LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[601 -650]

பாடல் 601 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தத்த தாத்தத் தத்த தாத்தத்
     தத்த தாத்தத் ...... தனதான
அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
     தத்தை மார்க்குத் ...... தமராயன் 
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
     றச்சு தோட்பற் ...... றியவோடும் 
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
     சிக்கை நீக்கித் ...... திணிதாய 
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
     செச்சை சாத்தப் ...... பெறுவேனோ 
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
     கொற்ற வேத்துக் ...... கரசாய 
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
     பொற்ப வேற்கைக் ...... குமரேசா 
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
     தெட்டு மேற்றுத் ...... திடமேவும் 
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
     சத்ய வாக்யப் ...... பெருமாளே.
பொருளின் மேல் மட்டும் ஆசைகொண்டு என் மீது விருப்பம் வைக்கும் அந்தக் கிளிபோன்ற விலை மகளிருக்கு வேண்டியவனாய், அன்பு இல்லாத அவர்களின் கூட்டத்தில் மட்டும் என் கவனத்தை வைத்து, உருவமைந்த அவர்கள் தோளை அணைக்க அலை பாயும் மனத்தை அவ்வழியினின்றும் திருப்பி, பொய்யான வாழ்க்கை என்னும் நிலையில் சிக்கிக்கொண்டதை நீக்கி, வன்மை வாய்ந்த அழகிய வாக்கை நான்அடைந்து, உன் வெட்சி மாலையை அணியப்பெறும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? நெருக்கமான (100 மடங்கு 10=1000) ஆயிரம் கண்களை உடலில் உடைய வீர வேந்தனாகிய இந்திரனுக்கு* அரசனாகிய, கோழி (க்கொடி) ஏந்திய கையனே, பாம்பு மலை எனப்படும் திருச்செங்கோட்டு** அழகனே, வேலாயுதத்தை ஏந்தும் திருக்கரத்தனே, குமரேசனே, தொண்ணூற்றாறு (48 + 48) தத்துவங்களையும்*** பொருந்தி, திடமான தர்க்க சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட தக்க நீதி வழிகளில் உள்ள சத்தியமான சொற்களைப் பேசும் பெருமாளே. 
* கெளதம முநிவரின் சாபத்தால் அவரது மனைவி அகல்யையைக் காமுற்ற இந்திரனுக்கு உடலில் ஆயிரம் கண்கள் ஏற்பட்டன.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
*** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
பாடல் 602 - திருச்செங்கோடு 
ராகம் - பீம்பளாஸ் ; தாளம் - ஆதி 
- எடுப்பு - 3/4 இடம்
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான
பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
     பட்சிந டத்திய ...... குகபூர்வ 
பச்சிம தட்சிண வுத்தர திக்குள
     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் 
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் 
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
     சித்தவ நுக்ரக ...... மறவேனே 
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி
     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் 
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி
     கட்டிய ணைத்தப ...... னிருதோளா 
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத
     கப்பனு மெச்சிட ...... மறைநூலின் 
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய
     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.
அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவனே, நடனம் ஆடவல்ல மயிலை வாகனமாகக் கொண்டு உலவும் குகமூர்த்தியே, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள அன்பர்கள் இது அற்புதம் என வியந்து கொண்டாடும் அழகிய கவிபாடும் திறத்தின் ஒலி மிகுந்துள்ள திருப்புகழை ஓரளவுக்காவது நானும் சொல்லும்படியாக வைத்தும், அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்தும், திருப்புகழில் உன்னைத் தரிசனம் செய்வித்த அருளை அடியேன் ஒரு நாளும் மறக்க மாட்டேன். கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற, தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்ற குறத்தி வள்ளியின் அழகிய நிறமுடைய கழுத்தினைக் கட்டி அணைத்த பன்னிரண்டு புயங்களை உடையவனே, பராசக்தியைப் பொருந்த தன் இடப்பக்கத்தில் வைத்த தந்தையாகிய சிவ பெருமானும் மெச்சும்படி வேத நூலின் மெய்ப்பொருள் பரம்பொருள் அனைத்தையும் உபதேசித்து விளக்கிய நாகமலையில்* வாழும், தேவர்கள் போற்றும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 603 - திருச்செங்கோடு 
ராகம் - நவரஸ கன்னட; தாளம் - ஆதி
தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான
புற்புதமெ னாம அற்பநிலை யாத
     பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும் 
புத்திரரும் வீடு மித்திரரு மான
     புத்திசலி யாத ...... பெருவாழ்வு 
நிற்பதொரு கோடி கற்பமென மாய
     நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான் 
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
     நிற்கும்வகை யோத ...... நினைவாயே 
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
     சக்ரகதை பாணி ...... மருகோனே 
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
     வைத்தவொரு காழி ...... மறையோனே 
கற்புவழு வாது வெற்படியின் மேவு
     கற்றைமற வாணர் ...... கொடிகோவே 
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
     கற்பதரு நாடர் ...... பெருமாளே.
நீர்க்குமிழி என்னும் பெயரோடு சிறிது காலமும் நிலைக்காத பொய்க் குடிசை போல் இருக்கும் இந்த உடலோடு குலாவுகின்ற என் மனைவியும், புதல்வர்களும், வீடும், நண்பர்களும், ஆன சூழலில் புத்தி சோர்வடையாமல், இந்த வாழ்வு பெரும் வாழ்வு, இது நிலைத்து நிற்பது ஒரு கோடி கற்ப காலம் என்று கருதும் மயக்க தியான நிலையில் வாழ்கின்ற அடியேனாகிய யான் நாள்தோறும் உனது பதத்தில் வைத்த ஒப்பற்ற அன்பானது நிலைத்து நிற்கும் வழியை உபதேசிக்க நீ நினைத்தருள வேண்டும். நாக மலையாகிய* இந்தத் திருச்செங்கோட்டுத் தலத்தின் நாதனே, மூன்று தமிழிலும் நன்கு பொழுது போக்குபவனே, சக்கரத்தையும் கதையையும் கரங்களில் ஏந்திய திருமால் மருகனே, வாது செய்து தோற்று வாயிழந்த ஊமைகளாய் நின்ற சமணர்களை மிகுந்த கழுமரங்களில் ஏறவைத்த ஒப்பற்ற சீகாழி அந்தணனாம் திருஞானசம்பந்தனே**, கற்புநிலை பிறழாது இருப்பவளும், வள்ளிமலைக்கு அடியில் கூட்டமாக வாழும் வேடர்களின் குலக்கொடியானவளுமான வள்ளியின் கணவனே, உன்னை வெறுத்த அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு யமனே, கற்பக விருக்ஷம் உள்ள தேவநாட்டவருக்குப் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
** முருகப் பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பது அருணகிரிசுவாமிகளின் கருத்து.
பாடல் 604 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத்தத் தத்தத் தத்தத்
          தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான
பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
     கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
          புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள் 
புட்பட்டுச் செப்பத் துப்பற்
     கொத்தப்பொற் றித்தத் திட்பப்
          பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார் 
கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்
     தத்திற்புக் கிட்டப் பட்டுக்
          கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல் 
கற்றுற்றுச் சித்திக் கைக்குச்
     சித்திப்பப் பக்ஷத் திற்சொற்
          கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய் 
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
     துக்கச்சத் துக்குக் குக்குக்
          குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா 
குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்
     கக்ஷத்திற் பட்சத் தத்தக்
          கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி 
சற்சித்துத் தொற்புத் திப்பட்
     சத்தர்க்கொப் பித்தட் சத்துச்
          சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே 
தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்
     செற்பற்றைச் செற்றிட் டுச்சச்
          சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே.
அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய ரவிக்கையை அணிவித்து இறுக்கிக் கட்டி, தாமரைப் பூவுக்கு (மார்பகம்) ஒப்பாகும் என்று கற்பனை செய்து, வலையில் சிக்கிய பறவை போல் விலைமாதர் வலையில் வாலிபர்கள் நன்றாகச் சிக்கி, (அந்த வேசியர்களின்) வரிசையான பற்களால் கடிபட்டு, பொன்னை வலுவில் அடைவதற்காக, அதனைத் தெளிவான வகையில் பக்குவமாகப் பேசிப் பெறுகின்ற, கொடிய சக்கரம் போன்று வட்ட வடிவமாக உள்ள மார்பகங்களை உடைய மாதர்களின் கல்லைப் போன்ற கடினமான மனம் என்ற சுத்தப் பொய்யான பித்துச் சூழலுக்குள் புகுந்து, அதில் அதிக விருப்பம் வைத்து, (தன்னைப் போல் அங்கே வரும் பிற காமுகர்களுடன்) கைக்குத்துச் சண்டையும் போட்டு சுற்றித் திரியாமல், உன்னை ஓதுதலைக் கொண்டு, நல்ல சித்தி கைகூடுதற்கு, கருணையோடு, (உன்னைத் துதிக்கும் சொற்கள்) தோன்றுமாறும், அந்தச் சொற்களை நான் ஒப்பிக்குமாறும் உனது வீரத் திருவடிகளைத் தருவாயாக. இரை கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு, குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி, குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைக் கொடியாகக் கொண்டவனே, என்றும் உள்ளவராய், அறிவே உருவானவராய், பழையவராய், ஞானியாய், அன்பு வாய்ந்த தந்தையாக நின்ற சிவபெருமானுக்கு ஓதி, எழுத்துகளின் இறை ஒலியை (தேவாரப் பாடல்களைப்) பாடிய வல்லமை வாய்ந்த சீகாழித் தலத்துத் திருஞான சம்பந்தப் பெருமானே, உடனே பற்றிக் கொள்வதும், கருவிலேயே ஊடுருவிச் செல்வதுமான பற்றை (பெண், மண், பொன் என்ற மூவாசைகளை) தடுத்து ஒழித்த மேலானதான நாக மலை என்னும் திருச்செங்கோட்டில்* உறையும் அழகிய பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 605 - திருச்செங்கோடு 
ராகம் - சந்தர கெளன்ஸ்; தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
கொடிய மறலியு மவனது கடகமு
     மடிய வொருதின மிருபதம் வழிபடு
          குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண 
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு
     மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்
          கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும் 
படியு நெடியன எழுபுண ரியுமுது
     திகிரி திகிரியும் வருகென வருதகு
          பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப் 
பழய அடியவ ருடனிமை யவர்கண
     மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு
          பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும் 
சடில தரவிட தரபணி தரதர
     பரசு தரசசி தரசுசி தரவித
          தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத் 
தரணி தரதநு தரவெகு முககுல
     தடினி தரசிவ சுதகுண தரபணி
          சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே 
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ
     எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
          நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும் 
நிலனும் வெருவர வருநிசி சரர்தள
     நிகில சகலமு மடியவொர் படைதொடு
          நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.
கொடியவனான யமனும், அவனது யமப்படையும் இறக்க, ஒருநாள் உன் இரண்டு திருவடிகளையும் வழிபட்டு நிற்கும் மழலைச் சிறுவனாகிய நான் உன் திருவருளையே துணையாகக்கொண்டு யமனோடு சண்டை செய்யும் போரினைக் காண்பதற்கு, குறமகள் வள்ளி கட்டித் தழுவும் பன்னிரு புயமலைகளும், ஆறு திருமுகங்களும், பலவான (பதினெட்டு)* கண்களும், சூரியனைக் கூவி வெளிப்படுத்தும் சேவல் இருக்கும் கொடியும், இவையாவும் பிரத்யக்ஷமாக, மேல் கீழ் என்ற இரு திசைகளோடு எட்டுத் திசைகளையும், பூமியையும், நீண்ட ஏழு கடல்களையும், பழமையான சக்ரவாளகிரியையும், வலம் செய்து வருக என்று ஆணையிட்டதும் உடனேயே ஆடிவந்து கூத்தாடுகின்ற ஒரு பச்சைமயில் வாகனத்தின் மீது ஏறி, பழமையான அடியார்களுடன், தேவர் கூட்டம் இருபுறமும் மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேதகீதங்களையும் பாடி வணங்க, முன்னொருமுறை திருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோல இன்னொரு முறை வந்தருளல் வேண்டும். ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும், மேன்மையான மழுவைத் தாங்கியவரும், சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே உருவாக நிற்பவரும், இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும், மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும், பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும், பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும், சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும், மேருமலையையே வில்லாகத் தரித்தவரும், ஆயிரம் முகங்களை உடைய சிறந்த கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும் ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே, அரும் குணங்களை உடையவனே, நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருப்பவனே, தயாள மூர்த்தியே, கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி மகள் மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக இருப்பவனே, அசுரர்களின் நீண்ட உடம்பின் கரிய வடிவத்திலிருந்து இருள் வீசவும், அவர்களின் பற்களிலிருந்து ஒளி வீசவும், சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறக்கவும், ஏழு குலகிரிகள் நெரிந்து பொடிபடவும், அதிர்கின்ற குரலிலிருந்து புகை எழவும், இடி போன்ற பேரொலி எழவும், விசாலமான ஆகாயமும், பூமியும் அச்சப்படவும் வருகின்ற அசுரர்களின் சேனைகள் சிறிதும் மீதமில்லாமல் முழுவதும் அழிந்தொழிய ஒப்பற்ற சர்வ சம்கார வேற்படையை ஏவிய தலைவனே, மேலான குருநாதனே, தேவர் கோமான் இந்திரனால் துதிக்கப் பெற்ற பெருமாளே. 
குறிப்பு: இப்பாடலில் 'தர' என்னும் சொல் 13 முறையும் 'எழ' என்னும் சொல் 6 முறையும் வந்திருப்பது சிறப்பு.
* 'சூரியன், 'சந்திரன்', 'அக்கினி' என மூன்று கண்கள் வீதம் முருகனின் ஆறு முகங்களுக்கு 18 கண்கள் உள்ளன.இதைத்தான் ஆதி சங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தில் 'அஷ்டாதச விலோசனே' என்று கூறுகிறார்.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
பாடல் 606 - கொல்லிமலை 
ராகம் -...; தாளம் -
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
     தத்த தன்ன தய்ய ...... தனதான
கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
     கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி 
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
     கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர் 
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
     யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி 
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
     யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான் 
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
     முட்ட நன்மை விள்ள ...... வருவோனே 
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
     முத்தி விண்ண வல்லி ...... மணவாளா 
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
     பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா 
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
கஷ்டங்கள் நிறைந்த சேறு போன்றதும், கொடு கொட்டி என்னும் ஆடல்போலக் கூத்தாட்டி வைத்து ஐம்புலன்களுக்கும் இருப்பான வீடு ஆகியதுமான இந்த உடலை விரும்பி, நான் கற்ற வித்தைகளைச் சொல்லி, சுலபமாக நிறைவேறும் என்று மனதில் நினைத்து, மகிழலாம் எனக் கருதி முல்லை மலர் போன்ற பற்களை உடைய விலைமாதர்களின் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி, நல்ல பொருள்களை எல்லாம் கொட்டிக் கொடுத்து, அவர்களிடம் கொடுத்த பின்னர், மேலும் கொடுப்பதற்குப் பொருள் இல்லை என்று சொல்லி வெளி வந்து, ஏமாற்றும் பொருட்டு பொய் வழிகளை யோசிக்கலுற்றும், பொன் இல்லாமையை நினைத்து இரக்கமுற்றும், இவ்வாறு மனம் வருந்துதல் தக்கதாமோ? முழு உண்மையைச் சொன்ன ருத்திர சன்மன்* என்னும் செட்டியாக அவதரித்து, சண்டையிட்ட புலவர்கள் உறுதிப் பொருளை அறிந்துகொள்ள, முழுவதும் சமாதானம் விளையும்படியாக வந்தவனே, முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும், அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே, வழியில் அமைக்கப்பட்டிருந்த மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே. 
* மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம்.
** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது. 
*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.
பாடல் 607 - கொல்லிமலை 
ராகம் - பிருந்தாவன சாரங்கா; தாளம் - கண்டசாபு - 2 1/2
தய்யதன தானந்த தய்யதன தானந்த
     தய்யதன தானந்த ...... தனதான
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
     சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி 
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
     தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும் 
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
     பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப் 
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
     பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே 
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
     கல்வருக வேநின்று ...... குழலூதுங் 
கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
     கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா 
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
     கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே 
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
     கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே.
பழமையானதும் முதலானதும் தான் ஒன்றாக விளங்குவதாய், சக்தி - சிவன் என்ற மென்மையான இரண்டு பேதங்களாக விளங்குவதாய், சொல்லப்படுகின்ற மூன்று குணங்களின் (ஸத்வம், ரஜோ, தமஸ்) முடிவாக விளங்கும் மும்மூர்த்திகளாய், தூய்மையான நான்கு வேதங்கள் ஆகி, கொடிய புலன்களாகிய (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து ஆகி, சோர்வடையச் செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு வேதாங்கங்களாகி(*1), பலப்பல நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம் ஆகியவற்றில் தங்குவதாய், பெருகிவரும் தமிழ் மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி, பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ அருள்வாயாக. கல்லும் உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம் அடைந்திருந்த பசுக்கள் அழகிய புகும் இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால் (முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக(*2) ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான் கை குவித்துத் தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே, தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று, உயிரைக் கொள்ளை கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே, தழைகளைக் கொய்து சென்ற(*3) கட்டழகுக் கந்தனே, கொல்லிமலை(*4) மீது நின்றருளும் பெருமாளே. 
(*1) ஆறங்கம் - வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை:சி¨க்ஷ, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் - இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.
(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது.அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.
(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு.அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும்.வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.
(*4) கொல்லிமலை சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது.
பாடல் 608 - ராஜகெம்பீரவளநாட்டு மலை 
ராகம் - ...; தாளம் -
தானனந் தானதன தாத்த தனதன
     தானனந் தானதன தாத்த தனதன
          தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான
மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு
     போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு
          மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு ...... கண்டுபோல 
மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு
     சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு
          வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ...... மன்றுளாடி 
சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு
     போகபண் டாரபணி தோற்ற அரைகொடு
          தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ...... வந்துகாசு 
தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற
     வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு
          சீவனொன் றானபர மார்த்த தெரிசனை ...... வந்துதாராய் 
வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்
     மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை
          வீரனென் பானொருப ராக்ர னெனவர ...... அன்றுசோமன் 
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக
     ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை
          வீழநன் பாரதியு மூக்கு நழுவிட ...... வந்தமாயன் 
ஏகநின் றாகியமர் தோற்று வதறிட
     வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்
          ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் ...... வந்துசேயென் 
றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை
     தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய
          ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.
