LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1051 -1100]

பாடல் 1051 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம
     நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம் 
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு
     நியதி யாக வாயார ...... வயிறார 
இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி
     யிளகி யேறு பாடீர ...... தனபாரம் 
எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு
     கினுமு னீப சீர்பாத ...... மறவேனே 
குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
     குழைய மாலி காநாக ...... மொடுதாவிக் 
குடில கோம ளாகார சடில மோலி மீதேறு
     குமர வேட மாதோடு ...... பிரியாது 
கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்
     கடக வாரி தூளாக ...... அமராடுங் 
கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
நிலவின் வெளிச்சத்தில், மன்மதன் ஏறிவரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலை நிழலில், மாடங்கள் கூடிய சிறந்த மாளிகையில் மேல் உள்ள மாடத்தில், நறு மணம் நீங்காத படுக்கையில் பெண்களோடு, காலம் தவறாத ஒழுக்கத்துடன், வாய் நிரம்பவும், வயிறு நிரம்பவும், இலவம் பூப்போன்ற சிவந்த வாயிதழில் ஊறி வருகின்ற தேன் போல் இனிக்கும் ஊறலை உண்டு, நிரம்பிய என் ஆசை அளவு கடந்து பொங்கி எழ, நெகிழ்ந்து, முற்பட்டு எழுந்துள்ளதும், சந்தனம் அணிந்துள்ள தனபாரம் என்னுடைய மார்பில் அழுந்தி முழுகும்படி கட்டி அணைத்து மோகம் மிகுந்திருப்பினும், உன்னுடைய கடம்பு அணிந்த அழகிய திருவடிகளை மறக்க மாட்டேன். சிறந்த ஆகாய கங்கையைச் சூடியுள்ள தலைவர் மகா தேவர் (ஆகிய சிவ பெருமான்) மனம் மகிழ்ச்சியில் மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி, வளைந்துள்ள அழகிய வடிவுள்ளதான ஜடாபார முடியின் மீது தவழ்ந்து ஏறும் குழந்தைக் குமரனே, குறப் பெண்ணாகிய வள்ளியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் பன்னிரண்டு பரந்த தோள்களை உடையவனே, சூரர்களுடைய சேனைக்கடல் பொடியாகும்படி சண்டை செய்கின்றவனே, மதம் பெருகும் கன்னங்களை உடைய சிறந்த வெள்ளை யானையாகிய ஐராவதம் வளர்த்த மாதாகிய தேவயானையின் பங்கனே, வேல் வீரனே, கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 1052 - பொதுப்பாடல்கள் 
ராகம் - திலங் 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
மனக பாட பாடீர தனத ராத ராரூப
     மதன ராச ராசீப ...... சரகோப 
வருண பாத காலோக தருண சோபி தாகார
     மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக் 
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான
     குறைய னேனை நாயேனை ...... வினையேனைக் 
கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத
     குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே 
அநக வாம னாகார முநிவ ராக மால்தேட
     அரிய தாதை தானேவ ...... மதுரேசன் 
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற
     அகில நாலு மாராயு ...... மிளையோனே 
கனக பாவ னாகார பவள கோம ளாகார
     கலப சாம ளாகார ...... மயிலேறுங் 
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
கதவால் அடைக்கப்பட்டது போன்ற ரகசிய மனம் உள்ளவர்களும், சந்தனப் பூச்சு அப்பிய மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும், மன்மத ராஜனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி, குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் எல்லாரோடும் சேர்பவர்களும், இளமை வாய்ந்த உடலைக் காட்டிக்கொண்டு இருப்பவருமான பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் விளையாடியும் இன்பத்தில் திளைத்தும் காலம் கழிப்பவனும், வெட்கம் இன்றிச் சரசம் செய்பவனும், நாளை வீணாக்கும் குறையை உடையவனும், நாயைப்போன்றவனும், கொடுவினையாளனும், பொல்லாதவனும், உன்னைப் போற்றிப் புகழாது வெறும் கொச்சை மொழி பேசித் திரிபவனும், உன்னை விரும்பித் தேடாத குருடனுமான என்னையும் நீ ஆண்டருளும்படியான நாள் ஒன்று உண்டா? பாவமற்ற குறுமுநி வாமனராக அவதாரம் செய்த திருமால் (சிவனாரின்) பாதத்தைத் தேட அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை மதுரைச் சொக்கநாதனால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட அருமையான ஸரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில்* ஏறி, நான்கு திக்கிலும் உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே, பொன் போன்ற தூய உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே, தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே, அருள்வடிவோனே, இதயத் தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. 
* மதுரையில் ஸரஸ்வதிதேவியின் 48 எழுத்துக்களின் அம்சஙகள் 48 புலவர்களாகத் தோன்றி, பாண்டியனின் ஆதரவோடு தமிழ்ச் சங்கம் அமைத்தனர். மதுரை சோமசுந்தரக்கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப்பலகை தந்தருளினார். முருகன் இந்தச் சாரதாபீடத்தில் ருத்ரசன்மன் என்ற புலவராக அமர்ந்து மற்ற புலவர்களிடையே ஏற்பட்ட சண்டையைத் தீர்த்து வைத்தார் - திருவிளையாடற் புராணம்.
பாடல் 1053 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பிருந்தாவன சாரங்கா 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
அதல சேட னாராட அகில மேரு மீதாட
     அபின காளி தானாட ...... அவளோடன் 
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
     அருகு பூத வேதாள ...... மவையாட 
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
     மருவு வானு ளோராட ...... மதியாட 
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் 
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் 
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
     கனக வேத கோடூதி ...... அலைமோதும் 
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே 
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.
(பூமிக்கு கீழேயுள்ள) அதலத்தில் இருக்கும் ஆதிஸேஷன் நடனம் ஆடவும், பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், மாறுபாடு இன்றி (சிவதாண்டவத்துக்கு) ஒற்றுமையாக காளி தான் ஆடவும், அக்காளியோடு அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி (காலை ஊர்த்துவகோலத்தில்) வீசி போட்டியிட்டவரும் ரிஷபத்தில் ஏறுவாரும் ஆகிய சிவனும் ஆடவும், அருகில் பூதங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க ஸரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், அருகில் பொருந்திய தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும் ஆடவும், விஸ்வரூபம் எடுத்த நின் மாமனார் விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்* கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில் பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்) பெரிய சேனை பொடிபட (உதவியவரும்), கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும்சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதிலே (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும், (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும், ஆன மாமாயன் திருமாலின் மருமகனே அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய (திருவண்ணாமலையை ஆண்ட) ப்ரபுட தேவ மஹாராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே. 
* இப்பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான் என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன் ப்ரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாட்டு இது. இந்த வரியைப் பாடும்போது, முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக் கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான்.
பாடல் 1054 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு
     குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற் 
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார
     குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம் 
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்
     படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப் 
பரவு நாட காசார கிரியை யாளர் காணாத
     பரம ஞான வீடேது ...... புகல்வாயே 
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
     இமய மாது மாசூலி ...... தருபாலா 
எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்
     இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே 
அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக
     மதிர நாக மோரேழு ...... பொடியாக 
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
     அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.
ரத்தம், மூளை, மாமிசம், நாற்றம் மிக்க மலம் இவை நீங்காததும், தோலால் மூடியதுமான இந்தக் குடிசையாகிய உடல், கோழையும் மற்ற அழுக்குகள் ஊறியுள்ள ஒரு நீர்க் குமிழி போன்று உடனே அழிகின்ற ஒரு பொய்த் தோற்றமான பற்றுக் கோடாக நினைக்கப்படும். இறந்த பின், இறைச்சியைக் கொத்தும் பட்டடை மரத் துண்டாக வைத்து, பருந்துகளும், நாய்களும், பேய்களும், பல காகங்களும் உண்ணும் இத்தகைய உடலை விரும்பிப் பேணி அறிவில்லாத நான் வீணாகப் பூமியில் முழுகியவன். மலர்களையும் வில்வம் போன்ற இலைகளையும் உனக்கு இட்டுப் பணிந்து, போற்றப் படுகின்ற ஒரு கூத்துப் போன்ற பணியாகிய ஆசாரப் பணியை மேற்கொண்டுள்ள கிரியையாளர்கள் காண முடியாத மேலான ஞான வீடு எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். நெருப்புப் போன்ற திருமேனியில் திரு நீறு விளங்கும் பரமராகிய சிவபெருமானின் (இடது) பாகத்தில் வாழ்கின்றவளும், இமய மலை அரசனின் பெண்ணும், சிறந்த சூலாயுதத்தை ஏந்தியவளுமான பார்வதி ஈன்ற குழந்தையே, எழு வகைத் தோற்றத்தின் முடிவையும் கண்டு உணர்ந்த (அகத்தியர் முதலான) நாதர்களாகிய முனிவர்களும், வானில் உள்ள தேவர்களும் பாரா (ட்) ட மகிழ்கின்றவனே, ஆதிசேஷனும், பெரிய மேரு மலையும், மகர மீன்கள் உள்ள கடலும், பூ லோகமும் அதிர்ச்சி கொள்ளவும், (சூரனின்) ஏழு மலைகளும் பொடியாகவும், பேய்கள், பூதங்கள், சிறந்த காளி ஆகியோர் போர்க்களத்தில் கூத்தாடவும், அசுரர்கள் மடியவும் வேலைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1055 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
     தனன தனன தாத்தன ...... தனதான
சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி
     தணிகை பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ் 
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு
     சரண கமல மேத்திய ...... வழிபாடுற் 
றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ
     ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி 
அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில
     ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான் 
விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ
     மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும் 
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்
     விசைய னொருவ னாற்பட ...... வொருதூது 
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி
     சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே 
திமிர வுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
     சிகரி தகர வீக்கிய ...... பெருமாளே.
சரிந்து, குலைந்து, துன்பத்துக்கு இடமான உடலிடத்தே நெருப்பைப் போல் எரிந்து உரிமை கொண்டாடும் கொடிய பசிப் பிணி தணிந்து போகும் பொருட்டு, இரவும் பகலும் தடுமாறுகின்ற எல்லாவித மத சம்பந்தமான தர்க்க வாதிகளின் கலகப் பேச்சுக்களை விட்டு நீங்கி, நாவைக் கொண்டு உனது திருவடித் தாமரைகளைப் போற்றும் வழிபாட்டினை மேற் கொண்டு, அருமையான துரிய (சிவ மயமாய் நிற்கும் உயர்) நிலைக்கு மேற்பட்டதாய், தொடர்புகளையும் இந்திரியங்களையும் கடந்ததாகிய அறிவு சொரூபமாய் புளகாங்கிதம் கொண்டு, மயக்க அறிவு என்கின்ற சட்டை நீங்கவும், மூச்சு தம் வசப்பட்டு அடங்கி ஒடுங்கவும், ஆட்சி செய்து வீற்றிருக்கும் குற்றமற்ற அடியார்களின் மேல், ரதியின் கணவனான மன்மதன் விடும் சில மலர்ப் பாணங்கள் தாக்கிட முடியுமோ? ஒளி விரிந்து எழுகின்ற உதய சூரியனுடைய ஒளி (தூசியில்) மறையும்படியும், பேரொலி எழும்படியும் நெருங்கி வரும் கணக்கில்லாத தேர்களோடும், சேனைகளோடும் சூழ்ந்து (போர்க்களத்துக்கு) வந்த பரந்த முடிகளை அணிந்த அரசர்கள் யாவரும், (துரியோதனாதி) நூற்றுவரும் அர்ச்சுனன் ஒருவனால் அழிவுறுமாறு, (பாண்டவர்களுக்கு) ஒப்பற்ற தூதுவனாகச் சென்று உழன்ற, நிகரற்ற வலிமை மிக்க கண்ணனின் மருகனே, பார்வதி தேவியின் குழந்தையே, கொடுமை வாய்ந்த வேடர்களின் மகளான வள்ளியின் நாயகனே, இருண்ட கடல் ஓலமிடவும், அசுரர்கள் இறக்கவும், வேலை எடுத்து கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேகமாகச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1056 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
     தனன தனன தாத்தன ...... தனதான
மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்
     மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே 
மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ
     ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன் 
உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு
     முளது மிலது மாச்சென ...... வுறைவோரும் 
உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு
     உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய் 
புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக
     ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம் 
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
     புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே 
மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
     வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன் 
விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை
     விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே.
மகள், மனைவி, தாய், சுற்றத்தார், வந்து கூடும் எல்லாருடைய வாக்கிலும் கலக்கம் உண்டாகி, வெளி ஊராரும் ஐயோ என்று அலறி நிறைந்து கூட, உடலில் பொருந்தியுள்ள உயிரை எடுக்கவென்றே, தனது கண்களும் தீயைக் கக்க, பேரொலி செய்து வரும் தூதர்களுடன், யமன் என்னைச் சிக்க வைப்பதற்காக நெருங்குவதற்கு முன்பாக, (இப்) பூமியில் வாழ்வும் முடிவுறும்படி போய்க் கொண்டிருந்த, தோன்றி வரும் இடை கலையின் (இடது) நாசியால் விடும் சுவாசத்தின் ஓட்டமும் இதோ இருக்கின்றது, இல்லை இதோ முடிவு வந்து விட்டது என்னும்படி சொல்லிக் கொண்டு அருகில் இருப்பவர்களும் தத்தம் உறவு முறைகளைக் காட்டுகிற போது, (அச்சமயத்தில்) நான் முருகா என்று என் நாவைக் கொண்டு உனது திருவடிகளைப் போற்றி செய்ய அருள் புரிவாயாக. சொல்லுவதற்கு முடியாத சிறப்புடைய (காண்டீபம் என்ற) போர் வில்லை உடையவனும், சாமர்த்தியம் உள்ளவனுமாகிய அருச்சுனனைக் கொண்டு, புகழ் பெற்றிருந்த திருதராட்டிரனின் மக்களின் குதிரை, யானை, தேர்கள், காலாட் படைகள் யாவும் இறந்து படச் செய்து, துரியோதனனின் அரசைத் தொலைத்து, சிறந்த இந்தப் பூமியின் துன்பத்தை நீக்கியவரான திருமாலின் மருகனே, மிகப் பெரிய மலை வடிவத்தையும், பெருங் கடல் உருவத்தையும் எடுத்து (எதிர்த்தோர்) யாவரும் இறக்க வெவ்வேறு உருவங்கள் என்னும்படியாக (இந்த உருவங்களை) ஏற்றுப் பொருந்தி வேற் படை ஏந்திச் சண்டை செய்த சூரனின் நறு மணமுள்ள பெரிய தோள்களின் கனத்த வலிமையும் கழிந்து நீங்க, வேலாயுதத்தை வெற்றி பெற வேகமாகச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1057 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
     தனன தாத்தன ...... தந்ததான
குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு
     குறைவி லாப்பல ...... என்பினாலுங் 
கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய
     குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும் 
வடிவி லாப்புல மதனை நாட்டிடு
     மறலி யாட்பொர ...... வந்திடாமுன் 
மதியு மூத்துன தடிக ளேத்திட
     மறுவி லாப்பொருள் ...... தந்திடாதோ 
கடிய காட்டக முறையும் வேட்டுவர்
     கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக் 
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
     களவி னாற்புணர் ...... கந்தவேளே 
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ
     முடிய வேற்கொடு ...... வென்றவீரா 
முடிய லாத்திரு வடிவை நோக்கிய
     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.
குடலையும், நீரையும், கொழுப்பையும், மலத்தையும் வைத்து, ஒரு குறைவும் இல்லாதனவுமான பல எலும்புகளாலும் பொல்லாத நோய்களுக்கு இருப்பிடம் என்னும்படி ஏற்படுத்தப்பட்ட குடிசையாகிய உடலில் ஏற்றப்பட்ட உயிர் என்று சொல்லப்படும் உருவம் இல்லாததான ஒரு நுண்மையான பொருளை நாடி வருகின்ற யமதூதர்கள் போரிட வருவதற்கு முன்பு, (என்) அறிவும் முதிர்ச்சி அடைந்து உனது திருவடிகளை நான் போற்றிப் பணிய, குற்றமில்லாத உண்மைப் பொருளை எனக்கு உதவி செய்யலாகாதோ? கொடிய காட்டிடையே வாசம் செய்யும் வேடர்களுக்கு (இந்த விதமாக வந்தது என்று) எண்ண முடியாதபடி, கணி என்று சொல்லப்படும் வேங்கை மரமாகி, மூங்கில் போன்ற தோள்களை உடைய குறக்குல மயிலாகிய வள்ளியை விரும்பி, சிறந்த களவியல் வழியாக அணைந்த கந்த வேளே, விரைவில் எதிர் வந்து மேல் விழுந்து சண்டை செய்யும் அசுரர்களின் பேரொலி எழ, அவர்கள் யாவரையும் வேல் கொண்டு வெற்றி கொண்ட வீரனே, முடிவே இல்லாத உன் விசுவ ரூபத்தை தரிசித்த பழங் கடவுளர்களாகிய அயன், அரி, பிரமன் என்னும் மூவர்க்கும் தம்பிரானே. 
பாடல் 1058 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸத்வனி 
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன
     தனன தாத்தன ...... தந்ததான
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
     இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப் 
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
     வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில் 
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
     கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக் 
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
     கருணை வார்த்தையி ...... ருந்தவாறென் 
உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
     உலகு போற்றிட ...... வெங்கலாப 
ஒருப ராக்ரம துரக மோட்டிய
     வுரவ கோக்கிரி ...... நண்பவானோர் 
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
     முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே 
முளரி பாற்கடல் சயில மேற்பயில்
     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.
எவ்வுயிர்க்கும் பொதுவானதாகி, தனிப்பட்ட மூல முதற் பொருளாகி, பகல், இரவு இவைகளைக் கடந்து சொல்லப்படுகின்ற வேதப் பொருளாகி, அப்பொருளின் முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி, மறைவு யாதொன்றுமன்றி, முடிவு இல்லாததான, யாவற்றுக்கும் அடைக்கலமாகி, எண்ணுவதற்கும் முடியாததாகி, உண்ணும் அமுதம்போல் இனிமையானதாகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் ஒடுங்கி அழிய, மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின் சேட்டைகளை அழித்து, எனது மரண பயத்தை நீக்கிய, உனது அருள் மொழி உபதேசம் எத்தனை உயர்ந்த நிலையான அற்புதம்? கடல் ஓலமிடவும், அசுரர்கள் போரொலி செய்யவும், உலகத்தோர் போற்றிப் புகழவும், வசீகரம் வாய்ந்த தோகை மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, பூமியிலுள்ள மலைகளிடத்தே விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனே, பார்வதியின் மகனே, கார்த்திகைப் பெண்களின் மார்பகங்களில் பால் நிரம்பி வர அதைப் பருகிய செல்வமே, தாமரை மீதும், திருப்பாற் கடலிலும், கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும் மூத்தவர்களாகிய அயன், அரி, அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவனே. 
பாடல் 1059 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பாகேஸ்ரீ 
தாளம் - மிஸ்ரஅட - 18 - /7/7 00 
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2 
- முதல் லகு
தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான
கவடு கோத்தெழு முவரி மாத்திறல்
     காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட 
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன
     கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன் 
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்
     தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத் 
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச
     தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே 
சுவடு பார்த்தட வருக ராத்தலை
     தூளா மாறே தானா நாரா ...... யணனேநற் 
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது
     ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக் 
குவடு கூப்பிட வுவண மேற்கன
     கோடூ தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
மரக்கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து நின்றதும், கடலின் நடுவிலே தோன்றியதுமான மாமரத்தின் (உருவில் இருந்த சூரனின்) வலிமையை காய்த்து அழித்த உன் வேலாயுதத்தை நான் பாடவில்லை, அவ்வெற்றியைப் பாராட்டி நான் ஆடுவதும் இல்லை. மோக்ஷ இன்பத்தை அடைய விரும்பி, கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான உன் திருவடிகளின் மீது நான் விழுந்து வணங்குவதில்லை, அப்படி விழுந்து பணிவோரின் கால்களிலும் வீழ்ந்து வணங்குவதும் இல்லை. தவிட்டளவு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் கொடுப்பதும் இல்லை. இவ்வாறு வாழ்வதை விட சாவதே எனக்கு மேலானது. பிறப்பு, இறப்புத் தொடரிலிருந்து எனது இந்த உடலுக்கு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெறுமாறு, நாதனே, நீதான் அருள் புரிவாயாக. யானையின் அடிச்சுவட்டைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை பொடியாகுமாறு 'ஹா, நாராயண மூர்த்தியே, நல்ல துணைவனே, பாற்கடலில் உதித்த மங்கை லக்ஷ்மியின் கணவனே, திருத் துழாய் மாலையை அணிந்த மார்பனே, கோபாலனே, என்னைக் காவாய்' என்று தன் துதிக்கையைத் தூக்கி, மலை போன்ற யானையான கஜேந்திரன் முறையிட, கருடன் மேல் ஏறி, பொன் சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதி, ஆகாயமார்க்கமாகப் பறந்து வந்து, யானையைக் காத்தருளிய திருமாலின் மருகனே, வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரசன் இந்திரனின் தேவ உலகத்தை காத்தருளிய தலைவனே, தேவனே, செவ்வேளே, தேவர்தம் பெருமாளே. 
பாடல் 1060 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸஹானா 
தாளம் - மிஸ்ரஅட - 18 - 17 17 00 
- முதல் லகு 
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2
தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான
பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்
     பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம் 
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி
     னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச் 
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட
     ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான 
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்
     சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ 
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்
     சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத் 
திலக பார்த்தனு முலகு காத்தருள்
     சீரா மாறே தேரூர் கோமான் ...... மருகோனே 
குருதி வேற்கர நிருத ராக்ஷத
     கோபா நீபா கூதா ளாமா ...... மயில்வீரா 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
சூரியனாகி, குளிர்ந்த சந்திரனாகி, பரந்த பூமியாகி, ஆகாயமாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விந்தையான நக்ஷத்திரங்களாகி, மற்றும் பலவுமாகி, ஞாயிறு முதலிய பல கிழமைகளுமாகி, 14+6+7 ஆகிய 27 சிறந்த நக்ஷத்திரங்களாகி, ஏழு உலகங்களாகி, வேதமாகி, வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி, பிரமனாகி, திருமாலாகி, இவர்களுக்கு மேற்பட்ட மங்கலப் பொருளானதும், அழிவு என்பதே இல்லாததான பரம்பொருளின், அஞ்ஞான இருள் என்பதே புகமுடியாத அந்தத் திருவடியை முடிமேற் சூடாமலும், நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ? திருதராஷ்டிரன் பெற்ற துரியோதனாதி நூறு பேரும் வீரசுவர்க்க நாட்டை ஆளும்படியாக பதினெட்டே நாட்களில் போர்க்களத்தில் மாண்டு விழவும், சிறந்த அர்ச்சுனனும் உலகை ஆண்டு காத்தருளுகின்ற சீருடன் வாழுமாறு அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தின பெருமான் திருமாலின் மருகனே, அசுரர்களின் ரத்தத்தில் தோய்ந்த வேலைக் கரத்திலே ஏந்தியவனே, அரக்கர்களாம் ராட்சதர்களின் மீது கோபம் கொண்டவனே, கடப்ப மாலையையும், கூதளப்பூ மாலையையும் அணிந்தவனே, அழகிய மயில் வீரனே, வஜ்ராயுதத்தை ஏந்திய அரசன் இந்திரனின் தேவலோகத்தைக் காத்தருளின தலைவனே, தேவனே, முருகவேளே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1061 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான
முதலி யாக்கையு மிளமை நீத்தற
     மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம் 
முறையி டாப்படு பறைக ளார்த்தெழ
     மூடா வீடூ டேகேள் கோகோ ...... எனநோவ 
மதலை கூப்பிட மனைவி கூப்பிட
     மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய 
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
     வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும் 
புதல றாப்புன எயினர் கூக்குரல்
     போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப் 
பொருது தாக்கிய வயப ராக்ரம
     பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங் 
குதலை வாய்க்குரு பரச டாக்ஷர
     கோடா ரூபா ரூபா பா¡£ ...... சதவேள்விக் 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
(வாழ்க்கைக்கு) முதன்மையை உடைய ஆதாரமாய் இருக்கும் உடலும், அதன் இளமையையும் ஒழித்து, மிகவும் முதுமை அடைந்து, (எங்களைக்) காத்துப் பற்றுக் கோடாக இருந்தவனே என்று பூமியில் உள்ளோர் முறையிட்டு ஏங்க, ஒலிக்கின்ற பறை வாத்தியங்கள் மிக உரக்கச் சப்தம் செய்ய, (பிணத்தைத் துணியால்) மூடி, வீட்டுக்குள் சுற்றத்தினர் கோகோவென்று கூச்சலிட்டு மனம் வருந்த, பிள்ளைகள் அழ, மனைவி அழ, தாய் (தலையில்) மோதியும் விழுந்தும், என் செல்வமே என்று அலற, மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வராது, வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும். நாணல் புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருக்கும் மறவர்கள் கூச்சலிடும் குரல் நீங்காத பகுதியில் உள்ளவர்களாகிய வேடர்களும், கடல் போலப் பெருகி நிரம்ப வந்த அசுரர்களும் பயந்து ஓட, அவர்களுடன் சண்டை செய்து தாக்கி எதிர்த்த வெற்றி வீரனே, பூமியைக் காப்போனே, கடப்ப மாலையை அணிந்த குழந்தையே, தந்தை சிவபெருமானும் கற்கும்படி மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரனே, (சரவணபவ என்னும்) ஆறெழுத்துக்கு உரியவனே, நேர்மை கொண்ட நெறி தவறாத வடிவத்தனே, வடிவு இல்லாதவனே, உலகை ஈந்தவனே, நூறு அசுவமேத யாகங்களை முடித்தவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவனே, தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1062 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்
     வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர் 
மனது போற்கரு கினகு வாற்குழல்
     வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ 
பருகு பாற்கடல் முருகு தேக்கிய
     பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ 
பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி
     பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ 
அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ
     ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி 
அவுணர் கூப்பிட வுததி தீப்பட
     ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக் 
குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய
     கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக் 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
எங்கள் வீட்டுக்கு வருக என்று அழைக்கும் சாமர்த்தியசாலிகளின் கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்னும்படியான விலைமாதர்களுடைய மனதைப் போன்று கருமை நிறமான அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும், உண்ணத்தக்க பாற்கடலில் உள்ளதும், நற்சுவை நிறைந்ததுமான பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும், பாட்டுக்களைப் பாடி அடி நாயாகிய நான் ஈடேறாமல் அழிந்து போவேனோ? அருகில் இருந்து பார்வதி மனம் கசிந்து உருகிக் கருதி நோக்க, ஒரு கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபிரானின் செல்வமே, கோகோ என்று அசுரர்கள் அலறும்படி (போர்க்களத்துக்குச்) சென்று, அவர்கள் அலறிக் கூச்சலிடவும், கடல் தீப்பட்டு எரியவும், ஹா ஹா சூரனே, போகாதே, இப்படி மீண்டும் வா என்று அவன் பின் ஓடி, கிரெளஞ்சம் என்னும் பேரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி செலுத்திய கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் செய்து, வஜ்ராயுதம் ஏந்திய அரசனாகிய இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவனே, தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1063 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான
மறலி போற்சில நயன வேற்கொடு
     மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும் 
வகையு மார்க்கமு மறமு மாய்த்திட
     வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர 
விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்
     வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே 
விழுவி னாற்களை யெழும தாற்பெரு
     வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய் 
மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம
     மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே 
மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்
     வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே 
குறவர் காற்புன அரிவை தோட்கன
     கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர் 
குலைய மாக்கட லதனி லோட்டிய
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.
யமனை ஒப்பதான கண்கள் என்னும் வேலாயுதத்தால் (விலைமாதர் தாக்குவதாலே) காம மயக்கில் மனம் முழுகி, மூங்கில் போன்ற இதமான தோள்களை உடைய பெண்களைப் பற்றிய காம சாஸ்திரத்தைப் படிக்கும் குணத்தையும், அதிலேயே ஈடுபடம் மனப் போக்கையும், (அதனால் வரும்) பாவத்தையும் போக்க வல்ல வழியை இன்னதென்று அறியாமல், போகின்ற (பழைய) வழியிலேயே நான் போய், மனோ திடமும், வலிமையும், வீரமும், மேம்பட்டு விளங்கும் அறிவும், செல்வமும் என்னை விட்டு விலகி, நீர் ஏற முடியாத ஒரு மேடு எப்படியோ அப்படி என் நிலை என் வினைகளுக்கு இடையே விழுவதால், (ஓயாது பிறப்பு இறப்பு என்னும்) களைப்பு உண்டாவதால், பெரிய வீரனே, என்னைக் கண் பார்த்து அருள்வாய், நான் வீணாக இவ்வுலகில் காலம் கழிக்காமல் என்னை ஆண்டு அருள்வாயாக. யமனை (காலால் உதைத்துச்) சாய்த்தவர், இறைவர், வீரம் பொருந்திய திருமாலாலும் காணப் படாதவராய், (தாய்) பார்வதியுடன் வாழ்பவரான சிவபெருமானின் குழந்தையே, குற்றம் இல்லாத திருவடிகளை தினமும் வாயார நாவால் தவறாமல் ஓதுபவர்களின் செல்வனே, குறவர்களிடத்தே வளர்ந்த, தினைப் புனம் காத்த மாதாகிய வள்ளியின் தோளும், பருத்த மலை போன்ற மார்பகங்களும் அணைந்த திருமார்பனே, அசுரர்களின் தலைவர்களாகிய சூரன் முதலியோர் அழிந்துபட, பெரிய கடலிடையே ஓட்டி விரட்டிய தலைவனே, தெய்வமே, செவ்வேளே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1064 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
குருதி யொழுகி யழுகு மவல
     குடிலை யினிது ...... புகலாலே 
குலவு மினிய கலவி மகளிர்
     கொடிய கடிய ...... விழியாலே 
கருது மெனது விரக முழுது
     கலக மறலி ...... அழியாமுன் 
கனக மயிலி னழகு பொழிய
     கருணை மருவி ...... வரவேணும் 
பரிதி சுழல மருவு கிரியை
     பகிர எறிசெய் ...... பணிவேலா 
பணில வுததி யதனி லசுரர்
     பதியை முடுக ...... வரும்வீரா 
இரதி பதியை யெரிசெய் தருளு
     மிறைவர் குமர ...... முருகோனே 
இலகு கமல முகமு மழகு
     மெழுத வரிய ...... பெருமாளே.
ரத்தம் ஒழுகி அழுகிப் போகும் துன்பத்துக்கு இடமான குடிசையாகிய இந்த உடலை இனிமையாகப் பேசும் சொற்களைக் கொண்டு நெருங்கி உறவாடி, இனிய புணர்ச்சி இன்பம் தரும் பொது மகளிருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே எண்ணுகின்ற என்னுடைய காம இச்சை முற்றிலுமாக என்னுடன் போருக்கு எழும் யமன் அழிப்பதற்கு முன்பாக, பொன்னிறமான மயிலின் அழகு பொலிந்து ஒழுக (நீ) அருள் வைத்து வந்தருள வேண்டும். சூரியன் சுழற்சி அடையும்படி, கிரெளஞ்ச மலை பிளவுபடச் செலுத்திய தொழில் அமைந்த வேலினை உடையவனே, சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரனை ஓட்டி விரட்ட வந்த வீரனே, ரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய குமரனே, முருகனே, விளங்கும் தாமரை போன்ற முகமும், அதன் அழகும் எழுதுதற்கு முடியாதவையான பெருமாளே. 
பாடல் 1065 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
துயர மறுநின் வறுமை தொலையு
     மொழியு மமிர்த ...... சுரபானம் 
சுரபி குளிகை யெளிது பெறுக
     துவளு மெமது ...... பசிதீரத் 
தயிரு மமுது மமையு மிடுக
     சவடி கடக ...... நெளிகாறை 
தருக தகடொ டுருக எனுமி
     விரகு தவிர்வ ...... தொருநாளே 
உயரு நிகரில் சிகரி மிடறு
     முடலு மவுணர் ...... நெடுமார்பும் 
உருவ மகர முகர திமிர
     வுததி யுதர ...... மதுபீற 
அயரு மமரர் சரண நிகள
     முறிய எறியு ...... மயில்வீரா 
அறிவு முரமு மறமு நிறமு
     மழகு முடைய ...... பெருமாளே.
துன்பமெல்லாம் ஒழியும். உனது தரித்திரம் நீங்கும். பிரசித்தி பெற்ற அமுதமாகிய தேவர் பருகும் உணவும், காமதேனுவும், (உலோகங்களைப் பொன்னாக்க வல்ல மந்திர சக்தி உள்ள) மாத்திரைகளையும், சுலபமாக நீ பெற முடியும். வாடுகின்ற எம்முடைய பசி அடங்கும்படியாக தயிரும் சோறும் எமக்கு இட்டால் அதுவே போதுமானது. அதைத் தந்து உதவுக. பொன் சரடு, கங்கணம், மோதிரம், (பொன்னாலாகிய) கழுத்து அணி இவைகளைத் தர வல்ல தாயித்து மந்திரத் தகட்டை (நான் தருவேன், அதை நீ) பெற்றுக் கொள்க. என்று கூறும் (கபட ரசவாதிகளின்) இந்த வகையான தந்திர மொழிகளிலிருந்து தப்பும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரெளஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக, மகர மீன்கள் உலாவுவதும், பேரொலி செய்வதும், இருண்டதுமான கடல் தனது வயிற்றின் உட்பாகம் கிழிய, சோர்வடைந்த தேவர்களின் காலில் இருந்த விலங்குகள் உடைபடச் செலுத்திய வேல் வீரனே. ஞானமும், வலிமையும், தரும நெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமாளே. 
பாடல் 1066 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தனன தனன தனன
     தனன தனன ...... தனதான
பணிகள் பணமு மணிகொள் துகில்கள்
     பழைய அடிமை ...... யொடுமாதும் 
பகரி லொருவர் வருக அரிய
     பயண மதனி ...... லுயிர்போகக் 
குணமு மனமு முடைய கிளைஞர்
     குறுகி விறகி ...... லுடல்போடாக் 
கொடுமை யிடுமு னடிமை யடிகள்
     குளிர மொழிவ ...... தருள்வாயே 
இணையி லருணை பழநி கிழவ
     இளைய இறைவ ...... முருகோனே 
எயினர் வயினின் முயலு மயிலை
     யிருகை தொழுது ...... புணர்மார்பா 
அணியொ டமரர் பணிய அசுரர்
     அடைய மடிய ...... விடும்வேலா 
அறிவு முரமு மறமு நிறமு
     மழகு முடைய ...... பெருமாளே.
அணிகலன்கள், பணம், அணியும் ஆடைகள், பழகி வந்த வேலை ஆட்கள், (இவர்களோடு) மனைவியும், சொல்லப் போனால், (இவர்களில்) ஒருவரும் கூட வருவதற்கு முடியாததான (இறுதிப்) பயணத்தில் உயிர் பிரிய, நற்குணங்களும், நல்ல மனமும் கொண்ட உறவினர் ஒன்று கூடி, விறகினிடையே இந்த உடலைப் போட்டு தீயிடும் துயரமான செயலைச் செய்வதற்கு முன்பாக, அடிமையாகிய நான் உனது திருவடியை என் உள்ளம் குளிர வாழ்த்தித் துதிக்கும்படியான திறமையைத் தந்து அருள்வாயாக. நிகரில்லாத திருவண்ணாமலை, பழநி ஆகிய தலங்களுக்கு உரியவனே, என்றும் இளமை வாய்ந்த இறைவனே, முருகனே, வேடர்கள் இடத்தே (தினை காக்கும் தொழிலில்) முயன்றிருந்த மயில் போன்ற வள்ளியை இரண்டு கைகளையும் கூப்பித் தொழுது, பின்பு தழுவிய திருமார்பனே, வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுவோனே, அறிவு, வலிமை, தருமநெறி, ஒளி, அழகு இவை உடைய பெருமாளே. 
பாடல் 1067 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தந்த தனன தந்த தனன
     தந்த தனன ...... தனதான
மைந்த ரினிய தந்தை மனைவி
     மண்டி யலறி ...... மதிமாய 
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
     வன்கை யதனி ...... லுறுபாசந் 
தந்து வளைய புந்தி யறிவு
     தங்கை குலைய ...... உயிர்போமுன் 
தம்ப முனது செம்பொ னடிகள்
     தந்து கருணை ...... புரிவாயே 
மந்தி குதிகொ ளந்தண் வரையில்
     மங்கை மருவு ...... மணவாளா 
மண்டு மசுரர் தண்ட முடைய
     அண்டர் பரவ ...... மலைவோனே 
இந்து நுதலு மந்த முகமு
     மென்று மினிய ...... மடவார்தம் 
இன்பம் விளைய அன்பி னணையு
     மென்று மிளைய ...... பெருமாளே.
பிள்ளைகள், இனிமை தரும் தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்) நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி, வஞ்சனை எண்ணத்தைக் காட்டும் கண்கள் முன் தோன்றி விளங்கும் யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை வீசி எறிந்து என் உயிரை வளைக்க, என் மனமும், அறிவும் ஒரு வழியில் நிலைபெற்றுத் தங்காமல் அலைச்சல் கொள்ள, என் உயிர் போவதற்கு முன்பு பற்றுக் கோடாகவுள்ள உனது அழகிய திருவடிகளை எனக்குத் தந்து கருணை புரிவாயாக. குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த (வள்ளி) மலையில் (இருந்த) வள்ளி நாயகியை அணைந்த மணவாளனே, நெருங்கும் அசுரர்களின் படை உடைந்து சிதறவும், தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போரிட்டவனே, பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவராய், (உனக்கு) என்றும் இனியராயுள்ள தேவயானை, வள்ளி ஆகிய இரண்டு மாதர்களுக்கும், இன்பம் பெருகி உண்டாக அன்புடன் அணையும், என்றும் இளையோனாக விளங்கும் பெருமாளே. 
பாடல் 1068 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மணிரங்கு 
தாளம் - ஆதி
தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான
ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி
     உயர்கால் கரத்தி ...... னுருவாகி 
ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து
     உழல்மாய மிக்கு ...... வருகாயம் 
பழசா யிரைப்பொ டிளையா விருத்த
     பரிதாப முற்று ...... மடியாமுன் 
பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்
     பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே 
எழுவா னகத்தி லிருநாலு திக்கில்
     இமையோர் தமக்கு ...... மரசாகி 
எதிரேறு மத்த மதவார ணத்தில்
     இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ் 
செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து
     செழுதீ விளைத்து ...... மதிள்கோலித் 
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
     சிறைமீள விட்ட ...... பெருமாளே.
வழியும் மாமிசமும், ரத்தமும் சேர்ந்து, தோலால் மூடப்பட்டு, உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி, ஒரு தாயினுடைய வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து, அலைச்சலைத் தரும் மாயம் மிகுந்து வருகின்ற இந்த உடலானது பழமையடைந்து மூப்புற்று, மூச்சு வாங்குவதால் சோர்வு அடைந்து கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து, இறந்து போவதற்கு முன்பாக, அன்பு கலந்த உள்ளத்தோடு முருகா என்ற உன் திருப் பெயரைக் குறிக்கும் சொல்லை நான் சொல்லும்படியான வாழ்வை எனக்கு நீ அருள்வாயாக. விளங்கும் விண்ணுலகிலும், எட்டுத் திசையிலும் உள்ள தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி, அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாம் ஐராவதத்தின் மீது இன்பகரமாக ஏறிவரும் வெற்றிநிலையுடன் வாழ்ந்த செழிப்பான அழகிய பொன்னுலகாம் அமராவதியைப் பாழ்படுத்தி, பெரும் தீயிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து, வலிமையுடன் அரக்கர்கள் கொண்டுபோய்ச் சிறையிலிட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அவர்களை விடுவித்த பெருமாளே. 
பாடல் 1069 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனனா தனத்த தனனா தனத்த
     தனனா தனத்த ...... தனதான
கருவாய் வயிற்றி லுருவா யுதித்து
     முருகாய் மனக்க ...... வலையோஆட 
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த
     தலைபோய் வெளுத்து ...... மரியாதே 
இருபோது மற்றை யொருபோது மிட்ட
     கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி 
இறவாத சுத்த மறையோர் துதிக்கு
     மியல்போத கத்தை ...... மொழிவாயே 
அருமாத பத்தஅமரா பதிக்கு
     வழிமூடி விட்ட ...... தனைமீள 
அயிரா வதத்து விழியா யிரத்த
     னுடனே பிடித்து ...... முடியாதே 
திருவான கற்ப தருநா டழித்து
     விபுதேசர் சுற்ற ...... மவைகோலித் 
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த
     சிறைமீள விட்ட ...... பெருமாளே.
தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகப் பிறந்து, இளமைப் பருவம் அடைந்து, மனக் கவலையுடன் படிக்க வேண்டிய கலை நூல்களை உண்மை அறிவின்றிக் குழறிப் படித்து, வாழ் நாளின் நடுவில் கறுத்திருந்த தலை மயிர் வெளுத்து, வீணனாக இறந்து போகாமல், நாள் தோறும், காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் (சிவ யோக நெறியால்) வளர்த்த மூலாக்கினியில்* முழுகுவதற்கும், (என்னுள் இருக்கும்) சிறந்த மதி மண்டலச் சுத்த கங்கையில் (சிவயோக நிஷ்டையில்) முழுகுவதற்கும், சாகா வரம் பெற்ற (அகத்தியர் முதலிய) முனிவர்கள் போற்றும் தகுதியுள்ள மந்திர உபதேசத்தை எனக்கும் உபதேசித்து அருள்வாயாக. அருமை வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை முதலில் மூடிவிட்டு, அந்தப் பொன்னுலகை மறுபடியும் தாக்கி, ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனான ஆயிரம் கண்களை உடைய இந்திரனை உடனே பிடிக்க முயன்று, அங்ஙனம் பிடிக்க முடியாமல் போன காரணத்தால், செல்வம் நிறைந்த, கற்பக விருட்சத்தைக்கொண்ட தேவர் உலகை தீயிட்டுப் பாழ் படுத்தி, தேவ சிரேஷ்டர்களை அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து, வலிமையுடன் அசுரர்கள் கொண்டு போய் அடைத்த சிறையினின்றும் அந்தத் தேவர்களை மீட்டு விடுவித்து (மீண்டும் அவர்களது நாட்டில்) குடிபுகச் செய்த பெருமாளே. 
* சிவ ஒளி இன்பப் புனலில் முழுகி எனப்படும் திருவண்ணாமலையைக் குறிக்கும். அருணாசலம் சிவ ஒளி, ஆறு ஆதாரங்களுள் ஒன்று - மணிபூரகம்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 1070 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
     தனத்த தந்தனம் ...... தனதான
புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்
     புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப் 
புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்
     புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே 
செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
     திளைக்கு நின்திறம் ...... புகலாதிந் 
த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்
     தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ 
குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்
     குவட்டி லங்கையுந் ...... துகளாகக் 
கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்
     கொதித்து மண்டுவெம் ...... பகையோடத் 
துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்
     துரத்த னும்பிறந் ...... திறவாத 
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.
நம்மை ஆண்டு காக்க வந்த, நமது குறவர் குலக் கரும்பாகிய வள்ளியை அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு நீ அன்று ஒரு நாள் சென்று பார்த்து, நட்புப் பேச்சுக்களைப் பேசி, புடைத்துப் பருத்து அலங்காரம் விளங்க எழுந்துள்ளதும், வலிமையும் அற்புத எழிலும் வாய்ந்ததும், இளநீர் போன்றதும் ஆகிய மார்பகத்தின் மீதும், மென்மையான தோள்கள் மீதும், காம மயக்கம் கொள்ளும்படி மனத்தில் மகிழ்ச்சி பொங்க அன்புடன் இடைவிடாது தழுவிய உன்னுடைய மேன்மையான குணத்தைச் சொல்லிப் புகழாமல், ஐம்பொறிகளைக் கொண்ட உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பும் கலக்கத்தை நான் எப்போது நீங்கி இருப்பேனோ? குரங்கின் கூட்டங்களைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேக நிறம் கொண்ட திருமாலும், (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும், மத நீர் கொதிப்பு உற்று நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும், ஒளி வாய்ந்ததும், பூண் உடையதும், வீரம் நிறைந்ததும் ஆன ஐராவதம் என்னும் யானைக்குத் தலைவனுமாகிய இந்திரனும், என்றும் நிலைத்து நிற்கும் பேற்றைப் பெற்றவர்களாய் நித்திய சுகத்தில் இருக்கும் அடியார்களும், மூன்று உலகங்களிலும் உள்ள அன்பர்கள் யாவரும் சேர்ந்து துதி செய்து போற்றும் தேவர்கள் பெருமாளே. 
பாடல் 1071 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
     தனத்த தந்தனம் ...... தனதான
பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்
     ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும் 
பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்
     றமைத்த பெண்தனந் ...... தனையாரத் 
திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்
     திறத்தை யன்புடன் ...... தெளியாதே 
சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்
     திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ 
தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்
     தரித்த குன்றநின் ...... றடியோடுந் 
தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்
     தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ் 
சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்
     துணைச்செய் கின்றநின் ...... பதமேவும் 
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்
     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.
நிரம்ப மனம் மகிழ்ச்சி உற்று உருகும் அன்பு இல்லாதவன் நான். பெருந்தன்மைக் குணங்கள், நற்குணங்கள், மதிக்கத் தக்க கூச்சம் முதலியவற்றுள், நான் உய்யும் வகைக்கு, ஒன்றும் இல்லாதவன். வேல் ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் தோன்றி வளர்ந்த வள்ளியின் மார்பினை மனம் நிறையத் திருக் கைகளைக் கொண்டு தழுவச் சென்ற உன்னுடைய மேன்மைக் குணத்தை அன்புடன் நான் தெளிந்து உணராமல், கோபக் குணமே நிரம்பி, எனது கோணலான புத்தி மாறி என்றைக்கு நற்புத்தியை நான் அடைவேனோ? செருக்குடன் அன்று போய், அருள் கண்ணோக்கம் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்த கயிலாய மலையை அடிவாரத்தில் நின்று அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய ராவணனுடைய தலைகளைத் துண்டித்த வீரனாகிய திருமாலும், எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும், சுருக்கம் இல்லாமல் விரிந்த கிரணங்களை வீசும் சூரியனும், இந்திரனும், துணையாய் உதவுகின்ற உனது திருவடிகளை விரும்பி நிற்பவர்களான உன் அன்பில் முழுகியுள்ள அடியார்களும், மூன்று உலகத்தோரும், போற்றித் துதிக்கும் தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1072 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வஸந்தா 
தாளம் - சதுஸ்ர அட - 12
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும் 
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும் 
விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே 
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே 
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே 
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா 
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே 
சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.
நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக. குருந்த* மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின் மருமகனே, குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே, திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே, செம்மை வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே. 
* கோபியரின் சேலைகளைக் கவர்ந்து ஒளிக்க, கண்ணன் யமுனைக் கரையில் குருந்த மரத்தின் மீது ஏறினான்.
பாடல் 1073 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங் 
கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி 
உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா 
உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே 
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே 
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா 
சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச் 

