LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[501 -550]

பாடல் 501 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான
சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை
     மோந்துப யோதரம ...... தணையாகச் 
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக
     காந்தமொ டூசியென ...... மடவார்பால் 
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி
     ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன் 
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை
     பூண்டுற வாடுதின ...... முளதோதான் 
பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்
     நீண்டிடு மாலொடய ...... னறியாது 
பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்
     ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர் 
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட
     மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே 
பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை
     சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.
சாந்தும், புனுகும் (மார்பில்) தோய்ந்தும், அழகு நிறைந்த கூந்தலை முகர்ந்து பார்த்தும், மார்பகத்தையே தலையணையாகக் கொண்டு அதன் மேல் சாய்ந்தும், ஆடம்பரத்துடன் வாழ்ந்தும், காம இச்சை இன்பத்தில், காந்தமும் ஊசியும் போல இழுக்கப்பட்டு, விலைமாதர்களிடத்தில் மிக்கெழுந்த அன்பு மனத்தைத் தொலைத்து, உன்னுடைய திருவடியை அணுகி, ஆய்ந்தறிந்து உணர்கின்றோம் என்ற உணர்ச்சி இல்லாத மெளன நிலையில் அடி நாயேனாகிய நான், குவிந்து அவிழ்ந்த தாமரை போன்ற அழகிய பதங்களாகிய, குற்றம் இல்லாத இரண்டு திருவடிகளையும் மனதில் கொண்டு அன்பு பூணும் நாள் ஒன்று உள்ளதோ? பாம்பாகிய ஆதிசேஷன் மேல் இன்பமாக விளங்கி கண் துயில் கொள்ளும் நீண்ட வடிவம் கொண்ட திருமாலும், பிரமனும் (அடி முடியை) காண முடியாது நின்று, பாம்பு வடிவத்தைக் கொண்ட (பதஞ்சலி) முனிவரும், தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முனிவரும் பொருந்தி நின்று, எதிரே தரிசிக்கும்படி நடனம் செய்கின்ற கூத்தப் பெருமானுடைய அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச் சந்திரனையும் சூடியுள்ள ஜடாமகுடமாகிய பொன் வண்ணப் புரிசடையில் விரும்பி விளையாடும் குழந்தையே, அழகிய கமுகு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளதும், நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமாளே. 
பாடல் 502 - சிதம்பரம் 
ராகம் - கெளளை; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனன தனதான தனதனன தனதான
     தனதனன தனதான ...... தனதான
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான
     சொருபகிரி யிடமேவு ...... முகமாறும் 
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய
     துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச 
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட
     அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி 
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை
     அதிசயமெ னருள்பாட ...... வரவேணும் 
விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட
     மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன் 
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்
     மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே 
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி
     னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா 
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி
     யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.
கதிர் போன்ற திருமேனியின் வடிவழகும், முற்றின ஞான ஸ்வரூபமும், கி¡£டம் சூடிய முகங்கள் ஆறும், தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும் வண்டுகள் முரல, அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில் துளித்துளியாக தேன் சொட்ட, பவள வாய் இதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச, அடர்ந்த பவளம் போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க, வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி, அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய, தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும் உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக, நீ எழுந்தருளி வரவேண்டும். நந்தி தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால், மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய, தமது கண்டத்திலேயே தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு அருள் செய்த தலைவனும், மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில் பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான் மிகவும் மகிழ்ச்சி அடைய அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே, துன்பங்களும், கிரகக் கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக. குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே, இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன், பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே. 
* சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை 'முதிய முநி' எனக் குறிப்பிட்டார் - தில்லைப் புராணம்.
பாடல் 503 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தத்ததன தானதன தானதன தானதன
     தத்ததன தானதன தானதன தானதன
          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான
தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை
     யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்
          சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல 
தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ
     யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென
          தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி 
வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு
     கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற
          வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... யுடைசோர 
மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட
     னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்
          வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ...... செயலாமோ 
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக
     நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை
          தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா 
சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட
     ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ
          சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே 
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு
     சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை
          சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா 
சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்
     சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக
          சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே.
கிளி போல் (இனிமையாகப்) பேசி மயில் போல நடித்தும், பலவிதமான காமத்தை எழுப்ப வல்ல சிரிப்பைச் சிரித்தும், அப்போதே வெட்கப்படுவது போல நாணத்தைக் காட்டியும், மார்பகங்களை ஆடையால் மூடியும் நின்ற அந்தப் பொது மகளிர் எங்கள் வீடு கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது, இனி நீங்கள் வர வேண்டும் என்று ஓடி, மடியைப் பிடித்து இழுத்துச் செல்வது போல அழைத்து, தைக்கும்படியான காம இன்ப லீலைகளைச் செய்து உறவு முறையில் விளையாடி, வீட்டுக்குக் கொண்டு போய் வஞ்சனை எண்ணத்துடன் படுக்கையின் மேல் இருத்தி, இது தக்க சமயம் அன்றோ? ஏன் நீர் போகின்றீர்? என்று கூறி, தட்டில் புனுகு சட்டத்துடன், பன்னீர் முதலிய பலவிதமான வாசனைத் திரவியங்களை வந்தவருடைய உடலில் பூசி, முகத்தோடு முகம் வைத்து, இன்ப ரசமான வாயிதழ் ஊறல் பெருக, கூந்தல் கலைய, ஒளி வீசும் கண்கள் சுழன்று துடிக்க, வட்டமான தனங்கள் மார்பில் புதைந்து திகழ, வேர்வை உண்டாக, தோளை இறுக அணைத்து, உடை நெகிழ, மீன் போன்ற விழிகள் காமப் போரை விளைவிக்க, கட்டித் தழுவி ஆனந்தமாக மனம் ஒப்பி, இருவரும் காம மயக்கில் முழுகிய பின்னர், வந்தவர் நகைகளை அடமானம் வைத்து, தேடிய பொருளை எல்லாம் சூறைக் காற்று அடித்துக் கொண்டு போகின்ற விலைமகளிருடன் கலவி இன்பம் பெறும் தொழில் நல்லதாகுமா? சக்தி, தனித்து விளங்கும் ஜோதி, அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே, சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே, தேமல் பரந்த தன பாரங்கள் உள்ளவளும், மோகம் தர வல்லவளும், சுகக் கடல் போன்றவளும், மிக்க அழகிய முக வடிவத்தைக் கொண்டவளும், எனது தாய் ஆனவளும் ஆகிய வள்ளி அம்மையை பரிசுத்தமான படுக்கையில், மாலை அணிந்த பெரிய மார்பகங்களை விட்டுப் பிரியாத* அழகிய கரத்துடன் விளங்கும் மணிமார்பனே, பரிசுத்தமான, அழகிய, சிறந்த தவ சிகாமணியே என்று ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக உறைகின்ற ஆறுமுகனே, சுப்ரமணியனே, புலியூரில் பொருந்தி வீற்றிருப்பவனே, தேவர்கள் போற்றும் பெருமாளே. 
* உண்மை அடியார்களின் பக்குவ நிலையை எப்போதும் விரும்பி அணைந்து காக்கும் கரம் என்பது பொருள்.
பாடல் 504 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தத்த தத்தன தான தானன
     தத்த தத்தன தான தானன
          தத்த தத்தன தான தானன ...... தனதான
துத்தி பொற்றன மேரு வாமென
     வொத்தி பத்திரள் வாகு வாயவிர்
          துப்பு முத்தொடு மார்பி னாடிட ...... மயில்போலே 
சுக்கை மைக்குழ லாட நூலிடை
     பட்டு விட்டவிர் காம னாரல்குல்
          சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர் 
தத்தை பட்குர லோசை நூபுர
     மொத்த நட்டமொ டாடி மார்முலை
          சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே 
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்
     கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
          சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ 
தித்தி மித்திமி தீத தோதக
     தத்த னத்தன தான தீதிமி
          திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச் 
சித்ர வித்தைய ராட வானவர்
     பொற்பு விட்டிடு சேசெ சேயென
          செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா 
செத்தி டச்சம னார்க டாபட
     அற்று தைத்தசு வாமி யாரிட
          சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே 
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட
     விட்ட அச்சுத ¡£ன மானொடு
          சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே.
தேமல் படர்ந்த அழகிய மார்பகங்கள் மேரு மலைக்கு ஒத்ததாகி, யானைக் கூட்டங்களின் வெற்றி கொண்டதாகி விளங்கும் பவள (மாலை) முத்து (மாலை) இவைகளோடு மார்பிலே ஆட, மயிலைப் போல் விளங்கி, பூ மாலை அணிந்த கரிய கூந்தல் அசைய, நூலைப் போன்ற நுண்ணிய இடையில் பட்டாடை அணிந்து ஒளி விட, காமனுக்கு இடமாகிய பெண்குறியைச் சுற்றி அமைய உடுத்து, விளங்கும் வாழை போன்ற தொடைகளை உடைய பொது மகளிர், கிளியாகிய பறவையின் குரலோசைக்குப் பொருந்த சிலம்புகள் ஒத்து ஒலிக்க நடனம் ஆடி, மார்பகங்களை கொஞ்சம் அசைத்து குலவிப் பேசும் பொது மகளிருடன், தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி இவ்வாறான ஒலிகள் எல்லா திசைகளிலும் முக்கித் திணற, வலியுள்ள பேரிகை, தவில் ஆகியவை ஒலி எழுப்ப, அழகிய வித்தைகள் வல்லோர் (மனம் மகிழ்ச்சி கொண்டு) ஆட, தேவர்கள் அழகிய பொன்னாலாகிய மலர்களைச் சொரிந்து ஜய ஜய ஜய என்று கோஷமிட, செக்கில் போட்டு அசுரர்கள் பொடியாகும்படி செலுத்திய வேலாயுதனே, அந்த யமன் இறக்கவும், (அவனுடைய) எருமைக் கடா வீழ்ந்து அழியவும், அன்று காலால் உதைத்த சுவாமியாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் அழகிய சிவகாமி அம்மையார் ஈன்ற குழந்தையே, தெற்கே உள்ள ராவணன் முதலிய அரக்கர்கள் இருந்த இலங்கைத் தீவு பொடியாகிப் பாழ்படச் செய்த திருமால் பெற்ற மகளாகிய மான் போன்ற வள்ளியோடு அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 505 - சிதம்பரம் 
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தக-1
தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான
நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
     நாயே னரற்றுமொழி ...... வினையாயின் 
நாதா திருச்சபையி னேறாது சித்தமென
     நாலா வகைக்குமுன ...... தருள்பேசி 
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
     வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர 
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
     வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் 
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
     தோலா சனத்தியுமை ...... யருள்பாலா 
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
     தோழா கடப்பமல ...... ரணிவோனே 
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
     மேராள் குறத்திதிரு ...... மணவாளா 
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.
நாடித் தேடி ஆராய்ந்து பார்த்து, இந்தப் பிறவித் தொழிலுக்கு முடிவே கிடையாதோ என்று எண்ணி, அடியேன் ஓலமிட்டு அலறும் இந்த மொழி, என் முற்பிறவி வினையின் காரணத்தால், நாதனே, உன் திருச் சந்நிதியிலோ உன் மனத்திலோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை யான் உணர்ந்து, பலவிதமாக உன்னுடைய திருவருளின் பெருமையே பேசி, என்றும் வாடாத உனது திருவடி மலர் என்னும் முக்தியைக் கொடுத்தருள் கொடுத்தருள் என்று குழறி, வாய் கிழிபட்டு நிற்கும் எனக்கு உன் கிருபை கூடும்படி வந்தருள்வாயாக, என் மனத்துயரங்களெல்லாம் தீர்ப்பாயாக, உன்னைத் தொழுது வருதல் என்பதே இல்லாத எனக்கும் நேர் எதிரிலே முன்பு எழுந்தருளி வர வேண்டுகிறேன். தெய்வமணியின் ஒளி விளங்கும் உருவத்தாளும், பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய குழந்தையே, பரிசுத்த மூர்த்தியே, துதித்து வணங்குபவர்களின் நேயனே, அடியேனுக்கு அமிர்தம் போல் வாய்த்த அருமைத் தோழனே, கடப்ப மலரினை அணிபவனே, மலர் நிறைந்த கூந்தலை உடைய வடிவழகியும், ஞானம் என்ற ஆசனத்தை (பீடத்தை) உடையவளும், மிக்க கம்பீரமானவளும் ஆன குறமகள் வள்ளியின் அழகிய கணவனே, ஈசனே, ஒப்பற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழ்கின்ற செல்வமே, தேவர் கூட்டத்தை வாழ்விக்கச் செய்த புகழ் கொண்ட பெருமாளே. 
பாடல் 506 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன
     தானதன தத்த தந்தன ...... தந்ததான
நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை
     நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே 
நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்
     நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற் 
கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு
     கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங் 
கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு
     கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன் 
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி
     ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி 
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை
     ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே 
வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்
     வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா 
வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்
     வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே.
நாலு சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்* செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை பிராணாயாம மந்திர ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி, விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக, (அனாகதம் முதலிய மற்ற நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களிலும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய பல திருக் கோலங்களையும் பார்த்து, சா£ர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து, இனிமையாகிய கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு, விந்து சம்பந்த (சிவ - சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி, கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்? நீரில் உண்டாகும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பார்வதி, ஆதியும் குலமும் அந்தமும் இல்லாதவள், வேதம் வல்ல நான்முகனுடைய பிரம கபாலத்தை (பாத்திரமாகக்) கொண்டவள், செம்பொன்போன்ற உயர் குணம் உடையவள், எனது ஆணவத்தையும், மயக்கத்தையும் தோண்டி வேரறுத்து, ஆசைகளை ஒழித்து, என்னை ஆண்டருளிய உமை, பராசக்தி, அழகி ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே, வேல் ஏந்தி இந்திரர்களும், திருமாலும், பிரமனும் பிழைக்கும் வண்ணம் வஞ்சகராகிய அசுரர்களின் வீடுகளை எரி மூட்டி, மதிக்கத் தக்க கடல்களையும் வற்றச் செய்த வேலனே, நான்கு வேதங்களையும் உடைய பிரமனுக்கும், சிதம்பரத்தில் வாழ்கின்ற ஒப்பற்ற பார்வதி தேவியைப் பாங்கிலே வைத்து மேம்பட்டு விளங்கும் நடன மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கும் மனம் இசைந்து உபதேசம் செய்தருளிய பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
பாடல் 507 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
     தானத்தன தானத்தன ...... தனதான
நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை
     நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர் 
நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி
     நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள் 
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை
     யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ 
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர
     மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே 
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி
     மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார 
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி
     மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர் 
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு
     சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே 
சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்
     சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே.
கரிய கூந்தலை உடையவர்கள், முத்துப்போன்ற பல் வரிசை உள்ள வாயில் சர்க்கரையைப் போன்று இனிய பேச்சை உடையவர்கள், பூரண சந்திரன் போன்ற திலகத்தை அணிந்துள்ள நெற்றியை உடைய விலைமாதர்கள், கரிய கயல் மீன் போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை உடையவர்கள், நல்ல திறமை உள்ள சித்திரம் எழுதுவோன் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம் நிறைந்தவர்கள், தோள்கள் கரும்பு ஆலையில் உள்ள கரும்பு போல் மென்மையாக உடையவர்கள், தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள் .. இத்தகைய விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேனாகிய நான் தினந்தோறும் திரிந்து அலைவேனோ? ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அளித்தருளுக. பூ மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள், அற்புதமான வேதச் சொரூபத்தை உடையவள், தனது அக்கினி உருவத்தில் ஒளி பொருந்திய மலை போன்ற பார மார்பகங்களைக் கொண்டவள், குயில் போன்றவள், சிவபெருமானிடத்தில் காதல் நிறைந்த நல்ல செயலினாளுமான உத்தமி, மாணிக்கம் போன்ற மின்னொளி வீசுபவள், மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர், சூலத்தைக் கையில் கொண்டவர், அனல் மேனிப் பரமனார் ஆகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற ஜோதிப் பொருளான பிரணவத்தை அவர் செவியில் ஏற்றிய முருகனே, பிரகாசமான ஜோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்ற வள்ளியை அணைந்து, ஜோதிமயமான புலியூராகிய சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமாளே. 
பாடல் 508 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனனா தத்தன தனனா தத்தன
     தனனா தத்தன ...... தனதான
பனிபோ லத்துளி சலவா யுட்கரு
     பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப் 
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி
     பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த் 
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்
     சதிகா ரச்சமன் ...... வருநாளிற் 
றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி
     தளர்மா யத்துய ...... ரொழியாதோ 
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்
     விகடா ருக்கிட ...... விடும்வேலா 
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ
     மிகவே குட்டிய ...... குருநாதா 
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு
     நிழலாள் பத்தினி ...... மணவாளா 
நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு
     நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே.
பனி போல் அளவுள்ள ஒரு துளி சுக்கிலம் ஜலத் துவார வழியாய்ச் சென்று கரு தரித்து, பத்து மாதக் கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து, உடல் கொண்டு தவழ்பவராய், தத்தித் தத்தி அடியிட்டு நடை பயில்பவராய், மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர், மார்பகங்கள் மிக்க உடைய பெண்கள் என்னும் காமக் குழியில் வீழ்பவராய், காலத்தைத் தாவிச் செலவிடுவார். வஞ்சனை கொண்டவனாகிய யமன் வருகின்ற அந்த நாளில், நிலைத்திருக்க முடியாதவராய் தமக்கு வீடாகிய உடலை விடுவார். இந்த விதமாக தளர்ந்து ஒழியும் மாயமான துயரம் என்னை விட்டு நீங்காதோ? மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக, கடலில் செருக்கு வாய்ந்த அசுரன் சூரன் அழிந்து போக, வேலினைச் செலுத்தியவனே, பிரமனை, நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதனே, நினைத்துத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளியின் கணவனே, இந்தப் பூமிக்கு நிதி போன்றதான புலியூரில் (சிதம்பரத்தில்) இருக்கும் ஒரு நிறைந்த செல்வமே, பக்தர்களுக்கு உரிய பெருமாளே. 
பாடல் 509 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனதன தனதன தான தாத்தன
     தனதன தனதன தான தாத்தன
          தனதன தனதன தான தாத்தன ...... தனதான
மகரமொ டுறுகுழை யோலை காட்டியு
     மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்
          வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் 
மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்
     வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்
          வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே 
இகலிய பிரமக பால பாத்திர
     மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற
          மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக 
எழில்பட மழுவுடன் மானு மேற்றது
     மிசைபட இசைதரு ஆதி தோற்றமு
          மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே 
ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு
     தலைபறி யமணர்ச மூக மாற்றிய
          தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி 
தரிகிட தரிகிட தாகு டாத்திரி
     கிடதரி கிடதரி தாவெ னாச்சில
          சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் 
அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல
     அலகைக ளடைவுட னாடு மாட்டமு
          மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே 
அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு
     மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு
          மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே.
மகர மீன் போன்ற குண்டலங்களையும் காதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும், பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், (காம) வலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும் பேச்சிலும் ஈடுபட்டு அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும், அவர்களுடைய செல்வத்திலும், இளமையிலும், பொன்னைச் சேர்க்கும் ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல், மாறுபட்டுப் பொய் பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான் ஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு அவர் உடலில் சேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் செருகிச் சேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க மழுவாயுதத்தையும் மானையும் கையில் ஏற்ற தன்மையும், புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும், இன்ன இன்ன காரணத்தால் என்று நீ உபதேசித்துப் புலப்படுவதும் ஆகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக் கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த (ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே, தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும், சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதி சேஷமூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகு பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும், நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே. 
பாடல் 510 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த
     தத்த தத்த தாத்த ...... தனதான
மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்
     வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம் 
மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை
     மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை 
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு
     மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும் 
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி
     இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே 
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி
     பொற்ப தத்து ளாக்கு ...... புலியூரா 
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு
     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன் 
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு
     பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே 
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட
     பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே.
(இந்த உடலானது) அலங்கரித்த கட்டில். மெச்சத் தக்க ஓர் இயந்திரம். பித்தம், மூத்திரம் (இவைகள்) வைத்து பாய்ச்சப்பட்ட ஒரு பாத்திரம். வலிவு குன்றி அழியும் ஒரு கூடு. உட்புறத்தில் புழுத்துப் போயுள்ள வாழ்க்கை. மண் இனத்தால் ஆக்கப்பட்ட ஒரு பொருள். இடிந்து விழுகின்ற பாறை. இளைத்து மெலிந்த பேய்க்கும், மெலிந்து இளைத்த நாய்க்கும், இளைத்து மெலிந்த ஈக்களுக்கும் இறுதியில் உணவாகின்ற ஒரு பொருள். இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டின்பத்தைத் தந்து அருள்வாயாக. (உன் மீது அன்பு வைத்தவர்களுக்கு) பொய்யாகிய அடையாளங்களை ஒழித்து, மெய்யான அடையாளங்களைத் தந்து, உனது அழகிய பாதங்களில் ஏற்றுக் கொள்ளும் புலியூரானே (சிதம்பரநாதனே), விபூதிப் பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு உண்மை அறிவை நன்கு காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும், (அவன்) தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே, முறைமையுடன் வீட்டின்பத்தை உபதேசித்து தந்தையாகிய சிவபெருமானுடைய உள்ளத்தை வசப்படுத்தியவனே, பக்தர்களுக்கு அருமையாகக் கிட்டியுள்ள பெருமாளே. 
பாடல் 511 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனன தந்தன தந்த தானன
     தனன தந்தன தந்த தானன
          தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
மதிய மண்குண மஞ்சு நால்முக
     நகர முன்கலை கங்கை நால்குண
          மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண 
மதன முன்தரி சண்ட மாருத
     மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு
          வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரென்றுசேருங் 
கதிர டங்கிய அண்ட கோளகை
     யகர நின்றிடும் ரண்டு கால்மிசை
          ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங் 
கருணை யிந்திரி யங்கள் சோதிய
     அருண சந்திர மண்ட லீகரர்
          கதிகொள் யந்திர விந்து நாதமொ ...... டென்றுசேர்வேன் 
அதிர பம்பைகள் டங்கு டாடிக
     முதிர அண்டமொ டைந்து பேரிகை
          டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம் 
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ
     டிதவி தம்பெறு சிந்து பாடிட
          அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு 
உதிர மண்டல மெங்கு மாயொளி
     யெழகு மண்டியெ ழுந்து சூரரை
          உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ 
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக
     மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற
          வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே.
சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.*1 (அந்த மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்) ந என்னும் எழுத்தையும், (பஞ்ச*2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது. நீர் (அப்பு மண்டலம்) நான்கு*3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் ம என்னும் எழுத்தைக் குறிக்கும். அப்பு மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில் சி என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்) மூன்று*4 குணமும் முக்கோணமும் கொண்டது. அழித்தல் தன்மையை தன்னிடத்தே கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு*5 குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள வா என்னும் எழுத்தைக் குறிக்கும். விரிந்துள்ள ஆகாயம் ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்த ஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும். (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை, பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும். (அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க, சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும் மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்? ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க, பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர் என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே மேலெழுந்து பொங்க, இரத்தப் பெருக்கின் வெள்ளம் எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும் மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே, மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே. 
*1 - மண்ணின் ஐந்து குணங்கள்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
*2 - ஐந்து கலைகள்:நிவிர்த்திகலை - ஆன்மாக்களை பாசத்தினின்று விடுவிப்பது.பிரதிஷ்டாகலை - ஆன்மாக்களை முக்தியில் உய்ப்பது.வித்யாகலை - பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது.சாந்திகலை - ஆன்மாக்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது.சாந்தியதீதகலை - சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.
*3 - நீரின் நான்கு குணங்கள்: சப்தம், பரிசம், உருவம், ரஸம்.
*4 - தீயின் முக்குணங்கள்: சப்தம், பரிசம், உருவம்.
*5 - வாயுவின் இரண்டு குணங்கள்: சப்தம், பரிசம். 
*6 இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
பாடல் 512 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன
தனன தனதன தனன தனதன
   தனன தனதன தனன தனதன
      தத்தத் தத்தன தத்தத் தத்தன
         தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.
மருவு கடல்முகி லனைய குழல்மதி
   வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி
      மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி
         ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவி
குமுத மலரித ழமுத மொழிநிரை
   தரள மெனுநகை மிடறு கமுகென
      வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ
         டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்
வகைய விரலொடு கிளிகள் முகநக
   மெனவு மிகலிய குவடு மிணையென
      வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்
         வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ...... முலைமேவும் 
வடமு நிரைநிரை தரள பவளமொ
   டசைய பழுமர இலைவ யிறுமயி
      ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்
         அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடி
மதன னுருதுடி யிடையு மினலென
   அரிய கடிதட மமிர்த கழைரச
      மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி
         துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடை
மருவு தொடையிணை கதலி பரடுகொள்
   கணையு முழவென கமட மெழுதிய
      வட்டப் புத்தக மொத்துப் பொற்சர
         ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே 
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்
   மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு
      தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்
         பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்
திலத மழிபட விழிகள் சுழலிட
   மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட
      தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு
         கட்டிக் குத்துமு லைக்குட் கைப்பட
திரையி லமுதென கழையில் ரசமென
   பலவில் சுளையென வுருக வுயர்மயல்
      சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்
         வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச் 
செவியொ டொளிர்விழி மறைய மலசல
   மொழுக பலவுரை குழற தடிகொடு
      தெத்திப் பித்தமு முற்றித் தற்செய
         லற்றுச் சிச்சியெ னத்துக் கப்பட
சிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி
   லுவரி நிறமுடை நமனு முயிர்கொள
      செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய
         ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடு
செனன மிதுவென அழுது முகமிசை
   அறைய அணைபவ ரெடென சுடலையில்
      சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி
         நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ 
குருவி னுருவென அருள்செய் துறையினில்
   குதிரை கொளவரு நிறைத வசிதலை
      கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத
         மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளு
முதல்வ ரிளகலை மதிய மடைசடை
   அருண வுழைமழு மருவு திருபுயர்
      கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ
         விட்டத் திக்கணை நக்கர்க் கற்புத
குமர னெனவிரு தொலியு முரசொடு
   வளையு மெழுகட லதிர முழவொடு
      கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட
         லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக் 
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட
   மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட
      கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி
         எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்
குமர குருபர குமர குருபர
   குமர குருபர எனவொ தமரர்கள்
      கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர
         ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிட
குலவு நரிசிறை கழுகு கொடிபல
   கருட னடமிட குருதி பருகிட
      கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக
         னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா 
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு
   பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு
      சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர
         வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்
அரிய விழிகெட இருப தமுமுல
   கடைய நெடியவர் திருவு மழகியர்
      தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின
         முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திர
செயமு மனவலி சிலைகை கொடுகர
   மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ
      திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு
         பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே 
திலத மதிமுக அழகி மரகத
   வடிவி பரிபுர நடனி மலர்பத
      சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன
         முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திர
சிவைகொள் திருசர சுவதி வெகுவித
   சொருபி முதுவிய கிழவி யியல்கொடு
      செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ
         சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறு
திரையி லமுதென மொழிசெய் கவுரியி
   னரிய மகனென புகழ்பு லிநகரில்
      செப்புப் பொற்றன முற்றப் பொற்குற
         தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே.
உவமைக்கேற்ற கடல், மேகம் இவைகளுக்கு ஒத்து (கரு நிறம் கொண்ட) கூந்தல். சந்திரனைப் போன்ற முகம். வில், பிறை இவைகளுக்கு ஒப்பான நெற்றி. மதிக்கத் தக்க கண்ணானது மீன், அழகிய அம்பு போன்றது. மூக்கு அழகிய குமிழம் பூவை ஒத்து நிற்கும். கத்திரிக் கோலின் கைப்பிடிகளை ஒத்துள்ள காதுகள். குமுத மலர் போன்ற வாயிதழ். அமுதம் போன்ற சொற்கள். வரிசையாய் அமைந்த முத்துப் போன்ற பற்கள். கழுத்து கமுக மரத்தை நிகர்க்கும் என வைக்கப்படும் அழகிய புயங்கள். பச்சை மூங்கிலுக்கு ஒப்பிடப்படும் தாமரை போன்ற கை. அழகிய நகங்களைக் கொண்ட விரல்களின் நகம் கிளிகளின் மூக்குக்கு ஒப்பாகும். ஒத்து நிற்கும் மலை இரண்டு போல் வட்டமாய், வரித் தேமல் கொண்டு குவிந்து விளங்குவதாய், சக்கிரவாகப் புள் போன்றதாய், பொன் குடம் போன்று விளங்கும் மார்பகங்கள் தம்மேல் உள்ள மாலைகள் வரிசை வரிசையாக முத்துடனும் பவளத்துடனும் அசைய, ஆலிலை போன்ற வயிற்று முடிகள் இருளின் வரிசைக்கு ஒப்பாகும். அழகிய கொப்பூழ் நீரில் உள்ள சுழிக்கு ஒப்பாகும். அழகிய கொடி போன்றதும், மன்மதனின் உருவம் போலக் கண்ணுக்குப் புலப்படாத, உடுக்கை ஒத்த இடுப்பு மின்னலைப் போன்றது. அருமை வாய்ந்த பெண்குறி கரும்பின் ரசம், தேன் கொண்ட கூடு, அழகிய கமலத்தில் பாம்பின் பொறி கொண்ட படம் இவைகளுக்கு நிகராகும். பட்டாடை பூண்டுள்ள இரண்டு தொடைகளும் வாழைக்கு ஒப்பாகும். பரடு கொண்டுள்ள கணைக்கால் முழவு வாத்தியம் ஒக்கும். ஆமையையும், எழுதி நிறைந்த வட்டமாயுள்ள (ஓலைப்) புத்தகம் போன்று அழகிய புறங்கால் இருக்கும். (இத்தகைய அங்க லக்ஷணங்கள்) நிரம்பிய பொது மகளிர் கிளிகள் போலவும், மயில்கள் போலவும இருந்தனர். தெருவில் நின்று (தமது) மார்பகங்களை விலை பேசி, யாவரும் காம மயக்கம் கொண்டு அணையும்படி மயக்கும் தொழிலைச் செய்து வஞ்சித்து, பலவிதமான சொக்கு மருந்துகளை உணவில் ஊட்டி, பொருளைக் கவர்ந்து, கட்டிலில் அணைப்பதற்கு சம்மதித்து, பின்பு கலவிக்கு உட்பட, நெற்றிப் பொட்டு அழிந்து போக, கண்கள் சுழல, மலர்கள் பொருந்தியுள்ள கூந்தலும் இடுப்பிலுள்ள புடைவையும் குலைந்துபோக அனுபவித்து, பவளம் போன்ற வாயிதழ் தந்து, கையால் அணைத்து, திரண்ட மார்பகங்களைக் கையில் பற்றி, கடலினின்றும் அமுதம் கடைந்தெடுத்தது போலவும், கரும்பினின்றும் சாறு எடுப்பது போலவும், பலாப் பழத்தினின்று சுளை எடுப்பது போலவும் மனம் உருக, மெத்த காம மயக்கில் அகப்பட்டு உடல் கெட்டு, உள்ளமும் நாணம் உற்று, துயரம் அடைந்து, கொக்கைப் போல மயிர் வெளுத்து, காதும் விளக்கமுற்ற கண்களும் (தத்தம் தொழில்) மறைவு பட (செவிடும், குருடுமாகி), மலமும் சலமும் ஒழுக, பல பேச்சுகளும் குழற, கைத்தடி கொண்டு தடுமாறி, பித்தமும் அதிகரித்து, தன்னுடைய செயல்கள் எல்லாம் ஒழிந்து, (கண்டவர்கள்) சீ சீ என்று இகழ்ந்து வருந்த, (காண வந்தவர்களில்) சிலர் முதுமை அடைந்த உடல் நிலையைப் பற்றி விசாரிக்கும் போது, (கடல் போன்ற) கரிய நிறம் உடைய யமனும் உயிரைக் கொண்டு போக, பேச்சு அடங்க பிணம் என்று தீர்மானித்து, பிணம் என்று பெயர் வைத்து, பொலிவுள்ள கணப் பறைகள் கொட்ட, சொல்லப் படும் பிறப்பின் அழகு இது தான் என்று கூறி அழுது, முகத்தில் அறைந்து கொண்டு, அங்கு கூடியவர்கள் பிணத்தை எடுங்கள் என்று கூற, சுடு காட்டில் சில பந்தங்களுள்ள நெருப்புக்கு இரையாக உடலைப் போட்டு, இவ்வண்ணம் அழியாத துக்க நிலையைப் பூண்டு, உடல் எடுத்துச் சுழற்சி உறுவேனோ? குருவாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறையில் (அரசனுக்காக) குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டி, அற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டருளிய முதன்மையரான சிவ பெருமான். இளம் பிறை நிலவை அடைந்துள்ள சடையினர். சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த அழகிய புயத்தினர். இறுமாப்பும் சேட்டையும் கொண்ட திரிபுராதிகள் கேடுற்று அழியும்படிச் செய்து, திக்குக்களை எல்லாம் ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவனே, பெருமையை எடுத்து ஒலிக்கும் முரசு வாத்தியத்துடன், சூழ்ந்துள்ள எழு கடல் பேரொலி செய்ய, முழவும் சேர்ந்து முழக்கம் செய்ய, துஷ்டர்களாகிய அசுரர்களை வெட்டி அழித்து, குளிர்ந்த கடல் போல பல திக்குகளிலும் நிறைந்து பரக்கும்படி போருக்கு எழுந்து, கோழிக் கொடிகளும், ஒளி பொருந்திய குடைகளும் போர்க்களத்தில் நெருங்கிடவும், மலைகள் பொடியாகி விழவும், நட்சத்திரங்கள் உதிர்ந்து விழவும், (உனது) மயிலாகிய குதிரை (அஷ்ட) பாம்புகளையும் அலகால் கொத்திப் பிடிக்க, எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும் குரல் எடுத்திட்டு ஓலமிட, குமர குருபர குமர குருபர குமர குருபர என பல முறை துதித்து நிற்கும் தேவர்கள் (உன்னைச்) சூழ்ந்து மலர்களைத் தூவி அழகிய திருவடிகளில் இறைத்து, தலை மேல் கைகளை வைத்துக் கும்பிட, மகிழ்ந்து ஓடிவரும் நரிகளும், சிறகுள்ள கழுகுகளும், காக்கை பலவும், கருடன்களும் கூத்தாடி இரத்தத்தைக் குடிக்க, உன் வீர வாளைச் செலுத்தி அழகிய தேவலோகத்தை மனத்தில் கருணையுடன் காப்பாற்றித் தந்த மயில் வீரனே, இரணியனுடைய தலையும் உடலும் கிழிய ஒப்பற்ற அந்தப் பொழுதில் (தமது) நகத்தைக் கொண்டு அறுத்து, அந்தி வேளையில் (நரசிம்மத்) தாண்டவத்தைப் புரிந்த தொழில் திறம் வாய்ந்தவர். வலிய தமது திருவடியை வைத்து (மகாபலிச்) சக்கிரவர்த்தியை சிறையில் வைத்து, சுக்கிரனுடைய அருமையான கண் கெட்டுப் போக இரு திருவடிகளால் உலகம் முழுமையும் (அளக்கும்படி) உயர்ந்தவர். அழகிய லக்ஷ்மியை (திருமார்பில்) உடையவர். தெற்குத் திசையில் (இராவணன் முதலிய) அரக்கர்கள் மீது கோபம் கொண்டு, சிறந்த தசரதச் சக்கிரவர்த்திக்கு புத்திரராய், வெற்றியும் மனோ திடத்தையும், (கோதண்டம் என்னும்) வில்லையும் கையில் ஏந்தி, இருபது கைகளைக் கொண்ட (ராவணனுடைய) பத்து தலைகளும் அறுந்து விழ, எட்டுத் திக்குகளையும் தேவர்களுக்குக் கொடுத்த பச்சை நிறம் கொண்ட அழகிய மேக வண்ணனாகிய திருமாலுக்கு அமைந்த அழகிய மருகனே, பொட்டு அணிந்து, சந்திரனுக்கு ஒப்பான முகத்தை உடைய அழகி, பச்சை நிறத்தினள், சிலம்பணிந்து நடனம் புரிபவள், அடியார்கள் உள்ளத்தில் மலர்கின்ற திருவடியை உடைய சித்தராகிய சிவபெருமானுக்கு சுவட்டுக் குறி வைத்தவையும், முத்து மாலை அணிந்த பொன் மலை போன்றவையுமான மார்பகங்கள் இணைந்துள்ள அழகிய சிவாம்பிகை, லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் (தனது) இரு கண்களாகக் கொண்டவளும், பல விதமான உருவத்தைக் கொண்டவளும், மிகப் பழையவளும், முறைமையாக வளையல் விற்ற செட்டியாகிய சொக்க நாதருக்கு சுகம் நிரம்ப தத்துவ அறிவு முறையில் தனது ஞான பாதத்தைத் வைத்துச் சூட்டியவளும், கற்பு உள்ளவளும், கடலில் எழுந்த அமுதம் போன்ற இனிய சொற்களைப் பேசுபவளுமான உமா தேவியின் அருமையான புதல்வன் என்று விளங்கப் புகழ் நிறைந்த புலியூரில் (சிதம்பரத்தில்) சிமிழ் போன்ற பொலிவுள்ள மார்பகம் திரண்டுள்ள அழகிய குறக் கிளி ஆகிய வள்ளியின் பொருட்டு புளகாங்கிதம் கொண்டு அவளுக்கு ஒப்புக் கொடுத்து வீற்றிருக்கும் பெருமாளே.
பாடல் 513 - சிதம்பரம் 
ராகம் - கல்யாணி; தாளம் - ஆதி
தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதானா
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
     வருவா யுரைத்தமொழி ...... தவறாதே 
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு
     மனமாயை யற்றசுக ...... மதிபாலன் 
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல
     நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன் 
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம
     நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே 
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய
     இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி 
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை
     யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா 
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர
     முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே 
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு
     முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.
மனமே, உனக்கு உறுதி தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன், என் சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக. மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர், மனம், மாயை என்பதெல்லாம் இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை. உனக்கு வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும் உனக்குத் தந்தருளி, மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல ஒளியுருவானவர், சங்க நிதி, பதுமநிதி, கற்பக மரம்* போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரே முழு முதற் கடவுள். நீதிமான், அத்தகைய பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக. நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகுள்ளவளும், நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும், ஒருவிதத்திலும் தனக்குச் சமானம் இல்லாதவளும், உடையற்ற திகம்பரியும், என்னைப் பெற்றெடுத்தவளும், புகழ் பெற்ற கல்யாணியுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட கொன்றை அணிந்த ஜடையுடைய எம் தந்தை சிவபெருமானின் குருநாதனே, முன்னவர்களாகிய அரி, அரன், அயன் ஆகிய மூவரும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர, பழமை வாய்ந்த சூரன் முதலியவர்களின் சிரங்களைக் கொய்தறுத்த முருகனே, சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே. 
* தேவலோகத்தில் சங்கநிதி, பதுமநிதி ஆகியவை மிகுந்த செல்வங்களை நல்குபவை.கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தேவதாரு.
பாடல் 514 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தத்த தானன தத்தன தானன
     தத்த தானன தத்தன தானன
          தத்த தானன தத்தன தானன ...... தனதான
முத்த மோகன தத்தையி னார்குர
     லொத்த வாயித சர்க்கரை யார்நகை
          முத்து வாரணி பொற்குவ டார்முலை ...... விலைமாதர் 
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்
     பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்
          முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச் 
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ
     டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை
          சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் ...... மடமீதே 
சித்தெ லாமொரு மித்துன தாறினம்
     வைத்து நாயென ருட்பெற வேபொருள்
          செப்பி யாறுமு கப்பரி வோடுணர் ...... வருள்வாயே 
தத்த னானத னத்தன தானெனு
     டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்
          சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா 
சத்தி லோகப ரப்பர மேசுர
     நிர்த்த மாடுக ழற்கரு ணாகர
          தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா 
துத்தி மார்முலை முத்தணி மோகன
     பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்
          துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ...... மணிமார்பா 
சுட்டி நீலஇ ரத்தின மாமயி
     லுற்று மேவிய ருட்புலி யூர்வளர்
          சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே.
முத்தம் தந்து காம மயக்கத்தைத் தருகின்ற கிளி போன்றவர்கள். (கிளி போன்ற) குரலைக் கொண்ட வாயினின்றும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர். முத்தைப் போன்ற பற்கள் உடையவர். கச்சு அணிந்த அழகிய மலை போன்ற மார்பகங்களை உடைய பொது மகளிர். மதிப்பை இழக்கும்படி அழிப்பவர்கள். பொருள் காரணமாக வேறு ஆடவர்களையும் அழைப்பவர்கள். சிலர் வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கொடுப்பவர்கள். துன்பமும் தரித்திரமும் சூழத் தொடர மாய வித்தைகள் ஆடி அழைப்பவர்கள். வஞ்சனை கொண்ட விலைமாதர்களின் வலையில் புகுகின்ற அடியேனுக்கு அஷ்டமா சித்திகளும்** நல்ல அறிவும் தோன்ற, (நந்தி) ஒளி காணப்படும் (லலாட)* புருவ நடுநிலையில், அறிவு எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும்*** கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக. தத்த னானத னத்தனதா இவ்வாறான ஒலிகளை உடுக்கையும் பேரிகைகளும் பேரொலி செய்ய, கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் இருந்த அசுரர்கள் இறந்து போகும்படியாக வேலைச் செலுத்தியவனே, அருள் சக்தி உலகங்களுக்கு எல்லாம் முழு முதற் கடவுளாய், பரம ஈசுவரனாய், நடனம் ஆடுகின்ற திருவடிகளை உடைய கருணாகரனாய், தாமே பரம் பொருளாய், அழியாதவராய் உள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ள உமா தேவியின் குழந்தையே, தேமல் படர்ந்துள்ள மார்பகத்தின் மீது முத்து மாலை அணிந்துள்ள, அழகும் பொலிவுள்ள ஒளியும் கொண்டுள்ள, மான் பெற்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் பவளம் போலச் சிவந்துள்ள வாயிதழ் ஊறலைப் பருகி அவளைத் தழுவும், ஒளி வீசும் அழகிய மணிகள் அணிந்துள்ள மார்பனே, நீலக் கொண்டையும், நீல நிறமும், ரத்தின ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில் மீது பொருந்தி அமர்ந்து சிதம்பரத்தில் வீறுடன் விளங்கும் சுத்த மூர்த்தியே, இந்திராணி பெற்ற தேவயானையாகிய நாயகியின் பெருமாளே. 
