LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[1251 -1300]

பாடல் 1251 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
     தனத்தன தனத்தன ...... தனதான
துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்
     சுழற்கொரு கொடிக்கொடி ...... யெதிர்கூறித் 
துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல்
     துணிப்பன கணித்தலை ...... மிசைபார 
முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட
     முறைப்படு மறைத்திர ...... ளறியாத 
முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு
     மொழிப்பொருள் பழிப்பற ...... அருள்வாயே 
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
     கொழுத்தகு ருதிக்கட ...... லிடையூடே 
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
     குவட்டினை யிடிப்பன ...... சிலபாடல் 
படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன
     பயிற்றிய லகைக்குலம் ...... விளையாடப் 
பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடி
     படப்பொரு துழக்கிய ...... பெருமாளே.
உடல் பதைத்து, எதிர் எதிரே கூர்மையுடன் எழுகின்ற, முறை கெட்ட தர்க்கம் செய்யும் சமயவாதிகளின் சுழல் போன்ற கூட்டத்துக்கு கோடிக் கணக்கில் எதிர் வாதம் பேசி, மிதித்து வருத்தமுறச் செய்யக் கூடிய தீமைகளின் அதிகார நிலையை அறுத்துத் தள்ளக் கூடியதும், வேலாயுதத்தைச் செலுத்தி (பகைவர்களின்) உடலைத் துண்டிக்க வல்லதும், நூல் வல்லவர்களின் தலை மீது உள்ள கர்வம் மிகுந்த தலைமுடியை விழுந்து போகும்படி செய்ய வல்லதும், யாவரும் அடிமைப்படும்படி ஒழுங்காக அமைந்துள்ள வேதக் குவியல்களெல்லாம் கண்டு உணராததுமான மூலப்பொருளை யாவருக்கும் தெரியும்படி தெளிவுடன் தெரிவிப்பேன். (ஆதலால்) நீ எனக்கு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை யாரும் பழிக்காத முறையில் உபதேசித்து அருள்வாயாக. (போர்க்களத்தில் ரத்தத்தைக்) குடிப்பன ஆகவும், மொள்ளுவன ஆகவும், ஊறுவன ஆகவும், கூத்தாடுவன ஆகவும், செழிப்புற்றுக் குழம்பாக இருக்கும் ரத்தக் கடலுள் குதிப்பன ஆகவும், ரத்தக் கடலின் அளவை அளவிடுவன ஆகவும், அதில் குளிப்பன ஆகவும், அதைக் கண்டு மகிழ்வன ஆகவும், (அந்த மகிழ்ச்சியில்) மலைகளையும் இடிப்பன ஆகவும், சில பாடல்களை படிப்பன ஆகவும், (முருகன்) திருப்புகழை ஆரம்பித்து முடிப்பன ஆகவும், இத்தகைய நிகழ்ச்சிகளுடன் பேய்க் கூட்டங்கள் விளையாட, பகைத்து எழுந்த அசுரர்களை ஒரு நொடிப் பொழுதில் தூளாகும்படி போர் புரிந்து கொன்ற பெருமாளே. 
இப்பாடலின் கடைசி எட்டு வரிகள் போர்க்களத்தில் பேய்களின் நடனத்தை தாளத்துடன் வருணிக்கின்றன.
பாடல் 1252 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம்
     தத்த தத்த தானனத் ...... தனதான
துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
     சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம் 
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்
     சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம் 
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்
     பொற்பு மத்து வேணியர்க் ...... கருள்கூரும் 
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
     புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே 
பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
     பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப் 
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
     பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக் 
கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்
     துட்க முத்து வாரணச் ...... சதகோடி 
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்
     கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே.
புள்ளிகளைக் கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை மலர், நொச்சிப் பூ, வில்வம், வெண்ணிறம் உடையதாய் கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர், சுத்தமான ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர், தேள், புகழை உடைய, அலைகள் வீசும் கங்கை நதி, நீலோற்பலம், புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம், கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை, (இவைகளை அணிந்த) சடைப் பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய, புத்தியும், அஷ்ட மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும் கொண்டதுமான உபதேச மொழியை, நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக. வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய, அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி, அந்த அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து, அச்சத்தால் வாய்விட்டு அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட, முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம் கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க, மாமரமாக மறைந்து நின்ற சூரன் கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும், முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக் கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும், சேவற் கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும்.போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.
பாடல் 1253 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனன தத்த தய்ய தனன தத்த தய்ய
     தனன தத்த தய்ய ...... தனதான
தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை
     தெரிவ தற்கு உள்ள ...... முணராமுன் 
சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய
     சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன் 
பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு
     பரம னுக்கு நல்ல ...... மருகோனே 
பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை
     பகர்வ தற்கு நன்மை ...... தருவாயே 
இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு
     மிடியு மொய்த்த தென்ன ...... எழுசூரை 
எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு
     ளிமைய வர்க்கு வன்மை ...... தருவோனே 
அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய
     ரறிய மிக்க வுண்மை ...... யருள்வோனே 
அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல
     அடிய வர்க்கு நல்ல ...... பெருமாளே.
மனைவி, பிள்ளைகள், செல்வம், இவற்றுக்கு உரிமையாக இருக்கும் தன்மை எவ்வளவு என்னும் பெரும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் உணர்ந்து கொள்ளுவதற்கு முன்னே, (இளம் பருவத்தில் இருந்து) கோபம் மிகுந்த, வலிமை வாய்ந்த ஐம்புலன்களும் என்னைத் தனிப்பட வளைப்பதனால், கொடிய துன்பக் குழப்பங்கள் அழுந்தப் பொருந்த, என் வலிமை அழிவு படுவதற்கு முன்னர், திருப்பாற் கடலில் புகுந்து துவட்சி உறும் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும் மேலானவனாகிய திருமாலுக்கு நல்ல மருகனே, குற்றம் என்பதே இல்லாத உன் திருப்புகழ்ச் சொற்களைச் சொல்லுதற்கும், எழுதுவதற்கும், நாள்தோறும் உண்மையைப் பேசுவதற்கும் வேண்டிய நற்குணத்தைத் தந்து அருளுக. கிரெளஞ்சம், எழு கிரி என்ற இரண்டு மலைகளுக்குள் வாசம் செய்த அசுரர்களையும், மிக்கு எழும் மின்னலும் இடியும் நெருங்கி வருவது போல் போருக்கு எழுந்து வந்த சூரனையும், ஏழு கடல்களிலும் முழுகும்படித் தள்ளி, விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு வலிமையைத் தந்தவனே, (பார்வதி என்னும்) அரிவையை, உலகம் உய்ய, அவளுடைய தவத்துக்கு இரங்கி, தமது இடது பக்கத்தில் வைத்துள்ள தலைவரான சிவபெருமான் அறியும்படி சிறப்புற்ற பிரணவத்தின் உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே, என்னை ஞான நிலையில் ஒழுங்கான நிலையில் வைக்க வல்லவனும், அடியவர்களுக்கு நல்லவனும் ஆகிய பெருமாளே. 
பாடல் 1254 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தந்தன தந்த தந்தன தந்த
     தந்தன தந்த ...... தனதான
தென்றலு மன்றி யின்றலை பொங்கு
     திண்கட லொன்று ...... மிகமோதச் 
செந்தழ லென்று வெந்தழல் சிந்து
     திங்களும் வந்து ...... துணையேய 
அன்றிலு மன்றி துன்றுச ரங்க
     ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே 
அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச
     அன்பொட லங்கல் ...... தரவேணும் 
வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி
     விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா 
வெண்டர ளங்கள் தண்டைச தங்கை
     மின்கொடி லங்கு ...... கழலோனே 
கொன்றைய ணிந்த சங்கர ரன்று
     கும்பிட வந்த ...... குமரேசா 
குன்றிட அண்ட ரன்றுய வென்று
     குன்றமெ றிந்த ...... பெருமாளே.
தென்றல் காற்று மட்டுமன்றி, இன்றைய தினத்தில் அலை பொங்கி வலிய கடல் ஒன்றும் மிகப் பலமாக என்னைத் தாக்க, பொங்கி எழும் நெருப்பு என்று சொல்லும்படி கொடிய கனலைத் தூவுகின்ற சந்திரனும் வந்து (அவைகளுக்குத்) துணையாகப் பொருந்த, அன்றில் பறவையும், அதனுடன் நெருங்கி வந்த (மன்மதனின்) ஐந்து மலர்ப் பாணங்களும் என்னுடைய உள்ளத்தை அழித்து விடாமல், அந்திப் பொழுதில் வந்து, என்னுடைய கொடிய துயர் அஞ்சி நீங்க அன்புடன் உன் மாலையைத் தந்து அருள வேண்டும். வெற்றி விளங்கும் வேடர்களின் பெண்ணாகிய வள்ளியின் மேலோங்கு மார்பகங்களை அணைந்த மார்பனே, வெண்மையான முத்துக்களால் ஆன தண்டையும், சதங்கையும் மின்னலைப்போல் ஒளி வீசும் கழலை உடையவனே, கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் அன்று உன்னை வணங்க, அவருக்கு உபதேசம் செய்ய வந்த குமரேசனே, மனம் வேதனையால் குன்றி இருந்த தேவர்கள் அன்று பிழைக்கும்படி வெற்றி பெற்று, கிரெளஞ்ச மலையைப் பிளந்தெறிந்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவிப்பதாக அமைந்தது.தென்றல், அலைகடல், நிலவு, மன்மதன், மலர்ப் பாணங்கள், அன்றில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 1255 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மோஹனம் 
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2
தானன தனன தானன தனன
     தானன தனன ...... தனதான
தோரண கனக வாசலில் முழவு
     தோல்முர சதிர ...... முதிராத 
தோகையர் கவரி வீசவ யிரியர்
     தோள்வலி புகழ ...... மதகோப 
வாரண ரதப தாகினி துரக
     மாதிர நிறைய ...... அரசாகி 
வாழினும் வறுமை கூரினு நினது
     வார்கழ லொழிய ...... மொழியேனே 
பூரண புவன காரண சவரி
     பூதர புளக ...... தனபார 
பூஷண நிருதர் தூஷண விபுதர்
     பூபதி நகரி ...... குடியேற 
ஆரண வனச ஈரிரு குடுமி
     ஆரியன் வெருவ ...... மயிலேறு 
மாரிய பரம ஞானமு மழகு
     மாண்மையு முடைய ...... பெருமாளே.
தோரணங்கள் கட்டிய அழகிய அரண்மனை வாசலில், முழவு, தோல் முரசு முதலிய வாத்தியம் ஒலிக்க, இளம்பருவப் பெண்கள் சாமரம் வீச, புகழ்ந்து பாடும் பாடகர்கள் என் புஜ பராக்ரமத்தைப் புகழ, மதமும் கோபமும் கொண்ட யானைகள், தேர்கள், காலாட்படைகள், குதிரைகள் திசை நிரம்பி விளங்க, நான் ஓர் அரசனாகி வாழ்ந்தாலும் சரி, வறுமை நிலை மிகுந்து பாடுபட்டாலும் சரி, உனது திவ்யமான திருவடிகளைத் தவிர வேறு எதையும், வேறு யாரையும் புகழ மாட்டேன். முழு முதற் கடவுளே, உலகங்களுக்கு மூலாதார மூர்த்தியே, குறப்பெண் வள்ளியின் மலையைப் போன்ற பெரிய இனிய மார்பகங்களை அணிந்த மார்பனே, அசுரர்களை நிந்தித்துக் கண்டிப்பவனே, தேவர்களின் தலைவனான இந்திரன் அமரலோகத்தில் மீண்டும் குடியேறும்படியும், வேதம் ஓதுபவனும், தாமரையில் அமர்ந்தவனும், நான்கு குடுமிகளை உடையவனும் ஆகிய பெரியோனாம் பிரமன் அச்சம் கொள்ளும்படியாகவும், மயில் மீது ஏறிவரும் பெரியவனே, மேலான ஞானத்தையும், அழகையும், பராக்ரமத்தையும் உடைய பெருமாளே. 
பாடல் 1256 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தனா தனத்த தத்தனா தனத்த
     தத்தனா தனத்த ...... தனதான
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
     நத்துவார் சுகத்தில் ...... நலமாக 
நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து
     நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே 
கச்சமே செலுத்தி யச்சமே படுத்து
     கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான் 
கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த
     கட்டனே னினைப்ப ...... தொருநாளே 
இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு
     மிட்டமா லவற்கு ...... மருகோனே 
எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை
     யெக்கிநேர் மடித்த ...... இளையோனே 
மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி
     மிக்கவாள் படைத்த ...... விழியாலே 
வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க
     வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே.
விஷம், வாள் (இவைகளை) ஒத்த கண்களைக் கொண்டு (ஆடவர்களைத்) தாக்கியே, பொருளை விரும்புவர்களாகிய விலைமாதர்களின் காம போகத்தில் இன்பம் பெற, புதைக்கப்பட்ட சிறந்த மனத்தை விருப்பத்துடன் கொடுத்து, சங்குகள் வாழ்கின்ற கடலிலே அணையிட்டது போல, ஒப்பந்தம் செய்த வகையில் (மனத்தைப்) போக விட்டு, பயத்தையே உண்டு பண்ணுகின்ற, கஷ்டமான ஏழு பிறப்புக்களையும் விட்டுத் தாண்டுவதற்கு, கற்ற சிவ நூல்களில் மகிழ்ச்சி கொள்ள வெட்கமே நிறைந்துள்ள, துன்பங்கள் பீடித்த நான் உன்னை நினைப்பதாகிய ஒரு நாள் வருமோ? (வாமனராக வந்து) தமது விருப்பத்தைக் கூறி, (மகாபலி சக்ரவர்த்திக்கு அவனுடைய) தலையில் தமது பாதத்தை வைத்த திருமாலுக்கு மருகனே, அலை வீசும் கடலுக்குள் பரந்து நீண்டிருந்த (சூரனின்) எழு கிரியை வேலால் ஊடுருவச் செலுத்தி நன்கு அழித்த இளையவனே, புகழும்படியாக பருத்து எழுந்துள்ள, முத்து மாலை நிறைந்த, மார்பினள், கூர் மிகுந்த வாளாயுதத்தைப் போன்ற தன் கண்களைக் கொண்டு, (உயிர்களின் வினையை) வெட்ட வல்ல சிறந்த வேடுவச்சி ஆகிய வள்ளி கூடவே இருக்க, வெற்றி வேலைத் திருக்கையில் ஏந்திய பெருமாளே. 
பாடல் 1257 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த
     தத்ததன தான தத்த ...... தனதான
நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க
     நற்பரிம ளாதி துற்ற ...... மலர்சூடி 
நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று
     நற்பொருள வாம னத்தர் ...... வசமாகி 
வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து
     மெத்தமய லாகி நித்த ...... மெலியாதே 
வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம
     மெய்க்கிருபை நீய ளிப்ப ...... தொருநாளே 
ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க
     லக்ஷணகு மார சுப்ர ...... மணியோனே 
நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து
     நற்றிருநி றேப ரப்பி ...... விளையாடும் 
சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்
     சற்குருவி நோத சித்ர ...... மயில்வீரா 
சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த
     சத்தியடை யாள மிட்ட ...... பெருமாளே.
நல்ல குணம் படைத்தவர்களைப் போல, கரிய கூந்தலில் அழகு விளங்கும்படி நல்ல வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைத் தூவி நெருங்கி நிறைந்த மலர்களை முடித்துக் கொண்டு, விஷம் தோய்ந்த கண்களால் (ஆடவர்களை) மயக்குவித்து, காம இச்சை ஊட்டும் இனிய மொழிகளைப் பேசிக் கொண்டிருந்து, விலை உயர்ந்த பொருளைப் பெற ஆசைப்படும் மனத்தைக் கொண்ட விலைமாதர்களின் வசப்பட்டு, மலை போன்ற பெரிய மார்பகங்களை அழகு பெற உற்று அடைந்து, அணைத்து மிகவும் மோகம் கொண்டு நாள் தோறும் (நான்) மெலிந்து போகாமல், வெட்சி மலர், நறு மணம் வீசும் கடப்ப மலர் (இவைகளைக் கொண்டதும்) வெற்றியைத் தருவதுமான சிறிய திருவடித் தாமரையைக் கொண்டவனே, உண்மையான திருவருளை நீ கொடுத்து அருளுகின்ற ஒரு நாள் கிட்டுமோ? ரத்தினங்கள் கொண்ட படங்களை உடைய (காளிங்கன் என்னும்) பாம்பின் மேல் நடனம் செய்தவனாகிய கண்ணனின் (திருமாலின்) உண்மைக் குமாரனான மன்மதனும் விரும்பும்படியான மிகுந்த அழகைக் கொண்ட குமார சுவாமியாகிய சுப்ரமணியனே, நான்கு திக்குகளிலும் பரவி இருந்த பொய்யராகிய சமணர்களை வேரோடு அறுத்து எறிந்து சிறந்த திரு நீற்றைப் பரப்பி விளையாடிய (திருஞானசம்பந்தன் என்னும்) நல்லவனே, குமார வேளே, செல்வப் பொருள் அற்புத மூர்த்தி சிவாய என்னும் ஐந்தெழுத்தின் மூலப் பொருள் (ஆகிய சிவ பெருமானுக்கு) ஒப்பற்ற குரு நாதனே, விநோதமான அழகு கொண்ட மயில் மீதமர்ந்த வீரனே, (திருமாலின்) சக்கரத்தைத் தரித்திருந்த தாரகாசுரனுடைய மார்பில், வலிமையுடன் நீ ஏந்தியுள்ள சக்தி வேலைக் கொண்டு அடையாளம் இட்ட பெருமாளே. 
பாடல் 1258 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த
     தானாந்த தானந் தாத்த ...... தனதான
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
     நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம 
நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி
     நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலூர 
மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி
     மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயி¡£ர்வார் 
மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க
     வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே 
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி
     யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி 
ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி
     யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும் 
த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து
     தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச் 
சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த
     தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே.
பாம்பு போன்ற அங்கமாகிய பெண்குறியின் ரோமத்தைக் காட்டி, கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் காட்டி, புகழத் தக்க நெற்றியைக் காட்டி, அழகிய பலவிதமான வாசனை மிக்க திரவியங்களைக் காட்டி, தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நீலோற்பல மலர் போன்ற கண்களைக் காட்டி, அடியேன் என் மோகத்தை வெளிப் படுத்தி மடல் ஏறும்படி* மேகம் போல் கருமையான கூந்தலைக் காட்டி, ஆம்பல் போன்ற வாயின் நறுமணத்தைக் காட்டி, மேலே படுத்து அனுபவிக்கும் போக சுகத்தைக் காட்டி, உயிரை வாங்குபவர்களான விலைமாதர்களின் மேலே விழுந்து புணரும் துஷ்டனாகிய என்னுடைய காம மயக்கம் என்னும் இருளை ஒழிக்க, வேதத்தின் முடிவாகிய உண்மைப் பொருளைக் காட்டி எனக்கு அருள் புரிவாயாக. இணை இல்லாத உனது வீரத்தை போற்றுகின்றேன். நீல நிற அங்கத்தை உடைய (உனது) விமானமாகிய மயிலைப் போற்றுகின்றேன். மலர்கள் நிறைந்த கடப்ப மாலையைப் போற்றுகின்றேன். மேகங்கள் தாவி மேலேறிப் படியும் (சூரனது) ஏழு மலைகளையும் தொலைத்த உனது பன்னிரு புயங்களையும் போற்றுகின்றேன். யார் வேண்டிக் கொண்டாலும் கேட்ட வரத்தைக் கொடுத்தருளும் கொடைப் பெருமை கொண்ட உனது அலங்கார குணத்தைப் போற்றுகின்றேன். வாய் ஓயாமல் முன்பு கூச்சலிட்டவனும், பத்து உறுப்புக்களை உடையவனுமாகிய சூரன் தோற்றுப்போக, மயிலின் மீது ஏறி சேவற் கொடியைக் கையில் ஏந்தி, நாட்டில் உள்ளவர்கள் காணும்படி வேலாயுதத்தைத் தாங்கி, நட்சத்திரங்கள் விளங்கி நின்ற தேவர்களின் விண்ணுலகத்தைக் காப்பாற்றிய பெருமாளே. 
* மடல் எழுதுதல் .. தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** தேசாங்க சூரன் = தசாங்க சூரன். அவனுடைய பத்து அங்கங்களாவன .. நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி.
பாடல் 1259 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தனதனத் தனதன தனதனத்
     தனதன தனதனத் ...... தனதான
பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்
     பரவிய ம்ருகமதக் ...... குழல்மானார் 
பருமணி வயிரமுத் திலகிய குழையினிற்
     படைபொரு வனவிழிக் ...... கயலாலே 
எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக்
     கினிமையோ டுருகவிட் ...... டவமேயான் 
இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட்
     டிடர்படு வதுகெடுத் ...... தருள்வாயே 
சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத்
     தொளைபடு கரமலைக் ...... கிளையோனே 
துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத்
     துணைமுலை தழுவுபொற் ...... புயவீரா 
அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக்
     கையுமொகு மொகுவெனச் ...... சதகோடி 
அலகையு முடனடித் திடவடி யயிலெடுத்
     தமர்செயு மறுமுகப் ...... பெருமாளே.
நறு மணம் உள்ள மலர்கள் வைக்கப் பெற்றதாய், அகிலின் நறு மணத்தில் முழுகியதாய், கருநிறம் பரந்துள்ளதாய், கஸ்தூரி அணிந்துள்ள கூந்தலை உடைய மாதர்களின் பருத்த ரத்தினங்கள், வைரம், முத்து (இவை) விளங்கும் காதணியின் மீது போர் புரிவது போல் (நீண்டு பாயும்) கயல் மீன் போன்ற கண்ணாலே, நெருப்பில் இடப்பட்ட மெழுகைப் போல் துணையின்றி நிற்கும் என் மனம் நன்று நெகிழ்ந்து, அந்தச் சிற்றின்பத்தில் உருகும்படி விட்டு, வீணிலே நான் இரண்டு வினைகளும் என்னை வாட்ட, உண்மை வலிமையுடன் அறிவும் கெட்டுப்போய் வேதனைப்படுவதை ஒழித்து அருள் புரிவாயாக. சொரிகின்ற மத நீரை அருவி போல் ஒழுக்கெடுக்கும் புள்ளி கொண்ட முகமும், தொளை கொண்ட துதிக்கையையும் உடைய யானையாகிய கணபதிக்குத் தம்பியே, உடுக்கை போன்ற இடையை உடைய, ஒப்பற்ற குறக்குலத்து மயில் போன்ற வள்ளியின் புளகாங்கிதம் கொண்ட இரண்டு மார்பகங்களையும் தழுவும் அழகிய புயங்களை உடைய வீரனே, அருமையான பல வகைப்பட்ட திமிலை என்ற பறை வகைகளும், உடுக்கை வாத்தியமும் மொகு மொகு என்று ஒலிக்கவும், நூற்றுக் கணக்கான பேய்களும் கூடவே நடனமாட, கூர்மையான வேலாயுதத்தை எடுத்து போர் செய்கின்ற, ஆறு திரு முகங்களை உடைய, பெருமாளே. 
பாடல் 1260 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத்
     தத்தனத் தத்தனத் ...... தனதான
பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்
     பத்தைமுட் டிப்படுத் ...... தயில்மாதர் 
பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப்
     பற்றுகெட் டுப்பயிர்க் ...... களைபோலுங் 
கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத்
     திட்டுகத் தத்தினுற் ...... றகமாயுங் 
கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத்
     தொக்கநொக் குக்கணித் ...... தருள்வாயே 
வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத்
     திட்டுமட் டுப்படப் ...... பொருமாயன் 
மற்றுமொப் புத்தரித் தெட்டஎட் டப்புறத்
     துற்றஅத் தர்க்கருட் ...... பெருவாழ்வே 
செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப்
     பெட்டைமுட் டிச்செருச் ...... செயும்வேலா 
சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்
     செப்புமுத் தித்தமிழ்ப் ...... பெருமாளே.
செருக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மனம் உட்கொண்டுள்ள அஞ்ஞான இருள் நன்கு பதிந்து, சந்தேகக் கவலைகளைக் கொண்டு, முஷ்டி யுத்தத்தில் தாக்குவது போல் தாக்குகின்ற, வேல் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மீது நட்பு வைத்து, அவர்களுக்குப் பொருள் கொண்டு வந்து திரட்ட, பரம் பொருளின் மேல் இருக்க வேண்டிய பற்றே இல்லாது போய், பயிரில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டிய களைகளைப் போன்ற, (நான்) கற்றுள்ளதும், (நான்) கட்டியுள்ளதுமான பாடல்களை முழக்கத்துடன் சேர்த்து, ஒரு கனைப்பு கனைத்து (அவர்கள் முன்) உரக்கக் கத்திப் பாடி, உள்ளம் சோர்ந்து குலைகின்ற துன்பம் நீங்கி, உனது திருவடிகளைப் பற்றி முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கூடிட, என்னைக் கடைக் கண்ணால் நோக்கி அருள் புரிவாயாக. வட்ட வடிவமான கடல் வற்றிப் போக அணுகிச் சென்று, அசுரர்கள் சுழன்று உருண்டு ஓடும்படி துரத்தி, அவர்கள் சிறுமைப்படும்படி சண்டை செய்த திருமால், பின்னும், நமக்கு இணையானது என்று மனதில் நினைத்து எட்டி எட்டிப் பார்த்தும் (பன்றி உருவுடன் பாதாளம் வரை சென்று பார்த்தும்) (தோண்டப்பட்ட அளவுக்கும்) அப்பால் போய்க் கொண்டிருந்த திருவடிகளை உடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய பெருஞ் செல்வமே, வெறுப்பு முதிர்ச்சி அடைய கோபித்து, நீண்டிருந்த எட்டு மலைகளில் வசித்திருந்த அசுரர்களை முட்டித் தாக்கி போர் புரிந்த வேலினை உடையவனே, சித்தர்கள் தமது மனத்தில் ஆழ்ந்து நிலைக்கும்படி நிரம்ப உனது புகழைப் பாட, முக்தியைத் தர வல்ல பெருமாளே, தமிழ்க் கடவுளாகிய பெருமாளே. 
பாடல் 1261 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானன தான தாத்த தானன தான தாத்த
     தானன தான தாத்த ...... தனதான
பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
     பாணமும் வாளு மேற்ற ...... இருபார்வை 
பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த
     பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந் 
தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு
     தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச் 
சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு
     கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே 
சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர
     ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச் 
சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர
     தாபம கீப போற்றி ...... யெனநேமி 
மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட
     வாசவ னோதி மீட்க ...... மறைநீப 
மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி
     வானவர் சேனை காத்த ...... பெருமாளே.
பாவத்தினால் ஏற்பட்ட உடலுடன் வேதனைப் போர் செய்கின்ற பாவியாகிய நான், செலுத்துவதற்குத் தயாராக இருக்கும் அம்பையும் வாளையும் போன்ற இரண்டு கண்களையும், கனத்ததும் சந்தனம் பூசியுள்ளதும் அழகு உள்ளதுமான மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் பொருந்திய படுக்கையின் மேலிருந்து ஏமாற்றி இனிமை காட்டும், வஞ்சகமான பேச்சுக்களை உபதேச மொழியாகக் கருதும் பரிசுத்தம் இல்லாத நாயொத்த அடியேனுக்கும் என்னுடைய வினைகள் ஒழிய, பொருந்தி, தொடக்கம் இல்லாததாய், பெருந் தன்மையதான, யான், தான் என்னும் இரண்டும் இல்லாததாய், சுகத்தைத் தோற்றுவிக்கும் ஞான மொழியை உபதேசித்து அருள்வாயாக. வேத நூல்களில் பயிற்சி உள்ள பழைமை உடையவனும், பூணூல் அணிந்தவனுமாகிய பிரம தேவனுடைய தீரம் குலைய வைத்து (ஆணவத்தை அடக்கி), கிரவுஞ்ச மலையை துகைத்து ஒழித்து, கடலில் (மாமரமாக) இருந்த சூரனை வேட்டை ஆடிய வெற்றி வேலைக் கொண்ட கீர்த்திமானே, அரசே, உன்னைத் துதிக்கிறேன் என்று, சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும், தேவி விளங்கும் பாகத்தினரான சிவபெருமானும், பல கண்களை உடைய இந்திரனும் புகழ்ந்து, தம்மைக் காக்க வேதங்களை ஓதியும், கடம்பின் அழகிய பூக்களைக் கொண்டு தூவியும் உன்னை வாழ்த்த, தேவயானையை மணம் புரிந்து தேவர்களுடைய சேனைகளைக் காத்த பெருமாளே. 
பாடல் 1262 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தான தனந்தன தான தனந்தன
     தான தனந்தன ...... தனதான
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப
     டீர தனம்புள ...... கிதமாகப் 
பாவை யருந்தியல் மூழ்கி நெடும்பரி
     தாப முடன்பரி ...... மளவாயின் 
ஆர முதுண்டணை மீதி லிருந்தநு
     ராகம் விளைந்திட ...... விளையாடி 
ஆக நகம்பட ஆர முயங்கிய
     ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ 
நார தனன்றுச காய மொழிந்திட
     நாய கிபைம்புன ...... மதுதேடி 
நாண மழிந்துரு மாறி யவஞ்சக
     நாடி யெபங்கய ...... பதநோவ 
மார சரம்பட மோக முடன்குற
     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய் 
மாமு நிவன்புணர் மானு தவுந்தனி
     மானை மணஞ்செய்த ...... பெருமாளே.
பாரமானதும், நறு மணம் வீசுவதுமான கூந்தல் குலைய, சந்தனம் அணிந்துள்ள மார்பகம் கட்டுத் தளர்ந்து புளகிதம் கொள்ள, மாதர்களின் உதரத்தில் முழுகியவனாய், மிக்க தாகத்துடன் நறு மணம் உள்ள வாயிதழில் நிறைந்த அமுதூறலைப் பருகி, படுக்கையில் இருந்து, காமப் பற்று உண்டாக லீலைகளைச் செய்து, உடலில் நகக்குறிகள் பட மிக நன்றாகத் தழுவிய வேசையர் ஆசையை மறந்து, உன்னை உணரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? நாரத முனிவர் அந்நாளில் (வள்ளி சம்பந்தமான) உதவி மொழிகளை எடுத்துச் சொல்ல, வள்ளி நாயகி இருந்த பசுமையான தினைப் புனத்தைத் தேடிச் சென்று, கூச்சத்தையும் விட்டு (வேடன், விருத்தன், வேலன்) ஆகிய உருவம் எடுத்த தந்திரக்காரனே, விரும்பி, தாமரைத் திருவடிகள் நோக, மன்மதனின் மலர்ப்பாணங்கள் தைக்க, காம இச்சையுடன் குறவர்கள் வாழும் வள்ளிமலையின் மீது சென்று, சிறந்த சிவமுனிவர் இணைந்ததால் லக்ஷ்மியாகிய மான் பெற்ற ஒப்பற்ற மான் போன்ற வள்ளியைத் திருமணம் செய்த பெருமாளே. 
பாடல் 1263 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தனதன தனதன தனதன
     தானத் தனந்தம் ...... தனதான
பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
     பேணிக் கரங்கொண் ...... டிருகாலும் 
பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி
     பேதித் தளந்தம் ...... புவியூடே 
வரவிட வருமுட லெரியிடை புகுதரு
     வாதைத் தரங்கம் ...... பிறவாமுன் 
மரகத மயில்மிசை வருமுரு கனுமென
     வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே 
அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
     ஆலிப் புடன்சென் ...... றசுரேசர் 
அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட
     னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா 
இருவினை யகலிட எழிலுமை யிடமுடை
     யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா 
இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்
     ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே.
சாமர்த்தியத்துடன் இணைந்து வரும் வினைகளின் துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன் (இரண்டு) கைகளுடன் இரண்டு கால்களும் பெறும்படியாக உயர்த்தப்பட்ட குடிசை போன்ற உடலில் பொருந்தும்படி உயிர் புகுந்து, அறிவு என்பது அவ்வுயிர்க்கு வேறுபாடாகும்படி கணக்கிட்டு, உலகிடையே பிரமதேவனும் அனுப்பி வைக்க வந்து சேர்கின்ற உடல் (இறுதியில்) நெருப்பில் புகுந்தழியும் துன்பம் என்னும் அலை தோன்றுவதற்கு முன், பச்சை மயிலின் மேல் வருகின்ற முருகனே என்று கூறி வாழ்வதற்கு வேண்டிய ஒப்பற்ற ஓர் அன்பைத் தருவாயாக. அரிய மலையாகிய கிரெளஞ்சம் தொளைபட்டு அழிய, அலை வீசும் கடல் வற்றிப் போக, ஆரவாரத்துடன் போருக்குச் சென்ற அசுரர்கள் எல்லோரும் மடிந்து அழிய சண்டை செய்து, அழகுடன் வீர பராக்கிரமம் விளங்க எழுந்த வேலாயுதனே, (அடியார்களுடைய) இரு வினைகளும் நீங்கும்படி, அழகிய உமா தேவியை தமது இடது பாகத்தில் கொண்டுள்ளவரான சிவ பெருமானுக்கு (திருநெறித் தமிழ் என்னும் தேவாரத் தமிழைத் திருஞான சம்பந்தராக வந்து) புனைந்த திருவாயனே, இயற்றமிழ் முதலான பல கலைகளுடன் இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனுக்கு அதிக இரக்கம் காட்டும் பெருமாளே. 
* முதல் வரியிலிருந்து பிரமனும் என்ற சொல் அன்வயப்படுத்தி உள்ளது.
பாடல் 1264 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானன தானன தந்த தானன தானன தந்த
     தானன தானன தந்த ...... தனதான
பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
     பூசைகள் யாதுநி கழ்ந்து ...... பிழைகோடி 
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
     பூரணி காரணி விந்து ...... வெளியான 
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
     ஞானசு வாசமு ணர்ந்து ...... வொளிகாண 
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
     நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ 
மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
     வாணிவ ராகிம டந்தை ...... யபிராமி 
வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச
     வாலைபு ராரியி டந்த ...... குமையாயி 
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
     மேலொடு கீழுல கங்கள் ...... தருபேதை 
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
     வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே.
