LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[176-200]

பாடல் 176 - பழநி
ராகம் - சாருகேசி ; தாளம் - ஆதி - 2 களை
தனனத் தனதன தனதன தந்தத்
     தனனத் தனதன தனதன தந்தத்
          தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான
புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்
     கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்
          புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன் 
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்
     கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்
          புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ 
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்
     செவியுட் பிரணவ ரகசிய மன்புற்
          றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா 
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்
     கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்
          டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும் 
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்
     சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்
          புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப் 
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்
     குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்
          புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா 
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்
     கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்
          பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே 
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்
     கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்
          பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.
பூமிக்கு உடுக்கப்படும் ஆடை எனப் பரந்துள்ள அந்த எட்டுத் திக்குகளிலும் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர், எட்டுக் கண்களை உடையவரும், சுத்தமான நூற்றிதழ்த் தாமரையில் நிலையாக இருப்பவருமாகிய பிரமனாகிய நான்கு வேதத்தோன், திரிபுரங்கள் அழிந்து எரி கொள்ளும்படி நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வீசி, வன்மையுடன் சற்றுச் சிறிய புன்னகையைக் கொண்ட அற்புதத் தலைவரும், பாவங்களை அழிக்கவல்லவருமான பரம சிவன், ஆக இந்த ஒப்பற்ற மூவர்களுடைய சித்தம் நிறைந்து தெளிவுறும் வண்ணம், அவர்களது மேலான செவிகளில், பிரணவப் பொருளை, ஆர்வமாக (உனது திரு வாயில் தோன்றிய) உபதேச மொழிகளால் விளக்கிய, குழந்தை உருவில் வந்த குரு நாதனே, போருக்கு எதிர்த்து வந்த அசுரர்கள் தமது படைகளைக் கொண்டு சண்டைக்கு வலிய இடம் தந்ததால், அவர்களுடைய குலம் முழுவதும் அழியும்படிச் செய்தும், உக்கிரமாக, கோபம் பொங்க, குலமலைகள் யாவும் பொடிபட்டு உதிரச் செய்தும், விரிந்த அண்டச் சுவர்கள் பிளவுபட்டு அதிர்ச்சி அடையச்செய்தும், அண்டத்து உச்சி கிழிபட்டு, அதற்கு அப்பாலுள்ள ஆகாய வெளி எல்லாம் கிடுகிடு என்று சத்தம்படும்படி, போரிட்டு, கையில் உள்ள வேல் (பகைவர்களின்) கொழுப்பை உண்ண, ரத்த நீர் ஏழு கடல்களைக் காட்டிலும் அதிகமாகப் பெருக, குதிரையாகிய சிறந்த மயிலைச் செலுத்திய அற்புதக் குமரேசனே, பூமியில் மேன்மையும், தகுதியும் மிக்க செம் பொன் மலையாகிய மேருவை, தனித்து நீ வலம் வர, சிவபெருமான் அந்தப் பரிசுப் பழத்தை (உன் அண்ணன்) யானைமுகன் கணபதிக்குக் கொடுத்த நியாயமற்ற தன்மையாலே, (அந்தச்) சிவன் வெட்கம் கொள்ளும்படி, உள்ளத்தில் மிகக் கோபம்கொண்டு, அந்தப் பழத்தைத் தரவில்லை என்று, அருள் பாலிக்கும் திருச்செந்தூரிலும், பழனிச் சிவகிரியிலும் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
பாடல் 177 - பழநி
ராகம் - .....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
     பொருமிக் கலசத் ...... திணையாய 
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
     புணரத் தலையிட் ...... டமரேசெய் 
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
     கறிவிற் பதடிக் ...... கவமான 
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
     றடிமைக் கொருசொற் ...... புகல்வாயே 
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
     குணமெய்க் களிறுக் ...... கிளையோனே 
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
     குறுகித் தகரப் ...... பொரும்வேலா 
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
     பழமுற் றொழுகப் ...... புனல்சேர்நீள் 
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
     பழநிக் குமரப் ...... பெருமாளே.
பருத்துள்ள சிமிழ் போன்று, முத்து மாலை அணிந்த, கச்சு கிழியும்படி உள்ளே விம்மி, கலசத்துக்கு ஒப்பாகி, புளகம் கொண்டு, சந்தனக் கலவை பூண்டு செருக்குற்ற மார்பகம் சேர்ந்த உடலைப் புணர முனைந்து நின்று, (கலவிப்) போர் புரிகின்ற, ஒழுக்க முறையை தினமும் கொண்டு மயக்கம் பூணும் என் மீது, அறிவு இல்லாத, பயனில்லாத என் மீது, வீணான அசடனாகிய என் மீது, உயர்வு ஒப்பு இல்லாத உனது நல்ல அருளைக் காட்டி, அடிமையாகிய எனக்கு ஒப்பற்ற உபதேசச் சொல்லை புகன்று அருள்வாயாக. குடம் போன்ற கதுப்பினின்றும் மத நீர் கலங்கல் நீர் போல் ஒழுகும் யானை முகத்தை உடையவரும், குணமும் மெய்ம்மையும் கொண்டவருமான விநாயகக் கடவுளுக்குத் தம்பியே, (தேவர்கள் பொன்னுலகத்துக்குக்) குடி புக (தேவர்களைச் சூரனுடைய சிறையினின்று) மீட்டு, அசுரப் படைகளை நெருக்கி நொறுங்கி ஒழியச் சண்டை செய்த வேலனே, எங்கும் பரந்து அடர்ந்துள்ள நல்ல வாழைக் குலையில் பழங்கள் முற்றி தேன் ஒழுக, நீர் சேர்ந்த நீண்ட வயற் கரையில் மூங்கில்களின் முத்து உதிரும் நல்ல பழனியில் அமர்ந்த குமரப் பெருமாளே. 
பாடல் 178 - பழநி
ராகம் -....; தாளம் -
தனதனா தனதன தந்த தானன
     தனதனா தனதன தந்த தானன
          தனதனா தனதன தந்த தானன ...... தனதான
பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ
     வடிவமார் புளகித கும்ப மாமுலை
          பெருகியே யொளிசெறி தங்க வாரமு ...... மணியான 
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை
     அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ
          பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ ...... வருமானார் 
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
     மனையிலே வினவியெ கொண்டு போகிய
          யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ...... மயலாலே 
உருகியே யுடலற வெம்பி வாடியெ
     வினையிலே மறுகியெ நொந்த பாதக
          னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம ...... தருள்வாயே 
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ
     கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ
          அடலதோ டமர்புரி கின்ற கூரிய ...... வடிவேலா 
அரகரா வெனமிக அன்பர் சூழவெ
     கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ
          அவனியோர் நொடிவரு கின்ற காரண ...... முருகோனே 
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ
     உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ
          பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் ...... மருகோனே 
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ
     வனசமா மலரினில் வண்டு லாவவெ
          பழநிமா மலைதனி லென்று மேவிய ...... பெருமாளே.
பெரிய ஒரு யானையின் இரண்டு தந்தங்கள் போலவே வடிவம் கொண்டதாய், புளகம் பூண்டதாய், குடம் போன்ற பெருத்த மார்பகங்களின் மேல் நிறைந்து தோன்றும் ஒளி மிக்க பொன் மாலையும், அழகான பிறைச் சந்திரனோ எனத் தோன்றும் நெற்றியும், உயர்ச்சி மிக்க கூரிய வேலோ என்னும் படியாக இரண்டு கண்களும் நிறைந்து, முதுகு எல்லாம் விழுகின்ற கூந்தல் இரவு போல் இருள் போல் கருமை மிக்கதாய் தோற்றத்துடன் வருகின்ற விலைமாதர்கள், தமக்குச் சேருதற்கு உரிய பொருளைப் பெற்றுக் கொண்டு, (தம்மிடம்) வந்த ஆடவர்களை ஆய்ந்து பேசி விசாரித்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் ரகசிய உபாய எண்ணம் பொருந்திய வஞ்சகம் உள்ள பொது மகளிர் மீதுள்ள மோக மயக்கத்தால், மனம் உருகி உடல் எல்லாம் மெத்தக் கொதித்து வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள் புரிவாயாக. அருமை வாய்ந்த தேவர்கள் பொன் உலகத்துக்குக் குடி ஏறவும், கொடுமை வாய்ந்த அசுரர்களின் உடல்கள் அழியவும், வெற்றியுடன் போர் புரிந்த கூரிய வேலாயுதனே, அரஹரா என்னும் பேரொலியுடன் அன்பர்கள் சூழ, வலிமை வாயந்த மயிலின் மீது ஏறி அன்று (நீ) பூமியை ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த காரணனே, முருகனே, பருத்த கயிறு கொண்டு தாயாகிய யசோதை வீசிக் கட்ட, உறியில் தோய்ந்திருந்த தயிரை உண்டு விரும்பி பசி நீங்கி அருள் பூத்த மாயக் கண்ணனின் மருகனே, மேலோனே, சிறந்த ஷண்முக நதி* பக்கத்தில் சூழ்ந்து நெருங்க, தாமரையின் அழகிய மலர்களில் வண்டுகள் உலாவ, பழனியாகிய சிறந்த மலையில் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே. 
சில வரிகளின் இறுதி எழுத்துக்கள் தளை காரணமாக குறிலாக வரினும் நெடிலைக் குறிப்பன. உதாரணம்: போலவெ = போலவே, ஆரவெ = ஆரவே, வாடியெ = வாடியே.* திருவாவினன்குடிக்கு அருகே ஷண்முக நதி ஓடுகிறது.
பாடல் 179 - பழநி
ராகம் - பந்துவராளி ; தாளம் - அங்கதாளம் - 8 
தகிட-1 1/2, தகதிமி-2, 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான
போத கந்தரு கோவே நமோநம
     நீதி தங்கிய தேவா நமோநம
          பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும் 
பூணு கின்றபி ரானே நமோநம
     வேடர் தங்கொடி மாலா நமோநம
          போத வன்புகழ் ஸாமீ நமோநம ...... அரிதான 
வேத மந்திர ரூபா நமோநம
     ஞான பண்டித நாதா நமோநம
          வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான 
மேனி தங்கிய வேளே நமோநம
     வான பைந்தொடி வாழ்வே நமோநம
          வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய் 
பாத கஞ்செறி சூரா திமாளவெ
     கூர்மை கொண்டயி லாலே பொராடியெ
          பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே 
பாதி சந்திர னேசூ டும்வேணியர்
     சூல சங்கர னார்கீ தநாயகர்
          பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர் 
ஆதி சங்கர னார்பா கமாதுமை
     கோல அம்பிகை மாதா மநோமணி
          ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி 
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ
     கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய
          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.
ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி, நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி, இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி, அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி, வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி, தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி, அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி, மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி, வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி, தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி, வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி, உனது திருவருளைத் தந்து உதவுவாயாக. தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து, பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே, பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும், திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும், வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமான முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும், அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும், அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவி அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட, அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்த திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமாளே. 
பாடல் 180 - பழநி
ராகம் - ....; தாளம் -
தந்ததன தனனா தனந்த
     தந்ததன தனனா தனந்த
          தந்ததன தனனா தனந்த ...... தனதான
மந்தரம தெனவே சிறந்த
     கும்பமுலை தனிலே புனைந்த
          மஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசி 
மன்றுகமழ் தெருவீ திவந்து
     நின்றவரை விழியால் வளைந்து
          வந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறி 
எந்தளவு மினிதா கநம்பு
     தந்துபொருள் தனையே பிடுங்கி
          யின்பமருள் விலைமா தர்தங்கள் ...... மனைதேடி 
எஞ்சிமன முழலா மலுன்றன்
     அன்புடைமை மிகவே வழங்கி
          என்றனையு மினிதா ளஇன்று ...... வரவேணும் 
விந்தையெனு முமைமா துதந்த
     கந்தகுரு பரதே வவங்க
          மென்றவரை தனில்மே வுமெந்தை ...... புதல்வோனே 
மிஞ்சுமழ கினிலே சிறந்த
     மங்கைகுற மடமா துகொங்கை
          மென்கிரியி லிதமா யணைந்த ...... முருகோனே 
சிந்தைமகிழ் புலவோர் கள்வந்து
     வந்தனைசெய் சரணா ரவிந்த
          செந்தமிழி லுனையே வணங்கு ...... குருநாதர் 
தென்றல்வரை முநிநா தரன்று
     கும்பிடந லருளே பொழிந்த
          தென்பழநி மலைமே லுகந்த ...... பெருமாளே.
மந்தர மலை என்னும்படி சிறந்த குடம் போன்ற மார்பகத்தின் மேல் பூசிய மஞ்சளின் நறு மணம் வீசிப் பொலிய தந்திர மொழிகளைப் பேசி, வாசனை கமழும் தெரு வீதியில் வந்து (அங்கு) நின்றவர்களை கண்களால் வளைத்து இழுத்து, தம்மிடம் வந்தவர்களை அருகில் நெருங்கி தங்கள் வியாபாரத் தொழிலை விளக்கிக் கூறி, முழுமையும் இனிமையாக தம்மை நம்பச் செய்து, (அவர்களுடைய) பொருளைக் கைப்பற்றி, சிற்றின்பம் கொடுக்கும் பொது மகளிர்களின் வீடுகளைத் தேடி, கெட்டுப்போய் மனம் திரியா வகைக்கு உன்னுடைய அன்புச் செல்வத்தை நிரம்ப எனக்குக் கொடுத்து என்னையும் இனிமையுடன் ஆண்டருள நீ இன்று வர வேண்டும். அற்புத மாதாவாகிய பார்வதி என்னும் உமா தேவி பயந்தருளிய கந்தனே, குருபர தேவனே, வெள்ளியங் கிரியில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய சிவ பெருமானின் மகனே, மேம்பட்டு அழகில் சிறந்த மங்கை, குறவர் பெண்ணாகிய வள்ளியின் மார்பாகிய மென்மை வாய்ந்த மலையை இன்பத்துடன் அணைந்த முருகனே, உள்ளம் மகிழ்ந்த ஞானிகள் வந்து வணங்குகின்ற திருவடித் தாமரைகளை உடையவனே, செந்தமிழில் (பாடல்கள் பாடி) உன்னையே வணங்கும் குரு நாதராகிய, பொதிய மலை முனிவர் அகத்தியர் அன்று கும்பிட, நல்ல அருளை நிரம்பப் பொழிந்த, அழகிய பழனி மலையின் மேல் விரும்பி வீற்றிருக்கின்ற பெருமாளே. 
பாடல் 181 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
     தனதனன தந்த தந்த ...... தனதான
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
     மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே 
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த
     மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி 
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து
     இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும் 
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து
     னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ 
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை
     திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத 
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்
     செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர் 
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற
     பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே 
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க
     பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.
நறு மணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் ஏவி விட, செய்த வினையின் பயனை அனுபவிக்க, மாலை நேரத்து சந்திரனைப் போன்ற வடிவத்துடன் (இவ்வுலகில்) பிறந்து, முன் செய்த கொடு வினைகளால் வந்த வகையை மறந்து, எழுந்து (தாயின்) முலைப் பாலைப் பருகி அழகிய குழந்தையாக வளர்ந்து, மலை போல் வடிவை அடைந்து, பெரிய காம மயக்குடன் வாடி, பொது மகளிருடைய வீடுகளில் புகுந்து இரவும் பகலும் அதே வேலையாயிருந்து, ஒடுங்கி அசடன் நான் நல் வினை, தீ வினை இரண்டும் சார்ந்த இந்தப் பிறப்பு, இறப்பு என்பவற்றை விட்டொழித்து உனது இரண்டு திருவடிகளைத் தொழும் பேற்றை என்று அடைவேனோ? லக்ஷ்மியாகிய சீதையோடு (அயோத்தி நகரை விட்டு) நீங்கி இருள் மிகுந்த காட்டில் நடந்து, இலங்கை நகரை விளங்கும் நெருப்புக்கு இட்ட குரங்காகிய அனுமனைக் கை விடாத திடமான கருணை உள்ள ராமர், கம்சன் அனுப்பிய நய வஞ்சகச் சூழ்ச்சிகளை கூர்மையாக உணர்ந்து, அவைகளை வென்ற அறிவாளர் கிருஷ்ணர், அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும்*, பரம பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே, தாமரையின் மீது வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* குபேரன் புத்திரர்களான நளகூபரன், மணிக்¡£வன் என்ற இருவரும் மது அருந்தி, ஜலக்¡£டை செய்து, நாரதர் முன் மரம் போல் நிற்க, அவர் நீங்கள் மரமாகவே நிற்பீர் என்று சபித்தார். ஆகவே இருவரும் மருத மரங்கள் ஆயினர். யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து மரங்களுக்கு இடையே செல்ல, மரங்கள் முறிந்து விழுந்து, சாபம் நீங்கினர்.
பாடல் 182 - பழநி
ராகம் - கேதாரகெளளை; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
- எடுப்பு 1/2 தள்ளி 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
     தனத்ததன தான தந்த ...... தனதான
மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து
     வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே 
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி
     மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி 
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து
     மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே 
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து
     மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும் 
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து
     மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள் 
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி
     மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா 
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து
     செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே 
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த
     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல், உனக்குத் தொண்டு செய்யும் பணியையே பூண்டு, வகையாக அமைந்துள்ள நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல், நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து, சந்தேகம் அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து, வினையைக் கொடுக்கும் பாவச்செயல்களை அறவே அகற்றி, ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து, மேலான பொருளைக் கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி, கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி, மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து நடந்து, யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும் உன்னையே வணங்குதற்கு (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும். தியானித்தால் மனத்தில் வருபவனே என்று நினைத்து உன் அடைக்கலப் பொருளாக வந்து சேர்ந்து உன் மலர்த் திருவடியே பணிந்த முனிவர்களுக்கும், பிற வரசிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும், மனம் இரக்கப்பட்டு, பயமுறுத்தி வந்த சூரரை வென்ற கூரிய வேலனே, தினைப்புனத்துக்கு முன்னொருநாள் நடந்துசென்று குறவர்கொடி வள்ளியையே மணஞ்செய்து, இந்த உலகம் முழுவதையும் ஆட்கொண்ட பெரியோனே, செழிப்புற்ற, வளம் பொலிந்த மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள திருப்பழனியில் வீற்றிருக்க வந்த பெருமாளே. 
பாடல் 183 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதன தந்தத் தனத்த தானன
     தனதன தந்தத் தனத்த தானன
          தனதன தந்தத் தனத்த தானன ...... தனதான
மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
     சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
          மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக ...... மதியாலே 
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
     பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
          வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி ...... வலையாலே 
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
     வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
          நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு ...... மொயிலாலே 
நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
     வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
          நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு ...... மதிகேடாய் 
அலையநி னைந்துற் பநத்தி லேயநு
     தினமிகு மென்சொப் பனத்தி லேவர
          அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் ...... உலைவேனோ 
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
     கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய
          மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ ...... அருள்தாராய் 
பலபல பைம்பொற் பதக்க மாரமு
     மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு
          பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு ...... மணிவோனே 
பதியினில் மங்கைக் கதித்த மாமலை
     யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
          பழநியி லன்புற் றிருக்கும் வானவர் ...... பெருமாளே.
பூக்கள் அணிந்துள்ள கூந்தலின் கொண்டை முடியிலும், (பொது மகளாகிய) அவளுடைய பேசும் பேச்சின் இன்பச் செருக்கிலும், கொடுமை நிரம்பியுள்ள மன முறுக்கிலும், முகமாகிய நிலவாலும், பொருந்திய பெண்குறியிடத்திலும், நிறைந்துள்ள நறு மணம் வீசும் மார்பகங்களாகிய குடத்திலும், நன்றாக வலிய வந்து கலவியில் கூடிய நிலைகளிலும், கண்ணாகிய வலையிலும், நிலவொளி போலக் குளிர்ந்த ஒளி வீசும் உடம்பின் குலுக்காலும், அழகிய வளையல்களை அணிந்த சிவந்த கையில் கிலுக்கிடும் ஒலியாலும், பருத்த பொருள்களை பறிக்கின்ற அந்தப் பகட்டிலும், செய்கின்ற ஒய்யாரச் செயலிலும், தினமும் காட்டப்படும் கெட்ட குணத்திலும் என் வசம் அழிந்து அன்பு பூண்டு சேரும் சேர்க்கையிலும் ஒரு நிமிடம் கூடி ஒரு கணப் பொழுதிலே மிகவும் புத்தி கெட்டு, அலைய நினைத்து அதே தோற்றமாய் நாள் தோறும் அதிகமாக என் கனவில் அந்நினைவுகள் வர, என் அறிவு அழிந்து, அற்பனாகிய நான் தினமும் அழிவேனோ? முட்டாளாகிய என்னை, வஞ்சகத்தில் சாமர்த்தியமுள்ள குற்றவாளியை, உனது ஞான மயமாகிய கடைக் கண்ணால் விரும்பி நோக்கி, பூக்களைக் கொண்டு உன் அழகிய திருவடிகளையே நான் தொழுமாறு அருள் புரிய வேண்டுகின்றேன். பற்பல விதமான பசும் பொன்னாலாகிய பதக்கங்களையும், மாலைகளையும், அடிமையாகிய நான் சொல்லுகின்ற திருப்புகழ் என்னும் தமிழ்ப் பன்னீரையும், நறுமணம் மிக்கு வீசும் கடப்ப மாலையையும் அணிபவனே, தலங்களில் விஜய மங்கையிலும்*, கதித்த மலை** என்னும் குன்றுடன் (மற்றும்) சில குன்றுகளிலும் பொருந்தி வீற்றிருந்து, வாழ்வு சிறந்துள்ள பழனியில் அன்புற்று இருப்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* இவ்வூர் ஈரோட்டுக்கு அருகில் உள்ளது. 
