று சொல்லும்படியும், ஆலகால விஷம் என்று சொல்லும்படியும் கொடிய வடிவை எடுத்துக் கொண்டு, ஆகாயத்தின் மேலே செல்லும் சந்திரனும் வர, ரதி தேவியின் கணவனாகிய மன்மதன் முதல் நாலு மலர்ப்பாணங்களைச் செலுத்த, அவனது வெற்றிச் சின்னமான (எக்காளமாகிய) குயில் கூவ, ஏழு கடலாகிய, அவனுடைய முரச வாத்தியத்தின் இசையும், புல்லாங் குழலின் ஓசையும், மாடுகளின் கழுத்தில் உள்ள மணிகளின் ஓசையும் நெருங்கி வந்து அம்பு வந்து பாய்வது போல இரு செவிகளிலும் பாய்ந்து போராடவும், காம வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை மொழிகளைப் பேசி நகையாடவும், அரகர என்று இப்பெண் படுகின்ற துன்பத்தை அளவிட்டுச் சொல்லுவது மிக மிகக் கடினம். அமுதமும் மயிலும் போன்று எப்போதும் இருக்கும் என் மகள் இந்த நிலை எல்லாம் கருதி எல்லோரிடமும் பகைமைப் போர் செய்கின்றாள். மிகவும் மயக்கம் ஏற்பட்டு, நிறைய ஊர்வம்புகள் பிறக்கவும், மிகவும் மெலிந்து போனாள். இப்பெண் திக்கற்றவள். இவள் தலை விதி இங்ஙனம் இருந்த போதிலும் உன்னை விட்டு நீங்குதல் என்பது முடியாது. இவளை அடிமை கொள்ளுவது உன்னுடைய பொறுப்பேயாகும். காதல் தணியாத, தன்னந் தனியளாகிய அந்தப் பெண்ணை அணைந்து ஆட்கொள்ளுமாறு, இனிமையுடன் ஓங்கார வடிவத்தோடு கூடிய மயிலின் மேல் (முருகா) நீ வந்து அருளுக. மலையில் பசுக் கூட்டங்கள் எல்லாம் துதி செய்து தம்மைச் சூழந்து வர, ஒப்பற்ற மருத மரத்தையும், போர் புரிந்து கொல்வதற்காக வண்டி உருவமாய் வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொன்று, பசுக்கள் அழியுமாறு மழை பெய்வது தடைபட, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த, தாமரை போன்ற கரங்களை உடைய கோபாலனின் மருகனே, மாசு இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச எழுந்தருளும் குமரி, கெளரி, காளி, பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி, நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே, கடலும், மலையும், அசுரர் கூட்டமாகிய பெரிய படையும் தவிடு பொடியாகவும், தேவர்கள் துன்பம் நீங்கவும், வேலாயுதத்தைச் செலுத்திச் சண்டை செய்த தாமரை மலர் போன்ற திருக் கரங்களை உடையவனே, முருகனே, நான்கு வேதங்களிலும் வல்ல ஞான ஒளியினருக்கு அணிகலமாக விளங்குபவனே, மயில் வீரனே, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவைச் சேறு நிரம்பி வளர்கின்ற மார்பகங்களை உடைய மங்கை, குறப் பெண்ணாகிய வள்ளி மகிழும் இன்பத் திருவிளையாடல்களைச் செய்தவனே, வாக்கு வல்லமை நிறைந்த, சுவை நிரம்பிய நூலாகிய தேவாரத்தை (திருஞான சம்பந்தராக வந்து) உலகுக்குத் தந்தருளியவனே, பழனிப் பதியில் எழுந்தருளியுள்ள கோலாகலமானவனே, தேவர்களின் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.சந்திரன், குயில், மன்மதன், மலர்ப் பாணங்கள், கடல் ஓசை, குழல் ஓசை, மாடுகளின் மணி ஓசை, மகளிர் வசைப் பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 117 - பழநி
ராகம் - .....; தாளம் -

தனதனன தானான தானதன தந்த     தனதனன தானான தானதன தந்த          தனதனன தானான தானதன தந்த ...... தனதான