ஐம்பூதங்களின் சம்பந்தமான சாஸ்திரங்கள் முதலானவைகளை ஆய்ந்தறிந்து, யோகவகை கூடிட மகிழ்ந்து, பூஜைகள் யாவற்றையும் செய்து, கோடிக் கணக்கான பிழைகள் நீங்கும்படியான வழி இன்னதென்று காரணம் உணர்ந்து, முதலும், முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற முழு முதல்வி, சகலத்துக்கும் ஆதி காரணமாக இருப்பவளாகிய பரா சக்தியும், விந்து வெளியான நாதம் (விந்து சம்பந்தமான நாத ஒலி கூடி முழங்கும் இடத்தில்) பரம் பொருளாகக் காட்சி தர, யோகிகள் காணும் அந்த பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து, ஞான மூச்சினால் யோக நிலையை அறிந்து நாத நல்லொளி தோன்ற, அதை விரும்பி, ஓராயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீது அமர்ந்துள்ள பெருமானது* இரண்டு திருவடிகளை அடைவேனோ? மாது, எல்லாவற்றுக்கும் ஈசுவரி, வஞ்சிக் கொடி போன்றவள், காளி, பிடாரி, விபஞ்சி என்னும் வீணையை ஏந்திய சரசுவதி, சக்தி, பேரழகியான மடந்தை, வாழ்வு பொலியும் சிவகாம செளந்தரி, பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய ஐந்து முகம் கொண்ட பாலாம்பிகை, திரிபுரத்தை எரித்த சிவனது இடது பாகத்துக்குத் தக்க பொருந்திய உமா தேவி ஆகிய எமது தாய், வேதங்களையும், புராணங்களையும் சொன்னவள், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய (முராரி என்னும்) நீலநிறத் திருமாலின் தங்கை, பதினான்கு உலகங்களையும் ஈன்று அளித்த மாது, (ஆடலுக்கு உரிய) வேடங்களெல்லாம் நிலை கலங்க, (பொற்)சபையில் பாடல்களுடனும் ஆடல்களும் பயின்ற சடையை உடைய சிவ பெருமானின் தேவி ஆகிய பார்வதி பெற்ற பெருமாளே. 
* ஆறு ஆதாரங்களோடு சஹஸ்ராரம் என்பது ஆக்ஞேய சக்கரத்துக்கு மேலே, தலையில் பிரம்ம கபாலத்தில், ஆயிரம் இதழ் கமலமுள்ள பிந்து ஸ்தானமாக இருப்பது. ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 1265 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கரஹரப்ரியா 
தாளம் - ஆதி - கண்டநடை - 20 
- எடுப்பு - அதீதம்
தனந்தா தனந்தா தனந்தா தனந்தா
     தனந்தா தனந்த ...... தனதான
பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்
     ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப் 
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்
     நடந்தார் தளர்ந்து ...... பிணமானார் 
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்
     அலங்கார நன்றி ...... தெனமூழ்கி 
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்
     அலந்தேனை யஞ்ச ...... லெனவேணும் 
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ
     கவெங்கே மடந்தை ...... யெனவேகி 
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ
     யிடுங்கா வலன்றன் ...... மருகோனே 
பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்
     புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர் 
புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா
     புகழ்ந்தோது மண்டர் ...... பெருமாளே.
பெரிய காரியத்தைச் சாதிக்க வந்ததுபோல வந்துள்ளதும், எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிய இந்த உடம்பின்மீது ஆசைப்படும்படி வந்து, கருவில் ஊறிப் பிறந்தார் என்றும், படுத்திருந்தார் என்றும், இருந்தார் என்றும், தவழ்ந்தார் என்றும், நடந்தார் என்றும், தளர்ந்து பிணமானார் என்றும் கூற இடமானதும், அரிய சுடுகாட்டின் அருகே எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்றும், அங்கே உடலைச் சுடுங்கள் என்றும் (சிலர் கூறத் தொடங்க), பிணத்திற்கு அலங்காரம் நன்றாய் அமைந்தது என்றும் சிலர் கூறி, பிணம் எரிந்ததும் நீரில் மூழ்கி, இருந்த ஆசையையும் பாசத்தையும் மறந்து செல்ல, விழுந்து பாழாகும் இந்த உடம்பைக் காரணமாக வைத்து மனம் கலங்கி எங்கும் அலைந்து திரிந்த என்னை அஞ்சாதே என்று கூறி நீ வரவேண்டும். பெரிய காட்டிற்குச் சென்று, இளைய வீரனாம் தம்பி லக்ஷ்மணன் பின் தொடர, (காணாது போன) மாது சீதை எங்கே என்று தேடிச் சென்று புறப்பட்டு, அநுமார் என்னும் குரங்கின் மூலம் இலங்காபுரியில் நெருப்பை வைத்த அரசனான ராமபிரானின் மருகனே, போர் செய்யும் வில்லைக் கையில் கொண்டவர்களாய், தம்மை மதிக்காதவர்களின் வீரம் அழியும்படி அம்பைச் செலுத்தவல்ல வேடர்களுடைய தினைப்புனத்தைக் காவல் செய்த அழகிய பெண் வள்ளியின் மணாளனே, குறைவொன்றும் இல்லாதவனே, உன்னைப் புகழ்ந்து துதிக்கும் தேவர்களுடைய பெருமாளே. 
பாடல் 1266 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த
     தத்தத் தனத்தத்த ...... தனதான
மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற
     மட்டுற் றசுற்றத்தர் ...... மனையாளும் 
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு
     வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட 
நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற
     நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன் 
நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப
     நிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே 
திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
     சித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே 
சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்
     தித்திப் பையிச்சிக்கு ...... மணவாளா 
முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு
     முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே 
முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை
     முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே.
மக்களாக எடுத்த பிறப்பில் கூடப் பிறந்துள்ள சுற்றம் என்னும் அளவில் உள்ள உறவினர்களும், மனைவியும், (எனது) வாழ் நாளின் இடையில் வந்து சேர்ந்து, தினமும் மாறுபட்டுச் சண்டை இட்டு, சேகரித்து வைத்துள்ள பொருளைப் பறிக்கவே மிகவும் நாடி நிற்க, கொல்ல வரும் துஷ்டனாகிய யமன், அழித்து என் உயிரைப் பிடிக்க நீண்ட பாசக் கயிற்றினால் வீசி வளைப்பதற்கு முன்பாக, மனம் நெகிழ்ந்து, குரு பக்தி மிகுந்து, உன் திருவடிகளைப் புகழ்வதற்கு, நிலைத்து நிற்கும் தத்துவ அறிவுச் சொற்களை எனக்கு உதவி செய்து அருளுக. நாலு திசைகளிலுள்ள புறங்களுள்ளும் அழியாதிருக்கச் (சம்பந்தராக வந்து) சிவபெருமானின் புகழைப் பரப்பிய, அழகிய தமிழ் பாடும் வெற்றியை உடையவனே, சிறிய குடிசை கட்டியுள்ள, கீழ்ஜாதியில் வளர்ந்த குறப்பெண்ணாகிய, வள்ளியின் இனிய சொல்லை விரும்பி ஆசைப்படும் கணவனே. மூன்று கண்களையும், சடையையும் உடைய சித்த மூர்த்தியாகிய சிவபெருமானது உள்ளத்துள் நுழைந்து படிவதற்கு, முக்தி நிலையைப் பற்றி முதலிலிருந்து உபதேசித்தவனே, முழுக் கோபம் கொண்டு, முன்னே இருந்த பூங்கொத்துக்கள் கூடிய மாமரமாக நின்ற சூரனை எதிர்த்துத் தாக்கி, வேலால் தொளைத்து அழித்த பெருமாளே. 
பாடல் 1267 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்தனா தத்ததன தத்தனா தத்ததன
     தத்தனா தத்ததன ...... தனதான
மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை
     விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே 
மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்
     வைத்துவா டச்சமனு ...... முறமேவித் 
திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி
     திக்கஆ விக்களவு ...... தெரியாமுன் 
சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது
     சித்ரபா தக்கமல ...... மருள்வாயே 
இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை
     யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன் 
எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத
     லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய் 
பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு
     பத்தர்பா டற்குருகு ...... முருகோனே 
பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர்
     பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே.
நான் பெற்ற மக்களுக்கும், என் தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும், மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனத்தில் வருத்தம் தந்து, கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய, யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமான எருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து என் சொற்களைக் குழற வைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக (அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்), மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்று நான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை அருள்வாயாக. கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய (நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி, யோகத்தில் அமர்ந்த சிவபெருமானுடைய முன்னிலையில், இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால் முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்கு உபதேசித்தவனே, உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்து விரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே. உனது (இடது) பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்தி வாழ்கின்றவளும், அந்தக் குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான் போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே. 
பாடல் 1268 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனனத் தனதன தனனத் தனதன
     தனனத் தனதன ...... தனதான
மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்
     மலையப் படவிடு ...... வலியாலே 
வனமுற் றினவளை யினநித் திலமலை
     வலையத் துகள்வளை ...... கடலாலே 
விதனப் படுமதி வதனக் கொடியற
     வெருவிப் பரிமள ...... அணைமீதே 
மெலியக் கலைதலை குலையத் தகுமினி
     விரையக் குரவலர் ...... தரவேணும் 
புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்
     புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா 
பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு
     புனமெய்க் குறமகள் ...... மணவாளா 
முதுநற் சரவண மதனிற் சததள
     முளரிப் பதிதனி ...... லுறைவோனே 
முதுமைக் கடலட ரசுரப் படைகெட
     முடுகிப் பொரவல ...... பெருமாளே.
மன்மதன் கரும்பு வில்லைக் கொண்டு புதிய தாமரை மலர் அம்பை (என் மகள் மீது) பகைத்து எய்ததால் ஏற்பட்ட வலியாலும், அழகு நிறைந்த சங்குகளின் கூட்டமான முத்துக்கள் அலைகளாகிய வட்டச் சுழலில் சிதறி விழுகின்ற, வளைந்துள்ள கடலாலும், துயரப்படும் நிலவு போன்ற முகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற என் பெண் மிகவும் அச்சம் அடைந்து, நறுமணம் உள்ள படுக்கையின் மேல் (தூக்கமின்றி) மெலிந்து போதலும், ஆடையும் தலைக் கூந்தலும் குலைந்து போதலும் தகுமோ? இனிமேல் வாசம் மிக்க குர மாலையை நீ தந்தருள வேண்டும். புதனுடைய தந்தையாகிய சந்திரனை, நான்முக பிரமன், திருமால் (இவர்களின்) எதிரே சூடிக் கொண்டவராகிய சிவபெருமான் தொழுகின்ற திருவடியை உடைய வீரனே, பொருந்திய கையில் வளையல்களை வரிசையாக அடுக்கியவளும், நெருங்கி வளர்ந்துள்ள பயிர்கள் உள்ள தினைப் புனத்தில் இருந்தவளும், உண்மை நிறைந்த குறப் பெண்ணுமாகிய வள்ளியின் கணவனே, பழைய நல்ல சரவணப் பொய்கையில் நூறு இதழ்களைக் கொண்ட தாமரையின் மேலும், பொற்றாமரைப் பதியாகிய மதுரையிலும் வீற்றிருப்பவனே, பழைய கடலில் நெருங்கியிருந்த அசுரர்கள் சேனைகள் கெட்டு அழிய, விரைவில் சென்று சண்டை செய்ய வல்ல பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது நற்றாய் பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், அலை வீசும் கடல் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 1269 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தன்யாஸி 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன தனான தான தனதன தனான தான
     தனதன தனான தான ...... தனதான
மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி
     மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை 
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி
     வரும்வகை யிதேது காய ...... மெனநாடும் 
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
     வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும் 
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக
     மிகுமுன துரூப தான ...... மருள்வாயே 
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை
     யியலொடு கடாவு தீர ...... குமரேசா 
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
     இளமையது தானு மாக ...... நினைவோனே 
நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான
     நடைபெறு கடூர மான ...... மயில்வீரா 
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு
     நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே.
அறிவு என்பதே இல்லாத பாவி, குரு சொன்ன வழியில் நிற்காத சினமுள்ளவன், மனம் ஒரு நிலையில் நிற்காத பேய் போன்று அலைபவன், பயனற்ற மாயையின் பொய்யான போக்குக்களை விடாத பேடி, தவம் என்ற நினைப்பே இல்லாத முரடன், இந்த உடம்பு எப்படிப் பிறந்தது என்று ஆராயும் பாக்கியம் இல்லாதவன், மிகக் கொடிய கஞ்சன், சபைகளில் வந்து பேசும் ¨தரியம் இல்லாதவன், தீவினையின் வலிமையை நீக்கமாட்டாத பயனற்றவன் ஆகிய என்னை நீயும் மிக மேலான ஞானமார்க்கத்தை ஆராய்ச்சி செய்ய மிக்கு விளங்கும் உன்னுடைய சாரூபம் (வடிவ தரிசனம்) என்ற பரிசை அடியேனுக்குத் தந்தருள்க. எதிர்த்து வந்த மிக்க வலிய சூரன் இரண்டு பிளவாகும்படியாக வேலாயுதத்தை தக்க முறையில் செலுத்தின தீரனே, குமரேசனே, இனிய சொற்களையே மறக்காமல் பேசும் பெரியோர்கள் மீண்டும் கருவழியடைந்து பிறவாதபடியும், எப்போதும் இளமையுடன் விளங்கும்படியும், நினைத்து அருள் செய்பவனே, கங்கைநதியுடன், பாம்பையும் அணிந்த பரமேசுரர் சிவபெருமானுக்கு குருமூர்த்தியானவனே, நடையிலேயே கடுமையான வேகம் காட்டும் மயிலையுடைய வீரனே, சிரித்த முகத்தாளும், அற்புத ஞானத்தைக் கொண்டவளுமான குறப் பெண் வள்ளியுடன் கொஞ்சுகின்றவனே, நவரத்தின மாலை விளங்கும் மார்பை உடைய பெருமாளே. 
பாடல் 1270 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
     தனந்தாத் தனத்தம் ...... தனதான
மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்
     டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய 
மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்
     றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும் 
குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்
     தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும் 
குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்
     குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய் 
தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்
     தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத் 
தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்
     திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே 
அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்
     டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா 
அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்
     கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.
மலம், தோல், நீர் ஆகியவைகளும், செறிந்துள்ள எலும்பு இவைகளும் கலந்து கூட்டப்பட்ட கூடாகிய இந்த உடம்பில் தங்கியிருக்கும் மாய வாழ்க்கையில், மயங்கியும், சஞ்சலப்பட்டும், பயன் தர வைக்கப்பட்ட பிராண வாயுவுடன் நீங்க (உடலை விட்டு விலக), தந்தையும், மனைவியும், சிறந்த தாயுடன், கூடப் பிறந்தவர்களாய் விளங்கும் கூட்டத்தினர் (உறவினர்கள்) மிகப் பலமாய்க் கூப்பிட, தாம் வாழ்ந்த இடத்தில் உள்ள யாவரும் உள்ளம் சோர்வுற்று அழுகை ஓசை எழும் சுடுகாட்டிலும், (உனது) அழகிய திருவடிகளை அன்புடனே நல்ல குணத்துடன் மனதில் இறுத்தி, உன்னைக் கும்பிட்டு வணங்கும்படி என்னை ஆட்கொண்டருளுக. திருவடியாகிய இடத்தைத் தொட்டு, நெருங்கிக் கட்டிப் பிடித்த அடியவர்களுக்கும், இளம் பூஞ்சோலை, குளிர்ந்த பொய்கை ஆக விளங்கும் திருவடியை ஆரவாரத்துடன் போற்றிய அன்பர்களுக்கும் வாழ்வுறும்படி உதவுகின்ற கூத்தப் பெருமானும் கண்டு மகிழ்ந்து போற்றி செய்ய, அழகிய ஞானநூலை சிவனாருக்கு உபதேசித்து நின்ற பெருஞ் செல்வமே, வெள்ள நீர் அசைந்து ஆற்றில் எதிர்ந்து எதிரே வந்த உனது சொல் (நீ திருஞான சம்பந்தராக எழுதிவிட்ட திருப்பாசுர ஏட்டின் பெருமையைக் கண்டு) நீரிலும், நெருப்பிலும் (சபதம் செய்து போட்டியில்) கலந்து, நமது ஆண்மையும் தொலைந்தது என்று (சமணர்கள்) சொல்லும்படி (அவர்களைக்) கோபித்த வேலனே, தரும நெறியைக் காப்பாற்ற, தூங்காமலும் சோர்வு அடையாமலும் இருக்கும் வகையைக் கண்டிருந்த பெரியோர்களுக்கும், (உன்னைப்) பூஜித்து வழிபடுவோர்களுக்கும் (வரங்களைத்) தருகின்ற பெருமாளே. 
பாடல் 1271 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதான தான தந்த தனதான தான தந்த
     தனதான தான தந்த ...... தனதான
மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து
     மதனூட லேமு யங்கி ...... யதீருப 
மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி
     மதிசீரெ லாம ழிந்து ...... கொடிதான 
வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று
     விரகான்மெ யேத ளர்ந்து ...... விடுநாளில் 
விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து
     வெளிஞான வீடு தந்து ...... அருள்வாயே 
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று
     சிறுபேதை கால்ப ணிந்த ...... குமரேசா 
திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற
     திருமால்மு ராரி தங்கை ...... யருள்பாலா 
முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த
     முதுசூரர் தானை தங்கள் ...... கிளையோடு 
முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த
     முனைவேலி னாலெ றிந்த ...... பெருமாளே.
மனத்திலே நூறு கோடிக்கணக்கான துன்பங்கள் ஒரு நொடிப் பொழுதிலே நினைந்து, மன்மதனது லீலையால் காம ஊடலிலே ஈடுபட்டு, மிக்க அழகுள்ள இளம் பெண்களிடத்தில் ஆசை கொண்டு, இந்தப் புவிமீதிலே மயங்கிக் கிடந்து, அறிவு, மதிப்பு எல்லாம் கெட்டு, கொடுமையான தீவினை மூடித்திரிந்து, இவ்வுலகில் பல இடத்திலும் அலைந்து, அப்பெண்களின் தந்திரச் செயல்கள் காரணமாக உடல் தளர்ந்து போய்விடுகின்ற அந்த நாளில், வேகம் வாய்ந்த தோகையுடன் கூடிய பெருமைமிக்க மயிலில் ஏறி, விரைவில் வந்து, பரவெளியாம் ஞான முக்தியினை நீ தந்தருள்வாயாக. தினைப்புனத்தில் வேடர்களின் காவல் உள்ள மலைப் புறம், காட்டுப் புறம் எல்லாம் திரிந்து, சிறு பேதைப் பெண்ணாகிய வள்ளியின் அடிகளில் பணிந்த குமரேசனே, அலைகள் வீசும் சமுத்திரத்தில் அணைகட்டி, போருக்கு வந்த ராவணேசனை வெற்றிகொண்ட (ராமனாம்) திருமாலின், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியின், தங்கை பார்வதி அருளிய பாலனே, முநிவர்கள், தேவர்கள், விண்ணுலகத்தார் அனைவரையும் வளைத்துச் சிறைசெய்த கொடிய சூரர்களின் சேனைகளை, அவர்களின் சுற்றமுடன் அவர்களின் தலைகள் சிதறி கோடிக்கணக்கான தூள்களாகப் பறக்க, அவற்றை கழுகுகளும் பருந்துகளும் உண்ண, வேலின் முனையினால் அழித்த பெருமாளே. 
பாடல் 1272 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த
     தானதன தனத்ததந்த ...... தனதான
மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து
     மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி 
மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு
     மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி 
வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து
     வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய் 
வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து
     வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ 
ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி
     லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி 
ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை
     யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே 
சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த
     சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா 
தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி
     தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே.
பெண்ணோடு காம மயக்கத்தில் ஈடுபட்டு, அன்பினால் ஏற்பட்ட பனி போல ஒரு துளி உட்சென்று, ஓர் உளுந்து போலச் சுழற்சி உற்று, கர்ப்பத்தில் ஊறி, உருவம் மாறுதல் ஏற்பட்டு, பலாப் பழம் போல ஆன வயிற்றைச் சுமந்து, பசுவின் பனிக்குடம் போலப் பருத்து, பேறு காலம் வந்தது என்று கூற, வயிறு தளர்ந்து, குழந்தையாக வெளிப்பட்டு, வேதத்தில் சொல்லப்பட்ட இந்தப் பூமியில் விழுந்து பிறந்து, பன்றிக்குட்டி புரள்கிறது போல உள்ளது என்று சொல்லும்படித் தவழ்ந்து, ஒளி வீசும் மணிகளை, அணிந்து கொண்டு, நடைகள் மிகவும் பழகி, மனம் போன போக்கின்படிப் பலவகையாகத் திரிந்து, நறுமணம் வீசும் புனுகு வாசனைப் பண்ட வகைகளை உடலில் பூசி, விலைமாதர்களின் வலையில் அகப்பட்டு இறந்து படுவேனோ? ஆதி மூலமே, அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக் கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப் பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால், ஆமை, கயல் மீன் என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில் பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே, ஜோதி உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, கலாபம் கொண்ட மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம் பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த பெருமாளே. 
பாடல் 1273 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தத்ததன தானனத் தத்ததன தானனத்
     தத்ததன தானனத் ...... தனதான
முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்
     பட்டகரி போலுமத் ...... தனமாதர் 
முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப்
     பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் 
சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத்
     துக்கமுற வேமிகச் ...... சுழலாதே 
சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச்
     சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே 
கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப்
     புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் 
கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக்
     கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா 
பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப்
     பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் 
பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற்
     பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே.
முத்தாலும், ரத்தினத்தாலும் ஆன மாலைகள் நெருங்கியுள்ள இரண்டு மலைகள் போலவும், எதிர்த்து வரும் யானைகள் போலவும் உள்ள அந்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகத்தில் உள்ள கூரிய வேல் போன்ற கண்களால் தாக்கப்பட்டு, கரிய மேகம் போல் மனத்தில் அஞ்ஞான இருள் வந்து மூடி, தெளிவான தூய அறிவு போய் செயலில் துஷ்டத்தனம் உடையவனாய், மனத்தில் துக்கம் கொண்டவனாய் மிகவும் கலக்கம் உறாமல், பல வகையான சொற்களை நாவால் தொடுத்து, பாடித் துதித்து, உனது இரு திருவடிகளைத் தொழ, புகழ் மிக்க தாமரைப் பாதங்களை கொஞ்சம் தயை புரிந்து அருள் செய்வாயாக. (ராவணனுடைய) கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் அறுபட்டு விழ, குறி வைத்து அம்பு எய்த, மிக்க கோபம் கொண்டவனாகிய அச்சுதனாம் ராமன், மாயவனின் (திருமாலின்) வீரம் வாய்ந்த மருகனே, குறக் குலத்துச் சாதாரண வேட்டுவப் பெண்ணாம் வள்ளிக்கு காம இச்சை காட்டும் பேச்சுக்களைப் பேசிய நல்ல குமரனே, பக்தியுடன் உன்னைத் தியானித்துப் போற்றும் அடியார்களுடைய வினைப் பற்றைப் போக்க வல்ல சிறந்த வேதப் பொருள் ஆனவனே, பக்தி, சிறந்த ஞானம் இவைகளைக் கொண்ட சொற்களைக் கற்றவர்கள் பாடுகின்ற நல்ல அன்புக்கு உரியவனே, தேவர்களின் உண்மைப் பொருளான பெருமாளே. 
பாடல் 1274 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பாகேஸ்ரீ 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தானத் தானன தனதன தானத் தானன
     தனதன தானத் தானன ...... தனதான
முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி
     முகுளப டீரக் கோமள ...... முலைமீதே 
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
     முதியபு ராரிக் கோதிய ...... குருவேயென் 
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு
     முணர்வினோ டூடிக் கூடியும் ...... வழிபாடுற் 
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி
     யுனதடி யாரைச் சேர்வது ...... மொருநாளே 
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
     வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல் 
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி
     மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட் 
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
     சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப் 
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத
     புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே.
முருகனே, மயிலேறும் வீரனே, சரவணபவனே, வள்ளிமலையில் மிகுந்து விளைந்த தினைப்புனத்தைக் காவல் செய்த மலைப் பெண் வள்ளியின் தாமரை அரும்பு போன்ற, சந்தனம் அணிந்த, அழகுடைய மார்பின் மேல் முழுகிய அன்பு மிக்க ஆர்வலனே, கடவுள், உயிர், தளை என்ற மும்மைத் தத்துவங்களின் முடிவான உட்பொருளை பழமையான, திரிபுரம் அழித்த, சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே என்று துதித்து, உள்ளம் குழைந்து உருகியும், ஆடியும், பாடியும், உனது இரு திருவடிகளை நாடியும், அவற்றைத் தலையில் சூடியும் ஞான உணர்ச்சியோடு பிணங்கியும், மீணடும் இணங்கிக் கலந்தும், வழி பாட்டில் பொருந்த நின்று, உலகினோர் மீது வைத்த ஆசைப்பாடு அறவே அற்றுப் போக, நிலைபெற்றுள்ள பெரிய ஞான உணர்வுடன் இனி மேல் உன் அடியார்களைச் சேர்ந்து மகிழக்கூடிய ஒரு நாளும் உண்டாகுமோ? சகோதரி தேவகியின் மகன் என்று சற்றும் கருதாமல் சூழ்ச்சியுடன் அந்த மருகனைக் கொல்ல எண்ணிய மாமனாம் பாவியாகிய கம்சன், அனுப்பி வைத்த, மாயத்தில் வல்ல, பூதனை என்ற பேயின் முலையின் விஷப் பாலோடு உயிரையும் அருந்தியும், பின்னும், கொல்ல வரும் மத யானையாகிய குவலயா பீடத்தின் தந்தங்களைத் திருகிப் பறித்தும் (அந்த யானையைக் கொன்றும்), (வஞ்சனையாக கபிஸ்டாசுரன் என்ற ஓர் அரக்கன் விளாமரமாக நிற்க) அந்த விளா மரத்தின் காய்களும் கனிகளும் மரத்தோடு சேர்ந்து விழும்படி தனது வன்மையால் (தேனுகாசுரன் என்ற கன்றின் உருவில் வந்த மற்றோர் அசுரனைக் கொண்டு) அடித்தும், பெரிய இறக்கையுடைய பறவையாகிய (கேசி என்ற) கொக்குடன் சண்டை செய்தும் (அதன் வாயைப் பிளந்தும்), அச்சத்தைத் தரும் இரண்டு பருத்த மருத மரங்களுக்கு இடையில் (இடுப்புடன் கட்டிய உரலுடன்) தவழ்ந்து சென்றும் (அம்மரங்களை முறித்தும்), அப்போது ஒரு வண்டிச் சக்கர வடிவில் வந்த (சகட) அசுரனை உதைத்தும், (சாணூரன், முஷ்டிகன் என்ற) மல்லர்களுடன் போர் செய்து விளையாடியும், இடையர்களின் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய கண்ணனாம் திருமாலின் மருகனே, குலிஜம் என்ற ஆயுதம் ஏந்திய இந்திரனின் ஊராகிய பொன்னுலகத்தில் சிறந்த தேவர்கள் போற்றும் பெருமாளே. 
பாடல் 1275 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பந்து வராளி 
தாளம் - ஆதி
தானா தனதன தானா தனதன
     தானா தனதன ...... தனதான
மூலா நிலமதின் மேலே மனதுறு
     மோகா டவிசுடர் ...... தனைநாடி 
மோனா நிலைதனை நானா வகையிலு
     மோதா நெறிமுறை ...... முதல்கூறும் 
லீலா விதமுன தாலே கதிபெற
     நேமா ரகசிய ...... வுபதேசம் 
நீடூ ழிதனிலை வாடா மணியொளி
     நீதா பலமது ...... தருவாயே 
நாலா ருசியமு தாலே திருமறை
     நாலா யதுசெப ...... மணிமாலை 
நாடாய் தவரிடர் கேடா வரிகரி
     நாரா யணர்திரு ...... மருகோனே 
சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
     காலார் தரவரு ...... குருநாதா 
தோதீ திகுதிகு தீதீ செகசெக
     சோதீ நடமிடு ...... பெருமாளே.
(முதல் இரண்டு அடிகளை அன்வயப்படுத்தி பொருள் தரப்படுகிறது) மனத்தில் பொருந்தியுள்ள ஆசை என்ற காடு (வேறு வழிகளில் செல்லாமல்) மூலாதார நிலைக்கு மேல் உள்ள ஜோதியினை* நாடிச்சென்று, மெளன நிலையை, பலவகைகளிலும் கற்று, நன்னெறி வகைகளைக் காட்டுகின்ற உனது பலவகையான விளையாட்டுக்களை உன்னருளாலே யான் கண்டு முக்தி பெற, ஒழுக்க விதிக்கு உட்பட்ட ரகசிய உபதேசத்தின் பயன்தனை எனக்கு அருள்வாயாக. நீண்ட ஊழிக்காலத்தும் (எப்போதும்) தன் நிலை வாடாத சுயம்பிரகாச மணி ஜோதியே, நீதிமானே, பலவகையான இன்பச் சுவையமுதம் பருகிய உணர்ச்சியாலே, அழகிய வேதங்கள் நான்கையும், ஜெபமணிமாலை கொண்டு நாடிச் சென்று ஆராயும் தவ சிரேஷ்டர்களின் துன்பங்களை அழிப்பவனே, ஹரி ஹரி என்று ஓதப்படும் நாராயணரின், லக்ஷ்மியின் மருமகனே, சூலாயுதம் ஏந்திய தலைவரும், சிவஞானத்தினரும், காலனை உதைத்த திருவடியினருமான சிவ பெருமான் தந்தருள வந்த குருமூர்த்தியே, தோதீ திகுதிகு தீதீ செக என்ற தாளத்தில் ஜெகஜ்ஜோதியாக நடனம் செய்யும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 1276 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதனந் தனந்த தனதனந் தனந்த
     தனதனந் தனந்த ...... தனதான
வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து
     வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் 
மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து
     வசமழிந் திழிந்து ...... மயல்கூர 
இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க
     இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் 
இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ
     னிலகுநின் பதங்கள் ...... மறவேனே 
விரிபரந் தியங்கு முததியுங் கலங்க
     விடமினும் பிறந்த ...... தெனவானோர் 
வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி
     விரைபதம் பணிந்து ...... முறையோவென் 
றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட
     உயர்தலங் குலுங்க ...... வருதோகை 
ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி
     உலகமும் புரந்த ...... பெருமாளே.
ரேகைகள் பரந்துள்ள இரண்டு கண்களும் சிவப்பாகி, முக வட்டம் சிறு வேர்வைத் துளிகளைக் கொண்டதாய், ரத்தினச் சிலம்பு ஒலிக்க, கூந்தலும் சரிந்து கலைய, தன் வசம் கெட்டு இழி நிலையை அடைந்து காமப் பித்து மிக, இரண்டு மார்பகங்களும் குலுங்கி அசைய, இடை நெகிழ்ந்து வருந்த, இனிமையான வாயூறலைப் பருகி, மாதர்களின் தோள்களை இன்பச் சுவையுடன் அணைந்து சேர்ந்து என் புத்தி கெட்டுப் போனாலும், தங்க மயமான உன்னுடைய திருவடிகளை நான் மறக்க மாட்டேன். விரிந்து பரந்து அசைகின்ற கடலும் கலக்கம் உற, ஆலகால விஷம் தான் மீண்டும் பிறந்து விட்டதோ என்று தேவர்கள் அச்சமுற்று உள்ளம் பயந்து, திண்மையும் குலைந்து, உனது நறு மணம் வீசும் திருவடிகளைப் பணிந்து வணங்கி, முறையோ என்று ஓலமிட்டு இன்னது சொல்லுவதென்று அறியாது சிந்தை வாடி நிற்க, வேலைச் செலுத்திய வீரனே, சிறந்த பூமிகள் எல்லாம் குலுங்கி அசையும்படியாக வந்த தோகை உடைய, ஒப்பற்ற பெரிய சிகண்டி என்னும் பெயரை உடைய மயில் மேல் வீற்றிருந்து விளங்கி, உலகத்தைக் காத்த பெருமாளே. 
பாடல் 1277 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தான தான, தனதன தான தான
     தனதன தான தான ...... தனதான
வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட
     வளர்முலை தானு மாட ...... வளையாட 
மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட
     மதுரமு தூறி வீழ ...... அநுராகம் 
இருவரு மேக போக மொருவர்த மாக மாக
     இதமொடு கூடி மாயை ...... படுபோதும் 
இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு
     மிருகழல் தானு நானு ...... மறவேனே 
திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி
     திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ் 
சிவைகயி லாச வாசி மலைமகள் நாரி பாரி
     திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா 
குருபர நாத னாகி யரனொரு காதி லோது
     குணநிதி யாசை நேச ...... முருகோனே 
குறமக ளார பார முகிழ்முலை மீது தாது
     குலவிய மாலை மேவு ...... பெருமாளே.
ரேகைகளைக் கொண்ட கண்கள் காமப் போரை விளைவிக்க, இரண்டு குண்டலங்களும் ஊஞ்சல் ஆடுவது போல் ஆட, எழுந்தோங்கு மார்பகங்களும் ஆட, வளையல்கள் ஆட, ரத்தின சரங்களாகிய மாலைகள் ஆட, நறுமணம் வீசிக் கமழும் கூந்தல் ஆடி அலைய, இனிமையான அமுதம் ஊறுகின்ற மொழிகள் சிதறி வெளிவர, காமப் பற்றுடன் ஆணும் பெண்ணுமாகிய இருவரும் ஒன்றாய்க் கலத்தலில் இருவர் உடல்களும் ஓருடலாக, இவ்வாறு இன்ப சுகத்துடன் கூடிப் புணர்ந்து உலக மாயையில் நான் அகப்பட்டிருக்கும் போதும், பெருமை பொருந்திய உனது பன்னிரண்டு கைகளும், ஆறு திரு முகங்களும், கடப்ப மாலை அணிந்துள்ள மார்பும், இரண்டு திருவடிகளும் நான் மறக்க மாட்டேன். திருநடனம் ஆடுகின்ற காளி, பைரவி, துர்க்கை, சூலம் ஏந்தியவள், திரிபுரங்களையும் சாம்பல் ஆகும்படி நெருப்பை வீசித் தாக்கிய சிவாம்பிகை, கைலாயத்தில் வாழ்பவள், இமயமலையின் குமாரி, நா¡£மணியாகிய பெரியவள், திருமுலைப் பால் தந்த தாய் பார்வதி பெற்றருளிய குழந்தையே, குருபர மூர்த்தியாய் சிவபெருமானது செவியில் பிரணவத்தை உபதேசம் செய்த குணச் செல்வனே, அன்பும் நண்பும் மிகக் கொண்ட முருகவேளே, குறமகளாகிய வள்ளியின் முத்துமாலை அணிந்ததும், பாரமானதும், வெளித் தோன்றுவதுமான மார்பகங்களின் மேல், மகரந்தப் பொடி படியும் உனது மாலைகள் பொருந்தப் பெற்ற பெருமாளே. 