* சுடர் ம(மா)டம் - நந்தி ஒளி காணும் லலாடஸ்தானம் ஆகும். புருவ மத்தியைக் குறிக்கும். இங்கு 'சுழுமுனை', 'இடைகலை', 'பிங்கலை' ஆகிய மூன்று நாடிகளும் கூடுவதால் பிரகாசமான மண்டபம் தோன்றும். இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
*** ஆறு முகத்தின் தத்துவம் பின்வருமாறு:சக்திகள் ஆறு - ஆதி சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, குடிலா (ஓங்கார) சக்தி.பீஜங்கள் ஆறு - அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை.அத்துவாக்கள் ஆறு - மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம்.இறைக் குணங்கள் ஆறு: ஸர்வக்ஞத சக்தி - பூரண அறிவுடன் இருக்கும். நித்ய திருப்தி சக்தி - எல்லா அனுக்ரகமும் புரியும். அநாதிபோத சக்தி - எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும். ஸர்வ சுதந்திர சக்தி - ஆன்மாக்களுக்கு முக்தியைத் தரும். அலுப்த சக்தி - ஐந்தொழிலைப் புரியும். அநந்த சக்தி - எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்.குணங்கள் ஆறு - ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்.ஆறு முகங்களைப் பற்றி அருணகிரிநாதர் அருளிச் செய்த பாடல்: ஏறுமயில் ஏறி 
பாடல் 515 - சிதம்பரம் 
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதானா
பரமகுரு நாத கருணையுப தேச
     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண் 
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை
     பகருமதி காரப் ...... பெருமாள்காண் 
திருவளரு நீதி தினமனொக ராதி
     செகபதியை யாளப் ...... பெருமாள்காண் 
செகதலமும் வானு மருவையவை பூத
     தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண் 
ஒருபொருள தாகி அருவிடையை யூரு
     முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண் 
உகமுடிவு கால மிறுதிகளி லாத
     உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண் 
கருவுதனி லூறு மருவினைகள் மாய
     கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண் 
கனகசபை மேவி அனவரத மாடு
     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.
பரமசிவனுக்கும் குருநாதனே, கருணையுடன் உபதேசிப்பவனே, அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான். பகலும் இரவும் அற்றதான ஞான ஒளிவீசும் சிதாகாச வெளியில் மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீதான். முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே, உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான். மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்*. ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான்*. பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத நிலைபெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான். கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான். பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற* தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே. 
* சிதம்பரத்து நடராஜனை முருகனாகவே அருணகிரிநாதர் காண்கிறார்.
பாடல் 516 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -
தந்தனா தான தானன தந்தனா தான தானன
     தந்தனா தான தானன ...... தனதான
வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
     வன்கணா ரார வாரமு ...... மருள்வோராய் 
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
     வந்தியா ஆசை யேதரு ...... விலைமாதர் 
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
     பஞ்சியே பேசி நாடொறு ...... மெலியாதே 
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
     பண்புசேர் பாத தாமரை ...... யருள்வாயே 
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
     அன்றுதா னேவி வானவர் ...... சிறைமீள 
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
     அண்டர்கோ வேப ராபர ...... முதல்வோனே 
கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய
     கொன்றையா னாளு மேமகிழ் ...... புதல்வோனே 
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
     குன்றுதோ றாடல் மேவிய ...... பெருமாளே.
வஞ்சகத்தையே கோடிக் கணக்காய் உள்ளத்தில் சேர்த்து வைத்துள்ள கொடியவர்கள், ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல காண்பித்து வீணில் வாது பேசுபவர்கள், கொஞ்சிப் பேசி காம விளையாட்டுகளைப் பற்றிப் புகழ்ந்து, ஆசையை வளர்க்கின்ற பொது மகளிரின் ஐந்து பெரிய பாவங்களுக்கும் இடமாகும் மார்பகங்களின் மேல் அன்பு வைத்து மிக வருத்தம் காட்டிப் பேசி, நான் நாள் தோறும் மெலிந்து போகாமல், வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள் செய்வாயாக. சூரன் பயப்படும்படியும், பிழைத்திராதபடியும் வேலை அன்றைக்கே செலுத்தி, தேவர்கள் சிறையினின்றும் மீள அன்புடன் அவர்களுடைய விருப்பம் நிறைவேற மேலான வாழ்வை அளித்த தேவர்கள் தலைவனே, பராபர முதல்வனே, கொஞ்சுதல் போல, காலில் கட்டியுள்ள சதங்கை ஒலிக்க நடனம் செய்த, கொன்றையை அணிந்த சிவபெருமான் நாள்தோறும் மகிழ்கின்ற பிள்ளையே, பூங்கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய குன்றுகளின் சூழல் உள்ள பழமுதிர் சோலை ஆகிய குன்றுகளில் எல்லாம் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சோலை மேவிய குன்று என்று ஒரு தனித்தலம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை குன்று தோறாடல் அல்லது பழமுதிர்ச்சோலையின் கீழ் வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
பாடல் 517 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -
தனதன தனனத் தான தனதன தனனத் தான
     தனதன தனனத் தான ...... தனதான
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி
     சிவவழி யுடனுற் றேக ...... பரமீதே 
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுர மெரியத் தீயி ...... னகைமேவி 
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி
     யிருள்கதி ரிலிபொற் பூமி ...... தவசூடே 
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ
     ரிளையவ னெனவித் தார ...... மருள்வாயே 
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்
     பழமறை பணியச் சூல ...... மழுமானும் 
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
     பரியினை மலர்விட் டாடி ...... அடியார்கள் 
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல
     மருள்செயு முமையிற் பாக ...... ரருள்பாலா 
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ
     டடியவர் கயிலைக் கான ...... பெருமாளே.
ஒளி வீசும் ஜோதி இடத்தைப் பொருந்தி, பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள்* அடைபடும்படி மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி, விளங்கி நிற்கும் (காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் பொரிந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகையக் கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் இளையவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக. சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடுபடும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் என்னும் முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, (கைகளில் ஏந்திய) சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, நாகராஜனாகிய ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருத்தலை விட்டு, நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகி ஜெய ஜெய என்று போற்ற, ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு, அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் விருப்பம் காட்டும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
பாடல் 518 - கயிலைமலை 
ராகம் - தோடி; தாளம் - கண்டசாபு - 2 1/2
தானந் தனத்ததன தானந் தனத்ததன
     தானந் தனத்ததன ...... தனதான
தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்
     சீரும் பழித்தசிவ ...... மருளூறத் 
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ
     சீவன் சிவச்சொருப ...... மெனதேறி 
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி
     நாதம் பரப்பிரம ...... வொளிமீதே 
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ
     நாளுங் களிக்கபத ...... மருள்வாயே 
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்
     மாலும் பிழைக்கஅலை ...... விடமாள 
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு
     மானின் கரத்தனருள் ...... முருகோனே 
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது
     தானுண் கடப்பமல ...... ரணிமார்பா 
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை
     சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.
நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா, பலா, வாழை) பால், சிவந்த கரும்பு, இள நீர் இவைகளின் இனிப்பின் சிறப்பையும் (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்) தாழ்மைப்படுத்துகின்ற மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப் பெருகவும், தீவினை, நல்வினை முழுவதும் தூள்பட்டு ஒழியவும், இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது என்று நன்கு தெளிந்து, அகங்காரத்தை அடியோடு நீத்தும், உயிர்ப்பற்று, உடற்பற்று இரண்டையும் அகற்றியும், (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள அருள்நாதப் பிரம்மமாம் பரஞ்ஜோதியில் சிவ ஞானம் பெருகிவரவும், மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோட்சத்தில், அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு நின் திருவடியைத் தந்தருள்வாயாக விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும், அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன் பொருட்டும், பிரம்மாவும், திருமாலும் (சூரனால் அழியாது) வாழும் பொருட்டும், பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை அழிய (அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை உடையவரும், எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும், நெருப்பையும், மானையும் ஏந்திய திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான் பெற்றருளிய முருகக் கடவுளே தானந் தனத்ததனனா என்ற ¡£ங்காரத்துடன் வண்டானது வட்டமிட்டு தேனை உண்ணுகின்ற கடப்ப மலரை தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே (எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து எங்களை ஆட்கொள்ளவென்றே திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய, வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே. 
பாடல் 519 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -
தனத்த தனத்த தனத்த தனத்த
     தனத்த தனத்த ...... தனதான
நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி
     நடித்து விதத்தி ...... லதிமோகம் 
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி
     நலத்தி லணைத்து ...... மொழியாலுந் 
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை
     திரட்டி யெடுத்து ...... வரவேசெய் 
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
     தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ 
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து
     படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப் 
பணைத்த கரத்த குணத்த மணத்த
     பதத்த கனத்த ...... தனமாதை 
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து
     வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா 
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க
     ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே.
சிரித்து, (மனத்தை) உருக்கி, விழிகளை விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து, பல விதமாக அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கிக்கொண்டு, இதமாகவே அணைத்து, பேச்சினாலும் திகைப்பு உண்ட நிலையில், அவர்கள் கேட்டபடி கிடைத்த பொருளைக் கையில் சேகரித்துக்கொண்டு வரும்படி செய்கின்ற திருட்டுப் பெண்களின் மார்பகங்களான மயக்கம் தரும் காம வலையிலும், மிகுந்த காம சாத்திரச் செயல்களிலும் விழுவேனோ? பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து, படர்ந்த கரு நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி, செழுமையான திருக்கரங்களும், குணமான நறு மணம் கொண்ட பாதங்களும், விம்மிப் பெருத்த மார்பகங்களும் கொண்ட பெண்ணாகிய வள்ளியை, சிறப்பு மிக்க தினைப் புனத்தில் (வள்ளிமலையில்) வைத்து அணைத்து, வெள்ளி மலையாகிய கயிலைகிரியில் உறைகின்ற நாதனே, விரிந்துள்ள சடையில் கங்கை என்னும் ஒரு பெண் இருக்க, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு (உரிய) பெருமாளே. 
பாடல் 520 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -
தனன தந்தன தானனா தனதனன
     தனன தந்தன தானனா தனதனன
          தனன தந்தன தானனா தனதனன ...... தனதான
பனியின் விந்துளி போலவே கருவினுறு
     மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்
          பனைதெ னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப் 
பருவ முந்தலை கீழதாய் நழுவிநில
     மருவி யொன்பது வாசல்சே ருருவமுள
          பதுமை யின்செயல் போலவே வளிகயிறி ...... னுடனாடி 
மனவி தந்தெரி யாமலே மலசலமொ
     டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்
          மயம யின்றொரு பாலனா யிகமுடைய ...... செயல்மேவி 
வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்
     அறம றந்தக மீதுபோய் தினதினமு
          மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய் 
தனன தந்தன தானனா தனதனன
     தினன திந்தன தீததோ திகுததிகு
          தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி 
தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி
     யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு
          சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு ...... மவுணோர்கள் 
சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள்
     குருதி யெண்டிசை மூடவே அலகைநரி
          சிறையி னங்களி கூரவே நகையருளி ...... விடும்வேலா 
சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி
     மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்
          திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... பெருமாளே.
பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில், அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய், பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப் பழ அளவுக்கு வயிறு பெரிதாகி, (பூமிக்கு வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப் பூமியை அடைந்து, ஒன்பது துவாரங்களைக் கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது, இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மல சலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும், தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு, ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர, நாள்தோறும் மனம் உடைந்து, உருக் குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ என்ற தாளத்துக்கு ஏற்ப, முரசு, சங்கு, பேரிகை, மேள வகை, அதமக் கருவியான புற முழவு, எக்காளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கும் ஒலி வகைகள் முழக்கம் செய்து, ஏழு கடல்களைப் போலப் பெரும் சப்தத்தைக் கிளப்ப, சண்டை நடக்கும் போர் முனைகளில் நின்று தமது வீரச் செயல்களைச் சொல்லும் அசுரர்களின் கோபம் குலைந்து அழிபட, தேர்கள் அழிபட, யானை, வலிமை உள்ள குதிரைகள் ஆகியவைகளின் ரத்தம் எட்டுத் திசைகளையும் மூட, பேய்கள், நரிகள், (கோட்டான் போன்ற) பறவைகள் மகிழ்ச்சி கொள்ள, சிரித்து அருளிச் செலுத்திய வேலாயுதனே. சிவ பெருமான் மகிழ்ந்தருளிய யானையின் அழகிய முகத்தைக் கொண்ட கணபதி கூட இருந்து மனம் மகிழ்ந்து அருள் புரிய, ஒப்பற்ற கயிலை மலையில் மகிழ்கின்ற, விளங்கும் வள்ளிமலை மாதாகிய வள்ளி காதல் கொண்டு அருகில் இருக்கும், புகழ் வாய்ந்த பெருமாளே. 
பாடல் 521 - கயிலைமலை 
ராகம் - அடானா; தாளம் - கண்டசாபு - 2 1/2
தனதனனத் ...... தனதான
     தனதனனத் ...... தனதான
புமியதனிற் ......ப்ரபுவான
     புகலியில்வித் ...... தகர்போல 
அமிர்தகவித் ...... தொடைபாட
     அடிமைதனக் ...... கருள்வாயே 
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்
     தனியயில்விட் ...... டருள்வோனே 
நமசிவயப் ...... பொருளானே
     ரசதகிரிப் ...... பெருமாளே.
இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே. 
* புகலி = சீர்காழி: உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால் புகலி என்ற பெயர் பெற்றது.
பாடல் 522 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -
தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
     தனத்தத் தனத்த தத்த ...... தனதான
முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
     முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே 
முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
     மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே 
நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
     நயத்திற் கழுத்தி றுக்கி ...... யணைவார்பால் 
நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
     நயத்துத் தியக்கி நித்த ...... மழிவேனோ 
செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
     திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும் 
செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
     ஜெனத்துக் கினித்த சித்தி ...... யருள்வோனே 
மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்
     மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய 
மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து
     மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே.
முகத்தை நன்றாக ஒழுங்கு செய்து மிகவும் மினுக்கித் தொடைத்து, ரத்தின மயமான மார்க் கச்சை அவிழ்த்து சற்றேனும் பின் வாங்காமல் அசைத்து, முழுமையாகக் காலம் போக்கியும், வஞ்சித்தும், தாமதப் படுத்தியும், (வந்தவர்களிடம்) பொருளைப் பறித்தும், தங்களுடைய பேச்சில் மயங்கி உட்படச் செய்தும், அவர்களைஅழைத்துக் கொண்டு போய் படுக்கையின் மேல், சிரித்து அணைத்து முத்தம் கொடுத்து, மகிழ்ந்து, மிகுந்த பக்குவத்துடன் கழுத்தை அழுந்த அணைந்து கொள்ளும் விலைமாதர்களுக்கு அஞ்சி நடுங்கியும், மிகவும் மனதை அவர்கள் பால் (ஓடை போலப்) பெருகிப் பாய வைத்தும், (அவர்களை) நயந்து வேண்டியும், கலக்கம் உற்று தினந்தோறும் அழிந்து போவேனோ? செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற தாள ஒத்துக்களுடன் கூத்தாடுகின்ற, உலகுக்கு ஒப்பற்றவராய் நிற்கும் சிவபெருமானுடைய குமரனே, (உன்னைத்) தியானித்து வணங்கும் அடியார் கூட்டத்துக்கு இனிமையான பேற்றை அருள்பவனே, மேல்சென்று திடத்துடன் பொருந்தி (மலையின் பாரத்தைப்) பொறுத்து, ராவணன் ஆணவம் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய மலையில் வீற்றிருந்து, அந்தக் கயிலை மலைக்கு அடுத்திருந்த பிறிதொரு மலையான கிரவுஞ்சத்தைப் பொடியாகும்படி தூள் செய்து அடக்கித் தொகைத்து விட்ட பெருமாளே. 
* ராவணன் திக்கு விசயம் செய்த போது அவனுடைய புஷ்பக விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாமல் நிற்க, அந்த மலையை வேரோடு பறித்து எறிய முயன்றான். மலை அசைந்தவுடன், சிவபெருமான் தமது கால் விரலால் அம்மலையை அழுத்தினார். இராவணன் நசுக்குண்டு இன்னிசை பாடி இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.
பாடல் 523 - ஸ்ரீ சைலம் திருமலை 
ராகம் - பிலஹரி ; தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான
ஒருபது மிருபது மறுபது முடனறு
     முணர்வுற இருபத ...... முளநாடி 
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்
     வெளியொடு வொளிபெற ...... விரவாதே 
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து
     திரிதொழி லவமது ...... புரியாதே 
திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே 
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம் 
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... யிளையோனே 
பெருமலை யுருவிட அடியவ ருருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா 
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.
ஒரு பத்து, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக தொண்ணூற்றாறு தத்துவங்களின்* உண்மையை உணர்ந்து, உன் இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில் தியானித்து அதனால் உள்ளம் உருகிட, பூரண சந்திரனது தீப்போன்று ஒளி வீசும் பரவெளியின் ஒளியை யான் பெற்று அதோடு கலவாமல், வீதியிலே மரம் போல நின்று யாரோடும் பேசித் திரியும் தொழிலை யான் மேற்கொண்டு வீணாக அலையாது இருப்பதற்காக, லக்ஷ்மியின் மகள் வள்ளி தழுவிய திரண்ட தோள்களை உடையவனே, ஆறுமுகனே, உன் அருட்காட்சி பெற எனக்கு அருள் புரிவாயாக. அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட நல்ல பழங்களுடன், கடலை வகைகள், பயறு, சில பணியாரங்களை உண்ணும் பெரு வயிற்றை உடையவரும், பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான கணபதிக்குத் தம்பியே, பெரிய கிரெளஞ்சமலையை ஊடுருவவும், உன் அடியவர்கள் உள்ளம் உருகிடவும், அடியார்களின் பிறவிநோய் தொலையவும் திருவருள் புரிகின்ற குமாரக் கடவுளே, பெண்யானைகளோடு ஆண்யானைகள் உலாவும், கலைமான்களின் கூட்டம் பெண்மான்களோடு விரும்பி அமரும் திருமலையாகிய ஸ்ரீசைலத்தில்** உள்ள பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** ஸ்ரீசைலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இங்குள்ள மல்லிகார்ச்சுனரும் ஒருவர்.தமிழில் இவ்வூர் திருமலை, திருப்பருப்பதம் எனப்படும்.
பாடல் 524 - திருவேங்கடம் 
ராகம் - முகாரி ; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமிதக-3, தகதிமி-2, தகிட-1 1/2
தனத்ததன தனதன தனந்த
     தனத்ததன தனதன தனந்த
          தனத்ததன தனதன தனந்த ...... தனதான
கறுத்ததலை வெளிறு மிகுந்து
     மதர்த்த இணை விழிகள் குழிந்து
          கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க் 
கழுத்தடியு மடைய வளைந்து
     கனத்தநெடு முதுகு குனிந்து
          கதுப்புறுப லடைய விழுந்து ...... தடுநீர்சோர் 
உறக்கம்வரு மளவி லெலும்பு
     குலுக்கிவிடு மிருமல் தொடங்கி
          உரத்தகன குரலு நெரிந்து ...... தடிகாலாய் 
உரத்தநடை தளரு முடம்பு
     பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
          உனக்கடிமை படுமவர் தொண்டு ...... புரிவேனோ 
சிறுத்தசெலு வதனு ளிருந்து
     பெருத்ததிரை யுததி கரந்து
          செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே 
செறித்தவளை கடலில் வரம்பு
     புதுக்கியிளை யவனோ டறிந்து
          செயிர்த்தஅநு மனையு முகந்து ...... படையோடி 
மறப்புரிசை வளையு மிலங்கை
     யரக்கனொரு பதுமுடி சிந்த
          வளைத்தசிலை விஜய முகுந்தன் ...... மருகோனே 
மலர்க்கமல வடிவுள செங்கை
     அயிற்குமர குகைவழி வந்த
          மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே.
கருப்பாயிருந்த தலை முடி நரையினால் மிக்க வெண்மையாகி, செழிப்புற்று இருந்த இரு கண்களும் குழிவிழுந்து, கன்னங்களில் இருந்த சதைகள் வற்றிப்போய், காதுகள் வெறும் தோலாக மெலிந்து, கழுத்தின் அடிப்பாகம் முற்றிலும் வளைந்து, பருத்திருந்த அகன்ற முதுகும் கூன் விழுந்து குறுகி, தாடையில் இருந்த பற்கள் மொத்தமாய் விழுந்து, உதடுகளில் ஜொள்ளு ஒழுக, தூக்கம் வரும் சமயத்தில் எலும்புகளைக் குலுக்கித் தள்ளும்படி இருமல் வந்து, வலிமையும் உறுதியும் பெற்றிருந்த குரல் நெரிபட்டு அடங்கி, கைத்தடியே கால் போல உதவ, வலிமை மிகுந்த நடை தளர்ந்து இந்த உடம்பு முதுமை அடைவதற்கு முன்பு, மிகுந்த விருப்பத்துடன் உனக்கு அடிமை பூண்டுள்ள அடியார்களுக்கு யான் தொண்டு புரிய மாட்டேனோ? சிறிய மீன் உருவத்தினுள் அவதாரம் செய்து, பெரிய அலை வீசும் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த வேதங்களை மீட்டு வருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமாலும், கணையைச் செலுத்தி, அந்த வளைந்த கடலில் அணையைப புதிதாகக் கட்டி, தம்பி இலக்குவனோடும், ராவணனுடைய நிலையை அறிந்து சீறிய (இலங்கையில் தீ மூட்டித் திரும்பிய) அநுமனுடனும் மகிழ்ந்து, வானரப் படையைச் செலுத்தி, வீரம் பொருந்திய மதில்கள் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழ்ந்த அரக்கன் ராவணனது பத்துத் தலைகளும் அறுபட்டு விழுமாறு வில்லை வளைத்த வெற்றி முகுந்தன்ஆகிய திருமாலின் மருகோனே, தாமரை மலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கரத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே, குகையின் வழியாக வந்து* வெளிவந்த மலையாகிய, சிகரத்தை உடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* ஒருமுறை உமாதேவியிடம் கோபித்துக்கொண்டு கயிலையை விட்டு பாதாளத்தில் ஒளிந்து கொண்ட முருகக் குழந்தை குகை வழியே திருவேங்கட மலையின் உச்சியை அடைந்து நின்றான் - கந்தபுராணம்.
பாடல் 525 - திருவேங்கடம் 
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா; தாளம் - ஆதி 
- எடுப்பு - 1/2 இடம்
தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன தனதன தனதன
          தனதன தனதன தனதன தனதன ...... தனதான
சரவண பவநிதி யறுமுக குருபர
     சரவண பவநிதி யறுமுக குருபர
          சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் 
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
     சனனம ரணமதை யொழிவுற சிவமுற
          தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே 
கருணைய விழிபொழி யொருதனி முதலென
     வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ
          கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா 
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்
     கலகமி னையதுள கழியவும் நிலைபெற
          கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே 
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய
     குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்
          சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா 
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்
     மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ
          திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே 
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
     மருகனெ னவெவரு மதிசய முடையவ
          அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே 
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென
     வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற
          அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.
சரவணபவனே*, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, என்று பல முறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக. கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே, ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனென வந்த யானைமுகக் கணபதியை துணையாகக் கொண்ட இளையவனே, கவிதைகளாகிய அமுத மொழிகளை வழங்குபவருடைய உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள் புரியும் நேசம் உடையவனே, கடல் சூழ்ந்த இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும், கலக்கங்களும், இன்னும் இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும், நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும், உனது திருவடி நிழல் அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ? திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே, திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே, நாள்தோறும் உன் புகழைக் கூறும் அடியார்களின் உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே, அருட்செல்வம், பொருட்செல்வம் ஆகிய இரண்டிலும் விளங்குபவனே, இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு ஞானசூரியனாக வருகின்ற பெரும் செல்வமே, பாம்பணையில் துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின் மருகோனாக வரும் அதிசய மூர்த்தியே, மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும், பெரியவளும் ஆகிய உமாதேவி தந்தருளிய முருகக் கடவுளே, அதலம் விதலம் முதலிய ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க வருகின்ற மயிலின் மீது இனிதாக ஒளி வீசுபவனே, ஆறுகோணச் சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற ஹர ஹர சிவ சிவ, பெருமாளே. 
* 'சரம்' - தர்ப்பை, 'வனம்' - காடு, 'பவன்' - வெளிப்பட்டவன். நாணற்புல் காட்டில் தோன்றியதால் 'சரவனபவன்'. தமிழ் இலக்கண விதிப்படி 'ர'கரத்தின் பின்வரும் 'ன'கரம் 'ண'கரமாகும் என்பதால் 'சரவணபவன்'.
பாடல் 526 - திருவேங்கடம் 
ராகம் - ...; தாளம் -
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
   தத்தத் தத்தத் தனதான
      தனத்த தனத்த தனத்த தனத்தன
         தனதன தனதன தனதன தனதன
            தனதன தனதன ...... தனதான
நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
   கச்சிக் கச்சுற் றறன்மேவி
      நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
         நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
            நிறையுறை மதுகர ...... நெடிதாடி 
நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்
   றொப்புக் கொப்புக் குயர்வாகி
      நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை
         நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு
            நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும் 
வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்
   டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல
      வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்
         மதசிலை யதுவென மகபதி தனுவென
            மதிதில தமும்வதி ...... நுதன்மேலும் 
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
   பொற்பக் கத்திச் சையனாகி
      மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத
         மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்
            வழிபட லொழிவனை ...... யருள்வாயே 
நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்
   துட்டக் கட்டத் தசிகாண
      நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்
         நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்
            நகைமுக திருவுறை ...... மணிமார்பன் 
நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்
   தைக்கைப் பற்றிப் பொருமாய
      னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற
         நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த
            நரகரி யொருதிரு ...... மருகோனே 
கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்
   பட்டுக் குட்பட் டமுதாலுங்
      கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு
         கனதன பரிமள முழுகுப னிருபுய
            கனகதி வியமணி ...... யணிமார்பா 
கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்
   பட்சிக் கக்கொட் டசுராதி
      கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
         கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
            கடவட மலையுறை ...... பெருமாளே.
(பாடலின் முதல் 15 வரிகள் மாதரின் கூந்தலையும் நெற்றியையும் வருணிக்கின்றன). தேன் பொருந்திய பிச்சி மலரின் குளிர்ச்சியை உடையதாய், கச்சிதமாக முடியப்பட்டதாய், கரு மணலை ஒத்ததாய், சுருண்டு மணமுள்ளதாய், இருளை அச்சுறுத்தும் கருமை கொண்டதாய், வாசனை மலர்களை வரிசையாகச் செருகியதாய், நறுமணத்தில் வாழ்கின்ற வண்டுகள் மொய்த்து மகிழ்வதாகி, இரவுக்கு பயத்தை அளிப்பதாய், சிக்கல் இல்லாததாய், சமானம் இன்றி அலங்காரத்தில் உயர்வு அடைந்து, வளைவும் சுருளும் உடையதாய், விருப்பத்தைத் தந்து அழைப்பதாய், அஞ்சனத்துக்கு ஒப்பு என்னும்படியாகி, அகில் தருகின்ற புகையின் தொகுதி மிகுந்து விளங்கும் புனுகு கமழ்கின்ற கூந்தலின் மேலும், வஜ்ரம் போல ஒளி தரும் பச்சைப் பொட்டை (நெற்றியில்) இட்டு, அந்தப் பொட்டுக்குள் சிவந்த பிரபை போல வளைந்த செழிப்புள்ள பிறைக்கு ஒப்பாக உறைவதாகி, மன்மதனின் வில் என்னும்படி இந்திரன் ஏவிய வான வில் என்னும்படி (வளைவாய் விளங்க வைத்த) பிறை போன்ற குறி அமைந்துள்ள நெற்றியின் மேலும், (உடலில் உள்ள) மச்சங்களின் மீதும், சிவந்த விசித்திரமான அதிசயிக்கத் தக்க அழகிய உடல் பக்கங்களிலும் இச்சை கொண்டவனாய் மனத்தில் நினைத்தவை எல்லாவற்றையும் அறிந்து உதவவல்ல உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள் வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு செய்யாத எனக்கு அருள் புரிவாயாக. விஷத்தை உண்ட (பீமன், அந்த விஷம் தாக்காமல்) சோபித்து விளங்கவும், நீர் நிலையுள் தங்கும்படி குறுக்கே வைத்திருந்த வாள் முனைகள் இருக்கும் இடத்தைத் தெரியும்படி (அந்த பீமனுக்குக்) காட்டியும்* விஷம் உடையும்படி (காளிங்கன் என்னும் பாம்பின்) பணாமுடியின் மீது நின்று நர்த்தனம் செய்தும், கடல் மீது கொல்லத் தக்க தமது பாணத்தை (ராமனாகச்) செலுத்தியும் (ஆடல் புரிந்த) மேக நிறத்துத் திருமால், சிரித்த முகத்தை உடைய லக்ஷ்மி உறையும் அழகிய மார்பை உடையவன், சங்கையும் சக்கரத்தையும் தாமரை போன்ற கையில் பற்றி சண்டை செய்யும் மாயவனாகிய திருமால், நரிக்கும், வாளுக்கும், நெருப்புக்கும் விருப்பம் உண்டாகும்படி, அழிந்து போகின்ற அசுரர்களின் குடலை இடுதலைச் செய்தவனும், நரகாசுரனுக்குப் பகைவனுமான திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் மருகனே, கச்சைக் கட்டி அழகாக முடி போட்டு பட்டுத் துணிக்குள் அமைந்ததாய் உள்ள, அமுதக் குடம் பொதிந்து அசைவதாய், கரும்பின் ரசத்தையே உருச் செய்து வைத்திட்டதாய் உள்ள (வள்ளியின்) பருத்த மார்பகங்களின் நறு மணத்தில் முழுகும் பன்னிரு தோள்களை உடையவனே, பொன்னாலாய மேன்மையான ரத்தினங்களை அணிந்த மார்பனே, கையில் விளங்கும் வேல் ஆரவாரம் செய்து நன்றாக உண்ணும்படி, வாத்திய முழக்குடன் வந்த அசுரர் தலைவனாகிய சூரனை கரு நிறம் உடைய அரக்கர்கள் கூட்டத்துடன் கோபித்து அழித்த இளையவனே, வழிகளின் பக்கங்களில் உள்ள காடுகள் சூழும் திருவேங்கட மலையில் உறையும் பெருமாளே. 
* ஆற்றில் கழு முனைகளை மறைவாக நிறுத்தி, அங்கே பீமனைக் குதித்து விளையாடச் செய்தான் துரியோதனன்.அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளால் காட்டிப் பீமனைக் கண்ணன் காப்பாற்றினார்.
பாடல் 527 - திருவேங்கடம் 
ராகம் - ...; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான
கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்
     வாங்கிய வேல்விழியும் ...... இருள்கூருங் 
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்
     மாந்தளிர் போல்வடிவும் ...... மிகநாடிப் 
பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு
     தீங்குட னேயுழலும் ...... உயிர்வாழ்வு 
பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்
     வீழ்ந்தலை யாமலருள் ...... புரிவாயே 
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
     வேங்கையு மாய்மறமி ...... னுடன்வாழ்வாய் 
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக
     பாண்டிய னீறணிய ...... மொழிவோனே 
வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே 
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.
கோங்கு மரத்தின் முகை, இளநீர் (இவை இரண்டும்) தோற்கும்படி பெருகி வளரும் மார்பகங்களும், செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த கூந்தலும், பெரிய வளையல்களை அணிந்துள்ள காந்தள் மலர் போன்ற கைகளும், நூல் போன்ற இடுப்பும், மாந்தளிர் போன்ற மேனியும் (ஆகிய இவைகளை) மிகவும் விரும்பி, பூங்கொடி போன்ற பொது மாதர்களின் சேர்க்கையை விடுதற்கு முடியாமல் மிக்க தீமைச் செயல்களுடன் திரிகின்ற உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு அடியவனாகிய நான் அந்த இழிந்த வழியிலேயே நின்று இறந்து இங்ஙனம் நரகத்தில் விழுந்து அலையாமல் அருள் புரிவாயாக. தோழியும் வேடர்களும் திகைக்கும்படி சிறந்த தவ முனியாக வந்த கிழவர் போலவும், வேங்கை மரமாகவும் வேடங்கொண்டு வேட்டுவர்களின் மின்னல் போன்ற வள்ளியுடன் வாழ்பவனே, பாண்டவர்களின் தேரைச் சாரதியாகச் செலுத்தியவனும், நீண்ட (திரிவிக்கிரம) உருவை எடுத்தவனும் ஆகிய பிரானாகிய திருமாலின் மருகனே, (கூன்) பாண்டியன் திரு நீறு அணியும்படி பதிகம் பாடிய திருஞானசம்பந்தனே, புலியும் யானையும் வேங்கை மரமும் மானும் மிகுந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் உறைபவனே, தங்களுக்குக் குறைகள் உண்டான போது அடியார்கள் அவர்களுக்கு வேண்டிய சுக போகங்களை முறையிட்டு வேண்ட, (சற்றேனும்) வெறுப்பு இல்லாமல் அதை உதவுகின்ற பெருமாளே. 
பாடல் 528 - திருவேங்கடம் 
ராகம் - ...; தாளம் -
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
     மூண்டவி யாதசம ...... யவிரோத 
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்
     தாந்துணை யாவரென ...... மடவார்மேல் 
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
     தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி 
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
     யான்தனி போய்விடுவ ...... தியல்போதான் 
காந்தளி னானகர மான்தரு கானமயில்
     காந்தவி சாகசர ...... வணவேளே 
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி
     யாண்டகை யேயிபமின் ...... மணவாளா 
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட
     வேங்கட மாமலையி ...... லுறைவோனே 
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.
பொறுமை இல்லாத மோகத்தினால் உண்டாகிய நெருப்பின் சூடு காந்தவும், ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும், ஒரு போதும் ஓயாத, சமய வெறியால் வாதிட்டுப் பகை கொள்ளச் செய்யும் அழிகின்ற மதசாத்திரம் என்னும் பெரும் சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியாமல், உலகில் மனைவி, மக்கள், சுற்றம், இவையே துணையென நம்பியும், பெண்கள் தம் உடல்மீது அணிந்த மார்க் கச்சுடன், இளம் தாமரையன்ன, சந்தனம் பூசிய, மார்பினைத் தழுவியும், உள்ளம் உருகியும், புத்தி தடுமாற்றத்தை அடைந்து, ஏக்கத்தைக் கொண்ட அடியேனுடைய அருமையான ஆவியைக் கவர்ந்து செல்லும் காலனின் வசப்பட்டு யான் துணையின்றி தனியே நமனுலகம் ஏகுதல் தகுதியோ? காந்தள் மலரைப் போன்ற மென்மையான திருக்கரங்களை உடையவளும், மான் ஈன்ற, கானகத்து மயில் போன்றவளுமான அழகி, வள்ளியின் கணவனே, விசாக நக்ஷத்திரத்தில் ஜோதிப் பிழம்பாக வெளிப்பட்டவனே, சரவணபவக் கடவுளே, பார்க்க அழகிய தேவர் தலைநகர் அமராவதியை மீட்டு ஆண்டவனே, வேதங்களால் துதிக்கப்பெறும் சிறந்த வீரனே, ஐராவத யானை போற்றி வளர்த்த மின் கொடி போன்ற தேவயானையின் மணவாளனே, அரசனே, என்றும் இளையவனே, இதய குகையில் உறைபவனே, செம்மையான பண்பு நிறைந்தவனே, மயில் வாகனனே, வட எல்லையில் உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே, உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம் அவர்கள் விரும்பிக் கேட்ட போக பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க, வெறுக்காமல் அவர்களுக்குத் தந்து அருள் புரிகின்ற பெருமாளே. 
பாடல் 529 - திருவேங்கடம் 
ராகம் - சக்ரவாஹம் ; தாளம் - திஸ்ர த்ருபுடை
தனதாந்தன தானன தானன
     தனதாந்தன தானன தானன
          தனதாந்தன தானன தானன ...... தனதான
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
     முழைவார்ந்திடு வேலையு நீலமும்
          வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே 
வளர்கோங்கிள மாமுகை யாகிய
     தனவாஞ்சையி லேமுக மாயையில்
          வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே 
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்
     மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற
          இனிதாங்கனி வாயமு தூறல்கள் ...... பருகாமே 
எனதாந்தன தானவை போயற
     மலமாங்கடு மோகவி காரமு
          மிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே 
கரிவாம்பரி தேர்திரள் சேனையு
     முடனாந்துரி யோதன னாதிகள்
          களமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக் 
கனபாண்டவர் தேர்தனி லேயெழு
     பரிதூண்டிய சாரதி யாகிய
          கதிரோங்கிய நேமிய னாமரி ...... ரகுராமன் 
திரைநீண்டிரை வாரியும் வாலியும்
     நெடிதோங்கும ராமர மேழொடு
          தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச் 
சிலைவாங்கிய நாரண னார்மரு
     மகனாங்குக னேபொழில் சூழ்தரு
          திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.
செவ்வரி படர்ந்த சேல் மீனோ, கயல் மீனோ என்று சொல்லத்தக்கதும், மானையும், வார்த்தெடுக்கப்பட்ட வேலையும், நீலோத்பல மலரையும், மாம்பிஞ்சினையும் நிகர்த்த கண்களை உடைய மாதர்களின் காம வலையினாலும், வளர்ந்த கோங்கு மரத்தின் இளம் சிறப்பான அரும்பையொத்த மார்பகங்களின் மேல் வைத்த ஆசையாலும், முகத்தின் மயக்கத்தாலும், செழுமையான மாந்தளிர் போன்ற நிறத்து வடிவத்தாலும், இருளையொத்துக் கருத்து நீண்ட கூந்தலின் நிழலாலும், காம மயக்கம் கொண்ட படுக்கையின் மேலே பொருந்த, இனிதான கோவைக்கனி இதழ்களின் அமுதாகிய ஊறல்களை உண்ணாதபடி, என்னுடையவை, தன்னுடையவை என்றவை நீங்கி அற்றுப்போகவும், மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும், உன் இரு திருவடிகளை அருள்வாயாக. யானைப்படையும், தாவும் குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும், ஒன்றாகக் கூடியுள்ள துரியோதனாதியர் போர்க்களத்தில் இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று, பெருமைவாய்ந்த பாண்டவர்களின் தேரிலே, கிளம்பிப் பாயும் குதிரைகளைச் செலுத்திய தேரோட்டி ஆனவனும், ஒளி மிகுந்த சுதர்ஸன சக்கரத்தை உடையவனுமான ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும், அலைகள் ஓங்கி ஒலிக்கும் கடலையும், வாலியையும், நீண்டு உயர்ந்த ஏழு மராமரங்களையும், பத்துத் தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி கோதண்ட வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே, சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 530 - வள்ளிமலை 
ராகம் - தர்பாரி கானடா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான
அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக் ...... கடலீயும் 
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத் ...... தனமாரும் 
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச் ...... சமனாரும் 
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய் 
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக் ...... குருநாதா 
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே 
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே 
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
தாமரை இதழ் போன்ற கண்களாலும், முல்லை அரும்பை நிகர்த்த பற்களாலும், துயரத்தை அடையும்படி ஆசையைக் கடல் போலத் தருபவர்களும், அள்ளி எடுக்கலாம் போல இனிதாக அமைந்து நடு இரவு போன்று இருண்ட வினைகளை உடைய விலைமாதரும், அந்தச் செல்வம் மிகுந்த வீடும், மக்களாகிய இளைஞரும், அனைவருமே மெல்ல மெல்ல வேறாகும்படி, வலிய எருமையை வாகனமாகக் கொண்ட மாயக்கார யமனும் என்னை இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் அடியேன் உய்யும் பொருட்டு ஒப்பற்ற உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக. பழமையான வேதங்கள் தேடிப்பார்த்து காண முடியவில்லை என்று முறையிடுகின்ற சிவபிரானுக்கு உபதேச மொழியைச் சொல்லி அருளிய குருநாதனே, துள்ளி ஓடி விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி அதனை இகழ்கிற வள்ளி வாழும் வள்ளிமலைக் காட்டிற்கு வலியச் சென்று வாழ்கின்றவனே, வலிமையான அசுரர்கள் மாளவும், நற்குணமுள்ள தேவர்கள் வாழவும், மிக விரைவாக கூரிய வேலைச் செலுத்தியவனே, வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற, சாரலுடன் கூடிய வள்ளிமலையில்* எழுந்தருளியுள்ள வள்ளியின் மணவாளனே, பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 531 - வள்ளிமலை 
ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தானத் ...... தனதான
ஐயுமுறு நோயு மையலும வாவி
     னைவருமு பாயப் ...... பலநூலின் 
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு
     முள்ளமுமில் வாழ்வைக் ...... கருதாசைப் 
பொய்யுமக லாத மெய்யைவள ராவி
     உய்யும்வகை யோகத் ...... தணுகாதே 
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை
     நல்லஇரு தாளிற் ...... புணர்வாயே 
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு
     செய்யபுய மீதுற் ...... றணைவோனே 
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ
     வெள்ளமுது மாவைப் ...... பொருதோனே 
வையமுழு தாளு மையமயில் வீர
     வல்லமுரு காமுத் ...... தமிழ்வேளே 
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.
கோழையும், அதனால் ஏற்படும் பல நோய்களும், மோகங்களும், ஆசைகளைத் தூண்டும் ஐம்பொறிகளும், பல கலை நூல்களும், அவற்றின் சூழ்ச்சிகளும் ஆகிய சேற்றைத் தாண்டாது, துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து இறந்து போகிற உள்ளமும், மனை வாழ்க்கையையே எண்ணுகின்ற ஆசையும், பொய்யும் நீங்காத இந்த உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான நல்ல யோக வழிகளை நான் அணுகாமல், இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசித் துன்பம் அடைகின்ற என்னை உனது நல்ல திருவடிகளில் சேர்த்தருள்வாயாக. மெய்யனே, வள்ளிமலைச் சோலையில் நீண்ட நேரமாக வள்ளியை உன் பன்னிரு சிவந்த புயங்களாலும் இறுகத் தழுவுவோனே, வெள்ளையானை ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனின் சுற்றமாகிய தேவர்கள் வாழ, கடலினிடையே பல காலம் முதுமையான மாமரமாக நின்ற சூரனுடன் போர் புரிந்தவனே, உலகெல்லாம் முழுமையாக ஆளும் ஐயனே, மயில் வீரனே, வல்லம்* என்னும் திருத்தலத்தில் உள்ள முருகனே, முத்தமிழ்க் கடவுளே, வள்ளிக் கொடி படரும் மலைச்சாரல் உள்ள வள்ளிமலையில்** வாழும் வள்ளியின் மணவாளப் பெருமாளே. 
* வல்லம் என்னும் திருவல்லம் வள்ளிமலைக்குத் தெற்கே 9 மைலில் உள்ளது.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 532 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
     தய்யத்த தான தந்த ...... தனதான
கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து
     பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக் 
கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து
     கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி 
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று
     பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன் 
உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று
     முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ 
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு
     தெய்வத்தெய் வானை கொங்கை ...... புணர்வோனே 
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று
     வெல்லப்ப தாகை கொண்ட ...... திறல்வேலா 
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை
     மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே 
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
     வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
செய்யத் தக்கதை அறிந்து அதன்படி வாழும் இந்த மெய்யான வாழ்க்கையை விட்டுவிட்டு, பொய்யான வாழ்க்கையைப் பார்த்து அதில் மோகம் கொண்டு, கல்லைப் போன்ற கடினமான வஞ்சக உள்ளத்தை உடைய பொது மகளிர்மேல் விழுந்து, (அவர்களுடைய) கள்ளத்தனம் பொருந்திய மார்பகங்களின் மேல் பொருந்தி, உய்யும் வழியில் சேராது நின்று, வஞ்சகருடனும், தந்திரம் நிறைந்த பொய்யர் கூட்டத்துடனுமே கலந்து சோர்வடைந்து, உள்ளம் குலைகின்ற நாயைப்போன்ற எனக்கு மனதில் பெறுதற்கு அரிய செல்வமாக நினைத்து, சோர்வு அடையாமல் எப்போதும் நிலைத்துள்ள மனப் பக்குவத்தை (அடைய) ஓர் உபதேச மொழியைச் சொல்ல மாட்டாயோ? சந்தேகம் இல்லாத, ஐந்து எனப்படும் பொய்யாத வகையில்+ (கேட்டதைத் தரும்) கற்பக மரச் சோலையில் தங்கி வளர்ந்த தெய்வ மகள் தேவயானையின் மார்பகங்களை அணைவோனே, இரவைப் பொறுக்காமல் கூவி ஒலிக்கும் சொல்லை உடைய வலிமையான சேவல் ஒன்றை வைத்துள்ள வெற்றிக் கொடியைக்கொண்ட வல்லமை படைத்த வேலனே, உலகம் முழுமையும் ஓடி வலம் வந்தும், ஐந்து திருக் கரங்களைக்கொண்ட கணபதிக்கு (கனியைக்) கொடுத்த தந்தையாகிய சிவபெருமானுக்கு (அவர் நீதி தவறியபோதிலும்) உண்மைக்குப் பொருந்திய பிரணவ மந்திரத்தை நீதி முறையில் தெரிவித்த பெரியோனே, வள்ளிக் கொடிகள் நிறைந்துள்ள வள்ளி மலை** மேல் ஏறிச் சென்று, வள்ளி நாயகியைத் தேடி அவள்மீது மோகம்கொண்ட பெருமாளே. 
* தேவலோகத்தில் இருந்த ஐந்து பொய்யற்ற மரங்கள்: சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 533 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த
     தய்யத்த தான தந்த ...... தனதான
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
     பல்லுக்கும் வாடி யின்ப ...... முயலாநீள் 
முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து
     பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான 
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு
     மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம் 
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று
     முள்ளப்பெ றாரி ணங்கை ...... யொழிவேனோ 
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க
     அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே 
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி
     மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா 
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த
     மல்லுப்பொ ராறி ரண்டு ...... புயவீரா 
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று
     வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.
முல்லை மலர்ப் பாணத்துக்கும், மன்மதனுடைய அழகிய கையில் ஏந்திய (கரும்பு) வில்லுக்கும், பெண்களின் வசைப் பேச்சுக்கும் மனம் வாடி, இன்பத்தை அடைய முயன்று, அதனால் நீண்ட முள் தைத்த கால் போல மடங்கிக் கிடந்து, (துன்பக்) கொள்ளி நெருப்பில் முழுகி (உள்ளம்) வெந்து, கீழ் நிலையில் விழுவதோடு, ஒப்பற்ற ஞான எல்லையையும், வேதங்கள் சொல்லித் தொழுது வணங்கும் எல்லையையும் விலகித் தாண்டி நின்று, உன்னுடைய அருள் பாலிக்கும் திருநாமத்தை இகழ்ந்து பேசுதற்கும் ஆசை கொண்டு, (தமது) மனத்தில் கடவுளே அபயம் என்ற எண்ணம் பெறாதவர்களாய் இருக்கின்ற (கீழ் மக்களின்) நட்பை விட மாட்டேனோ? இருளில், அந்த யானையாகிய கணபதி கொடுத்து உதவிய கொடி போன்ற வள்ளிக்கு, அவளுடைய மார்பு விளங்கும்படி தாமரையாகிய உன் மார்பிலிருந்த மாலையை அணிவித்தவனே, சேறு படாத கங்கை ஆற்றில் உள்ள சரவணப் பொய்கையில் தங்கி, (அங்கு) மெல்ல தாமரை மலரில் வீற்றிருக்கும் தலைவனே, திருவல்லம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரனே, கந்தனே, சிதம்பரத்தில் உறைபவரும் திரிபுரத்தை எரித்தவருமான சிவபெருமானுக்கு மைந்தனே, மல் யுத்தப் போருக்கு எப்போதும் ஆயத்தமான பன்னிரண்டு புயங்களைக் கொண்ட வீரனே, வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின்* மேல் சென்று, வள்ளி அம்மையின் மீது விருப்பம் கொண்ட பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 534 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
     தய்யத்த தாத்த ...... தனதான
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
     துள்ளிக்க னார்க்க ...... யவுகோப 
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை
     கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச 
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை
     வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல் 
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்
     கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ 
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்
     வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே 
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்
     புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே 
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க
     வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே 
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
வஞ்சனை, பொய் இவைகளின் கூட்டம் நிறைந்த பை, ஓட்டைகளை உடைய மாமிசப்பை, துள்ளுகின்ற மன்மதனுடைய சேட்டைகளினால் தளர்வு, கோபம், களவு இவைகளுக்கு இருப்பிடமான தோல் பை, வேகமாக விரைந்து செல்லும் பலவித காற்றுகள் நிறைந்த பை, யமன் சூறையாடிக் கொண்டு போவதற்கு அமைந்த செத்தையாகிய பை, ஜீவாத்மா, பந்தம் இவைகளுக்கு இடமாகிய சேற்றுப் பை, ஆசை மயக்கத்துக்கு இடமாகிய பை, பாவங்களுக்கு இருப்பிடமாகிய பை, சீழ் சேருகின்ற பை, மிகுந்த தளர்ச்சி அடைந்த பை, இறைச்சி, ஈரல் முதலிய உறுப்புக்களை அள்ளி உண்பதற்கு நாய்கள் குலைத்தும், இழுத்தும் பற்களால் குதறப்படுகின்ற இந்த உடலை ஒழிக்க மாட்டேனோ? அறிவு நிறைந்த தேவயானையின் தலைவனே, (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கும், வெண்ணிறமான திருப்பாற் கடலில் உறையும் திருமாலுக்கும் மருகனே, வண்டுகள் நிறைந்த காட்டில் வசிக்கும் மலை வேடர்கள் கொல்லும் பறவைகள் உள்ள கடுமையான காட்டு வழியில் வள்ளியின் பொருட்டு வருகின்றவனே, வள்ளி அனுஷ்டித்த நன்னெறி* என்னும் உபதேசத்தை தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகிய சிவபெருமானுக்கு கண்ணிமைக்கும் ஒரு க்ஷணப்** பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே, வள்ளிக் கொடிகள் கூட்டமாய் அடர்ந்த வள்ளி மலைத்*** தினைப்புனத்தில் காவல் புரிந்த வள்ளி அம்மைக்கு (மணாளனாக) வாய்த்த பெருமாளே. 
* 'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது' என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன் சிவபெருமானுக்கு உபதேசித்தார்.
** வல்லை = க்ஷணம். க்ஷணப் பொழுதில் சிவனுக்கு உபதேசித்ததால், திருத்தணிகைக்கு திருக்ஷணிகை என்ற பெயரும் உண்டு.
*** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 535 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -
தய்யத்த தாத்த தய்யத்த தாத்த
     தய்யத்த தாத்த ...... தனதான
வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு
     வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால் 
வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய்
     யில்லத்து றாக்க ...... வலைமேவு 
பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை
     நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின் 
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்
     கல்விக்க லாத்த ...... லையலாமோ 
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து
     சொல்குக்கு டார்த்த ...... இளையோனே 
அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்
     கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே 
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்
     வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே 
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
இந்த உலகத்தையே வென்று குவிக்கத் தக்க, முல்லை மலர்ப் பாணம் தரித்த கையை உடைய, நாண் பூட்டிய வில்லாக கரும்பு அமைய, வேண்டுமென்றே செய்யும் மன்மதனது லீலையால் (நான்) ஒளி மங்கிப் போய், ஆசை கொண்டு, உரைக்கும் சொல்லும் போய், மனம் நெகிழ்ந்து, பொய் வாழ்வு உடைய (பரத்தையர்) வீட்டுக்குப் போய், கவலை மிகுந்து, அங்கே பல துன்பங்கள் நேர, அவற்றில் மூழ்கி அல்லல் படுகின்ற இந்த உடலை உடையவன் நான். நன் மார்க்கத்தில் சேராத ஆறு சமயங்களின் பல பொருள் மார்க்கத்தை உடைய வல்லரக்கர் ஆகிய முரட்டுப் பிடிவாதக்காரர்களின் குதர்க்க வாதக் கல்விப் போரில் புகுந்து நான் அலைபடலாமோ? (விரக வேதனையால்) இந்த இராக் காலம் ஒழியாதா என்னும் சொல்லை உடைய (ஒரு தலைக் காமம் உற்ற) தலைவிக்கு இதமாக, அவளோடு ஒத்து (விடியலை உணர்த்தும்) குரல் கொடுத்து கொக்கரிக்கும் சேவலைக் கொடியாகக் கொண்ட இளையோனே, இருண்ட இரவையும், சிறிது வழி தெரிவிக்கும் பகலையும் கடந்த மேலிடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவு கடந்த கருணை வள்ளலே, வலிய அழகிய (நந்தியாம்) ரிஷப வாகனத்தை உடையவரும், தில்லைப்பதிக்கு ஏற்றவரும், (பார்வதியாம்) சிவகாம வல்லிக்கு உகந்தவருமாகிய சிவபெருமான் அருளிய புதல்வனே, வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின்* மேல் சென்று தினைப்புனத்தைக் காத்த வள்ளி அம்மைக்கு கணவனாக வாய்த்த பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியார் அவதரித்த தலம்.
பாடல் 536 - வள்ளிமலை 
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி 2 களை - 16
தனதன தனதன தனதன தனதன
     தய்யத்த தாத்த ...... தனதான
ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை
     கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு 
கனலெழ மொழிதரு சினமென மதமிகு
     கள்வைத்த தோற்பை ...... சுமவாதே 
யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள்
     உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி 
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
     லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே 
ம்ருகமத பரிமள விகசித நளினநள்
     வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா 
விடதர குடிலச டிலமிசை வெகுமுக
     வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே 
வகுளமு முகுளித வழைகளு மலிபுன
     வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும் 
வனசரர் மரபினில் வருமொரு மரகத
     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.
ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும், கெட்டுப்போன மாமிச நாற்றமும், கிருமிகள் உள்ளதுமான வீடு, நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி, யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக, ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக. கஸ்தூரியின் வாசம் வீசும், நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும் வெள்ளை நிறத்தளான ஸரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது ஆயிரம் முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே, மகிழ மரமும், அரும்புகள் விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள தினைப்புனம் உடைய வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும் வேடர் மரபில் தோன்றி வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 537 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -
தய்யதன தந்த தய்யதன தந்த
     தய்யதன தந்த ...... தனதான
அல்லசல டைந்த வில்லடல நங்கன்
     அல்லிமல ரம்பு ...... தனையேவ 
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற
     லையமது கிண்ட ...... அணையூடே 
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று
     தொல்லைவினை யென்று ...... முனியாதே 
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு
     துள்ளியக டம்பு ...... தரவேணும் 
கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த
     கல்விகரை கண்ட ...... புலவோனே 
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று
     கல்லலற வொன்றை ...... யருள்வோனே 
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச
     வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா 
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று
     வள்ளியைம ணந்த ...... பெருமாளே.
மாலைப் பொழுதினில் வந்து சேர்ந்த, வில்லை ஏந்திய வெற்றி பொருந்திய, மன்மதன் தனது அல்லி மலர்ப் பாணத்தைச் செலுத்த, பிறைச்சந்திரனும் நெருப்பை அள்ளி வீச, தென்றற் காற்றும் (அங்ஙனம் நெருப்பு வீசுவதால்) தலைவன் அருள் புரிவானோ என்ற ஐயத்தைக் கிளப்ப, படுக்கையில் (ஊராரின் அலர்ப் பேச்சுக்களால்) பேசப்படுபவளும், தாமரையில் வசிக்கும் லக்ஷ்மி போன்றவளுமான இப்பெண் தனிமையில் இருந்து, என் பழ வினையால் இங்ஙனம் வாடுகிறேன் என்று தன்னைத் தானே வெறுக்காமல், பரிசுத்தமான ரேகைகளை உடைய வண்டு சிவந்த தேனை உண்டு துள்ளுகின்ற (உனது) கடப்ப மாலையைத் தர வேண்டும். (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான்* என்னும்படி விளங்கிய புலவனே, தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில் சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம் இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே. வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப்** போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே. 
* வித்வத் தாம்பூலம் யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஔவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்ததும், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறினாள் - கந்த புராணம்.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, தென்றல், ஊராரின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 538 - வள்ளிமலை 
ராகம் - அமிர்தவர்ஷணி ; தாளம் - ஆதி - தேசாதி
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
     குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள் 
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன
     குருவார்த்தை தன்னை ...... யுணராதே 
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய
     இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி 
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு
     னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ 
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி
     மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா 
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி
     மலைகாத்த நல்ல ...... மணவாளா 
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை
     யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே 
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.
இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட தாயார், மனைவி, பிள்ளைகள், குயில் போலப் பேசி எதிர்ப்படும் பெண்கள், பிறந்த குலம், கிடைத்த நல்ல செல்வம், எனக்குத் தான் கிடைத்தது என்று ஆணவம் கொண்டு, குருவின் உபதேச மொழிகளை அறியாமல், நாட்கள் வீணாகக் கழிந்திட, கொடிய யமன் இறுதியில் நெருங்கி வந்து சோர்வுறச்செய்யும் துன்பங்களைத் தர, துயரத்துடன் கொண்டுபோய் சுடுகாட்டில் (மயானத்தில்) அடியேனைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக, உனது இரு திருவடிகளை உணர்ந்து அறிவேனோ? வடநாட்டில் உள்ள வெள்ளியங்கிரியை (கயிலாயத்தை) (கோபுர வாசலில் அமர்ந்து) காவல் செய்து புள்ளியை உடைய மயிலின் மீது விளங்குகின்ற குமரக் கடவுளே வடிவழகியான வள்ளியின் திருவடியைப் புகழ்ந்து, வள்ளிமலையில்* அப்பிராட்டியின் சமயம் பார்த்துக் காத்திருந்த நல்ல (வேளைக்கார) மணவாளனே யான் முன்னாட்களில் செய்த குற்றங்களைப் பொறுத்து, எனக்கு நின் திருவருளைப் போற்றும் வளப்பமான குணத்தைத் தந்தருளிய என் செல்வமே நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும் பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 539 - வள்ளிமலை 
ராகம் -...; தாளம் -
தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
     தனதந்த தந்தனம் ...... தனதான
சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
     சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம் 
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
     தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி 
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
     துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன் 
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
     வினவென்று அன்புதந் ...... தருள்வாயே 
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
     டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன் 
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
     கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா 
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
     திசையொன்ற மந்திசந் ...... துடனாடும் 
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
     வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.
தலை என்னும் உறுப்பு, அழகிய கை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவை நன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல் சில துயரங்களும் இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர், சிவந்த நெருப்பில் வெந்து உயிர் பிரிதல் உறும்படி, சீக்கிரத்தில் நமன் போரிட வந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்கு முன்பு தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக. (ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேக நிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி, நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப் பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி) பரந்து ஒலிக்க, அன்று கோபித்து (அவனைக்) கொன்ற வேலனே, தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட, வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க, குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி) மலைக்கு* வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின் பாதத் தாமரை வரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 540 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -
தனதன தந்தன தந்த தந்தன
     தனதன தந்தன தந்த தந்தன
          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
     விழியையு கந்துமு கந்து கொண்டடி
          வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை 
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
     குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
          மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி 
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
     யடியின கங்கள்வ ரைந்து குங்கும
          உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ் 
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
     அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
          உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ 
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
     மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
          விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர 
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
     ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
          விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே 
அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி
     மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
          அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா 
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
     வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை
          யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே.
(பொருள் கொடுப்பின் வேண்டியவர், வேண்டாதோர் என்னும்) அளவு இல்லாமல் அன்பு காட்டும் பொய்யே பேசும் பொது மகளிர்களுடைய மை தீட்டிய கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப் பருகியும், அவர்களுடைய காலைப் பிடித்துத் தடவியும், புணர்ச்சி இன்பத்தை அனுபவித்தும், இவ்வாறு வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்னும் பறவைகளின் பல ஒலிகளை எழுப்பி, பின்னர் கொப்பூழ் என்னும் மடுவில் விழுந்தும் கிடந்தும், நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் ஆகி, உருகிக் களித்து அதர பானம் செய்தும், தின்றும், மென்று உண்டும், கையடியிலுள்ள நகங்களால் குறி இட்டும், குங்குமம் உள்ள இரண்டு மார்பகங்களும் அசைய அன்புடன் தழுவி, அழகு விளங்கும் கூந்தல் அவிழ்ந்து அலைச்சல் உற, படுக்கையில் மின்னல் என்று சொல்லத் தக்க இடை விளக்கம் தர, நல்லறிவை அழிக்கும் அந்த இன்பத்தை மறந்து உன்னை நினைக்க மாட்டேனோ? தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன் சென்று, மொகுமொகு என்று ஒலிக்கும் கடலையும் கடந்து சென்று, பொருந்திய வேகத்துடன் இலங்கையில் புகுந்து, தவப் பெரியோர்கள் மகிழ்ச்சி மிகக் கொள்ள, சூரியன், சந்திரன் முதலான தேவர்களும் இவ்வுலகோரும் பூமியில் ஜெய ஜெய என்று மகிழ்ந்து ஒலி செய்ய, செலுத்திய கொடிய அம்பால் வீரமுள்ள அசுரனாகிய ராவணனின் தலையை அறுத்துத் தள்ளிய ராமனாகிய திருமாலின் மருகனே, சமணர்களின் கூட்டங்கள் கலங்கி நிற்க, மதுரை நகரில் திருநீறு பரவ, ஹர, ஹர சங்கரா என்று போற்றப்பெற வெற்றி அடைந்து அருளிய புகழ் கொண்ட (திருஞான சம்பந்தராக வந்த) வேலனே, (காமாட்சியாக வந்து முப்பத்திரண்டு) அறங்களைக் கச்சியில் வளர்த்த அழகியாகிய பார்வதியின் மகனே, குளிர்ந்த சோலைகளும் வயல்களும் பொருந்திய, அழகிய வளப்பமுள்ள நீர்க்கரைகளும் உள்ள, வள்ளி மலையில்* வந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
பாடல் 541 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - ...; தாளம் -
தனத்த தத்தம் தத்தன தானன
     தனத்த தத்தம் தத்தன தானன
          தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான
அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
     தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
          அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே 
அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
     நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
          அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய் 
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
     மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
          லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே 
எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
     மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
          திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய் 
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
     படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
          புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா 
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
     சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
          புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே 
திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
     மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
          தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா 
செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
     யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
          திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே.
இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில் சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல், பின்பு பயனில்லாத (கேடு தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும் பொய் என்னும் கடலில் முழுகி, துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள் போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி, குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு, அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு முன்னதாக, உன்னுடைய மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும் எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும் சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின மகனே. பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும், (மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய, திருமாலின் மருகனே, விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளியைத் தழுவும் குணவானே, பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன் தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு நிறைந்த திருக்கழுக் குன்றத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு கதலிவனம் என்றும் பெயர். இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
பாடல் 542 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - ஆதி-தேசாதி - 8
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான
எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
     யிலகுமரன் மூவர் ...... முதலானோர் 
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி
     யெழுமமிர்த நாறு ...... கனிவாயா 
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
     புநிதனென ஏடு ...... தமிழாலே 
புனலிலெதி ரேற சமணர்கழு வேற
     பொருதகவி வீர ...... குருநாதா 
மழுவுழைக பால டமரகத்ரி சூல
     மணிகரவி நோத ...... ரருள்பாலா 
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
     வளமைபெற வேசெய் ...... முருகோனே 
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு
     கதிருலவு வாசல் ...... நிறைவானோர் 
கடலொலிய தான மறைதமிழ்க ளோது
     கதலிவன மேவு ...... பெருமாளே.
ஏழு உலகங்களையும் தன் வயிற்றிலே அடக்கிய திருமால், பிரமன், ஜோதிமயமான ருத்திரன், ஆகிய மூவருக்கும் மற்ற தேவர்களுக்கும் தலைவியான ஆதி பராசக்தியின் திருமார்பிலிருந்து சுரந்த அமிர்தமாம் ஞானப்பால் மணக்கும் கனி போன்ற வாயை உடையவனே, புனுகு வாசனை வீசும் சீர்காழிப் பகுதியில் கவுணியர் குடியில் ஞானசம்பந்தனாக அவதரித்து தமிழ்ப்பாசுர மகிமையாலே ஏடு வைகை ஆற்றின் நீரில் எதிர் ஏற்றத்தில் செல்லவும், சமணர்கள் கழுவில் ஏறவும், தமிழினால் வாதப் போர் புரிந்த கவிவீரன் ஞானசம்பந்தனே, குருநாதனே, கோடரியையும், மானையும், பிரம கபாலத்தையும், உடுக்கையையும், திரிசூலத்தையும் ஏந்திய கரங்கள் கொண்ட அற்புதமூர்த்தி சிவபிரான் அருளிய திருக்குமாரனே, தாமரை மலரில் உள்ள பிரமனை பெருஞ்சிறையில் அடைத்து, அவனது படைப்புத் தொழிலைச் செம்மையாகச் செய்தருளிய முருகக் கடவுளே, கழுகுகள்* தொழுகின்ற வேதமலையின் உச்சியில் விளங்கும், ஒளிவீசும் வாசலில் நிறைந்த தேவர்கள் கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும் ஓதுகின்ற, கதலிவனம்** (என்ற திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே. 
* எல்லா யுகங்களிலும் கீழ்க்கண்ட இரண்டு கழுகுகள் இந்த வேதமலையை பூஜித்தன:கிருத யுகம் - சண்டன், பிரசண்டன்,திரேதா யுகம் - ஜம்பாதி, ஜடாயு,துவாபர யுகம் - சம்புகுத்தன், மாகுத்தன்,கலி யுகம் - சம்பு, ஆதி.
** திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு 'கதலிவனம்' என்றும் பெயர்.இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
பாடல் 543 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - ...; தாளம் -
தான தத்த தனந்த தனா தனாதன
     தான தத்த தனந்த தனா தனாதன
          தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான
ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென
     வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
          வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை 
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
     வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
          ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன் 
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
     வேகு திக்க வுடம்பு வி¡£ர் வி¡£ரென
          ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர் 
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
     சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
          ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ 
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
     மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென
          வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன் 
மார்பு மொக்க நெரிந்து கா£ல் கா£லென
     பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென
          வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரமாறாய் 
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
     மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
          மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற 
வேலெ டுத்து நடந்த திவா கராசல
     வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
          வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே.
ஒலிக்கின்ற வண்டு தனா தனா என்று ஒலியுடன், தலையில் உள்ள மலரை நாடி விழும் சப்தம் பளீர் பளீர் என்று கேட்க, ஓசைகளைச் செய்யும் கால்களில் அணிந்த சிலம்பு கலீர் கலீர் என்று சப்திக்க, காம விளையாட்டின் போது, ஒப்பற்ற கழுத்தில் உண்டாகின்ற புட் குரல்கள் குகூ குகூ என்று ஒலிக்க, வியர்வை மிக்க உண்டாகி சலா சலா என்று கசகசக்க, மயிர்க் கூச்சல் மிகுந்து சிலீர் சிலீர் எனச் சிலிர்த்துப் புளகம் கொள்ள, மன்மதன் தனது இருப்பிடத்திலிருந்து குபீர் குபீர் என்று வெளிவந்து பாய, உடல் காம வேட்கையால் விருவிருப்பை அடைய, முத்து மாலை அணிந்தவராய் அளவில்லாமல் கொடுங்கள் என்று கேட்டுச் சேர்கின்ற விலைமாதர்களின் ஆசையில் நன்கு கலந்து உறவாடி, அடிக்கடி பிறவிப் பெருங் கடலில் மூழ்கி எழாமல், மனது மூலப் பொருளாகிய (சரவணபவ என்ற) ஆறு எழுத்துக்களை நினைத்து குகா குகா என்று கூறும்படியான பேறு எனக்கு வராதோ? மாலைகள் அணிந்த தலைகள் (ரத்தம் பெருகுவதால்) செக்கச் சிவக்க, வேல் போன்ற கூரிய பற்கள் வெள்ளை வெளேர் என்று ஒளி தர, வெற்றிமாலைகள் முன்பு சூடிய தோள்கள் கன்னங் கறேல் என்று கரிய நிறமாக எதிர்த்து வந்த சூரன் மார்பு ஒருமிக்க நொடிந்து கரிந்து போக, பேய்கள் குதித்து மகிழும்படி மாமிசங்கள் கும்பல் கும்பலாகக் கிடக்க, அசுரர்கள் வாய் அடைத்துப்போய்க் கீழே விழுந்து ஐயோ ஐயோ என்று கதறி அழ, ரத்தம் ஆறாகப் பெருக, கடல் வற்றிப்போய் வறண்டு சுறீல் என்று சுருங்க, மாயை மயக்கங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை இடிந்து திடீல் திடீல் என்று கீழே விழ, மேலான தேவர்கள் முதலியோர் ஐயா ஐயா என்று பாட்டுக்களைப் பாட, வேலாயுதத்தை ஏந்தி நடந்த ஞான சூரியனே, வள்ளிமலைக் குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த மலை போன்ற புயங்களை உடையவனே, தமிழ் முழங்கும் வேதகிரியில் (திருக்கழுக்குன்றத்தில்*) வீற்றிருக்கும் அருளாளனே, சிவக் குமாரனாகிய தலைவனே. 
* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு கதலிவனம் என்றும் பெயர். இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
பாடல் 544 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
     தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய 
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய
     ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே 
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா
     காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை 
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண
     ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.
வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும், வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகு உடையவனே, வேடுவச்சி வள்ளியின் பாதத் தாமரையின் மீது வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து, ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த பன்னிரு தோள்களை உடைய நண்பனே, ஆர்வத்துடன் நான் உன்னை அன்பு வழிபாடு செய்ய உரிய புத்தியை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக. வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி நாணம் அடையும்படி தமது கி¡£டத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,* பக்தியுள்ள தேவர்களுக்கு கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும், சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும், ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே. 
* திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
** தக்ஷ யாகத்தை அழிக்க சிவனும் உமையும் வீரபத்திரராகவும் காளியாகவும் வந்தனர்.காளி நாணும்படி சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியது இங்கு குறிப்பிடப்படுகிறது.
பாடல் 545 - பேறைநகர் 
ராகம் - ...; தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான
நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த
     காரமிக வேநி றைந்த ...... குழலாலும் 
நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர
     னேர்தருமு கார விந்த ...... மதனாலும் 
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்
     ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும் 
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த
     னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ 
கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து
     கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன் 
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த
     கோபவரி நார சிங்கன் ...... மருகோனே 
பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்
     பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே 
பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற
     பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
நீல நிறமான மயில்கள் சேர்ந்து விளையாடும் மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பேரிருள் மிக்கு நிறைந்துள்ள கூந்தலாலும், நீடித்துள்ள மிக்க இன்பம் தருவதாகி இன்பமாய்ப் பேசத் தக்க, சந்திரனுக்கு ஒப்பான முகத் தாமரையாலும், ஆலிலைக்கு ஒப்பான வயிற்றாலும், பெண்களின் மோக வலையை வீசுகின்ற கெண்டை மீன் போன்ற கண்களாலும், கடைந்து எடுத்த குடம் போன்ற, கச்சு அணிந்த மார்பகங்களினாலும் கண்கள் மங்கி அறிவும் மயங்கியவனாகி, காம மயக்கத்தில் நானும் கலங்கித் திரிவேனோ? பன்றியின்* உருவோடு அவதரித்து, மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால், லக்ஷ்மியை மார்பில் வைத்தவன், கூடத்தில் இருந்த பெரிய செம் பொன்னாலாகிய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த, நரசிங்க மூர்த்தியின் மருகனே, தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரர்களை வென்ற, புகழ் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருக்கையை உடைய முருகனே, இளம் பெண் அன்னங்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் பேறை நகர்** என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதளத்தில் ஒளிந்து கொண்டான். திருமால் வராக அவதாரம் கொண்டு அவனை அழித்துப் பூமியை மேலே கொணர்ந்தார்.
** பேறைநகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுப்பேடு என்ற தலத்தின் அருகே உள்ளது.
பாடல் 546 - மயிலம் 
ராகம் - ...; தாளம் -
தனதந்த தானன தானா தானா
     தனதந்த தானன தானா தானா
          தனதந்த தானன தானா தானா ...... தனதான
கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
     விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
          குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் 
குயில்தங்கு மாமொழி யாலே நேரே
     யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்
          குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி 
உலைகொண்ட மாமெழு காயே மோகா
     யலையம்பு ராசியி னூடே மூழ்கா
          வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ 
உறுதண்ட பாசமொ டாரா வாரா
     எனையண்டி யேநம னார்தூ தானோர்
          உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே 
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
     எனநின்று வாய்விட வேநீள் மாசூ
          ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் 
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ
     ரனலங்கை வேல்விடும் வீரா தீரா
          அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி 
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்
     குறமங்கை யாளுட னேமா லாயே
          மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா 
மதிமிஞ்சு போதக வேலா ஆளா
     மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
          மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.
கொலைத் தொழிலைத் தன்னிடத்தே அடக்கி உள்ள, சண்டை செய்ய வல்ல கண்கள் அம்போ, வாளோ, விஷம் நிறைந்து பாவத் தொழிலைச் செய்யவல்ல வேலாயுதமோ, சேல் மீனோ, குண்டலத்தைத் தொடும் அளவு பாயக்கூடிய மீனோ அல்லது மானோ என்று சொல்லக் கூடிய மாதர்களின் குயிலின் குரல் போல் அமைந்த இனிய பேச்சுக்களாலே, கண் எதிரே தோன்றும் நூலின் இழை போன்ற மெல்லிய இடையாலே, மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த மார்பகம் ஆகும் மேரு மலையாலே, பல விதமாக மனம் கலங்கி, நெருப்பு உலையில் பட்ட நல்ல மெழுகு போல உருகி, காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள் முழுகி, உடல் பஞ்ச பாதகத்துக்கும்* ஈடாகி, பிணியால் அழிவேனோ? கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு இவைகளுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதுவர்கள் என் உயிரைக் கொண்டு போய் விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருளுக. அலை வீசும் கடல் கோகோ என்று வாய் விட்டு ஒலித்து ஓலமிட, பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லும் அம்புகளும் வேறுபட்டுத் தூளாகவே, சுயம் பிரகாசமான ஜோதியைத் தன்னிடம் கொண்ட, நேர்மை நிறைந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு உருவத்தில் திருக் கையில் உள்ள வேலைச் செலுத்திய வீரனே, தீரனே, அருமை வாய்ந்த அழகுள்ள உருவத்தவனே, ஒப்பற்ற ஒருவனே, வேற்று வடிவமான (வேட) உருவத்துடன் வள்ளிமலையில் வாழும் வேடர்கள் வசிக்கும் காட்டுக்குள் சென்று, குறப் பெண்ணாகிய வள்ளியின் மேல் ஆசை கொண்டு, மோக மயக்கத்துடன் உலாவி, அவளுடைய பாதங்களில் மீது வீழ்ந்து வணங்கிய குமரேசா. அறிவு நிறைந்த ஞான வேலனே, மாணவனாக உபதேசத்தைப் பெற்று மகிழ்ந்த சிவபிரான் வணங்கும் திருவடியை உடைய நாதனே, மயிலம்** என்னும் குளிர்ந்த மலையில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** மயிலம் அதே பெயருடைய ரயில் நிலையத்துக்கு 3 மைலில் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 547 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தந்த தாத்தன தத்தத் தானன
     தந்த தாத்தன தத்தத் தானன
          தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான
அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய
     கொங்கை காட்டிம றைத்துச் சீரிய
          அன்பு போற்பொய்ந டித்துக் காசள ...... வுறவாடி 
அம்பு தோற்றக ணிட்டுத் தோதக
     இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்
          அன்றில் போற்குர லிட்டுக் கூரிய ...... நகரேகை 
பங்க மாக்கிய லைத்துத் தாடனை
     கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர்
          பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத ...... லியல்பாகப் 
பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள்
     தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி
          பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே 
எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன
     அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்
          இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் ...... முடிவேறாய் 
இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக
     மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத
          மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல ...... வயலூரா 
செங்கை வேற்கொடு துட்டச் சூரனை
     வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்
          தின்று கூத்துந டிக்கத் தோகையில் ...... வரும்வீரா 
செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர
     மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு
          தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் ...... பெருமாளே.
அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த மார்பகத்தைக் காட்டியும் மறைத்தும், சிறந்த அன்புள்ளவர்கள் போல் பொய் வேடத்துடன் நடித்தும், கொடுத்த பொருளுக்குத் தக்கவாறு உறவு காட்டியும், அம்பும் தோற்கும்படியான (கூர்மையான) கண்களால் மயக்கியும், வஞ்சகம் நிறைந்த காம இன்ப சாத்திரங்களை எடுத்துப் பேசியும், குயில் அன்றில் பறவை இவைகளைப் போல புட்குரலைக் காட்டியும், கூர்மையான நகம் கொண்டு காயப்படுத்தி அலைத்தும், காம சாத்திர முறையில் தட்டுதல் செய்தும் காம ஆசையை எழுப்பி, நாடி வருகின்ற காமுகரைத் தமது வசப்படும்படி செய்து, தம்முடன் கூடுதலையே ஒழுக்கமாகும்படிச் செய்து, முதலிலிருந்தே இரவும் பகலும் சுற்றி அலைக்கும் சூதுக்கார வேசிகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து, பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக. எங்கும் நிறைந்தவனாய், குறை இல்லாதவனாய், அறிவே வடிவு உடையவனாய், பரிசுத்த அன்பர்கள் அடையும் இன்பப் பொருளாய், புகழ் கொண்டவனாய், முப்பத்தாறு தத்துவங்களின் * முடிவுக்கும் வேறானவனாய், இந்திரன் முதலிய கூட்டத்துத் தலைவர்கள் கலந்து ஒன்று கூடி சிறந்த (சரவணபவ) மந்திர ரூப பூஜை செய்து தாமதம் இல்லாமல் வாழ்த்திய தேவ லோகக் காவலனே, வயலூர்த் தெய்வமே, திருக்கையில் உள்ள வேலைக் கொண்டு துஷ்டனாகிய சூரனை வெற்றி கொண்டு, தோலாலாகிய பறைகள் கொட்ட, பேய்கள் அசுரப் பிணங்களை உண்டு கூத்தாடி நடிக்க, மயிலின் மேல் வரும் வீரனே, செம் பொன்னால் விளங்கும் அழகிய கோபுரத்தின் மீது மேகங்கள் இரவும் பகலும் நிரம்பச் சூழ்ந்துள்ள அழகிய திரிசிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* 36 பரதத்துவங்கள் (அகநிலை):ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.
பாடல் 548 - திருசிராப்பள்ளி 
ராகம் - கல்யாணி ; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தந்தாதன தானன தாத்தன
     தந்தாதன தானன தாத்தன
          தந்தாதன தானன தாத்தன ...... தனதான
அந்தோமன மேநம தாக்கையை
     நம்பாதெயி தாகித சூத்திர
          மம்போருக னாடிய பூட்டிது ...... இனிமேல்நாம் 
அஞ்சாதமை யாகிரி யாக்கையை
     பஞ்சாடிய வேலவ னார்க்கிய
          லங்காகுவம் வாஇனி தாக்கையை ...... ஒழியாமல் 
வந்தோமிது வேகதி யாட்சியு
     மிந்தாமயில் வாகனர் சீட்டிது
          வந்தாளுவம் நாமென வீக்கிய ...... சிவநீறும் 
வந்தேவெகு வாநமை யாட்கொளு
     வந்தார்மத மேதினி மேற்கொள
          மைந்தாகும ராவெனு மார்ப்புய ...... மறவாதே 
திந்தோதிமி தீதத மாத்துடி
     தந்தாதன னாதன தாத்தன
          செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ...... மறையோதச் 
செங்காடென வேவரு மூர்க்கரை
     சங்காரசி காமணி வேற்கொடு
          செண்டாடிம காமயில் மேற்கொளு ...... முருகோனே 
இந்தோடிதழ் நாகம காக்கடல்
     கங்காளமி னார்சடை சூட்டிய
          என்தாதைச தாசிவ கோத்திர ...... னருள்பாலா 
எண்கூடரு ளால்நெளவி நோக்கியை
     நன்பூமண மேவிசி ராப்பளி
          யென்பார்மன மேதினி நோக்கிய ...... பெருமாளே.
ஐயோ மனமே, நிலையா நம் உடலை நிலைத்திருக்குமென நம்பி மோசம் போகாதே. இன்பமும் (இத) துன்பமும் (அகித) நிறைந்த இயந்திரம் இந்த உடம்பு. இது தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்ட பூட்டு. சென்றது போக, இனிமேல் நாம் இந்த உடல் விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. கிரெளஞ்சமலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம், நீ அங்கு வா. இதுதான் இன்ப நெறியாகும். இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம். இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம். ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான். ஆகவே இதனைப் பெற்றுக்கொள். இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு. நாம் வந்து உன்னை விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் நமக்கு அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள். முருகப்பிரான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார். இதைத்தவிர வேறு எந்த மதம் உள்ளது நாம் மேற்கொள்ள? சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலியோடு, நீ உய்வதற்கு, துதிப்பதை மறவாதே. திந்தோதிமி தீதத என்று பெரிய உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் செம்மை பொருந்திய பூரிகை என்ற வாத்தியமும், பேரிகையும் ஆரவாரித்து ஒலி எழுப்பவும், வேதங்கள் கோஷமிடவும், எதிர்த்து வந்த அசுரர்களை (ரத்தக் களரியில்) சிவந்த காட்டைப் போலக் கொன்று தள்ளி சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், ஆமை ஓட்டினையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என் தந்தையும் சதாசிவ கோத்திரத்திற்குத் தலைவருமாகிய சிவபெருமான் பெற்றருளிய புதல்வனே. அளவிடற்கரிய திருவருளால் மான் போன்ற நோக்குடைய வள்ளியை, நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, திருசிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை மாத்திரம் கூறும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 
பாடல் 549 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -
தனதன தந்தன தாத்தன
     தனதன தந்தன தாத்தன
          தனதன தந்தன தாத்தன ...... தனதான
அரிவையர் நெஞ்சுரு காப்புணர்
     தருவிர கங்களி னாற்பெரி
          தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந் 
தகிலொடு சந்தன சேற்றினில்
     முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை
          யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப் 
பரிமளம் விஞ்சிய பூக்குழல்
     சரியம ருங்குடை போய்ச்சில
          பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப் 
பனிமுக முங்குறு வேர்ப்பெழ
     இதழமு துண்டிர வாய்ப்பகல்
          பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ 
சரியையு டன்க்ரியை போற்றிய
     பரமப தம்பெறு வார்க்கருள்
          தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே 
சயிலமெ றிந்தகை வேற்கொடு
     மயிலினில் வந்தெனை யாட்கொளல்
          சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா 
திரிபுவ னந்தொழு பார்த்திபன்
     மருவிய மண்டப கோட்டிகள்
          தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே 
தெரியஇ ருந்தப ராக்ரம
     உருவளர் குன்றுடை யார்க்கொரு
          திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே.
(விலை) மாதர்கள் மீது மனம் உருகி கலவி இச்சை தருகின்ற விரகதாபத்தால் மிகவும் தன்வசம் அழிதல் ஏற்பட்டு, காம தாகம் அதிகரித்து, நெருங்கிய மார்பகங்களின் மேல் விழுந்து, அகில், சந்தனம் இவற்றின் கலவைச் சேற்றில் முழுகியும் எழுந்தும், எதிரே கூப்பிய கையடியில் உள்ள நகம் பிறைபோல (உடலில்) படும்படி பதித்து விளையாடி, நறு மணம் மிக்க பூ நிறைந்த கூந்தல் சரிந்து விழ, இடையில் இருந்த சேலை விலக, சில பறவைகளின் ஒலிகள் எழ, கயல் மீன் போன்ற கண்கள் சோர்வு அடைய, குளிர்ந்திருந்த முகத்தில சிறு வியர்வை எழ, வாயிதழ் அமுதை உண்டு, பகலிலும் இரவிலும் கலவிக் கூத்தாடும்படி செய்த இந்தக் கொடியவனை கைவிடலாமோ? சரியை, கிரியை* ஆகிய மார்க்கங்களை கைப்பிடிக்கும் மேலான பதத்தைப் பெற விரும்புவோர்க்கு அருளைத் தருகின்ற கண்ணன் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட மேன்மையாளனாகிய (ரங்கநாதனாம்) திருமாலின் மருகனே, கிரெளஞ்ச மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே**, மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த வீரனே, அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் 'அதல சேடனார் ஆட' என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.
பாடல் 550 - திருசிராப்பள்ளி 
ராகம் -...; தாளம் -
தனதன தானான தானன தனதன தானான தானன
     தனதன தானான தானன ...... தந்ததான
அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும்
     அசடிகள் மாலான காமுகர் ...... பொன்கொடாநாள் 
அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள்
     அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞ்சுதோயும் 
விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும்
     விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத 
விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள்
     வினைசெய லாலேயெ னாவியு ...... யங்கலாமோ 
வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய
     வயலியில் வேலாயு தாவரை ...... யெங்குமானாய் 
மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோரெ ணாயிரர்
     மறிகழு மீதேற நீறுப ...... ரந்துலாவச் 
செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி
     சிவசிவ மாதேவ காவென ...... வந்துபாடும் 
திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர்
     சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
மேலும் மேலும் அழுது ஒழுக்கம் வாய்ந்த நட்பு உள்ளவர்கள் போல் பொய் வழியிலேயே சூழ்ச்சி செய்யும் மூடப் பெண்கள், தம் மீது ஆசைப்படும் காமாந்தகர்கள் தமக்குப் பொருள் கொடுக்காத நாளில் அவர்களோடு வாய் பேசாதிருத்தலும் கோபித்தலும் நீங்காத குற்றம் உடையவர்கள், எல்லை இல்லாத பொருள் ஆசை கொண்ட பொது மகளிர், விஷம் தோய்ந்துள்ள கண்களால் மாட வீதிகளில் தம் மார்பகங்களை ஆராயாமல் எவர்க்கும் விலைக்கு விற்கும் மகாமாய உருவினர், நற் குணம் இல்லாத காமிகள், பேய் பிசாசு என்று சொல்லும்படி கூச்சலிட்டுக் கூத்தடிப்பவர், விகாரத்தினர், (இத்தகையோரின்) சூழ்ச்சிச் செயல்களால் என் உயிர் வருந்தலாமோ? நன்வழியில் வாழ்வதற்கான ஞானோபதேசம் செய்யவல்ல பரம சுவாமியே, தேவர்கள் பெற்ற வரத்தால் தோன்றியவனே, வயலூரில் அமர்ந்த வேலாயுதனே, மலைத்தலம் எங்கும் மகிழ்வுடன் வீற்றிருப்பவனே, மதுரையாகிய திருவாலவாய்த் தலத்திலே எதிர்த்து வந்த சமணர் சுமார் எண்ணாயிரம் பேர் அழிபட்டு கழுவின் மீது ஏற, திருநீறு பரந்து விளங்க, பாண்டிய அரசனும் அடிமைப்பட, வாது செய்து கவி மதத்தைப் பொழிந்த சீகாழிப் பெரிய முனிவரும், சிவசிவ மகாதேவா, காத்தருள் என்று (சிவபெருமானிடம்) சென்று பாடின பெருஞ் செல்வம் பெற்றவருமான ஞானசம்பந்தரே, தீது இல்லாதவரும், உமையை ஒரு பாகத்தில் வைத்த திருமேனியரும் ஆன சிவபெருமானது திரிசிர மலையில் வாழ்வு கொண்டிருப்பவனே, தேவர்களின் தம்பிரானே. 