ஆகாயத்தில் உலவுகின்ற மேகத்தை தோல்வியுறும்படிச் செய்த கூந்தலைக் கொண்டும், போகங்களை அனுபவிக்கின்ற இந்திர (வான)வில்லை தோல்வி அடையும்படிச் செய்த நெற்றியைக் கொண்டும், பெருமை தங்கிய வண்டுகள் சேர்கின்ற மன்மதனுடைய மலர்ப் பாணங்களை தோல்வியுறச் செய்த கண்களைக் கொண்டும், கற்கண்டு போல இனிக்கின்றதென்று (காம) மயக்கம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற, கொவ்வைக் கனியை தோல்வியுறச் செய்த வாயிதழைக் கொண்டும், சோலையில் போய் (அங்கே) ஒலி எழுப்பும் குயிலைத் தோல்வி அடையும்படி செய்த இசை இன்பம் கொண்டும், கச்சு அணிந்து பாரமுள்ளதான, மலையைத் தோல்வி அடையும்படிச் செய்த, மார்பகங்களைக் கொண்டும், அம்பலத்தில் ஆடுகின்ற நடராஜர் திருக்கரத்தில் விரும்பி வைத்துள்ள உடுக்கையை தோல்வி அடையும்படிச் செய்த இடுப்பைக் கொண்டும், காம போகத்தின் கருவூலமாகிய, பாம்பைத் தோல்வி அடையும்படி செய்த பெண்குறியைக் கொண்டும், தேன் சொட்டும் சிறப்புள்ள வாழையைத் தோல்வியுறச் செய்த தொடையைக் கொண்டும் வெளியே வந்து, பொருளைத் தேடி நிற்கும் வேசியரோடு பொழுது போக்கும் உடல் கொண்ட பொல்லாதவனாக உறவாடுகின்ற என்னை மலங்களைப் போக்கி, ஒளி வீசும் சீவனோடு ஒன்று பட்ட பரம் பொருள் விளக்கத்தை வந்து தந்தருளுக. கோபம் தோன்றி உமை கூறியவுடனே (தக்ஷனுடைய) பெரிய வேள்வி மேற்கொண்டு நடப்பதை அழிக்கும் பொருட்டு, ஒளி நிறைந்த வீரபத்திரன் என்னும் வலிமையாளனாகிய ஒப்பற்றவன் தோன்றி வர, அன்று சந்திரன் உடல் தேய, சூரியனுக்கு உள்ள பற்கள் உதிர, யாகப் பசுவைப் பொடியாக்கும் அக்கினியின் கை அற்று விழ, முதன்மையான தக்ஷன் முடி அற்று விழ, நல்ல சரசுவதியின் மூக்கு அறுபட்டு நழுவி விழ, அங்கு வந்திருந்த திருமால் ஓட்டம் பிடிக்க, அந்த யாக சாலையில் நின்று போர் விளைத்து, (அங்கிருந்தவர்களை) வைது, கோப உங்காரத்தோடு சிவபெருமான் ஆரவாரம் செய்ய, பேய்கள் கூடி வென்று ஆடிய (அந்த) யாக சாலையை விட்டு விலக்க, முனிவர்களும் வந்து சேயே என்றும், ஈசா என்றும் போற்றி அன்பின் பாற்பட்ட நால்வகைப் புருஷார்த்தங்களின் விளக்கக் காட்சியை தந்தருளுக என வேண்டிய கேள்வி நெறியின் புகழைக் கொண்ட ராஜகெம்பீர வள நாட்டு மலையில்* விளங்கும் தம்பிரானே. 
* இது தற்போது திருக்கற்குடி என்று வழங்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் மலை என்றும் கூறுவர்.
பாடல் 609 - ஞானமலை 
ராகம் - ...; தாளம் -
தானதன தான தானதன தான
     தானதன தான ...... தனதான
சூதுகொலை கார ராசைபண மாதர்
     தூவையர்கள் சோகை ...... முகநீலர் 
சூலைவலி வாத மோடளைவர் பாவர்
     தூமையர்கள் கோளர் ...... தெருவூடே 
சாதனைகள் பேசி வாருமென நாழி
     தாழிவிலை கூறி ...... தெனவோதி 
சாயவெகு மாய தூளியுற வாக
     தாடியிடு வோர்க ...... ளுறவாமோ 
வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்
     வேதியர்கள் பூச ...... லெனஏகி 
வீறசுரர் பாறி வீழஅலை யேழு
     வேலையள றாக ...... விடும்வேலா 
நாதரிட மேவு மாதுசிவ காமி
     நாரியபி ராமி ...... யருள்பாலா 
நாரணசு வாமி யீனுமக ளோடு
     ஞானமலை மேவு ...... பெருமாளே.
சூதும் கொலையும் செய்பவர்கள், பணத்தில் ஆசை கொண்ட விலைமாதர்கள், இறைச்சி உண்போர், (இரத்தக் குறைவால்) வெளுத்த முகம் உடைய விஷமிகள், சூலை நோய், வலிப்பு, வாத நோய் இவைகளோடு சம்பந்தப் படுபவர்கள், பாவிகள், தூய்மை இல்லாதவர்கள், கோள் சொல்லுபவர்கள், தெருவில் காரியம் சாதிப்பதற்கு வேண்டிய அழுத்தமான பேச்சுக்களைப் பேசி, வாரும் என அழைத்து, ஒரு நாழிகை நேரத்திற்கு (24 நிமிடங்களுக்கு) பாண்டமாகிய உடலின் விலை நிர்ணயம் இதுதான் என்று பேரம் பேசி, (வந்தவர்கள் தம் பக்கம்) சாயும்படி மிக்க மாயப் பொடியைப் படும்படி அவர்கள் மீது தூவி சா£ரத்தைத் தட்டிக் கொடுப்பவர்கள் உறவு எனக்கு என்றேனும் ஆகுமோ? வேதம் வல்ல முனிவர்கள், குழந்தைகள், பெண்கள், மறையோர் இவர்களை போர் நடக்கப் போகிறது என்று முன்னதாகவே அப்புறப்படுத்தி விட்டு, மேலெழுந்து வந்த அசுரர்கள் அழிந்து கீழே விழ, அலை கடல் ஏழும் வற்றிச் சேறாக வேலைச் செலுத்தியவனே, தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும் மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே, நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.
பாடல் 610 - ஞானமலை 
ராகம் - ஡ணதிகெளளை; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
     மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும் 
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
     வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை 
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
     னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென் 
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
     மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே 
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
     தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத் 
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
     சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே 
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
     எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா 
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
     இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.
மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும் நகைக்கவும், உலகத்திலுள்ள மாதர்களெல்லாம் நகைக்கவும், தந்தையும் சுற்றத்தாரும் உள்ளம் வெறுப்படையவும், என்னுடைய மனமும் மிகச் சலிப்படையவும், எல்லோரும் பழிமொழிகளை ஆராயாமல் கூறி, தினம்தோறும் என்னை அனைவரும் இகழவும், எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து யோசித்துப் பார்த்தால் நான் பிறந்து பெற்ற பயன் இதுதானோ என்று நானும் நாள்தோறும் நினைத்து கடைசியில் உடலினின்றும் உயிரை விடத் துணிந்த சமயத்தில்* என்னருகே வந்து முன்பு நீ அளித்த பாத தீ¨க்ஷயை இப்போதும் அருள்வாயாக. தனதன தனத்த தான என்ற தாளத்தில் முரசு ஒலிக்க, வீணை, உடுக்கை, வேத கோஷங்கள் இவையாவும் அலைமோதுவது போலப் பெருக, மின்னல் போன்ற ஒளிவிடும் வேலாயுதத்தை வீசி அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய ஜோதி முருகனே, என் மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை உடையவனே, எழுதுதற்கு அரியதான மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே, தேவர்கள் துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின் மணவாளனே, விளங்குகின்ற இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே. 
* அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீ¨க்ஷ தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார்.
** ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.
பாடல் 611 - ஊதிமலை 
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
     ஆவுடைய மாது தந்த ...... குமரேசா 
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
     ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே 
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
     பூரணசி வாக மங்க ...... ளறியாதே 
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
     போகமுற வேவி ரும்பு ...... மடியேனை 
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
     நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச 
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
     நீலமயி லேறி வந்த ...... வடிவேலா 
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
     ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர 
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
     ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.
முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, அன்புடன் மனம் கசிந்து உருகி, முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய். ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான ஆசைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும். அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை** மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே. 
* ஆவுடையாள் என்றால் பசு ஏறும் பிராட்டி - திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர் உண்டு.
** ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 612 - ஊதிமலை 
ராகம் - ...; தாளம் -
தான தனத்தத் தனத்த தந்தன
     தான தனத்தத் தனத்த தந்தன
          தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான
கோதி முடித்துக் கனத்த கொண்டையர்
     சூது விதத்துக் கிதத்து மங்கையர்
          கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே 
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல
     ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்
          கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் ...... புரிவாயே 
நாத நிலைக்குட் கருத்து கந்தருள்
     போதக மற்றெச் சகத்தை யுந்தரு
          நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே 
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது
     தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு
          நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் ...... வடிவேலா 
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு
     டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி
          தோதிமி தித்தித் தனத்த தந்தவெ ...... னிசையோடே 
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி
     ரான துறத்தற் கிரக்க முஞ்சுப
          சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே 
ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ
     காரண பத்தர்க் கிரக்க முந்தகு
          ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ...... ரொளியோனே 
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன
     காபர ணத்திற் பொருட் பயன்றரு
          ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் ...... பெருமாளே.
மயிர் சிக்கெடுத்து முடித்த பெருத்த கூந்தல் முடியை உடையவர்கள், சூதான வழிகளுக்கு சாமர்த்தியமாக உதவி செய்யும் விலைமாதர்களைக் கூடுவதால் வரும் அற்பமான இன்பத்தை மனத்தில் நினைக்காமல், திடம் இல்லாத மனத்தை ஒழித்து, திடமுள்ள கூரிய மதியையும் ஞானத்தையும் கொண்ட குணத்தை அடையச் செய்து, உனது வீரச் செயல்கள் புகழப்பெறும் இடங்களில் இன்பமுடன் நான் நிற்கும்படியாக அருள் புரிவாயாக. நாத நிலையில் (சிவ தத்துவத்தில்) கருத்து நிலைக்கும்படி மகிழ்ந்து அருள் புரியும் ஞான குருவே, எல்லா உலகங்களையும் படைக்கும் பிரமனுக்கு தந்தை என்று போற்றப்படும் திருமாலின் மருகனே, உன்னை நாடும் அடியேனுக்கு வந்த துன்பத்தைத் தீரும்படி திருவடியையும் தந்தருளுகின்றவனே, தலைவர் சிவபிரான் அன்புடன் உன்னை மைந்தனே, தகப்பன் சாமியே என்று அழைத்தருளிய கூரிய வேலனே, தோதிமி தித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதி மிதித்தித் தனத்த தந்த என்ற இசையுடன் (சிவலோகத்துப்) பூதகணங்கள் சூழ நடனம் செய்து, யான் உடலினின்றும் உயிரை விடும்போது, இரக்கமும், (என்னைச்) சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பதற்குத் திருவுள்ளமும் கூடிவந்து அருள் புரிவோனே, ஓதப்படும் மந்திரங்களுக்கு உட் பொருள் என்றும், சிவ சம்பந்தமான பக்தர்களிடத்தில் இரக்கமுள்ளவன் என்றும், உயர்ந்த ஓம் என்ற பிரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும் சொல்ல நின்ற பேரொளியானவனே, ஒதியமரம் பூத்துக் குகையில் மலருக்குப் பதிலாக உதிர்க்கின்ற பொன் ஆபரணம் போல அருமையான மோட்சப் பலனைத் தருகின்றவனும், ஊதி மலையில் உள்ளம் மகிழ்ந்து வீற்றிருப்பவனும் ஆகிய பெருமாளே. 
* ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 613 - குருடிமலை 
ராகம் -...; தாளம் -
தனன தனதன தனன தனதன
     தனன தனதன ...... தனதான
கருடன் மிசைவரு கரிய புயலென
     கமல மணியென ...... வுலகோரைக் 
கதறி யவர்பெயர் செருகி மனமது
     கருதி முதுமொழி ...... களைநாடித் 
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
     செவியில் நுழைவன ...... கவிபாடித் 
திரியு மவர்சில புலவர் மொழிவது
     சிறிது முணர்வகை ...... யறியேனே 
வருடை யினமது முருடு படுமகில்
     மரமு மருதமு ...... மடிசாய 
மதுர மெனுநதி பெருகி யிருகரை
     வழிய வகைவகை ...... குதிபாயுங் 
குருடி மலையுறை முருக குலவட
     குவடு தவிடெழ ...... மயிலேறுங் 
குமர குருபர திமிர தினகர
     குறைவி லிமையவர் ...... பெருமாளே.
கருடன்மேல் வருகின்ற கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும், தாமரை (பதும நிதி), சிந்தாமணி நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை கூச்சலிட்டு, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில் மிக்க கருத்துடன் பழைய செஞ் சொற்களைத் தேடியும், திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து அப்பாடலில் அமைத்தும், அறிவில்லாத மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும், திரிகின்றவர்களாகிய சில புலவர்கள் கூறுவது, சற்றேனும் உணரும்படியான வழியை நான் அறிந்திலேன். மலை ஆடுகளின் கூட்டமும், கரடு முரடு உள்ள அகில், மருதம் ஆகிய மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி, மதுரம் என்ற ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி, பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற குருடி மலையில்* வீற்றிருக்கும் முருகனே, சிறந்த வட மலை ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும், குமரனே, குருபரனே, அஞ்ஞான இருளுக்கு ஓர் சூரியனே, குறைவில்லாத தேவர்களின் பெருமாளே. 
* குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.
பாடல் 614 - தென்சேரிகிரி 
ராகம் - ...; தாளம் -
தந்தான தனதனன தந்தான தனதனன
     தந்தான தனதனன ...... தனதான
எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு
     இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென் 
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ
     என்றாசை குழையவிழி ...... யிணையாடித் 
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்
     சந்தேக மறவெபறி ...... கொளுமானார் 
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட
     தண்பாரு முனதருளை ...... யருள்வாயே 
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு
     சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித் 
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்
     தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ் 
சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள
     சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச் 
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
     தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே.
எங்கேயாவது ஒருவர் வரக் கண்டால் அங்கே கண் கொண்டு இனிமையாகப் பார்த்து, இங்கு யார் தான் உன் மீது மோகம் கொள்ள மாட்டார்கள் என்று கூறி, இதோ என்னுடைய இனிமையான வாயிதழ் கொடுக்கின்றேன், என்னைப் பொருந்தித் தழுவுவாயாக என்று ஆசை மொழிகளை மனம் குழையக் கூறி, இரண்டு கண்களையும் உருட்டி அசைத்து, சற்றும் தயங்காமல் வந்தவர்களிடம் உள்ளதான பொருளையும், உயிரையும் சந்தேகம் இல்லாமல் அபகரித்துக் கொள்ளும், மான் போன்ற விலை மகளிருடைய சங்கீதமும் சேர்க்கையும் நித்யசுகம் தரும் என்று எண்ணி மூழ்குகின்ற காமக் கடலினின்று நான் கரை ஏறுவதற்கு, குளிர்ச்சி பொருந்திய உனது திருவருளைத் தந்து அருள்வாயாக. சங்கும் சக்கரமும் கைகளின் ஏந்தியவனும், பொருந்திய பசுக் கூட்டங்களின் பின்னே (கண்ணனாகச்) சென்று தொளைகள் நிரம்பிய, மூங்கில் புல்லாங்குழலை ஊதியவனும், தம் மேல் கொண்ட ஆசையை கடக்க மனம் எழுச்சியைக் கொண்ட பெண்களின் ஆடையை எடுத்துக் கொண்டு (குருந்த) மரத்தின் மேல் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமாகிய திருமாலின் மருகனே, தாமரை மலரில் வாழும் பிரமனும் மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து, யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும் தொழுது வணங்க, தென் சேரி கிரியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 615 - தென்சேரிகிரி 
ராகம் - ...; தாளம் -
தந்தானத் தந்த தனதன
     தந்தானத் தந்த தனதன
          தந்தானத் தந்த தனதன ...... தனதான
கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
     கண்டாரைச் சிந்து விழிகொடு
          கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக் 
குன்றோடொப் பென்ற முலைகொடு
     நின்றோலக் கஞ்செய் நிலைகொடு
          கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும் 
பண்டாடச் சிங்கி யிடுமவர்
     விண்டாலிக் கின்ற மயிலன
          பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு 
பண்டேசொற் றந்த பழமறை
     கொண்டேதர்க் கங்க ளறவுமை
          பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே 
வண்டாடத் தென்றல் தடமிசை
     தண்டாதப் புண்ட ரிகமலர்
          மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா 
வன்காளக் கொண்டல் வடிவொரு
     சங்க்ராமக் கஞ்சன் விழவுதை
          மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே 
திண்டாடச் சிந்து நிசிசரர்
     தொண்டாடக் கண்ட வமர்பொரு
          செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே 
சிங்காரச் செம்பொன் மதிளத
     லங்காரச் சந்த்ர கலைதவழ்
          தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே.
புகழ்ந்து பேசி, கொஞ்சிப் பயிலும் மொழிகளைக் கொண்டும், தாம் சந்தித்துப் பார்த்தவர்களை (மனதை) வெட்டி அழிப்பது போன்ற கண் கொண்டும், பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலைக் கொண்டும், வடக்கில் உள்ள மேரு மலைக்கு நிகரான மார்பினைக் கொண்டும், சபாமண்டபத்தில் நிலைத்து கொலு வீற்றிருப்பது போன்ற தோரணையைக் கொண்டும், கொடி போல இளைத்துப் போன மெல்லிய இடுப்பைக் கொண்டும், எல்லாரிடத்தும் பழகும் சரசம் விளங்க வசப்படுத்தும் பொது மகளிரின் வாய் விட்டுக் கூவுகின்ற மயில் போன்ற நடிப்பால், எனது விருப்பம் அவர்களிடம் செல்லுகின்ற மயக்கம் நீங்கும்படி, தொன்மை வாய்ந்த சொற்களால் அமைந்த பழைய வேதமொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, உமையை இடப் பாகத்தில் கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்தப் பிரணவப் பொருளை (எனக்கும்) அருள்வாயாக. வண்டுகள் களித்து விளையாட, தென்றல் காற்று வீசும் குளத்தை விட்டு நீங்காது, தாமரை மலர்கள் வாடிப் போகாமல் அவைகளிடம் போய் தேனைப் பருகும் வயலூரில் உறைபவனே, வலிய கரிய மேகத்தின் வடிவு உடையவனாய், போர் செய்யும் எண்ணமுடைய கம்சன் இறந்து விழும்படி தாக்கி உதைத்துப் போராடிய கண்ணபிரானிடம் அன்பு காட்டும் லக்ஷ்மியின் மருகனே, சிதறுண்ட அசுரர்கள் திண்டாடும் படியாகவும், அடிமை பூணும்படியாகவும் செய்து, அவர்களுடன் சண்டை செய்த செந்நிறமான வேலைச் செங்கையில் உடைய சண்முகத் தேவனே, அழகிய செம்பொன் மதிலின் அலங்காரம் கொண்டதாய், அதனைச் சந்திரனுடைய கதிர்கள் தழுவுவதான தென்சேரிகிரி* மலையில் இன்பத்துடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 616 - கொங்கணகிரி 
ராகம் - மனோலயம்; தாளம் - ஆதி - கண்டநடை - 2
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
     தந்ததன தத்ததன ...... தனதான
ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள
     ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே 
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை
     அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே 
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
     சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே 
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
     சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே 
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன
     முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே 
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
     வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே 
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்
     கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே 
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு
     கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.
ஐந்து கரங்களை உடைய விநாயகரைப் போன்ற மனமும் (மனோவேகத்துக்கு விநாயகர் அகிலத்தையும் எளிதாக வலம் வந்த வேகத்தைத் தான் ஒப்பிட முடியும்) ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நினைவினை அருள் புரிவாயாக. இந்தப் பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மன நிலையை அருள் புரிவாயாக. நிலைபெற்ற தவநிலை உணர்ச்சியைக் கொடுத்து உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக. பல்லக்கு, பெருமை, கெளரவம் இவைகளை எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக மாதர்கள் தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக நாட்டுக் காவலர்கள் இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*) (அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக. யானைமுகப் பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற கொங்கணகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது.திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று அருணகிரியார் வேண்டுகிறார்.
பாடல் 617 - தீர்த்தமலை 
ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தாத்த தனதன தாத்த தனதன
     தாத்த தனதன தாத்த தனதன
          தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
     கூற்று வருவழி பார்த்து முருகிலை
          பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம் 
பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
     நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
          பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் ...... வழிபோக 
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
     யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
          பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ...... னிதுகேளாய் 
வாக்கு முனதுள நோக்கு மருளுவ
     னேத்த புகழடி யார்க்கு மெளியனை
          வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ 
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
     பூட்டி திரிபுர மூட்டி மறலியி
          னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய் 
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
     யாட்டின் முகமதை நாட்டி மறைமக
          ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா 
சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
     ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
          சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா 
தீர்த்த எனதக மேட்டை யுடனினை
     ஏத்த அருளுட னோக்கி அருளுதி
          தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.
மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து உருகுதல் இல்லை, பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும் உருகுதல் இல்லை, யமன் வரும் வழியைக் கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை, கஷ்டங்களை தினமும் அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை, நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ இன்பத்தை விரும்புவதும் இல்லை, நுனி நாக்காலாவது இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை, பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே, நீ நல்ல வழியிலே போகமாட்டேன் என்று சொல்கிறாய். உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விடுகின்றதாக நீ இல்லை, ஏட்டில் உனக்கென எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை, உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் - இதை நீ கேட்பாயாக. அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான். அடியார்களுக்கு அவன் வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால் நல்வினை தீவினை இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக. உலகையே ஆட்டி வைப்பவரான சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி, யமனுடைய ஆணவம் அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி, மன்மதனுடைய உடலைச் சாம்பலாகும்படி எரித்து தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி, வேதவல்லி ஸரஸ்வதிதேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும், உமாதேவியின் கணவருமான சிவபிரான் அருளிய பாலனே, திருப்பாசுரம் எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக ஓட்டியும், நெருப்பிலே இட்ட ஏடு பச்சைநிறத்துடன் விளங்கும்படி காட்டியும், (வாது செய்து தோற்ற) சமணர்களைக் கோபித்துக் கழுவேற வைத்தும், அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த) குருநாதனே, பரிசுத்தனே, என் மனம் விருப்பத்துடன் உன்னை துதிக்கும்படி நீ திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும். தீர்த்தமலை** நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள் தேவயானையின் பெருமாளே. 
* தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷ¡யணியையும் மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில் வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில் பொருத்தினார். யாகத்துக்கு வந்த ஸரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன் காயம் ஏற்படுத்தினார் - கந்த புராணம்.
** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.
பாடல் 618 - கநகமலை 
ராகம் - ஸாவேரி ; தாளம் - அங்கதாளம் - 6 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனன தந்தத்
     தனதனன தனன தந்தத்
          தனதனன தனன தந்தத் ...... தனதான
அரிவையர்கள் தொடரு மின்பத்
     துலகுநெறி மிகம ருண்டிட்
          டசடனென மனது நொந்திட் ...... டயராமல் 
அநுதினமு முவகை மிஞ்சிச்
     சுகநெறியை விழைவு கொண்டிட்
          டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ 
பரிதிமதி நிறைய நின்ற·
     தெனவொளிரு முனது துங்கப்
          படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும் 
படர்கள்முழு வதும கன்றுட்
     பரிவினொடு துதிபு கன்றெற்
          பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே 
செருவிலகு மசுரர் மங்கக்
     குலகிரிகள் நடுந டுங்கச்
          சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான 
செயமுதவு மலர்பொ ருங்கைத்
     தலமிலகு மயில்கொ ளுஞ்சத்
          தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே 
கருணைபொழி கிருபை முந்தப்
     பரிவினொடு கவுரி கொஞ்சக்
          கலகலென வருக டம்பத் ...... திருமார்பா 
கரிமுகவர் தமைய னென்றுற்
     றிடுமிளைய குமர பண்பிற்
          கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே.
மாதர்களைப் பின் தொடர்ந்து செல்லும் சிற்றின்பம் சார்ந்த உலகநெறியில் மிகுந்த மோகம் கொண்டு, அசடன் எனக் கருதப்பட்டு, மனம் வேதனைப்பட்டுச் சோர்வுறாமல், நாள் தோறும் களிப்பு மிகுந்து, அற்ப சுகவழியிலேயே விருப்பம் கொண்டு நடந்து, பாவ வழியிலே செல்ல விரும்பும் புத்தியை நான் நீக்க மாட்டேனோ? சூரியனும் சந்திரனும் சேர்ந்து நிற்கும் தன்மையை ஒத்து ஒளிருகின்ற உன் பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு, என் மனத்திலுள்ள துயரம் யாவும் நீங்கப் பெற்று, உள்ளத்தில் அன்போடு உன்னைத் துதித்து, ஒளி பொருந்திய உன் திருவடிகள் மீது வணங்குதற்கு அருள் புரிவாயாக. போர்க்களத்தில் பின்னடையும் அசுரர்களின் பெருமை மங்க, பெருமை தங்கிய (கிரெளஞ்சம் முதலிய) மலைகளெல்லாம் நடுநடுங்க, சிலுசிலுவென்று கடல் அலைகள் கலங்க, உறுதி வாய்ந்ததும், வெற்றி தருவதும், மலர் போன்றதுமான திருக்கரத்தில் விளங்கும் கூர்மையான சக்திவேலாயுதத்தை செலுத்தும் பெருமை வாய்ந்த இளையோனே, கருணை பொழியும் அருளே முந்துவதால் அன்போடு கெளரி (பார்வதி) கொஞ்சி நிற்க, கலகல என்று தண்டை ஒலிக்க வரும் கடப்ப மாலை அணி மார்பனே, யானைமுகக் கணபதியைத் தமையனாகப் பெற்று விளங்கும் இளைய சகோதரக் குமரனே, அழகோடு கனககிரி* (பொன்மலை) யில் வாழும் கந்தப் பெருமாளே. 
* கனகமலை வட ஆற்காடு மாவட்டத்தில் போரூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 9 மைலில் தேவிகாபுரத்தின் அருகே உள்ளது.
பாடல் 619 - புகழிமலை 
ராகம் - ...; தாளம் -
தனனதன தான தனனதன தான
     தனனதன தான ...... தனதான
மருவுமலர் வாச முறுகுழலி னாலும்
     வரிவிழியி னாலு ...... மதியாலும் 
மலையினிக ரான இளமுலைக ளாலு
     மயல்கள்தரு மாதர் ...... வகையாலும் 
கருதுபொரு ளாலு மனைவிமக வான
     கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ 
கமலபத வாழ்வு தரமயிலின் மீது
     கருணையுட னேமுன் ...... வரவேணும் 
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்
     அமரர்முநி ராசர் ...... தொழுவோனே 
அகிலதல மோது நதிமருவு சோலை
     அழகுபெறு போக ...... வளநாடா 
பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
     புனல்சுவற வேலை ...... யெறிவோனே 
புகலரிய தான தமிழ்முநிவ ரோது
     புகழிமலை மேவு ...... பெருமாளே.
தலையில் வைத்துள்ள பூங்கொத்துக்களின் நறுமணம் வீசும் கூந்தலினாலும், செவ்வரி ஓடிய விழிகளாலும், சந்திரன் போன்ற முகத்தாலும், மலையை ஒத்த இளம் மார்பகங்களாலும், வகைவகையான விதங்களில் மோகத்தைத் தருகின்ற பெண்களாலும், பேராசையுடன் விரும்பிச் சேர்க்கிற செல்வத்தாலும், மனைவி, மக்கள் என்ற சம்சார சாகர அலைகளில் மூழ்கி அல்லல் அடைவேனோ? உன் தாமரையைப் போன்ற திருவடிகளில் படியும் வாழ்வைத் தர, மயில் மீது ஏறி கருணையுடன் என்முன்பு நீ வர வேண்டும். அரிய வேதங்களை ஓதும் பிரமன் முதலாக, திருமாலும் மற்ற தேவர்களும், முநிவர்களும், அரசர்களும் தொழப்பெற்றோனே, உலகத்துத் தலங்களில் உள்ள யாவரும் புகழும் நதியின் அருகிலுள்ள சோலைகளால் அழகு பெறும் செல்வ வளங்கள் கூடிய நாடனே, போர் செய்ய வந்த சூரர்களையும், கிரெளஞ்ச மலையையும் ஊடுருவும்படியும், கடலில் நீர் வற்றவும் வேலைச் செலுத்தியவனே, சொல்லுதற் அரிதான தமிழ் முநிவராகிய அகஸ்தியர் புகழ்கின்ற புகழிமலையில்* வீற்றிருக்கின்ற பெருமாளே. 
* புகழிமலை திருச்சி மாவட்டத்தில் புகலூர் ரயில் நிலையத்துக்கு 2 மைலில் உள்ளது.
பாடல் 620 - பூம்பறை 
ராகம் - ...; தாளம் -
தாந்ததன தான தாந்ததன தான
     தாந்ததன தான ...... தனதான
மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்
     வாந்தவிய மாக ...... முறைபேசி 
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி
     வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி 
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி
     ஏங்குமிடை வாட ...... விளையாடி 
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்
     ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ 
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி
     தாஞ்செகண சேசெ ...... எனவோசை 
பாங்குபெறு தாள மேங்கநட மாடு
     பாண்டவர்ச காயன் ...... மருகோனே 
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு
     பூங்கதலி கோடி ...... திகழ்சோலை 
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு
     பூம்பறையின் மேவு ...... பெருமாளே.
மாந்தளிர் போல் நிறமுள்ள தோலால் மூடப்பட்ட உடலை உடைய விலைமாதர்கள் (காமுகரிடம்) உறவு முறைகள் பலவற்றை உரிமையுடன் பேசிக் காட்ட வல்லவர். அவர்கள் மீது விருப்பமும், பெருத்த மோகமும் ஏற்பட்டு, அதற்கு அமைதியைத் தர வேண்டி (அப்பொது மகளிர்) வாழ்ந்த வீடுகளைத் தேடி, அவர்களோடு உறவாடி, உயர்ந்து நிற்கும் மார்பில் சந்தனம் முதலிய பல நறு மணங்களைப் பூசி, இளைத்து நிற்கும் இடை ஒடுங்க சரசமாக விளையாடிப் (பின்னர்), உபத்திரவங்கள் (ஹிம்சைகள்) உண்டாக, வெட்கம் இன்றிக் கூடிய வேசையர்களின் உறவு நன்றோ? (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம் ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய மருகனே, பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும், பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன், அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும் இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோம்பை - செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.
** பூம்பறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.
பாடல் 621 - கொடுங்குன்றம் 
ராகம் - ...; தாளம் -
தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான
அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே 
அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே 
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே 
முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ 
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா 
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக் 
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை 
கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே.
மன்மதனுடைய பொருந்திய மலர்ப் பாணங்கள் ஐந்தும் தங்குகின்ற கண்களாலே, நெருங்கி எழுந்துள்ள பொன் மலை, குடம் போன்ற மார்பகங்களாலே, கோபித்தும், பொதுச்சபை ஏறியும் தமக்கு உரிய பொருளைக் கண்டிப்புடன் வசூலிக்கும் விலைமாதர்களால், (உனக்கு நான் செய்யும்) தொண்டு தடைபடுவதை இரக்கத்துடன் பார்த்து, இன்று (உனது) திருவுள்ளம் இன்பம் அடையாதோ? தெனந் தெனந் தெந்தெந்தெந் தெந்தெந் தெந்தென் என்ற ஒலிகளைச் செய்து, கூடி நெருங்கிச் சென்று, நல்ல முறையில் வண்டுகள் இசைக்க, வளைந்து விளங்கும் கிளைகளும், பூங்கொத்துகளும் நெருங்கிய சோலைகள் (சூழ்ந்துள்ள) செழுமையான திண்ணிய கொடுங்குன்றம் என்னும் பிரான் மலையில்* வீற்றிருக்கும் தம்பிரானே. 
* கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.
பாடல் 622 - கொடுங்குன்றம் 
ராகம் - ...; தாளம் -
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன ...... தந்ததான.
எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது
     குத்தித்தி றந்துமலை
யிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி
     முத்துச்செ றிந்தவட
மெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி
     னிற்கொத்து மங்குசநெ ...... ருங்குபாகர் 
எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப
     தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு
     முட்கத்தி ரண்டிளகி
யிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
     டைத்துச்சி னந்துபொரு ...... கொங்கையானை 
பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
     யொக்கத்து வண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
     செக்கச்சி வந்தமுது
பொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய
     முத்தத்து டன்கருணை ...... தந்துமேல்வீழ் 
புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்
     தட்டுப்ப டுந்திமிர
புணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய
     சட்டைக்கு ரம்பையழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
     னிர்த்தச்ச ரண்களைம ...... றந்திடேனே 
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
     தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத
     திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
     தக்கத்த குந்தகுர்த ...... திந்திதீதோ 
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
     டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
     டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
     குக்குக்கு குங்குகுகு ...... என்றுதாளம் 
முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு
     டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம
     கத்திக்க ளும்பரவ
முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய
     மிக்கக்க வந்தநிரை ...... தங்கியாட 
முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர
     வுக்ரப்பெ ருங்குருதி
முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ
     டிக்கத்து ணிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி
     வெட்டிக்க ளம்பொருத ...... தம்பிரானே.
எதிர் நோக்கி போர் புரிந்து மூடப்படும் வலிய ரவிக்கையுடன் போரிட்டு துணியைக் குத்தித் திறந்து, இவை மலைகளே என்னும்படி இருக்கின்றனவும், கஸ்தூரி பூசப்பட்டு நின்று ஒழுகுவனவும், முத்து நிறைந்த மாலை என்கிற யானையைக் கட்டும் சங்கிலிகள் அவைகள் இற்றுப் போகும்படி இடித்து அணைந்து, நகங்களாகிய கொத்துகின்ற அங்குசத்துடன நெருங்குகின்ற யானையைச் செலுத்துவோர் (அணைதற்கு வரும் காமுகர்கள்) எதிரிலே நின்று போற்ற, மார்பை மிதித்துழக்கிக் கிடந்து (பார்த்தோர்) உடல் பதைக்கும்படி அடக்குவனவும், நன்றாக, ரதியின் கணவனான மன்மதனது மணி முடியை மோதி, முக்கண்ணனும் அஞ்சும்படி திரண்டும் நெகிழ்ந்தும் இளைஞர்தம் உயிரை உண்ணும் கவளமாக வட்ட வடிவுடன் நின்று அசைந்து, முன்னே பருத்து, கோபித்துப் பொருதற்கு உற்றனவுமான யானை போன்ற மார்பகங்கள். பொதுவில் (நின்று உடலை) விற்கும் விலைமாதரின் தாமரை போன்ற கரங்களைத் தழுவி, ஒரு சேர நெகிழ்ந்து படுக்கையில் புகுந்து சல்லாபிக்க, ஒழுங்கான ரேகைகள பரந்துள்ள விஷமுள்ள கரிய கயல் மீன் போன்ற கண்கள் செக்கச் சிவந்து, அமுதம் பொதிந்த சொற்கள் பதற்றத்துடன் வர, கூந்தல் கட்டும் அவிழ, முத்தத்துடன் அன்பு பாராட்டி மேலே விழுகின்ற அதிசயத்தைத் தருகின்ற புணர்ச்சி வலையில் அகப்பட்டு அழுந்தி, உயிர்த் தடை ஏற்பட்டு, அலைச்சல் உறும் இருள் சேர்ந்த கடலில் கலக்கம் உற்று, அளவில்லாத இந்திரியங்களால் ஆன மானிடச் சட்டையாகிய இந்த உடல் அழிகின்ற காலத்திலும், அருள் புரியும் முருகனே, பரிசுத்தமான கொடுங்கிரி என்ற பிரான் மலை* என்னும் தலத்தில் (நீ காட்சி தந்த) நடன பாதங்களை மறக்க மாட்டேன்**. மேற்கூறிய ஜதிகளுக்கு எற்ற வகையில் தாளம் முற்பட்டு ஒலிக்கும் திமிலை என்ற ஒரு வகைப்பறை, கரடி கத்தினாற்போல் ஒலிக்கும் ஓசை உடைய பறை, வளைவுள்ள துடி, இடை சுருங்கிய பறை, பகுவாய்ப்பறை, முரசு எனறு பல தாள வாத்தியங்கள் கூடி மொகுகொகு என்று ஒன்றோடொன்று பொருந்தி ஒலி செய்ய, பேயுருவங்கள் பரவிப் போற்ற, மேலே ஆகாயத்தில் பல கொடிகளும் பக்கங்களில் பறந்தெழுந்து அலைய, அதிகமாக தலையற்ற உடல் வரிசைகள் ஆங்காங்கு தங்கி ஆட, வயதான கழுகுகள், காகங்கள், கருடன்கள் இவையெல்லாம் ஒன்று கூடித் திரண்டு வர, உக்கிரத்துடன் ரத்த வெள்ளத்தில் முழுகி எழுகின்ற பைரவர்கள் நடனம் செய்து, அண்டங்கள் எல்லாம் வெடிபட, துணிவு கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களைத் தாக்கி, அவர்களது தலைகளைத் திருகியும் வெட்டியும் போர்க்களத்தில் சண்டை செய்த தம்பிரானே. 
* கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.
** இத்தலத்தில் அருணகிரிநாதருக்கு முருகன் நிர்த்த தரிசனம் தந்த வரலாறு குறிக்கப்படுகிறது.
பாடல் 623 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -
தனன தந்த தந்த தனன தந்த தந்த
     தனன தந்த தந்த ...... தனதான
அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த
     அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே 
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ
     டணிச தங்கை கொஞ்சு ...... நடையாலே 
சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து
     தொடுமி ரண்டு கண்க ...... ளதனாலே 
துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்
     துயரை யென்றொ ழிந்து ...... விடுவேனோ 
எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி
     யெதிர டைந்தி றைஞ்சல் ...... புரிபோதே 
இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க
     மொழிய வென்ற கொண்டல் ...... மருகோனே 
மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச
     மநுவி யம்பி நின்ற ...... குருநாதா 
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க
     மலைவி ளங்க வந்த ...... பெருமாளே.
அழகு வீசும் நிலாப் போன்ற முக வட்டத்தினின்றும் வருகின்ற அமுதம் போன்ற திரண்ட இனிய உரைப் பேச்சினாலும், பாதத்தில் நெளிந்து கிடக்கும் தண்டையும், கலில் என்று சப்தம் செய்யும் சிலம்பும், அழகிய சதங்கையும் கொஞ்சி ஒலிக்கின்ற நடையாலும், மனம் நீர்ச்சுழி போல் சுழற்சி உறும்படிச் செய்யும் விஷம் கலந்து செலுத்தும் கண்களினாலும், ஒன்றோடொன்று இணைந்து நெருங்கும் மார்பகங்கள் பொருந்தி உள்ள விலைமாதர்களின் காமத் துயரை என்றைக்கு ஒழித்து விடுவோனோ? (அடைக்கலம் புக) எழுந்து வந்து கும்பகர்ணனின் இளைய தம்பியாகிய விபீடணன் ராமனது எதிரில் வந்து வணங்கிய அந்தச் சமயத்திலேயே, மனம் மகிழ்ந்து இலங்கை அசுரர்களின் (ராணுவ) ரகசியங்களைச் சொல்ல, வெற்றி பெற்ற மேக நிறத்தினனாகிய ராமனின் மருகனே, மழு ஆயுதத்தை விரும்பி ஏந்தும் சிவபிரான் ஆர்வத்துடன் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து, பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.
பாடல் 624 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
     தனதனன தனதனன தனதனன தனதனன
     தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
          தனதனன தனதனன தனதனன தனதனன
          தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா
ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
தந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள
     அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
     அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ
          களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி
          யஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத ...... னபிஷேகங் 
கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
இன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ
     பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்
     புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ
          கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
          சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ ...... முலைமாதர் 
வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமத
மொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
     அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ
     னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய
          வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
          கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக ...... நுதிரேகை 
வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்
உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி
     செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்
     உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி
          வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர
          துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப ...... அருளாதோ 
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
     சகணசக சகசகண செகணசெக செகசெகெண
     சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
          தனனதன தனதனன தெனனதென தெனதெனன
          தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா 
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
     டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
     டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
          தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
          தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... யெனதாளந் 
தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்
தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை
     பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை
     மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு
          துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென
          வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர ...... முதுபேய்கள் 
சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்
வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென
     வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி
     திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல
          துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
          மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் ...... பெருமாளே.
(முதல் 12 வரிகள் வேசைகளின் மார்பகங்களை வர்ணிக்கின்றன. அடுத்த 12 வரிகள் அவர்களுடனான கலவியை விவரிக்கின்றன. மூன்றாம் 12 வரிகள் தாளங்களின் ஒலிகளைத் தொகுக்கின்றன. கடைசி 12 வரிகள் போர்க்களத்தின் பின்னிகழ்வுகளைக் கூறுகின்றன ). திசைகளின் நிலையைக் குலைக்க வல்ல வலிமை மிகுந்த யானையின் பலத்த தந்தங்களை அழிக்க வல்லனவும், ஆலிங்கனத்துக்கு உரிய வலிமையைக் கொண்டனவும், எல்லா வேதங்களும் போற்றுகின்ற பரமரும், சிலம்பு கல கல கல் என்று ஓசை செய்யும் அழகிய பொலிவுள்ள பாதங்களை உடையவருமாகிய சிவபெருமான் ஏந்திய வில்லாகிய அழகிய பொன் மலை மேருவைத் தாக்க வல்லனவும், நறு மணமுள்ள களபச் சாந்து பூசப்பட்டனவும், அழகில் முழுகுவனவும், தாமரை மொட்டு பயப்படும்படி பெருத்து எழுவனவும், வஞ்சனையான எண்ணமுடைய மன்மதனின் கி¡£டத்தை அடக்க வல்லனவும், பொல்லாத கொலைத் தொழிலுக்கு இடம் கொடுப்பனவும், கொடிதான மேல் ஆடை அணிவனவும், இன்பம் தரும் ஒளி பொருந்திய தங்கக் குடத்துடன் தக்க முறையில் போர் புரிய வல்லனவும், வெற்றிச் சின்னமாக விளங்கி, புளகாங்கித சுகத்தாலும் மென்மையாலும், வளர்கின்ற இளைஞர்களின் புத்திக்குத் துன்பத்தைக் கொடுப்பனவும், கட்டப்பட்ட ரவிக்கையால் நெருக்கப்படுவனவும், கயல் மீன், மகர மீன் இவைகளின் கூட்டம் மிக்குச் சிறப்பு பொருந்திய ஆற்றில் நிறைந்த சங்கு, சிப்பி, முத்து இவைகளை அணிவனவும், மேலெழுந்து பாரம் கொண்டு விளங்குவனவும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்கள். மகிழம்பூ, குவளை மலரின் இதழ் ஆகியவைகள் கொடுக்கின்ற நறு மணமும், கஸ்தூரியும் கலந்த, கருநிறத்தால் மேகத்தையும் வெற்றி கொண்டு, வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசைய, இனிப்புள்ள அமுதத்தாலாகியதும், தன்வசப்படுத்தக் கூடிய இனிய மொழிகள் மயில் குயில் ஆகிய பறைவகளின் புட்குரலைச் சொல்ல, கலவிப் போர் செய்ய, வருகின்ற யமனுடைய வேலுடன் ஒத்து முடுகிப் போர் செய்கின்ற கண்கள் இரண்டும் மிகவும் சிவக்க, மகிழ்ந்து நன்றியைப் பாராட்டுவது போன்று நகத்தின் நுனி ரேகைக் குறிகள் வகை வகையாக உடலில் பதிய, கைவளைகள் கழன்று விழ, அவர்களது இடை துவண்டு சரிய, வாயிதழ் ஊறலை உண்டு உள்ளம் பிரமிக்க ஆசை பூண்டு அணைக்கும் துன்பம் நிறைந்த புணர்ச்சி வலையில் என்னுடைய புத்தி கொண்டுள்ள நூலறிவு சிதறுதல் நீங்கி, பிறவி ஒழிவதற்கான வழியை (நீ) விரும்பி நினைத்து, உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும் முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே, குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ? மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில் பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில், தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை, முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய, போரில் அறுந்து விழும் மண்டை ஓடுகளின் கூட்டத்தை உண்ணுவதற்குச் சண்டை இடும் கூட்டமான கழுகுகளும் அவைகளைத் தொடர்ந்து நெருங்கி வரும் கருடன்கள் கூட்டமாய் வர, காக்கைகள் மொகு மொகு என்று வந்து சேர, குடல், மாமிசம் இவைகளை உண்டு இசைகள் பாடிக் கூச்சலிட்டு பழம் பேய்கள், நாய், நரி ஆகியவை நெறு நெறு என்ற ஒலியுடன் உண்ண மிக ருசியாக இருக்கிறது என்று சாப்பிடும் தொழிலைச் செய்ய, கோபமிக்க கோழிக் கொடி துங்குக் குகுக்குகு என்று ஒலிக்க, வெளிப்படும் உணவு கிடைக்கின்ற திசையைப் போற்றி கூத்தாட, வலிமை வாய்ந்த சூரியன், சந்திரன இவைகளின் ஒளிக் கிரணங்கள் (போர்ப்பழுதியில்) மங்கிப் போக, சிறப்புடைய குதிரை, யானை, தேர், வலிமை வாய்ந்த கோட்டை மதில் இவைகளைக் கொண்ட அசுரர்களின் வலிமையையும் துடுக்கையும் அடக்கி, போர் செய்து, வானவர்களுக்கு வலிமையை அருள் செய்த பெருமாளே. 
* இறைவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
பாடல் 625 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -
தனதனன தந்த தானன தனதனன தந்த தானன
     தனதனன தந்த தானன ...... தனதான
கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு
     கலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக் 
கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்
     கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே 
துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய
     துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை 
தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை
     துயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோ 
இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ
     எழுகடல்ப யந்து கோவென ...... அதிகோப 
எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு
     இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே 
வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட
     வயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனே 
வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்
     வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.
வலிமையுள்ளதும், அகலமானதும், குடத்துக்கு ஒப்பானதுமான வளர்கின்ற இரண்டு மார்பகங்களின் மேலே விழுகின்ற புணர்ச்சி தருகின்ற விலைமாதருடன் உறவு பூண்டு, கனத்த கூந்தல் கட்டாகிய நிழலில் இருந்து, தேனின் இனிப்பைத் தருகின்ற கொவ்வைக் கனி போன்ற வாயிதழை மென்று, காம சாஸ்திரப்படி தட்டுகை என்னும் செயல் செய்து, உடுக்கை போன்ற இடை துவள, வாள் போன்ற கண்கள் குண்டலங்கள் அளவும் சென்று போர் புரிய, முழுதும் மூடியிருக்கும் புடவை தளர்ந்து விழ, வண்டு, குயில், மயில், காடை இவைகளின் புட்குரல் ஒலிக்க, விரும்பி, கூர்மையான வளைந்த நகக் குறிகளை வைத்து, தோளின் மேல் தூங்கும் மயக்க இன்பத்தை நாடுதலை நான் தவிர்க்க மாட்டேனோ? இடி போல் முழங்கும் பேரிகையை ஒலித்துப் போர் செய்யும் அசுரர்கள் தோல்வி உற்று முறிபட்டுப் பொடியாக, ஏழு கடல்களும் அஞ்சி கோ என்று ஒலிக்க, மிகவும் கோபமுள்ள யம தூதர்களும் என்ன செய்வோம் என்று மிக நடு நடுங்க, வேலைச் செலுத்தி, போர்க்களத்தில் பெருங்காற்று போலச் சிறகை வீசிப் பறக்கும் மயில் மீது அமர்ந்த வீரனே, அழகிய அக்கினீசுரர் என்னும் சிவபெருமானும், பொய்யாக் கணபதியும்* சிறந்து விளங்கும் இடமாகிய வயலூரிலும்*, குன்றக்குடியிலும்** வாழ்பவனே, வித விதமாக உன்னைப் புகழ்ந்து இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரும் சந்திரனும் சூரியனும் வழிபடுவதைப் பார்த்து அவர்களுக்கு வாழ்வு அருளிய பெருமாளே. 
* வயலூர் சிவபெருமானுக்கு 'அக்கினீசுர்' என்று பெயர். கணபதிக்குப் 'பொய்யாக் கணபதி' என்று பெயர்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது. இதற்கு 'மயூரமலை' என்ற பெயரும் உண்டு.
பாடல் 626 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -
தானா தானா தந்தன தத்தன
     தானா தானா தந்தன தத்தன
          தானா தானா தந்தன தத்தன ...... தனதான
நேசா சாரா டம்பர மட்டைகள்
     பேசா தேயே சுங்கள மட்டைகள்
          நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே 
நீயே நானே யென்றொரு சத்தியம்
     வாய்கூ சாதோ துங்க படத்திகள்
          நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும் 
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்
     மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ
          காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம் 
ஆகா தாவே சந்தரு திப்பொழு
     தோகோ வாவா வென்று பகட்டிக
          ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ 
பேசா தேபோய் நின்றுமி யிற்றுயிர்
     வாயா வாவா வென்று குடித்தருள்
          பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது 
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு
     வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு
          பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ...... மருகோனே 
மாசூ டாடா டும்பகை யைப்பகை
     சூரா ளோடே வன்செரு வைச்செறு
          மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே 
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு
     தேனா றேசூழ் துங்க மலைப்பதி
          மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.
அன்பு, ஆசாரம், ஆடம்பரம் இவை பொருந்திய பயனிலிகள், பேசாமலிருந்து கொண்டே பிறரைப் பழிக்கின்ற கள்ள வீணிகள், கீழ்க் குலத்து இழிந்தோர்களோடும் பழக, பறிக்கின்ற பொருளாலே, உன் மேல் ஆணை, என் மேல் ஆணை என்று ஆணையிட்டு வாய் கூசாமல் பேசுகின்ற வஞ்சக எண்ணத்தினர், எதிரிலேயே நின்று தளுக்கு, ஆடம்பரம் செய்பவர்கள், யார் மேலும் ஆசையாகிய பந்தத்தைக் காட்டித் தொந்தரவு செய்து, அவர்கள் மேல் விழுபவர்களிடம் சண்டித்தனம் செய்பவர்கள், நல்ல பேரழகுடனே மேலே தோல் எங்கும் மினுக்குபவர்கள், அதிக மோகம் வைக்கலாகாது, காம மயக்கம் இப்போது உண்டாகிறது, ஓகோ வாரும் வாரும் என்று (ஒரு பக்கம்) கூறி (மறு பக்கம்) வஞ்சிப்பவர்கள், பொருந்தாத மோகம் தரும் வீணர்கள் ஆகிய வேசைகளின் அருகிலும் உறவு சம்பந்தம் ஆகுமோ? எவருக்கும் தெரியாமல் போய் நின்று, உறியிலிருந்த தயிரை ஆஹா ஆஹா என்று பருகி, அருள் பேர் அளவுக்கு மாத்திரம் (உண்மையில் அருள் இல்லாது) வைத்து, பெரும் கம்சன் அனுப்பி எதிரில் விடுத்த தூதுவளாகிய, பெரிய வாயைக் கொண்ட (பூதனை என்னும்) பேய், பரந்த வியக்கத் தக்க பிளந்த வாயைக் கொண்ட பெரிய பெண்ணும் எளிதாகவே பேய் ரூபம் எடுத்தவளாகிய அந்த அரக்கியின் போரை வென்று எதிர் நின்றவனாகிய கண்ணனின் மருகனே, குற்றத்தில் ஊடாடி ஆடுகின்ற பகைவர்களையும், பகைத்து நின்ற சூரர்களையும் வலிய போரில் அழித்த மகா சூரனே, பூமி முழுவதும் அருள் பாலித்து விளங்கும் முருகனே, வானாடு முதலான ஏழு பூமியும் புகழ்பெற்று விளங்கும் தேனாறு என்னும் நதி சூழ்ந்த பரிசுத்த மயூரமலைப் பதியில் உறைபவனே, தழைக்கும் குன்றக்குடியில்* வீற்றருளும் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இதற்கு மயூரமலை என்ற பெயரும் உண்டு.
பாடல் 627 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -
தனதன தந்தத் தனதன தந்தத்
     தனதன தந்தத் ...... தனதான
பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்
     பருவம தன்கைச் ...... சிலையாலே 
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்
     பெருவழி சென்றக் ...... குணமேவிச் 
சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்
     செயலும ழிந்தற் ...... பமதான 
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்
     சிலசில பங்கப் ...... படலாமோ 
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்
     கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன் 
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
     கிழிபட துன்றிப் ...... பொருதோனே 
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்
     பனமநு வுஞ்சொற் ...... குருநாதா 
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
     குடிவளர் கந்தப் ...... பெருமாளே.
ஞானிகள் அல்லாத பிறர் புகழும், இனிய சொல்லைப் பேசும் வாலிபப் பருவமுள்ள மன்மதனுடைய கையில் உள்ள வில்லால், பிறவியினால் உண்டாகும் சிக்கல்கள் பெருகும் பொய்யான பெரிய (காம) வழியில் போய் அந்தப் பொய்க் குணத்திலே பொருந்தி, அதனால் சிறுமை அடைந்து, பெருமை சுருங்கி, செயல்கள் அழிந்து, அற்ப குணமுள்ள மாதர்களின் கயல் மீன் போன்ற கண்ணை விரும்பி, (அதனால்) சில சில அவமானங்களை அடையலாமோ? கர்வமும், வஞ்சக எண்ணமும், சூதும் கொண்டு, எட்டுத் திசைகளிலும் எதிர்த்து போருக்கு எழுந்த சூரன் அவனுடைய சுற்றத்தாருடன் மங்கி அழிய, அவர்கள் தலை முடிகள் சிதைந்து கிழிபட, நெருங்கிச் சண்டை செய்தவனே, குட்டை வடிவு உள்ள (அகத்திய) முனிவர் உண்மைப் பொருளை அறியும்படி அன்று மனத்தில் தோன்றிய மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, விளங்கும் மலையாக, பரிசுத்தமான மலையாக மேம்பட்டு விளங்கும் குன்றக் குடியில்* வீற்றிருந்து அருளும் கந்தப் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.
பாடல் 628 - குன்றக்குடி 
ராகம் -...; தாளம் -
தனன தனன தனத்தந் ...... தனதான
தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே 
சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே 
கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே 
கருதி மிகவு மயக்கம் ...... படவோநான் 
பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின் 
பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந் 
திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா 
திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.
வெண்ணிறமுள்ள சந்திரன் வீசும் நெருப்பாலும், காமலீலைக்கு இடம் தரும் மன்மதன் செலுத்தும் பாணத்தாலும், சோகத்தை மிகவும் தெரியப்படுத்தும் குயிலாலும், எனது மனதில் மிகவும் நினைத்து நான் மயக்கத்தை அடையலாமோ? பவளத்தை ஒத்த வாயிதழை உடைய பச்சை நிறமுள்ள குறத்தியான வள்ளியின் பருத்த மலை போன்ற மார்பகங்களின் மீது புரளும் ஒளி வீசும் மணி மாலைகள் பொருந்தும் அழகிய மார்பனே, விளங்குகின்ற மயூரகிரி என்கின்ற குன்றக்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது. நிலவு, மன்மதன், பாணங்கள், குயில், முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 629 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -
தானான தனதான தானான தனதான
     தானான தனதான ...... தனதான
நாமேவு குயிலாலு மாமார னயிலாலு
     நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும் 
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு
     நாடாசை தருமோக ...... வலையூடே 
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி
     லேவாரும் விழிமாதர் ...... துயரூடே 
ஏகாம லழியாத மேலான பதமீதி
     லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய் 
தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு
     தானேறி விளையாடு ...... மொருபோதில் 
தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோத ரன்முராரி ...... மருகோனே 
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
     மாலாகி விளையாடு ...... புயவீரா 
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
     மாயூர கிரிமேவு ...... பெருமாளே.
நாவால் கூவி இசைக்கும் குயிலின் பாட்டாலும், சிறந்த மன்மதனுடைய கூரிய பாணங்களாலும், நாள் தோறும் வெய்யில் போல் காய்கின்ற நிலவின் ஒளியாலும், அன்பும் அக்கரையும் உள்ள மாதர்கள் பேசும் வசை மொழியாலும், புல்லாங்குழல் ஊதும் இசையாலும், விரும்புகிற ஆசையால் வரும் மோகம் என்கின்ற வலைக்குள், ஏமாற்றம் அடைந்து நாள் முழுதும் காம இச்சையால் வீணாகவே நீண்ட கண்களை உடைய மாதர்களால் ஏற்படும் ஏச்சுத் துயரத்துக்குள் வீழாமல், அழிவில்லாததும், மேலானதுமான நிலையை அடைந்து உன்னுடன் நான் பொருந்தி இருக்க அருள் புரிவாயாக. தாம் ஆசையுடன் கறந்த பாலைத் தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில், தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்) பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே, சிறந்த லக்ஷ்மி போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி) மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி ஆசை பூண்டு விளையாடுகின்ற புயங்களை உடைய வீரனே, விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும் மாயூர கிரி எனப்படும் குன்றக் குடியில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* தாமம் = கயிறு, உதரம் = வயிறு, கயிற்றினால் வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் ஆயினான்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.குயிலின் இசை, நிலவு, மன்மதன், அவனது அம்புகள், வசை பேசும் மாதர், புல்லாங்குழலின் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 630 - பொதியமலை 
ராகம் - ...; தாளம் -
தத்த தத்த தான தான தத்த தத்த தான தான
     தத்த தத்த தான தான ...... தனதான
மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி
     மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி 
மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு
     வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே 
இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை
     யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி 
எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி
     யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ 
துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை
     தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச் 
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி
     சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே 
திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்
     திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா 
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு
     செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.
மை பூசிய கண் கரும்பு வில்லை உடைய மன்மதனுடைய பாணங்கள் போல வேலை செய்ய, உள்ளே இருக்கும் கள்ளக் குணத்தை வேறாக மறைத்து வைத்து விருப்பம் காட்டி, வாசனை உள்ள மாலையை செவ்வையாக தலை முடியில் அணிந்து, யானையின் மத்தகத்தில் நீண்டதாக இருக்கும் தந்தங்கள் வைத்ததை ஒத்து அழகிய மார்பில் வட்ட வடிவாய் கச்சு அணிந்த மார்பகத்தின் மேல் தடையாக இருக்கும் ஆடை விழ வெட்கப்பட்டு, தம் குறிப்பின் வழி நடக்கும் ஆட்களை வஞ்சகித்து, (தங்களுக்கு இசைந்தவர்களை) முத்தமிடுகின்ற வாயால் உடன் படுதலைப் பேசி அணுகும் துஷ்ட குணம் உள்ள விலைமாதர்களின் படுக்கையில் ஆசைப் பட்டு என்னுடைய உடலும், உயிரும் களைத்துப் போய் நாள் தோறும் அவமானம் அடையலாமோ? துர்க்கை, முக்கிளையாகப் பிரிந்த திரிசூலத்தை ஏந்திய காளியின் செங்கையில் உள்ள தாளத்தின் ஓசை தொக்க திக்க தோத தீத இவ்வாறு சப்திக்க, சுழன்று வெற்றியுடன் பாதங்கள் (சுத்தமான சொக்கம் என்னும்) நடனத்தை ஆடுகின்ற முதல்வராகிய சிவபெருமானுடைய (நீ உபதேசிப்பாயாக என்று சொன்ன) சொல்லுக்கு இணங்கும் மறு மொழியை மொழிந்தவனே, எல்லா திக்குகளிலும், பெரிய வானத்திலும் சென்ற கர்வம் மிகுந்த சூரர்கள் பல வழியாகச் சிதற, அவர்களைத் தாக்கிப் போர் புரிந்த தீரனே, கூரிய வேலாயுதனே, வெட்சி, பிச்சிப்பூ இவைகளால் ஆகிய மாலையை அணிந்த மார்பனே, அறிவுள்ள கொச்சையான சொல் கொஞ்சிப் பேசும் மாதாகிய வள்ளியுடன் பொதிய மலையில்*, சிவந்த முருகனாக விளங்கும் பெருமாளே. 
* பொதிய மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 631 - பொதியமலை 
ராகம் - ...; தாளம் -
தனத்த தானன தனத்த தானன
     தனத்த தானன தனத்த தானன
          தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான
வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி
     விழித்து மேகலை பதித்து வார்தொடு
          மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ...... ருங்கினாடை 
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை
     துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி
          மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர் 
குடித்து நாயென முடக்கு மேல்பிணி
     யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்
          குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக் 
குறித்து நீயரு கழைத்து மாதவர்
     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்
          கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய் 
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென
     திகுத்த தீதிகு திகுர்த்த தாவென
          உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில் 
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி
     துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை
          யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை 
அடைத்த மாசிறை விடுத்து வானுல
     களிக்கு மாயிர திருக்க ணானர
          சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா 
அளித்த தாதையு மிகுத்த மாமனும்
     அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்
          அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.
நறுமணம் கமழும் நீண்ட கூந்தலை விரித்து, வேல் போன்ற கண்களை விழித்து, இடுப்பிலே ஒட்டியாணத்தை அணிந்து, கச்சு அணிந்த மிகப் பெரிய மார்பகத்தை அசைத்து, நூல் போல் மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், காதோலைகளைப் போலி ஒளியாகக் காட்டியும், கை வளைகளை ஆட்டி ஒலிக்கச் செய்தும், வெளிப்படையாய்ச் சிரித்தும், கீழ்க் கண்ணால் மிரட்டி யாரையும் வா என அழைத்தும், மோகத்துடன் கொடுத்த வாயிதழ் ஊறலைப் பருகியும், (இவ்வேசைகள் எனக்கு) நாய் போல முடக்கத்தை விளைவிக்கும் நோய்கள் தந்துவிட, வேதனைகள் உண்டாக, தாயும், சுற்றத்தார்களும், குலத்தைச் சேர்ந்தவர் எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க உடல் வாட்டம் உறுகின்ற என்னை, கவனித்து நீ உன் அருகில் வரச் செய்து பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, வேல், மயில் ஆகிய அடையாளங்களைப் பொறித்து, வேதங்களும் என்னை இவனொரு ஒப்பற்றவன் என்று கூறும்படி மனம் கூர்ந்து அருள்வாயாக. உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என்றும், திகுத்த தீதிகு திகுர்த்த தா என்றும் இவ்வாறான ஒலிகளை உடுக்கை, பேரிகை, தவில் இவைகளின் கூட்டங்கள் ஒலிக்கும் போர்க்களத்தில், உலோபிகளும், கீழோரும் ஆகிய அசுரர்கள் பதைபதைக்க, பெரிய யானைகள் துடிக்க, நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்ச மலையையும் உடைத்துப் பொடியாக்கி, நீதியை நிலை நிறுத்தி எங்கும் பரப்பி, அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, (தேவர்களுக்குத்) தேவ லோகத்தை அளித்தவனே, ஆயிரம் அழகிய கண்களை உடைய இந்திரனுக்கு அரசாட்சியை அளித்து, நாள் தோறும் என் உள்ளத்தில் இருந்து மகிழும் குமரனே, ஈன்ற தந்தையாகிய சிவபெருமானும், பேர்பெற்ற மாமனாகிய திருமாலும் மற்றும் எல்லோரும் மதிக்கும்படி, மகிழ்ச்சியுடன் அகத்திய முனிவரின் மலையாகிய பொதிய மலையில்* வீற்றிருக்கும் தம்பிரானே. 