பாடல் 1278 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆனந்த பைரவி 
தாளம் - சதுஸ்ர மட்யம் - கண்டநடை - 25
தனதனன தனதனன தனதனன தனதனன
     தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான
விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய
     வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும் 
விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி
     சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டா£கச் 
சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி
     சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந் 
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக
     சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ 
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை
     யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்பன் 
னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்
     ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும் 
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு
     முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும் 
முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு
     முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் ...... தம்பிரானே.
தம்மீது ஆசை கொண்ட மனிதர்களையும், முனிவர்களையும் கூட, அவர்களுடைய உயிரே அறுபடும்படி இரக்கமின்றி வெட்டிப் பிளந்து, மனத்தையும் பறித்துப் பிடுங்குகின்ற சிவந்த கண்களாகிய வேலும், நறு மணம் கொண்டுள்ள, மேகம் போல் கரிய கூந்தலும், புன் சிரிப்பும், கஸ்தூரி அணிந்த பெருத்த, அதிசயிக்கத் தக்க மார்பகங்களும், இனிக்கும் குரலும், தாமரை போன்ற குழிந்துள்ள கொப்பூழ்த் தடமும், இடுப்பும், இவை எல்லாம் கொண்டு அழகு நிறைந்த விலைமாதர்கள் தருகின்ற புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரிந்து, இந்த விதமாகத் தடை படுகின்ற கொடுமையான இடர் நிறைந்த வாழ்க்கையும், முடிவே இல்லாத பிறப்புக்களும் என்னை விட்டு நீங்க, ஒப்பற்ற மெளுனமாகிய, மேலான சுகமான, பரிசுத்தமான பெரிய திருவடி எனக்குக் கிடைக்குமாறு நீ அன்புடன் நினைக்கக் கூடாதோ? எழுத முடியாத எழிலுடைய ஆறு திரு முகங்களும், அழகிய நெற்றியும், வைரம் மத்தியில் பொதிக்கப்பட்டு அமைந்துள்ள செவ்விய சுட்டி முதலிய அணிகலன்களும், பரிசுத்தமான, நீண்ட பன்னிரண்டு கருணை பொழியும் கண் மலர்களும், விளங்கும் பன்னிரண்டு குண்டலங்களும், ரத்னக் காதணியும், தாமரை போன்ற கைகளும், செம்பொன்னால் ஆகிய பூணூலும், சொல்லிப் புகழத் தக்க உடை மணியும், அரையில் கட்டிய நாணும், இரு திருவடிகளும், முத்தாலான கிண்கிணியும், அழகிய மயிலும், திருக் கரத்தில் வேலாயுதமும், (இவ்வாறு) முழுதும் அழகு மயமாக உள்ள குமரனே, இமய மலையின் மகளாகிய பார்வதிக்காக மனம் நெகிழ்ந்த முக்கண்ணனாகிய சிவ பெருமான் பெற்ற நற்குணம் பொருந்திய பிள்ளையே, தேவர்களின் தம்பிரானே. 
பாடல் 1279 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானதன தாத்த தானதன தாத்த
     தானதன தாத்த ...... தனதான
வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு
     வீரமுனை யீட்டி ...... விழியார்தம் 
வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்
     வீழுமயல் தீட்டி ...... யுழலாதே 
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
     யாவலுட னீட்டி ...... யழியாதே 
ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி
     யானநிலை காட்டி ...... யருள்வாயே 
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
     கேள்சுருதி நாட்டி ...... லுறைவோனே 
கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு
     கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே 
சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி
     சீதவிரு கோட்டி ...... லணைவோனே 
சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி
     தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.
வீணையில் இசையைப் பிறப்பித்து, ஆலகால விஷம் தாக்குதலைச் செய்யும் வீரத்தையும், கூர்மையையும் கொண்ட ஈட்டி போன்ற கண்களை உடைய விலைமாதர்களால் ஏற்படும் வேதனையில் கவனம் வைத்தவனாய், துன்பக் குழியில் விழுவதான காம மோகம் கூராகி மிகுந்து நான் திரியாமல், (தங்குவதற்கு) ஆதாரமாய் உள்ள வீட்டை விரும்பி, பொன்னை ஆசையுடன் சேர்த்து இங்ஙனம் பொழுதைப் போக்கி அழிந்து போகாமல், உயிர் வாசம் செய்யும் கூடாகிய இந்த உடலில் ஞான மறைப் பொருள்களை உபதேசித்து, நன்மை தருவதான நிலையைக் காட்டி அருள்வாயாக. கிணறு போல ஆழமாக ஊறுகின்ற, விரும்பப்படுவதான, ஞான மார்க்கத்தை நாடுபவர்கள் ஆராய்கின்ற வேதத்தில் உறைபவனே, கீத இசையுடன் வேத மொழி போன்ற திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைச் சூட்டிய நக்கீரருடைய இயற்றமிழைக் கேட்டருளிய கருணையாளனே, ஆகாயம் வரை உயர்ந்துள்ள வள்ளி மலைக் காட்டில் வசிக்கின்ற வேடப் பெண்ணாகிய வள்ளியின் குளிர்ந்த மலை போன்ற மார்பகங்களை அணைபவனே, கோபக் குணம் உடைய அசுரர்களுடைய நாட்டில் நிரம்ப நெருப்பை மூளச்செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே. 
பாடல் 1280 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானனா தத்ததன தானனா தத்ததன
     தானனா தத்ததன ...... தனதான
வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்
     வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும் 
வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை
     யாடிமோ கித்திரியும் ...... வெகுரூப 
கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி
     காரமோ டத்தெளிய ...... அரிதான 
கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி
     கூடலா கப்பெருமை ...... தருவாயே 
வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ
     வாளிபோ டக்கருது ...... மநுராமன் 
வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை
     யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும் 
நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு
     நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே 
நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு
     நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே.
வேலாயுதத்தையும், வாளையும், கொடுமையான ஆலகால விஷத்தையும், மன்மதன் செலுத்துகின்ற பாணங்களையும் ஒப்பாகச் சொல்லக் கூடிய துன்பம் தருவதை நிலை நாட்டுகின்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆபத்தான சரசங்களில் விளையாடி, காமப் பற்று கொண்டு நிலை கெடுகின்ற பல வகையான ஆடம்பரங்களை விட்டு விட்டு, நல் வழிக்கு மாறி வரவும், குண வேறுபாடுகள் என்னை விட்டு நீங்கவும், தெளிந்து அறிவதற்கு அரிதானதும், எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததானதும், மேம்பட்டதானதும், ஞான மயமானதும் ஆன நெறி கூடும்படியான பெருமையைத் தந்து அருள்வாய். வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால், விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே, மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே, அன்பு கூடும்படி, மயில் போன்ற குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே. 
* இந்திராணி பாரிஜாதப் பூவை மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்கு (கண்ணனின் தேவிக்குக்) கொடுக்கத் தகாது என, சத்யபாமையின் வேண்டுகோளுக்கு இரங்கி கருடன் அச்செடியைப் பறித்து சத்யபாமையின் வீட்டில் நட்டார். இந்திரன் முதலான தேவர்கள் சினந்து கண்ணனோடு போர் செய்ய, கண்ணன் சங்க நாதம் ஊதித் தேவர்களை மயங்கி விழச் செய்தார்.
பாடல் 1281 - பொதுப்பாடல்கள் 
ராகம் - அஸாவேரி
தாளம் - ஆதி 
- எடுப்பு - 3/4 இடம்
தத்ததன தானத் ...... தனதான
இத்தரணி மீதிற் ...... பிறவாதே 
எத்தரொடு கூடிக் ...... கலவாதே 
முத்தமிழை யோதித் ...... தளராதே 
முத்தியடி யேனுக் ...... கருள்வாயே 
தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா 
சத்தசொரு பாபுத் ...... தமுதோனே 
நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே 
நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.
இந்தப் பூமியில் பிறக்காமலும், ஏமாற்றுபவர்களுடன் கூடிக் கலந்து கொள்ளாமலும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும், முக்திநிலையை எனக்குத் தந்தருள வேண்டுகிறேன். உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே, ஒலி (சப்தம்) வடிவிலே திகழ்பவனே, புதிய அமிர்தம் போன்றவனே, தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே, என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே, ஆடல் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே. 
பாடல் 1282 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பூர்வி கல்யாணி 
தாளம் - மிஸ்ர ஜம்பை - 10
தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான
என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி 
இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி 
அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான 
அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே 
முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி 
முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித் 
தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச் 
சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே.
என்னைச் சூழ்ந்து கட்டியுள்ள வினை எனப்படும் சங்கிலித் தொடரை அறுத்து யான் வெற்றி பெற்று, இன்ப நிலையை அடைந்து, நிரம்பப் பிரியம் கொண்டு, அன்பு பெருகிய நிலையிலே பொற்கிண்ணத்தில் உள்ள பாற்கடல் அமிர்தத்திற்கு நிகரான முடிவான பேரின்பப் பொருள் மீது ஆசையைக் கொள்கின்ற ஆதார நிலையை நீ தந்தருள்வாயாக. முன்பு, சூரனை அழிக்க மனத்தினில் எண்ணி, உருவத்தில் சிறியனாக, பால குமாரனாக, அவதரித்து, சூர சம்ஹார காலத்தில் திந்தி என்ற தாளத்தில் பரத சாஸ்திரப்படி துடி என்னும் கூத்தினை நடனமாடி*, தங்களது பாச பந்தம் அகல்வதற்காக தவநிலையில் இருப்பவர்களது குறைகள் நீங்க, திருஞானசம்பந்தனாக** அவதரித்து தமிழை நிரம்பப் பருகி தேவாரமாக உலகுக்குத் தந்த பெருமாளே. 
* முருகன் சிதம்பரத்தில் நடனமாடிய குறிப்பு பல திருப்புகழ்ப் பாடல்களில் வருகிறது.
** சைவக் குரவர் நால்வரில் ஒருவரான சம்பந்தர் முருகனின் அவதாரம் என்று சுவாமிகள் உறுதியாக நம்புகிறார்.
பாடல் 1283 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நடபைரவி 
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனத்தத் தானத் ...... தனதான
கருப்பற் றூறிப் ...... பிறவாதே 
கனக்கப் பாடுற் ...... றுழலாதே 
திருப்பொற் பாதத் ...... தநுபூதி 
சிறக்கப் பாலித் ...... தருள்வாயே 
பரப்பற் றாருக் ...... குரியோனே 
பரத்தப் பாலுக் ...... கணியோனே 
திருக்கைச் சேவற் ...... கொடியோனே 
செகத்திற் சோதிப் ...... பெருமாளே.
மீண்டும் கருவிலே பிறக்கவேண்டும் என்ற ஆசையில் ஊறி மறுபடி பிறக்காமலும், மிகவும் கஷ்டங்களை அடைந்து யான் அலைந்து திரியாமலும், உன் அழகிய திருவடிகளாம் முக்தி அனுபவத்தை யான் சிறக்கும்படியாக என்னை ஆசீர்வதித்து அருள்வாயாக. ஆசைப் பெருக்கு இல்லாதவர்களுக்கு உரிமையானவனே, மேலானதாய் யாவற்றையும் கடந்து நிற்கும் பொருளுக்கு அருகில் உள்ளவனே, திருக்கரத்தில் சேவற்கொடியை ஏந்தியவனே, இவ்வுலகில் ஜோதி ரூபமாக விளங்கும் பெருமாளே. 
பாடல் 1284 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆரபி 
தாளம் - சங்கீர்ண த்ருபுடை /9 0 0 
- எடுப்பு - 1 அக்ஷரம் தள்ளி
தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான
கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே 
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ...... ளுரையாதே 
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ...... ருதுநீயே 
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி ...... மகிழ்வோனே 
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச ...... மரவேளே 
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த ...... மயிலோனே 
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு ...... மிசையோனே 
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த ...... பெருமாளே.
கர்ப்பப் பையிலுள்ள சுக்கிலத்திலே (பெண் முட்டையிலே) அலைப்புண்டு மீண்டும் பிறந்து கலங்காமலும், வஞ்சனைமிக்க மூடர்களுக்கு இன்பம் தருவதான தமிழ்ப் பாடல்களைச் சொல்லாமலும், ஆசையுடன் துதித்து என்னைப் பற்றிக் கொள்வாயாக என்று என்னைக் குறித்து நீயே நினைக்க வேண்டுகிறேன். அடியார்களின் முன் வெளிப்படவும், அவர்களைக் கைவிடாது பற்றிக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் விருப்பத்துடன் வந்து மகிழ்ச்சி அடைபவனே, கிரெளஞ்சமலையைத் தொளைத்த சக்திவேலினை ஏந்திய போர்வீரனே, பாம்புக் கூட்டங்களை தனது பிளவுபட்ட பாதங்களுக்கு இடையே அகப்படுத்தியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போர்க்களத்தில் உன் கோபத்தை முற்றிலுமாக விரித்துக்காட்டிய புகழை உடையவனே, தினைப்புனத்திலே குறத்தி வள்ளியின் கையைப்பிடித்து பாணிக்கிரகணம் (திருமணம்) செய்து கொண்ட பெருமாளே. 
பாடல் 1285 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வாசஸ்பதி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன தானத் ...... தனதான
கொடியமத வேள்கைக் ...... கணையாலே 
குரைகணெடு நீலக் ...... கடலாலே 
நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே 
நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே 
கடியரவு பூணர்க் ...... கினியோனே 
கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே 
அடியவர்கள் நேசத் ...... துறைவேலா 
அறுமுகவி நோதப் ...... பெருமாளே.
கொடுமை செய்யும் மன்மதனுடைய கரத்திலிருந்து விடும் மலர் அம்புகளாலே, அலை ஓசை மிகுந்து ஆரவாரிக்கும் பெரிய நீலக் கடலினாலே, நீண்டுயர்ந்த சோலையில் பாடிப் புகழ் பெற்ற குயிலினாலே, (உன்னைப் பிரிந்து) தன்னிலைமை கெட்டு நிலைகுலையும் மானொத்த இப்பெண்ணைத் தழுவமாட்டாயா? கடிக்கும் பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவனாருக்கு இனியவனே, ஆய கலைகள் அனைத்தையும் தெரிந்த உண்மை வித்தகனே, உன் அடியார்களின் பக்தியில் வாழ்கின்ற வேலனே, ஆறுமுகனே, திருவிளையாடல்கள் பல புரிந்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், குயில், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 1286 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானான தானதனத் ...... தனதான
கோடான மேருமலைத் ...... தனமானார் 
கோமாள மானவலைக் ...... குழலாதே 
நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான் 
நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ 
ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே 
ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே 
மாடேறு மீசர்தமக் ...... கினியோனே 
மாதானை யாறுமுகப் ...... பெருமாளே.
சிகரங்களைக் கொண்ட மேரு மலையை ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான வலைக்குள் பட்டுத் திரியாமல், நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக் கூடாதோ? நான் ஈடேறும்படி ஞானோபதேசம் செய்து அருளியவனே, பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே, ரிஷபத்தில் ஏறுகின்ற சிவபெருமானுக்கு இனியவனே, சிறந்த சேனைகளையும், ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே. 
பாடல் 1287 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சாரங்கா 
தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3
தனன தத்தன தாத்தன ...... தனதான
சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே 
சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி 
அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால் 
அருளெ னக்கினி மேற்றுணை ...... தருவாயே 
உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி 
உரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத் 
தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே 
சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே.
மதக் கொள்கையில் உள்ள பக்தி பயனற்றது என்று நினைக்காமல், உன் திருவடித் தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்பிய யான்மனம் பொருந்தி நிலைத்திருக்க, சற்குரு மூலமாகவும், சாஸ்திர மொழி நூல்கள் மூலமாகவும், நின்னருளை நீ எனக்கு இனிமேல் துணையாகத் தந்தருள்வாயாக. உமையின் முலை தந்தருளிய பாலை உண்டதன் காரணமாக சிவபிரானின் திருவருளை (தேவாரப் பதிகங்களில்) கூறுவதையே தனக்கு (திருஞானசம்பந்தருக்கு*) உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு, நல்ல உபதேசங்களைக் கொண்ட தமிழ் தன்னை கரை கண்ட பராக்கிரமசாலியே, சமணர்களை (வாதில் வென்று) கழுவேற்றிய பெருமாளே. 
* முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்ததாக அருணகிரிநாதர் பல இடங்களில் கூறியுள்ளார்.
பாடல் 1288 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனதன தாத்தனத் ...... தனதான
சருவிய சாத்திரத் ...... திரளான 
சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத 
அருமறை யாற்பெறற் ...... கரிதாய 
அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ 
நிருதரை மூக்கறுத் ...... தெழுபார 
நெடுதிரை யார்ப்பெழப் ...... பொருதோனே 
பொருளடி யாற்பெறக் ...... கவிபாடும் 
புலவரு சாத்துணைப் ...... பெருமாளே.
அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது. ஆறு என்று விளங்குகின்ற ஆதாரங்களில்* பொருந்தி அடங்காதது அது. அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது. இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா? அரக்கர்களை அவமானம் செய்து, ஏழு பெரிய கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போர் செய்தவனே, உண்மைப் பொருளை உன் திருவடித் துணையால் பெறுவதற்காக பாடல்களைப் பாடும் புலவர்களுக்கு உற்ற துணைவனான பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 1289 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தனத்தத் தானன ...... தனதான
சினத்துச் சீறிய ...... வழிகாணச் 
சிரித்துப் பேசியு ...... மயல்பூண 
கனத்துப் போர்செயு ...... முலைதோணக் 
கலைக்குட் பாதியு ...... மறைவாக 
மனத்துக் காறுதல் ...... வருமாறு 
மலைப்பப் பேணியு ...... மிகவாய 
தனத்தைச் சூறைகொள் ...... மடவார்தம் 
சதிக்குப் போம்வழி ...... தவிர்வேனோ 
தெனத்தத் தாதென ...... எனவேபண் 
திருத்தத் தோடளி ...... யிசைபாடும் 
புனத்துக் காவல்கொள் ...... குறமாதின் 
புணர்ச்சிக் கேயொரு ...... வழிதேடி 
இனத்துக் காவல ...... ரறியாமல் 
இணக்கித் தோகையை ...... மகிழ்வோயென் 
றெனக்குத் தாளிணை ...... யருள்வாய்சூர் 
இறக்கப் போர்செய்த ...... பெருமாளே.
சீறிக் கோபித்தும், (வசப்படுத்த) வழி ஏற்பட்டவுடன் சிரித்தும் பேசியும், காம ஆசை உண்டாகும்படியாக, பருத்து விளங்கி காமப் போர் செய்யும் மார்பகம் பாதி தெரியும்படியும், ஆடையுள் பாதி மறையும்படியும் நின்று, (வந்தவருடைய) மனதுக்கு ஒரு ஆறுதல் உண்டாகும் பொருட்டு அவர்கள் மலைந்து மயங்கும்படி உபசரித்தும், பின்பு, மிகுந்த பொருளைக் கொள்ளை அடிக்கின்ற விலைமாதர்களுடைய வஞ்சனைச் சூழ்ச்சியில் அகப்படும் தீய நெறியைத் தவிர்க்க மாட்டேனோ? தெனத்த தாதென என்னும் பண்களை திருத்தமான முறையில் வண்டுகள் இசை பாடுகின்ற தினைப் புனத்தைக் காவல் செய்துவந்த குறப்பெண்ணாகிய வள்ளியை அணைவதற்கே ஒரு வழியைத் தேடி, அந்தக் குறக் கூட்டத்துக் காவலர்களுக்குத் தெரியாமல் மயில் போன்ற வள்ளியை இணங்க வைத்து மகிழ்ந்தவனே, என்றைக்கு எனக்கு உன் திருவடியைத் தந்து அருள் செய்வாய்? இறுதியில் சூரன் மாளும்படியாகச் சண்டை செய்த பெருமாளே. 
பாடல் 1290 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானத் தானன ...... தந்ததான
தீதுற் றேயெழு ...... திங்களாலே 
தீயைத் தூவிய ...... தென்றலாலே 
போதுற் றாடும ...... நங்கனாலே 
போதப் பேதைந ...... லங்கலாமோ 
வேதத் தோனைமு ...... னிந்தகோவே 
வேடப் பாவைவி ...... ரும்புமார்பா 
ஓதச் சூதமெ ...... றிந்தவேலா 
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
இடையூறு செய்யவே எழுகின்ற சந்திரனாலும், நெருப்பை அள்ளி வீசுகின்ற தென்றல் காற்றாலும், தனது மலர்ப் பாணங்களைச் செலுத்தி விளையாடும் மன்மதனாலும், அறிவுள்ள என் பெண் துயர் உறலாமோ? வேத நாயகனாகிய பிரமனை கோபித்த தலைவனே, வேடுவர் மகளான வள்ளி விரும்புகின்ற திரு மார்பனே, கடலிடையே இருந்த மாமரத்தை (சூரபத்மனை) பிளந்தெறிந்த வேலாயுதனே, (வல்லவனாகிய உன் முன்னே) வாயில்லாத ஊமைகளாய் உள்ள தேவர்களின் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.நிலவு, தென்றல், மன்மதன், மலர்ப் பாணங்கள் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 1291 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸாநந்தி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3
தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே 
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே 
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே 
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே 
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே 
செய்யகும ரேசத் ...... திறலோனே 
வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே 
வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
செருக்குடன் வரும் மன்மத வேளின் கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும், நீண்ட துன்பத்தைத் தரும் நீலநிறக் கடலாலும், மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்) சோலையிலுள்ள குயிலினாலும், காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளை அணைத்துக் கொள்ள மாட்டாயா? இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே, செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற பராக்கிரமசாலியே, வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற ஞானத் திருவடிகளை உடையவனே, வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே. 
குறிப்பு: முருகனிடம் காதல் கொண்டு வாடும் மகளுக்காக தாய் பாடும் பாட்டு.மன்மதன், அம்புகள், கடல், குயில் ஆகியவை விரகத்தைத் தூண்டுபவை என்பது குறிப்பு.
பாடல் 1292 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானதனத் ...... தனதான
தேனியல்சொற் ...... கணிமாதர் 
சேவைதனைக் ...... கருதாதே 
யானெனதற் ...... றிடுபோதம் 
யானறிதற் ...... கருள்வாயே 
வானவருக் ...... கரசான 
வாசவனுக் ...... கினியோனே 
ஆனைமுகற் ...... கிளையோனே 
ஆறுமுகப் ...... பெருமாளே.
தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது, யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும் நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக. விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே, யானை முகமுடைய கணபதிக்குத் தம்பியே, ஆறு முகமுடைய பெருமாளே. 
பாடல் 1293 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -
தானதன தானனத் ...... தனதான
நாரியர்க ளாசையைக் ...... கருதாதே 
நானுனிரு பாதபத் ...... மமுநாட 
ஆரமுத மானசர்க் ...... கரைதேனே 
ஆனஅநு பூதியைத் ...... தருவாயே 
காரணம தானவுத் ...... தமசீலா 
கானகுற மாதினைப் ...... புணர்வோனே 
சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா 
தோகைமயில் வாகனப் ...... பெருமாளே.
பெண்கள் மீதுள்ள ஆசையை எண்ணாமல், நான் உனது இரண்டு தாமரைத் திருவடிகளை விரும்பித் தேட, நிறைந்த அமுதம் என்று சொல்லும்படி, சர்க்கரை, தேன் என்னும்படியான இனிய அனுபவ ஞானத்தைத் தருவாயாக. அனைத்துக்கும் காரணனாக (மூலப் பொருளாக) இருக்கும் உத்தம சீலனே, காட்டில் வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியை அணைந்தவனே, சூரனது சுற்றம் இறந்து தூளாகும்படி சண்டை செய்த வேலாயுதனே, அழகிய கலாபத்தை உடைய மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாளே. 
பாடல் 1294 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கமாஸ் 
தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தான தனத்த ...... தனதான
நாளு மிகுத்த ...... கசிவாகி
   ஞான நிருத்த ...... மதைநாடும்
      ஏழை தனக்கு ...... மநுபூதி
         ராசி தழைக்க ...... அருள்வாயே 
பூளை யெருக்கு ...... மதிநாக
   பூண ரளித்த ...... சிறியோனே
      வேளை தனக்கு ...... சிதமாக
         வேழ மழைத்த ...... பெருமாளே.
நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய், உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக. பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச் சந்திரன், பாம்பு ஆகியவற்றை சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் அளித்த குழந்தையே, உனக்கு வேண்டிய சமயத்தில்* சமயோசிதமாக யானையாகக் கணபதியை வரவழைத்த பெருமாளே. 
* வள்ளியை, யானையைக் காட்டி அச்சுறுத்தி, பின்பு ஆட்கொண்ட சாமர்த்தியம் கூறப்படுகிறது.
பாடல் 1295 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கந்தலவராளி 
தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமிதக-3
தத்தனத் தனனதத்த ...... தனதான
நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி
   நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக
      நத்தியு தமதவத்தி ...... னெறியாலே
         லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே 
வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள
   விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே
      குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே
         குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே.
தினமும் உன்னை மனத்தில் பொருத்தி நினைத்து மிகவும் விரும்பியும், தியானநிலை பெற்று வாழும் பெரியோரைத் துணையென்று அவர்களை நாடியும், சிறந்த நல்லொழுக்கத்தை நான் பற்றிய பயனாக இலக்கியத்தில் (பரத சாஸ்திரத்தில்) சொல்லியபடியும், நிருத்த இலக்கணப்படியும் உனது நிருத்த தரிசனத்தை* நீ எனக்கு அருள்வாயாக. வெற்றியும் பராக்கிரமும் கொண்டிருந்த அரக்கர் சுற்றத்தாருடன் இறக்கும்படிச் செய்த சக்ராயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனாகிய திருமாலுக்கு மருமகனே, குற்றம் இல்லாத பெரியோர்களின் மனத்தில் விளங்குபவனே, சேவற்கொடியை ஏந்திய பெருமாளே. 
* சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களில் நிருத்த தரிசனத்தில் முருகன் காட்சி தரவேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டிப் பாடியுள்ளார்.
பாடல் 1296 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சாரங்கா / குறிஞ்சி 
தாளம் - அங்கதாளம் - 8 கண்டநடை /5 யு 0 
லகு - தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தக-1, திமிதக-2
தானந்த தானத்தம் ...... தனதான
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
   நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
      மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
         மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே 
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
      நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
         நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.
நீல நிறத்தைக் கொண்ட மேகத்தைப் போன்ற மயில் மேலே நீ எழுந்தருளிவந்த புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால் உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே, வீரம் மிக்க சூரர்களின் குலத்துக்கே யமனாக விளங்கியவனே, ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக விளங்கியவனே, எல்லா உயிர்களுக்கு உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே. 
இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாட்டு.
பாடல் 1297 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கானடா 
தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7
தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும்
   பக்கத்து மாதர் ...... வசையாலும்
      சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
         துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் 
தட்டுப் படாத ...... திறல்வீரா
   தர்க்கித்த சூரர் ...... குலகாலா
      மட்டுப் படாத ...... மயிலோனே
         மற்றொப்பி லாத ...... பெருமாளே.
என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே. 
இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாட்டு.மன்மதன், மலர்க்கணை, மாதர்களின் வசை, நிலவு போன்றவை தலைவியின் காதலை வளர்ப்பன.
பாடல் 1298 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ராமப்பரியா 
தாளம் - திஸ்ர ஏகம் - 3
தனனத் தத்தன ...... தனதான
பரவைக் கெத்தனை ...... விசைதூது
   பகரற் குற்றவ ...... ரெனமாணுன்
      மரபுக் குச்சித ...... ப்ரபுவாக
         வரமெத் தத்தர ...... வருவாயே 
கரடக் கற்பக ...... னிளையோனே
   கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா
      அரனுக் குற்றது ...... புகல்வோனே
         அயனைக் குட்டிய ...... பெருமாளே.
(அடியார் சுந்தரருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது போய் சொல்வதற்கு உடன்பட்டவர் இவர் (அதாவது இந்த முருகனின் தந்தையாகிய சிவபிரான்) என்னும் புகழினைப் பெற்ற உனது குலத்துக்கு ஏற்ற தகுதியும் பெருமையும் கொண்ட பெரியோனாக நீயும் விளங்கி, வரங்களை எனக்கு நிரம்பத் தருவதற்காக இங்கு எழுந்தருளி வருவாயாக. மதம்பாயும் சுவட்டை உடைய யானை முகத்தவனும், கற்பக விருட்சம்போலக் கேட்டதை அளிக்கும் கணபதியின் தம்பியே, மான் போன்றும் வில் போன்றும் கண்களை உடைய குறமகள் வள்ளியின் கணவனே, சிவபிரானுக்கு அழிவில்லா உண்மைப் பொருளை உபதேசித்தவனே, பிரமனைக் கைகளால் குட்டின பெருமாளே. 
பாடல் 1299 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கல்யாணி 
தாளம் - அங்கதாளம் - 8 கண்டஜம்பை - 15யு 0 
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதனன தாத்தனத் ...... தனதான
பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே
   பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே
      உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே
         உனதுபத காட்சியைத் ...... தருவாயே 
அறுசமய சாத்திரப் ...... பொருளோனே
   அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே
      குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே
         குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே.
பிறவி என்ற அலைகள் வீசும் ஆற்றுவெள்ளத்தில் மீண்டும் புகாமல் இருக்க, இயற்கை செலுத்தும் வழியில் சென்று இஷ்டப்படி திரியாமல் இருக்க, உறுதியான குருவின் உபதேச மொழியின் உண்மைப் பொருளைத் தந்து, உனது திருவடிகளின் தரிசனத்தை அருள்வாயாக. ஆறு சமயங்களின்* சாத்திரங்களுடைய சாரமாய் நிற்பவனே, தம் அறிவிலே உன்னை அறிந்தவர்களுக்கு நற்குண சமுத்திரமானவனே, குறுமுனி அகத்தியர் புகழும் முத்தமிழ் வித்தகனே, குமர குருவே, கார்த்திகைப் பெண்களின் பெருமாளே. 
* ஆறு சமயங்கள் - காணாபத்யம், செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம்.
பாடல் 1300 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆபோகி 
தாளம் - அங்கதாளம் - 9 
தகிடதக-2 1/2, தகதமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான
புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது
   பொற்புறக் கூட்டிக் காட்டி ...... யருள்ஞான
      வித்தகப் பேற்றைத் தேற்றி ...... யருளாலே
         மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே 
தத்தைபுக் கோட்டிக் காட்டி ...... லுறைவாளைச்
   சற்கரித் தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே
      கைத்தலத் தீக்குப் பார்த்து ...... நுழையாத
         கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே.
புத்தகங்களிலும் ஏட்டிலும் எழுத முடியாத பொருளை, அழகு பொருந்தக் கூட்டுவித்துக் காட்டியும், அருள்மயமான ஞான நன்மைப் பாக்கியத்தை எனக்குத் தெளிய வைத்தும், உன் திருவருளால் பக்குவமாக எனக்கு அதைக் கூட்டிவைத்தும் என்னைப் பாதுகாக்க நீ நினைத்தருள வேண்டுகிறேன். கிளிகளை அவை தினைப்புனத்தில் இருக்கும் இடம் தேடிச் சென்று விரட்டி அந்தக் காட்டில் வசித்தவளாம் வள்ளியை உபசரித்து, பாராட்டி, பேரும் புகழும் பெற்றவனே, ஈக்கள், வண்டுகளின் கும்பல் ஆரவாரத்துடன் ஒலி செய்து உள்ளே புகமுடியாதபடி நெருக்கமான கற்பகத் தோட்டங்கள் நிறைந்த தேவலோகத்தைக் காத்த பெருமாளே.