இருகனக மாமேரு வோகளப துங்க     கடகடின பாடீர வாரமுத கும்ப          மிணைசொலிள நீரோக ராசலஇ ரண்டு ...... குவடேயோ 
இலகுமல ரேவாளி யாகியஅ நங்க     னணிமகுட மோதானெ னாமிகவ ளர்ந்த          இளமுலைமி னார்மோக மாயையில்வி ழுந்து ...... தணியாமல் 
பெருகியொரு காசேகொ டாதவரை யைந்து     தருவைநிக ரேயாக வேயெதிர்பு கழ்ந்து          பெரியதமி ழேபாடி நாடொறுமி ரந்து ...... நிலைகாணாப் 
பிணியினக மேயான பாழுடலை நம்பி     உயிரையவ மாய்நாடி யேபவநி ரம்பு          பிறவிதனி லேபோக மீளவுமு ழன்று ...... திரிவேனோ 
கருணையுமை மாதேவி காரணிய நந்த     சயனகளி கூராரி சோதரிபு ரந்த          கடவுளுடன் வாதாடு காளிமலை மங்கை ...... யருள்பாலா 
கருடனுடன் வீறான கேதனம்வி ளங்கு     மதிலினொடு மாமாட மேடைகள்து லங்கு          கலிசைவரு காவேரி சேவகனொ டன்பு ...... புரிவோனே 
பரவையிடை யேபாத காசுரர்வி ழுந்து     கதறியிட வேபாக சாதனனு நெஞ்சு          பலிதமென வேயேக வேமயிலில் வந்த ...... குமரேசா 
பலமலர்க ளேதூவி யாரணந வின்று     பரவியிமை யோர்சூழ நாடொறுமி சைந்து          பழநிமலை மீதோர்ப ராபரனி றைஞ்சு ...... பெருமாளே.

இரண்டு பொன் மயமான பெரிய மேரு மலையோ? கலவைச் சந்தனம் அணிந்த, பரிசுத்தமான, பச்சைக் கற்பூரம் அணிந்த, கச்சை அணிந்த அமுத கலசத்துக்கு சமானமென்று கூறப்படும் இளநீரோ? துதிக்கையை உடைய மலை எனப்படும் யானை போன்ற இரண்டு குன்றுகளோ? சிறந்த மலர்களையே கணைகளாகக் கொண்ட மன்மதனுடைய அழகிய கி¡£டம்தானோ? என்று ஒப்பிட்டுச் சொல்லும்படி மிக வளர்ந்துள்ள இள மார்பகங்களையுடைய மின்னலைப் போன்ற பொது மகளிரின் காம வலையில் அகப்பட்டு, அந்த மோகம் குறைவு படாமல், தாராள மனத்துடன் ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்* நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி, தினமும் (இங்ஙனம்) இரந்து நிலை காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி, உயிரைப் பயனிலதாக நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ? கருணை நிறைந்த பார்வதி, எல்லாவற்றுக்கும் காரணமானவள், ஆதிசேஷன் மேல் துயில் மகிழ்ச்சியுடன் கொள்ளும் திருமாலின் சகோதரியானவள், திரிபுரம் எரித்த சிவபெருமானுடன் (நடனத்தில்) போட்டியிட்ட காளி, (இமய) மலை அரசின் குமாரி பெற்ற குழந்தையே, கருடனோடு போட்டியிடுவது போல உயரத்தில் பறக்கும் கொடிகள் சிறந்து விளங்கும் மதில்களும் பெரிய மாட மேடைகளும் துலங்குகின்ற கலிசை என்னும் ஊரில் உள்ள காவேரி சேவகன்** என்ற மன்னனிடத்தில் அன்பு பூண்டவனே, கடலிடையே பாதக அசுரர்கள் விழுந்து கதறவும், இந்திரனுடைய உள்ளத்து எண்ணம் பலித்தது என்று அவன் மகிழ்ந்து (தேவலோகத்துக்குச்) செல்ல, மயில் மீது எழுந்தருளி வந்த குமரேசனே, பல விதமான மலர்களைத் தூவி, வேதங்களை ஓதித் துதி செய்து தேவர்கள் சூழ நின்று நாள் தோறும் மகிழ்ந்து நிற்க, பழனி மலையின் மேல் ஒப்பற்ற சிவபெருமான் வணங்கும் பெருமாளே. 
* ஐந்து தேவ தருக்கள்: சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.
** கலிசை என்னும் ஊரில் அக்காலத்துத் தலைவனாக இருந்த ஒரு அன்பன். அருணகிரிநாதரின் நண்பன்.

