LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1101 -1150]

பாடல் 1101 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
     தந்தனந் தந்தனந் ...... தனதான
தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்
     தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி 
தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்
     தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி 
நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்
     சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம் 
நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்
     தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ 
சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்
     தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி 
தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்
     பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர் 
அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்
     தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி 
அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்
     றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே.
கோரப் பற்களையும், துன்பத்தை ஊட்டும் கொடிய மனத்தையும் உடையவனாகிய யமன் சினத்துடன் எழுந்து நெருங்கி வர, அப்போது ஒடுங்கி நீங்கிவிடும் உயிர் (என்ற யாக்கையின் நிலையாமையைத் தெரிந்தும் கூட) பொது மகளிரிடம் அடைக்கலம் நீயே என்றும், அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதர்களின் இனிய மொழிகளின் சூதைத் தெரிந்த அன்றும், அதன் பிறகு கூட எப்போதும், அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி, (இறைவா,) உன் மீது அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல், இதுதான் நல்லது என்று நினைத்து, மனதில் அன்பு ஒன்றுமே இல்லாத மாதர்களின் நட்பை நிலையாக என் கருத்தில் கொண்டு துன்பப்படுகின்ற மன நோய் அதிகரிக்க, உண்மையான சுகம் என்பதே இல்லாமல் இந்த உலகில் அலைவேனோ? சுந்தர மூர்த்தி நாயனாரின் உலக பாசம் நீங்க, பரிவுடன் வந்து நான் இவனது அடிமை என்று முன்பொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும், தும்பை மலர், செம் பொன் இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றைமலர், உயிர்களின் வினையைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன் வற்றாத கங்கை நதி, அழகு மிக்கு விளங்கும் சந்திரன், நறு மணம் மிக்குள்ள மருக்கொழுந்து, (இவைகளை) பழங்கால முதல் இப்போதும் அணிந்த சடையை உடைய அன்பு நிறைந்தவருமான சிவபெருமானுடைய மனம் குளிர இனிய சொற்களைப் பேசுபவனாகிய கந்த சுவாமி என்று தேவர்களும் அண்டங்களும் வணங்கிப் போற்றுபவனாகிய பெருமாளே. 
பாடல் 1102 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
     தந்தனா தனதனந் ...... தனதான
உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்
     டுண்டுமே கலைகழன் ...... றயலாக 
உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்
     பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே 
செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்
     சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத் 
திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்
     சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன் 
கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்
     கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக் 
கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்
     கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா 
அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்
     றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள 
அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்
     தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
தேவர்கள் (உண்ணும்) அமுதம் போன்றதும், கொவ்வைப் பழம் போலச் சிவந்ததுமான வாயிதழ் ஊறலாகிய அமுதத்தை மேலும் மேலும் பருகி, இடையணி கழன்று வேறுபட்டு விலகி விழ, கொப்பூழ் குளத்தில் விழுந்து சுகமாக முழுகி, அன்பு என்பதே இல்லாத பொது மகளிரோடு கலந்து சோர்வுற்று படுக்கையின் மேல், செம்பொன்னால் ஆகிய குடம் போன்ற மார்பின் மீதுள்ள ஆபரணங்கள் இடம் பெயர்ந்து விழ, ஒளி நிறைந்த கண்கள் செந்நிறம் கொண்டு கலக்கமுற, மதி போன்ற முகம் வேர்வை கொள்ளும்படியாகத் தழுவி, இன்பக் கடலிலே விழுந்து அமிழும் எண்ணம் உடையவனாகிய நான் என்ன விதமாக நற்கதியை அடைவேன்? தந்தங்கள் நான்கினைக் கொண்டதும்* வெண்ணிறமான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன், இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம் போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன் பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும், தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே, கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும், மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள் அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும், அங்கங்களைக் கொண்ட நாலு வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே. 
* ஐராவதம் என்னும் யானைக்கு நான்கு தந்தங்கள்.
பாடல் 1103 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
     தந்தனா தனதனந் ...... தனதான
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
     பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர 
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்
     தந்தமா மதனலம் ...... விதமாக 
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்
     டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம் 
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
     துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே 
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்
     பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு 
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்
     தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே 
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்
     தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன் 
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்
     டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.
வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில் வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்கள் சிதறுண்டு விழ, அணிந்துள்ள ஆடை நெகிழ, புதுமை வாய்ந்ததும், கனியின் சுவை கொண்டதும் ஆகிய வாயூறலைப் பருகுகின்ற அந்த சிறந்த மன்மத லீலையின் இன்பம் பலவிதத்திலும் வெளிவர, இருவர் உடல்களும் சோர்வடைந்து, அன்றில் பறவை போல இருவர் உள்ளமும் நன்றாக ஒன்றுபட்டு, காம நுகர்ச்சியை நிரம்பத் தருகின்ற இளமை வாய்ந்த மார்பகங்களை உடைய மாதர்களுடன் ஊடாடுவதை விட்டு, உன்னை நினைந்து உருக, எனக்கு என்று அருள் புரிவாய்? முன்பு பூமியை (திரிவிக்கிரமனாக) அளந்தவரும், பூமியை (கண்ணனாக) உண்டவருமான திருமாலின் மருகனே, செவ்விய பசுமையான சிறந்த பொன்னுலகத்தில் இந்திரனின் செல்வமும், அழகுச் சிறப்புக்கள் எல்லாமும் நிறைந்திருக்கும் மேலெழுந்து விளங்கும் தேவயானையை மணந்து, அன்புடனே ஒன்றுபட்ட மனத்தினனாக அமர்ந்து வீற்றிருப்போனே, தேவர்கள் மிக்க பயம் கொண்டு வாட்டம் அடையும்படி பெரிய தண்டாயுதம், வாள் இவைகளுடன் வந்த சூரனுடைய உடலைப் பிளந்து, எங்கும் கூச்சல் எழும்படி கோபித்து, அழகிய திருக்கையில் இருந்த வேல் சென்று தாக்கும்படியாகச் செலுத்தின பெருமாளே. 
பாடல் 1104 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானனா தந்தனந் தானனா தந்தனந்
     தானனா தந்தனந் ...... தனதான
காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்
     காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண் 
காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்
     காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும் 
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்
     தோநமோ கந்தஎன் ...... றுரையாதே 
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்
     றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ 
தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்
     தாரம்வா சந்திசந் ...... தனநீடு 
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்
     தானமா தெங்கள்பைம் ...... புனமேவும் 
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்
     சேகரா தண்டையங் ...... கழல்பேணித் 
தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்
     தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே.
காம ஆசையை எழுப்பும் மாதர்களின் மார்பகங்கள் அலங்கார மலைகள் என்றும், வாய் செவ்விய (கொவ்வைக்) கனி என்றும், கண்கள் ஆலகால விஷம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு என்றும், வண்டினங்கள் வாழும் கூந்தல் மேகம் என்றும், செவ்விய சொற்கள் இனிக்கும் வெல்லம், தேன் என்றும் (உவமைகள் சொல்லி) சோர்வடைந்து, ஓம் நமோ கந்தா என்று கூறாமல், அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்கள் செல்லும் வழியிலேயே போய் அவ்வழியையே கடைப்பிடித்து அலைச்சல் ஓய்வுறும் படியான ஒரு வழியையும் என் உள்ளம் எண்ணாதோ? தாதகி, சண்பகம், கமுகு, சரக் கொன்றை, நறுமணமுள்ள மந்தாரம், குருக்கத்தி, சந்தனம் இவைகள் நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளி மலையில், கொடிய கோபத்தை உடைய, வில்லை ஏந்திய, வேடர்கள் வம்சத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளி எங்களுக்கு உகந்தவளாய் பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்யும் குற்றமே இல்லாத வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் படுகின்ற தலையை உடையவனே, பார்வதி தேவியின் ஒரு பாகத்தில் பொருந்தி உள்ள பழம்பொருளான சிவபெருமான் உனது தண்டையும் அழகிய கழலும் அணிந்த திருவடியை விரும்பித் தொழுத குரு மூர்த்தியே, தேவர்களுடைய பெருமாளே. 
பாடல் 1105 - பொதுப்பாடல்கள்
ராகம் - ..... ; தாளம் -
தானனா தத்தனத் தானனா தத்தனத்
     தானனா தத்தனத் ...... தனதான
கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்
     கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற் 
கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்
     கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான் 
சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்
     த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ் 
சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்
     கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ 
ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்
     தாரவா ரக்கடற் ...... கிடைசாயும் 
ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்
     டாதரூ பத்தினிற் ...... சுடராய 
காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்
     காகவே ளைப்புகக் ...... கழுநீராற் 
காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்
     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.
வீண் ஆடம்பரங்கள் செய்யாமல் ஆசு கவிகள் பாடவும், கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைக் கவிகள் பாடவும்*, காக்கைக் கூட்டங்கள் போலக் கூச்சலிடும் வாதத்தில் கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கும்பலை வெல்வேன் என்று கீர்த்தியைக் கூறும் பெரு மழை போலக் கவிகள் பாடவும் வல்ல புலவன் நான். நியதியுடன் உரிய காலத்தில் பெய்யும் மேகம் என்றும், பாரிஜாத தெய்வ மரம் என்றும், கொடையில் மேரு மலை என்றும் (பரிசு பெறுவோர்கள்) போற்றுகின்ற திருமால் போன்றவனே, (உன் மீது) நான் சித்திரக் கவி, வித்தாரக் கவி* பாட, நீ கேட்பாயாக என்றெல்லாம் நான் (செல்வந்தர்களிடம்) நின்று காத்திருத்தலை ஒழிவேனோ? ஆலகால விஷத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேஷன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், சக்ராயுதம் ஏந்தியவனுமான திருமாலுக்கும், நல்ல சாம வேதம் முதலான வேதத் தாமரையின் மேல் வீற்றிருக்கும் பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவான, காலகாலனான பிரபுவாகிய சிவ பெருமான் மிகுதியான ஆசை கொண்டு பார்வதியை மணக்கும் பொருட்டு, தக்க சமயத்தில் செங்கழு நீர் மலர் என்ற ஐந்தாவது பாணமாகிய நீலோற்பலம் என்னும் பாணம் கொண்டு (சிவபிரானைத்) தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், பெருமை வாய்ந்த மீன் கொடியைக் கொண்டவனுமாகிய மன்மதனுடைய மைத்துனனாகிய** பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.96 வகைப் ப்ரபந்தங்களுள் கொடிக்கவி, கோவை இரு வகை.** மன்மதன் வள்ளி ஆகியோர் திருமாலின் மக்கள். வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.
பாடல் 1106 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானனா தத்தனத் தானனா தத்தனத்
     தானனா தத்தனத் ...... தனதான
ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்
     தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம் 
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்
     டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே 
நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்
     டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா 
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்
     றோதநீ திப்பொருட் ...... டரவேணும் 
கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்
     தானும்வே தக்குலத் ...... தயனாருங் 
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்
     போதுறா நிற்பஅக் ...... கொடிதான 
காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்
     கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக் 
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.
உலகத்துடனே ஒத்து வாழுங்கள் மக்களே என்னும் நல்ல உபதேசத்தை கெட்டது என்று கருதி, நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் பேச்சின் ஒலியும், அவர்கள் சொன்ன புத்திமதியின் உண்மைக் கருத்தும் பின்னிட்டு ஓடும்படித் (தங்கள் கூச்சலில் அடங்க) அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் அவர்கள் வாதுக்குத் தோற்றுப் போகாமல், நீல உருவம் விளங்கும், அடர்ந்த பீலிகளை உடைய, மயிலின் மேல் ஏறி, கொடுமையாளனான சூரன் அழிந்து சிதறும்படி சண்டை செய்யும் வேலனே, அன்புடன் நாள் தோறும் உனது திருவடிகளை நெடுநேரம் அஞ்சுதல் இல்லாமல் போற்றுதற்கு உரிய தர்ம சாஸ்திரப் பொருளை நீ எனக்குத் தர வேண்டும். அழகிய கடலின் மத்தியில் கோபம் நிறைந்த ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்துள்ள திருமாலும், வேதம் ஓதும் குலத்துப் பிரமனும், புகழப்படுகின்ற வானத்திலும் பூமியிலும் உள்ளோருக்கு கெடுதல் வரா வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் படும்படி உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும், ஒவ்வொரு கற்பு வாய்ந்த பெண்ணுடன் (முறையே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என்ற பெண்களுடன்) கூடி ஆசைக் கடலின் இடையே முழுகும்படி, நீலோற்பலத்தின் கொத்தான மலர்ப் பாணத்தை எய்த வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனப்* பெருமாளே. 
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.
பாடல் 1107 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனா தனதனந் தனதனா தனதனந்
     தனதனா தனதனந் ...... தனதான
கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்
     களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங் 
கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங்
     கமலநா பியின்முயங் ...... கியவாழ்வும் 
அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்
     பநல்மகோ ததிநலம் ...... பெறுமாறும் 
அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்
     சரமனோ லயசுகந் ...... தருவாயே 
பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்
     படர்பகீ ரதிவிதம் ...... பெறஆடல் 
பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம்
     பனிநிலா வுமிழுமம் ...... புலிதாளி 
குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்
     குடிலவே ணியிலணிந் ...... தவராகங் 
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
     குமரனே யமரர்தம் ...... பெருமாளே.
வஞ்சக எண்ணம் கொண்ட விலைமாதர்களின் குங்குமச் செஞ்சாந்து அணிந்த, பாலைத் தரிப்பதான, மார்பகங்கள் மீது நீங்காமல் தூங்கும் இன்பமும், வளையல்கள் ஒலிக்கும் அல்லிமலர்க் கையில் உள்ள நகத்தின் கீறல் உடல் முழுவதும் படச் செய்து காம தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இன்பமும், தாமரை போன்ற உந்தியில் அணையும் வாழ்வாகிய இன்பமும், ஒரு பாம்பு சுற்றிக்கொள்வதைப் போல அவர்களது நுண்ணிய இடையைச் சுற்றிப் படிந்து காம இன்பத்தை அனுபவித்து இரவு முழுமையும் மூழ்குகின்ற மகிழ்ச்சியைத் தரும் இனிய பெருங் கடலின் சுகத்தைப் பெறுகின்ற வழியான இன்பமும், வாயிதழைப் பருகி அதில் கிடைத்து அனுபவிக்கும் இன்பமும், (இவை யாவும்) என்னை விட்டு அகல, மெளனம் என்னும் கூண்டில் இருப்பதால் சித்திக்கும் மன ஒடுக்கம் என்னும் சுக நிலையைத் தருவாயாக. பரந்து செல்லும் ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை, வித விதமான ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம், குளிர்ந்த ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன், அருகம் புல், குராமலர், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி (இவைகளைத் தமது) நீண்டு வளைந்துள்ள சடையில் அணிந்த சிவபெருமானின் உடலம் குழையும்படி அன்புடனே தழுவிய பார்வதி நாயகி பெற்றருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1108 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனா தனதனந் தனதனா தனதனந்
     தனதனா தனதனந் ...... தனதான
வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்
     தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம் 
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்
     தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர் 
துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்
     தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே 
தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்
     துனதுதாள் தொழமனந் ...... தருவாயே 
படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்
     கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப் 
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்
     டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக் 
கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்
     குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி 
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்
     குமரனே யமரர்தம் ...... பெருமாளே.
ஒளி வீசும் வேலாயுதத்தைப் போட்டியிட்டுக் கோபித்து இளைஞரது உயிரைச் சூழ்ந்து போர் செய்யும் வாள் போன்ற கண்களை உடையவர்களாய், உள்ளத்தில் வஞ்சனை எண்ணம் உண்டாகிப் பெருக, ஆசை மிக்கவர்கள் போல நடித்து, அளவளாவிப் பேசி வந்து, நெருங்கி பெரிய செல்வத்தைக் கைப்பற்றும் விலைமாதர்களின் உடுக்கை போன்ற இடை மார்பகங்களின் கனத்தினால் நெகிழ்ச்சி உறவே, தூங்குவதற்குப் பொருந்தியுள்ள படுக்கையில் சேர்க்கையில் ஈடுபடும் அவ்வேசையர்களின் வசத்தில் மனக் கலக்கம் அடையாமல், அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை அறிந்துகொண்டு வீணானது இன்னதெனத் தெரிந்து உனது திருவடிகளை வணங்க மனப் பக்குவத்தைத் தந்து அருளுக. உலகம் முழுதும் பரவி நின்று அருள் புரிகின்ற திருமால் பெற்ற பிரமனும், நான்கு வேதங்களும், தேவர்களும வாழும்பொருட்டு, பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு, பெரிய நடனத்தை பேய்களுடன் ஆடி, நெருப்பைக் கையில் ஏந்தி, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, கொடுமை வாய்ந்த ஒளி விடும் பாம்பு, இளம் பிறையுடன், அலை வீசும் கங்கை நீர், குவளை மலர் (இவைகள் சேர்ந்துள்ள) சடையர் ஆகிய சிவபெருமானுடைய அழகிய உடல் குழையும்படி அன்புடன் தழுவுகின்ற பார்வதி தேவி பெற்று அருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1109 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்ததன தானான தத்ததன தானான
     தத்ததன தானான ...... தனதான
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
     கட்டுவிடு மோர்கால ...... மளவாவே 
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
     கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன் 
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
     யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன் 
எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
     இட்டமினி தோடார ...... நினைவாயே 
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
     தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத் 
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
     சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே 
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
     மத்தமயில் மீதேறி ...... வருநாளை 
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
துன்பத்தைத் தருகின்ற வியாதிகளும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல் உலக மாயையின் பந்தத்தை விடுகின்ற, உயிர் போகும் சமயத்தைத் தெரிந்துகொண்டு, சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்பு நெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக பெரிய யமன் அனுப்பின ஒப்பற்ற தூதுவர்களும் தாக்க, வினைகளால் மூடப்பட்டு விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக, உன்னைப் போற்றி தினமும் இயல், இசை, நாடகம் என்ற மூவகைப்பட்டத் தமிழால் நான் துதிக்க, விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக நீ நினைந்தருள்வாயாக. பொல்லாதவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வேதனை உற்றுக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்கள் தோல் கொண்ட, அகன்ற மார்பில் தொளை படும்படிச் செலுத்திய கூர்மையான வேல் வீரனே, ஊழிக்கூத்து செய்யும் சிவபெருமானுடைய பாலனே, பிழையற்ற தமிழை நன்கு அறிந்த ஞானமுள்ள முருகனே, நறு மணம் கொண்ட தாமரையில் வீற்றிருக்கும் நான்கு வேதங்களை ஓதும் பிரமனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் அமையும்படி செறுக்குற்ற மயிலின் மேல் நீ ஏறி வரும் நாளில், சேமித்து வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழ வைத்த கருணைத்திறம் நீங்காத பெருமாளே. 
பாடல் 1110 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்ததன தானான தத்ததன தானான
     தத்ததன தானான ...... தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
     பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான 
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
     பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற் 
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
     பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன் 
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
     புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே 
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
     எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே 
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
     எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா 
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
     மத்தமயில் மீதேறி ...... வருவோனே 
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
பக்கத்தில் சூழ்ந்து நிற்கும் நல்லொழுக்கம் நிறைந்த பிள்ளைகளும் மாதர்களும் அன்புடன் உடலின் மேல் மேன்மையான பட்டாடையால் மூடி, மாலையை அணிவித்து நீண்ட ஒரு பாடையைப் பற்றிக் கொண்டு அணைபவர்கள் கூவி அழ, அலை வீசும் நீரில் படிந்து முழுகி, மிஞ்சியிருந்த துக்கமும் நீங்கி விலக, மாற்றார்கள் போல நடந்துகொண்டு, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்ட, உயிர் நீங்கும் முன்பே, உனது அழகிய திருவடியைத் தினமும் உள்ளத்தில் அன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுக. கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அழிந்து போகும்படி திருவுள்ளம் கொண்ட, (சூரிய, சந்திர, அக்கினி என்னும்) மூன்று கண்களை உடைய, மகா தேவராகிய சிவபெருமான், எல்லாப் பொருளும் எவ்விடமும் தாமாகவே நிற்கும் ஈசரின் பெரிய செல்வமே, ஆழம் காண முடியாத, மிகப் பரந்த கடல் வற்றவும், பழைய சூரன் இறந்து படவும், மேற் சென்று எதிரெழுந்த வலிமை வாய்ந்த வேலனே, மக்களும், விண்ணோர்களும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து வர, களிப்பு மிகுந்த மயில் மீது ஏறி நகர்வலம் வருவோனே, சேமித்து வைத்த நிதியைப் போல விரும்பி தினந்தோறும் வந்து தொழும் அடியார்கள் வாழும்படி, அவர்கள் மேல் வைத்த கருணைத் திறம் நீங்காத பெருமாளே. 
பாடல் 1111 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானதன தந்தான தானதன தந்தான
     தானதன தந்தான ...... தனதான
நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி
     நீளமக லஞ்சோதி ...... வடிவான 
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல
     நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச் 
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத
     சோதிமரு வும்பூமி ...... யவையூடே 
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட
     சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே 
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்
     வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல 
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட
     மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே 
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு
     மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா 
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத
     லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.
நீரும் பூமியும் சம்பந்தப்படாது தழைத்து விளங்கும் (நாலிதழ்த் தாமரை ஆகிய மூலாதாரம்,* ஆறிதழ்த் தாமரையாகிய சுவாதிஷ்டானம், பத்து இதழ்த் தாமரையாகிய மணி பூரகம், பன்னிரண்டு இதழ்த் தாமரையாகிய அனாகதம், பதினாறு இதழ்த் தாமரையாகிய விசுத்தி, இரண்டு அல்லது மூன்று இதழ்த் தாமரையாகிய ஆக்ஞை ஆகிய) ஆதாரங்களின் வழியாக (சிவ யோக நெறியில்) படர்ந்து சென்று, நீளம் அகலம் இவை எல்லை அற்று விளங்கும் ஜோதி சொரூபமான, சிவ நேசத்தால் பெறப்படும் சிவமாதினை திருமணம் செய்து கொண்டது போல அந்தச் சிவச்சுடருடன் நேராகப் பொருந்தி, உள்ளத்தில் நீங்காத அன்புடன் இருந்து, சூரியன், சந்திரன் ஆகியவர்களின் ஒளி எட்ட முடியாத பேரொளி பொருந்தும் அந்த ஜோதி மண்டல பூமியில், தோகை உடைய மயிலைச் செலுத்தியவனாகிய முருகன் இவனே என்று நான் மகிழ்ந்து கூத்தாட, உனது ஒளி வீசும் வேலையும் கடப்ப மாலையையும் தந்தருளுக. கடலின் எல்லாப் பகுதிகளும் கூசி நிலை குலையவும், ஆயிரம் படங்களை உடைய ஆதி சேஷன் வாய் பிளந்து வெளிப்பட்டு ஓடவும், (அது அங்ஙனம் ஓடும்) எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்கள் உதிர்வன போல (அப்பாம்பின்) உயர்ந்த ரத்தின மணிகள் உதிர்ந்து சிதறவும், அழகு ததும்பி ஆடுகின்ற சிறந்த மயிலைச் செலுத்தும் சேவல் கொடியை உடையவனே, பிரமனும், அவனுடைய தந்தையாகிய திருமாலும் தேடி நின்று (இன்னமும் காணாது), பாடிப் போற்றும் திரு நடனம் புரிந்த செஞ்சோதியாகிய அண்ணாமலையார் அருளிய பாலனே, யானைமுகனான கணபதி வள்ளி இருக்கும் இடத்தைத் தேடி ஓடியே வந்து நெருங்கும் அளவுக்கு அழகிய காதலாசையை வள்ளியின் மேல் கொண்ட ஜோதி வடிவமான பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 1112 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹிந்தோளம் 
தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2 
தகதிமிதக-3, தகிட-1 1/2 
- எடுப்பு - 3/4 இடம்
தனதனன தானதத்த தனதனன தானதத்த
     தனதனன தானதத்த ...... தனதான
சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
     துக்கமிலா ஞான ...... சுகமேவிச் 
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
     சுத்தநிரா தார ...... வெளிகாண 
மொட்டலர்வா ¡£ச சக்ரசடா தார
     முட்டவுமீ தேறி ...... மதிமீதாய் 
முப்பதுமா றாறு முப்பதும்வே றான
     முத்திரையா மோன ...... மடைவேனோ 
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
     னப்பிரமா வோட ...... வரைசாய 
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
     எத்தனையோ கோடி ...... யசுரேசர் 
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
     பத்திருதோள் வீர ...... தினைகாவல் 
பத்தினிதோள் தோயு முத்தமம றாது
     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.
கையிலுள்ள ஒரு சூடான பொருளை கை எப்படி உதறுகிறதோ, அது போல ஆசைகளை நான் உதறித்தள்ளி, உலக வாழ்வில் ஏற்படும் துயரங்கள் அற்ற ஞான சுக நிலையை நான் அடைந்து, சொல்லுக்கும், மனத்திற்கும் எட்டாது நின்று, குணங்களே இல்லாத, பரிசுத்தமான, சார்பற்றதாக விளங்கும் பர வெளியை நான் கண்டு, மொட்டுக்கள் மலர்ந்த தாமரையாம் ஆறு ஆதார குண்டலினி சக்கரங்கள்* அனைத்திலும், அவற்றைக் கடந்தும் இருப்பதுவும், அமுதைப் பொழியும் சந்திரனுக்கு மேலானதும் ஆன, தொண்ணூற்றாறு** (30+36+30 = 96) தத்துவங்களுக்கும் வேறுபட்டதான அடையாள அறிகுறியாகிய மெளன நிலையை நான் அடைவேனோ? தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும், கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும், அலைகள் வீசும் ஏழு கடல்கள் வற்றிவிடவும், பகைமையோடு வந்த பல கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிபடவும், ஒப்பற்ற சூரன் இறந்து படவும், பராக்கிரமம் நிறைந்த வேலைச் செலுத்திய பன்னிரு தோள் வீரா, தினைப்புனத்தைக் காவல் செய்த கற்புடை நாயகி வள்ளியின் தோள்களைத் தழுவும் உத்தமனே, நிலைத்த மனதுடன் பக்தி செய்து தொழும் தேவர்களின் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
பாடல் 1113 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்ததனா தான தத்ததனா தான
     தத்ததனா தான ...... தனதான
மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு
     மக்களுமா றாத ...... துயர்கூர 
மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ
     வைத்தவர்தா மேக ...... மதிமாய 
நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு
     நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன் 
நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி
     நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே 
நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத
     னற்றவர்தா நாட ...... விடையேறி 
நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு
     நற்றுணைவா ஞால ...... மிகவாழப் 
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக
     பத்தியதா மாறு ...... முகநாளும் 
பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத
     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.
மைத்துனர்களும், சிறந்த மனைவியும், தாயும், குழந்தைகளும் நீங்காத துயரம் மிக அடைய, குறைவில்லாது (நன்கு எரியும்) ஒரு நெருப்பில் இந்த உடம்பையே வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் வீட்டுக்குச் செல்ல, அறிவு கலங்கும்படி உறுதியாக ஒரு நாளைக் குறிப்பிட்டு, (அந்த நாளில் யமன்) தனது தூதர்களை அனுப்பும், பெரும் அளவுக்குப் பட வேண்டிய வேதனைகள் என்னை நெருங்குவதற்கு முன்பாக, மனம் நெகிழ்ந்து உருகி, ஞான நிலையை அடைந்து, உனது திருவடிகளை வணங்கி நாள் தோறும் நான் வாழும் பொருட்டு அருள் புரிவாயாக. விஷம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, ரிஷப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய சிறப்புள்ள புதல்வனே, சூரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல துணைவனே, உலகோர் சிறப்பாக வாழும்படி, பச்சையான ஒளி வீசும் தோகையைக் கொண்ட உடலை உடைய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகனே, வரிசையாயுள்ள ஆறு திருமுகங்களிலும் நாள் தோறும் அன்பு மேற் கொண்டவனே, (சரவணபவ என்ற) ஆறெழுத்துக்கு உரியவனே, உலகெல்லாம் வலம் வந்த திருவடிகளை உடையவனே, உன்னைப் பக்தியுடன் போற்றிப்பணியும் தேவர்களின் பெருமாளே. 
பாடல் 1114 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
     தத்தனத் தத்ததன ...... தனதான
தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு
     சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ் 
சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி
     சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை 
சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு
     தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத் 
துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி
     சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும் 
வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய
     வெற்றிசத் திக்கரக ...... முருகோனே 
வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல
     விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா 
கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்
     கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா 
கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்
     கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே.
கண்ணியில் அகப்பட்ட பறவை தன் சக்தியை இழந்து விட்டது போல், தத்துவச் செயல்களால் அடியேனாகிய நானும் ஒடுங்கி, இந்தப் பூமியில் பதர் போல் பயனற்றவனாக ஆகி தடுமாற்றம் உள்ள பேச்சுக்களைப் பேசி, உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் போதெல்லாம், பரிசுத்தமான வீட்டுப் பேற்றை அடைந்துள்ள சிறந்த பக்தர்களோடு (என்னை) ஒன்று கூட்டிச் சேர்த்து, தயை செய்து கடையவனாகிய எனது வறுமை தொலைய, பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட பாதங்களை உடைய, பச்சை நிறமானதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலை, சுழல்வது போல வேகமாகச் செலுத்தி வந்தருள வேண்டும். ஞானம் பொருந்திய யானை, பவள நிறம் கொண்ட பெரு வயிற்றை உடைய அண்ணல் கணபதிக்குத் தம்பியே, வெற்றி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, கிரெளஞ்ச மலையும் எட்டு திக்குகளும் வட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சுழலும்படிச் செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரனே, தலைவர், நீண்ட சடையை உடையவர், (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முன்று கண்களை உடையவர், (வானமே ஆடையாக உடுத்திய) திகம்பரராகிய கடவுள் காஞ்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே, கற்பக மரமுள்ள தேவநாட்டுக் கிளியாகிய தேவயானைக்கு மனம் உருகியவனே, உன் பதத்தில் ஈடுபட்டு குறவர்கள் வளர்த்த கற்புடைய வள்ளியை அடைந்து, அவளை அணைந்த பெருமாளே. 
பாடல் 1115 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
     தத்தனத் தத்ததன ...... தனதான
மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்
     மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும் 
வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு
     மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும் 
புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது
     பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே 
புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு
     புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே 
செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு
     செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி 
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு
     சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே 
கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை
     கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா 
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது
     குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே.
குழந்தைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் நிறைந்துள்ள சகோதரர்கள், மேலும் உள்ள குரு முதலிய பெரியோர்கள் எல்லோரும், (நான்) சேகரித்து வைத்த செப்புக் காசுகளும், ரத்தினம் முத்தால் ஆன அணிகலன்களும், இவை அளவு நீங்கலாக (என்னுடன் வராது ஒழிய), திரண்டு கூடுகின்ற அடியார்களும், ஒன்றாகப் புகுந்து துக்கம் கொண்டு, நெருப்பு கொழுந்து விட்டு எரிய, (உடலைச் சுடு காட்டில்) வைக்கப் போகின்ற போது, பொய்யான (நிலையில்லாத) இந்த உடலின் பொருட்டு என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல், பூக்களை இட்டுப் பூஜித்து கருணைக்கு இருப்பிடமான உனது திருவடிகளை நான் போற்றும் அறிவை நீ எனக்கு நிரம்பக் கொடுக்கும் ஒரு நாள் ஏற்படுமோ? செந்நிறமுள்ள திரண்ட சடையில் நிரம்ப கொக்கின் இறகையும், இப்பூமியில் வரும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபிரானுக்கு, அவரது மனதில் நன்கு பொருந்தித் தளிவுறுமாறு, மிக மிக நன்றாக விளங்கும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே, மாமரத்தின் உறுப்புகளைக் கொண்டு கரிய கடலாகிய வட்டத்தில் நின்ற சூரனையும் மற்ற அசுரர்களையும் கொத்தைப் போல (ஒரே தடவையில்) அழித்த கூரிய வேலை ஏந்தியவனே, வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை (வேலால்) குத்தியும், (சிலரை) வாளால் வெட்டியும் சண்டை செய்த பெருமாளே. 
பாடல் 1116 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
உற்பா தப்பூ தக்கா யத்தே
     யொத்தோ டித்தத் ...... தியல்காலை 
உட்பூ ரித்தே சற்றே சற்றே
     யுக்கா ரித்தற் ...... புதனேரும் 
அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ
     லப்பா வித்துத் ...... திரிவேனுக் 
கப்பா சத்தா லெட்டா அப்பா
     லைப்போ தத்தைப் ...... புரிவாயே 
பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா
     கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப் 
புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்
     பொட்டா கக்குத் ...... தியவேலா 
முற்பா டப்பா டற்றா ருக்கோர்
     முட்கா டற்கப் ...... பொருளீவாய் 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
கெட்ட சகுனங்களைக் காட்டவல்ல ஐம்பூதங்களால் ஆகிய இந்த உடலைப் போற்றுதற்கு, உடன்பட்டு ஓடி, ஆபத்துக்கள் நேரும்போது உள்ளம் கவலையால் நிரம்பப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, கடவுளிடத்தே உண்டாகும் அன்பு பூண்டவராய் இல்லறத்தைத் தழுவி நிற்கின்ற மக்களைப் போல் ஏமாற்றித் திரிகின்ற எனக்கு, அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல் அப்பாற்பட்டு நிற்கும் ஞான அறிவை உபதேசித்து அருள்வாயாக. அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய் அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, கடலிடைப் புகுந்து, (சூரனுடைய) சூழ்ச்சி நிலையை (மாமரமாக நின்றதை) சமீபித்து, அந்தச் சூரன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலனே, (பொய்யா மொழிப் புலவர்) முன்னதாகப் பாட, அப்பாட்டைக் குற்றமின்றிப் பாடாத அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் பிழை நிலை பெற்றிருப்பதைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவனே*, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 1117 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
எற்றா வற்றா மட்டா கத்தீ
     யிற்காய் செக்கட் ...... பிறைவாளே 
யிற்றார் கைப்பா சத்தே கட்டா
     டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன் 
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா
     ரொட்டோம் விட்டுக் ...... கழியீரென் 
றுற்றோ துற்றே பற்றா நிற்பா
     ரக்கா லத்துக் ...... குறவார்தான் 
பற்றார் மற்றா டைக்கே குத்தா
     பற்றா னப்பிற் ...... களைவோனே 
பச்சே னற்கா னத்தே நிற்பாள்
     பொற்பா தத்திற் ...... பணிவோனே 
முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
     யுற்றார் சித்தத் ...... துறைவோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் மட்டாகும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும், பிறை போல் வளைந்து, வாள் போலக் கூரியதாக உள்ள பற்களை உடையவர்களுமான யம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி, ஆட்டுவித்து, அலைத்துக் கோபித்து (என்னைக்) கொண்டு போவதற்கு முன்பாக, சுற்றத்தாரும், நண்பர்களும், பெற்றோர்களும், சூழ்ந்து நிற்பவர்களும் உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர் என்று சமீபத்தில் இருந்து கொண்டு கூறிக் கூறி அன்பு காட்டி நிற்பார்கள். அந்த உயிர் போகும் சமயத்துக்கு (இறைவனைத் தவிர) வேறு யார்தான் துணையாக நிற்பார்கள்? பகைவர்களுடைய வலிமை மிகுந்த தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிவோனே, பசுமையான தினைப் புனத்தின் கண் (காவல் கொண்டு) நிற்கும் வள்ளியின் அழகிய பாதங்களில் பணிந்து வணங்குபவனே, முற்றி வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் மனத்தில் வீற்றிருப்பவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 1118 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
செட்டா கத்தே னைப்போ லச்சீ
     ரைத்தே டித்திட் ...... பமதாகத் 
திக்கா மற்பா டுற்றா ரிற்சீ
     ருற்றா ருக்குச் ...... சிலபாடல் 
பெட்டா கக்கூ றிப்போ தத்தா
     ரைப்போல் வப்புற் ...... றுழலாதே 
பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்
     சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ 
எட்டா நெட்டா கத்தோ கைக்கே
     புக்கோ லத்திட் ...... டிமையோர்வா 
னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா
     னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா 
முட்டா மற்றா ளைச்சே விப்பார்
     முற்பா வத்தைக் ...... களைவோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
பொறுக்கி எடுத்தாற் போல் சிக்கனமாக, தேன்போல் இனிக்கும் சிறப்புள்ள சொற்களையும், கருத்தையும் நாடி, திண்மையான வாக்கினால் தங்கு தடை இல்லாமல் பாடுதலைக் கொண்டவர்கள் போல, நானும் செல்வம் படைத்தவர்களிடம் சென்று சில பாடல்களை மயக்கம் வல்ல பொய்யான மொழியில் பாடி, ஞான அறிவு கொண்டவர்களைப் போல பாவனை செய்து வீணாகக் காலத்தைப் போக்கித் திரியாமல், என்னைப் பெற்ற தாய் தந்தையரைப் போல அன்பு காட்டித் துணை நிற்பவனே, உனது நல்ல திருவடிளைச் சிறிதளவாவது போற்றும் பாக்கியத்தைப் பெறுவேனோ? நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது பாய்ந்து ஏறி, எங்களைக் காத்தருள்க, அபயம் என்று கூச்சலிட்டு, தேவர்கள் விண்ணிலும், பூமியிலும் உன்னைச் சூழ்ந்து நிற்க, சூரனை அணுகி அவனை வெட்டிச் சண்டை செய்யும் வேலனே, தங்கள் வழிபாட்டில் தடை இன்றி உனது திருவடியைச் சேவிப்பவர்களின் முந்தைய தீவினையை நீக்கி அருள்பவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 1119 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
பட்டா டைக்கே பச்சோ லைக்கா
     துக்கே பத்தித் ...... தனமாகும் 
பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே
     பட்டா சைப்பட் ...... டுறவாடி 
ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே
     சுற்றே முற்றத் ...... தடுமாறும் 
ஒட்டா ரப்பா விக்கே மிக்கா
     முற்றாள் கிட்டத் ...... தகுமோதான் 
கட்டா விப்போ துட்டா விப்பூ
     கக்கா விற்புக் ...... களிபாடுங் 
கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்
     கத்தா சத்தித் ...... தகவோடே 
முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்
     முற்றா மற்கொட் ...... குமரேசா 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
பட்டுப் புடைவைக்கும், பசும்பொன்னிலான தோட்டினை அணிந்துள்ள காதுக்கும், ஒழுங்காக உள்ள அழகிய கும்பங்களைப் போன்ற மார்பகங்களுக்கும், கொடுமையைக் காட்டும் பார்வைக்கும் அகப்பட்டு, (விலைமாதரிடம்) ஆசைப்பட்டு உறவு பூண்டு கலந்து களித்து, ஆகாதவர்கள், நண்பர்கள் முதலிய அனைத்து வட்டாரங்களிலும் பழிப்புக்கு ஆளாகி, அடியோடு தடுமாறுகின்ற, பிடிவாதம் நிறைந்த பாவியாகிய எனக்கு, மேலானதாகிய உனது திருவடி கிடைக்கும்படியான தகுதி உண்டோ? மதுவை நாடி அலைந்து மலர்களின் உள்ளே பாய்ந்து, கமுக மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற சிறந்த முறைமை வாய்ந்த நன்மைகள் நிறைந்த அந்தச் சீகாழித் தலத்தை அடைந்து வீற்றிருக்கும் கர்த்தனே, இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளியின் முன்னே எதிர்ப்பட வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாகி தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பேயே அந்த வள்ளியைக் கவர்ந்து கொண்ட குமரேசனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 1120 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
     வைத்தே பத்திப் ...... படவேயும் 
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
     சற்கா ரத்துக் ...... கிரைதேடி 
எத்தே சத்தோ டித்தே சத்தோ
     டொத்தேய் சப்தத் ...... திலுமோடி 
எய்த்தே நத்தா பற்றா மற்றா
     திற்றே முக்கக் ...... கடவேனோ 
சத்தே முற்றா யத்தா னைச்சூர்
     கற்சா டிக்கற் ...... பணிதேசா 
சட்சோ திப்பூ திப்பா லத்தா
     அக்கோ டற்செச் ...... சையமார்பா 
முத்தா பத்தா ரெட்டா வைப்பா
     வித்தா முத்தர்க் ...... கிறையோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் ரட்டால் = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால்* அமைக்கப்பட்டே ஒழுங்குபடப் பொருந்தி உள்ள, தோல் பை, கிழிபட்டு அழியும் ஒரு சிறு குடிலாகிய இந்த உடல் பாசத்தின் வலிமையால் (அதே உடலைப்) பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி, எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று, இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு, வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் என் தலையில் எழுதியுள்ளதோ? உண்மைப் பொருளே, என்றும் இளமையானவனே, அத்தனைச் சேனைகளோடு கூடி வந்த சூரனையும், கிரெளஞ்ச மலையையும் அழிவு செய்து நீதி நெறியை நிலை நாட்டிய ஒளி பொருந்தியவனே, ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திரு நெற்றிகளை உடையவனே, அந்தக் காந்தள் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த மார்பனே, (மண், பெண், பொன் என்ற) மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப் பொருளே, அறிவிற் சிறந்தவனே, இப்பிறவியிலேயே ஞானம் பெற்றவர்களுக்குத் தலைவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை.96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. திருமுருகாற்றுப்படை.
பாடல் 1121 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே
     பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம் 
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ
     கித்தே கைக்குப் ...... பொருள்தேடித் 
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்
     திக்கோ டிப்பச் ...... சிமமான 
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ
     வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ 
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ
     ரைச்சா ரத்தற் ...... பரமானாய் 
தப்பா முப்பா லைத்தே டித்தே
     சத்தோர் நிற்கத் ...... தகையோடே 
முற்கா னப்பே தைக்கா கப்போய்
     முற்பால் வெற்பிற் ...... கணியானாய் 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
பொன் காசு வரிசைகளுக்காகவும், வேறு பல விதமான வரிசைகளுக்காகவும், நிலையற்ற சிற்றின்ப சுகத்தை விலை பேசுபவர்களுடைய பொய் மொழிகளுக்கும், உடல் அழகுக்கும் காம வெறிகொண்டு, காம இன்பத்தை அநுபவித்துச் செல்வதற்கு வேண்டிய பொருளைத் தேடுவதற்காக, தென் திசையிலுள்ள ஊர்களுக்கு ஓடியும், (வடக்கிலுள்ள) காசி முதலிய ஊர்களுக்கு ஓடியும், கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள ஊர்களுக்கு ஓடியும், (கப்பலேறித்) திரை கடலோடியும், அக்கடலிலுள்ள பல தீவுகளுக்கு ஓடியும் நான் வீணே அழிந்து போகலாமோ? உன்னைத் தியானித்து (தமது) சிந்தையில் வைப்பவர்கள் மேலான நற் கதியை அடைவதற்கு, அவர்கள் வழிபடும் பரம் பொருள் ஆனவனே, தவறாமல் நாள்தோறும், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வாழ்க்கைக் குறிக்கோள்களைத் தேடி வருகின்ற மக்கள் ஒருபக்கத்தில் நிற்க*, அருளுடனே முன்பு காட்டிலிருந்த பெண் வள்ளியின்பொருட்டு நீயே வலியச் சென்று, அவளின் முன்னே வள்ளி மலையில் வேங்கை மரமாக நின்றவனே, முத்துப்போன்ற அருமையானவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரவல்ல பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 1122 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ
     தப்பே சிப்பொற் ...... கனிவாயின் 
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ
     ணைப்பூண் வெற்பிற் ...... றுகில்சாயக் 
கற்பா லெக்கா வுட்கோ லிக்கா
     சுக்கே கைக்குத் ...... திடுமாதர் 
கட்கே பட்டே நெட்டா சைப்பா