பாடல் 1251 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனத்தன தனத்தன தனத்தன தனத்தன     தனத்தன தனத்தன ...... தனதான

துடித்தெதிர் வடித்தெழு குதர்க்கச மயத்தவர்     சுழற்கொரு கொடிக்கொடி ...... யெதிர்கூறித் 
துகைப்பன கிதத்தலை யறுப்பன யில்விட்டுடல்     துணிப்பன கணித்தலை ...... மிசைபார 
முடித்தலை விழுப்பன முழுக்கஅ டிமைப்பட     முறைப்படு மறைத்திர ...... ளறியாத 
முதற்பொருள் புலப்பட வுணர்த்துவ னெனக்கொரு     மொழிப்பொருள் பழிப்பற ...... அருள்வாயே 
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன     கொழுத்தகு ருதிக்கட ...... லிடையூடே 
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன     குவட்டினை யிடிப்பன ...... சிலபாடல் 
படிப்பன திருப்புக ழெடுப்பன முடிப்பன     பயிற்றிய லகைக்குலம் ...... விளையாடப் 
பகைத்தெழு மரக்கரை யிமைப்பொழு தினிற்பொடி     படப்பொரு துழக்கிய ...... பெருமாளே.

உடல் பதைத்து, எதிர் எதிரே கூர்மையுடன் எழுகின்ற, முறை கெட்ட தர்க்கம் செய்யும் சமயவாதிகளின் சுழல் போன்ற கூட்டத்துக்கு கோடிக் கணக்கில் எதிர் வாதம் பேசி, மிதித்து வருத்தமுறச் செய்யக் கூடிய தீமைகளின் அதிகார நிலையை அறுத்துத் தள்ளக் கூடியதும், வேலாயுதத்தைச் செலுத்தி (பகைவர்களின்) உடலைத் துண்டிக்க வல்லதும், நூல் வல்லவர்களின் தலை மீது உள்ள கர்வம் மிகுந்த தலைமுடியை விழுந்து போகும்படி செய்ய வல்லதும், யாவரும் அடிமைப்படும்படி ஒழுங்காக அமைந்துள்ள வேதக் குவியல்களெல்லாம் கண்டு உணராததுமான மூலப்பொருளை யாவருக்கும் தெரியும்படி தெளிவுடன் தெரிவிப்பேன். (ஆதலால்) நீ எனக்கு ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை யாரும் பழிக்காத முறையில் உபதேசித்து அருள்வாயாக. (போர்க்களத்தில் ரத்தத்தைக்) குடிப்பன ஆகவும், மொள்ளுவன ஆகவும், ஊறுவன ஆகவும், கூத்தாடுவன ஆகவும், செழிப்புற்றுக் குழம்பாக இருக்கும் ரத்தக் கடலுள் குதிப்பன ஆகவும், ரத்தக் கடலின் அளவை அளவிடுவன ஆகவும், அதில் குளிப்பன ஆகவும், அதைக் கண்டு மகிழ்வன ஆகவும், (அந்த மகிழ்ச்சியில்) மலைகளையும் இடிப்பன ஆகவும், சில பாடல்களை படிப்பன ஆகவும், (முருகன்) திருப்புகழை ஆரம்பித்து முடிப்பன ஆகவும், இத்தகைய நிகழ்ச்சிகளுடன் பேய்க் கூட்டங்கள் விளையாட, பகைத்து எழுந்த அசுரர்களை ஒரு நொடிப் பொழுதில் தூளாகும்படி போர் புரிந்து கொன்ற பெருமாளே. 
இப்பாடலின் கடைசி எட்டு வரிகள் போர்க்களத்தில் பேய்களின் நடனத்தை தாளத்துடன் வருணிக்கின்றன.

பாடல் 1252 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம்     தத்த தத்த தானனத் ...... தனதான

துத்தி நச்ச ராவிளம் பிச்சி நொச்சி கூவிளஞ்     சுக்கி லக்க லாமிர்தப் ...... பிறைசூதம் 
சுத்த ரத்த பாடலம் பொற்க டுக்கை யேடலஞ்     சுத்த சொற்ப கீரதித் ...... திரைநீலம் 
புத்தெ ருக்கு பாழிகங் கொத்தெ டுத்த தாளிதண்     பொற்பு மத்து வேணியர்க் ...... கருள்கூரும் 
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்     புற்பு தப்பி ராணனுக் ...... கருள்வாயே 
பத்தி யுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்     பக்க மிட்டு லாவியச் ...... சுரர்மாளப் 
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்     பத்ம சிட்ட னோடமுத் ...... தெறிமீனக் 
கைத்த லைப்ர வாகையுந் தத்த ளிக்க மாமுறிந்     துட்க முத்து வாரணச் ...... சதகோடி 
கைக்க ளிற்று வாரணம் புக்கொ ளிக்க வாரணங்     கைப்பி டித்த சேவகப் ...... பெருமாளே.

புள்ளிகளைக் கொண்டதும், விஷத்தை உடையதுமான பாம்பு, புதிய ஜாதி மல்லிகை மலர், நொச்சிப் பூ, வில்வம், வெண்ணிறம் உடையதாய் கலைகளைக் கொண்டதாய் உள்ள அமிர்த மயமான பிறைச் சந்திரன், மாந்தளிர், சுத்தமான ரத்தநிறப் பாதிரிப் பூ, பொன்னிறமான கொன்றை மலர், தேள், புகழை உடைய, அலைகள் வீசும் கங்கை நதி, நீலோற்பலம், புதிய எருக்க மலர், பெருமை பொருந்திய பிரம கபாலம், கொத்து கொத்தாயுள்ள அறுகம் புல், குளிர்ச்சியான அழகுள்ள ஊமத்தை, (இவைகளை அணிந்த) சடைப் பெருமானாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய, புத்தியும், அஷ்ட மா சித்திகளும்* வாய்ந்ததும், பெருமையும், சுத்தமும், உண்மையும் கொண்டதுமான உபதேச மொழியை, நீர்க்குமிழி போன்ற நிலையில்லாத உயிருள் ஒட்டியுள்ள அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவாயாக. வரிசையாய் அமைந்துள்ள தோகையை உடைய, அழகிய பச்சை நிறம் கொண்ட வெற்றி வாகனமாகிய மயிலின் பக்கத்தில் ஏறி உலாவி, அந்த அசுரர்கள் மாண்டு போகும்படிச் செய்து, அவர்களின் பிளவுபட்ட வாய்கள் மாமிசத்தைக் கக்கும்படி வெட்டி எறிந்து, அச்சத்தால் வாய்விட்டு அலறிய சூரபத்மனாகிய** மேலோனும் ஓட, முத்துக்களை அலைகளால் வீசுவதும், மிகுந்த மீன்களைத் தன்னிடம் கொண்ட பெருவெள்ளமாகிய கடலும் கொந்தளிக்க, மாமரமாக மறைந்து நின்ற சூரன் கிளைகள் முறிபட்டு அச்சம் உறவும், முத்துக்களை நல்கும் கணக்கற்ற சங்குகளும் துதிக்கையைக் கொண்ட (அஷ்ட திக்கு) யானைகளும் பயந்து ஒளிந்து கொள்ளவும், சேவற் கொடியைக் கையில் ஏந்திய, வல்லமை உடைய பெருமாளே. 
* அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
** பத்ம சிட்டன் = சூர பத்மன். சூரன் பகுதி ஆணவத்தைக் குறிக்கும். பத்மன் பகுதி அறிவைக் குறிக்கும்.போருக்குப் பின் ஆணவம் மயிலாயிற்று. பத்மப் பகுதி சேவலாகிக் கொடியாய் உயர்த்தப்பட்டது.

பாடல் 1253 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனன தத்த தய்ய தனன தத்த தய்ய     தனன தத்த தய்ய ...... தனதான

தெரிவை மக்கள் செல்வ முரிமை மிக்க வுண்மை     தெரிவ தற்கு உள்ள ...... முணராமுன் 
சினமி குத்த திண்ணர் தனிவ ளைத்து வெய்ய     சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன் 
பரவை புக்கு தொய்யு மரவ ணைக்குள் வைகு     பரம னுக்கு நல்ல ...... மருகோனே 
பழுதில் நிற்சொல் சொல்லி யெழுதி நித்த முண்மை     பகர்வ தற்கு நன்மை ...... தருவாயே 
இருகி ரிக்க ளுள்ள வரைத டிக்கு மின்னு     மிடியு மொய்த்த தென்ன ...... எழுசூரை 
எழுக டற்கு ளுள்ளு முழுகு வித்து விண்ணு     ளிமைய வர்க்கு வன்மை ...... தருவோனே 
அரிவை பக்க முய்ய வுருகி வைக்கு மைய     ரறிய மிக்க வுண்மை ...... யருள்வோனே 
அறிவி னுக்கு ளென்னை நெறியில் வைக்க வல்ல     அடிய வர்க்கு நல்ல ...... பெருமாளே.

மனைவி, பிள்ளைகள், செல்வம், இவற்றுக்கு உரிமையாக இருக்கும் தன்மை எவ்வளவு என்னும் பெரும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்று என் மனம் உணர்ந்து கொள்ளுவதற்கு முன்னே, (இளம் பருவத்தில் இருந்து) கோபம் மிகுந்த, வலிமை வாய்ந்த ஐம்புலன்களும் என்னைத் தனிப்பட வளைப்பதனால், கொடிய துன்பக் குழப்பங்கள் அழுந்தப் பொருந்த, என் வலிமை அழிவு படுவதற்கு முன்னர், திருப்பாற் கடலில் புகுந்து துவட்சி உறும் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்கும் மேலானவனாகிய திருமாலுக்கு நல்ல மருகனே, குற்றம் என்பதே இல்லாத உன் திருப்புகழ்ச் சொற்களைச் சொல்லுதற்கும், எழுதுவதற்கும், நாள்தோறும் உண்மையைப் பேசுவதற்கும் வேண்டிய நற்குணத்தைத் தந்து அருளுக. கிரெளஞ்சம், எழு கிரி என்ற இரண்டு மலைகளுக்குள் வாசம் செய்த அசுரர்களையும், மிக்கு எழும் மின்னலும் இடியும் நெருங்கி வருவது போல் போருக்கு எழுந்து வந்த சூரனையும், ஏழு கடல்களிலும் முழுகும்படித் தள்ளி, விண்ணுலகத்தில் உள்ள தேவர்களுக்கு வலிமையைத் தந்தவனே, (பார்வதி என்னும்) அரிவையை, உலகம் உய்ய, அவளுடைய தவத்துக்கு இரங்கி, தமது இடது பக்கத்தில் வைத்துள்ள தலைவரான சிவபெருமான் அறியும்படி சிறப்புற்ற பிரணவத்தின் உண்மைப் பொருளை அவருக்கு உபதேசித்தவனே, என்னை ஞான நிலையில் ஒழுங்கான நிலையில் வைக்க வல்லவனும், அடியவர்களுக்கு நல்லவனும் ஆகிய பெருமாளே. 