பாடல் 501 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தாந்தன தானதன தாந்தன தானதன     தாந்தன தானதன ...... தனதான

சாந்துட னேபுழுகு தோய்ந்தழ கார்குழலை     மோந்துப யோதரம ...... தணையாகச் 
சாய்ந்துப்ர தாபமுடன் வாழ்ந்தநு ராகசுக     காந்தமொ டூசியென ...... மடவார்பால் 
கூர்ந்தக்ரு பாமனது போந்துன தாள்குறுகி     ஓர்ந்துண ராவுணர்வி ...... லடிநாயேன் 
கூம்பவிழ் கோகநக பூம்பத கோதிலிணை     பூண்டுற வாடுதின ...... முளதோதான் 
பாந்தளின் மீதினிதி னோங்குக ணேதுயில்கொள்     நீண்டிடு மாலொடய ...... னறியாது 
பாம்புரு வானமுநி வாம்புலி யானபதன்     ஏய்ந்தெதிர் காணநட ...... மிடுபாதர் 
பூந்துணர் பாதிமதி வேய்ந்தச டாமகுட     மாங்கன காபுரியி ...... லமர்வாழ்வே 
பூங்கமு கார்வுசெறி யூங்கந காபுரிசை     சூழ்ம்புலி யூரிலுறை ...... பெருமாளே.

சாந்தும், புனுகும் (மார்பில்) தோய்ந்தும், அழகு நிறைந்த கூந்தலை முகர்ந்து பார்த்தும், மார்பகத்தையே தலையணையாகக் கொண்டு அதன் மேல் சாய்ந்தும், ஆடம்பரத்துடன் வாழ்ந்தும், காம இச்சை இன்பத்தில், காந்தமும் ஊசியும் போல இழுக்கப்பட்டு, விலைமாதர்களிடத்தில் மிக்கெழுந்த அன்பு மனத்தைத் தொலைத்து, உன்னுடைய திருவடியை அணுகி, ஆய்ந்தறிந்து உணர்கின்றோம் என்ற உணர்ச்சி இல்லாத மெளன நிலையில் அடி நாயேனாகிய நான், குவிந்து அவிழ்ந்த தாமரை போன்ற அழகிய பதங்களாகிய, குற்றம் இல்லாத இரண்டு திருவடிகளையும் மனதில் கொண்டு அன்பு பூணும் நாள் ஒன்று உள்ளதோ? பாம்பாகிய ஆதிசேஷன் மேல் இன்பமாக விளங்கி கண் துயில் கொள்ளும் நீண்ட வடிவம் கொண்ட திருமாலும், பிரமனும் (அடி முடியை) காண முடியாது நின்று, பாம்பு வடிவத்தைக் கொண்ட (பதஞ்சலி) முனிவரும், தாவிச் செல்லும் புலியின் பாதங்களைக் கொண்ட வியாக்ரபாத முனிவரும் பொருந்தி நின்று, எதிரே தரிசிக்கும்படி நடனம் செய்கின்ற கூத்தப் பெருமானுடைய அழகிய பூங்கொத்துக்களையும், பிறைச் சந்திரனையும் சூடியுள்ள ஜடாமகுடமாகிய பொன் வண்ணப் புரிசடையில் விரும்பி விளையாடும் குழந்தையே, அழகிய கமுகு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளதும், நெருங்கியுள்ள பொன்னிற மதில்கள் சூழ்ந்ததுமான புலியூர் எனப்படும் சிதம்பரத்தில் வாழ்கின்ற பெருமாளே. 

பாடல் 502 - சிதம்பரம் 
ராகம் - கெளளை; தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதனன தனதான தனதனன தனதான     தனதனன தனதான ...... தனதான

சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான     சொருபகிரி யிடமேவு ...... முகமாறும் 
சுரர்தெரிய லளிபாட மழலைகதி நறைபாய     துகிரிதழின் மொழிவேத ...... மணம்வீச 
அடர்பவள வொளிபாய அரியபரி புரமாட     அயில்கரமொ டெழில்தோகை ...... மயிலேறி 
அடியனிரு வினைநீறு படஅமர ரிதுபூரை     அதிசயமெ னருள்பாட ...... வரவேணும் 
விடைபரவி அயன்மாலொ டமரர்முநி கணமோட     மிடறடைய விடம்வாரி ...... யருள்நாதன் 
மினலனைய இடைமாது இடமருவு குருநாதன்     மிகமகிழ அநுபூதி ...... யருள்வோனே 
இடர்கலிகள் பிணியோட எனையுமருள் குறமாதி     னிணையிளநிர் முலைமார்பி ...... னணைமார்பா 
இனியமுது புலிபாத னுடனரவு சதகோடி     யிருடியர்கள் புகழ்ஞான ...... பெருமாளே.

கதிர் போன்ற திருமேனியின் வடிவழகும், முற்றின ஞான ஸ்வரூபமும், கி¡£டம் சூடிய முகங்கள் ஆறும், தேவர்கள் சூட்டிய மாலைகளில் இருக்கும் வண்டுகள் முரல, அம்மாலைகளிலிருந்து மெதுவான வேகத்தில் துளித்துளியாக தேன் சொட்ட, பவள வாய் இதழிலிருந்து சொல்லப்படும் வேத மொழிகளின் நறுமணம் வீச, அடர்ந்த பவளம் போன்ற ஒளி பாய, அருமையான சிலம்பு ஒலிக்க, வேல் ஏந்திய திருக்கரத்துடன் அழகிய கலாப மயில்மீது ஏறி, அடியேனுடைய நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் பொடிபட்டு அழிய, தேவர்கள் யாவரும் ஒன்றுக்கும் உதவாத எனக்கு நீஅருள் செய்வது எவ்வளவு ஆச்சரியம் என்று உன்னருளைப் போற்றிப் பாடும்படியாக, நீ எழுந்தருளி வரவேண்டும். நந்தி தேவனைப் போற்றி வணங்கி, (அவர் அனுமதியுடன்) பிரமன், திருமால், மற்ற தேவர்கள், முநிவர் கூட்டங்களுடன் ஓடிவந்து சரணடைய, தமது கண்டத்திலேயே தங்கி நிற்கும்படியாக விஷத்தை வாரி உண்டு சரணடைந்தவர்களுக்கு அருள் செய்த தலைவனும், மின்னலை ஒத்த இடையை உடைய பார்வதி தேவியை தமது இடப்பாகத்தில் பொருந்தி வைத்துள்ள தக்ஷிணாமூர்த்தியாகிய சிவபிரான் மிகவும் மகிழ்ச்சி அடைய அவருக்கு ஞானோபதேசப் பிரசாதம் தந்தவனே, துன்பங்களும், கிரகக் கோளாறுகளும், நோய்களும் விலக, என்னையும் ஒரு பொருளாகக் கருதி அருள்வாயாக. குறப்பெண் வள்ளியின் இளநீர் போன்ற மார்பில் அணையும் மார்பனே, இன்ப நிலையில் உள்ள முதிய முநி* வியாக்ரபாதருடன், பாம்பின் உருவில் உள்ள பதஞ்சலி முநிவரும், நூறு கோடி ரிஷிகளும் புகழ்கின்ற ஞான மூர்த்தியாம் பெருமாளே. 
* சிதம்பரத்தில் முதலில் தவத்தில் இருந்த வியாக்ரபாதரை 'முதிய முநி' எனக் குறிப்பிட்டார் - தில்லைப் புராணம்.

பாடல் 503 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தத்ததன தானதன தானதன தானதன     தத்ததன தானதன தானதன தானதன          தத்ததன தானதன தானதன தானதன ...... தனதான

தத்தைமயில் போலுமியல் பேசிபல மோகநகை     யிட்டுமுட னாணிமுலை மீதுதுகில் மூடியவர்          சற்றவிடம் வீடுமினி வாருமென வோடிமடி ...... பிடிபோல 
தைச்சரச மோடுறவெ யாடியக மேகொடுபொ     யெத்தியணை மீதிலிது காலமெனிர் போவதென          தட்டுபுழு கோடுபனி நீர்பலச வாதையவ ...... ருடல்பூசி 
வைத்துமுக மோடிரச வாயிதழி னூறல்பெரு     கக்குழல ளாவசுழல் வாள்விழிக ளேபதற          வட்டமுலை மார்புதைய வேர்வைதர தோளிறுகி ...... யுடைசோர 
மச்சவிழி பூசலிட வாய்புலியு லாசமுட     னொப்பியிரு வோருமயல் மூழ்கியபின் ஆபரணம்          வைத்தடகு தேடுபொருள் சூறைகொளு வார்கலவி ...... செயலாமோ 
சத்திசர சோதிதிரு மாதுவெகு ரூபிசுக     நித்தியகல் யாணியெனை யீணமலை மாதுசிவை          தற்பரனொ டாடுமபி ராமிசிவ காமியுமை ...... யருள்பாலா 
சக்ரகிரி மூரிமக மேருகடல் தூளிபட     ரத்நமயி லேறிவிளை யாடியசு ராரைவிழ          சத்தியினை யேவிஅம ரோர்கள்சிறை மீளநட ...... மிடுவோனே 
துத்திதன பாரவெகு மோகசுக வாரிமிகு     சித்ரமுக ரூபியென தாயிவளி நாயகியை          சுத்தஅணை யூடுவட மாமுலைவி டாதகர ...... மணிமார்பா 
சுத்தவம காதவசி காமணியெ னோதுமவர்     சித்தமதி லேகுடிய தாவுறையும் ஆறுமுக          சுப்ரமணி யாபுலியுர் மேவியுறை தேவர்புகழ் ...... பெருமாளே.

கிளி போல் (இனிமையாகப்) பேசி மயில் போல நடித்தும், பலவிதமான காமத்தை எழுப்ப வல்ல சிரிப்பைச் சிரித்தும், அப்போதே வெட்கப்படுவது போல நாணத்தைக் காட்டியும், மார்பகங்களை ஆடையால் மூடியும் நின்ற அந்தப் பொது மகளிர் எங்கள் வீடு கொஞ்ச தூரத்தில் தான் இருக்கின்றது, இனி நீங்கள் வர வேண்டும் என்று ஓடி, மடியைப் பிடித்து இழுத்துச் செல்வது போல அழைத்து, தைக்கும்படியான காம இன்ப லீலைகளைச் செய்து உறவு முறையில் விளையாடி, வீட்டுக்குக் கொண்டு போய் வஞ்சனை எண்ணத்துடன் படுக்கையின் மேல் இருத்தி, இது தக்க சமயம் அன்றோ? ஏன் நீர் போகின்றீர்? என்று கூறி, தட்டில் புனுகு சட்டத்துடன், பன்னீர் முதலிய பலவிதமான வாசனைத் திரவியங்களை வந்தவருடைய உடலில் பூசி, முகத்தோடு முகம் வைத்து, இன்ப ரசமான வாயிதழ் ஊறல் பெருக, கூந்தல் கலைய, ஒளி வீசும் கண்கள் சுழன்று துடிக்க, வட்டமான தனங்கள் மார்பில் புதைந்து திகழ, வேர்வை உண்டாக, தோளை இறுக அணைத்து, உடை நெகிழ, மீன் போன்ற விழிகள் காமப் போரை விளைவிக்க, கட்டித் தழுவி ஆனந்தமாக மனம் ஒப்பி, இருவரும் காம மயக்கில் முழுகிய பின்னர், வந்தவர் நகைகளை அடமானம் வைத்து, தேடிய பொருளை எல்லாம் சூறைக் காற்று அடித்துக் கொண்டு போகின்ற விலைமகளிருடன் கலவி இன்பம் பெறும் தொழில் நல்லதாகுமா? சக்தி, தனித்து விளங்கும் ஜோதி, அழகிய பார்வதி, பலவித உருவத்தை உடையவள், சுக நிலையிலேயே இருக்கின்ற நித்திய கல்யாணி, என்னைப் பெற்ற தாயாகிய, இமவான் மடந்தை, சிவை, பரமசிவனுடன் நடனம் இடும் அபிராமி, சிவகாமி ஆகிய உமாதேவி அருளிய பாலனே, சக்ரவாள கிரியும், வலிமை வாய்ந்த பெரிய மேரு மலையும், கடலும் புழுதிபடுமாறு ரத்தின மயமான மயிலின் மீது ஏறி விளையாடி அசுரர்கள் அழியுமாறு சக்தி வேலைச் செலுத்தி தேவர்களைச் சிறையினின்று மீட்டு நடனம் செய்பவனே, தேமல் பரந்த தன பாரங்கள் உள்ளவளும், மோகம் தர வல்லவளும், சுகக் கடல் போன்றவளும், மிக்க அழகிய முக வடிவத்தைக் கொண்டவளும், எனது தாய் ஆனவளும் ஆகிய வள்ளி அம்மையை பரிசுத்தமான படுக்கையில், மாலை அணிந்த பெரிய மார்பகங்களை விட்டுப் பிரியாத* அழகிய கரத்துடன் விளங்கும் மணிமார்பனே, பரிசுத்தமான, அழகிய, சிறந்த தவ சிகாமணியே என்று ஓதுகின்ற அடியவர்களின் உள்ளத்தில் குடியாக உறைகின்ற ஆறுமுகனே, சுப்ரமணியனே, புலியூரில் பொருந்தி வீற்றிருப்பவனே, தேவர்கள் போற்றும் பெருமாளே. 
* உண்மை அடியார்களின் பக்குவ நிலையை எப்போதும் விரும்பி அணைந்து காக்கும் கரம் என்பது பொருள்.

பாடல் 504 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தத்த தத்தன தான தானன     தத்த தத்தன தான தானன          தத்த தத்தன தான தானன ...... தனதான

துத்தி பொற்றன மேரு வாமென     வொத்தி பத்திரள் வாகு வாயவிர்          துப்பு முத்தொடு மார்பி னாடிட ...... மயில்போலே 
சுக்கை மைக்குழ லாட நூலிடை     பட்டு விட்டவிர் காம னாரல்குல்          சுற்று வித்துறு வாழை சேர்தொடை ...... விலைமாதர் 
தத்தை பட்குர லோசை நூபுர     மொத்த நட்டமொ டாடி மார்முலை          சற்ற சைத்துகு லாவும் வேசிய ...... ரவரோடே 
தர்க்க மிட்டுற வாடி யீளைநொய்     கக்கல் விக்கல்கொ ளூளை நாயென          சிச்சி சிச்சியெ னால்வர் கூறிட ...... வுழல்வேனோ 
தித்தி மித்திமி தீத தோதக     தத்த னத்தன தான தீதிமி          திக்கு முக்கிட மூரி பேரிகை ...... தவில்போடச் 
சித்ர வித்தைய ராட வானவர்     பொற்பு விட்டிடு சேசெ சேயென          செக்கு விட்டசு ரோர்கள் தூள்பட ...... விடும்வேலா 
செத்தி டச்சம னார்க டாபட     அற்று தைத்தசு வாமி யாரிட          சித்தி ரச்சிவ காமி யாரருள் ...... முருகோனே 
தெற்க ரக்கர்கள் தீவு நீறிட     விட்ட அச்சுத ¡£ன மானொடு          சித்தி ரப்புலி யூரில் மேவிய ...... பெருமாளே.

தேமல் படர்ந்த அழகிய மார்பகங்கள் மேரு மலைக்கு ஒத்ததாகி, யானைக் கூட்டங்களின் வெற்றி கொண்டதாகி விளங்கும் பவள (மாலை) முத்து (மாலை) இவைகளோடு மார்பிலே ஆட, மயிலைப் போல் விளங்கி, பூ மாலை அணிந்த கரிய கூந்தல் அசைய, நூலைப் போன்ற நுண்ணிய இடையில் பட்டாடை அணிந்து ஒளி விட, காமனுக்கு இடமாகிய பெண்குறியைச் சுற்றி அமைய உடுத்து, விளங்கும் வாழை போன்ற தொடைகளை உடைய பொது மகளிர், கிளியாகிய பறவையின் குரலோசைக்குப் பொருந்த சிலம்புகள் ஒத்து ஒலிக்க நடனம் ஆடி, மார்பகங்களை கொஞ்சம் அசைத்து குலவிப் பேசும் பொது மகளிருடன், தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? தித்தி மித்திமி தீத தோதக தத்த னத்தன தான தீதிமி இவ்வாறான ஒலிகள் எல்லா திசைகளிலும் முக்கித் திணற, வலியுள்ள பேரிகை, தவில் ஆகியவை ஒலி எழுப்ப, அழகிய வித்தைகள் வல்லோர் (மனம் மகிழ்ச்சி கொண்டு) ஆட, தேவர்கள் அழகிய பொன்னாலாகிய மலர்களைச் சொரிந்து ஜய ஜய ஜய என்று கோஷமிட, செக்கில் போட்டு அசுரர்கள் பொடியாகும்படி செலுத்திய வேலாயுதனே, அந்த யமன் இறக்கவும், (அவனுடைய) எருமைக் கடா வீழ்ந்து அழியவும், அன்று காலால் உதைத்த சுவாமியாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் உறையும் அழகிய சிவகாமி அம்மையார் ஈன்ற குழந்தையே, தெற்கே உள்ள ராவணன் முதலிய அரக்கர்கள் இருந்த இலங்கைத் தீவு பொடியாகிப் பாழ்படச் செய்த திருமால் பெற்ற மகளாகிய மான் போன்ற வள்ளியோடு அழகிய புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 505 - சிதம்பரம் 
ராகம் - ஷண்முகப்ரியா; தாளம் - ஸங்கீர்ண சாபு - 4 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தக-1

தானா தனத்ததன தானா தனத்ததன     தானா தனத்ததன ...... தனதான

நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி     நாயே னரற்றுமொழி ...... வினையாயின் 
நாதா திருச்சபையி னேறாது சித்தமென     நாலா வகைக்குமுன ...... தருள்பேசி 
வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி     வாய்பாறி நிற்குமெனை ...... அருள்கூர 
வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது     வாரே னெனக்கெதிர் முன் ...... வரவேணும் 
சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி     தோலா சனத்தியுமை ...... யருள்பாலா 
தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த     தோழா கடப்பமல ...... ரணிவோனே 
ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு     மேராள் குறத்திதிரு ...... மணவாளா 
ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை     ஈடேற வைத்தபுகழ் ...... பெருமாளே.

நாடித் தேடி ஆராய்ந்து பார்த்து, இந்தப் பிறவித் தொழிலுக்கு முடிவே கிடையாதோ என்று எண்ணி, அடியேன் ஓலமிட்டு அலறும் இந்த மொழி, என் முற்பிறவி வினையின் காரணத்தால், நாதனே, உன் திருச் சந்நிதியிலோ உன் மனத்திலோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை யான் உணர்ந்து, பலவிதமாக உன்னுடைய திருவருளின் பெருமையே பேசி, என்றும் வாடாத உனது திருவடி மலர் என்னும் முக்தியைக் கொடுத்தருள் கொடுத்தருள் என்று குழறி, வாய் கிழிபட்டு நிற்கும் எனக்கு உன் கிருபை கூடும்படி வந்தருள்வாயாக, என் மனத்துயரங்களெல்லாம் தீர்ப்பாயாக, உன்னைத் தொழுது வருதல் என்பதே இல்லாத எனக்கும் நேர் எதிரிலே முன்பு எழுந்தருளி வர வேண்டுகிறேன். தெய்வமணியின் ஒளி விளங்கும் உருவத்தாளும், பெருமை வாய்ந்த சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளும் ஆகிய உமாதேவி பார்வதி அருளிய குழந்தையே, பரிசுத்த மூர்த்தியே, துதித்து வணங்குபவர்களின் நேயனே, அடியேனுக்கு அமிர்தம் போல் வாய்த்த அருமைத் தோழனே, கடப்ப மலரினை அணிபவனே, மலர் நிறைந்த கூந்தலை உடைய வடிவழகியும், ஞானம் என்ற ஆசனத்தை (பீடத்தை) உடையவளும், மிக்க கம்பீரமானவளும் ஆன குறமகள் வள்ளியின் அழகிய கணவனே, ஈசனே, ஒப்பற்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வாழ்கின்ற செல்வமே, தேவர் கூட்டத்தை வாழ்விக்கச் செய்த புகழ் கொண்ட பெருமாளே. 

பாடல் 506 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தானதன தத்த தந்தன தானதன தத்த தந்தன     தானதன தத்த தந்தன ...... தந்ததான

நாலுசது ரத்த பஞ்சறை மூலகம லத்தி லங்கியை     நாடியின டத்தி மந்திர ...... பந்தியாலே 
நாரண புரத்தி லிந்துவி னூடுற இணக்கி நன்சுடர்     நாறிசை நடத்தி மண்டல ...... சந்தியாறிற் 
கோலமு முதிப்ப கண்டுள நாலினை மறித்தி தம்பெறு     கோவென முழக்கு சங்கொலி ...... விந்துநாதங் 
கூடிய முகப்பி லிந்திர வானவமு தத்தை யுண்டொரு     கோடிநட னப்ப தஞ்சபை ...... யென்றுசேர்வேன் 
ஆலமல ருற்ற சம்பவி வேரிலி குலக்கொ ழுந்திலி     ஆரணர் தலைக்க லங்கொளி ...... செம்பொன்வாசி 
ஆணவ மயக்க முங்கலி காமிய மகற்றி யென்றனை     ஆளுமை பரத்தி சுந்தரி ...... தந்தசேயே 
வேலதை யெடுத்து மிந்திரர் மால்விதி பிழைக்க வஞ்சகர்     வீடெரி கொளுத்தி யெண்கட ...... லுண்டவேலா 
வேதசது ரத்தர் தென்புலி யூருறை யொருத்தி பங்கினர்     வீறுநட னர்க்கி சைந்தருள் ...... தம்பிரானே.

நாலு சதுரப் பிரம பீடமாகிய, ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில்* செல்லும்படி, மூலாதார கமலத்துள்ள அக்கினியை பிராணாயாம மந்திர ஒழுங்கினால் சுழு முனை** நாடி மார்க்கத்தில் செலுத்தி, விஷ்ணு வீடாகிய மணி பூரகத்தில் உள்ள சந்திரகாரமாகிய பீடத்தில் பொருந்திச் சேர்ந்து நல்ல சுடர் தோன்றும்படியாக, (அனாகதம் முதலிய மற்ற நிலைகளிலும்) இணங்கி நடத்தி அக்கினி முதலிய மும்மண்டலங்களிலும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்திய பல திருக் கோலங்களையும் பார்த்து, சா£ர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலு அங்குலப் பிராண கலையை (கும்பக வழியில்)** சிறிது சிறிதாகக் கழிந்து போகாதபடித் தடுத்து, இனிமையாகிய கோ என்று முழங்கும் சங்கின் ஒலியைக் கேட்டு, விந்து சம்பந்த (சிவ - சக்தி) நாத ஒலி கூடி இருக்கும் இடத்தில் நின்று இந்திர போகமாகிய தேவாமிர்தத்தைப் பருகி, கணக்கற்ற நடனம் புரியும் குஞ்சிதபாதனுடைய (நடராஜனுடைய) அழகிய பொற் சபையை எக்காலத்தில் அடையப் பெறுவேன்? நீரில் உண்டாகும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பார்வதி, ஆதியும் குலமும் அந்தமும் இல்லாதவள், வேதம் வல்ல நான்முகனுடைய பிரம கபாலத்தை (பாத்திரமாகக்) கொண்டவள், செம்பொன்போன்ற உயர் குணம் உடையவள், எனது ஆணவத்தையும், மயக்கத்தையும் தோண்டி வேரறுத்து, ஆசைகளை ஒழித்து, என்னை ஆண்டருளிய உமை, பராசக்தி, அழகி ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே, வேல் ஏந்தி இந்திரர்களும், திருமாலும், பிரமனும் பிழைக்கும் வண்ணம் வஞ்சகராகிய அசுரர்களின் வீடுகளை எரி மூட்டி, மதிக்கத் தக்க கடல்களையும் வற்றச் செய்த வேலனே, நான்கு வேதங்களையும் உடைய பிரமனுக்கும், சிதம்பரத்தில் வாழ்கின்ற ஒப்பற்ற பார்வதி தேவியைப் பாங்கிலே வைத்து மேம்பட்டு விளங்கும் நடன மூர்த்தியாகிய சிவ பெருமானுக்கும் மனம் இசைந்து உபதேசம் செய்தருளிய பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

பாடல் 507 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன     தானத்தன தானத்தன ...... தனதான

நீலக்குழ லார்முத்தணி வாய்சர்க்கரை யார்தைப்பிறை     நீளச்சசி யார்பொட்டணி ...... நுதல்மாதர் 
நீலக்கய லார்பத்திர வேலொப்பிடு வார்நற்கணி     நேமித்தெழு தாசித்திர ...... வடிவார்தோள் 
ஆலைக்கழை யார்துத்திகொ ளாரக்குவ டார்கட்டளை     யாகத்தமி யேனித்தமு ...... முழல்வேனோ 
ஆசைப்பத மேல்புத்திமெய் ஞானத்துட னேபத்திர     மாகக்கொள வேமுத்தியை ...... யருள்வாயே 
மாலைக்குழ லாளற்புத வேதச்சொரு பாளக்கினி     மார்பிற்பிர காசக்கிரி ...... தனபார 
வாசக்குயி லாள்நற்சிவ காமச்செய லாள்பத்தினி     மாணிக்கமி னாள்நிஷ்கள ...... உமைபாகர் 
சூலக்கையி னாரக்கினி மேனிப்பர னாருக்கொரு     சோதிப்பொருள் கேள்விக்கிடு ...... முருகோனே 
சோதிப்பிர காசச்செய லாள்முத்தமிழ் மானைப்புணர்     சோதிப்புலி யூர்நத்திய ...... பெருமாளே.