     டுற்றே கட்டப் ...... படுவேனோ 
சொற்கோ லத்தே நற்கா லைச்சே
     விப்பார் சித்தத் ...... துறைவோனே 
தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர்
     விக்கா முக்கத் ...... தொடும்வேலா 
முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்
     முத்தாள் முத்தச் ...... சிறியோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
அழகிய நாகண வாய்ப்புள்ளின் சீரான குரலைப் போன்ற குரலுடன், பொருந்தும்படி அழகிய கொவ்வைக் கனி போன்ற வாயினால் செவ்வையாகப் பேசி, நிலையில்லாத சிற்றின்பத்தின் பொருட்டு, (தங்கள்) உடலுக்குத் தக்கதான அந்த ஆபரணங்களை அணிந்துள்ள, மலை போன்ற மார்பகங்ககள் மீது ஆடை சாய்ந்து நெகிழ, ஆணையிட்டுத் தாக்கி, மனத்தில் உள்ள எண்ணங்களை வைத்து கொண்டு, பொருள் வேண்டியே கை கலந்து குத்துச் சண்டை செய்யும் விலைமாதர்களின் கண்களுக்கே வசப்பட்டு, பெரும் ஆசை வினைகளில் ஈடுபட்டு நான் துன்பப்படுவேனோ? சொல் அலங்காரத்துடன், உனது சிறப்புற்ற திருவடிகளைத் தொழுபவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே, தனது உடலை மாமரமாக்கிச் சூழ்ச்சி செய்த அந்தச் சூரன் திண்டாட்டத்தால் வேதனைப்படும்படியாக வேலயுதத்தைச் செலுத்தியவனே, ஆதி காலம் முதல் கயிலைமலையில் அமர்பவரான சிவபெருமானும், முத்தாம்பிகை எனப்படும் தேவியும் முத்தமிட்டு மகிழும் குழந்தையே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, தூய்மையானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 1123 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
     வித்தா ரத்திற் ...... பலகாலும் 
வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
     வித்தா சைச்சொற் ...... களையோதிக் 
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
     ரைப்போ லக்கற் ...... பழியாதுன் 
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
     டற்கே நற்சொற் ...... றருவாயே 
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
     முற்பால் வெற்பிற் ...... புனமானைப் 
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா
     தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே 
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
     வைத்தார் முத்தச் ...... சிறியோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.
இந்த உடல்பசிக்கு உணவை நாடி பூமியில் அதிகமாகப் பல முறையும் நாணம் என்பதே இல்லாமல் பரத்தையர் சேரியில் உள்ள கள்ள மனம் உடைய வேசியரைத் தேடி, ஆசையை அடிப்படையாகக் கொண்ட பேச்சுக்களைப் பேசி, அந்தப் பரத்தையர்களுக்குக் காணிக்கையாகப் பொருள் கொடுக்கும் கோணல் வழியில் செல்லும் அறிவீனரைப் போல நான் ஒழுக்கத்தைக் கைவிடாமல், உன்னுடைய பெருங் குணங்களைக் கற்கும் நெறியில் நின்று, உன் சிறந்த திருவடிகளைப் பாடுவதற்காக செஞ்சொற்களைத் தந்தருளுக. (வேடன், வேங்கை, செட்டி, கிழவன் ஆகிய) பொய்யான வேஷங்களைக் கொள்ளுதலை விரும்பி, ஆழ்ந்து நாணத்தால் உடலும் கூனலுற்றுச் சென்று, பழம்பெரும் பொருளாகிய வள்ளி மலையில் தினைப்புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியின் அழகிய தோள்களில் சேரும் பொருட்டு, அவள் பாதமாகிய திருவடியைப் பிடித்து வணங்கி ஆசை மொழிகளைச் சொன்னவனே, மூன்று மூலைக் கோண வடிவமான மந்திர சக்கரத்தில் அமைந்து விளங்கும் பார்வதியை தமது இடது பாகத்தில் வைத்த சிவபெருமான் முத்தமிடும் குழந்தையே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.
பாடல் 1124 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கரஹரப்ரியா 
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 
- எடுப்பு - /4/4/4 0 
நடை - தகதகிட
தனதனன தந்தந்த தத்ததன
     தனதனன தந்தந்த தத்ததன
          தனதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
     அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
          அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய 
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய
     முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய
          அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம் 
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
     நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
          நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும் 
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
     பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய
          நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே 
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
     டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
          தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ 
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
          தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும் 
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
     அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
          முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி 
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
     நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
          முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே.
அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று எழுத்துக்களும், உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும், பலதரப்பட்ட (96) தத்துவங்களும்*, அளவிட முடியாத வேதங்களும், தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள ஒப்பற்ற பரம்பொருளை, தன்னைத் தவிர மற்ற எல்லாப் போருள்களும் தானே ஆகி விளங்கும் ஞான நிலையை அறிபவர் அறிந்து அனுபவிக்கும் பரமானந்தப் பொருளை, யோகியர் தன்மயமான நிலையில் தரிசிக்கும் முடிவுப் பொருளை, தொடக்கம், இடைநிலை, இறுதி இவை ஏதும் இல்லாத பரிசுத்தப் பொருளை, அணுவைக் காட்டிலும் சிறிய அணுவாக விளங்கும் பொருளை, மும்மலங்களும் (ஆணவம், கன்மம், மாயை), மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு கரணங்களும், ஸத்வம், ராஜதம், தாமதம் என்ற முக்குணங்களும், நீங்கின ஒரு வேளையில் துலங்கும் அருள் உருவத்தை, ஊழிக்காலம் முடிகின்ற சமயம் ஒன்று என்னும் பொருளாக இருப்பதனை, நிறைந்தது, குறைந்தது, நீங்கிப் போவது என்பது ஏதுமற்று நிறை பொருளாக எல்லா இடங்களிலும் நிலைத்து நிற்கும் பொருளை, இதற்கு சமம் அதுதான் என வேறொரு பொருளை ஒப்புரைக்க இயலாததை, வானில் சஞ்சரித்துக் கொண்டே இருந்த திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானும், (உன்னை நோக்கி) அரசனே, குருமூர்த்தியே, குமரனே, என்றெல்லாம் பக்தியுடனே போற்றித் தொழுதவுடன் அவருக்கு அருளிச் செய்த மெளன உபதேசமந்திரத்தை** உன் பழைய அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி இனிமையாக உபதேசித்து அருள்வாயாக. தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு (என்று பலமுறை மேலே கண்ட அதே ஓசையுடன்) இடது கையால் கொட்டும் தோல் பறைகளும் உடுக்கை வாத்தியங்களும் பிற எல்லா ஒலிக்கருவிகளும், மொகு மொகு என்னும் பேரொலியோடு அதிர்ச்சி தரும்படி முழங்க, இப் பழமையான முதிர்ந்த பூமி பிளவுபட்டு வெடிக்க, நிமிர்ந்து நின்று பேய்கள் கூத்தாட, உலகம் எங்கிலும் உள்ள மக்கள் திகைத்து நிற்க, வேகமாக நடனம் செய்யும் பைரவ மூர்த்திகள் கூத்தாடி மகிழ, அசுரர்கள் இறந்து படும் போர்க்களத்தில் கோடிக்கணக்கான முதிர்ந்த கழுகுகளும், காக்கைகளும், கருடன் பருந்துகளும் பிணங்களின் அங்கங்களைக் கொத்தித் தின்ன, ரத்த வெள்ளம் பெருக, பலவகையான தலையற்ற உடல் குறைகள் கூத்தாட, முரசு வாத்தியம் பேரொலி முழக்க அசுரர்களை வெற்றி கொண்டு, தேவேந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்த பெருமாளே. 
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. ** இதே மெளன மந்திர உபதேசம் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்ற வரிகளால் அறியலாம்.
பாடல் 1125 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... : தாளம் -
தனன தந்தன தனனா தனதன
     தந்தன தனனா தனதன
          தனன தந்தன தனனா தனதன ...... தனதான
அரிய வஞ்சக ரறவே கொடியவர்
     அவலர் வன்கண ரினியா ரவகுணர்
          அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக 
அலையில் மண்டிய வழியே யொழுகியர்
     வினைநி ரம்பிடு பவமே செறிபவர்
          அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற 
உரிய சஞ்சல மதியா னதுபெறு
     மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர்
          உபய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே 
உலக முண்டவர் மதனா ரிமையவர்
     தருவெ னும்படி மொழியா வவர்தர
          உளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ 
கரிய கொந்தள மலையா ளிருதன
     அமுது ணுங்குரு பரனே திரைபடு
          கடல டும்படி கணையே வியஅரி ...... மருகோனே 
கருணை கொண்டொரு குறமா மகளிடை
     கலவி தங்கிய குமரா மயில்மிசை
          கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ...... மிளையோனே 
திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து
     பொதுந டம்புரி யரனா ரிடமுறை
          சிவைச வுந்தரி யுமையா ளருளிய ...... புதல்வோனே 
சிகர வெண்கரி அயிரா வதமிசை
     வருபு ரந்தர னமரா பதியவர்
          சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே.
வஞ்சகத்தில் அருமையாகத் தேர்ந்த மிகவும் பொல்லாதவர்கள், வீணாக பொழுது போக்குபவர், இரக்கம் இல்லாதவர்கள், இன்பம் தரும் வகையில் பேச வல்லவர்கள், துர்க்குணம் உடையவர், மூடர், அன்பு இல்லாதவர்கள், கேடு தரும் வழியில் திரிபவர், மிகவும் காமம் என்னும் கடலலையில் மோசமான வழியையே பின்பற்றுபவர், தீவினை மிக்கு நிரம்பும் பாபமே பொருந்தியவர்கள், கருணையை அடியோடு விட்டவருடைய இடத்தையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழும் அறிவீனர்கள், நரகத்திலே வீழுதற்கே உரித்தான குழப்பம் கொண்ட அறிவைப் பெற்றுள்ள அகந்தை நெஞ்சினர்கள், இத்தகையோர் இருக்கும் இடம் எது என்று வினவிச் சென்று, அவருடைய உடலும் அங்கமும் (சாங்கமும் உபாங்கமும்) என்றும் நிலைத்திருக்கும்படியாக ஒரு பாடல் அமைத்து, அவரை உலகத்தை உண்ட திருமாலே என்றும், மன்மதனே என்றும், தேவலோகத்து கற்பக மரம் இவரே என்றும் இவ்வாறு வர்ணித்து, அவர் தரக் கூடிய பொருளைப் பெற்று உயிரை வீணாக இழக்கின்ற இத்தகைய இழிதொழில் என்னை விட்டு நீங்காதோ? கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய மலை மகள் பார்வதியின் இருமுலையிலும் பாலமுதத்தை உண்ட குரு மூர்த்தியே, அலை வீசும் கடல் வெந்து அழியும்படி அம்பைச் செலுத்திய ராமனாம் திருமாலின் மருகோனே, அருள் நிரம்பி ஒப்பற்ற, சிறந்த குறப் பெண்ணான வள்ளியிடத்தே கலந்து மணம் பொருந்தின குமரனே, மயிலின் மீது வேகமாக எட்டுத் திசைகளையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த இளையோனே, திரிபுரங்களையும் நெருப்புச் சிரிப்பால் எரித்து, அம்பலத்தில் நடனம் செய்யும் சிவபெருமானது இடப் பக்கத்தில் உறையும் சிவாம்பிகை, அழகிய பார்வதி பெற்று அருளிய குழந்தையே. மலை போன்ற வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மீது ஏறிவரும் இந்திரனும், தேவர் உலகில் வாழ்ந்திருந்த தேவர்களும் சிறையினின்று மீளும்படி கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே. 
பாடல் 1126 - பொதுப்பாடல்கள் 
ராகம் - திலங் 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தான தானன
     தானான தான தான தானன
          தானான தான தான தானன ...... தந்ததான
ஆராத காத லாகி மாதர்த
     மாபாத சூட மீதி லேவிழி
          யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே 
ஆசாப சாசு மூடி மேலிட
     ஆசார வீன னாகி யேமிக
          ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே 
ஈராறு தோளு மாறு மாமுக
     மோடாரு நீப வாச மாலையு
          மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே 
ஏனோரு மோது மாறு தீதற
     நானாசு பாடி யாடி நாடொறு
          மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ 
வாராகி நீள்க பாலி மாலினி
     மாமாயி யாயி தேவி யாமளை
          வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி 
வாதாடி மோடி காடு காளுமை
     மாஞால லீலி யால போசனி
          மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி 
சூராரி மாபு ராரி கோமளை
     தூளாய பூதி பூசு நாரணி
          சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே 
தோளாலும் வாளி னாலு மாறிடு
     தோலாத வான நாடு சூறைகொள்
          சூராரி யேவி சாக னேசுரர் ...... தம்பிரானே.
அடக்க முடியாத மோகம் கொண்டு, பெண்களுடைய உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையுள்ள அங்கங்களிலே கண்கள் ஈடுபடுவதால் காமுகனாகி மன விகாரம் அடைந்து குணம் கெட்டு, ஆசை என்ற பேய் என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள, நான் ஆசாரக் குறைவுபட்டவனாக, மிகவும் அசுத்தனாக, இங்கும் அங்கும் ஓடி தினமும் கெட்டழியாமல் இருக்க, பன்னிரண்டு தோள்களுடனும், ஆறு திருமுகங்களுடனும், நிறைந்த வாசனையுள்ள கடப்ப மலர் மாலையுடனும், ஆண் மயிலாகிய நீல நிறக் குதிரையுடனும், அன்பு பூண்டு பிற மக்களும் போற்றிப் புகழுமாறு, கேடுகள் நீங்க, நான் ஆசு* கவிகளைப்பாடியும், ஆடியும், தினமும் முன்னேறுமாறு, ஞானோபதேசத்தை எனக்குச் செய்ய வருவதற்கு நீ அன்பு கொள்ளக் கூடாதோ? (இதன் பின்பு சுவாமிகள் தேவியின் துதி செய்கிறார்). வாராகி, பெரிய கபாலத்தைக் கையிலே ஏந்தியவள், மாலையை அணிந்தவள், மகமாயி, ஆயி, தேவி, சியாமள நிறத்தினள், வாக்குக்கு எட்டாதவள், பராத்பரை, உள்ளத்தில் தங்குகிற தாய், சிவனுடன் வாதாடிய காளி, துர்க்கை, வனதேவதை, உமாதேவி, பெரிய பூமியிலே திருவிளையாடல்கள் புரிபவள், விஷத்தை உண்டவள், மஹா காளி, சூலத்தை ஏந்தியவள், பாலாம்பிகை, யோகினி, அழகிய பவானி, மகிஷாசுரமர்த்தனி, பெரும் திரிபுராந்தகி, அழகி, திருநீற்றை விபூதியாகப் பூசிய மேனியளான நாராயணி, திருவண்ணாமலையின் ஆதி தேவி, உலகநாயகி பெற்ற செல்வமே, தோள்கொண்டும் வாள்கொண்டும் போரிட்டுப் பகைமை பூண்டவனும், தோல்வியே இல்லாதவனும், தேவருலகைச் சூறையாடினவனுமான சூரனைக் கொன்றவனே, விசாகனே, தேவர்களின் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
பாடல் 1127 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கீரவாணி 
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
     தானாதன தானந் தனத்த ...... தனதான
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
     மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும் 
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
     மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே 
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
     நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக 
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
     நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும் 
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
     வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி 
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
     வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும் 
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
     வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா 
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
     வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே.
பூஜை செய்வோரது ஆடம்பரத் தோற்றத்தைக் கண்டும், இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ள ஆசையினாலும், தெய்வம் எழுந்தருள வேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும், (ஆறும் பத்தும் கூடிய) பதினாறு கால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும், வேதம், ஆகமம் இவை முழங்கும் இடத்தைக் கண்டும், யாகங்களுக்கு வேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்து அவற்றில் மயங்காமல், (அடியார்களின்) கண்ணீர் பெரிதாகப் பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே, சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே, மலைகளுக்கு உரியவனே, நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைத பாவம் நீங்க அத்வைத நிலையைப் பெற அன்னியம் இல்லாமல் உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்து கடல் போன்று பெரிதான ஆனந்த நிலையையும், உடனே பரமானந்தமாகிய முக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன். வீரத்துக்கு இருப்பிடமானவனே, துர்க்கையும், சக்ர வியூகமாக வகுக்கப்பட்டு நிற்கும் காவல் கணங்களான பூதங்களும் மகிழ, பேய்க் கூட்டங்கள் பிணங்களை உண்டு பிழைக்கும்படியும், போர் புரிந்து, பிரமன் அபயம் என்று முறையிட்டுக் கூச்சலிட, அண்ட கூடம் பிளவுபட, சூரன் மாயமாக நின்ற மாமரத்தின் அடிவேரையே வெட்டி, வடவாக்கினியையும்*, நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து, பெரிய சூரனோடு செய்த போரிலே அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து, பாணங்கள் தங்கும் இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே, தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள் என்று அழைத்து, தேவர்களின் பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே. 
* பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வட துருவத்திலிருந்து வரும் நெருப்பு அலையை 'வடவாக்கினி' என்பர்.
பாடல் 1128 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன
     தானா தத்தன தத்தன ...... தனதான
ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு
     தாகா ரைத்தொடர் கைக்கெணும் ...... விழியாலே 
ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி
     வார்போ கச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக் 
கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள்
     கூறா கப்பெறில் நிற்கவு ...... மிலதானார் 
கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்
     கோமா ளத்துய ருட்பய ...... முறலாமோ 
பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி
     பால்பார் வைக்கள விட்டுமை ...... யுறுபோதிற் 
பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர்
     பாலா பத்தரி டத்தியல் ...... பயில்வோனே 
மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை
     வேர்மா ளப்பொரு திட்டொளி ...... விடும்வேலா 
மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு
     வேதா வைச்சிறை யிட்டருள் ...... பெருமாளே.
ஆலகால விஷத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்துள்ள வேலாயுதத்தைப் போல இருந்துகொண்டு, அழகிய குண்டலங்களை வம்புக்கு இழுப்பது போல் (காது வரை) நீண்டு, தங்களுக்கு ஆகாதவர்களைத் தொடர்ந்து பின் சென்று பற்றுதற்கு எண்ணும் கண்களுக்கு அடிமைப்பட்டு, அவ்வாறு வசப்பட்டவர் தம்மைச் சூழ்ந்திருக்க, அவர்கள் (தங்கள் சூழ்ச்சியினின்று) மீண்டு வெளியே போக முடியாதவாறு, நுழைந்து ஏற்பாடுகள் செய்து, அவர்களது நல்லறிவு போகும்படி தொழில் வித்தைகளை விலைபேசி, தமது ஆடம்பரங்களை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் காட்டி, மனம் உடைந்து உள்ளம் நெகிழ்வது போல் செய்து, தாங்கள் கேட்ட பொருளில் ஒரு பகுதியை மட்டும் பெற்றால், எதிரில் நின்று பேசுவதற்குக் கூடக் கிட்டாதவர்கள், அக நட்பு இல்லாமல் புற நட்புச் செய்யும் பயனிலிகள், அழிவுறும் வகைக்கு விட்டு விட்டு நீங்கும் பாவிகளாகிய விலைமாதர்களின் கொண்டாட்டத்தால் வரும் வேதனைப் பயத்தை நான் அடைதல் நன்றோ? திருப்பாற்கடலில் துயிலும் திருமால் முதலான தேவர்கள் சென்று சேர்ந்த சிறந்த கயிலைமலையை (காமனைச் சிவன்மேல் பாணம் எய்ய அனுப்பினோமே என்ன ஆயிற்று எனக்) கண் கொண்டு பார்த்து அளவிட்டும், அவர்கள் சந்தேகித்தும் இருந்த சமயத்தில் பூமியில் கரும்பு வேல் ஏந்திய மன்மதனுடைய உடல் தீப் பொறியாய் வெந்து விழும்படிச் சுட்டெரித்த ஞானியாகிய சிவபெருமானின் குழந்தையே, பக்தர்களிடம் இயல்பானஅன்பு காட்டிப் பழகுபவனே, முன்பு, கூட்டமாக நாலு திக்குகளிலும் சென்று நிரம்பிய பகைவராகிய அசுரர்களையும், அவர்கள் தங்கியிருந்த கிரெளஞ்சம், ஏழு மலைகள் அனைத்தையும் அடியோடு மாண்டு அழியும்படி சண்டை செய்து ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, விண்ணோரைச் சிறையினின்றும் விடுவித்து அருள் செய்தவனே, நீங்காத வீரத்தோடு பிரமனைச் சிறையிலிட்டுப் பின்னர் அவனுக்கு அருளிய பெருமாளே. 
பாடல் 1129 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சுருட்டி 
தாளம் - அங்கதாளம் - 9 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தான தத்த தத்த தத்தன
     தானான தான தத்த தத்த தத்தன
          தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான
ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்
     ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்
          ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ...... ரழியாதே 
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்
     வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்
          ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும் 
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்
     தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்
          ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி 
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய
     நானாவி கார புற்பு தப்பி றப்பற
          ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே 
மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்
     மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு
          மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி ...... லொருமூவர் 
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்
     தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்
          வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும் 
தேநாய காஎ னத்து தித்த வுத்தம
     வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்
          சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச் 
சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ
     மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி
          சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே.
என்றும் கெடாத ஞான அறிவைக் கொடுத்ததையும், ஆராய்ந்து அறிய வேண்டிய நூல்களில் கருத்தைக் கொடுத்ததையும், ஒரு வழியாக நிலைத்திராத மயக்கம் உள்ள வாழ்க்கையில் மயங்கித் திளைத்து, தளர்ச்சி உற்று உயிர் அழிந்து போகாமல், ஆசை என்கின்ற கடலைக் கடக்கும்படியான ஆற்றலைத் தந்ததையும், வாக்குக்கு எட்டாத ஒரு நிலையில் என்னை இருக்கும்படி அருளியதும், கீழ்ப்பட்டவனான நான் மிக்க புகழ் எய்தி இனிமையுடன் ஏழு உலகில் உள்ளவரும் உள்ளவையும் நானே என்னும் அத்துவித நிலையைப் பெறுமாறு புகழ் கொண்டதும், மிக அற்புதமாக அமைந்துள்ள திருப்புகழ்ப் பாக்களை தேன் ஊறிய இனிமையுடன் பாடி, எல்லா திசைகளிலும் நான் எழுதி அனுப்பும் கடிதமோ பாடலோ ராஜமரியாதையுடன் போற்றப்படத்தக்க மேன்மையை எனக்கு அருளிச் செய்ததும், துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாத பெரிய மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும், பலவிதமான கலக்கங்கள் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், டும்பு, அசூயை எனப்பட்ட துர்க் குணங்கள்) கூடியதும், நீர்க்குமிழிபோல் தோன்றி மறைவதுமான பிறப்பும் நீங்கும்படியாக இன்பம் தரும் வகையில் எனக்கு வரமாகத் தந்து அருளியதும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாசுகி என்னும் பெரிய பாம்பாகிய கயிற்றை பலமாகக் கட்டியுள்ள ஒப்பற்ற பெரிய மேரு மலையாகிய வில்லைப் பிடித்து, சிறந்த திருமாலாகிய அம்பைச் செலுத்தி, அங்கிருந்த அசுரர்களில், மூன்று பேர்* மட்டும் இறந்து போகாமல், பாபச் செயலில் ஈடுபட்டிருந்த திரிபுரத்து அசுரர்கள் பொடியாய் விழ, முன்பு புன்முறுவல் செய்து எரித்த, பேரறிஞராகிய சிவபெருமான் பெற்ற செல்வமே, தேவேந்திரன் மகளாய் அடைந்து வளர்த்த, கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத் தோப்பில் வாழும், தேவயானையின் நாயகனே, என்றெல்லாம் போற்றித் துதித்த உத்தமமான தேவர்கள் வாழும்படி, வல்லமை பொருந்திய உனது திருவடியைச் சிந்தித்துப் போற்றாத சூரனை வெட்டி அடக்கி, அந்த கிரெளஞ்ச மலையைத் தாக்கி, சேறு போன்ற ரத்தம் பாய்வதால் கடலும் மேடிட்டு மலை போல் எழ, பகைத்து நின்ற அரக்கர் கூட்டத்தை இப்படியும் அப்படியுமாக உடை வாளால் துண்டு துண்டாக அறுத்துத் தள்ளிய பெருமாளே. 
* திரிபுரம் எரிபட்டபொழுது சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில் இருவர் சிவபெருமான் கோயிலில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் சிவ நடனத்தின் போது முழவு வாத்தியம் முழக்கும் பேற்றினைப் பெற்றார் - சுந்தரர் தேவாரம்.
பாடல் 1130 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதனனந் தாத்த தான தத்த
     தனதனனந் தாத்த தான தத்த
          தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான
இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
     விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து
          இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே 
இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
     முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்
          இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி 
மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
     சுருளளகந் தூற்றி யேமு டித்து
          மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக 
வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்
     அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க
          மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ 
படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
     முதுமறையின் பேச்சி நூலி டைச்சி
          பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி 
படிகொடறங் காத்த மாப ரைச்சி
     மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி
          பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி 
அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
     சமரமுகங் காட்டு மால்வி டைச்சி
          அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ...... பெருவாழ்வே 
அரியயனின் றேத்த வேமி குத்த
     விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த
          அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே.
சினம் தங்கிய வேலாயுதத்தை எடுத்து விஷம் முழுமையும் நிரம்பும்படி நிறைவு செய்து, இரு காதுகளையும் மோதி மீள்கின்றதும் கயல் மீன் போன்றதுமான (முன்பு சொன்ன வேலை ஒத்த) கண்கள் என்னும் வலையால் விலைமாதர் (ஆடவரை) இன்பகரமாக நோக்கி, தமது வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று, முகத்தைத் துணியால் மூடி, ரவிக்கையை அழுத்தும் மலை போன்ற இரு மார்பகங்களையும் காட்டி காம ஆசையை ஊட்டி, கிடைக்க வேண்டிய பொருள் எவ்வளவு என்று பேசி முடித்து, இதழ்கள் விரிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட சுருண்ட கூந்தலை விரித்து உதறி முடித்து, தெருவிடையே நின்று நிரம்பச் சிரித்து, மாறுதல் இல்லாமல் என்றும் வருவதான பொருள் உள்ளவர்களைக் கண்டதும் முன்னதாகவே பறிக்கின்ற, விலைமாதர்களின் பேச்சிலே முற்றிலும் மனம் உருகுகின்ற காமுகனாக நான் சோர்வு அடையலாமோ? உலகம் முழவதும் நிறைந்து நிற்கும் சிறந்த அழகி, வேதங்களால் பேசப்படுபவள், நுண்ணிய இடையை உடையவள், பிறைச் சந்திரன் விளங்கும், தாழ்ந்து தொங்கும் சடையை உடையவள், இரண்டு நாழி எனப்படும் படி நெல்லைக் கொண்டு (காஞ்சீபுரத்தில்) முப்பத்திரண்டு அறங்களையும்* செய்த சிறந்த பரதேவதை, ரத்தினங்களும் வைரங்களும் கோத்த வளையல்களைக் கொண்ட தோளை உடையவள், பல திக்குகளிலும் சென்று விளங்கும் விருப்பத்தை உடையவள், பெருமை மிக்க நீல நிறம் உடையவள், கொல்ல வரும் புலியின் தோலைச் சேலையாக உடுத்துள்ளவள், போர் செய்யும் முகத்தைக் காட்டும் (நந்தி என்ற) பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவள், உலகம் முழுதையும் உண்ட திருமாலுக்கு நேர் தங்கையாகிய பார்வதியின் பெருஞ் செல்வமே, திருமாலும் பிரமனும் நின்று வணங்கவும் சிறந்த தேவர் கூட்டம் சிறையனின்று மீட்சி பெறவும் வாளாயுதத்தை எடுத்தவனும், அசுரர் கூட்டம் பாழாக வேலாயுதத்தை எடுத்தவனுமாகிய பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
பாடல் 1131 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்
     தனதத்தத் தனதத்தத் ...... தனதான
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்
     டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும் 
இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற்
     கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக 
விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்
     டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன் 
வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்
     புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ 
அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்
     கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே 
அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்
     டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா 
கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்
     கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன் 
கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக்
     கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே.
துன்பங்கள் மொய்த்து நெருங்கித் தொடரும் இடமாகிய நிலையில்லாத உடல் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு, இனிய சுற்றத்தினரும், பின்னும் புதல்வர்களும் தங்கள் தங்கள் உறவைச் சொல்லி அச்சமயத்துக்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்க்க, பின்பு மனம் தளர்ந்து இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அந்தச் சுற்றத்தினர் போக, விஷம் அதிகமாகச் சொரிகின்ற சிவந்த கண்களை உடைய யமன் அழிக்க வேண்டும் என்ற பண்பை உணர்த்தும் தன்மையை அடைந்து உயிராகிய விதையை நீக்கிக் கொண்டு போவதற்கு முன்பாக, எனது வினையும் பற்றும் அற்று ஒழிந்து நீங்க, நாள் தோறும் புதிய புதிய சொற்களைக் கொண்டு, வெட்சி மாலை அணிந்த உனது திருப் புயங்களின் வெற்றிப் புகழை* உரைக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? நெருங்கியுள்ள சிறந்த சடையில் அழகிய பிறைச் சந்திரனும் கங்கையும் அணிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு ஞானம் கூடிய பிரணவப் பொருளை உபதேசித்தவனே, பேய்க் கூட்டங்களுள் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும் ஒன்றோடொன்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிடவும், ஒன்றை ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துச் சண்டை செய்த வேலனே. பாற்கடலில் அமைந்த ஆதிசேஷன் மேல் அடியார்கள் போற்றித் துதிக்க அறி துயில் கொண்டுள்ள பச்சை மலை போன்ற வடிவை உள்ளவனும், திருக் கரத்தில் சக்கரம் ஏந்திய அரசனும் ஆகிய திருமாலுக்கும், தாமரையில் வீற்றிருக்கும் நெடிய படைப்பவனாகிய பிரமனுக்கும், எட்டு திக்குகளிலும் உள்ள மற்றவர்களுக்கும் கடவுள் சக்கிரவர்த்தியாக விளங்கும் பெருமாளே. 
* அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பில் ஒன்றாகிய 'புய வகுப்பு' அவர் முருகனின் புய வெற்றிப் புகழ் பாடியதை உணர்த்தும்.
பாடல் 1132 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தத்த தந்த
     தனதனன தான தத்த தந்த
          தனதனன தான தத்த தந்த ...... தனதான
இரவினிடை வேள்தொ டுத்து டன்று
     முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி
          யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே 
எதிர்பொருது மானி னைத்து ரந்து
     சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி
          யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே 
முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து
     விசிறிவளை மாத ரைக்க லந்து
          மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு 
முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து
     சுழிமிதுன வாவி யிற்பு குந்து
          முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும் 
திரையுலவு சாக ரத்தி லங்கை
     நகரிலுறை ராவ ணற்கி யைந்த
          தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ் 
சிதையவொரு வாளி யைத்து ரந்த
     அரிமருக தீத றக்க டந்து
          தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே 
அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து
     கருதுமொரு மூவ ருக்கி ரங்கி
          யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா 
அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து
     இரவுபக லாக நெக்க விழ்ந்த
          அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே.
(முதல் 6 வரிகள் பெண்களின் கண்களை வருணிப்பன). இரவுப் பொழுதில் மன்மதன் கையில் எடுத்து கோபித்து வலிமையாகச் செலுத்தும் மலர்ப் பாணங்களுடன் மாறுபட்டு (அந்தப் பாணங்களுக்கு எதிர் பாணங்களாக விளங்கி), இரண்டு காதில் உள்ள குண்டலங்களையும் தாக்கி, நீர் பரவியுள்ள கடலுடன் எதிர்த்து மாறுபட்டு (அதனினும் பெரியதாய் ஆழமாய் விளங்கி), (தமது பார்வையின் அழகால்) மான்கள் எல்லாம் (வெட்கிக் காட்டுக்குள்) புகும்படிச் செய்து, கடலைக் கிழித்த (வற்றும்படி செய்த) வேலாயுதத்துக்கு இணையாகி, பின்னும் அமுதத்தையும் ஆலகால விஷத்தையும் தம்மிடம் கொண்ட கண்கள் எனப்படும் வலையைக் கொண்டு, வலிமை மிக்க வாலிபர்களுடைய உயிர் மீது தொடர்ந்து (கண் வைத்துப்) பற்றி வளைத்துத் தம் வசப்படுத்தும் விலைமாதர்களுடன் கூடி, அவர்களுடைய (குதலைப்) பேச்சு புறப்படும் கொவ்வைப் பழம் போன்று சிவந்த வாயிதழின் கரும்பின் சுவையை உண்டு, அமுதம் பொதிந்துள்ள, அரும்பும் மொட்டுப் போன்ற முத்து மாலையை அணிந்த, மலை பொன்ற மார்பகத்தை அணைந்து, தொப்புள் என்னும் இன்பக் குளத்தில் படிந்து, முழுகி அழிந்து போகாமல் உனது நன்மை தரும் திருவடியைத் தரவேண்டும். அலைகள் வீசுகின்ற கடல் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்துவந்த ராவணனுடைய பத்து தலைகளும், இருபது ஒழுங்காய் அமைந்த வலிமையான தோள்களும் அழிபட, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய திருமாலின் மருகனே, தெளிவான அறிவு பொருந்திய மூலப் பொருளில் அமைந்து விளங்கும் முருகனே, காவல்கள் கொண்ட மதில்கள் சூழ்ந்திருந்த திரிபுரத்தில் இருந்து தம்மைத் தியானித்து வணங்கிய மூன்று* சிறந்த பக்தர்களுக்கு இரக்கம் கொண்டு (திரிபுரத்தை எரித்தபோதும்) அவர்களுக்கு அருள் புரிந்த ஒப்பற்ற நாயகனான சிவபெருமான் வணங்கிய குரு நாதா, பரந்த முடிவுக்கு முடிவாய், ஆதிக்கு ஆதியாய் உள்ள பொருள் இன்னதெனத் தெரிந்து, இரவும் பகலும் உள்ளம் பக்தியால் நெகிழ்ந்து உருகும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிக் கேட்டு மகிழும் பெருமாளே. 
* திரிபுரம் எரிபட்ட பொழுது மாளாது பிழைத்த சிவனடியார்கள் மூவரில் இருவர் சிவபெருமான் திருக் கோயில் காவலாளர் ஆனார்கள். பின் ஒருவன் சிவ நடனத்தின் போது முழுவு வாத்தியம் முழக்கும் பேறு அடைந்தான்.
பாடல் 1133 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தர்பரிகானடா 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தானா தானா
     தனன தந்தன தானா தானா
          தனன தந்தன தானா தானா ...... தனதான
இரவொ டும்பக லேமா றாதே
     அநுதி னந்துய ரோயா தேயே
          யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி 
இரைகொ ளும்படி யூடே பாடே
     மிகுதி கொண்டொழி யாதே வாதே
          யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி 
நரைக ளும்பெரி தாயே போயே
     கிழவ னென்றொரு பேரே சார்வே
          நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி 
நயன முந்தெரி யாதே போனால்
     விடிவ தென்றடி யேனே தானே
          நடன குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ 
திருந டம்புரி தாளீ தூளீ
     மகர குண்டலி மா¡£ சூரி
          திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி 
சிவனி டந்தரி நீலீ சூலீ
     கவுரி பஞ்சவி யாயீ மாயீ
          சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா 
அரவ கிங்கிணி வீரா தீரா
     கிரிபு ரந்தொளிர் நாதா பாதா
          அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா 
அரிய ரன்பிர மாவோ டேமூ
     வகைய ரிந்திர கோமா னீள்வா
          னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே.
இரவும் பகலுமாக, நீங்குதல் இன்றி, நாள் தோறும் துக்கம் இடைவிடாமல் பீடிக்க, தீப்போல வயிற்றில் எரிகின்ற பசியால் ஆசைகளே பெரிதாக வளர்ந்து, உணவு வேண்டி வாழ்க்கையின் ஊடே உழைப்பே மிகுதியாகி, தர்க்கம் செய்வதிலே எப்போதும் காலம் கழித்து, இவ்வாறே வாழ்க்கையின் இடைக்காலத்தில் சிலகாலம் கழிய, பின்பு வயது மூத்து, நரைகள் அதிகமாகிப் போய் கிழவன் என்ற ஒரு பேரே வந்து கூடிட, நடைகளும் நேராக இன்றி தாறுமாறாகி, கீழே விழும் நிலைமைக்கு வந்து, கண்களும் தெரியாமல் குருடனாகிப் போனால், அடியவனாகிய நான் என்போது தான் துன்பம் நீங்கி விடிந்து இன்பம் அடைவது? காலை வளைத்துத் தூக்கி நடனம் செய்பவனாகிய சிவபிரானின் மோக்ஷ வீட்டை அடையாமலேயே நான் அழிந்து போவேனோ? திருநடனம் செய்கின்ற பாதங்களை உடையவள், திருநீற்றுத் தூளை அணிந்துள்ளவள், மகர மீன் போன்ற குண்டலங்களைத் தரித்தவள், மாரியாகிய துர்க்கை, மகா காளி, திரிபுரங்களில் நெருப்பை ஏவியவள், புகலிடமாக உள்ளவள், பேரழகி, சிவனது இடப்பாகத்தைத் தரித்தவள், நீல நிறத்தாள், சூலம் ஏந்தியவள், கெளரி, ஐந்தாம் சக்தியாகும் அனுக்கிரக சக்தி, தாய், மகமாயி, சிவாம்பிகை, பாலாம்பிகை, பரிசுத்த தேவதை ஆகிய பார்வதி அருளிய குழந்தையே, ஒலிக்கும் கிண்கிணியை அணிந்துள்ள வீரனே, தீரனே, மலைகளைக் காக்கும் ஒளியாக விளங்கும் நாதனே, ஞானிகளின் தலைமேல் பதிக்கும் பாதனே, அழகும் இளமையும் பொலியும் குறத்தி, மான் போன்ற வள்ளியின் இனிமை நிறைந்த மணவாளனே, திருமால், சிவன், பிரமா எனப்படும் மூவகைத் தெய்வங்கள், இந்திரன் என்ற அரசன், பெரிய விண்ணுலகிலுள்ள தேவர்கள், கந்தர்வர் ஆனோர், பிற எல்லா வகையினர்க்கும் பெருமாளே. 
பாடல் 1134 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தானான தானன
     தனதன தானான தானன
          தனதன தானான தானன ...... தனதான
இருகுழை மீதோடி மீளவும்
     கயல்களு மாலால காலமும்
          ரதிபதி கோலாடு பூசலு ...... மெனவேநின் 
றிலகிய கூர்வேல்வி லோசன
     ம்ருகமத பாடீர பூஷித
          இளமுலை மாமாத ரார்வச ...... முருகாதே 
முருகவிழ் கூதாள மாலிகை
     தழுவிய சீர்பாத தூளியின்
          முழுகிவி டாய்போம னோலயம் ...... வரவோது 
முழுமதி மாயாவி காரமு
     மொழிவது வாசாம கோசர
          முகுளித ஞானோப தேசமு ...... மருள்வேணும் 
அருமறை நூலோதும் வேதியன்
     இரணிய ரூபாந மோவென
          அரிகரி நாராய ணாவென ...... ஒருபாலன் 
அவனெவ னாதார மேதென
     இதனுள னோவோது நீயென
          அகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி 
ஒருகணை தூணோடு மோதிட
     விசைகொடு தோள்போறு வாளரி
          யுகிர்கொடு வாராநி சாசர ...... னுடல்பீறும் 
உலகொரு தாளான மாமனும்
     உமையொரு கூறான தாதையும்
          உரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே.
இரண்டு குண்டலங்களின் மீது ஓடித் தாக்கி மீள்வனவும், கயல் மீன்களும் ஆலகால விஷமும் போன்றவையும், ரதியின் கணவனான மன்மதனுடைய மலர் அம்புகள் செய்யும் கலகம் விளங்கும் கூரிய வேலைப் போன்ற கண்கள் உடையவர்களாகி, கஸ்தூரி, சந்தனம் ஆகியவை அலங்கரிக்கும் இள மார்பகங்களை உடைய அழகிய விலைமாதர்களின் வசத்தில் பட்டு உருகாமல், நறு மணம் வீசுகின்ற கூதாள மலர் மாலை தழுவும் (உனது) சிறப்பு வாய்ந்த திருவடிப் பொடிகளில் நான் முழுகி, எல்லாவிதமான ஆசைகளை ஒழிக்கக் கூடிய மன ஒடுக்கம் வரும்படிக் கற்பிக்க வல்ல முற்றின அறிவையும், உலக மாயையின் துர்க்குணங்களை நீக்க வல்லதும், அரும்பு விட்டு விளங்குவதுமான ஞான உபதேசத்தையும் தந்து எனக்கு நீ அருள் புரிய வேண்டும். அருமை வாய்ந்த வேத நூல்களில் வல்ல வேதியன் இரணிய ரூபா நமோ என்று பாடம் சொல்லிக்கொடுத்த போது, ஹரி ஹரி நாராயணா நமோ என்று சொன்ன ஒப்பற்ற குழந்தையாகிய பிரகலாதனை (நோக்கி இரணியன்) அவன் எவன், என்ன ஆதாரம், (இந்தத் தூணில் இருக்கிறானா) நீ சொல்லுக என்று கேட்க, (பிரகலாதன்) எங்கள் நாயகன் உலகில் எல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாயகன் என்று சொல்லவும், இரணியன் சென்று எதிரிலிருந்த பெரிய தூணை மோதி அறைய, வேகத்துடன், பெரும் தோள்களுடனும், ஒளி பொருந்திய நரசிங்க வடிவத்துடனும் கையில் நகங்களுடன் வந்து அரக்கன் இரணியனுடைய உடலைக் கிழித்தவனும், உலகம் எல்லாம் ஒரு அடியால் அளந்த மாமனுமாகிய திருமாலும், உமா தேவியை உடம்பில் ஒரு பாகத்தில் தன்னிடம் வைத்துள்ள தந்தையாகிய சிவபெருமானும் போற்றிப் புகழும் தேவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே. 
பாடல் 1135 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தத்தத் தானன
     தனதன தனதன தத்தத் தானன
          தனதன தனதன தத்தத் தானன ...... தனதான
இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்
     இருவிழி யதனில கப்பட் டேமன
          மிசைபட வசனமு ரைத்திட் டேபல ...... மினிதொடே 
இடையது துவளகு லுக்கிக் காலணி
     பரிபுர வொலிகள்தொ னிக்கப் பூதர
          இளமுலை குழையஅ ணைத்துக் கேயுர ...... மணியோடே 
மதகத பவளம ழுத்திப் பூஷண
     மணிபல சிதறிநெ றித்துத் தானுக
          மருமலர் புனுகுத ரித்துப் பூவணை ...... மதராஜன் 
மருவிய கலவித னக்கொப் பாமென
     மகிழ்வொடு ரசிதுமி குத்துக் கோதையை
          மருவியு முருகிக ளைத்துப் பூமியி ...... லுழல்வேனோ 
திரிபுர மெரியந கைத்துக் காலனை
     யுதைபட மதனைய ழித்துச் சாகர
          திரைவரு கடுவைமி டற்றிற் றானணி ...... சிவனார்தந் 
திருவருள் முருகபெ ருத்துப் பாரினில்
     சியொதனன் மடியமி குத்துப் பாரத
          செயமுறு மரிதன்ம னத்துக் காகிய ...... மருகோனே 
நரிகழு வதுகள்க ளிக்கச் சோரிகள்
     ரணகள முழுதுமி குத்துக் கூளிகள்
          நடமிட அசுரர்கு லத்துக் காலனை ...... நிகராகி 
நனிகடல் கதறபொ ருப்புத் தூளெழ
     நணுகிய இமையவ ருக்குச் சீருற
          நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு ...... பெருமாளே.
விலைமாதர்களின் இரண்டு மார்பகங்களும் மலைகளுக்குச் சமமானவை என்று உவமை கூறி, அவர்களுடைய கண்களாகிய வலையில் வசமாக அகப்பட்டு, என் மனம் பொருந்தும் வகையில் நன்றாகவும் ஒழுங்குடனும் இனிய வார்த்தைகளைப் பேசி, இடுப்பு நெகிழும்படி குலுக்கியும், காலில் அணிந்துள்ள சிலம்பின் மணிகள் ஓசை செய்யவும், மலை போன்ற இளம் மார்பகம் குழையும்படி அணைத்து, தோளணியில் உள்ள ரத்தினங்களுடன், மரகதம் பவளம் இவைகள் பதிக்கப் பெற்ற அலங்காரமான பல மணிகளும் கலைந்து, முறிப்புண்டு கழல, வாசனை மலர்களையும் புனுகு சட்டத்தையும் அணிந்து, மலர்ப்படுக்கையில் மன்மத ராஜனுடைய சாஸ்திரப்படி பொருந்திய புணர்ச்சிக்கே இக்கலவி ஒப்பாகும் என்று, மிக்க மகிழ்ச்சியுடன் ரசித்து, பெண்களைக் கூடிப் பொருந்தியும், உடலும் மனமும் உருகிச் சோர்ந்து இந்த உலகத்தில் அலைந்து திரிவேனோ? திரிபுரங்களும் எரியும்படி சிரித்து, யமனை உதைத்து, மன்மதனை (நெற்றிக் கண்ணால் எரித்து) அழித்து, (பாற்)கடலின் அலையில் வந்த விஷத்தை கண்டத்தில் அணிந்த சிவபெருமானுடைய திருவருளால் வந்த முருகனே, மமதையுடன் விளக்கமுற்றிருந்த துரியோதனன் இறக்கும்படி, மிக நன்றாக பாரதப் போரில் வெற்றி கண்ட திருமாலுடைய மனத்துக்கு விருப்பமான மருகனே, நரி, கழுகு ஆகியவை மகிழ்வுற, ரத்தங்கள் போர்க்களம் முழுமையும் நிறைந்து, பேய்கள் நடனம் செய்யவும், அசுரர் குலத்துக்கு ஒரு யமன் போலாகி, கடல் மிகவும் கதறவும், கிரெளஞ்சம், எழு கிரி ஆகியவை பொடிபடவும், அண்டிச் சரண் புகுந்த தேவர்களுக்கு நல் வாழ்வு வரவும், நணுகாத பகைவர் இறந்து பட அவர்களை அழித்து கீர்த்தி பெற்ற பெருமாளே. 
பாடல் 1136 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தானா தானா தனதன தானா தானா
     தனதன தானா தானா ...... தனதான
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ
     எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ 
எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூ டாடா
     இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே 
பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே
     படிறுசொ லாகா லோகா ...... யதனாகிப் 
பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே
     பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ 
அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா
     அவுணரை வாடா போடா ...... எனலாகி 
அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே
     யவருடல் வாணா ளீரா ...... எதிராகி 
மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா
     மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா 
மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே
     வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே.
விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக்கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி (யாருக்கும்) ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? அலை வீசும் கடல் கோகோ கோகோ என்று கூச்சலிட்டு, ஓடும் அசுரர்களை வாடா போடா என்று அறை கூறிப் போருக்கு அழைப்பதாகி, அழகிய வேலாலும் வாளாலும், ஒளி விடுகின்ற சிறு கத்தியாலும், அந்த அசுரர்களின் உடலையும் வாழ் நாளையும் முடியும்படி எதிர்த்துப் பிளந்த மலை போன்ற பெரிய தோள்களை உடைய ஞான சொரூபனே, அழகான பாலாம்பிகையின் குழந்தையே, இந்திரனுடைய செல்வமே, இறைவனின் சேயே, மயில் வீரனே, வேதங்கள் தொழுகின்ற நாயகனே, தேவனே, நறு மணம் வீசும் மலரே, உயிர்களுக்கு ஆதாரமான தண்ணீரே, செழுமை வாய்ந்த செவ்வேளே, அறிவிலே பெரியவர்களின் பெருமாளே. 
பாடல் 1137 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -
தனதன தனதத்த தனனா தனனா
     தனதன தனதத்த தனனா தனனா
          தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான
உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே
     வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே
          உளமுரு கியபத்த ருறவே மறவே ...... னெனவோதி 
உருகுத லொருசற்று மறியேன் வறியேன்
     இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன்
          உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர் 
அமையென வளர்சித்ர இருதோள் தழுவா
     அமுதென மதுரித்த கனிவா யணுகா
          அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ...... ததிமூழ்கி 
அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்
     கலவியி னலமற்ப சுகமா கினுமா
          அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ...... தியலாதே 
தமனிய குலசக்ர கிரியோ கடலோ
     விடமென முடிவைத்த முதுபே ரிருளோ
          தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல் ...... கொடுபார்வை 
தழலெழ வருமுக்ர எமபா தகனோ
     யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ
          தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ...... பதியாகி 
இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ
     அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ
          எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும் 
எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ
     வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா
          எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ...... பெருமாளே.
மயில் போன்ற உமா தேவி பெற்ற, மயிலை வாகனமாக உடையவனே, கார்த்திகைப் பெண்டிர் அறுவருக்கும் ஒப்பற்ற பாலகனே, உள்ளம் உருகுகின்ற பக்தர்களின் நட்பாளனே, நான் உன்னை மறக்க மாட்டேன் என்று உன்னைப் போற்றி செய்து மனம் உருகுதல் ஒரு சிறிதும் அறியாதவன் நான். தரித்திரம் பிடித்தவன். நல் வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின் இடையே சிக்கிக் கொண்டிருக்கும் கொடியவன் அடியேனாகிய நான் அறிவு இல்லாதவன். (அத்தகையவனாகிய நான்) பெற்று உய்ய முக்தியைத் தருவாயாக. பவளம் போன்ற வாயை உடைய இளம் பெண்களின் மூங்கில் போன்று செழித்து வளர்ந்துள்ள அழகிய இரண்டு புயங்களையும் தழுவி, அமுதம் போல் இனிப்பைக் கொண்ட (கொவ்வைக்) கனி போன்ற வாயை நெருங்கி அனுபவித்து, படுக்கையில் சேர்ந்து களிக்கும் காம இச்சை என்னும் பெரிய கடலில் முழுகி, எப்போதும் பொருந்தியுள்ள அழகிய மார்பகங்களில் படியும் புணர்ச்சியின் இன்பம் கொஞ்ச நேரமே நீடிக்கின்றது என்றாலும், அது பெரிதும் இயற்கையாகவே விரும்பப்படும் ஒரு நுகர்ச்சி இன்பமாகும். இதைக் கொஞ்சமும் விட்டொழிக்க முடியவே முடியாது. பொன் மலையாகிய சிறந்த மேரு மலையோ? சக்ரவாள கிரியோ? கடல் தானோ? விஷத்தை உச்சியில் கொண்டதும் முற்றினதுமான பெரிய இருட்டாகுமோ? வில்லைப் போல போர்க்கென்று அமைந்துள்ள, கொலை செய்ய வல்லதுமான மூன்று நுனிகளை உடைய வேல் போன்ற கண்களின் கொடிய பார்வை நெருப்பைக் கக்க வருகின்ற கொடுமை காட்டுகின்ற யமன் என்ற பாதகன் தானோ? யுக முடிவில் மிகுந்து எழுகின்ற வடவா முகாக்கினியோ? ஒப்பற்ற இவன் என்று யாவரும் பயப்படும்படி, மாமிசத்தை உண்ணும் அரக்கர்களின் அரசனாகிய சூரன் தேவர்கள் யாவரும் போருக்கு வாருங்கள், வாருங்கள், திருமால், பிரமன் முதலியோர் யாவரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், மூவேழு உலகத்தினரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், என்னுடன் சண்டை செய்ய வாருங்கள், என்று கூச்சலிட்டு வருகின்றான் அந்த ஒப்பற்ற துஷ்டனாகிய சூரன். எங்களைக் காத்தருள வேண்டும், காத்தருள வேண்டும் என்று வடக்கில் உள்ள அஷ்ட குல பர்வத வாசிகளும் அடைக்கலம், அடைக்கலம், புரந்தருளுக, காத்தருள்க என்று முறை இட, ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய அரசனே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 1138 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -
தனத்த தத்தன தனதன தந்தத்
     தனத்த தத்தன தனதன தந்தத்
          தனத்த தத்தன தனதன தந்தத் ...... தனதான
உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட்
     டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற்
          றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் ...... டணைமேல்வீழ்ந் 
துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட்
     டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த்
          துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் ...... டுளம்வேறாய் 
அருக்கி யத்தனை யெனுமவ சம்பட்
     டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத்
          தறப்பி தற்றிட அமளிக லங்கித் ...... தடுமாறி 
அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட்
     டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக்
          கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் ...... திடலாமோ 
தரைக்க டற்புகு நிருதர்த யங்கச்
     சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித்
          தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் ...... பிறைசூடி 
தனுக்கி ரித்திரி தரஎதி ருங்கொக்
     கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத்
          தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் ...... தனிவேலா 
பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித்
     திருக்கு முத்தம நிருதர்க லங்கப்
          படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் ...... கிரிசாடிப் 
படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக்
     குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற்
          பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் ...... பெருமாளே.
சொற்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆசையுடன் அடிகளில் வணங்கி, மெத்தென்ற அணையில் இருக்கச் செய்து புன்சிரிப்பும் கொஞ்சம் வெளிக்காட்ட, உனக்கு அடைக்கலம் என்று அந்தப் பொது மகளை எதிர் வணங்கி படுக்கையில் அவள் மேல் விழுந்து, அணிந்துள்ள அழகிய ஆடை நீங்கிய பெண்குறியைப் பரிசித்துத் தீண்டி, அவளை எடுத்து, அணைத்து, வாயிதழ் பெருகி ஊறும் அமுதத்தை அனுபவித்து, உனக்கு என்ன வேண்டும், எனக்கு இன்னதைக் கொடு என்று மனம் ஒன்றுபட்டு தழுவிப் புணர்ந்திட்டு, அறிவு கலங்கி, தேவர்கள், அதிதிகள் ஆகியோருக்குச் செய்யும் உபசாரத்தை நிகர்க்கும் என்று சொல்லும்படி (அவ்வளவு மரியாதையுடன்) தன் வசம் இழந்து, அறுத்து ஒதுக்கப்பட்ட நக நுனியால் கீறுபட்டு, மிகவும் பிதற்றலான பேச்சுக்களைப் பேசி, படுக்கையும் கலைந்து போகத் தடுமாற்றம் அடைந்து, அனுபவித்து திளைத்து, இரண்டு கண்களும் சிவக்க தளர்ந்து, இன்பகரமாகப் பேசும் (அந்த விலைமாதர்களின்) உடல் இன்பத்துக்கு ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் புணர்ச்சியினால் மனமும் உடலும் நொந்து நான் இளைப்புறலாமோ? தரையிலும் கடலிலும் புகுந்த அசுரர்கள் கலக்கமுற்று துன்பப்பட, அவர்களுடைய பெரிய தலைகளைப் பறித்து நொறுக்கி, கூச்சலிட்டு எழுந்த ஏழு மலைகளுடன் பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சிவபெருமானுக்கு வில்லாயிருந்த மேரு மலையும் சுழற்சியுற, எதிர்த்து வந்த மாமரமாகிய சூரன் உடல் பதைப்புற்று கூச்சலிட, வஞ்ச எண்ணத்தையும் செருக்கையும் அடக்கிய போரைப் புரிந்த பரிசுத்தமான ஒப்பற்ற வேலாயுதனே, மலைகள் மீது விருப்பம் கொண்டவனே, அகத்தியர் வணங்கிப் போற்றுகின்ற உத்தமனே, அசுரர்கள் கலக்கம் கொள்ள படையின் பலத்துடன் பழையதாய் நிற்கும் கிரெளஞ்ச மலையைத் தகர்த்து, படர்ந்துள்ள இறகுகளை உடைய அந்தக் கிரவுஞ்சனுடைய உடலில் உள்ள இரத்தத்தை கொடியாகிய கோழிக்குத் தந்த குமரனே, முரட்டுத் தன்மை உள்ள மலை இடத்தே தங்கி அங்கிருந்து பறக்கும் பச்சை நிறமான மயிலை வாகனமாக உடைய பெருமாளே. 
பாடல் 1139 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆந்தோளிகா 
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தனதத்தன தானன தந்தன
     தனதத்தன தானன தந்தன
          தனதத்தன தானன தந்தன ...... தனதான
உலகத்தினில் மாதரு மைந்தரும்
     உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை
          உயர்துக்கமு மோடுற வென்றுற ...... வருகாலன் 
உதிரத்துட னேசல மென்பொடு
     உறுதிப்பட வேவள ருங்குடில்
          உதிரக்கனல் மீதுற என்றனை ...... யொழியாமுன் 
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
     கதறிப்பத றாவுரை வென்றுயர்
          கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு ...... களிகூருங் 
கவலைப்புல மோடுற என்துயர்
     கழிவித்துன தாளிணை யன்பொடு
          கருதித்தொழும் வாழ்வது தந்திட ...... நினைவாயே 
இலகப்பதி னாலுல கங்களும்
     இருளைக்கடி வானெழு மம்புலி
          யெழில்மிக்கிட வேணியில் வந்துற ...... எருதேறி 
இருகைத்தல மான்மழு வும்புனை
     யிறையப்பதி யாகிய இன்சொலன்
          இசையப்பரி வோடினி தன்றரு ...... ளிளையோனே 
மலைபட்டிரு கூறெழ வன்கடல்
     நிலைகெட்டபி தாவென அஞ்சகர்
          வலியற்றசு ரேசரு மங்கிட ...... வடிவேலால் 
மலைவித்தக வானவ ரிந்திரர்
     மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ
          வடிவுற்றொரு தோகையில் வந்தருள் ...... பெருமாளே.
உலகில் மனைவி முதலிய பெண்களும், புதல்வர்களும், நெருங்கிய சுற்றத்தாரும், நல்ல வாழ்வுடன் வாழும் மற்ற உறவினர்களும், உயர் துக்கமுமோடு மிக்க துயரத்தோடு பந்துக்கள் என்று வந்து கூடும்படியாக வருகின்ற யமன், இரத்தத்துடன் நீர், எலும்பு இவைகளுடன் நல்ல உறுதியாக வளர்ந்துள்ள இந்த உடல் அழிய நெருப்பில் சேரும்படி என்னை இந்த வாழ்க்கையை விட்டு (அந்த யமன்) நீக்குதற்கு முன்பாக, கலகத்துக்கு இடம் தரும் சமய நூல்கள் பலவற்றைக் கற்று எதிர் வாதம்பேசியும், பதறியும், பேச்சில் வல்லவனாய் வென்று, கீழ் மக்களுக்கு உள்ள புத்தியைக் கொண்டவனாய், தீவினைக்கு உரிய எண்ணத்துடன் செருக்கு மிகும் சஞ்சலம் உறும் அறிவுடன் நான் இருக்க, நீ என் துக்கத்தை நீக்கி உனது இரண்டு திருவடிகளை அன்புடன் நான் தியானித்து வணங்கும் நல் வாழ்வை தந்திட நினைத்தருள்வாயாக. விளங்கும்படி பதினான்கு உலகங்களிலும் இருட்டை விலக்கி ஒழிப்பதற்காக வானில் எழுகின்ற சந்திரன் அழகு மிகுந்து பொலிய சடையில் வந்து பொருந்த, ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, இரண்டு கைகளிலும் மானும், மழுவும் விளங்குகின்ற கடவுள், அந்தத் தலைவராகிய இனிய சொற்களைக் கொண்ட சிவபெருமானுடைய மனதிற்குப் பொருந்தும்படி அன்புடன் இன்பகரமாக முன்பு உபதேசித்த இளையோனே. கிரெளஞ்ச மலை தாக்கப்பட்டு இரண்டு பிளவு உண்டாக, வலிய கடல் நிலை குலைந்து, அழகிய உலகத்தில் உள்ளவர்கள் அடைக்கலம் என்று முறையிட, வலிமை நீங்கிய அசுரத் தலைவர்களும் பொலிவு இழந்திட, கூரிய வேலினால் மலைக்கும்படியாக போர் செய்த ஞானியே, தேவர்களும், இந்திரர்களும், மலர் ஏந்திய கரங்களோடு சிறந்த தவசிகளும், வணங்கி நிற்க, அழகு பொருந்திய ஒப்பற்ற மயிலின் மீது வந்து அருளும் பெருமாளே. 
பாடல் 1140 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வலஜி 
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 
- எடுப்பு - /4/4/4 0 
நடை - தகதகிட
தனதனன தனதனன தானான தானதன
     தனதனன தனதனன தானான தானதன
          தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான
உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற
     பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற
          உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு ...... மந்தநாளில் 
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை
     திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும்
          உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ...... அந்தமார்பும் 
மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய
     மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர
          மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் ...... வந்துகூட 
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது
     விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து
          மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் ...... வந்திடாயோ 
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ
     அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட
          பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ...... நின்றநாகம் 
பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ
     பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு
          பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய ...... வென்றதீரா 
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட
     கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு
          குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் ...... குன்றுலாவி 
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய
     வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய்
          குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ...... தம்பிரானே.
உறவு முறையைச் சொல்லி சுற்றத்தினர் வாய்விட்டுக் கதறி அழ, ஊரில் உள்ளவர்களும் என்னைப் பிழைக்கவைக்கலாம் என்ற ஆசையைக் கைவிட, பறை, திமிலை, முரசு ஆகிய வாத்தியங்களின் ஒலி ஆகாய முகடு வரை எழ, உலகில் உள்ள பலரும் வாய்க்கரிசி இடும் அந்தக் கடைசி நாளில், உன்னுடைய கருணைத் திருமுக மலர்கள் ஒரு ஆறும், பன்னிரண்டு திருக்கரங்களுடன் கூடிய திரண்ட தோள்களும், அழகிய அணிகளை அணிந்துள்ள வரிசையான காதுகளும், நீண்ட கண்களும், இரண்டு திருவடிகளின் மீதும் விளங்கும் சிறப்பு மிக்க சதங்கையும், அழகு மிகுந்த அந்த மார்பும், வேதங்கள் ஒலிக்க, தேவர்கள் கற்பக மலர் மழை சொரிய, தேன் ஒழுகும் ஒப்பற்ற மணி மாலையின்மேல் பூணூலும் விளங்க, மயிலின் மேல் அழகு விளங்கும் நம்பியாக, முன்பு நிறைந்த அடியார்கள் உடன் வந்து கூட, யமனுடைய படைகள் அஞ்சி யமபுரத்தை நோக்கி ஓட்டம் பிடிக்கும்படி அவர்களுடன் போர் புரிந்து, பல வெற்றிச் சின்னங்களை வரிசை வரிசையாக ஊதி, உன்னுடன் வாது செய்பவர்களைத் தர்க்கித்து வென்று, குழந்தை அன்பு கொண்டவனான ஒரு மழலைச் சொல் பேச்சுள்ள அடி நாயேனை ஆட்கொள்ள இவவிடம் வந்து உதவ மாட்டாயோ? பிறைச் சந்திரன் போன்ற பற்களும், முரட்டு வலிமையும் கொண்ட அசுரர்கள் திரும்ப முடியாமல் மண்ணில் மாண்டு விழவும், ஏழு தீவுகளுடன் கூடிய இப் பூமண்டலம் நடுங்கவும், பதினான்கு உலகத்தினரும் அபயக் கூச்சலிடவும், பெண் யானை, ஆண் யானை (இவற்றின்) வலிமை பொருந்திய கூட்டங்கள் பாழ்பட்டு அழியவும், அஷ்ட திக்குகளைக் காத்து நின்ற கஜங்கள் இடம் விட்டு ஓட்டம் கொள்ளவும், நீண்ட மலைகள் இடிந்து விழவும், பெரிய கடல் வற்றிப் புழுதி கிளம்பவும், பெரிய வயிற்றை உடைய மகா காளி பூதங்களோடு பிணத்தின் கொழுப்பையும் மாமிசத்தையும் உண்டு, அந்தப் பேய்களோடு கூத்தாடவும், போர் செய்து வெற்றிகொண்ட தீரனே, குறக்குல மலை வேடர்களின் கொடி போன்ற வள்ளியின் திருவடிகளை வெட்கம் இல்லாமல் (நீ) சென்று பற்றி அருளும்பொருட்டு, கரடியும், புலியும் திரிகின்ற கடுமையான நீண்ட காட்டில் விளங்கி எழுந்த வேங்கையின் இள மர வடிவம் எடுத்து நின்று, பின்பு, நீண்டு உயர்ந்திருந்த வள்ளி மலையில் உலவியவனே, பொல்லாதவனாகிய முயலகன் என்னும் பூதத்தின் மீது நடனம் புரிகின்ற சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் பொருந்தி விளங்கும் தாய் பார்வதி பெற்றருளிய குமரனே, குருமூர்த்தியே, இறவாத தன்மைபெற்ற விண்ணோர்கள் விரும்பிப் போற்ற அவர்களுக்கு அருள் செய்த தம்பிரானே. 
பாடல் 114த - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -
தனன தந்தன தானா தானன
     தனன தந்தன தானா தானன
          தனன தந்தன தானா தானன ...... தனதான
உறவு சிங்கிகள் காமா காரிகள்
     முறைம சங்கிக ளாசா வேசிகள்
          உதடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை 
உடைய கொங்கையின் மீதே தூசிகள்
     பிணமெ னும்படி பேய்நீ ராகிய
          உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ...... கடல்ஞாலத் 
தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்
     வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள்
          அணிநெ ருங்கிக ளாசா பாஷண ...... மடமாதர் 
அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்
     கலவி யின்பமெ னாவே சோருதல்
          அலம லந்தடு மாறா தோர்கதி ...... யருள்வாயே 
பறவை யென்கிற கூடார் மூவரண்
     முறையி டுந்தமர் வானோர் தேரரி
          பகழி குன்றவி லாலே நீறெழ ...... வொருமூவர் 
பதநி னைந்துவி டாதே தாள் பெற
     அருள்பு ரிந்தபி ரானார் மாபதி
          பரவு கந்தசு வாமீ கானக ...... மதின்மேவுங் 
குறவர் தங்கள்பி ரானே மாமரம்
     நெறுநெ றென்றடி வேரோ டேநிலை
          குலைய வென்றிகொள் வேலே யேவிய ...... புயவீரா 
குயில்க ளன்றில்கள் கூகூ கூவென
     மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை
          குறவர் சுந்தரி யோடே கூடிய ...... பெருமாளே.
உறவு முறை கூறி பேசிக் கொண்டேயிருக்கும் விஷமிகள். காமத்துக்கு இருப்பிடமானவர்கள். (மாமா, அத்தான் என்று) உறவு கூறி மயக்கம் செய்பவர்கள். அதீதமான காமம் நிறைந்த பொது மகளிர். உதடுகள் (அதிகமாக ஈடுபட்டதால்) நோவுற்றவர்கள். வெட்கம் இல்லாத பயனற்றவர்கள். நகக் குறிகளை உடைய மார்பின் மேல் ஆடை அணிந்தவர்கள். பிணம் என்று சொல்லும்படி ஆவேச நீராகிய கள்ளை உண்டு, ஆடை நெகிழக் கொண்டாட்டம் ஆடுபவர்கள். கடல் சூழ்ந்த உலகில் மிகவும் பொல்லாத நெஞ்சத்தவர்களான பெரிய பாவிகள். தரித்திர நிலையைச் சேர்ப்பிக்கும் பாழான மூதேவிகள். ஆபரணங்களை நெருக்கி அணிந்தவர்கள். ஆசைப் பேச்சுக்களைப் பேசும் இள மாதர்கள். அழகில் மேம்பட்டு மாயை சம்பந்தப்பட்ட உருவத்தினர். அவர்களுடன் புணர்ச்சி இன்பமே வேண்டும் என்று கூறியே நான் தளர்ச்சி அடைதல் போதும், போதும். (இனி நான்) இத்தகைய தடுமாற்றம் அடையாமல் ஒப்பற்ற நற் கதியைத் தந்தருளுக. பறக்கும் தன்மையுள்ள பகைவர்கள் ஆகிய திரிபுரங்களின் கொடுமையைக் குறித்து முறையிட்ட தமக்கு வேண்டியவர்களான தேவர்கள் தேராகவும், திருமால் அம்பாகவும், மேரு மலை வில்லாகவும் கொண்டு, (திரிபுரங்களைச் சிரித்தே) சாம்பலாகும்படிச் செய்த சிவபிரானின் திருவடியைத் தியானித்தல் விடாதிருந்த காரணத்தால், அதிலிருந்து ஒப்பற்ற மூவர் மாத்திரம்* திருவடி நிழலைப் பெறும்படி அருள் பாலித்த சிவபெருமான் போற்றும் கந்த சுவாமியே, காட்டில் இருந்த குறவர்களின் தலைவனே, மாமரமாக நின்ற சூரன் நெறு நெறு என்று முறிந்து அடி வேருடன் நிலை குலைந்து அழியும்படி வெற்றி பெறும் வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய வீரனே, குயில்களும், அன்றில் பறவைகளும் கூகூகூ என்று ஒலி எழுப்ப, மலர்களினின்றும் பொங்கி எழுந்த தேன் சொட்டும் சோலைகளில், குறவர் குலத்து அழகியான வள்ளியுடன் சேர்ந்த பெருமாளே. 
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.
பாடல் 1142 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -
தானான தானன தனத்த தத்தன
     தானான தானன தனத்த தத்தன
          தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற
     வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி
          ஓயாத மாமய லுழற்றி னிற்படு ...... வம்பனேனை 
ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது
     மாராத காதலை மனத்தில் வைப்பது
          மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது ...... முந்திடாதே 
தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு
     நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது
          சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன ...... மென்றுநீபச் 
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்
     சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு
          சீர்பாத போதக மநுக்ர கிப்பது ...... மெந்தநாளோ 
மானாக பாயலில் படுக்கை யிட்டவர்
     மாமேரு வாரியில் திரித்து விட்டவர்
          மாடோடு போய்வரு மிடைக்குலத்தவ ...... ரன்றுவாவி 
வாய்நாக மோலிட பிடித்த சக்கிர
     வாளேவி யேகர வினைத்த றித்தவர்
          மாமாய னாயுல களித்த வித்தகர் ...... தங்கைவாழ்வே 
கானாரு மாமலை தினைப்பு னத்தினில்
     கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை
          காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் ...... கந்தவேளே 
காரேழு மாமலை யிடித்து ருக்கெட
     காராழி யேழவை கலக்கி விட்டுயர்
          காவான நாடர்கள் பகைச்ச வட்டிய ...... தம்பிரானே.
மாமிசம் பொருந்திய உடலுடன் பிராணவாயுவைத் தரிப்பதாகி, இறுதியில் அடியோடு அழுகிப் போகும் தன்மையான பாழான இந்தக் குடிசையை எடுத்து, அந்த உடலில் இருந்தவாறு இப்பூமியில் ஓய்வில்லாதபடி நிறைந்த காம இச்சை என்கின்ற சுழற்சியில் அகப்பட்டுள்ள துஷ்டனாகிய எனக்கு, வீண் செலவு செய்வதில் சாமர்த்தியமாக இருப்பதும், தெவிட்டாத ஆசை அடங்காத காமத்தை மனதில் வைத்திருப்பதும், ஊரார்களுடன் மாறுபட்டு ஊடி நிற்பதும் (ஆகிய இக்குணங்கள்) என்னைத் தள்ளிச் செலுத்தாமல், இனிமை ஊறுகின்ற பேச்சை உடைய விலைமாதர்கள் பால் ஒரு நாயைப் போல அவர்கள் வசப்பட்டு நிற்பது சீர் கேடான ஒழுங்கீனத்தில் கொண்டு விடும் அறியாமையாகும் என்று உணர்த்தி, கடம்பின் குளிர்ந்த நல்ல மலர்களைக் கொண்டு பக்தர்கள் போற்றித் துதித்து, அன்று மலர்ந்த பூ என்று பாராட்டி விரும்பும் உனது திருவடியை உணரும் ஞான உபதேசம் எனக்கு நீ அருள் செய்வது என்று கிடைக்கும்? பெரிய பாம்பாகிய ஆதிசேஷனாகிய படுக்கையைக் கொண்டவர், மேரு மலையை (மத்தாகும்படி) பாற்கடல் கடைந்த போது கடலில் சுழல விட்டவர், மாடுகளுடன் மேய்க்கப் போய் வரும் இடையர் குலத்தவர், அன்றொரு நாள் மடுவில் கஜேந்திரன் என்னும் யானை கூச்சலிட்டு அழைக்க, தன் கையில் பிடித்திருந்த சுதர்சனம் என்ற சக்கரமாம் வாளைச் செலுத்தி முதலையைப் பிளந்தவர், பெரிய மாயையில் வல்லவராய் உலகங்களைக் காத்தளிக்கும் பேரறிஞர் ஆகிய திருமாலின் தங்கையாகிய பார்வதியின் செல்வமே, காடுகள் நிறைந்த பெரிய வள்ளிமலையில் இருந்த தினைப் புனத்தில், காலின் மேல் விழுந்து, ஒப்பற்ற குறப்பெண்ணாகிய வள்ளியிடம் வேடர்கள் யாவருக்கும் தெரியாமல் சென்று, அன்புடன் அவளைக் கலந்த கந்தப் பெருமானே, மேகங்கள் தங்கும், (சூரனுக்குத் துணையாக இருந்த) சிறந்த ஏழு மலைகளைப் பொடி செய்தும், அவற்றின் உருவம் அழிய வைத்தும, கரிய கடல்கள் ஏழையும் கலக்கி விட்டும், மேலான கற்பகச் சோலைகள் உள்ள தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்தொழித்த தம்பிரானே. 
பாடல் 1143 - பொதுப்பாடல்கள் 
ராகம் - த்விஜாவந்தி 
தாளம் - ஆதி - 2 களை
தத்தன தனதன தானா தனதன
     தத்தன தனதன தானா தனதன
          தத்தன தனதன தானா தனதன ...... தனதான
எட்டுட னொருதொளை வாயா யதுபசு
     மட்கல மிருவினை தோயா மிகுபிணி
          யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ...... நிலையாக 
எப்படி யுயர்கதி நாமே றுவதென
     எட்பகி ரினுமிது வோரார் தமதம
          திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ...... லதிலேவீழ் 
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு
     முப்பதி னறுபதின் மேலா மறுவரு
          முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ...... வெளியாக 
முக்குண மதுகெட நானா வெனவரு
     முத்திரை யழிதர ஆரா வமுதன
          முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ...... தொருநாளே 
திட்டென எதிர்வரு மாகா ளியினொடு
     திக்கிட தரிகிட தீதோ மெனவொரு
          சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன் 
செப்புக வெனமுன மோதா துணர்வது
     சிற்சுக பரவெளி யீதே யெனஅவர்
          தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ...... குருநாதா 
மட்டற அமர்பொரு சூரா திபனுடல்
     பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு
          மற்புய மரகத மாதோ கையில்நட ...... மிடுவோனே 
வச்சிர கரதல வானோ ரதிபதி
     பொற்புறு கரிபரி தேரோ டழகுற
          வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ...... பெருமாளே.
(8 + 1) ஒன்பது தொளை வாயில்களை* உடைய பச்சை மண்ணாலாகிய பாத்திரம் (ஆகிய இந்த உடல்), நல் வினை, தீ வினை ஆகிய இரு வினைகளிலும் தோய்ந்து, மிகு பிணி இட்டிடை மிக்கு வரும் நோய்கள் ஒரு பொழுதினிலேனும் (உடலில்) உயிர் நிலைத்திருப்பதற்குத் தடைகள் செய்ய, எவ்வாறு மேலான நற் கதியை நாம் கரை ஏறி அடைவது என்று எள் பிளவுபட்ட அளவு கூட இதன் உண்மையை அறியாதவர்களாய் தங்கள் தங்களுடைய ஆசை போன வழியே துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலில் வீழ்கின்ற மூடர்களின் தீயவழியில் நான் விழாமல், வலிமை கொண்டதான தொண்ணூற்று ஆறு தத்துவங்களை** முற்றிக் கடந்த அறிவுக்கு எட்டாத ஞானம் உதயமாகும்படியான விளக்கமானது வெளிப்பட, சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள் அழிய, நான் நான் என்று எழுகின்ற ஆணவ உணர்ச்சியாகிய அந்த அடையாள முத்திரை அழிய, தெவிட்டாத அமுது என்னும்படியான முத்தமிழை தெரிந்து போதிக்க வல்ல (உனது) இனிய வாக்கால் உபதேசித்து அருளுவதும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமா? திடீரென்று (வாதித்து) எதிர்த்து நின்ற மகா காளியுடன் திக்கிட தரிகிட தீதோம் என்ற ஒரு ஓசையுடன் ஒப்பற்ற, விசித்திரமான, பல வகையதான, எதிர்நடனம் ஆடிய திருவடி மலர்களைக் கொண்ட சிவபெருமான், உபதேச மொழியாகிய பிரணவத்தின் உட்பொருளைச் சொல்லுவாயாக என்று கேட்க, முன்பு ஓதாமலே உணர வேண்டியதும், ஞான ஆனந்தமானதுமான மேலான ஞான ஆகாசமானதுமான பொருள் இதுதான் என்று அவருடைய வலது காதில் உபதேசித்து அருளிய குரு நாதனே, குறையற்ற வழியில் சண்டை செய்த சூரனாகிய தலைவனுடைய உடல் பொடிபட்டு அழிய வேகமாய் எதிர்த்து, கூரிய வேல் கொண்டு எறிந்திட்ட வளப்பம் பொருந்திய புயங்களைக் கொண்டவனே, பச்சை நிறம் கொண்ட அழகிய மயிலின் மீது நடனம் செய்பவனே, வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவர்கள் தலைவனாகிய இந்திரன், அழகு கொண்ட (ஐராவதம் என்ற) யானை, (உச்சைச்சிரவம் என்ற) குதிரை, தேர் இவைகளோடு பொலிவு பெற்று விளங்கும்படி அவனை வாழ வைத்த மருமகனே, வாழ்ந்து விளங்கும் தேவர்களின் பெருமாளே. 
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
பாடல் 1144 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -
தத்த தனதனன தான தானதன
     தத்த தனதனன தான தானதன
          தத்த தனதனன தான தானதன ...... தனதான
எத்தி யிருகுழையை மோதி மீனமதின்
     முட்டி யிடறியம தூதர் போலமுகி
          லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி 
எத்தி சையினுமொரு காம ராஜன்மிக
     வெற்றி யரசுதனை யாள வீசியட
          லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர் 
வித்தை தனிலுருகி யாசை யாகியவர்
     கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை
          மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே 
வெட்க மிலைநடவு மேகு மேகுமினி
     மற்ற வரையழையு மாத ரேயெனமுன்
          விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே 
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்
     அத்தி நகரமர சான வாள்நிருபன்
          ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற 
உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்
     வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும்
          ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி ...... லசுரேசன் 
பத்து முடிகள்துக ளாக வாகுஇரு
     பத்து மொருகணையில் வீழ நேரவுணர்
          பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே 
பச்சை மயிலில்வரு வீர வேல்முருக
     துட்ட நிருதர்குல கால வானவர்கள்
          பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே.
(முதல் 6 வரிகள் வேசையர் கண்களை வருணிக்கின்றன). இரண்டு குண்டலங்களையும் உதைத்து எறிதல் போலத் தாக்கி, மீன் பாய்வது போன்று சென்று (செவிகளை) முட்டித் தாக்கி, யம தூதுவர்களைப் போல விளங்கி, மேகத்தின் கரு நிறத்துடன் போட்டி இட்டு, போர் வீரர்களின் கையில் ஏந்திய வாளையும் வேல் முனையையும் எதிர்த்துச் சீறுவது போலக் கூர்மை உடையனவாய், எல்லா திக்குகளிலும் ஒப்பற்ற மன்மதராஜன் மிகவும் வெற்றியுடன் தனது அரசை எங்கும் ஆள விட்டது போலப் பரந்து, தமது வல்லமையைச் செலுத்தி, இளைஞர்களுடைய உயிரை வளைத்து இழுக்கும் கரிய கண்ணை உடைய அழகிய விலைமாதர்களின் சாமர்த்தியச் செயல்களால் உருக்கம் கொண்டு ஆசைப்பட்டு, அவர்கள் கைக்குள்ளே அகப்பட்டு, கைப்பொருள் செலவழிந்து போகும் வரை படுக்கையில் உள்ளம் உருகி, (பொருள் தீர்ந்த விட்ட காரணத்தால்) மோகம் முடிவு பெற, அதற்குப் பிறகு (இப்படி வெறும் கையுடன் வருவது) உமக்கு வெட்கமாக இல்லையா? வெளியேறும், போய்விடும் போய்விடும், இனி வேறு பேர்வழிகளை அழைத்து வாருங்கள், பெண்களே, என்று (சேடியர்களுக்குக் கட்டளை இட்டு) இவ்வாறு வீட்டு வாசலுக்கு முன்னாலிருந்து விரட்டிவிடும் வஞ்சனை எண்ணமுடைய வேசிகளின் மீதுள்ள ஆசை அற்றுத் தொலைய அருள் செய்வாயாக. ஒழுங்காக அமைந்த கோடுகளைக் கொண்ட கமுக மரத்தின் மீது வாளை மீன்கள் தாவிக் குதிக்கும் நீர் நிலைகளை உடைய (நாட்டின் தலைநகரான) அஸ்தினா புரத்தை ஆண்டுவந்த, வாள் ஏந்திய அரசனான துரியோதனன், சமாதானத்துக்கு உடன்படும் நினைவே முன்பு இல்லாமல், தனது தோள் பலத்தின் திடத்தையே (இறுமாப்புடன்) எடுத்துரைக்க, (போருக்கு) உடன்பட்ட, தருமன், பீமன், வேலேந்திய அருச்சுனன், வெற்றியே பெறும் நகுலன், சகாதேவன் ஆகிய பாண்டவர்களின் தேரினை மனமொத்துச் செலுத்திய சாரதியும் (கண்ணன்), வாட்போரில் ராவணனுடைய பத்துத் தலைகளும் பொடிபட, தோள்கள் இருபதும் ஒரே பாணத்தில் அற்று விழ, எதிர்த்து வந்த அசுரர்கள் யாவரும் அழிந்து இறக்கும்படி போரைச் செய்த கரிய மேகம் போன்றவனுமாகிய (ராமன்) திருமாலின் மருகனே, பச்சை மயிலின் மேல் ஏறிவரும் வீரனே, வேல் ஏந்தும் முருகனே, கொடுமையான அசுரர்கள் குலத்துக்கு காலனாகத் தோன்றியவனே, தேவர்கள் பக்தியுடன் திருவடியில் விழ, அவர்களுக்கு வாழ்வு உதவிய பெருமாளே. 
பாடல் 1145 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தத்த தந்தன தந்தன தந்தன
     தத்த தந்தன தந்தன தந்தன
          தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட
     வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட
          உற்ப லங்கள்சி வந்துக விந்திட ...... இந்த்ரகோபம் 
ஒத்த தொண்டைது வண்டமு தந்தர
     மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற
          வொக்க மென்தொனி வந்துபி றந்திட ...... அன்புகூர 
மிக்க சந்திர னொன்றுநி லங்களில்
     விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட
          மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ...... ளின்பமாதர் 
வித்த கந்தரு விந்துத புங்குழி
     பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை
          விட்ட கன்றுநி னம்புய மென்பத ...... மென்றுசேர்வேன் 
மைக்க ருங்கட லன்றெரி மண்டிட
     மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட
          மற்று நன்பதி குன்றிய ழிந்திட ...... வும்பர்நாடன் 
வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற
     மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற
          மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா 
குக்கு டங்கொடி கொண்டப ரம்பர
     சக்ர மண்டல மெண்டிசை யம்புகழ்
          கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ...... ணங்கிகாரா 
கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய
     மிக்க வங்கண கங்கண திண்புய
          கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ...... தம்பிரானே.
ஒன்று கூடி வண்டுகள் எழுந்து மொய்க்கும் கூந்தல் கலைய, மலை போன்ற பருத்த மார்பகங்கள் குழைதல் அடைய, நீலோற்பலம் போன்ற கண்கள் சிவந்து குவிய, தம்பலப்பூச்சி போன்று சிவந்த கொவ்வைக் கனியை ஒத்த வாயிதழ் துவட்சி உற்று அமுத ஊறலைத் தர, மெச்சும்படியான வண்டு, கரிய குயில், மெல்லிய புறா இவைகளின் ஒலிக்கு நிகரான மென்மையான புட்குரல் கண்டத்தில் தோன்றி எழ, அன்பு மிக்கெழ நன்றாகப் பிரகாசிக்கும் சந்திர காந்தக் கல் வேய்ந்துள்ள தளத்தில், பல வீரச் செயல்களை நிகழ்த்தி விளங்கும் நகரேகை படும்படி பக்குவமாக நல்ல பொருள் கிடைத்த அளவுக்குத் தகுந்த அன்பைத் தந்து கூடும் சிற்றின்ப மாதர்களின் சாமர்த்தியம் தருகின்ற சுக்கிலத்துக்குக் அழிவு உண்டாக்கும் பெண்குறிக்குள் விழுந்து அழிந்து நொந்து போகும் சிறு குடிலாகிய இவ்வுடலை விட்டு நீங்கி, உன்னுடைய தாமரை போன்ற மென்மை வாய்ந்த திருவடியை என்று கூடுவேன்? மிகக் கரிய கடல் அன்று தீப்பட்டு எரிய, அசுர உணர்ச்சி கொண்டிருந்த கிரவுஞ்ச மலையின் உடலம் நெருப்பிலே அழிய, மேலும் (சூரனுடைய) சிறப்பான நகரமாகிய மகேந்திரபட்டணம் வளம் குறைந்து பாழ்பட, தேவர் நாட்டு அரசனான இந்திரன் குலிஜாயுதத்தைக் கையில் தரித்த பதவியில் வாழ்வு பெற, வியக்கத்தக்க தேவயானையின் மார்பகங்கள் உனது திருப்புயம் பெற, செருக்கையும் கொடிய கோபத்தையும் கொண்ட வஞ்சக அசுரர்களைக் கொன்று விழுங்கிய வேலைக் கையில் தாங்கியவனே, சேவற்கொடியை கையில் ஏந்திய பராபர மூர்த்தியே, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இடங்களிலும், எட்டுத் திசையில் உள்ளவர்களும் உனது புகழை வெளிப்படுத்த, கொன்றை மலரைத் தரித்த (தந்தையாகிய) சிவபெருமானின் சிரத்தினை உனது திருவடியில் ஏற்றுக் கொண்டவனே, பூக்கொத்துகள் அவிழும் கடப்ப மலரில் நிலைத்துள்ள சிறந்த கடவுளே, கங்கணம் அணிந்த திருப்புயங்களை உடையவனே, வெற்றியையும் அழகையும் கொண்ட குற மங்கையாகிய வள்ளி நாயகி விரும்பும் தம்பிரானே. 
பாடல் 1146 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தான தத்தன தானன தானன
     தான தத்தன தானன தானன
          தான தத்தன தானன தானன ...... தனதான
ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
     மாத வர்க்கதி பாதக மானவர்
          ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள் 
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
     ஆர்த னக்குமு தாசின தாரிகள்
          ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக் 
கேது மித்தனை தானமி டாதவர்
     பூத லத்தினி லோரம தானவர்
          ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள் 
ஏக சித்ததி யானமி லாதவர்
     மோக முற்றிடு போகித மூறினர்
          ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே 
தாத தத்தத தாதத தாதத
     தூது துத்துது தூதுது தூதுது
          சாச சச்சச சாசச சாசச ...... சசசாச 
தாட டட்டட டாடட டாடட
     டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
          தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ 
தீதி தித்திதி தீதிதி தீதிதி
     தோதி குத்திகு தோதிகு தோதிகு
          சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு 
சேயெ னப்பல ராடிட மாகலை
     ஆயு முத்தமர் கூறிடும் வாசக
          சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே.
கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காதவர்கள், சிறந்த தவசிகளுக்கு மிக்க இடையூறுகளை விளைவித்தவர்கள், காமத்தின் வசத்தால் நெருப்புப் போல் கொதித்து வேதனை உறும் காளைப் பருவத்தினர், வேதம் ஓதுபவர்கள் இருக்கும் ஊர்களுக்கு துன்பம் விளைவிக்கின்ற அறிவிலிகள், யாவரிடத்தும் அலட்சியமாக நடந்து கொள்ளுபவர்கள், வேகமாக வந்து, நல்லவர்களிடத்து (ஏமாற்றி) இலாபம் அடைய விரும்புவர்கள், இரந்து கேட்போருக்கு கொஞ்சம் கூட தானம் செய்யாதவர்கள், உலகில் ஒருதலைப்பட (பாரபட்சமாகப்) பேசுபவர்கள், சிவபெருமானையும், திருமாலையும் வழிபடுவர்களை தாழ்மையாகப் பேசுபவர்கள், ஒரு முகப்பட்ட மனதுடன் தியானம் செய்யாதவர்கள், மிகுந்த காமத்துடன் இன்ப நிலையில் மூழ்கி இருப்பவர்கள், இழி குணம் படைத்தவர்கள், இவ்வளவு பேர்களும் ஏழு நரகங்களில் வீழ்ந்து அலைச்சல் உறுவார்கள். தாத தத்தத தாதத தாதத .. தூது துத்துது தூதுது தூதுது .. சாச சச்சச சாசச சாசச சசசாச தாட டட்டட டாடட டாடட .. டூடு டுட்டுடு டூடுடு டூடுடு .. தாடி டிட்டிடி டீடிடி டீடிடி டிடிடீடீ (இதே தாள ஒலிகளுடன்) பல மக்கள் கூத்தாட, சிறந்த கலைகளை ஆய்ந்துள்ள நற்குணம் உடையவர்கள் புகழ்ந்து போற்றிடும் தேவாரப் பாக்களைச் (சம்பந்தராக வந்து) அருளியவனே, சிவந்த நிறத்துடன் அழகாக நின்று கூத்து** ஆடிய பெருமாளே. 
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).** முருகவேள் சூரனை வென்றவுடன் ஆடிய கூத்து, துடிக் கூத்து.அசுரர் படைகளை எல்லாம் வென்றபின் ஆடிய கூத்து, குடைக் கூத்து.
பாடல் 1147 - பொதுப்பாடல்கள் 
ராகம் - .....; தாளம் -
தானன தத்தன தத்த தத்தன
     தானன தத்தன தத்த தத்தன
          தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான
ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற
     மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற
          லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம் 
ஓதிமி குத்தத வத்த வர்க்கிட
     ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி
          யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே 
மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்
     வாசமு லைக்குள கப்ப டுத்தியில்
          வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர் 
மாயம யக்கையொ ழித்து மெத்தென
     வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர
          வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ 
வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
     வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
          வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே 
வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை
     மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட
          வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக் 
காலயி லக்கணை தொட்ட ருட்கன
     மாலமை திக்கரை யிற்ற ரித்துல
          காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன் 
காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ
     நானில வித்ததி னைப்பு னத்தொரு
          காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே.
காதோலை அணிந்த குண்டலத்தைத் தாண்டி அப்புறம் ஓடி, ஒளிவிட்டு, செழிப்புற்று, வாசனையான எண்ணெய் தடவப் பெற்று, கரிய மணல் போன்ற கூந்தலின் நிழலில் மொய்க்கும் வண்டுகளின் கூட்டத்துடன் பொருந்தி, ஞான நூல்களைப் படித்துள்ள பெரிய தவசிகளுக்கு துன்பத்தையும் இன்பத்தையும் கொடுத்து, தனது அடையாளத்தை அவர்கள் மனதில் தழும்புபடச் செய்து, பாம்பினிடத்திலுள்ள விஷத்தைத் தங்கும்படி செய்து, கண்களாகிய அம்பைக் கொண்டு, காம மயக்கத்தை உண்டாக்கி, நல்ல செல்வப் பொருளை நறு மணம் கொண்ட மார்பகங்களின் சக்தியால் கைப்பற்றிக் கொண்டு, வீட்டுக்கு வா என்று அழைத்து முழுவதும் வசப் படுத்திக் கூட்டிச் சென்று உள்ளே புகுகின்ற விலைமாதர்களின் காம இச்சையை ஒழித்து, பக்குவமாக தேவர்களுக்கு அருள் செய்த (சரவணபவ என்னும்) ஷடாக்ஷர எழுத்து உண்மையை எனக்கும் மகிழ்ச்சியுடன் திருவருள் செய்திடக் கூடாதா? கடலினை அணையிட்டு குரங்குக் கூட்டத்துடன் அடைக்க வேண்டும் என்று சொல்லி, அதைக் கேட்ட அந்த நொடியிலேயே, மிக விரைவாக அந்தக் கடல் நீரில் மலைக் குவியல்களை நளன் என்னும் வானரத் தச்சன் கைகளால் மேலும் மேலும் வீசி எறிய, அவைகளை இணைத்து அமைத்து அணையாகக் கட்டி, அரக்கர்கள் வசமிருந்த இலங்கைப் பகுதியில் முன்பட்டுச் சேர்ந்து, (அங்கு ராமபிரான்) விபீஷணனுக்கு அருள் புரிந்து, அவனுடைய அண்ணன்களான கும்பகர்ணனும் ராவணனும் இறந்து ஒழிய, கூர்மையைக் காட்டும் அம்புகளை விடுத்த திருவருள் வீரம் நிறைந்தவரும், பொறுமைக் கரையில் நிலையாக நின்று உலகை ஆளும்படி (விபீஷணனுக்குக்) கொடுத்த பெருந்தன்மை வாய்ந்தவருமாகிய அருட் கடலாகிய திருமால் பெற்ற மன்மதனுடைய உடலை எரித்து ஒழித்த சிவபெருமான் ஈன்ற வீரனே, (வள்ளிமலையின்) பூமியில் விதைக்கப்பட்டு விளைந்த தினைப்புனத்தில் ஒப்பற்ற ஆசை மிகுந்து, வெகுவாக மயங்கி வள்ளிக்கு அருள் செய்த தம்பிரானே. 
பாடல் 1148 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனன தந்தனந் தனன தந்தன
     தனன தந்தனந் தனன தந்தன
          தனன தந்தனந் தனன தந்தன ...... தனதான
கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு
     குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர்
          கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக் 
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட
     முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர்
          கவர இங்கிதங் கெறுவி தம்பெற ...... விளையாடும் 
படைம தன்பெருங் கிளைதி ருந்திய
     அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி
          பணிநி தம்பஇன் பசுக முந்தர ...... முதிர்காம 
பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு
     மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக
          பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ...... தொருநாளே 
வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட
     மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட
          வருபு ரந்தரன் தனபு ரம்பெற ...... முதுகோப 
மகர வெங்கருங் கடலொ டுங்கிட
     நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற
          வனச னின்றழும் படிநெ ருங்கிய ...... வொருசூதம் 
அடியொ டும்பிடுங் கியத டங்கர
     வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய
          அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ...... யநுராக 
அவச மும்புனைந் தறமு னைந்தெழு
     பருவ தஞ்சிறந் தகன தந்தியின்
          அமுத மென்குயங் களின்மு யங்கிய ...... பெருமாளே.
ஓரங்கள் சிவந்து அகலமாய் விளங்கி, பேச்சைப் பேசுவது போல் பேசி, இரண்டு காதுகளையும் வீசித் தாக்கி, பரந்த ரேகைகளைக் கொண்டு விளங்குகின்ற கரிய கண்கள் துறவிகளுடைய மார்பையும் தொளை செய்வது போல் நீண்டு ஓட, ஆடை தளர்ந்து கரிய கூந்தல் சரிய மார்பகங்களைச் சுமப்பதாலும், அசைவுற்று இடுப்பு ஒடிந்து, உயிரையே கவரும்படி இனிமையுடனும் செருக்குடனும் காம விளையாட்டுகள் செய்யும் மன்மதனுடைய பெரிய சுற்றமாகிய படையான மகளிருடைய சுத்தமான சிவந்த இதழின் சுவையை அறிந்து, பாம்பின் படத்தை ஒத்த பெண்குறி இன்ப சுகத்தை தரப் பெறும் முற்றின காம மயக்கம் ஒழிந்து, உன்னைத் தியானித்து ஒப்பற்ற மெளனம் என்னும் கூட்டில் விளையாடும் (கிளியின்)* பேரின்ப நிலையை அடைந்து அதில் நிலைத்து திருவருளைப் பொருந்தி மகிழ்வதாகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? வடக்கே உள்ள பெரிய மலைகள் கலக்குண்டு, பூமியில் உள்ளவர்கள் அன்பு கொண்டு மகிழ்ச்சி உற, வந்து அடைக்கலம் புகுந்த இந்திரன் தன்னுடைய பொன்னுலகை அடையும்படி மிக்கக் கோபம் கொண்டது போல் பொங்கினதும், மகர மீன்களை உள்ளதுமான பெரிய கரிய கடல் அடங்கவும், அசுரனாகிய சூரனின் பெரிய சுற்றங்கள் முழுதும் அழிவுபட, பிரமன் நின்று அழுது ஓலமிடும்படி நெருங்கி வந்த மாமரமாகிய சூரனை அடியோடு பிடுங்கி பிளந்தெறிந்த பெருமை வாய்ந்த திருக் கரத்தை உடைய அழகனே, அழகிய வண்டுகள் (மலர்களைச்) சேர விரும்பிய (வள்ளிமலைக்) காட்டையும் அடிமை பூண்ட மனத்துடன், (வள்ளியை) வணங்கும்படி காமப்பற்றுள்ள மயக்கத்தைக் கொண்டு, மிகவும் முற்பட்டு எழுகின்றதும், சிறந்த மலை போல, பெருமை பொருந்திய யானை போன்றதும் அமுத மயமான மென்மையுள்ளதுமாகிய (வள்ளியின்) மார்பகங்களைத் தழுவும் பெருமாளே. * சுகம் என்பதற்கு கிளி, பேரின்பம் என்ற இரு பொருள் உண்டு.முருகன் அருணகிரிநாதருக்கு இறுதியில் கிளி உருவமும் தந்து, முக்தியும் நல்கினான்.
பாடல் 1149 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -
தனதன தனதன தத்தாத் தானன
     தனதன தனதன தத்தாத் தானன
          தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
     பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி
          கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங் 
கருகிய வினைமன துட்டாக் காதது
     சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது
          கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே 
விதமது கரமுரல் மொட்டாற் சாடிய
     ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்
          வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டா£க 
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
     நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக
          விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ 
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
     சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக
          பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும் 
பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு
     படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை
          படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ் 
சததள அமளியை விட்டாற் றேறிய
     சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு
          தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே 
தழைதரு குழைதரு பட்டாட் சாலவு
     மழகிய கலவிதெ விட்டாக் காதலி
          தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே.
கதறிக் கதறிப் படிக்கின்ற சாத்திரங்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முடியாத ஒரு தீர்மானமான பொருள். பதைபதைத்துப் பேசும் சமய வாதிகளால் எட்ட முடியாத ஒரு பெரிய ஜோதிப் பொருள். பிறப்பு நீங்கும்படி நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் ஒழிந்த பெரியோர்களால் மட்டும் காணக்கூடும் என்று சொல்லப்படும் ஒப்பற்ற தனிப் பொருள். இருண்ட (அஞ்ஞான) தீச் செயல் எண்ணங்களைக் கொண்ட மனதைத் தீண்டாத பொருள். வேதங்கள் ஒன்றுபட்டு ஒரு திரண்ட உருவாக விளங்கும் பொருள். பிழை இல்லாமல் எல்லாவற்றையும் விட்டொழித்தால் வந்து கூடுகின்ற அரிய பொருளை நான் உணராமல், பலவிதமான வண்டுகள் ஒலிக்கும் மலர் அரும்புகளால் தாக்குகின்ற, ரதியின் கணவனான மன்மதன் என்ற பெயர் கொண்ட, துஷ்டனோடு தொழில் புரிகின்றவர்களாகிய வேசியர் தருகின்ற, இளமை நிரம்பிய, இரு தாமரைகளான, கஸ்தூரி அணிந்த, குவிந்த மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், வில்லைப் போன்ற நெற்றியில் தீட்டப்பட்டுள்ள சிறிய பொட்டினாலும், அம்பைப் போல கூரியதாய், தந்திரம் நிறைந்த, கண் வலையினாலும் நான் பாதிக்கப்படுவதால், என் உடலில் உள்ள இரத்தம், எலும்பு, தசை, தோல் முதலிய எல்லா தாதுக்களும் வருந்தலாமோ? மலர் போன்ற திருவடிகளில் கழலைக் கட்டுவதற்குக் கூட அவசியம் இல்லாத குழந்தையே, வேதங்கள் உன் அடிகளைத் தொழுவதற்கு, அவைகள் எட்ட முடியாத குரு மூர்த்தியே. உண்பாயாக என்று அழகிய மார்பகங்களை ஈந்து கார்த்திகைப் பெண்கள் அறுவரும் நாள்தோறும் பால் தந்து அன்பு கொள்ள, பல முகங்களைக் கொண்ட பெரிய ஆறாகிய கங்கைநதியின் இடையே இருந்த ஒப்பற்ற நீர்நிலையாகிய (சரவணப்) பொய்கையில் புழு முதலிய பிராணிகள் அணுக முடியாத பசுமையான இலைகள் படர்ந்துள்ளதும், நறு மணம் கொண்ட முள்ளும், தண்டும் உடைய தாமரை மலர் மீது தங்கி நீ வாழ்கின்ற நூறு இதழ்களால் அமைந்த படுக்கையை விட்டு எழுந்து, கங்கை ஆற்றிலிருந்து நீங்கி புறப்பட்டு, கடல் நீர் வற்றிக் குறுகவும், வணங்காமுடியாகிய சூரனும், பொன்மயமான சிறந்த கிரவுஞ்ச மலையும் தொளைபட்டுப் பொடிப் பொடியாகும்படி வென்ற தலைவனே, நீ கொடுத்த (கரும்புத்) தழையால் மனம் குழைந்த பட்டுப் போன்றவளும், மிகவும் அழகான சேர்க்கை இன்பத்தில் தெவிட்டாத ஆசை தந்த தலைவியுமாகிய வள்ளியின் தலைவனே, கால்கள் பூமியில் தோயாத தேவர்களின் தம்பிரானே. 
பாடல் 1150 - பொதுப்பாடல்கள் 
ராகம் - .....; தாளம் -
தனதன தனதன தானன தானந்
     தனத் தனந்தன தனன தான தனதன
          தானான தான தனனந் தானந்
              தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான
கலவியி னலமுரை யாமட வார்சந்
     தனத் தனங்களில் வசம தாகி யவரவர்
          பாதாதி கேச மளவும் பாடுங்
              கவிஞ னாய்த்திரி வேனைக் காமக் ரோதத் ...... தூர்த்தனை யபராதக் 
கபடனை வெகுபரி தாபனை நாளும்
     ப்ரமிக் குநெஞ்சனை உருவ மாறி முறைமுறை
          ஆசார வீன சமயந் தோறுங்
              களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ...... சாத்திர நெறிபோயைம் 
புலன்வழி யொழுகிய மோகனை மூகந்
     தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு
          மாதேச வாழ்வை நிலையென் றேயம்
              புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ...... பூக்கழ லிணைசேரப் 
பொறியிலி தனையதி பாவியை நீடுங்
     குணத் ரயங்களும் வரும நேக வினைகளு
          மாயாவி கார முழுதுஞ் சாடும்
              பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ...... காப்பது மொருநாளே 
குலகிரி தருமபி ராம மயூரம்
     ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு
          வாராவு லாவி யுணரும் யோகங்
              குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ...... பார்த்தரு ளியபார்வைக் 
குரிசிலு மொருசுரர் பூசுர னோமென்
     றதற் கநந்தர மிரணி யாய நமவென
          நாராய ணாய நமவென் றோதுங்
              குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ...... றோற்றிய வசபாணிப் 
பலநக நுதியி னிசாசர னாகங்
     கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல்
          தோண்மாலை யாக அணியுங் கோவும்
              பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப் ...... பாற்பணி யிறைவாகைப் 
படமுக வடலயி ராபத மேறும்
     ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட
          வேலேவி வாவி மகரஞ் சீறும்
              பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத் ...... தாக்கிய பெருமாளே.
புணர்ச்சியின் இன்பங்களை எடுத்துப் பேசி, விலைமாதர்களுடைய சந்தனம் அணிந்த மார்பகங்களில் வசப்பட்டு, அந்த மாதர்களுடைய பாதம் முதல் கூந்தல் வரையும் பாடும் பாவலனாய் திரிகின்ற எண்ணம் கொண்ட, காம ஆசையும், கோபமும் கொண்ட காமுகனான என்னை, பிழைகள் செய்கின்ற வஞ்சகனாகிய என்னை, மிகவும் வருந்தத் தக்க என்னை, தினந்தோறும் திகைத்து நிற்கும் உள்ளம் கொண்டவனாகிய என்னை, வடிவமும் அழகும் அப்போதைக்கப்போது மாறுதல் அடைந்து, ஒன்றன் பின் ஒன்றாக ஒழுக்கக் குறைவு உள்ள சமயங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வஞ்சனைக்கு இடமான வழிகளைக் கற்று நான் பேசுவதே சரி என்று சாதித்துப் பேசும் என்னை, நன்னடையைக் கூறும் வேத நூல்களில் கூறப்பட்ட வழிகளை விட்டு விலகி, ஐம்புலன்கள் இழுத்துக் கொண்டு போகும் வழியிலே சென்று காமுகனாகிய என்னை ஊமையின் கனவுக்கு ஒப்பாகத் தோன்றி ஒரு நொடிப் பொழுதில் மாண்டு அழிவுறும் நிலையாமை உடைய இந்த வாழ்க்கையை நிலைத்திருக்கும் என்று நினைத்து, இந்த அழகிய பூமியில் பதி ஞானம் இல்லாமல், ஜீவான்மா சம்பந்தப்பட்ட பந்தங்களில் கட்டுப்பட்ட என்னை, உனது மலர் நிறைந்த திருவடி இணைகளில் சேர அறிவில்லாத என்னை, மகா பாபியாகிய என்னை, நெடியதாய் இருக்கும் சத்துவம், தாமதம், ராசதம் எனப்படும் மூன்று குணங்களையும் என்னைப் பீடிக்க வரும் பல வினைகளையும், உலக மாயையால் ஏற்படும் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை ஆகிய) துர்க்குணங்கள் யாவற்றையும் துகைத்து அழிக்க வல்ல மெய்ப் பொருளின் மேல் சிறிதளவும் கூட ஆசை இல்லாத என்னை காத்தருளும் ஒரு நாள் கிடைக்குமா? இமய மலை ஈன்ற அழகுள்ள மயிலான பார்வதி ஆசைப்படும்படி குவளை மலராகிய பாணத்தை எடுத்துக் கொண்டு வந்து உலாவி, சகலத்தையும் உணர வல்ல ஞான யோக நிலை தடுமாற அந்தப் பாணத்தைத் தன் மீது செலுத்திய மன்மதனை கோபித்து மேலே நெரித்து நோக்கிய பார்வையால் எரித்து, பின் அருளிய பெருமையைக் கொண்ட சிவபெருமானும், ஒரு தெய்வ வேதியன் ஓம் என்று தொடங்கிய பின்னர் இரணியாய நம என்று பாடம் ஆரம்பிக்க, நாராயணாய நம என்று ஓதிய சிறு பிள்ளையாகிய பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்ட நர சிம்ம வடிவத்தில் கொண்டிருந்த கைகளில் இருந்த பல நகங்களின நுனியைக் கொண்டு அந்த அரக்கனாகிய இரணியனின் தேகத்தைக் கிழித்து துளாவிக் கலக்கி, தாம் அணிந்திருந்த துளசி மாலையோடு (இரணியனின்) சிறு குடலையும தோளில் மாலையாக அணிந்து விளங்கிய தலைவனான திருமாலும், போற்றி வாழ்த்தவும், கற்று நிரம்ப ஆராய்ச்சி உடைய பிரகஸ்பதியைப் பணிகின்ற அரசனும், வெற்றி கொண்டதும் முக படாம் அணிந்துள்ளதும் வலிமை வாய்ந்ததுமான ஐராவதம் என்னும் யானையின் மேல் ஏறும் தலைவனுமான இந்திரனுடைய பயம் நீங்கவும், வடக்கே உள்ள பருத்த அடியை உடைய கிரௌஞ்ச மலை அழிய வேலாயுதத்தைச் செலுத்தி, தாண்டிப் பாய்ந்து மகர மீன்கள் சீறுகின்ற கடல் கோ கோ எனக் கூச்சலிட அதைத் தாக்கி, சூரன் (கடலில்) ஓட்டம் பிடித்து அழியும்படி அவனையும் தாக்கிய பெருமாளே.