பாடல் 1254 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தந்தன தந்த தந்தன தந்த     தந்தன தந்த ...... தனதான

தென்றலு மன்றி யின்றலை பொங்கு     திண்கட லொன்று ...... மிகமோதச் 
செந்தழ லென்று வெந்தழல் சிந்து     திங்களும் வந்து ...... துணையேய 
அன்றிலு மன்றி துன்றுச ரங்க     ளைந்துமெ னெஞ்ச ...... மழியாதே 
அந்தியி லென்றன் வெந்துய ரஞ்ச     அன்பொட லங்கல் ...... தரவேணும் 
வென்றிவி ளங்கு குன்றவர் வஞ்சி     விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா 
வெண்டர ளங்கள் தண்டைச தங்கை     மின்கொடி லங்கு ...... கழலோனே 
கொன்றைய ணிந்த சங்கர ரன்று     கும்பிட வந்த ...... குமரேசா 
குன்றிட அண்ட ரன்றுய வென்று     குன்றமெ றிந்த ...... பெருமாளே.

தென்றல் காற்று மட்டுமன்றி, இன்றைய தினத்தில் அலை பொங்கி வலிய கடல் ஒன்றும் மிகப் பலமாக என்னைத் தாக்க, பொங்கி எழும் நெருப்பு என்று சொல்லும்படி கொடிய கனலைத் தூவுகின்ற சந்திரனும் வந்து (அவைகளுக்குத்) துணையாகப் பொருந்த, அன்றில் பறவையும், அதனுடன் நெருங்கி வந்த (மன்மதனின்) ஐந்து மலர்ப் பாணங்களும் என்னுடைய உள்ளத்தை அழித்து விடாமல், அந்திப் பொழுதில் வந்து, என்னுடைய கொடிய துயர் அஞ்சி நீங்க அன்புடன் உன் மாலையைத் தந்து அருள வேண்டும். வெற்றி விளங்கும் வேடர்களின் பெண்ணாகிய வள்ளியின் மேலோங்கு மார்பகங்களை அணைந்த மார்பனே, வெண்மையான முத்துக்களால் ஆன தண்டையும், சதங்கையும் மின்னலைப்போல் ஒளி வீசும் கழலை உடையவனே, கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் அன்று உன்னை வணங்க, அவருக்கு உபதேசம் செய்ய வந்த குமரேசனே, மனம் வேதனையால் குன்றி இருந்த தேவர்கள் அன்று பிழைக்கும்படி வெற்றி பெற்று, கிரெளஞ்ச மலையைப் பிளந்தெறிந்த பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக பாவிப்பதாக அமைந்தது.தென்றல், அலைகடல், நிலவு, மன்மதன், மலர்ப் பாணங்கள், அன்றில் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 1255 - பொதுப்பாடல்கள் 
ராகம் - மோஹனம் தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2

தானன தனன தானன தனன     தானன தனன ...... தனதான

தோரண கனக வாசலில் முழவு     தோல்முர சதிர ...... முதிராத 
தோகையர் கவரி வீசவ யிரியர்     தோள்வலி புகழ ...... மதகோப 
வாரண ரதப தாகினி துரக     மாதிர நிறைய ...... அரசாகி 
வாழினும் வறுமை கூரினு நினது     வார்கழ லொழிய ...... மொழியேனே 
பூரண புவன காரண சவரி     பூதர புளக ...... தனபார 
பூஷண நிருதர் தூஷண விபுதர்     பூபதி நகரி ...... குடியேற 
ஆரண வனச ஈரிரு குடுமி     ஆரியன் வெருவ ...... மயிலேறு 
மாரிய பரம ஞானமு மழகு     மாண்மையு முடைய ...... பெருமாளே.

தோரணங்கள் கட்டிய அழகிய அரண்மனை வாசலில், முழவு, தோல் முரசு முதலிய வாத்தியம் ஒலிக்க, இளம்பருவப் பெண்கள் சாமரம் வீச, புகழ்ந்து பாடும் பாடகர்கள் என் புஜ பராக்ரமத்தைப் புகழ, மதமும் கோபமும் கொண்ட யானைகள், தேர்கள், காலாட்படைகள், குதிரைகள் திசை நிரம்பி விளங்க, நான் ஓர் அரசனாகி வாழ்ந்தாலும் சரி, வறுமை நிலை மிகுந்து பாடுபட்டாலும் சரி, உனது திவ்யமான திருவடிகளைத் தவிர வேறு எதையும், வேறு யாரையும் புகழ மாட்டேன். முழு முதற் கடவுளே, உலகங்களுக்கு மூலாதார மூர்த்தியே, குறப்பெண் வள்ளியின் மலையைப் போன்ற பெரிய இனிய மார்பகங்களை அணிந்த மார்பனே, அசுரர்களை நிந்தித்துக் கண்டிப்பவனே, தேவர்களின் தலைவனான இந்திரன் அமரலோகத்தில் மீண்டும் குடியேறும்படியும், வேதம் ஓதுபவனும், தாமரையில் அமர்ந்தவனும், நான்கு குடுமிகளை உடையவனும் ஆகிய பெரியோனாம் பிரமன் அச்சம் கொள்ளும்படியாகவும், மயில் மீது ஏறிவரும் பெரியவனே, மேலான ஞானத்தையும், அழகையும், பராக்ரமத்தையும் உடைய பெருமாளே. 

பாடல் 1256 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தனா தனத்த தத்தனா தனத்த     தத்தனா தனத்த ...... தனதான

நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை     நத்துவார் சுகத்தில் ...... நலமாக 
நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்து     நத்துவாழ் கடற்கு ...... ளணைபோலே 
கச்சமே செலுத்தி யச்சமே படுத்து     கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான் 
கற்றநூ லுகக்க வெட்கமே செறித்த     கட்டனே னினைப்ப ...... தொருநாளே 
இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்கு     மிட்டமா லவற்கு ...... மருகோனே 
எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை     யெக்கிநேர் மடித்த ...... இளையோனே 
மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி     மிக்கவாள் படைத்த ...... விழியாலே 
வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்க     வெற்றிவே லெடுத்த ...... பெருமாளே.

விஷம், வாள் (இவைகளை) ஒத்த கண்களைக் கொண்டு (ஆடவர்களைத்) தாக்கியே, பொருளை விரும்புவர்களாகிய விலைமாதர்களின் காம போகத்தில் இன்பம் பெற, புதைக்கப்பட்ட சிறந்த மனத்தை விருப்பத்துடன் கொடுத்து, சங்குகள் வாழ்கின்ற கடலிலே அணையிட்டது போல, ஒப்பந்தம் செய்த வகையில் (மனத்தைப்) போக விட்டு, பயத்தையே உண்டு பண்ணுகின்ற, கஷ்டமான ஏழு பிறப்புக்களையும் விட்டுத் தாண்டுவதற்கு, கற்ற சிவ நூல்களில் மகிழ்ச்சி கொள்ள வெட்கமே நிறைந்துள்ள, துன்பங்கள் பீடித்த நான் உன்னை நினைப்பதாகிய ஒரு நாள் வருமோ? (வாமனராக வந்து) தமது விருப்பத்தைக் கூறி, (மகாபலி சக்ரவர்த்திக்கு அவனுடைய) தலையில் தமது பாதத்தை வைத்த திருமாலுக்கு மருகனே, அலை வீசும் கடலுக்குள் பரந்து நீண்டிருந்த (சூரனின்) எழு கிரியை வேலால் ஊடுருவச் செலுத்தி நன்கு அழித்த இளையவனே, புகழும்படியாக பருத்து எழுந்துள்ள, முத்து மாலை நிறைந்த, மார்பினள், கூர் மிகுந்த வாளாயுதத்தைப் போன்ற தன் கண்களைக் கொண்டு, (உயிர்களின் வினையை) வெட்ட வல்ல சிறந்த வேடுவச்சி ஆகிய வள்ளி கூடவே இருக்க, வெற்றி வேலைத் திருக்கையில் ஏந்திய பெருமாளே. 

பாடல் 1257 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த     தத்ததன தான தத்த ...... தனதான

நற்குணமு ளார்த மைப்பொல் மைக்குழலி லேசி றக்க     நற்பரிம ளாதி துற்ற ...... மலர்சூடி 
நச்சுவிழி யால்ம யக்கி யிச்சைபல பேசி யுற்று     நற்பொருள வாம னத்தர் ...... வசமாகி 
வெற்பனைய மாத னத்தை பொற்புறவு றாவ ணைத்து     மெத்தமய லாகி நித்த ...... மெலியாதே 
வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம     மெய்க்கிருபை நீய ளிப்ப ...... தொருநாளே 
ரத்தினப ணாநி ருத்தன் மெய்ச்சுதனு நாடு மிக்க     லக்ஷணகு மார சுப்ர ...... மணியோனே 
நற்றிசையு மேறி யிட்ட பொய்ச்சமணை வேர றுத்து     நற்றிருநி றேப ரப்பி ...... விளையாடும் 
சற்சனகு மார வ்ருத்தி அற்புதசி வாய னுக்கொர்     சற்குருவி நோத சித்ர ...... மயில்வீரா 
சக்ரதரன் மார்ப கத்தி லுக்ரமுட னேத ரித்த     சத்தியடை யாள மிட்ட ...... பெருமாளே.

நல்ல குணம் படைத்தவர்களைப் போல, கரிய கூந்தலில் அழகு விளங்கும்படி நல்ல வாசனைத் திரவியங்கள் முதலியவற்றைத் தூவி நெருங்கி நிறைந்த மலர்களை முடித்துக் கொண்டு, விஷம் தோய்ந்த கண்களால் (ஆடவர்களை) மயக்குவித்து, காம இச்சை ஊட்டும் இனிய மொழிகளைப் பேசிக் கொண்டிருந்து, விலை உயர்ந்த பொருளைப் பெற ஆசைப்படும் மனத்தைக் கொண்ட விலைமாதர்களின் வசப்பட்டு, மலை போன்ற பெரிய மார்பகங்களை அழகு பெற உற்று அடைந்து, அணைத்து மிகவும் மோகம் கொண்டு நாள் தோறும் (நான்) மெலிந்து போகாமல், வெட்சி மலர், நறு மணம் வீசும் கடப்ப மலர் (இவைகளைக் கொண்டதும்) வெற்றியைத் தருவதுமான சிறிய திருவடித் தாமரையைக் கொண்டவனே, உண்மையான திருவருளை நீ கொடுத்து அருளுகின்ற ஒரு நாள் கிட்டுமோ? ரத்தினங்கள் கொண்ட படங்களை உடைய (காளிங்கன் என்னும்) பாம்பின் மேல் நடனம் செய்தவனாகிய கண்ணனின் (திருமாலின்) உண்மைக் குமாரனான மன்மதனும் விரும்பும்படியான மிகுந்த அழகைக் கொண்ட குமார சுவாமியாகிய சுப்ரமணியனே, நான்கு திக்குகளிலும் பரவி இருந்த பொய்யராகிய சமணர்களை வேரோடு அறுத்து எறிந்து சிறந்த திரு நீற்றைப் பரப்பி விளையாடிய (திருஞானசம்பந்தன் என்னும்) நல்லவனே, குமார வேளே, செல்வப் பொருள் அற்புத மூர்த்தி சிவாய என்னும் ஐந்தெழுத்தின் மூலப் பொருள் (ஆகிய சிவ பெருமானுக்கு) ஒப்பற்ற குரு நாதனே, விநோதமான அழகு கொண்ட மயில் மீதமர்ந்த வீரனே, (திருமாலின்) சக்கரத்தைத் தரித்திருந்த தாரகாசுரனுடைய மார்பில், வலிமையுடன் நீ ஏந்தியுள்ள சக்தி வேலைக் கொண்டு அடையாளம் இட்ட பெருமாளே. 

பாடல் 1258 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த     தானாந்த தானந் தாத்த ...... தனதான

நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி     நாமேந்து பாலங் காட்டி ...... யபிராம 
நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி     நாயேன்ப்ர காசங் காட்டி ...... மடலூர 
மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி     மீதூர்ந்த போகங் காட்டி ...... யுயி¡£ர்வார் 
மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்த காரந் தீர்க்க     வேதாந்த தீபங் காட்டி ...... யருள்வாயே 
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி     யேடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி 
ஏறோங்க லேழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி     யார்வேண்டி னாலுங் கேட்ட ...... பொருளீயும் 
த்யாகாங்க சீலம் போற்றி வாயோய்ந்தி டாதன் றார்த்து     தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச் 
சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த     தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே.

பாம்பு போன்ற அங்கமாகிய பெண்குறியின் ரோமத்தைக் காட்டி, கச்சு அணிந்த மலை போன்ற மார்பகங்களைக் காட்டி, புகழத் தக்க நெற்றியைக் காட்டி, அழகிய பலவிதமான வாசனை மிக்க திரவியங்களைக் காட்டி, தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட நீலோற்பல மலர் போன்ற கண்களைக் காட்டி, அடியேன் என் மோகத்தை வெளிப் படுத்தி மடல் ஏறும்படி* மேகம் போல் கருமையான கூந்தலைக் காட்டி, ஆம்பல் போன்ற வாயின் நறுமணத்தைக் காட்டி, மேலே படுத்து அனுபவிக்கும் போக சுகத்தைக் காட்டி, உயிரை வாங்குபவர்களான விலைமாதர்களின் மேலே விழுந்து புணரும் துஷ்டனாகிய என்னுடைய காம மயக்கம் என்னும் இருளை ஒழிக்க, வேதத்தின் முடிவாகிய உண்மைப் பொருளைக் காட்டி எனக்கு அருள் புரிவாயாக. இணை இல்லாத உனது வீரத்தை போற்றுகின்றேன். நீல நிற அங்கத்தை உடைய (உனது) விமானமாகிய மயிலைப் போற்றுகின்றேன். மலர்கள் நிறைந்த கடப்ப மாலையைப் போற்றுகின்றேன். மேகங்கள் தாவி மேலேறிப் படியும் (சூரனது) ஏழு மலைகளையும் தொலைத்த உனது பன்னிரு புயங்களையும் போற்றுகின்றேன். யார் வேண்டிக் கொண்டாலும் கேட்ட வரத்தைக் கொடுத்தருளும் கொடைப் பெருமை கொண்ட உனது அலங்கார குணத்தைப் போற்றுகின்றேன். வாய் ஓயாமல் முன்பு கூச்சலிட்டவனும், பத்து உறுப்புக்களை உடையவனுமாகிய சூரன் தோற்றுப்போக, மயிலின் மீது ஏறி சேவற் கொடியைக் கையில் ஏந்தி, நாட்டில் உள்ளவர்கள் காணும்படி வேலாயுதத்தைத் தாங்கி, நட்சத்திரங்கள் விளங்கி நின்ற தேவர்களின் விண்ணுலகத்தைக் காப்பாற்றிய பெருமாளே. 
* மடல் எழுதுதல் .. தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** தேசாங்க சூரன் = தசாங்க சூரன். அவனுடைய பத்து அங்கங்களாவன .. நாமம், நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி.

பாடல் 1259 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தனதனத் தனதன தனதனத்     தனதன தனதனத் ...... தனதான

பரிமள மலரடுத் தகில்மண முழுகிமைப்     பரவிய ம்ருகமதக் ...... குழல்மானார் 
பருமணி வயிரமுத் திலகிய குழையினிற்     படைபொரு வனவிழிக் ...... கயலாலே 
எரியுறு மெழுகெனத் தனிமன மடையநெக்     கினிமையோ டுருகவிட் ...... டவமேயான் 
இருவினை நலியமெய்த் திறலுட னறிவுகெட்     டிடர்படு வதுகெடுத் ...... தருள்வாயே 
சொரிமத அருவிவிட் டொழுகிய புகர்முகத்     தொளைபடு கரமலைக் ...... கிளையோனே 
துடியிடை யொருகுறக் குலமயில் புளகிதத்     துணைமுலை தழுவுபொற் ...... புயவீரா 
அரியன பலவிதத் தொடுதிமி லையுமுடுக்     கையுமொகு மொகுவெனச் ...... சதகோடி 
அலகையு முடனடித் திடவடி யயிலெடுத்     தமர்செயு மறுமுகப் ...... பெருமாளே.

நறு மணம் உள்ள மலர்கள் வைக்கப் பெற்றதாய், அகிலின் நறு மணத்தில் முழுகியதாய், கருநிறம் பரந்துள்ளதாய், கஸ்தூரி அணிந்துள்ள கூந்தலை உடைய மாதர்களின் பருத்த ரத்தினங்கள், வைரம், முத்து (இவை) விளங்கும் காதணியின் மீது போர் புரிவது போல் (நீண்டு பாயும்) கயல் மீன் போன்ற கண்ணாலே, நெருப்பில் இடப்பட்ட மெழுகைப் போல் துணையின்றி நிற்கும் என் மனம் நன்று நெகிழ்ந்து, அந்தச் சிற்றின்பத்தில் உருகும்படி விட்டு, வீணிலே நான் இரண்டு வினைகளும் என்னை வாட்ட, உண்மை வலிமையுடன் அறிவும் கெட்டுப்போய் வேதனைப்படுவதை ஒழித்து அருள் புரிவாயாக. சொரிகின்ற மத நீரை அருவி போல் ஒழுக்கெடுக்கும் புள்ளி கொண்ட முகமும், தொளை கொண்ட துதிக்கையையும் உடைய யானையாகிய கணபதிக்குத் தம்பியே, உடுக்கை போன்ற இடையை உடைய, ஒப்பற்ற குறக்குலத்து மயில் போன்ற வள்ளியின் புளகாங்கிதம் கொண்ட இரண்டு மார்பகங்களையும் தழுவும் அழகிய புயங்களை உடைய வீரனே, அருமையான பல வகைப்பட்ட திமிலை என்ற பறை வகைகளும், உடுக்கை வாத்தியமும் மொகு மொகு என்று ஒலிக்கவும், நூற்றுக் கணக்கான பேய்களும் கூடவே நடனமாட, கூர்மையான வேலாயுதத்தை எடுத்து போர் செய்கின்ற, ஆறு திரு முகங்களை உடைய, பெருமாளே. 

பாடல் 1260 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத்     தத்தனத் தத்தனத் ...... தனதான

பற்றநெட் டைப்படைத் துட்டிருட் டைத்தயிர்ப்     பத்தைமுட் டிப்படுத் ...... தயில்மாதர் 
பக்கமிட் டுப்பொருட் கொட்குமிட் டப்பரப்     பற்றுகெட் டுப்பயிர்க் ...... களைபோலுங் 
கற்றகட் டுக்கவிக் கொட்டமொட் டிக்கனைத்     திட்டுகத் தத்தினுற் ...... றகமாயுங் 
கட்டமற் றுக்கழற் பற்றிமுத் திக்கருத்     தொக்கநொக் குக்கணித் ...... தருள்வாயே 
வற்றவட் டக்கடற் கிட்டிவட் டித்துரத்     திட்டுமட் டுப்படப் ...... பொருமாயன் 
மற்றுமொப் புத்தரித் தெட்டஎட் டப்புறத்     துற்றஅத் தர்க்கருட் ...... பெருவாழ்வே 
செற்றமுற் றச்சினத் திட்டுநெட் டைப்பொருப்     பெட்டைமுட் டிச்செருச் ...... செயும்வேலா 
சித்தர்சித் தத்துறப் பற்றிமெத் தப்புகழ்ச்     செப்புமுத் தித்தமிழ்ப் ...... பெருமாளே.

செருக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, மனம் உட்கொண்டுள்ள அஞ்ஞான இருள் நன்கு பதிந்து, சந்தேகக் கவலைகளைக் கொண்டு, முஷ்டி யுத்தத்தில் தாக்குவது போல் தாக்குகின்ற, வேல் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மீது நட்பு வைத்து, அவர்களுக்குப் பொருள் கொண்டு வந்து திரட்ட, பரம் பொருளின் மேல் இருக்க வேண்டிய பற்றே இல்லாது போய், பயிரில் இருந்து பிடுங்கி எடுக்க வேண்டிய களைகளைப் போன்ற, (நான்) கற்றுள்ளதும், (நான்) கட்டியுள்ளதுமான பாடல்களை முழக்கத்துடன் சேர்த்து, ஒரு கனைப்பு கனைத்து (அவர்கள் முன்) உரக்கக் கத்திப் பாடி, உள்ளம் சோர்ந்து குலைகின்ற துன்பம் நீங்கி, உனது திருவடிகளைப் பற்றி முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் கூடிட, என்னைக் கடைக் கண்ணால் நோக்கி அருள் புரிவாயாக. வட்ட வடிவமான கடல் வற்றிப் போக அணுகிச் சென்று, அசுரர்கள் சுழன்று உருண்டு ஓடும்படி துரத்தி, அவர்கள் சிறுமைப்படும்படி சண்டை செய்த திருமால், பின்னும், நமக்கு இணையானது என்று மனதில் நினைத்து எட்டி எட்டிப் பார்த்தும் (பன்றி உருவுடன் பாதாளம் வரை சென்று பார்த்தும்) (தோண்டப்பட்ட அளவுக்கும்) அப்பால் போய்க் கொண்டிருந்த திருவடிகளை உடைய தந்தையாகிய சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய பெருஞ் செல்வமே, வெறுப்பு முதிர்ச்சி அடைய கோபித்து, நீண்டிருந்த எட்டு மலைகளில் வசித்திருந்த அசுரர்களை முட்டித் தாக்கி போர் புரிந்த வேலினை உடையவனே, சித்தர்கள் தமது மனத்தில் ஆழ்ந்து நிலைக்கும்படி நிரம்ப உனது புகழைப் பாட, முக்தியைத் தர வல்ல பெருமாளே, தமிழ்க் கடவுளாகிய பெருமாளே. 

பாடல் 1261 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானன தான தாத்த தானன தான தாத்த     தானன தான தாத்த ...... தனதான

பாதக மான யாக்கை வாதுசெய் பாவி கோத்த     பாணமும் வாளு மேற்ற ...... இருபார்வை 
பாரப டீர மாப்ப யோதர மாதர் வாய்த்த     பாயலின் மீத ணாப்பி ...... யிதமாடுந் 
தோதக மாய வார்த்தை போதக மாக நோக்கு     தூய்மையில் நாயி னேற்கும் ...... வினைதீரச் 
சூழும னாதி நீத்த யானொடு தானி லாச்சு     கோதய ஞான வார்த்தை ...... யருள்வாயே 
சாதன வேத நூற்பு ராதன பூண நூற்ப்ர     ஜாபதி யாண்மை தோற்க ...... வரைசாடிச் 
சாகர சூர வேட்டை யாடிய வீர வேற்ப்ர     தாபம கீப போற்றி ...... யெனநேமி 
மாதவன் மாது பூத்த பாகர னேக நாட்ட     வாசவ னோதி மீட்க ...... மறைநீப 
மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி     வானவர் சேனை காத்த ...... பெருமாளே.

பாவத்தினால் ஏற்பட்ட உடலுடன் வேதனைப் போர் செய்கின்ற பாவியாகிய நான், செலுத்துவதற்குத் தயாராக இருக்கும் அம்பையும் வாளையும் போன்ற இரண்டு கண்களையும், கனத்ததும் சந்தனம் பூசியுள்ளதும் அழகு உள்ளதுமான மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் பொருந்திய படுக்கையின் மேலிருந்து ஏமாற்றி இனிமை காட்டும், வஞ்சகமான பேச்சுக்களை உபதேச மொழியாகக் கருதும் பரிசுத்தம் இல்லாத நாயொத்த அடியேனுக்கும் என்னுடைய வினைகள் ஒழிய, பொருந்தி, தொடக்கம் இல்லாததாய், பெருந் தன்மையதான, யான், தான் என்னும் இரண்டும் இல்லாததாய், சுகத்தைத் தோற்றுவிக்கும் ஞான மொழியை உபதேசித்து அருள்வாயாக. வேத நூல்களில் பயிற்சி உள்ள பழைமை உடையவனும், பூணூல் அணிந்தவனுமாகிய பிரம தேவனுடைய தீரம் குலைய வைத்து (ஆணவத்தை அடக்கி), கிரவுஞ்ச மலையை துகைத்து ஒழித்து, கடலில் (மாமரமாக) இருந்த சூரனை வேட்டை ஆடிய வெற்றி வேலைக் கொண்ட கீர்த்திமானே, அரசே, உன்னைத் துதிக்கிறேன் என்று, சக்ராயுதத்தை ஏந்திய திருமாலும், தேவி விளங்கும் பாகத்தினரான சிவபெருமானும், பல கண்களை உடைய இந்திரனும் புகழ்ந்து, தம்மைக் காக்க வேதங்களை ஓதியும், கடம்பின் அழகிய பூக்களைக் கொண்டு தூவியும் உன்னை வாழ்த்த, தேவயானையை மணம் புரிந்து தேவர்களுடைய சேனைகளைக் காத்த பெருமாளே. 

பாடல் 1262 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தான தனந்தன தான தனந்தன     தான தனந்தன ...... தனதான

பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப     டீர தனம்புள ...... கிதமாகப் 
பாவை யருந்தியல் மூழ்கி நெடும்பரி     தாப முடன்பரி ...... மளவாயின் 
ஆர முதுண்டணை மீதி லிருந்தநு     ராகம் விளைந்திட ...... விளையாடி 
ஆக நகம்பட ஆர முயங்கிய     ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ 
நார தனன்றுச காய மொழிந்திட     நாய கிபைம்புன ...... மதுதேடி 
நாண மழிந்துரு மாறி யவஞ்சக     நாடி யெபங்கய ...... பதநோவ 
மார சரம்பட மோக முடன்குற     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய் 
மாமு நிவன்புணர் மானு தவுந்தனி     மானை மணஞ்செய்த ...... பெருமாளே.

பாரமானதும், நறு மணம் வீசுவதுமான கூந்தல் குலைய, சந்தனம் அணிந்துள்ள மார்பகம் கட்டுத் தளர்ந்து புளகிதம் கொள்ள, மாதர்களின் உதரத்தில் முழுகியவனாய், மிக்க தாகத்துடன் நறு மணம் உள்ள வாயிதழில் நிறைந்த அமுதூறலைப் பருகி, படுக்கையில் இருந்து, காமப் பற்று உண்டாக லீலைகளைச் செய்து, உடலில் நகக்குறிகள் பட மிக நன்றாகத் தழுவிய வேசையர் ஆசையை மறந்து, உன்னை உணரும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ? நாரத முனிவர் அந்நாளில் (வள்ளி சம்பந்தமான) உதவி மொழிகளை எடுத்துச் சொல்ல, வள்ளி நாயகி இருந்த பசுமையான தினைப் புனத்தைத் தேடிச் சென்று, கூச்சத்தையும் விட்டு (வேடன், விருத்தன், வேலன்) ஆகிய உருவம் எடுத்த தந்திரக்காரனே, விரும்பி, தாமரைத் திருவடிகள் நோக, மன்மதனின் மலர்ப்பாணங்கள் தைக்க, காம இச்சையுடன் குறவர்கள் வாழும் வள்ளிமலையின் மீது சென்று, சிறந்த சிவமுனிவர் இணைந்ததால் லக்ஷ்மியாகிய மான் பெற்ற ஒப்பற்ற மான் போன்ற வள்ளியைத் திருமணம் செய்த பெருமாளே. 