கரிய கூந்தலை உடையவர்கள், முத்துப்போன்ற பல் வரிசை உள்ள வாயில் சர்க்கரையைப் போன்று இனிய பேச்சை உடையவர்கள், பூரண சந்திரன் போன்ற திலகத்தை அணிந்துள்ள நெற்றியை உடைய விலைமாதர்கள், கரிய கயல் மீன் போலவும், வாள் போலவும், வேலுக்கு ஒப்பானதுமான கண்களை உடையவர்கள், நல்ல திறமை உள்ள சித்திரம் எழுதுவோன் கற்பனை செய்தும் எழுத முடியாத அழகிய உருவம் நிறைந்தவர்கள், தோள்கள் கரும்பு ஆலையில் உள்ள கரும்பு போல் மென்மையாக உடையவர்கள், தேமல் படர்ந்த, முத்து மாலை அணிந்த மலை போன்ற மார்பகங்களை உடையவர்கள் .. இத்தகைய விலைமாதர்கள் இட்ட வேலைகளைச் செய்து கொண்டே தனியேனாகிய நான் தினந்தோறும் திரிந்து அலைவேனோ? ஆசையுடன் உனது திருவடியின் மேல் புத்தியை வைத்து மெய்ஞ் ஞானத்துடன் நற்பலனைப் பெறவே முக்தியை அளித்தருளுக. பூ மாலை அணிந்துள்ள கூந்தலை உடையவள், அற்புதமான வேதச் சொரூபத்தை உடையவள், தனது அக்கினி உருவத்தில் ஒளி பொருந்திய மலை போன்ற பார மார்பகங்களைக் கொண்டவள், குயில் போன்றவள், சிவபெருமானிடத்தில் காதல் நிறைந்த நல்ல செயலினாளுமான உத்தமி, மாணிக்கம் போன்ற மின்னொளி வீசுபவள், மாசற்றவள் ஆகிய உமாதேவியை பாகத்தில் கொண்டவர், சூலத்தைக் கையில் கொண்டவர், அனல் மேனிப் பரமனார் ஆகிய சிவபெருமானுக்கு ஒப்பற்ற ஜோதிப் பொருளான பிரணவத்தை அவர் செவியில் ஏற்றிய முருகனே, பிரகாசமான ஜோதி வடிவானவளும், முத்தமிழில் வல்லவளுமாகிய மான் போன்ற வள்ளியை அணைந்து, ஜோதிமயமான புலியூராகிய சிதம்பரத்தில் விரும்பி வாழும் பெருமாளே. 

பாடல் 508 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனனா தத்தன தனனா தத்தன     தனனா தத்தன ...... தனதான

பனிபோ லத்துளி சலவா யுட்கரு     பதின்மா தத்திடை ...... தலைகீழாய்ப் 
படிமே விட்டுடல் தவழ்வார் தத்தடி     பயில்வா ருத்தியில் ...... சிலநாள்போய்த் 
தனமா தர்க்குழி விழுவார் தத்துவர்     சதிகா ரச்சமன் ...... வருநாளிற் 
றறியா ரிற்சடம் விடுவா ரிப்படி     தளர்மா யத்துய ...... ரொழியாதோ 
வினைமா யக்கிரி பொடியா கக்கடல்     விகடா ருக்கிட ...... விடும்வேலா 
விதியோ னைச்சது முடிநால் பொட்டெழ     மிகவே குட்டிய ...... குருநாதா 
நினைவோர் சித்தமொ டகலா மற்புகு     நிழலாள் பத்தினி ...... மணவாளா 
நிதியா மிப்புவி புலியூ ருக்கொரு     நிறைவே பத்தர்கள் ...... பெருமாளே.

பனி போல் அளவுள்ள ஒரு துளி சுக்கிலம் ஜலத் துவார வழியாய்ச் சென்று கரு தரித்து, பத்து மாதக் கணக்கில் தலை கீழாக பூமியில் வந்து பிறந்து, உடல் கொண்டு தவழ்பவராய், தத்தித் தத்தி அடியிட்டு நடை பயில்பவராய், மழலைப் பேச்சில் சில நாட்கள் கழிந்த பின்னர், மார்பகங்கள் மிக்க உடைய பெண்கள் என்னும் காமக் குழியில் வீழ்பவராய், காலத்தைத் தாவிச் செலவிடுவார். வஞ்சனை கொண்டவனாகிய யமன் வருகின்ற அந்த நாளில், நிலைத்திருக்க முடியாதவராய் தமக்கு வீடாகிய உடலை விடுவார். இந்த விதமாக தளர்ந்து ஒழியும் மாயமான துயரம் என்னை விட்டு நீங்காதோ? மாயைத் தொழிலில் வல்ல கிரெளஞ்ச மலை பொடியாக, கடலில் செருக்கு வாய்ந்த அசுரன் சூரன் அழிந்து போக, வேலினைச் செலுத்தியவனே, பிரமனை, நான்கு முடிகளும் தொங்கிக் கவிழ்ந்து பொடிபட, வலிமையாகக் குட்டிய குருநாதனே, நினைத்துத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் நீங்காமல் புகுந்திருக்கும் ஒளி வீசுபவளாகிய பத்தினி வள்ளியின் கணவனே, இந்தப் பூமிக்கு நிதி போன்றதான புலியூரில் (சிதம்பரத்தில்) இருக்கும் ஒரு நிறைந்த செல்வமே, பக்தர்களுக்கு உரிய பெருமாளே. 

பாடல் 509 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனதன தனதன தான தாத்தன     தனதன தனதன தான தாத்தன          தனதன தனதன தான தாத்தன ...... தனதான

மகரமொ டுறுகுழை யோலை காட்டியு     மழைதவழ் வனைகுழல் மாலை காட்டியும்          வரவர வரஇத ழூற லூட்டியும் ...... வலைவீசும் 
மகரவி ழிமகளிர் பாடல் வார்த்தையில்     வழிவழி யொழுகுமு பாய வாழ்க்கையில்          வளமையி லிளமையில் மாடை வேட்கையில் ...... மறுகாதே 
இகலிய பிரமக பால பாத்திர     மெழில்பட இடுதிரு நீறு சேர்த்திற          மிதழியை யழகிய வேணி யார்த்ததும் ...... விருதாக 
எழில்பட மழுவுடன் மானு மேற்றது     மிசைபட இசைதரு ஆதி தோற்றமு          மிவையிவை யெனவுப தேச மேற்றுவ ...... தொருநாளே 
ஜகதல மதிலருள் ஞான வாட்கொடு     தலைபறி யமணர்ச மூக மாற்றிய          தவமுனி சகமுளர் பாடு பாட்டென ...... மறைபாடி 
தரிகிட தரிகிட தாகு டாத்திரி     கிடதரி கிடதரி தாவெ னாச்சில          சபதமொ டெழுவன தாள வாச்சிய ...... முடனேநீள் 
அகுகுகு குகுவென ஆளி வாய்ப்பல     அலகைக ளடைவுட னாடு மாட்டமு          மரனவ னுடனெழு காளி கூட்டமு ...... மகலாதே 
அரிதுயில் சயனவி யாள மூர்த்தனு     மணிதிகழ் மிகுபுலி யூர்வி யாக்ரனு          மரிதென முறைமுறை யாடல் காட்டிய ...... பெருமாளே.

மகர மீன் போன்ற குண்டலங்களையும் காதோலையையும் காட்டியும், மழை போல் அலங்கரிக்கப்பட்ட கூந்தலில் உள்ள மாலையைக் காட்டியும், பழகப் பழக வாயிதழ் ஊறலைக் காட்டியும், (காம) வலையை வீசுகின்ற மகர மீன் போன்ற கண்ணை உடைய பெண்களின் பாடலிலும் பேச்சிலும் ஈடுபட்டு அந்த வழியே நடக்கின்ற தந்திரமான வாழ்க்கையிலும், அவர்களுடைய செல்வத்திலும், இளமையிலும், பொன்னைச் சேர்க்கும் ஆசையிலும் நான் சுழன்று மனம் கலங்காமல், மாறுபட்டுப் பொய் பேசிய பிரமனுடைய மண்டை ஓடாகிய பாத்திரத்தை (சிவபெருமான் ஏந்திய திறமும்), அழகு விளங்க இடப்படுகின்ற திரு நீறு அவர் உடலில் சேர்ந்துள்ள திறமும், கொன்றை மலரை அழகுள்ள சடையில் செருகிச் சேர்த்துள்ள திறமும், வெற்றிக்கு அடையாளமாக அழகு விளங்க மழுவாயுதத்தையும் மானையும் கையில் ஏற்ற தன்மையும், புகழ் விளங்க யாவராலும் சொல்லப்படும் ஆதியாகத் தோன்றிய தோற்றமும், இன்ன இன்ன காரணத்தால் என்று நீ உபதேசித்துப் புலப்படுவதும் ஆகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? இப்பூமியில் அருள் நிறந்த ஞானமாகிய வாளைக் கொண்டு, பறித்த தலையை உடைய சமணர்களின் கூட்டத்தை அழித்த (ஞான சம்பந்தப் பெருமானாகிய) தவ முனியே, உலகத்தில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்கள் போன்ற பாடல்களில் வேத சாரங்களை (தேவாரமாக) அமைத்துப் பாடியவனே, தரிகிட தரிகிட தாகு டாத்திரி கிடதரி கிடதரி தா என்று இந்த விதமான ஒலிகளைக் கொண்டு எழுகின்றனவான தாள வாத்தியங்களுடன் நெடு நேரம் அகு குகு குகு இவ்வாறான ஒலியுடன் ஆளியின் வாய் போல பல பேய்கள் முறையுடனே ஆடுகின்ற கூத்தும், சிவபெருமான் ஆடும் போது அவனுடன் எழுந்து ஆடுகின்ற காளிகளின் கூட்டமும் உன்னைச் சூழ, திருமால் உறங்கும் படுக்கையான பாம்பாகிய ஆதி சேஷமூர்த்தியாகிய பதஞ்சலியும், அழகு பொலியும் பேர் பெற்ற புலியூர் என்னும் சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும், நடராஜப் பெருமானின் நடனம் அருமை வாய்ந்தது என்று வியக்க விதம் விதமான கூத்துக்களை ஆடிக் காட்டிய பெருமாளே. 

பாடல் 510 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தத்த தத்த தாத்த தத்த தத்த தாத்த     தத்த தத்த தாத்த ...... தனதான

மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம்     வைச்சி றைச்ச பாத்ர ...... மநுபோகம் 
மட்க விட்ட சேக்கை உட்பு ழுத்த வாழ்க்கை     மட்டு லப்ப தார்த்த ...... மிடிபாறை 
எய்ச்சி ளைச்ச பேய்க்கு மெய்ச்சி ளைச்ச நாய்க்கு     மெய்ச்சி ளைச்ச ஈக்கு ...... மிரையாகும் 
இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி     இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே 
பொய்ச்சி னத்தை மாற்றி மெய்ச்சி னத்தை யேற்றி     பொற்ப தத்து ளாக்கு ...... புலியூரா 
பொக்க ணத்து நீற்றை யிட்டொ ருத்த னார்க்கு     புத்தி மெத்த காட்டு ...... புனவேடன் 
பச்சி லைக்கும் வாய்க்கு ளெச்சி லுக்கும் வீக்கு     பைச்சி லைக்கு மாட்கொ ...... ளரன்வாழ்வே 
பத்தி சித்தி காட்டி அத்தர் சித்த மீட்ட     பத்த ருக்கு வாய்த்த ...... பெருமாளே.

(இந்த உடலானது) அலங்கரித்த கட்டில். மெச்சத் தக்க ஓர் இயந்திரம். பித்தம், மூத்திரம் (இவைகள்) வைத்து பாய்ச்சப்பட்ட ஒரு பாத்திரம். வலிவு குன்றி அழியும் ஒரு கூடு. உட்புறத்தில் புழுத்துப் போயுள்ள வாழ்க்கை. மண் இனத்தால் ஆக்கப்பட்ட ஒரு பொருள். இடிந்து விழுகின்ற பாறை. இளைத்து மெலிந்த பேய்க்கும், மெலிந்து இளைத்த நாய்க்கும், இளைத்து மெலிந்த ஈக்களுக்கும் இறுதியில் உணவாகின்ற ஒரு பொருள். இத்தகைய உடம்பை ஒழித்து, அந்த சுத்த, அழியாத தேகத்தில் என்னைப் புகுத்தி, இவ்வாறு வீட்டின்பத்தைத் தந்து அருள்வாயாக. (உன் மீது அன்பு வைத்தவர்களுக்கு) பொய்யாகிய அடையாளங்களை ஒழித்து, மெய்யான அடையாளங்களைத் தந்து, உனது அழகிய பாதங்களில் ஏற்றுக் கொள்ளும் புலியூரானே (சிதம்பரநாதனே), விபூதிப் பையிலிருக்கும் திரு நீற்றை (நெற்றியில்) இட்டு விளங்கிய ஒப்பற்ற (சிவகோசரியார் என்னும்) அந்தணனுக்கு உண்மை அறிவை நன்கு காட்டிய மலைக் கொல்லைக் காட்டு வேடன் (கண்ணப்பன்) தந்த பச்சிலைப் பூஜைக்கும், அவன் வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாகிய அபிஷேகத்துக்கும், (அவன்) தோளில் கட்டியிருந்த வலிய வில்லுக்கும் வெகுவாக உகந்து அவனை ஆட்கொண்டருளிய சிவபெருமானுடைய செல்வக் குமரனே, முறைமையுடன் வீட்டின்பத்தை உபதேசித்து தந்தையாகிய சிவபெருமானுடைய உள்ளத்தை வசப்படுத்தியவனே, பக்தர்களுக்கு அருமையாகக் கிட்டியுள்ள பெருமாளே. 

பாடல் 511 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனன தந்தன தந்த தானன     தனன தந்தன தந்த தானன          தனன தந்தன தந்த தானன ...... தந்ததான

மதிய மண்குண மஞ்சு நால்முக     நகர முன்கலை கங்கை நால்குண          மகர முன்சிக ரங்கி மூணிடை ...... தங்குகோண 
மதன முன்தரி சண்ட மாருத     மிருகு ணம்பெறி லஞ்செ லோர்தெரு          வகர மிஞ்சிய கன்ப டாகமொ ...... ரென்றுசேருங் 
கதிர டங்கிய அண்ட கோளகை     யகர நின்றிடும் ரண்டு கால்மிசை          ககன மின்சுழி ரண்டு கால்பரி ...... கந்துபாயுங் 
கருணை யிந்திரி யங்கள் சோதிய     அருண சந்திர மண்ட லீகரர்          கதிகொள் யந்திர விந்து நாதமொ ...... டென்றுசேர்வேன் 
அதிர பம்பைகள் டங்கு டாடிக     முதிர அண்டமொ டைந்து பேரிகை          டகுட டண்டட தொந்த தோதக ...... என்றுதாளம் 
அதிக விஞ்சையர் தும்ப்ரு நார்தரோ     டிதவி தம்பெறு சிந்து பாடிட          அமரர் துந்துமி சங்கு தாரைகள் ...... பொங்கவூடு 
உதிர மண்டல மெங்கு மாயொளி     யெழகு மண்டியெ ழுந்து சூரரை          உயர்ந ரம்பொடெ லும்பு மாமுடி ...... சிந்திவீழ 
உறுசி னங்கொடெ திர்ந்த சேவக     மழைபு குந்துய ரண்டம் வாழ்வுற          வுரக னும்புலி கண்ட வூர்மகிழ் ...... தம்பிரானே.

சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.*1 (அந்த மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்) ந என்னும் எழுத்தையும், (பஞ்ச*2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது. நீர் (அப்பு மண்டலம்) நான்கு*3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் ம என்னும் எழுத்தைக் குறிக்கும். அப்பு மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில் சி என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்) மூன்று*4 குணமும் முக்கோணமும் கொண்டது. அழித்தல் தன்மையை தன்னிடத்தே கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு*5 குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள வா என்னும் எழுத்தைக் குறிக்கும். விரிந்துள்ள ஆகாயம் ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்த ஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும். (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை, பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும். (அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க, சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும் மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்? ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க, பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர் என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே மேலெழுந்து பொங்க, இரத்தப் பெருக்கின் வெள்ளம் எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும் மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே, மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே. 
*1 - மண்ணின் ஐந்து குணங்கள்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
*2 - ஐந்து கலைகள்:நிவிர்த்திகலை - ஆன்மாக்களை பாசத்தினின்று விடுவிப்பது.பிரதிஷ்டாகலை - ஆன்மாக்களை முக்தியில் உய்ப்பது.வித்யாகலை - பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது.சாந்திகலை - ஆன்மாக்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது.சாந்தியதீதகலை - சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.
*3 - நீரின் நான்கு குணங்கள்: சப்தம், பரிசம், உருவம், ரஸம்.
*4 - தீயின் முக்குணங்கள்: சப்தம், பரிசம், உருவம்.
*5 - வாயுவின் இரண்டு குணங்கள்: சப்தம், பரிசம். 
*6 இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும். ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்

பாடல் 512 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தனன தனதன தனன தனதன   தனன தனதன தனன தனதன      தத்தத் தத்தன தத்தத் தத்தன         தத்தத் தத்தன தத்தத் தத்தனதனன தனதன தனன தனதன   தனன தனதன தனன தனதன      தத்தத் தத்தன தத்தத் தத்தன         தத்தத் தத்தன தத்தத் தத்தனதனன தனதன தனன தனதன   தனன தனதன தனன தனதன      தத்தத் தத்தன தத்தத் தத்தன         தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தனதான.

மருவு கடல்முகி லனைய குழல்மதி   வதன நுதல்சிலை பிறைய தெணும்விழி      மச்சப் பொற்கணை முக்குப் பொற்குமி         ழொப்பக் கத்தரி யொத்திட் டச்செவிகுமுத மலரித ழமுத மொழிநிரை   தரள மெனுநகை மிடறு கமுகென      வைத்துப் பொற்புய பச்சைத் தட்டையொ         டொப்பிட் டுக்கம லக்கைப் பொற்றுகிர்வகைய விரலொடு கிளிகள் முகநக   மெனவு மிகலிய குவடு மிணையென      வட்டத் துத்திமு கிழ்ப்பச் சக்கிரம்         வைத்தப் பொற்குட மொத்திட் டுத்திகழ் ...... முலைமேவும் 
வடமு நிரைநிரை தரள பவளமொ   டசைய பழுமர இலைவ யிறுமயி      ரற்பத் திக்கிணை பொற்புத் தொப்புளும்         அப்புக் குட்சுழி யொத்துப் பொற்கொடிமதன னுருதுடி யிடையு மினலென   அரிய கடிதட மமிர்த கழைரச      மட்டுப் பொற்கம லத்திற் சக்கிரி         துத்திப் பைக்கொரு மித்துப் பட்டுடைமருவு தொடையிணை கதலி பரடுகொள்   கணையு முழவென கமட மெழுதிய      வட்டப் புத்தக மொத்துப் பொற்சர         ணத்திற் பிற்புற மெத்துத் தத்தைகள் ...... மயில்போலே 
தெருவில் முலைவிலை யுரைசெய் தவரவர்   மயல்கொ டணைவர மருள்செய் தொழில்கொடு      தெட்டிப் பற்பல சொக்கிட் டுப்பொருள்         பற்றிக் கட்டில ணைக்கொப் பிப்புணர்திலத மழிபட விழிகள் சுழலிட   மலர்க ளணைகுழ லிடைகொள் துகில்பட      தித்தித் துப்பிதழ் வைத்துக் கைக்கொடு         கட்டிக் குத்துமு லைக்குட் கைப்படதிரையி லமுதென கழையில் ரசமென   பலவில் சுளையென வுருக வுயர்மயல்      சிக்குப் பட்டுடல் கெட்டுச் சித்தமும்         வெட்கித் துக்கமு முற்றுக் கொக்கென ...... நரைமேவிச் 
செவியொ டொளிர்விழி மறைய மலசல   மொழுக பலவுரை குழற தடிகொடு      தெத்திப் பித்தமு முற்றித் தற்செய         லற்றுச் சிச்சியெ னத்துக் கப்படசிலர்கள் முதுவுடல் வினவு பொழுதினி   லுவரி நிறமுடை நமனு முயிர்கொள      செப்பற் றுப்பிண மொப்பித் துப்பெய         ரிட்டுப் பொற்பறை கொட்டச் செப்பிடுசெனன மிதுவென அழுது முகமிசை   அறைய அணைபவ ரெடென சுடலையில்      சிற்றிக் குக்கிரை யிட்டிட் டிப்படி         நித்தத் துக்கமெ டுத்திட் டுச்சட ...... முழல்வேனோ 
குருவி னுருவென அருள்செய் துறையினில்   குதிரை கொளவரு நிறைத வசிதலை      கொற்றப் பொற்பதம் வைத்திட் டற்புத         மெற்றிப் பொற்பொரு ளிட்டுக் கைக்கொளுமுதல்வ ரிளகலை மதிய மடைசடை   அருண வுழைமழு மருவு திருபுயர்      கொட்டத் துப்புரர் கெட்டுப் பொட்டெழ         விட்டத் திக்கணை நக்கர்க் கற்புதகுமர னெனவிரு தொலியு முரசொடு   வளையு மெழுகட லதிர முழவொடு      கொட்டத் துட்டரை வெட்டித் தட்கட         லொப்பத் திக்கும டுத்துத் தத்திட ...... அமர்மேவிக் 
குருகு கொடிசிலை குடைகள் மிடைபட   மலைகள் பொடிபட வுடுக ளுதிரிட      கொத்திச் சக்கிரி பற்றப் பொற்பரி         எட்டுத் திக்குமெ டுத்திட் டுக்குரல்குமர குருபர குமர குருபர   குமர குருபர எனவொ தமரர்கள்      கொட்பப் புட்பமி றைத்துப் பொற்சர         ணத்திற் கைச்சிரம் வைத்துக் குப்பிடகுலவு நரிசிறை கழுகு கொடிபல   கருட னடமிட குருதி பருகிட      கொற்றப் பத்திர மிட்டுப் பொற்கக         னத்தைச் சித்தமி ரக்ஷித் துக்கொளு ...... மயில்வீரா 
சிரமொ டிரணிய னுடல்கி ழியவொரு   பொழுதி னுகிர்கொடு அரியெ னடமிடு      சிற்பர்த் திட்பதம் வைத்துச் சக்கிர         வர்த்திக் குச்சிறை யிட்டுச் சுக்கிரன்அரிய விழிகெட இருப தமுமுல   கடைய நெடியவர் திருவு மழகியர்      தெற்குத் திக்கில ரக்கர்க் குச்சின         முற்றுப் பொற்றசர் தற்குப் புத்திரசெயமு மனவலி சிலைகை கொடுகர   மிருப துடைகிரி சிரமொர் பதும்விழ      திக்கெட் டைக்கக னத்தர்க் குக்கொடு         பச்சைப் பொற்புய லுக்குச் சித்திர ...... மருகோனே 
திலத மதிமுக அழகி மரகத   வடிவி பரிபுர நடனி மலர்பத      சித்தர்க் குக்குறி வைத்திட் டத்தன         முத்தப் பொற்கிரி யொத்தச் சித்திரசிவைகொள் திருசர சுவதி வெகுவித   சொருபி முதுவிய கிழவி யியல்கொடு      செட்டிக் குச்சுக முற்றத் தத்துவ         சித்திற் சிற்பதம் வைத்தக் கற்புறுதிரையி லமுதென மொழிசெய் கவுரியி   னரிய மகனென புகழ்பு லிநகரில்      செப்புப் பொற்றன முற்றப் பொற்குற         தத்தைக் குப்புள கித்திட் டொப்பிய ...... பெருமாளே.

உவமைக்கேற்ற கடல், மேகம் இவைகளுக்கு ஒத்து (கரு நிறம் கொண்ட) கூந்தல். சந்திரனைப் போன்ற முகம். வில், பிறை இவைகளுக்கு ஒப்பான நெற்றி. மதிக்கத் தக்க கண்ணானது மீன், அழகிய அம்பு போன்றது. மூக்கு அழகிய குமிழம் பூவை ஒத்து நிற்கும். கத்திரிக் கோலின் கைப்பிடிகளை ஒத்துள்ள காதுகள். குமுத மலர் போன்ற வாயிதழ். அமுதம் போன்ற சொற்கள். வரிசையாய் அமைந்த முத்துப் போன்ற பற்கள். கழுத்து கமுக மரத்தை நிகர்க்கும் என வைக்கப்படும் அழகிய புயங்கள். பச்சை மூங்கிலுக்கு ஒப்பிடப்படும் தாமரை போன்ற கை. அழகிய நகங்களைக் கொண்ட விரல்களின் நகம் கிளிகளின் மூக்குக்கு ஒப்பாகும். ஒத்து நிற்கும் மலை இரண்டு போல் வட்டமாய், வரித் தேமல் கொண்டு குவிந்து விளங்குவதாய், சக்கிரவாகப் புள் போன்றதாய், பொன் குடம் போன்று விளங்கும் மார்பகங்கள் தம்மேல் உள்ள மாலைகள் வரிசை வரிசையாக முத்துடனும் பவளத்துடனும் அசைய, ஆலிலை போன்ற வயிற்று முடிகள் இருளின் வரிசைக்கு ஒப்பாகும். அழகிய கொப்பூழ் நீரில் உள்ள சுழிக்கு ஒப்பாகும். அழகிய கொடி போன்றதும், மன்மதனின் உருவம் போலக் கண்ணுக்குப் புலப்படாத, உடுக்கை ஒத்த இடுப்பு மின்னலைப் போன்றது. அருமை வாய்ந்த பெண்குறி கரும்பின் ரசம், தேன் கொண்ட கூடு, அழகிய கமலத்தில் பாம்பின் பொறி கொண்ட படம் இவைகளுக்கு நிகராகும். பட்டாடை பூண்டுள்ள இரண்டு தொடைகளும் வாழைக்கு ஒப்பாகும். பரடு கொண்டுள்ள கணைக்கால் முழவு வாத்தியம் ஒக்கும். ஆமையையும், எழுதி நிறைந்த வட்டமாயுள்ள (ஓலைப்) புத்தகம் போன்று அழகிய புறங்கால் இருக்கும். (இத்தகைய அங்க லக்ஷணங்கள்) நிரம்பிய பொது மகளிர் கிளிகள் போலவும், மயில்கள் போலவும இருந்தனர். தெருவில் நின்று (தமது) மார்பகங்களை விலை பேசி, யாவரும் காம மயக்கம் கொண்டு அணையும்படி மயக்கும் தொழிலைச் செய்து வஞ்சித்து, பலவிதமான சொக்கு மருந்துகளை உணவில் ஊட்டி, பொருளைக் கவர்ந்து, கட்டிலில் அணைப்பதற்கு சம்மதித்து, பின்பு கலவிக்கு உட்பட, நெற்றிப் பொட்டு அழிந்து போக, கண்கள் சுழல, மலர்கள் பொருந்தியுள்ள கூந்தலும் இடுப்பிலுள்ள புடைவையும் குலைந்துபோக அனுபவித்து, பவளம் போன்ற வாயிதழ் தந்து, கையால் அணைத்து, திரண்ட மார்பகங்களைக் கையில் பற்றி, கடலினின்றும் அமுதம் கடைந்தெடுத்தது போலவும், கரும்பினின்றும் சாறு எடுப்பது போலவும், பலாப் பழத்தினின்று சுளை எடுப்பது போலவும் மனம் உருக, மெத்த காம மயக்கில் அகப்பட்டு உடல் கெட்டு, உள்ளமும் நாணம் உற்று, துயரம் அடைந்து, கொக்கைப் போல மயிர் வெளுத்து, காதும் விளக்கமுற்ற கண்களும் (தத்தம் தொழில்) மறைவு பட (செவிடும், குருடுமாகி), மலமும் சலமும் ஒழுக, பல பேச்சுகளும் குழற, கைத்தடி கொண்டு தடுமாறி, பித்தமும் அதிகரித்து, தன்னுடைய செயல்கள் எல்லாம் ஒழிந்து, (கண்டவர்கள்) சீ சீ என்று இகழ்ந்து வருந்த, (காண வந்தவர்களில்) சிலர் முதுமை அடைந்த உடல் நிலையைப் பற்றி விசாரிக்கும் போது, (கடல் போன்ற) கரிய நிறம் உடைய யமனும் உயிரைக் கொண்டு போக, பேச்சு அடங்க பிணம் என்று தீர்மானித்து, பிணம் என்று பெயர் வைத்து, பொலிவுள்ள கணப் பறைகள் கொட்ட, சொல்லப் படும் பிறப்பின் அழகு இது தான் என்று கூறி அழுது, முகத்தில் அறைந்து கொண்டு, அங்கு கூடியவர்கள் பிணத்தை எடுங்கள் என்று கூற, சுடு காட்டில் சில பந்தங்களுள்ள நெருப்புக்கு இரையாக உடலைப் போட்டு, இவ்வண்ணம் அழியாத துக்க நிலையைப் பூண்டு, உடல் எடுத்துச் சுழற்சி உறுவேனோ? குருவாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறையில் (அரசனுக்காக) குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டி, அற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டருளிய முதன்மையரான சிவ பெருமான். இளம் பிறை நிலவை அடைந்துள்ள சடையினர். சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த அழகிய புயத்தினர். இறுமாப்பும் சேட்டையும் கொண்ட திரிபுராதிகள் கேடுற்று அழியும்படிச் செய்து, திக்குக்களை எல்லாம் ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவனே, பெருமையை எடுத்து ஒலிக்கும் முரசு வாத்தியத்துடன், சூழ்ந்துள்ள எழு கடல் பேரொலி செய்ய, முழவும் சேர்ந்து முழக்கம் செய்ய, துஷ்டர்களாகிய அசுரர்களை வெட்டி அழித்து, குளிர்ந்த கடல் போல பல திக்குகளிலும் நிறைந்து பரக்கும்படி போருக்கு எழுந்து, கோழிக் கொடிகளும், ஒளி பொருந்திய குடைகளும் போர்க்களத்தில் நெருங்கிடவும், மலைகள் பொடியாகி விழவும், நட்சத்திரங்கள் உதிர்ந்து விழவும், (உனது) மயிலாகிய குதிரை (அஷ்ட) பாம்புகளையும் அலகால் கொத்திப் பிடிக்க, எட்டுத் திக்குகளில் உள்ளவர்களும் குரல் எடுத்திட்டு ஓலமிட, குமர குருபர குமர குருபர குமர குருபர என பல முறை துதித்து நிற்கும் தேவர்கள் (உன்னைச்) சூழ்ந்து மலர்களைத் தூவி அழகிய திருவடிகளில் இறைத்து, தலை மேல் கைகளை வைத்துக் கும்பிட, மகிழ்ந்து ஓடிவரும் நரிகளும், சிறகுள்ள கழுகுகளும், காக்கை பலவும், கருடன்களும் கூத்தாடி இரத்தத்தைக் குடிக்க, உன் வீர வாளைச் செலுத்தி அழகிய தேவலோகத்தை மனத்தில் கருணையுடன் காப்பாற்றித் தந்த மயில் வீரனே, இரணியனுடைய தலையும் உடலும் கிழிய ஒப்பற்ற அந்தப் பொழுதில் (தமது) நகத்தைக் கொண்டு அறுத்து, அந்தி வேளையில் (நரசிம்மத்) தாண்டவத்தைப் புரிந்த தொழில் திறம் வாய்ந்தவர். வலிய தமது திருவடியை வைத்து (மகாபலிச்) சக்கிரவர்த்தியை சிறையில் வைத்து, சுக்கிரனுடைய அருமையான கண் கெட்டுப் போக இரு திருவடிகளால் உலகம் முழுமையும் (அளக்கும்படி) உயர்ந்தவர். அழகிய லக்ஷ்மியை (திருமார்பில்) உடையவர். தெற்குத் திசையில் (இராவணன் முதலிய) அரக்கர்கள் மீது கோபம் கொண்டு, சிறந்த தசரதச் சக்கிரவர்த்திக்கு புத்திரராய், வெற்றியும் மனோ திடத்தையும், (கோதண்டம் என்னும்) வில்லையும் கையில் ஏந்தி, இருபது கைகளைக் கொண்ட (ராவணனுடைய) பத்து தலைகளும் அறுந்து விழ, எட்டுத் திக்குகளையும் தேவர்களுக்குக் கொடுத்த பச்சை நிறம் கொண்ட அழகிய மேக வண்ணனாகிய திருமாலுக்கு அமைந்த அழகிய மருகனே, பொட்டு அணிந்து, சந்திரனுக்கு ஒப்பான முகத்தை உடைய அழகி, பச்சை நிறத்தினள், சிலம்பணிந்து நடனம் புரிபவள், அடியார்கள் உள்ளத்தில் மலர்கின்ற திருவடியை உடைய சித்தராகிய சிவபெருமானுக்கு சுவட்டுக் குறி வைத்தவையும், முத்து மாலை அணிந்த பொன் மலை போன்றவையுமான மார்பகங்கள் இணைந்துள்ள அழகிய சிவாம்பிகை, லக்ஷ்மியையும், சரஸ்வதியையும் (தனது) இரு கண்களாகக் கொண்டவளும், பல விதமான உருவத்தைக் கொண்டவளும், மிகப் பழையவளும், முறைமையாக வளையல் விற்ற செட்டியாகிய சொக்க நாதருக்கு சுகம் நிரம்ப தத்துவ அறிவு முறையில் தனது ஞான பாதத்தைத் வைத்துச் சூட்டியவளும், கற்பு உள்ளவளும், கடலில் எழுந்த அமுதம் போன்ற இனிய சொற்களைப் பேசுபவளுமான உமா தேவியின் அருமையான புதல்வன் என்று விளங்கப் புகழ் நிறைந்த புலியூரில் (சிதம்பரத்தில்) சிமிழ் போன்ற பொலிவுள்ள மார்பகம் திரண்டுள்ள அழகிய குறக் கிளி ஆகிய வள்ளியின் பொருட்டு புளகாங்கிதம் கொண்டு அவளுக்கு ஒப்புக் கொடுத்து வீற்றிருக்கும் பெருமாளே.

பாடல் 513 - சிதம்பரம் 
ராகம் - கல்யாணி; தாளம் - ஆதி

தனனா தனத்ததன தனனா தனத்ததன     தனனா தனத்ததன ...... தனதானா

மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்     வருவா யுரைத்தமொழி ...... தவறாதே 
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசு     மனமாயை யற்றசுக ...... மதிபாலன் 
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமல     நிலைவே ரறுக்கவல ...... பிரகாசன் 
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரம     நிழலாளி யைத்தொழுது ...... வருவாயே 
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரிய     இளையோ ளொரொப்புமிலி ...... நிருவாணி 
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறை     யிதழ்வேணி யப்பனுடை ...... குருநாதா 
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவர     முதுசூ ரரைத்தலை கொள் ...... முருகோனே 
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகு     முருகா தமிழ்ப்புலியுர் ...... பெருமாளே.

மனமே, உனக்கு உறுதி தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன், என் சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக. மயிலை வாகனமாகக் கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர், மனம், மாயை என்பதெல்லாம் இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை. உனக்கு வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும் உனக்குத் தந்தருளி, மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல ஒளியுருவானவர், சங்க நிதி, பதுமநிதி, கற்பக மரம்* போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரே முழு முதற் கடவுள். நீதிமான், அத்தகைய பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக. நமது உண்மையான சுற்றம் என்று சொல்லக் கூடிய ஒரே ஒருத்தியும், பேரழகுள்ளவளும், நலமும், சிறப்பும் உடைய வேதங்களுக்கு எட்டாதவளும், என்றும் இளையவளும், ஒருவிதத்திலும் தனக்குச் சமானம் இல்லாதவளும், உடையற்ற திகம்பரியும், என்னைப் பெற்றெடுத்தவளும், புகழ் பெற்ற கல்யாணியுமாகிய உமாதேவியை ஒரு பக்கத்தில் கொண்ட கொன்றை அணிந்த ஜடையுடைய எம் தந்தை சிவபெருமானின் குருநாதனே, முன்னவர்களாகிய அரி, அரன், அயன் ஆகிய மூவரும் துதி செய்து, மலர்களை மழைபோலத் தூவி வர, பழமை வாய்ந்த சூரன் முதலியவர்களின் சிரங்களைக் கொய்தறுத்த முருகனே, சர்க்கரைப் பாகு போன்ற மொழியும், முத்துப் போன்ற பற்களையும் உடைய, மயிலை ஒத்த சாயல் கொண்ட வள்ளிக்காக உள்ளம் உருகும் முருகனே, தமிழ் மணம் கமழும் புலியூர் என்ற சிதம்பரத்தில் உறையும் பெருமாளே. 
* தேவலோகத்தில் சங்கநிதி, பதுமநிதி ஆகியவை மிகுந்த செல்வங்களை நல்குபவை.கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுக்கும் தேவதாரு.

பாடல் 514 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தத்த தானன தத்தன தானன     தத்த தானன தத்தன தானன          தத்த தானன தத்தன தானன ...... தனதான

முத்த மோகன தத்தையி னார்குர     லொத்த வாயித சர்க்கரை யார்நகை          முத்து வாரணி பொற்குவ டார்முலை ...... விலைமாதர் 
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்     பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்          முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர் ...... கலிசூழச் 
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவ     டுற்ற மாதர்வ லைப்புகு நாயெனை          சித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர் ...... மடமீதே 
சித்தெ லாமொரு மித்துன தாறினம்     வைத்து நாயென ருட்பெற வேபொருள்          செப்பி யாறுமு கப்பரி வோடுணர் ...... வருள்வாயே 
தத்த னானத னத்தன தானெனு     டுக்கை பேரிமு ழக்கிட வேகடல்          சத்த தீவுத யித்தியர் மாளிட ...... விடும்வேலா 
சத்தி லோகப ரப்பர மேசுர     நிர்த்த மாடுக ழற்கரு ணாகர          தற்ப ராபர நித்தனொர் பாலுறை ...... யுமைபாலா 
துத்தி மார்முலை முத்தணி மோகன     பொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்          துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன் ...... மணிமார்பா 
சுட்டி நீலஇ ரத்தின மாமயி     லுற்று மேவிய ருட்புலி யூர்வளர்          சுத்த னேசசி பெற்றபெ ணாயகி ...... பெருமாளே.