* பொதிய மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 632 - கழுகுமலை 
ராகம் - ....; தாளம் -
தனன தனதனா தனத்த தானன
     தனன தனதனா தனத்த தானன
          தனன தனதனா தனத்த தானன ...... தனதான
குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி
     முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
          கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே 
மதலை மறுகிவா லிபத்தி லேவெகு
     பதகர் கொடியவா ளிடத்தி லேமிக
          வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி ...... முடியாதே 
முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்
     மடிய அயிலையே விடுத்த வாகரு
          முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே 
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி
     யிசையை முரலமா வறத்தில் மீறிய
          கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.
மழலைச் சொல் போலப் பேசுபவர்கள், பிறரது பொருளைப் பறிப்பவர்கள், அழகிய மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய விலைமாதர்கள்) மீது உள்ள பெரிய மயக்கம் மிகவும் பொல்லாதது. அந்த மயக்கத்தால் ஏற்படும் வருத்தம் தரும் துன்பத்தால் சிறு பிள்ளையாகிய நான் கலக்கம் உற்று, இளமையில் மிக பாபிகளாகிய கொடியவர்களிடம் சென்று, என்னுடைய தரித்திர நிலையைக் கூறி நிற்பது என்னால் இனி முடியாது. முதல்வனே, கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரனுடைய உடல் அழிய வேலைச் செலுத்தியவனே. கரிய மேகத்தை ஒத்த நிறம் உடைய திருமாலின் திரு மருகனே, வாழை, கமுகு இவைகள் சூழ்ந்துள்ள வயலில் வண்டுகள் இசைகளை எழுப்ப, பெரிய தருமச் செயல்களில் மேம்பட்டு விளங்கும் கழுகு மலை* என்ற சிறந்த நகரில் விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமாளே. 
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
பாடல் 633 - கழுகுமலை 
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தத் தனத்த தானன
     தனதன தத்தத் தனத்த தானன
          தனதன தத்தத் தனத்த தானன ...... தனதான
முலையை மறைத்துத் திறப்ப ராடையை
     நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்
          முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ...... ரணைமீதே 
அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்
     மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி
          தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக ...... ளுறவாமோ 
தலைமுடி பத்துத் தெறித்து ராவண
     னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
          தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் ...... மருகோனே 
கலைமதி யப்புத் தரித்த வேணிய
     ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
          கழுகும லைக்குட் சிறக்க மேவிய ...... பெருமாளே.
மார்பினை மூடி மூடித் திறப்பார்கள். ஆடையைத் தளர உடுத்துப் படுப்பார்கள். வாயிதழ் ஊறலை மாற்றி மாற்றி முத்தத்தைக் கொடுப்பார்கள். பொலிவுள்ள மலர்ப் படுக்கையின் மேல் (வருபவரை) நிலை குலையக் கொண்டு தழுவுவார்கள். ஆண்களின் மன வலிமையைக் கலங்க வைப்பார்கள். மோக மயக்கம் பெரிதாகத் தந்து கைப்பொருளைப் பறிப்பார்கள். இத்தகைய விலை மகளிரின் நட்பு எனக்கு நல்லதாகுமோ? ராவணனுடைய தலைகள் பத்தையும் சிதறடித்து உடல் தொளைபட்டுத் துடித்திடவே, ஒப்பற்ற வில்லை வளைத்துச் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனின் மருகனே, ஒற்றைக் கலையில் நின்ற சந்திரன், நீர் (கங்கை) இவைகளைத் தரித்த சடையை உடைய சிவபெருமான் அளித்த வெற்றி வேலைக் கையில் ஏந்திய வேலனே, கழுகு மலையில்* சிறப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
பாடல் 634 - கழுகுமலை 
ராகம் - ....; தாளம் -
தாந்த தனன தனன தாந்த தனன தனன
     தாந்த தனன தனனந் ...... தனதான
கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப
     மேந்து குவடு குழையும் ...... படிகாதல் 
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய
     தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர் 
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்
     வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத 
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை
     நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ 
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர
     மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும் 
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
     ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா 
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
     வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா 
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
     வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே.
கோங்க மரத்தின் மொட்டும் மெலியும்படியாக பருத்து, புளகாங்கிதத்தையும் (சந்தனக்) கலவையையும் கொண்ட மலை போன்ற மார்பகங்கள் குழையும்படியாக காதல் மிகுந்து, தளிர் மலர் விரித்த படுக்கையில் தோய்ந்து குலவுகின்ற இனிமையானதும், நிறைந்ததுமான சேர்க்கை அமுதத்தை உண்டு, அழகிய விலைமாதர்கள் செலுத்திய பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் தூக்கம் அதிகரித்து, குறைவுபடாத விருப்பம் பூண்ட அடிமையாகிய நான், பெரிய பிறவிக் கடலை நீந்தி, குற்றமற்ற உனது திருவடியை சேரப் பெறுவேனோ? மலை போன்ற பெரிய கப்பல்களும், ஆண் சுறா மீன்களும், அந்த மகர மீன்களும் நிறைந்துள்ள கடலில் (மாமரமாக) முழுகிச் சண்டை செய்த சூரனும் தளர்ச்சி அடைய, பிரமன் அஞ்ச, அழகு அமைந்த கழுகு மலையில்* மயில் ஏறி உலவுகின்ற ஒப்பற்ற வேலனே, புலிகள் உள்ள காட்டில் வேடர்கள் திகைக்க, வள்ளியாகிய பெண்ணின் மனம் உருக, வேங்கை மர உருவத்தை எடுத்த குமரேசா, வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை (அவர்களுக்கு) வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே. 
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
பாடல் 635 - வள்ளியூர் 
ராகம் - அடாணா ; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தய்ய தானன ...... தனதான
அல்லில் நேருமி ...... னதுதானும் 
அல்ல தாகிய ...... உடல்மாயை 
கல்லி னேரஅ ...... வழிதோறுங் 
கையு நானுமு ...... லையலாமோ 
சொல்லி நேர்படு ...... முதுசூரர் 
தொய்ய வூர்கெட ...... விடும்வேலா 
வல்லி மாரிரு ...... புறமாக 
வள்ளி யூருறை ...... பெருமாளே.
இரவில் தோன்றும் மின்னல் நிலைக்கும் நேரம்கூட நிலைக்காத இந்த உடல் வெறும் மாயை. கல் நிறைந்த அந்த மாய வாழ்க்கை வழியில் என் ஒழுக்க நெறியும் அடியேனும் நிலைகுலையலாமோ? தம் வீரதீரத்தைச் சொல்லிக்கொண்டு எதிர்த்த பெரும்சூரர் அழிய, அவர்கள் ஊர் பாழ்பட செலுத்திய வேலாயுதனே, கொடிபோன்ற தேவிமார் (வள்ளி, தேவயானை) இருபுறமும் ஆக வள்ளியூரில்* குடிகொண்ட பெருமாளே. 
* வள்ளியூர் திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 28 மைலில் உள்ளது.
பாடல் 636 - கதிர்காமம் 
ராகம் - குந்தல வராலி; தாளம் - ஆதி
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான
திருமக ளுலாவு மிருபுய முராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண் 
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண் 
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ...... பெருமாள்காண் 
மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் 
அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் 
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் 
இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் 
இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ...... பெருமாளே.
லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான். வணங்கும் அடியார்களின் மனதிலே விளையாடும் பச்சை மயில் ஏறும் பெருமான் நீதான். மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி* சூழ்ந்து விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான். பெருமலைகள் பொடிபட, அசுரர்கள் இறக்க போர் புரிந்த வீரப் பெருமான் நீதான். பாம்பு நிலவு, கங்கை நீர் இவை கலந்த சடையுடைய பரிசுத்தமான சிவனுக்கு குருநாதப்பெருமான் நீதான். நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும் கற்பகத் தருவை விட்டு நீங்காதவர்களுமான தேவர்களின் குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீதான். விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக் கொடி வள்ளியின் அதிக பாரமான இரு மார்பிலும் களிக்கும் பெருமாளே. 
* அருவி - கதிர்காமத்துக்கு அருகில் மாணிக்க நதியில் உள்ளது.
பாடல் 637 - கதிர்காமம் 
ராகம் - ....; தாளம் -
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
     அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா 
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
     அருளி லாத தோடோய ...... மருளாகிப் 
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
     பருவ மேக மேதாரு ...... வெனயாதும் 
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத
     பரிசில் தேடி மாயாத ...... படிபாராய் 
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி
     லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா 
இமய மாது பாகீர திநதி பால காசார
     லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா 
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத
     கதிர காம மூதூரி ...... லிளையோனே 
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.
(யான் ஒரு) விளக்குமாறு, மாறுதல் இல்லாத மூதேவி, பூதம், காளி, தகுதி இல்லாத நாய், கோணங்கி, தருமம் செய்யாமல் அழிவைத் தேடிக் கொள்ளுபவன், எனக்குச் சிறிதும் வெட்கம் இல்லாமல், புனுகு போன்ற வாசனைகளைப் பூசி வாழும் விலைமாதர்களின் அன்பு இல்லாத தோள்களைச் சேர வேண்டி, காம மயக்கம் கொண்டு (அவர்களுக்குக் கொடுக்கப் பொருள் தேடி, மற்றவர்களை) பல கலைகளுக்கும் இருப்பிடமானவனே, மேரு மலை போன்ற புயமலைகளை உடையவனே, மழை வீசும் பருவ காலத்து மேகமே, கற்பக மரமே என்று (பலவிதமாகக்) கூறினாலும் ஒரு சிறிதும் அன்பு இல்லாத மகா பாதகர்களின் பெருமைகளைப் புகழ்ந்து பாடி, ஓய்வே இல்லாமல் பரிசுப் பொருளைத் தேடி நான் இறந்து போகா வண்ணம் கண் பார்த்து அருளுக. விளங்கும் வேலாயுதத்தை பெரிய வடமுகாக்கினியைக் கொண்ட கடல் மீதும், மாமரமாகிய சூரன் மீதும் செலுத்திய தொழிலைக் கைவிடாத திறமையான வீரனே, இமவான் மகள் பார்வதி, கங்கை நதி இவர்கள் இருவருக்கும் பாலகனே, வள்ளி மலைச் சாரலில் இருந்த தலைவியும், காட்டில் இருந்த பெருமை வாய்ந்த வேடர் (நம்பிராஜனின்) புதல்வியுமான வள்ளியைப் பக்கத்தில் கொண்டவனே, பேரொலி கொண்ட கடல் போல் அலை மோதி வரும் வடக்கு திசையிலிருந்து வரும் மாணிக்க கங்கை என்னும் அழகிய ஆறு சூழ்ந்து குளிர்ச்சி தரும் கதிர் காமம் என்னும் பழைய நகரில் வீற்றிருக்கும் இளையோனே, பொன்னுலகு இருப்பிடமான தேவ யானைக்கு வாழ்வாய் அமைந்த கருணை மேருவே, தேவர்கள் பெருமாளே. 
பாடல் 638 - கதிர்காமம் 
ராகம் - காம்போதி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தனத்தத் தனதான தானன
     தனத்தத் தனதான தானன
          தனத்தத் தனதான தானன ...... தனதான
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
     யவிக்கக் கனபானம் வேணுநல்
          ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை 
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
     இருக்கச் சிறுநாரி வேணுமொர்
          படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் 
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
     மயக்கக் கடலாடி நீடிய
          கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் 
க்ருபைச்சித் தமுஞான போதமு
     மழைத்துத் தரவேணு மூழ்பவ
          கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே 
குடக்குச் சிலதூதர் தேடுக
     வடக்குச் சிலதூதர் நாடுக
          குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் 
குறிப்பிற் குறிகாணு மாருதி
     யினித்தெற் கொருதூது போவது
          குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ 
அடிக்குத் திரகார ராகிய
     அரக்கர்க் கிளையாத தீரனு
          மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் 
றருட்பொற் றிருவாழி மோதிர
     மளித்துற் றவர்மேல் மனோகர
          மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.
உடுப்பதற்கு உடைகள் வேண்டும். பெரும் பசியைத் தணிக்க உயர்ந்த சுவைநீர் வேண்டும். தேகம் நல்ல ஒளிவீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். உடல் நோயை அகற்ற மருந்துகள் வேண்டும். வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும். படுத்துக்கொள்ள ஒரு தனி வீடும் வேண்டும். இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி, பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும். கருணை உள்ளத்தையும் சிவஞான போதத்தையும் நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும். ஊழ்வினையால் வரும் பிறவி என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ? மேற்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், வடக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், கிழக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி குறிப்பினால் குறிப்பை உணரும் அனுமனை இனி தெற்கு திசையில் தூதனாக அனுப்ப வேண்டியது. சொல்லி வைத்த குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும் தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்¡£வன் சொல்லி அனுப்ப), அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாகிய அனுமனும் அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள இலங்கைக்குச் சென்று, சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை அடைந்து, ராமபிரானது அழகிய பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து மீண்டு வந்த அந்த அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி*, கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.
பாடல் 639 - கதிர்காமம் 
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை - 7 1/2 
- எடுப்பு - /3 0
தனன தான தத்த ...... தனதான
     தனன தான தத்த ...... தனதான
எதிரி லாத பத்தி ...... தனைமேவி
     இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும் 
இதய வாரி திக்கு ...... ளுறவாகி
     எனது ளேசி றக்க ...... அருள்வாயே 
கதிர காம வெற்பி ...... லுறைவோனே
     கனக மேரு வொத்த ...... புயவீரா 
மதுர வாணி யுற்ற ...... கழலோனே
     வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.
சமானம் இல்லாத அன்புடையவனாகி இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை இரவும் பகலும் இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக. கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவனே, பொன் மேரு மலையை ஒத்த தோள்களை உடைய வீரனே, இனிய மொழிகள் உள்ள ஸரஸ்வதி வந்து போற்றும் பாதனே, பாண்டியனது கூனை சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே. 
பாடல் 640 - கதிர்காமம் 
ராகம் - தோடி; தாளம் - ஆதி - 2 களை
தனதன தனதன தனதன தனதன
     தானத் தனந்தந் ...... தனதான
கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்
     காமத் தரங்கம் ...... மலைவீரா 
கனகத நககுலி புணரித குணகுக
     காமத் தனஞ்சம் ...... புயனோட 
வடசிக ரகிரித விடுபட நடமிடு
     மாவிற் புகுங்கந் ...... தவழாது 
வழிவழி தமரென வழிபடு கிலனென
     வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான் 
அடவியி ருடியபி நவகும ரியடிமை
     யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே 
அயிலவ சமுடன ததிதிரி தருகவி
     யாளப் புயங்கொண் ...... டருள்வோனே 
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள
     ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே 
இதமொழி பகரினு மதமொழி பகரினு
     மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.
கடகட என்று சப்திக்கும் பறைகளின் பேரொலியும் அடங்குமாறு வரிப்புலிகளின் ஒலி அதிர்கின்ற கதிர்காமத்துக் கடவுளே, அலைகள் வீசும் கடலினை உனது வேலால் அலைவுறச் செய்த வீரனே, பெருமையையும் கோபத்தையும் உடைய மலை போன்ற யானை வளர்த்த தேவயானையை மணந்த இனிய குணத்தோனே, என் இதய குகையில் இருக்கும் குகனே, மன்மதனின் தந்தை திருமால் பயப்பட, பிரம்மா ஓடிட, வட மேரு மலைச் சிகரம் தவிடுபொடியாக நடனம் செய்யும் குதிரை போன்ற மயில் மீது ஏறி வருகின்ற கந்தக் கடவுளே, தவறாமல் வழிவழியாக வந்த உறவினன் என்னும்படி யான் வழிபடுகின்றவனாக இல்லேன் எனினும் எனது மூவாசைகளும் துன்பங்களும் அழிந்து ஒழிந்திடுமோ? காட்டில் சிவமுனிவர் உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி* வள்ளிக்கு அடிமையாகிச் சென்று அவள் இருந்த தினைப்புனத்துக்குப் போய், தளர்ச்சி அடைந்தவனே, மயக்கத்துடன் ஒருநாள் காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள** வேலினைத் தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே, தம் உடலின் இடது பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள ஏந்திழையாம் பார்வதிக்கு இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே, அடியேன் இனிய மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப் பேசினாலும், இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே. 
* சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி எனப் பெயரிட்டான்.
** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து கவி தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
பாடல் 641 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -
தனதனன தானத்த தனதனன தானத்த
     தனதனன தானத்த ...... தனதான தானனா
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
     தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே 
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர்
     தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே 
உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு
     முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார் 
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
     முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே 
இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி
     யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே 
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
     இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே 
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
     மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே 
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
     அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே.
போர்முகத்துக்கு என்ற கூர்மை நிறைந்த வேல் போன்ற கண்கள் புரள, கச்சு அணிந்த மார்பகங்கள் அசைய, தெருவில் மயில் உலவுவது போல, சரியை, கிரியை, யோகம், (ஞானம்) என்னும் நான்கு வழிகளில்* நிற்கின்ற, அருளும் பரிசுத்தமும் வாய்ந்த பெரியோர்களும் தம்மை மோகிக்கும்படியாக ஆசை காட்டும் வழிகளில் பொருந்தி, உமது திருவடியை நினையாதவருக்கும், மரணத்தோடு கூடிய மாயையின் வசப்பட்டவருக்கும் உரியவராய், சிறந்த கிளிகள் எனப்படும் மாயைகளில் வல்ல விலைமாதர்களுடைய ஒளி மிகுந்த படுக்கையிடத்தே சிக்கிக் கொண்ட எனக்கும் உமது திருவருள் பிரசாதத்தை அருள் கூர்ந்து அளிக்க வேண்டும். இமய மலை அரசனுடைய மகள், எப்போதும் இன்ப அனுபவத்தைத் தருபவள், பராசக்தி, எழுதற்கரிய காயத்திரி மந்திரத்தின் உருவினள் (ஆகிய) உமாதேவியின் மகனே, வேடர்களின் அழகிய மான் போன்ற வள்ளிக்காக மடல் எழுதி* ஆசைப்பட்டு, அவள் இருந்த பரண் அருகே சேவித்து நின்ற முருகனே, விசாகனே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்கும் பொருட்டுப் போரிட்டு, கீர்த்தியுற்ற, மிக மேலான திறமை வாய்ந்த ராஜகவிகளுக்குள் சக்கரவர்த்தியே, அழுது (திருஞான சம்பந்தராகத் தோன்றி பார்வதி தேவியின் திருமுலைப்பால் உண்டு) தேவாரப் பாடல்களால் உலகை வாழ்வித்த கவுணிய குலத்தைச் சார்ந்த ஞான சூரியனே, அருமை வாய்ந்த கதிர்காமத்துக்கு உரிய அழகனே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
பாடல் 642 - கதிர்காமம் 
ராகம் - காபி; தாளம் - ஆதி - கண்டநடை - 20 
- எடுப்பு - அதீதம்
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
     தனத்தா தனத்தா ...... தனதான
சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே
     சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச் 
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்
     தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச் 
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
     செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச் 
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்
     திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே 
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
     பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது 
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்
     பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின் 
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
     கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக் 
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே
     கதிர்க்காம முற்றார் ...... முருகோனே.
நாணல் காட்டிலே பிறந்தவனே (சரவணபவனே), வலிமையோடு குதித்து சாமர்த்தியமாய் எதிர்த்துவந்த சூரனை ஒழுங்காக நடந்துகொண்ட வரைக்கும் விட்டுவைத்தாய், சரியில்லாத போது அடுத்து வந்து அவனை நெருக்கினாய், உடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்தாய், தலையையும் மார்பையும் அறுத்துக் குவித்தாய், கொன்றெறிந்தாய், பல மாலைகளை விருதுகளாகவும், சிறகுடைய சேவல் ஒன்றையும் பரிசாகப் பெற்றாய், வெற்றியை அடைந்தாய், உனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்தருள்க. திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று அசுரர்களும் அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக சண்டை செய்யவே எதிர்த்து வரும்போது முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு போர்க்கோலம் தரித்தார், பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார், பொரிபடச் செய்தார் தனது நெற்றிக்கண் பார்வையாலேயே. பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்தார், அதனை விரித்து ஆடையாக அணிந்து கொண்டார். (தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்) கருத்தோடு தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்த மன்மதனை சாம்பல் அலங்காரமாக ஆக்கிய பரமசிவனாரின் கண்மணியான முத்தையனே, கதிர்காமம் என்ற தலத்தில் சென்று விளங்கிய முருகனே. 
பாடல் 643 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -
தனதனா தத்தனத் தனதனா தத்தனத்
     தனதனா தத்தனத் ...... தனதான
சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
     சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய 
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்
     டருபரா சத்தியிற் ...... பரமான 
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்
     சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு 
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்
     சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ 
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்
     புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன் 
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
     புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே 
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்
     கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக் 
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்
     கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே.
சரியை மார்க்கத்தில்* இருப்பவர்களுக்கும், அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும், நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்டுதற்கு முடியாததும், வேறுபட்ட சமயங்களினால் நெருங்க முடியாததுமான உண்மை ஞானத்தைத் தர வல்ல பராசக்தியினும் மேலானதானதும், யோகியர் தன்மயமாய் நிற்பதுவும், அதற்கும் மேம்பட்டதான துரியாதீத நிலையானதும் ஆகி, பரம ஞானத் தனி ஒளியாகப் பரந்துள்ளதாய், சிறந்த இடமாய், குற்றமில்லாததாய், இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை, முடிவில்லாததும், புகழப்படுவதுமான பேரின்ப நிலையை, நான் பொருந்தி அடைவேனோ? மதில் சூழ்ந்துள்ள வயலூருக்கு உரிய வல்லவனே, உத்தமனே, வீரமும் வலிமையும் கொண்ட சூரன் புரண்டு விழ, வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய குமரனே, மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே, கருங்குரங்குகளின் கூட்டங்கள் பலா மரத்தின் மீது இருந்து சுளைப் பழங்களைக் கீறிக் கிழித்து உண்டு சண்டை இட்டு, வாழை மரங்களிலும், மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டில் உள்ள கதிர்காம மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
பாடல் 644 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -
தானதன தத்தத்த தானதன தத்தத்த
     தானதன தத்தத்த ...... தனதான
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
     யோதர நெருக்குற்ற ...... இடையாலே 
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
     பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர் 
காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த
     காதில்முக வட்டத்தி ...... லதிமோக 
காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த
     கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான் 
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ
     சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன் 
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
     கோணசயி லத்துக்ர ...... கதிர்காம 
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு
     மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின் 
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
     வேல்களில கப்பட்ட ...... பெருமாளே.
பாரமானதும், முத்து மாலை அணிந்ததும், சந்தனம் பூசியதும், புளகாங்கிதம் கொண்டதும், அழகியதுமான மார்பகங்களாலும், நெருங்கி மெலிதாக உள்ள இடையாலும், சர்க்கரைப் பாகு போல் இனிக்கும் இசை மொழியாலும், (மன்மதனுடைய) மலர்ப் பாணம் போல் தைக்கும் கண்களாலும், காம மயக்கால் மூடி விடுகின்ற விலைமாதர்களின் மேகம் போன்ற கூந்தல் கட்டினாலும், மகர மீன் போன்ற (குண்டல அலங்காரம் உள்ள) காதினாலும், முக மண்டலத்தாலும் அதிக மோகம் கொண்ட காமுகனாகிய நான் சிக்கிக் கிடந்த காம இச்சையை அடியோடு மறக்கச் செய்த உனது திருவடிகளை என்னால் மறக்கவும் கூடுமோ? தேரில் எழுந்தருளும் சூரியன் (ராவணனுக்கு) அஞ்சி உள்ளே புகாத பழைய ஊராகிய இலங்கையில் பத்து தலைகளை உடைய ராவணனை கலக்கிப் பிசைந்த மாயோனாகிய திருமாலின் சீரான மருகனே, மிக வலிமையான யானைகள் எதிர்ப்படும், ரத்தினங்கள் கிடைக்கும் திருக்கோண மலையிலும், உக்கிரமான கதிர்காமத்திலும் வீற்றிருக்கும் வீரனே, தினைப் புனம் உள்ள வள்ளி மலையில் மயில் போன்ற வேடப் பெண் வள்ளியின் மேகலை அணிந்த இடையின் கொத்திலும், இரண்டு பாதங்களிலும், வாசனை தங்கிய மேகம் போன்ற கூந்தலிலும், பசுமையான மூங்கிலை ஒத்த தோள்களிலும், சிவந்த கிரணங்களைக் கொண்ட வேல் போன்ற கண்களிலும் சிக்கிக் கொண்ட பெருமாளே. 
* ராவணனுக்குப் பயந்து, அவனது ஆணைப்படி சூரியன் இலங்கை நகர் வழியாகத் தன் தேரைச் செலுத்தாமல் இருந்தான்.
பாடல் 645 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -
தனதனா தத்த தனதனா தத்த
     தனதனா தத்த ...... தனதான
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
     வலிசெயா நிற்கு ...... மதனாலும் 
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
     மதிசுடா நிற்கு ...... மதனாலும் 
இருகணால் முத்த முதிரயா மத்தி
     னிரவினால் நித்த ...... மெலியாதே 
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
     மிவளைவாழ் விக்க ...... வரவேணும் 
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
     கலவிகூர் சித்ர ...... மணிமார்பா 
கனகமா ணிக்க வடிவனே மிக்க
     கதிரகா மத்தி ...... லுறைவோனே 
முருகனே பத்த ரருகனே முத்தி
     முதல்வனே பச்சை ...... மயில்வீரா 
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு
     முறியவேல் தொட்ட ...... பெருமாளே.
வாசனை நீங்காததும், வெற்றியே பெறுவதுமான மலர்ப் பாணங்களை தொடுத்து, (கரும்பு) வில்லைக் கையில் வைத்து வலிமையுடன் நிற்கும் மன்மதனாலும், மதில்களைத் தாண்டி வரும் கிரணங்களைக் கொண்ட வட்ட வடிவமான சந்திரன் கதிர்களால் (இவளைச்) சுட்டுக்கொண்டு நிற்பதனாலும், இரண்டு கண்களிலிருந்தும் முத்துப் போன்ற கண்ணீர் சிந்தி, யாமங்கள்* தோறும் இரவில் தினமும் மெலியாதபடி, துன்பம் அடைந்து மிகவும் காம மயக்கம் கொண்டு நிற்கும் இந்தப் பெண்ணை வாழ்விக்க நீ வந்து அருள வேண்டும். யானைகள் கூடியுள்ள (வள்ளி) மலையில் அருமையான வேடப் பெண் வள்ளியுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும் அழகிய மணி மார்பனே, பொன், மாணிக்கம் போன்ற உருவத்தனே, சிறந்த கதிர்காமம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, முருகனே, பக்தர்களுக்கு அருகில் இருப்பவனே, முக்தி தரும் முதன்மையானவனே, பச்சை மயில் வீரனே, விரைந்து வந்து மேல் எதிர்த்த பொல்லாத சூரன் கேடு உற்று அழிபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* யாமம் = மூன்று மணி நேரம். மாலையும் இரவும் சேர்ந்து மொத்தம் நான்கு யாமங்கள்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 646 - கதிர்காமம் 
ராகம் - குந்தல வராலி; தாளம் - அங்கதாளம் - 7 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானதன தானத் ...... தனதான
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் 
மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் 
தீதகல வோதிப் ...... பணியாரும் 
தீநரக மீதிற் ...... றிகழ்வாரே 
நாதவொளி யேநற் ...... குணசீலா 
நாரியிரு வோரைப் ...... புணர்வேலா 
சோதிசிவ ஞானக் ...... குமரேசா 
தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.
பெண்களின் வசப்பட்டுத் திரிபவர்களும், சிறந்த தவத்தை நினைக்காமல் அலைபவர்களும், தீமைகள் விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும், கொடிய நரகத்திலே உழன்று கிடப்பார்கள். ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே, நல்ல அருட்குண சீலனே, வள்ளி, தேவயானை என்ற இரு தேவியரை மணந்த வேலனே, ஜோதியான சிவஞானத்தைத் தரும் குமரக் கடவுளே, குற்றமற்ற கதிர்காமத்தில் வாழும் பெருமாளே. 
பாடல் 647 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -
தனன தான தான தத்த தனன தான தான தத்த
     தனன தான தான தத்த ...... தனதான
முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி
     முனியு மார வார முற்ற ...... கடலாலே 
முடிவி லாத தோர்வ டக்கி லெரியு மால மார்பி டத்து
     முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே 
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்
     வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே 
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற
     விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும் 
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த
     கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா 
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி
     ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா 
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க
     அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே 
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி
     அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே.
மன்மதனுக்கு உரிய அன்பு முதிர்ந்த நட்புடன் விளங்கும் கடலாலும் (ஏனெனில் மன்மதனும், கடலும் இவளிடம் பிணங்கி உள்ளனர்), நிறைந்த அந்த முத்துக்களை வீசிக் கோபிக்கும் (அலைகளின்) பேரொலி பொருந்திய கடல் ஓசையாலும், அழிவு இல்லாததாய், ஒப்பற்ற (கடலின்) வடக்குப் பக்கத்தில் (ஊழித் தீயாகிய) வடவா முகாக்கினி போல் எரிவதாய், விஷம் நிறைந்து தோன்றிய இடமாகிய கடலில் முழுகி, விண்ணில் ஏறி கிரணங்களை மேலே வீசும் நிலவினாலும், மூங்கிலில் இடையர்கள் வாயை வைத்து இனிமையான ராகங்களை நெடு நேரம் வாசித்து எழுப்பும் இசையின் ஒலியினாலும், தமது (வசை கூறும்) தொழிலை விடாது செய்யும் தாய்மார்களினாலும் அழிவில்லாமல், உண்டாகும் காம போகமே நிரம்பி அளவு கடந்த ஆசை கொண்டுள்ள இந்த அழகிய பெண்ணை நீ தழுவ வந்தருள வேண்டும். கதிர்காமம் என்னும் பெரிய ஊருக்குள் ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே, தோகை அழகு வாய்ந்த மயில் வீரனே, கயல் மீன் போன்ற கண்களை உடையவள், கலவைச் சாந்து அணிந்த மார்பை உடையவள், விண்ணுலகத்தில் வீற்றிருந்தவள் ஆகிய ஒப்பற்றவளாகிய தேவயானையின் கணவனே, அதிரும்படியாக காலை வீசி நடனம் ஆடுகின்றவரும், வெற்றி வாய்ந்த (நந்தி) ரிஷபத்தின் மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமான் அறியும்படி, அருமையான ஞான உபதேசத்தை அவருக்கு அருளியவனே, எல்லா உலகங்களின் மீதும் உலவி வலம் வந்து, அசுரர் உலகத்தைப் பொடியாக்கி, தேவலோகத்தை வாழ வைத்த பெருமாளே. இப்பாடலின் ஒவ்வொரு அடியின் பிற் பாகங்கள் ஒன்று சேர, பிறிதொரு பாடல் அமைகின்றதைக் காணலாம். கடலாலே நிலவாலே மழியாதே வரவேணும் மயில்வீரா மணவாளா யருள்வோனே பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது செவிலித் தாய் பாடியது.மன்மதன், கடல் அலைகள், நிலவு, குழல் ஓசை, மாதர்களின் வசைப் பேச்சு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 648 - கதிர்காமம் 
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான
வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
     மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது 
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
     வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள் 
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
     கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான் 
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
     கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான் 
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
     பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா 
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
     பதமடியர் காண வந்த ...... கதிர்காமா 
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
     யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே 
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
     மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே.
யமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருகின்ற காலதூதர்கள் நாங்கள் யமனுடைய தூதர்கள் எனக் கூறி மடியில் கை போட்டுப் பிடிப்பவர்கள் போல நின்று என்னை விடாமல் தொடர்கின்றபோது (என்னைப் பற்றி) இவன் மயக்கமுடைய பொல்லாத வம்புக்காரன் என்றும், வஞ்சனைக்காரன் என்றும், வசைச் சொற்கள் கூறி என்னை நெருங்குவார்கள். ஆயுதங்களினால் என்னைச் சித்திரவதை செய்து, என் சதைகளைத் துண்டுதுண்டாகச் சேதித்து, இரும்பை உருக்கிய கரு நீரை என் வாயிலே விட்டு, கழுவின் முனையிலேயே கிட என்று என்னைக் கிடத்தி, என்னைத் துன்புறுத்தும் அந்த வேளையில் என் இடரைக் கண்டு, அடியேன் முன் விரைவில் ஓடோடி நீ வந்தருளவேண்டும். திருப்பரங்குன்றத்திலும், திருவுலா இடையறாது நிகழும் திருச்செந்தூரிலுள்ள சந்தன மலையிலும், இடும்பனால்* கொண்டுவரப்பட்ட பழநிமலையிலும் எழுந்தருளிய குமரேசக் கடவுளே, பல்லாயிரம் திருத்தலங்களிலும், பல கோடி மலைகளிலும் நிலையாக இருந்து, திருவடியைக் கண்டு அடியார்கள் நலம்பெற வந்த கதிர்காமனே, பாம்பையும், பிறைச் சந்திரனையும், பூளை தும்பை மலர்களையும், வில்வத்தையும், அருகம்புல்லையும், கொன்றைப்பூவையும், அணிகின்ற சடையர் சிவபிரான் தந்தருளிய முருகனே, பாவங்களை நீக்குபவரும், சிவாய என்ற மூன்றெழுத்துக்களை உடையவரும், சுகத்தைத் தருபவருமான சிவனாரின் குருநாதனே, நீயே கதி என்று நம்பியுள்ள அடியார்களை ஆட்கொள்ள வந்தருளிய பெருமாளே. 
* இடும்பன் சூரர்களின் போர்ப் பயிற்சி குரு. சிவ பக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவ கிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகத் தூக்கி பொதிய மலைக்குச் செல்லும் வேளையில் முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருக தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.
பாடல் 649 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -
தனத்த தானன தனத்த தானன
     தனத்த தானன தனத்த தானன
          தனத்த தானன தனத்த தானன ...... தனதான
தொடுத்த வாளென விழித்து மார்முலை
     யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
          துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர் 
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
     முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
          துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப் 
படுத்த பாயலி லணைத்து மாமுலை
     பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
          கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே 
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
     வெளுத்து வாய்களு மலத்தி னாயென
          பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ 
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
     விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
          மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே 
விதித்து ஞாலம தளித்த வேதனை
     யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
          விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா 
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
     நடுக்க மாமலை பிளக்க வேகவ
          டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா 
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
     முகத்தி னோடணி குறத்தி யானையொ
          டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.
செலுத்தப்பட்ட வாளாயுதம் என்று சொல்லும்படி விழித்து, மார்பிலுள்ள தனத்தை அசைத்து, புடவையைக் கொண்டு மறைத்து மூடும் மாதர்கள். துடித்து எதிரே புடவையைத் தளர்த்தி, (ஆண்களின்) நல்ல ஒழுக்கத்தைப் பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதர்கள். மகிழ்ச்சியாக ஹா என்று நகைத்து மேலே விழ, முடித்திருந்த நீண்ட கூந்தலை விரித்து, வாயிதழ் சிவந்த வாய்க்குள் வெற்றிலைச் சுருளை அடக்கிக்கொண்டு, காம ஆசையைக் கொடுக்கின்ற அந்த வழியிலே சென்று, படுத்த படுக்கையில் தழுவி, அழகிய தங்கள் மார்பை மார்போடு அழுத்தி, வாயிதழைக் கடித்து நாணத்தை அழித்த பாவிகளின் வலையில் உண்டாகிய நோய்ப் பிணியால் படுக்கை உற்று, பாயில் கிடப்பதால் உடல் வெளுத்து, வாய்களும் மலம் தின்னும் நாய் போல் நாற்றம் எடுத்து, பசியும் தாகமும் உற்று எடுத்திட்ட உயிருடன் அலைச்சல் உறுவேனோ? வெடுவெடுப்புடன் வந்த தாடகையின் கோபத்தை ஓர் அம்பைச் செலுத்தி ஒழித்து, (முனிகளின்) யாகத்தை நடத்தியும், ஒரு சிறப்பான நீண்ட (சிவதனுசு என்ற) வில்லை முறித்தவரும் ஆகிய (ராமனாம்) திருமாலின் மருகனே, படைத்து உலகத்தைத் தந்த பிரமனைக் கலங்க வைத்து, (அவனுடைய) ஒரு தலையை தமது கையில் கபாலமாகக் கொண்டு திரிந்தவரும், நெற்றிக் கண்ணை விழித்து மன்மதனை எரித்தவரும், தந்தையுமாகிய சிவபெருமானின் குருநாதனே, வரிசையாயுள்ள, விஷம் கொண்ட, ஆயிரம் படங்களைக் கொண்ட ஆதிசேஷன் நடுக்கம் கொள்ளவும், கிரெளஞ்ச மலை பிளவுபட்டுத் தூளாகவும், வஞ்சக அரக்கர்களின் பெரிய தலைகள் பதைக்கவும் சண்டை செய்த மயில் வீரனே, அறங்களை வளர்த்து வாழ்ந்த உமா தேவியார் மகிழ்ச்சியுற, ஆறு திருமுகங்களுடன் விளங்கி அழகிய குறத்தியாகிய வள்ளியுடனும், யானை வளர்த்த தேவயானையோடும் அருக்கொணாமலை* என்னும் தலத்தில் களிப்புடன் உலாவிய பெருமாளே. 
* அருக்கொணாமலை இலங்கையில் கதிர்காமத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 650 - திருக்கோணமலை 
ராகம் - ...; தாளம் -
தனத்த தானன தனத்தான தானன
     தனத்த தானன தனத்தான தானன
          தனத்த தானன தனத்தான தானன ...... தனதான
விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி 
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
     நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
          வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக் 
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
     பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
          கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே 
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும் 
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே 
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே 
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
     திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே 
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.
தக்க விலை பெறும் பொருட்டு, உடலில் அழகிய வடங்களும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து, ஆடையுடனும் ரத்தின ஆபரணங்களுடனும் மினுக்குகின்ற விலைமாதர்களிடம் காம மயக்கில் மூழ்கி, மோகத்தில் அழுந்தி, பெரிய காம லோலன் என்று உலகில் உள்ளவர்கள் என் எதிரே சிரிப்பதற்காகவே இந்த உடலை எடுத்து, துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்து களைப்புக் கொள்ளும் கொடியவனாகிய என்னை, கலக்க நெஞ்சினனாய், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலக் கூடாகிய இந்த உடலில் நிரம்ப நோய்களுக்குள்ளாகி தவிக்க வைக்காமல், உன்னை பாட்டில் அமைத்து ஈடேறச் செய்யும் ஒப்பற்ற அருள் செல்வமாகிய வாழ்வைத் தந்து, நற்கதியை தருகின்ற நாதன் நீ, உன்னைத் தேடி உனது திருப்புகழை உரைக்கும் நாய் போன்ற சிறியேனை உன் அருள் பார்வையால் உன் திருவடியைக் கூடுவதற்காகவே சிறந்ததான தாய் அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும். எல்ல மலைகளுக்கும் தலைவனே, சிவகாமி அம்மையின் தலைவராகிய சிவபெருமானின் அழகிய குமாரனே, ஆறு திரு முகங்களை உடைய குருமூர்த்தியே, வடிவழகுள்ள மாதாகிய குறப் பெண் வள்ளி மகிழும் வேளே, வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள், அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே, அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில் விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே, நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும் கடல் வற்றிப் போய் அழிய, திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு (பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி, நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும் பெருமாளே. 
* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று - திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை.கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.