பாடல் 1263 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தனதன தனதன தனதன     தானத் தனந்தம் ...... தனதான

பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு     பேணிக் கரங்கொண் ...... டிருகாலும் 
பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி     பேதித் தளந்தம் ...... புவியூடே 
வரவிட வருமுட லெரியிடை புகுதரு     வாதைத் தரங்கம் ...... பிறவாமுன் 
மரகத மயில்மிசை வருமுரு கனுமென     வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே 
அருவரை தொளைபட அலைகடல் சுவறிட     ஆலிப் புடன்சென் ...... றசுரேசர் 
அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட     னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா 
இருவினை யகலிட எழிலுமை யிடமுடை     யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா 
இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்     ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே.

சாமர்த்தியத்துடன் இணைந்து வரும் வினைகளின் துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன் (இரண்டு) கைகளுடன் இரண்டு கால்களும் பெறும்படியாக உயர்த்தப்பட்ட குடிசை போன்ற உடலில் பொருந்தும்படி உயிர் புகுந்து, அறிவு என்பது அவ்வுயிர்க்கு வேறுபாடாகும்படி கணக்கிட்டு, உலகிடையே பிரமதேவனும் அனுப்பி வைக்க வந்து சேர்கின்ற உடல் (இறுதியில்) நெருப்பில் புகுந்தழியும் துன்பம் என்னும் அலை தோன்றுவதற்கு முன், பச்சை மயிலின் மேல் வருகின்ற முருகனே என்று கூறி வாழ்வதற்கு வேண்டிய ஒப்பற்ற ஓர் அன்பைத் தருவாயாக. அரிய மலையாகிய கிரெளஞ்சம் தொளைபட்டு அழிய, அலை வீசும் கடல் வற்றிப் போக, ஆரவாரத்துடன் போருக்குச் சென்ற அசுரர்கள் எல்லோரும் மடிந்து அழிய சண்டை செய்து, அழகுடன் வீர பராக்கிரமம் விளங்க எழுந்த வேலாயுதனே, (அடியார்களுடைய) இரு வினைகளும் நீங்கும்படி, அழகிய உமா தேவியை தமது இடது பாகத்தில் கொண்டுள்ளவரான சிவ பெருமானுக்கு (திருநெறித் தமிழ் என்னும் தேவாரத் தமிழைத் திருஞான சம்பந்தராக வந்து) புனைந்த திருவாயனே, இயற்றமிழ் முதலான பல கலைகளுடன் இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனுக்கு அதிக இரக்கம் காட்டும் பெருமாளே. 
* முதல் வரியிலிருந்து பிரமனும் என்ற சொல் அன்வயப்படுத்தி உள்ளது.

பாடல் 1264 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானன தானன தந்த தானன தானன தந்த     தானன தானன தந்த ...... தனதான

பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து     பூசைகள் யாதுநி கழ்ந்து ...... பிழைகோடி 
போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு     பூரணி காரணி விந்து ...... வெளியான 
நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து     ஞானசு வாசமு ணர்ந்து ...... வொளிகாண 
நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த     நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ 
மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி     வாணிவ ராகிம டந்தை ...... யபிராமி 
வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச     வாலைபு ராரியி டந்த ...... குமையாயி 
வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை     மேலொடு கீழுல கங்கள் ...... தருபேதை 
வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற     வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே.

ஐம்பூதங்களின் சம்பந்தமான சாஸ்திரங்கள் முதலானவைகளை ஆய்ந்தறிந்து, யோகவகை கூடிட மகிழ்ந்து, பூஜைகள் யாவற்றையும் செய்து, கோடிக் கணக்கான பிழைகள் நீங்கும்படியான வழி இன்னதென்று காரணம் உணர்ந்து, முதலும், முதலற்றதுமாய் உள்ள இரண்டுமாய் நிற்கின்ற முழு முதல்வி, சகலத்துக்கும் ஆதி காரணமாக இருப்பவளாகிய பரா சக்தியும், விந்து வெளியான நாதம் (விந்து சம்பந்தமான நாத ஒலி கூடி முழங்கும் இடத்தில்) பரம் பொருளாகக் காட்சி தர, யோகிகள் காணும் அந்த பரமானந்த ஒளியை அறிந்து அனுபவித்து, ஞான மூச்சினால் யோக நிலையை அறிந்து நாத நல்லொளி தோன்ற, அதை விரும்பி, ஓராயிரம் இதழோடு கூடிய குரு கமலத்தின் மீது அமர்ந்துள்ள பெருமானது* இரண்டு திருவடிகளை அடைவேனோ? மாது, எல்லாவற்றுக்கும் ஈசுவரி, வஞ்சிக் கொடி போன்றவள், காளி, பிடாரி, விபஞ்சி என்னும் வீணையை ஏந்திய சரசுவதி, சக்தி, பேரழகியான மடந்தை, வாழ்வு பொலியும் சிவகாம செளந்தரி, பிரளய கால வெள்ளத்தின் மேலாகிய ஐந்து முகம் கொண்ட பாலாம்பிகை, திரிபுரத்தை எரித்த சிவனது இடது பாகத்துக்குத் தக்க பொருந்திய உமா தேவி ஆகிய எமது தாய், வேதங்களையும், புராணங்களையும் சொன்னவள், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனாகிய (முராரி என்னும்) நீலநிறத் திருமாலின் தங்கை, பதினான்கு உலகங்களையும் ஈன்று அளித்த மாது, (ஆடலுக்கு உரிய) வேடங்களெல்லாம் நிலை கலங்க, (பொற்)சபையில் பாடல்களுடனும் ஆடல்களும் பயின்ற சடையை உடைய சிவ பெருமானின் தேவி ஆகிய பார்வதி பெற்ற பெருமாளே. 
* ஆறு ஆதாரங்களோடு சஹஸ்ராரம் என்பது ஆக்ஞேய சக்கரத்துக்கு மேலே, தலையில் பிரம்ம கபாலத்தில், ஆயிரம் இதழ் கமலமுள்ள பிந்து ஸ்தானமாக இருப்பது. ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 1265 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கரஹரப்ரியா தாளம் - ஆதி - கண்டநடை - 20 - எடுப்பு - அதீதம்

தனந்தா தனந்தா தனந்தா தனந்தா     தனந்தா தனந்த ...... தனதான

பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால்     ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப் 
பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார்     நடந்தார் தளர்ந்து ...... பிணமானார் 
அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள்     அலங்கார நன்றி ...... தெனமூழ்கி 
அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால்     அலந்தேனை யஞ்ச ...... லெனவேணும் 
இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ     கவெங்கே மடந்தை ...... யெனவேகி 
எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ     யிடுங்கா வலன்றன் ...... மருகோனே 
பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார்     புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர் 
புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா     புகழ்ந்தோது மண்டர் ...... பெருமாளே.

பெரிய காரியத்தைச் சாதிக்க வந்ததுபோல வந்துள்ளதும், எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிய இந்த உடம்பின்மீது ஆசைப்படும்படி வந்து, கருவில் ஊறிப் பிறந்தார் என்றும், படுத்திருந்தார் என்றும், இருந்தார் என்றும், தவழ்ந்தார் என்றும், நடந்தார் என்றும், தளர்ந்து பிணமானார் என்றும் கூற இடமானதும், அரிய சுடுகாட்டின் அருகே எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்றும், அங்கே உடலைச் சுடுங்கள் என்றும் (சிலர் கூறத் தொடங்க), பிணத்திற்கு அலங்காரம் நன்றாய் அமைந்தது என்றும் சிலர் கூறி, பிணம் எரிந்ததும் நீரில் மூழ்கி, இருந்த ஆசையையும் பாசத்தையும் மறந்து செல்ல, விழுந்து பாழாகும் இந்த உடம்பைக் காரணமாக வைத்து மனம் கலங்கி எங்கும் அலைந்து திரிந்த என்னை அஞ்சாதே என்று கூறி நீ வரவேண்டும். பெரிய காட்டிற்குச் சென்று, இளைய வீரனாம் தம்பி லக்ஷ்மணன் பின் தொடர, (காணாது போன) மாது சீதை எங்கே என்று தேடிச் சென்று புறப்பட்டு, அநுமார் என்னும் குரங்கின் மூலம் இலங்காபுரியில் நெருப்பை வைத்த அரசனான ராமபிரானின் மருகனே, போர் செய்யும் வில்லைக் கையில் கொண்டவர்களாய், தம்மை மதிக்காதவர்களின் வீரம் அழியும்படி அம்பைச் செலுத்தவல்ல வேடர்களுடைய தினைப்புனத்தைக் காவல் செய்த அழகிய பெண் வள்ளியின் மணாளனே, குறைவொன்றும் இல்லாதவனே, உன்னைப் புகழ்ந்து துதிக்கும் தேவர்களுடைய பெருமாளே. 

பாடல் 1266 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த     தத்தத் தனத்தத்த ...... தனதான

மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற     மட்டுற் றசுற்றத்தர் ...... மனையாளும் 
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு     வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட 
நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற     நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன் 
நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப     நிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே 
திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த     சித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே 
சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல்     தித்திப் பையிச்சிக்கு ...... மணவாளா 
முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு     முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே 
முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை     முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே.

மக்களாக எடுத்த பிறப்பில் கூடப் பிறந்துள்ள சுற்றம் என்னும் அளவில் உள்ள உறவினர்களும், மனைவியும், (எனது) வாழ் நாளின் இடையில் வந்து சேர்ந்து, தினமும் மாறுபட்டுச் சண்டை இட்டு, சேகரித்து வைத்துள்ள பொருளைப் பறிக்கவே மிகவும் நாடி நிற்க, கொல்ல வரும் துஷ்டனாகிய யமன், அழித்து என் உயிரைப் பிடிக்க நீண்ட பாசக் கயிற்றினால் வீசி வளைப்பதற்கு முன்பாக, மனம் நெகிழ்ந்து, குரு பக்தி மிகுந்து, உன் திருவடிகளைப் புகழ்வதற்கு, நிலைத்து நிற்கும் தத்துவ அறிவுச் சொற்களை எனக்கு உதவி செய்து அருளுக. நாலு திசைகளிலுள்ள புறங்களுள்ளும் அழியாதிருக்கச் (சம்பந்தராக வந்து) சிவபெருமானின் புகழைப் பரப்பிய, அழகிய தமிழ் பாடும் வெற்றியை உடையவனே, சிறிய குடிசை கட்டியுள்ள, கீழ்ஜாதியில் வளர்ந்த குறப்பெண்ணாகிய, வள்ளியின் இனிய சொல்லை விரும்பி ஆசைப்படும் கணவனே. மூன்று கண்களையும், சடையையும் உடைய சித்த மூர்த்தியாகிய சிவபெருமானது உள்ளத்துள் நுழைந்து படிவதற்கு, முக்தி நிலையைப் பற்றி முதலிலிருந்து உபதேசித்தவனே, முழுக் கோபம் கொண்டு, முன்னே இருந்த பூங்கொத்துக்கள் கூடிய மாமரமாக நின்ற சூரனை எதிர்த்துத் தாக்கி, வேலால் தொளைத்து அழித்த பெருமாளே. 

பாடல் 1267 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்தனா தத்ததன தத்தனா தத்ததன     தத்தனா தத்ததன ...... தனதான

மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை     விக்கும்வாழ் நர்க்குமிக ...... மனதூடே 
மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்     வைத்துவா டச்சமனு ...... முறமேவித் 
திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகி     திக்கஆ விக்களவு ...... தெரியாமுன் 
சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிது     சித்ரபா தக்கமல ...... மருள்வாயே 
இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலை     யிட்டுயோ கத்தமரு ...... மிறையோர்முன் 
எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுத     லெட்டொணா வித்தைதனை ...... யினிதீவாய் 
பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவு     பத்தர்பா டற்குருகு ...... முருகோனே 
பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர்     பச்சைமா னுக்கினிய ...... பெருமாளே.

நான் பெற்ற மக்களுக்கும், என் தாயாருக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மாமன்மார்களுக்கும், மனையாளுக்கும், உடன் வாழ்பவர்களுக்கும், மிகவும் மனத்தில் வருத்தம் தந்து, கரு நிறம் கொண்ட கடலைக் காட்டிலும் பெரிதாயுள்ள மாயை காரணமாக வரும் துன்பத்தை உண்டாக்கி மனம் சோர்வு அடைய, யமனும் இருக்கும் இடத்தைத் தேடி அடைந்து, கரு நிறமான எருமைக் கடாவின் மீது முறுக்குடன் வந்து என் சொற்களைக் குழற வைக்க, என் உயிர் உடலில் தங்கும் கால அளவு தெரிவதற்கு முன்பாக (அதாவது நான் சற்று நேரத்தில் இறப்பதற்குமுன்), மனம் நீங்கி ஒடுக்கம் உற்று, நனவும் கனவும் அற்று நான் வாழ்வதற்கு, நீ சற்று உனது அழகிய திருவடித் தாமரைகளை அருள்வாயாக. கரும்பு வில்லைக் கொண்ட மன்மதனை, கருகும்படி மூன்றாவதாகிய (நெற்றிக்) கண் கொண்டு அவனது (காமத்தை மூட்டும்) செயலை ஆராய்ந்து (அவன் மீது) நெருப்பை ஏவி, யோகத்தில் அமர்ந்த சிவபெருமானுடைய முன்னிலையில், இயங்குகின்ற உயிர்கள் முதலிய யாவற்றிலும் பொருந்தி நிற்பவராகிய மாயோனாகிய திருமால் முதலானோர்களுக்கும் எட்ட முடியாத ஞானப் பொருளை நன்கு உபதேசித்தவனே, உன்பால் ஆசையுடன் உள்ளம் நெகிழ்ந்து விரும்பிப் போற்றும் பக்தர்களின் பாடல்களுக்கு மனம் உருகும் முருகனே. உனது (இடது) பக்கத்தில் தேவயானையாகிய லக்ஷ்மியின் மகளோடு பொருந்தி வாழ்கின்றவளும், அந்தக் குறவர்களால் வளர்க்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட மான் போன்றவளுமாகிய வள்ளிக்கு இனிய பெருமாளே. 

பாடல் 1268 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனனத் தனதன தனனத் தனதன     தனனத் தனதன ...... தனதான

மதனிக் கதுகொடு பதுமப் புதுமலர்     மலையப் படவிடு ...... வலியாலே 
வனமுற் றினவளை யினநித் திலமலை     வலையத் துகள்வளை ...... கடலாலே 
விதனப் படுமதி வதனக் கொடியற     வெருவிப் பரிமள ...... அணைமீதே 
மெலியக் கலைதலை குலையத் தகுமினி     விரையக் குரவலர் ...... தரவேணும் 
புதனைச் சதுமுக விதியச் சுதனெதிர்     புனைவித் தவர்தொழு ...... கழல்வீரா 
பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு     புனமெய்க் குறமகள் ...... மணவாளா 
முதுநற் சரவண மதனிற் சததள     முளரிப் பதிதனி ...... லுறைவோனே 
முதுமைக் கடலட ரசுரப் படைகெட     முடுகிப் பொரவல ...... பெருமாளே.

மன்மதன் கரும்பு வில்லைக் கொண்டு புதிய தாமரை மலர் அம்பை (என் மகள் மீது) பகைத்து எய்ததால் ஏற்பட்ட வலியாலும், அழகு நிறைந்த சங்குகளின் கூட்டமான முத்துக்கள் அலைகளாகிய வட்டச் சுழலில் சிதறி விழுகின்ற, வளைந்துள்ள கடலாலும், துயரப்படும் நிலவு போன்ற முகத்தை உடைய, வஞ்சிக் கொடி போன்ற என் பெண் மிகவும் அச்சம் அடைந்து, நறுமணம் உள்ள படுக்கையின் மேல் (தூக்கமின்றி) மெலிந்து போதலும், ஆடையும் தலைக் கூந்தலும் குலைந்து போதலும் தகுமோ? இனிமேல் வாசம் மிக்க குர மாலையை நீ தந்தருள வேண்டும். புதனுடைய தந்தையாகிய சந்திரனை, நான்முக பிரமன், திருமால் (இவர்களின்) எதிரே சூடிக் கொண்டவராகிய சிவபெருமான் தொழுகின்ற திருவடியை உடைய வீரனே, பொருந்திய கையில் வளையல்களை வரிசையாக அடுக்கியவளும், நெருங்கி வளர்ந்துள்ள பயிர்கள் உள்ள தினைப் புனத்தில் இருந்தவளும், உண்மை நிறைந்த குறப் பெண்ணுமாகிய வள்ளியின் கணவனே, பழைய நல்ல சரவணப் பொய்கையில் நூறு இதழ்களைக் கொண்ட தாமரையின் மேலும், பொற்றாமரைப் பதியாகிய மதுரையிலும் வீற்றிருப்பவனே, பழைய கடலில் நெருங்கியிருந்த அசுரர்கள் சேனைகள் கெட்டு அழிய, விரைவில் சென்று சண்டை செய்ய வல்ல பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது நற்றாய் பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், அலை வீசும் கடல் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 1269 - பொதுப்பாடல்கள் 
ராகம் - தன்யாஸி தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதன தனான தான தனதன தனான தான     தனதன தனான தான ...... தனதான

மதிதனை யிலாத பாவி குருநெற யிலாத கோபி     மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை 
வகையது விடாத பேடி தவநினை விலாத மோடி     வரும்வகை யிதேது காய ...... மெனநாடும் 
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை     வினையிகல் விடாத கூள ...... னெனைநீயும் 
மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக     மிகுமுன துரூப தான ...... மருள்வாயே 
எதிர்வரு முதார சூர னிருபிள வதாக வேலை     யியலொடு கடாவு தீர ...... குமரேசா 
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்     இளமையது தானு மாக ...... நினைவோனே 
நதியுட னராவு பூணு பரமர்குரு நாத னான     நடைபெறு கடூர மான ...... மயில்வீரா 
நகைமுக விநோத ஞான குறமினுட னேகு லாவு     நவமணி யுலாவு மார்ப ...... பெருமாளே.

அறிவு என்பதே இல்லாத பாவி, குரு சொன்ன வழியில் நிற்காத சினமுள்ளவன், மனம் ஒரு நிலையில் நிற்காத பேய் போன்று அலைபவன், பயனற்ற மாயையின் பொய்யான போக்குக்களை விடாத பேடி, தவம் என்ற நினைப்பே இல்லாத முரடன், இந்த உடம்பு எப்படிப் பிறந்தது என்று ஆராயும் பாக்கியம் இல்லாதவன், மிகக் கொடிய கஞ்சன், சபைகளில் வந்து பேசும் ¨தரியம் இல்லாதவன், தீவினையின் வலிமையை நீக்கமாட்டாத பயனற்றவன் ஆகிய என்னை நீயும் மிக மேலான ஞானமார்க்கத்தை ஆராய்ச்சி செய்ய மிக்கு விளங்கும் உன்னுடைய சாரூபம் (வடிவ தரிசனம்) என்ற பரிசை அடியேனுக்குத் தந்தருள்க. எதிர்த்து வந்த மிக்க வலிய சூரன் இரண்டு பிளவாகும்படியாக வேலாயுதத்தை தக்க முறையில் செலுத்தின தீரனே, குமரேசனே, இனிய சொற்களையே மறக்காமல் பேசும் பெரியோர்கள் மீண்டும் கருவழியடைந்து பிறவாதபடியும், எப்போதும் இளமையுடன் விளங்கும்படியும், நினைத்து அருள் செய்பவனே, கங்கைநதியுடன், பாம்பையும் அணிந்த பரமேசுரர் சிவபெருமானுக்கு குருமூர்த்தியானவனே, நடையிலேயே கடுமையான வேகம் காட்டும் மயிலையுடைய வீரனே, சிரித்த முகத்தாளும், அற்புத ஞானத்தைக் கொண்டவளுமான குறப் பெண் வள்ளியுடன் கொஞ்சுகின்றவனே, நவரத்தின மாலை விளங்கும் மார்பை உடைய பெருமாளே. 

பாடல் 1270 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்     தனந்தாத் தனத்தம் ...... தனதான

மலந்தோற் சலந்தேற் றெலும்பாற் கலந்தீட்     டிடுங்கூட் டினிற்றங் ...... கிடுமாய 
மயங்காத் தியங்காப் பயங்கோட் டிடுங்காற்     றுடன்போக் குறத்தந் ...... தையுமாதும் 
குலந்தாய்க் குடம்பாற் பிறந்தேற் றிடுங்கோத்     தடங்கூப் பிடத்தம் ...... புவியாவும் 
குலைந்தார்ப் பெழுங்காட் டிலந்தாட் களன்பாற்     குணங்காத் துனைக்கும் ...... பிடஆளாய் 
தலந்தாட் டொடண்டாத் தளைந்தார்க் கிளங்காத்     தடந்தாட் புடைத்தன் ...... பினர்வாழத் 
தருங்கூத் தரும்பார்த் துகந்தேத் திடஞ்சாத்     திரஞ்சாற் றிநிற்கும் ...... பெருவாழ்வே 
அலைந்தாற் றெழுங்கோச் சலந்தீக் கலந்தாட்     டரம்போச் செனக்கன் ...... றிடும்வேலா 
அறங்காத் துறங்காத் திறம்பார்த் திருந்தோர்க்     கயர்ந்தோர்க் களிக்கும் ...... பெருமாளே.

மலம், தோல், நீர் ஆகியவைகளும், செறிந்துள்ள எலும்பு இவைகளும் கலந்து கூட்டப்பட்ட கூடாகிய இந்த உடம்பில் தங்கியிருக்கும் மாய வாழ்க்கையில், மயங்கியும், சஞ்சலப்பட்டும், பயன் தர வைக்கப்பட்ட பிராண வாயுவுடன் நீங்க (உடலை விட்டு விலக), தந்தையும், மனைவியும், சிறந்த தாயுடன், கூடப் பிறந்தவர்களாய் விளங்கும் கூட்டத்தினர் (உறவினர்கள்) மிகப் பலமாய்க் கூப்பிட, தாம் வாழ்ந்த இடத்தில் உள்ள யாவரும் உள்ளம் சோர்வுற்று அழுகை ஓசை எழும் சுடுகாட்டிலும், (உனது) அழகிய திருவடிகளை அன்புடனே நல்ல குணத்துடன் மனதில் இறுத்தி, உன்னைக் கும்பிட்டு வணங்கும்படி என்னை ஆட்கொண்டருளுக. திருவடியாகிய இடத்தைத் தொட்டு, நெருங்கிக் கட்டிப் பிடித்த அடியவர்களுக்கும், இளம் பூஞ்சோலை, குளிர்ந்த பொய்கை ஆக விளங்கும் திருவடியை ஆரவாரத்துடன் போற்றிய அன்பர்களுக்கும் வாழ்வுறும்படி உதவுகின்ற கூத்தப் பெருமானும் கண்டு மகிழ்ந்து போற்றி செய்ய, அழகிய ஞானநூலை சிவனாருக்கு உபதேசித்து நின்ற பெருஞ் செல்வமே, வெள்ள நீர் அசைந்து ஆற்றில் எதிர்ந்து எதிரே வந்த உனது சொல் (நீ திருஞான சம்பந்தராக எழுதிவிட்ட திருப்பாசுர ஏட்டின் பெருமையைக் கண்டு) நீரிலும், நெருப்பிலும் (சபதம் செய்து போட்டியில்) கலந்து, நமது ஆண்மையும் தொலைந்தது என்று (சமணர்கள்) சொல்லும்படி (அவர்களைக்) கோபித்த வேலனே, தரும நெறியைக் காப்பாற்ற, தூங்காமலும் சோர்வு அடையாமலும் இருக்கும் வகையைக் கண்டிருந்த பெரியோர்களுக்கும், (உன்னைப்) பூஜித்து வழிபடுவோர்களுக்கும் (வரங்களைத்) தருகின்ற பெருமாளே. 

பாடல் 1271 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதான தான தந்த தனதான தான தந்த     தனதான தான தந்த ...... தனதான

மனநூறு கோடி துன்ப நொடிமீதி லேநி னைந்து     மதனூட லேமு யங்கி ...... யதீருப 
மடமாத ராசை கொண்டு புவிமீதி லேம யங்கி     மதிசீரெ லாம ழிந்து ...... கொடிதான 
வினைமூடி யேதி ரிந்து புவிமீதி லேயு ழன்று     விரகான்மெ யேத ளர்ந்து ...... விடுநாளில் 
விசையான தோகை துங்க மயிலேறி யோடி வந்து     வெளிஞான வீடு தந்து ...... அருள்வாயே 
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெ லாமு ழன்று     சிறுபேதை கால்ப ணிந்த ...... குமரேசா 
திரையாழி சேது கண்டு பொருராவ ணேசை வென்ற     திருமால்மு ராரி தங்கை ...... யருள்பாலா 
முனிவோர்கள் தேவ ரும்பர் சிறையாக வேவ ளைந்த     முதுசூரர் தானை தங்கள் ...... கிளையோடு 
முடிகோடி தூளெ ழுந்து கழுகோடு பாற ருந்த     முனைவேலி னாலெ றிந்த ...... பெருமாளே.

மனத்திலே நூறு கோடிக்கணக்கான துன்பங்கள் ஒரு நொடிப் பொழுதிலே நினைந்து, மன்மதனது லீலையால் காம ஊடலிலே ஈடுபட்டு, மிக்க அழகுள்ள இளம் பெண்களிடத்தில் ஆசை கொண்டு, இந்தப் புவிமீதிலே மயங்கிக் கிடந்து, அறிவு, மதிப்பு எல்லாம் கெட்டு, கொடுமையான தீவினை மூடித்திரிந்து, இவ்வுலகில் பல இடத்திலும் அலைந்து, அப்பெண்களின் தந்திரச் செயல்கள் காரணமாக உடல் தளர்ந்து போய்விடுகின்ற அந்த நாளில், வேகம் வாய்ந்த தோகையுடன் கூடிய பெருமைமிக்க மயிலில் ஏறி, விரைவில் வந்து, பரவெளியாம் ஞான முக்தியினை நீ தந்தருள்வாயாக. தினைப்புனத்தில் வேடர்களின் காவல் உள்ள மலைப் புறம், காட்டுப் புறம் எல்லாம் திரிந்து, சிறு பேதைப் பெண்ணாகிய வள்ளியின் அடிகளில் பணிந்த குமரேசனே, அலைகள் வீசும் சமுத்திரத்தில் அணைகட்டி, போருக்கு வந்த ராவணேசனை வெற்றிகொண்ட (ராமனாம்) திருமாலின், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியின், தங்கை பார்வதி அருளிய பாலனே, முநிவர்கள், தேவர்கள், விண்ணுலகத்தார் அனைவரையும் வளைத்துச் சிறைசெய்த கொடிய சூரர்களின் சேனைகளை, அவர்களின் சுற்றமுடன் அவர்களின் தலைகள் சிதறி கோடிக்கணக்கான தூள்களாகப் பறக்க, அவற்றை கழுகுகளும் பருந்துகளும் உண்ண, வேலின் முனையினால் அழித்த பெருமாளே. 

பாடல் 1272 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த     தானதன தனத்ததந்த ...... தனதான

மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து     மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி 
மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு     மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி 
வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து     வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய் 
வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து     வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ 
ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி     லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி 
ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை     யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே 
சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த     சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா 
தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி     தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே.