தான் மனைவியாகக் கொண்டு இணைந்த பெண்மணியும், கண்கள் மகிழ்ச்சி அடையும்படி ஓடி வருகின்ற குழந்தைகளும், கலக்கம் கொள்ளாது வாழ்வார்கள் என்று எண்ணி, இன்பத்துடன் பொருந்த வாழும் உலக வாழ்க்கையின் நடுவே துக்க நிலையான வறுமையை அடைந்து, தேய்ந்து அழியும் இந்த உடலுடனும், மனத்தில் கொண்ட துயரத்துடனும் இருக்கின்ற எனக்கு நான் மகிழ்ச்சி கொண்டு தியானிக்கும் உனது திருவடியைத் தந்து, உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு அருள் செய்வாயாக. மலர்ந்த தாமரையில் உறையும் லக்ஷ்மியை அணைந்த திருமாலின் மருகனே, (மிருகங்களைக்) கொல்லும் தொழிலைச் செய்யும் வேடர்களுடைய கொடிபோன்ற பெண்ணாகிய வள்ளியை மணந்த கணவனே, சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்க, சிவந்த திருவடியும் தண்டையும் அழகு விளங்கும் பெருமாளே. 
பாடல் 1074 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஡ணதிகெளளை 
தாளம் - சதுஸ்ர அட - 12
தனந்த தானந் தனதன தானன ...... தனதான
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும் 
இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும் 
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே 
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா 
உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே 
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே 
அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும் 
அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.
விருப்பமுடன் ஏறுகின்ற ரிஷப வாகனமும், கஜமுகாசுரனின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும், அழகிய திருநீறும், விளங்குகின்ற பூணூலும், புலித்தோல் ஆடையும், கோடரியும், மானும், காதுகளில் அசைந்தாடும் தோடுகளும், சடையிலே தரித்த அழகிய கொன்றை மாலையும், தலைமுடி மீது அணிந்த ஈசனாம் சிவபெருமான் பரிவோடு போற்றிப் பரவிய குருநாதனே, கர்வம் மிக்க சூரன் தன் சுற்றத்தாருடன் வேரற்றுப் போகும்படி கோபித்தவனே, விருப்போடு பாசக்கயிறை எடுத்து வந்த யமதூதர்கள் சோர்வு அடையாமல் என் உயிர் கொண்டு செல்லும் சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும். அழகிய வேலினை தோளில் வைத்திருக்கும் பெருமாளே. 
பாடல் 1075 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தர்பாரிகானடா 
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான
திரிபுர மதனை யொருநொடி யதனி
     லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே 
சினமுடை யசுரர் மனமது வெருவ
     மயிலது முடுகி ...... விடுவோனே 
பருவரை யதனை யுருவிட எறியு
     மறுமுக முடைய ...... வடிவேலா 
பசலையொ டணையு மிளமுலை மகளை
     மதன்விடு பகழி ...... தொடலாமோ 
கரிதிரு முகமு மிடமுடை வயிறு
     முடையவர் பிறகு ...... வருவோனே 
கனதன முடைய குறவர்த மகளை
     கருணையொ டணையு ...... மணிமார்பா 
அரவணை துயிலு மரிதிரு மருக
     அவனியு முழுது ...... முடையோனே 
அடியவர் வினையு மமரர்கள் துயரு
     மறஅரு ளுதவு ...... பெருமாளே.
அசுரர்களின் திரிபுரத்தை ஒரே நொடியளவில் பஸ்மம் ஆக்கி அருளிய சிவன் பெற்ற செல்வமே, கோபம் கொண்ட அசுரர்களின் மனத்தில் அச்சம் தோன்ற உன் மயிலினை வேகமாகச் செலுத்துவோனே, பெரிய கிரெளஞ்சமலையினை ஊடுருவும்படி எறிந்த கூரிய வேலை உடைய ஆறுமுகனே, விரகத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இள மார்புள்ள என் மகளை மன்மதன் விடும் மலரம்புகள் தொளைத்திடலாமோ? யானையின் அழகிய முகமும் பெருத்த வயிறும் உடையவராம் வினாயகருக்குப் பின்பு பிறந்தவனே, சிறப்பும் செல்வமும் உடைய குறவர்களது மகள் வள்ளியை கருணையோடு தழுவும் அழகிய மார்பை உடையவனே, பாம்புப் படுக்கையில் உறங்கும் ஹரியின் அழகிய மருமகனே, இந்த உலகம் அத்தனையும் சொந்தமாகக் கொண்டவனே, அடியவர்கள் வினையும் அசுரர்கள் தரும் துன்பமும் அற்றுப்போகும்படியாக திருவருளைத் தந்திடும் பெருமாளே. 
இப்பாட்டு முருகனின் காதலால் விரகமுற்ற மகளுக்காக தாயார் பாடும் பாட்டு.
பாடல் 1076 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தனதான
புழுககில் களப மொளிவிடு தரள
     மணிபல செறிய ...... வடமேருப் 
பொருமிரு கலச முலையினை யரிவை
     புனையிடு பொதுவின் ...... மடமாதர் 
அழகிய குவளை விழியினு மமுத
     மொழியினு மவச ...... வநுராக 
அமளியின் மிசையி லவர்வச முருகி
     அழியுநி னடிமை ...... தனையாள்வாய் 
குழலிசை யதுகொ டறவெருள் சுரபி
     குறுநிரை யருளி ...... யலைமோதுங் 
குரைசெறி யுததி வரைதனில் விறுசு
     குமுகுமு குமென ...... வுலகோடு 
முழுமதி சுழல வரைநெறு நெறென
     முடுகிய முகிலின் ...... மருகோனே 
மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு
     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.
புனுகு சட்டம், அகில், கலவைச் சந்தனம், ஒளி வீசும் முத்து மாலை, ரத்தின மாலை பலவும் நெருங்க, வட திசையில் உள்ள மேரு மலையை நிகர்க்கும் குடம் போன்ற மார்பகங்களிலும், பணிப் பெண்கள்அலங்கரிக்கும் இளம் பருவத்துப் பொது மகளிரின் அழகிய குவளை மலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும், தன் வசம் அழிந்துக் காமப் பற்றுடன் படுக்கை மீது அந்த விலைமாதர்கள் மேல் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய என்னை ஆண்டருள்வாயாக. புல்லாங்குழலின் இசையால் மிகவும் மயங்கி அஞ்சிய காராம் பசு முதலிய சிறிய பசுக் கூட்டத்துக்கு உதவி செய்து அருளி, அலை வீசுவதும், ஒலி நிரம்பச் செய்வதுமான கடல், மலை போல சுழன்று அலைகளை வீசி குமுகுமு குமு என்று பொங்கவும், உலகுடன் பூரண சந்திரன் சுழற்சி அடைய, மந்திர மலை நெறு நெறு என்று சுழலவும், விரைந்து (திருப்பாற் கடலைக்) கடைந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகோனே, மொகுமொகு மொகு என்று வண்டுகள் இசை பாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் பெருமாளே. 
பாடல் 1077 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தந்ததான
முழுமதி யனைய முகமிரு குழையில்
     முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா 
முதலறி வதனை வளைபவர் கலவி
     முழுகிய வினையை ...... மொண்டுநாயேன் 
வழிவழி யடிமை யெனுமறி வகல
     மனமுறு துயர்கள் ...... வெந்துவாட 
மதிதரு மதிக கதிபெறு மடிகள்
     மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய் 
எழுதிட அரிய எழில்மற மகளின்
     இருதன கிரிகள் ...... தங்குமார்பா 
எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி
     இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய் 
அழகிய குமர எழுதல மகிழ
     அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே 
அமருல கிறைவ உமைதரு புதல்வ
     அரியர பிரமர் ...... தம்பிரானே.
பூரண சந்திரன் போன்ற முகம் கொண்டும், இரண்டு குண்டலங்களையும் கோபிப்பது போல் தாக்கும் கண்களின் முனைகளைக் கொண்டும், முதிர்ச்சி அடையாத ஆரம்ப அறிவையே கொண்டவர்களை தம்வசப் படுத்தும் வேசையர்களுடன் புணர்ச்சி இன்பத்தில் முழுகும் வினையை அனுபவிக்கும் நாயை ஒத்த எனக்கு, வழி வழியாக (அம் மகளிருக்கு) அடிமை நான் என்னும் அறிவு நீங்கவும், மனத்தில் உள்ள துயரங்கள் யாவும் வெந்து ஒடுங்கவும், நல்லறிவைத் தருவதும், நிரம்பப் புகலிடமான தன்மையைப் பெற்றுள்ளதுமான அன்பைத் தந்தருளுக. எழுதுவதற்கு அருமையான அழகைக் கொண்ட வேடர் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு மலை போன்ற மார்பும் தழுவுகின்ற திருமார்பனே, எதிரே நின்று சண்டை செய்த அசுரர்கள் பொடியாகும்படி, முன் சென்று எதிர்த்து, தேவர்களின் சிறையை அன்று நீக்கி அருளினாய். அழகு வாய்ந்த குமரனே, ஏழு உலகங்களும் மகிழ்ச்சி கொள்ள ஆறு கார்த்திகைப் பெண்களின் முலைப் பாலைப் பருகிய செல்வமே, தேவலோகத்துக்குத் தலைவனே, உமாதேவி பெற்ற மகனே, திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே. 
பாடல் 1078 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தத்தத்
     தாந்தாந் ...... தனதான
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
     கூன்போந் ...... தசடாகுங் 
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
     கோண்பூண் ...... டமையாதே 
பொடிவன பரசம யத்துத் தப்பிப்
     போந்தேன் ...... தலைமேலே 
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
     பூண்டாண் ...... டருள்வாயே 
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்
     சூழ்ந்தாங் ...... குடனாடத் 
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
     தோந்தாந் ...... தரிதாளம் 
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்
     பாழ்ங்கான் ...... தனிலாடும் 
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்
     பாங்காம் ...... பெருமாளே.
கொடுமையான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்றும், உடலில் பொருந்தி வரும் ஒரு மிக வேடிக்கையான மாறுபட்ட நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவு பெறும் மற்ற சமயக் கூச்சல்களிலிருந்து பிழைத்து வந்துள்ள என் தலை மீது, மெய்ப் பொருளை நான் பெற, உனது திருவடியை அன்பு கொஞ்சம் வைத்து ஆண்டு அருள்வாயாக. உடுக்கை வாத்தியம் ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தைப் படியப் போடுகின்ற பதி விரதையாகிய பார்வதி (அதற்குத் தகுந்தபடி) ஒத்திட்டு ஒலிக்க, தூய சுடு காட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபெருமானுடைய குமரனே, குறப்பெண்ணாகிய வள்ளிக்குத் துணைவனான பெருமாளே. 
பாடல் 1079 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தத்தத்
     தாந்தாந் ...... தனதான
சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்
     சூழ்ந்தோங் ...... கிடுபாரிற் 
றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
     சோர்ந்தோய்ந் ...... திடநாறுங் 
கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்
     கான்போந் ...... துறவோருங் 
கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்
     காய்ந்தாண் ...... டருளாயோ 
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
     தாந்தோய்ந் ...... திருபாலும் 
தமருக வொலிசவு தத்திற் றத்தத்
     தாழ்ந்தூர்ந் ...... திடநாகம் 
படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்
     பாய்ந்தாய்ந் ...... துயர்கானம் 
பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்
     பாங்காம் ...... பெருமாளே.
ஜோதி ஒளி வீசும் சூரியன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில் துன்பம், நல் வினை, தீ வினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, (அதனால்) சோர்வடைந்து அலுத்து மாய்ந்திட (பிணம்) நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போகவும் என்று சொல்லப்படும் உடல் மீதுள்ள பற்று ஒழிந்து, சுடு காட்டுக்குப் போய் உறவினரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற அந்தத் துக்க நிகழ்ச்சிக்கு இடம் தருகின்ற பிறப்பைக் கோபித்து ஒழித்து, என்னை ஆண்டருள மாட்டாயோ? பெருமை உடைய (துர்க்கையின் படைகளான) கணங்கள் செருக்குற்று ஒன்று சேர்ந்து, தாங்கள் கூடிப் பொருந்தி (நடனம் ஆடுபவரின்) இரண்டு பக்கங்களிலும் உடுக்கையின் ஓசையை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க, (ஜடையில்) அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்தும் படிக்கும் திருமால் கைகளால் (மத்தளம்) அடிக்க, கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்திலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே நடனம் செய்பவரான சிவபெருமானின் மகனே, கிளி போன்ற குறப்பெண் ஆகிய வள்ளிக்கு மணாளனாகும் பெருமாளே. 
பாடல் 1080 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
     தனதன தத்த தந்த ...... தனதான
குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்
     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே 
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த
     மதசல முற்ற தந்தி ...... யிளையோனே 
இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து
     இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய் 
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து
     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.
குடம் என்று உவமை சொல்லும்படியான மார்பையும், குயிலின் மொழி என்று உவமை சொல்லும்படியான இனிய சொல்லையும் உடைய குற மகள் வள்ளி உன் பால் வைத்த அன்பை நினைத்து அவளுக்கு உதவியவனே, வடக்கே உள்ள கயிலை மலையில் பொருந்தி வீற்றிருக்கும் மகா தேவர் என்று பெயர் பெற்ற சிவபெருமான் பெற்ற கந்த மூர்த்தியே, மத நீர் நிறைந்த யானை முக விநாயக மூர்த்தியின் தம்பியே, நீ இடம் பெற வேண்டும் என்று வைத்த என் உள்ளம் வருந்துதல் ஒழிய எனக்கு முக்தி கொடுத்து, இசை ஞானத்தை அறிவித்து ஊட்டி, வந்து என்னை ஆண்டருள்க. உயர்ந்த சிகரங்களை உடைய விசாலமான கயிலை மலையில் தோன்றி, சரவணப் பொய்கையில் எழுந்து, போர்க்களத்தில் வெற்றி பெற்ற பெருமாளே. 
பாடல் 1081 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
     தனதன தத்த தந்த ...... தனதான
மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து
     மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான 
சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து
     தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய் 
படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற
     பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே 
குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த
     குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.
விலைமாதர்களுடைய எச்சிலை உண்டு, கையில் உள்ள மூலப்பொருளை அவர்கள் பொருட்டுச் செலவழித்து ஒழித்து, மறு பிறப்புக்கு ஏதுவான செயல்களில் அலைச்சல் உற்று, அழகாய் இருந்த உடம்பு வர வர இளைத்து, காய்ந்து வாடி, புணர்ச்சிச் செயல்களில் மீண்டும் ஈடுபடத் துணிந்து, நான் சோர்வு அடைவதற்கு முன்பாக என்னை நீ ஆண்டருள்க. படம் கொண்ட (ஆதி சேஷன் என்னும்) பாம்பாகிய படுக்கையை மிகத் தக்க இடம் இது என்று கொண்டு அதில் பள்ளி கொண்ட கரிய மேகம் போன்ற திருமாலுக்குப் பிரியமான மருகனே, அகத்திய முனிவர் கற்க*, அன்று தமிழ் ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய வள்ளி நம்பித் தொழும் பெருமாளே. 
* அகத்தியர் சிவபெருமானை வணங்கி தமிழ் ஞானம் வேண்ட, அவர் முனிவரைத் திருத்தணிகை முருகனை அணுகுமாறு பணித்தார். அங்ஙனமே அகத்தியர் முருக வேளைப் பூஜித்துத் தமிழ் ஞானம் பெற்றார்.
பாடல் 1082 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தானத் தனதன தானத்
     தனதன தானத் ...... தனதான
கருமய லேறிப் பெருகிய காமக்
     கடலினில் மூழ்கித் ...... துயராலே 
கயல்விழி யாரைப் பொருளென நாடிக்
     கழியும நாளிற் ...... கடைநாளே 
எருமையி லேறித் தருமனும் வாவுற்
     றிறுகிய பாசக் ...... கயிறாலே 
எனைவளை யாமற் றுணைநினை வேனுக்
     கியலிசை பாடத் ...... தரவேணும் 
திருமயில் சேர்பொற் புயனென வாழத்
     தெரியல னோடப் ...... பொரும்வீரா 
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
     செழுமறை சேர்பொற் ...... புயநாதா 
பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்
     புவியது சூழத் ...... திரிவோனே 
புனமக ளாரைக் கனதன மார்பிற்
     புணரும்வி நோதப் ...... பெருமாளே.
கொடிய ஆசை மிகுந்து பெருகி வளர்ந்த காமமாகிய கடலில் முழுகித் துயரம் அடைந்து, மீன் போன்ற கண்களைக் கொண்ட விலைமாதர்களை அடையத் தக்க பொருள் என்று தேடி விரும்பி, காலம் கழிக்கின்ற அந்த நாட்களில் இறுதி நாள் வர, எருமைக் கடா வாகனத்தில் ஏறி யமதர்மனும் வீட்டு வாசற்படி தாண்டி வந்து, அழுத்திக் கட்டிய பாசக் கயிற்றால் என்னை வளைத்து இழுக்காமல், உன்னையே துணையாக நினைக்கின்ற எனக்கு, இயற்றமிழ் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்ல வரத்தைத் தந்தருள வேண்டும். மயில் போன்ற லக்ஷ்மிகரம் பொருந்திய அழகிய புயங்களை உடையவன் என்று சொல்லும்படி வாழ்ந்திருந்த அந்தப் பகைவனாகிய சூரன் புற முதுகு காட்டி ஓடும்படிச் சண்டை செய்த வீரனே, இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாட்டுக்களால் ஆகிய பாமாலைகளும், செழுமை வாய்ந்த வேத மொழிகளும் மாலையாக அணிந்த அழகிய புயங்களைக் கொண்டவனே, சண்டை செய்ய வல்ல மயில் மீது ஏறி, மலைகள் எல்லாம் பொடியாகும் படி பூமியை வலம் வந்தவனே, தினைப் புனத்தில் காவலில் இருந்த வள்ளியை, அவளது சிறப்பு மிக்க மார்பகங்களோடு, ஆரத் தழுவிய திருவிளையாடலைச் செய்த பெருமாளே. 
பாடல் 1083 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தானத் தனதன தானத்
     தனதன தானத் ...... தனதான
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
     குலவிய தோலத் ...... தியினூடே 
குருதியி லேசுக் கிலமது கூடிக்
     குவலயம் வானப் ...... பொருகாலாய் 
உடலெழு மாயப் பிறவியி லாவித்
     துறுபிணி நோயுற் ...... றுழலாதே 
உரையடி யேனுக் கொளிமிகு நீபத்
     துனதிரு தாளைத் ...... தரவேணும் 
கடலிடை சூரப் படைபொடி யாகக்
     கருதல ரோடப் ...... பொரும்வேலா 
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
     கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா 
சடையினர் நாடப் படர்மலை யோடித்
     தனிவிளை யாடித் ...... திரிவோனே 
தனிமட மானைப் பரிவுட னாரத்
     தழுவும்வி நோதப் ...... பெருமாளே.
குடலினிடத்தே கெடுதல் அடைந்து, ஊடே ஊடே கிழிபட்டு இத்தகைய கோலத்துடன் விளக்கம் தரும் தோலும், எலும்பும் கூடிய இவ்வுடலினூடே, (மகளிர்) ரத்தத்துடன் விந்துவும் சேர்ந்து, மண், வான், நீர், ஒப்பற்ற காற்று (இவைகளுடன் தீ) ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல் தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வெளிவந்து பிறந்து, சேர்ந்து பிணித்தலைச் செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து வீணாக அலைச்சல் உறாமல், உன்னைப் புகழ்ந்துரைக்கும் அடியவனாகிய எனக்கு, ஒளி மிக்கனவும், கடப்ப மலர் சேர்ந்துள்ளனவுமான, இரண்டு திருவடிகளைத் தந்து அருள வேண்டும். கடலின் இடையே சூரனுடைய படைகள் பொடிபட்டு அழியவும், பகைவர்கள் ஓட்டம் பிடிக்கவும் சண்டை செய்யும் வேலனே, கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ் சூரியனைப் போன்ற திருஞான சம்பந்தராய்த் தோன்றி பல கலை ஞானங்களையும் வேதங்களையும் உணர்ந்தவனாக முத்தமிழ் நாட்டில் விளங்கியவனே, சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள கயிலை மலையில் ஓடி, தனியாக விளையாடித் திரிந்தவனே, ஒப்பற்ற மடந்தையாகிய மான் போன்ற வள்ளியை அன்புடன் நன்றாக (மனம் குளிரத்) தழுவிய அழகு வாய்ந்த பெருமாளே. 
பாடல் 1084 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ...... தனதான
கருதியே மெத்த விடமெலாம் வைத்த
     கலகவா ளொத்த ...... விழிமானார் 
கடினபோ கத்த புளகவா ருற்ற
     களபமார் செப்பு ...... முலைமீதே 
உருகியான் மெத்த அவசமே வுற்ற
     வுரைகளே செப்பி ...... யழியாதுன் 
உபயபா தத்தி னருளையே செப்பு
     முதயஞா னத்தை ...... அருள்வாயே 
பருவரா லுற்று மடுவின்மீ துற்ற
     பகடுவாய் விட்ட ...... மொழியாலே 
பரிவினோ டுற்ற திகிரியே விட்ட
     பழயமா யற்கு ...... மருகோனே 
முருகுலா வுற்ற குழலிவே டிச்சி
     முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே 
முருகனே பத்த ரருகனே வெற்பு
     முரியவேல் தொட்ட ...... பெருமாளே.
மிகுந்த முன்யோசனையுடன் எல்லா விஷத்தையும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் வன்மை கொண்டதும், போக இன்பம் தருவதும், புளகாங்கிதம் கொண்டதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான மார்பகத்தின் மீது மனம் உருகி நான் மிகவும் வசம் இழந்த நிலையில் இருந்த பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல், உனது இரண்டு திருவடிகளின் கிருபா கடாட்சத்தின் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக. மிக்க துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்கு மருகனே, இயற்கை மணம் வீசும் கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் மார்பை விரும்பி அணைந்த கருணை வேளே, முருகனே, பக்தர்களுக்கு அருகே நின்று உதவுபவனே, கிரவுஞ்ச மலை ஒடிந்து அழிய வேலைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1085 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ...... தனதான
கொலையிலே மெத்த விரகிலே கற்ற
     குவளையேர் மைக்கண் ...... விழிமானார் 
குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த
     குழலிலே பற்கள் ...... தனிலேமா 
முலையிலே யற்ப இடையிலே பத்ம
     முகநிலா வட்ட ...... மதின்மீதே 
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
     மொழியிலே சித்தம் ...... விடலாமோ 
கலையனே உக்ர முருகனே துட்டர்
     கலகனே மெத்த ...... இளையோனே 
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
     கடவுளே பச்சை ...... மயிலோனே 
உலகனே முத்தி முதல்வனே சித்தி
     உடையனே விஷ்ணு ...... மருகோனே 
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
     வுருவனே மிக்க ...... பெருமாளே.
கொலைத் தொழிலையும், நிரம்பத் தந்திரங்களைக் கற்றுள்ளனவும், குவளை மலர் போன்றனவும், அழகு கொண்டனவும், மை பூசியும் உள்ள விழிகளை உடைய விலைமாதர்களின் காதில் உள்ள குண்டலங்களிலும், இளைப்புற்ற நடையிலும், வாசனைத் தைலம் பூசியுள்ள கூந்தலிலும், பற்களிலும், பெரிய மார்பகங்களிலும், குறுகிய இடையிலும், தாமரை போன்ற முகமாகிய சந்திர பிம்ப வட்ட வடிவிலும், முதுகிலும், பொட்டு இட்டுள்ள நெற்றியிலும், கிளி போன்ற பேச்சிலும் நான் என் மனத்தைச் சிதற விடலாமோ? எல்லா கலைகளிலும் வல்லவனே, (அசுரர்களிடத்தில்) சினம் கொண்ட முருகனே, துஷ்டர்களைக் கலங்கச் செய்து அடக்குபவனே, மிகவும் இளையவனே, பொன் உருவத்தினனே, பித்தராகிய சிவபெருமானுடைய மகனே, யாவராலும் மெச்சப்படும் கடவுளே, பச்சை மயில் வாகனனே, உலகெல்லாம் நிறைந்தவனே, முக்தி தரும் முதல்வனே, சித்திகளில் வல்லவனே, திருமாலின் மருகனே, ஒப்பற்றவனே, செந்நிறம் கொண்ட நேர்த்தியான அழகிய உருவத்தனே, யாவரிலும் மேம்பட்ட பெருமாளே. 
பாடல் 1086 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனனந் தான தனதனனந் தான
     தனதனனந் தான ...... தனதான
அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு
     மசலமிரண் டாலு ...... மிடைபோமென் 
றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர
     தபயமிடுங் கீத ...... மமையாதே 
நகமிசைசென் றாடி வனசரர்சந் தான
     நவையறநின் றேனல் ...... விளைவாள்தன் 
லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர
     நமசரணென் றோத ...... அருள்வாயே 
பகலிரவுண் டான இருவரும்வண் டாடு
     பரிமளபங் கேரு ...... கனுமாலும் 
படிகநெடும் பார கடதடகெம் பீர
     பணைமுகசெம் பால ...... மணிமாலை 
முகபடசிந் தூர கரியில்வருந் தேவு
     முடியஅரன் தேவி ...... யுடனாட 
முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி
     முடிவினுமஞ் சாத ...... பெருமாளே.
முழுவதுமாக நறுமணக் கலவையும் கஸ்தூரியும் தோய்ந்துள்ள (மார்பகங்களாகிய) மலைகள் இரண்டாலும் இடுப்பு ஒடிந்து போகும் என்று, பாதத்தில் விழுந்து ஒலிக்கின்ற சிலம்பின் செவ்விய சீர் பொருந்திய அபயக் கூச்சலிடும் இசை ஒலி போதாதென்று, (வள்ளி) மலைக்குப் போய் லீலைப் பேச்சுடன் விளையாடி, வேடர்களின் தவப்புதல்வியும், குற்றம் இல்லாத வகையில் இருந்து தினைப்பயிர் விளைவித்தவளும், ஆகிய வள்ளியின் ஒளிரும் நளினமும், அணிகளின் விளக்கமுமுள்ள அலங்காரமான மார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை வணங்குகிறேன் என்று கூறி நான் உன்னைப் போற்ற அருள் புரிய வேண்டும். சூரியனும், சந்திரனும், வண்டுகள் விளையாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், படிகம் போல் வெண்ணிறம் உடையதும், மிக்க கனம் கொண்டதும், மத நீர் கொண்டதும், பெருமை வாய்ந்ததும், கம்பீரமானதும், பருத்த முகத்தில் செவ்விய நெற்றியில் மணி மாலையும் முகத்தில் இடும் அலங்காரத் துணியும் உள்ளதும், புள்ளி முகத்தைக் கொண்டதுமான (ஐராவதம் என்னும்) யானை மீது வரும் இந்திரனும், (இவர்கள் முதலான யாவரும்) அழிவுறும் (யுகாந்த) காலத்தில் சிவபெருமான் பராசக்தியுடன் நடனம் செய்ய, உலகம் முழுதிலும் பரந்தெழுந்து ஏழு கடல்களும் நெருங்கிப் பொங்கும் முடிவு காலமாகிய ஊழிக் காலத்தும் (நல்ல சக்தியும் தீய சக்தியும் போராடி யுகத்தை முடிக்கும் காலத்தும்), அஞ்சாமல் விளங்கி நிலையாக நிற்கும் பெருமாளே. 
பாடல் 1087 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனனந் தானம் தனதனனந் தானம்
     தனதனனந் தானம் ...... தனதான
கலகமதன் காதுங் கனமலரம் பாலுங்
     களிமதுவண் டூதும் ...... பயிலாலும் 
கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும்
     கலைமதியங் காயும் ...... வெயிலாலும் 
இலகியசங் காளும் இனியவளன் பீனும்
     எனதருமின் தானின் ...... றிளையாதே 
இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங்
     கிருதனமுந் தோள்கொண் ...... டணைவாயே 
உலகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின்
     றுனதபயங் காவென் ...... றுனைநாட 
உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும்
     உருவியுடன் போதும் ...... ஒளிவேலா 
அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும்
     அடைவுடனின் றாடும் ...... பெரியோர்முன் 
அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென்
     றழகுடனன் றோதும் ...... பெருமாளே.
கலகமிட வந்த மன்மதன் கொல்லுதல் போலச் செலுத்தும் பாரமான மலர்ப் பாணங்களாலும், களிப்பு மயக்கத்தைத் தரும் தேனை உண்ட வண்டுகள் செய்யும் ¡£ங்கார ஒலியினாலும், கடல் அலைகள் அங்கு ஒலிக்கும் பெருத்த ஓசை காதிலே விழுவதாலும், கலைகளை உடைய சந்திரன் தீப்போல் காய்கின்ற வெயிலாலும், விளக்கமுற்ற சங்கு வளையல்களை அணிந்தவளும், இனிய குணத்தை உடையவளும், அன்பையே தருகின்றவளும், மின்னல் போல ஒளி கொண்டவளுமான என்னுடைய அருமை மகள் தான் இன்று உன்னை நினைத்து இளைத்துப் போகாமல், அவளது மனதில் உள்ள துன்பம் நீங்க, அவள் முன் தோன்றி, ஒரே வர்க்கமான மணிகளால் ஆன செவ்விய மாலை தங்கும் இரு மார்பகங்களையும் உனது பன்னிரு தோளால் அணைந்தருளுக. உலகை வலம் வந்து ஓடுகின்ற சூரியன் ஆகாயத்திலிருந்து, உனக்கு அடைக்கலம், என்னைக் காத்தருள்க என்று முறையிட்டு உன்னை வேண்டிய காரணத்தால் ஆற்றல் உடைய, கொடிய சூரனுடைய தலையுடன் வலிய தோளையும் ஊடுருவிச் சென்று, உடனே வெளி வந்த ஒளி வீசும் வேலைச் செலுத்தியவனே, பேய்களுடன் பூதங்கள் சேர்ந்து பல விதமான பாடல்களைப் பாடுகின்ற அடைவுக்கு ஏற்ப, தாம் நின்று நடனம் புரிகின்ற பெரியோராகிய சிவபெருமான் முன்னொரு நாள் அறத்தையும், அற நெறி அமைந்த ஞானப் பொருளையும் நன்றாக உபதேசிப்பாயாக எனக் கேட்க, அழகாக உடனே அன்று அவருக்கு உபதேசித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், வண்டுகளின் ¡£ங்காரம், கடலின் ஓசை, நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 1088 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனனந் தானந் தனதனனந் தானந்
     தனதனனந் தானந் ...... தனதான
குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங்
     குலவியெழுங் கோலந் ...... தனில்மாயக் 
கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங்
     குணவுயிர்கொண் டேகும் ...... படிகாலன் 
கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங்
     கதறமறந் தேனென் ...... றகலாமுன் 
கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன்
     கருணைமகிழ்ந் தோதுங் ...... கலைதாராய் 
நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன்
     நினைவுமழிந் தோடும் ...... படிவேலால் 
நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின்
     நிலைதொழநின் றேமுன் ...... பொருவீரா 
பருதியுடன் சோமன் படியையிடந் தானும்
     பரவவிடந் தானுண் ...... டெழுபாரும் 
பயமறநின் றாடும் பரமருளங் கூரும்
     பழமறையன் றோதும் ...... பெருமாளே.
ரத்தம், நீர், தோல், குடலுடன், எலும்பும் கொண்டு விளங்கி எழுகின்ற உருவமாகிய இந்த உடலில் மாயமாக அமைந்துள்ள கொடுமை அதனுடன் சினம், கடுமையான காம இச்சை இவை கூடிய குணத்தைக் கொண்ட உயிரை பிடித்துக் கொண்டு போகும்படி யமன் கருத்தோடு நீண்ட பாசக் கயிற்றைக் கொண்டு வர, அருகில் நின்று தாயாரும் கதறிப் புலம்ப, யாவையும் மறந்து விட்டேன் என்று சொல்லுவது போல் எல்லாவற்றையும் கை விட்டு நீங்குவதற்கு முன், இதயத் தாமரை மலர் பக்தி ரசத்தால் மலர, அதில் இருந்து விளங்கும் குக மூர்த்தி என்னும்படி நீ போந்து அருளி, உனது கருணைத் திறத்தை களிப்புடன் நான் போற்றும்படியான கலை ஞானத்தை எனக்குக் கொடுப்பாயாக. அசுரர்களுடைய சேனைகள் சூழ்ந்துள்ள பெரிய நெடிய சூரன் தனது நினைவையும் இழந்து போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும்படியாக வேலாயுதத்தால் ஒப்பில்லாத சூரனை சம்ஹாரம் செய்ததைப் பார்த்திருந்த தேவர்கள் தமது மனத்திலேயே உன்னுடைய வீர நிலையைத் தொழும்படி போர்க்களத்தில் நின்று, முன்பு சண்டை செய்த வீரனே, சூரியனும், சந்திரனும், பூமியை (வராக உருவத்தில்) தோண்டிச் சென்ற திருமாலும் போற்றிப் பணிய (ஆலகால) விஷத்தைத் தானே உண்டு, ஏழு உலகங்களும் அச்சம் நீங்கி விளங்க, நின்று நடமாடுகின்ற மேலான சிவபெருமான் உள்ளம் மகிழும் பழைய வேதங்களை முன்பொருநாள் ஓதிநின்ற பெருமாளே. 
பாடல் 1089 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தாத்த தனதனன தாத்த
     தனதனன தாத்த ...... தனதான
இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை
     யெடுமெடென வீட்டி ...... லனைவோரும் 
இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில்
     எரியஎரி மூட்டி ...... யிடுமாறு 
கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்