முத்தம் தந்து காம மயக்கத்தைத் தருகின்ற கிளி போன்றவர்கள். (கிளி போன்ற) குரலைக் கொண்ட வாயினின்றும் இனிய சர்க்கரை போன்ற மொழியினர். முத்தைப் போன்ற பற்கள் உடையவர். கச்சு அணிந்த அழகிய மலை போன்ற மார்பகங்களை உடைய பொது மகளிர். மதிப்பை இழக்கும்படி அழிப்பவர்கள். பொருள் காரணமாக வேறு ஆடவர்களையும் அழைப்பவர்கள். சிலர் வாய் நீர், சிறு நீர், நாத நீர் ஆகிய மூன்று நீர்கள் சம்பந்தப்பட்ட சொக்கு மருந்தைக் கொடுப்பவர்கள். துன்பமும் தரித்திரமும் சூழத் தொடர மாய வித்தைகள் ஆடி அழைப்பவர்கள். வஞ்சனை கொண்ட விலைமாதர்களின் வலையில் புகுகின்ற அடியேனுக்கு அஷ்டமா சித்திகளும்** நல்ல அறிவும் தோன்ற, (நந்தி) ஒளி காணப்படும் (லலாட)* புருவ நடுநிலையில், அறிவு எல்லாம் ஒன்று கூடி அமைந்துள்ள உன்னுடைய ஆறு எழுத்தை முறைப்படி வைத்து, அடியேன் உன் திருவருளைப் பெறுமாறு (அந்த ஆறெழுத்தின்) பொருளை விளக்கிச் சொல்லி, உனது திருமுகங்கள் ஆறும்*** கருணை கொண்டவனாய் ஞானத்தை அருள்வாயாக. தத்த னானத னத்தனதா இவ்வாறான ஒலிகளை உடுக்கையும் பேரிகைகளும் பேரொலி செய்ய, கடல் சூழ்ந்த ஏழு தீவுகளிலும் இருந்த அசுரர்கள் இறந்து போகும்படியாக வேலைச் செலுத்தியவனே, அருள் சக்தி உலகங்களுக்கு எல்லாம் முழு முதற் கடவுளாய், பரம ஈசுவரனாய், நடனம் ஆடுகின்ற திருவடிகளை உடைய கருணாகரனாய், தாமே பரம் பொருளாய், அழியாதவராய் உள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ள உமா தேவியின் குழந்தையே, தேமல் படர்ந்துள்ள மார்பகத்தின் மீது முத்து மாலை அணிந்துள்ள, அழகும் பொலிவுள்ள ஒளியும் கொண்டுள்ள, மான் பெற்ற குறப் பெண்ணாகிய வள்ளியின் பவளம் போலச் சிவந்துள்ள வாயிதழ் ஊறலைப் பருகி அவளைத் தழுவும், ஒளி வீசும் அழகிய மணிகள் அணிந்துள்ள மார்பனே, நீலக் கொண்டையும், நீல நிறமும், ரத்தின ஒளியும் கொண்டுள்ள சிறந்த மயில் மீது பொருந்தி அமர்ந்து சிதம்பரத்தில் வீறுடன் விளங்கும் சுத்த மூர்த்தியே, இந்திராணி பெற்ற தேவயானையாகிய நாயகியின் பெருமாளே. 
* சுடர் ம(மா)டம் - நந்தி ஒளி காணும் லலாடஸ்தானம் ஆகும். புருவ மத்தியைக் குறிக்கும். இங்கு 'சுழுமுனை', 'இடைகலை', 'பிங்கலை' ஆகிய மூன்று நாடிகளும் கூடுவதால் பிரகாசமான மண்டபம் தோன்றும். இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** அஷ்டமாசித்திகள் பின்வருமாறு:அணிமா - அணுவிலும் சிறிய உருவினன் ஆதல்.மகிமா - மேருவினும் பெரிய உருவினன் ஆதல்.கரிமா - ஆயுதங்களுக்கும், ஆகாயத்துக்கும், காலத்துக்கும் அப்பால் ஆதல்.லகிமா - ஆகாயகமனம், அந்தரத்தில் இருத்தல்.பிராப்தி - பர காயங்களில் புகுதல் (கூடுவிட்டு கூடுபாய்தல்).பிராகாமியம் - எல்லாவற்றிலும் நிறைந்திருத்தல்.ஈசத்துவம் - எல்லாவற்றுக்கும் நாதனாக இருத்தல்.வசித்துவம் - எல்லா இடங்களிலும் இருந்து யாவற்றையும் வசப்படுத்தல்.
*** ஆறு முகத்தின் தத்துவம் பின்வருமாறு:சக்திகள் ஆறு - ஆதி சக்தி, இச்சா சக்தி, க்ரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, குடிலா (ஓங்கார) சக்தி.பீஜங்கள் ஆறு - அகரம், உகரம், மகரம், நாதம், விந்து, கலை.அத்துவாக்கள் ஆறு - மந்திரம், பதம், வண்ணம், புவனம், கலை, தத்துவம்.இறைக் குணங்கள் ஆறு: ஸர்வக்ஞத சக்தி - பூரண அறிவுடன் இருக்கும். நித்ய திருப்தி சக்தி - எல்லா அனுக்ரகமும் புரியும். அநாதிபோத சக்தி - எல்லா உயிர்களுக்கும் ஞானத்தைத் தரும். ஸர்வ சுதந்திர சக்தி - ஆன்மாக்களுக்கு முக்தியைத் தரும். அலுப்த சக்தி - ஐந்தொழிலைப் புரியும். அநந்த சக்தி - எல்லா ஆற்றலையும் உண்டாக்கும்.குணங்கள் ஆறு - ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம்.ஆறு முகங்களைப் பற்றி அருணகிரிநாதர் அருளிச் செய்த பாடல்: ஏறுமயில் ஏறி 

பாடல் 515 - சிதம்பரம் 
ராகம் - ஹிந்தோளம் ; தாளம் - ஆதி

தனதனன தான தனதனன தான     தனதனன தானத் ...... தனதானா

பரமகுரு நாத கருணையுப தேச     பதவிதரு ஞானப் ...... பெருமாள்காண் 
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மை     பகருமதி காரப் ...... பெருமாள்காண் 
திருவளரு நீதி தினமனொக ராதி     செகபதியை யாளப் ...... பெருமாள்காண் 
செகதலமும் வானு மருவையவை பூத     தெரிசனைசி வாயப் ...... பெருமாள்காண் 
ஒருபொருள தாகி அருவிடையை யூரு     முமைதன்மண வாளப் ...... பெருமாள்காண் 
உகமுடிவு கால மிறுதிகளி லாத     உறுதியநு பூதிப் ...... பெருமாள்காண் 
கருவுதனி லூறு மருவினைகள் மாய     கலவிபுகு தாமெய்ப் ...... பெருமாள்காண் 
கனகசபை மேவி அனவரத மாடு     கடவுள்செக சோதிப் ...... பெருமாளே.

பரமசிவனுக்கும் குருநாதனே, கருணையுடன் உபதேசிப்பவனே, அருட் பதவிகளைத் தருகின்ற பெருமாள் நீதான். பகலும் இரவும் அற்றதான ஞான ஒளிவீசும் சிதாகாச வெளியில் மேலான உண்மைப் பொருளை விளக்கும் அதிகாரம் கொண்டுள்ள பெருமாள் நீதான். முக்திச் செல்வத்தை வளர்க்கின்ற நீதியே, நித்ய மனோகரனே, ஆதிப் பரம்பொருளே, உலகிலுள்ள மன்னர்களை எல்லாம் ஆள்கின்ற பெருமாள் நீதான். மண்ணும், விண்ணும், அவற்றில் பொருந்தியுள்ள ஐந்து பூதங்களிலும் கலந்து விளங்கி தரிசனம் தரும் சிவாயநம என்ற பஞ்சாட்சரப் பொருளான பெருமாள் நீதான்*. ஏக வஸ்துவாகி அருமையான ரிஷப வாகனத்தில் ஏறுகின்ற பார்வதியின் மணவாளப் பெருமாளும் நீதான்*. பிரபஞ்சங்களின் யுக முடிவு, காலம், இறுதிகள் என்பவை இல்லாத நிலைபெற்ற சிவாநுபூதியைத் தந்தருளும் பெருமாள் நீதான். கருக்குழியிலிருந்தே ஊறி வருகின்ற கொடிய வினைகள் அழிய மீண்டும் என்னை மாயப் பிரபஞ்ச சேர்க்கையில் புகுத்தாத பெருமாள் நீதான். பொன்னம்பலத்தில் (சிதம்பரம்) பொருந்தி எப்போதும் திருநடனம் புரிகின்ற* தெய்வமாகின்ற ஜெகஜ்ஜோதியான பெருமாளே. 
* சிதம்பரத்து நடராஜனை முருகனாகவே அருணகிரிநாதர் காண்கிறார்.

பாடல் 516 - சிதம்பரம் 
ராகம் - ...; தாளம் -

தந்தனா தான தானன தந்தனா தான தானன     தந்தனா தான தானன ...... தனதான

வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய     வன்கணா ரார வாரமு ...... மருள்வோராய் 
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்     வந்தியா ஆசை யேதரு ...... விலைமாதர் 
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு     பஞ்சியே பேசி நாடொறு ...... மெலியாதே 
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய     பண்புசேர் பாத தாமரை ...... யருள்வாயே 
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்     அன்றுதா னேவி வானவர் ...... சிறைமீள 
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்     அண்டர்கோ வேப ராபர ...... முதல்வோனே 
கொஞ்சவே காலின் மேவுச தங்கைதா னாட ஆடிய     கொன்றையா னாளு மேமகிழ் ...... புதல்வோனே 
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு     குன்றுதோ றாடல் மேவிய ...... பெருமாளே.

வஞ்சகத்தையே கோடிக் கணக்காய் உள்ளத்தில் சேர்த்து வைத்துள்ள கொடியவர்கள், ஆரவாரத்துடன் அருள் புரிபவர்கள் போல காண்பித்து வீணில் வாது பேசுபவர்கள், கொஞ்சிப் பேசி காம விளையாட்டுகளைப் பற்றிப் புகழ்ந்து, ஆசையை வளர்க்கின்ற பொது மகளிரின் ஐந்து பெரிய பாவங்களுக்கும் இடமாகும் மார்பகங்களின் மேல் அன்பு வைத்து மிக வருத்தம் காட்டிப் பேசி, நான் நாள் தோறும் மெலிந்து போகாமல், வரிசையாக தேவர்கள் தொழ நின்ற பெருமை விளங்கும் பண்புகள் பொருந்திய திருவடித் தாமரைகளை எனக்கு அருள் செய்வாயாக. சூரன் பயப்படும்படியும், பிழைத்திராதபடியும் வேலை அன்றைக்கே செலுத்தி, தேவர்கள் சிறையினின்றும் மீள அன்புடன் அவர்களுடைய விருப்பம் நிறைவேற மேலான வாழ்வை அளித்த தேவர்கள் தலைவனே, பராபர முதல்வனே, கொஞ்சுதல் போல, காலில் கட்டியுள்ள சதங்கை ஒலிக்க நடனம் செய்த, கொன்றையை அணிந்த சிவபெருமான் நாள்தோறும் மகிழ்கின்ற பிள்ளையே, பூங்கொத்துக்கள் சேர்ந்த சோலைகள் பொருந்திய குன்றுகளின் சூழல் உள்ள பழமுதிர் சோலை ஆகிய குன்றுகளில் எல்லாம் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சோலை மேவிய குன்று என்று ஒரு தனித்தலம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை குன்று தோறாடல் அல்லது பழமுதிர்ச்சோலையின் கீழ் வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

பாடல் 517 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -

தனதன தனனத் தான தனதன தனனத் தான     தனதன தனனத் தான ...... தனதான

திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி     சிவவழி யுடனுற் றேக ...... பரமீதே 
சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல     திரிபுர மெரியத் தீயி ...... னகைமேவி 
இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி     யிருள்கதி ரிலிபொற் பூமி ...... தவசூடே 
இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ     ரிளையவ னெனவித் தார ...... மருள்வாயே 
பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர்     பழமறை பணியச் சூல ...... மழுமானும் 
பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு     பரியினை மலர்விட் டாடி ...... அடியார்கள் 
அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல     மருள்செயு முமையிற் பாக ...... ரருள்பாலா 
அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ     டடியவர் கயிலைக் கான ...... பெருமாளே.

ஒளி வீசும் ஜோதி இடத்தைப் பொருந்தி, பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள்* அடைபடும்படி மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி, விளங்கி நிற்கும் (காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் பொரிந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகையக் கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் இளையவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக. சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடுபடும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் என்னும் முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, (கைகளில் ஏந்திய) சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, நாகராஜனாகிய ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருத்தலை விட்டு, நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகி ஜெய ஜெய என்று போற்ற, ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு, அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் விருப்பம் காட்டும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

பாடல் 518 - கயிலைமலை 
ராகம் - தோடி; தாளம் - கண்டசாபு - 2 1/2

தானந் தனத்ததன தானந் தனத்ததன     தானந் தனத்ததன ...... தனதான

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர்     சீரும் பழித்தசிவ ...... மருளூறத் 
தீதும் பிடித்தவினை யேதும் பொடித்துவிழ     சீவன் சிவச்சொருப ...... மெனதேறி 
நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி     நாதம் பரப்பிரம ...... வொளிமீதே 
ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தியொடெ     நாளுங் களிக்கபத ...... மருள்வாயே 
வானந் தழைக்கஅடி யேனுஞ் செழிக்கஅயன்     மாலும் பிழைக்கஅலை ...... விடமாள 
வாருங் கரத்தனெமை யாளுந் தகப்பன்மழு     மானின் கரத்தனருள் ...... முருகோனே 
தானந் தனத்ததன னாவண்டு சுற்றிமது     தானுண் கடப்பமல ...... ரணிமார்பா 
தானங் குறித்துஎமை யாளுந் திருக்கயிலை     சாலுங் குறத்திமகிழ் ...... பெருமாளே.

நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா, பலா, வாழை) பால், சிவந்த கரும்பு, இள நீர் இவைகளின் இனிப்பின் சிறப்பையும் (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்) தாழ்மைப்படுத்துகின்ற மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப் பெருகவும், தீவினை, நல்வினை முழுவதும் தூள்பட்டு ஒழியவும், இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது என்று நன்கு தெளிந்து, அகங்காரத்தை அடியோடு நீத்தும், உயிர்ப்பற்று, உடற்பற்று இரண்டையும் அகற்றியும், (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள அருள்நாதப் பிரம்மமாம் பரஞ்ஜோதியில் சிவ ஞானம் பெருகிவரவும், மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோட்சத்தில், அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு நின் திருவடியைத் தந்தருள்வாயாக விண்ணுலகு தழைத்து ஓங்கும் பொருட்டும், அடியேனும் சிவநலம் பெற்று உய்வதன் பொருட்டும், பிரம்மாவும், திருமாலும் (சூரனால் அழியாது) வாழும் பொருட்டும், பாற்கடலில் தோன்றிய விஷத்தின் வலிமை அழிய (அவ்விஷத்தை) குடிக்க வாரி எடுத்த கரத்தை உடையவரும், எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும், நெருப்பையும், மானையும் ஏந்திய திருக்கரத்தை உடையவருமான சிவபெருமான் பெற்றருளிய முருகக் கடவுளே தானந் தனத்ததனனா என்ற ¡£ங்காரத்துடன் வண்டானது வட்டமிட்டு தேனை உண்ணுகின்ற கடப்ப மலரை தரித்துக் கொள்கிற திருமார்பை உடையவனே (எமைக் காப்பதற்கு) தக்க இடமாகக் குறித்து எங்களை ஆட்கொள்ளவென்றே திருக்கயிலாய மலைமேல் எழுந்தருளிய, வள்ளிநாயகி மகிழ்கின்ற பெருமாளே. 

பாடல் 519 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -

தனத்த தனத்த தனத்த தனத்த     தனத்த தனத்த ...... தனதான

நகைத்து வுருக்கி விழித்து மிரட்டி     நடித்து விதத்தி ...... லதிமோகம் 
நடத்து சமத்தி முகத்தை மினுக்கி     நலத்தி லணைத்து ...... மொழியாலுந் 
திகைத்த வரத்தி லடுத்த பொருட்கை     திரட்டி யெடுத்து ...... வரவேசெய் 
திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்     தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ 
பகைத்த அரக்கர் சிரத்தை யறுத்து     படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப் 
பணைத்த கரத்த குணத்த மணத்த     பதத்த கனத்த ...... தனமாதை 
மிகைத்த புனத்தி லிருத்தி யணைத்து     வெளுத்த பொருப்பி ...... லுறைநாதா 
விரித்த சடைக்கு ளொருத்தி யிருக்க     ம்ருகத்தை யெடுத்தொர் ...... பெருமாளே.

சிரித்து, (மனத்தை) உருக்கி, விழிகளை விழித்து, அச்சத்தைத் தந்து, நடித்து, பல விதமாக அதிக மோக மயக்கத்தை ஊட்டுகின்ற சாமர்த்தியத்தைக் காட்டி, முகத்தை மினுக்கிக்கொண்டு, இதமாகவே அணைத்து, பேச்சினாலும் திகைப்பு உண்ட நிலையில், அவர்கள் கேட்டபடி கிடைத்த பொருளைக் கையில் சேகரித்துக்கொண்டு வரும்படி செய்கின்ற திருட்டுப் பெண்களின் மார்பகங்களான மயக்கம் தரும் காம வலையிலும், மிகுந்த காம சாத்திரச் செயல்களிலும் விழுவேனோ? பகைத்து வந்த அரக்கர்களின் தலைகளை அறுத்து, படர்ந்த கரு நிறம் கொண்ட மயிலின் மேல் ஏறி, செழுமையான திருக்கரங்களும், குணமான நறு மணம் கொண்ட பாதங்களும், விம்மிப் பெருத்த மார்பகங்களும் கொண்ட பெண்ணாகிய வள்ளியை, சிறப்பு மிக்க தினைப் புனத்தில் (வள்ளிமலையில்) வைத்து அணைத்து, வெள்ளி மலையாகிய கயிலைகிரியில் உறைகின்ற நாதனே, விரிந்துள்ள சடையில் கங்கை என்னும் ஒரு பெண் இருக்க, மானைக் கையில் ஏந்திய சிவபெருமானுக்கு (உரிய) பெருமாளே. 

பாடல் 520 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -

தனன தந்தன தானனா தனதனன     தனன தந்தன தானனா தனதனன          தனன தந்தன தானனா தனதனன ...... தனதான

பனியின் விந்துளி போலவே கருவினுறு     மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவர்          பனைதெ னங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப் 
பருவ முந்தலை கீழதாய் நழுவிநில     மருவி யொன்பது வாசல்சே ருருவமுள          பதுமை யின்செயல் போலவே வளிகயிறி ...... னுடனாடி 
மனவி தந்தெரி யாமலே மலசலமொ     டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்          மயம யின்றொரு பாலனா யிகமுடைய ...... செயல்மேவி 
வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும்     அறம றந்தக மீதுபோய் தினதினமு          மனம ழிந்துடல் நாறினே னினியுனது ...... கழல்தாராய் 
தனன தந்தன தானனா தனதனன     தினன திந்தன தீததோ திகுததிகு          தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி 
தவில்க ணம்பறை காளமோ டிமிலைதொனி     யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு          சமர்மு கங்களின் மேவியே விருதுசொலு ...... மவுணோர்கள் 
சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள்     குருதி யெண்டிசை மூடவே அலகைநரி          சிறையி னங்களி கூரவே நகையருளி ...... விடும்வேலா 
சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி     மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ்          திகழ்கு றிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... பெருமாளே.

பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில், அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய், பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப் பழ அளவுக்கு வயிறு பெரிதாகி, (பூமிக்கு வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப் பூமியை அடைந்து, ஒன்பது துவாரங்களைக் கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது, இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மல சலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும், தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு, ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து, உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர, நாள்தோறும் மனம் உடைந்து, உருக் குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து அருள்வாயாக. தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ என்ற தாளத்துக்கு ஏற்ப, முரசு, சங்கு, பேரிகை, மேள வகை, அதமக் கருவியான புற முழவு, எக்காளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்கும் ஒலி வகைகள் முழக்கம் செய்து, ஏழு கடல்களைப் போலப் பெரும் சப்தத்தைக் கிளப்ப, சண்டை நடக்கும் போர் முனைகளில் நின்று தமது வீரச் செயல்களைச் சொல்லும் அசுரர்களின் கோபம் குலைந்து அழிபட, தேர்கள் அழிபட, யானை, வலிமை உள்ள குதிரைகள் ஆகியவைகளின் ரத்தம் எட்டுத் திசைகளையும் மூட, பேய்கள், நரிகள், (கோட்டான் போன்ற) பறவைகள் மகிழ்ச்சி கொள்ள, சிரித்து அருளிச் செலுத்திய வேலாயுதனே. சிவ பெருமான் மகிழ்ந்தருளிய யானையின் அழகிய முகத்தைக் கொண்ட கணபதி கூட இருந்து மனம் மகிழ்ந்து அருள் புரிய, ஒப்பற்ற கயிலை மலையில் மகிழ்கின்ற, விளங்கும் வள்ளிமலை மாதாகிய வள்ளி காதல் கொண்டு அருகில் இருக்கும், புகழ் வாய்ந்த பெருமாளே. 

பாடல் 521 - கயிலைமலை 
ராகம் - அடானா; தாளம் - கண்டசாபு - 2 1/2

தனதனனத் ...... தனதான     தனதனனத் ...... தனதான

புமியதனிற் ......ப்ரபுவான     புகலியில்வித் ...... தகர்போல 
அமிர்தகவித் ...... தொடைபாட     அடிமைதனக் ...... கருள்வாயே 
சமரிலெதிர்த் ...... தசுர்மாளத்     தனியயில்விட் ...... டருள்வோனே 
நமசிவயப் ...... பொருளானே     ரசதகிரிப் ...... பெருமாளே.

இந்தப் பூமண்டலத்தின் தனிப் பெரும் தலைவரும், சீர்காழிப்பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் புரிவாயாக. போரில் எதிர்த்து வந்த சூரன் மாண்டொழிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவி அருளியவனே, நமசிவய என்ற ஐந்தெழுத்தின் தத்துவமாகியவனே, வெள்ளியங்கிரியில் (கயிலைமலை) உள்ள பெருமாளே. 
* புகலி = சீர்காழி: உலகமே அழியினும் அழியாத தலமாகிய சீர்காழிதான் தேவர்களுக்கும் புகலிடம் என்பதால் புகலி என்ற பெயர் பெற்றது.

பாடல் 522 - கயிலைமலை 
ராகம் - ...; தாளம் -

தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த     தனத்தத் தனத்த தத்த ...... தனதான

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந     முலைக்கச் சவிழ்த்த சைத்து ...... முசியாதே 
முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து     மொழிக்குட் படுத்த ழைத்த ...... மளிமீதே 
நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த     நயத்திற் கழுத்தி றுக்கி ...... யணைவார்பால் 
நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து     நயத்துத் தியக்கி நித்த ...... மழிவேனோ 
செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க     திமித்தித் திமித்தி தித்தி ...... யெனஆடும் 
செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த     ஜெனத்துக் கினித்த சித்தி ...... யருள்வோனே 
மிசைத்துத் திடத்தொ டுற்று அசைத்துப் பொறுத்த ரக்கன்     மிகுத்துப் பெயர்த்தெ டுத்த ...... கயிலாய 
மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்தி டித்து     மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே.

முகத்தை நன்றாக ஒழுங்கு செய்து மிகவும் மினுக்கித் தொடைத்து, ரத்தின மயமான மார்க் கச்சை அவிழ்த்து சற்றேனும் பின் வாங்காமல் அசைத்து, முழுமையாகக் காலம் போக்கியும், வஞ்சித்தும், தாமதப் படுத்தியும், (வந்தவர்களிடம்) பொருளைப் பறித்தும், தங்களுடைய பேச்சில் மயங்கி உட்படச் செய்தும், அவர்களைஅழைத்துக் கொண்டு போய் படுக்கையின் மேல், சிரித்து அணைத்து முத்தம் கொடுத்து, மகிழ்ந்து, மிகுந்த பக்குவத்துடன் கழுத்தை அழுந்த அணைந்து கொள்ளும் விலைமாதர்களுக்கு அஞ்சி நடுங்கியும், மிகவும் மனதை அவர்கள் பால் (ஓடை போலப்) பெருகிப் பாய வைத்தும், (அவர்களை) நயந்து வேண்டியும், கலக்கம் உற்று தினந்தோறும் அழிந்து போவேனோ? செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என்ற தாள ஒத்துக்களுடன் கூத்தாடுகின்ற, உலகுக்கு ஒப்பற்றவராய் நிற்கும் சிவபெருமானுடைய குமரனே, (உன்னைத்) தியானித்து வணங்கும் அடியார் கூட்டத்துக்கு இனிமையான பேற்றை அருள்பவனே, மேல்சென்று திடத்துடன் பொருந்தி (மலையின் பாரத்தைப்) பொறுத்து, ராவணன் ஆணவம் மிகுத்து பெயர்த்து எடுத்த கயிலாய மலையில் வீற்றிருந்து, அந்தக் கயிலை மலைக்கு அடுத்திருந்த பிறிதொரு மலையான கிரவுஞ்சத்தைப் பொடியாகும்படி தூள் செய்து அடக்கித் தொகைத்து விட்ட பெருமாளே. 
* ராவணன் திக்கு விசயம் செய்த போது அவனுடைய புஷ்பக விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாமல் நிற்க, அந்த மலையை வேரோடு பறித்து எறிய முயன்றான். மலை அசைந்தவுடன், சிவபெருமான் தமது கால் விரலால் அம்மலையை அழுத்தினார். இராவணன் நசுக்குண்டு இன்னிசை பாடி இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.

பாடல் 523 - ஸ்ரீ சைலம் திருமலை 
ராகம் - பிலஹரி ; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதன தனதன தனதன தனதன     தனதன தனதன ...... தனதான

ஒருபது மிருபது மறுபது முடனறு     முணர்வுற இருபத ...... முளநாடி 
உருகிட முழுமதி தழலென வொளிதிகழ்     வெளியொடு வொளிபெற ...... விரவாதே 
தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து     திரிதொழி லவமது ...... புரியாதே 
திருமகள் மருவிய திரள்புய அறுமுக     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே 
பரிவுட னழகிய பழமொடு கடலைகள்     பயறொடு சிலவகை ...... பணியாரம் 
பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி     எழுதிய கணபதி ...... யிளையோனே 
பெருமலை யுருவிட அடியவ ருருகிட     பிணிகெட அருள்தரு ...... குமரேசா 
பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்     பிணையமர் திருமலை ...... பெருமாளே.

ஒரு பத்து, இருபது, அறுபது, ஆறு (10+20+60+6) ஆக தொண்ணூற்றாறு தத்துவங்களின்* உண்மையை உணர்ந்து, உன் இரண்டு திருவடிகளையும் உள்ளத்தில் தியானித்து அதனால் உள்ளம் உருகிட, பூரண சந்திரனது தீப்போன்று ஒளி வீசும் பரவெளியின் ஒளியை யான் பெற்று அதோடு கலவாமல், வீதியிலே மரம் போல நின்று யாரோடும் பேசித் திரியும் தொழிலை யான் மேற்கொண்டு வீணாக அலையாது இருப்பதற்காக, லக்ஷ்மியின் மகள் வள்ளி தழுவிய திரண்ட தோள்களை உடையவனே, ஆறுமுகனே, உன் அருட்காட்சி பெற எனக்கு அருள் புரிவாயாக. அன்போடு நிவேதனம் செய்யப்பட்ட நல்ல பழங்களுடன், கடலை வகைகள், பயறு, சில பணியாரங்களை உண்ணும் பெரு வயிற்றை உடையவரும், பழமையான மொழியாகிய மஹாபாரதத்தை மேருமலையில் எழுதியவருமான கணபதிக்குத் தம்பியே, பெரிய கிரெளஞ்சமலையை ஊடுருவவும், உன் அடியவர்கள் உள்ளம் உருகிடவும், அடியார்களின் பிறவிநோய் தொலையவும் திருவருள் புரிகின்ற குமாரக் கடவுளே, பெண்யானைகளோடு ஆண்யானைகள் உலாவும், கலைமான்களின் கூட்டம் பெண்மான்களோடு விரும்பி அமரும் திருமலையாகிய ஸ்ரீசைலத்தில்** உள்ள பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** ஸ்ரீசைலம் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் இங்குள்ள மல்லிகார்ச்சுனரும் ஒருவர்.தமிழில் இவ்வூர் திருமலை, திருப்பருப்பதம் எனப்படும்.

பாடல் 524 - திருவேங்கடம் 
ராகம் - முகாரி ; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகதிமிதக-3, தகதிமி-2, தகிட-1 1/2

தனத்ததன தனதன தனந்த     தனத்ததன தனதன தனந்த          தனத்ததன தனதன தனந்த ...... தனதான

கறுத்ததலை வெளிறு மிகுந்து     மதர்த்த இணை விழிகள் குழிந்து          கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க் 
கழுத்தடியு மடைய வளைந்து     கனத்தநெடு முதுகு குனிந்து          கதுப்புறுப லடைய விழுந்து ...... தடுநீர்சோர் 
உறக்கம்வரு மளவி லெலும்பு     குலுக்கிவிடு மிருமல் தொடங்கி          உரத்தகன குரலு நெரிந்து ...... தடிகாலாய் 
உரத்தநடை தளரு முடம்பு     பழுத்திடுமுன் மிகவும் விரும்பி          உனக்கடிமை படுமவர் தொண்டு ...... புரிவேனோ 
சிறுத்தசெலு வதனு ளிருந்து     பெருத்ததிரை யுததி கரந்து          செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே 
செறித்தவளை கடலில் வரம்பு     புதுக்கியிளை யவனோ டறிந்து          செயிர்த்தஅநு மனையு முகந்து ...... படையோடி 
மறப்புரிசை வளையு மிலங்கை     யரக்கனொரு பதுமுடி சிந்த          வளைத்தசிலை விஜய முகுந்தன் ...... மருகோனே 
மலர்க்கமல வடிவுள செங்கை     அயிற்குமர குகைவழி வந்த          மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே.

கருப்பாயிருந்த தலை முடி நரையினால் மிக்க வெண்மையாகி, செழிப்புற்று இருந்த இரு கண்களும் குழிவிழுந்து, கன்னங்களில் இருந்த சதைகள் வற்றிப்போய், காதுகள் வெறும் தோலாக மெலிந்து, கழுத்தின் அடிப்பாகம் முற்றிலும் வளைந்து, பருத்திருந்த அகன்ற முதுகும் கூன் விழுந்து குறுகி, தாடையில் இருந்த பற்கள் மொத்தமாய் விழுந்து, உதடுகளில் ஜொள்ளு ஒழுக, தூக்கம் வரும் சமயத்தில் எலும்புகளைக் குலுக்கித் தள்ளும்படி இருமல் வந்து, வலிமையும் உறுதியும் பெற்றிருந்த குரல் நெரிபட்டு அடங்கி, கைத்தடியே கால் போல உதவ, வலிமை மிகுந்த நடை தளர்ந்து இந்த உடம்பு முதுமை அடைவதற்கு முன்பு, மிகுந்த விருப்பத்துடன் உனக்கு அடிமை பூண்டுள்ள அடியார்களுக்கு யான் தொண்டு புரிய மாட்டேனோ? சிறிய மீன் உருவத்தினுள் அவதாரம் செய்து, பெரிய அலை வீசும் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த வேதங்களை மீட்டு வருவதற்காகத் தோன்றிய வெற்றித் திருமாலும், கணையைச் செலுத்தி, அந்த வளைந்த கடலில் அணையைப புதிதாகக் கட்டி, தம்பி இலக்குவனோடும், ராவணனுடைய நிலையை அறிந்து சீறிய (இலங்கையில் தீ மூட்டித் திரும்பிய) அநுமனுடனும் மகிழ்ந்து, வானரப் படையைச் செலுத்தி, வீரம் பொருந்திய மதில்கள் சூழ்ந்துள்ள இலங்கையில் வாழ்ந்த அரக்கன் ராவணனது பத்துத் தலைகளும் அறுபட்டு விழுமாறு வில்லை வளைத்த வெற்றி முகுந்தன்ஆகிய திருமாலின் மருகோனே, தாமரை மலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கரத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே, குகையின் வழியாக வந்து* வெளிவந்த மலையாகிய, சிகரத்தை உடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே. 
* ஒருமுறை உமாதேவியிடம் கோபித்துக்கொண்டு கயிலையை விட்டு பாதாளத்தில் ஒளிந்து கொண்ட முருகக் குழந்தை குகை வழியே திருவேங்கட மலையின் உச்சியை அடைந்து நின்றான் - கந்தபுராணம்.

பாடல் 525 - திருவேங்கடம் 
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா; தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்

தனதன தனதன தனதன தனதன     தனதன தனதன தனதன தனதன          தனதன தனதன தனதன தனதன ...... தனதான

சரவண பவநிதி யறுமுக குருபர     சரவண பவநிதி யறுமுக குருபர          சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் 
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு     சனனம ரணமதை யொழிவுற சிவமுற          தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே 
கருணைய விழிபொழி யொருதனி முதலென     வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ          கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா 
கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள்     கலகமி னையதுள கழியவும் நிலைபெற          கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே 
திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய     குமரச மரபுரி தணிகையு மிகுமுயர்          சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா 
தினமுமு னதுதுதி பரவிய அடியவர்     மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ          திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே 
அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்     மருகனெ னவெவரு மதிசய முடையவ          அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே 
அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென     வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற          அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.

சரவணபவனே*, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, சரவணபவனே, நிதியே, ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே, என்று பல முறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக. கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே, ஒப்பற்ற தனிப் பெரும் தலைவனென வந்த யானைமுகக் கணபதியை துணையாகக் கொண்ட இளையவனே, கவிதைகளாகிய அமுத மொழிகளை வழங்குபவருடைய உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள் புரியும் நேசம் உடையவனே, கடல் சூழ்ந்த இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும், கலக்கங்களும், இன்னும் இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும், நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும், உனது திருவடி நிழல் அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ? திரிபுரங்களை எரித்த சிவபெருமான் பெற்றருளிய குமாரனே, திருப்போரூரிலும், திருத்தணிகையிலும், மிகவும் உயர்ந்த சிவகிரியிலும், திருவேங்கடத்திலும் உலவும் வடிவேலனே, நாள்தோறும் உன் புகழைக் கூறும் அடியார்களின் உள்ளக் கோவிலில் குடிகொண்டவனே, அருட்செல்வம், பொருட்செல்வம் ஆகிய இரண்டிலும் விளங்குபவனே, இருண்ட ஆணவ மலம் ஒழியுமாறு ஞானசூரியனாக வருகின்ற பெரும் செல்வமே, பாம்பணையில் துயில்பவரும், நரசிம்மருமாகிய நெடிய திருமாலின் மருகோனாக வரும் அதிசய மூர்த்தியே, மலத்தை நீக்குபவளும், மலம் அற்றவளும், பெரியவளும் ஆகிய உமாதேவி தந்தருளிய முருகக் கடவுளே, அதலம் விதலம் முதலிய ஏழு உலகங்களும் கிடுகிடுவென நடுநடுங்க வருகின்ற மயிலின் மீது இனிதாக ஒளி வீசுபவனே, ஆறுகோணச் சக்கரத்தின் மையத்தில் அழகுடன் அமர்கின்ற ஹர ஹர சிவ சிவ, பெருமாளே. 
* 'சரம்' - தர்ப்பை, 'வனம்' - காடு, 'பவன்' - வெளிப்பட்டவன். நாணற்புல் காட்டில் தோன்றியதால் 'சரவனபவன்'. தமிழ் இலக்கண விதிப்படி 'ர'கரத்தின் பின்வரும் 'ன'கரம் 'ண'கரமாகும் என்பதால் 'சரவணபவன்'.

பாடல் 526 - திருவேங்கடம் 
ராகம் - ...; தாளம் -

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்   தத்தத் தத்தத் தனதான      தனத்த தனத்த தனத்த தனத்தன         தனதன தனதன தனதன தனதன            தனதன தனதன ...... தனதான

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்   கச்சிக் கச்சுற் றறன்மேவி      நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய         நிரைதரு மருமலர் செருகிடு பரிமள            நிறையுறை மதுகர ...... நெடிதாடி 
நிச்சிக் கச்சப் பட்டுச் சிக்கற்   றொப்புக் கொப்புக் குயர்வாகி      நெளித்த சுளித்த விழைக்கு ளழைத்துமை         நிகரென வகருவு முகுபுகை தொகுமிகு            நிகழ்புழு கொழுகிய ...... குழன்மேலும் 
வச்ரப் பச்சைப் பொட்டிட் டப்பொட்   டுக்குட் செக்கர்ப் ப்ரபைபோல      வளைத்த தழைத்த பிறைக்கு முறைக்குமன்         மதசிலை யதுவென மகபதி தனுவென            மதிதில தமும்வதி ...... நுதன்மேலும் 
மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்   பொற்பக் கத்திச் சையனாகி      மனத்தி னனைத்து மணைத்த துணைப்பத         மலரல திலைநிலை யெனமொழி தழியமெய்            வழிபட லொழிவனை ...... யருள்வாயே 
நச்சுத் துச்சொப் பிச்சுக் குட்டத்   துட்டக் கட்டத் தசிகாண      நடத்தி விடத்தை யுடைத்த படத்தினில்         நடநவில் கடலிடை யடுபடை தொடுமுகில்            நகைமுக திருவுறை ...... மணிமார்பன் 
நத்தத் தைச்சக் ரத்தைப் பத்மத்   தைக்கைப் பற்றிப் பொருமாய      னரிக்கு மரிக்கு மெரிக்கும் விருப்புற         நசிதரு நிசிசர ருடகுட லிடல்செய்த            நரகரி யொருதிரு ...... மருகோனே 
கச்சுத் தச்சுப் பொற்கட் டிட்டுப்   பட்டுக் குட்பட் டமுதாலுங்      கருப்பி ரசத்து முருச்செய் துவைச்சிடு         கனதன பரிமள முழுகுப னிருபுய            கனகதி வியமணி ...... யணிமார்பா 
கைச்சத் திக்குக் கெற்சித் தொக்கப்   பட்சிக் கக்கொட் டசுராதி      கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு         கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு            கடவட மலையுறை ...... பெருமாளே.