** கதித்த மலை என்னும் பெயருடைய முருகன் கோயில் ஊத்துக்குழிக்கு அருகில் உள்ளது.
பாடல் 184 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன
     தனதன தத்தத் தனந்த தந்தன
          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி
     மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு
          முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ...... ரங்கமீதே 
முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்
     விழியிணை செக்கச் சிவந்து குங்கும
          ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ...... யெங்குமேவி 
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற
     வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள
          வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி ...... லொன்றிமேவி 
ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற
     முறுவளை யொக்கக் கலின்க லென்கவு
          முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ ...... ழிந்திடாதோ 
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி
     அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம
          சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு ...... மங்கைநீடு 
திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண
     கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்
          திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை ...... யண்டமீதே 
பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை
     திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்
          பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி ...... யன்புகூரும் 
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்
     பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு
          பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
மேகம் போல் கரிய கூந்தலில் வாசனை உள்ள நறு மணம் கொண்ட மலர்கள் நெருங்கும்படிச் சேர்ந்து இடம்பெறும்படி, தான் தொடர்ந்த மாதர்களின் உடலின் மேல் நக நுனியால் குறிகளை அழுந்தப் பதித்து, முகத்தில் வியர்வை உற்றுப் பரவ, செங்கயல் மீன் போன்ற கண் இணைகள் செக்கச் சிவக்க, குங்குமம், கஸ்தூரி இவைகளை அணிந்து செருக்குற்ற மார்பகங்களின் மேல் எல்லாம் பொருந்தி, வெளிப்பட்டுத் தோன்றும் இவ்வேசியர்கள் உயிரே போலும் எனக் கருதி, புயங்கள் இன்புறும்படியாக கூடல் செய்து, திரண்டுள்ளதும் வாசனை கலந்துள்ளதுமான படுக்கையில் அமர்ந்து, சுருக்கம் கொள்ளும் கட்டிற் படுக்கையில் பொருந்தியிருந்து, ஒளி விளங்கும் தாமரை போன்ற கைகளின் மேலுள்ள வளைகள் ஒருங்கே கலின்கல் என்று ஒலி செய்ய, மிக்க மோகம் கொண்டு (அவர்களுக்கு) இரக்கம் காட்டும் அன்பு ஒழியாதோ? உலகம் முழுதும் பெற்ற சங்கரி, அடியார்களுடைய உள்ளத்தில் உறைகின்ற சிறப்பு வாய்ந்த சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் உறைகின்ற மங்கை, நல்ல மங்கை, பெரிதும் விளங்கும் பச்சைப் பசேல் என்ற நிறம் உடையவள், யாழ் ஏந்திய கரத்தினள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், திருவருள் என்னும் நல்ல செல்வத்தைப் பரப்பி உலகைப் பாலிக்கும் பராசக்தி, அண்டங்களுக்கு அப்பால் பகலும் இரவும் அற்றுப் போன உயர்ந்த இடத்தில் உள்ள அம்பிகை, திரிபுரங்களை அழித்தவள், மும்மூர்த்திகளுக்கும் உயர்ந்தவளாய் மூவரும் அல்லரான சிவபெருமான் அன்பு கொள்ளுபடி தவம் செய்த பர தேவதை, அன்பு மிக்க பதிவிரதை, சிறந்த (சிவபெருமானுடைய) தலையில் விளக்கமுற்று அருளும் கங்கா நதி உற்பத்தியாகும் (இமய) மலையில் உதித்த பெண்ணாகிய பார்வதி தந்து அருளி குழந்தையே, பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தனிப் பெருந் தலைவனே. 
* இப்பாடலில் உமா தேவியின் புகழ் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் மேலானவள் என்பது குறிக்கத் தக்கது. மும்மூர்த்திகள் = பிரமன், திருமால், ருத்திரன். சிவபெருமான் இவர்களுக்கு அப்பாற்பட்டு பார்வதியின் பதியாகத் திகழ்கிறார்.
பாடல் 185 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதான தனதனன தனதான
     தனதனன தனதான ...... தனதான
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
     முதிர்விலிள தனபார ...... மடவார்தோள் 
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்
     மொழியுமது மதியாமல் ...... தலைகீழ்வீழ்ந் 
தகமகிழ விதமான நகையமுத மெனவூற
     லசடரக மெழவாகி ...... மிகவேயுண் 
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி
     னமுதுபரு கிடஞான ...... மருளாயோ 
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
     மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே 
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
     வருபனிரு கரதீர ...... முருகோனே 
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு
     பரமகுரு வெனநாடு ...... மிளையோனே 
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
     பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
மொட்டு நிலையில் உள்ள தாமரை மலர் போலவும், ஒளி வீசுகின்ற அழகிய பொன் மலை போலவும், முதிர்ச்சி அடையாத இளமையான மார்பகங்களை உடைய விலைமகளிரின் தோள்களில் முழுகி அமிழ்கின்ற சிற்றின்பம் அநுபவிக்கும் வீணன் என்று உலகில் உள்ளவர்கள் சொல்லுகின்ற பழிச்சொற்களை சிறிதும் பொருட்படுத்தாமல் தலை கீழாகச் சறுக்கி விழுந்து, உள்ளம் களிப்புற பலவகையான இன்பத்தைத் தரும் அமுதமே என்னும்படி இதழ் ஊறலைத் தரும் மூடர்களாகிய விலைமாதர்களின் வீடுகளுக்குப் போய் மிகவே உண்டு அழிகின்ற ஒரு தனியனாகிய நானும், யாவராலும் போற்றப்படும் உன்னுடைய இரண்டு திருவடிகளின் அமுதையும் உண்ணும்படியான ஞானத்தை எனக்கு அருள் புரிய மாட்டாயோ? மகர மீன்களை எறிகின்ற அலைகள் மோதுகின்ற ஒளி பொருந்திய கடலில் உள்ள விசாலமான நீர் கலங்கும் நீராகிக் கெட்டுப் போகும்படியாக வேலாயுதத்தைச் செலுத்தியவனே, சாரிசாரியாக வந்த அசுரர்களின் பெரிய சேனைகளின் கால அளவு முடியும்படி மயில் மேல் ஏறி வந்த பன்னிரண்டு கரங்களை உடைய தீரனே, முருகனே, விவரிப்பதற்கு முடியாதவர் எனச் சொல்லத்தக்க உமா தேவியின் கணவராகிய சிவபெருமான், என் உள்ளத்தில் வீற்றிருக்கும் மேலான குருவே என்று கூறி உன்னை விரும்பும் இளையவனே, சங்கு மணிகள் ஒளி வீசும் அழகிய மலையின் உச்சி சந்திரனைத் தீண்டும் உயரமான பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 186 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனன தனன தனத்த தனன தனன தனத்த
     தனன தனன தனத்த ...... தனதான
முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
     முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி 
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
     முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர் 
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
     வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய 
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
     மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே 
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
     சகடு மருத முதைத்த ...... தகவோடே 
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
     தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே 
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
     அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே 
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
     ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.
நன்றாக மானை காட்டுக்குள் துரத்தி, மாவடுவை (உப்பிலிட்டு) அழித்து, பெரிய கயல் மீன்களை குளத்தினிடையே (புகும்படி) ஓட்டி* (இவ்வாறு இவைகளுடன்) மாறுபட்டு வளர்கின்ற கண்களால் காம லீலைத் தந்திரங்களைச் செய்து, எனது ஒழுக்கம் கெடும்படி மயக்கி வருகின்ற பொது மகளிருடைய இனிமையான அமுதம் போன்ற சொற்களுக்கும், அணி முடி போன்றதும் கலவைச் சந்தனம் அணிந்ததுமான மார்பகத்துக்கும் வலிய இழுத்து என்னை அடிமைப் படுத்தி விடுகின்ற மாயம் நிறைந்த மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழு பொய்யன். களிக்கும்படி உன் திருவடியைத் தந்து எனக்கு அருள்வாயாக. திறமை வாய்ந்தவனும், (கயிலை) மலையை அசைத்து எடுத்தவனுமான அரக்கனாகிய ராவணனின் உடலை அழித்தும், (சகடாசுரனாக வந்த) வண்டிச் சக்கரத்தை உதைத்தும், மருத மரத்தையும் வீழ்த்தித் தள்ளிய பக்குவத்தால், இலைகளுடனும், மரமும் பூமியில் பட்டு அழியவும் கடும்போர் புரிந்த வில் ஏந்திய சமர்த்தனுமாகிய திருமாலின் மருகனே, பூமி அதிரும்படியாக விரைந்து நெருங்கி வந்து எதிர்த்த அசுரர்களின் உடலை வதைத்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள வைத்து எழுந்தருளியவனே. அருமையான புகழைக் கொண்ட பெருமை வாய்ந்த பழனி மலையில் அழகான மயிலை நடத்தும் பெருமாளே. 
* மாதர் கண்களுக்கு மான், மாவடு, கயல் மீன்கள் ஒப்பாகா என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.
பாடல் 187 - பழநி
ராகம் - ....; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தன
     தத்தத்தத் தத்தத் தத்தன
          தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு
     டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு
          முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே 
முக்யப்பச் சைப்பொட் டிட்டணி
     ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை
          முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத் 
தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்
     நச்சுக்கட் கற்புச் சொக்கியர்
          செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத் 
திட்டத்தைப் பற்றிப் பற்பல
     லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்
          சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ 
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
     னிச்சித்தத் திற்பத் தத்தொடு
          மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே 
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
     முக்கட்சித் தர்க்குப் புத்திர
          விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே 
நித்யக்கற் பத்திற் சித்தர்க
     ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்
          நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும் 
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு
     முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ
          நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே.
முத்தால் ஆன குச்சி அணிந்து குப்பி என்னும் சடை அணியை முடித்து, பூ மாலையைக் கொண்டையில் பின்னர்ச் சுற்றியும், முன் பக்கத்தில் அழகு விளங்க நெற்றியின் மேல் சிறந்த பச்சை நிறப் பொட்டை இட்டுக் கொண்டும், வகிட்டில் அணிகலமாகிய ரத்னச் சுட்டி, அழகிய பட்டுச் சேலை ஆகியவைகளை ஒழுங்காகவும் அலங்காரமாகவும் அணிந்து, நல்ல பேரழகு பொலிய, இனிமை தரும்படி சொல்லும் பேச்சு, பவளம் போன்ற வாயிதழ், விஷம் நிறைந்த கண், விபா£தமான கற்பனை உரைகள் (இவைகளைக் கொண்டு) மயக்குவிக்கும் விலைமகளிரின் சிமிழை ஒத்ததும் கச்சு அணிந்ததும் (ஆகிய) மேருமலை போன்ற மார்பகங்களை செவ்வையாகப் பற்றி பல விதமான நாணம் கொள்ளத் தக்க செயல்களுக்கு உட்பட்டு, மேற்கொண்டு அவர்கள் வலையில் என்னுயிர் மாட்டிக் கொண்டு மயங்கி கேடுற்று இவ்வாறு திரிவேனோ? அதிகமான துக்கத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக. கல்விக்குத் தலைவனே, பரம்பொருளே, முக்கண்ணராகிய சிவபெருமானுக்குப் பிள்ளையே, விசித்திரமான வெட்சிப் பூ மாலையை அணிபவனே, நித்ய பூமியில் உள்ள சித்தர்களும், எட்டுத் திசைகளில் உள்ளவர்களும், தியானத்தில் அன்பு பூண்ட பக்தர்களும், தேவர்களும், நெடுந் தூரத்தில் இருந்து மலர்களைக் கொண்டு வந்து உன் சந்நிதியில் வந்து நின்று அர்ச்சனை செய்து துதிக்க, பழனிப் பதியில் ஆட்சி பூண்டு மகிழ்ந்து உறைகின்ற பெருமாளே. 
பாடல் 188 - பழநி
ராகம் - பேஹாக்; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தானந்தன தானன தானன
     தானந்தன தானன தானன
          தானந்தன தானன தானன ...... தனதான
மூலங்கிள ரோருரு வாய்நடு
     நாலங்குல மேனடு வேரிடை
          மூள்பிங்கலை நாடியொ டாடிய ...... முதல்வேர்கள் 
மூணும்பிர காசம தாயொரு
     சூலம்பெற வோடிய வாயுவை
          மூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப் 
பாலங்கிள ராறுசி காரமொ
     டாருஞ்சுட ராடுப ராபர
          பாதம்பெற ஞானச தாசிவ ...... மதின்மேவிப் 
பாடுந்தொனி நாதமு நூபுர
     மாடுங்கழ லோசையி லேபரி
          வாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயே 
சூலங்கலை மான்மழு வோர்துடி
     வேதன்தலை யோடும ராவிரி
          தோடுங்குழை சேர்பர னார்தரு ...... முருகோனே 
சூரன்கர மார்சிலை வாளணி
     தோளுந்தலை தூள்பட வேஅவர்
          சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா 
காலின்கழ லோசையு நூபுர
     வார்வெண்டைய வோசையு மேயுக
          காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே 
கானங்கலை மான்மக ளார்தமை
     நாணங்கெட வேயணை வேள்பிர
          காசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக, உடலின் நடுவில் நான்கு அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை* என்னும் நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும் (ஒவ்வொரு நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை முதுகுத் தண்டிலுள்ள சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது) (நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை நிலையில்** (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும். நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து, (அவ்விடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும் அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக. திரி சூலம், கலைமான், மழுவாயுதம், ஒப்பற்ற உடுக்கை, பிரமனின் கபாலம் இவைகளுடன் பாம்பு, விளங்கும் தோடு, குழை இவை சேர்ந்துள்ள சிவபெருமான் பெற்ற முருகனே, சூரனுடைய கை, மார்பு, வில், வாள், அழகிய தோளும், தலையும் தூள்படும்படியாகவும், அவன் (தேவர்களைச் சிறையினின்றும் விடேன் என்று) செய்த சபதமும் பாழாகவும் வேலைச் செலுத்திய தலைவனே, மயில் வீரனே, காலில் அணிந்துள்ள கழலின் ஒலியும், சிலம்பொலியும், வீரக் காலணியின் இடிபோன்ற ஒலியும், யுக முடிவைக் காட்டும் ஓசைகளாகத் திகழும்படி நடனம் புரிபவனே, வள்ளிமலைக் காட்டில் வந்த கலை மானின் மகளாகிய வள்ளியை கூச்சம் ஏதுமின்றி அணைக்கின்ற தலைவனே, ஒளி வீசும் பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன..ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 189 - பழநி
ராகம் - சுப பந்துவராளி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான
மூல மந்திர மோத லிங்கிலை
     யீவ திங்கிலை நேய மிங்கிலை
          மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள் 
மோக முண்டதி தாக முண்டப
     சார முண்டப ராத முண்டிடு
          மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத 
கோல முங்குண வீன துன்பர்கள்
     வார்மை யும்பல வாகி வெந்தெழு
          கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக் 
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு
     ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு
          கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே 
பீலி வெந்துய ராலி வெந்தவ
     சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
          பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு 
பேணி யங்கெதி ராறு சென்றிட
     மாற னும்பிணி தீர வஞ்சகர்
          பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே 
ஆல முண்டவர் சோதி யங்கணர்
     பாக மொன்றிய வாலை யந்தரி
          ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா 
ஆர ணம்பயில் ஞான புங்கவ
     சேவ லங்கொடி யான பைங்கர
          ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.
மூல மந்திரமாகிய ஆறெழுத்தை (சரவணபவ) ஓதுவது என்பது என்னிடத்தில் கிடையாது. கொடுத்தல் என்பதும் அன்பு என்பதும் என்னிடம் கிடையாது. மெளனநிலை என்பதோ ஞானம் என்பதோ இங்கே கிடையாது. பெண்களின் மேல் மோகம் என்பது உண்டு. அந்த மோகத்தில் அதிக வேட்கை உண்டு. அவ்வேட்கையினால் செய்த குற்றங்கள் உண்டு. அக்குற்றங்களுக்காக நான் படவேண்டிய தண்டனையும் உண்டு. எல்லோரும் எனக்கு இட்ட மூகன் (கீழ்மகன்) என்ற பெயரும் உண்டு. அருளில் பயிற்சி இல்லாத விளையாட்டுக்கோலமும், குணக்கேடான துன்புறுத்துவோரின் கெட்ட ஒழுக்கமும் வெகுவாகப் பெருகி, வெந்து எழுகின்ற கோரமான கும்பி* என்ற நரகத்தில் விழுவதற்கான நினைவு கொண்டு, இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து திரிகின்ற என்னை அன்புடன் ஞான உள்ளம் படைத்த பெரியோருடன் சேரும் புத்திகூர்மையைத் தந்து இனி என்னை ஆண்டருள்வாயாக. மயிற் பீலி வெந்து, உயர்ந்துள்ள கமண்டல நீரும் கொதித்து** (நோயைக் குறைக்க வீசிய) அசோகக் கொழுந்தும் வெந்து, (அந்த அவமானத்தால்) ஊமைகள் போல் வாய் அடைத்த சமணர்கள் நெஞ்சிலே பயம் அடையுமாறு அவர்களோடு வாது செய்து (அந்தணர் வாழ்க என்று) அருள்வாக்கு எழுதப்பட்ட ஏடு யாவரும் போற்ற அங்கு எதிர் ஏறி வைகை ஆற்றில் செல்லவும், பாண்டிய மன்னனும் (திருநீற்றின் மகிமையால்) நோய் தீர்ந்து நலம் பெறவும், வஞ்சகச் சமணரும் உடல்கிழிய கழுமரத்தில் ஏறவும், வெற்றி கொண்ட திருஞானசம்பந்தராக அவதரித்த முருகப் பெருமானே, நஞ்சை உண்டவரும், முச்சுடர்களை அழகிய முக்கண்களில் ஏற்றவரும், ஆகிய சிவபெருமானின் பாகத்தில் பொருந்திய குமரி, பராகாச வடிவி, முதலும் முடிவுமாக நிற்கும் சங்கரியின் புதல்வனான குமரக் கடவுளே, வேதங்கள் போற்றிப் பயில்கின்ற ஞான குருவே, அழகிய சேவற்கொடியை ஏந்திய திருக்கரத்தனே, திரு ஆவினன்குடியில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே. 
* கும்பி என்பது ஏழு நரகங்களில் ஒன்று. பாவிகளைக் குயவரது சூளையில் இட்டு வாட்டும் நரகம்.
** சமணர்கள் பாண்டியனின் நோயைத் தணிக்க மயிற்பீலி, கமண்டல நீர், அசோகக் கொழுந்து முதலிய பொருட்களால் முயன்று தோல்வியடைந்த கதை இங்கு குறிப்பிடப்படுகிறது.
பாடல் 190 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
     தனதனன தனதனன ...... தனதான
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு
     முறுவல்தர விரகமெழ ...... அநுராகம் 
முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென
     முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச 
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
     அகமகிழ இருகயல்கள் ...... குழையேற 
அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்
     அலர்கமல மலரடியை ...... மறவேனே 
நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்
     நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா 
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
     நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே 
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
     மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே 
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு
     மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.
மணம் நிறைந்த கூந்தல் அவிழவும், மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ள, நிலவின் ஒளியை பற்கள் வீச, காம உணர்ச்சி உண்டாக, ஆசை வளர்ந்து பெருக, தன்வசம் அழிய, அசைந்து நிலை பெயரும் கை வளையல்கள் கலகல் என்று ஒலிக்க, முகமாகிய சந்திரன் சிறு வியர்வைத் துளிகளை வீச, அருமையான இனிய சொற்கள் பதற்றத்துடன் வர, வாயிதழினின்று வரும் ஊறலாகிய அமுதத்தை உண்டு மிகவும் உள்ளம் களிப்பு அடைய, இரு கயல் மீன் போன்ற கண்கள் காதளவும் பாய, அமர்க்களப் படும் படுக்கை மலர் அணையில் மேல் நான் துயில் கொண்டாலும், விரிந்த உனது தாமரைத் திருவடிகளை மறவேன். அசுரர்களோடு வந்த குதிரைகளும், கொல்லும் தன்மை கொண்ட யானைகளும், தேர் வரிசைகளும் நெறு நெறு என முறிந்து விழவும் செய்த கூரிய வேலாயுதனே, அமைந்துள்ள அருவமாகியும் உருவமாகியும் உள்ள குருராஜனே, குருபரனே, குமரனே, நீண்ட பெரிய வானத்து உச்சியில் உறைபவனே, வரும் அருவிகளில் நவ மணிகளும் மலர்களும் கமுக மரத்தின் மேல் சிதற தேன் ஒழுக்கம் பெருகும் வள்ளி மலையில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு பூரிக்கும் மார்பகங்களையும், இரண்டு புயங்களையும் அணைத்து மகிழ்கின்றவனே, பழனி மலையில் எழுந்தருளிய பெருமாளே. 
பாடல் 191 - பழநி
ராகம் - .....; தாளம் -
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
     முளரி முகையென இயலென மயிலென
          முறுவல் தளவென நடைமட வனமென ...... இருபார்வை 
முளரி மடலென இடைதுடி யதுவென
     அதர மிலவென அடியிணை மலரென
          மொழியு மமுதென முகமெழில் மதியென ...... மடமாதர் 
உருவ மினையன எனவரு முருவக
     வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய
          வுலையின் மெழுகென வுருகிய கசடனை ...... யொழியாமல் 
உவகை தருகலை பலவுணர் பிறவியி
     னுவரி தனிலுறு மவலனை யசடனை
          உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே 
அரவ மலிகடல் விடமமு துடனெழ
     அரிய யனுநரை யிபன்முத லனைவரும்
          அபய மிகவென அதையயி லிமையவ ...... னருள்பாலா 
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட
     அவனி யிடிபட அலைகடல் பொடிபட
          அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே 
பரவு புனமிசை யுறைதரு குறமகள்
     பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய
          பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே 
பரம குருபர எனுமுரை பரசொடு
     பரவி யடியவர் துதிசெய மதிதவழ்
          பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
வாசனை மிகுந்த கூந்தல் மேகம் எனவும், மார்பகங்கள் நறுமணமுள்ள தாமரை எனவும், சாயல் மயில் எனவும், பற்கள் முல்லை எனவும், நடை மடப்பம் பொருந்திய அன்னத்தின் நடை எனவும், இரண்டு கண்களும் தாமரை இதழ்கள் எனவும், இடை உடுக்கையே எனவும், வாய் இதழ் இலவ மலர் எனவும், இரண்டு அடிகளும் மலர் எனவும், பேச்சு அமுதம் எனவும், முகம் அழகிய சந்திரன் எனவும், அழகிய (விலை) மாதர்களின் உருவங்களை இவை இவை என்று உருவகப் படுத்திப் புகழ்ந்து, அவர்கள் கொடுக்கும் புணர்ச்சி இன்பத்தில் பொருந்த, உலையில் இடப்பட்ட மெழுகைப் போல் உருகிய குற்றவாளியாகிய என்னை எப்போதும் இன்பம் தரும் பல விதமான கலைகளையும் உணருதற்கு, பிறவிக் கடலில் கிடக்கும் இந்தக் கீழானவனுக்கு, மூடனுக்கு உனது சிலம்பணிந்த திருவடி இணைகளை பெறுவதற்கு அருள் புரிவாயாக. ஒலி மிகுந்த கடலில் அமுதத்துடன் விஷமும் தோன்ற, திருமாலும், பிரமனும், (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரன் முதலான எல்லாரும் அடைக்கலம் என மிகவும் ஓலமிட, அந்த விஷத்தை உண்ட கயிலை மலை தேவனாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே. போர் செய்த அசுரர்களின் உடல்கள் துணிக்கப்பட்டு விழ, பூமி இடியுண்ண, அலை கடல் பொடிபட, தேவர்கள் சிறையினின்று மீள, சக்தி வேலை ஒரு நொடிப் பொழுதில் செலுத்தியவனே, போற்றிச் சென்ற தினைப்புனத்தின் மீது இருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் பருத்த, அழகிய மார்பகங்களில் முழுகிய பன்னிரண்டு தோளனே, சங்குகள் விளையும் சரவண மடுவில் தாமரையில் எழுந்தருளிய முருகனே, மேலானவனே குருபரனே என்னும் புகழ் மொழிகளால் போற்றி செய்து வணங்கி அடியார்கள் துதிக்க, திங்கள் தவழும் பழனி மலையில் இனிதாக உறைகின்றவனே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 192 - பழநி