பாடல் 1101 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்     தந்தனந் தந்தனந் ...... தனதான

தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்     தண்டவொன் றன்றொடுங் ...... கிடுமாவி 
தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்     தன்றுமென் றுந்தனந் ...... தனைநாடி 
நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்     சின்கணன் பொன்றில்மங் ...... கையர்நேசம் 
நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்     தின்பமொன் றின்றியிங் ...... குழல்வேனோ 
சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்     தொண்டனென் றன்றுகொண் ...... டிடுமாதி 
தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்     பங்கடிந் தென்பொடுந் ...... தொலையாநீர் 
அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்     தன்றுமின் றும்புனைந் ...... திடும்வேணி 
அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்     றண்டரண் டந்தொழும் ...... பெருமாளே.

கோரப் பற்களையும், துன்பத்தை ஊட்டும் கொடிய மனத்தையும் உடையவனாகிய யமன் சினத்துடன் எழுந்து நெருங்கி வர, அப்போது ஒடுங்கி நீங்கிவிடும் உயிர் (என்ற யாக்கையின் நிலையாமையைத் தெரிந்தும் கூட) பொது மகளிரிடம் அடைக்கலம் நீயே என்றும், அன்புப் பேச்சுக்களைப் பேசும் அந்த மாதர்களின் இனிய மொழிகளின் சூதைத் தெரிந்த அன்றும், அதன் பிறகு கூட எப்போதும், அவர்களுக்குக் கொடுக்கப் பொருளை நாடி, (இறைவா,) உன் மீது அன்பு என்பது சிறிதளவும் இல்லாமல், இதுதான் நல்லது என்று நினைத்து, மனதில் அன்பு ஒன்றுமே இல்லாத மாதர்களின் நட்பை நிலையாக என் கருத்தில் கொண்டு துன்பப்படுகின்ற மன நோய் அதிகரிக்க, உண்மையான சுகம் என்பதே இல்லாமல் இந்த உலகில் அலைவேனோ? சுந்தர மூர்த்தி நாயனாரின் உலக பாசம் நீங்க, பரிவுடன் வந்து நான் இவனது அடிமை என்று முன்பொரு நாள் அவரைத் தடுத்து ஆட்கொண்ட முதல்வரும், தும்பை மலர், செம் பொன் இதழ்களைச் சொரிந்து விளங்கும் கொன்றைமலர், உயிர்களின் வினையைத் தொலைக்கும் எலும்பு மாலையுடன் வற்றாத கங்கை நதி, அழகு மிக்கு விளங்கும் சந்திரன், நறு மணம் மிக்குள்ள மருக்கொழுந்து, (இவைகளை) பழங்கால முதல் இப்போதும் அணிந்த சடையை உடைய அன்பு நிறைந்தவருமான சிவபெருமானுடைய மனம் குளிர இனிய சொற்களைப் பேசுபவனாகிய கந்த சுவாமி என்று தேவர்களும் அண்டங்களும் வணங்கிப் போற்றுபவனாகிய பெருமாளே. 

பாடல் 1102 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்     தந்தனா தனதனந் ...... தனதான

உம்பரா ரமுதெனுந் தொண்டைவா யமுதமுண்     டுண்டுமே கலைகழன் ...... றயலாக 
உந்திவா வியில்விழுந் தின்பமா முழுகியன்     பொன்றிலா ரொடுதுவண் ...... டணைமீதே 
செம்பொனார் குடமெனுங் கொங்கையா பரணமுஞ்     சிந்தவாள் விழிசிவந் ...... தமராடத் 
திங்கள்வேர் வுறவணைந் தின்பவா ரியில்விழுஞ்     சிந்தையே னெனவிதங் ...... கரைசேர்வேன் 
கொம்புநா லுடையவெண் கம்பமால் கிரிவருங்     கொண்டல்ப்லோ மசையள்சங்க் ...... ரமபாரக் 
கும்பமால் வரைபொருந் திந்த்ரபூ பதிதருங்     கொண்டலா னையைமணஞ் ...... செயும்வீரா 
அம்புரா சியுநெடுங் குன்றுமா மரமுமன்     றஞ்சவா னவருறுஞ் ...... சிறைமீள 
அங்கநான் மறைசொலும் பங்கயா சனமிருந்     தங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.

தேவர்கள் (உண்ணும்) அமுதம் போன்றதும், கொவ்வைப் பழம் போலச் சிவந்ததுமான வாயிதழ் ஊறலாகிய அமுதத்தை மேலும் மேலும் பருகி, இடையணி கழன்று வேறுபட்டு விலகி விழ, கொப்பூழ் குளத்தில் விழுந்து சுகமாக முழுகி, அன்பு என்பதே இல்லாத பொது மகளிரோடு கலந்து சோர்வுற்று படுக்கையின் மேல், செம்பொன்னால் ஆகிய குடம் போன்ற மார்பின் மீதுள்ள ஆபரணங்கள் இடம் பெயர்ந்து விழ, ஒளி நிறைந்த கண்கள் செந்நிறம் கொண்டு கலக்கமுற, மதி போன்ற முகம் வேர்வை கொள்ளும்படியாகத் தழுவி, இன்பக் கடலிலே விழுந்து அமிழும் எண்ணம் உடையவனாகிய நான் என்ன விதமாக நற்கதியை அடைவேன்? தந்தங்கள் நான்கினைக் கொண்டதும்* வெண்ணிறமான தூண் போன்ற கால்களை உடையதும், பெரிய மலை போன்றதுமான ஐராவதத்தின் மீது வரும் மேகவாகனன், இந்திராணியுடைய மிக்கெழுந்தது போன்றதும், கனத்த குடம் போன்றதும், மலை போன்றதுமான மார்பகங்களை அணையும் இந்திரன் பெற்று வளர்த்த, மேகத்தை வாகனமாகக் கொண்டு செல்லும், தேவயானையைத் திருமணம் செய்துகொண்ட வீரனே, கடலும், பெரிய கிரெளஞ்ச மலையும், மாமரமாய் நின்ற சூரனும் அன்று அஞ்சி நடுங்கவும், தேவர்கள் அடைபட்டிருந்த சிறையினின்றும் வெளியேறவும், அங்கங்களைக் கொண்ட நாலு வேதங்களாலும் போற்றப்படுகின்ற பத்மாசனத்தில் வீற்றிருந்து, அழகிய கையில் ஏந்திய வேலாயுதத்தைப் பொருந்திச் செலுத்திய பெருமாளே. 
* ஐராவதம் என்னும் யானைக்கு நான்கு தந்தங்கள்.

பாடல் 1103 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தந்தனா தனதனந் தந்தனா தனதனந்     தந்தனா தனதனந் ...... தனதான

வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்     பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர 
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்     தந்தமா மதனலம் ...... விதமாக 
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்     டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம் 
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்     துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே 
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்     பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு 
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்     தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே 
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்     தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன் 
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்     டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.

வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில் வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்கள் சிதறுண்டு விழ, அணிந்துள்ள ஆடை நெகிழ, புதுமை வாய்ந்ததும், கனியின் சுவை கொண்டதும் ஆகிய வாயூறலைப் பருகுகின்ற அந்த சிறந்த மன்மத லீலையின் இன்பம் பலவிதத்திலும் வெளிவர, இருவர் உடல்களும் சோர்வடைந்து, அன்றில் பறவை போல இருவர் உள்ளமும் நன்றாக ஒன்றுபட்டு, காம நுகர்ச்சியை நிரம்பத் தருகின்ற இளமை வாய்ந்த மார்பகங்களை உடைய மாதர்களுடன் ஊடாடுவதை விட்டு, உன்னை நினைந்து உருக, எனக்கு என்று அருள் புரிவாய்? முன்பு பூமியை (திரிவிக்கிரமனாக) அளந்தவரும், பூமியை (கண்ணனாக) உண்டவருமான திருமாலின் மருகனே, செவ்விய பசுமையான சிறந்த பொன்னுலகத்தில் இந்திரனின் செல்வமும், அழகுச் சிறப்புக்கள் எல்லாமும் நிறைந்திருக்கும் மேலெழுந்து விளங்கும் தேவயானையை மணந்து, அன்புடனே ஒன்றுபட்ட மனத்தினனாக அமர்ந்து வீற்றிருப்போனே, தேவர்கள் மிக்க பயம் கொண்டு வாட்டம் அடையும்படி பெரிய தண்டாயுதம், வாள் இவைகளுடன் வந்த சூரனுடைய உடலைப் பிளந்து, எங்கும் கூச்சல் எழும்படி கோபித்து, அழகிய திருக்கையில் இருந்த வேல் சென்று தாக்கும்படியாகச் செலுத்தின பெருமாளே. 

பாடல் 1104 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானனா தந்தனந் தானனா தந்தனந்     தானனா தந்தனந் ...... தனதான

காதல்மோ கந்தருங் கோதைமார் கொங்கைசிங்     காரநா கஞ்செழுங் ...... கனிவாய்கண் 
காளகூ டங்கொடுங் காலரூ பம்பொருங்     காமபா ணஞ்சுரும் ...... பினம்வாழும் 
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதே னென்றயர்ந்     தோநமோ கந்தஎன் ...... றுரையாதே 
ஊசலா டும்புலன் தாரியே சென்றுநின்     றோயுமா றொன்றையுங் ...... கருதாதோ 
தாதகீ சண்பகம் பூகமார் கந்தமந்     தாரம்வா சந்திசந் ...... தனநீடு 
சாமவே தண்டவெங் கோபகோ தண்டசந்     தானமா தெங்கள்பைம் ...... புனமேவும் 
தீதிலா வஞ்சியஞ் சீதபா தம்படுஞ்     சேகரா தண்டையங் ...... கழல்பேணித் 
தேவிபா கம்பொருந் தாதிநா தன்தொழுந்     தேசிகா வும்பர்தம் ...... பெருமாளே.

காம ஆசையை எழுப்பும் மாதர்களின் மார்பகங்கள் அலங்கார மலைகள் என்றும், வாய் செவ்விய (கொவ்வைக்) கனி என்றும், கண்கள் ஆலகால விஷம், கொடிய யமனுடைய உருவம், போர் செய்யும் மன்மதனுடைய அம்பு என்றும், வண்டினங்கள் வாழும் கூந்தல் மேகம் என்றும், செவ்விய சொற்கள் இனிக்கும் வெல்லம், தேன் என்றும் (உவமைகள் சொல்லி) சோர்வடைந்து, ஓம் நமோ கந்தா என்று கூறாமல், அலைந்து கொண்டே இருக்கும் ஐம்புலன்கள் செல்லும் வழியிலேயே போய் அவ்வழியையே கடைப்பிடித்து அலைச்சல் ஓய்வுறும் படியான ஒரு வழியையும் என் உள்ளம் எண்ணாதோ? தாதகி, சண்பகம், கமுகு, சரக் கொன்றை, நறுமணமுள்ள மந்தாரம், குருக்கத்தி, சந்தனம் இவைகள் நிறைந்து விளங்கும் கரிய நிறத்தை உடைய வள்ளி மலையில், கொடிய கோபத்தை உடைய, வில்லை ஏந்திய, வேடர்கள் வம்சத்தில் வளர்ந்த பெண்ணாகிய வள்ளி எங்களுக்கு உகந்தவளாய் பசுமையான தினைப் புனத்தில் வாசம் செய்யும் குற்றமே இல்லாத வஞ்சிக் கொடி போன்ற வள்ளியின் அழகிய குளிர்ந்த திருவடிகள் படுகின்ற தலையை உடையவனே, பார்வதி தேவியின் ஒரு பாகத்தில் பொருந்தி உள்ள பழம்பொருளான சிவபெருமான் உனது தண்டையும் அழகிய கழலும் அணிந்த திருவடியை விரும்பித் தொழுத குரு மூர்த்தியே, தேவர்களுடைய பெருமாளே. 

பாடல் 1105 - பொதுப்பாடல்கள்
ராகம் - ..... ; தாளம் -

தானனா தத்தனத் தானனா தத்தனத்     தானனா தத்தனத் ...... தனதான

கோலகா லத்தைவிட் டாசுபா டக்கொடிக்     கோவைபா டக்கொடிக் ...... கொடிவாதிற் 
கோடிகூ ளக்கவிச் சேனைசா டக்கெடிக்     கூறுகா ளக்கவிப் ...... புலவோன்யான் 
சீலகா லப்புயற் பாரிசா தத்தருத்     த்யாகமே ருப்பொருப் ...... பெனவோதுஞ் 
சீதரா சித்ரவித் தாரமே செப்பிடக்     கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ 
ஆலகா லப்பணிப் பாயல்நீ ளப்படுத்     தாரவா ரக்கடற் ...... கிடைசாயும் 
ஆழிமா லுக்குநற் சாமவே தற்குமெட்     டாதரூ பத்தினிற் ...... சுடராய 
காலகா லப்ரபுச் சாலுமா லுற்றுமைக்     காகவே ளைப்புகக் ...... கழுநீராற் 
காதும்வே ழச்சிலைப் பாரமீ னக்கொடிக்     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.