(பாடலின் முதல் 15 வரிகள் மாதரின் கூந்தலையும் நெற்றியையும் வருணிக்கின்றன). தேன் பொருந்திய பிச்சி மலரின் குளிர்ச்சியை உடையதாய், கச்சிதமாக முடியப்பட்டதாய், கரு மணலை ஒத்ததாய், சுருண்டு மணமுள்ளதாய், இருளை அச்சுறுத்தும் கருமை கொண்டதாய், வாசனை மலர்களை வரிசையாகச் செருகியதாய், நறுமணத்தில் வாழ்கின்ற வண்டுகள் மொய்த்து மகிழ்வதாகி, இரவுக்கு பயத்தை அளிப்பதாய், சிக்கல் இல்லாததாய், சமானம் இன்றி அலங்காரத்தில் உயர்வு அடைந்து, வளைவும் சுருளும் உடையதாய், விருப்பத்தைத் தந்து அழைப்பதாய், அஞ்சனத்துக்கு ஒப்பு என்னும்படியாகி, அகில் தருகின்ற புகையின் தொகுதி மிகுந்து விளங்கும் புனுகு கமழ்கின்ற கூந்தலின் மேலும், வஜ்ரம் போல ஒளி தரும் பச்சைப் பொட்டை (நெற்றியில்) இட்டு, அந்தப் பொட்டுக்குள் சிவந்த பிரபை போல வளைந்த செழிப்புள்ள பிறைக்கு ஒப்பாக உறைவதாகி, மன்மதனின் வில் என்னும்படி இந்திரன் ஏவிய வான வில் என்னும்படி (வளைவாய் விளங்க வைத்த) பிறை போன்ற குறி அமைந்துள்ள நெற்றியின் மேலும், (உடலில் உள்ள) மச்சங்களின் மீதும், சிவந்த விசித்திரமான அதிசயிக்கத் தக்க அழகிய உடல் பக்கங்களிலும் இச்சை கொண்டவனாய் மனத்தில் நினைத்தவை எல்லாவற்றையும் அறிந்து உதவவல்ல உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள் வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு செய்யாத எனக்கு அருள் புரிவாயாக. விஷத்தை உண்ட (பீமன், அந்த விஷம் தாக்காமல்) சோபித்து விளங்கவும், நீர் நிலையுள் தங்கும்படி குறுக்கே வைத்திருந்த வாள் முனைகள் இருக்கும் இடத்தைத் தெரியும்படி (அந்த பீமனுக்குக்) காட்டியும்* விஷம் உடையும்படி (காளிங்கன் என்னும் பாம்பின்) பணாமுடியின் மீது நின்று நர்த்தனம் செய்தும், கடல் மீது கொல்லத் தக்க தமது பாணத்தை (ராமனாகச்) செலுத்தியும் (ஆடல் புரிந்த) மேக நிறத்துத் திருமால், சிரித்த முகத்தை உடைய லக்ஷ்மி உறையும் அழகிய மார்பை உடையவன், சங்கையும் சக்கரத்தையும் தாமரை போன்ற கையில் பற்றி சண்டை செய்யும் மாயவனாகிய திருமால், நரிக்கும், வாளுக்கும், நெருப்புக்கும் விருப்பம் உண்டாகும்படி, அழிந்து போகின்ற அசுரர்களின் குடலை இடுதலைச் செய்தவனும், நரகாசுரனுக்குப் பகைவனுமான திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் மருகனே, கச்சைக் கட்டி அழகாக முடி போட்டு பட்டுத் துணிக்குள் அமைந்ததாய் உள்ள, அமுதக் குடம் பொதிந்து அசைவதாய், கரும்பின் ரசத்தையே உருச் செய்து வைத்திட்டதாய் உள்ள (வள்ளியின்) பருத்த மார்பகங்களின் நறு மணத்தில் முழுகும் பன்னிரு தோள்களை உடையவனே, பொன்னாலாய மேன்மையான ரத்தினங்களை அணிந்த மார்பனே, கையில் விளங்கும் வேல் ஆரவாரம் செய்து நன்றாக உண்ணும்படி, வாத்திய முழக்குடன் வந்த அசுரர் தலைவனாகிய சூரனை கரு நிறம் உடைய அரக்கர்கள் கூட்டத்துடன் கோபித்து அழித்த இளையவனே, வழிகளின் பக்கங்களில் உள்ள காடுகள் சூழும் திருவேங்கட மலையில் உறையும் பெருமாளே. 
* ஆற்றில் கழு முனைகளை மறைவாக நிறுத்தி, அங்கே பீமனைக் குதித்து விளையாடச் செய்தான் துரியோதனன்.அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளால் காட்டிப் பீமனைக் கண்ணன் காப்பாற்றினார்.

பாடல் 527 - திருவேங்கடம் 
ராகம் - ...; தாளம் -

தாந்தன தானதன தாந்தன தானதன     தாந்தன தானதன ...... தனதான

கோங்கிள நீரிளக வீங்குப யோதரமும்     வாங்கிய வேல்விழியும் ...... இருள்கூருங் 
கூந்தலு நீள்வளைகொள் காந்தளு நூலிடையும்     மாந்தளிர் போல்வடிவும் ...... மிகநாடிப் 
பூங்கொடி யார்கலவி நீங்கரி தாகிமிகு     தீங்குட னேயுழலும் ...... உயிர்வாழ்வு 
பூண்டடி யேனெறியில் மாண்டிங னேநரகில்     வீழ்ந்தலை யாமலருள் ...... புரிவாயே 
பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்     வேங்கையு மாய்மறமி ...... னுடன்வாழ்வாய் 
பாண்டவர் தேர்கடவும் நீண்டபி ரான்மருக     பாண்டிய னீறணிய ...... மொழிவோனே 
வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர்     வேங்கட மாமலையி ...... லுறைவோனே 
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.

கோங்கு மரத்தின் முகை, இளநீர் (இவை இரண்டும்) தோற்கும்படி பெருகி வளரும் மார்பகங்களும், செலுத்தப்பட்ட வேல் போன்ற கண்களும், இருள் மிகுந்த கூந்தலும், பெரிய வளையல்களை அணிந்துள்ள காந்தள் மலர் போன்ற கைகளும், நூல் போன்ற இடுப்பும், மாந்தளிர் போன்ற மேனியும் (ஆகிய இவைகளை) மிகவும் விரும்பி, பூங்கொடி போன்ற பொது மாதர்களின் சேர்க்கையை விடுதற்கு முடியாமல் மிக்க தீமைச் செயல்களுடன் திரிகின்ற உயிர் வாழ்க்கையை மேற்கொண்டு அடியவனாகிய நான் அந்த இழிந்த வழியிலேயே நின்று இறந்து இங்ஙனம் நரகத்தில் விழுந்து அலையாமல் அருள் புரிவாயாக. தோழியும் வேடர்களும் திகைக்கும்படி சிறந்த தவ முனியாக வந்த கிழவர் போலவும், வேங்கை மரமாகவும் வேடங்கொண்டு வேட்டுவர்களின் மின்னல் போன்ற வள்ளியுடன் வாழ்பவனே, பாண்டவர்களின் தேரைச் சாரதியாகச் செலுத்தியவனும், நீண்ட (திரிவிக்கிரம) உருவை எடுத்தவனும் ஆகிய பிரானாகிய திருமாலின் மருகனே, (கூன்) பாண்டியன் திரு நீறு அணியும்படி பதிகம் பாடிய திருஞானசம்பந்தனே, புலியும் யானையும் வேங்கை மரமும் மானும் மிகுந்த திருவேங்கடமாகிய சிறந்த மலையில் உறைபவனே, தங்களுக்குக் குறைகள் உண்டான போது அடியார்கள் அவர்களுக்கு வேண்டிய சுக போகங்களை முறையிட்டு வேண்ட, (சற்றேனும்) வெறுப்பு இல்லாமல் அதை உதவுகின்ற பெருமாளே. 

பாடல் 528 - திருவேங்கடம் 
ராகம் - ...; தாளம் -

தாந்தன தானதன தாந்தன தானதன     தாந்தன தானதன ...... தனதான

சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில     மூண்டவி யாதசம ...... யவிரோத 
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்     தாந்துணை யாவரென ...... மடவார்மேல் 
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு     தோய்ந்துரு காவறிவு ...... தடுமாறி 
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்     யான்தனி போய்விடுவ ...... தியல்போதான் 
காந்தளி னானகர மான்தரு கானமயில்     காந்தவி சாகசர ...... வணவேளே 
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதி     யாண்டகை யேயிபமின் ...... மணவாளா 
வேந்தகு மாரகுக சேந்தம யூரவட     வேங்கட மாமலையி ...... லுறைவோனே 
வேண்டிய போதடியர் வேண்டிய போகமது     வேண்டவெ றாதுதவு ...... பெருமாளே.

பொறுமை இல்லாத மோகத்தினால் உண்டாகிய நெருப்பின் சூடு காந்தவும், ஆசையாகிய பெருங்காற்று மிகுந்து வீசவும், ஒரு போதும் ஓயாத, சமய வெறியால் வாதிட்டுப் பகை கொள்ளச் செய்யும் அழிகின்ற மதசாத்திரம் என்னும் பெரும் சமுத்திரத்தை நீந்திக் கடக்க முடியாமல், உலகில் மனைவி, மக்கள், சுற்றம், இவையே துணையென நம்பியும், பெண்கள் தம் உடல்மீது அணிந்த மார்க் கச்சுடன், இளம் தாமரையன்ன, சந்தனம் பூசிய, மார்பினைத் தழுவியும், உள்ளம் உருகியும், புத்தி தடுமாற்றத்தை அடைந்து, ஏக்கத்தைக் கொண்ட அடியேனுடைய அருமையான ஆவியைக் கவர்ந்து செல்லும் காலனின் வசப்பட்டு யான் துணையின்றி தனியே நமனுலகம் ஏகுதல் தகுதியோ? காந்தள் மலரைப் போன்ற மென்மையான திருக்கரங்களை உடையவளும், மான் ஈன்ற, கானகத்து மயில் போன்றவளுமான அழகி, வள்ளியின் கணவனே, விசாக நக்ஷத்திரத்தில் ஜோதிப் பிழம்பாக வெளிப்பட்டவனே, சரவணபவக் கடவுளே, பார்க்க அழகிய தேவர் தலைநகர் அமராவதியை மீட்டு ஆண்டவனே, வேதங்களால் துதிக்கப்பெறும் சிறந்த வீரனே, ஐராவத யானை போற்றி வளர்த்த மின் கொடி போன்ற தேவயானையின் மணவாளனே, அரசனே, என்றும் இளையவனே, இதய குகையில் உறைபவனே, செம்மையான பண்பு நிறைந்தவனே, மயில் வாகனனே, வட எல்லையில் உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே, உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம் அவர்கள் விரும்பிக் கேட்ட போக பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க, வெறுக்காமல் அவர்களுக்குத் தந்து அருள் புரிகின்ற பெருமாளே. 

பாடல் 529 - திருவேங்கடம் 
ராகம் - சக்ரவாஹம் ; தாளம் - திஸ்ர த்ருபுடை

தனதாந்தன தானன தானன     தனதாந்தன தானன தானன          தனதாந்தன தானன தானன ...... தனதான

வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு     முழைவார்ந்திடு வேலையு நீலமும்          வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே 
வளர்கோங்கிள மாமுகை யாகிய     தனவாஞ்சையி லேமுக மாயையில்          வளமாந்தளிர் போல்நிற மாகிய ...... வடிவாலே 
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்     மயல்சேர்ந்திடு பாயலின் மீதுற          இனிதாங்கனி வாயமு தூறல்கள் ...... பருகாமே 
எனதாந்தன தானவை போயற     மலமாங்கடு மோகவி காரமு          மிவைநீங்கிட வேயிரு தாளினை ...... யருள்வாயே 
கரிவாம்பரி தேர்திரள் சேனையு     முடனாந்துரி யோதன னாதிகள்          களமாண்டிட வேயொரு பாரத ...... மதிலேகிக் 
கனபாண்டவர் தேர்தனி லேயெழு     பரிதூண்டிய சாரதி யாகிய          கதிரோங்கிய நேமிய னாமரி ...... ரகுராமன் 
திரைநீண்டிரை வாரியும் வாலியும்     நெடிதோங்கும ராமர மேழொடு          தெசமாஞ்சிர ராவண னார்முடி ...... பொடியாகச் 
சிலைவாங்கிய நாரண னார்மரு     மகனாங்குக னேபொழில் சூழ்தரு          திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.

செவ்வரி படர்ந்த சேல் மீனோ, கயல் மீனோ என்று சொல்லத்தக்கதும், மானையும், வார்த்தெடுக்கப்பட்ட வேலையும், நீலோத்பல மலரையும், மாம்பிஞ்சினையும் நிகர்த்த கண்களை உடைய மாதர்களின் காம வலையினாலும், வளர்ந்த கோங்கு மரத்தின் இளம் சிறப்பான அரும்பையொத்த மார்பகங்களின் மேல் வைத்த ஆசையாலும், முகத்தின் மயக்கத்தாலும், செழுமையான மாந்தளிர் போன்ற நிறத்து வடிவத்தாலும், இருளையொத்துக் கருத்து நீண்ட கூந்தலின் நிழலாலும், காம மயக்கம் கொண்ட படுக்கையின் மேலே பொருந்த, இனிதான கோவைக்கனி இதழ்களின் அமுதாகிய ஊறல்களை உண்ணாதபடி, என்னுடையவை, தன்னுடையவை என்றவை நீங்கி அற்றுப்போகவும், மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும், உன் இரு திருவடிகளை அருள்வாயாக. யானைப்படையும், தாவும் குதிரைப் படையும், தேர்ப்படையும், திரண்ட காலாட்படையும், ஒன்றாகக் கூடியுள்ள துரியோதனாதியர் போர்க்களத்தில் இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று, பெருமைவாய்ந்த பாண்டவர்களின் தேரிலே, கிளம்பிப் பாயும் குதிரைகளைச் செலுத்திய தேரோட்டி ஆனவனும், ஒளி மிகுந்த சுதர்ஸன சக்கரத்தை உடையவனுமான ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும், அலைகள் ஓங்கி ஒலிக்கும் கடலையும், வாலியையும், நீண்டு உயர்ந்த ஏழு மராமரங்களையும், பத்துத் தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி கோதண்ட வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே, சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 530 - வள்ளிமலை 
ராகம் - தர்பாரி கானடா; தாளம் - ஆதி

தய்யதன தான தய்யதன தான     தய்யதன தானத் ...... தனதான

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு     மல்லல்பட ஆசைக் ...... கடலீயும் 
அள்ளவினி தாகி நள்ளிரவு போலு     முள்ளவினை யாரத் ...... தனமாரும் 
இல்லுமிளை யோரு மெல்ல அயலாக     வல்லெருமை மாயச் ...... சமனாரும் 
எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்     உய்யவொரு நீபொற் ...... கழல்தாராய் 
தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்     சொல்லுமுப தேசக் ...... குருநாதா 
துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண     வெள்ளிவன மீதுற் ...... றுறைவோனே 
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ     வல்லைவடி வேலைத் ...... தொடுவோனே 
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.

தாமரை இதழ் போன்ற கண்களாலும், முல்லை அரும்பை நிகர்த்த பற்களாலும், துயரத்தை அடையும்படி ஆசையைக் கடல் போலத் தருபவர்களும், அள்ளி எடுக்கலாம் போல இனிதாக அமைந்து நடு இரவு போன்று இருண்ட வினைகளை உடைய விலைமாதரும், அந்தச் செல்வம் மிகுந்த வீடும், மக்களாகிய இளைஞரும், அனைவருமே மெல்ல மெல்ல வேறாகும்படி, வலிய எருமையை வாகனமாகக் கொண்ட மாயக்கார யமனும் என்னை இகழ்ந்து, என் உயிரைக் கொள்ளை அடித்துக் கொண்டு போகும் அந்த நாளில் அடியேன் உய்யும் பொருட்டு ஒப்பற்ற உனது அழகிய திருவடியைத் தந்தருள்வாயாக. பழமையான வேதங்கள் தேடிப்பார்த்து காண முடியவில்லை என்று முறையிடுகின்ற சிவபிரானுக்கு உபதேச மொழியைச் சொல்லி அருளிய குருநாதனே, துள்ளி ஓடி விளையாடுகின்ற புள்ளிமான் வெட்கப்படும்படி அதனை இகழ்கிற வள்ளி வாழும் வள்ளிமலைக் காட்டிற்கு வலியச் சென்று வாழ்கின்றவனே, வலிமையான அசுரர்கள் மாளவும், நற்குணமுள்ள தேவர்கள் வாழவும், மிக விரைவாக கூரிய வேலைச் செலுத்தியவனே, வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற, சாரலுடன் கூடிய வள்ளிமலையில்* எழுந்தருளியுள்ள வள்ளியின் மணவாளனே, பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 531 - வள்ளிமலை 
ராகம் - மோஹனம்; தாளம் - ஆதி

தய்யதன தான தய்யதன தான     தய்யதன தானத் ...... தனதான

ஐயுமுறு நோயு மையலும வாவி     னைவருமு பாயப் ...... பலநூலின் 
அள்ளல்கட வாது துள்ளியதில் மாயு     முள்ளமுமில் வாழ்வைக் ...... கருதாசைப் 
பொய்யுமக லாத மெய்யைவள ராவி     உய்யும்வகை யோகத் ...... தணுகாதே 
புல்லறிவு பேசி யல்லல் படு வேனை     நல்லஇரு தாளிற் ...... புணர்வாயே 
மெய்யபொழில் நீடு தையலைமு நாலு     செய்யபுய மீதுற் ...... றணைவோனே 
வெள்ளையிப மேறு வள்ளல்கிளை வாழ     வெள்ளமுது மாவைப் ...... பொருதோனே 
வையமுழு தாளு மையமயில் வீர     வல்லமுரு காமுத் ...... தமிழ்வேளே 
வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு     வள்ளிமண வாளப் ...... பெருமாளே.

கோழையும், அதனால் ஏற்படும் பல நோய்களும், மோகங்களும், ஆசைகளைத் தூண்டும் ஐம்பொறிகளும், பல கலை நூல்களும், அவற்றின் சூழ்ச்சிகளும் ஆகிய சேற்றைத் தாண்டாது, துள்ளி அவைகளுக்கு உள்ளேயே விழுந்து இறந்து போகிற உள்ளமும், மனை வாழ்க்கையையே எண்ணுகின்ற ஆசையும், பொய்யும் நீங்காத இந்த உடலை வளர்க்கின்ற உயிர் உய்யும்படியான நல்ல யோக வழிகளை நான் அணுகாமல், இழிவான அறிவுப் பேச்சுக்களைப் பேசித் துன்பம் அடைகின்ற என்னை உனது நல்ல திருவடிகளில் சேர்த்தருள்வாயாக. மெய்யனே, வள்ளிமலைச் சோலையில் நீண்ட நேரமாக வள்ளியை உன் பன்னிரு சிவந்த புயங்களாலும் இறுகத் தழுவுவோனே, வெள்ளையானை ஐராவதத்தின் மீது ஏறும் இந்திரனின் சுற்றமாகிய தேவர்கள் வாழ, கடலினிடையே பல காலம் முதுமையான மாமரமாக நின்ற சூரனுடன் போர் புரிந்தவனே, உலகெல்லாம் முழுமையாக ஆளும் ஐயனே, மயில் வீரனே, வல்லம்* என்னும் திருத்தலத்தில் உள்ள முருகனே, முத்தமிழ்க் கடவுளே, வள்ளிக் கொடி படரும் மலைச்சாரல் உள்ள வள்ளிமலையில்** வாழும் வள்ளியின் மணவாளப் பெருமாளே. 
* வல்லம் என்னும் திருவல்லம் வள்ளிமலைக்குத் தெற்கே 9 மைலில் உள்ளது.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 532 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த     தய்யத்த தான தந்த ...... தனதான

கையொத்து வாழு மிந்த மெய்யொத்த வாழ்வி கந்து     பொய்யொத்த வாழ்வு கண்டு ...... மயலாகிக் 
கல்லுக்கு நேரும் வஞ்ச வுள்ளத்தர் மேல்வி ழுந்து     கள்ளப்ப யோத ரங்க ...... ளுடன்மேவி 
உய்யப்ப டாமல் நின்று கையர்க்கு பாய மொன்று     பொய்யர்க்கு மேய யர்ந்து ...... ளுடைநாயேன் 
உள்ளப்பெ றாக நின்று தொய்யப்ப டாம லென்று     முள்ளத்தின் மாய்வ தொன்றை ...... மொழியாயோ 
ஐயப்ப டாத ஐந்து பொய்யற்ற சோலை தங்கு     தெய்வத்தெய் வானை கொங்கை ...... புணர்வோனே 
அல்லைப்பொ றாமு ழங்கு சொல்லுக்ர சேவ லொன்று     வெல்லப்ப தாகை கொண்ட ...... திறல்வேலா 
வையத்தை யோடி யைந்து கையற்கு வீசு தந்தை     மெய்யொத்த நீதி கண்ட ...... பெரியோனே 
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று     வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.

செய்யத் தக்கதை அறிந்து அதன்படி வாழும் இந்த மெய்யான வாழ்க்கையை விட்டுவிட்டு, பொய்யான வாழ்க்கையைப் பார்த்து அதில் மோகம் கொண்டு, கல்லைப் போன்ற கடினமான வஞ்சக உள்ளத்தை உடைய பொது மகளிர்மேல் விழுந்து, (அவர்களுடைய) கள்ளத்தனம் பொருந்திய மார்பகங்களின் மேல் பொருந்தி, உய்யும் வழியில் சேராது நின்று, வஞ்சகருடனும், தந்திரம் நிறைந்த பொய்யர் கூட்டத்துடனுமே கலந்து சோர்வடைந்து, உள்ளம் குலைகின்ற நாயைப்போன்ற எனக்கு மனதில் பெறுதற்கு அரிய செல்வமாக நினைத்து, சோர்வு அடையாமல் எப்போதும் நிலைத்துள்ள மனப் பக்குவத்தை (அடைய) ஓர் உபதேச மொழியைச் சொல்ல மாட்டாயோ? சந்தேகம் இல்லாத, ஐந்து எனப்படும் பொய்யாத வகையில்+ (கேட்டதைத் தரும்) கற்பக மரச் சோலையில் தங்கி வளர்ந்த தெய்வ மகள் தேவயானையின் மார்பகங்களை அணைவோனே, இரவைப் பொறுக்காமல் கூவி ஒலிக்கும் சொல்லை உடைய வலிமையான சேவல் ஒன்றை வைத்துள்ள வெற்றிக் கொடியைக்கொண்ட வல்லமை படைத்த வேலனே, உலகம் முழுமையும் ஓடி வலம் வந்தும், ஐந்து திருக் கரங்களைக்கொண்ட கணபதிக்கு (கனியைக்) கொடுத்த தந்தையாகிய சிவபெருமானுக்கு (அவர் நீதி தவறியபோதிலும்) உண்மைக்குப் பொருந்திய பிரணவ மந்திரத்தை நீதி முறையில் தெரிவித்த பெரியோனே, வள்ளிக் கொடிகள் நிறைந்துள்ள வள்ளி மலை** மேல் ஏறிச் சென்று, வள்ளி நாயகியைத் தேடி அவள்மீது மோகம்கொண்ட பெருமாளே. 
* தேவலோகத்தில் இருந்த ஐந்து பொய்யற்ற மரங்கள்: சந்தானம், அரிச்சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம்.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 533 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -

தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்த     தய்யத்த தான தந்த ...... தனதான

முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்     பல்லுக்கும் வாடி யின்ப ...... முயலாநீள் 
முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்து     பள்ளத்தில் வீழ்வ தன்றி ...... யொருஞான 
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்கு     மெல்லைக்கும் வாவி நின்ற ...... னருள்நாமம் 
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்று     முள்ளப்பெ றாரி ணங்கை ...... யொழிவேனோ 
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்க     அல்லிக்கொள் மார்ப லங்கல் ...... புனைவோனே 
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கி     மெள்ளச்ச ரோரு கங்கள் ...... பயில்நாதா 
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்த     மல்லுப்பொ ராறி ரண்டு ...... புயவீரா 
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்று     வள்ளிக்கு வேடை கொண்ட ...... பெருமாளே.

முல்லை மலர்ப் பாணத்துக்கும், மன்மதனுடைய அழகிய கையில் ஏந்திய (கரும்பு) வில்லுக்கும், பெண்களின் வசைப் பேச்சுக்கும் மனம் வாடி, இன்பத்தை அடைய முயன்று, அதனால் நீண்ட முள் தைத்த கால் போல மடங்கிக் கிடந்து, (துன்பக்) கொள்ளி நெருப்பில் முழுகி (உள்ளம்) வெந்து, கீழ் நிலையில் விழுவதோடு, ஒப்பற்ற ஞான எல்லையையும், வேதங்கள் சொல்லித் தொழுது வணங்கும் எல்லையையும் விலகித் தாண்டி நின்று, உன்னுடைய அருள் பாலிக்கும் திருநாமத்தை இகழ்ந்து பேசுதற்கும் ஆசை கொண்டு, (தமது) மனத்தில் கடவுளே அபயம் என்ற எண்ணம் பெறாதவர்களாய் இருக்கின்ற (கீழ் மக்களின்) நட்பை விட மாட்டேனோ? இருளில், அந்த யானையாகிய கணபதி கொடுத்து உதவிய கொடி போன்ற வள்ளிக்கு, அவளுடைய மார்பு விளங்கும்படி தாமரையாகிய உன் மார்பிலிருந்த மாலையை அணிவித்தவனே, சேறு படாத கங்கை ஆற்றில் உள்ள சரவணப் பொய்கையில் தங்கி, (அங்கு) மெல்ல தாமரை மலரில் வீற்றிருக்கும் தலைவனே, திருவல்லம் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் குமரனே, கந்தனே, சிதம்பரத்தில் உறைபவரும் திரிபுரத்தை எரித்தவருமான சிவபெருமானுக்கு மைந்தனே, மல் யுத்தப் போருக்கு எப்போதும் ஆயத்தமான பன்னிரண்டு புயங்களைக் கொண்ட வீரனே, வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின்* மேல் சென்று, வள்ளி அம்மையின் மீது விருப்பம் கொண்ட பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 534 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த     தய்யத்த தாத்த ...... தனதான

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை     துள்ளிக்க னார்க்க ...... யவுகோப 
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை     கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச 
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை     வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல் 
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்     கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ 
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்     வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே 
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்     புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே 
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க     வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே 
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

வஞ்சனை, பொய் இவைகளின் கூட்டம் நிறைந்த பை, ஓட்டைகளை உடைய மாமிசப்பை, துள்ளுகின்ற மன்மதனுடைய சேட்டைகளினால் தளர்வு, கோபம், களவு இவைகளுக்கு இருப்பிடமான தோல் பை, வேகமாக விரைந்து செல்லும் பலவித காற்றுகள் நிறைந்த பை, யமன் சூறையாடிக் கொண்டு போவதற்கு அமைந்த செத்தையாகிய பை, ஜீவாத்மா, பந்தம் இவைகளுக்கு இடமாகிய சேற்றுப் பை, ஆசை மயக்கத்துக்கு இடமாகிய பை, பாவங்களுக்கு இருப்பிடமாகிய பை, சீழ் சேருகின்ற பை, மிகுந்த தளர்ச்சி அடைந்த பை, இறைச்சி, ஈரல் முதலிய உறுப்புக்களை அள்ளி உண்பதற்கு நாய்கள் குலைத்தும், இழுத்தும் பற்களால் குதறப்படுகின்ற இந்த உடலை ஒழிக்க மாட்டேனோ? அறிவு நிறைந்த தேவயானையின் தலைவனே, (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரனுக்கும், வெண்ணிறமான திருப்பாற் கடலில் உறையும் திருமாலுக்கும் மருகனே, வண்டுகள் நிறைந்த காட்டில் வசிக்கும் மலை வேடர்கள் கொல்லும் பறவைகள் உள்ள கடுமையான காட்டு வழியில் வள்ளியின் பொருட்டு வருகின்றவனே, வள்ளி அனுஷ்டித்த நன்னெறி* என்னும் உபதேசத்தை தமக்கும் சொல்லுக என்று கேட்ட தந்தையாகிய சிவபெருமானுக்கு கண்ணிமைக்கும் ஒரு க்ஷணப்** பொழுதில் அவருடைய செவியில் ஏற்றிய இளையவனே, வள்ளிக் கொடிகள் கூட்டமாய் அடர்ந்த வள்ளி மலைத்*** தினைப்புனத்தில் காவல் புரிந்த வள்ளி அம்மைக்கு (மணாளனாக) வாய்த்த பெருமாளே. 
* 'வள்ளிச் சன்மார்க்கம்' என்பது யாரொருவர் தன்னை இழந்து ('யான் எனது' என்பன அற்று) தலைவனை நாடுகிறாரோ அவரை இறைவன் தானே நாடிவந்து அருள் புரிவார் என்பதாகும். இந்த 'வள்ளிச் சன்மார்க்க' நெறியை முருகன் சிவபெருமானுக்கு உபதேசித்தார்.
** வல்லை = க்ஷணம். க்ஷணப் பொழுதில் சிவனுக்கு உபதேசித்ததால், திருத்தணிகைக்கு திருக்ஷணிகை என்ற பெயரும் உண்டு.
*** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 535 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த     தய்யத்த தாத்த ...... தனதான

வெல்லிக்கு வீக்கு முல்லைக்கை வீக்கு     வில்லிக்க தாக்க ...... ருதும்வேளால் 
வில்லற்ற வாக்கொள் சொல்லற்று காப்பொய்     யில்லத்து றாக்க ...... வலைமேவு 
பல்லத்தி வாய்க்க அல்லற்ப டாக்கை     நல்லிற்பொ றாச்ச ...... மயமாறின் 
பல்லத்த மார்க்க வல்லர்க்கர் மூர்க்கர்     கல்விக்க லாத்த ...... லையலாமோ 
அல்லைக்கொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து     சொல்குக்கு டார்த்த ...... இளையோனே 
அல்லுக்கு மாற்றி னெல்லுக்கு மேற்புல்     கெல்லைப்ப டாக்க ...... ருணைவேளே 
வல்லைக்கு மேற்றர் தில்லைக்கு மேற்றர்     வல்லிக்கு மேற்ற ...... ரருள்வோனே 
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

இந்த உலகத்தையே வென்று குவிக்கத் தக்க, முல்லை மலர்ப் பாணம் தரித்த கையை உடைய, நாண் பூட்டிய வில்லாக கரும்பு அமைய, வேண்டுமென்றே செய்யும் மன்மதனது லீலையால் (நான்) ஒளி மங்கிப் போய், ஆசை கொண்டு, உரைக்கும் சொல்லும் போய், மனம் நெகிழ்ந்து, பொய் வாழ்வு உடைய (பரத்தையர்) வீட்டுக்குப் போய், கவலை மிகுந்து, அங்கே பல துன்பங்கள் நேர, அவற்றில் மூழ்கி அல்லல் படுகின்ற இந்த உடலை உடையவன் நான். நன் மார்க்கத்தில் சேராத ஆறு சமயங்களின் பல பொருள் மார்க்கத்தை உடைய வல்லரக்கர் ஆகிய முரட்டுப் பிடிவாதக்காரர்களின் குதர்க்க வாதக் கல்விப் போரில் புகுந்து நான் அலைபடலாமோ? (விரக வேதனையால்) இந்த இராக் காலம் ஒழியாதா என்னும் சொல்லை உடைய (ஒரு தலைக் காமம் உற்ற) தலைவிக்கு இதமாக, அவளோடு ஒத்து (விடியலை உணர்த்தும்) குரல் கொடுத்து கொக்கரிக்கும் சேவலைக் கொடியாகக் கொண்ட இளையோனே, இருண்ட இரவையும், சிறிது வழி தெரிவிக்கும் பகலையும் கடந்த மேலிடத்தில் எழுந்தருளி இருக்கின்ற, அளவு கடந்த கருணை வள்ளலே, வலிய அழகிய (நந்தியாம்) ரிஷப வாகனத்தை உடையவரும், தில்லைப்பதிக்கு ஏற்றவரும், (பார்வதியாம்) சிவகாம வல்லிக்கு உகந்தவருமாகிய சிவபெருமான் அருளிய புதல்வனே, வள்ளிக் கொடிகளின் கூட்டம் நெருங்கிய வள்ளி மலையின்* மேல் சென்று தினைப்புனத்தைக் காத்த வள்ளி அம்மைக்கு கணவனாக வாய்த்த பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியார் அவதரித்த தலம்.

பாடல் 536 - வள்ளிமலை 
ராகம் - ஆனந்த பைரவி; தாளம் - ஆதி 2 களை - 16

தனதன தனதன தனதன தனதன     தய்யத்த தாத்த ...... தனதான

ககனமு மநிலமு மனல்புனல் நிலமமை     கள்ளப் புலாற்கி ...... ருமிவீடு 
கனலெழ மொழிதரு சினமென மதமிகு     கள்வைத்த தோற்பை ...... சுமவாதே 
யுகஇறு திகளனலு மிறுதியி லொருபொருள்     உள்ளக்க ணோக்கு ...... மறிவூறி 
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி     லுள்ளத்தை நோக்க ...... அருள்வாயே 
ம்ருகமத பரிமள விகசித நளினநள்     வெள்ளைப்பி ராட்டி ...... இறைகாணா 
விடதர குடிலச டிலமிசை வெகுமுக     வெள்ளத்தை யேற்ற ...... பதிவாழ்வே 
வகுளமு முகுளித வழைகளு மலிபுன     வள்ளிக்கு லாத்தி ...... கிரிவாழும் 
வனசரர் மரபினில் வருமொரு மரகத     வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

ஆகாயம், காற்று, தீ, நீர், மண் என்ற பஞ்சபூதங்களால் ஆனதும், கெட்டுப்போன மாமிச நாற்றமும், கிருமிகள் உள்ளதுமான வீடு, நெருப்புப் பொறி பறப்பதுபோல பேச்சுக்கள் பிறந்து, கோபம் என்ற ஆணவம் மிகுந்த மயக்கம் என்ற கள்ளை வைத்துள்ள தோலால் ஆன பையாகிய இந்த உடலை இனியும் யான் சுமந்து அயராதபடி, யுகங்கள் முடிந்தாலும் தான் முடிவடையாத ஒப்பற்ற அந்தப் பேரின்பப் பொருளை எனது உள்ளத்தினிடத்தே ஞானக் கண்ணால் அறியும் சிவஞான அறிவு என்ற ஊற்று ஊறிப் பெருக, ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவினில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக. கஸ்தூரியின் வாசம் வீசும், நறுமணமுள்ள மலர்ந்த தாமரையின் மீது வீற்றிருக்கும் வெள்ளை நிறத்தளான ஸரஸ்வதியின் கணவனான பிரமனால் (அடியையோ, முடியையோ) காணமுடியாதவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், வளைந்த ஜடாமுடியின் மீது ஆயிரம் முகங்களைக் கொண்ட கங்கை நதியை ஏற்றவருமான சிவபிரானின் செல்வமே, மகிழ மரமும், அரும்புகள் விடும் சுரபுன்னையும் நிறைந்துள்ள தினைப்புனம் உடைய வள்ளிமலையாம்* சிரேஷ்டமான மலையில் வாழும் வேடர் மரபில் தோன்றி வளர்ந்த, ஒப்பற்ற பச்சை நிறமுள்ள வள்ளி நாயகிக்கு மிகப் பொருத்தமாக வாய்த்த பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 537 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -

தய்யதன தந்த தய்யதன தந்த     தய்யதன தந்த ...... தனதான

அல்லசல டைந்த வில்லடல நங்கன்     அல்லிமல ரம்பு ...... தனையேவ 
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்ற     லையமது கிண்ட ...... அணையூடே 
சொல்லுமர விந்த வல்லிதனி நின்று     தொல்லைவினை யென்று ...... முனியாதே 
துய்யவரி வண்டு செய்யமது வுண்டு     துள்ளியக டம்பு ...... தரவேணும் 
கல்லசல மங்கை யெல்லையில்வி ரிந்த     கல்விகரை கண்ட ...... புலவோனே 
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்று     கல்லலற வொன்றை ...... யருள்வோனே 
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்ச     வல்லமைதெ ரிந்த ...... மயில்வீரா 
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்று     வள்ளியைம ணந்த ...... பெருமாளே.

மாலைப் பொழுதினில் வந்து சேர்ந்த, வில்லை ஏந்திய வெற்றி பொருந்திய, மன்மதன் தனது அல்லி மலர்ப் பாணத்தைச் செலுத்த, பிறைச்சந்திரனும் நெருப்பை அள்ளி வீச, தென்றற் காற்றும் (அங்ஙனம் நெருப்பு வீசுவதால்) தலைவன் அருள் புரிவானோ என்ற ஐயத்தைக் கிளப்ப, படுக்கையில் (ஊராரின் அலர்ப் பேச்சுக்களால்) பேசப்படுபவளும், தாமரையில் வசிக்கும் லக்ஷ்மி போன்றவளுமான இப்பெண் தனிமையில் இருந்து, என் பழ வினையால் இங்ஙனம் வாடுகிறேன் என்று தன்னைத் தானே வெறுக்காமல், பரிசுத்தமான ரேகைகளை உடைய வண்டு சிவந்த தேனை உண்டு துள்ளுகின்ற (உனது) கடப்ப மாலையைத் தர வேண்டும். (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான்* என்னும்படி விளங்கிய புலவனே, தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில் சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம் இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே. வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப்** போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே. 
* வித்வத் தாம்பூலம் யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஔவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்ததும், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறினாள் - கந்த புராணம்.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, தென்றல், ஊராரின் வசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 538 - வள்ளிமலை 
ராகம் - அமிர்தவர்ஷணி ; தாளம் - ஆதி - தேசாதி

தனதாத்த தய்ய தனதாத்த தய்ய     தனதாத்த தய்ய ...... தனதான

குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை     குயில்போற்ப்ர சன்ன ...... மொழியார்கள் 
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்ன     குருவார்த்தை தன்னை ...... யுணராதே 
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய     இடர்கூட்ட இன்னல் ...... கொடுபோகி 
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னு     னிருதாட்கள் தம்மை ...... யுணர்வேனோ 
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி     மயில்மேற்றி கழ்ந்த ...... குமரேசா 
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளி     மலைகாத்த நல்ல ...... மணவாளா 
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை     யருள்போற்றும் வண்மை ...... தரும்வாழ்வே 
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்ல     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே.