ராகம் - ரஞ்சனி ; தாளம் - அங்கதாளம் - 7 
- சதுஸ்ர ஜம்பை /40 
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3
தனதனன தாத்த ...... தனதான
     தனதனன தாத்த ...... தனதான
வசனமிக வேற்றி ...... மறவாதே
     மனதுதுய ராற்றி ...... லுழலாதே 
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே
     இகபரசெள பாக்ய ...... மருள்வாயே 
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே
     பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா 
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து, என் மனம் துயரம் தரும் வழிகளில் அலைந்து திரியாதிருக்கவும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை அருள் புரிவாயாக சிவபிரானது வேத சிவாகமங்களை அறிந்தவனே பழனிமலையில் எழுந்தருளியிருந்து அருள் புரியும் வேலனே அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும், தேவர்கள் நன்கு வாழும்படியாக சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே. 
பாடல் 193 - பழநி
ராகம் - ....; தாளம் -
தந்தன தந்தன தான தந்தன
     தந்தன தந்தன தான தந்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தனதான
வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
     வந்தவர் தங்களை வாதை கண்டவர்
          வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி 
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்
     தந்தக டம்பிக ளூற லுண்டிடு
          மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலே 
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்
     இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்
          சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதே 
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்
     கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்
          தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோ 
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட
     வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்
          கண்கள்சி வந்திட வேக லந்தரு ...... முறையாலே 
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை
     கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு
          கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனே 
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு
     மின்பமி குந்திட வேய ணைந்தருள்
          குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா 
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய
     பண்புத ருந்திரு வாவி னன்குடி
          குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ...... பெருமாளே.
வஞ்சனை மிகுந்த மாய வம்பு செய்பவர்கள். தம்மிடம் வந்த ஆடவர்களை துன்புறுத்துவோர். (உண்மைக்) காதல் இல்லாமல் பல அன்பு வார்த்தைகளைப் பேசி கட்டிலில் அமர்ந்து கலவி வேடிக்கைகளைத் தரும் பொல்லாதவர்கள். காமுகரின் வாயிதழ் ஊறலை உண்ணும் வேசியர்கள். கண்டிப்புடன் பேசும் வார்த்தைகளால் கவலையைத் தருகின்ற மோகத் துர் நடத்தையர். இனிமையான சொற்களை (வெளியில்) பேசி உள்ளத்தில் உருக்கம் இல்லாத விலைமகளிர். (இத்தகையோரின்) இணக்கத்தையே விரும்பினவனாகிய நான் தளராமல் (எப்போதும்) அவர்களிடத்தேயே உள்ளம் களிப்படைந்து, அவர்கள் கொஞ்சியும் நடனம் புரிந்தும் வேசை முண்டைகளாய் கொடுத்த சுகத்தையே விரும்பி உடல் மெலிந்து போவேனோ? கம்சன் ஏவிய சகடாசுரன் மாளும்படி அவனை வென்று, குருந்த மரத்தில் ஏறி கோபிகள் கண்கள் சிவக்க அவர்களுடன் ஊடாடி அரிய வகைகளாலே (அவர்களைப்) பார்த்தும் மகிழ்ந்தும் அழகாய் உடன் இருந்தும் இசை பாடி, (கண்ணனாக) விளங்கிய நாட்களில் அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும் மருகனே, யானையாகிய (ஐராவதம்) வளர்த்த வஞ்சிக் கொடி போன்ற தேவயானையையும், மான் பெற்ற மகளாகிய வள்ளியையும் இன்பம் பெருகவே அணைந்தருளும் மலை போல் வந்து அருளிய, கடப்ப மாலை முற்பட்டு விளங்கும் அழகிய மார்பனே, பூங்கொத்துக்கள் மலரும் குளங்கள் நிரம்பிய அழகு விளங்கும் (பழநி ஆகிய) திரு ஆவினன்குடியில் உள்ள குன்றுகளின் எல்லா இடத்திலும் விளங்கி வீற்றருளும் பெருமாளே. 
பாடல் 194 - பழநி
ராகம் - ராமப்ரியா; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2
தனனா தனனா ...... தனதான
     தனனா தனனா ...... தனதான
வரதா மணிநீ ...... யெனவோரில்
     வருகா தெதுதா ...... னதில்வாரா 
திரதா திகளால் ...... நவலோக
     மிடவே கரியா ...... மிதிலேது 
சரதா மறையோ ...... தயன்மாலும்
     சகலா கமநூ ...... லறியாத 
பரதே வதையாள் ...... தருசேயே
     பழனா புரிவாழ் ...... பெருமாளே.
வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும், கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று ஆராய்ந்து பார்த்தால் கைகூடாதது எது உண்டு? எந்தக் காரியம்தான் அவ்வாறு துதித்தால் நிறைவேறாது? பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம் ஒன்பது லோகங்களை* இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும். இதனால் வேறு பயன் ஏது? சத்திய சொரூபனே, வேதம் ஓதும் பிரமனும் திருமாலும் எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய், பழனிப்பதியில் வாழ்கின்ற பெருமாளே. 
* பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம், துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது.
பாடல் 195 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான
வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு
     வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே 
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து
     வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக் 
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று
     கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக் 
கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த
     கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய் 
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த
     புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே 
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த
     புதியமயி லேறு கந்த ...... வடிவேலா 
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி
     பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே 
பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
     பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.
தாயாருடைய உடல் வற்றுமாறு கருவில் இருந்து, அவளது ரத்தத்திலே திரட்சிபெற்று வளையவந்து, அவளது வயிற்றில் நீண்ட நாட்கள் துன்புற்று, இந்தப் பூமியின் மேல் மனித உருவுடன் பிறந்து, தினந்தோறும் வளர்ச்சி பெற்று, பதினாறு வயதை அடைந்து, ஆணழகனாக ஆகி, அழகிய மார்பகங்களை உடைய பெண்களின் வலையிலே அகப்பட்டு மிகவும் திரிந்து, அன்புடனே அப்பொது மகளிரைத் தழுவி, அவர்களுக்காக பணத்தைத் தேடி, பெரும் பொருள் யாவையும் இழந்து, மயக்கத்தில் அதிகமாக அலைந்த மூடனாகிய அடியேனை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்தருள்க. தினைப்புனத்தில் வசிக்கின்றவளும், ரகுநாதராகிய திருமாலின் திருமகளுமான வள்ளி தேவியின் இதழ் அமுதத்தைப் பருகிய புலவனே, மலர்க்கணையால் போர் புரிந்த மன்மதனைச் சாம்பலாகச் செய்த அருமையான சிவபிரான் மகிழ்ந்த புதுமையான மயில் வாகனத்தின் மீது ஏறும் கந்தனே, கூரிய வடிவேலனே, பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும்*, இளமையானவளும், மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும், நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே, பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து, பழநிமலை மீது நின்றருளிய பெருமாளே. 
* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப் பிறந்து 'மாதங்கி' எனப் பெயர் பெற்றாள்.
பாடல் 196 - பழநி
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி - 2 களை
தானந் தத்தன தானன தானன
     தானந் தத்தன தானன தானன
          தானந் தத்தன தானன தானன ...... தனதான
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
     சீதம் பற்சனி சூலைம கோதர
          மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம் 
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
     யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
          வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர் 
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
     டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
          சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித் 
தூசின் பொற்சர மோடுகு லாயுல
     கேழும் பிற்பட வோடிடு மூடனை
          தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய் 
தீதந் தித்திமி தீதக தோதிமி
     டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
          சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி 
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
     லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி
          தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா 
வேதன் பொற்சிர மீதுக டாவிந
     லீசன் சற்குரு வாயவர் காதினில்
          மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே 
வேஷங் கட்டிபி னேகிம காவளி
     மாலின் பித்துற வாகிவி ணோர்பணி
          வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.
வாதநோய், பித்த நோய்கள், பானை போன்ற வயிறு, கோழையால் வரும் க்ஷயரோகங்கள், சீதபேதி நோய், ஜன்னி, வயிற்று வலி, மகோதரம், கண்கள் சம்பந்தமான நோய்கள், பெரிய மூல வியாதிகள், ஜுரக் குளிர், காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி முதலிய சில நோய், பிணி வகைகளுடன், தொண்ணூற்றாறு* தத்துவக் கூட்டங்களின் மத்தியில் வாழ்கின்ற வஞ்சகர்களும் பேராசைக்காரருமான ஐம்புலன்களால் சூழப்பட்டு, பொல்லாத விசித்திரமான தேக ஆசையால், 'மண்', 'பெண்', 'பொன்' என்ற மூவாசையும் கொண்டு, எந்த நல்ல பொருளையும் சற்றும் உணராமல், மாயையை விளைவிக்கின்ற கள்ளத்தனமும், பொய்ம்மையுமே கொண்ட இவ்வுடல்தான் சுகமெனக் கருதி, இந்த உடலைப் போற்றி, நல்ல ஆடைகளாலும், தங்கச் சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து, ஏழு உலகங்களும் எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான், தூய்மை வாய்ந்த அழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப் பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன். தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட என்ற முழக்கத்துடன் பேரிகைகள் முழங்க, ஆதிசேஷன் மயக்கமுற, கடல்களும், அண்ட கோளங்களும் அச்சம் கொள்ள, அசுரர்கள் நிறைந்து இருந்த மலைகளும், தீவுகளும் பொடி எழவே நாசமுற, நெருப்பை வீசும் வேலினைச் செலுத்தும் மயில் வீரனே, பிரமனது அழகிய சிரங்களின் மீது குட்டிப் புடைத்து, நல்ல ஈசனாம் சிவபிரானுக்குச் சற்குருவாக அமைந்து, அவர் திருச்செவிகளில் நாடுகின்ற பற்றற்றவர்கள் பெறத்தக்கதாகிய பிரணவப் பொருளை ஓதிய முருகனே, வேடன், வேங்கை, கிழவன் - எனப் பல வேஷங்கள் தரித்து, பின்பு தினைப்புனம் சென்று, சிறந்த வள்ளியின் மீது, மோக மயக்கம் கொண்டு பித்துப் பிடித்தவனாகி, தேவர்கள் பணியும் பராக்கிரமம் வாய்ந்த பழநியம்பதியில் மேவிய பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
பாடல் 197 - பழநி
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானான தாதன
     தான தந்தன தானான தாதன
          தான தந்தன தானான தாதன ...... தனதான
வார ணந்தனை நேரான மாமுலை
     மீத ணிந்திடு பூணார மாரொளி
          வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர 
வார ணங்கிடு சேலான நீள்விழி
     யோலை தங்கிய வார்காது வாவிட
          வான இன்சுதை மேலான வாயித ...... ழமுதூறத் 
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை
     மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ
          தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார் 
தோத கந்தனை மாமாயை யேவடி
     வாக நின்றதெ னாஆய வோர்வது
          தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே 
கார ணந்தனை யோராநி சாசரர்
     தாம டங்கலு மீறாக வானவர்
          காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா 
கார்வி டந்தனை யூணாக வானவர்
     வாழ்த ரும்படி மேனாளி லேமிசை
          காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே 
ஆர ணன்றனை வாதாடி யோருரை
     ஓது கின்றென வாராதெ னாவவ
          னாண வங்கெட வேகாவ லாமதி ...... லிடும்வேலா 
ஆத வன்கதி ரோவாது லாவிய
     கோபு ரங்கிளர் மாமாது மேவிய
          ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.
யானைக்கு ஒப்பான பெரிய மார்பகங்களின் மேல் அணிந்துள்ள ஆபரணமாகிய முத்து மாலையின் பேரொளியும், பூரண சந்திரனுக்கு ஒப்பான சிறந்த முகம் அழகு மிகுந்து பொலியவும், காண்போருக்கு மிக்க வருத்தம் தர வல்ல, சேல் மீன் போன்று நீண்ட கண்கள் ஓலை பூண்டுள்ள அகன்ற காதுகளைத் தாக்கி நிற்கவும், தேவர்களது இனிய அமுதத்திலும் மேலான இனிமையுடன் வாயிதழ்கள் அமுதத்தைப் பொழியவும், அலங்காரத் தோரணங்களுக்குப் பயன்படும் குலை தள்ளிய வாழையை நிகர்க்கும் தொடையின் மேல் விளங்கும் இடை மெல்லிய நூலுக்கு ஒப்பாக உலாவி, மயில் என்று சொல்லும்படி அழகாக ஊர்ந்து செல்லும் அன்னத்துக்கு ஒப்பான நடையுடன் விளங்கும் விலைமாதர்களின் வஞ்சகச் செயலை பெரிய மாயையே வடிவு கொண்டு நிற்கின்றது என ஆய்ந்து அறியும் அறிவு எனக்குத் தோன்றும்படி அடியேனுடைய உள்ளத்தில் நீ அருள் பாலிப்பாயாக. (முருகவேள் எதற்காகப் படையெடுத்து வந்துள்ளார் என்னும்) காரணத்தை ஆய்ந்து அறியாத அசுரர்கள் எல்லாரும் முடிந்து அழியவும், தேவர்களின் அரசனான இந்திரன் தன் பொன்னுலகத்தை ஆளவும், வேலைச் செலுத்திய வீரனே, தேவர்கள் வாழும்படி, முன்பு ஒரு நாள் கரிய (ஆலகால) விஷத்தை உணவாக உண்டவரும், கருநீலகண்டத்தை உடையவருமான சிவ பெருமான் தந்து அருளிய முருகனே, வேதம் வல்ல பிரமனுடன் வாதம் செய்து, ஒரு சொல்லுக்கு (பிரணவத்துக்கு) உரை ஓதுக என்று அவனைக் கேட்க, வாராது என்று கூறி விழித்து நிற்க, அவனுடைய ஆணவம் அழிய, பிரமனைச் சிறையில் வைத்த வேலனே, சூரியனுடைய ஒளி நீங்காது எப்போதும் வீசுகின்ற கோபுரங்கள் விளங்குவதும், லக்ஷ்மி தேவி விரும்பி வாசம் செய்வதுமான திருவாவினன் குடியில் (பழநியில்) வீற்றிருப்பவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே. 
பாடல் 198 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான
விதமி சைந்தினி தாமலர் மாலைகள்
     குழல ணிந்தநு ராகமு மேசொலி
          விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக 
விரிகு ரும்பைக ளாமென வீறிய
     கனக சம்ப்ரம மேருவ தாமதி
          விரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடி 
இதமி சைந்தன மாமென வேயின
     நடைந டந்தனர் வீதியி லேவர
          எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலே 
எனது சிந்தையும் வாடிவி டாவகை
     அருள்பு ரிந்தழ காகிய தாமரை
          இருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளே 
மதமி சைந்தெதி ரேபொரு சூரனை
     யுடலி ரண்டுகு றாய்விழ வேசின
          வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா 
மதுர இன்சொலி மாதுமை நாரணி
     கவுரி யம்பிகை யாமளை பார்வதி
          மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே 
பதமி சைந்தெழு லோகமு மேவலம்
     நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
          பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா 
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்
     வடிவு கொண்டருள் காசியின் மீறிய
          பழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.
பல விதங்களில் ஆசைப்பட்டு இனிதாக மலர் மாலைகளை கூந்தலில் அணிந்து, காமப் பற்றான பேச்சுக்களைப் பேசி, தமது விவேகத்தைச் சொல்லியும், சிறப்புக்களைச் சொல்லியும், அழகாக விரிந்து வளர்ந்த தென்னங் குரும்பைகளாம் என்னும்படி ஓங்கி வளர்ந்த, பொன் மயமான, நிறைந்த மேரு மலை போல, மிக்க காமம் பொதிந்து ஓங்கிய, அழகிய மார்பகங்களைக் கொண்டு முன்னுள்ளவர் விருப்பத்தை நிறைவேற்ற காமப் போரை விரும்பி, இன்பத்துடன் அன்னப் பறவை போல விதம் விதமான நடை நடப்பவராய் (வேசையர்) தெருவில் வர, எல்லோருடைய உள்ளமும் காம மயக்கத்தைக் கொள்ளச்செய்யும் விலைமாதர்களின் (கண் என்னும்) வலையால் என் மனமும் வாடிப் போகாத வகைக்கு, அருள் பாலித்து அழகான தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகளால் என்னை ஆட்கொள்ளுவதும் ஒரு நாள் நடக்குமோ? ஆணவம் மிக்கு எதிரில் வந்து சண்டை செய்த சூரனை உடல் இரண்டு கூறாக விழும்படிச் செய்த, கோபமான உருவத்தைக் கொண்ட, வேலாயுதத்தைச் செலுத்திய மிக்க வலிமை வாய்ந்தவனே, இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி, நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி, மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே, ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல் ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே, வெற்றி வீரனே, சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும் பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே, (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 199 - பழநி
ராகம் - ....; தாளம் -
தனதனன தனன தந்த தனதனன தனன தந்த
     தனதனன தனன தந்த ...... தனதான
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து
     விழவதன மதிவி ளங்க ...... அதிமோக 
விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து
     விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால் 
இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த
     இருளகல வுனது தண்டை ...... யணிபாதம் 
எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி
     யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய் 
அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை
     அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே 
அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட
     அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா 
பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை
     படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும் 
பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த
     பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.
மணம் கமழும் பூக்களை அணிந்த, கரிய சுருண்ட கூந்தல் சரிந்து விழ, சந்திரனைப் போன்று முகம் விளங்க, அதிக காம மயக்கம் தர வல்ல கண்கள் புரள, மார்பகங்கள் குலுங்க, பேச்சு குழற, படுக்கையில் புகுந்து காம மோகச் செயல்களைச் செய்யும் இன்ப வேசையரிடத்து இரவும் பகலும் நெருங்கிச் சென்று, மனமும் அறிவும் அழிந்து, உருகும் அந்த அஞ்ஞானம் நீங்க, உனது தண்டைகள் அணிந்த திருவடியை எனது தலை மீது தரித்து, நான் மேலும் மேலும் அழுது உன் திருவருளையே விரும்பி, இனிமையான உனது திருப்புகழைச் சொல்ல அருள் வாக்கு தந்து அருளுக. பாம்பின் மீது கண் துயிலும் முகுந்தன், மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் அழகிய லக்ஷ்மியோடு தழுவும் கருமேக நிறத்தினராகிய திருமாலின் மருகனே, வலிமையான அசுரர்களின் உடல்களைப் பிளந்து, அவ்வுடல்களின் ரத்தக் கொழுப்பில் முழுகி, விண்ணுலகத்துத் தேவர்களின் சிறையை ஒழித்த வீரப்ரதாபம் வாய்ந்த கூரிய வேலனே. பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்ட (நீல) கண்டத்தை உடைய கடவுள், கங்கை படர்ந்த சடையை உடையவர், ரிஷப வாகனத்தர், அன்பர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் பரம சிவனார் அருளிய கடம்பனே, முருகனே, ஆறு திருமுகங்களை உடையவனே, கந்தனே, பழனி மலையில் அமர்ந்தருளும் பெருமாளே. 
பாடல் 200 - பழநி
ராகம் - வராளி; தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
     மாதர் கொங்கையி லேமு யங்கிட
          வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான் 
வீறு கொண்டுட னேவ ருந்தியு
     மேயு லைந்தவ மேதி ரிந்துள
          மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம் 
போய லைந்துழ லாகி நொந்துபின்
     வாடி நைந்தென தாவி வெம்பியெ
          பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப் 
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
     பாத பங்கய மேவ ணங்கியெ
          பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே 
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
     ராவ ணன்சிர மேய ரிந்தவர்
          சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே 
தேச மெங்கணு மேபு ரந்திடு
     சூர்ம டிந்திட வேலின் வென்றவ
          தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே 
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
     போக அந்தரி சூலி குண்டலி
          ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும் 
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
     போத கந்தனை யேயு கந்தருள்
          ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.
மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட விலைமாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி, வீணாக சில பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல் செருக்கு அடைந்து மனம் வருந்தியும், நிலை குலைந்து, வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும், அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று நொந்தும், பின்னர் உடல் வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும், இப் பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக. நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில் இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள் தொலைந்து அழியும்படியாக வென்ற இராமனின் மருகோனே, எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த சூரன் இறந்து போகும்படியாக வேல் கொண்டு வென்றவனே, தேவர்கள் தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே, அனைவருக்கும் தாய், அழகி., பச்சை நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள், உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி, ஆதி முதல்வி, அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும், ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் வணங்கி வேண்ட, ஒப்பற்ற ஞான உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே), திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே. 