வீண் ஆடம்பரங்கள் செய்யாமல் ஆசு கவிகள் பாடவும், கொடிக்கவி, கோவை என்னும் ப்ரபந்த வகைக் கவிகள் பாடவும்*, காக்கைக் கூட்டங்கள் போலக் கூச்சலிடும் வாதத்தில் கோடிக் கணக்கான குப்பை போன்ற பயனற்ற கவிஞர்களின் கும்பலை வெல்வேன் என்று கீர்த்தியைக் கூறும் பெரு மழை போலக் கவிகள் பாடவும் வல்ல புலவன் நான். நியதியுடன் உரிய காலத்தில் பெய்யும் மேகம் என்றும், பாரிஜாத தெய்வ மரம் என்றும், கொடையில் மேரு மலை என்றும் (பரிசு பெறுவோர்கள்) போற்றுகின்ற திருமால் போன்றவனே, (உன் மீது) நான் சித்திரக் கவி, வித்தாரக் கவி* பாட, நீ கேட்பாயாக என்றெல்லாம் நான் (செல்வந்தர்களிடம்) நின்று காத்திருத்தலை ஒழிவேனோ? ஆலகால விஷத்தைக் கொண்டுள்ள பாம்பாகிய ஆதிசேஷன் என்னும் படுக்கையில் நீண்டு படுத்து, பேரொலி செய்யும் கடலின் மத்தியில் பள்ளி கொண்டிருப்பவனும், சக்ராயுதம் ஏந்தியவனுமான திருமாலுக்கும், நல்ல சாம வேதம் முதலான வேதத் தாமரையின் மேல் வீற்றிருக்கும் பிரமனுக்கும் எட்டாத உருவத்தில் ஜோதி வடிவான, காலகாலனான பிரபுவாகிய சிவ பெருமான் மிகுதியான ஆசை கொண்டு பார்வதியை மணக்கும் பொருட்டு, தக்க சமயத்தில் செங்கழு நீர் மலர் என்ற ஐந்தாவது பாணமாகிய நீலோற்பலம் என்னும் பாணம் கொண்டு (சிவபிரானைத்) தாக்கிய கரும்பு வில்லை எந்தியவனும், பெருமை வாய்ந்த மீன் கொடியைக் கொண்டவனுமாகிய மன்மதனுடைய மைத்துனனாகிய** பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.96 வகைப் ப்ரபந்தங்களுள் கொடிக்கவி, கோவை இரு வகை.** மன்மதன் வள்ளி ஆகியோர் திருமாலின் மக்கள். வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.

பாடல் 1106 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானனா தத்தனத் தானனா தத்தனத்     தானனா தத்தனத் ...... தனதான

ஞாலமோ டொப்பமக் காளெனா நற்சொலைத்     தீதெனா நற்றவத் ...... தணைவோர்தம் 
நாதமோ டுட்கருத் தோடவே தர்க்கமிட்     டோயுநா யொப்பவர்க் ...... கிளையாதே 
நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்     டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா 
நேசமாய் நித்தநிற் றாளைநீ ளச்சமற்     றோதநீ திப்பொருட் ...... டரவேணும் 
கோலவா ரிக்கிடைக் கோபரா விற்படுத்     தானும்வே தக்குலத் ...... தயனாருங் 
கூறும்வா னப்புவிக் கூறுதீ ரக்குறிப்     போதுறா நிற்பஅக் ...... கொடிதான 
காலன்மார் புற்றுதைத் தானுமோர் கற்புடைக்     கோதைகா மக்கடற் ...... கிடைமூழ்கக் 
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்     காமவேள் மைத்துனப் ...... பெருமாளே.

உலகத்துடனே ஒத்து வாழுங்கள் மக்களே என்னும் நல்ல உபதேசத்தை கெட்டது என்று கருதி, நல்ல தவ நிலையில் பொருந்திய பெரியோர்களின் பேச்சின் ஒலியும், அவர்கள் சொன்ன புத்திமதியின் உண்மைக் கருத்தும் பின்னிட்டு ஓடும்படித் (தங்கள் கூச்சலில் அடங்க) அவர்களுடன் வாது பேசி, ஓய்ந்து போகும் நாய் போன்ற அறிவிலிகளிடம் அவர்கள் வாதுக்குத் தோற்றுப் போகாமல், நீல உருவம் விளங்கும், அடர்ந்த பீலிகளை உடைய, மயிலின் மேல் ஏறி, கொடுமையாளனான சூரன் அழிந்து சிதறும்படி சண்டை செய்யும் வேலனே, அன்புடன் நாள் தோறும் உனது திருவடிகளை நெடுநேரம் அஞ்சுதல் இல்லாமல் போற்றுதற்கு உரிய தர்ம சாஸ்திரப் பொருளை நீ எனக்குத் தர வேண்டும். அழகிய கடலின் மத்தியில் கோபம் நிறைந்த ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்துள்ள திருமாலும், வேதம் ஓதும் குலத்துப் பிரமனும், புகழப்படுகின்ற வானத்திலும் பூமியிலும் உள்ளோருக்கு கெடுதல் வரா வழிக்கு ஒரு குறிப்பை போதித்துக் காட்டுவதற்காக, அந்தக் கொடியவனான யமனுடைய மார்பில் படும்படி உதைத்த சிவபெருமானும் ஆகிய இம்மூவரும், ஒவ்வொரு கற்பு வாய்ந்த பெண்ணுடன் (முறையே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என்ற பெண்களுடன்) கூடி ஆசைக் கடலின் இடையே முழுகும்படி, நீலோற்பலத்தின் கொத்தான மலர்ப் பாணத்தை எய்த வல்லமை படைத்த மன்மதனின் மைத்துனப்* பெருமாளே. 
* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமால் மகளாகிய வள்ளியை மணந்தவன். எனவே முருகன் மன்மதனின் மைத்துனன்.

பாடல் 1107 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனா தனதனந் தனதனா தனதனந்     தனதனா தனதனந் ...... தனதான

கரவுசேர் மகளிர்குங் குமபயோ தரதனங்     களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங் 
கரசரோ ருகநகம் படவிடாய் தணிவதுங்     கமலநா பியின்முயங் ...... கியவாழ்வும் 
அரவுபோ லிடைபடிந் திரவெலா முழுகுமின்     பநல்மகோ ததிநலம் ...... பெறுமாறும் 
அதரபா னமுதமுந் தவிரவே மவுனபஞ்     சரமனோ லயசுகந் ...... தருவாயே 
பரவுமா யிரமுகங் கொடுதிசா முகதலம்     படர்பகீ ரதிவிதம் ...... பெறஆடல் 
பயில்பணா வனமுகந் தகுணமா சுணகணம்     பனிநிலா வுமிழுமம் ...... புலிதாளி 
குரவுகூ விளமரும் பிதழிதா தகிநெடுங்     குடிலவே ணியிலணிந் ...... தவராகங் 
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்     குமரனே யமரர்தம் ...... பெருமாளே.

வஞ்சக எண்ணம் கொண்ட விலைமாதர்களின் குங்குமச் செஞ்சாந்து அணிந்த, பாலைத் தரிப்பதான, மார்பகங்கள் மீது நீங்காமல் தூங்கும் இன்பமும், வளையல்கள் ஒலிக்கும் அல்லிமலர்க் கையில் உள்ள நகத்தின் கீறல் உடல் முழுவதும் படச் செய்து காம தாகத்தை தீர்த்துக் கொள்ளும் இன்பமும், தாமரை போன்ற உந்தியில் அணையும் வாழ்வாகிய இன்பமும், ஒரு பாம்பு சுற்றிக்கொள்வதைப் போல அவர்களது நுண்ணிய இடையைச் சுற்றிப் படிந்து காம இன்பத்தை அனுபவித்து இரவு முழுமையும் மூழ்குகின்ற மகிழ்ச்சியைத் தரும் இனிய பெருங் கடலின் சுகத்தைப் பெறுகின்ற வழியான இன்பமும், வாயிதழைப் பருகி அதில் கிடைத்து அனுபவிக்கும் இன்பமும், (இவை யாவும்) என்னை விட்டு அகல, மெளனம் என்னும் கூண்டில் இருப்பதால் சித்திக்கும் மன ஒடுக்கம் என்னும் சுக நிலையைத் தருவாயாக. பரந்து செல்லும் ஆயிரக் கணக்கான கிளைகளாய் திசைகள் நோக்கும் இடமெல்லாம படர்ந்து செல்லும் கங்கை, வித விதமான ஆட்டங்களை ஆடி, பயிலும் படங்களை உடையதும், காட்டு வாழ்க்கையில் மகிழும் குணத்தை உடையதும் ஆகிய பாம்பின் கூட்டம், குளிர்ந்த ஒளிக் கிரணங்களை வீசும் சந்திரன், அருகம் புல், குராமலர், வில்வம், பூ அரும்புகள், கொன்றை, ஆத்தி (இவைகளைத் தமது) நீண்டு வளைந்துள்ள சடையில் அணிந்த சிவபெருமானின் உடலம் குழையும்படி அன்புடனே தழுவிய பார்வதி நாயகி பெற்றருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1108 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனா தனதனந் தனதனா தனதனந்     தனதனா தனதனந் ...... தனதான

வடிவவேல் தனைவெகுண் டிளைஞரா வியைவளைந்     தமர்செய்வாள் விழியர்நெஞ் ...... சினில்மாயம் 
வளரமால் தனைமிகுந் தவர்கள்போ லளவிவந்     தணுகுமா நிதிகவர்ந் ...... திடுமாதர் 
துடியைநே ரிடைதனந் துவளவே துயில்பொருந்     தமளிதோய் பவர்வசஞ் ...... சுழலாதே 
தொலைவிலா இயல்தெரிந் தவலமா னதுகடந்     துனதுதாள் தொழமனந் ...... தருவாயே 
படியெலா முடியநின் றருளுமா லுதவுபங்     கயனுநான் மறையுமும் ...... பரும்வாழப் 
பரவையூ டெழுவிடம் பருகிநீள் பவுரிகொண்     டலகையோ டெரிபயின் ...... றெருதேறிக் 
கொடியவா ளரவிளம் பிறையினோ டலைசலங்     குவளைசேர் சடையர்தந் ...... திருமேனி 
குழையஆ தரவுடன் தழுவுநா யகிதருங்     குமரனே யமரர்தம் ...... பெருமாளே.

ஒளி வீசும் வேலாயுதத்தைப் போட்டியிட்டுக் கோபித்து இளைஞரது உயிரைச் சூழ்ந்து போர் செய்யும் வாள் போன்ற கண்களை உடையவர்களாய், உள்ளத்தில் வஞ்சனை எண்ணம் உண்டாகிப் பெருக, ஆசை மிக்கவர்கள் போல நடித்து, அளவளாவிப் பேசி வந்து, நெருங்கி பெரிய செல்வத்தைக் கைப்பற்றும் விலைமாதர்களின் உடுக்கை போன்ற இடை மார்பகங்களின் கனத்தினால் நெகிழ்ச்சி உறவே, தூங்குவதற்குப் பொருந்தியுள்ள படுக்கையில் சேர்க்கையில் ஈடுபடும் அவ்வேசையர்களின் வசத்தில் மனக் கலக்கம் அடையாமல், அழிதல் இல்லாத ஒழுக்க நெறியை அறிந்துகொண்டு வீணானது இன்னதெனத் தெரிந்து உனது திருவடிகளை வணங்க மனப் பக்குவத்தைத் தந்து அருளுக. உலகம் முழுதும் பரவி நின்று அருள் புரிகின்ற திருமால் பெற்ற பிரமனும், நான்கு வேதங்களும், தேவர்களும வாழும்பொருட்டு, பாற்கடலினின்றும் எழுந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு, பெரிய நடனத்தை பேய்களுடன் ஆடி, நெருப்பைக் கையில் ஏந்தி, (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, கொடுமை வாய்ந்த ஒளி விடும் பாம்பு, இளம் பிறையுடன், அலை வீசும் கங்கை நீர், குவளை மலர் (இவைகள் சேர்ந்துள்ள) சடையர் ஆகிய சிவபெருமானுடைய அழகிய உடல் குழையும்படி அன்புடன் தழுவுகின்ற பார்வதி தேவி பெற்று அருளிய குமரனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1109 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்ததன தானான தத்ததன தானான     தத்ததன தானான ...... தனதான

கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய     கட்டுவிடு மோர்கால ...... மளவாவே 
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு     கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன் 
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி     யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன் 
எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத     இட்டமினி தோடார ...... நினைவாயே 
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்     தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத் 
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால     சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே 
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ     மத்தமயில் மீதேறி ...... வருநாளை 
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.

துன்பத்தைத் தருகின்ற வியாதிகளும், பிற கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல் உலக மாயையின் பந்தத்தை விடுகின்ற, உயிர் போகும் சமயத்தைத் தெரிந்துகொண்டு, சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த நீண்ட வாழ்க்கையும், கற்பு நெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும் அழியும்படியாக பெரிய யமன் அனுப்பின ஒப்பற்ற தூதுவர்களும் தாக்க, வினைகளால் மூடப்பட்டு விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக, உன்னைப் போற்றி தினமும் இயல், இசை, நாடகம் என்ற மூவகைப்பட்டத் தமிழால் நான் துதிக்க, விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக நீ நினைந்தருள்வாயாக. பொல்லாதவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வேதனை உற்றுக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்கள் தோல் கொண்ட, அகன்ற மார்பில் தொளை படும்படிச் செலுத்திய கூர்மையான வேல் வீரனே, ஊழிக்கூத்து செய்யும் சிவபெருமானுடைய பாலனே, பிழையற்ற தமிழை நன்கு அறிந்த ஞானமுள்ள முருகனே, நறு மணம் கொண்ட தாமரையில் வீற்றிருக்கும் நான்கு வேதங்களை ஓதும் பிரமனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில் அமையும்படி செறுக்குற்ற மயிலின் மேல் நீ ஏறி வரும் நாளில், சேமித்து வைக்கப்பட்ட பொருள் போல் நாள்தோறும் அடியார்களை வாழ வைத்த கருணைத்திறம் நீங்காத பெருமாளே. 

பாடல் 1110 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்ததன தானான தத்ததன தானான     தத்ததன தானான ...... தனதான

பக்கமுற நேரான மக்களுட னேமாதர்     பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான 
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை     பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற் 
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு     பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன் 
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது     புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே 
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்     எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே 
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள     எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா 
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ     மத்தமயில் மீதேறி ...... வருவோனே 
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.

பக்கத்தில் சூழ்ந்து நிற்கும் நல்லொழுக்கம் நிறைந்த பிள்ளைகளும் மாதர்களும் அன்புடன் உடலின் மேல் மேன்மையான பட்டாடையால் மூடி, மாலையை அணிவித்து நீண்ட ஒரு பாடையைப் பற்றிக் கொண்டு அணைபவர்கள் கூவி அழ, அலை வீசும் நீரில் படிந்து முழுகி, மிஞ்சியிருந்த துக்கமும் நீங்கி விலக, மாற்றார்கள் போல நடந்துகொண்டு, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்ட, உயிர் நீங்கும் முன்பே, உனது அழகிய திருவடியைத் தினமும் உள்ளத்தில் அன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுக. கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அழிந்து போகும்படி திருவுள்ளம் கொண்ட, (சூரிய, சந்திர, அக்கினி என்னும்) மூன்று கண்களை உடைய, மகா தேவராகிய சிவபெருமான், எல்லாப் பொருளும் எவ்விடமும் தாமாகவே நிற்கும் ஈசரின் பெரிய செல்வமே, ஆழம் காண முடியாத, மிகப் பரந்த கடல் வற்றவும், பழைய சூரன் இறந்து படவும், மேற் சென்று எதிரெழுந்த வலிமை வாய்ந்த வேலனே, மக்களும், விண்ணோர்களும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து வர, களிப்பு மிகுந்த மயில் மீது ஏறி நகர்வலம் வருவோனே, சேமித்து வைத்த நிதியைப் போல விரும்பி தினந்தோறும் வந்து தொழும் அடியார்கள் வாழும்படி, அவர்கள் மேல் வைத்த கருணைத் திறம் நீங்காத பெருமாளே. 

பாடல் 1111 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானதன தந்தான தானதன தந்தான     தானதன தந்தான ...... தனதான

நீருநில மண்டாத தாமரைப டர்ந்தோடி     நீளமக லஞ்சோதி ...... வடிவான 
நேசமல ரும்பூவை மாதின்மண மும்போல     நேர்மருவி யுண்காத ...... லுடன்மேவிச் 
சூரியனு டன்சோம னீழலிவை யண்டாத     சோதிமரு வும்பூமி ...... யவையூடே 
தோகைமயி லின்பாக னாமெனம கிழ்ந்தாட     சோதிஅயி லுந்தாரு ...... மருள்வாயே 
வாரியகி லங்கூச ஆயிரப ணஞ்சேடன்     வாய்விடவொ டெண்பாலு ...... முடுபோல 
வார்மணியு திர்ந்தோட வேகவினி றைந்தாட     மாமயில்வி டுஞ்சேவல் ...... கொடியோனே 
ஆரியன வன்தாதை தேடியின மும்பாடு     மாடலரு ணஞ்சோதி ...... யருள்பாலா 
ஆனைமுக வன்தேடி யோடியெய ணங்காத     லாசைமரு வுஞ்சோதி ...... பெருமாளே.

நீரும் பூமியும் சம்பந்தப்படாது தழைத்து விளங்கும் (நாலிதழ்த் தாமரை ஆகிய மூலாதாரம்,* ஆறிதழ்த் தாமரையாகிய சுவாதிஷ்டானம், பத்து இதழ்த் தாமரையாகிய மணி பூரகம், பன்னிரண்டு இதழ்த் தாமரையாகிய அனாகதம், பதினாறு இதழ்த் தாமரையாகிய விசுத்தி, இரண்டு அல்லது மூன்று இதழ்த் தாமரையாகிய ஆக்ஞை ஆகிய) ஆதாரங்களின் வழியாக (சிவ யோக நெறியில்) படர்ந்து சென்று, நீளம் அகலம் இவை எல்லை அற்று விளங்கும் ஜோதி சொரூபமான, சிவ நேசத்தால் பெறப்படும் சிவமாதினை திருமணம் செய்து கொண்டது போல அந்தச் சிவச்சுடருடன் நேராகப் பொருந்தி, உள்ளத்தில் நீங்காத அன்புடன் இருந்து, சூரியன், சந்திரன் ஆகியவர்களின் ஒளி எட்ட முடியாத பேரொளி பொருந்தும் அந்த ஜோதி மண்டல பூமியில், தோகை உடைய மயிலைச் செலுத்தியவனாகிய முருகன் இவனே என்று நான் மகிழ்ந்து கூத்தாட, உனது ஒளி வீசும் வேலையும் கடப்ப மாலையையும் தந்தருளுக. கடலின் எல்லாப் பகுதிகளும் கூசி நிலை குலையவும், ஆயிரம் படங்களை உடைய ஆதி சேஷன் வாய் பிளந்து வெளிப்பட்டு ஓடவும், (அது அங்ஙனம் ஓடும்) எட்டுத் திசைகளிலும் நட்சத்திரங்கள் உதிர்வன போல (அப்பாம்பின்) உயர்ந்த ரத்தின மணிகள் உதிர்ந்து சிதறவும், அழகு ததும்பி ஆடுகின்ற சிறந்த மயிலைச் செலுத்தும் சேவல் கொடியை உடையவனே, பிரமனும், அவனுடைய தந்தையாகிய திருமாலும் தேடி நின்று (இன்னமும் காணாது), பாடிப் போற்றும் திரு நடனம் புரிந்த செஞ்சோதியாகிய அண்ணாமலையார் அருளிய பாலனே, யானைமுகனான கணபதி வள்ளி இருக்கும் இடத்தைத் தேடி ஓடியே வந்து நெருங்கும் அளவுக்கு அழகிய காதலாசையை வள்ளியின் மேல் கொண்ட ஜோதி வடிவமான பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 1112 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹிந்தோளம் தாளம் - ஸங்கீர்ணசாபு - 4 1/2 
தகதிமிதக-3, தகிட-1 1/2 - எடுப்பு - 3/4 இடம்

தனதனன தானதத்த தனதனன தானதத்த     தனதனன தானதத்த ...... தனதான

சுட்டதுபோ லாசை விட்டுலகா சார     துக்கமிலா ஞான ...... சுகமேவிச் 
சொற்கரணா தீத நிற்குணமூ டாடு     சுத்தநிரா தார ...... வெளிகாண 
மொட்டலர்வா ¡£ச சக்ரசடா தார     முட்டவுமீ தேறி ...... மதிமீதாய் 
முப்பதுமா றாறு முப்பதும்வே றான     முத்திரையா மோன ...... மடைவேனோ 
எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ     னப்பிரமா வோட ...... வரைசாய 
எற்றியஏ ழாழி வற்றிடமா றாய     எத்தனையோ கோடி ...... யசுரேசர் 
பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு     பத்திருதோள் வீர ...... தினைகாவல் 
பத்தினிதோள் தோயு முத்தமம றாது     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.

கையிலுள்ள ஒரு சூடான பொருளை கை எப்படி உதறுகிறதோ, அது போல ஆசைகளை நான் உதறித்தள்ளி, உலக வாழ்வில் ஏற்படும் துயரங்கள் அற்ற ஞான சுக நிலையை நான் அடைந்து, சொல்லுக்கும், மனத்திற்கும் எட்டாது நின்று, குணங்களே இல்லாத, பரிசுத்தமான, சார்பற்றதாக விளங்கும் பர வெளியை நான் கண்டு, மொட்டுக்கள் மலர்ந்த தாமரையாம் ஆறு ஆதார குண்டலினி சக்கரங்கள்* அனைத்திலும், அவற்றைக் கடந்தும் இருப்பதுவும், அமுதைப் பொழியும் சந்திரனுக்கு மேலானதும் ஆன, தொண்ணூற்றாறு** (30+36+30 = 96) தத்துவங்களுக்கும் வேறுபட்டதான அடையாள அறிகுறியாகிய மெளன நிலையை நான் அடைவேனோ? தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும், கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும், அலைகள் வீசும் ஏழு கடல்கள் வற்றிவிடவும், பகைமையோடு வந்த பல கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும் அழிபடவும், ஒப்பற்ற சூரன் இறந்து படவும், பராக்கிரமம் நிறைந்த வேலைச் செலுத்திய பன்னிரு தோள் வீரா, தினைப்புனத்தைக் காவல் செய்த கற்புடை நாயகி வள்ளியின் தோள்களைத் தழுவும் உத்தமனே, நிலைத்த மனதுடன் பக்தி செய்து தொழும் தேவர்களின் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

பாடல் 1113 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்ததனா தான தத்ததனா தான     தத்ததனா தான ...... தனதான

மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு     மக்களுமா றாத ...... துயர்கூர 
மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ     வைத்தவர்தா மேக ...... மதிமாய 
நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு     நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன் 
நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி     நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே 
நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத     னற்றவர்தா நாட ...... விடையேறி 
நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு     நற்றுணைவா ஞால ...... மிகவாழப் 
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக     பத்தியதா மாறு ...... முகநாளும் 
பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.

மைத்துனர்களும், சிறந்த மனைவியும், தாயும், குழந்தைகளும் நீங்காத துயரம் மிக அடைய, குறைவில்லாது (நன்கு எரியும்) ஒரு நெருப்பில் இந்த உடம்பையே வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் வீட்டுக்குச் செல்ல, அறிவு கலங்கும்படி உறுதியாக ஒரு நாளைக் குறிப்பிட்டு, (அந்த நாளில் யமன்) தனது தூதர்களை அனுப்பும், பெரும் அளவுக்குப் பட வேண்டிய வேதனைகள் என்னை நெருங்குவதற்கு முன்பாக, மனம் நெகிழ்ந்து உருகி, ஞான நிலையை அடைந்து, உனது திருவடிகளை வணங்கி நாள் தோறும் நான் வாழும் பொருட்டு அருள் புரிவாயாக. விஷம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, ரிஷப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய சிறப்புள்ள புதல்வனே, சூரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல துணைவனே, உலகோர் சிறப்பாக வாழும்படி, பச்சையான ஒளி வீசும் தோகையைக் கொண்ட உடலை உடைய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகனே, வரிசையாயுள்ள ஆறு திருமுகங்களிலும் நாள் தோறும் அன்பு மேற் கொண்டவனே, (சரவணபவ என்ற) ஆறெழுத்துக்கு உரியவனே, உலகெல்லாம் வலம் வந்த திருவடிகளை உடையவனே, உன்னைப் பக்தியுடன் போற்றிப்பணியும் தேவர்களின் பெருமாளே. 

பாடல் 1114 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன     தத்தனத் தத்ததன ...... தனதான

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு     சத்துவிட் டப்படிபொ ...... லடியேனுஞ் 
சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி     சத்துவத் தைப்பிரிய ...... விடும்வேளை 
சுத்தமத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு     தொக்குசற் றுக்கடையன் ...... மிடிதீரத் 
துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி     சுற்றவிட் டுக்கடுகி ...... வரவேணும் 
வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய     வெற்றிசத் திக்கரக ...... முருகோனே 
வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல     விட்டபச் சைச்சரண ...... மயில்வீரா 
கத்தர்நெட் டுச்சடையர் முக்கணக் கக்கடவுள்     கச்சியப் பர்க்கருள்செய் ...... குருநாதா 
கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர்     கற்பினுக் குற்றுபுணர் ...... பெருமாளே.

கண்ணியில் அகப்பட்ட பறவை தன் சக்தியை இழந்து விட்டது போல், தத்துவச் செயல்களால் அடியேனாகிய நானும் ஒடுங்கி, இந்தப் பூமியில் பதர் போல் பயனற்றவனாக ஆகி தடுமாற்றம் உள்ள பேச்சுக்களைப் பேசி, உண்மைப் பொருளை விட்டு விலகிப் போகும் போதெல்லாம், பரிசுத்தமான வீட்டுப் பேற்றை அடைந்துள்ள சிறந்த பக்தர்களோடு (என்னை) ஒன்று கூட்டிச் சேர்த்து, தயை செய்து கடையவனாகிய எனது வறுமை தொலைய, பவளம், முத்து இவைகளின் நிறம் கொண்ட பாதங்களை உடைய, பச்சை நிறமானதும், வெற்றியே கொண்டதுமான குதிரையாகிய மயிலை, சுழல்வது போல வேகமாகச் செலுத்தி வந்தருள வேண்டும். ஞானம் பொருந்திய யானை, பவள நிறம் கொண்ட பெரு வயிற்றை உடைய அண்ணல் கணபதிக்குத் தம்பியே, வெற்றி பொருந்திய வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, கிரெளஞ்ச மலையும் எட்டு திக்குகளும் வட்டமாகச் சுற்றிச் சுற்றிச் சுழலும்படிச் செய்த பச்சை நிறமுள்ள தோகையைக் கொண்ட மயில் வீரனே, தலைவர், நீண்ட சடையை உடையவர், (சூரியன், சந்திரன், அக்னி என்ற) முன்று கண்களை உடையவர், (வானமே ஆடையாக உடுத்திய) திகம்பரராகிய கடவுள் காஞ்சியில் வீற்றிருக்கும் சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே, கற்பக மரமுள்ள தேவநாட்டுக் கிளியாகிய தேவயானைக்கு மனம் உருகியவனே, உன் பதத்தில் ஈடுபட்டு குறவர்கள் வளர்த்த கற்புடைய வள்ளியை அடைந்து, அவளை அணைந்த பெருமாளே. 

பாடல் 1115 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன     தத்தனத் தத்ததன ...... தனதான

மக்களொக் கற்றெரிவை பக்கமிக் கத்துணைவர்     மற்றுமுற் றக்குரவ ...... ரனைவோரும் 
வைத்தசெப் பிற்பணமும் ரத்நமுத் திற்பணியு     மட்டுமற் றுப்பெருகு ...... மடியாரும் 
புக்குதுக் கித்தெரிகள் தத்தவைக் கப்புகுது     பொய்க்குமெய்க் குச்செயலு ...... முருகாதே 
புஷ்பமிட் டுக்கருணை நற்பதத் தைப்பரவு     புத்திமெத் தத்தருவ ...... தொருநாளே 
செக்கர்கற் றைச்சடையில் மிக்ககொக் கிற்சிறகு     செக்கமுற் றச்சலமு ...... மதிசூடி 
சித்தமுற் றுத்தெளிய மெத்தமெத் தத்திகழு     சித்தமுத் திச்சிவமு ...... மருள்வோனே 
கொக்குறுப் புக்கொடுமை நிற்கும்வட் டத்தசுரை     கொத்தினொக் கக்கொலைசெய் ...... வடிவேலா 
கொற்றவெற் றிப்பரிசை யொட்டியெட் டிச்சிறிது     குத்திவெட் டிப்பொருத ...... பெருமாளே.

குழந்தைகள், சுற்றத்தார், மனைவி, பக்கத்தில் நிறைந்துள்ள சகோதரர்கள், மேலும் உள்ள குரு முதலிய பெரியோர்கள் எல்லோரும், (நான்) சேகரித்து வைத்த செப்புக் காசுகளும், ரத்தினம் முத்தால் ஆன அணிகலன்களும், இவை அளவு நீங்கலாக (என்னுடன் வராது ஒழிய), திரண்டு கூடுகின்ற அடியார்களும், ஒன்றாகப் புகுந்து துக்கம் கொண்டு, நெருப்பு கொழுந்து விட்டு எரிய, (உடலைச் சுடு காட்டில்) வைக்கப் போகின்ற போது, பொய்யான (நிலையில்லாத) இந்த உடலின் பொருட்டு என் செய்கைகள் ஈடுபட்டு உருகாமல், பூக்களை இட்டுப் பூஜித்து கருணைக்கு இருப்பிடமான உனது திருவடிகளை நான் போற்றும் அறிவை நீ எனக்கு நிரம்பக் கொடுக்கும் ஒரு நாள் ஏற்படுமோ? செந்நிறமுள்ள திரண்ட சடையில் நிரம்ப கொக்கின் இறகையும், இப்பூமியில் வரும் கங்கை நதியையும், பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள சிவபிரானுக்கு, அவரது மனதில் நன்கு பொருந்தித் தளிவுறுமாறு, மிக மிக நன்றாக விளங்கும் திடமான முக்தி நிலையாகிய நன்மைப் பொருளை அருளியவனே, மாமரத்தின் உறுப்புகளைக் கொண்டு கரிய கடலாகிய வட்டத்தில் நின்ற சூரனையும் மற்ற அசுரர்களையும் கொத்தைப் போல (ஒரே தடவையில்) அழித்த கூரிய வேலை ஏந்தியவனே, வீரமும், வெற்றியும் கொண்ட கேடயத்துடன், அருகில் நின்றும், தூரத்தில் நின்றும், சிலரை (வேலால்) குத்தியும், (சிலரை) வாளால் வெட்டியும் சண்டை செய்த பெருமாளே. 

பாடல் 1116 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

உற்பா தப்பூ தக்கா யத்தே     யொத்தோ டித்தத் ...... தியல்காலை 
உட்பூ ரித்தே சற்றே சற்றே     யுக்கா ரித்தற் ...... புதனேரும் 
அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ     லப்பா வித்துத் ...... திரிவேனுக் 
கப்பா சத்தா லெட்டா அப்பா     லைப்போ தத்தைப் ...... புரிவாயே 
பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா     கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப் 
புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்     பொட்டா கக்குத் ...... தியவேலா 
முற்பா டப்பா டற்றா ருக்கோர்     முட்கா டற்கப் ...... பொருளீவாய் 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

கெட்ட சகுனங்களைக் காட்டவல்ல ஐம்பூதங்களால் ஆகிய இந்த உடலைப் போற்றுதற்கு, உடன்பட்டு ஓடி, ஆபத்துக்கள் நேரும்போது உள்ளம் கவலையால் நிரம்பப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று சத்தமிட்டு வேதனைப்பட்டு, கடவுளிடத்தே உண்டாகும் அன்பு பூண்டவராய் இல்லறத்தைத் தழுவி நிற்கின்ற மக்களைப் போல் ஏமாற்றித் திரிகின்ற எனக்கு, அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல் அப்பாற்பட்டு நிற்கும் ஞான அறிவை உபதேசித்து அருள்வாயாக. அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய் அசுரர்களை எதிர்த்து, கிரெளஞ்ச மலையை அழித்து, கடலிடைப் புகுந்து, (சூரனுடைய) சூழ்ச்சி நிலையை (மாமரமாக நின்றதை) சமீபித்து, அந்தச் சூரன் பொடியாகும்படி அவனை வேலால் குத்திய வேலனே, (பொய்யா மொழிப் புலவர்) முன்னதாகப் பாட, அப்பாட்டைக் குற்றமின்றிப் பாடாத அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும் காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் பிழை நிலை பெற்றிருப்பதைக் காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு அளித்தவனே*, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 1117 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

எற்றா வற்றா மட்டா கத்தீ     யிற்காய் செக்கட் ...... பிறைவாளே 
யிற்றார் கைப்பா சத்தே கட்டா     டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன் 
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா     ரொட்டோம் விட்டுக் ...... கழியீரென் 
றுற்றோ துற்றே பற்றா நிற்பா     ரக்கா லத்துக் ...... குறவார்தான் 
பற்றார் மற்றா டைக்கே குத்தா     பற்றா னப்பிற் ...... களைவோனே 
பச்சே னற்கா னத்தே நிற்பாள்     பொற்பா தத்திற் ...... பணிவோனே 
முற்றா வற்றா மெய்ப்போ தத்தே     யுற்றார் சித்தத் ...... துறைவோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

உதைத்து மோதுபவர்களும், தீயும் ஒளியும் மட்டாகும்படி காய்ந்த சிவந்த கண்களை உடையவர்களும், பிறை போல் வளைந்து, வாள் போலக் கூரியதாக உள்ள பற்களை உடையவர்களுமான யம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி, ஆட்டுவித்து, அலைத்துக் கோபித்து (என்னைக்) கொண்டு போவதற்கு முன்பாக, சுற்றத்தாரும், நண்பர்களும், பெற்றோர்களும், சூழ்ந்து நிற்பவர்களும் உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர் என்று சமீபத்தில் இருந்து கொண்டு கூறிக் கூறி அன்பு காட்டி நிற்பார்கள். அந்த உயிர் போகும் சமயத்துக்கு (இறைவனைத் தவிர) வேறு யார்தான் துணையாக நிற்பார்கள்? பகைவர்களுடைய வலிமை மிகுந்த தாடையில் குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிவோனே, பசுமையான தினைப் புனத்தின் கண் (காவல் கொண்டு) நிற்கும் வள்ளியின் அழகிய பாதங்களில் பணிந்து வணங்குபவனே, முற்றி வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில் உள்ளவர்களின் மனத்தில் வீற்றிருப்பவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 1118 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

செட்டா கத்தே னைப்போ லச்சீ     ரைத்தே டித்திட் ...... பமதாகத் 
திக்கா மற்பா டுற்றா ரிற்சீ     ருற்றா ருக்குச் ...... சிலபாடல் 
பெட்டா கக்கூ றிப்போ தத்தா     ரைப்போல் வப்புற் ...... றுழலாதே 
பெற்றா ரிற்சார் வுற்றாய் நற்றாள்     சற்றோ தப்பெற் ...... றிடுவேனோ 
எட்டா நெட்டா கத்தோ கைக்கே     புக்கோ லத்திட் ...... டிமையோர்வா 
னிற்பா ரிற்சூ ழச்சூ ரைத்தா     னெட்டா வெட்டிப் ...... பொரும்வேலா 
முட்டா மற்றா ளைச்சே விப்பார்     முற்பா வத்தைக் ...... களைவோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

பொறுக்கி எடுத்தாற் போல் சிக்கனமாக, தேன்போல் இனிக்கும் சிறப்புள்ள சொற்களையும், கருத்தையும் நாடி, திண்மையான வாக்கினால் தங்கு தடை இல்லாமல் பாடுதலைக் கொண்டவர்கள் போல, நானும் செல்வம் படைத்தவர்களிடம் சென்று சில பாடல்களை மயக்கம் வல்ல பொய்யான மொழியில் பாடி, ஞான அறிவு கொண்டவர்களைப் போல பாவனை செய்து வீணாகக் காலத்தைப் போக்கித் திரியாமல், என்னைப் பெற்ற தாய் தந்தையரைப் போல அன்பு காட்டித் துணை நிற்பவனே, உனது நல்ல திருவடிளைச் சிறிதளவாவது போற்றும் பாக்கியத்தைப் பெறுவேனோ? நீண்ட பெருமையுடன் விளங்கும் மயில் மீது பாய்ந்து ஏறி, எங்களைக் காத்தருள்க, அபயம் என்று கூச்சலிட்டு, தேவர்கள் விண்ணிலும், பூமியிலும் உன்னைச் சூழ்ந்து நிற்க, சூரனை அணுகி அவனை வெட்டிச் சண்டை செய்யும் வேலனே, தங்கள் வழிபாட்டில் தடை இன்றி உனது திருவடியைச் சேவிப்பவர்களின் முந்தைய தீவினையை நீக்கி அருள்பவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 1119 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

பட்டா டைக்கே பச்சோ லைக்கா     துக்கே பத்தித் ...... தனமாகும் 
பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே     பட்டா சைப்பட் ...... டுறவாடி 
ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே     சுற்றே முற்றத் ...... தடுமாறும் 
ஒட்டா ரப்பா விக்கே மிக்கா     முற்றாள் கிட்டத் ...... தகுமோதான் 
கட்டா விப்போ துட்டா விப்பூ     கக்கா விற்புக் ...... களிபாடுங் 
கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்     கத்தா சத்தித் ...... தகவோடே 
முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்     முற்றா மற்கொட் ...... குமரேசா 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

பட்டுப் புடைவைக்கும், பசும்பொன்னிலான தோட்டினை அணிந்துள்ள காதுக்கும், ஒழுங்காக உள்ள அழகிய கும்பங்களைப் போன்ற மார்பகங்களுக்கும், கொடுமையைக் காட்டும் பார்வைக்கும் அகப்பட்டு, (விலைமாதரிடம்) ஆசைப்பட்டு உறவு பூண்டு கலந்து களித்து, ஆகாதவர்கள், நண்பர்கள் முதலிய அனைத்து வட்டாரங்களிலும் பழிப்புக்கு ஆளாகி, அடியோடு தடுமாறுகின்ற, பிடிவாதம் நிறைந்த பாவியாகிய எனக்கு, மேலானதாகிய உனது திருவடி கிடைக்கும்படியான தகுதி உண்டோ? மதுவை நாடி அலைந்து மலர்களின் உள்ளே பாய்ந்து, கமுக மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற சிறந்த முறைமை வாய்ந்த நன்மைகள் நிறைந்த அந்தச் சீகாழித் தலத்தை அடைந்து வீற்றிருக்கும் கர்த்தனே, இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளியின் முன்னே எதிர்ப்பட வேண்டும் என்ற எண்ணம் மிகுதியாகி தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பேயே அந்த வள்ளியைக் கவர்ந்து கொண்ட குமரேசனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 1120 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்     வைத்தே பத்திப் ...... படவேயும் 
பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா     சற்கா ரத்துக் ...... கிரைதேடி 
எத்தே சத்தோ டித்தே சத்தோ     டொத்தேய் சப்தத் ...... திலுமோடி 
எய்த்தே நத்தா பற்றா மற்றா     திற்றே முக்கக் ...... கடவேனோ 
சத்தே முற்றா யத்தா னைச்சூர்     கற்சா டிக்கற் ...... பணிதேசா 
சட்சோ திப்பூ திப்பா லத்தா     அக்கோ டற்செச் ...... சையமார்பா 
முத்தா பத்தா ரெட்டா வைப்பா     வித்தா முத்தர்க் ...... கிறையோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் ரட்டால் = பதினான்கு, ஆக (10 + 56 + 16 + 14 = 96) தொண்ணூற்றாறு தத்துவங்களால்* அமைக்கப்பட்டே ஒழுங்குபடப் பொருந்தி உள்ள, தோல் பை, கிழிபட்டு அழியும் ஒரு சிறு குடிலாகிய இந்த உடல் பாசத்தின் வலிமையால் (அதே உடலைப்) பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி, எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று, இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு, வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் என் தலையில் எழுதியுள்ளதோ? உண்மைப் பொருளே, என்றும் இளமையானவனே, அத்தனைச் சேனைகளோடு கூடி வந்த சூரனையும், கிரெளஞ்ச மலையையும் அழிவு செய்து நீதி நெறியை நிலை நாட்டிய ஒளி பொருந்தியவனே, ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திரு நெற்றிகளை உடையவனே, அந்தக் காந்தள் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த மார்பனே, (மண், பெண், பொன் என்ற) மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப் பொருளே, அறிவிற் சிறந்தவனே, இப்பிறவியிலேயே ஞானம் பெற்றவர்களுக்குத் தலைவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை.96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. திருமுருகாற்றுப்படை.