பாடல் 601 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தத்த தாத்தத் தத்த தாத்தத்     தத்த தாத்தத் ...... தனதான

அத்த வேட்கைப் பற்றி நோக்கத்     தத்தை மார்க்குத் ...... தமராயன் 
பற்ற கூட்டத் திற்ப ராக்குற்     றச்சு தோட்பற் ...... றியவோடும் 
சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்     சிக்கை நீக்கித் ...... திணிதாய 
சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்     செச்சை சாத்தப் ...... பெறுவேனோ 
கொத்து நூற்றுப் பத்து நாட்டக்     கொற்ற வேத்துக் ...... கரசாய 
குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்     பொற்ப வேற்கைக் ...... குமரேசா 
தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்     தெட்டு மேற்றுத் ...... திடமேவும் 
தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்     சத்ய வாக்யப் ...... பெருமாளே.

பொருளின் மேல் மட்டும் ஆசைகொண்டு என் மீது விருப்பம் வைக்கும் அந்தக் கிளிபோன்ற விலை மகளிருக்கு வேண்டியவனாய், அன்பு இல்லாத அவர்களின் கூட்டத்தில் மட்டும் என் கவனத்தை வைத்து, உருவமைந்த அவர்கள் தோளை அணைக்க அலை பாயும் மனத்தை அவ்வழியினின்றும் திருப்பி, பொய்யான வாழ்க்கை என்னும் நிலையில் சிக்கிக்கொண்டதை நீக்கி, வன்மை வாய்ந்த அழகிய வாக்கை நான்அடைந்து, உன் வெட்சி மாலையை அணியப்பெறும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ? நெருக்கமான (100 மடங்கு 10=1000) ஆயிரம் கண்களை உடலில் உடைய வீர வேந்தனாகிய இந்திரனுக்கு* அரசனாகிய, கோழி (க்கொடி) ஏந்திய கையனே, பாம்பு மலை எனப்படும் திருச்செங்கோட்டு** அழகனே, வேலாயுதத்தை ஏந்தும் திருக்கரத்தனே, குமரேசனே, தொண்ணூற்றாறு (48 + 48) தத்துவங்களையும்*** பொருந்தி, திடமான தர்க்க சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட தக்க நீதி வழிகளில் உள்ள சத்தியமான சொற்களைப் பேசும் பெருமாளே. 
* கெளதம முநிவரின் சாபத்தால் அவரது மனைவி அகல்யையைக் காமுற்ற இந்திரனுக்கு உடலில் ஆயிரம் கண்கள் ஏற்பட்டன.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
*** 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