பாடல் 118 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

இருசெப் பெனவெற் பெனவட் டமுமொத்     திளகிப் புளகித் ...... திடுமாதர் 
இடையைச் சுமையைப் பெறுதற் குறவுற்     றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத் 
தருமெய்ச் சுவையுற் றிதழைப் பருகித்     தழுவிக் கடிசுற் ...... றணைமீதே 
சருவிச் சருவிக் குனகித் தனகித்     தவமற் றுழலக் ...... கடவேனோ 
அரிபுத் திரசித் தஜனுக் கருமைக்     குரியத் திருமைத் ...... துனவேளே 
அடல்குக் குடநற் கொடிபெற் றெதிருற்     றசுரக் கிளையைப் ...... பொருவோனே 
பரிவுற் றரனுக் கருணற் பொருளைப்     பயனுற் றறியப் ...... பகர்வோனே 
பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப்     பழநிக் குமரப் ...... பெருமாளே.

இரண்டு செப்புக் குடங்கள் போலவும், மலை போலவும், வட்ட வடிவுடன் விளங்கி இளகிப் பூரிக்கும் பெண்களுடைய இடைக்கு அழகிய சுமையாக உள்ள மார்பகங்களைப் பெறும் பொருட்டு அவர்களுடன் நட்பு கொண்டு, நெருங்கி அணுகி, அவர்களுடைய கூந்தல் சோர்ந்து விழ, (அவர்கள்) தருகின்ற உடல் இன்பத்தை அடைந்து, வாயிதழ் ஊறலை உண்டு, (அவர்களைத்) தழுவி, வாசனை உலவுகின்ற படுக்கையின் மேலே, காம லீலைகளை இடைவிடாமல் செய்து, கொஞ்சிப் பேசி, உள்ளம் களித்து, தவ நிலையை விட்டு திரியக் கடவேனோ? திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய* தலைவனே, வெற்றி உள்ள சேவல் ஆகிய நல்ல கொடியை ஏந்தி, எதிர்த்து வந்த அசுரர்களுடைய கூட்டத்தைத் தாக்கியவனே, அன்பு பூண்டு சிவனுக்கு, அருள் பாலிக்கும் நல்ல பிரணவப் பொருளை அதன் பயனை உணர்த்தும் வகையில் உபதேசித்தவனே, வாயு மண்டலம் வரை நிறைந்திருக்கும் உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.

பாடல் 119 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதன தனதன தந்த தானன     தனதன தனதன தந்த தானன          தனதன தனதன தந்த தானன ...... தனதான

இலகிய களபசு கந்த வாடையின்     ம்ருகமத மதனைம கிழ்ந்து பூசியெ          இலைசுருள் பிளவைய ருந்தி யேயதை ...... யிதமாகக் 
கலவியி லவரவர் தங்கள் வாய்தனி     லிடுபவர் பலபல சிந்தை மாதர்கள்          கசனையை விடுவது மெந்த நாளது ...... பகர்வாயே 
சிலைதரு குறவர்ம டந்தை நாயகி     தினைவன மதனிலு கந்த நாயகி          திரள்தன மதனில ணைந்த நாயக ...... சிவலோகா 
கொலைபுரி யசுரர்கு லங்கள் மாளவெ     அயிலயி லதனையு கந்த நாயக          குருபர பழநியி லென்று மேவிய ...... பெருமாளே.

விளங்குகின்ற சந்தனக் கலவைகளின் நறுமணம் வீச, கஸ்தூரியை (தம் மார்பில்) மகிழ்ச்சியுடன் பூசியும், வெற்றிலைச் சுருளையும் பாக்கின் பிளவையும் உண்டு, அதை இன்பகரமான பேச்சுடன் புணர்ச்சியின் போது (தங்களிடம்) வந்துள்ள அவரவருடைய வாயில் இடுபவரும், பற்பல எண்ணங்களை உடைய விலைமாதர்கள் மீதுள்ள பற்றினை நான் விட்டு விடும் அந்த நாள் எது என்று சொல்லுவாயாக. (வள்ளி) மலை தந்த குறவர் மகளான வள்ளி நாயகி, தினைப் புனத்தில் நீ விருப்பம் கொண்ட நாயகியின் திரண்ட மார்பகங்களைத் தழுவிய நாயகனே, சிவலோகனே. கொலைத் தொழிலைச் செய்யும் அசுரர் கூட்டத்தினர் மாண்டு அழியும்படி கூரிய வேலாயுதத்தை மகிழ்ந்து தோளில் ஏந்தும் நாயகனே, குரு மூர்த்தியே, பழனி மலையில் என்றும் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 120 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தந்த தனதனன தந்த     தனதனன தந்த ...... தனதான

இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சு     மிருவிழியெ னஞ்சு ...... முகமீதே 
இசைமுரல்சு ரும்பு மிளமுலைய ரும்பு     மிலகியக ரும்பு ...... மயலாலே 
நிலவிலுடல் வெந்து கரியஅல மந்து     நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால் 
நிலையழியு நெஞ்சி லவர்குடிபு குந்த     நினைவொடுமி றந்து ...... படலாமோ 
புலவினைய ளைந்து படுமணிக லந்து     புதுமலர ணிந்த ...... கதிர்வேலா 
புழுகெழம ணந்த குறமகள்கு ரும்பை     பொரமுகையு டைந்த ...... தொடைமார்பா 
பலநிறமி டைந்த விழுசிறைய லர்ந்த     பருமயில டைந்த ...... குகவீரா 
பணைபணிசி றந்த தரளமணி சிந்து     பழநிமலை வந்த ...... பெருமாளே.

கனிந்த பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட பேச்சும், இரவில் தூங்கும் இரண்டு கண்கள் என்னும் விஷமும், முகத்தின் மேல் (முகத்தை மலரென்று நினைத்து) இசை ஒலிக்கும் வண்டும், இளம் மார்பகங்களாகிய மொட்டுக்களும், கரும்பைப் போல் விளங்கும் தோளும் (கொண்ட என் மகள்) காம மயக்கம் கொண்டு, நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, கரு நிறம் அடைந்து, வேதனைப்பட்டு, நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும், மன்மதன் காரணமாக, தனது நிலை அழிந்து போகும் மனதில், அவளது தலைவர் குடி புகுந்த நினைவு ஒன்றையே கொண்டு இவள் இறந்து படுதல் நீதியாகுமோ? புலாலை மிகவும் குதறிக் கலந்ததும், ஒலிக்கின்ற மணியுடனே புதிய மலர்களைத் தரித்ததுமான, ஒளி வீசும் வேலை ஏந்தியவனே. புனுகு நறு மணம் வீச குற மகள் வள்ளியின் குரும்பை போன்ற மார்பகங்கள் தாக்குதலால் மொட்டு விரிந்த மலர் மாலை அணிந்த மார்பனே, பல நிறங்கள் நெருங்கியதாய், சிறப்பான சிறகுகள் பரந்து ஒளிரும் பருத்த மயிலை வாகனமாக அடைந்துள்ள குக வீரனே, வேலைப்பாட்டுக்கு ஏற்ற சிறந்த முத்து மணிகளை மூங்கில்கள் உதிர்க்கும் பழநி மலையில் வந்து அமர்ந்துள்ள பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.நிலவு, மன்மதன் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 121 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனத்தான தனதனன தனத்தான தனதனன     தனத்தான தனதனன ...... தனதான

உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்     ஒருக்காலு நெகிழ்வதிலை ...... யெனவேசூள் 
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம திரவியம     துடைத்தாய்பின் வருகுமவ ...... ரெதிரேபோய்ப் 
பயிற்பேசி யிரவுபகல் அவர்க்கான பதமைபல     படப்பேசி யுறுபொருள்கொள் ...... விலைமாதர் 
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு     பதத்தாள மயிலின்மிசை ...... வரவேணும் 
தயிர்ச்சோர னெனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்     தரத்தாடல் புரியுமரி ...... மருகோனே 
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்     தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வே 
செயிற்சேல்வி ணுடுவினொடு பொரப்போய்வி மமர்பொருது     செயித்தோடி வருபழநி ...... யமர்வோனே 
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு     திருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.