     கயிறிறுக மாட்டி ...... யழையாமுன் 
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
     கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே 
பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு
     பழையகுற வாட்டி ...... மணவாளா 
பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு
     பகருநுதல் நாட்ட ...... குமரேசா 
அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை
     அடைவடைவு கேட்ட ...... முருகோனே 
அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
நல்வினை, தீவினை எனப்படும் இரு வினைகளால் உண்டாகும் கேடு உற்ற, இறந்து போன கூடான இவ்வுடலை, சீக்கிரம் எடுங்கள் என்று கூறி வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் கடைசியாகச் சுடு காட்டில் அழுது, தலைப்பக்கம் எரியும்படி நெருப்பை மூட்டி வைக்கும்படியாக, கரு நிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமையுடன் வந்த மூர்க்கராகிய யமன் பாசக் கயிற்றை அழுத்தமாக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக, பொன்னையும், ரத்தினத்தையும் கூட மங்கச் செய்வதாய், பொருந்தின கழல் சேர்ந்துள்ள திருவடிகள் இரண்டையும் காட்டி அருள் செய்வாயாக. உயர்ந்த வள்ளி மலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே உன்னைக் குறித்துத் தவம் செய்தமையால்) பழைய உறவைப் பூண்டிருந்த குற மகள் வள்ளியின் கணவனே, பகைவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளி விடுவதான நெற்றிக் கண்ணைக்* கொண்ட குமரேசனே, அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை (திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே, அலை வீசும் கடலில் கூட்டமாய் இருந்த அசுரர்களை விரட்டி ஓடும்படிச் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே. 
* முருகன் சிவனது அம்சமே ஆதலால், சிவனைப் போன்று அக்னி உள்ள நெற்றிக் கண் முருகனுக்கும் உண்டு.
பாடல் 1090 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தாத்த தனதனன தாத்த
     தனதனன தாத்த ...... தனதான
உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து
     உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே 
உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில்
     உயர்கனலை மூட்டி ...... விடஆவி 
மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி
     வலிவினொடு தாக்கி ...... வளையாமுன் 
மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள்
     மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய் 
பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு
     வரையில்மற வோர்க்கு ...... மகவாகப் 
பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த
     பிடியினடி போற்று ...... மணவாளா 
அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த
     அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய் 
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
உறவு முறை கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி விளைவித்து, அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால் உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில் மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், எனது மனமும் உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக. பிறை போன்ற நெற்றியை உடைய, சேல் மீன் போன்ற கண்களை உடைய பெண்ணாகிய வள்ளியை, விருப்பத்துடன் வளர்ந்த வள்ளி மலையில் வேடர்களுக்குக் குழந்தையாக வந்து, மானிடம் இல்லாத மான் வயிற்றில் தோன்றி வளர்ந்து, நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண் யானை ஆகிய வள்ளியின் பாதங்களைப் போற்றும் கணவனே, அறுகம் புல், நிலவு, ஆத்தி, அலை வீசும் நீர் கொண்ட கங்கை (இவைகளைச்) சூடிய, நெருங்கிய சடையை உடைய சிவபெருமானுக்கு உபதேசப் பொருளை ஓதியவனே, நெருங்கி வரும் போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்தொழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே. 
பாடல் 1091 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன
     தனனதன தனனதன ...... தனதான
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென
     அமுதமொழி பதறியெழ ...... அணியாரம் 
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக
     அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம் 
உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு
     முறுகபட மதனில்மதி ...... யழியாதே 
உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு
     னுபயநறு மலரடியை ...... அருள்வாயே 
வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு
     மருதினொடு பொருதருளு ...... மபிராமன் 
வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன்
     மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர் 
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற
     தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா 
தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ
     சகலகலை முழுதும்வல ...... பெருமாளே.
கூந்தலின் வரிசை கலைந்து போக, கண்கள் குவிய, வளைகள் கலகலவென்று ஒலிக்க, அமுதம் போன்ற மொழிகள் பதறுதலுடன் பெருக, அணிந்துள்ள முத்து மாலையானது அழகு ஒழுகுவதும், பூரிப்பதுமான மார்பின் மீது அசைய, இடுப்பு நெகிழ, மிகவும் காம இன்ப ரச நிலை பெருக, அதிக மோகத்துடன் மனம் உருகும்படிச் செய்கின்ற புணர்ச்சியைத் தருகின்ற விலைமாதர்களின் கொடியது என்று சொல்லத்தக்க சூழ்ச்சியில் என் புத்தி அழிந்து போகாமல், மயிலின் மீது ஏறி உலகம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த உனது இரண்டு நறு மணம் வீசும் மலர்ப் பாதங்களை அருள்வாயாக. வளைந்ததாக உள்ள அலை கடல் வற்றிப் போகும்படி செலுத்திய அம்பைக் கொண்டவனும்*, அடியார்களுக்கு வரங்களைத் தருபவனுமான திருமால், இரண்டு மருத மரங்களைத் தகர்த்து (கண்ணனாக) அருள் பாலித்த அழகன், கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதன், விஜயலக்ஷ்மியின் கணவனாகிய திருமாலின் மருகனே, போர்க்களத்தில் விரைந்து வந்து சண்டை செய்த அசுரத் தலைவனின் சேனைகள் சிதற, (கிரெளஞ்ச) மலை தூள்பட, அசுரர்பதியாகிய சூரனுடைய தலை சிதறி விழ, நெருப்பு பெருகி எழ, விரைவில் செலுத்திய கூரிய வேலனே, முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்து அழகிய மகளான வள்ளியின் கணவனே, எல்லாக் கலைகளிலும் முற்றும் வல்ல பெருமாளே. 
* கடற்கரையில் வருண மந்திரம் ஜெபித்தும் சமுத்திரராஜன் வந்து வழி விடாததால் ராமர் கோபித்துக் கடல் மீது பாணம் விட்டார்.
பாடல் 1092 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன
     தனனதன தனனதன ...... தனதான
அனகனென அதிகனென அமலனென அசலனென
     அபயனென அதுலனென ...... அநபாயன் 
அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி
     யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி 
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை
     மகிபஎன தினையளவு ...... ளவுமீயா 
மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய
     மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே 
இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென
     இருசதுர திசையிலுர ...... கமும்வீழ 
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில
     மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் 
ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி
     கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் 
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக
     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
பாபம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும், மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும், அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகரில்லாதவன் என்றும், அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும், வீரத்தில் அர்ச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும், இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி, பத்ம நிதி, சிந்தாமணி என்று கூறப்படும் ரத்தினம், சங்கநிதி, மேகம், காமதேநு, கற்பக விருட்சம் - இவைகளுக்கு கொடையில் ஒப்பான கைகளை உடைய அரசனே நீ என்று, தினையளவும் உள்ள பொருளைக் கொடுக்காத மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை நீங்கவும், வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை தந்தருள்வாயாக. சூரியன், சந்திரன் இவர்களின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க, காலின் நகங்கள் நொச்சி இலையைப் போலிருக்க, எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும் அஞ்சி கீழே விழ, பொன்மலை (மேரு), வெள்ளிமலை (கைலாயம்), மரகதமலை (ஈங்கோய் மலை), போல் விளங்குவதான வலிய உடலைக் கொண்டதாய், விமலாதேவியின் (பார்வதியின்) திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையின் நீல நிற ஒளியை வீசி, ஆகாயத்திலுள்ள மேகங்களை வாகனமாகக் கொண்ட கடவுள் இந்திரனின் தேகம் என்று சொல்லும்படியாக உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய்*, அழகு நிரம்பி மேலே படர்ந்த தோகையைக் கொண்ட மயிலினை நடத்திச் சென்று, அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நாற்படைகளுடனும் போர் செய்த பெருமாளே. 
* இந்திரனுக்கு கெளதம முநிவர் இட்ட சாபத்தால் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றின. அது போல மயிலின் தோகையில் கண்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.
பாடல் 1093 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனனதன தனனதன தனனதன தனனதன
     தனனதன தனனதன ...... தனதான
குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு
     கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக் 
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி
     குமுகுமென இடைவழியில் ...... வரநாறும் 
உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக
     வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன் 
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன
     தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே 
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய
     வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை 
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
     மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக் 
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில
     ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
குடல், மலம், நீர் நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு ஏற்ப கொழுப்பும், ரத்தமும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக, கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளு நெளு என்று நெளிய, (அங்ஙனம்) உண்டாகும் ரத்தம் குமு குமு என்று பெருகும் வழியின் மத்தியில் வரும்போதே துர் நாற்றம் வீசும் தேகத்தில், நறு மணம் மிகுந்த புனுகு சட்டம் ஆகிய வாசனைப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின் மோகம் நீங்க, கர்ம வினையெல்லாம் விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல, யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி எழும் ஞானத்தை அருள் புரிவாயாக. வடக்கே உள்ள பொன் மலையாகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக் கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை பிளந்து எறியும் (திருமாலின்) ஒப்பற்ற சக்ராயுதம் (சுதர்சனம்) என்னும்படியும், சந்திரன் போல முற்றின வெண்மை நிறம் கொண்ட (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கு என்னும்படி விளங்கி, (மச்சாவதரத்தில்) மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி விளையாடி, கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக் கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி, யானை, தேர், குதிரை, காலாட் படை ஆகிய நால்வகைச் சேனைகளுடன் போர் செய்த பெருமாளே. 
முருகனின் வாகனமான மயிலின் சிறப்பை உணர்த்தி அதனை திருமாலுடன் ஒப்பிடும் பாடல் இது.
பாடல் 1094 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதான
குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு
     குமுதமிடு பரசமய ...... மொருகோடி 
குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது
     கொடியஇரு வினையெனும ...... ளறுபோக 
உதறிவித றியகரண மரணமற விரணமற
     வுருகியுரை பருகியநு ...... தினஞான 
உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத
     யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே 
சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை
     சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் 
செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக
     திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் 
கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை
     யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
சிதறுண்டு நெறி தவறிய ஆழமில்லாத சிற்றறிவைக் கொண்டு, கொதித்துப் பேசியும், எதிர்க் கூச்சலிட்டும் மிக்க பேரொலியை எழுப்புகின்ற பர சமயங்களைப் பற்றிய ஒரு கோடிக் கணக்கான குருடர்களுக்கும் தெரிவதற்கு அரிதான ஒப்பற்ற பொருளை நான் தெரிந்து கொள்ளுமாறு ஓடிக்கொண்டே இருக்கும் மனம், பொல்லாத நல் வினை, தீ வினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி, உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், (மேற்சொன்ன) மனம் உருகி உனது புகழைப் பாடி அனுபவித்து நாள்தோறும் ஞான உணர்ச்சி கொண்ட கண்களைப் பெற, உன்னுடைய கஸ்தூரி மணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடி இணையை இனி நான் உணர்ந்து உய்ய அருள் புரிவாயாக. கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற யுக முடிவான அந்தக் கடைசி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, (போரின்) இறுதியில் ஆகாய உச்சியில் ஓடுகின்ற தோகைப் பட்சியான மயிலைச் செலுத்தி, (இவ்வாறாக) அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால் வகைச் சேனைகளுடன் சண்டை செய்த பெருமாளே. 
பாடல் 1095 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதான
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
     வயிரமர கதமகர ...... மளவாக 
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
     வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய 
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
     எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா 
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
     திருநயன கருணைசிறி ...... தருள்வாயே 
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
     பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப் 
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை
     பரியதனி யெயிறுகொடு ...... குருநாடர் 
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய
     கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
வதைக்கும் தொழிலில் பழகிய அந்த யமனும், வெற்றி வாய்ந்த மன்மதனும் (நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில் வைரத்தாலும் மரகதத்தாலும் செய்யப்பட்ட, மகரமீன் போன்ற அளவில் உள்ள, குண்டலங்கள் உடைய காதின் அளவுக்கு நீண்டு, ரேகைகள் பரவிய, விஷத்தைக் கொண்டதாக வளர்ந்துள்ள, காமப்போருக்குச் சித்தமான இரண்டு விழிகளைக் கொண்டு வளைத்து இளைஞர்களின் உயிரைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரிகளும், தங்கள் இதயத்தின் எண்ணத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து, எடுத்த பிறவிக்கு உள்ள நெறியை விட்டு, இதிலிருந்து வெளியேறும் வழியைக் காணாது வேதனைகள் படுகின்ற குருடனாகிய என்னை அடிமை கொள்வதற்கு, மகிழ்ச்சியோடு உன்னிரு கண்கொண்டு கடாட்சித்து கருணை சிறிது அருள் புரிவாயாக. இரு திருவடிகளை மலர் கொண்டு பூஜித்துத் தொழுது, மாசில்லாத பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய அளித்து, வாழை, மா, பலா ஆகிய பழங்களை இனிய மனத்துடன் நிவேதித்து, வியாச முநிவர் சொல்லிவர, வடக்கே உள்ள மேருமலையின் மீது, பருத்த ஒற்றைக் கொம்பைக் கொண்டு, குரு நாட்டவர்களான பாண்டவர்களின் சரித்திரம் முழுதும் எழுதிய ஒப்பற்ற யானை கணபதி பிளிறிடும்படியாக*, நீண்ட கடலால் சூழப்பட்ட உலகத்தை ஒரு நொடியில் வலம் வந்த, அதிக வேகத்தைக் கொண்ட, தோகைப் பட்சியாம் மயிலைச் செலுத்தி, அசுரர்களின் யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளுடன் போர் புரிந்த பெருமாளே. 
* உலகெல்லாம் சுற்றி வரும் முருகனின் மயிலின் வேகத்தைக் கண்டு விநாயக யானை அஞ்சிப் பிளறினதாகக் கூறப்பட்டுள்ளது.
பாடல் 1096 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதான
விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற
     விதறிவளை கலகலென ...... அநுராகம் 
விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில்
     வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை 
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி
     யிதழ்பருகி யுருகியரி ...... வையரோடே 
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி
     யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே 
உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
     வுரகர்பில முடியவொரு ...... பதமோடி 
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர
     வுயரவகி லபுவனம ...... திரவீசிக் 
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்
     கருதரிய விதமொடழ ...... குடனாடுங் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.
விஷம் கலந்ததாய், ரேகைகள் பரவினதாய் உள்ள கண்கள் குவிய, பேச்சு பதற, அசைவுற்று வளையல்கள் கல கல் என்று ஒலிக்க, காம ஆசை உண்டாக, கஸ்தூரி அணிந்ததும், அரும்பு போன்றதுமான மார்பகத்தில் புளகம் உண்டாக, நெற்றியில் வியர்வை வர, அணிகலன்கள் சிதற, (தேன் நிறைந்த) மலர் மாலை நெருங்கியுள்ள கூந்தல் அவிழ்ந்து விழ, அணிந்துள்ள ஆடை விலக, அமுதம் பொதிந்துள்ள வாயிதழ் ஊறலை உண்டு விலைமாதர்களுடன் படுக்கையின் மீது ஆரவாரங்கள் உண்டாக காமக் கடலில் முழுகி பரவசம் அடையினும் உனது திருவடிகளை மறக்க மாட்டேன். கோபத்துடன் வந்த முயலகன்* என்னும் பூதத்தின முதுகு நெறு நெறு என்று முறிய, இருள் பரந்த நாக லோகமும் பாதாள முழுதும் ஒப்பற்ற அடி ஓடி உருவவும், பழமையான ஆகாயத்தின் உச்சி இடியவும், சந்திரனின் முடி நகரவும், (நடனத்தின் போது) உயரும் போது, சகல உலகங்களும் அதிர்ச்சி உறவும், வீசி கங்கணம் அணிந்த கைகள் விளங்க நடனம் செய்யும் சிவபெருமான் மகிழும்படியான அழகுடன், எண்ணுதற்கரிய வகையில் எழிலுடன் ஆடுகின்ற தோகைப் பட்சியாகிய மயிலை நடத்தி, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படையுடன் போர் செய்த பெருமாளே. 
* தாருக வனத்து முனிவர்கள் சிவனை வெறுத்து வேள்வி செய்தனர். பலி ஏற்க சிவன் அங்கு சென்றபோது, முனிவர்களின் மங்கையர் அவர் அழகைக் கண்டு மோகம் கொண்டனர். முனிவர்கள் கோபம் கொண்டு சிவனைக் கொல்ல ஒரு கொடிய வேள்வியை ஆற்றினர். வேள்வியில் ஒரு புலி எழுந்தது. புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டார். வேள்வியிலிருந்து பின் மழு, மான், அரவம், பூதங்கள், வெண்டலை, துடி, முயலகன் என்ற பூதம், தீ இவைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. சிவன் முயலகனைத் தள்ளி மிதித்து நடனம் ஆடினார் .. சிவபுராணம்.
பாடல் 1097 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கரஹரப்ரியா 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
     இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை 
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து
     இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் 
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து
     இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் 
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு
     இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே 
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற
     மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி 
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
     மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே 
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு
     அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா 
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே, நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு, துன்பம் என்ற முளைகள் முளைக்க வளர்ந்து, பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து, காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு, அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி, கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட்டு, இறப்பு என்னும் பழம் பழுத்து, கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின் அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக, (உடல் என்னும் நிழல் தரும் மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே இனிமைதரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக. தவறான வழியையே பேசிய தக்ஷன் அமைத்த யாகசாலைக்குச் சென்ற சந்திரன், சூரியன், தேவர்கள், வஜ்ராயுதப் படையாளியான இந்திரன், திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமன், சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால், இவர்களின் பராக்கிரமம் மறைந்தொடுங்க, அவர்களை எதிர்த்து அடக்கிய வீர உக்ர மூர்த்தியாம் சிவபிரானின் மகனே, அழகான தோகைக் கூட்டத்தை உடைய எழிலான மயிலின் மீதேறி, எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு வலம் வந்த வேலனே, வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை வெட்டி அழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு செய்த பெருமாளே. 
* ஆதபத்தி என்றால் குடை.
பாடல் 1098 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான
நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்
     நயனமத னால்மருட்டி ...... வருவாரை 
நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று
     லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி 
வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி
     மதனனுடை யாகமத்தி ...... னடைவாக 
மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்
     வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ 
இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க
     இருகையுற வேபிடித்து ...... உரலோடே 
இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண
     னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா 
அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு
     அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா 
அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட
     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
நடையாலும், அணிந்த உடையாலும் தமது அருமையைக் காட்டி நீண்ட ஒரு தெரு வீதியிலே உலாவி, வரும் ஆடவர்களைக் கண்களால் மயக்கி, அவர்களை அணுகி காம ஆசையை மூட்டி, மார்பகங்களை விலை பேசி விற்று, நைச்சியமான வழியில் இன்முகம் காட்டி நடித்து, பலவிதமான உறவுமுறைகளைக் கூறிக் கொண்டாடி, அழகு மிக்க வீட்டுக்கு அழைத்துச் சென்று, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மன்மதனுடைய சாஸ்திரத்தின் முறைப்படி பொருந்திக் கலந்து, உள்ளத்தை உருக்கி, கையில் உள்ள பொருளைக் கவரும் விலைமாதர்களின் மீது காம ஆசை பிடித்து நான் திரியலாமோ? இடையர்கள் வீட்டில் நாள் தோறும் உறியில் உள்ள தயிரும், நெய்யும், பாலும் குடிக்க, (தண்டிப்பதற்காக கண்ணனுடைய) இரண்டு கைகளையும் பிடித்து உரலுடன் சேர்த்து யசோதை அழுத்தமாகக் கட்ட, அப்போது அழுத கோபால க்ருஷ்ணனின் மிகுந்த அன்புக்கு உரிய மருகனே, குறப் பெண் வள்ளியின் மணவாளனே, வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினை பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (சம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலனே, அசுரர் குலத்தை வேரோடு அறுத்து ஒழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமாளே. 
பாடல் 1099 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான
மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து
     மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே 
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை
     மனமகிழ வேயளித்து ...... மறவாதே 
உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை
     ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான் 
உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை
     யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே 
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
     சரணயுக மாயனுக்கு ...... மருகோனே 
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர
     சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா 
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்
     அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே 
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட
     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.
இதழ்கள் விரிந்த தாமரை போன்ற வாயினின்று அரும்புகின்ற புன்சிரிப்பால் (மனத்தைக்) கவர்ந்து, மன்மதன் எழுப்பும் இன்ப நிலைக்குப் பேர் பெற்ற அழகிய மார்பினால் மலர்கள் விரித்த படுக்கையின் மேல் அணைத்து, (அச்சமயத்தில்) உண்டாகும் அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை மனமகிழ்ச்சியுடனே மறவாமல் தந்து, உடலும் உயிரும் ஒன்றுபட்டு இருக்க உன்னுடையது, என்னுடையது என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று அழுத்தமாகப் பேசும், விலைமாதர்கள் தரும் புணர்ச்சியால் வரும் வருத்தங்களை ஒழிக்க வல்ல ஓர் உபதேச மொழியை அருள்வாயாக. விசாலமான மகுடங்களைக் கொண்ட, நாக ரத்தினம் உள்ள (காளிங்கன் என்னும் பாம்பின்) படம் நெகிழ்வு உற நடனமாடிய தாமரை அன்ன இரண்டு திருவடிகளை உடைய திருமாலுக்கு மருகோனே, சரவணப் பொய்கையில் அவதரித்த குமரனே, முருகேசனே, சக்ரவாள கிரியை வலம் வரும்படிச் செலுத்திய மயில் வீரனே, வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக் கையில் அழகு விளங்க வைத்திருக்கும் ஆறு முகனே, மெய்ஞ் ஞான உண்மை வழியில் காணக் கிடைக்கும் செல்வமே, அசுரர் குலத்தவர்களை வேருடன் வெட்டி அழித்து, நீயே அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச் சிறையிலிருந்து மீள்வித்த பெருமாளே. 
பாடல் 1100 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
     தந்தனந் தந்தனந் ...... தனதான
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்
     சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா 
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்
     தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ் 
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்
     சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார் 
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்
     தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ 
கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்
     கங்களுங் திங்களுங் ...... கழுநீருங் 
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
     கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர் 
பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்
     பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா 
பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்
     பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே.
(நான்) வசை கூறுபவன், கொடியவன், தகுதி இல்லாதவன், அன்பு எழுகின்ற உள்ளம் இல்லாதவன், துன்பத்துக்கு ஈடானவன், புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய உடலை எந்நாளும் சுமந்து, எங்கும் திரிதலுற்று, உணவைத் தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடிய முரடன், ஆண்மை இல்லாதவன், மிக்க மனக் கவலை கொண்டவன், சிவந்த வாயிதழை உடைய விலைமாதர்களின் பணியாளன், குற்றம் உள்ளவன், உன்னைப் பணிந்து எப்போது உன்னுடைய தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளைப் புகழ்வேனோ? கங்கை நதியும், பொங்கி எழும் விஷம் பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும், தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும் நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த சடையை உடைய சிவபெருமானது இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதி தேவி ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் ஞானசம்பந்த மூர்த்தியே, கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்கு நமனாய்த் திகழ்ந்தவனே, கலை வல்லவன், கந்த பிரான் என்று விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, பண்பும் உனது நட்பும் பெற்றுக் களிக்கும் பெருமாளே.