பாடல் 176 - பழநி
ராகம் - சாருகேசி ; தாளம் - ஆதி - 2 களை

தனனத் தனதன தனதன தந்தத்     தனனத் தனதன தனதன தந்தத்          தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான

புடவிக் கணிதுகி லெனவள ரந்தக்     கடலெட் டையுமற குடிமுநி யெண்கட்          புநிதச் சததள நிலைகொள்ச யம்புச் ...... சதுர்வேதன் 
புரமட் டெரியெழ விழிகனல் சிந்திக்     கடினத் தொடுசில சிறுநகை கொண்டற்          புதகர்த் தரகர பரசிவ னிந்தத் ...... தனிமூவ 
ரிடசித் தமுநிறை தெளிவுற வும்பொற்     செவியுட் பிரணவ ரகசிய மன்புற்          றிடவுற் பனமொழி யுரைசெய்கு ழந்தைக் ...... குருநாதா 
எதிருற் றசுரர்கள் படைகொடு சண்டைக்     கிடம்வைத் திடஅவர் குலமுழு தும்பட்          டிடவுக் கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும் 
பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச்     சுவர்விட் டதிரவு முகடுகி ழிந்தப்          புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் ...... தமுமாகப் 
பொருதுக் கையிலுள அயில்நிண முண்கக்     குருதிப் புனலெழு கடலினு மிஞ்சப்          புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா 
படியிற் பெருமித தகவுயர் செம்பொற்     கிரியைத் தனிவலம் வரஅர னந்தப்          பலனைக் கரிமுகன் வசமரு ளும்பொற் ...... பதனாலே 
பரன்வெட் கிடவுள மிகவும்வெ குண்டக்     கனியைத் தரவிலை யெனஅருள் செந்திற்          பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.

பூமிக்கு உடுக்கப்படும் ஆடை எனப் பரந்துள்ள அந்த எட்டுத் திக்குகளிலும் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர், எட்டுக் கண்களை உடையவரும், சுத்தமான நூற்றிதழ்த் தாமரையில் நிலையாக இருப்பவருமாகிய பிரமனாகிய நான்கு வேதத்தோன், திரிபுரங்கள் அழிந்து எரி கொள்ளும்படி நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை வீசி, வன்மையுடன் சற்றுச் சிறிய புன்னகையைக் கொண்ட அற்புதத் தலைவரும், பாவங்களை அழிக்கவல்லவருமான பரம சிவன், ஆக இந்த ஒப்பற்ற மூவர்களுடைய சித்தம் நிறைந்து தெளிவுறும் வண்ணம், அவர்களது மேலான செவிகளில், பிரணவப் பொருளை, ஆர்வமாக (உனது திரு வாயில் தோன்றிய) உபதேச மொழிகளால் விளக்கிய, குழந்தை உருவில் வந்த குரு நாதனே, போருக்கு எதிர்த்து வந்த அசுரர்கள் தமது படைகளைக் கொண்டு சண்டைக்கு வலிய இடம் தந்ததால், அவர்களுடைய குலம் முழுவதும் அழியும்படிச் செய்தும், உக்கிரமாக, கோபம் பொங்க, குலமலைகள் யாவும் பொடிபட்டு உதிரச் செய்தும், விரிந்த அண்டச் சுவர்கள் பிளவுபட்டு அதிர்ச்சி அடையச்செய்தும், அண்டத்து உச்சி கிழிபட்டு, அதற்கு அப்பாலுள்ள ஆகாய வெளி எல்லாம் கிடுகிடு என்று சத்தம்படும்படி, போரிட்டு, கையில் உள்ள வேல் (பகைவர்களின்) கொழுப்பை உண்ண, ரத்த நீர் ஏழு கடல்களைக் காட்டிலும் அதிகமாகப் பெருக, குதிரையாகிய சிறந்த மயிலைச் செலுத்திய அற்புதக் குமரேசனே, பூமியில் மேன்மையும், தகுதியும் மிக்க செம் பொன் மலையாகிய மேருவை, தனித்து நீ வலம் வர, சிவபெருமான் அந்தப் பரிசுப் பழத்தை (உன் அண்ணன்) யானைமுகன் கணபதிக்குக் கொடுத்த நியாயமற்ற தன்மையாலே, (அந்தச்) சிவன் வெட்கம் கொள்ளும்படி, உள்ளத்தில் மிகக் கோபம்கொண்டு, அந்தப் பழத்தைத் தரவில்லை என்று, அருள் பாலிக்கும் திருச்செந்தூரிலும், பழனிச் சிவகிரியிலும் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 

பாடல் 177 - பழநி
ராகம் - .....; தாளம் -

தனனத் தனனத் தனனத் தனனத்     தனனத் தனனத் ...... தனதான

புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்     பொருமிக் கலசத் ...... திணையாய 
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்     புணரத் தலையிட் ...... டமரேசெய் 
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்     கறிவிற் பதடிக் ...... கவமான 
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்     றடிமைக் கொருசொற் ...... புகல்வாயே 
குடமொத் தகடக் கரடக் கலுழிக்     குணமெய்க் களிறுக் ...... கிளையோனே 
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்     குறுகித் தகரப் ...... பொரும்வேலா 
படலைச் செறிநற் கதலிக் குலையிற்     பழமுற் றொழுகப் ...... புனல்சேர்நீள் 
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்     பழநிக் குமரப் ...... பெருமாளே.