உயிரானது இந்த உடம்பை விட்டுப் பிரிகின்றவரை உம்மைக் கூடியிருக்கும் தொழிலை ஒருக்காலும் நழுவ விட மாட்டேன் என்று சபதம் செய்து, முன்பு தாம் சேர்ந்திருந்த ஆடவர்களை வெறுத்து விலக்கி, பொன் முதலிய பொருள்களை அடையப் பெற்று, பின்னர் வருபவர்களின் எதிரில் சென்று, ரகசிய வார்த்தைகளைப் பேசி, அவர்களுக்கு விருப்பமானச் சொற்களைப் பலவாறு கூறி, அவர்களிடம் உள்ள பொருளைக் கொள்ளை கொள்ளும் பொது மகளிர்கள் காட்டும் பருத்த அங்க அவயவங்களாகிய வலையில் வசப் படுதலை தவிர்த்து என்னை ஆண்டருள, மணிகள் புனைந்த பாதங்களையுடைய மயிலின் மேல் வந்தருள வேண்டும். தயிரைத் திருடுபவன் என்ற அந்த மொழி நிந்தையைப் புகல்கின்ற கோபிகளுடன் திருவிளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே, (சம்பந்தரின் திருநெறித் தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி, திருவிடை மருதூர், வேதரணியம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே, வயல்களில் உள்ள சேல் மீன்கள் ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்களுடன் போரிடச் சென்று, மிக்கு எழும் போரைப் புரிந்து வெற்றி பெற்றுத் திரும்பி ஓடி வரும் பழனியில் வீற்றிருப்பவனே, தினைப் புனத்தைக் காவல் புரிய வல்ல குறவர் மகளான வள்ளியின் மார்பைத் தழுவும் திருத் தோளனே, தேவர்கள் தொழுகின்ற பெருமாளே. 

பாடல் 122 - பழநி
ராகம் - ஸெளராஷ்டிரம்; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தகதிமிதக-3

தனதனன தான தந்த ...... தனதான     தனதனன தான தந்த ...... தனதான

உலகபசு பாச தொந்த ...... மதுவான     உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர் 
மலசலசு வாச சஞ்ச ...... லமதாலென்     மதிநிலைகெ டாம லுன்ற ...... னருள்தாராய் 
சலமறுகு பூளை தும்பை ...... யணிசேயே     சரவணப வாமு குந்தன் ...... மருகோனே 
பலகலைசி வாக மங்கள் ...... பயில்வோனே     பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.

உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள், மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால் எனது புத்திநிலை கெடாதவாறு உனது திருவருளைத் தந்தருள்வாயாக. கங்கை நீர், அறுகம்புல், பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே, சரவணபவனே, திருமாலின் மருமகனே, பல கலைகளாலும், சிவாகமங்களாலும் புகழப்படுவோனே, பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 123 - பழநி
ராகம் - பேகடா; தாளம் - அங்கதாளம் - 11 
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2 தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான     தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே     உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே 
பெருபுவி லுயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே     பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் ...... தவிரேனோ 
துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப் ...... பெருமாளே     தொழுதுவழி படுமடியர் காவற் காரப் ...... பெருமாளே 
விருதுகவி விதரணவி நோதக் காரப் ...... பெருமாளே     விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் ...... பெருமாளே.

ஒரு வேளை கூட உனது இரண்டு திருவடிகளிலும் அன்பையே வைத்து அறிய மாட்டேன். உன் பழநிமலை என்னும் பதியினை வணங்கி அறியமாட்டேன். இப்பெரிய பூமியில் உயர்ந்ததும், அருமையானதுமான வாழ்க்கையை முற்றுமாக யான் குறிக்கொள்ளவில்லை. (இவ்வளவு குறைகளிருந்தும்) பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன். என் ஆசைப்பாடுகளை ஒழிக்க மாட்டேனோ? பாவத் தொழில்களையே செய்யும் அசுரர்களின் ஊர்களை சூறாவளி போல் வீசியடித்த பெருமாளே, உனை வணங்கி வழிபடுகின்ற அடியார்களுக்கு காவற்காரனாக இருந்து உதவும் பெருமாளே, வெற்றிக் கவிகளை உலகுக்கு உதவிய அற்புத மூர்த்தியாகிய (ஞானசம்பந்தப்)* பெருமாளே, வீரம் வாய்ந்த குறவர்களின் மகள் வள்ளிக்கு தக்க சமயத்தில் காவலாயிருந்த பெருமாளே. 
* முருகனே ஞானசம்பந்த மூர்த்தியாக அவதரித்தார் என்று பல இடங்களில் அருணகிரியார் கூறுகிறார்.