பாடல் 1051 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம     நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம் 
நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு     நியதி யாக வாயார ...... வயிறார 
இலவி லூறு தேனூறல் பருகி யார வாமீறி     யிளகி யேறு பாடீர ...... தனபாரம் 
எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு     கினுமு னீப சீர்பாத ...... மறவேனே 
குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்     குழைய மாலி காநாக ...... மொடுதாவிக் 
குடில கோம ளாகார சடில மோலி மீதேறு     குமர வேட மாதோடு ...... பிரியாது 
கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்     கடக வாரி தூளாக ...... அமராடுங் 
கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

நிலவின் வெளிச்சத்தில், மன்மதன் ஏறிவரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலை நிழலில், மாடங்கள் கூடிய சிறந்த மாளிகையில் மேல் உள்ள மாடத்தில், நறு மணம் நீங்காத படுக்கையில் பெண்களோடு, காலம் தவறாத ஒழுக்கத்துடன், வாய் நிரம்பவும், வயிறு நிரம்பவும், இலவம் பூப்போன்ற சிவந்த வாயிதழில் ஊறி வருகின்ற தேன் போல் இனிக்கும் ஊறலை உண்டு, நிரம்பிய என் ஆசை அளவு கடந்து பொங்கி எழ, நெகிழ்ந்து, முற்பட்டு எழுந்துள்ளதும், சந்தனம் அணிந்துள்ள தனபாரம் என்னுடைய மார்பில் அழுந்தி முழுகும்படி கட்டி அணைத்து மோகம் மிகுந்திருப்பினும், உன்னுடைய கடம்பு அணிந்த அழகிய திருவடிகளை மறக்க மாட்டேன். சிறந்த ஆகாய கங்கையைச் சூடியுள்ள தலைவர் மகா தேவர் (ஆகிய சிவ பெருமான்) மனம் மகிழ்ச்சியில் மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி, வளைந்துள்ள அழகிய வடிவுள்ளதான ஜடாபார முடியின் மீது தவழ்ந்து ஏறும் குழந்தைக் குமரனே, குறப் பெண்ணாகிய வள்ளியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் பன்னிரண்டு பரந்த தோள்களை உடையவனே, சூரர்களுடைய சேனைக்கடல் பொடியாகும்படி சண்டை செய்கின்றவனே, மதம் பெருகும் கன்னங்களை உடைய சிறந்த வெள்ளை யானையாகிய ஐராவதம் வளர்த்த மாதாகிய தேவயானையின் பங்கனே, வேல் வீரனே, கருணைப் பெரு மலையே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 1052 - பொதுப்பாடல்கள் 
ராகம் - திலங் தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

மனக பாட பாடீர தனத ராத ராரூப     மதன ராச ராசீப ...... சரகோப 
வருண பாத காலோக தருண சோபி தாகார     மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக் 
குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான     குறைய னேனை நாயேனை ...... வினையேனைக் 
கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத     குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே 
அநக வாம னாகார முநிவ ராக மால்தேட     அரிய தாதை தானேவ ...... மதுரேசன் 
அரிய சார தாபீட மதனி லேறி யீடேற     அகில நாலு மாராயு ...... மிளையோனே 
கனக பாவ னாகார பவள கோம ளாகார     கலப சாம ளாகார ...... மயிலேறுங் 
கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

கதவால் அடைக்கப்பட்டது போன்ற ரகசிய மனம் உள்ளவர்களும், சந்தனப் பூச்சு அப்பிய மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும், மன்மத ராஜனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி, குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் எல்லாரோடும் சேர்பவர்களும், இளமை வாய்ந்த உடலைக் காட்டிக்கொண்டு இருப்பவருமான பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் விளையாடியும் இன்பத்தில் திளைத்தும் காலம் கழிப்பவனும், வெட்கம் இன்றிச் சரசம் செய்பவனும், நாளை வீணாக்கும் குறையை உடையவனும், நாயைப்போன்றவனும், கொடுவினையாளனும், பொல்லாதவனும், உன்னைப் போற்றிப் புகழாது வெறும் கொச்சை மொழி பேசித் திரிபவனும், உன்னை விரும்பித் தேடாத குருடனுமான என்னையும் நீ ஆண்டருளும்படியான நாள் ஒன்று உண்டா? பாவமற்ற குறுமுநி வாமனராக அவதாரம் செய்த திருமால் (சிவனாரின்) பாதத்தைத் தேட அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை மதுரைச் சொக்கநாதனால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட அருமையான ஸரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில்* ஏறி, நான்கு திக்கிலும் உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே, பொன் போன்ற தூய உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே, தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே, அருள்வடிவோனே, இதயத் தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே, கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. 
* மதுரையில் ஸரஸ்வதிதேவியின் 48 எழுத்துக்களின் அம்சஙகள் 48 புலவர்களாகத் தோன்றி, பாண்டியனின் ஆதரவோடு தமிழ்ச் சங்கம் அமைத்தனர். மதுரை சோமசுந்தரக்கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப்பலகை தந்தருளினார். முருகன் இந்தச் சாரதாபீடத்தில் ருத்ரசன்மன் என்ற புலவராக அமர்ந்து மற்ற புலவர்களிடையே ஏற்பட்ட சண்டையைத் தீர்த்து வைத்தார் - திருவிளையாடற் புராணம்.

பாடல் 1053 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பிருந்தாவன சாரங்கா தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

அதல சேட னாராட அகில மேரு மீதாட     அபின காளி தானாட ...... அவளோடன் 
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட     அருகு பூத வேதாள ...... மவையாட 
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட     மருவு வானு ளோராட ...... மதியாட 
வனச மாமி யாராட நெடிய மாம னாராட     மயிலு மாடி நீயாடி ...... வரவேணும் 
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு     கருத லார்கள் மாசேனை ...... பொடியாகக் 
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது     கனக வேத கோடூதி ...... அலைமோதும் 
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத     உவண மூர்தி மாமாயன் ...... மருகோனே 
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ     னுளமு மாட வாழ்தேவர் ...... பெருமாளே.

(பூமிக்கு கீழேயுள்ள) அதலத்தில் இருக்கும் ஆதிஸேஷன் நடனம் ஆடவும், பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும், மாறுபாடு இன்றி (சிவதாண்டவத்துக்கு) ஒற்றுமையாக காளி தான் ஆடவும், அக்காளியோடு அன்று அவள் அதிர்ந்து நடுங்கும்படி (காலை ஊர்த்துவகோலத்தில்) வீசி போட்டியிட்டவரும் ரிஷபத்தில் ஏறுவாரும் ஆகிய சிவனும் ஆடவும், அருகில் பூதங்களும் பேய்களும் ஆடவும், இனிமை மிக்க ஸரஸ்வதியும் ஆடவும், தாமரை மலரில் அமரும் பிரமனும் ஆடவும், அருகில் பொருந்திய தேவர்கள் எல்லாம் ஆடவும், சந்திரன் ஆடவும், தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும் ஆடவும், விஸ்வரூபம் எடுத்த நின் மாமனார் விஷ்ணுவும் ஆடவும், நீ ஏறிவரும் மயிலும் ஆடி, நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்* கதாயுதத்தை தன் தோளினின்று அகற்றாத வீமன் எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில் பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்) பெரிய சேனை பொடிபட (உதவியவரும்), கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக் (குழலை ஊதியவரும்), அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து, தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும்சங்கை ஊதியவரும், அலை வீசும் பாற்கடல் மீதிலே (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும், (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து மூடிய பாதத்தாரும், கருடனை வாகனமாகக் கொண்டவரும், ஆன மாமாயன் திருமாலின் மருமகனே அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய (திருவண்ணாமலையை ஆண்ட) ப்ரபுட தேவ மஹாராஜனின் உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம் அவனது நெஞ்சிலே வாழும் தேவர் பெருமாளே. 
* இப்பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான் என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன் ப்ரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாட்டு இது. இந்த வரியைப் பாடும்போது, முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக் கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான்.

பாடல் 1054 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

குருதி மூளை யூனாறு மலம றாத தோல்மூடு     குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற் 
குமிழி போல நேராகி அழியு மாயை யாதார     குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம் 
பருகு காய மேபேணி அறிவி லாம லேவீணில்     படியின் மூழ்கி யேபோது ...... தளிர்வீசிப் 
பரவு நாட காசார கிரியை யாளர் காணாத     பரம ஞான வீடேது ...... புகல்வாயே 
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான     இமய மாது மாசூலி ...... தருபாலா 
எழுமை யீறு காணாதர் முநிவ ரோடு வானாடர்     இசைக ளோடு பாராட ...... மகிழ்வோனே 
அரவி னோடு மாமேரு மகர வாரி பூலோக     மதிர நாக மோரேழு ...... பொடியாக 
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட     அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே.

ரத்தம், மூளை, மாமிசம், நாற்றம் மிக்க மலம் இவை நீங்காததும், தோலால் மூடியதுமான இந்தக் குடிசையாகிய உடல், கோழையும் மற்ற அழுக்குகள் ஊறியுள்ள ஒரு நீர்க் குமிழி போன்று உடனே அழிகின்ற ஒரு பொய்த் தோற்றமான பற்றுக் கோடாக நினைக்கப்படும். இறந்த பின், இறைச்சியைக் கொத்தும் பட்டடை மரத் துண்டாக வைத்து, பருந்துகளும், நாய்களும், பேய்களும், பல காகங்களும் உண்ணும் இத்தகைய உடலை விரும்பிப் பேணி அறிவில்லாத நான் வீணாகப் பூமியில் முழுகியவன். மலர்களையும் வில்வம் போன்ற இலைகளையும் உனக்கு இட்டுப் பணிந்து, போற்றப் படுகின்ற ஒரு கூத்துப் போன்ற பணியாகிய ஆசாரப் பணியை மேற்கொண்டுள்ள கிரியையாளர்கள் காண முடியாத மேலான ஞான வீடு எது என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும். நெருப்புப் போன்ற திருமேனியில் திரு நீறு விளங்கும் பரமராகிய சிவபெருமானின் (இடது) பாகத்தில் வாழ்கின்றவளும், இமய மலை அரசனின் பெண்ணும், சிறந்த சூலாயுதத்தை ஏந்தியவளுமான பார்வதி ஈன்ற குழந்தையே, எழு வகைத் தோற்றத்தின் முடிவையும் கண்டு உணர்ந்த (அகத்தியர் முதலான) நாதர்களாகிய முனிவர்களும், வானில் உள்ள தேவர்களும் பாரா (ட்) ட மகிழ்கின்றவனே, ஆதிசேஷனும், பெரிய மேரு மலையும், மகர மீன்கள் உள்ள கடலும், பூ லோகமும் அதிர்ச்சி கொள்ளவும், (சூரனின்) ஏழு மலைகளும் பொடியாகவும், பேய்கள், பூதங்கள், சிறந்த காளி ஆகியோர் போர்க்களத்தில் கூத்தாடவும், அசுரர்கள் மடியவும் வேலைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1055 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன     தனன தனன தாத்தன ...... தனதான

சரியு மவல யாக்கையு ளெரியு முரிய தீப்பசி     தணிகை பொருடி ராப்பகல் ...... தடுமாறுஞ் 
சகல சமய தார்க்கிகர் கலக மொழிய நாக்கொடு     சரண கமல மேத்திய ...... வழிபாடுற் 
றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொ     ரறிவின் வடிவ மாய்ப்புள ...... கிதமாகி 
அவச கவச மூச்சற அமரு மமலர் மேற்சில     ரதிப திவிடு பூக்கணை ...... படுமோதான் 
விரியு முதய பாஸ்கர கிரண மறைய வார்ப்பெழ     மிடையு மலகில் தேர்ப்படை ...... யொடுசூழும் 
விகட மகுட பார்த்திப ரனைவ ருடனு நூற்றுவர்     விசைய னொருவ னாற்பட ...... வொருதூது 
திரியு மொருப ராக்ரம அரியின் மருக பார்ப்பதி     சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே 
திமிர வுததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு     சிகரி தகர வீக்கிய ...... பெருமாளே.