இல்லற வாழ்க்கையில் ஏற்பட்ட தாயார், மனைவி, பிள்ளைகள், குயில் போலப் பேசி எதிர்ப்படும் பெண்கள், பிறந்த குலம், கிடைத்த நல்ல செல்வம், எனக்குத் தான் கிடைத்தது என்று ஆணவம் கொண்டு, குருவின் உபதேச மொழிகளை அறியாமல், நாட்கள் வீணாகக் கழிந்திட, கொடிய யமன் இறுதியில் நெருங்கி வந்து சோர்வுறச்செய்யும் துன்பங்களைத் தர, துயரத்துடன் கொண்டுபோய் சுடுகாட்டில் (மயானத்தில்) அடியேனைச் சுட்டெரிப்பதற்கு முன்பாக, உனது இரு திருவடிகளை உணர்ந்து அறிவேனோ? வடநாட்டில் உள்ள வெள்ளியங்கிரியை (கயிலாயத்தை) (கோபுர வாசலில் அமர்ந்து) காவல் செய்து புள்ளியை உடைய மயிலின் மீது விளங்குகின்ற குமரக் கடவுளே வடிவழகியான வள்ளியின் திருவடியைப் புகழ்ந்து, வள்ளிமலையில்* அப்பிராட்டியின் சமயம் பார்த்துக் காத்திருந்த நல்ல (வேளைக்கார) மணவாளனே யான் முன்னாட்களில் செய்த குற்றங்களைப் பொறுத்து, எனக்கு நின் திருவருளைப் போற்றும் வளப்பமான குணத்தைத் தந்தருளிய என் செல்வமே நின் திருவடிகளைத் தொழுது, தாமரை மலரை நின் முடிமேல் சூட்டவல்ல அடியவர்களுக்கு நல்லவனாகத் திகழும் பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது.வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 539 - வள்ளிமலை 
ராகம் -...; தாளம் -

தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்     தனதந்த தந்தனம் ...... தனதான

சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்     சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம் 
சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்     தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி 
விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்     துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன் 
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்     வினவென்று அன்புதந் ...... தருள்வாயே 
அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்     டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன் 
அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்     கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா 
மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்     திசையொன்ற மந்திசந் ...... துடனாடும் 
வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்     வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.

தலை என்னும் உறுப்பு, அழகிய கை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவை நன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல் சில துயரங்களும் இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர், சிவந்த நெருப்பில் வெந்து உயிர் பிரிதல் உறும்படி, சீக்கிரத்தில் நமன் போரிட வந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்கு முன்பு தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக. (ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல் முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேக நிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி, நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப் பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி) பரந்து ஒலிக்க, அன்று கோபித்து (அவனைக்) கொன்ற வேலனே, தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட, வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க, குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி) மலைக்கு* வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின் பாதத் தாமரை வரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 540 - வள்ளிமலை 
ராகம் - ...; தாளம் -

தனதன தந்தன தந்த தந்தன     தனதன தந்தன தந்த தந்தன          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான

வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன     விழியையு கந்துமு கந்து கொண்டடி          வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை 
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல     குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற          மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி 
உருகியு கந்திதழ் தின்று மென்றுகை     யடியின கங்கள்வ ரைந்து குங்கும          உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ் 
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ     அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட          உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ 
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு     மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு          விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர 
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி     ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை          விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே 
அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி     மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட          அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா 
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை     வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை          யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே.

(பொருள் கொடுப்பின் வேண்டியவர், வேண்டாதோர் என்னும்) அளவு இல்லாமல் அன்பு காட்டும் பொய்யே பேசும் பொது மகளிர்களுடைய மை தீட்டிய கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப் பருகியும், அவர்களுடைய காலைப் பிடித்துத் தடவியும், புணர்ச்சி இன்பத்தை அனுபவித்தும், இவ்வாறு வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்னும் பறவைகளின் பல ஒலிகளை எழுப்பி, பின்னர் கொப்பூழ் என்னும் மடுவில் விழுந்தும் கிடந்தும், நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் ஆகி, உருகிக் களித்து அதர பானம் செய்தும், தின்றும், மென்று உண்டும், கையடியிலுள்ள நகங்களால் குறி இட்டும், குங்குமம் உள்ள இரண்டு மார்பகங்களும் அசைய அன்புடன் தழுவி, அழகு விளங்கும் கூந்தல் அவிழ்ந்து அலைச்சல் உற, படுக்கையில் மின்னல் என்று சொல்லத் தக்க இடை விளக்கம் தர, நல்லறிவை அழிக்கும் அந்த இன்பத்தை மறந்து உன்னை நினைக்க மாட்டேனோ? தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன் சென்று, மொகுமொகு என்று ஒலிக்கும் கடலையும் கடந்து சென்று, பொருந்திய வேகத்துடன் இலங்கையில் புகுந்து, தவப் பெரியோர்கள் மகிழ்ச்சி மிகக் கொள்ள, சூரியன், சந்திரன் முதலான தேவர்களும் இவ்வுலகோரும் பூமியில் ஜெய ஜெய என்று மகிழ்ந்து ஒலி செய்ய, செலுத்திய கொடிய அம்பால் வீரமுள்ள அசுரனாகிய ராவணனின் தலையை அறுத்துத் தள்ளிய ராமனாகிய திருமாலின் மருகனே, சமணர்களின் கூட்டங்கள் கலங்கி நிற்க, மதுரை நகரில் திருநீறு பரவ, ஹர, ஹர சங்கரா என்று போற்றப்பெற வெற்றி அடைந்து அருளிய புகழ் கொண்ட (திருஞான சம்பந்தராக வந்த) வேலனே, (காமாட்சியாக வந்து முப்பத்திரண்டு) அறங்களைக் கச்சியில் வளர்த்த அழகியாகிய பார்வதியின் மகனே, குளிர்ந்த சோலைகளும் வயல்களும் பொருந்திய, அழகிய வளப்பமுள்ள நீர்க்கரைகளும் உள்ள, வள்ளி மலையில்* வந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராய வேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

பாடல் 541 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - ...; தாளம் -

தனத்த தத்தம் தத்தன தானன     தனத்த தத்தம் தத்தன தானன          தனத்த தத்தம் தத்தன தானன ...... தனதான

அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில     தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்          அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே 
அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்     நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ          அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய் 
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்     மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட          லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே 
எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்     மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன          திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய் 
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி     படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்          புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா 
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர     சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை          புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே 
திகழ்க்க டப்பம் புட்பம தார்புய     மறைத்து ருக்கொண் டற்புத மாகிய          தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா 
செகத்தி லுச்சம் பெற்றம ராவதி     யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி          திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே.

இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில் சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல், பின்பு பயனில்லாத (கேடு தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும் மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும் பொய் என்னும் கடலில் முழுகி, துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள் போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி, குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு, அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு முன்னதாக, உன்னுடைய மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய திருவருளைத் தந்தருளுக. யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும் எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும் சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின மகனே. பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும், (மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய, திருமாலின் மருகனே, விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த வள்ளியைத் தழுவும் குணவானே, பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன் தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு நிறைந்த திருக்கழுக் குன்றத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு கதலிவனம் என்றும் பெயர். இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.

பாடல் 542 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - ஹிந்தோளம்; தாளம் - ஆதி-தேசாதி - 8

தனதனன தான தனதனன தான     தனதனன தான ...... தனதான

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி     யிலகுமரன் மூவர் ...... முதலானோர் 
இறைவியெனு மாதி பரைமுலையி னூறி     யெழுமமிர்த நாறு ...... கனிவாயா 
புழுகொழுகு காழி கவுணியரில் ஞான     புநிதனென ஏடு ...... தமிழாலே 
புனலிலெதி ரேற சமணர்கழு வேற     பொருதகவி வீர ...... குருநாதா 
மழுவுழைக பால டமரகத்ரி சூல     மணிகரவி நோத ...... ரருள்பாலா 
மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை     வளமைபெற வேசெய் ...... முருகோனே 
கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு     கதிருலவு வாசல் ...... நிறைவானோர் 
கடலொலிய தான மறைதமிழ்க ளோது     கதலிவன மேவு ...... பெருமாளே.

ஏழு உலகங்களையும் தன் வயிற்றிலே அடக்கிய திருமால், பிரமன், ஜோதிமயமான ருத்திரன், ஆகிய மூவருக்கும் மற்ற தேவர்களுக்கும் தலைவியான ஆதி பராசக்தியின் திருமார்பிலிருந்து சுரந்த அமிர்தமாம் ஞானப்பால் மணக்கும் கனி போன்ற வாயை உடையவனே, புனுகு வாசனை வீசும் சீர்காழிப் பகுதியில் கவுணியர் குடியில் ஞானசம்பந்தனாக அவதரித்து தமிழ்ப்பாசுர மகிமையாலே ஏடு வைகை ஆற்றின் நீரில் எதிர் ஏற்றத்தில் செல்லவும், சமணர்கள் கழுவில் ஏறவும், தமிழினால் வாதப் போர் புரிந்த கவிவீரன் ஞானசம்பந்தனே, குருநாதனே, கோடரியையும், மானையும், பிரம கபாலத்தையும், உடுக்கையையும், திரிசூலத்தையும் ஏந்திய கரங்கள் கொண்ட அற்புதமூர்த்தி சிவபிரான் அருளிய திருக்குமாரனே, தாமரை மலரில் உள்ள பிரமனை பெருஞ்சிறையில் அடைத்து, அவனது படைப்புத் தொழிலைச் செம்மையாகச் செய்தருளிய முருகக் கடவுளே, கழுகுகள்* தொழுகின்ற வேதமலையின் உச்சியில் விளங்கும், ஒளிவீசும் வாசலில் நிறைந்த தேவர்கள் கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும் ஓதுகின்ற, கதலிவனம்** (என்ற திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே. 
* எல்லா யுகங்களிலும் கீழ்க்கண்ட இரண்டு கழுகுகள் இந்த வேதமலையை பூஜித்தன:கிருத யுகம் - சண்டன், பிரசண்டன்,திரேதா யுகம் - ஜம்பாதி, ஜடாயு,துவாபர யுகம் - சம்புகுத்தன், மாகுத்தன்,கலி யுகம் - சம்பு, ஆதி.
** திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு 'கதலிவனம்' என்றும் பெயர்.இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.

பாடல் 543 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - ...; தாளம் -

தான தத்த தனந்த தனா தனாதன     தான தத்த தனந்த தனா தனாதன          தான தத்த தனந்த தனா தனாதன ...... தனனதான

ஓல மிட்ட சுரும்பு தனா தனாவென     வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென          வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென ...... விரகலீலை 
ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென     வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென          ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன் 
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென     வேகு திக்க வுடம்பு வி¡£ர் வி¡£ரென          ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர் 
ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ     சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்          ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென ...... வகைவராதோ 
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென     மேலெ ழுச்சி தரும்பல் வெளேல் வெளேலென          வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென ...... எதிர்கொள்சூரன் 
மார்பு மொக்க நெரிந்து கா£ல் கா£லென     பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூவென          வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென ...... உதிரமாறாய் 
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென     மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென          மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென ...... விசைகள்கூற 
வேலெ டுத்து நடந்த திவா கராசல     வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்          வேத வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ ...... குமரவேளே.

ஒலிக்கின்ற வண்டு தனா தனா என்று ஒலியுடன், தலையில் உள்ள மலரை நாடி விழும் சப்தம் பளீர் பளீர் என்று கேட்க, ஓசைகளைச் செய்யும் கால்களில் அணிந்த சிலம்பு கலீர் கலீர் என்று சப்திக்க, காம விளையாட்டின் போது, ஒப்பற்ற கழுத்தில் உண்டாகின்ற புட் குரல்கள் குகூ குகூ என்று ஒலிக்க, வியர்வை மிக்க உண்டாகி சலா சலா என்று கசகசக்க, மயிர்க் கூச்சல் மிகுந்து சிலீர் சிலீர் எனச் சிலிர்த்துப் புளகம் கொள்ள, மன்மதன் தனது இருப்பிடத்திலிருந்து குபீர் குபீர் என்று வெளிவந்து பாய, உடல் காம வேட்கையால் விருவிருப்பை அடைய, முத்து மாலை அணிந்தவராய் அளவில்லாமல் கொடுங்கள் என்று கேட்டுச் சேர்கின்ற விலைமாதர்களின் ஆசையில் நன்கு கலந்து உறவாடி, அடிக்கடி பிறவிப் பெருங் கடலில் மூழ்கி எழாமல், மனது மூலப் பொருளாகிய (சரவணபவ என்ற) ஆறு எழுத்துக்களை நினைத்து குகா குகா என்று கூறும்படியான பேறு எனக்கு வராதோ? மாலைகள் அணிந்த தலைகள் (ரத்தம் பெருகுவதால்) செக்கச் சிவக்க, வேல் போன்ற கூரிய பற்கள் வெள்ளை வெளேர் என்று ஒளி தர, வெற்றிமாலைகள் முன்பு சூடிய தோள்கள் கன்னங் கறேல் என்று கரிய நிறமாக எதிர்த்து வந்த சூரன் மார்பு ஒருமிக்க நொடிந்து கரிந்து போக, பேய்கள் குதித்து மகிழும்படி மாமிசங்கள் கும்பல் கும்பலாகக் கிடக்க, அசுரர்கள் வாய் அடைத்துப்போய்க் கீழே விழுந்து ஐயோ ஐயோ என்று கதறி அழ, ரத்தம் ஆறாகப் பெருக, கடல் வற்றிப்போய் வறண்டு சுறீல் என்று சுருங்க, மாயை மயக்கங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை இடிந்து திடீல் திடீல் என்று கீழே விழ, மேலான தேவர்கள் முதலியோர் ஐயா ஐயா என்று பாட்டுக்களைப் பாட, வேலாயுதத்தை ஏந்தி நடந்த ஞான சூரியனே, வள்ளிமலைக் குறப் பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த மலை போன்ற புயங்களை உடையவனே, தமிழ் முழங்கும் வேதகிரியில் (திருக்கழுக்குன்றத்தில்*) வீற்றிருக்கும் அருளாளனே, சிவக் குமாரனாகிய தலைவனே. 
* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு கதலிவனம் என்றும் பெயர். இத்தலம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.

பாடல் 544 - திருக்கழுக்குன்றம் 
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான     தான தத்த தான தத்த தான தத்த ...... தனதான

வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம     வேடு வச்சி பாத பத்ம மீது செச்சை ...... முடிதோய 
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டி ...... புயநேய     ஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்தி ...... புகல்வாயே 
காது முக்ர வீர பத்ர காளி வெட்க ...... மகுடாமா     காச முட்ட வீசி விட்ட காலர் பத்தி ...... யிமையோரை 
ஓது வித்த நாதர் கற்க வோது வித்த ...... முநிநாண     ஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்த ...... பெருமாளே.

வேதகிரியாகிய திருக்கழுக்குன்றத்திலும், வள்ளிமலையில் உள்ள தினைப்புனத்திலும் விரும்பி இருக்கும் பேரழகு உடையவனே, வேடுவச்சி வள்ளியின் பாதத் தாமரையின் மீது வெட்சி மாலை அணிந்த உன் திருமுடி படும்படியாக காதலித்து, ஆட்கொள்ளும் வேளை இது என்று சமயத்தில் தினைப்புனத்துக்குள் புகுந்த பன்னிரு தோள்களை உடைய நண்பனே, ஆர்வத்துடன் நான் உன்னை அன்பு வழிபாடு செய்ய உரிய புத்தியை உபதேச மொழியாகச் சொல்லி அருள்வாயாக. வெகுண்டு வந்த வீரபத்திரரின் துணைவியான காளி நாணம் அடையும்படி தமது கி¡£டத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,* பக்தியுள்ள தேவர்களுக்கு கற்பித்த நாதராகிய சிவபெருமான், உன்னிடம் பாடம் கேட்கவும், சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன் வெட்கமடையவும், ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி அந்தச் சிவனுக்கே உபதேசித்த பெருமாளே. 
* திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
** தக்ஷ யாகத்தை அழிக்க சிவனும் உமையும் வீரபத்திரராகவும் காளியாகவும் வந்தனர்.காளி நாணும்படி சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியது இங்கு குறிப்பிடப்படுகிறது.

பாடல் 545 - பேறைநகர் 
ராகம் - ...; தாளம் -

தானதன தான தந்த தானதன தான தந்த     தானதன தான தந்த ...... தனதான

நீலமயில் சேரு மந்தி மாலை நிக ராகி யந்த     காரமிக வேநி றைந்த ...... குழலாலும் 
நீடுமதி ரேக இன்ப மாகியச லாப சந்த்ர     னேர்தருமு கார விந்த ...... மதனாலும் 
ஆலினிக ரான வுந்தி யாலுமட வார்கள் தங்கள்     ஆசைவலை வீசு கெண்டை ...... விழியாலும் 
ஆடியக டாமி சைந்த வார்முலைக ளாலு மந்த     னாகிமயல் நானு ழன்று ...... திரிவேனோ 
கோலவுரு வாயெ ழுந்து பாரதனை யேயி டந்து     கூவிடு முராரி விண்டு ...... திருமார்பன் 
கூடமுறை நீடு செம்பொன் மாமதலை யூடெ ழுந்த     கோபவரி நார சிங்கன் ...... மருகோனே 
பீலிமயில் மீது றைந்து சூரர்தமை யேசெ யங்கொள்     பேர்பெரிய வேல்கொள் செங்கை ...... முருகோனே 
பேடைமட ஓதி மங்கள் கூடிவிளை யாடு கின்ற     பேறைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

நீல நிறமான மயில்கள் சேர்ந்து விளையாடும் மாலைப் பொழுதுக்கு ஒப்பதாகி, பேரிருள் மிக்கு நிறைந்துள்ள கூந்தலாலும், நீடித்துள்ள மிக்க இன்பம் தருவதாகி இன்பமாய்ப் பேசத் தக்க, சந்திரனுக்கு ஒப்பான முகத் தாமரையாலும், ஆலிலைக்கு ஒப்பான வயிற்றாலும், பெண்களின் மோக வலையை வீசுகின்ற கெண்டை மீன் போன்ற கண்களாலும், கடைந்து எடுத்த குடம் போன்ற, கச்சு அணிந்த மார்பகங்களினாலும் கண்கள் மங்கி அறிவும் மயங்கியவனாகி, காம மயக்கத்தில் நானும் கலங்கித் திரிவேனோ? பன்றியின்* உருவோடு அவதரித்து, மண்ணைத் தோண்டிச் சென்று பூமியை மீட்டு வந்தவனும், முரன் என்னும் அசுரனுக்குப் பகைவனுமான முராரியாகிய திருமால், லக்ஷ்மியை மார்பில் வைத்தவன், கூடத்தில் இருந்த பெரிய செம் பொன்னாலாகிய உயர்ந்த தூணில் தோன்றி எழுந்த, கோபம் நிறைந்த, நரசிங்க மூர்த்தியின் மருகனே, தோகை நிறைந்த மயில் மீது வீற்றிருந்து, சூரர்களை வென்ற, புகழ் மிக்க வேலாயுதத்தை ஏந்திய திருக்கையை உடைய முருகனே, இளம் பெண் அன்னங்கள் ஒன்று சேர்ந்து விளையாடும் பேறை நகர்** என்னும் ஊரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போலச் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதளத்தில் ஒளிந்து கொண்டான். திருமால் வராக அவதாரம் கொண்டு அவனை அழித்துப் பூமியை மேலே கொணர்ந்தார்.
** பேறைநகர் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொழுப்பேடு என்ற தலத்தின் அருகே உள்ளது.

பாடல் 546 - மயிலம் 
ராகம் - ...; தாளம் -

தனதந்த தானன தானா தானா     தனதந்த தானன தானா தானா          தனதந்த தானன தானா தானா ...... தனதான

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ     விடமிஞ்சு பாதக வேலோ சேலோ          குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் 
குயில்தங்கு மாமொழி யாலே நேரே     யிழைதங்கு நூலிடை யாலே மீதூர்          குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி 
உலைகொண்ட மாமெழு காயே மோகா     யலையம்பு ராசியி னூடே மூழ்கா          வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ 
உறுதண்ட பாசமொ டாரா வாரா     எனையண்டி யேநம னார்தூ தானோர்          உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே 
அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ     எனநின்று வாய்விட வேநீள் மாசூ          ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் 
அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ     ரனலங்கை வேல்விடும் வீரா தீரா          அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி 
மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய்     குறமங்கை யாளுட னேமா லாயே          மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா 
மதிமிஞ்சு போதக வேலா ஆளா     மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா          மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.

கொலைத் தொழிலைத் தன்னிடத்தே அடக்கி உள்ள, சண்டை செய்ய வல்ல கண்கள் அம்போ, வாளோ, விஷம் நிறைந்து பாவத் தொழிலைச் செய்யவல்ல வேலாயுதமோ, சேல் மீனோ, குண்டலத்தைத் தொடும் அளவு பாயக்கூடிய மீனோ அல்லது மானோ என்று சொல்லக் கூடிய மாதர்களின் குயிலின் குரல் போல் அமைந்த இனிய பேச்சுக்களாலே, கண் எதிரே தோன்றும் நூலின் இழை போன்ற மெல்லிய இடையாலே, மேலே பொருந்தியுள்ள குளிர்ந்த மார்பகம் ஆகும் மேரு மலையாலே, பல விதமாக மனம் கலங்கி, நெருப்பு உலையில் பட்ட நல்ல மெழுகு போல உருகி, காம மோகம் என்னும் அலை வீசும் கடலினுள் முழுகி, உடல் பஞ்ச பாதகத்துக்கும்* ஈடாகி, பிணியால் அழிவேனோ? கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு இவைகளுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதுவர்கள் என் உயிரைக் கொண்டு போய் விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருளுக. அலை வீசும் கடல் கோகோ என்று வாய் விட்டு ஒலித்து ஓலமிட, பெரிய மாமரமாய் நின்ற சூரன் வைத்திருந்த அழகிய வில்லும் அம்புகளும் வேறுபட்டுத் தூளாகவே, சுயம் பிரகாசமான ஜோதியைத் தன்னிடம் கொண்ட, நேர்மை நிறைந்த, பெரிய, பெருமை வாய்ந்த நெருப்பு உருவத்தில் திருக் கையில் உள்ள வேலைச் செலுத்திய வீரனே, தீரனே, அருமை வாய்ந்த அழகுள்ள உருவத்தவனே, ஒப்பற்ற ஒருவனே, வேற்று வடிவமான (வேட) உருவத்துடன் வள்ளிமலையில் வாழும் வேடர்கள் வசிக்கும் காட்டுக்குள் சென்று, குறப் பெண்ணாகிய வள்ளியின் மேல் ஆசை கொண்டு, மோக மயக்கத்துடன் உலாவி, அவளுடைய பாதங்களில் மீது வீழ்ந்து வணங்கிய குமரேசா. அறிவு நிறைந்த ஞான வேலனே, மாணவனாக உபதேசத்தைப் பெற்று மகிழ்ந்த சிவபிரான் வணங்கும் திருவடியை உடைய நாதனே, மயிலம்** என்னும் குளிர்ந்த மலையில் வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* ஐவகை பாதகங்கள்: கொலை, களவு, சூது, கள்ளுண்ணல், குரு நிந்தை ஆகியவை.
** மயிலம் அதே பெயருடைய ரயில் நிலையத்துக்கு 3 மைலில் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 547 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தந்த தாத்தன தத்தத் தானன     தந்த தாத்தன தத்தத் தானன          தந்த தாத்தன தத்தத் தானன ...... தனதான

அங்கை நீட்டிய ழைத்துப் பாரிய     கொங்கை காட்டிம றைத்துச் சீரிய          அன்பு போற்பொய்ந டித்துக் காசள ...... வுறவாடி 
அம்பு தோற்றக ணிட்டுத் தோதக     இன்ப சாஸ்த்ரமு ரைத்துக் கோகிலம்          அன்றில் போற்குர லிட்டுக் கூரிய ...... நகரேகை 
பங்க மாக்கிய லைத்துத் தாடனை     கொண்டு வேட்கையெ ழுப்பிக் காமுகர்          பண்பில் வாய்க்கம யக்கிக் கூடுத ...... லியல்பாகப் 
பண்டி ராப்பகல் சுற்றுச் சூளைகள்     தங்கள் மேற்ப்ரமை விட்டுப் பார்வதி          பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ...... அருள்வாயே 
எங்கு மாய்க்குறை வற்றுச் சேதன     அங்க மாய்ப்பரி சுத்தத் தோர்பெறும்          இன்ப மாய்ப்புகழ் முப்பத் தாறினின் ...... முடிவேறாய் 
இந்த்ர கோட்டிம யக்கத் தான்மிக     மந்த்ர மூர்த்தமெ டுத்துத் தாமத          மின்றி வாழ்த்திய சொர்க்கக் காவல ...... வயலூரா 
செங்கை வேற்கொடு துட்டச் சூரனை     வென்று தோற்பறை கொட்டக் கூளிகள்          தின்று கூத்துந டிக்கத் தோகையில் ...... வரும்வீரா 
செம்பொ னாற்றிகழ் சித்ரக் கோபுர     மஞ்சி ராப்பகல் மெத்தச் சூழ்தரு          தென்சி ராப்பள்ளி வெற்பிற் றேவர்கள் ...... பெருமாளே.

அழகிய கையை நீட்டி அழைத்தும், பருத்த மார்பகத்தைக் காட்டியும் மறைத்தும், சிறந்த அன்புள்ளவர்கள் போல் பொய் வேடத்துடன் நடித்தும், கொடுத்த பொருளுக்குத் தக்கவாறு உறவு காட்டியும், அம்பும் தோற்கும்படியான (கூர்மையான) கண்களால் மயக்கியும், வஞ்சகம் நிறைந்த காம இன்ப சாத்திரங்களை எடுத்துப் பேசியும், குயில் அன்றில் பறவை இவைகளைப் போல புட்குரலைக் காட்டியும், கூர்மையான நகம் கொண்டு காயப்படுத்தி அலைத்தும், காம சாத்திர முறையில் தட்டுதல் செய்தும் காம ஆசையை எழுப்பி, நாடி வருகின்ற காமுகரைத் தமது வசப்படும்படி செய்து, தம்முடன் கூடுதலையே ஒழுக்கமாகும்படிச் செய்து, முதலிலிருந்தே இரவும் பகலும் சுற்றி அலைக்கும் சூதுக்கார வேசிகளின் மேல் உள்ள மயக்கத்தை ஒழித்து, பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக. எங்கும் நிறைந்தவனாய், குறை இல்லாதவனாய், அறிவே வடிவு உடையவனாய், பரிசுத்த அன்பர்கள் அடையும் இன்பப் பொருளாய், புகழ் கொண்டவனாய், முப்பத்தாறு தத்துவங்களின் * முடிவுக்கும் வேறானவனாய், இந்திரன் முதலிய கூட்டத்துத் தலைவர்கள் கலந்து ஒன்று கூடி சிறந்த (சரவணபவ) மந்திர ரூப பூஜை செய்து தாமதம் இல்லாமல் வாழ்த்திய தேவ லோகக் காவலனே, வயலூர்த் தெய்வமே, திருக்கையில் உள்ள வேலைக் கொண்டு துஷ்டனாகிய சூரனை வெற்றி கொண்டு, தோலாலாகிய பறைகள் கொட்ட, பேய்கள் அசுரப் பிணங்களை உண்டு கூத்தாடி நடிக்க, மயிலின் மேல் வரும் வீரனே, செம் பொன்னால் விளங்கும் அழகிய கோபுரத்தின் மீது மேகங்கள் இரவும் பகலும் நிரம்பச் சூழ்ந்துள்ள அழகிய திரிசிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* 36 பரதத்துவங்கள் (அகநிலை):ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

பாடல் 548 - திருசிராப்பள்ளி 
ராகம் - கல்யாணி ; தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தந்தாதன தானன தாத்தன     தந்தாதன தானன தாத்தன          தந்தாதன தானன தாத்தன ...... தனதான

அந்தோமன மேநம தாக்கையை     நம்பாதெயி தாகித சூத்திர          மம்போருக னாடிய பூட்டிது ...... இனிமேல்நாம் 
அஞ்சாதமை யாகிரி யாக்கையை     பஞ்சாடிய வேலவ னார்க்கிய          லங்காகுவம் வாஇனி தாக்கையை ...... ஒழியாமல் 
வந்தோமிது வேகதி யாட்சியு     மிந்தாமயில் வாகனர் சீட்டிது          வந்தாளுவம் நாமென வீக்கிய ...... சிவநீறும் 
வந்தேவெகு வாநமை யாட்கொளு     வந்தார்மத மேதினி மேற்கொள          மைந்தாகும ராவெனு மார்ப்புய ...... மறவாதே 
திந்தோதிமி தீதத மாத்துடி     தந்தாதன னாதன தாத்தன          செம்பூரிகை பேரிகை யார்த்தெழ ...... மறையோதச் 
செங்காடென வேவரு மூர்க்கரை     சங்காரசி காமணி வேற்கொடு          செண்டாடிம காமயில் மேற்கொளு ...... முருகோனே 
இந்தோடிதழ் நாகம காக்கடல்     கங்காளமி னார்சடை சூட்டிய          என்தாதைச தாசிவ கோத்திர ...... னருள்பாலா 
எண்கூடரு ளால்நெளவி நோக்கியை     நன்பூமண மேவிசி ராப்பளி          யென்பார்மன மேதினி நோக்கிய ...... பெருமாளே.

ஐயோ மனமே, நிலையா நம் உடலை நிலைத்திருக்குமென நம்பி மோசம் போகாதே. இன்பமும் (இத) துன்பமும் (அகித) நிறைந்த இயந்திரம் இந்த உடம்பு. இது தாமரை மலரில் உள்ள பிரமனால் அமைக்கப்பட்ட பூட்டு. சென்றது போக, இனிமேல் நாம் இந்த உடல் விரைவில் அழிந்துவிடுமே என்று பயப்படாமல் இருக்கமுடியாது. கிரெளஞ்சமலையின் உடலைப் பஞ்சுபோல் தூளாக்கிய வேலாயுதக் கடவுளுக்கு நீங்காத அன்புடையவராக ஆகுவோம், நீ அங்கு வா. இதுதான் இன்ப நெறியாகும். இந்த உடம்பை வீணாக ஒழித்து விடாமல் அவனிடம் யாம் வந்தோம். இந்த மெய்ந்நெறிதான் மோக்ஷம். ஆன்றோர்களின் மேலான வாக்கும் இதுதான். ஆகவே இதனைப் பெற்றுக்கொள். இது மயில்வாகனர் நமக்கு அளித்த அனுமதிச் சீட்டு. நாம் வந்து உன்னை விரைவில் ஆட்கொள்வோம் என்று முருகன் நமக்கு அனுப்பிய மங்கலம் தரும் திருநீற்றையும் பெற்றுக்கொள். முருகப்பிரான் தாமாக வந்தே நம்மை ஆட்கொள்ள மகிழ்ந்திருக்கிறார். இதைத்தவிர வேறு எந்த மதம் உள்ளது நாம் மேற்கொள்ள? சிவமைந்தனே, குமரக் கடவுளே என்று பேரொலியோடு, நீ உய்வதற்கு, துதிப்பதை மறவாதே. திந்தோதிமி தீதத என்று பெரிய உடுக்கையும், தந்தாதன னாதன தாத்தன என்ற தாளத்துடன் செம்மை பொருந்திய பூரிகை என்ற வாத்தியமும், பேரிகையும் ஆரவாரித்து ஒலி எழுப்பவும், வேதங்கள் கோஷமிடவும், எதிர்த்து வந்த அசுரர்களை (ரத்தக் களரியில்) சிவந்த காட்டைப் போலக் கொன்று தள்ளி சம்காரம் செய்வதில் முதன்மை பெற்றதான வேலாயுதத்தைக் கொண்டு அவர்களது தலைகளைச் செண்டு போல் விழச்செய்து, பெரிய மயில்வாகனத்தில் அமரும் முருகனே, சந்திரனையும், ஆமை ஓட்டினையும், கொன்றை இதழையும், பாம்பையும், பெருங்கடல் போன்ற கங்கை நதியையும், எலும்புக் கூடுகளையும் ஒளி நிறைந்த சடைமீது அணிந்துள்ள என் தந்தையும் சதாசிவ கோத்திரத்திற்குத் தலைவருமாகிய சிவபெருமான் பெற்றருளிய புதல்வனே. அளவிடற்கரிய திருவருளால் மான் போன்ற நோக்குடைய வள்ளியை, நலம் பொருந்திய அழகுடன் திருமணம் செய்துகொண்டு, திருசிராப்பள்ளி என்ற திருத்தலத்தின் பெயரை மாத்திரம் கூறும் பேறு பெற்றவர்களின் மனம் என்ற பூமியில் எழுந்தருளியுள்ள பெருமாளே. 

பாடல் 549 - திருசிராப்பள்ளி 
ராகம் - ...; தாளம் -

தனதன தந்தன தாத்தன     தனதன தந்தன தாத்தன          தனதன தந்தன தாத்தன ...... தனதான

அரிவையர் நெஞ்சுரு காப்புணர்     தருவிர கங்களி னாற்பெரி          தவசம்வி ளைந்துவி டாய்த்தடர் ...... முலைமேல்வீழ்ந் 
தகிலொடு சந்தன சேற்றினில்     முழுகியெ ழுந்தெதிர் கூப்புகை          யடியின கம்பிறை போற்பட ...... விளையாடிப் 
பரிமளம் விஞ்சிய பூக்குழல்     சரியம ருங்குடை போய்ச்சில          பறவைக ளின்குர லாய்க்கயல் ...... விழிசோரப் 
பனிமுக முங்குறு வேர்ப்பெழ     இதழமு துண்டிர வாய்ப்பகல்          பகடியி டும்படி தூர்த்தனை ...... விடலாமோ 
சரியையு டன்க்ரியை போற்றிய     பரமப தம்பெறு வார்க்கருள்          தருகணன் ரங்கபு ரோச்சிதன் ...... மருகோனே 
சயிலமெ றிந்தகை வேற்கொடு     மயிலினில் வந்தெனை யாட்கொளல்          சகமறி யும்படி காட்டிய ...... குருநாதா 
திரிபுவ னந்தொழு பார்த்திபன்     மருவிய மண்டப கோட்டிகள்          தெருவில்வி ளங்குசி ராப்பளி ...... மலைமீதே 
தெரியஇ ருந்தப ராக்ரம     உருவளர் குன்றுடை யார்க்கொரு          திலதமெ னும்படி தோற்றிய ...... பெருமாளே.

(விலை) மாதர்கள் மீது மனம் உருகி கலவி இச்சை தருகின்ற விரகதாபத்தால் மிகவும் தன்வசம் அழிதல் ஏற்பட்டு, காம தாகம் அதிகரித்து, நெருங்கிய மார்பகங்களின் மேல் விழுந்து, அகில், சந்தனம் இவற்றின் கலவைச் சேற்றில் முழுகியும் எழுந்தும், எதிரே கூப்பிய கையடியில் உள்ள நகம் பிறைபோல (உடலில்) படும்படி பதித்து விளையாடி, நறு மணம் மிக்க பூ நிறைந்த கூந்தல் சரிந்து விழ, இடையில் இருந்த சேலை விலக, சில பறவைகளின் ஒலிகள் எழ, கயல் மீன் போன்ற கண்கள் சோர்வு அடைய, குளிர்ந்திருந்த முகத்தில சிறு வியர்வை எழ, வாயிதழ் அமுதை உண்டு, பகலிலும் இரவிலும் கலவிக் கூத்தாடும்படி செய்த இந்தக் கொடியவனை கைவிடலாமோ? சரியை, கிரியை* ஆகிய மார்க்கங்களை கைப்பிடிக்கும் மேலான பதத்தைப் பெற விரும்புவோர்க்கு அருளைத் தருகின்ற கண்ணன் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட மேன்மையாளனாகிய (ரங்கநாதனாம்) திருமாலின் மருகனே, கிரெளஞ்ச மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே**, மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த வீரனே, அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் 'அதல சேடனார் ஆட' என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.

பாடல் 550 - திருசிராப்பள்ளி 
ராகம் -...; தாளம் -

தனதன தானான தானன தனதன தானான தானன     தனதன தானான தானன ...... தந்ததான

அழுதழு தாசார நேசமு முடையவர் போலேபொய் சூழ்வுறும்     அசடிகள் மாலான காமுகர் ...... பொன்கொடாநாள் 
அவருடன் வாய்பேசி டாமையு முனிதலு மாறாத தோஷிகள்     அறுதியில் காசாசை வேசைகள் ...... நஞ்சுதோயும் 
விழிகளி னால்மாட வீதியில் முலைகளை யோராம லாரொடும்     விலையிடு மாமாய ரூபிகள் ...... பண்பிலாத 
விரகிகள் வேதாள மோவென முறையிடு கோமாள மூளிகள்     வினைசெய லாலேயெ னாவியு ...... யங்கலாமோ 
வழியினில் வாழ்ஞான போதக பரமசு வாமீவ ரோதய     வயலியில் வேலாயு தாவரை ...... யெங்குமானாய் 
மதுரையின் மீதால வாயினில் எதிரம ணாரோரெ ணாயிரர்     மறிகழு மீதேற நீறுப ...... ரந்துலாவச் 
செழியனு மாளாக வாதுசெய் கவிமத சீகாழி மாமுனி     சிவசிவ மாதேவ காவென ...... வந்துபாடும் 
திருவுடை யாய்தீதி லாதவர் உமையொரு பாலான மேனியர்     சிரகிரி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.

மேலும் மேலும் அழுது ஒழுக்கம் வாய்ந்த நட்பு உள்ளவர்கள் போல் பொய் வழியிலேயே சூழ்ச்சி செய்யும் மூடப் பெண்கள், தம் மீது ஆசைப்படும் காமாந்தகர்கள் தமக்குப் பொருள் கொடுக்காத நாளில் அவர்களோடு வாய் பேசாதிருத்தலும் கோபித்தலும் நீங்காத குற்றம் உடையவர்கள், எல்லை இல்லாத பொருள் ஆசை கொண்ட பொது மகளிர், விஷம் தோய்ந்துள்ள கண்களால் மாட வீதிகளில் தம் மார்பகங்களை ஆராயாமல் எவர்க்கும் விலைக்கு விற்கும் மகாமாய உருவினர், நற் குணம் இல்லாத காமிகள், பேய் பிசாசு என்று சொல்லும்படி கூச்சலிட்டுக் கூத்தடிப்பவர், விகாரத்தினர், (இத்தகையோரின்) சூழ்ச்சிச் செயல்களால் என் உயிர் வருந்தலாமோ? நன்வழியில் வாழ்வதற்கான ஞானோபதேசம் செய்யவல்ல பரம சுவாமியே, தேவர்கள் பெற்ற வரத்தால் தோன்றியவனே, வயலூரில் அமர்ந்த வேலாயுதனே, மலைத்தலம் எங்கும் மகிழ்வுடன் வீற்றிருப்பவனே, மதுரையாகிய திருவாலவாய்த் தலத்திலே எதிர்த்து வந்த சமணர் சுமார் எண்ணாயிரம் பேர் அழிபட்டு கழுவின் மீது ஏற, திருநீறு பரந்து விளங்க, பாண்டிய அரசனும் அடிமைப்பட, வாது செய்து கவி மதத்தைப் பொழிந்த சீகாழிப் பெரிய முனிவரும், சிவசிவ மகாதேவா, காத்தருள் என்று (சிவபெருமானிடம்) சென்று பாடின பெருஞ் செல்வம் பெற்றவருமான ஞானசம்பந்தரே, தீது இல்லாதவரும், உமையை ஒரு பாகத்தில் வைத்த திருமேனியரும் ஆன சிவபெருமானது திரிசிர மலையில் வாழ்வு கொண்டிருப்பவனே, தேவர்களின் தம்பிரானே. 

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.