பாடல் 124 - பழநி
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் - 5 தக திமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 - திஸ்ர ரூபகம்

தனதன தனன தான தனதன தனன தான     தனதன தனன தான ...... தனதான

ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்     ஒருகுண வழியு றாத ...... பொறியாளர் 
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி     உறநம னரகில் வீழ்வ ...... ரதுபோய்பின் 
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி     மறைவரி னனைய கோல ...... மதுவாக 
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு     வடிவுற அருளி பாத ...... மருள்வாயே 
திரிபுர மெரிய வேழ சிலைமத னெரிய மூரல்     திருவிழி யருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன் 
திருசரஸ் வதிம யேசு வரியிவர் தலைவ ரோத     திருநட மருளு நாத ...... னருள்பாலா 
சுரர்பதி யயனு மாலு முறையிட அசுரர் கோடி     துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே 
சுககுற மகள்ம ணாள னெனமறை பலவு மோதி     தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.

ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய மத ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை உடையவர்களுமான மக்கள் இந்த உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து கொண்டே வந்து, இறுதியாக அனைவரும் யமனுடைய நரகத்தில் சென்று வீழ்வர். அந்த நிலை முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து, நல்வினை, தீவினை என்ற இருவினைக் கடலில் உளைந்து மறைவர். இத்தகைய மனிதர்களின் கோலம் அவ்வாறாக, (யான் அவ்வாறு அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக திருநீற்றைத் தந்து, நல்ல நிலையை நான் அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. திரிபுரம் எரிந்து விழவும், கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன் எரிந்து விழவும் புன்சிரிப்பாலும், நெற்றியிலுள்ள திருக்கண்ணாலும் அருள் புரிந்த மெய்ஞ்ஞான குருநாதனும், லக்ஷ்மி, ஸரஸ்வதி, மஹேஸ்வரி ஆகியோரது தலைவர்களாகிய திருமால், பிரமன், ருத்திரன் ஆகியோர் ஓதிப் போற்ற திரு நடனம் ஆடி அருளிய நாதன் சிவபிரான் அருளிய குழந்தையே, தேவர்கள் தலைவன் இந்திரனும், பிரமனும், திருமாலும் முறையிட்டு உன்னடி பணிய, அசுர கோடிகள் தூளாகுமாறு செலுத்திய மெய்ஞ்ஞான சக்தி வேலாயுதனே, சுகம் பாலிக்கும் குறமகள் வள்ளியின் மணவாளன் என்று வேதங்கள் பலவும் போற்றிப் புகழ, பழமை வாய்ந்த பழநிப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 125 - பழநி
ராகம் - ....; தாளம் -

தான தான தனத்தன தத்தன     தான தான தனத்தன தத்தன          தான தான தனத்தன தத்தன ...... தனதான

ஓடி யோடி யழைத்துவ ரச்சில     சேடி மார்கள் பசப்பஅ தற்குமு          னோதி கோதி முடித்தவி லைச்சுரு ...... ளதுகோதி 
நீடு வாச நிறைத்தஅ கிற்புழு     கோட மீது திமிர்த்தத னத்தினில்          நேச மாகி யணைத்தசி றுக்கிக ...... ளுறவாமோ 
நாடி வாயும் வயற்றலை யிற்புன     லோடை மீதி னிலத்ததி வட்கையி          னாத கீத மலர்த்துளி பெற்றளி ...... யிசைபாடுங் 
கோடு லாவி யமுத்துநி ரைத்தவை     காவுர் நாட தனிற்பழ நிப்பதி          கோதி லாத குறத்திய ணைத்தருள் ...... பெருமாளே.

இளைஞர்களை ஓடி ஓடி அழைத்துவரவும், சில தோழிகள் பசப்பு மொழிகள் கூறி உபசரிக்கவும், அதற்கு முன்பு கூந்தலை வாரிச் சுருட்டி அழகாக முடிக்கவும், வெற்றிலைச் சுருளைத் திருத்தவும், நிறைந்த வாசனையை உடைய அகில், புனுகு முதலிய நறுமணம் மிகுதியாகப் பூசப்பட்ட மார்பகங்களின் மீது ஆசை வைத்து தழுவிக்கொள்ளும் பொது மகளிரின் உறவு ஓர் உறவாகுமோ? வளமை தானாகவே அமைந்த வயலிலும், நீரோடைகளிலும், இன்புறத்தக்க நிலப்பரப்பிலும், வண்டுகள் மலர்களிலிருந்த தேனை உண்டு நாத கீதத்தை இசைத்து இசைபாடும், சங்குகள் உலாவும், முத்துக்கள் வரிசையாக விளங்கும் வைகாவூர் நாட்டினில் பழநித் தலத்தில், குற்றமில்லாத வள்ளிப் பிராட்டியைத் தழுவி அருள் புரிகின்ற பெருமாளே.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.