சரிந்து, குலைந்து, துன்பத்துக்கு இடமான உடலிடத்தே நெருப்பைப் போல் எரிந்து உரிமை கொண்டாடும் கொடிய பசிப் பிணி தணிந்து போகும் பொருட்டு, இரவும் பகலும் தடுமாறுகின்ற எல்லாவித மத சம்பந்தமான தர்க்க வாதிகளின் கலகப் பேச்சுக்களை விட்டு நீங்கி, நாவைக் கொண்டு உனது திருவடித் தாமரைகளைப் போற்றும் வழிபாட்டினை மேற் கொண்டு, அருமையான துரிய (சிவ மயமாய் நிற்கும் உயர்) நிலைக்கு மேற்பட்டதாய், தொடர்புகளையும் இந்திரியங்களையும் கடந்ததாகிய அறிவு சொரூபமாய் புளகாங்கிதம் கொண்டு, மயக்க அறிவு என்கின்ற சட்டை நீங்கவும், மூச்சு தம் வசப்பட்டு அடங்கி ஒடுங்கவும், ஆட்சி செய்து வீற்றிருக்கும் குற்றமற்ற அடியார்களின் மேல், ரதியின் கணவனான மன்மதன் விடும் சில மலர்ப் பாணங்கள் தாக்கிட முடியுமோ? ஒளி விரிந்து எழுகின்ற உதய சூரியனுடைய ஒளி (தூசியில்) மறையும்படியும், பேரொலி எழும்படியும் நெருங்கி வரும் கணக்கில்லாத தேர்களோடும், சேனைகளோடும் சூழ்ந்து (போர்க்களத்துக்கு) வந்த பரந்த முடிகளை அணிந்த அரசர்கள் யாவரும், (துரியோதனாதி) நூற்றுவரும் அர்ச்சுனன் ஒருவனால் அழிவுறுமாறு, (பாண்டவர்களுக்கு) ஒப்பற்ற தூதுவனாகச் சென்று உழன்ற, நிகரற்ற வலிமை மிக்க கண்ணனின் மருகனே, பார்வதி தேவியின் குழந்தையே, கொடுமை வாய்ந்த வேடர்களின் மகளான வள்ளியின் நாயகனே, இருண்ட கடல் ஓலமிடவும், அசுரர்கள் இறக்கவும், வேலை எடுத்து கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேகமாகச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1056 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன     தனன தனன தாத்தன ...... தனதான

மகளு மனைவி தாய்க்குல மணையு மனைவர் வாக்கினில்     மறுகி புறமு மார்த்திட ...... வுடலூடே 
மருவு முயிரை நோக்கமு மெரியை யுமிழ ஆர்ப்பவ     ருடனு மியமன் மாட்டிட ...... அணுகாமுன் 
உகமு முடிவு மாச்செலு முதய மதியி னோட்டமு     முளது மிலது மாச்சென ...... வுறைவோரும் 
உருகு முரிமை காட்டிய முருக னெனவு நாக்கொடு     உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய் 
புகல வரிய போர்ச்சிலை விரக விசைய னாற்புக     ழுடைய திருத ராட்டிர ...... புதல்வோர்தம் 
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்     புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே 
மிகவு மலையு மாக்கடல் முழுது மடிய வேற்றுரு     வெனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன் 
விரைசெய் நெடிய தோட்கன அடலு முருவ வேற்படை     விசைய முறவும் வீக்கிய ...... பெருமாளே.

மகள், மனைவி, தாய், சுற்றத்தார், வந்து கூடும் எல்லாருடைய வாக்கிலும் கலக்கம் உண்டாகி, வெளி ஊராரும் ஐயோ என்று அலறி நிறைந்து கூட, உடலில் பொருந்தியுள்ள உயிரை எடுக்கவென்றே, தனது கண்களும் தீயைக் கக்க, பேரொலி செய்து வரும் தூதர்களுடன், யமன் என்னைச் சிக்க வைப்பதற்காக நெருங்குவதற்கு முன்பாக, (இப்) பூமியில் வாழ்வும் முடிவுறும்படி போய்க் கொண்டிருந்த, தோன்றி வரும் இடை கலையின் (இடது) நாசியால் விடும் சுவாசத்தின் ஓட்டமும் இதோ இருக்கின்றது, இல்லை இதோ முடிவு வந்து விட்டது என்னும்படி சொல்லிக் கொண்டு அருகில் இருப்பவர்களும் தத்தம் உறவு முறைகளைக் காட்டுகிற போது, (அச்சமயத்தில்) நான் முருகா என்று என் நாவைக் கொண்டு உனது திருவடிகளைப் போற்றி செய்ய அருள் புரிவாயாக. சொல்லுவதற்கு முடியாத சிறப்புடைய (காண்டீபம் என்ற) போர் வில்லை உடையவனும், சாமர்த்தியம் உள்ளவனுமாகிய அருச்சுனனைக் கொண்டு, புகழ் பெற்றிருந்த திருதராட்டிரனின் மக்களின் குதிரை, யானை, தேர்கள், காலாட் படைகள் யாவும் இறந்து படச் செய்து, துரியோதனனின் அரசைத் தொலைத்து, சிறந்த இந்தப் பூமியின் துன்பத்தை நீக்கியவரான திருமாலின் மருகனே, மிகப் பெரிய மலை வடிவத்தையும், பெருங் கடல் உருவத்தையும் எடுத்து (எதிர்த்தோர்) யாவரும் இறக்க வெவ்வேறு உருவங்கள் என்னும்படியாக (இந்த உருவங்களை) ஏற்றுப் பொருந்தி வேற் படை ஏந்திச் சண்டை செய்த சூரனின் நறு மணமுள்ள பெரிய தோள்களின் கனத்த வலிமையும் கழிந்து நீங்க, வேலாயுதத்தை வெற்றி பெற வேகமாகச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1057 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தாத்தன தனன தாத்தன     தனன தாத்தன ...... தந்ததான

குடரு நீர்க்கொழு மலமு மீத்தொரு     குறைவி லாப்பல ...... என்பினாலுங் 
கொடிய நோய்க்கிட மெனவு நாட்டிய     குடிலி லேற்றுயி ...... ரென்றுகூறும் 
வடிவி லாப்புல மதனை நாட்டிடு     மறலி யாட்பொர ...... வந்திடாமுன் 
மதியு மூத்துன தடிக ளேத்திட     மறுவி லாப்பொருள் ...... தந்திடாதோ 
கடிய காட்டக முறையும் வேட்டுவர்     கருதொ ணாக்கணி ...... வெங்கையாகிக் 
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்     களவி னாற்புணர் ...... கந்தவேளே 
முடுகி மேற்பொரு மசுர ரார்ப்பெழ     முடிய வேற்கொடு ...... வென்றவீரா 
முடிய லாத்திரு வடிவை நோக்கிய     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.

குடலையும், நீரையும், கொழுப்பையும், மலத்தையும் வைத்து, ஒரு குறைவும் இல்லாதனவுமான பல எலும்புகளாலும் பொல்லாத நோய்களுக்கு இருப்பிடம் என்னும்படி ஏற்படுத்தப்பட்ட குடிசையாகிய உடலில் ஏற்றப்பட்ட உயிர் என்று சொல்லப்படும் உருவம் இல்லாததான ஒரு நுண்மையான பொருளை நாடி வருகின்ற யமதூதர்கள் போரிட வருவதற்கு முன்பு, (என்) அறிவும் முதிர்ச்சி அடைந்து உனது திருவடிகளை நான் போற்றிப் பணிய, குற்றமில்லாத உண்மைப் பொருளை எனக்கு உதவி செய்யலாகாதோ? கொடிய காட்டிடையே வாசம் செய்யும் வேடர்களுக்கு (இந்த விதமாக வந்தது என்று) எண்ண முடியாதபடி, கணி என்று சொல்லப்படும் வேங்கை மரமாகி, மூங்கில் போன்ற தோள்களை உடைய குறக்குல மயிலாகிய வள்ளியை விரும்பி, சிறந்த களவியல் வழியாக அணைந்த கந்த வேளே, விரைவில் எதிர் வந்து மேல் விழுந்து சண்டை செய்யும் அசுரர்களின் பேரொலி எழ, அவர்கள் யாவரையும் வேல் கொண்டு வெற்றி கொண்ட வீரனே, முடிவே இல்லாத உன் விசுவ ரூபத்தை தரிசித்த பழங் கடவுளர்களாகிய அயன், அரி, பிரமன் என்னும் மூவர்க்கும் தம்பிரானே. 

பாடல் 1058 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸத்வனி தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிடதகதிமி-3 1/2

தனன தாத்தன தனன தாத்தன     தனன தாத்தன ...... தந்ததான

பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்     இரவு போய்ப்புகல் ...... கின்றவேதப் 
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு     வெளிய தாய்ப்புதை ...... வின்றியீறில் 
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு     கமுத மாய்ப்புல ...... னைந்துமாயக் 
கரண மாய்த்தெனை மரண மாற்றிய     கருணை வார்த்தையி ...... ருந்தவாறென் 
உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ     உலகு போற்றிட ...... வெங்கலாப 
ஒருப ராக்ரம துரக மோட்டிய     வுரவ கோக்கிரி ...... நண்பவானோர் 
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை     முலைகள் தேக்கிட ...... வுண்டவாழ்வே 
முளரி பாற்கடல் சயில மேற்பயில்     முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே.

எவ்வுயிர்க்கும் பொதுவானதாகி, தனிப்பட்ட மூல முதற் பொருளாகி, பகல், இரவு இவைகளைக் கடந்து சொல்லப்படுகின்ற வேதப் பொருளாகி, அப்பொருளின் முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி, மறைவு யாதொன்றுமன்றி, முடிவு இல்லாததான, யாவற்றுக்கும் அடைக்கலமாகி, எண்ணுவதற்கும் முடியாததாகி, உண்ணும் அமுதம்போல் இனிமையானதாகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் ஒடுங்கி அழிய, மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின் சேட்டைகளை அழித்து, எனது மரண பயத்தை நீக்கிய, உனது அருள் மொழி உபதேசம் எத்தனை உயர்ந்த நிலையான அற்புதம்? கடல் ஓலமிடவும், அசுரர்கள் போரொலி செய்யவும், உலகத்தோர் போற்றிப் புகழவும், வசீகரம் வாய்ந்த தோகை மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, பூமியிலுள்ள மலைகளிடத்தே விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனே, பார்வதியின் மகனே, கார்த்திகைப் பெண்களின் மார்பகங்களில் பால் நிரம்பி வர அதைப் பருகிய செல்வமே, தாமரை மீதும், திருப்பாற் கடலிலும், கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும் மூத்தவர்களாகிய அயன், அரி, அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவனே. 

பாடல் 1059 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பாகேஸ்ரீ தாளம் - மிஸ்ரஅட - 18 - /7/7 00 
தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2 - முதல் லகு

தனன தாத்தன தனன தாத்தன     தானா தானா தானா தானா ...... தனதான

கவடு கோத்தெழு முவரி மாத்திறல்     காய்வேல் பாடே னாடேன் வீடா ...... னதுகூட 
கருணை கூர்ப்பன கழல்க ளார்ப்பன     கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீ ...... தினும்வீழேன் 
தவிடி னார்ப்பத மெனினு மேற்பவர்     தாழா தீயேன் வாழா தேசா ...... வதுசாலத் 
தரமு மோக்ஷமு மினியெ னாக்கைச     தாவா மாறே நீதா னாதா ...... புரிவாயே 
சுவடு பார்த்தட வருக ராத்தலை     தூளா மாறே தானா நாரா ...... யணனேநற் 
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்பது     ழாய்மார் பாகோ பாலா காவா ...... யெனவேகைக் 
குவடு கூப்பிட வுவண மேற்கன     கோடூ தாவா னேபோ தாள்வான் ...... மருகோனே 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

மரக்கிளைகளை மிகுதியாய்க் கொண்டு எழுந்து நின்றதும், கடலின் நடுவிலே தோன்றியதுமான மாமரத்தின் (உருவில் இருந்த சூரனின்) வலிமையை காய்த்து அழித்த உன் வேலாயுதத்தை நான் பாடவில்லை, அவ்வெற்றியைப் பாராட்டி நான் ஆடுவதும் இல்லை. மோக்ஷ இன்பத்தை அடைய விரும்பி, கருணை மிக்கதும், கழல்கள் ஒலிப்பதுமான உன் திருவடிகளின் மீது நான் விழுந்து வணங்குவதில்லை, அப்படி விழுந்து பணிவோரின் கால்களிலும் வீழ்ந்து வணங்குவதும் இல்லை. தவிட்டளவு சோறுகூட தயக்கமின்றி ஏற்பவர்களுக்கு நான் கொடுப்பதும் இல்லை. இவ்வாறு வாழ்வதை விட சாவதே எனக்கு மேலானது. பிறப்பு, இறப்புத் தொடரிலிருந்து எனது இந்த உடலுக்கு இனியேனும் விடுதலை கிடைத்து எப்போதும் நிலைபெறுமாறு, நாதனே, நீதான் அருள் புரிவாயாக. யானையின் அடிச்சுவட்டைப் பார்த்து, அதைப் பற்றி இழுத்துக் கொல்வதற்காக குளத்திற்கு வந்த முதலையின் தலை பொடியாகுமாறு 'ஹா, நாராயண மூர்த்தியே, நல்ல துணைவனே, பாற்கடலில் உதித்த மங்கை லக்ஷ்மியின் கணவனே, திருத் துழாய் மாலையை அணிந்த மார்பனே, கோபாலனே, என்னைக் காவாய்' என்று தன் துதிக்கையைத் தூக்கி, மலை போன்ற யானையான கஜேந்திரன் முறையிட, கருடன் மேல் ஏறி, பொன் சங்கான பாஞ்சஜன்யத்தை ஊதி, ஆகாயமார்க்கமாகப் பறந்து வந்து, யானையைக் காத்தருளிய திருமாலின் மருகனே, வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்திய அரசன் இந்திரனின் தேவ உலகத்தை காத்தருளிய தலைவனே, தேவனே, செவ்வேளே, தேவர்தம் பெருமாளே. 

பாடல் 1060 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஸஹானா தாளம் - மிஸ்ரஅட - 18 - 17 17 00 
- முதல் லகு தகிடதகதிமி-3 1/2, தகிடதகதிமி-3 1/2

தனன தாத்தன தனன தாத்தன     தானா தானா தானா தானா ...... தனதான

பருதி யாய்ப்பனி மதிய மாய்ப்படர்     பாராய் வானாய் நீர்தீ காலா ...... யுடுசாலம் 
பலவு மாய்ப்பல கிழமை யாய்ப் பதி     னாலா றேழா மேனா ளாயே ...... ழுலகாகிச் 
சுருதி யாய்ச்சுரு திகளின் மேற்சுட     ராய்வே தாவாய் மாலாய் மேலே ...... சிவமான 
தொலைவி லாப்பொரு ளிருள்பு காக்கழல்     சூடா நாடா ஈடே றாதே ...... சுழல்வேனோ 
திருத ராட்டிர னுதவு நூற்றுவர்     சேணா டாள்வா னாளோர் மூவா ...... றினில்வீழத் 
திலக பார்த்தனு முலகு காத்தருள்     சீரா மாறே தேரூர் கோமான் ...... மருகோனே 
குருதி வேற்கர நிருத ராக்ஷத     கோபா நீபா கூதா ளாமா ...... மயில்வீரா 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

சூரியனாகி, குளிர்ந்த சந்திரனாகி, பரந்த பூமியாகி, ஆகாயமாகி, நீராகி, நெருப்பாகி, காற்றாகி, விந்தையான நக்ஷத்திரங்களாகி, மற்றும் பலவுமாகி, ஞாயிறு முதலிய பல கிழமைகளுமாகி, 14+6+7 ஆகிய 27 சிறந்த நக்ஷத்திரங்களாகி, ஏழு உலகங்களாகி, வேதமாகி, வேதங்களுக்கு மேற்பட்ட ஒளிப் பொருளாகி, பிரமனாகி, திருமாலாகி, இவர்களுக்கு மேற்பட்ட மங்கலப் பொருளானதும், அழிவு என்பதே இல்லாததான பரம்பொருளின், அஞ்ஞான இருள் என்பதே புகமுடியாத அந்தத் திருவடியை முடிமேற் சூடாமலும், நாடாமலும் வாழ்வு ஈடேறாமல் வீணாகத் திரிவேனோ? திருதராஷ்டிரன் பெற்ற துரியோதனாதி நூறு பேரும் வீரசுவர்க்க நாட்டை ஆளும்படியாக பதினெட்டே நாட்களில் போர்க்களத்தில் மாண்டு விழவும், சிறந்த அர்ச்சுனனும் உலகை ஆண்டு காத்தருளுகின்ற சீருடன் வாழுமாறு அவனது தேரில் சாரதியாக இருந்து செலுத்தின பெருமான் திருமாலின் மருகனே, அசுரர்களின் ரத்தத்தில் தோய்ந்த வேலைக் கரத்திலே ஏந்தியவனே, அரக்கர்களாம் ராட்சதர்களின் மீது கோபம் கொண்டவனே, கடப்ப மாலையையும், கூதளப்பூ மாலையையும் அணிந்தவனே, அழகிய மயில் வீரனே, வஜ்ராயுதத்தை ஏந்திய அரசன் இந்திரனின் தேவலோகத்தைக் காத்தருளின தலைவனே, தேவனே, முருகவேளே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1061 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தாத்தன தனன தாத்தன     தானா தானா தானா தானா ...... தனதான

முதலி யாக்கையு மிளமை நீத்தற     மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம் 
முறையி டாப்படு பறைக ளார்த்தெழ     மூடா வீடூ டேகேள் கோகோ ...... எனநோவ 
மதலை கூப்பிட மனைவி கூப்பிட     மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய 
மறலி யூர்ப்புகு மரண யாத்திரை     வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும் 
புதல றாப்புன எயினர் கூக்குரல்     போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப் 
பொருது தாக்கிய வயப ராக்ரம     பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங் 
குதலை வாய்க்குரு பரச டாக்ஷர     கோடா ரூபா ரூபா பா¡£ ...... சதவேள்விக் 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

(வாழ்க்கைக்கு) முதன்மையை உடைய ஆதாரமாய் இருக்கும் உடலும், அதன் இளமையையும் ஒழித்து, மிகவும் முதுமை அடைந்து, (எங்களைக்) காத்துப் பற்றுக் கோடாக இருந்தவனே என்று பூமியில் உள்ளோர் முறையிட்டு ஏங்க, ஒலிக்கின்ற பறை வாத்தியங்கள் மிக உரக்கச் சப்தம் செய்ய, (பிணத்தைத் துணியால்) மூடி, வீட்டுக்குள் சுற்றத்தினர் கோகோவென்று கூச்சலிட்டு மனம் வருந்த, பிள்ளைகள் அழ, மனைவி அழ, தாய் (தலையில்) மோதியும் விழுந்தும், என் செல்வமே என்று அலற, மாயமாக வந்த யமனுடைய பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வராது, வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும். நாணல் புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருக்கும் மறவர்கள் கூச்சலிடும் குரல் நீங்காத பகுதியில் உள்ளவர்களாகிய வேடர்களும், கடல் போலப் பெருகி நிரம்ப வந்த அசுரர்களும் பயந்து ஓட, அவர்களுடன் சண்டை செய்து தாக்கி எதிர்த்த வெற்றி வீரனே, பூமியைக் காப்போனே, கடப்ப மாலையை அணிந்த குழந்தையே, தந்தை சிவபெருமானும் கற்கும்படி மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரனே, (சரவணபவ என்னும்) ஆறெழுத்துக்கு உரியவனே, நேர்மை கொண்ட நெறி தவறாத வடிவத்தனே, வடிவு இல்லாதவனே, உலகை ஈந்தவனே, நூறு அசுவமேத யாகங்களை முடித்தவனும், வஜ்ராயுதம் ஏந்தியவனுமாகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவனே, தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1062 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தாத்தன தனன தாத்தன     தானா தானா தானா தானா ...... தனதான

வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்     வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர் 
மனது போற்கரு கினகு வாற்குழல்     வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ 
பருகு பாற்கடல் முருகு தேக்கிய     பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ 
பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி     பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ 
அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ     ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி 
அவுணர் கூப்பிட வுததி தீப்பட     ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக் 
குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய     கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக் 
குலிச பார்த்திப னுலகு காத்தருள்     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

எங்கள் வீட்டுக்கு வருக என்று அழைக்கும் சாமர்த்தியசாலிகளின் கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்னும்படியான விலைமாதர்களுடைய மனதைப் போன்று கருமை நிறமான அடர்ந்த கூந்தல் கரிய மேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும், உண்ணத்தக்க பாற்கடலில் உள்ளதும், நற்சுவை நிறைந்ததுமான பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும், பாட்டுக்களைப் பாடி அடி நாயாகிய நான் ஈடேறாமல் அழிந்து போவேனோ? அருகில் இருந்து பார்வதி மனம் கசிந்து உருகிக் கருதி நோக்க, ஒரு கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபிரானின் செல்வமே, கோகோ என்று அசுரர்கள் அலறும்படி (போர்க்களத்துக்குச்) சென்று, அவர்கள் அலறிக் கூச்சலிடவும், கடல் தீப்பட்டு எரியவும், ஹா ஹா சூரனே, போகாதே, இப்படி மீண்டும் வா என்று அவன் பின் ஓடி, கிரெளஞ்சம் என்னும் பேரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி செலுத்திய கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் செய்து, வஜ்ராயுதம் ஏந்திய அரசனாகிய இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவனே, தேவனே, முருக வேளே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1063 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தாத்தன தனன தாத்தன     தானா தானா தானா தானா ...... தனதான

மறலி போற்சில நயன வேற்கொடு     மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும் 
வகையு மார்க்கமு மறமு மாய்த்திட     வாறா ராயா தேபோ மாறா ...... திடதீர 
விறலு மேற்பொலி அறிவு மாக்கமும்     வேறாய் நீரே றாதோர் மேடாய் ...... வினையூடே 
விழுவி னாற்களை யெழும தாற்பெரு     வீரா பாராய் வீணே மேவா ...... தெனையாளாய் 
மறலி சாய்த்தவ ரிறைப ராக்ரம     மால்கா ணாதே மாதோ டேவாழ் ...... பவர்சேயே 
மறுவி லாத்திரு வடிக ணாட்டொறும்     வாயார் நாவால் மாறா தேயோ ...... தினர்வாழ்வே 
குறவர் காற்புன அரிவை தோட்கன     கோடார் மார்பா கூர்வே லாலே ...... அசுரேசர் 
குலைய மாக்கட லதனி லோட்டிய     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

யமனை ஒப்பதான கண்கள் என்னும் வேலாயுதத்தால் (விலைமாதர் தாக்குவதாலே) காம மயக்கில் மனம் முழுகி, மூங்கில் போன்ற இதமான தோள்களை உடைய பெண்களைப் பற்றிய காம சாஸ்திரத்தைப் படிக்கும் குணத்தையும், அதிலேயே ஈடுபடம் மனப் போக்கையும், (அதனால் வரும்) பாவத்தையும் போக்க வல்ல வழியை இன்னதென்று அறியாமல், போகின்ற (பழைய) வழியிலேயே நான் போய், மனோ திடமும், வலிமையும், வீரமும், மேம்பட்டு விளங்கும் அறிவும், செல்வமும் என்னை விட்டு விலகி, நீர் ஏற முடியாத ஒரு மேடு எப்படியோ அப்படி என் நிலை என் வினைகளுக்கு இடையே விழுவதால், (ஓயாது பிறப்பு இறப்பு என்னும்) களைப்பு உண்டாவதால், பெரிய வீரனே, என்னைக் கண் பார்த்து அருள்வாய், நான் வீணாக இவ்வுலகில் காலம் கழிக்காமல் என்னை ஆண்டு அருள்வாயாக. யமனை (காலால் உதைத்துச்) சாய்த்தவர், இறைவர், வீரம் பொருந்திய திருமாலாலும் காணப் படாதவராய், (தாய்) பார்வதியுடன் வாழ்பவரான சிவபெருமானின் குழந்தையே, குற்றம் இல்லாத திருவடிகளை தினமும் வாயார நாவால் தவறாமல் ஓதுபவர்களின் செல்வனே, குறவர்களிடத்தே வளர்ந்த, தினைப் புனம் காத்த மாதாகிய வள்ளியின் தோளும், பருத்த மலை போன்ற மார்பகங்களும் அணைந்த திருமார்பனே, அசுரர்களின் தலைவர்களாகிய சூரன் முதலியோர் அழிந்துபட, பெரிய கடலிடையே ஓட்டி விரட்டிய தலைவனே, தெய்வமே, செவ்வேளே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1064 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனன தனன தனன     தனன தனன ...... தனதான

குருதி யொழுகி யழுகு மவல     குடிலை யினிது ...... புகலாலே 
குலவு மினிய கலவி மகளிர்     கொடிய கடிய ...... விழியாலே 
கருது மெனது விரக முழுது     கலக மறலி ...... அழியாமுன் 
கனக மயிலி னழகு பொழிய     கருணை மருவி ...... வரவேணும் 
பரிதி சுழல மருவு கிரியை     பகிர எறிசெய் ...... பணிவேலா 
பணில வுததி யதனி லசுரர்     பதியை முடுக ...... வரும்வீரா 
இரதி பதியை யெரிசெய் தருளு     மிறைவர் குமர ...... முருகோனே 
இலகு கமல முகமு மழகு     மெழுத வரிய ...... பெருமாளே.

ரத்தம் ஒழுகி அழுகிப் போகும் துன்பத்துக்கு இடமான குடிசையாகிய இந்த உடலை இனிமையாகப் பேசும் சொற்களைக் கொண்டு நெருங்கி உறவாடி, இனிய புணர்ச்சி இன்பம் தரும் பொது மகளிருடைய கொடுமையானதும் கடுமையானதுமான கண்களையே எண்ணுகின்ற என்னுடைய காம இச்சை முற்றிலுமாக என்னுடன் போருக்கு எழும் யமன் அழிப்பதற்கு முன்பாக, பொன்னிறமான மயிலின் அழகு பொலிந்து ஒழுக (நீ) அருள் வைத்து வந்தருள வேண்டும். சூரியன் சுழற்சி அடையும்படி, கிரெளஞ்ச மலை பிளவுபடச் செலுத்திய தொழில் அமைந்த வேலினை உடையவனே, சங்குகள் உள்ள கடலில் அசுரர்கள் தலைவனான சூரனை ஓட்டி விரட்ட வந்த வீரனே, ரதி தேவியின் கணவனாகிய மன்மதனை எரித்தருளிய இறைவராகிய சிவபெருமானுடைய குமரனே, முருகனே, விளங்கும் தாமரை போன்ற முகமும், அதன் அழகும் எழுதுதற்கு முடியாதவையான பெருமாளே. 

பாடல் 1065 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனன தனன தனன     தனன தனன ...... தனதான

துயர மறுநின் வறுமை தொலையு     மொழியு மமிர்த ...... சுரபானம் 
சுரபி குளிகை யெளிது பெறுக     துவளு மெமது ...... பசிதீரத் 
தயிரு மமுது மமையு மிடுக     சவடி கடக ...... நெளிகாறை 
தருக தகடொ டுருக எனுமி     விரகு தவிர்வ ...... தொருநாளே 
உயரு நிகரில் சிகரி மிடறு     முடலு மவுணர் ...... நெடுமார்பும் 
உருவ மகர முகர திமிர     வுததி யுதர ...... மதுபீற 
அயரு மமரர் சரண நிகள     முறிய எறியு ...... மயில்வீரா 
அறிவு முரமு மறமு நிறமு     மழகு முடைய ...... பெருமாளே.