பாடல் 1121 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

பொற்கோ வைக்கே பற்கோ வைக்கே     பொய்ப்போ கத்தைப் ...... பகர்வார்தம் 
பொய்க்கே மெய்க்கே பித்தா கிப்போ     கித்தே கைக்குப் ...... பொருள்தேடித் 
தெற்கோ டிக்கா சிக்கோ டிக்கீழ்     திக்கோ டிப்பச் ...... சிமமான 
திக்கோ டிப்பா ணிக்கோ டித்தீ     வுக்கோ டிக்கெட் ...... டிடலாமோ 
தற்கோ லிப்பா விப்பார் நற்சீ     ரைச்சா ரத்தற் ...... பரமானாய் 
தப்பா முப்பா லைத்தே டித்தே     சத்தோர் நிற்கத் ...... தகையோடே 
முற்கா னப்பே தைக்கா கப்போய்     முற்பால் வெற்பிற் ...... கணியானாய் 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

பொன் காசு வரிசைகளுக்காகவும், வேறு பல விதமான வரிசைகளுக்காகவும், நிலையற்ற சிற்றின்ப சுகத்தை விலை பேசுபவர்களுடைய பொய் மொழிகளுக்கும், உடல் அழகுக்கும் காம வெறிகொண்டு, காம இன்பத்தை அநுபவித்துச் செல்வதற்கு வேண்டிய பொருளைத் தேடுவதற்காக, தென் திசையிலுள்ள ஊர்களுக்கு ஓடியும், (வடக்கிலுள்ள) காசி முதலிய ஊர்களுக்கு ஓடியும், கிழக்கு, மேற்கு ஆகிய திசைகளில் உள்ள ஊர்களுக்கு ஓடியும், (கப்பலேறித்) திரை கடலோடியும், அக்கடலிலுள்ள பல தீவுகளுக்கு ஓடியும் நான் வீணே அழிந்து போகலாமோ? உன்னைத் தியானித்து (தமது) சிந்தையில் வைப்பவர்கள் மேலான நற் கதியை அடைவதற்கு, அவர்கள் வழிபடும் பரம் பொருள் ஆனவனே, தவறாமல் நாள்தோறும், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வாழ்க்கைக் குறிக்கோள்களைத் தேடி வருகின்ற மக்கள் ஒருபக்கத்தில் நிற்க*, அருளுடனே முன்பு காட்டிலிருந்த பெண் வள்ளியின்பொருட்டு நீயே வலியச் சென்று, அவளின் முன்னே வள்ளி மலையில் வேங்கை மரமாக நின்றவனே, முத்துப்போன்ற அருமையானவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரவல்ல பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 1122 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

பொற்பூ வைச்சீ ரைப்போ லப்போ     தப்பே சிப்பொற் ...... கனிவாயின் 
பொய்க்கா மத்தே மெய்க்கா மப்பூ     ணைப்பூண் வெற்பிற் ...... றுகில்சாயக் 
கற்பா லெக்கா வுட்கோ லிக்கா     சுக்கே கைக்குத் ...... திடுமாதர் 
கட்கே பட்டே நெட்டா சைப்பா     டுற்றே கட்டப் ...... படுவேனோ 
சொற்கோ லத்தே நற்கா லைச்சே     விப்பார் சித்தத் ...... துறைவோனே 
தொக்கே கொக்கா கிச்சூ ழச்சூர்     விக்கா முக்கத் ...... தொடும்வேலா 
முற்கா லத்தே வெற்பேய் வுற்றார்     முத்தாள் முத்தச் ...... சிறியோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

அழகிய நாகண வாய்ப்புள்ளின் சீரான குரலைப் போன்ற குரலுடன், பொருந்தும்படி அழகிய கொவ்வைக் கனி போன்ற வாயினால் செவ்வையாகப் பேசி, நிலையில்லாத சிற்றின்பத்தின் பொருட்டு, (தங்கள்) உடலுக்குத் தக்கதான அந்த ஆபரணங்களை அணிந்துள்ள, மலை போன்ற மார்பகங்ககள் மீது ஆடை சாய்ந்து நெகிழ, ஆணையிட்டுத் தாக்கி, மனத்தில் உள்ள எண்ணங்களை வைத்து கொண்டு, பொருள் வேண்டியே கை கலந்து குத்துச் சண்டை செய்யும் விலைமாதர்களின் கண்களுக்கே வசப்பட்டு, பெரும் ஆசை வினைகளில் ஈடுபட்டு நான் துன்பப்படுவேனோ? சொல் அலங்காரத்துடன், உனது சிறப்புற்ற திருவடிகளைத் தொழுபவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே, தனது உடலை மாமரமாக்கிச் சூழ்ச்சி செய்த அந்தச் சூரன் திண்டாட்டத்தால் வேதனைப்படும்படியாக வேலயுதத்தைச் செலுத்தியவனே, ஆதி காலம் முதல் கயிலைமலையில் அமர்பவரான சிவபெருமானும், முத்தாம்பிகை எனப்படும் தேவியும் முத்தமிட்டு மகிழும் குழந்தையே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, தூய்மையானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 1123 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்தா தத்தா தத்தா தத்தா     தத்தா தத்தத் ...... தனதான

மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே     வித்தா ரத்திற் ...... பலகாலும் 
வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே     வித்தா சைச்சொற் ...... களையோதிக் 
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா     ரைப்போ லக்கற் ...... பழியாதுன் 
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா     டற்கே நற்சொற் ...... றருவாயே 
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்     முற்பால் வெற்பிற் ...... புனமானைப் 
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா     தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே 
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்     வைத்தார் முத்தச் ...... சிறியோனே 
முத்தா முத்தீ யத்தா சுத்தா     முத்தா முத்திப் ...... பெருமாளே.

இந்த உடல்பசிக்கு உணவை நாடி பூமியில் அதிகமாகப் பல முறையும் நாணம் என்பதே இல்லாமல் பரத்தையர் சேரியில் உள்ள கள்ள மனம் உடைய வேசியரைத் தேடி, ஆசையை அடிப்படையாகக் கொண்ட பேச்சுக்களைப் பேசி, அந்தப் பரத்தையர்களுக்குக் காணிக்கையாகப் பொருள் கொடுக்கும் கோணல் வழியில் செல்லும் அறிவீனரைப் போல நான் ஒழுக்கத்தைக் கைவிடாமல், உன்னுடைய பெருங் குணங்களைக் கற்கும் நெறியில் நின்று, உன் சிறந்த திருவடிகளைப் பாடுவதற்காக செஞ்சொற்களைத் தந்தருளுக. (வேடன், வேங்கை, செட்டி, கிழவன் ஆகிய) பொய்யான வேஷங்களைக் கொள்ளுதலை விரும்பி, ஆழ்ந்து நாணத்தால் உடலும் கூனலுற்றுச் சென்று, பழம்பெரும் பொருளாகிய வள்ளி மலையில் தினைப்புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியின் அழகிய தோள்களில் சேரும் பொருட்டு, அவள் பாதமாகிய திருவடியைப் பிடித்து வணங்கி ஆசை மொழிகளைச் சொன்னவனே, மூன்று மூலைக் கோண வடிவமான மந்திர சக்கரத்தில் அமைந்து விளங்கும் பார்வதியை தமது இடது பாகத்தில் வைத்த சிவபெருமான் முத்தமிடும் குழந்தையே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே. 
என்று தொடங்கும் பாடல்கள்.
திருமுருகாற்றுப்படை.

பாடல் 1124 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கரஹரப்ரியா தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு - /4/4/4 0 
நடை - தகதகிட

தனதனன தந்தந்த தத்ததன     தனதனன தந்தந்த தத்ததன          தனதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்     அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்          அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய 
அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய     முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய          அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம் 
நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை     நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை          நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும் 
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு     பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய          நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே 
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு     டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு          தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ 
தனதனன தனதனன தந்தந்த னத்ததன     டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு          தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும் 
மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்     அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட          முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி 
முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி     நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட          முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே.

அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று எழுத்துக்களும், உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும், பலதரப்பட்ட (96) தத்துவங்களும்*, அளவிட முடியாத வேதங்களும், தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள ஒப்பற்ற பரம்பொருளை, தன்னைத் தவிர மற்ற எல்லாப் போருள்களும் தானே ஆகி விளங்கும் ஞான நிலையை அறிபவர் அறிந்து அனுபவிக்கும் பரமானந்தப் பொருளை, யோகியர் தன்மயமான நிலையில் தரிசிக்கும் முடிவுப் பொருளை, தொடக்கம், இடைநிலை, இறுதி இவை ஏதும் இல்லாத பரிசுத்தப் பொருளை, அணுவைக் காட்டிலும் சிறிய அணுவாக விளங்கும் பொருளை, மும்மலங்களும் (ஆணவம், கன்மம், மாயை), மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு கரணங்களும், ஸத்வம், ராஜதம், தாமதம் என்ற முக்குணங்களும், நீங்கின ஒரு வேளையில் துலங்கும் அருள் உருவத்தை, ஊழிக்காலம் முடிகின்ற சமயம் ஒன்று என்னும் பொருளாக இருப்பதனை, நிறைந்தது, குறைந்தது, நீங்கிப் போவது என்பது ஏதுமற்று நிறை பொருளாக எல்லா இடங்களிலும் நிலைத்து நிற்கும் பொருளை, இதற்கு சமம் அதுதான் என வேறொரு பொருளை ஒப்புரைக்க இயலாததை, வானில் சஞ்சரித்துக் கொண்டே இருந்த திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானும், (உன்னை நோக்கி) அரசனே, குருமூர்த்தியே, குமரனே, என்றெல்லாம் பக்தியுடனே போற்றித் தொழுதவுடன் அவருக்கு அருளிச் செய்த மெளன உபதேசமந்திரத்தை** உன் பழைய அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி இனிமையாக உபதேசித்து அருள்வாயாக. தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு (என்று பலமுறை மேலே கண்ட அதே ஓசையுடன்) இடது கையால் கொட்டும் தோல் பறைகளும் உடுக்கை வாத்தியங்களும் பிற எல்லா ஒலிக்கருவிகளும், மொகு மொகு என்னும் பேரொலியோடு அதிர்ச்சி தரும்படி முழங்க, இப் பழமையான முதிர்ந்த பூமி பிளவுபட்டு வெடிக்க, நிமிர்ந்து நின்று பேய்கள் கூத்தாட, உலகம் எங்கிலும் உள்ள மக்கள் திகைத்து நிற்க, வேகமாக நடனம் செய்யும் பைரவ மூர்த்திகள் கூத்தாடி மகிழ, அசுரர்கள் இறந்து படும் போர்க்களத்தில் கோடிக்கணக்கான முதிர்ந்த கழுகுகளும், காக்கைகளும், கருடன் பருந்துகளும் பிணங்களின் அங்கங்களைக் கொத்தித் தின்ன, ரத்த வெள்ளம் பெருக, பலவகையான தலையற்ற உடல் குறைகள் கூத்தாட, முரசு வாத்தியம் பேரொலி முழக்க அசுரர்களை வெற்றி கொண்டு, தேவேந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்த பெருமாளே. 
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. ** இதே மெளன மந்திர உபதேசம் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்ற வரிகளால் அறியலாம்.

பாடல் 1125 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... : தாளம் -

தனன தந்தன தனனா தனதன     தந்தன தனனா தனதன          தனன தந்தன தனனா தனதன ...... தனதான

அரிய வஞ்சக ரறவே கொடியவர்     அவலர் வன்கண ரினியா ரவகுணர்          அசட ரன்பில ரவமே திரிபவர் ...... அதிமோக 
அலையில் மண்டிய வழியே யொழுகியர்     வினைநி ரம்பிடு பவமே செறிபவர்          அருள்து றந்தவ ரிடம்வாழ் சவலைகள் ...... நரகேற 
உரிய சஞ்சல மதியா னதுபெறு     மனஇ டும்பர்க ளிடமே தெனஅவர்          உபய அங்கமு நிலையா கிடவொரு ...... கவியாலே 
உலக முண்டவர் மதனா ரிமையவர்     தருவெ னும்படி மொழியா வவர்தர          உளது கொண்டுயி ரவமே விடுவது ...... தவிராதோ 
கரிய கொந்தள மலையா ளிருதன     அமுது ணுங்குரு பரனே திரைபடு          கடல டும்படி கணையே வியஅரி ...... மருகோனே 
கருணை கொண்டொரு குறமா மகளிடை     கலவி தங்கிய குமரா மயில்மிசை          கடுகி யெண்டிசை நொடியே வலம்வரு ...... மிளையோனே 
திரிபு ரங்கனல் நகையா லெரிசெய்து     பொதுந டம்புரி யரனா ரிடமுறை          சிவைச வுந்தரி யுமையா ளருளிய ...... புதல்வோனே 
சிகர வெண்கரி அயிரா வதமிசை     வருபு ரந்தர னமரா பதியவர்          சிறைவி டும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே.

வஞ்சகத்தில் அருமையாகத் தேர்ந்த மிகவும் பொல்லாதவர்கள், வீணாக பொழுது போக்குபவர், இரக்கம் இல்லாதவர்கள், இன்பம் தரும் வகையில் பேச வல்லவர்கள், துர்க்குணம் உடையவர், மூடர், அன்பு இல்லாதவர்கள், கேடு தரும் வழியில் திரிபவர், மிகவும் காமம் என்னும் கடலலையில் மோசமான வழியையே பின்பற்றுபவர், தீவினை மிக்கு நிரம்பும் பாபமே பொருந்தியவர்கள், கருணையை அடியோடு விட்டவருடைய இடத்தையே தமது இருப்பிடமாகக் கொண்டு வாழும் அறிவீனர்கள், நரகத்திலே வீழுதற்கே உரித்தான குழப்பம் கொண்ட அறிவைப் பெற்றுள்ள அகந்தை நெஞ்சினர்கள், இத்தகையோர் இருக்கும் இடம் எது என்று வினவிச் சென்று, அவருடைய உடலும் அங்கமும் (சாங்கமும் உபாங்கமும்) என்றும் நிலைத்திருக்கும்படியாக ஒரு பாடல் அமைத்து, அவரை உலகத்தை உண்ட திருமாலே என்றும், மன்மதனே என்றும், தேவலோகத்து கற்பக மரம் இவரே என்றும் இவ்வாறு வர்ணித்து, அவர் தரக் கூடிய பொருளைப் பெற்று உயிரை வீணாக இழக்கின்ற இத்தகைய இழிதொழில் என்னை விட்டு நீங்காதோ? கரு நிறம் கொண்ட கூந்தலை உடைய மலை மகள் பார்வதியின் இருமுலையிலும் பாலமுதத்தை உண்ட குரு மூர்த்தியே, அலை வீசும் கடல் வெந்து அழியும்படி அம்பைச் செலுத்திய ராமனாம் திருமாலின் மருகோனே, அருள் நிரம்பி ஒப்பற்ற, சிறந்த குறப் பெண்ணான வள்ளியிடத்தே கலந்து மணம் பொருந்தின குமரனே, மயிலின் மீது வேகமாக எட்டுத் திசைகளையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த இளையோனே, திரிபுரங்களையும் நெருப்புச் சிரிப்பால் எரித்து, அம்பலத்தில் நடனம் செய்யும் சிவபெருமானது இடப் பக்கத்தில் உறையும் சிவாம்பிகை, அழகிய பார்வதி பெற்று அருளிய குழந்தையே. மலை போன்ற வெள்ளை யானையாகிய ஐராவதத்தின் மீது ஏறிவரும் இந்திரனும், தேவர் உலகில் வாழ்ந்திருந்த தேவர்களும் சிறையினின்று மீளும்படி கூரிய வேலைச் செலுத்திய பெருமாளே. 

பாடல் 1126 - பொதுப்பாடல்கள் 
ராகம் - திலங் தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தானான தான தான தானன     தானான தான தான தானன          தானான தான தான தானன ...... தந்ததான

ஆராத காத லாகி மாதர்த     மாபாத சூட மீதி லேவிழி          யாலோல னாய்வி கார மாகியி ...... லஞ்சியாலே 
ஆசாப சாசு மூடி மேலிட     ஆசார வீன னாகி யேமிக          ஆபாச னாகி யோடி நாளும ...... ழிந்திடாதே 
ஈராறு தோளு மாறு மாமுக     மோடாரு நீப வாச மாலையு          மேறான தோகை நீல வாசியு ...... மன்பினாலே 
ஏனோரு மோது மாறு தீதற     நானாசு பாடி யாடி நாடொறு          மீடேறு மாறு ஞான போதக ...... மன்புறாதோ 
வாராகி நீள்க பாலி மாலினி     மாமாயி யாயி தேவி யாமளை          வாசாம கோச ராப ராபரை ...... யிங்குளாயி 
வாதாடி மோடி காடு காளுமை     மாஞால லீலி யால போசனி          மாகாளி சூலி வாலை யோகினி ...... யம்பவானி 
சூராரி மாபு ராரி கோமளை     தூளாய பூதி பூசு நாரணி          சோணாச லாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே 
தோளாலும் வாளி னாலு மாறிடு     தோலாத வான நாடு சூறைகொள்          சூராரி யேவி சாக னேசுரர் ...... தம்பிரானே.

அடக்க முடியாத மோகம் கொண்டு, பெண்களுடைய உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரையுள்ள அங்கங்களிலே கண்கள் ஈடுபடுவதால் காமுகனாகி மன விகாரம் அடைந்து குணம் கெட்டு, ஆசை என்ற பேய் என்னைக் கவர்ந்து ஆட்கொள்ள, நான் ஆசாரக் குறைவுபட்டவனாக, மிகவும் அசுத்தனாக, இங்கும் அங்கும் ஓடி தினமும் கெட்டழியாமல் இருக்க, பன்னிரண்டு தோள்களுடனும், ஆறு திருமுகங்களுடனும், நிறைந்த வாசனையுள்ள கடப்ப மலர் மாலையுடனும், ஆண் மயிலாகிய நீல நிறக் குதிரையுடனும், அன்பு பூண்டு பிற மக்களும் போற்றிப் புகழுமாறு, கேடுகள் நீங்க, நான் ஆசு* கவிகளைப்பாடியும், ஆடியும், தினமும் முன்னேறுமாறு, ஞானோபதேசத்தை எனக்குச் செய்ய வருவதற்கு நீ அன்பு கொள்ளக் கூடாதோ? (இதன் பின்பு சுவாமிகள் தேவியின் துதி செய்கிறார்). வாராகி, பெரிய கபாலத்தைக் கையிலே ஏந்தியவள், மாலையை அணிந்தவள், மகமாயி, ஆயி, தேவி, சியாமள நிறத்தினள், வாக்குக்கு எட்டாதவள், பராத்பரை, உள்ளத்தில் தங்குகிற தாய், சிவனுடன் வாதாடிய காளி, துர்க்கை, வனதேவதை, உமாதேவி, பெரிய பூமியிலே திருவிளையாடல்கள் புரிபவள், விஷத்தை உண்டவள், மஹா காளி, சூலத்தை ஏந்தியவள், பாலாம்பிகை, யோகினி, அழகிய பவானி, மகிஷாசுரமர்த்தனி, பெரும் திரிபுராந்தகி, அழகி, திருநீற்றை விபூதியாகப் பூசிய மேனியளான நாராயணி, திருவண்ணாமலையின் ஆதி தேவி, உலகநாயகி பெற்ற செல்வமே, தோள்கொண்டும் வாள்கொண்டும் போரிட்டுப் பகைமை பூண்டவனும், தோல்வியே இல்லாதவனும், தேவருலகைச் சூறையாடினவனுமான சூரனைக் கொன்றவனே, விசாகனே, தேவர்களின் பெருமாளே. 
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.

பாடல் 1127 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கீரவாணி தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த     தானாதன தானந் தனத்த ...... தனதான

ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து     மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும் 
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து     மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே 
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த     நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக 
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி     நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும் 
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க     வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி 
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க     வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும் 
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து     வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா 
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து     வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே.

பூஜை செய்வோரது ஆடம்பரத் தோற்றத்தைக் கண்டும், இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ள ஆசையினாலும், தெய்வம் எழுந்தருள வேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும், (ஆறும் பத்தும் கூடிய) பதினாறு கால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும், வேதம், ஆகமம் இவை முழங்கும் இடத்தைக் கண்டும், யாகங்களுக்கு வேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்து அவற்றில் மயங்காமல், (அடியார்களின்) கண்ணீர் பெரிதாகப் பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே, சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே, மலைகளுக்கு உரியவனே, நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைத பாவம் நீங்க அத்வைத நிலையைப் பெற அன்னியம் இல்லாமல் உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்து கடல் போன்று பெரிதான ஆனந்த நிலையையும், உடனே பரமானந்தமாகிய முக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன். வீரத்துக்கு இருப்பிடமானவனே, துர்க்கையும், சக்ர வியூகமாக வகுக்கப்பட்டு நிற்கும் காவல் கணங்களான பூதங்களும் மகிழ, பேய்க் கூட்டங்கள் பிணங்களை உண்டு பிழைக்கும்படியும், போர் புரிந்து, பிரமன் அபயம் என்று முறையிட்டுக் கூச்சலிட, அண்ட கூடம் பிளவுபட, சூரன் மாயமாக நின்ற மாமரத்தின் அடிவேரையே வெட்டி, வடவாக்கினியையும்*, நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து, பெரிய சூரனோடு செய்த போரிலே அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து, பாணங்கள் தங்கும் இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே, தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள் என்று அழைத்து, தேவர்களின் பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே. 
* பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வட துருவத்திலிருந்து வரும் நெருப்பு அலையை 'வடவாக்கினி' என்பர்.

பாடல் 1128 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன     தானா தத்தன தத்தன ...... தனதான

ஆலா லத்தைய ழுத்திய வேல்போல் நற்குழை யைப்பொரு     தாகா ரைத்தொடர் கைக்கெணும் ...... விழியாலே 
ஆளா மற்றவர் சுற்றிட மீளா மற்றலை யிட்டறி     வார்போ கச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக் 
கோலா லக்கண மிட்டுவ ராதார் நெக்குரு கப்பொருள்     கூறா கப்பெறில் நிற்கவு ...... மிலதானார் 
கூடா நட்புமு ரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்     கோமா ளத்துய ருட்பய ...... முறலாமோ 
பாலா மக்கட லிற்றுயில் மாலோ ரெட்டுத லைக்கிரி     பால்பார் வைக்கள விட்டுமை ...... யுறுபோதிற் 
பார்மே லிக்கனு டற்பொறி யாய்வீ ழச்சுடும் வித்தகர்     பாலா பத்தரி டத்தியல் ...... பயில்வோனே 
மேலா யத்தொடு திக்கடை மேவார் வெற்பொட ரக்கரை     வேர்மா ளப்பொரு திட்டொளி ...... விடும்வேலா 
மேனா டர்ச்சிறை விட்டருள் மீளா விக்கிர மத்தொடு     வேதா வைச்சிறை யிட்டருள் ...... பெருமாளே.

ஆலகால விஷத்தை உள்ளுக்குள் அடக்கி வைத்துள்ள வேலாயுதத்தைப் போல இருந்துகொண்டு, அழகிய குண்டலங்களை வம்புக்கு இழுப்பது போல் (காது வரை) நீண்டு, தங்களுக்கு ஆகாதவர்களைத் தொடர்ந்து பின் சென்று பற்றுதற்கு எண்ணும் கண்களுக்கு அடிமைப்பட்டு, அவ்வாறு வசப்பட்டவர் தம்மைச் சூழ்ந்திருக்க, அவர்கள் (தங்கள் சூழ்ச்சியினின்று) மீண்டு வெளியே போக முடியாதவாறு, நுழைந்து ஏற்பாடுகள் செய்து, அவர்களது நல்லறிவு போகும்படி தொழில் வித்தைகளை விலைபேசி, தமது ஆடம்பரங்களை எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் காட்டி, மனம் உடைந்து உள்ளம் நெகிழ்வது போல் செய்து, தாங்கள் கேட்ட பொருளில் ஒரு பகுதியை மட்டும் பெற்றால், எதிரில் நின்று பேசுவதற்குக் கூடக் கிட்டாதவர்கள், அக நட்பு இல்லாமல் புற நட்புச் செய்யும் பயனிலிகள், அழிவுறும் வகைக்கு விட்டு விட்டு நீங்கும் பாவிகளாகிய விலைமாதர்களின் கொண்டாட்டத்தால் வரும் வேதனைப் பயத்தை நான் அடைதல் நன்றோ? திருப்பாற்கடலில் துயிலும் திருமால் முதலான தேவர்கள் சென்று சேர்ந்த சிறந்த கயிலைமலையை (காமனைச் சிவன்மேல் பாணம் எய்ய அனுப்பினோமே என்ன ஆயிற்று எனக்) கண் கொண்டு பார்த்து அளவிட்டும், அவர்கள் சந்தேகித்தும் இருந்த சமயத்தில் பூமியில் கரும்பு வேல் ஏந்திய மன்மதனுடைய உடல் தீப் பொறியாய் வெந்து விழும்படிச் சுட்டெரித்த ஞானியாகிய சிவபெருமானின் குழந்தையே, பக்தர்களிடம் இயல்பானஅன்பு காட்டிப் பழகுபவனே, முன்பு, கூட்டமாக நாலு திக்குகளிலும் சென்று நிரம்பிய பகைவராகிய அசுரர்களையும், அவர்கள் தங்கியிருந்த கிரெளஞ்சம், ஏழு மலைகள் அனைத்தையும் அடியோடு மாண்டு அழியும்படி சண்டை செய்து ஒளி வீசும் வேலாயுதத்தை உடையவனே, விண்ணோரைச் சிறையினின்றும் விடுவித்து அருள் செய்தவனே, நீங்காத வீரத்தோடு பிரமனைச் சிறையிலிட்டுப் பின்னர் அவனுக்கு அருளிய பெருமாளே. 

பாடல் 1129 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சுருட்டி தாளம் - அங்கதாளம் - 9 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தானான தான தத்த தத்த தத்தன     தானான தான தத்த தத்த தத்தன          தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான

ஆனாத ஞான புத்தி யைக்கொ டுத்ததும்     ஆராயு நூல்க ளிற்க ருத்த ளித்ததும்          ஆதேச வாழ்வி னிற்ப்ர மித்தி ளைத்துயி ...... ரழியாதே 
ஆசாப யோதி யைக்க டக்க விட்டதும்     வாசாம கோச ரத்தி ருத்து வித்ததும்          ஆபாத னேன்மி கப்ர சித்தி பெற்றினி ...... துலகேழும் 
யானாக நாம அற்பு தத்தி ருப்புகழ்     தேனூற வோதி யெத்தி சைப்பு றத்தினும்          ஏடேவு ராஜ தத்தி னைப்ப ணித்ததும் ...... இடராழி 
ஏறாத மாம லத்ர யக்கு ணத்ரய     நானாவி கார புற்பு தப்பி றப்பற          ஏதேம மாயெ னக்க நுக்ர கித்ததும் ...... மறவேனே 
மாநாக நாண்வ லுப்பு றத்து வக்கியொர்     மாமேரு பூத ரத்த னுப்பி டித்தொரு          மாலாய வாளி யைத்தொ டுத்த ரக்கரி ...... லொருமூவர் 
மாளாது பாத கப்பு ரத்ர யத்தவர்     தூளாக வேமு தற்சி ரித்த வித்தகர்          வாழ்வேவ லாரி பெற்றெ டுத்த கற்பக ...... வனமேவும் 
தேநாய காஎ னத்து தித்த வுத்தம     வானாடர் வாழ விக்ர மத்தி ருக்கழல்          சேராத சூர னைத்து ணித்த டக்கிய ...... வரைமோதிச் 
சேறாய சோரி புக்க ளக்கர் திட்டெழ     மாறாநி சாச ரக்கு லத்தை யிப்படி          சீராவி னால றுத்த றுத்தொ துக்கிய ...... பெருமாளே.

என்றும் கெடாத ஞான அறிவைக் கொடுத்ததையும், ஆராய்ந்து அறிய வேண்டிய நூல்களில் கருத்தைக் கொடுத்ததையும், ஒரு வழியாக நிலைத்திராத மயக்கம் உள்ள வாழ்க்கையில் மயங்கித் திளைத்து, தளர்ச்சி உற்று உயிர் அழிந்து போகாமல், ஆசை என்கின்ற கடலைக் கடக்கும்படியான ஆற்றலைத் தந்ததையும், வாக்குக்கு எட்டாத ஒரு நிலையில் என்னை இருக்கும்படி அருளியதும், கீழ்ப்பட்டவனான நான் மிக்க புகழ் எய்தி இனிமையுடன் ஏழு உலகில் உள்ளவரும் உள்ளவையும் நானே என்னும் அத்துவித நிலையைப் பெறுமாறு புகழ் கொண்டதும், மிக அற்புதமாக அமைந்துள்ள திருப்புகழ்ப் பாக்களை தேன் ஊறிய இனிமையுடன் பாடி, எல்லா திசைகளிலும் நான் எழுதி அனுப்பும் கடிதமோ பாடலோ ராஜமரியாதையுடன் போற்றப்படத்தக்க மேன்மையை எனக்கு அருளிச் செய்ததும், துன்பக் கடலினின்றும் கரை ஏற முடியாத பெரிய மும்மலங்களாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும், சத்துவம், இராசதம், தாமதம் என்ற மூவகைக் குணங்களும், பலவிதமான கலக்கங்கள் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், டும்பு, அசூயை எனப்பட்ட துர்க் குணங்கள்) கூடியதும், நீர்க்குமிழிபோல் தோன்றி மறைவதுமான பிறப்பும் நீங்கும்படியாக இன்பம் தரும் வகையில் எனக்கு வரமாகத் தந்து அருளியதும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். வாசுகி என்னும் பெரிய பாம்பாகிய கயிற்றை பலமாகக் கட்டியுள்ள ஒப்பற்ற பெரிய மேரு மலையாகிய வில்லைப் பிடித்து, சிறந்த திருமாலாகிய அம்பைச் செலுத்தி, அங்கிருந்த அசுரர்களில், மூன்று பேர்* மட்டும் இறந்து போகாமல், பாபச் செயலில் ஈடுபட்டிருந்த திரிபுரத்து அசுரர்கள் பொடியாய் விழ, முன்பு புன்முறுவல் செய்து எரித்த, பேரறிஞராகிய சிவபெருமான் பெற்ற செல்வமே, தேவேந்திரன் மகளாய் அடைந்து வளர்த்த, கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத் தோப்பில் வாழும், தேவயானையின் நாயகனே, என்றெல்லாம் போற்றித் துதித்த உத்தமமான தேவர்கள் வாழும்படி, வல்லமை பொருந்திய உனது திருவடியைச் சிந்தித்துப் போற்றாத சூரனை வெட்டி அடக்கி, அந்த கிரெளஞ்ச மலையைத் தாக்கி, சேறு போன்ற ரத்தம் பாய்வதால் கடலும் மேடிட்டு மலை போல் எழ, பகைத்து நின்ற அரக்கர் கூட்டத்தை இப்படியும் அப்படியுமாக உடை வாளால் துண்டு துண்டாக அறுத்துத் தள்ளிய பெருமாளே. 
* திரிபுரம் எரிபட்டபொழுது சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில் இருவர் சிவபெருமான் கோயிலில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் சிவ நடனத்தின் போது முழவு வாத்தியம் முழக்கும் பேற்றினைப் பெற்றார் - சுந்தரர் தேவாரம்.

பாடல் 1130 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதனனந் தாத்த தான தத்த     தனதனனந் தாத்த தான தத்த          தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான

இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து     விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து          இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே 
இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து     முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்          இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி 
மடலவிழும் பூக்க ளால்நி றைத்த     சுருளளகந் தூற்றி யேமு டித்து          மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக 
வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்     அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க          மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ 
படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி     முதுமறையின் பேச்சி நூலி டைச்சி          பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி 
படிகொடறங் காத்த மாப ரைச்சி     மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி          பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி 
அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி     சமரமுகங் காட்டு மால்வி டைச்சி          அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ...... பெருவாழ்வே 
அரியயனின் றேத்த வேமி குத்த     விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த          அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே.

சினம் தங்கிய வேலாயுதத்தை எடுத்து விஷம் முழுமையும் நிரம்பும்படி நிறைவு செய்து, இரு காதுகளையும் மோதி மீள்கின்றதும் கயல் மீன் போன்றதுமான (முன்பு சொன்ன வேலை ஒத்த) கண்கள் என்னும் வலையால் விலைமாதர் (ஆடவரை) இன்பகரமாக நோக்கி, தமது வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று, முகத்தைத் துணியால் மூடி, ரவிக்கையை அழுத்தும் மலை போன்ற இரு மார்பகங்களையும் காட்டி காம ஆசையை ஊட்டி, கிடைக்க வேண்டிய பொருள் எவ்வளவு என்று பேசி முடித்து, இதழ்கள் விரிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட சுருண்ட கூந்தலை விரித்து உதறி முடித்து, தெருவிடையே நின்று நிரம்பச் சிரித்து, மாறுதல் இல்லாமல் என்றும் வருவதான பொருள் உள்ளவர்களைக் கண்டதும் முன்னதாகவே பறிக்கின்ற, விலைமாதர்களின் பேச்சிலே முற்றிலும் மனம் உருகுகின்ற காமுகனாக நான் சோர்வு அடையலாமோ? உலகம் முழவதும் நிறைந்து நிற்கும் சிறந்த அழகி, வேதங்களால் பேசப்படுபவள், நுண்ணிய இடையை உடையவள், பிறைச் சந்திரன் விளங்கும், தாழ்ந்து தொங்கும் சடையை உடையவள், இரண்டு நாழி எனப்படும் படி நெல்லைக் கொண்டு (காஞ்சீபுரத்தில்) முப்பத்திரண்டு அறங்களையும்* செய்த சிறந்த பரதேவதை, ரத்தினங்களும் வைரங்களும் கோத்த வளையல்களைக் கொண்ட தோளை உடையவள், பல திக்குகளிலும் சென்று விளங்கும் விருப்பத்தை உடையவள், பெருமை மிக்க நீல நிறம் உடையவள், கொல்ல வரும் புலியின் தோலைச் சேலையாக உடுத்துள்ளவள், போர் செய்யும் முகத்தைக் காட்டும் (நந்தி என்ற) பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவள், உலகம் முழுதையும் உண்ட திருமாலுக்கு நேர் தங்கையாகிய பார்வதியின் பெருஞ் செல்வமே, திருமாலும் பிரமனும் நின்று வணங்கவும் சிறந்த தேவர் கூட்டம் சிறையனின்று மீட்சி பெறவும் வாளாயுதத்தை எடுத்தவனும், அசுரர் கூட்டம் பாழாக வேலாயுதத்தை எடுத்தவனுமாகிய பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

பாடல் 1131 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்     தனதத்தத் தனதத்தத் ...... தனதான

இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடிலக்கிக் கிடையிட்டிட்     டினிமைச்சுற் றமுமற்றைப் ...... புதல்வோரும் 
இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட் டிழியப்பிற்     கிடையத்துக் கமும்விட்டிட் ...... டவரேக 
விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் தனமுற்றிட்     டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன் 
வினைபற்றற் றறநித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்     புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ 
அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் புனையப்பர்க்     கறிவொக்கப் பொருள்கற்பித் ...... திடுவோனே 
அலகைக்குட் பசிதித்தப் பலகைக்கொத் ததுபட்டிட்     டலறக்குத் துறமுட்டிப் ...... பொரும்வேலா 
கடலுக்குட் படுசர்ப்பத் தினில்மெச்சத் துயில்பச்சைக்     கிரிகைக்குட் டிகிரிக்கொற் ...... றவன்மாயன் 
கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெட் டிசையர்க்குக்     கடவுட்சக் கிரவர்த்திப் ...... பெருமாளே.

துன்பங்கள் மொய்த்து நெருங்கித் தொடரும் இடமாகிய நிலையில்லாத உடல் நெருப்புக்கு இடையில் வைக்கப்பட்டு, இனிய சுற்றத்தினரும், பின்னும் புதல்வர்களும் தங்கள் தங்கள் உறவைச் சொல்லி அச்சமயத்துக்கு ஏற்ற சொற்கள் பலவற்றைச் சொல்லி அழுது தீர்க்க, பின்பு மனம் தளர்ந்து இருந்த துக்கத்தையும் விட்டுவிட்டு அந்தச் சுற்றத்தினர் போக, விஷம் அதிகமாகச் சொரிகின்ற சிவந்த கண்களை உடைய யமன் அழிக்க வேண்டும் என்ற பண்பை உணர்த்தும் தன்மையை அடைந்து உயிராகிய விதையை நீக்கிக் கொண்டு போவதற்கு முன்பாக, எனது வினையும் பற்றும் அற்று ஒழிந்து நீங்க, நாள் தோறும் புதிய புதிய சொற்களைக் கொண்டு, வெட்சி மாலை அணிந்த உனது திருப் புயங்களின் வெற்றிப் புகழை* உரைக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ? நெருங்கியுள்ள சிறந்த சடையில் அழகிய பிறைச் சந்திரனும் கங்கையும் அணிந்த தந்தையாகிய சிவபெருமானுக்கு ஞானம் கூடிய பிரணவப் பொருளை உபதேசித்தவனே, பேய்க் கூட்டங்களுள் பசி அடங்கும்படி பல பேய்களின் கைகளும் ஒன்றோடொன்று பிணங்களைக் கொத்தும் போது ஒன்றின் கை ஒன்றின் மேல் கொத்துப்பட, அந்த வலியால் பேய்கள் கூச்சலிடவும், ஒன்றை ஒன்று குத்திடும்படியாகவும், அசுரர்களை எதிர்த்துச் சண்டை செய்த வேலனே. பாற்கடலில் அமைந்த ஆதிசேஷன் மேல் அடியார்கள் போற்றித் துதிக்க அறி துயில் கொண்டுள்ள பச்சை மலை போன்ற வடிவை உள்ளவனும், திருக் கரத்தில் சக்கரம் ஏந்திய அரசனும் ஆகிய திருமாலுக்கும், தாமரையில் வீற்றிருக்கும் நெடிய படைப்பவனாகிய பிரமனுக்கும், எட்டு திக்குகளிலும் உள்ள மற்றவர்களுக்கும் கடவுள் சக்கிரவர்த்தியாக விளங்கும் பெருமாளே. 
* அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பில் ஒன்றாகிய 'புய வகுப்பு' அவர் முருகனின் புய வெற்றிப் புகழ் பாடியதை உணர்த்தும்.

பாடல் 1132 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ....; தாளம் -

தனதனன தான தத்த தந்த     தனதனன தான தத்த தந்த          தனதனன தான தத்த தந்த ...... தனதான

இரவினிடை வேள்தொ டுத்து டன்று     முறுகுமலர் வாளி யைப்பி ணங்கி          யிருகுழையு மோதி யப்ப டங்கு ...... கடலோடே 
எதிர்பொருது மானி னைத்து ரந்து     சலதிகிழி வேல்த னைப்பொ ருந்தி          யினியமுத ஆல முற்ற கண்கள் ...... வலையாலே 
முரணிளைஞ ராவி யைத்தொ டர்ந்து     விசிறிவளை மாத ரைக்க லந்து          மொழியதர கோவை யிக்க ருந்தி ...... யமுதாகு 
முகிழ்முகுளி தார வெற்ப ணைந்து     சுழிமிதுன வாவி யிற்பு குந்து          முழுகியழி யாம னற்ப தங்கள் ...... தரவேணும் 
திரையுலவு சாக ரத்தி லங்கை     நகரிலுறை ராவ ணற்கி யைந்த          தெசமுடியு மீரு பத்தொ ழுங்கு ...... திணிதோளுஞ் 
சிதையவொரு வாளி யைத்து ரந்த     அரிமருக தீத றக்க டந்து          தெளிமருவு கார ணத்த மர்ந்த ...... முருகோனே 
அரணமதிள் சூழ்பு ரத்தி ருந்து     கருதுமொரு மூவ ருக்கி ரங்கி          யருளுமொரு நாய கற்ப ணிந்த ...... குருநாதா 
அகல்முடிவை யாதி யைத்தெ ளிந்து     இரவுபக லாக நெக்க விழ்ந்த          அடியவர்கள் பாட லுக்கி சைந்த ...... பெருமாளே.

(முதல் 6 வரிகள் பெண்களின் கண்களை வருணிப்பன). இரவுப் பொழுதில் மன்மதன் கையில் எடுத்து கோபித்து வலிமையாகச் செலுத்தும் மலர்ப் பாணங்களுடன் மாறுபட்டு (அந்தப் பாணங்களுக்கு எதிர் பாணங்களாக விளங்கி), இரண்டு காதில் உள்ள குண்டலங்களையும் தாக்கி, நீர் பரவியுள்ள கடலுடன் எதிர்த்து மாறுபட்டு (அதனினும் பெரியதாய் ஆழமாய் விளங்கி), (தமது பார்வையின் அழகால்) மான்கள் எல்லாம் (வெட்கிக் காட்டுக்குள்) புகும்படிச் செய்து, கடலைக் கிழித்த (வற்றும்படி செய்த) வேலாயுதத்துக்கு இணையாகி, பின்னும் அமுதத்தையும் ஆலகால விஷத்தையும் தம்மிடம் கொண்ட கண்கள் எனப்படும் வலையைக் கொண்டு, வலிமை மிக்க வாலிபர்களுடைய உயிர் மீது தொடர்ந்து (கண் வைத்துப்) பற்றி வளைத்துத் தம் வசப்படுத்தும் விலைமாதர்களுடன் கூடி, அவர்களுடைய (குதலைப்) பேச்சு புறப்படும் கொவ்வைப் பழம் போன்று சிவந்த வாயிதழின் கரும்பின் சுவையை உண்டு, அமுதம் பொதிந்துள்ள, அரும்பும் மொட்டுப் போன்ற முத்து மாலையை அணிந்த, மலை பொன்ற மார்பகத்தை அணைந்து, தொப்புள் என்னும் இன்பக் குளத்தில் படிந்து, முழுகி அழிந்து போகாமல் உனது நன்மை தரும் திருவடியைத் தரவேண்டும். அலைகள் வீசுகின்ற கடல் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்துவந்த ராவணனுடைய பத்து தலைகளும், இருபது ஒழுங்காய் அமைந்த வலிமையான தோள்களும் அழிபட, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய திருமாலின் மருகனே, தெளிவான அறிவு பொருந்திய மூலப் பொருளில் அமைந்து விளங்கும் முருகனே, காவல்கள் கொண்ட மதில்கள் சூழ்ந்திருந்த திரிபுரத்தில் இருந்து தம்மைத் தியானித்து வணங்கிய மூன்று* சிறந்த பக்தர்களுக்கு இரக்கம் கொண்டு (திரிபுரத்தை எரித்தபோதும்) அவர்களுக்கு அருள் புரிந்த ஒப்பற்ற நாயகனான சிவபெருமான் வணங்கிய குரு நாதா, பரந்த முடிவுக்கு முடிவாய், ஆதிக்கு ஆதியாய் உள்ள பொருள் இன்னதெனத் தெரிந்து, இரவும் பகலும் உள்ளம் பக்தியால் நெகிழ்ந்து உருகும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிக் கேட்டு மகிழும் பெருமாளே. 
* திரிபுரம் எரிபட்ட பொழுது மாளாது பிழைத்த சிவனடியார்கள் மூவரில் இருவர் சிவபெருமான் திருக் கோயில் காவலாளர் ஆனார்கள். பின் ஒருவன் சிவ நடனத்தின் போது முழுவு வாத்தியம் முழக்கும் பேறு அடைந்தான்.