பருத்துள்ள சிமிழ் போன்று, முத்து மாலை அணிந்த, கச்சு கிழியும்படி உள்ளே விம்மி, கலசத்துக்கு ஒப்பாகி, புளகம் கொண்டு, சந்தனக் கலவை பூண்டு செருக்குற்ற மார்பகம் சேர்ந்த உடலைப் புணர முனைந்து நின்று, (கலவிப்) போர் புரிகின்ற, ஒழுக்க முறையை தினமும் கொண்டு மயக்கம் பூணும் என் மீது, அறிவு இல்லாத, பயனில்லாத என் மீது, வீணான அசடனாகிய என் மீது, உயர்வு ஒப்பு இல்லாத உனது நல்ல அருளைக் காட்டி, அடிமையாகிய எனக்கு ஒப்பற்ற உபதேசச் சொல்லை புகன்று அருள்வாயாக. குடம் போன்ற கதுப்பினின்றும் மத நீர் கலங்கல் நீர் போல் ஒழுகும் யானை முகத்தை உடையவரும், குணமும் மெய்ம்மையும் கொண்டவருமான விநாயகக் கடவுளுக்குத் தம்பியே, (தேவர்கள் பொன்னுலகத்துக்குக்) குடி புக (தேவர்களைச் சூரனுடைய சிறையினின்று) மீட்டு, அசுரப் படைகளை நெருக்கி நொறுங்கி ஒழியச் சண்டை செய்த வேலனே, எங்கும் பரந்து அடர்ந்துள்ள நல்ல வாழைக் குலையில் பழங்கள் முற்றி தேன் ஒழுக, நீர் சேர்ந்த நீண்ட வயற் கரையில் மூங்கில்களின் முத்து உதிரும் நல்ல பழனியில் அமர்ந்த குமரப் பெருமாளே. 

பாடல் 178 - பழநி
ராகம் -....; தாளம் -

தனதனா தனதன தந்த தானன     தனதனா தனதன தந்த தானன          தனதனா தனதன தந்த தானன ...... தனதான

பெரியதோர் கரியிரு கொம்பு போலவெ     வடிவமார் புளகித கும்ப மாமுலை          பெருகியே யொளிசெறி தங்க வாரமு ...... மணியான 
பிறையதோ வெனுநுதல் துங்க மீறுவை     அயிலதோ வெனுமிரு கண்க ளாரவெ          பிறகெலாம் விழுகுழல் கங்கு லாரவெ ...... வருமானார் 
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை     மனையிலே வினவியெ கொண்டு போகிய          யுளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ...... மயலாலே 
உருகியே யுடலற வெம்பி வாடியெ     வினையிலே மறுகியெ நொந்த பாதக          னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம ...... தருள்வாயே 
அரியதோ ரமரர்க ளண்ட மேறவெ     கொடியதோ ரசுரர்க ளங்க மாளவெ          அடலதோ டமர்புரி கின்ற கூரிய ...... வடிவேலா 
அரகரா வெனமிக அன்பர் சூழவெ     கடியதோர் மயில்மிசை யன்றை யேறியெ          அவனியோர் நொடிவரு கின்ற காரண ...... முருகோனே 
பரியதோர் கயிறனை கொண்டு வீசவெ     உறியதோய் தயிர்தனை யுண்டு நாடியெ          பசியதோ கெடவருள் கொண்ட மாயவன் ...... மருகோனே 
பரமமா நதிபுடை கொண்ட ணாவவெ     வனசமா மலரினில் வண்டு லாவவெ          பழநிமா மலைதனி லென்று மேவிய ...... பெருமாளே.

பெரிய ஒரு யானையின் இரண்டு தந்தங்கள் போலவே வடிவம் கொண்டதாய், புளகம் பூண்டதாய், குடம் போன்ற பெருத்த மார்பகங்களின் மேல் நிறைந்து தோன்றும் ஒளி மிக்க பொன் மாலையும், அழகான பிறைச் சந்திரனோ எனத் தோன்றும் நெற்றியும், உயர்ச்சி மிக்க கூரிய வேலோ என்னும் படியாக இரண்டு கண்களும் நிறைந்து, முதுகு எல்லாம் விழுகின்ற கூந்தல் இரவு போல் இருள் போல் கருமை மிக்கதாய் தோற்றத்துடன் வருகின்ற விலைமாதர்கள், தமக்குச் சேருதற்கு உரிய பொருளைப் பெற்றுக் கொண்டு, (தம்மிடம்) வந்த ஆடவர்களை ஆய்ந்து பேசி விசாரித்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் ரகசிய உபாய எண்ணம் பொருந்திய வஞ்சகம் உள்ள பொது மகளிர் மீதுள்ள மோக மயக்கத்தால், மனம் உருகி உடல் எல்லாம் மெத்தக் கொதித்து வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள் புரிவாயாக. அருமை வாய்ந்த தேவர்கள் பொன் உலகத்துக்குக் குடி ஏறவும், கொடுமை வாய்ந்த அசுரர்களின் உடல்கள் அழியவும், வெற்றியுடன் போர் புரிந்த கூரிய வேலாயுதனே, அரஹரா என்னும் பேரொலியுடன் அன்பர்கள் சூழ, வலிமை வாயந்த மயிலின் மீது ஏறி அன்று (நீ) பூமியை ஒரு நொடிப் பொழுதில் வலம் வந்த காரணனே, முருகனே, பருத்த கயிறு கொண்டு தாயாகிய யசோதை வீசிக் கட்ட, உறியில் தோய்ந்திருந்த தயிரை உண்டு விரும்பி பசி நீங்கி அருள் பூத்த மாயக் கண்ணனின் மருகனே, மேலோனே, சிறந்த ஷண்முக நதி* பக்கத்தில் சூழ்ந்து நெருங்க, தாமரையின் அழகிய மலர்களில் வண்டுகள் உலாவ, பழனியாகிய சிறந்த மலையில் எப்போதும் வீற்றிருக்கும் பெருமாளே. 
சில வரிகளின் இறுதி எழுத்துக்கள் தளை காரணமாக குறிலாக வரினும் நெடிலைக் குறிப்பன. உதாரணம்: போலவெ = போலவே, ஆரவெ = ஆரவே, வாடியெ = வாடியே.* திருவாவினன்குடிக்கு அருகே ஷண்முக நதி ஓடுகிறது.

பாடல் 179 - பழநி
ராகம் - பந்துவராளி ; தாளம் - அங்கதாளம் - 8 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தக-1

தான தந்தன தானா தனாதன     தான தந்தன தானா தனாதன          தான தந்தன தானா தனாதன ...... தனதான

போத கந்தரு கோவே நமோநம     நீதி தங்கிய தேவா நமோநம          பூத லந்தனை யாள்வாய் நமோநம ...... பணியாவும் 
பூணு கின்றபி ரானே நமோநம     வேடர் தங்கொடி மாலா நமோநம          போத வன்புகழ் ஸாமீ நமோநம ...... அரிதான 
வேத மந்திர ரூபா நமோநம     ஞான பண்டித நாதா நமோநம          வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான 
மேனி தங்கிய வேளே நமோநம     வான பைந்தொடி வாழ்வே நமோநம          வீறு கொண்டவி சாகா நமோநம ...... அருள்தாராய் 
பாத கஞ்செறி சூரா திமாளவெ     கூர்மை கொண்டயி லாலே பொராடியெ          பார அண்டர்கள் வானா டுசேர்தர ...... அருள்வோனே 
பாதி சந்திர னேசூ டும்வேணியர்     சூல சங்கர னார்கீ தநாயகர்          பார திண்புய மேசே ருசோதியர் ...... கயிலாயர் 
ஆதி சங்கர னார்பா கமாதுமை     கோல அம்பிகை மாதா மநோமணி          ஆயி சுந்தரி தாயா னநாரணி ...... அபிராமி 
ஆவல் கொண்டுவி றாலே சிராடவெ     கோம ளம்பல சூழ்கோ யில்மீறிய          ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் ...... பெருமாளே.

ஞான உபதேசம் தருகிற தலைவனே, போற்றி, போற்றி, நீதிக்கு இருப்பிடம் ஆன இறைவனே, போற்றி, போற்றி, இந்தப் பூமண்டலத்தை ஆள்கின்றவனே, போற்றி, போற்றி, அணிகலன்கள் அனைத்தையும் அணிகின்ற பெருமானே, போற்றி, போற்றி, வேடர்கள் தம்குலத்தில் அவதரித்த பைங்கொடி வள்ளியிடம் மையல் கொண்டவனே, போற்றி, போற்றி, தாமரை மலர்வாசனாம் பிரமன் துதிக்கும் ஸ்வாமியே, போற்றி, போற்றி, அருமையான வேத மந்திரங்களின் வடிவானவனே, போற்றி, போற்றி, மெய்ஞ்ஞானப் புலவனான தலைவனே, போற்றி, போற்றி, வீரக் கழலை அணிந்த திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி, அழகு நிறைந்த திருமேனியை உடைய வேளே, போற்றி, போற்றி, தேவருலகில் வாழும் பசுமையான வளையல் அணிந்த தேவயானையின் மணவாளனே, போற்றி, போற்றி, வெற்றி நிறைந்த விசாக மூர்த்தியே, போற்றி, போற்றி, உனது திருவருளைத் தந்து உதவுவாயாக. தீவினை நிறைந்த சூரன் முதலிய அசுரர்கள் இறக்குமாறு கூர்மையான வேலாயுதத்தால் போர் புரிந்து, பெருமை பொருந்திய தேவர்கள் மீண்டும் வான் நாடு சேரும்படியாக அருள் புரிந்தவனே, பிறைச்சந்திரனைத் தரித்த ஜடாமுடியினரும், திரிசூலத்தைத் தாங்கும் சங்கரனாரும், இசைத் தலைவரும், வலிமையும் திண்மையும் உடைய புயங்கள் வாய்ந்த ஜோதி ஸ்வரூபமும், திருக்கயிலையில் வாழ்பவருமான முதன்மையான சிவப்பரம்பொருளும் ஆகிய சிவபிரானின் இடப்பாகத்தில் இருக்கும் உமாதேவியும், அழகிய அம்பிகையும், உலக மாதாவும், மனோன்மணியும், அன்னையும், சிவகாமசுந்தரியும், உயிர்களுக்குத் தாயான நாராயணியும், அதிரூபவதியுமான பார்வதிதேவி அன்பு கொண்டு பெருமையுடன்சீராட்ட, அழகு பலவாக அமைந்த திருக்கோயில்கள் மிகுந்த திருவாவினன்குடியில் வாழ்வாக வீற்றிருக்கும், தேவர்கள் போற்றும் பெருமாளே. 

பாடல் 180 - பழநி
ராகம் - ....; தாளம் -

தந்ததன தனனா தனந்த     தந்ததன தனனா தனந்த          தந்ததன தனனா தனந்த ...... தனதான

மந்தரம தெனவே சிறந்த     கும்பமுலை தனிலே புனைந்த          மஞ்சள்மண மதுவே துலங்க ...... வகைபேசி 
மன்றுகமழ் தெருவீ திவந்து     நின்றவரை விழியால் வளைந்து          வந்தவரை யருகே யணைந்து ...... தொழில்கூறி 
எந்தளவு மினிதா கநம்பு     தந்துபொருள் தனையே பிடுங்கி          யின்பமருள் விலைமா தர்தங்கள் ...... மனைதேடி 
எஞ்சிமன முழலா மலுன்றன்     அன்புடைமை மிகவே வழங்கி          என்றனையு மினிதா ளஇன்று ...... வரவேணும் 
விந்தையெனு முமைமா துதந்த     கந்தகுரு பரதே வவங்க          மென்றவரை தனில்மே வுமெந்தை ...... புதல்வோனே 
மிஞ்சுமழ கினிலே சிறந்த     மங்கைகுற மடமா துகொங்கை          மென்கிரியி லிதமா யணைந்த ...... முருகோனே 
சிந்தைமகிழ் புலவோர் கள்வந்து     வந்தனைசெய் சரணா ரவிந்த          செந்தமிழி லுனையே வணங்கு ...... குருநாதர் 
தென்றல்வரை முநிநா தரன்று     கும்பிடந லருளே பொழிந்த          தென்பழநி மலைமே லுகந்த ...... பெருமாளே.

மந்தர மலை என்னும்படி சிறந்த குடம் போன்ற மார்பகத்தின் மேல் பூசிய மஞ்சளின் நறு மணம் வீசிப் பொலிய தந்திர மொழிகளைப் பேசி, வாசனை கமழும் தெரு வீதியில் வந்து (அங்கு) நின்றவர்களை கண்களால் வளைத்து இழுத்து, தம்மிடம் வந்தவர்களை அருகில் நெருங்கி தங்கள் வியாபாரத் தொழிலை விளக்கிக் கூறி, முழுமையும் இனிமையாக தம்மை நம்பச் செய்து, (அவர்களுடைய) பொருளைக் கைப்பற்றி, சிற்றின்பம் கொடுக்கும் பொது மகளிர்களின் வீடுகளைத் தேடி, கெட்டுப்போய் மனம் திரியா வகைக்கு உன்னுடைய அன்புச் செல்வத்தை நிரம்ப எனக்குக் கொடுத்து என்னையும் இனிமையுடன் ஆண்டருள நீ இன்று வர வேண்டும். அற்புத மாதாவாகிய பார்வதி என்னும் உமா தேவி பயந்தருளிய கந்தனே, குருபர தேவனே, வெள்ளியங் கிரியில் வீற்றிருக்கும் எம் தந்தையாகிய சிவ பெருமானின் மகனே, மேம்பட்டு அழகில் சிறந்த மங்கை, குறவர் பெண்ணாகிய வள்ளியின் மார்பாகிய மென்மை வாய்ந்த மலையை இன்பத்துடன் அணைந்த முருகனே, உள்ளம் மகிழ்ந்த ஞானிகள் வந்து வணங்குகின்ற திருவடித் தாமரைகளை உடையவனே, செந்தமிழில் (பாடல்கள் பாடி) உன்னையே வணங்கும் குரு நாதராகிய, பொதிய மலை முனிவர் அகத்தியர் அன்று கும்பிட, நல்ல அருளை நிரம்பப் பொழிந்த, அழகிய பழனி மலையின் மேல் விரும்பி வீற்றிருக்கின்ற பெருமாளே. 

பாடல் 181 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த     தனதனன தந்த தந்த ...... தனதான

மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி     மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே 
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த     மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி 
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து     இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும் 
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து     னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ 
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை     திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத 
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்     செறிவுடன றிந்து வென்ற ...... பொறியாளர் 
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற     பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே 
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க     பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.

நறு மணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமன் ஏவி விட, செய்த வினையின் பயனை அனுபவிக்க, மாலை நேரத்து சந்திரனைப் போன்ற வடிவத்துடன் (இவ்வுலகில்) பிறந்து, முன் செய்த கொடு வினைகளால் வந்த வகையை மறந்து, எழுந்து (தாயின்) முலைப் பாலைப் பருகி அழகிய குழந்தையாக வளர்ந்து, மலை போல் வடிவை அடைந்து, பெரிய காம மயக்குடன் வாடி, பொது மகளிருடைய வீடுகளில் புகுந்து இரவும் பகலும் அதே வேலையாயிருந்து, ஒடுங்கி அசடன் நான் நல் வினை, தீ வினை இரண்டும் சார்ந்த இந்தப் பிறப்பு, இறப்பு என்பவற்றை விட்டொழித்து உனது இரண்டு திருவடிகளைத் தொழும் பேற்றை என்று அடைவேனோ? லக்ஷ்மியாகிய சீதையோடு (அயோத்தி நகரை விட்டு) நீங்கி இருள் மிகுந்த காட்டில் நடந்து, இலங்கை நகரை விளங்கும் நெருப்புக்கு இட்ட குரங்காகிய அனுமனைக் கை விடாத திடமான கருணை உள்ள ராமர், கம்சன் அனுப்பிய நய வஞ்சகச் சூழ்ச்சிகளை கூர்மையாக உணர்ந்து, அவைகளை வென்ற அறிவாளர் கிருஷ்ணர், அன்புடன் மகிழ்ந்து வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும்*, பரம பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே, தாமரையின் மீது வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* குபேரன் புத்திரர்களான நளகூபரன், மணிக்¡£வன் என்ற இருவரும் மது அருந்தி, ஜலக்¡£டை செய்து, நாரதர் முன் மரம் போல் நிற்க, அவர் நீங்கள் மரமாகவே நிற்பீர் என்று சபித்தார். ஆகவே இருவரும் மருத மரங்கள் ஆயினர். யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து மரங்களுக்கு இடையே செல்ல, மரங்கள் முறிந்து விழுந்து, சாபம் நீங்கினர்.

பாடல் 182 - பழநி
ராகம் - கேதாரகெளளை; தாளம் - அங்கதாளம் - 5 1/2 - எடுப்பு 1/2 தள்ளி தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த     தனத்ததன தான தந்த ...... தனதான

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து     வகைக்குமநு நூல்வி தங்கள் ...... தவறாதே 
வகைப்படிம னோர தங்கள் தொகைப்படியி னாலி லங்கி     மயக்கமற வேத முங்கொள் ...... பொருள்நாடி 
வினைக்குரிய பாத கங்கள் துகைத்துவகை யால்நி னைந்து     மிகுத்தபொரு ளாக மங்கள் ...... முறையாலே 
வெகுட்சிதனை யேது ரந்து களிப்பினுட னேந டந்து     மிகுக்குமுனை யேவ ணங்க ...... வரவேணும் 
மனத்தில்வரு வோனெ என்று னடைக்கலம தாக வந்து     மலர்ப்பதம தேப ணிந்த ...... முநிவோர்கள் 
வரர்க்குமிமை யோர்க ளென்பர் தமக்குமன மேயி ரங்கி     மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா 
தினைப்புனமு னேந டந்து குறக்கொடியை யேம ணந்து     செகத்தைமுழு தாள வந்த ...... பெரியோனே 
செழித்தவள மேசி றந்த மலர்ப்பொழில்க ளேநி றைந்த     திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.

மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல், உனக்குத் தொண்டு செய்யும் பணியையே பூண்டு, வகையாக அமைந்துள்ள நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல், நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து, சந்தேகம் அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து, வினையைக் கொடுக்கும் பாவச்செயல்களை அறவே அகற்றி, ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து, மேலான பொருளைக் கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி, கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி, மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து நடந்து, யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும் உன்னையே வணங்குதற்கு (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும். தியானித்தால் மனத்தில் வருபவனே என்று நினைத்து உன் அடைக்கலப் பொருளாக வந்து சேர்ந்து உன் மலர்த் திருவடியே பணிந்த முனிவர்களுக்கும், பிற வரசிரேஷ்டர்களுக்கும், தேவர்களுக்கும், மனம் இரக்கப்பட்டு, பயமுறுத்தி வந்த சூரரை வென்ற கூரிய வேலனே, தினைப்புனத்துக்கு முன்னொருநாள் நடந்துசென்று குறவர்கொடி வள்ளியையே மணஞ்செய்து, இந்த உலகம் முழுவதையும் ஆட்கொண்ட பெரியோனே, செழிப்புற்ற, வளம் பொலிந்த மலர்ச் சோலைகள் நிறைந்துள்ள திருப்பழனியில் வீற்றிருக்க வந்த பெருமாளே. 