துன்பமெல்லாம் ஒழியும். உனது தரித்திரம் நீங்கும். பிரசித்தி பெற்ற அமுதமாகிய தேவர் பருகும் உணவும், காமதேனுவும், (உலோகங்களைப் பொன்னாக்க வல்ல மந்திர சக்தி உள்ள) மாத்திரைகளையும், சுலபமாக நீ பெற முடியும். வாடுகின்ற எம்முடைய பசி அடங்கும்படியாக தயிரும் சோறும் எமக்கு இட்டால் அதுவே போதுமானது. அதைத் தந்து உதவுக. பொன் சரடு, கங்கணம், மோதிரம், (பொன்னாலாகிய) கழுத்து அணி இவைகளைத் தர வல்ல தாயித்து மந்திரத் தகட்டை (நான் தருவேன், அதை நீ) பெற்றுக் கொள்க. என்று கூறும் (கபட ரசவாதிகளின்) இந்த வகையான தந்திர மொழிகளிலிருந்து தப்பும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? உயர்ந்துள்ளதும், தனக்கு ஒப்பில்லாததுமான கிரெளஞ்ச மலையின் நெஞ்சும் உடலும், அசுரர்களுடைய பெரிய மார்பும் ஊடுருவும் படியாக, மகர மீன்கள் உலாவுவதும், பேரொலி செய்வதும், இருண்டதுமான கடல் தனது வயிற்றின் உட்பாகம் கிழிய, சோர்வடைந்த தேவர்களின் காலில் இருந்த விலங்குகள் உடைபடச் செலுத்திய வேல் வீரனே. ஞானமும், வலிமையும், தரும நெறியும், ஒளியும், அழகும் உடைய பெருமாளே. 

பாடல் 1066 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தனன தனன தனன     தனன தனன ...... தனதான

பணிகள் பணமு மணிகொள் துகில்கள்     பழைய அடிமை ...... யொடுமாதும் 
பகரி லொருவர் வருக அரிய     பயண மதனி ...... லுயிர்போகக் 
குணமு மனமு முடைய கிளைஞர்     குறுகி விறகி ...... லுடல்போடாக் 
கொடுமை யிடுமு னடிமை யடிகள்     குளிர மொழிவ ...... தருள்வாயே 
இணையி லருணை பழநி கிழவ     இளைய இறைவ ...... முருகோனே 
எயினர் வயினின் முயலு மயிலை     யிருகை தொழுது ...... புணர்மார்பா 
அணியொ டமரர் பணிய அசுரர்     அடைய மடிய ...... விடும்வேலா 
அறிவு முரமு மறமு நிறமு     மழகு முடைய ...... பெருமாளே.

அணிகலன்கள், பணம், அணியும் ஆடைகள், பழகி வந்த வேலை ஆட்கள், (இவர்களோடு) மனைவியும், சொல்லப் போனால், (இவர்களில்) ஒருவரும் கூட வருவதற்கு முடியாததான (இறுதிப்) பயணத்தில் உயிர் பிரிய, நற்குணங்களும், நல்ல மனமும் கொண்ட உறவினர் ஒன்று கூடி, விறகினிடையே இந்த உடலைப் போட்டு தீயிடும் துயரமான செயலைச் செய்வதற்கு முன்பாக, அடிமையாகிய நான் உனது திருவடியை என் உள்ளம் குளிர வாழ்த்தித் துதிக்கும்படியான திறமையைத் தந்து அருள்வாயாக. நிகரில்லாத திருவண்ணாமலை, பழநி ஆகிய தலங்களுக்கு உரியவனே, என்றும் இளமை வாய்ந்த இறைவனே, முருகனே, வேடர்கள் இடத்தே (தினை காக்கும் தொழிலில்) முயன்றிருந்த மயில் போன்ற வள்ளியை இரண்டு கைகளையும் கூப்பித் தொழுது, பின்பு தழுவிய திருமார்பனே, வரிசையாக நின்று தேவர்கள் பணிந்து வணங்க, அசுரர்கள் யாவரும் இறக்கும்படி வேலாயுதத்தை விடுவோனே, அறிவு, வலிமை, தருமநெறி, ஒளி, அழகு இவை உடைய பெருமாளே. 

பாடல் 1067 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தந்த தனன தந்த தனன     தந்த தனன ...... தனதான

மைந்த ரினிய தந்தை மனைவி     மண்டி யலறி ...... மதிமாய 
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி     வன்கை யதனி ...... லுறுபாசந் 
தந்து வளைய புந்தி யறிவு     தங்கை குலைய ...... உயிர்போமுன் 
தம்ப முனது செம்பொ னடிகள்     தந்து கருணை ...... புரிவாயே 
மந்தி குதிகொ ளந்தண் வரையில்     மங்கை மருவு ...... மணவாளா 
மண்டு மசுரர் தண்ட முடைய     அண்டர் பரவ ...... மலைவோனே 
இந்து நுதலு மந்த முகமு     மென்று மினிய ...... மடவார்தம் 
இன்பம் விளைய அன்பி னணையு     மென்று மிளைய ...... பெருமாளே.

பிள்ளைகள், இனிமை தரும் தந்தை, மனைவி (இவர்கள் யாவரும்) நெருங்கிக் கூச்சலிட்டு அழுது, அறிவு அழியும்படி, வஞ்சனை எண்ணத்தைக் காட்டும் கண்கள் முன் தோன்றி விளங்கும் யமன் தனது வலிய கையில் உள்ள பாசக் கயிற்றை வீசி எறிந்து என் உயிரை வளைக்க, என் மனமும், அறிவும் ஒரு வழியில் நிலைபெற்றுத் தங்காமல் அலைச்சல் கொள்ள, என் உயிர் போவதற்கு முன்பு பற்றுக் கோடாகவுள்ள உனது அழகிய திருவடிகளை எனக்குத் தந்து கருணை புரிவாயாக. குரங்குகள் குதித்து விளையாடும் அழகிய குளிர்ந்த (வள்ளி) மலையில் (இருந்த) வள்ளி நாயகியை அணைந்த மணவாளனே, நெருங்கும் அசுரர்களின் படை உடைந்து சிதறவும், தேவர்கள் போற்றவும், எதிர்த்துப் போரிட்டவனே, பிறைச் சந்திரன் போன்ற நெற்றியையும், அழகிய முகமும் கொண்டவராய், (உனக்கு) என்றும் இனியராயுள்ள தேவயானை, வள்ளி ஆகிய இரண்டு மாதர்களுக்கும், இன்பம் பெருகி உண்டாக அன்புடன் அணையும், என்றும் இளையோனாக விளங்கும் பெருமாளே. 

பாடல் 1068 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மணிரங்கு தாளம் - ஆதி

தனனா தனத்த தனனா தனத்த     தனனா தனத்த ...... தனதான

ஒழுகூ னிரத்த மொடுதோ லுடுத்தி     உயர்கால் கரத்தி ...... னுருவாகி 
ஒருதாய் வயிற்றி னிடையே யுதித்து     உழல்மாய மிக்கு ...... வருகாயம் 
பழசா யிரைப்பொ டிளையா விருத்த     பரிதாப முற்று ...... மடியாமுன் 
பரிவா லுளத்தில் முருகா எனச்சொல்     பகர்வாழ் வெனக்கு ...... மருள்வாயே 
எழுவா னகத்தி லிருநாலு திக்கில்     இமையோர் தமக்கு ...... மரசாகி 
எதிரேறு மத்த மதவார ணத்தில்     இனிதேறு கொற்ற ...... முடன்வாழுஞ் 
செழுமா மணிப்பொ னகர்பாழ் படுத்து     செழுதீ விளைத்து ...... மதிள்கோலித் 
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த     சிறைமீள விட்ட ...... பெருமாளே.

வழியும் மாமிசமும், ரத்தமும் சேர்ந்து, தோலால் மூடப்பட்டு, உயர்ந்த கால்கள் கைகள் இவற்றுடன் ஓர் உருவமாகி, ஒரு தாயினுடைய வயிற்றிலே தோற்றம் கொண்டு பிறந்து, அலைச்சலைத் தரும் மாயம் மிகுந்து வருகின்ற இந்த உடலானது பழமையடைந்து மூப்புற்று, மூச்சு வாங்குவதால் சோர்வு அடைந்து கிழவன் என்ற பரிதாப நிலையை அடைந்து, இறந்து போவதற்கு முன்பாக, அன்பு கலந்த உள்ளத்தோடு முருகா என்ற உன் திருப் பெயரைக் குறிக்கும் சொல்லை நான் சொல்லும்படியான வாழ்வை எனக்கு நீ அருள்வாயாக. விளங்கும் விண்ணுலகிலும், எட்டுத் திசையிலும் உள்ள தேவர்களுக்கு எல்லாம் அரசனாகி, அவர்கள் முன்னிலையில் விளங்கும் செருக்குள்ள மதயானையாம் ஐராவதத்தின் மீது இன்பகரமாக ஏறிவரும் வெற்றிநிலையுடன் வாழ்ந்த செழிப்பான அழகிய பொன்னுலகாம் அமராவதியைப் பாழ்படுத்தி, பெரும் தீயிட்டுச் சிதைத்து, அவ்வூரை மதில்போல வளைத்து, வலிமையுடன் அரக்கர்கள் கொண்டுபோய்ச் சிறையிலிட்ட தேவர்களின் சிறையை நீக்கி, அவர்களை விடுவித்த பெருமாளே. 

பாடல் 1069 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனனா தனத்த தனனா தனத்த     தனனா தனத்த ...... தனதான

கருவாய் வயிற்றி லுருவா யுதித்து     முருகாய் மனக்க ...... வலையோஆட 
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த     தலைபோய் வெளுத்து ...... மரியாதே 
இருபோது மற்றை யொருபோது மிட்ட     கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி 
இறவாத சுத்த மறையோர் துதிக்கு     மியல்போத கத்தை ...... மொழிவாயே 
அருமாத பத்தஅமரா பதிக்கு     வழிமூடி விட்ட ...... தனைமீள 
அயிரா வதத்து விழியா யிரத்த     னுடனே பிடித்து ...... முடியாதே 
திருவான கற்ப தருநா டழித்து     விபுதேசர் சுற்ற ...... மவைகோலித் 
திடமோ டரக்கர் கொடுபோ யடைத்த     சிறைமீள விட்ட ...... பெருமாளே.

தாயின் வயிற்றில் கருவாகி, உருவாகப் பிறந்து, இளமைப் பருவம் அடைந்து, மனக் கவலையுடன் படிக்க வேண்டிய கலை நூல்களை உண்மை அறிவின்றிக் குழறிப் படித்து, வாழ் நாளின் நடுவில் கறுத்திருந்த தலை மயிர் வெளுத்து, வீணனாக இறந்து போகாமல், நாள் தோறும், காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும், மற்றுமுள்ள உச்சி வேளையிலும் (சிவ யோக நெறியால்) வளர்த்த மூலாக்கினியில்* முழுகுவதற்கும், (என்னுள் இருக்கும்) சிறந்த மதி மண்டலச் சுத்த கங்கையில் (சிவயோக நிஷ்டையில்) முழுகுவதற்கும், சாகா வரம் பெற்ற (அகத்தியர் முதலிய) முனிவர்கள் போற்றும் தகுதியுள்ள மந்திர உபதேசத்தை எனக்கும் உபதேசித்து அருள்வாயாக. அருமை வாய்ந்த ஒளியை உடைய தேவர்களின் ஊருக்குச் செல்லும் வழியை முதலில் மூடிவிட்டு, அந்தப் பொன்னுலகை மறுபடியும் தாக்கி, ஐராவதம் என்ற வெள்ளை யானைக்குத் தலைவனான ஆயிரம் கண்களை உடைய இந்திரனை உடனே பிடிக்க முயன்று, அங்ஙனம் பிடிக்க முடியாமல் போன காரணத்தால், செல்வம் நிறைந்த, கற்பக விருட்சத்தைக்கொண்ட தேவர் உலகை தீயிட்டுப் பாழ் படுத்தி, தேவ சிரேஷ்டர்களை அவர்களுடைய சுற்றத்தாருடன் வளைத்து ஒருங்கே பிடித்து, வலிமையுடன் அசுரர்கள் கொண்டு போய் அடைத்த சிறையினின்றும் அந்தத் தேவர்களை மீட்டு விடுவித்து (மீண்டும் அவர்களது நாட்டில்) குடிபுகச் செய்த பெருமாளே. 
* சிவ ஒளி இன்பப் புனலில் முழுகி எனப்படும் திருவண்ணாமலையைக் குறிக்கும். அருணாசலம் சிவ ஒளி, ஆறு ஆதாரங்களுள் ஒன்று - மணிபூரகம்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 1070 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனத்த தந்தனம் தனத்த தந்தனம்     தனத்த தந்தனம் ...... தனதான

புரக்க வந்தநங் குறக்க ரும்பைமென்     புனத்தி லன்றுசென் ...... றுறவாடிப் 
புடைத்த லங்க்ருதம் படைத்தெ ழுந்ததிண்     புதுக்கு ரும்பைமென் ...... புயமீதே 
செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்     திளைக்கு நின்திறம் ...... புகலாதிந் 
த்ரியக்க டஞ்சுமந் தலக்கண் மண்டிடுந்     தியக்க மென்றொழிந் ...... திடுவேனோ 
குரக்கி னங்கொணர்ந் தரக்கர் தண்டமுங்     குவட்டி லங்கையுந் ...... துகளாகக் 
கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷ ருங்கடங்     கொதித்து மண்டுவெம் ...... பகையோடத் 
துரக்கும் விம்பகிம் புரிப்ர சண்டசிந்     துரத்த னும்பிறந் ...... திறவாத 
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.

நம்மை ஆண்டு காக்க வந்த, நமது குறவர் குலக் கரும்பாகிய வள்ளியை அமைதி வாய்ந்த தினைப் புனத்துக்கு நீ அன்று ஒரு நாள் சென்று பார்த்து, நட்புப் பேச்சுக்களைப் பேசி, புடைத்துப் பருத்து அலங்காரம் விளங்க எழுந்துள்ளதும், வலிமையும் அற்புத எழிலும் வாய்ந்ததும், இளநீர் போன்றதும் ஆகிய மார்பகத்தின் மீதும், மென்மையான தோள்கள் மீதும், காம மயக்கம் கொள்ளும்படி மனத்தில் மகிழ்ச்சி பொங்க அன்புடன் இடைவிடாது தழுவிய உன்னுடைய மேன்மையான குணத்தைச் சொல்லிப் புகழாமல், ஐம்பொறிகளைக் கொண்ட உடலைச் சுமந்து, துக்கம் நிரம்பும் கலக்கத்தை நான் எப்போது நீங்கி இருப்பேனோ? குரங்கின் கூட்டங்களைத் தன்னுடன் கொண்டு வந்து அசுரர்களுடைய ஆயுதங்களும், மலைகளைக் கொண்ட இலங்கையும் பொடியாகும்படி கோபித்து எழுந்த மேக நிறம் கொண்ட திருமாலும், (சூரியன், சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானும், மத நீர் கொதிப்பு உற்று நெருங்கி வந்த கொடிய பகைவர்களும் ஓடும்படி விரட்டுவதும், ஒளி வாய்ந்ததும், பூண் உடையதும், வீரம் நிறைந்ததும் ஆன ஐராவதம் என்னும் யானைக்குத் தலைவனுமாகிய இந்திரனும், என்றும் நிலைத்து நிற்கும் பேற்றைப் பெற்றவர்களாய் நித்திய சுகத்தில் இருக்கும் அடியார்களும், மூன்று உலகங்களிலும் உள்ள அன்பர்கள் யாவரும் சேர்ந்து துதி செய்து போற்றும் தேவர்கள் பெருமாளே. 

பாடல் 1071 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனத்த தந்தனம் தனத்த தந்தனம்     தனத்த தந்தனம் ...... தனதான

பெருக்க நெஞ்சுவந் துருக்கு மன்பிலன்     ப்ரபுத்த னங்கள்பண் ...... பெணுநாணும் 
பிழைக்க வொன்றிலன் சிலைக்கை மிண்டர்குன்     றமைத்த பெண்தனந் ...... தனையாரத் 
திருக்கை கொண்டணைந் திடச்செல் கின்றநின்     திறத்தை யன்புடன் ...... தெளியாதே 
சினத்தில் மண்டிமிண் டுரைக்கும் வம்பனென்     திருக்கு மென்றொழிந் ...... திடுவேனோ 
தருக்கி யன்றுசென் றருட்க ணொன்றரன்     தரித்த குன்றநின் ...... றடியோடுந் 
தடக்கை கொண்டுவந் தெடுத்த வன்சிரந்     தறித்த கண்டனெண் ...... டிசையோருஞ் 
சுருக்க மின்றிநின் றருக்க னிந்திரன்     துணைச்செய் கின்றநின் ...... பதமேவும் 
சுகத்தி லன்பருஞ் செகத்ர யங்களுந்     துதிக்கு மும்பர்தம் ...... பெருமாளே.

நிரம்ப மனம் மகிழ்ச்சி உற்று உருகும் அன்பு இல்லாதவன் நான். பெருந்தன்மைக் குணங்கள், நற்குணங்கள், மதிக்கத் தக்க கூச்சம் முதலியவற்றுள், நான் உய்யும் வகைக்கு, ஒன்றும் இல்லாதவன். வேல் ஏந்திய கைகளுடன் திரியும் வேடர்களின் வள்ளிமலையில் தோன்றி வளர்ந்த வள்ளியின் மார்பினை மனம் நிறையத் திருக் கைகளைக் கொண்டு தழுவச் சென்ற உன்னுடைய மேன்மைக் குணத்தை அன்புடன் நான் தெளிந்து உணராமல், கோபக் குணமே நிரம்பி, எனது கோணலான புத்தி மாறி என்றைக்கு நற்புத்தியை நான் அடைவேனோ? செருக்குடன் அன்று போய், அருள் கண்ணோக்கம் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்த கயிலாய மலையை அடிவாரத்தில் நின்று அடியோடு தன் பெரிய கைகளால் பெயர்த்து எடுத்தவனாகிய ராவணனுடைய தலைகளைத் துண்டித்த வீரனாகிய திருமாலும், எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும், சுருக்கம் இல்லாமல் விரிந்த கிரணங்களை வீசும் சூரியனும், இந்திரனும், துணையாய் உதவுகின்ற உனது திருவடிகளை விரும்பி நிற்பவர்களான உன் அன்பில் முழுகியுள்ள அடியார்களும், மூன்று உலகத்தோரும், போற்றித் துதிக்கும் தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1072 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வஸந்தா தாளம் - சதுஸ்ர அட - 12

தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான

இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரு ...... முறுகேளும் 
இசைந்த வூரும் பெண்டிரு மிளமையும் ...... வளமேவும் 
விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே 
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே 
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே 
குரங்கு லாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா 
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே 
சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.

நான் வசிக்கும் வீடும், நான் கொஞ்சிப் பழகும் குழந்தைகளும், என்னைச் சுற்றி அமைந்த உறவினரும், என் மனதிற்கு உகந்த ஊரும், என் மனைவி முதலிய பெண்களும், எனது இளமையும், செல்வம் நிறைந்து விரிந்து பரந்த எனது நாடும், இந்நாட்டின் மலைகளும் நிலைத்திருக்கும் என்றெண்ணி நான் மகிழாமல் ஒளிதரும் விளக்குகளை ஏற்றி உன்னை வழிபட எனக்கு நீ அருள்வாயாக. குருந்த* மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின் மருமகனே, குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே, திருத்தமான முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே, செம்மை வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே. 
* கோபியரின் சேலைகளைக் கவர்ந்து ஒளிக்க, கண்ணன் யமுனைக் கரையில் குருந்த மரத்தின் மீது ஏறினான்.

பாடல் 1073 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான

கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங் 
கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி 
உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா 
உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே 
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே 
மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா 
சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச் 
சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.

தான் மனைவியாகக் கொண்டு இணைந்த பெண்மணியும், கண்கள் மகிழ்ச்சி அடையும்படி ஓடி வருகின்ற குழந்தைகளும், கலக்கம் கொள்ளாது வாழ்வார்கள் என்று எண்ணி, இன்பத்துடன் பொருந்த வாழும் உலக வாழ்க்கையின் நடுவே துக்க நிலையான வறுமையை அடைந்து, தேய்ந்து அழியும் இந்த உடலுடனும், மனத்தில் கொண்ட துயரத்துடனும் இருக்கின்ற எனக்கு நான் மகிழ்ச்சி கொண்டு தியானிக்கும் உனது திருவடியைத் தந்து, உன்னைப் புகழ்ந்து பாட எனக்கு அருள் செய்வாயாக. மலர்ந்த தாமரையில் உறையும் லக்ஷ்மியை அணைந்த திருமாலின் மருகனே, (மிருகங்களைக்) கொல்லும் தொழிலைச் செய்யும் வேடர்களுடைய கொடிபோன்ற பெண்ணாகிய வள்ளியை மணந்த கணவனே, சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்க, சிவந்த திருவடியும் தண்டையும் அழகு விளங்கும் பெருமாளே. 

பாடல் 1074 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஡ணதிகெளளை தாளம் - சதுஸ்ர அட - 12

தனந்த தானந் தனதன தானன ...... தனதான

இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும் 
இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும் 
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே 
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா 
உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே 
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே 
அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும் 
அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.

விருப்பமுடன் ஏறுகின்ற ரிஷப வாகனமும், கஜமுகாசுரனின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும், அழகிய திருநீறும், விளங்குகின்ற பூணூலும், புலித்தோல் ஆடையும், கோடரியும், மானும், காதுகளில் அசைந்தாடும் தோடுகளும், சடையிலே தரித்த அழகிய கொன்றை மாலையும், தலைமுடி மீது அணிந்த ஈசனாம் சிவபெருமான் பரிவோடு போற்றிப் பரவிய குருநாதனே, கர்வம் மிக்க சூரன் தன் சுற்றத்தாருடன் வேரற்றுப் போகும்படி கோபித்தவனே, விருப்போடு பாசக்கயிறை எடுத்து வந்த யமதூதர்கள் சோர்வு அடையாமல் என் உயிர் கொண்டு செல்லும் சமயம் நான் அயரும்போது எனது துயரங்கள் நீங்குமாறு சிறந்த மயில் மேல் நீ வந்தருள வேண்டும். அழகிய வேலினை தோளில் வைத்திருக்கும் பெருமாளே. 

பாடல் 1075 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தர்பாரிகானடா தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனன தனதன தனன     தனதன தனன ...... தனதான

திரிபுர மதனை யொருநொடி யதனி     லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே 
சினமுடை யசுரர் மனமது வெருவ     மயிலது முடுகி ...... விடுவோனே 
பருவரை யதனை யுருவிட எறியு     மறுமுக முடைய ...... வடிவேலா 
பசலையொ டணையு மிளமுலை மகளை     மதன்விடு பகழி ...... தொடலாமோ 
கரிதிரு முகமு மிடமுடை வயிறு     முடையவர் பிறகு ...... வருவோனே 
கனதன முடைய குறவர்த மகளை     கருணையொ டணையு ...... மணிமார்பா 
அரவணை துயிலு மரிதிரு மருக     அவனியு முழுது ...... முடையோனே 
அடியவர் வினையு மமரர்கள் துயரு     மறஅரு ளுதவு ...... பெருமாளே.

அசுரர்களின் திரிபுரத்தை ஒரே நொடியளவில் பஸ்மம் ஆக்கி அருளிய சிவன் பெற்ற செல்வமே, கோபம் கொண்ட அசுரர்களின் மனத்தில் அச்சம் தோன்ற உன் மயிலினை வேகமாகச் செலுத்துவோனே, பெரிய கிரெளஞ்சமலையினை ஊடுருவும்படி எறிந்த கூரிய வேலை உடைய ஆறுமுகனே, விரகத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இள மார்புள்ள என் மகளை மன்மதன் விடும் மலரம்புகள் தொளைத்திடலாமோ? யானையின் அழகிய முகமும் பெருத்த வயிறும் உடையவராம் வினாயகருக்குப் பின்பு பிறந்தவனே, சிறப்பும் செல்வமும் உடைய குறவர்களது மகள் வள்ளியை கருணையோடு தழுவும் அழகிய மார்பை உடையவனே, பாம்புப் படுக்கையில் உறங்கும் ஹரியின் அழகிய மருமகனே, இந்த உலகம் அத்தனையும் சொந்தமாகக் கொண்டவனே, அடியவர்கள் வினையும் அசுரர்கள் தரும் துன்பமும் அற்றுப்போகும்படியாக திருவருளைத் தந்திடும் பெருமாளே. 
இப்பாட்டு முருகனின் காதலால் விரகமுற்ற மகளுக்காக தாயார் பாடும் பாட்டு.

பாடல் 1076 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனன தனதன தனன     தனதன தனன ...... தனதான

புழுககில் களப மொளிவிடு தரள     மணிபல செறிய ...... வடமேருப் 
பொருமிரு கலச முலையினை யரிவை     புனையிடு பொதுவின் ...... மடமாதர் 
அழகிய குவளை விழியினு மமுத     மொழியினு மவச ...... வநுராக 
அமளியின் மிசையி லவர்வச முருகி     அழியுநி னடிமை ...... தனையாள்வாய் 
குழலிசை யதுகொ டறவெருள் சுரபி     குறுநிரை யருளி ...... யலைமோதுங் 
குரைசெறி யுததி வரைதனில் விறுசு     குமுகுமு குமென ...... வுலகோடு 
முழுமதி சுழல வரைநெறு நெறென     முடுகிய முகிலின் ...... மருகோனே 
மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.

புனுகு சட்டம், அகில், கலவைச் சந்தனம், ஒளி வீசும் முத்து மாலை, ரத்தின மாலை பலவும் நெருங்க, வட திசையில் உள்ள மேரு மலையை நிகர்க்கும் குடம் போன்ற மார்பகங்களிலும், பணிப் பெண்கள்அலங்கரிக்கும் இளம் பருவத்துப் பொது மகளிரின் அழகிய குவளை மலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும், தன் வசம் அழிந்துக் காமப் பற்றுடன் படுக்கை மீது அந்த விலைமாதர்கள் மேல் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய என்னை ஆண்டருள்வாயாக. புல்லாங்குழலின் இசையால் மிகவும் மயங்கி அஞ்சிய காராம் பசு முதலிய சிறிய பசுக் கூட்டத்துக்கு உதவி செய்து அருளி, அலை வீசுவதும், ஒலி நிரம்பச் செய்வதுமான கடல், மலை போல சுழன்று அலைகளை வீசி குமுகுமு குமு என்று பொங்கவும், உலகுடன் பூரண சந்திரன் சுழற்சி அடைய, மந்திர மலை நெறு நெறு என்று சுழலவும், விரைந்து (திருப்பாற் கடலைக்) கடைந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகோனே, மொகுமொகு மொகு என்று வண்டுகள் இசை பாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் பெருமாளே. 

பாடல் 1077 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனன தனதன தனன     தனதன தனன ...... தந்ததான

முழுமதி யனைய முகமிரு குழையில்     முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா 
முதலறி வதனை வளைபவர் கலவி     முழுகிய வினையை ...... மொண்டுநாயேன் 
வழிவழி யடிமை யெனுமறி வகல     மனமுறு துயர்கள் ...... வெந்துவாட 
மதிதரு மதிக கதிபெறு மடிகள்     மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய் 
எழுதிட அரிய எழில்மற மகளின்     இருதன கிரிகள் ...... தங்குமார்பா 
எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி     இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய் 
அழகிய குமர எழுதல மகிழ     அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே 
அமருல கிறைவ உமைதரு புதல்வ     அரியர பிரமர் ...... தம்பிரானே.

பூரண சந்திரன் போன்ற முகம் கொண்டும், இரண்டு குண்டலங்களையும் கோபிப்பது போல் தாக்கும் கண்களின் முனைகளைக் கொண்டும், முதிர்ச்சி அடையாத ஆரம்ப அறிவையே கொண்டவர்களை தம்வசப் படுத்தும் வேசையர்களுடன் புணர்ச்சி இன்பத்தில் முழுகும் வினையை அனுபவிக்கும் நாயை ஒத்த எனக்கு, வழி வழியாக (அம் மகளிருக்கு) அடிமை நான் என்னும் அறிவு நீங்கவும், மனத்தில் உள்ள துயரங்கள் யாவும் வெந்து ஒடுங்கவும், நல்லறிவைத் தருவதும், நிரம்பப் புகலிடமான தன்மையைப் பெற்றுள்ளதுமான அன்பைத் தந்தருளுக. எழுதுவதற்கு அருமையான அழகைக் கொண்ட வேடர் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு மலை போன்ற மார்பும் தழுவுகின்ற திருமார்பனே, எதிரே நின்று சண்டை செய்த அசுரர்கள் பொடியாகும்படி, முன் சென்று எதிர்த்து, தேவர்களின் சிறையை அன்று நீக்கி அருளினாய். அழகு வாய்ந்த குமரனே, ஏழு உலகங்களும் மகிழ்ச்சி கொள்ள ஆறு கார்த்திகைப் பெண்களின் முலைப் பாலைப் பருகிய செல்வமே, தேவலோகத்துக்குத் தலைவனே, உமாதேவி பெற்ற மகனே, திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே. 