பாடல் 1133 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தர்பரிகானடா தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தந்தன தானா தானா     தனன தந்தன தானா தானா          தனன தந்தன தானா தானா ...... தனதான

இரவொ டும்பக லேமா றாதே     அநுதி னந்துய ரோயா தேயே          யெரியு முந்தியி னாலே மாலே ...... பெரிதாகி 
இரைகொ ளும்படி யூடே பாடே     மிகுதி கொண்டொழி யாதே வாதே          யிடைக ளின்சில நாளே போயே ...... வயதாகி 
நரைக ளும்பெரி தாயே போயே     கிழவ னென்றொரு பேரே சார்வே          நடைக ளும்பல தாறே மாறே ...... விழலாகி 
நயன முந்தெரி யாதே போனால்     விடிவ தென்றடி யேனே தானே          நடன குஞ்சித வீடே கூடா ...... தழிவேனோ 
திருந டம்புரி தாளீ தூளீ     மகர குண்டலி மா¡£ சூரி          திரிபு ரந்தழ லேவீ சார்வீ ...... யபிராமி 
சிவனி டந்தரி நீலீ சூலீ     கவுரி பஞ்சவி யாயீ மாயீ          சிவைபெ ணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா 
அரவ கிங்கிணி வீரா தீரா     கிரிபு ரந்தொளிர் நாதா பாதா          அழகி ளங்குற மானார் தேனார் ...... மணவாளா 
அரிய ரன்பிர மாவோ டேமூ     வகைய ரிந்திர கோமா னீள்வா          னமரர் கந்தரு வானோ ரேனோர் ...... பெருமாளே.

இரவும் பகலுமாக, நீங்குதல் இன்றி, நாள் தோறும் துக்கம் இடைவிடாமல் பீடிக்க, தீப்போல வயிற்றில் எரிகின்ற பசியால் ஆசைகளே பெரிதாக வளர்ந்து, உணவு வேண்டி வாழ்க்கையின் ஊடே உழைப்பே மிகுதியாகி, தர்க்கம் செய்வதிலே எப்போதும் காலம் கழித்து, இவ்வாறே வாழ்க்கையின் இடைக்காலத்தில் சிலகாலம் கழிய, பின்பு வயது மூத்து, நரைகள் அதிகமாகிப் போய் கிழவன் என்ற ஒரு பேரே வந்து கூடிட, நடைகளும் நேராக இன்றி தாறுமாறாகி, கீழே விழும் நிலைமைக்கு வந்து, கண்களும் தெரியாமல் குருடனாகிப் போனால், அடியவனாகிய நான் என்போது தான் துன்பம் நீங்கி விடிந்து இன்பம் அடைவது? காலை வளைத்துத் தூக்கி நடனம் செய்பவனாகிய சிவபிரானின் மோக்ஷ வீட்டை அடையாமலேயே நான் அழிந்து போவேனோ? திருநடனம் செய்கின்ற பாதங்களை உடையவள், திருநீற்றுத் தூளை அணிந்துள்ளவள், மகர மீன் போன்ற குண்டலங்களைத் தரித்தவள், மாரியாகிய துர்க்கை, மகா காளி, திரிபுரங்களில் நெருப்பை ஏவியவள், புகலிடமாக உள்ளவள், பேரழகி, சிவனது இடப்பாகத்தைத் தரித்தவள், நீல நிறத்தாள், சூலம் ஏந்தியவள், கெளரி, ஐந்தாம் சக்தியாகும் அனுக்கிரக சக்தி, தாய், மகமாயி, சிவாம்பிகை, பாலாம்பிகை, பரிசுத்த தேவதை ஆகிய பார்வதி அருளிய குழந்தையே, ஒலிக்கும் கிண்கிணியை அணிந்துள்ள வீரனே, தீரனே, மலைகளைக் காக்கும் ஒளியாக விளங்கும் நாதனே, ஞானிகளின் தலைமேல் பதிக்கும் பாதனே, அழகும் இளமையும் பொலியும் குறத்தி, மான் போன்ற வள்ளியின் இனிமை நிறைந்த மணவாளனே, திருமால், சிவன், பிரமா எனப்படும் மூவகைத் தெய்வங்கள், இந்திரன் என்ற அரசன், பெரிய விண்ணுலகிலுள்ள தேவர்கள், கந்தர்வர் ஆனோர், பிற எல்லா வகையினர்க்கும் பெருமாளே. 

பாடல் 1134 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தானான தானன     தனதன தானான தானன          தனதன தானான தானன ...... தனதான

இருகுழை மீதோடி மீளவும்     கயல்களு மாலால காலமும்          ரதிபதி கோலாடு பூசலு ...... மெனவேநின் 
றிலகிய கூர்வேல்வி லோசன     ம்ருகமத பாடீர பூஷித          இளமுலை மாமாத ரார்வச ...... முருகாதே 
முருகவிழ் கூதாள மாலிகை     தழுவிய சீர்பாத தூளியின்          முழுகிவி டாய்போம னோலயம் ...... வரவோது 
முழுமதி மாயாவி காரமு     மொழிவது வாசாம கோசர          முகுளித ஞானோப தேசமு ...... மருள்வேணும் 
அருமறை நூலோதும் வேதியன்     இரணிய ரூபாந மோவென          அரிகரி நாராய ணாவென ...... ஒருபாலன் 
அவனெவ னாதார மேதென     இதனுள னோவோது நீயென          அகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி 
ஒருகணை தூணோடு மோதிட     விசைகொடு தோள்போறு வாளரி          யுகிர்கொடு வாராநி சாசர ...... னுடல்பீறும் 
உலகொரு தாளான மாமனும்     உமையொரு கூறான தாதையும்          உரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே.

இரண்டு குண்டலங்களின் மீது ஓடித் தாக்கி மீள்வனவும், கயல் மீன்களும் ஆலகால விஷமும் போன்றவையும், ரதியின் கணவனான மன்மதனுடைய மலர் அம்புகள் செய்யும் கலகம் விளங்கும் கூரிய வேலைப் போன்ற கண்கள் உடையவர்களாகி, கஸ்தூரி, சந்தனம் ஆகியவை அலங்கரிக்கும் இள மார்பகங்களை உடைய அழகிய விலைமாதர்களின் வசத்தில் பட்டு உருகாமல், நறு மணம் வீசுகின்ற கூதாள மலர் மாலை தழுவும் (உனது) சிறப்பு வாய்ந்த திருவடிப் பொடிகளில் நான் முழுகி, எல்லாவிதமான ஆசைகளை ஒழிக்கக் கூடிய மன ஒடுக்கம் வரும்படிக் கற்பிக்க வல்ல முற்றின அறிவையும், உலக மாயையின் துர்க்குணங்களை நீக்க வல்லதும், அரும்பு விட்டு விளங்குவதுமான ஞான உபதேசத்தையும் தந்து எனக்கு நீ அருள் புரிய வேண்டும். அருமை வாய்ந்த வேத நூல்களில் வல்ல வேதியன் இரணிய ரூபா நமோ என்று பாடம் சொல்லிக்கொடுத்த போது, ஹரி ஹரி நாராயணா நமோ என்று சொன்ன ஒப்பற்ற குழந்தையாகிய பிரகலாதனை (நோக்கி இரணியன்) அவன் எவன், என்ன ஆதாரம், (இந்தத் தூணில் இருக்கிறானா) நீ சொல்லுக என்று கேட்க, (பிரகலாதன்) எங்கள் நாயகன் உலகில் எல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாயகன் என்று சொல்லவும், இரணியன் சென்று எதிரிலிருந்த பெரிய தூணை மோதி அறைய, வேகத்துடன், பெரும் தோள்களுடனும், ஒளி பொருந்திய நரசிங்க வடிவத்துடனும் கையில் நகங்களுடன் வந்து அரக்கன் இரணியனுடைய உடலைக் கிழித்தவனும், உலகம் எல்லாம் ஒரு அடியால் அளந்த மாமனுமாகிய திருமாலும், உமா தேவியை உடம்பில் ஒரு பாகத்தில் தன்னிடம் வைத்துள்ள தந்தையாகிய சிவபெருமானும் போற்றிப் புகழும் தேவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே. 

பாடல் 1135 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தத்தத் தானன     தனதன தனதன தத்தத் தானன          தனதன தனதன தத்தத் தானன ...... தனதான

இருமுலை மலையென ஒப்பிட் டேயவர்     இருவிழி யதனில கப்பட் டேமன          மிசைபட வசனமு ரைத்திட் டேபல ...... மினிதொடே 
இடையது துவளகு லுக்கிக் காலணி     பரிபுர வொலிகள்தொ னிக்கப் பூதர          இளமுலை குழையஅ ணைத்துக் கேயுர ...... மணியோடே 
மதகத பவளம ழுத்திப் பூஷண     மணிபல சிதறிநெ றித்துத் தானுக          மருமலர் புனுகுத ரித்துப் பூவணை ...... மதராஜன் 
மருவிய கலவித னக்கொப் பாமென     மகிழ்வொடு ரசிதுமி குத்துக் கோதையை          மருவியு முருகிக ளைத்துப் பூமியி ...... லுழல்வேனோ 
திரிபுர மெரியந கைத்துக் காலனை     யுதைபட மதனைய ழித்துச் சாகர          திரைவரு கடுவைமி டற்றிற் றானணி ...... சிவனார்தந் 
திருவருள் முருகபெ ருத்துப் பாரினில்     சியொதனன் மடியமி குத்துப் பாரத          செயமுறு மரிதன்ம னத்துக் காகிய ...... மருகோனே 
நரிகழு வதுகள்க ளிக்கச் சோரிகள்     ரணகள முழுதுமி குத்துக் கூளிகள்          நடமிட அசுரர்கு லத்துக் காலனை ...... நிகராகி 
நனிகடல் கதறபொ ருப்புத் தூளெழ     நணுகிய இமையவ ருக்குச் சீருற          நணுகலர் மடியதொ லைத்துப் பேர்பேறு ...... பெருமாளே.

விலைமாதர்களின் இரண்டு மார்பகங்களும் மலைகளுக்குச் சமமானவை என்று உவமை கூறி, அவர்களுடைய கண்களாகிய வலையில் வசமாக அகப்பட்டு, என் மனம் பொருந்தும் வகையில் நன்றாகவும் ஒழுங்குடனும் இனிய வார்த்தைகளைப் பேசி, இடுப்பு நெகிழும்படி குலுக்கியும், காலில் அணிந்துள்ள சிலம்பின் மணிகள் ஓசை செய்யவும், மலை போன்ற இளம் மார்பகம் குழையும்படி அணைத்து, தோளணியில் உள்ள ரத்தினங்களுடன், மரகதம் பவளம் இவைகள் பதிக்கப் பெற்ற அலங்காரமான பல மணிகளும் கலைந்து, முறிப்புண்டு கழல, வாசனை மலர்களையும் புனுகு சட்டத்தையும் அணிந்து, மலர்ப்படுக்கையில் மன்மத ராஜனுடைய சாஸ்திரப்படி பொருந்திய புணர்ச்சிக்கே இக்கலவி ஒப்பாகும் என்று, மிக்க மகிழ்ச்சியுடன் ரசித்து, பெண்களைக் கூடிப் பொருந்தியும், உடலும் மனமும் உருகிச் சோர்ந்து இந்த உலகத்தில் அலைந்து திரிவேனோ? திரிபுரங்களும் எரியும்படி சிரித்து, யமனை உதைத்து, மன்மதனை (நெற்றிக் கண்ணால் எரித்து) அழித்து, (பாற்)கடலின் அலையில் வந்த விஷத்தை கண்டத்தில் அணிந்த சிவபெருமானுடைய திருவருளால் வந்த முருகனே, மமதையுடன் விளக்கமுற்றிருந்த துரியோதனன் இறக்கும்படி, மிக நன்றாக பாரதப் போரில் வெற்றி கண்ட திருமாலுடைய மனத்துக்கு விருப்பமான மருகனே, நரி, கழுகு ஆகியவை மகிழ்வுற, ரத்தங்கள் போர்க்களம் முழுமையும் நிறைந்து, பேய்கள் நடனம் செய்யவும், அசுரர் குலத்துக்கு ஒரு யமன் போலாகி, கடல் மிகவும் கதறவும், கிரெளஞ்சம், எழு கிரி ஆகியவை பொடிபடவும், அண்டிச் சரண் புகுந்த தேவர்களுக்கு நல் வாழ்வு வரவும், நணுகாத பகைவர் இறந்து பட அவர்களை அழித்து கீர்த்தி பெற்ற பெருமாளே. 

பாடல் 1136 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தானா தானா தனதன தானா தானா     தனதன தானா தானா ...... தனதான

இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ     எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ 
எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூ டாடா     இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே 
பலபல கோளாய் மாலா யுழலும தானால் வீணே     படிறுசொ லாகா லோகா ...... யதனாகிப் 
பரிவுட னாடாய் வீடா யடிமையு மீடே றாதே     பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ 
அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா     அவுணரை வாடா போடா ...... எனலாகி 
அழகிய வேலால் வாளால் நிலவிய சீரா வாலே     யவருடல் வாணா ளீரா ...... எதிராகி 
மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா     மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா 
மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே     வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே.

விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக்கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி (யாருக்கும்) ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? அலை வீசும் கடல் கோகோ கோகோ என்று கூச்சலிட்டு, ஓடும் அசுரர்களை வாடா போடா என்று அறை கூறிப் போருக்கு அழைப்பதாகி, அழகிய வேலாலும் வாளாலும், ஒளி விடுகின்ற சிறு கத்தியாலும், அந்த அசுரர்களின் உடலையும் வாழ் நாளையும் முடியும்படி எதிர்த்துப் பிளந்த மலை போன்ற பெரிய தோள்களை உடைய ஞான சொரூபனே, அழகான பாலாம்பிகையின் குழந்தையே, இந்திரனுடைய செல்வமே, இறைவனின் சேயே, மயில் வீரனே, வேதங்கள் தொழுகின்ற நாயகனே, தேவனே, நறு மணம் வீசும் மலரே, உயிர்களுக்கு ஆதாரமான தண்ணீரே, செழுமை வாய்ந்த செவ்வேளே, அறிவிலே பெரியவர்களின் பெருமாளே. 

பாடல் 1137 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -

தனதன தனதத்த தனனா தனனா     தனதன தனதத்த தனனா தனனா          தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான

உமையெனு மயில்பெற்ற மயில்வா கனனே     வனிதைய ரறுவர்க்கு மொருபா லகனே          உளமுரு கியபத்த ருறவே மறவே ...... னெனவோதி 
உருகுத லொருசற்று மறியேன் வறியேன்     இ ருவினை யிடையிட்ட கொடியே னடியேன்          உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர் 
அமையென வளர்சித்ர இருதோள் தழுவா     அமுதென மதுரித்த கனிவா யணுகா          அமளியி லணைவுற்ற அநுரா கமகோ ...... ததிமூழ்கி 
அநவர தமுமுற்ற மணிமா முலைதோய்     கலவியி னலமற்ப சுகமா கினுமா          அநுபவ மிதுசற்றும் விடவோ இயலா ...... தியலாதே 
தமனிய குலசக்ர கிரியோ கடலோ     விடமென முடிவைத்த முதுபே ரிருளோ          தனுவென முனையிட்ட கொலைமூ விலைவேல் ...... கொடுபார்வை 
தழலெழ வருமுக்ர எமபா தகனோ     யுகஇறு தியில்மிக்க வடவா னலமோ          தனியிவ னெனமிக்க பிசிதா சனபூ ...... பதியாகி 
இமையவ ரனைவர்க்கும் அறையோ அறையோ     அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ          எழுபுவி யுலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும் 
எனவரு மொருதுட்டன் முறையோ முறையோ     வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா          எனவொரு அயில்தொட்ட அரசே யிமையோர் ...... பெருமாளே.

மயில் போன்ற உமா தேவி பெற்ற, மயிலை வாகனமாக உடையவனே, கார்த்திகைப் பெண்டிர் அறுவருக்கும் ஒப்பற்ற பாலகனே, உள்ளம் உருகுகின்ற பக்தர்களின் நட்பாளனே, நான் உன்னை மறக்க மாட்டேன் என்று உன்னைப் போற்றி செய்து மனம் உருகுதல் ஒரு சிறிதும் அறியாதவன் நான். தரித்திரம் பிடித்தவன். நல் வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளின் இடையே சிக்கிக் கொண்டிருக்கும் கொடியவன் அடியேனாகிய நான் அறிவு இல்லாதவன். (அத்தகையவனாகிய நான்) பெற்று உய்ய முக்தியைத் தருவாயாக. பவளம் போன்ற வாயை உடைய இளம் பெண்களின் மூங்கில் போன்று செழித்து வளர்ந்துள்ள அழகிய இரண்டு புயங்களையும் தழுவி, அமுதம் போல் இனிப்பைக் கொண்ட (கொவ்வைக்) கனி போன்ற வாயை நெருங்கி அனுபவித்து, படுக்கையில் சேர்ந்து களிக்கும் காம இச்சை என்னும் பெரிய கடலில் முழுகி, எப்போதும் பொருந்தியுள்ள அழகிய மார்பகங்களில் படியும் புணர்ச்சியின் இன்பம் கொஞ்ச நேரமே நீடிக்கின்றது என்றாலும், அது பெரிதும் இயற்கையாகவே விரும்பப்படும் ஒரு நுகர்ச்சி இன்பமாகும். இதைக் கொஞ்சமும் விட்டொழிக்க முடியவே முடியாது. பொன் மலையாகிய சிறந்த மேரு மலையோ? சக்ரவாள கிரியோ? கடல் தானோ? விஷத்தை உச்சியில் கொண்டதும் முற்றினதுமான பெரிய இருட்டாகுமோ? வில்லைப் போல போர்க்கென்று அமைந்துள்ள, கொலை செய்ய வல்லதுமான மூன்று நுனிகளை உடைய வேல் போன்ற கண்களின் கொடிய பார்வை நெருப்பைக் கக்க வருகின்ற கொடுமை காட்டுகின்ற யமன் என்ற பாதகன் தானோ? யுக முடிவில் மிகுந்து எழுகின்ற வடவா முகாக்கினியோ? ஒப்பற்ற இவன் என்று யாவரும் பயப்படும்படி, மாமிசத்தை உண்ணும் அரக்கர்களின் அரசனாகிய சூரன் தேவர்கள் யாவரும் போருக்கு வாருங்கள், வாருங்கள், திருமால், பிரமன் முதலியோர் யாவரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், மூவேழு உலகத்தினரும் போருக்கு வாருங்கள், போருக்கு வாருங்கள், என்னுடன் சண்டை செய்ய வாருங்கள், என்று கூச்சலிட்டு வருகின்றான் அந்த ஒப்பற்ற துஷ்டனாகிய சூரன். எங்களைக் காத்தருள வேண்டும், காத்தருள வேண்டும் என்று வடக்கில் உள்ள அஷ்ட குல பர்வத வாசிகளும் அடைக்கலம், அடைக்கலம், புரந்தருளுக, காத்தருள்க என்று முறை இட, ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்திய அரசனே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 1138 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -

தனத்த தத்தன தனதன தந்தத்     தனத்த தத்தன தனதன தந்தத்          தனத்த தத்தன தனதன தந்தத் ...... தனதான

உரைத்த பற்றுட னடிகள்ப ணிந்திட்     டிருத்தி மெத்தென இளநகை யுஞ்சற்          றுமிழ்த்த டைக்கல மெனஎதிர் கும்பிட் ...... டணைமேல்வீழ்ந் 
துடுத்த பொற்றுகி லகலல்கு லுந்தொட்     டெடுத்த ணைத்திதழ் பெருகமு தந்துய்த்          துனக்கெ னக்கென வுருகிமு யங்கிட் ...... டுளம்வேறாய் 
அருக்கி யத்தனை யெனுமவ சம்பட்     டறுத்தொ துக்கிய நகநுதி யுந்தைத்          தறப்பி தற்றிட அமளிக லங்கித் ...... தடுமாறி 
அளைத்து ழைத்திரு விழிகள்சி வந்திட்     டயர்த்தி தத்தொடு மொழிபவ ருந்திக்          கடுத்த கப்படு கலவியில் நொந்தெய்த் ...... திடலாமோ 
தரைக்க டற்புகு நிருதர்த யங்கச்     சளப்ப டத்தட முடிகள்பி டுங்கித்          தகர்த்தொ லித்தெழு மலையொடு துண்டப் ...... பிறைசூடி 
தனுக்கி ரித்திரி தரஎதி ருங்கொக்     கினைப்ப தைத்துட லலறிட வஞ்சத்          தருக்க டக்கிய சமர்பொரு துங்கத் ...... தனிவேலா 
பருப்ப தப்ரிய குறுமுனி வந்தித்     திருக்கு முத்தம நிருதர்க லங்கப்          படைப்பெ லத்தொடு பழயக்ர வுஞ்சக் ...... கிரிசாடிப் 
படர்ப்ப றைக்குரு குடலுதி ரங்குக்     குடக்கொ டிக்கிடு குமரகொ டுங்கற்          பதத்தி றுத்துகு பசியசி கண்டிப் ...... பெருமாளே.

சொற்களால் வெளிப்படுத்தப்பட்ட ஆசையுடன் அடிகளில் வணங்கி, மெத்தென்ற அணையில் இருக்கச் செய்து புன்சிரிப்பும் கொஞ்சம் வெளிக்காட்ட, உனக்கு அடைக்கலம் என்று அந்தப் பொது மகளை எதிர் வணங்கி படுக்கையில் அவள் மேல் விழுந்து, அணிந்துள்ள அழகிய ஆடை நீங்கிய பெண்குறியைப் பரிசித்துத் தீண்டி, அவளை எடுத்து, அணைத்து, வாயிதழ் பெருகி ஊறும் அமுதத்தை அனுபவித்து, உனக்கு என்ன வேண்டும், எனக்கு இன்னதைக் கொடு என்று மனம் ஒன்றுபட்டு தழுவிப் புணர்ந்திட்டு, அறிவு கலங்கி, தேவர்கள், அதிதிகள் ஆகியோருக்குச் செய்யும் உபசாரத்தை நிகர்க்கும் என்று சொல்லும்படி (அவ்வளவு மரியாதையுடன்) தன் வசம் இழந்து, அறுத்து ஒதுக்கப்பட்ட நக நுனியால் கீறுபட்டு, மிகவும் பிதற்றலான பேச்சுக்களைப் பேசி, படுக்கையும் கலைந்து போகத் தடுமாற்றம் அடைந்து, அனுபவித்து திளைத்து, இரண்டு கண்களும் சிவக்க தளர்ந்து, இன்பகரமாகப் பேசும் (அந்த விலைமாதர்களின்) உடல் இன்பத்துக்கு ஈடுபட்டு சிக்கிக் கொள்ளும் புணர்ச்சியினால் மனமும் உடலும் நொந்து நான் இளைப்புறலாமோ? தரையிலும் கடலிலும் புகுந்த அசுரர்கள் கலக்கமுற்று துன்பப்பட, அவர்களுடைய பெரிய தலைகளைப் பறித்து நொறுக்கி, கூச்சலிட்டு எழுந்த ஏழு மலைகளுடன் பிறைச் சந்திரனைச் சூடியுள்ள சிவபெருமானுக்கு வில்லாயிருந்த மேரு மலையும் சுழற்சியுற, எதிர்த்து வந்த மாமரமாகிய சூரன் உடல் பதைப்புற்று கூச்சலிட, வஞ்ச எண்ணத்தையும் செருக்கையும் அடக்கிய போரைப் புரிந்த பரிசுத்தமான ஒப்பற்ற வேலாயுதனே, மலைகள் மீது விருப்பம் கொண்டவனே, அகத்தியர் வணங்கிப் போற்றுகின்ற உத்தமனே, அசுரர்கள் கலக்கம் கொள்ள படையின் பலத்துடன் பழையதாய் நிற்கும் கிரெளஞ்ச மலையைத் தகர்த்து, படர்ந்துள்ள இறகுகளை உடைய அந்தக் கிரவுஞ்சனுடைய உடலில் உள்ள இரத்தத்தை கொடியாகிய கோழிக்குத் தந்த குமரனே, முரட்டுத் தன்மை உள்ள மலை இடத்தே தங்கி அங்கிருந்து பறக்கும் பச்சை நிறமான மயிலை வாகனமாக உடைய பெருமாளே. 

பாடல் 1139 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆந்தோளிகா தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தனதத்தன தானன தந்தன     தனதத்தன தானன தந்தன          தனதத்தன தானன தந்தன ...... தனதான

உலகத்தினில் மாதரு மைந்தரும்     உறுசுற்றமும் வாழ்வொடு றுங்கிளை          உயர்துக்கமு மோடுற வென்றுற ...... வருகாலன் 
உதிரத்துட னேசல மென்பொடு     உறுதிப்பட வேவள ருங்குடில்          உதிரக்கனல் மீதுற என்றனை ...... யொழியாமுன் 
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்     கதறிப்பத றாவுரை வென்றுயர்          கயவர்க்குள னாய்வினை நெஞ்சொடு ...... களிகூருங் 
கவலைப்புல மோடுற என்துயர்     கழிவித்துன தாளிணை யன்பொடு          கருதித்தொழும் வாழ்வது தந்திட ...... நினைவாயே 
இலகப்பதி னாலுல கங்களும்     இருளைக்கடி வானெழு மம்புலி          யெழில்மிக்கிட வேணியில் வந்துற ...... எருதேறி 
இருகைத்தல மான்மழு வும்புனை     யிறையப்பதி யாகிய இன்சொலன்          இசையப்பரி வோடினி தன்றரு ...... ளிளையோனே 
மலைபட்டிரு கூறெழ வன்கடல்     நிலைகெட்டபி தாவென அஞ்சகர்          வலியற்றசு ரேசரு மங்கிட ...... வடிவேலால் 
மலைவித்தக வானவ ரிந்திரர்     மலர்கைக்கொடு மாதவ ருந்தொழ          வடிவுற்றொரு தோகையில் வந்தருள் ...... பெருமாளே.

உலகில் மனைவி முதலிய பெண்களும், புதல்வர்களும், நெருங்கிய சுற்றத்தாரும், நல்ல வாழ்வுடன் வாழும் மற்ற உறவினர்களும், உயர் துக்கமுமோடு மிக்க துயரத்தோடு பந்துக்கள் என்று வந்து கூடும்படியாக வருகின்ற யமன், இரத்தத்துடன் நீர், எலும்பு இவைகளுடன் நல்ல உறுதியாக வளர்ந்துள்ள இந்த உடல் அழிய நெருப்பில் சேரும்படி என்னை இந்த வாழ்க்கையை விட்டு (அந்த யமன்) நீக்குதற்கு முன்பாக, கலகத்துக்கு இடம் தரும் சமய நூல்கள் பலவற்றைக் கற்று எதிர் வாதம்பேசியும், பதறியும், பேச்சில் வல்லவனாய் வென்று, கீழ் மக்களுக்கு உள்ள புத்தியைக் கொண்டவனாய், தீவினைக்கு உரிய எண்ணத்துடன் செருக்கு மிகும் சஞ்சலம் உறும் அறிவுடன் நான் இருக்க, நீ என் துக்கத்தை நீக்கி உனது இரண்டு திருவடிகளை அன்புடன் நான் தியானித்து வணங்கும் நல் வாழ்வை தந்திட நினைத்தருள்வாயாக. விளங்கும்படி பதினான்கு உலகங்களிலும் இருட்டை விலக்கி ஒழிப்பதற்காக வானில் எழுகின்ற சந்திரன் அழகு மிகுந்து பொலிய சடையில் வந்து பொருந்த, ரிஷப வாகனத்தின் மேல் ஏறி, இரண்டு கைகளிலும் மானும், மழுவும் விளங்குகின்ற கடவுள், அந்தத் தலைவராகிய இனிய சொற்களைக் கொண்ட சிவபெருமானுடைய மனதிற்குப் பொருந்தும்படி அன்புடன் இன்பகரமாக முன்பு உபதேசித்த இளையோனே. கிரெளஞ்ச மலை தாக்கப்பட்டு இரண்டு பிளவு உண்டாக, வலிய கடல் நிலை குலைந்து, அழகிய உலகத்தில் உள்ளவர்கள் அடைக்கலம் என்று முறையிட, வலிமை நீங்கிய அசுரத் தலைவர்களும் பொலிவு இழந்திட, கூரிய வேலினால் மலைக்கும்படியாக போர் செய்த ஞானியே, தேவர்களும், இந்திரர்களும், மலர் ஏந்திய கரங்களோடு சிறந்த தவசிகளும், வணங்கி நிற்க, அழகு பொருந்திய ஒப்பற்ற மயிலின் மீது வந்து அருளும் பெருமாளே. 

பாடல் 1140 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வலஜி தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு - /4/4/4 0 
நடை - தகதகிட

தனதனன தனதனன தானான தானதன     தனதனன தனதனன தானான தானதன          தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான

உறவின்முறை கதறியழ ஊராரு மாசையற     பறைதிமிலை முழவினிசை யாகாச மீதுமுற          உலகிலுள பலரரிசி வாய்மீதி லேசொரியு ...... மந்தநாளில் 
உனதுமுக கருணைமல ரோராறு மாறிருகை     திரள்புயமு மெழில்பணிகொள் வார்காது நீள்விழியும்          உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ...... அந்தமார்பும் 
மறையறைய அமரர்தரு பூமாரி யேசொரிய     மதுவொழுகு தரவில்மணி மீதேமு நூலொளிர          மயிலின்மிசை யழகுபொலி யாளாய்மு னாரடியர் ...... வந்துகூட 
மறலிபடை யமபுரமு மீதோட வேபொருது     விருதுபல முறைமுறையி லேயூதி வாதுசெய்து          மதலையொரு குதலையடி நாயேனை யாளஇஙன் ...... வந்திடாயோ 
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ     அதிரஎழு புவியுலக மீரேழு மோலமிட          பிடிகளிறி னடல்நிரைகள் பாழாக வேதிசையில் ...... நின்றநாகம் 
பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ     பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு          பிணநிணமு முணவுசெய்து பேயோடு மாடல்செய ...... வென்றதீரா 
குறமறவர் கொடியடிகள் கூசாது போய்வருட     கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு          குளிர்கணியி னிளமரம தேயாகி நீடியுயர் ...... குன்றுலாவி 
கொடியதொரு முயலகனின் மீதாடு வாருடைய     வொருபுறம துறவளரு மாதாபெ றாவருள்செய்          குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ...... தம்பிரானே.

உறவு முறையைச் சொல்லி சுற்றத்தினர் வாய்விட்டுக் கதறி அழ, ஊரில் உள்ளவர்களும் என்னைப் பிழைக்கவைக்கலாம் என்ற ஆசையைக் கைவிட, பறை, திமிலை, முரசு ஆகிய வாத்தியங்களின் ஒலி ஆகாய முகடு வரை எழ, உலகில் உள்ள பலரும் வாய்க்கரிசி இடும் அந்தக் கடைசி நாளில், உன்னுடைய கருணைத் திருமுக மலர்கள் ஒரு ஆறும், பன்னிரண்டு திருக்கரங்களுடன் கூடிய திரண்ட தோள்களும், அழகிய அணிகளை அணிந்துள்ள வரிசையான காதுகளும், நீண்ட கண்களும், இரண்டு திருவடிகளின் மீதும் விளங்கும் சிறப்பு மிக்க சதங்கையும், அழகு மிகுந்த அந்த மார்பும், வேதங்கள் ஒலிக்க, தேவர்கள் கற்பக மலர் மழை சொரிய, தேன் ஒழுகும் ஒப்பற்ற மணி மாலையின்மேல் பூணூலும் விளங்க, மயிலின் மேல் அழகு விளங்கும் நம்பியாக, முன்பு நிறைந்த அடியார்கள் உடன் வந்து கூட, யமனுடைய படைகள் அஞ்சி யமபுரத்தை நோக்கி ஓட்டம் பிடிக்கும்படி அவர்களுடன் போர் புரிந்து, பல வெற்றிச் சின்னங்களை வரிசை வரிசையாக ஊதி, உன்னுடன் வாது செய்பவர்களைத் தர்க்கித்து வென்று, குழந்தை அன்பு கொண்டவனான ஒரு மழலைச் சொல் பேச்சுள்ள அடி நாயேனை ஆட்கொள்ள இவவிடம் வந்து உதவ மாட்டாயோ? பிறைச் சந்திரன் போன்ற பற்களும், முரட்டு வலிமையும் கொண்ட அசுரர்கள் திரும்ப முடியாமல் மண்ணில் மாண்டு விழவும், ஏழு தீவுகளுடன் கூடிய இப் பூமண்டலம் நடுங்கவும், பதினான்கு உலகத்தினரும் அபயக் கூச்சலிடவும், பெண் யானை, ஆண் யானை (இவற்றின்) வலிமை பொருந்திய கூட்டங்கள் பாழ்பட்டு அழியவும், அஷ்ட திக்குகளைக் காத்து நின்ற கஜங்கள் இடம் விட்டு ஓட்டம் கொள்ளவும், நீண்ட மலைகள் இடிந்து விழவும், பெரிய கடல் வற்றிப் புழுதி கிளம்பவும், பெரிய வயிற்றை உடைய மகா காளி பூதங்களோடு பிணத்தின் கொழுப்பையும் மாமிசத்தையும் உண்டு, அந்தப் பேய்களோடு கூத்தாடவும், போர் செய்து வெற்றிகொண்ட தீரனே, குறக்குல மலை வேடர்களின் கொடி போன்ற வள்ளியின் திருவடிகளை வெட்கம் இல்லாமல் (நீ) சென்று பற்றி அருளும்பொருட்டு, கரடியும், புலியும் திரிகின்ற கடுமையான நீண்ட காட்டில் விளங்கி எழுந்த வேங்கையின் இள மர வடிவம் எடுத்து நின்று, பின்பு, நீண்டு உயர்ந்திருந்த வள்ளி மலையில் உலவியவனே, பொல்லாதவனாகிய முயலகன் என்னும் பூதத்தின் மீது நடனம் புரிகின்ற சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் பொருந்தி விளங்கும் தாய் பார்வதி பெற்றருளிய குமரனே, குருமூர்த்தியே, இறவாத தன்மைபெற்ற விண்ணோர்கள் விரும்பிப் போற்ற அவர்களுக்கு அருள் செய்த தம்பிரானே. 

பாடல் 114த - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -

தனன தந்தன தானா தானன     தனன தந்தன தானா தானன          தனன தந்தன தானா தானன ...... தனதான

உறவு சிங்கிகள் காமா காரிகள்     முறைம சங்கிக ளாசா வேசிகள்          உதடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை 
உடைய கொங்கையின் மீதே தூசிகள்     பிணமெ னும்படி பேய்நீ ராகிய          உணவை யுண்டுடை சோர்கோ மாளிகள் ...... கடல்ஞாலத் 
தறவு நெஞ்சுபொ லாமா பாவிகள்     வறுமை தந்திடு பாழ்மூ தேவிகள்          அணிநெ ருங்கிக ளாசா பாஷண ...... மடமாதர் 
அழகு யர்ந்தபொய் மாயா ரூபிகள்     கலவி யின்பமெ னாவே சோருதல்          அலம லந்தடு மாறா தோர்கதி ...... யருள்வாயே 
பறவை யென்கிற கூடார் மூவரண்     முறையி டுந்தமர் வானோர் தேரரி          பகழி குன்றவி லாலே நீறெழ ...... வொருமூவர் 
பதநி னைந்துவி டாதே தாள் பெற     அருள்பு ரிந்தபி ரானார் மாபதி          பரவு கந்தசு வாமீ கானக ...... மதின்மேவுங் 
குறவர் தங்கள்பி ரானே மாமரம்     நெறுநெ றென்றடி வேரோ டேநிலை          குலைய வென்றிகொள் வேலே யேவிய ...... புயவீரா 
குயில்க ளன்றில்கள் கூகூ கூவென     மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை          குறவர் சுந்தரி யோடே கூடிய ...... பெருமாளே.

உறவு முறை கூறி பேசிக் கொண்டேயிருக்கும் விஷமிகள். காமத்துக்கு இருப்பிடமானவர்கள். (மாமா, அத்தான் என்று) உறவு கூறி மயக்கம் செய்பவர்கள். அதீதமான காமம் நிறைந்த பொது மகளிர். உதடுகள் (அதிகமாக ஈடுபட்டதால்) நோவுற்றவர்கள். வெட்கம் இல்லாத பயனற்றவர்கள். நகக் குறிகளை உடைய மார்பின் மேல் ஆடை அணிந்தவர்கள். பிணம் என்று சொல்லும்படி ஆவேச நீராகிய கள்ளை உண்டு, ஆடை நெகிழக் கொண்டாட்டம் ஆடுபவர்கள். கடல் சூழ்ந்த உலகில் மிகவும் பொல்லாத நெஞ்சத்தவர்களான பெரிய பாவிகள். தரித்திர நிலையைச் சேர்ப்பிக்கும் பாழான மூதேவிகள். ஆபரணங்களை நெருக்கி அணிந்தவர்கள். ஆசைப் பேச்சுக்களைப் பேசும் இள மாதர்கள். அழகில் மேம்பட்டு மாயை சம்பந்தப்பட்ட உருவத்தினர். அவர்களுடன் புணர்ச்சி இன்பமே வேண்டும் என்று கூறியே நான் தளர்ச்சி அடைதல் போதும், போதும். (இனி நான்) இத்தகைய தடுமாற்றம் அடையாமல் ஒப்பற்ற நற் கதியைத் தந்தருளுக. பறக்கும் தன்மையுள்ள பகைவர்கள் ஆகிய திரிபுரங்களின் கொடுமையைக் குறித்து முறையிட்ட தமக்கு வேண்டியவர்களான தேவர்கள் தேராகவும், திருமால் அம்பாகவும், மேரு மலை வில்லாகவும் கொண்டு, (திரிபுரங்களைச் சிரித்தே) சாம்பலாகும்படிச் செய்த சிவபிரானின் திருவடியைத் தியானித்தல் விடாதிருந்த காரணத்தால், அதிலிருந்து ஒப்பற்ற மூவர் மாத்திரம்* திருவடி நிழலைப் பெறும்படி அருள் பாலித்த சிவபெருமான் போற்றும் கந்த சுவாமியே, காட்டில் இருந்த குறவர்களின் தலைவனே, மாமரமாக நின்ற சூரன் நெறு நெறு என்று முறிந்து அடி வேருடன் நிலை குலைந்து அழியும்படி வெற்றி பெறும் வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய வீரனே, குயில்களும், அன்றில் பறவைகளும் கூகூகூ என்று ஒலி எழுப்ப, மலர்களினின்றும் பொங்கி எழுந்த தேன் சொட்டும் சோலைகளில், குறவர் குலத்து அழகியான வள்ளியுடன் சேர்ந்த பெருமாளே. 
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.

பாடல் 1142 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -

தானான தானன தனத்த தத்தன     தானான தானன தனத்த தத்தன          தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான

ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற     வூசாடு பாழ்குடி லெடுத்த திற்படி          ஓயாத மாமய லுழற்றி னிற்படு ...... வம்பனேனை 
ஊதாரி யாய்விடு சமத்தில் நிற்பது     மாராத காதலை மனத்தில் வைப்பது          மூரோடு போயெதிர் பிணக்கி னிற்பது ...... முந்திடாதே 
தேனூறு வாய்மொழி பரத்தை யர்க்கொரு     நாய்போல வேயவர் வசத்தில் நிற்பது          சீர்கேட தாய்விடு சிறுப்பி ளைத்தன ...... மென்றுநீபச் 
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்     சீராடி நாண்மல ரெனப்ரி யப்படு          சீர்பாத போதக மநுக்ர கிப்பது ...... மெந்தநாளோ 
மானாக பாயலில் படுக்கை யிட்டவர்     மாமேரு வாரியில் திரித்து விட்டவர்          மாடோடு போய்வரு மிடைக்குலத்தவ ...... ரன்றுவாவி 
வாய்நாக மோலிட பிடித்த சக்கிர     வாளேவி யேகர வினைத்த றித்தவர்          மாமாய னாயுல களித்த வித்தகர் ...... தங்கைவாழ்வே 
கானாரு மாமலை தினைப்பு னத்தினில்     கால்மேல்வி ழாவொரு குறச்சி றுக்கியை          காணாது போயியல் புணர்ச்சி யிட்டருள் ...... கந்தவேளே 
காரேழு மாமலை யிடித்து ருக்கெட     காராழி யேழவை கலக்கி விட்டுயர்          காவான நாடர்கள் பகைச்ச வட்டிய ...... தம்பிரானே.