பாடல் 183 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதன தந்தத் தனத்த தானன     தனதன தந்தத் தனத்த தானன          தனதன தந்தத் தனத்த தானன ...... தனதான

மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்     சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு          மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக ...... மதியாலே 
மருவுநி தம்பத் தடத்தி லேநிறை     பரிமள கொங்கைக் குடத்தி லேமிக          வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி ...... வலையாலே 
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்     வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன          நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு ...... மொயிலாலே 
நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர     வசமுட னன்புற் றிணக்கி லேயொரு          நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு ...... மதிகேடாய் 
அலையநி னைந்துற் பநத்தி லேயநு     தினமிகு மென்சொப் பனத்தி லேவர          அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம் ...... உலைவேனோ 
அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய     கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய          மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ ...... அருள்தாராய் 
பலபல பைம்பொற் பதக்க மாரமு     மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்ப னீரொடு          பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு ...... மணிவோனே 
பதியினில் மங்கைக் கதித்த மாமலை     யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்          பழநியி லன்புற் றிருக்கும் வானவர் ...... பெருமாளே.

பூக்கள் அணிந்துள்ள கூந்தலின் கொண்டை முடியிலும், (பொது மகளாகிய) அவளுடைய பேசும் பேச்சின் இன்பச் செருக்கிலும், கொடுமை நிரம்பியுள்ள மன முறுக்கிலும், முகமாகிய நிலவாலும், பொருந்திய பெண்குறியிடத்திலும், நிறைந்துள்ள நறு மணம் வீசும் மார்பகங்களாகிய குடத்திலும், நன்றாக வலிய வந்து கலவியில் கூடிய நிலைகளிலும், கண்ணாகிய வலையிலும், நிலவொளி போலக் குளிர்ந்த ஒளி வீசும் உடம்பின் குலுக்காலும், அழகிய வளையல்களை அணிந்த சிவந்த கையில் கிலுக்கிடும் ஒலியாலும், பருத்த பொருள்களை பறிக்கின்ற அந்தப் பகட்டிலும், செய்கின்ற ஒய்யாரச் செயலிலும், தினமும் காட்டப்படும் கெட்ட குணத்திலும் என் வசம் அழிந்து அன்பு பூண்டு சேரும் சேர்க்கையிலும் ஒரு நிமிடம் கூடி ஒரு கணப் பொழுதிலே மிகவும் புத்தி கெட்டு, அலைய நினைத்து அதே தோற்றமாய் நாள் தோறும் அதிகமாக என் கனவில் அந்நினைவுகள் வர, என் அறிவு அழிந்து, அற்பனாகிய நான் தினமும் அழிவேனோ? முட்டாளாகிய என்னை, வஞ்சகத்தில் சாமர்த்தியமுள்ள குற்றவாளியை, உனது ஞான மயமாகிய கடைக் கண்ணால் விரும்பி நோக்கி, பூக்களைக் கொண்டு உன் அழகிய திருவடிகளையே நான் தொழுமாறு அருள் புரிய வேண்டுகின்றேன். பற்பல விதமான பசும் பொன்னாலாகிய பதக்கங்களையும், மாலைகளையும், அடிமையாகிய நான் சொல்லுகின்ற திருப்புகழ் என்னும் தமிழ்ப் பன்னீரையும், நறுமணம் மிக்கு வீசும் கடப்ப மாலையையும் அணிபவனே, தலங்களில் விஜய மங்கையிலும்*, கதித்த மலை** என்னும் குன்றுடன் (மற்றும்) சில குன்றுகளிலும் பொருந்தி வீற்றிருந்து, வாழ்வு சிறந்துள்ள பழனியில் அன்புற்று இருப்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* இவ்வூர் ஈரோட்டுக்கு அருகில் உள்ளது. 
** கதித்த மலை என்னும் பெயருடைய முருகன் கோயில் ஊத்துக்குழிக்கு அருகில் உள்ளது.

பாடல் 184 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தத் தனந்த தந்தன     தனதன தத்தத் தனந்த தந்தன          தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான

முகிலள கத்திற் கமழ்ந்த வண்பரி     மளஅலர் துற்றக் கலந்தி டந்தரு          முகிழ்நுதி தைத்துத் துயர்ந்த மங்கைய ...... ரங்கமீதே 
முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல்     விழியிணை செக்கச் சிவந்து குங்கும          ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை ...... யெங்குமேவி 
உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற     வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள          வுறுமணை யுற்றுத் திரங்கு மஞ்சமி ...... லொன்றிமேவி 
ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற     முறுவளை யொக்கக் கலின்க லென்கவு          முயர்மய லுற்றுற் றிரங்கு மன்பதொ ...... ழிந்திடாதோ 
செகமுழு தொக்கப் பயந்த சங்கரி     அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம          சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு ...... மங்கைநீடு 
திகழ்வன பச்சைப் பசங்கி யம்பண     கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள்          திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை ...... யண்டமீதே 
பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை     திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர்          பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி ...... யன்புகூரும் 
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள்     பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு          பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.

மேகம் போல் கரிய கூந்தலில் வாசனை உள்ள நறு மணம் கொண்ட மலர்கள் நெருங்கும்படிச் சேர்ந்து இடம்பெறும்படி, தான் தொடர்ந்த மாதர்களின் உடலின் மேல் நக நுனியால் குறிகளை அழுந்தப் பதித்து, முகத்தில் வியர்வை உற்றுப் பரவ, செங்கயல் மீன் போன்ற கண் இணைகள் செக்கச் சிவக்க, குங்குமம், கஸ்தூரி இவைகளை அணிந்து செருக்குற்ற மார்பகங்களின் மேல் எல்லாம் பொருந்தி, வெளிப்பட்டுத் தோன்றும் இவ்வேசியர்கள் உயிரே போலும் எனக் கருதி, புயங்கள் இன்புறும்படியாக கூடல் செய்து, திரண்டுள்ளதும் வாசனை கலந்துள்ளதுமான படுக்கையில் அமர்ந்து, சுருக்கம் கொள்ளும் கட்டிற் படுக்கையில் பொருந்தியிருந்து, ஒளி விளங்கும் தாமரை போன்ற கைகளின் மேலுள்ள வளைகள் ஒருங்கே கலின்கல் என்று ஒலி செய்ய, மிக்க மோகம் கொண்டு (அவர்களுக்கு) இரக்கம் காட்டும் அன்பு ஒழியாதோ? உலகம் முழுதும் பெற்ற சங்கரி, அடியார்களுடைய உள்ளத்தில் உறைகின்ற சிறப்பு வாய்ந்த சிவபெருமானுடைய ஒரு பாகத்தில் உறைகின்ற மங்கை, நல்ல மங்கை, பெரிதும் விளங்கும் பச்சைப் பசேல் என்ற நிறம் உடையவள், யாழ் ஏந்திய கரத்தினள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், திருவருள் என்னும் நல்ல செல்வத்தைப் பரப்பி உலகைப் பாலிக்கும் பராசக்தி, அண்டங்களுக்கு அப்பால் பகலும் இரவும் அற்றுப் போன உயர்ந்த இடத்தில் உள்ள அம்பிகை, திரிபுரங்களை அழித்தவள், மும்மூர்த்திகளுக்கும் உயர்ந்தவளாய் மூவரும் அல்லரான சிவபெருமான் அன்பு கொள்ளுபடி தவம் செய்த பர தேவதை, அன்பு மிக்க பதிவிரதை, சிறந்த (சிவபெருமானுடைய) தலையில் விளக்கமுற்று அருளும் கங்கா நதி உற்பத்தியாகும் (இமய) மலையில் உதித்த பெண்ணாகிய பார்வதி தந்து அருளி குழந்தையே, பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தனிப் பெருந் தலைவனே. 
* இப்பாடலில் உமா தேவியின் புகழ் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும் மேலானவள் என்பது குறிக்கத் தக்கது. மும்மூர்த்திகள் = பிரமன், திருமால், ருத்திரன். சிவபெருமான் இவர்களுக்கு அப்பாற்பட்டு பார்வதியின் பதியாகத் திகழ்கிறார்.

பாடல் 185 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தனதான தனதனன தனதான     தனதனன தனதான ...... தனதான

முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு     முதிர்விலிள தனபார ...... மடவார்தோள் 
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்     மொழியுமது மதியாமல் ...... தலைகீழ்வீழ்ந் 
தகமகிழ விதமான நகையமுத மெனவூற     லசடரக மெழவாகி ...... மிகவேயுண் 
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளி     னமுதுபரு கிடஞான ...... மருளாயோ 
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி     மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே 
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி     வருபனிரு கரதீர ...... முருகோனே 
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவு     பரமகுரு வெனநாடு ...... மிளையோனே 
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு     பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.

மொட்டு நிலையில் உள்ள தாமரை மலர் போலவும், ஒளி வீசுகின்ற அழகிய பொன் மலை போலவும், முதிர்ச்சி அடையாத இளமையான மார்பகங்களை உடைய விலைமகளிரின் தோள்களில் முழுகி அமிழ்கின்ற சிற்றின்பம் அநுபவிக்கும் வீணன் என்று உலகில் உள்ளவர்கள் சொல்லுகின்ற பழிச்சொற்களை சிறிதும் பொருட்படுத்தாமல் தலை கீழாகச் சறுக்கி விழுந்து, உள்ளம் களிப்புற பலவகையான இன்பத்தைத் தரும் அமுதமே என்னும்படி இதழ் ஊறலைத் தரும் மூடர்களாகிய விலைமாதர்களின் வீடுகளுக்குப் போய் மிகவே உண்டு அழிகின்ற ஒரு தனியனாகிய நானும், யாவராலும் போற்றப்படும் உன்னுடைய இரண்டு திருவடிகளின் அமுதையும் உண்ணும்படியான ஞானத்தை எனக்கு அருள் புரிய மாட்டாயோ? மகர மீன்களை எறிகின்ற அலைகள் மோதுகின்ற ஒளி பொருந்திய கடலில் உள்ள விசாலமான நீர் கலங்கும் நீராகிக் கெட்டுப் போகும்படியாக வேலாயுதத்தைச் செலுத்தியவனே, சாரிசாரியாக வந்த அசுரர்களின் பெரிய சேனைகளின் கால அளவு முடியும்படி மயில் மேல் ஏறி வந்த பன்னிரண்டு கரங்களை உடைய தீரனே, முருகனே, விவரிப்பதற்கு முடியாதவர் எனச் சொல்லத்தக்க உமா தேவியின் கணவராகிய சிவபெருமான், என் உள்ளத்தில் வீற்றிருக்கும் மேலான குருவே என்று கூறி உன்னை விரும்பும் இளையவனே, சங்கு மணிகள் ஒளி வீசும் அழகிய மலையின் உச்சி சந்திரனைத் தீண்டும் உயரமான பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 186 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனன தனன தனத்த தனன தனன தனத்த     தனன தனன தனத்த ...... தனதான

முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து     முதிய கயல்கள் கயத்தி ...... னிடையோடி 
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி     முறைமை கெடவு மயக்கி ...... வருமாதர் 
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு     வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய 
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்     மகிழ வுனது பதத்தை ...... யருள்வாயே 
சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து     சகடு மருத முதைத்த ...... தகவோடே 
தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த     தநுவை யுடைய சமர்த்தன் ...... மருகோனே 
அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து     அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே 
அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு     ளழகு மயிலை நடத்து ...... பெருமாளே.

நன்றாக மானை காட்டுக்குள் துரத்தி, மாவடுவை (உப்பிலிட்டு) அழித்து, பெரிய கயல் மீன்களை குளத்தினிடையே (புகும்படி) ஓட்டி* (இவ்வாறு இவைகளுடன்) மாறுபட்டு வளர்கின்ற கண்களால் காம லீலைத் தந்திரங்களைச் செய்து, எனது ஒழுக்கம் கெடும்படி மயக்கி வருகின்ற பொது மகளிருடைய இனிமையான அமுதம் போன்ற சொற்களுக்கும், அணி முடி போன்றதும் கலவைச் சந்தனம் அணிந்ததுமான மார்பகத்துக்கும் வலிய இழுத்து என்னை அடிமைப் படுத்தி விடுகின்ற மாயம் நிறைந்த மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழு பொய்யன். களிக்கும்படி உன் திருவடியைத் தந்து எனக்கு அருள்வாயாக. திறமை வாய்ந்தவனும், (கயிலை) மலையை அசைத்து எடுத்தவனுமான அரக்கனாகிய ராவணனின் உடலை அழித்தும், (சகடாசுரனாக வந்த) வண்டிச் சக்கரத்தை உதைத்தும், மருத மரத்தையும் வீழ்த்தித் தள்ளிய பக்குவத்தால், இலைகளுடனும், மரமும் பூமியில் பட்டு அழியவும் கடும்போர் புரிந்த வில் ஏந்திய சமர்த்தனுமாகிய திருமாலின் மருகனே, பூமி அதிரும்படியாக விரைந்து நெருங்கி வந்து எதிர்த்த அசுரர்களின் உடலை வதைத்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள வைத்து எழுந்தருளியவனே. அருமையான புகழைக் கொண்ட பெருமை வாய்ந்த பழனி மலையில் அழகான மயிலை நடத்தும் பெருமாளே. 
* மாதர் கண்களுக்கு மான், மாவடு, கயல் மீன்கள் ஒப்பாகா என்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

பாடல் 187 - பழநி
ராகம் - ....; தாளம் -

தத்தத்தத் தத்தத் தத்தன     தத்தத்தத் தத்தத் தத்தன          தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான

முத்துக்குச் சிட்டுக் குப்பிமு     டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு          முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே 
முக்யப்பச் சைப்பொட் டிட்டணி     ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை          முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத் 
தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ்     நச்சுக்கட் கற்புச் சொக்கியர்          செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத் 
திட்டத்தைப் பற்றிப் பற்பல     லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர்          சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ 
மெத்தத்துக் கத்தைத் தித்தியி     னிச்சித்தத் திற்பத் தத்தொடு          மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே 
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர     முக்கட்சித் தர்க்குப் புத்திர          விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே 
நித்யக்கற் பத்திற் சித்தர்க     ளெட்டுத்திக் குக்குட் பட்டவர்          நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும் 
நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு     முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ          நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே.

முத்தால் ஆன குச்சி அணிந்து குப்பி என்னும் சடை அணியை முடித்து, பூ மாலையைக் கொண்டையில் பின்னர்ச் சுற்றியும், முன் பக்கத்தில் அழகு விளங்க நெற்றியின் மேல் சிறந்த பச்சை நிறப் பொட்டை இட்டுக் கொண்டும், வகிட்டில் அணிகலமாகிய ரத்னச் சுட்டி, அழகிய பட்டுச் சேலை ஆகியவைகளை ஒழுங்காகவும் அலங்காரமாகவும் அணிந்து, நல்ல பேரழகு பொலிய, இனிமை தரும்படி சொல்லும் பேச்சு, பவளம் போன்ற வாயிதழ், விஷம் நிறைந்த கண், விபா£தமான கற்பனை உரைகள் (இவைகளைக் கொண்டு) மயக்குவிக்கும் விலைமகளிரின் சிமிழை ஒத்ததும் கச்சு அணிந்ததும் (ஆகிய) மேருமலை போன்ற மார்பகங்களை செவ்வையாகப் பற்றி பல விதமான நாணம் கொள்ளத் தக்க செயல்களுக்கு உட்பட்டு, மேற்கொண்டு அவர்கள் வலையில் என்னுயிர் மாட்டிக் கொண்டு மயங்கி கேடுற்று இவ்வாறு திரிவேனோ? அதிகமான துக்கத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக. கல்விக்குத் தலைவனே, பரம்பொருளே, முக்கண்ணராகிய சிவபெருமானுக்குப் பிள்ளையே, விசித்திரமான வெட்சிப் பூ மாலையை அணிபவனே, நித்ய பூமியில் உள்ள சித்தர்களும், எட்டுத் திசைகளில் உள்ளவர்களும், தியானத்தில் அன்பு பூண்ட பக்தர்களும், தேவர்களும், நெடுந் தூரத்தில் இருந்து மலர்களைக் கொண்டு வந்து உன் சந்நிதியில் வந்து நின்று அர்ச்சனை செய்து துதிக்க, பழனிப் பதியில் ஆட்சி பூண்டு மகிழ்ந்து உறைகின்ற பெருமாளே. 

பாடல் 188 - பழநி
ராகம் - பேஹாக்; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தானந்தன தானன தானன     தானந்தன தானன தானன          தானந்தன தானன தானன ...... தனதான

மூலங்கிள ரோருரு வாய்நடு     நாலங்குல மேனடு வேரிடை          மூள்பிங்கலை நாடியொ டாடிய ...... முதல்வேர்கள் 
மூணும்பிர காசம தாயொரு     சூலம்பெற வோடிய வாயுவை          மூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப் 
பாலங்கிள ராறுசி காரமொ     டாருஞ்சுட ராடுப ராபர          பாதம்பெற ஞானச தாசிவ ...... மதின்மேவிப் 
பாடுந்தொனி நாதமு நூபுர     மாடுங்கழ லோசையி லேபரி          வாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயே 
சூலங்கலை மான்மழு வோர்துடி     வேதன்தலை யோடும ராவிரி          தோடுங்குழை சேர்பர னார்தரு ...... முருகோனே 
சூரன்கர மார்சிலை வாளணி     தோளுந்தலை தூள்பட வேஅவர்          சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா 
காலின்கழ லோசையு நூபுர     வார்வெண்டைய வோசையு மேயுக          காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே 
கானங்கலை மான்மக ளார்தமை     நாணங்கெட வேயணை வேள்பிர          காசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.

மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக, உடலின் நடுவில் நான்கு அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை* என்னும் நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும் (ஒவ்வொரு நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை முதுகுத் தண்டிலுள்ள சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது) (நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை நிலையில்** (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும். நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து, (அவ்விடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும் அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக. திரி சூலம், கலைமான், மழுவாயுதம், ஒப்பற்ற உடுக்கை, பிரமனின் கபாலம் இவைகளுடன் பாம்பு, விளங்கும் தோடு, குழை இவை சேர்ந்துள்ள சிவபெருமான் பெற்ற முருகனே, சூரனுடைய கை, மார்பு, வில், வாள், அழகிய தோளும், தலையும் தூள்படும்படியாகவும், அவன் (தேவர்களைச் சிறையினின்றும் விடேன் என்று) செய்த சபதமும் பாழாகவும் வேலைச் செலுத்திய தலைவனே, மயில் வீரனே, காலில் அணிந்துள்ள கழலின் ஒலியும், சிலம்பொலியும், வீரக் காலணியின் இடிபோன்ற ஒலியும், யுக முடிவைக் காட்டும் ஓசைகளாகத் திகழும்படி நடனம் புரிபவனே, வள்ளிமலைக் காட்டில் வந்த கலை மானின் மகளாகிய வள்ளியை கூச்சம் ஏதுமின்றி அணைக்கின்ற தலைவனே, ஒளி வீசும் பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன..ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 189 - பழநி
ராகம் - சுப பந்துவராளி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தான தந்தன தான தந்தன     தான தந்தன தான தந்தன          தான தந்தன தான தந்தன ...... தனதான

மூல மந்திர மோத லிங்கிலை     யீவ திங்கிலை நேய மிங்கிலை          மோன மிங்கிலை ஞான மிங்கிலை ...... மடவார்கள் 
மோக முண்டதி தாக முண்டப     சார முண்டப ராத முண்டிடு          மூக னென்றொரு பேரு முண்டருள் ...... பயிலாத 
கோல முங்குண வீன துன்பர்கள்     வார்மை யும்பல வாகி வெந்தெழு          கோர கும்பியி லேவி ழுந்திட ...... நினைவாகிக் 
கூடு கொண்டுழல் வேனை யன்பொடு     ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு          கூர்மை தந்தினி யாள வந்தருள் ...... புரிவாயே 
பீலி வெந்துய ராலி வெந்தவ     சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை          பீதி கொண்டிட வாது கொண்டரு ...... ளெழுதேடு 
பேணி யங்கெதி ராறு சென்றிட     மாற னும்பிணி தீர வஞ்சகர்          பீறு வெங்கழு வேற வென்றிடு ...... முருகோனே 
ஆல முண்டவர் சோதி யங்கணர்     பாக மொன்றிய வாலை யந்தரி          ஆதி யந்தமு மான சங்கரி ...... குமரேசா 
ஆர ணம்பயில் ஞான புங்கவ     சேவ லங்கொடி யான பைங்கர          ஆவி னன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே.

மூல மந்திரமாகிய ஆறெழுத்தை (சரவணபவ) ஓதுவது என்பது என்னிடத்தில் கிடையாது. கொடுத்தல் என்பதும் அன்பு என்பதும் என்னிடம் கிடையாது. மெளனநிலை என்பதோ ஞானம் என்பதோ இங்கே கிடையாது. பெண்களின் மேல் மோகம் என்பது உண்டு. அந்த மோகத்தில் அதிக வேட்கை உண்டு. அவ்வேட்கையினால் செய்த குற்றங்கள் உண்டு. அக்குற்றங்களுக்காக நான் படவேண்டிய தண்டனையும் உண்டு. எல்லோரும் எனக்கு இட்ட மூகன் (கீழ்மகன்) என்ற பெயரும் உண்டு. அருளில் பயிற்சி இல்லாத விளையாட்டுக்கோலமும், குணக்கேடான துன்புறுத்துவோரின் கெட்ட ஒழுக்கமும் வெகுவாகப் பெருகி, வெந்து எழுகின்ற கோரமான கும்பி* என்ற நரகத்தில் விழுவதற்கான நினைவு கொண்டு, இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து திரிகின்ற என்னை அன்புடன் ஞான உள்ளம் படைத்த பெரியோருடன் சேரும் புத்திகூர்மையைத் தந்து இனி என்னை ஆண்டருள்வாயாக. மயிற் பீலி வெந்து, உயர்ந்துள்ள கமண்டல நீரும் கொதித்து** (நோயைக் குறைக்க வீசிய) அசோகக் கொழுந்தும் வெந்து, (அந்த அவமானத்தால்) ஊமைகள் போல் வாய் அடைத்த சமணர்கள் நெஞ்சிலே பயம் அடையுமாறு அவர்களோடு வாது செய்து (அந்தணர் வாழ்க என்று) அருள்வாக்கு எழுதப்பட்ட ஏடு யாவரும் போற்ற அங்கு எதிர் ஏறி வைகை ஆற்றில் செல்லவும், பாண்டிய மன்னனும் (திருநீற்றின் மகிமையால்) நோய் தீர்ந்து நலம் பெறவும், வஞ்சகச் சமணரும் உடல்கிழிய கழுமரத்தில் ஏறவும், வெற்றி கொண்ட திருஞானசம்பந்தராக அவதரித்த முருகப் பெருமானே, நஞ்சை உண்டவரும், முச்சுடர்களை அழகிய முக்கண்களில் ஏற்றவரும், ஆகிய சிவபெருமானின் பாகத்தில் பொருந்திய குமரி, பராகாச வடிவி, முதலும் முடிவுமாக நிற்கும் சங்கரியின் புதல்வனான குமரக் கடவுளே, வேதங்கள் போற்றிப் பயில்கின்ற ஞான குருவே, அழகிய சேவற்கொடியை ஏந்திய திருக்கரத்தனே, திரு ஆவினன்குடியில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே. 
* கும்பி என்பது ஏழு நரகங்களில் ஒன்று. பாவிகளைக் குயவரது சூளையில் இட்டு வாட்டும் நரகம்.
** சமணர்கள் பாண்டியனின் நோயைத் தணிக்க மயிற்பீலி, கமண்டல நீர், அசோகக் கொழுந்து முதலிய பொருட்களால் முயன்று தோல்வியடைந்த கதை இங்கு குறிப்பிடப்படுகிறது.

பாடல் 190 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தனதனன தனதனன தனதனன     தனதனன தனதனன ...... தனதான

முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு     முறுவல்தர விரகமெழ ...... அநுராகம் 
முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென     முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச 
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக     அகமகிழ இருகயல்கள் ...... குழையேற 
அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும்     அலர்கமல மலரடியை ...... மறவேனே 
நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும்     நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா 
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர     நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே 
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற     மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே 
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு     மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.

மணம் நிறைந்த கூந்தல் அவிழவும், மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ள, நிலவின் ஒளியை பற்கள் வீச, காம உணர்ச்சி உண்டாக, ஆசை வளர்ந்து பெருக, தன்வசம் அழிய, அசைந்து நிலை பெயரும் கை வளையல்கள் கலகல் என்று ஒலிக்க, முகமாகிய சந்திரன் சிறு வியர்வைத் துளிகளை வீச, அருமையான இனிய சொற்கள் பதற்றத்துடன் வர, வாயிதழினின்று வரும் ஊறலாகிய அமுதத்தை உண்டு மிகவும் உள்ளம் களிப்பு அடைய, இரு கயல் மீன் போன்ற கண்கள் காதளவும் பாய, அமர்க்களப் படும் படுக்கை மலர் அணையில் மேல் நான் துயில் கொண்டாலும், விரிந்த உனது தாமரைத் திருவடிகளை மறவேன். அசுரர்களோடு வந்த குதிரைகளும், கொல்லும் தன்மை கொண்ட யானைகளும், தேர் வரிசைகளும் நெறு நெறு என முறிந்து விழவும் செய்த கூரிய வேலாயுதனே, அமைந்துள்ள அருவமாகியும் உருவமாகியும் உள்ள குருராஜனே, குருபரனே, குமரனே, நீண்ட பெரிய வானத்து உச்சியில் உறைபவனே, வரும் அருவிகளில் நவ மணிகளும் மலர்களும் கமுக மரத்தின் மேல் சிதற தேன் ஒழுக்கம் பெருகும் வள்ளி மலையில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு பூரிக்கும் மார்பகங்களையும், இரண்டு புயங்களையும் அணைத்து மகிழ்கின்றவனே, பழனி மலையில் எழுந்தருளிய பெருமாளே. 

பாடல் 191 - பழநி
ராகம் - .....; தாளம் -

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

முருகு செறிகுழல் முகிலென நகில்நறு     முளரி முகையென இயலென மயிலென          முறுவல் தளவென நடைமட வனமென ...... இருபார்வை 
முளரி மடலென இடைதுடி யதுவென     அதர மிலவென அடியிணை மலரென          மொழியு மமுதென முகமெழில் மதியென ...... மடமாதர் 
உருவ மினையன எனவரு முருவக     வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய          வுலையின் மெழுகென வுருகிய கசடனை ...... யொழியாமல் 
உவகை தருகலை பலவுணர் பிறவியி     னுவரி தனிலுறு மவலனை யசடனை          உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே 
அரவ மலிகடல் விடமமு துடனெழ     அரிய யனுநரை யிபன்முத லனைவரும்          அபய மிகவென அதையயி லிமையவ ...... னருள்பாலா 
அமர்செய் நிசிசர ருடலவை துணிபட     அவனி யிடிபட அலைகடல் பொடிபட          அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே 
பரவு புனமிசை யுறைதரு குறமகள்     பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய          பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே 
பரம குருபர எனுமுரை பரசொடு     பரவி யடியவர் துதிசெய மதிதவழ்          பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.

வாசனை மிகுந்த கூந்தல் மேகம் எனவும், மார்பகங்கள் நறுமணமுள்ள தாமரை எனவும், சாயல் மயில் எனவும், பற்கள் முல்லை எனவும், நடை மடப்பம் பொருந்திய அன்னத்தின் நடை எனவும், இரண்டு கண்களும் தாமரை இதழ்கள் எனவும், இடை உடுக்கையே எனவும், வாய் இதழ் இலவ மலர் எனவும், இரண்டு அடிகளும் மலர் எனவும், பேச்சு அமுதம் எனவும், முகம் அழகிய சந்திரன் எனவும், அழகிய (விலை) மாதர்களின் உருவங்களை இவை இவை என்று உருவகப் படுத்திப் புகழ்ந்து, அவர்கள் கொடுக்கும் புணர்ச்சி இன்பத்தில் பொருந்த, உலையில் இடப்பட்ட மெழுகைப் போல் உருகிய குற்றவாளியாகிய என்னை எப்போதும் இன்பம் தரும் பல விதமான கலைகளையும் உணருதற்கு, பிறவிக் கடலில் கிடக்கும் இந்தக் கீழானவனுக்கு, மூடனுக்கு உனது சிலம்பணிந்த திருவடி இணைகளை பெறுவதற்கு அருள் புரிவாயாக. ஒலி மிகுந்த கடலில் அமுதத்துடன் விஷமும் தோன்ற, திருமாலும், பிரமனும், (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரன் முதலான எல்லாரும் அடைக்கலம் என மிகவும் ஓலமிட, அந்த விஷத்தை உண்ட கயிலை மலை தேவனாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே. போர் செய்த அசுரர்களின் உடல்கள் துணிக்கப்பட்டு விழ, பூமி இடியுண்ண, அலை கடல் பொடிபட, தேவர்கள் சிறையினின்று மீள, சக்தி வேலை ஒரு நொடிப் பொழுதில் செலுத்தியவனே, போற்றிச் சென்ற தினைப்புனத்தின் மீது இருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் பருத்த, அழகிய மார்பகங்களில் முழுகிய பன்னிரண்டு தோளனே, சங்குகள் விளையும் சரவண மடுவில் தாமரையில் எழுந்தருளிய முருகனே, மேலானவனே குருபரனே என்னும் புகழ் மொழிகளால் போற்றி செய்து வணங்கி அடியார்கள் துதிக்க, திங்கள் தவழும் பழனி மலையில் இனிதாக உறைகின்றவனே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 192 - பழநி
ராகம் - ரஞ்சனி ; தாளம் - அங்கதாளம் - 7 - சதுஸ்ர ஜம்பை /40 தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2 தகதிமிதக-3

தனதனன தாத்த ...... தனதான     தனதனன தாத்த ...... தனதான

வசனமிக வேற்றி ...... மறவாதே     மனதுதுய ராற்றி ...... லுழலாதே 
இசைபயில்ஷ டாக்ஷ ...... ரமதாலே     இகபரசெள பாக்ய ...... மருள்வாயே 
பசுபதிசி வாக்ய ...... முணர்வோனே     பழநிமலை வீற்ற ...... ருளும்வேலா 
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து, என் மனம் துயரம் தரும் வழிகளில் அலைந்து திரியாதிருக்கவும் மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை அருள் புரிவாயாக சிவபிரானது வேத சிவாகமங்களை அறிந்தவனே பழனிமலையில் எழுந்தருளியிருந்து அருள் புரியும் வேலனே அசுரர் கூட்டங்களை வாட்டி ஒடுக்கியும், தேவர்கள் நன்கு வாழும்படியாக சிறையினின்று மீட்டுவித்த பெருமாளே. 

பாடல் 193 - பழநி
ராகம் - ....; தாளம் -

தந்தன தந்தன தான தந்தன     தந்தன தந்தன தான தந்தன          தந்தன தந்தன தான தந்தன ...... தனதான

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்     வந்தவர் தங்களை வாதை கண்டவர்          வங்கண முந்தெரி யாம லன்புகள் ...... பலபேசி 
மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள்     தந்தக டம்பிக ளூற லுண்டிடு          மண்டைகள் கண்டித மாய்மொ ழிந்திடு ...... முரையாலே 
சஞ்சல முந்தரு மோக லண்டிகள்     இன்சொல்பு ரிந்துரு காத தொண்டிகள்          சங்கம மென்பதை யேபு ரிந்தவ ...... னயராதே 
தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர்     கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள்          தந்தசு கந்தனை யேயு கந்துடல் ...... மெலிவேனோ 
கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட     வென்றுகு ருந்தினி லேறி மங்கையர்          கண்கள்சி வந்திட வேக லந்தரு ...... முறையாலே 
கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை     கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு          கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் ...... மருகோனே 
குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு     மின்பமி குந்திட வேய ணைந்தருள்          குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா 
கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய     பண்புத ருந்திரு வாவி னன்குடி          குன்றுக ளெங்கினு மேவ ளர்ந்தருள் ...... பெருமாளே.

வஞ்சனை மிகுந்த மாய வம்பு செய்பவர்கள். தம்மிடம் வந்த ஆடவர்களை துன்புறுத்துவோர். (உண்மைக்) காதல் இல்லாமல் பல அன்பு வார்த்தைகளைப் பேசி கட்டிலில் அமர்ந்து கலவி வேடிக்கைகளைத் தரும் பொல்லாதவர்கள். காமுகரின் வாயிதழ் ஊறலை உண்ணும் வேசியர்கள். கண்டிப்புடன் பேசும் வார்த்தைகளால் கவலையைத் தருகின்ற மோகத் துர் நடத்தையர். இனிமையான சொற்களை (வெளியில்) பேசி உள்ளத்தில் உருக்கம் இல்லாத விலைமகளிர். (இத்தகையோரின்) இணக்கத்தையே விரும்பினவனாகிய நான் தளராமல் (எப்போதும்) அவர்களிடத்தேயே உள்ளம் களிப்படைந்து, அவர்கள் கொஞ்சியும் நடனம் புரிந்தும் வேசை முண்டைகளாய் கொடுத்த சுகத்தையே விரும்பி உடல் மெலிந்து போவேனோ? கம்சன் ஏவிய சகடாசுரன் மாளும்படி அவனை வென்று, குருந்த மரத்தில் ஏறி கோபிகள் கண்கள் சிவக்க அவர்களுடன் ஊடாடி அரிய வகைகளாலே (அவர்களைப்) பார்த்தும் மகிழ்ந்தும் அழகாய் உடன் இருந்தும் இசை பாடி, (கண்ணனாக) விளங்கிய நாட்களில் அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும் மருகனே, யானையாகிய (ஐராவதம்) வளர்த்த வஞ்சிக் கொடி போன்ற தேவயானையையும், மான் பெற்ற மகளாகிய வள்ளியையும் இன்பம் பெருகவே அணைந்தருளும் மலை போல் வந்து அருளிய, கடப்ப மாலை முற்பட்டு விளங்கும் அழகிய மார்பனே, பூங்கொத்துக்கள் மலரும் குளங்கள் நிரம்பிய அழகு விளங்கும் (பழநி ஆகிய) திரு ஆவினன்குடியில் உள்ள குன்றுகளின் எல்லா இடத்திலும் விளங்கி வீற்றருளும் பெருமாளே. 

பாடல் 194 - பழநி
ராகம் - ராமப்ரியா; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகதகிட-2 1/2

தனனா தனனா ...... தனதான     தனனா தனனா ...... தனதான

வரதா மணிநீ ...... யெனவோரில்     வருகா தெதுதா ...... னதில்வாரா 
திரதா திகளால் ...... நவலோக     மிடவே கரியா ...... மிதிலேது 
சரதா மறையோ ...... தயன்மாலும்     சகலா கமநூ ...... லறியாத 
பரதே வதையாள் ...... தருசேயே     பழனா புரிவாழ் ...... பெருமாளே.

வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும், கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று ஆராய்ந்து பார்த்தால் கைகூடாதது எது உண்டு? எந்தக் காரியம்தான் அவ்வாறு துதித்தால் நிறைவேறாது? பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும் ரசவாத வித்தை மூலம் ஒன்பது லோகங்களை* இட்ட கூட்டுறவால் இறுதியில் கரியாகும். இதனால் வேறு பயன் ஏது? சத்திய சொரூபனே, வேதம் ஓதும் பிரமனும் திருமாலும் எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய், பழனிப்பதியில் வாழ்கின்ற பெருமாளே. 
* பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம், துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது.