பாடல் 1078 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தத்தத் தத்தத்     தாந்தாந் ...... தனதான

கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்     கூன்போந் ...... தசடாகுங் 
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்     கோண்பூண் ...... டமையாதே 
பொடிவன பரசம யத்துத் தப்பிப்     போந்தேன் ...... தலைமேலே 
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்     பூண்டாண் ...... டருள்வாயே 
துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்     சூழ்ந்தாங் ...... குடனாடத் 
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்     தோந்தாந் ...... தரிதாளம் 
படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்     பாழ்ங்கான் ...... தனிலாடும் 
பழயவர் குமரகு றத்தத் தைக்குப்     பாங்காம் ...... பெருமாளே.

கொடுமையான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்றும், உடலில் பொருந்தி வரும் ஒரு மிக வேடிக்கையான மாறுபட்ட நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவு பெறும் மற்ற சமயக் கூச்சல்களிலிருந்து பிழைத்து வந்துள்ள என் தலை மீது, மெய்ப் பொருளை நான் பெற, உனது திருவடியை அன்பு கொஞ்சம் வைத்து ஆண்டு அருள்வாயாக. உடுக்கை வாத்தியம் ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகு தொகு திகு திகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தைப் படியப் போடுகின்ற பதி விரதையாகிய பார்வதி (அதற்குத் தகுந்தபடி) ஒத்திட்டு ஒலிக்க, தூய சுடு காட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபெருமானுடைய குமரனே, குறப்பெண்ணாகிய வள்ளிக்குத் துணைவனான பெருமாளே. 

பாடல் 1079 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தத்தத் தத்தத்     தாந்தாந் ...... தனதான

சுடரொளி கதிரவ னுற்றுப் பற்றிச்     சூழ்ந்தோங் ...... கிடுபாரிற் 
றுயரிரு வினைபல சுற்றப் பட்டுச்     சோர்ந்தோய்ந் ...... திடநாறுங் 
கடுகென எடுமெனு டற்பற் றற்றுக்     கான்போந் ...... துறவோருங் 
கனலிடை விதியிடு தத்துக் கத்தைக்     காய்ந்தாண் ...... டருளாயோ 
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்     தாந்தோய்ந் ...... திருபாலும் 
தமருக வொலிசவு தத்திற் றத்தத்     தாழ்ந்தூர்ந் ...... திடநாகம் 
படிநெடி யவர்கர மொத்தக் கெத்துப்     பாய்ந்தாய்ந் ...... துயர்கானம் 
பயில்பவர் புதல்வகு றத்தத் தைக்குப்     பாங்காம் ...... பெருமாளே.

ஜோதி ஒளி வீசும் சூரியன் உதித்துப் புறப்பட்டு, வலம் வந்து விளங்குகின்ற இந்தப் பூமியில் துன்பம், நல் வினை, தீ வினை என்னும் இருவினைகள் பலவற்றாலும் இவ்வாழ்க்கை சுற்றப்பட்டு, (அதனால்) சோர்வடைந்து அலுத்து மாய்ந்திட (பிணம்) நாற்றம் எடுக்கும், விரைவில் எடுத்துக் கொண்டு போகவும் என்று சொல்லப்படும் உடல் மீதுள்ள பற்று ஒழிந்து, சுடு காட்டுக்குப் போய் உறவினரும் நெருப்பிடையே விதிப்படி இடுகின்ற அந்தத் துக்க நிகழ்ச்சிக்கு இடம் தருகின்ற பிறப்பைக் கோபித்து ஒழித்து, என்னை ஆண்டருள மாட்டாயோ? பெருமை உடைய (துர்க்கையின் படைகளான) கணங்கள் செருக்குற்று ஒன்று சேர்ந்து, தாங்கள் கூடிப் பொருந்தி (நடனம் ஆடுபவரின்) இரண்டு பக்கங்களிலும் உடுக்கையின் ஓசையை நடன ஜதிக்கு ஏற்ப சவுக்க காலத்தில் ஒலிக்க, (ஜடையில்) அணிந்துள்ள பாம்பு தொங்கி நகர்ந்து செல்ல, அக்கூத்தின் போக்கைக் கவனித்தும் படிக்கும் திருமால் கைகளால் (மத்தளம்) அடிக்க, கிட்டிப் புள் பாய்வது போலப் பாய்ந்து, கூத்திலக்கணத்தை ஆராய்ந்து, பெரிய சுடுகாட்டினிடையே நடனம் செய்பவரான சிவபெருமானின் மகனே, கிளி போன்ற குறப்பெண் ஆகிய வள்ளிக்கு மணாளனாகும் பெருமாளே. 

பாடல் 1080 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தத்த தந்த தனதன தத்த தந்த     தனதன தத்த தந்த ...... தனதான

குடமென வொத்த கொங்கை குயில்மொழி யொத்த இன்சொல்     குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே 
வடவரை யுற்று றைந்த மகதெவர் பெற்ற கந்த     மதசல முற்ற தந்தி ...... யிளையோனே 
இடமுடன் வைத்த சிந்தை யினைவற முத்தி தந்து     இசையறி வித்து வந்து ...... எனையாள்வாய் 
தடவரை வெற்பி னின்று சரவண முற்றெ ழுந்து     சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே.

குடம் என்று உவமை சொல்லும்படியான மார்பையும், குயிலின் மொழி என்று உவமை சொல்லும்படியான இனிய சொல்லையும் உடைய குற மகள் வள்ளி உன் பால் வைத்த அன்பை நினைத்து அவளுக்கு உதவியவனே, வடக்கே உள்ள கயிலை மலையில் பொருந்தி வீற்றிருக்கும் மகா தேவர் என்று பெயர் பெற்ற சிவபெருமான் பெற்ற கந்த மூர்த்தியே, மத நீர் நிறைந்த யானை முக விநாயக மூர்த்தியின் தம்பியே, நீ இடம் பெற வேண்டும் என்று வைத்த என் உள்ளம் வருந்துதல் ஒழிய எனக்கு முக்தி கொடுத்து, இசை ஞானத்தை அறிவித்து ஊட்டி, வந்து என்னை ஆண்டருள்க. உயர்ந்த சிகரங்களை உடைய விசாலமான கயிலை மலையில் தோன்றி, சரவணப் பொய்கையில் எழுந்து, போர்க்களத்தில் வெற்றி பெற்ற பெருமாளே. 

பாடல் 1081 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தத்த தந்த தனதன தத்த தந்த     தனதன தத்த தந்த ...... தனதான

மடவிய ரெச்சி லுண்டு கையில்முத லைக்க ளைந்து     மறுமைத னிற்சு ழன்று ...... வடிவான 
சடமிக வற்றி நொந்து கலவிசெ யத்து ணிந்து     தளர்வுறு தற்கு முந்தி ...... யெனையாள்வாய் 
படவர விற்சி றந்த இடமிதெ னத்து யின்ற     பசுமுகி லுக்கு கந்த ...... மருகோனே 
குடமுனி கற்க வன்று தமிழ்செவி யிற்ப கர்ந்த     குமரகு றத்தி நம்பு ...... பெருமாளே.

விலைமாதர்களுடைய எச்சிலை உண்டு, கையில் உள்ள மூலப்பொருளை அவர்கள் பொருட்டுச் செலவழித்து ஒழித்து, மறு பிறப்புக்கு ஏதுவான செயல்களில் அலைச்சல் உற்று, அழகாய் இருந்த உடம்பு வர வர இளைத்து, காய்ந்து வாடி, புணர்ச்சிச் செயல்களில் மீண்டும் ஈடுபடத் துணிந்து, நான் சோர்வு அடைவதற்கு முன்பாக என்னை நீ ஆண்டருள்க. படம் கொண்ட (ஆதி சேஷன் என்னும்) பாம்பாகிய படுக்கையை மிகத் தக்க இடம் இது என்று கொண்டு அதில் பள்ளி கொண்ட கரிய மேகம் போன்ற திருமாலுக்குப் பிரியமான மருகனே, அகத்திய முனிவர் கற்க*, அன்று தமிழ் ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய வள்ளி நம்பித் தொழும் பெருமாளே. 
* அகத்தியர் சிவபெருமானை வணங்கி தமிழ் ஞானம் வேண்ட, அவர் முனிவரைத் திருத்தணிகை முருகனை அணுகுமாறு பணித்தார். அங்ஙனமே அகத்தியர் முருக வேளைப் பூஜித்துத் தமிழ் ஞானம் பெற்றார்.

பாடல் 1082 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தானத் தனதன தானத்     தனதன தானத் ...... தனதான

கருமய லேறிப் பெருகிய காமக்     கடலினில் மூழ்கித் ...... துயராலே 
கயல்விழி யாரைப் பொருளென நாடிக்     கழியும நாளிற் ...... கடைநாளே 
எருமையி லேறித் தருமனும் வாவுற்     றிறுகிய பாசக் ...... கயிறாலே 
எனைவளை யாமற் றுணைநினை வேனுக்     கியலிசை பாடத் ...... தரவேணும் 
திருமயில் சேர்பொற் புயனென வாழத்     தெரியல னோடப் ...... பொரும்வீரா 
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்     செழுமறை சேர்பொற் ...... புயநாதா 
பொருமயி லேறிக் கிரிபொடி யாகப்     புவியது சூழத் ...... திரிவோனே 
புனமக ளாரைக் கனதன மார்பிற்     புணரும்வி நோதப் ...... பெருமாளே.

கொடிய ஆசை மிகுந்து பெருகி வளர்ந்த காமமாகிய கடலில் முழுகித் துயரம் அடைந்து, மீன் போன்ற கண்களைக் கொண்ட விலைமாதர்களை அடையத் தக்க பொருள் என்று தேடி விரும்பி, காலம் கழிக்கின்ற அந்த நாட்களில் இறுதி நாள் வர, எருமைக் கடா வாகனத்தில் ஏறி யமதர்மனும் வீட்டு வாசற்படி தாண்டி வந்து, அழுத்திக் கட்டிய பாசக் கயிற்றால் என்னை வளைத்து இழுக்காமல், உன்னையே துணையாக நினைக்கின்ற எனக்கு, இயற்றமிழ் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்ல வரத்தைத் தந்தருள வேண்டும். மயில் போன்ற லக்ஷ்மிகரம் பொருந்திய அழகிய புயங்களை உடையவன் என்று சொல்லும்படி வாழ்ந்திருந்த அந்தப் பகைவனாகிய சூரன் புற முதுகு காட்டி ஓடும்படிச் சண்டை செய்த வீரனே, இந்தப் பூமியில் புகழ்ந்து பேசப்படும் தமிழ்ப் பாட்டுக்களால் ஆகிய பாமாலைகளும், செழுமை வாய்ந்த வேத மொழிகளும் மாலையாக அணிந்த அழகிய புயங்களைக் கொண்டவனே, சண்டை செய்ய வல்ல மயில் மீது ஏறி, மலைகள் எல்லாம் பொடியாகும் படி பூமியை வலம் வந்தவனே, தினைப் புனத்தில் காவலில் இருந்த வள்ளியை, அவளது சிறப்பு மிக்க மார்பகங்களோடு, ஆரத் தழுவிய திருவிளையாடலைச் செய்த பெருமாளே. 

பாடல் 1083 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தானத் தனதன தானத்     தனதன தானத் ...... தனதான

குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்     குலவிய தோலத் ...... தியினூடே 
குருதியி லேசுக் கிலமது கூடிக்     குவலயம் வானப் ...... பொருகாலாய் 
உடலெழு மாயப் பிறவியி லாவித்     துறுபிணி நோயுற் ...... றுழலாதே 
உரையடி யேனுக் கொளிமிகு நீபத்     துனதிரு தாளைத் ...... தரவேணும் 
கடலிடை சூரப் படைபொடி யாகக்     கருதல ரோடப் ...... பொரும்வேலா 
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்     கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா 
சடையினர் நாடப் படர்மலை யோடித்     தனிவிளை யாடித் ...... திரிவோனே 
தனிமட மானைப் பரிவுட னாரத்     தழுவும்வி நோதப் ...... பெருமாளே.

குடலினிடத்தே கெடுதல் அடைந்து, ஊடே ஊடே கிழிபட்டு இத்தகைய கோலத்துடன் விளக்கம் தரும் தோலும், எலும்பும் கூடிய இவ்வுடலினூடே, (மகளிர்) ரத்தத்துடன் விந்துவும் சேர்ந்து, மண், வான், நீர், ஒப்பற்ற காற்று (இவைகளுடன் தீ) ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல் தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வெளிவந்து பிறந்து, சேர்ந்து பிணித்தலைச் செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து வீணாக அலைச்சல் உறாமல், உன்னைப் புகழ்ந்துரைக்கும் அடியவனாகிய எனக்கு, ஒளி மிக்கனவும், கடப்ப மலர் சேர்ந்துள்ளனவுமான, இரண்டு திருவடிகளைத் தந்து அருள வேண்டும். கடலின் இடையே சூரனுடைய படைகள் பொடிபட்டு அழியவும், பகைவர்கள் ஓட்டம் பிடிக்கவும் சண்டை செய்யும் வேலனே, கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ் சூரியனைப் போன்ற திருஞான சம்பந்தராய்த் தோன்றி பல கலை ஞானங்களையும் வேதங்களையும் உணர்ந்தவனாக முத்தமிழ் நாட்டில் விளங்கியவனே, சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள கயிலை மலையில் ஓடி, தனியாக விளையாடித் திரிந்தவனே, ஒப்பற்ற மடந்தையாகிய மான் போன்ற வள்ளியை அன்புடன் நன்றாக (மனம் குளிரத்) தழுவிய அழகு வாய்ந்த பெருமாளே. 

பாடல் 1084 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனா தத்த தனதனா தத்த     தனதனா தத்த ...... தனதான

கருதியே மெத்த விடமெலாம் வைத்த     கலகவா ளொத்த ...... விழிமானார் 
கடினபோ கத்த புளகவா ருற்ற     களபமார் செப்பு ...... முலைமீதே 
உருகியான் மெத்த அவசமே வுற்ற     வுரைகளே செப்பி ...... யழியாதுன் 
உபயபா தத்தி னருளையே செப்பு     முதயஞா னத்தை ...... அருள்வாயே 
பருவரா லுற்று மடுவின்மீ துற்ற     பகடுவாய் விட்ட ...... மொழியாலே 
பரிவினோ டுற்ற திகிரியே விட்ட     பழயமா யற்கு ...... மருகோனே 
முருகுலா வுற்ற குழலிவே டிச்சி     முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே 
முருகனே பத்த ரருகனே வெற்பு     முரியவேல் தொட்ட ...... பெருமாளே.

மிகுந்த முன்யோசனையுடன் எல்லா விஷத்தையும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் வன்மை கொண்டதும், போக இன்பம் தருவதும், புளகாங்கிதம் கொண்டதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான மார்பகத்தின் மீது மனம் உருகி நான் மிகவும் வசம் இழந்த நிலையில் இருந்த பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல், உனது இரண்டு திருவடிகளின் கிருபா கடாட்சத்தின் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக. மிக்க துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்கு மருகனே, இயற்கை மணம் வீசும் கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் மார்பை விரும்பி அணைந்த கருணை வேளே, முருகனே, பக்தர்களுக்கு அருகே நின்று உதவுபவனே, கிரவுஞ்ச மலை ஒடிந்து அழிய வேலைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1085 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனா தத்த தனதனா தத்த     தனதனா தத்த ...... தனதான

கொலையிலே மெத்த விரகிலே கற்ற     குவளையேர் மைக்கண் ...... விழிமானார் 
குழையிலே யெய்த்த நடையிலே நெய்த்த     குழலிலே பற்கள் ...... தனிலேமா 
முலையிலே யற்ப இடையிலே பத்ம     முகநிலா வட்ட ...... மதின்மீதே 
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை     மொழியிலே சித்தம் ...... விடலாமோ 
கலையனே உக்ர முருகனே துட்டர்     கலகனே மெத்த ...... இளையோனே 
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு     கடவுளே பச்சை ...... மயிலோனே 
உலகனே முத்தி முதல்வனே சித்தி     உடையனே விஷ்ணு ...... மருகோனே 
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர     வுருவனே மிக்க ...... பெருமாளே.

கொலைத் தொழிலையும், நிரம்பத் தந்திரங்களைக் கற்றுள்ளனவும், குவளை மலர் போன்றனவும், அழகு கொண்டனவும், மை பூசியும் உள்ள விழிகளை உடைய விலைமாதர்களின் காதில் உள்ள குண்டலங்களிலும், இளைப்புற்ற நடையிலும், வாசனைத் தைலம் பூசியுள்ள கூந்தலிலும், பற்களிலும், பெரிய மார்பகங்களிலும், குறுகிய இடையிலும், தாமரை போன்ற முகமாகிய சந்திர பிம்ப வட்ட வடிவிலும், முதுகிலும், பொட்டு இட்டுள்ள நெற்றியிலும், கிளி போன்ற பேச்சிலும் நான் என் மனத்தைச் சிதற விடலாமோ? எல்லா கலைகளிலும் வல்லவனே, (அசுரர்களிடத்தில்) சினம் கொண்ட முருகனே, துஷ்டர்களைக் கலங்கச் செய்து அடக்குபவனே, மிகவும் இளையவனே, பொன் உருவத்தினனே, பித்தராகிய சிவபெருமானுடைய மகனே, யாவராலும் மெச்சப்படும் கடவுளே, பச்சை மயில் வாகனனே, உலகெல்லாம் நிறைந்தவனே, முக்தி தரும் முதல்வனே, சித்திகளில் வல்லவனே, திருமாலின் மருகனே, ஒப்பற்றவனே, செந்நிறம் கொண்ட நேர்த்தியான அழகிய உருவத்தனே, யாவரிலும் மேம்பட்ட பெருமாளே. 

பாடல் 1086 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனனந் தான தனதனனந் தான     தனதனனந் தான ...... தனதான

அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயு     மசலமிரண் டாலு ...... மிடைபோமென் 
றடியில்விழுந் தாடு பரிபுரசெஞ் சீர     தபயமிடுங் கீத ...... மமையாதே 
நகமிசைசென் றாடி வனசரர்சந் தான     நவையறநின் றேனல் ...... விளைவாள்தன் 
லளிதவிர்சிங் கார தனமுறுசிந் தூர     நமசரணென் றோத ...... அருள்வாயே 
பகலிரவுண் டான இருவரும்வண் டாடு     பரிமளபங் கேரு ...... கனுமாலும் 
படிகநெடும் பார கடதடகெம் பீர     பணைமுகசெம் பால ...... மணிமாலை 
முகபடசிந் தூர கரியில்வருந் தேவு     முடியஅரன் தேவி ...... யுடனாட 
முழுதுலகுந் தாவி எழுகடல்மண் டூழி     முடிவினுமஞ் சாத ...... பெருமாளே.

முழுவதுமாக நறுமணக் கலவையும் கஸ்தூரியும் தோய்ந்துள்ள (மார்பகங்களாகிய) மலைகள் இரண்டாலும் இடுப்பு ஒடிந்து போகும் என்று, பாதத்தில் விழுந்து ஒலிக்கின்ற சிலம்பின் செவ்விய சீர் பொருந்திய அபயக் கூச்சலிடும் இசை ஒலி போதாதென்று, (வள்ளி) மலைக்குப் போய் லீலைப் பேச்சுடன் விளையாடி, வேடர்களின் தவப்புதல்வியும், குற்றம் இல்லாத வகையில் இருந்து தினைப்பயிர் விளைவித்தவளும், ஆகிய வள்ளியின் ஒளிரும் நளினமும், அணிகளின் விளக்கமுமுள்ள அலங்காரமான மார்பில் அணையும் செந்நிறச் செல்வனே, உன்னை வணங்குகிறேன் என்று கூறி நான் உன்னைப் போற்ற அருள் புரிய வேண்டும். சூரியனும், சந்திரனும், வண்டுகள் விளையாடும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், படிகம் போல் வெண்ணிறம் உடையதும், மிக்க கனம் கொண்டதும், மத நீர் கொண்டதும், பெருமை வாய்ந்ததும், கம்பீரமானதும், பருத்த முகத்தில் செவ்விய நெற்றியில் மணி மாலையும் முகத்தில் இடும் அலங்காரத் துணியும் உள்ளதும், புள்ளி முகத்தைக் கொண்டதுமான (ஐராவதம் என்னும்) யானை மீது வரும் இந்திரனும், (இவர்கள் முதலான யாவரும்) அழிவுறும் (யுகாந்த) காலத்தில் சிவபெருமான் பராசக்தியுடன் நடனம் செய்ய, உலகம் முழுதிலும் பரந்தெழுந்து ஏழு கடல்களும் நெருங்கிப் பொங்கும் முடிவு காலமாகிய ஊழிக் காலத்தும் (நல்ல சக்தியும் தீய சக்தியும் போராடி யுகத்தை முடிக்கும் காலத்தும்), அஞ்சாமல் விளங்கி நிலையாக நிற்கும் பெருமாளே. 

பாடல் 1087 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனனந் தானம் தனதனனந் தானம்     தனதனனந் தானம் ...... தனதான

கலகமதன் காதுங் கனமலரம் பாலுங்     களிமதுவண் டூதும் ...... பயிலாலும் 
கடலலையங் காலுங் கனஇரையொன் றாலும்     கலைமதியங் காயும் ...... வெயிலாலும் 
இலகியசங் காளும் இனியவளன் பீனும்     எனதருமின் தானின் ...... றிளையாதே 
இருள்கெடமுன் தானின் றினமணிசெந் தார்தங்     கிருதனமுந் தோள்கொண் ...... டணைவாயே 
உலகைவளைந் தோடுந் கதிரவன்விண் பால்நின்     றுனதபயங் காவென் ...... றுனைநாட 
உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும்     உருவியுடன் போதும் ...... ஒளிவேலா 
அலகையுடன் பூதம் பலகவிதம் பாடும்     அடைவுடனின் றாடும் ...... பெரியோர்முன் 
அறமுமறந் தோயும் அறிவுநிரம் போதென்     றழகுடனன் றோதும் ...... பெருமாளே.

கலகமிட வந்த மன்மதன் கொல்லுதல் போலச் செலுத்தும் பாரமான மலர்ப் பாணங்களாலும், களிப்பு மயக்கத்தைத் தரும் தேனை உண்ட வண்டுகள் செய்யும் ¡£ங்கார ஒலியினாலும், கடல் அலைகள் அங்கு ஒலிக்கும் பெருத்த ஓசை காதிலே விழுவதாலும், கலைகளை உடைய சந்திரன் தீப்போல் காய்கின்ற வெயிலாலும், விளக்கமுற்ற சங்கு வளையல்களை அணிந்தவளும், இனிய குணத்தை உடையவளும், அன்பையே தருகின்றவளும், மின்னல் போல ஒளி கொண்டவளுமான என்னுடைய அருமை மகள் தான் இன்று உன்னை நினைத்து இளைத்துப் போகாமல், அவளது மனதில் உள்ள துன்பம் நீங்க, அவள் முன் தோன்றி, ஒரே வர்க்கமான மணிகளால் ஆன செவ்விய மாலை தங்கும் இரு மார்பகங்களையும் உனது பன்னிரு தோளால் அணைந்தருளுக. உலகை வலம் வந்து ஓடுகின்ற சூரியன் ஆகாயத்திலிருந்து, உனக்கு அடைக்கலம், என்னைக் காத்தருள்க என்று முறையிட்டு உன்னை வேண்டிய காரணத்தால் ஆற்றல் உடைய, கொடிய சூரனுடைய தலையுடன் வலிய தோளையும் ஊடுருவிச் சென்று, உடனே வெளி வந்த ஒளி வீசும் வேலைச் செலுத்தியவனே, பேய்களுடன் பூதங்கள் சேர்ந்து பல விதமான பாடல்களைப் பாடுகின்ற அடைவுக்கு ஏற்ப, தாம் நின்று நடனம் புரிகின்ற பெரியோராகிய சிவபெருமான் முன்னொரு நாள் அறத்தையும், அற நெறி அமைந்த ஞானப் பொருளையும் நன்றாக உபதேசிப்பாயாக எனக் கேட்க, அழகாக உடனே அன்று அவருக்கு உபதேசித்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், வண்டுகளின் ¡£ங்காரம், கடலின் ஓசை, நிலவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 1088 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனனந் தானந் தனதனனந் தானந்     தனதனனந் தானந் ...... தனதான

குருதிசலந் தோலுங் குடலுடனென் பாலுங்     குலவியெழுங் கோலந் ...... தனில்மாயக் 
கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங்     குணவுயிர்கொண் டேகும் ...... படிகாலன் 
கருதிநெடும் பாசங் கொடுவரநின் றாயுங்     கதறமறந் தேனென் ...... றகலாமுன் 
கமலமலர்ந் தேறுங் குகனெனவும் போதுன்     கருணைமகிழ்ந் தோதுங் ...... கலைதாராய் 
நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன்     நினைவுமழிந் தோடும் ...... படிவேலால் 
நிகரிலதம் பாரொன் றிமையவர்நெஞ் சால்நின்     நிலைதொழநின் றேமுன் ...... பொருவீரா 
பருதியுடன் சோமன் படியையிடந் தானும்     பரவவிடந் தானுண் ...... டெழுபாரும் 
பயமறநின் றாடும் பரமருளங் கூரும்     பழமறையன் றோதும் ...... பெருமாளே.

ரத்தம், நீர், தோல், குடலுடன், எலும்பும் கொண்டு விளங்கி எழுகின்ற உருவமாகிய இந்த உடலில் மாயமாக அமைந்துள்ள கொடுமை அதனுடன் சினம், கடுமையான காம இச்சை இவை கூடிய குணத்தைக் கொண்ட உயிரை பிடித்துக் கொண்டு போகும்படி யமன் கருத்தோடு நீண்ட பாசக் கயிற்றைக் கொண்டு வர, அருகில் நின்று தாயாரும் கதறிப் புலம்ப, யாவையும் மறந்து விட்டேன் என்று சொல்லுவது போல் எல்லாவற்றையும் கை விட்டு நீங்குவதற்கு முன், இதயத் தாமரை மலர் பக்தி ரசத்தால் மலர, அதில் இருந்து விளங்கும் குக மூர்த்தி என்னும்படி நீ போந்து அருளி, உனது கருணைத் திறத்தை களிப்புடன் நான் போற்றும்படியான கலை ஞானத்தை எனக்குக் கொடுப்பாயாக. அசுரர்களுடைய சேனைகள் சூழ்ந்துள்ள பெரிய நெடிய சூரன் தனது நினைவையும் இழந்து போர்க்களத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும்படியாக வேலாயுதத்தால் ஒப்பில்லாத சூரனை சம்ஹாரம் செய்ததைப் பார்த்திருந்த தேவர்கள் தமது மனத்திலேயே உன்னுடைய வீர நிலையைத் தொழும்படி போர்க்களத்தில் நின்று, முன்பு சண்டை செய்த வீரனே, சூரியனும், சந்திரனும், பூமியை (வராக உருவத்தில்) தோண்டிச் சென்ற திருமாலும் போற்றிப் பணிய (ஆலகால) விஷத்தைத் தானே உண்டு, ஏழு உலகங்களும் அச்சம் நீங்கி விளங்க, நின்று நடமாடுகின்ற மேலான சிவபெருமான் உள்ளம் மகிழும் பழைய வேதங்களை முன்பொருநாள் ஓதிநின்ற பெருமாளே. 