பெண்ணோடு காம மயக்கத்தில் ஈடுபட்டு, அன்பினால் ஏற்பட்ட பனி போல ஒரு துளி உட்சென்று, ஓர் உளுந்து போலச் சுழற்சி உற்று, கர்ப்பத்தில் ஊறி, உருவம் மாறுதல் ஏற்பட்டு, பலாப் பழம் போல ஆன வயிற்றைச் சுமந்து, பசுவின் பனிக்குடம் போலப் பருத்து, பேறு காலம் வந்தது என்று கூற, வயிறு தளர்ந்து, குழந்தையாக வெளிப்பட்டு, வேதத்தில் சொல்லப்பட்ட இந்தப் பூமியில் விழுந்து பிறந்து, பன்றிக்குட்டி புரள்கிறது போல உள்ளது என்று சொல்லும்படித் தவழ்ந்து, ஒளி வீசும் மணிகளை, அணிந்து கொண்டு, நடைகள் மிகவும் பழகி, மனம் போன போக்கின்படிப் பலவகையாகத் திரிந்து, நறுமணம் வீசும் புனுகு வாசனைப் பண்ட வகைகளை உடலில் பூசி, விலைமாதர்களின் வலையில் அகப்பட்டு இறந்து படுவேனோ? ஆதி மூலமே, அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக் கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப் பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால், ஆமை, கயல் மீன் என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில் பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே, ஜோதி உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, கலாபம் கொண்ட மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம் பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த பெருமாளே. 

பாடல் 1273 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தத்ததன தானனத் தத்ததன தானனத்     தத்ததன தானனத் ...... தனதான

முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற்     பட்டகரி போலுமத் ...... தனமாதர் 
முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப்     பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் 
சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத்     துக்கமுற வேமிகச் ...... சுழலாதே 
சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச்     சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே 
கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப்     புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் 
கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக்     கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா 
பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப்     பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் 
பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற்     பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே.

முத்தாலும், ரத்தினத்தாலும் ஆன மாலைகள் நெருங்கியுள்ள இரண்டு மலைகள் போலவும், எதிர்த்து வரும் யானைகள் போலவும் உள்ள அந்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகத்தில் உள்ள கூரிய வேல் போன்ற கண்களால் தாக்கப்பட்டு, கரிய மேகம் போல் மனத்தில் அஞ்ஞான இருள் வந்து மூடி, தெளிவான தூய அறிவு போய் செயலில் துஷ்டத்தனம் உடையவனாய், மனத்தில் துக்கம் கொண்டவனாய் மிகவும் கலக்கம் உறாமல், பல வகையான சொற்களை நாவால் தொடுத்து, பாடித் துதித்து, உனது இரு திருவடிகளைத் தொழ, புகழ் மிக்க தாமரைப் பாதங்களை கொஞ்சம் தயை புரிந்து அருள் செய்வாயாக. (ராவணனுடைய) கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் அறுபட்டு விழ, குறி வைத்து அம்பு எய்த, மிக்க கோபம் கொண்டவனாகிய அச்சுதனாம் ராமன், மாயவனின் (திருமாலின்) வீரம் வாய்ந்த மருகனே, குறக் குலத்துச் சாதாரண வேட்டுவப் பெண்ணாம் வள்ளிக்கு காம இச்சை காட்டும் பேச்சுக்களைப் பேசிய நல்ல குமரனே, பக்தியுடன் உன்னைத் தியானித்துப் போற்றும் அடியார்களுடைய வினைப் பற்றைப் போக்க வல்ல சிறந்த வேதப் பொருள் ஆனவனே, பக்தி, சிறந்த ஞானம் இவைகளைக் கொண்ட சொற்களைக் கற்றவர்கள் பாடுகின்ற நல்ல அன்புக்கு உரியவனே, தேவர்களின் உண்மைப் பொருளான பெருமாளே. 

பாடல் 1274 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பாகேஸ்ரீ தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதன தானத் தானன தனதன தானத் தானன     தனதன தானத் தானன ...... தனதான

முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி     முகுளப டீரக் கோமள ...... முலைமீதே 
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை     முதியபு ராரிக் கோதிய ...... குருவேயென் 
றுருகியு மாடிப் பாடியு மிருகழல் நாடிச் சூடியு     முணர்வினோ டூடிக் கூடியும் ...... வழிபாடுற் 
றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி     யுனதடி யாரைச் சேர்வது ...... மொருநாளே 
மருகனெ னாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்     வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல் 
வருமத யானைக் கோடவை திருகிவி ளாவிற் காய்கனி     மதுகையில் வீழச் சாடிய ...... சதமாபுட் 
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு     சகடுதை யாமற் போர்செய்து ...... விளையாடிப் 
பொதுவியர் சேரிக் கேவளர் புயல்மரு காவஜ் ராயுத     புரமதில் மாபுத் தேளிர்கள் ...... பெருமாளே.

முருகனே, மயிலேறும் வீரனே, சரவணபவனே, வள்ளிமலையில் மிகுந்து விளைந்த தினைப்புனத்தைக் காவல் செய்த மலைப் பெண் வள்ளியின் தாமரை அரும்பு போன்ற, சந்தனம் அணிந்த, அழகுடைய மார்பின் மேல் முழுகிய அன்பு மிக்க ஆர்வலனே, கடவுள், உயிர், தளை என்ற மும்மைத் தத்துவங்களின் முடிவான உட்பொருளை பழமையான, திரிபுரம் அழித்த, சிவபெருமானுக்கு உபதேசம் செய்த குருநாதனே என்று துதித்து, உள்ளம் குழைந்து உருகியும், ஆடியும், பாடியும், உனது இரு திருவடிகளை நாடியும், அவற்றைத் தலையில் சூடியும் ஞான உணர்ச்சியோடு பிணங்கியும், மீணடும் இணங்கிக் கலந்தும், வழி பாட்டில் பொருந்த நின்று, உலகினோர் மீது வைத்த ஆசைப்பாடு அறவே அற்றுப் போக, நிலைபெற்றுள்ள பெரிய ஞான உணர்வுடன் இனி மேல் உன் அடியார்களைச் சேர்ந்து மகிழக்கூடிய ஒரு நாளும் உண்டாகுமோ? சகோதரி தேவகியின் மகன் என்று சற்றும் கருதாமல் சூழ்ச்சியுடன் அந்த மருகனைக் கொல்ல எண்ணிய மாமனாம் பாவியாகிய கம்சன், அனுப்பி வைத்த, மாயத்தில் வல்ல, பூதனை என்ற பேயின் முலையின் விஷப் பாலோடு உயிரையும் அருந்தியும், பின்னும், கொல்ல வரும் மத யானையாகிய குவலயா பீடத்தின் தந்தங்களைத் திருகிப் பறித்தும் (அந்த யானையைக் கொன்றும்), (வஞ்சனையாக கபிஸ்டாசுரன் என்ற ஓர் அரக்கன் விளாமரமாக நிற்க) அந்த விளா மரத்தின் காய்களும் கனிகளும் மரத்தோடு சேர்ந்து விழும்படி தனது வன்மையால் (தேனுகாசுரன் என்ற கன்றின் உருவில் வந்த மற்றோர் அசுரனைக் கொண்டு) அடித்தும், பெரிய இறக்கையுடைய பறவையாகிய (கேசி என்ற) கொக்குடன் சண்டை செய்தும் (அதன் வாயைப் பிளந்தும்), அச்சத்தைத் தரும் இரண்டு பருத்த மருத மரங்களுக்கு இடையில் (இடுப்புடன் கட்டிய உரலுடன்) தவழ்ந்து சென்றும் (அம்மரங்களை முறித்தும்), அப்போது ஒரு வண்டிச் சக்கர வடிவில் வந்த (சகட) அசுரனை உதைத்தும், (சாணூரன், முஷ்டிகன் என்ற) மல்லர்களுடன் போர் செய்து விளையாடியும், இடையர்களின் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய கண்ணனாம் திருமாலின் மருகனே, குலிஜம் என்ற ஆயுதம் ஏந்திய இந்திரனின் ஊராகிய பொன்னுலகத்தில் சிறந்த தேவர்கள் போற்றும் பெருமாளே. 

பாடல் 1275 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பந்து வராளி தாளம் - ஆதி

தானா தனதன தானா தனதன     தானா தனதன ...... தனதான

மூலா நிலமதின் மேலே மனதுறு     மோகா டவிசுடர் ...... தனைநாடி 
மோனா நிலைதனை நானா வகையிலு     மோதா நெறிமுறை ...... முதல்கூறும் 
லீலா விதமுன தாலே கதிபெற     நேமா ரகசிய ...... வுபதேசம் 
நீடூ ழிதனிலை வாடா மணியொளி     நீதா பலமது ...... தருவாயே 
நாலா ருசியமு தாலே திருமறை     நாலா யதுசெப ...... மணிமாலை 
நாடாய் தவரிடர் கேடா வரிகரி     நாரா யணர்திரு ...... மருகோனே 
சூலா திபர்சிவ ஞானார் யமனுதை     காலார் தரவரு ...... குருநாதா 
தோதீ திகுதிகு தீதீ செகசெக     சோதீ நடமிடு ...... பெருமாளே.

(முதல் இரண்டு அடிகளை அன்வயப்படுத்தி பொருள் தரப்படுகிறது) மனத்தில் பொருந்தியுள்ள ஆசை என்ற காடு (வேறு வழிகளில் செல்லாமல்) மூலாதார நிலைக்கு மேல் உள்ள ஜோதியினை* நாடிச்சென்று, மெளன நிலையை, பலவகைகளிலும் கற்று, நன்னெறி வகைகளைக் காட்டுகின்ற உனது பலவகையான விளையாட்டுக்களை உன்னருளாலே யான் கண்டு முக்தி பெற, ஒழுக்க விதிக்கு உட்பட்ட ரகசிய உபதேசத்தின் பயன்தனை எனக்கு அருள்வாயாக. நீண்ட ஊழிக்காலத்தும் (எப்போதும்) தன் நிலை வாடாத சுயம்பிரகாச மணி ஜோதியே, நீதிமானே, பலவகையான இன்பச் சுவையமுதம் பருகிய உணர்ச்சியாலே, அழகிய வேதங்கள் நான்கையும், ஜெபமணிமாலை கொண்டு நாடிச் சென்று ஆராயும் தவ சிரேஷ்டர்களின் துன்பங்களை அழிப்பவனே, ஹரி ஹரி என்று ஓதப்படும் நாராயணரின், லக்ஷ்மியின் மருமகனே, சூலாயுதம் ஏந்திய தலைவரும், சிவஞானத்தினரும், காலனை உதைத்த திருவடியினருமான சிவ பெருமான் தந்தருள வந்த குருமூர்த்தியே, தோதீ திகுதிகு தீதீ செக என்ற தாளத்தில் ஜெகஜ்ஜோதியாக நடனம் செய்யும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 1276 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதனந் தனந்த தனதனந் தனந்த     தனதனந் தனந்த ...... தனதான

வரிபரந் திரண்டு நயனமுஞ் சிவந்து     வதனமண் டலங்கள் ...... குறுவேர்வாய் 
மணிசிலம் பலம்ப அளகமுங் குலைந்து     வசமழிந் திழிந்து ...... மயல்கூர 
இருதனங் குலுங்க இடைதுவண் டனுங்க     இனியதொண் டையுண்டு ...... மடவார்தோள் 
இதமுடன் புணர்ந்து மதிமயங் கினும்பொ     னிலகுநின் பதங்கள் ...... மறவேனே 
விரிபரந் தியங்கு முததியுங் கலங்க     விடமினும் பிறந்த ...... தெனவானோர் 
வெருவிநெஞ் சமஞ்சி யுரனொடுந் தயங்கி     விரைபதம் பணிந்து ...... முறையோவென் 
றுரைமறந் துணங்க அயில்தொடும் ப்ரசண்ட     உயர்தலங் குலுங்க ...... வருதோகை 
ஒருபெருஞ் சிகண்டி மயிலமர்ந் திலங்கி     உலகமும் புரந்த ...... பெருமாளே.

ரேகைகள் பரந்துள்ள இரண்டு கண்களும் சிவப்பாகி, முக வட்டம் சிறு வேர்வைத் துளிகளைக் கொண்டதாய், ரத்தினச் சிலம்பு ஒலிக்க, கூந்தலும் சரிந்து கலைய, தன் வசம் கெட்டு இழி நிலையை அடைந்து காமப் பித்து மிக, இரண்டு மார்பகங்களும் குலுங்கி அசைய, இடை நெகிழ்ந்து வருந்த, இனிமையான வாயூறலைப் பருகி, மாதர்களின் தோள்களை இன்பச் சுவையுடன் அணைந்து சேர்ந்து என் புத்தி கெட்டுப் போனாலும், தங்க மயமான உன்னுடைய திருவடிகளை நான் மறக்க மாட்டேன். விரிந்து பரந்து அசைகின்ற கடலும் கலக்கம் உற, ஆலகால விஷம் தான் மீண்டும் பிறந்து விட்டதோ என்று தேவர்கள் அச்சமுற்று உள்ளம் பயந்து, திண்மையும் குலைந்து, உனது நறு மணம் வீசும் திருவடிகளைப் பணிந்து வணங்கி, முறையோ என்று ஓலமிட்டு இன்னது சொல்லுவதென்று அறியாது சிந்தை வாடி நிற்க, வேலைச் செலுத்திய வீரனே, சிறந்த பூமிகள் எல்லாம் குலுங்கி அசையும்படியாக வந்த தோகை உடைய, ஒப்பற்ற பெரிய சிகண்டி என்னும் பெயரை உடைய மயில் மேல் வீற்றிருந்து விளங்கி, உலகத்தைக் காத்த பெருமாளே. 

பாடல் 1277 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தான தான, தனதன தான தான     தனதன தான தான ...... தனதான

வரிவிழி பூச லாட இருகுழை யூச லாட     வளர்முலை தானு மாட ...... வளையாட 
மணிவட மாலை யாட முருகவி ழோதி யாட     மதுரமு தூறி வீழ ...... அநுராகம் 
இருவரு மேக போக மொருவர்த மாக மாக     இதமொடு கூடி மாயை ...... படுபோதும் 
இருகர மாறு மாறு மறுமுக நீப மார்பு     மிருகழல் தானு நானு ...... மறவேனே 
திருநட மாடு காளி பயிரவி மோடி சூலி     திரிபுர நீற தாக ...... அனல்மோதுஞ் 
சிவைகயி லாச வாசி மலைமகள் நாரி பாரி     திருமுலை யாயி தாயி ...... யருள்பாலா 
குருபர நாத னாகி யரனொரு காதி லோது     குணநிதி யாசை நேச ...... முருகோனே 
குறமக ளார பார முகிழ்முலை மீது தாது     குலவிய மாலை மேவு ...... பெருமாளே.

ரேகைகளைக் கொண்ட கண்கள் காமப் போரை விளைவிக்க, இரண்டு குண்டலங்களும் ஊஞ்சல் ஆடுவது போல் ஆட, எழுந்தோங்கு மார்பகங்களும் ஆட, வளையல்கள் ஆட, ரத்தின சரங்களாகிய மாலைகள் ஆட, நறுமணம் வீசிக் கமழும் கூந்தல் ஆடி அலைய, இனிமையான அமுதம் ஊறுகின்ற மொழிகள் சிதறி வெளிவர, காமப் பற்றுடன் ஆணும் பெண்ணுமாகிய இருவரும் ஒன்றாய்க் கலத்தலில் இருவர் உடல்களும் ஓருடலாக, இவ்வாறு இன்ப சுகத்துடன் கூடிப் புணர்ந்து உலக மாயையில் நான் அகப்பட்டிருக்கும் போதும், பெருமை பொருந்திய உனது பன்னிரண்டு கைகளும், ஆறு திரு முகங்களும், கடப்ப மாலை அணிந்துள்ள மார்பும், இரண்டு திருவடிகளும் நான் மறக்க மாட்டேன். திருநடனம் ஆடுகின்ற காளி, பைரவி, துர்க்கை, சூலம் ஏந்தியவள், திரிபுரங்களையும் சாம்பல் ஆகும்படி நெருப்பை வீசித் தாக்கிய சிவாம்பிகை, கைலாயத்தில் வாழ்பவள், இமயமலையின் குமாரி, நா¡£மணியாகிய பெரியவள், திருமுலைப் பால் தந்த தாய் பார்வதி பெற்றருளிய குழந்தையே, குருபர மூர்த்தியாய் சிவபெருமானது செவியில் பிரணவத்தை உபதேசம் செய்த குணச் செல்வனே, அன்பும் நண்பும் மிகக் கொண்ட முருகவேளே, குறமகளாகிய வள்ளியின் முத்துமாலை அணிந்ததும், பாரமானதும், வெளித் தோன்றுவதுமான மார்பகங்களின் மேல், மகரந்தப் பொடி படியும் உனது மாலைகள் பொருந்தப் பெற்ற பெருமாளே. 

பாடல் 1278 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆனந்த பைரவி தாளம் - சதுஸ்ர மட்யம் - கண்டநடை - 25

தனதனன தனதனன தனதனன தனதனன     தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான

விழையுமனி தரையுமுநி வரையுமவ ருயிர் துணிய     வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும் 
விரையளக முகிலுமிள நகையும்ருக மதகனவி     சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டா£கச் 
சுழிமடுவு மிடையுமழ கியமகளிர் தருகலவி     சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந் 
தொலைவில்பிற வியுமகல வொருமவுன பரமசுக     சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ 
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் வயிரமிடை     யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்பன் 
னிருகருணை விழிமலரு மிலகுபதி னிருகுழையும்     ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும் 
மொழிபுகழு முடைமணியு மரைவடமு மடியிணையு     முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும் 
முழுதுமழ கியகுமர கிரிகுமரி யுடனுருகு     முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர வும்பர்தந் ...... தம்பிரானே.

தம்மீது ஆசை கொண்ட மனிதர்களையும், முனிவர்களையும் கூட, அவர்களுடைய உயிரே அறுபடும்படி இரக்கமின்றி வெட்டிப் பிளந்து, மனத்தையும் பறித்துப் பிடுங்குகின்ற சிவந்த கண்களாகிய வேலும், நறு மணம் கொண்டுள்ள, மேகம் போல் கரிய கூந்தலும், புன் சிரிப்பும், கஸ்தூரி அணிந்த பெருத்த, அதிசயிக்கத் தக்க மார்பகங்களும், இனிக்கும் குரலும், தாமரை போன்ற குழிந்துள்ள கொப்பூழ்த் தடமும், இடுப்பும், இவை எல்லாம் கொண்டு அழகு நிறைந்த விலைமாதர்கள் தருகின்ற புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரிந்து, இந்த விதமாகத் தடை படுகின்ற கொடுமையான இடர் நிறைந்த வாழ்க்கையும், முடிவே இல்லாத பிறப்புக்களும் என்னை விட்டு நீங்க, ஒப்பற்ற மெளுனமாகிய, மேலான சுகமான, பரிசுத்தமான பெரிய திருவடி எனக்குக் கிடைக்குமாறு நீ அன்புடன் நினைக்கக் கூடாதோ? எழுத முடியாத எழிலுடைய ஆறு திரு முகங்களும், அழகிய நெற்றியும், வைரம் மத்தியில் பொதிக்கப்பட்டு அமைந்துள்ள செவ்விய சுட்டி முதலிய அணிகலன்களும், பரிசுத்தமான, நீண்ட பன்னிரண்டு கருணை பொழியும் கண் மலர்களும், விளங்கும் பன்னிரண்டு குண்டலங்களும், ரத்னக் காதணியும், தாமரை போன்ற கைகளும், செம்பொன்னால் ஆகிய பூணூலும், சொல்லிப் புகழத் தக்க உடை மணியும், அரையில் கட்டிய நாணும், இரு திருவடிகளும், முத்தாலான கிண்கிணியும், அழகிய மயிலும், திருக் கரத்தில் வேலாயுதமும், (இவ்வாறு) முழுதும் அழகு மயமாக உள்ள குமரனே, இமய மலையின் மகளாகிய பார்வதிக்காக மனம் நெகிழ்ந்த முக்கண்ணனாகிய சிவ பெருமான் பெற்ற நற்குணம் பொருந்திய பிள்ளையே, தேவர்களின் தம்பிரானே. 

பாடல் 1279 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானதன தாத்த தானதன தாத்த     தானதன தாத்த ...... தனதான

வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு     வீரமுனை யீட்டி ...... விழியார்தம் 
வேதனையில் நாட்ட மாகியிடர் பாட்டில்     வீழுமயல் தீட்டி ...... யுழலாதே 
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை     யாவலுட னீட்டி ...... யழியாதே 
ஆவியுறை கூட்டில் ஞானமறை யூட்டி     யானநிலை காட்டி ...... யருள்வாயே 
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்     கேள்சுருதி நாட்டி ...... லுறைவோனே 
கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு     கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே 
சேணினுயர் காட்டில் வாழுமற வாட்டி     சீதவிரு கோட்டி ...... லணைவோனே 
சீறவுணர் நாட்டி லாரவழல் மூட்டி     தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே.

வீணையில் இசையைப் பிறப்பித்து, ஆலகால விஷம் தாக்குதலைச் செய்யும் வீரத்தையும், கூர்மையையும் கொண்ட ஈட்டி போன்ற கண்களை உடைய விலைமாதர்களால் ஏற்படும் வேதனையில் கவனம் வைத்தவனாய், துன்பக் குழியில் விழுவதான காம மோகம் கூராகி மிகுந்து நான் திரியாமல், (தங்குவதற்கு) ஆதாரமாய் உள்ள வீட்டை விரும்பி, பொன்னை ஆசையுடன் சேர்த்து இங்ஙனம் பொழுதைப் போக்கி அழிந்து போகாமல், உயிர் வாசம் செய்யும் கூடாகிய இந்த உடலில் ஞான மறைப் பொருள்களை உபதேசித்து, நன்மை தருவதான நிலையைக் காட்டி அருள்வாயாக. கிணறு போல ஆழமாக ஊறுகின்ற, விரும்பப்படுவதான, ஞான மார்க்கத்தை நாடுபவர்கள் ஆராய்கின்ற வேதத்தில் உறைபவனே, கீத இசையுடன் வேத மொழி போன்ற திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைச் சூட்டிய நக்கீரருடைய இயற்றமிழைக் கேட்டருளிய கருணையாளனே, ஆகாயம் வரை உயர்ந்துள்ள வள்ளி மலைக் காட்டில் வசிக்கின்ற வேடப் பெண்ணாகிய வள்ளியின் குளிர்ந்த மலை போன்ற மார்பகங்களை அணைபவனே, கோபக் குணம் உடைய அசுரர்களுடைய நாட்டில் நிரம்ப நெருப்பை மூளச்செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த பெருமாளே. 

பாடல் 1280 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானனா தத்ததன தானனா தத்ததன     தானனா தத்ததன ...... தனதான

வேலைவா ளைக்கொடிய ஆலகா லத்தைமதன்     வீசுபா ணத்தைநிக ...... ரெனலாகும் 
வேதைசா தித்தவிழி மாதரா பத்தில்விளை     யாடிமோ கித்திரியும் ...... வெகுரூப 
கோலகா லத்தைவிட லாகிமா றக்குணவி     காரமோ டத்தெளிய ...... அரிதான 
கூறொணா தற்பரம ஞானரூ பத்தின்வழி     கூடலா கப்பெருமை ...... தருவாயே 
வாலிமார் பைத்துணிய ஏழ்மரா இற்றுவிழ     வாளிபோ டக்கருது ...... மநுராமன் 
வானுலோ கத்திலம ரேசனோ லிக்கவளை     யூதிமோ கித்துவிழ ...... அருள்கூரும் 
நீலமே னிக்குமரு காவுதா ரத்துவரு     நீசர்வாழ் வைக்களையு ...... மிளையோனே 
நேசமா கக்குறவர் தோகைமா னைப்புணரு     நீபதோ ளொப்பரிய ...... பெருமாளே.

வேலாயுதத்தையும், வாளையும், கொடுமையான ஆலகால விஷத்தையும், மன்மதன் செலுத்துகின்ற பாணங்களையும் ஒப்பாகச் சொல்லக் கூடிய துன்பம் தருவதை நிலை நாட்டுகின்ற கண்களை உடைய விலைமாதர்களின் ஆபத்தான சரசங்களில் விளையாடி, காமப் பற்று கொண்டு நிலை கெடுகின்ற பல வகையான ஆடம்பரங்களை விட்டு விட்டு, நல் வழிக்கு மாறி வரவும், குண வேறுபாடுகள் என்னை விட்டு நீங்கவும், தெளிந்து அறிவதற்கு அரிதானதும், எடுத்துச் சொல்லுவதற்கு முடியாததானதும், மேம்பட்டதானதும், ஞான மயமானதும் ஆன நெறி கூடும்படியான பெருமையைத் தந்து அருள்வாய். வாலியின் மார்பைப் பிளக்கவும், ஏழு மராமரங்கள் முறிந்து விழவும், அம்பைச் செலுத்த எண்ணம் கொண்ட மநுவம்சத்தில் வந்த ராமனாகிய திருமால், விண்ணுலகில் தேவர் தலைவனாகிய இந்திரன் அபயக் கூச்சலிட, சங்கை ஊதி, அந்த நாதத்தால் தேவர்கள் யாவரும் மயங்கி விழச்செய்த, அருள் மிகுந்துள்ள நீல நிறக் கண்ணனாகிய* திருமாலுக்கு மருகனே, மேம்பாட்டுடன் படாடோபமாக வாழ்ந்து வந்த இழிந்தோர்களாகிய அசுரர்களுடைய வாழ்வை ஒழித்து எறிந்த இளையவனே, அன்பு கூடும்படி, மயில் போன்ற குறப்பெண்ணாகிய மான் அனைய வள்ளியைத் தழுவும் கடப்ப மாலை அணிந்த தோளின் வலிமைக்கு இணை இல்லாத பெருமாளே. 
* இந்திராணி பாரிஜாதப் பூவை மானிடப் பெண்ணாகிய சத்யபாமைக்கு (கண்ணனின் தேவிக்குக்) கொடுக்கத் தகாது என, சத்யபாமையின் வேண்டுகோளுக்கு இரங்கி கருடன் அச்செடியைப் பறித்து சத்யபாமையின் வீட்டில் நட்டார். இந்திரன் முதலான தேவர்கள் சினந்து கண்ணனோடு போர் செய்ய, கண்ணன் சங்க நாதம் ஊதித் தேவர்களை மயங்கி விழச் செய்தார்.

பாடல் 1281 - பொதுப்பாடல்கள் 
ராகம் - அஸாவேரிதாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்

தத்ததன தானத் ...... தனதான

இத்தரணி மீதிற் ...... பிறவாதே 
எத்தரொடு கூடிக் ...... கலவாதே 
முத்தமிழை யோதித் ...... தளராதே 
முத்தியடி யேனுக் ...... கருள்வாயே 
தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா 
சத்தசொரு பாபுத் ...... தமுதோனே 
நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே 
நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.

இந்தப் பூமியில் பிறக்காமலும், ஏமாற்றுபவர்களுடன் கூடிக் கலந்து கொள்ளாமலும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழையும் படித்துப் படித்துச் சோர்வடையாமலும், முக்திநிலையை எனக்குத் தந்தருள வேண்டுகிறேன். உண்மைப் பொருளாகிய மெய்ஞ்ஞானத்தை உபதேசம் செய்யவல்ல குருமூர்த்தியே, ஒலி (சப்தம்) வடிவிலே திகழ்பவனே, புதிய அமிர்தம் போன்றவனே, தினந்தோறும் எனக்கு நன்மையே செய்பவனே, என் வாழ்வின் நல்ல பெரும் செல்வமே, ஆடல் வல்லோனும், அகில உலகிற்கும் பேரொளியாய் விளங்குவோனுமான பெருமாளே. 

பாடல் 1282 - பொதுப்பாடல்கள் 
ராகம் - பூர்வி கல்யாணி தாளம் - மிஸ்ர ஜம்பை - 10

தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான

என்பந்த வினைத்தொடர் போக்கிவி ...... சையமாகி 
இன்பந்தனை யுற்றும காப்ரிய ...... மதுவாகி 
அன்புந்திய பொற்கிணி பாற்கட ...... லமுதான 
அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத ...... மருள்வாயே 
முன்புந்தி நினைத்துரு வாற்சிறு ...... வடிவாகி 
முன்திந்தி யெனப்பர தாத்துட ...... னடமாடித் 
தம்பந்த மறத்தவ நோற்பவர் ...... குறைதீரச் 
சம்பந்த னெனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே.