பாடல் 195 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த ...... தனதான

வனிதையுடல் காய நின்று வுதிரமதி லேயு ருண்டு     வயிறில்நெடு நாள லைந்து ...... புவிமீதே 
மனிதருரு வாகி வந்து அநுதினமு மேவ ளர்ந்து     வயதுபதி னாறு சென்று ...... வடிவாகிக் 
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிக வேயு ழன்று     கனிவதுட னேய ணைந்து ...... பொருள்தேடிக் 
கனபொருளெ லாமி ழந்து மயலில்மிக வேய லைந்த     கசடனெனை யாள வுன்ற ...... னருள்தாராய் 
புனமதனில் வாழு கின்ற வநிதைரகு நாதர் தந்த     புதல்வியித ழூற லுண்ட ...... புலவோனே 
பொருமதனை நீறு கண்ட அரியசிவ னாரு கந்த     புதியமயி லேறு கந்த ...... வடிவேலா 
பனகமணி மாம தங்கி குமரிவெகு நீலி சண்டி     பரமகலி யாணி தந்த ...... பெருவாழ்வே 
பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று     பழநிமலை மீதி னின்ற ...... பெருமாளே.

தாயாருடைய உடல் வற்றுமாறு கருவில் இருந்து, அவளது ரத்தத்திலே திரட்சிபெற்று வளையவந்து, அவளது வயிற்றில் நீண்ட நாட்கள் துன்புற்று, இந்தப் பூமியின் மேல் மனித உருவுடன் பிறந்து, தினந்தோறும் வளர்ச்சி பெற்று, பதினாறு வயதை அடைந்து, ஆணழகனாக ஆகி, அழகிய மார்பகங்களை உடைய பெண்களின் வலையிலே அகப்பட்டு மிகவும் திரிந்து, அன்புடனே அப்பொது மகளிரைத் தழுவி, அவர்களுக்காக பணத்தைத் தேடி, பெரும் பொருள் யாவையும் இழந்து, மயக்கத்தில் அதிகமாக அலைந்த மூடனாகிய அடியேனை ஆட்கொள்ள உனது திருவருளைத் தந்தருள்க. தினைப்புனத்தில் வசிக்கின்றவளும், ரகுநாதராகிய திருமாலின் திருமகளுமான வள்ளி தேவியின் இதழ் அமுதத்தைப் பருகிய புலவனே, மலர்க்கணையால் போர் புரிந்த மன்மதனைச் சாம்பலாகச் செய்த அருமையான சிவபிரான் மகிழ்ந்த புதுமையான மயில் வாகனத்தின் மீது ஏறும் கந்தனே, கூரிய வடிவேலனே, பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும்*, இளமையானவளும், மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும், நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே, பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து, பழநிமலை மீது நின்றருளிய பெருமாளே. 
* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப் பிறந்து 'மாதங்கி' எனப் பெயர் பெற்றாள்.

பாடல் 196 - பழநி
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - ஆதி - 2 களை

தானந் தத்தன தானன தானன     தானந் தத்தன தானன தானன          தானந் தத்தன தானன தானன ...... தனதான

வாதம் பித்தமி டாவயி றீளைகள்     சீதம் பற்சனி சூலைம கோதர          மாசங் கட்பெரு மூலவி யாதிகள் ...... குளிர்காசம் 
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி     யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு          வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள் ...... வெகுமோகர் 
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ     டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்          சோரம் பொய்க்குடி லேசுக மாமென ...... இதின்மேவித் 
தூசின் பொற்சர மோடுகு லாயுல     கேழும் பிற்பட வோடிடு மூடனை          தூவஞ் சுத்தடி யாரடி சேரநி ...... னருள்தாராய் 
தீதந் தித்திமி தீதக தோதிமி     டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு          சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... வெனபேரி 
சேடன் சொக்கிட வேலைக டாகமெ     லாமஞ் சுற்றிட வேயசு ரார்கிரி          தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடு ...... மயில்வீரா 
வேதன் பொற்சிர மீதுக டாவிந     லீசன் சற்குரு வாயவர் காதினில்          மேவும் பற்றிலர் பேறரு ளோதிய ...... முருகோனே 
வேஷங் கட்டிபி னேகிம காவளி     மாலின் பித்துற வாகிவி ணோர்பணி          வீரங் கொட்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே.

வாதநோய், பித்த நோய்கள், பானை போன்ற வயிறு, கோழையால் வரும் க்ஷயரோகங்கள், சீதபேதி நோய், ஜன்னி, வயிற்று வலி, மகோதரம், கண்கள் சம்பந்தமான நோய்கள், பெரிய மூல வியாதிகள், ஜுரக் குளிர், காச நோய், தொடர்ந்து வரும் வாந்தி முதலிய சில நோய், பிணி வகைகளுடன், தொண்ணூற்றாறு* தத்துவக் கூட்டங்களின் மத்தியில் வாழ்கின்ற வஞ்சகர்களும் பேராசைக்காரருமான ஐம்புலன்களால் சூழப்பட்டு, பொல்லாத விசித்திரமான தேக ஆசையால், 'மண்', 'பெண்', 'பொன்' என்ற மூவாசையும் கொண்டு, எந்த நல்ல பொருளையும் சற்றும் உணராமல், மாயையை விளைவிக்கின்ற கள்ளத்தனமும், பொய்ம்மையுமே கொண்ட இவ்வுடல்தான் சுகமெனக் கருதி, இந்த உடலைப் போற்றி, நல்ல ஆடைகளாலும், தங்கச் சங்கிலிகளாலும் அலங்கரித்து மகிழ்ந்து, ஏழு உலகங்களும் எனக்குப் பிற்பட்டதாக எண்ணி முந்தி ஓடிடும் மூடனாகிய நான், தூய்மை வாய்ந்த அழகிய சுத்தமான உன் அடியார்களின் திருவடி சேரும் பாக்கியத்தைப் பெற உனது திருவருளைத் தர வேண்டுகிறேன். தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட என்ற முழக்கத்துடன் பேரிகைகள் முழங்க, ஆதிசேஷன் மயக்கமுற, கடல்களும், அண்ட கோளங்களும் அச்சம் கொள்ள, அசுரர்கள் நிறைந்து இருந்த மலைகளும், தீவுகளும் பொடி எழவே நாசமுற, நெருப்பை வீசும் வேலினைச் செலுத்தும் மயில் வீரனே, பிரமனது அழகிய சிரங்களின் மீது குட்டிப் புடைத்து, நல்ல ஈசனாம் சிவபிரானுக்குச் சற்குருவாக அமைந்து, அவர் திருச்செவிகளில் நாடுகின்ற பற்றற்றவர்கள் பெறத்தக்கதாகிய பிரணவப் பொருளை ஓதிய முருகனே, வேடன், வேங்கை, கிழவன் - எனப் பல வேஷங்கள் தரித்து, பின்பு தினைப்புனம் சென்று, சிறந்த வள்ளியின் மீது, மோக மயக்கம் கொண்டு பித்துப் பிடித்தவனாகி, தேவர்கள் பணியும் பராக்கிரமம் வாய்ந்த பழநியம்பதியில் மேவிய பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

பாடல் 197 - பழநி
ராகம் - ....; தாளம் -

தான தந்தன தானான தாதன     தான தந்தன தானான தாதன          தான தந்தன தானான தாதன ...... தனதான

வார ணந்தனை நேரான மாமுலை     மீத ணிந்திடு பூணார மாரொளி          வால சந்திர னேராக மாமுக ...... மெழில்கூர 
வார ணங்கிடு சேலான நீள்விழி     யோலை தங்கிய வார்காது வாவிட          வான இன்சுதை மேலான வாயித ...... ழமுதூறத் 
தோர ணஞ்செறி தார்வாழை யேய்தொடை     மீதில் நின்றிடை நூல்போலு லாவியெ          தோகை யென்றிட வாகாக வூரன ...... நடைமானார் 
தோத கந்தனை மாமாயை யேவடி     வாக நின்றதெ னாஆய வோர்வது          தோணி டும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே 
கார ணந்தனை யோராநி சாசரர்     தாம டங்கலு மீறாக வானவர்          காவ லிந்திர னாடாள வேயயில் ...... விடும்வீரா 
கார்வி டந்தனை யூணாக வானவர்     வாழ்த ரும்படி மேனாளி லேமிசை          காள கண்டம காதேவ னார்தரு ...... முருகோனே 
ஆர ணன்றனை வாதாடி யோருரை     ஓது கின்றென வாராதெ னாவவ          னாண வங்கெட வேகாவ லாமதி ...... லிடும்வேலா 
ஆத வன்கதி ரோவாது லாவிய     கோபு ரங்கிளர் மாமாது மேவிய          ஆவி னன்குடி யோனேசு ராதிபர் ...... பெருமாளே.

யானைக்கு ஒப்பான பெரிய மார்பகங்களின் மேல் அணிந்துள்ள ஆபரணமாகிய முத்து மாலையின் பேரொளியும், பூரண சந்திரனுக்கு ஒப்பான சிறந்த முகம் அழகு மிகுந்து பொலியவும், காண்போருக்கு மிக்க வருத்தம் தர வல்ல, சேல் மீன் போன்று நீண்ட கண்கள் ஓலை பூண்டுள்ள அகன்ற காதுகளைத் தாக்கி நிற்கவும், தேவர்களது இனிய அமுதத்திலும் மேலான இனிமையுடன் வாயிதழ்கள் அமுதத்தைப் பொழியவும், அலங்காரத் தோரணங்களுக்குப் பயன்படும் குலை தள்ளிய வாழையை நிகர்க்கும் தொடையின் மேல் விளங்கும் இடை மெல்லிய நூலுக்கு ஒப்பாக உலாவி, மயில் என்று சொல்லும்படி அழகாக ஊர்ந்து செல்லும் அன்னத்துக்கு ஒப்பான நடையுடன் விளங்கும் விலைமாதர்களின் வஞ்சகச் செயலை பெரிய மாயையே வடிவு கொண்டு நிற்கின்றது என ஆய்ந்து அறியும் அறிவு எனக்குத் தோன்றும்படி அடியேனுடைய உள்ளத்தில் நீ அருள் பாலிப்பாயாக. (முருகவேள் எதற்காகப் படையெடுத்து வந்துள்ளார் என்னும்) காரணத்தை ஆய்ந்து அறியாத அசுரர்கள் எல்லாரும் முடிந்து அழியவும், தேவர்களின் அரசனான இந்திரன் தன் பொன்னுலகத்தை ஆளவும், வேலைச் செலுத்திய வீரனே, தேவர்கள் வாழும்படி, முன்பு ஒரு நாள் கரிய (ஆலகால) விஷத்தை உணவாக உண்டவரும், கருநீலகண்டத்தை உடையவருமான சிவ பெருமான் தந்து அருளிய முருகனே, வேதம் வல்ல பிரமனுடன் வாதம் செய்து, ஒரு சொல்லுக்கு (பிரணவத்துக்கு) உரை ஓதுக என்று அவனைக் கேட்க, வாராது என்று கூறி விழித்து நிற்க, அவனுடைய ஆணவம் அழிய, பிரமனைச் சிறையில் வைத்த வேலனே, சூரியனுடைய ஒளி நீங்காது எப்போதும் வீசுகின்ற கோபுரங்கள் விளங்குவதும், லக்ஷ்மி தேவி விரும்பி வாசம் செய்வதுமான திருவாவினன் குடியில் (பழநியில்) வீற்றிருப்பவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே. 

பாடல் 198 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனன தந்தன தானன தானன     தனன தந்தன தானன தானன          தனன தந்தன தானன தானன ...... தனதான

விதமி சைந்தினி தாமலர் மாலைகள்     குழல ணிந்தநு ராகமு மேசொலி          விதர ணஞ்சொலி வீறுக ளேசொலி ...... யழகாக 
விரிகு ரும்பைக ளாமென வீறிய     கனக சம்ப்ரம மேருவ தாமதி          விரக மொங்கிய மாமுலை யாலெதி ...... ரமர்நாடி 
இதமி சைந்தன மாமென வேயின     நடைந டந்தனர் வீதியி லேவர          எவர்க ளுஞ்சித மால்கொளு மாதர்கண் ...... வலையாலே 
எனது சிந்தையும் வாடிவி டாவகை     அருள்பு ரிந்தழ காகிய தாமரை          இருப தங்களி னாலெனை யாள்வது ...... மொருநாளே 
மதமி சைந்தெதி ரேபொரு சூரனை     யுடலி ரண்டுகு றாய்விழ வேசின          வடிவு தங்கிய வேலினை யேவிய ...... அதிதீரா 
மதுர இன்சொலி மாதுமை நாரணி     கவுரி யம்பிகை யாமளை பார்வதி          மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே 
பதமி சைந்தெழு லோகமு மேவலம்     நொடியில் வந்திடு மாமயில் மீதொரு          பவனி வந்தக்ரு பாகர சேவக ...... விறல்வீரா 
பருதி யின்ப்ரபை கோடிய தாமெனும்     வடிவு கொண்டருள் காசியின் மீறிய          பழநி யங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.

பல விதங்களில் ஆசைப்பட்டு இனிதாக மலர் மாலைகளை கூந்தலில் அணிந்து, காமப் பற்றான பேச்சுக்களைப் பேசி, தமது விவேகத்தைச் சொல்லியும், சிறப்புக்களைச் சொல்லியும், அழகாக விரிந்து வளர்ந்த தென்னங் குரும்பைகளாம் என்னும்படி ஓங்கி வளர்ந்த, பொன் மயமான, நிறைந்த மேரு மலை போல, மிக்க காமம் பொதிந்து ஓங்கிய, அழகிய மார்பகங்களைக் கொண்டு முன்னுள்ளவர் விருப்பத்தை நிறைவேற்ற காமப் போரை விரும்பி, இன்பத்துடன் அன்னப் பறவை போல விதம் விதமான நடை நடப்பவராய் (வேசையர்) தெருவில் வர, எல்லோருடைய உள்ளமும் காம மயக்கத்தைக் கொள்ளச்செய்யும் விலைமாதர்களின் (கண் என்னும்) வலையால் என் மனமும் வாடிப் போகாத வகைக்கு, அருள் பாலித்து அழகான தாமரை போன்ற உனது இரண்டு திருவடிகளால் என்னை ஆட்கொள்ளுவதும் ஒரு நாள் நடக்குமோ? ஆணவம் மிக்கு எதிரில் வந்து சண்டை செய்த சூரனை உடல் இரண்டு கூறாக விழும்படிச் செய்த, கோபமான உருவத்தைக் கொண்ட, வேலாயுதத்தைச் செலுத்திய மிக்க வலிமை வாய்ந்தவனே, இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி, நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி, மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே, ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும் ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல் ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே, வெற்றி வீரனே, சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும் பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே, (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 199 - பழநி
ராகம் - ....; தாளம் -

தனதனன தனன தந்த தனதனன தனன தந்த     தனதனன தனன தந்த ...... தனதான

விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து     விழவதன மதிவி ளங்க ...... அதிமோக 
விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து     விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால் 
இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த     இருளகல வுனது தண்டை ...... யணிபாதம் 
எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி     யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய் 
அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை     அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே 
அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட     அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா 
பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை     படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும் 
பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த     பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே.

மணம் கமழும் பூக்களை அணிந்த, கரிய சுருண்ட கூந்தல் சரிந்து விழ, சந்திரனைப் போன்று முகம் விளங்க, அதிக காம மயக்கம் தர வல்ல கண்கள் புரள, மார்பகங்கள் குலுங்க, பேச்சு குழற, படுக்கையில் புகுந்து காம மோகச் செயல்களைச் செய்யும் இன்ப வேசையரிடத்து இரவும் பகலும் நெருங்கிச் சென்று, மனமும் அறிவும் அழிந்து, உருகும் அந்த அஞ்ஞானம் நீங்க, உனது தண்டைகள் அணிந்த திருவடியை எனது தலை மீது தரித்து, நான் மேலும் மேலும் அழுது உன் திருவருளையே விரும்பி, இனிமையான உனது திருப்புகழைச் சொல்ல அருள் வாக்கு தந்து அருளுக. பாம்பின் மீது கண் துயிலும் முகுந்தன், மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் அழகிய லக்ஷ்மியோடு தழுவும் கருமேக நிறத்தினராகிய திருமாலின் மருகனே, வலிமையான அசுரர்களின் உடல்களைப் பிளந்து, அவ்வுடல்களின் ரத்தக் கொழுப்பில் முழுகி, விண்ணுலகத்துத் தேவர்களின் சிறையை ஒழித்த வீரப்ரதாபம் வாய்ந்த கூரிய வேலனே. பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்ட (நீல) கண்டத்தை உடைய கடவுள், கங்கை படர்ந்த சடையை உடையவர், ரிஷப வாகனத்தர், அன்பர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் பரம சிவனார் அருளிய கடம்பனே, முருகனே, ஆறு திருமுகங்களை உடையவனே, கந்தனே, பழனி மலையில் அமர்ந்தருளும் பெருமாளே. 

பாடல் 200 - பழநி
ராகம் - வராளி; தாளம் - மிஸ்ர சாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தான தந்தன தான தந்தன     தான தந்தன தான தந்தன          தான தந்தன தான தந்தன ...... தனதான

வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய     மாதர் கொங்கையி லேமு யங்கிட          வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான் 
வீறு கொண்டுட னேவ ருந்தியு     மேயு லைந்தவ மேதி ரிந்துள          மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம் 
போய லைந்துழ லாகி நொந்துபின்     வாடி நைந்தென தாவி வெம்பியெ          பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப் 
போது கங்கையி னீர்சொ ரிந்திரு     பாத பங்கய மேவ ணங்கியெ          பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே 
தீயி சைந்தெழ வேயி லங்கையில்     ராவ ணன்சிர மேய ரிந்தவர்          சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே 
தேச மெங்கணு மேபு ரந்திடு     சூர்ம டிந்திட வேலின் வென்றவ          தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே 
ஆயி சுந்தரி நீலி பிங்கலை     போக அந்தரி சூலி குண்டலி          ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும் 
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்     போத கந்தனை யேயு கந்தருள்          ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.

மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட விலைமாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி, வீணாக சில பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல் செருக்கு அடைந்து மனம் வருந்தியும், நிலை குலைந்து, வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும், அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று நொந்தும், பின்னர் உடல் வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும், இப் பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக. நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில் இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள் தொலைந்து அழியும்படியாக வென்ற இராமனின் மருகோனே, எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த சூரன் இறந்து போகும்படியாக வேல் கொண்டு வென்றவனே, தேவர்கள் தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே, அனைவருக்கும் தாய், அழகி., பச்சை நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள், உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி, ஆதி முதல்வி, அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும், ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் வணங்கி வேண்ட, ஒப்பற்ற ஞான உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே), திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.