பாடல் 1089 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தாத்த தனதனன தாத்த     தனதனன தாத்த ...... தனதான

இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை     யெடுமெடென வீட்டி ...... லனைவோரும் 
இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில்     எரியஎரி மூட்டி ...... யிடுமாறு 
கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்     கயிறிறுக மாட்டி ...... யழையாமுன் 
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு     கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே 
பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு     பழையகுற வாட்டி ...... மணவாளா 
பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு     பகருநுதல் நாட்ட ...... குமரேசா 
அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை     அடைவடைவு கேட்ட ...... முருகோனே 
அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

நல்வினை, தீவினை எனப்படும் இரு வினைகளால் உண்டாகும் கேடு உற்ற, இறந்து போன கூடான இவ்வுடலை, சீக்கிரம் எடுங்கள் என்று கூறி வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் கடைசியாகச் சுடு காட்டில் அழுது, தலைப்பக்கம் எரியும்படி நெருப்பை மூட்டி வைக்கும்படியாக, கரு நிறம் கொண்டதும், இரு கொம்புகளை உடையதும், வலிமை மிக்கதுமான எருமையுடன் வந்த மூர்க்கராகிய யமன் பாசக் கயிற்றை அழுத்தமாக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக, பொன்னையும், ரத்தினத்தையும் கூட மங்கச் செய்வதாய், பொருந்தின கழல் சேர்ந்துள்ள திருவடிகள் இரண்டையும் காட்டி அருள் செய்வாயாக. உயர்ந்த வள்ளி மலை நாட்டில் (தினைப் புனத்தில்) இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே உன்னைக் குறித்துத் தவம் செய்தமையால்) பழைய உறவைப் பூண்டிருந்த குற மகள் வள்ளியின் கணவனே, பகைவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய நெருப்பை ஊட்டுவித்த, ஒளி விடுவதான நெற்றிக் கண்ணைக்* கொண்ட குமரேசனே, அருமையான வேத மொழிகளைச் சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை (திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே, அலை வீசும் கடலில் கூட்டமாய் இருந்த அசுரர்களை விரட்டி ஓடும்படிச் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே. 
* முருகன் சிவனது அம்சமே ஆதலால், சிவனைப் போன்று அக்னி உள்ள நெற்றிக் கண் முருகனுக்கும் உண்டு.

பாடல் 1090 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தாத்த தனதனன தாத்த     தனதனன தாத்த ...... தனதான

உறவின்முறை யோர்க்கு முறுதுயரம் வாய்த்து     உளமுருகு தீர்த்தி ...... வுடலூடே 
உடலைமுடி வாக்கு நெடியதொரு காட்டில்     உயர்கனலை மூட்டி ...... விடஆவி 
மறலிமற மார்த்த கயிறுதனை வீக்கி     வலிவினொடு தாக்கி ...... வளையாமுன் 
மனமுமுனி வேட்கை மிகவுமுன தாட்கள்     மகிழ்வியல்கொ டேத்த ...... மதிதாராய் 
பிறைநுதலி சேற்க ணமையரிவை வேட்பு     வரையில்மற வோர்க்கு ...... மகவாகப் 
பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த     பிடியினடி போற்று ...... மணவாளா 
அறுகுபிறை யாத்தி அலைசலமு மார்த்த     அடர்சடையி னார்க்கு ...... மறிவீவாய் 
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

உறவு முறை கொண்டுள்ள சுற்றத்தாருக்கு வெகுவாகத் துக்கத்தை உண்டாகும்படி விளைவித்து, அவர் தம் உள்ளத்தில் உள்ள கவலையால் உருகுதலை விட்டு, இந்த உடலை எடுத்ததின் வினைப்பயனாக, உடலை அழிவு செய்கின்ற பெரிய ஒரு சுடுகாட்டில் மிக்கெழும் நெருப்பை மூட்டிவிட, உயிரை யமன் தனது வீரம் பொருந்திய பாசக் கயிற்றால் கட்டி, வலிமையாக மோதி வளைத்து இழுப்பதற்கு முன், எனது மனமும் உன்னை நினைத்து காதல் மிக உண்டாக, உனது திருவடிகளை மகிழ்ச்சியுடன் சிரத்தையோடு போற்றுதற்கு புத்தியைத் தந்து அருளுக. பிறை போன்ற நெற்றியை உடைய, சேல் மீன் போன்ற கண்களை உடைய பெண்ணாகிய வள்ளியை, விருப்பத்துடன் வளர்ந்த வள்ளி மலையில் வேடர்களுக்குக் குழந்தையாக வந்து, மானிடம் இல்லாத மான் வயிற்றில் தோன்றி வளர்ந்து, நன்கு விளைந்த தினைக் கொல்லையைக் காத்த பெண் யானை ஆகிய வள்ளியின் பாதங்களைப் போற்றும் கணவனே, அறுகம் புல், நிலவு, ஆத்தி, அலை வீசும் நீர் கொண்ட கங்கை (இவைகளைச்) சூடிய, நெருங்கிய சடையை உடைய சிவபெருமானுக்கு உபதேசப் பொருளை ஓதியவனே, நெருங்கி வரும் போர்க்களத்தில் அசுரர்களின் சுற்றத்தை மாய்த்தொழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே. 

பாடல் 1091 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனனதன தனனதன தனனதன தனனதன     தனனதன தனனதன ...... தனதான

அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென     அமுதமொழி பதறியெழ ...... அணியாரம் 
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக     அமுதநிலை யதுபரவ ...... அதிமோகம் 
உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனு     முறுகபட மதனில்மதி ...... யழியாதே 
உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வருமு     னுபயநறு மலரடியை ...... அருள்வாயே 
வளையமலை கடல்சுவற விடுபகழி வரதனிரு     மருதினொடு பொருதருளு ...... மபிராமன் 
வரியரவின் மிசைதுயிலும் வரதஜய மகள்கொழுநன்     மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர் 
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற     தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா 
தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ     சகலகலை முழுதும்வல ...... பெருமாளே.

கூந்தலின் வரிசை கலைந்து போக, கண்கள் குவிய, வளைகள் கலகலவென்று ஒலிக்க, அமுதம் போன்ற மொழிகள் பதறுதலுடன் பெருக, அணிந்துள்ள முத்து மாலையானது அழகு ஒழுகுவதும், பூரிப்பதுமான மார்பின் மீது அசைய, இடுப்பு நெகிழ, மிகவும் காம இன்ப ரச நிலை பெருக, அதிக மோகத்துடன் மனம் உருகும்படிச் செய்கின்ற புணர்ச்சியைத் தருகின்ற விலைமாதர்களின் கொடியது என்று சொல்லத்தக்க சூழ்ச்சியில் என் புத்தி அழிந்து போகாமல், மயிலின் மீது ஏறி உலகம் முழுவதும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த உனது இரண்டு நறு மணம் வீசும் மலர்ப் பாதங்களை அருள்வாயாக. வளைந்ததாக உள்ள அலை கடல் வற்றிப் போகும்படி செலுத்திய அம்பைக் கொண்டவனும்*, அடியார்களுக்கு வரங்களைத் தருபவனுமான திருமால், இரண்டு மருத மரங்களைத் தகர்த்து (கண்ணனாக) அருள் பாலித்த அழகன், கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதன், விஜயலக்ஷ்மியின் கணவனாகிய திருமாலின் மருகனே, போர்க்களத்தில் விரைந்து வந்து சண்டை செய்த அசுரத் தலைவனின் சேனைகள் சிதற, (கிரெளஞ்ச) மலை தூள்பட, அசுரர்பதியாகிய சூரனுடைய தலை சிதறி விழ, நெருப்பு பெருகி எழ, விரைவில் செலுத்திய கூரிய வேலனே, முத்து மாலையும் மணி மாலையும் விளங்கும் குறவர் குலத்து அழகிய மகளான வள்ளியின் கணவனே, எல்லாக் கலைகளிலும் முற்றும் வல்ல பெருமாளே. 
* கடற்கரையில் வருண மந்திரம் ஜெபித்தும் சமுத்திரராஜன் வந்து வழி விடாததால் ராமர் கோபித்துக் கடல் மீது பாணம் விட்டார்.

பாடல் 1092 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனனதன தனனதன தனனதன தனனதன     தனனதன தனனதன ...... தனதான

அனகனென அதிகனென அமலனென அசலனென     அபயனென அதுலனென ...... அநபாயன் 
அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி     யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி 
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை     மகிபஎன தினையளவு ...... ளவுமீயா 
மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய     மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே 
இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென     இருசதுர திசையிலுர ...... கமும்வீழ 
இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில     மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக் 
ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி     கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக் 
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

பாபம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும், மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும், அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகரில்லாதவன் என்றும், அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும், வீரத்தில் அர்ச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும், இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி, பத்ம நிதி, சிந்தாமணி என்று கூறப்படும் ரத்தினம், சங்கநிதி, மேகம், காமதேநு, கற்பக விருட்சம் - இவைகளுக்கு கொடையில் ஒப்பான கைகளை உடைய அரசனே நீ என்று, தினையளவும் உள்ள பொருளைக் கொடுக்காத மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை நீங்கவும், வாக்கு அடங்கவும், மனம் ஒடுங்கவும், ஓர் உபதேசப் பொருளை தந்தருள்வாயாக. சூரியன், சந்திரன் இவர்களின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க, காலின் நகங்கள் நொச்சி இலையைப் போலிருக்க, எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும் அஞ்சி கீழே விழ, பொன்மலை (மேரு), வெள்ளிமலை (கைலாயம்), மரகதமலை (ஈங்கோய் மலை), போல் விளங்குவதான வலிய உடலைக் கொண்டதாய், விமலாதேவியின் (பார்வதியின்) திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையின் நீல நிற ஒளியை வீசி, ஆகாயத்திலுள்ள மேகங்களை வாகனமாகக் கொண்ட கடவுள் இந்திரனின் தேகம் என்று சொல்லும்படியாக உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய்*, அழகு நிரம்பி மேலே படர்ந்த தோகையைக் கொண்ட மயிலினை நடத்திச் சென்று, அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என்ற நாற்படைகளுடனும் போர் செய்த பெருமாளே. 
* இந்திரனுக்கு கெளதம முநிவர் இட்ட சாபத்தால் உடலெங்கும் ஆயிரம் கண்கள் தோன்றின. அது போல மயிலின் தோகையில் கண்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார்.

பாடல் 1093 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனனதன தனனதன தனனதன தனனதன     தனனதன தனனதன ...... தனதான

குடருமல சலமுமிடை யிடைதடியு முடையளவு     கொழுவுமுதி ரமும்வெளிற ...... ளறுமாகக் 
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி     குமுகுமென இடைவழியில் ...... வரநாறும் 
உடலில்மண மலிபுழுகு தடவியணி கலமிலக     வுலகமரு ளுறவரும ...... ரிவையாரன் 
பொழியவினை யொழியமன மொழியஇரு ளொழியஎன     தொழிவிலக லறிவையருள் ...... புரிவாயே 
வடகனக சயிலமுத லியசயில மெனநெடிய     வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை 
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென     மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக் 
கடலுலகை யளவுசெய வளருமுகி லெனஅகில     ககனமுக டுறநிமிரு ...... முழுநீலக் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

குடல், மலம், நீர் நெருங்கியதாய், இடையிடையே மாமிசமும் உடையதாய், அளவுக்கு ஏற்ப கொழுப்பும், ரத்தமும் நிறம் கெட்டு வெளுத்து குழம்பு போல் ஆக, கொள கொள என்று ஆகி கணக்கில்லாத புழுக்கள் நெளு நெளு என்று நெளிய, (அங்ஙனம்) உண்டாகும் ரத்தம் குமு குமு என்று பெருகும் வழியின் மத்தியில் வரும்போதே துர் நாற்றம் வீசும் தேகத்தில், நறு மணம் மிகுந்த புனுகு சட்டம் ஆகிய வாசனைப் பொருள்களைப் பூசி, அதன் மேல் ஆபரணங்கள் விளங்க உலக மக்கள் காம மயக்கம் கொள்ளும்படி வருகின்ற விலைமாதர்களின் மோகம் நீங்க, கர்ம வினையெல்லாம் விட்டு ஒழிய, மனம் ஒடுங்க, அஞ்ஞான இருள் அகல, யான், எனது எனப்படும் அகங்கார மகங்காரங்கள் நீங்குவதால் பெருகி எழும் ஞானத்தை அருள் புரிவாயாக. வடக்கே உள்ள பொன் மலையாகிய மேரு முதலிய மலைகள் என்னும்படி பெருத்த வடிவைக் கொண்டு மிக்க வலிமை வாய்ந்த பகைவர்களை பிளந்து எறியும் (திருமாலின்) ஒப்பற்ற சக்ராயுதம் (சுதர்சனம்) என்னும்படியும், சந்திரன் போல முற்றின வெண்மை நிறம் கொண்ட (பாஞ்ச சன்னியம் என்ற) சங்கு என்னும்படி விளங்கி, (மச்சாவதரத்தில்) மகர மீன்கள் உள்ள கடலில் முழுகி விளையாடி, கடல் சூழ்ந்த இந்த உலகை அளவிட (திரிவிக்கிரமனாக) வளர்ந்த மேக நிறத் திருமால் என்னும்படி, இந்த உலகமும் ஆகாய உச்சி முழுமையும் பொருந்தும்படி நிமிர்ந்து எழுந்ததும், முழு நீல நிறமுள்ள தோகையைக் கொண்டதுமான மயில் என்னும் பறவையை வலிவாகச் செலுத்தி, யானை, தேர், குதிரை, காலாட் படை ஆகிய நால்வகைச் சேனைகளுடன் போர் செய்த பெருமாளே. 
முருகனின் வாகனமான மயிலின் சிறப்பை உணர்த்தி அதனை திருமாலுடன் ஒப்பிடும் பாடல் இது.

பாடல் 1094 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தனதனன தனதனன தனதனன     தனதனன தனதனன ...... தனதான

குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு     குமுதமிடு பரசமய ...... மொருகோடி 
குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது     கொடியஇரு வினையெனும ...... ளறுபோக 
உதறிவித றியகரண மரணமற விரணமற     வுருகியுரை பருகியநு ...... தினஞான 
உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத     யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே 
சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை     சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் 
செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக     திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் 
கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை     யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

சிதறுண்டு நெறி தவறிய ஆழமில்லாத சிற்றறிவைக் கொண்டு, கொதித்துப் பேசியும், எதிர்க் கூச்சலிட்டும் மிக்க பேரொலியை எழுப்புகின்ற பர சமயங்களைப் பற்றிய ஒரு கோடிக் கணக்கான குருடர்களுக்கும் தெரிவதற்கு அரிதான ஒப்பற்ற பொருளை நான் தெரிந்து கொள்ளுமாறு ஓடிக்கொண்டே இருக்கும் மனம், பொல்லாத நல் வினை, தீ வினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி, உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், (மேற்சொன்ன) மனம் உருகி உனது புகழைப் பாடி அனுபவித்து நாள்தோறும் ஞான உணர்ச்சி கொண்ட கண்களைப் பெற, உன்னுடைய கஸ்தூரி மணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடி இணையை இனி நான் உணர்ந்து உய்ய அருள் புரிவாயாக. கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற யுக முடிவான அந்தக் கடைசி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, (போரின்) இறுதியில் ஆகாய உச்சியில் ஓடுகின்ற தோகைப் பட்சியான மயிலைச் செலுத்தி, (இவ்வாறாக) அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால் வகைச் சேனைகளுடன் சண்டை செய்த பெருமாளே. 

பாடல் 1095 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தனதனன தனதனன தனதனன     தனதனன தனதனன ...... தனதான

வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென     வயிரமர கதமகர ...... மளவாக 
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி     வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய 
இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி     எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா 
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன     திருநயன கருணைசிறி ...... தருள்வாயே 
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை     பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப் 
பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை     பரியதனி யெயிறுகொடு ...... குருநாடர் 
கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய     கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

வதைக்கும் தொழிலில் பழகிய அந்த யமனும், வெற்றி வாய்ந்த மன்மதனும் (நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில் வைரத்தாலும் மரகதத்தாலும் செய்யப்பட்ட, மகரமீன் போன்ற அளவில் உள்ள, குண்டலங்கள் உடைய காதின் அளவுக்கு நீண்டு, ரேகைகள் பரவிய, விஷத்தைக் கொண்டதாக வளர்ந்துள்ள, காமப்போருக்குச் சித்தமான இரண்டு விழிகளைக் கொண்டு வளைத்து இளைஞர்களின் உயிரைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரிகளும், தங்கள் இதயத்தின் எண்ணத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து, எடுத்த பிறவிக்கு உள்ள நெறியை விட்டு, இதிலிருந்து வெளியேறும் வழியைக் காணாது வேதனைகள் படுகின்ற குருடனாகிய என்னை அடிமை கொள்வதற்கு, மகிழ்ச்சியோடு உன்னிரு கண்கொண்டு கடாட்சித்து கருணை சிறிது அருள் புரிவாயாக. இரு திருவடிகளை மலர் கொண்டு பூஜித்துத் தொழுது, மாசில்லாத பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய அளித்து, வாழை, மா, பலா ஆகிய பழங்களை இனிய மனத்துடன் நிவேதித்து, வியாச முநிவர் சொல்லிவர, வடக்கே உள்ள மேருமலையின் மீது, பருத்த ஒற்றைக் கொம்பைக் கொண்டு, குரு நாட்டவர்களான பாண்டவர்களின் சரித்திரம் முழுதும் எழுதிய ஒப்பற்ற யானை கணபதி பிளிறிடும்படியாக*, நீண்ட கடலால் சூழப்பட்ட உலகத்தை ஒரு நொடியில் வலம் வந்த, அதிக வேகத்தைக் கொண்ட, தோகைப் பட்சியாம் மயிலைச் செலுத்தி, அசுரர்களின் யானை, தேர், குதிரை, காலாட்படை ஆகிய நாற்படைகளுடன் போர் புரிந்த பெருமாளே. 
* உலகெல்லாம் சுற்றி வரும் முருகனின் மயிலின் வேகத்தைக் கண்டு விநாயக யானை அஞ்சிப் பிளறினதாகக் கூறப்பட்டுள்ளது.

பாடல் 1096 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தனதனன தனதனன தனதனன     தனதனன தனதனன ...... தனதான

விடமளவி யரிபரவு விழிகுவிய மொழிபதற     விதறிவளை கலகலென ...... அநுராகம் 
விளையம்ருக மதமகுள முலைபுளக மெழநுதலில்     வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை 
அடரளக மவிழஅணி துகிலகல அமுதுபொதி     யிதழ்பருகி யுருகியரி ...... வையரோடே 
அமளிமிசை யமளிபட விரகசல தியில்முழுகி     யவசமுறு கினுமடிகள் ...... மறவேனே 
உடலுமுய லகன்முதுகு நெறுநெறென எழுதிமிர     வுரகர்பில முடியவொரு ...... பதமோடி 
உருவமுது ககனமுக டிடியமதி முடிபெயர     வுயரவகி லபுவனம ...... திரவீசிக் 
கடககர தலமிலக நடனமிடு மிறைவர்மகிழ்     கருதரிய விதமொடழ ...... குடனாடுங் 
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.

விஷம் கலந்ததாய், ரேகைகள் பரவினதாய் உள்ள கண்கள் குவிய, பேச்சு பதற, அசைவுற்று வளையல்கள் கல கல் என்று ஒலிக்க, காம ஆசை உண்டாக, கஸ்தூரி அணிந்ததும், அரும்பு போன்றதுமான மார்பகத்தில் புளகம் உண்டாக, நெற்றியில் வியர்வை வர, அணிகலன்கள் சிதற, (தேன் நிறைந்த) மலர் மாலை நெருங்கியுள்ள கூந்தல் அவிழ்ந்து விழ, அணிந்துள்ள ஆடை விலக, அமுதம் பொதிந்துள்ள வாயிதழ் ஊறலை உண்டு விலைமாதர்களுடன் படுக்கையின் மீது ஆரவாரங்கள் உண்டாக காமக் கடலில் முழுகி பரவசம் அடையினும் உனது திருவடிகளை மறக்க மாட்டேன். கோபத்துடன் வந்த முயலகன்* என்னும் பூதத்தின முதுகு நெறு நெறு என்று முறிய, இருள் பரந்த நாக லோகமும் பாதாள முழுதும் ஒப்பற்ற அடி ஓடி உருவவும், பழமையான ஆகாயத்தின் உச்சி இடியவும், சந்திரனின் முடி நகரவும், (நடனத்தின் போது) உயரும் போது, சகல உலகங்களும் அதிர்ச்சி உறவும், வீசி கங்கணம் அணிந்த கைகள் விளங்க நடனம் செய்யும் சிவபெருமான் மகிழும்படியான அழகுடன், எண்ணுதற்கரிய வகையில் எழிலுடன் ஆடுகின்ற தோகைப் பட்சியாகிய மயிலை நடத்தி, அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படையுடன் போர் செய்த பெருமாளே. 
* தாருக வனத்து முனிவர்கள் சிவனை வெறுத்து வேள்வி செய்தனர். பலி ஏற்க சிவன் அங்கு சென்றபோது, முனிவர்களின் மங்கையர் அவர் அழகைக் கண்டு மோகம் கொண்டனர். முனிவர்கள் கோபம் கொண்டு சிவனைக் கொல்ல ஒரு கொடிய வேள்வியை ஆற்றினர். வேள்வியில் ஒரு புலி எழுந்தது. புலியைக் கொன்று அதன் தோலை உடுத்துக் கொண்டார். வேள்வியிலிருந்து பின் மழு, மான், அரவம், பூதங்கள், வெண்டலை, துடி, முயலகன் என்ற பூதம், தீ இவைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. சிவன் முயலகனைத் தள்ளி மிதித்து நடனம் ஆடினார் .. சிவபுராணம்.

பாடல் 1097 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கரஹரப்ரியா தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதனன தானதத்த தனதனன தானதத்த     தனதனன தானதத்த ...... தனதான

எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து     இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை 
எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து     இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் 
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து     இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் 
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு     இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே 
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற     மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி 
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர     மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே 
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு     அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா 
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.

ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே, நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு, துன்பம் என்ற முளைகள் முளைக்க வளர்ந்து, பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து, காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு, அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி, கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட்டு, இறப்பு என்னும் பழம் பழுத்து, கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின் அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக, (உடல் என்னும் நிழல் தரும் மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே இனிமைதரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக. தவறான வழியையே பேசிய தக்ஷன் அமைத்த யாகசாலைக்குச் சென்ற சந்திரன், சூரியன், தேவர்கள், வஜ்ராயுதப் படையாளியான இந்திரன், திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமன், சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால், இவர்களின் பராக்கிரமம் மறைந்தொடுங்க, அவர்களை எதிர்த்து அடக்கிய வீர உக்ர மூர்த்தியாம் சிவபிரானின் மகனே, அழகான தோகைக் கூட்டத்தை உடைய எழிலான மயிலின் மீதேறி, எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு வலம் வந்த வேலனே, வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை வெட்டி அழித்து, தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு செய்த பெருமாளே. 
* ஆதபத்தி என்றால் குடை.

பாடல் 1098 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தானதத்த தனதனன தானதத்த     தனதனன தானதத்த ...... தனதான

நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்     நயனமத னால்மருட்டி ...... வருவாரை 
நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று     லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி 
வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி     மதனனுடை யாகமத்தி ...... னடைவாக 
மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்     வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ 
இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க     இருகையுற வேபிடித்து ...... உரலோடே 
இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண     னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா 
அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு     அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா 
அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.

நடையாலும், அணிந்த உடையாலும் தமது அருமையைக் காட்டி நீண்ட ஒரு தெரு வீதியிலே உலாவி, வரும் ஆடவர்களைக் கண்களால் மயக்கி, அவர்களை அணுகி காம ஆசையை மூட்டி, மார்பகங்களை விலை பேசி விற்று, நைச்சியமான வழியில் இன்முகம் காட்டி நடித்து, பலவிதமான உறவுமுறைகளைக் கூறிக் கொண்டாடி, அழகு மிக்க வீட்டுக்கு அழைத்துச் சென்று, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மன்மதனுடைய சாஸ்திரத்தின் முறைப்படி பொருந்திக் கலந்து, உள்ளத்தை உருக்கி, கையில் உள்ள பொருளைக் கவரும் விலைமாதர்களின் மீது காம ஆசை பிடித்து நான் திரியலாமோ? இடையர்கள் வீட்டில் நாள் தோறும் உறியில் உள்ள தயிரும், நெய்யும், பாலும் குடிக்க, (தண்டிப்பதற்காக கண்ணனுடைய) இரண்டு கைகளையும் பிடித்து உரலுடன் சேர்த்து யசோதை அழுத்தமாகக் கட்ட, அப்போது அழுத கோபால க்ருஷ்ணனின் மிகுந்த அன்புக்கு உரிய மருகனே, குறப் பெண் வள்ளியின் மணவாளனே, வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினை பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (சம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலனே, அசுரர் குலத்தை வேரோடு அறுத்து ஒழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமாளே. 

பாடல் 1099 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனன தானதத்த தனதனன தானதத்த     தனதனன தானதத்த ...... தனதான

மடலவிழ்ச ரோருகத்து முகிழ்நகையி லேவளைத்து     மதசுகப்ர தாபசித்ர ...... முலையாலே 
மலரமளி மீதணைத்து விளையுமமு தாதரத்தை     மனமகிழ வேயளித்து ...... மறவாதே 
உடலுயிர தாயிருக்க உனதெனதெ னாமறிக்கை     ஒருபொழுதொ ணாதுசற்று ...... மெனவேதான் 
உரைசெய்மட வாரளித்த கலவிதரு தோதகத்தை     யொழியவொரு போதகத்தை ...... யருள்வாயே 
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம     சரணயுக மாயனுக்கு ...... மருகோனே 
சரவணமி லேயுதித்த குமரமுரு கேசசக்ர     சயிலம்வல மாய்நடத்து ...... மயில்வீரா 
அடல்மருவு வேல்கரத்தி லழகுபெற வேயிருத்தும்     அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே 
அசுரர்குல வேரைவெட்டி அபயமென வோலமிட்ட     அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே.

இதழ்கள் விரிந்த தாமரை போன்ற வாயினின்று அரும்புகின்ற புன்சிரிப்பால் (மனத்தைக்) கவர்ந்து, மன்மதன் எழுப்பும் இன்ப நிலைக்குப் பேர் பெற்ற அழகிய மார்பினால் மலர்கள் விரித்த படுக்கையின் மேல் அணைத்து, (அச்சமயத்தில்) உண்டாகும் அமுதம் போன்ற வாயிதழ் ஊறலை மனமகிழ்ச்சியுடனே மறவாமல் தந்து, உடலும் உயிரும் ஒன்றுபட்டு இருக்க உன்னுடையது, என்னுடையது என்னும் வேற்றுமை ஒரு போதும் கொஞ்சமேனும் கூடாது என்று அழுத்தமாகப் பேசும், விலைமாதர்கள் தரும் புணர்ச்சியால் வரும் வருத்தங்களை ஒழிக்க வல்ல ஓர் உபதேச மொழியை அருள்வாயாக. விசாலமான மகுடங்களைக் கொண்ட, நாக ரத்தினம் உள்ள (காளிங்கன் என்னும் பாம்பின்) படம் நெகிழ்வு உற நடனமாடிய தாமரை அன்ன இரண்டு திருவடிகளை உடைய திருமாலுக்கு மருகோனே, சரவணப் பொய்கையில் அவதரித்த குமரனே, முருகேசனே, சக்ரவாள கிரியை வலம் வரும்படிச் செலுத்திய மயில் வீரனே, வெற்றி பொருந்திய வேலாயுதத்தைத் திருக் கையில் அழகு விளங்க வைத்திருக்கும் ஆறு முகனே, மெய்ஞ் ஞான உண்மை வழியில் காணக் கிடைக்கும் செல்வமே, அசுரர் குலத்தவர்களை வேருடன் வெட்டி அழித்து, நீயே அடைக்கலம் என்று ஓலமிட்ட தேவர்களைச் சிறையிலிருந்து மீள்வித்த பெருமாளே. 

பாடல் 1100 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்     தந்தனந் தந்தனந் ...... தனதான

அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்     சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா 
அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்     தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ் 
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்     சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார் 
தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்     தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ 
கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்     கங்களுங் திங்களுங் ...... கழுநீருங் 
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்     கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர் 
பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்     பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா 
பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்     பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே.

(நான்) வசை கூறுபவன், கொடியவன், தகுதி இல்லாதவன், அன்பு எழுகின்ற உள்ளம் இல்லாதவன், துன்பத்துக்கு ஈடானவன், புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய உடலை எந்நாளும் சுமந்து, எங்கும் திரிதலுற்று, உணவைத் தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடிய முரடன், ஆண்மை இல்லாதவன், மிக்க மனக் கவலை கொண்டவன், சிவந்த வாயிதழை உடைய விலைமாதர்களின் பணியாளன், குற்றம் உள்ளவன், உன்னைப் பணிந்து எப்போது உன்னுடைய தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளைப் புகழ்வேனோ? கங்கை நதியும், பொங்கி எழும் விஷம் பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும், தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும் நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த சடையை உடைய சிவபெருமானது இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதி தேவி ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் ஞானசம்பந்த மூர்த்தியே, கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்கு நமனாய்த் திகழ்ந்தவனே, கலை வல்லவன், கந்த பிரான் என்று விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, பண்பும் உனது நட்பும் பெற்றுக் களிக்கும் பெருமாளே.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.