என்னைச் சூழ்ந்து கட்டியுள்ள வினை எனப்படும் சங்கிலித் தொடரை அறுத்து யான் வெற்றி பெற்று, இன்ப நிலையை அடைந்து, நிரம்பப் பிரியம் கொண்டு, அன்பு பெருகிய நிலையிலே பொற்கிண்ணத்தில் உள்ள பாற்கடல் அமிர்தத்திற்கு நிகரான முடிவான பேரின்பப் பொருள் மீது ஆசையைக் கொள்கின்ற ஆதார நிலையை நீ தந்தருள்வாயாக. முன்பு, சூரனை அழிக்க மனத்தினில் எண்ணி, உருவத்தில் சிறியனாக, பால குமாரனாக, அவதரித்து, சூர சம்ஹார காலத்தில் திந்தி என்ற தாளத்தில் பரத சாஸ்திரப்படி துடி என்னும் கூத்தினை நடனமாடி*, தங்களது பாச பந்தம் அகல்வதற்காக தவநிலையில் இருப்பவர்களது குறைகள் நீங்க, திருஞானசம்பந்தனாக** அவதரித்து தமிழை நிரம்பப் பருகி தேவாரமாக உலகுக்குத் தந்த பெருமாளே. 
* முருகன் சிதம்பரத்தில் நடனமாடிய குறிப்பு பல திருப்புகழ்ப் பாடல்களில் வருகிறது.
** சைவக் குரவர் நால்வரில் ஒருவரான சம்பந்தர் முருகனின் அவதாரம் என்று சுவாமிகள் உறுதியாக நம்புகிறார்.

பாடல் 1283 - பொதுப்பாடல்கள் 
ராகம் - நடபைரவி தாளம் - திஸ்ர ஏகம் - 3

தனத்தத் தானத் ...... தனதான

கருப்பற் றூறிப் ...... பிறவாதே 
கனக்கப் பாடுற் ...... றுழலாதே 
திருப்பொற் பாதத் ...... தநுபூதி 
சிறக்கப் பாலித் ...... தருள்வாயே 
பரப்பற் றாருக் ...... குரியோனே 
பரத்தப் பாலுக் ...... கணியோனே 
திருக்கைச் சேவற் ...... கொடியோனே 
செகத்திற் சோதிப் ...... பெருமாளே.

மீண்டும் கருவிலே பிறக்கவேண்டும் என்ற ஆசையில் ஊறி மறுபடி பிறக்காமலும், மிகவும் கஷ்டங்களை அடைந்து யான் அலைந்து திரியாமலும், உன் அழகிய திருவடிகளாம் முக்தி அனுபவத்தை யான் சிறக்கும்படியாக என்னை ஆசீர்வதித்து அருள்வாயாக. ஆசைப் பெருக்கு இல்லாதவர்களுக்கு உரிமையானவனே, மேலானதாய் யாவற்றையும் கடந்து நிற்கும் பொருளுக்கு அருகில் உள்ளவனே, திருக்கரத்தில் சேவற்கொடியை ஏந்தியவனே, இவ்வுலகில் ஜோதி ரூபமாக விளங்கும் பெருமாளே. 

பாடல் 1284 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆரபி தாளம் - சங்கீர்ண த்ருபுடை /9 0 0 - எடுப்பு - 1 அக்ஷரம் தள்ளி

தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான

கருப்பை யிற்சுக் கிலத் துலைத்துற் பவித்து ...... மறுகாதே 
கபட்ட சட்டர்க் கிதத்த சித்ரத் தமிழ்க்க ...... ளுரையாதே 
விருப்ப முற்றுத் துதித்தெ னைப்பற் றெனக்க ...... ருதுநீயே 
வெளிப்ப டப்பற் றிடப்ப டுத்தத் தருக்கி ...... மகிழ்வோனே 
பருப்ப தத்தைத் தொளைத்த சத்திப் படைச்ச ...... மரவேளே 
பணிக்கு லத்தைக் கவர்ப்ப தத்துக் களித்த ...... மயிலோனே 
செருப்பு றத்துச் சினத்தை முற்றப் பரப்பு ...... மிசையோனே 
தினைப்பு னத்துக் குறத்தி யைக்கைப் பிடித்த ...... பெருமாளே.

கர்ப்பப் பையிலுள்ள சுக்கிலத்திலே (பெண் முட்டையிலே) அலைப்புண்டு மீண்டும் பிறந்து கலங்காமலும், வஞ்சனைமிக்க மூடர்களுக்கு இன்பம் தருவதான தமிழ்ப் பாடல்களைச் சொல்லாமலும், ஆசையுடன் துதித்து என்னைப் பற்றிக் கொள்வாயாக என்று என்னைக் குறித்து நீயே நினைக்க வேண்டுகிறேன். அடியார்களின் முன் வெளிப்படவும், அவர்களைக் கைவிடாது பற்றிக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் விருப்பத்துடன் வந்து மகிழ்ச்சி அடைபவனே, கிரெளஞ்சமலையைத் தொளைத்த சக்திவேலினை ஏந்திய போர்வீரனே, பாம்புக் கூட்டங்களை தனது பிளவுபட்ட பாதங்களுக்கு இடையே அகப்படுத்தியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போர்க்களத்தில் உன் கோபத்தை முற்றிலுமாக விரித்துக்காட்டிய புகழை உடையவனே, தினைப்புனத்திலே குறத்தி வள்ளியின் கையைப்பிடித்து பாணிக்கிரகணம் (திருமணம்) செய்து கொண்ட பெருமாளே. 

பாடல் 1285 - பொதுப்பாடல்கள் 
ராகம் - வாசஸ்பதி தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிடதக-2 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தனதனன தானத் ...... தனதான

கொடியமத வேள்கைக் ...... கணையாலே 
குரைகணெடு நீலக் ...... கடலாலே 
நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே 
நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே 
கடியரவு பூணர்க் ...... கினியோனே 
கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே 
அடியவர்கள் நேசத் ...... துறைவேலா 
அறுமுகவி நோதப் ...... பெருமாளே.

கொடுமை செய்யும் மன்மதனுடைய கரத்திலிருந்து விடும் மலர் அம்புகளாலே, அலை ஓசை மிகுந்து ஆரவாரிக்கும் பெரிய நீலக் கடலினாலே, நீண்டுயர்ந்த சோலையில் பாடிப் புகழ் பெற்ற குயிலினாலே, (உன்னைப் பிரிந்து) தன்னிலைமை கெட்டு நிலைகுலையும் மானொத்த இப்பெண்ணைத் தழுவமாட்டாயா? கடிக்கும் பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவனாருக்கு இனியவனே, ஆய கலைகள் அனைத்தையும் தெரிந்த உண்மை வித்தகனே, உன் அடியார்களின் பக்தியில் வாழ்கின்ற வேலனே, ஆறுமுகனே, திருவிளையாடல்கள் பல புரிந்த பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், குயில், மன்மதன், மலர்க் கணைகள் இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 1286 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானான தானதனத் ...... தனதான

கோடான மேருமலைத் ...... தனமானார் 
கோமாள மானவலைக் ...... குழலாதே 
நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான் 
நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ 
ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே 
ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே 
மாடேறு மீசர்தமக் ...... கினியோனே 
மாதானை யாறுமுகப் ...... பெருமாளே.

சிகரங்களைக் கொண்ட மேரு மலையை ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான வலைக்குள் பட்டுத் திரியாமல், நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக் கூடாதோ? நான் ஈடேறும்படி ஞானோபதேசம் செய்து அருளியவனே, பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே, ரிஷபத்தில் ஏறுகின்ற சிவபெருமானுக்கு இனியவனே, சிறந்த சேனைகளையும், ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே. 

பாடல் 1287 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சாரங்கா தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3

தனன தத்தன தாத்தன ...... தனதான

சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே 
சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி 
அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால் 
அருளெ னக்கினி மேற்றுணை ...... தருவாயே 
உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி 
உரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத் 
தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே 
சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே.

மதக் கொள்கையில் உள்ள பக்தி பயனற்றது என்று நினைக்காமல், உன் திருவடித் தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்பிய யான்மனம் பொருந்தி நிலைத்திருக்க, சற்குரு மூலமாகவும், சாஸ்திர மொழி நூல்கள் மூலமாகவும், நின்னருளை நீ எனக்கு இனிமேல் துணையாகத் தந்தருள்வாயாக. உமையின் முலை தந்தருளிய பாலை உண்டதன் காரணமாக சிவபிரானின் திருவருளை (தேவாரப் பதிகங்களில்) கூறுவதையே தனக்கு (திருஞானசம்பந்தருக்கு*) உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு, நல்ல உபதேசங்களைக் கொண்ட தமிழ் தன்னை கரை கண்ட பராக்கிரமசாலியே, சமணர்களை (வாதில் வென்று) கழுவேற்றிய பெருமாளே. 
* முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்ததாக அருணகிரிநாதர் பல இடங்களில் கூறியுள்ளார்.

பாடல் 1288 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனதன தாத்தனத் ...... தனதான

சருவிய சாத்திரத் ...... திரளான 
சடுதிக ழாஸ்பதத் ...... தமையாத 
அருமறை யாற்பெறற் ...... கரிதாய 
அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ 
நிருதரை மூக்கறுத் ...... தெழுபார 
நெடுதிரை யார்ப்பெழப் ...... பொருதோனே 
பொருளடி யாற்பெறக் ...... கவிபாடும் 
புலவரு சாத்துணைப் ...... பெருமாளே.

அது நன்கு பழக்கமான எல்லாச் சாத்திரங்களின் திரண்ட சாராம்சப் பொருளானது. ஆறு என்று விளங்குகின்ற ஆதாரங்களில்* பொருந்தி அடங்காதது அது. அரிய வேதங்களால் பெறுவதற்கு அரிதானது அது. இதயத்துக்கு எட்டாத அந்த உபதேச மொழியைப் பெறுகின்ற பாக்கியம் எனக்குக் கிட்டுமா? அரக்கர்களை அவமானம் செய்து, ஏழு பெரிய கடல்களிலும் பேரொலி உண்டாகுமாறு போர் செய்தவனே, உண்மைப் பொருளை உன் திருவடித் துணையால் பெறுவதற்காக பாடல்களைப் பாடும் புலவர்களுக்கு உற்ற துணைவனான பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 1289 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தனத்தத் தானன ...... தனதான

சினத்துச் சீறிய ...... வழிகாணச் 
சிரித்துப் பேசியு ...... மயல்பூண 
கனத்துப் போர்செயு ...... முலைதோணக் 
கலைக்குட் பாதியு ...... மறைவாக 
மனத்துக் காறுதல் ...... வருமாறு 
மலைப்பப் பேணியு ...... மிகவாய 
தனத்தைச் சூறைகொள் ...... மடவார்தம் 
சதிக்குப் போம்வழி ...... தவிர்வேனோ 
தெனத்தத் தாதென ...... எனவேபண் 
திருத்தத் தோடளி ...... யிசைபாடும் 
புனத்துக் காவல்கொள் ...... குறமாதின் 
புணர்ச்சிக் கேயொரு ...... வழிதேடி 
இனத்துக் காவல ...... ரறியாமல் 
இணக்கித் தோகையை ...... மகிழ்வோயென் 
றெனக்குத் தாளிணை ...... யருள்வாய்சூர் 
இறக்கப் போர்செய்த ...... பெருமாளே.

சீறிக் கோபித்தும், (வசப்படுத்த) வழி ஏற்பட்டவுடன் சிரித்தும் பேசியும், காம ஆசை உண்டாகும்படியாக, பருத்து விளங்கி காமப் போர் செய்யும் மார்பகம் பாதி தெரியும்படியும், ஆடையுள் பாதி மறையும்படியும் நின்று, (வந்தவருடைய) மனதுக்கு ஒரு ஆறுதல் உண்டாகும் பொருட்டு அவர்கள் மலைந்து மயங்கும்படி உபசரித்தும், பின்பு, மிகுந்த பொருளைக் கொள்ளை அடிக்கின்ற விலைமாதர்களுடைய வஞ்சனைச் சூழ்ச்சியில் அகப்படும் தீய நெறியைத் தவிர்க்க மாட்டேனோ? தெனத்த தாதென என்னும் பண்களை திருத்தமான முறையில் வண்டுகள் இசை பாடுகின்ற தினைப் புனத்தைக் காவல் செய்துவந்த குறப்பெண்ணாகிய வள்ளியை அணைவதற்கே ஒரு வழியைத் தேடி, அந்தக் குறக் கூட்டத்துக் காவலர்களுக்குத் தெரியாமல் மயில் போன்ற வள்ளியை இணங்க வைத்து மகிழ்ந்தவனே, என்றைக்கு எனக்கு உன் திருவடியைத் தந்து அருள் செய்வாய்? இறுதியில் சூரன் மாளும்படியாகச் சண்டை செய்த பெருமாளே. 

பாடல் 1290 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானத் தானன ...... தந்ததான

தீதுற் றேயெழு ...... திங்களாலே 
தீயைத் தூவிய ...... தென்றலாலே 
போதுற் றாடும ...... நங்கனாலே 
போதப் பேதைந ...... லங்கலாமோ 
வேதத் தோனைமு ...... னிந்தகோவே 
வேடப் பாவைவி ...... ரும்புமார்பா 
ஓதச் சூதமெ ...... றிந்தவேலா 
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.

இடையூறு செய்யவே எழுகின்ற சந்திரனாலும், நெருப்பை அள்ளி வீசுகின்ற தென்றல் காற்றாலும், தனது மலர்ப் பாணங்களைச் செலுத்தி விளையாடும் மன்மதனாலும், அறிவுள்ள என் பெண் துயர் உறலாமோ? வேத நாயகனாகிய பிரமனை கோபித்த தலைவனே, வேடுவர் மகளான வள்ளி விரும்புகின்ற திரு மார்பனே, கடலிடையே இருந்த மாமரத்தை (சூரபத்மனை) பிளந்தெறிந்த வேலாயுதனே, (வல்லவனாகிய உன் முன்னே) வாயில்லாத ஊமைகளாய் உள்ள தேவர்களின் பெருமாளே. 
இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.நிலவு, தென்றல், மன்மதன், மலர்ப் பாணங்கள் முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 1291 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தக-1, தகதிமி-2, தகதிமிதக-3

தய்யதன தானத் ...... தனதான

துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே 
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே 
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே 
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே 
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே 
செய்யகும ரேசத் ...... திறலோனே 
வள்ளல்தொழு ஞானக் ...... கழலோனே 
வள்ளிமண வாளப் ...... பெருமாளே.

செருக்குடன் வரும் மன்மத வேளின் கைகளிலிருந்து வரும் மலர்ப் பாணங்களினாலும், நீண்ட துன்பத்தைத் தரும் நீலநிறக் கடலாலும், மெதுவாக வந்து (தன்சோகக் குரலைக் காட்டும்) சோலையிலுள்ள குயிலினாலும், காதலால் உடல் உருகும் மான் போன்ற என் மகளை அணைத்துக் கொள்ள மாட்டாயா? இனிமையான தமிழில் பாடல்களைப் பாடவல்ல தெளிவு கொண்ட சம்பந்தப் பெருமானே, செம்மை வாய்ந்த குமரேசன் எனப் பெயர்பெற்ற பராக்கிரமசாலியே, வள்ளற் பெருமானாம் சிவபிரான் தொழுகின்ற ஞானத் திருவடிகளை உடையவனே, வள்ளிக்கு மணவாளனாம் பெருமாளே. 
குறிப்பு: முருகனிடம் காதல் கொண்டு வாடும் மகளுக்காக தாய் பாடும் பாட்டு.மன்மதன், அம்புகள், கடல், குயில் ஆகியவை விரகத்தைத் தூண்டுபவை என்பது குறிப்பு.

பாடல் 1292 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானதனத் ...... தனதான

தேனியல்சொற் ...... கணிமாதர் 
சேவைதனைக் ...... கருதாதே 
யானெனதற் ...... றிடுபோதம் 
யானறிதற் ...... கருள்வாயே 
வானவருக் ...... கரசான 
வாசவனுக் ...... கினியோனே 
ஆனைமுகற் ...... கிளையோனே 
ஆறுமுகப் ...... பெருமாளே.

தேனின் இனிமைத் தன்மையைக் கொண்ட, சொல்லழகு உடைய பெண்களுக்குப் பணிவிடை செய்வதை நான் சிந்தியாது, யான் எனது (அகங்காரம், மமகாரம்) என்னும் இரண்டு பாசங்களும் நீங்குகின்ற ஞானத்தை நான் உணர்ந்து அறிந்துகொள்ள அருள்வாயாக. விண்ணோர்களுக்கு அரசனான இந்திரனுக்கு இனிய நண்பனே, யானை முகமுடைய கணபதிக்குத் தம்பியே, ஆறு முகமுடைய பெருமாளே. 

பாடல் 1293 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ...; தாளம் -

தானதன தானனத் ...... தனதான

நாரியர்க ளாசையைக் ...... கருதாதே 
நானுனிரு பாதபத் ...... மமுநாட 
ஆரமுத மானசர்க் ...... கரைதேனே 
ஆனஅநு பூதியைத் ...... தருவாயே 
காரணம தானவுத் ...... தமசீலா 
கானகுற மாதினைப் ...... புணர்வோனே 
சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா 
தோகைமயில் வாகனப் ...... பெருமாளே.

பெண்கள் மீதுள்ள ஆசையை எண்ணாமல், நான் உனது இரண்டு தாமரைத் திருவடிகளை விரும்பித் தேட, நிறைந்த அமுதம் என்று சொல்லும்படி, சர்க்கரை, தேன் என்னும்படியான இனிய அனுபவ ஞானத்தைத் தருவாயாக. அனைத்துக்கும் காரணனாக (மூலப் பொருளாக) இருக்கும் உத்தம சீலனே, காட்டில் வளர்ந்த குறப் பெண்ணாகிய வள்ளியை அணைந்தவனே, சூரனது சுற்றம் இறந்து தூளாகும்படி சண்டை செய்த வேலாயுதனே, அழகிய கலாபத்தை உடைய மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாளே. 

பாடல் 1294 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கமாஸ் தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தான தனத்த ...... தனதான

நாளு மிகுத்த ...... கசிவாகி   ஞான நிருத்த ...... மதைநாடும்      ஏழை தனக்கு ...... மநுபூதி         ராசி தழைக்க ...... அருள்வாயே 
பூளை யெருக்கு ...... மதிநாக   பூண ரளித்த ...... சிறியோனே      வேளை தனக்கு ...... சிதமாக         வேழ மழைத்த ...... பெருமாளே.

நாள்தோறும் மிகுந்த அன்பு ஊறி நெகிழ்ந்த மனத்தினனாய், உனது நடனக் கோலத்தைக் காண விரும்பும் எளியோனாகிய எனக்கும் அனுபவ ஞானம் என்னும் பாக்கியம் பொருந்தி பெருகி விளங்க அருள் புரிவாயாக. பூளைப்பூ, எருக்கு இலை, பிறைச் சந்திரன், பாம்பு ஆகியவற்றை சடையிலே அணிந்துள்ள சிவபெருமான் அளித்த குழந்தையே, உனக்கு வேண்டிய சமயத்தில்* சமயோசிதமாக யானையாகக் கணபதியை வரவழைத்த பெருமாளே. 
* வள்ளியை, யானையைக் காட்டி அச்சுறுத்தி, பின்பு ஆட்கொண்ட சாமர்த்தியம் கூறப்படுகிறது.

பாடல் 1295 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கந்தலவராளி தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமிதக-3

தத்தனத் தனனதத்த ...... தனதான

நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி   நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக      நத்தியு தமதவத்தி ...... னெறியாலே         லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே 
வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள   விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே      குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே         குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே.

தினமும் உன்னை மனத்தில் பொருத்தி நினைத்து மிகவும் விரும்பியும், தியானநிலை பெற்று வாழும் பெரியோரைத் துணையென்று அவர்களை நாடியும், சிறந்த நல்லொழுக்கத்தை நான் பற்றிய பயனாக இலக்கியத்தில் (பரத சாஸ்திரத்தில்) சொல்லியபடியும், நிருத்த இலக்கணப்படியும் உனது நிருத்த தரிசனத்தை* நீ எனக்கு அருள்வாயாக. வெற்றியும் பராக்கிரமும் கொண்டிருந்த அரக்கர் சுற்றத்தாருடன் இறக்கும்படிச் செய்த சக்ராயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனாகிய திருமாலுக்கு மருமகனே, குற்றம் இல்லாத பெரியோர்களின் மனத்தில் விளங்குபவனே, சேவற்கொடியை ஏந்திய பெருமாளே. 
* சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களில் நிருத்த தரிசனத்தில் முருகன் காட்சி தரவேண்டும் என்று அருணகிரிநாதர் வேண்டிப் பாடியுள்ளார்.

பாடல் 1296 - பொதுப்பாடல்கள் 
ராகம் - சாரங்கா / குறிஞ்சி தாளம் - அங்கதாளம் - 8 கண்டநடை /5 யு 0 
லகு - தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தக-1, திமிதக-2

தானந்த தானத்தம் ...... தனதான

நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே   நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே      மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்         மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே 
வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே   வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா      நாலந்த வேதத்தின் ...... பொருளோனே         நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

நீல நிறத்தைக் கொண்ட மேகத்தைப் போன்ற மயில் மேலே நீ எழுந்தருளிவந்த புறப்பாட்டுத் தரிசனத்தைக் கண்ட காரணத்தால் உன்மீது ஆசை கொண்ட இந்தப் பெண்ணுக்கு, உனது நறுமணம் மிக்க மார்பில் தங்கி விளங்கும் மாலையைத் தந்து அருள்புரிவாயாக. உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே, வீரம் மிக்க சூரர்களின் குலத்துக்கே யமனாக விளங்கியவனே, ரிக், யஜூர், சாம, அதர்வண என்ற நான்கு அழகிய வேதங்களின் பொருளாக விளங்கியவனே, எல்லா உயிர்களுக்கு உள்ளும் இருப்பவன் நான்தான் என்று பெருமை பாராட்டி மார்பினைத் தட்டிக் கொள்ளும் பெருமாளே. 
இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாட்டு.

பாடல் 1297 - பொதுப்பாடல்கள் 
ராகம் - கானடா தாளம் - சதுஸ்ர ஜம்பை - 7

தத்தத் தனான ...... தனதான

பட்டுப் படாத ...... மதனாலும்   பக்கத்து மாதர் ...... வசையாலும்      சுட்டுச் சுடாத ...... நிலவாலும்         துக்கத்தி லாழ்வ ...... தியல்போதான் 
தட்டுப் படாத ...... திறல்வீரா   தர்க்கித்த சூரர் ...... குலகாலா      மட்டுப் படாத ...... மயிலோனே         மற்றொப்பி லாத ...... பெருமாளே.

என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காததுபோல மறைந்திருக்கும் மன்மதனாலும், அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச்சொற்களினாலும், தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும், நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா? குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே, உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே, அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே, வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே. 
இது அகத்துறையில் முருகனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் வைத்து எழுதிய பாட்டு.மன்மதன், மலர்க்கணை, மாதர்களின் வசை, நிலவு போன்றவை தலைவியின் காதலை வளர்ப்பன.

பாடல் 1298 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ராமப்பரியா தாளம் - திஸ்ர ஏகம் - 3

தனனத் தத்தன ...... தனதான

பரவைக் கெத்தனை ...... விசைதூது   பகரற் குற்றவ ...... ரெனமாணுன்      மரபுக் குச்சித ...... ப்ரபுவாக         வரமெத் தத்தர ...... வருவாயே 
கரடக் கற்பக ...... னிளையோனே   கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா      அரனுக் குற்றது ...... புகல்வோனே         அயனைக் குட்டிய ...... பெருமாளே.

(அடியார் சுந்தரருக்காக) பரவை நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது போய் சொல்வதற்கு உடன்பட்டவர் இவர் (அதாவது இந்த முருகனின் தந்தையாகிய சிவபிரான்) என்னும் புகழினைப் பெற்ற உனது குலத்துக்கு ஏற்ற தகுதியும் பெருமையும் கொண்ட பெரியோனாக நீயும் விளங்கி, வரங்களை எனக்கு நிரம்பத் தருவதற்காக இங்கு எழுந்தருளி வருவாயாக. மதம்பாயும் சுவட்டை உடைய யானை முகத்தவனும், கற்பக விருட்சம்போலக் கேட்டதை அளிக்கும் கணபதியின் தம்பியே, மான் போன்றும் வில் போன்றும் கண்களை உடைய குறமகள் வள்ளியின் கணவனே, சிவபிரானுக்கு அழிவில்லா உண்மைப் பொருளை உபதேசித்தவனே, பிரமனைக் கைகளால் குட்டின பெருமாளே. 

பாடல் 1299 - பொதுப்பாடல்கள் 

ராகம் - கல்யாணி தாளம் - அங்கதாளம் - 8 கண்டஜம்பை - 15யு 0 
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3

தனதனன தாத்தனத் ...... தனதான

பிறவியலை யாற்றினிற் ...... புகுதாதே   பிரகிருதி மார்க்கமுற் ...... றலையாதே      உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே         உனதுபத காட்சியைத் ...... தருவாயே 
அறுசமய சாத்திரப் ...... பொருளோனே   அறிவுளறி வார்க்குணக் ...... கடலோனே      குறுமுனிவ னேத்துமுத் ...... தமிழோனே         குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே.

பிறவி என்ற அலைகள் வீசும் ஆற்றுவெள்ளத்தில் மீண்டும் புகாமல் இருக்க, இயற்கை செலுத்தும் வழியில் சென்று இஷ்டப்படி திரியாமல் இருக்க, உறுதியான குருவின் உபதேச மொழியின் உண்மைப் பொருளைத் தந்து, உனது திருவடிகளின் தரிசனத்தை அருள்வாயாக. ஆறு சமயங்களின்* சாத்திரங்களுடைய சாரமாய் நிற்பவனே, தம் அறிவிலே உன்னை அறிந்தவர்களுக்கு நற்குண சமுத்திரமானவனே, குறுமுனி அகத்தியர் புகழும் முத்தமிழ் வித்தகனே, குமர குருவே, கார்த்திகைப் பெண்களின் பெருமாளே. 
* ஆறு சமயங்கள் - காணாபத்யம், செளரம், சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம்.

பாடல் 1300 - பொதுப்பாடல்கள் 
ராகம் - ஆபோகி தாளம் - அங்கதாளம் - 9 
தகிடதக-2 1/2, தகதமி-2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான

புத்தகத் தேட்டிற் றீட்டி ...... முடியாது   பொற்புறக் கூட்டிக் காட்டி ...... யருள்ஞான      வித்தகப் பேற்றைத் தேற்றி ...... யருளாலே         மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே 
தத்தைபுக் கோட்டிக் காட்டி ...... லுறைவாளைச்   சற்கரித் தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே      கைத்தலத் தீக்குப் பார்த்து ...... நுழையாத         கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே.

புத்தகங்களிலும் ஏட்டிலும் எழுத முடியாத பொருளை, அழகு பொருந்தக் கூட்டுவித்துக் காட்டியும், அருள்மயமான ஞான நன்மைப் பாக்கியத்தை எனக்குத் தெளிய வைத்தும், உன் திருவருளால் பக்குவமாக எனக்கு அதைக் கூட்டிவைத்தும் என்னைப் பாதுகாக்க நீ நினைத்தருள வேண்டுகிறேன். கிளிகளை அவை தினைப்புனத்தில் இருக்கும் இடம் தேடிச் சென்று விரட்டி அந்தக் காட்டில் வசித்தவளாம் வள்ளியை உபசரித்து, பாராட்டி, பேரும் புகழும் பெற்றவனே, ஈக்கள், வண்டுகளின் கும்பல் ஆரவாரத்துடன் ஒலி செய்து உள்ளே புகமுடியாதபடி நெருக்கமான கற்பகத் தோட்டங்கள் நிறைந்த தேவலோகத்தைக் காத்த பெருமாளே.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.