மாமிசம் பொருந்திய உடலுடன் பிராணவாயுவைத் தரிப்பதாகி, இறுதியில் அடியோடு அழுகிப் போகும் தன்மையான பாழான இந்தக் குடிசையை எடுத்து, அந்த உடலில் இருந்தவாறு இப்பூமியில் ஓய்வில்லாதபடி நிறைந்த காம இச்சை என்கின்ற சுழற்சியில் அகப்பட்டுள்ள துஷ்டனாகிய எனக்கு, வீண் செலவு செய்வதில் சாமர்த்தியமாக இருப்பதும், தெவிட்டாத ஆசை அடங்காத காமத்தை மனதில் வைத்திருப்பதும், ஊரார்களுடன் மாறுபட்டு ஊடி நிற்பதும் (ஆகிய இக்குணங்கள்) என்னைத் தள்ளிச் செலுத்தாமல், இனிமை ஊறுகின்ற பேச்சை உடைய விலைமாதர்கள் பால் ஒரு நாயைப் போல அவர்கள் வசப்பட்டு நிற்பது சீர் கேடான ஒழுங்கீனத்தில் கொண்டு விடும் அறியாமையாகும் என்று உணர்த்தி, கடம்பின் குளிர்ந்த நல்ல மலர்களைக் கொண்டு பக்தர்கள் போற்றித் துதித்து, அன்று மலர்ந்த பூ என்று பாராட்டி விரும்பும் உனது திருவடியை உணரும் ஞான உபதேசம் எனக்கு நீ அருள் செய்வது என்று கிடைக்கும்? பெரிய பாம்பாகிய ஆதிசேஷனாகிய படுக்கையைக் கொண்டவர், மேரு மலையை (மத்தாகும்படி) பாற்கடல் கடைந்த போது கடலில் சுழல விட்டவர், மாடுகளுடன் மேய்க்கப் போய் வரும் இடையர் குலத்தவர், அன்றொரு நாள் மடுவில் கஜேந்திரன் என்னும் யானை கூச்சலிட்டு அழைக்க, தன் கையில் பிடித்திருந்த சுதர்சனம் என்ற சக்கரமாம் வாளைச் செலுத்தி முதலையைப் பிளந்தவர், பெரிய மாயையில் வல்லவராய் உலகங்களைக் காத்தளிக்கும் பேரறிஞர் ஆகிய திருமாலின் தங்கையாகிய பார்வதியின் செல்வமே, காடுகள் நிறைந்த பெரிய வள்ளிமலையில் இருந்த தினைப் புனத்தில், காலின் மேல் விழுந்து, ஒப்பற்ற குறப்பெண்ணாகிய வள்ளியிடம் வேடர்கள் யாவருக்கும் தெரியாமல் சென்று, அன்புடன் அவளைக் கலந்த கந்தப் பெருமானே, மேகங்கள் தங்கும், (சூரனுக்குத் துணையாக இருந்த) சிறந்த ஏழு மலைகளைப் பொடி செய்தும், அவற்றின் உருவம் அழிய வைத்தும, கரிய கடல்கள் ஏழையும் கலக்கி விட்டும், மேலான கற்பகச் சோலைகள் உள்ள தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்தொழித்த தம்பிரானே. 

பாடல் 1143 - பொதுப்பாடல்கள் 
ராகம் - த்விஜாவந்தி தாளம் - ஆதி - 2 களை

தத்தன தனதன தானா தனதன     தத்தன தனதன தானா தனதன          தத்தன தனதன தானா தனதன ...... தனதான

எட்டுட னொருதொளை வாயா யதுபசு     மட்கல மிருவினை தோயா மிகுபிணி          யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ...... நிலையாக 
எப்படி யுயர்கதி நாமே றுவதென     எட்பகி ரினுமிது வோரார் தமதம          திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ...... லதிலேவீழ் 
முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு     முப்பதி னறுபதின் மேலா மறுவரு          முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ...... வெளியாக 
முக்குண மதுகெட நானா வெனவரு     முத்திரை யழிதர ஆரா வமுதன          முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ...... தொருநாளே 
திட்டென எதிர்வரு மாகா ளியினொடு     திக்கிட தரிகிட தீதோ மெனவொரு          சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன் 
செப்புக வெனமுன மோதா துணர்வது     சிற்சுக பரவெளி யீதே யெனஅவர்          தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ...... குருநாதா 
மட்டற அமர்பொரு சூரா திபனுடல்     பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு          மற்புய மரகத மாதோ கையில்நட ...... மிடுவோனே 
வச்சிர கரதல வானோ ரதிபதி     பொற்புறு கரிபரி தேரோ டழகுற          வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ...... பெருமாளே.

(8 + 1) ஒன்பது தொளை வாயில்களை* உடைய பச்சை மண்ணாலாகிய பாத்திரம் (ஆகிய இந்த உடல்), நல் வினை, தீ வினை ஆகிய இரு வினைகளிலும் தோய்ந்து, மிகு பிணி இட்டிடை மிக்கு வரும் நோய்கள் ஒரு பொழுதினிலேனும் (உடலில்) உயிர் நிலைத்திருப்பதற்குத் தடைகள் செய்ய, எவ்வாறு மேலான நற் கதியை நாம் கரை ஏறி அடைவது என்று எள் பிளவுபட்ட அளவு கூட இதன் உண்மையை அறியாதவர்களாய் தங்கள் தங்களுடைய ஆசை போன வழியே துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலில் வீழ்கின்ற மூடர்களின் தீயவழியில் நான் விழாமல், வலிமை கொண்டதான தொண்ணூற்று ஆறு தத்துவங்களை** முற்றிக் கடந்த அறிவுக்கு எட்டாத ஞானம் உதயமாகும்படியான விளக்கமானது வெளிப்பட, சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள் அழிய, நான் நான் என்று எழுகின்ற ஆணவ உணர்ச்சியாகிய அந்த அடையாள முத்திரை அழிய, தெவிட்டாத அமுது என்னும்படியான முத்தமிழை தெரிந்து போதிக்க வல்ல (உனது) இனிய வாக்கால் உபதேசித்து அருளுவதும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமா? திடீரென்று (வாதித்து) எதிர்த்து நின்ற மகா காளியுடன் திக்கிட தரிகிட தீதோம் என்ற ஒரு ஓசையுடன் ஒப்பற்ற, விசித்திரமான, பல வகையதான, எதிர்நடனம் ஆடிய திருவடி மலர்களைக் கொண்ட சிவபெருமான், உபதேச மொழியாகிய பிரணவத்தின் உட்பொருளைச் சொல்லுவாயாக என்று கேட்க, முன்பு ஓதாமலே உணர வேண்டியதும், ஞான ஆனந்தமானதுமான மேலான ஞான ஆகாசமானதுமான பொருள் இதுதான் என்று அவருடைய வலது காதில் உபதேசித்து அருளிய குரு நாதனே, குறையற்ற வழியில் சண்டை செய்த சூரனாகிய தலைவனுடைய உடல் பொடிபட்டு அழிய வேகமாய் எதிர்த்து, கூரிய வேல் கொண்டு எறிந்திட்ட வளப்பம் பொருந்திய புயங்களைக் கொண்டவனே, பச்சை நிறம் கொண்ட அழகிய மயிலின் மீது நடனம் செய்பவனே, வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவர்கள் தலைவனாகிய இந்திரன், அழகு கொண்ட (ஐராவதம் என்ற) யானை, (உச்சைச்சிரவம் என்ற) குதிரை, தேர் இவைகளோடு பொலிவு பெற்று விளங்கும்படி அவனை வாழ வைத்த மருமகனே, வாழ்ந்து விளங்கும் தேவர்களின் பெருமாளே. 
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள்.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

பாடல் 1144 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...... ; தாளம் -

தத்த தனதனன தான தானதன     தத்த தனதனன தான தானதன          தத்த தனதனன தான தானதன ...... தனதான

எத்தி யிருகுழையை மோதி மீனமதின்     முட்டி யிடறியம தூதர் போலமுகி          லெட்டி வயவர்கர வாளை வேல்முனையை ...... யெதிர்சீறி 
எத்தி சையினுமொரு காம ராஜன்மிக     வெற்றி யரசுதனை யாள வீசியட          லெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழி ...... மடமாதர் 
வித்தை தனிலுருகி யாசை யாகியவர்     கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரை          மெத்தை தனிலுருகி மோக மாகிவிட ...... அதன்மேலே 
வெட்க மிலைநடவு மேகு மேகுமினி     மற்ற வரையழையு மாத ரேயெனமுன்          விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே 
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்     அத்தி நகரமர சான வாள்நிருபன்          ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெல ...... நிலைகூற 
உற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்     வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும்          ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரி ...... லசுரேசன் 
பத்து முடிகள்துக ளாக வாகுஇரு     பத்து மொருகணையில் வீழ நேரவுணர்          பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே 
பச்சை மயிலில்வரு வீர வேல்முருக     துட்ட நிருதர்குல கால வானவர்கள்          பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே.

(முதல் 6 வரிகள் வேசையர் கண்களை வருணிக்கின்றன). இரண்டு குண்டலங்களையும் உதைத்து எறிதல் போலத் தாக்கி, மீன் பாய்வது போன்று சென்று (செவிகளை) முட்டித் தாக்கி, யம தூதுவர்களைப் போல விளங்கி, மேகத்தின் கரு நிறத்துடன் போட்டி இட்டு, போர் வீரர்களின் கையில் ஏந்திய வாளையும் வேல் முனையையும் எதிர்த்துச் சீறுவது போலக் கூர்மை உடையனவாய், எல்லா திக்குகளிலும் ஒப்பற்ற மன்மதராஜன் மிகவும் வெற்றியுடன் தனது அரசை எங்கும் ஆள விட்டது போலப் பரந்து, தமது வல்லமையைச் செலுத்தி, இளைஞர்களுடைய உயிரை வளைத்து இழுக்கும் கரிய கண்ணை உடைய அழகிய விலைமாதர்களின் சாமர்த்தியச் செயல்களால் உருக்கம் கொண்டு ஆசைப்பட்டு, அவர்கள் கைக்குள்ளே அகப்பட்டு, கைப்பொருள் செலவழிந்து போகும் வரை படுக்கையில் உள்ளம் உருகி, (பொருள் தீர்ந்த விட்ட காரணத்தால்) மோகம் முடிவு பெற, அதற்குப் பிறகு (இப்படி வெறும் கையுடன் வருவது) உமக்கு வெட்கமாக இல்லையா? வெளியேறும், போய்விடும் போய்விடும், இனி வேறு பேர்வழிகளை அழைத்து வாருங்கள், பெண்களே, என்று (சேடியர்களுக்குக் கட்டளை இட்டு) இவ்வாறு வீட்டு வாசலுக்கு முன்னாலிருந்து விரட்டிவிடும் வஞ்சனை எண்ணமுடைய வேசிகளின் மீதுள்ள ஆசை அற்றுத் தொலைய அருள் செய்வாயாக. ஒழுங்காக அமைந்த கோடுகளைக் கொண்ட கமுக மரத்தின் மீது வாளை மீன்கள் தாவிக் குதிக்கும் நீர் நிலைகளை உடைய (நாட்டின் தலைநகரான) அஸ்தினா புரத்தை ஆண்டுவந்த, வாள் ஏந்திய அரசனான துரியோதனன், சமாதானத்துக்கு உடன்படும் நினைவே முன்பு இல்லாமல், தனது தோள் பலத்தின் திடத்தையே (இறுமாப்புடன்) எடுத்துரைக்க, (போருக்கு) உடன்பட்ட, தருமன், பீமன், வேலேந்திய அருச்சுனன், வெற்றியே பெறும் நகுலன், சகாதேவன் ஆகிய பாண்டவர்களின் தேரினை மனமொத்துச் செலுத்திய சாரதியும் (கண்ணன்), வாட்போரில் ராவணனுடைய பத்துத் தலைகளும் பொடிபட, தோள்கள் இருபதும் ஒரே பாணத்தில் அற்று விழ, எதிர்த்து வந்த அசுரர்கள் யாவரும் அழிந்து இறக்கும்படி போரைச் செய்த கரிய மேகம் போன்றவனுமாகிய (ராமன்) திருமாலின் மருகனே, பச்சை மயிலின் மேல் ஏறிவரும் வீரனே, வேல் ஏந்தும் முருகனே, கொடுமையான அசுரர்கள் குலத்துக்கு காலனாகத் தோன்றியவனே, தேவர்கள் பக்தியுடன் திருவடியில் விழ, அவர்களுக்கு வாழ்வு உதவிய பெருமாளே. 

பாடல் 1145 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தத்த தந்தன தந்தன தந்தன     தத்த தந்தன தந்தன தந்தன          தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான

ஒக்க வண்டெழு கொண்டைகு லைந்திட     வெற்பெ னுங்கன கொங்கைகு ழைந்திட          உற்ப லங்கள்சி வந்துக விந்திட ...... இந்த்ரகோபம் 
ஒத்த தொண்டைது வண்டமு தந்தர     மெச்சு தும்பிக ருங்குயில் மென்புற          வொக்க மென்தொனி வந்துபி றந்திட ...... அன்புகூர 
மிக்க சந்திர னொன்றுநி லங்களில்     விக்ர மஞ்செய்தி லங்குந கம்பட          மெத்த மென்பொரு ளன்பள வுந்துவ ...... ளின்பமாதர் 
வித்த கந்தரு விந்துத புங்குழி     பட்ட ழிந்துந லங்குகு ரம்பையை          விட்ட கன்றுநி னம்புய மென்பத ...... மென்றுசேர்வேன் 
மைக்க ருங்கட லன்றெரி மண்டிட     மெய்க்ர வுஞ்சசி லம்புடல் வெம்பிட          மற்று நன்பதி குன்றிய ழிந்திட ...... வும்பர்நாடன் 
வச்சி ரங்கைய ணிந்துப தம்பெற     மெச்சு குஞ்சரி கொங்கைபு யம்பெற          மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா 
குக்கு டங்கொடி கொண்டப ரம்பர     சக்ர மண்டல மெண்டிசை யம்புகழ்          கொட்க கொன்றைய ணிந்தசி ரஞ்சர ...... ணங்கிகாரா 
கொத்த விழ்ந்தக டம்பலர் தங்கிய     மிக்க வங்கண கங்கண திண்புய          கொற்ற வங்குற மங்கைவி ரும்பிய ...... தம்பிரானே.

ஒன்று கூடி வண்டுகள் எழுந்து மொய்க்கும் கூந்தல் கலைய, மலை போன்ற பருத்த மார்பகங்கள் குழைதல் அடைய, நீலோற்பலம் போன்ற கண்கள் சிவந்து குவிய, தம்பலப்பூச்சி போன்று சிவந்த கொவ்வைக் கனியை ஒத்த வாயிதழ் துவட்சி உற்று அமுத ஊறலைத் தர, மெச்சும்படியான வண்டு, கரிய குயில், மெல்லிய புறா இவைகளின் ஒலிக்கு நிகரான மென்மையான புட்குரல் கண்டத்தில் தோன்றி எழ, அன்பு மிக்கெழ நன்றாகப் பிரகாசிக்கும் சந்திர காந்தக் கல் வேய்ந்துள்ள தளத்தில், பல வீரச் செயல்களை நிகழ்த்தி விளங்கும் நகரேகை படும்படி பக்குவமாக நல்ல பொருள் கிடைத்த அளவுக்குத் தகுந்த அன்பைத் தந்து கூடும் சிற்றின்ப மாதர்களின் சாமர்த்தியம் தருகின்ற சுக்கிலத்துக்குக் அழிவு உண்டாக்கும் பெண்குறிக்குள் விழுந்து அழிந்து நொந்து போகும் சிறு குடிலாகிய இவ்வுடலை விட்டு நீங்கி, உன்னுடைய தாமரை போன்ற மென்மை வாய்ந்த திருவடியை என்று கூடுவேன்? மிகக் கரிய கடல் அன்று தீப்பட்டு எரிய, அசுர உணர்ச்சி கொண்டிருந்த கிரவுஞ்ச மலையின் உடலம் நெருப்பிலே அழிய, மேலும் (சூரனுடைய) சிறப்பான நகரமாகிய மகேந்திரபட்டணம் வளம் குறைந்து பாழ்பட, தேவர் நாட்டு அரசனான இந்திரன் குலிஜாயுதத்தைக் கையில் தரித்த பதவியில் வாழ்வு பெற, வியக்கத்தக்க தேவயானையின் மார்பகங்கள் உனது திருப்புயம் பெற, செருக்கையும் கொடிய கோபத்தையும் கொண்ட வஞ்சக அசுரர்களைக் கொன்று விழுங்கிய வேலைக் கையில் தாங்கியவனே, சேவற்கொடியை கையில் ஏந்திய பராபர மூர்த்தியே, சக்ரவாளகிரியால் சூழப்பட்ட இடங்களிலும், எட்டுத் திசையில் உள்ளவர்களும் உனது புகழை வெளிப்படுத்த, கொன்றை மலரைத் தரித்த (தந்தையாகிய) சிவபெருமானின் சிரத்தினை உனது திருவடியில் ஏற்றுக் கொண்டவனே, பூக்கொத்துகள் அவிழும் கடப்ப மலரில் நிலைத்துள்ள சிறந்த கடவுளே, கங்கணம் அணிந்த திருப்புயங்களை உடையவனே, வெற்றியையும் அழகையும் கொண்ட குற மங்கையாகிய வள்ளி நாயகி விரும்பும் தம்பிரானே. 

பாடல் 1146 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தான தத்தன தானன தானன     தான தத்தன தானன தானன          தான தத்தன தானன தானன ...... தனதான

ஓது வித்தவர் கூலிகொ டாதவர்     மாத வர்க்கதி பாதக மானவர்          ஊச லிற்கன லாயெரி காளையர் ...... மறையோர்கள் 
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்     ஆர்த னக்குமு தாசின தாரிகள்          ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக் 
கேது மித்தனை தானமி டாதவர்     பூத லத்தினி லோரம தானவர்          ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள் 
ஏக சித்ததி யானமி லாதவர்     மோக முற்றிடு போகித மூறினர்          ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே 
தாத தத்தத தாதத தாதத     தூது துத்துது தூதுது தூதுது          சாச சச்சச சாசச சாசச ...... சசசாச 
தாட டட்டட டாடட டாடட     டூடு டுட்டுடு டூடுடு டூடுடு          தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ 
தீதி தித்திதி தீதிதி தீதிதி     தோதி குத்திகு தோதிகு தோதிகு          சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு 
சேயெ னப்பல ராடிட மாகலை     ஆயு முத்தமர் கூறிடும் வாசக          சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே.

கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காதவர்கள், சிறந்த தவசிகளுக்கு மிக்க இடையூறுகளை விளைவித்தவர்கள், காமத்தின் வசத்தால் நெருப்புப் போல் கொதித்து வேதனை உறும் காளைப் பருவத்தினர், வேதம் ஓதுபவர்கள் இருக்கும் ஊர்களுக்கு துன்பம் விளைவிக்கின்ற அறிவிலிகள், யாவரிடத்தும் அலட்சியமாக நடந்து கொள்ளுபவர்கள், வேகமாக வந்து, நல்லவர்களிடத்து (ஏமாற்றி) இலாபம் அடைய விரும்புவர்கள், இரந்து கேட்போருக்கு கொஞ்சம் கூட தானம் செய்யாதவர்கள், உலகில் ஒருதலைப்பட (பாரபட்சமாகப்) பேசுபவர்கள், சிவபெருமானையும், திருமாலையும் வழிபடுவர்களை தாழ்மையாகப் பேசுபவர்கள், ஒரு முகப்பட்ட மனதுடன் தியானம் செய்யாதவர்கள், மிகுந்த காமத்துடன் இன்ப நிலையில் மூழ்கி இருப்பவர்கள், இழி குணம் படைத்தவர்கள், இவ்வளவு பேர்களும் ஏழு நரகங்களில் வீழ்ந்து அலைச்சல் உறுவார்கள். தாத தத்தத தாதத தாதத .. தூது துத்துது தூதுது தூதுது .. சாச சச்சச சாசச சாசச சசசாச தாட டட்டட டாடட டாடட .. டூடு டுட்டுடு டூடுடு டூடுடு .. தாடி டிட்டிடி டீடிடி டீடிடி டிடிடீடீ (இதே தாள ஒலிகளுடன்) பல மக்கள் கூத்தாட, சிறந்த கலைகளை ஆய்ந்துள்ள நற்குணம் உடையவர்கள் புகழ்ந்து போற்றிடும் தேவாரப் பாக்களைச் (சம்பந்தராக வந்து) அருளியவனே, சிவந்த நிறத்துடன் அழகாக நின்று கூத்து** ஆடிய பெருமாளே. 
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).** முருகவேள் சூரனை வென்றவுடன் ஆடிய கூத்து, துடிக் கூத்து.அசுரர் படைகளை எல்லாம் வென்றபின் ஆடிய கூத்து, குடைக் கூத்து.

பாடல் 1147 - பொதுப்பாடல்கள் 
ராகம் - .....; தாளம் -

தானன தத்தன தத்த தத்தன     தானன தத்தன தத்த தத்தன          தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான

ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற     மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற          லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம் 
ஓதிமி குத்தத வத்த வர்க்கிட     ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி          யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே 
மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்     வாசமு லைக்குள கப்ப டுத்தியில்          வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர் 
மாயம யக்கையொ ழித்து மெத்தென     வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர          வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ 
வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு     வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்          வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே 
வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை     மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட          வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக் 
காலயி லக்கணை தொட்ட ருட்கன     மாலமை திக்கரை யிற்ற ரித்துல          காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன் 
காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ     நானில வித்ததி னைப்பு னத்தொரு          காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே.

காதோலை அணிந்த குண்டலத்தைத் தாண்டி அப்புறம் ஓடி, ஒளிவிட்டு, செழிப்புற்று, வாசனையான எண்ணெய் தடவப் பெற்று, கரிய மணல் போன்ற கூந்தலின் நிழலில் மொய்க்கும் வண்டுகளின் கூட்டத்துடன் பொருந்தி, ஞான நூல்களைப் படித்துள்ள பெரிய தவசிகளுக்கு துன்பத்தையும் இன்பத்தையும் கொடுத்து, தனது அடையாளத்தை அவர்கள் மனதில் தழும்புபடச் செய்து, பாம்பினிடத்திலுள்ள விஷத்தைத் தங்கும்படி செய்து, கண்களாகிய அம்பைக் கொண்டு, காம மயக்கத்தை உண்டாக்கி, நல்ல செல்வப் பொருளை நறு மணம் கொண்ட மார்பகங்களின் சக்தியால் கைப்பற்றிக் கொண்டு, வீட்டுக்கு வா என்று அழைத்து முழுவதும் வசப் படுத்திக் கூட்டிச் சென்று உள்ளே புகுகின்ற விலைமாதர்களின் காம இச்சையை ஒழித்து, பக்குவமாக தேவர்களுக்கு அருள் செய்த (சரவணபவ என்னும்) ஷடாக்ஷர எழுத்து உண்மையை எனக்கும் மகிழ்ச்சியுடன் திருவருள் செய்திடக் கூடாதா? கடலினை அணையிட்டு குரங்குக் கூட்டத்துடன் அடைக்க வேண்டும் என்று சொல்லி, அதைக் கேட்ட அந்த நொடியிலேயே, மிக விரைவாக அந்தக் கடல் நீரில் மலைக் குவியல்களை நளன் என்னும் வானரத் தச்சன் கைகளால் மேலும் மேலும் வீசி எறிய, அவைகளை இணைத்து அமைத்து அணையாகக் கட்டி, அரக்கர்கள் வசமிருந்த இலங்கைப் பகுதியில் முன்பட்டுச் சேர்ந்து, (அங்கு ராமபிரான்) விபீஷணனுக்கு அருள் புரிந்து, அவனுடைய அண்ணன்களான கும்பகர்ணனும் ராவணனும் இறந்து ஒழிய, கூர்மையைக் காட்டும் அம்புகளை விடுத்த திருவருள் வீரம் நிறைந்தவரும், பொறுமைக் கரையில் நிலையாக நின்று உலகை ஆளும்படி (விபீஷணனுக்குக்) கொடுத்த பெருந்தன்மை வாய்ந்தவருமாகிய அருட் கடலாகிய திருமால் பெற்ற மன்மதனுடைய உடலை எரித்து ஒழித்த சிவபெருமான் ஈன்ற வீரனே, (வள்ளிமலையின்) பூமியில் விதைக்கப்பட்டு விளைந்த தினைப்புனத்தில் ஒப்பற்ற ஆசை மிகுந்து, வெகுவாக மயங்கி வள்ளிக்கு அருள் செய்த தம்பிரானே. 

பாடல் 1148 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனன தந்தனந் தனன தந்தன     தனன தந்தனந் தனன தந்தன          தனன தந்தனந் தனன தந்தன ...... தனதான

கடைசி வந்தகன் றுரைபு கன்றிரு     குழையை யுந்துரந் தரிப ரந்தொளிர்          கரிய கண்துறந் தவர்நி றந்தொளை ...... படவோடக் 
கலைநெ கிழ்ந்திருங் குழல்ச ரிந்திட     முலைசு மந்தசைந் திடையொ சிந்துயிர்          கவர இங்கிதங் கெறுவி தம்பெற ...... விளையாடும் 
படைம தன்பெருங் கிளைதி ருந்திய     அதர கிஞ்சுகந் தனையு ணர்ந்தணி          பணிநி தம்பஇன் பசுக முந்தர ...... முதிர்காம 
பரவ சந்தணிந் துனையு ணர்ந்தொரு     மவுன பஞ்சரம் பயில்த ருஞ்சுக          பதம டைந்திருந் தருள்பொ ருந்தும ...... தொருநாளே 
வடநெ டுஞ்சிலம் புகள்பு லம்பிட     மகித லம்ப்ரியங் கொடும கிழ்ந்திட          வருபு ரந்தரன் தனபு ரம்பெற ...... முதுகோப 
மகர வெங்கருங் கடலொ டுங்கிட     நிசிச ரன்பெருங் குலமொ ருங்கிற          வனச னின்றழும் படிநெ ருங்கிய ...... வொருசூதம் 
அடியொ டும்பிடுங் கியத டங்கர     வடிவ அஞ்சுரும் புறவி ரும்பிய          அடவி யுந்தொழும் பொடுதொ ழும்படி ...... யநுராக 
அவச மும்புனைந் தறமு னைந்தெழு     பருவ தஞ்சிறந் தகன தந்தியின்          அமுத மென்குயங் களின்மு யங்கிய ...... பெருமாளே.

ஓரங்கள் சிவந்து அகலமாய் விளங்கி, பேச்சைப் பேசுவது போல் பேசி, இரண்டு காதுகளையும் வீசித் தாக்கி, பரந்த ரேகைகளைக் கொண்டு விளங்குகின்ற கரிய கண்கள் துறவிகளுடைய மார்பையும் தொளை செய்வது போல் நீண்டு ஓட, ஆடை தளர்ந்து கரிய கூந்தல் சரிய மார்பகங்களைச் சுமப்பதாலும், அசைவுற்று இடுப்பு ஒடிந்து, உயிரையே கவரும்படி இனிமையுடனும் செருக்குடனும் காம விளையாட்டுகள் செய்யும் மன்மதனுடைய பெரிய சுற்றமாகிய படையான மகளிருடைய சுத்தமான சிவந்த இதழின் சுவையை அறிந்து, பாம்பின் படத்தை ஒத்த பெண்குறி இன்ப சுகத்தை தரப் பெறும் முற்றின காம மயக்கம் ஒழிந்து, உன்னைத் தியானித்து ஒப்பற்ற மெளனம் என்னும் கூட்டில் விளையாடும் (கிளியின்)* பேரின்ப நிலையை அடைந்து அதில் நிலைத்து திருவருளைப் பொருந்தி மகிழ்வதாகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? வடக்கே உள்ள பெரிய மலைகள் கலக்குண்டு, பூமியில் உள்ளவர்கள் அன்பு கொண்டு மகிழ்ச்சி உற, வந்து அடைக்கலம் புகுந்த இந்திரன் தன்னுடைய பொன்னுலகை அடையும்படி மிக்கக் கோபம் கொண்டது போல் பொங்கினதும், மகர மீன்களை உள்ளதுமான பெரிய கரிய கடல் அடங்கவும், அசுரனாகிய சூரனின் பெரிய சுற்றங்கள் முழுதும் அழிவுபட, பிரமன் நின்று அழுது ஓலமிடும்படி நெருங்கி வந்த மாமரமாகிய சூரனை அடியோடு பிடுங்கி பிளந்தெறிந்த பெருமை வாய்ந்த திருக் கரத்தை உடைய அழகனே, அழகிய வண்டுகள் (மலர்களைச்) சேர விரும்பிய (வள்ளிமலைக்) காட்டையும் அடிமை பூண்ட மனத்துடன், (வள்ளியை) வணங்கும்படி காமப்பற்றுள்ள மயக்கத்தைக் கொண்டு, மிகவும் முற்பட்டு எழுகின்றதும், சிறந்த மலை போல, பெருமை பொருந்திய யானை போன்றதும் அமுத மயமான மென்மையுள்ளதுமாகிய (வள்ளியின்) மார்பகங்களைத் தழுவும் பெருமாளே. * சுகம் என்பதற்கு கிளி, பேரின்பம் என்ற இரு பொருள் உண்டு.முருகன் அருணகிரிநாதருக்கு இறுதியில் கிளி உருவமும் தந்து, முக்தியும் நல்கினான்.

பாடல் 1149 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ..... ; தாளம் -

தனதன தனதன தத்தாத் தானன     தனதன தனதன தத்தாத் தானன          தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான

கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்     பதறிய சமயிக ளெட்டாப் பேரொளி          கருவற இருவினை கெட்டாற் காண்வரு ...... மென்றஏகங் 
கருகிய வினைமன துட்டாக் காதது     சுருதிக ளுருகியொர் வட்டாய்த் தோய்வது          கசடற முழுதையும் விட்டாற் சேர்வது ...... ணர்ந்திடாதே 
விதமது கரமுரல் மொட்டாற் சாடிய     ரதிபதி யெனவரு துட்டாத் மாவுடன்          வினைபுரி பவரிடு முற்றாச் சாலிரு ...... புண்டா£க 
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக     நுதலெழு தியசிறு பொட்டாற் சாயக          விரகுடை விழிவலை பட்டாற் றாதுந ...... லங்கலாமோ 
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக     சுருதிக ளடிதொழ எட்டாத் தேசிக          பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும் 
பரிவுற வெகுமுக நெட்டாற் றூடொரு     படுகையி னிடைபுழு வெட்டாப் பாசடை          படர்வன பரிமள முட்டாட் டாமரை ...... தங்கிவாழுஞ் 
சததள அமளியை விட்டாற் றேறிய     சலநிதி குறுகிட வொட்டாச் சூரொடு          தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே 
தழைதரு குழைதரு பட்டாட் சாலவு     மழகிய கலவிதெ விட்டாக் காதலி          தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே.

கதறிக் கதறிப் படிக்கின்ற சாத்திரங்களைக் கொண்டு சுட்டிக்காட்ட முடியாத ஒரு தீர்மானமான பொருள். பதைபதைத்துப் பேசும் சமய வாதிகளால் எட்ட முடியாத ஒரு பெரிய ஜோதிப் பொருள். பிறப்பு நீங்கும்படி நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் ஒழிந்த பெரியோர்களால் மட்டும் காணக்கூடும் என்று சொல்லப்படும் ஒப்பற்ற தனிப் பொருள். இருண்ட (அஞ்ஞான) தீச் செயல் எண்ணங்களைக் கொண்ட மனதைத் தீண்டாத பொருள். வேதங்கள் ஒன்றுபட்டு ஒரு திரண்ட உருவாக விளங்கும் பொருள். பிழை இல்லாமல் எல்லாவற்றையும் விட்டொழித்தால் வந்து கூடுகின்ற அரிய பொருளை நான் உணராமல், பலவிதமான வண்டுகள் ஒலிக்கும் மலர் அரும்புகளால் தாக்குகின்ற, ரதியின் கணவனான மன்மதன் என்ற பெயர் கொண்ட, துஷ்டனோடு தொழில் புரிகின்றவர்களாகிய வேசியர் தருகின்ற, இளமை நிரம்பிய, இரு தாமரைகளான, கஸ்தூரி அணிந்த, குவிந்த மொட்டுப் போன்ற மார்பகங்களாலும், வில்லைப் போன்ற நெற்றியில் தீட்டப்பட்டுள்ள சிறிய பொட்டினாலும், அம்பைப் போல கூரியதாய், தந்திரம் நிறைந்த, கண் வலையினாலும் நான் பாதிக்கப்படுவதால், என் உடலில் உள்ள இரத்தம், எலும்பு, தசை, தோல் முதலிய எல்லா தாதுக்களும் வருந்தலாமோ? மலர் போன்ற திருவடிகளில் கழலைக் கட்டுவதற்குக் கூட அவசியம் இல்லாத குழந்தையே, வேதங்கள் உன் அடிகளைத் தொழுவதற்கு, அவைகள் எட்ட முடியாத குரு மூர்த்தியே. உண்பாயாக என்று அழகிய மார்பகங்களை ஈந்து கார்த்திகைப் பெண்கள் அறுவரும் நாள்தோறும் பால் தந்து அன்பு கொள்ள, பல முகங்களைக் கொண்ட பெரிய ஆறாகிய கங்கைநதியின் இடையே இருந்த ஒப்பற்ற நீர்நிலையாகிய (சரவணப்) பொய்கையில் புழு முதலிய பிராணிகள் அணுக முடியாத பசுமையான இலைகள் படர்ந்துள்ளதும், நறு மணம் கொண்ட முள்ளும், தண்டும் உடைய தாமரை மலர் மீது தங்கி நீ வாழ்கின்ற நூறு இதழ்களால் அமைந்த படுக்கையை விட்டு எழுந்து, கங்கை ஆற்றிலிருந்து நீங்கி புறப்பட்டு, கடல் நீர் வற்றிக் குறுகவும், வணங்காமுடியாகிய சூரனும், பொன்மயமான சிறந்த கிரவுஞ்ச மலையும் தொளைபட்டுப் பொடிப் பொடியாகும்படி வென்ற தலைவனே, நீ கொடுத்த (கரும்புத்) தழையால் மனம் குழைந்த பட்டுப் போன்றவளும், மிகவும் அழகான சேர்க்கை இன்பத்தில் தெவிட்டாத ஆசை தந்த தலைவியுமாகிய வள்ளியின் தலைவனே, கால்கள் பூமியில் தோயாத தேவர்களின் தம்பிரானே. 

பாடல் 1150 - பொதுப்பாடல்கள் 
ராகம் - .....; தாளம் -

தனதன தனதன தானன தானந்     தனத் தனந்தன தனன தான தனதன          தானான தான தனனந் தானந்              தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான

கலவியி னலமுரை யாமட வார்சந்     தனத் தனங்களில் வசம தாகி யவரவர்          பாதாதி கேச மளவும் பாடுங்              கவிஞ னாய்த்திரி வேனைக் காமக் ரோதத் ...... தூர்த்தனை யபராதக் 
கபடனை வெகுபரி தாபனை நாளும்     ப்ரமிக் குநெஞ்சனை உருவ மாறி முறைமுறை          ஆசார வீன சமயந் தோறுங்              களவு சாத்திர மோதிச் சாதித் தேனைச் ...... சாத்திர நெறிபோயைம் 
புலன்வழி யொழுகிய மோகனை மூகந்     தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரு          மாதேச வாழ்வை நிலையென் றேயம்              புவியின் மேற்பசு பாசத் தேபட் டேனைப் ...... பூக்கழ லிணைசேரப் 
பொறியிலி தனையதி பாவியை நீடுங்     குணத் ரயங்களும் வரும நேக வினைகளு          மாயாவி கார முழுதுஞ் சாடும்              பொருளின் மேற்சிறி தாசைப் பாடற் றேனைக் ...... காப்பது மொருநாளே 
குலகிரி தருமபி ராம மயூரம்     ப்ரியப் படும்படி குவளை வாச மலர்கொடு          வாராவு லாவி யுணரும் யோகங்              குலைய வீக்கிய வேளைக் கோபித் தேறப் ...... பார்த்தரு ளியபார்வைக் 
குரிசிலு மொருசுரர் பூசுர னோமென்     றதற் கநந்தர மிரணி யாய நமவென          நாராய ணாய நமவென் றோதுங்              குதலை வாய்ச்சிறி யோனுக் காகத் தூணிற் ...... றோற்றிய வசபாணிப் 
பலநக நுதியி னிசாசர னாகங்     கிழித் தளைந்தணி துளசி யோடு சிறுகுடல்          தோண்மாலை யாக அணியுங் கோவும்              பரவி வாழ்த்திட வேகற் றாரச் சோதிப் ...... பாற்பணி யிறைவாகைப் 
படமுக வடலயி ராபத மேறும்     ப்ரபுப் பயங்கெட வடப ராரை வரைகெட          வேலேவி வாவி மகரஞ் சீறும்              பரவை கூப்பிட மோதிச் சூர்கெட் டோடத் ...... தாக்கிய பெருமாளே.

புணர்ச்சியின் இன்பங்களை எடுத்துப் பேசி, விலைமாதர்களுடைய சந்தனம் அணிந்த மார்பகங்களில் வசப்பட்டு, அந்த மாதர்களுடைய பாதம் முதல் கூந்தல் வரையும் பாடும் பாவலனாய் திரிகின்ற எண்ணம் கொண்ட, காம ஆசையும், கோபமும் கொண்ட காமுகனான என்னை, பிழைகள் செய்கின்ற வஞ்சகனாகிய என்னை, மிகவும் வருந்தத் தக்க என்னை, தினந்தோறும் திகைத்து நிற்கும் உள்ளம் கொண்டவனாகிய என்னை, வடிவமும் அழகும் அப்போதைக்கப்போது மாறுதல் அடைந்து, ஒன்றன் பின் ஒன்றாக ஒழுக்கக் குறைவு உள்ள சமயங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து வஞ்சனைக்கு இடமான வழிகளைக் கற்று நான் பேசுவதே சரி என்று சாதித்துப் பேசும் என்னை, நன்னடையைக் கூறும் வேத நூல்களில் கூறப்பட்ட வழிகளை விட்டு விலகி, ஐம்புலன்கள் இழுத்துக் கொண்டு போகும் வழியிலே சென்று காமுகனாகிய என்னை ஊமையின் கனவுக்கு ஒப்பாகத் தோன்றி ஒரு நொடிப் பொழுதில் மாண்டு அழிவுறும் நிலையாமை உடைய இந்த வாழ்க்கையை நிலைத்திருக்கும் என்று நினைத்து, இந்த அழகிய பூமியில் பதி ஞானம் இல்லாமல், ஜீவான்மா சம்பந்தப்பட்ட பந்தங்களில் கட்டுப்பட்ட என்னை, உனது மலர் நிறைந்த திருவடி இணைகளில் சேர அறிவில்லாத என்னை, மகா பாபியாகிய என்னை, நெடியதாய் இருக்கும் சத்துவம், தாமதம், ராசதம் எனப்படும் மூன்று குணங்களையும் என்னைப் பீடிக்க வரும் பல வினைகளையும், உலக மாயையால் ஏற்படும் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை ஆகிய) துர்க்குணங்கள் யாவற்றையும் துகைத்து அழிக்க வல்ல மெய்ப் பொருளின் மேல் சிறிதளவும் கூட ஆசை இல்லாத என்னை காத்தருளும் ஒரு நாள் கிடைக்குமா? இமய மலை ஈன்ற அழகுள்ள மயிலான பார்வதி ஆசைப்படும்படி குவளை மலராகிய பாணத்தை எடுத்துக் கொண்டு வந்து உலாவி, சகலத்தையும் உணர வல்ல ஞான யோக நிலை தடுமாற அந்தப் பாணத்தைத் தன் மீது செலுத்திய மன்மதனை கோபித்து மேலே நெரித்து நோக்கிய பார்வையால் எரித்து, பின் அருளிய பெருமையைக் கொண்ட சிவபெருமானும், ஒரு தெய்வ வேதியன் ஓம் என்று தொடங்கிய பின்னர் இரணியாய நம என்று பாடம் ஆரம்பிக்க, நாராயணாய நம என்று ஓதிய சிறு பிள்ளையாகிய பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்ட நர சிம்ம வடிவத்தில் கொண்டிருந்த கைகளில் இருந்த பல நகங்களின நுனியைக் கொண்டு அந்த அரக்கனாகிய இரணியனின் தேகத்தைக் கிழித்து துளாவிக் கலக்கி, தாம் அணிந்திருந்த துளசி மாலையோடு (இரணியனின்) சிறு குடலையும தோளில் மாலையாக அணிந்து விளங்கிய தலைவனான திருமாலும், போற்றி வாழ்த்தவும், கற்று நிரம்ப ஆராய்ச்சி உடைய பிரகஸ்பதியைப் பணிகின்ற அரசனும், வெற்றி கொண்டதும் முக படாம் அணிந்துள்ளதும் வலிமை வாய்ந்ததுமான ஐராவதம் என்னும் யானையின் மேல் ஏறும் தலைவனுமான இந்திரனுடைய பயம் நீங்கவும், வடக்கே உள்ள பருத்த அடியை உடைய கிரௌஞ்ச மலை அழிய வேலாயுதத்தைச் செலுத்தி, தாண்டிப் பாய்ந்து மகர மீன்கள் சீறுகின்ற கடல் கோ கோ எனக் கூச்சலிட அதைத் தாக்கி, சூரன் (கடலில்) ஓட்டம் பிடித்து அழியும்படி அவனையும் தாக்கிய பெருமாளே.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.