பாடல் 602 - திருச்செங்கோடு 
ராகம் - பீம்பளாஸ் ; தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்

தத்தன தத்தன தத்தன தத்தன     தத்தன தத்தன ...... தனதான

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு     பட்சிந டத்திய ...... குகபூர்வ 
பச்சிம தட்சிண வுத்தர திக்குள     பத்தர்க ளற்புத ...... மெனவோதுஞ் 
சித்ரக வித்துவ சத்தமி குத்ததி     ருப்புக ழைச்சிறி ...... தடியேனுஞ் 
செப்பென வைத்துல கிற்பர வத்தெரி     சித்தவ நுக்ரக ...... மறவேனே 
கத்திய தத்தைக ளைத்துவி ழத்திரி     கற்கவ ணிட்டெறி ...... தினைகாவல் 
கற்றகு றத்திநி றத்தக ழுத்தடி     கட்டிய ணைத்தப ...... னிருதோளா 
சத்தியை யொக்கஇ டத்தினில் வைத்தத     கப்பனு மெச்சிட ...... மறைநூலின் 
தத்துவ தற்பர முற்றுமு ணர்த்திய     சர்ப்பகி ரிச்சுரர் ...... பெருமாளே.

அடியார் திருக்கூட்டத்தின் மீது அன்புள்ளவனே, நடனம் ஆடவல்ல மயிலை வாகனமாகக் கொண்டு உலவும் குகமூர்த்தியே, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நாலாதிசைகளிலும் உள்ள அன்பர்கள் இது அற்புதம் என வியந்து கொண்டாடும் அழகிய கவிபாடும் திறத்தின் ஒலி மிகுந்துள்ள திருப்புகழை ஓரளவுக்காவது நானும் சொல்லும்படியாக வைத்தும், அப்பாடல்கள் உலகெங்கும் பரவும்படியாகச் செய்தும், திருப்புகழில் உன்னைத் தரிசனம் செய்வித்த அருளை அடியேன் ஒரு நாளும் மறக்க மாட்டேன். கத்துகின்ற கிளிகள் களைத்து விழும்படி சுழற்றும் கவணில் கல்லை வைத்து எறிகின்ற, தினைப்புனத்தைக் காவல் செய்யக் கற்ற குறத்தி வள்ளியின் அழகிய நிறமுடைய கழுத்தினைக் கட்டி அணைத்த பன்னிரண்டு புயங்களை உடையவனே, பராசக்தியைப் பொருந்த தன் இடப்பக்கத்தில் வைத்த தந்தையாகிய சிவ பெருமானும் மெச்சும்படி வேத நூலின் மெய்ப்பொருள் பரம்பொருள் அனைத்தையும் உபதேசித்து விளக்கிய நாகமலையில்* வாழும், தேவர்கள் போற்றும் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 603 - திருச்செங்கோடு 
ராகம் - நவரஸ கன்னட; தாளம் - ஆதி

தத்ததன தான தத்ததன தான     தத்ததன தான ...... தனதான

புற்புதமெ னாம அற்பநிலை யாத     பொய்க்குடில்கு லாவு ...... மனையாளும் 
புத்திரரும் வீடு மித்திரரு மான     புத்திசலி யாத ...... பெருவாழ்வு 
நிற்பதொரு கோடி கற்பமென மாய     நிட்டையுடன் வாழு ...... மடியேன்யான் 
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்     நிற்கும்வகை யோத ...... நினைவாயே 
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத     சக்ரகதை பாணி ...... மருகோனே 
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற     வைத்தவொரு காழி ...... மறையோனே 
கற்புவழு வாது வெற்படியின் மேவு     கற்றைமற வாணர் ...... கொடிகோவே 
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால     கற்பதரு நாடர் ...... பெருமாளே.

நீர்க்குமிழி என்னும் பெயரோடு சிறிது காலமும் நிலைக்காத பொய்க் குடிசை போல் இருக்கும் இந்த உடலோடு குலாவுகின்ற என் மனைவியும், புதல்வர்களும், வீடும், நண்பர்களும், ஆன சூழலில் புத்தி சோர்வடையாமல், இந்த வாழ்வு பெரும் வாழ்வு, இது நிலைத்து நிற்பது ஒரு கோடி கற்ப காலம் என்று கருதும் மயக்க தியான நிலையில் வாழ்கின்ற அடியேனாகிய யான் நாள்தோறும் உனது பதத்தில் வைத்த ஒப்பற்ற அன்பானது நிலைத்து நிற்கும் வழியை உபதேசிக்க நீ நினைத்தருள வேண்டும். நாக மலையாகிய* இந்தத் திருச்செங்கோட்டுத் தலத்தின் நாதனே, மூன்று தமிழிலும் நன்கு பொழுது போக்குபவனே, சக்கரத்தையும் கதையையும் கரங்களில் ஏந்திய திருமால் மருகனே, வாது செய்து தோற்று வாயிழந்த ஊமைகளாய் நின்ற சமணர்களை மிகுந்த கழுமரங்களில் ஏறவைத்த ஒப்பற்ற சீகாழி அந்தணனாம் திருஞானசம்பந்தனே**, கற்புநிலை பிறழாது இருப்பவளும், வள்ளிமலைக்கு அடியில் கூட்டமாக வாழும் வேடர்களின் குலக்கொடியானவளுமான வள்ளியின் கணவனே, உன்னை வெறுத்த அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு யமனே, கற்பக விருக்ஷம் உள்ள தேவநாட்டவருக்குப் பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.
** முருகப் பெருமானே திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பது அருணகிரிசுவாமிகளின் கருத்து.

பாடல் 604 - திருச்செங்கோடு 
ராகம் - ...; தாளம் -

தத்தத்தத் தத்தத் தத்தத்     தத்தத்தத் தத்தத் தத்தத்          தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான

பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்     கச்சிட்டுக் கட்டிப் பத்மப்          புட்பத்துக் கொப்பக் கற்பித் ...... திளைஞோர்கள் 
புட்பட்டுச் செப்பத் துப்பற்     கொத்தப்பொற் றித்தத் திட்பப்          பொற்பிற்பெற் றுக்ரச் சக்ரத் ...... தனமானார் 
கற்சித்தச் சுத்தப் பொய்ப்பித்     தத்திற்புக் கிட்டப் பட்டுக்          கைக்குத்திட் டிட்டுச் சுற்றித் ...... திரியாமல் 
கற்றுற்றுச் சித்திக் கைக்குச்     சித்திப்பப் பக்ஷத் திற்சொற்          கற்பித்தொப் பித்துக் கொற்றக் ...... கழல்தாராய் 
குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்     துக்கச்சத் துக்குக் குக்குக்          குக்குக்குக் குக்குக் குக்குக் ...... கெனமாறா 
குட்சிக்குப் பக்ஷிக் கைக்குக்     கக்ஷத்திற் பட்சத் தத்தக்          கொட்டிச்சுட் டிக்கொக் ரிக்குக் ...... குடதாரி 
சற்சித்துத் தொற்புத் திப்பட்     சத்தர்க்கொப் பித்தட் சத்துச்          சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே 
தக்ஷப்பற் றுக்கெர்ப் பத்திற்     செற்பற்றைச் செற்றிட் டுச்சச்          சற்பப்பொற் றைக்குட் சொக்கப் ...... பெருமாளே.

அழகிய விசித்திரமான பச்சைப் பட்டாலாகிய ரவிக்கையை அணிவித்து இறுக்கிக் கட்டி, தாமரைப் பூவுக்கு (மார்பகம்) ஒப்பாகும் என்று கற்பனை செய்து, வலையில் சிக்கிய பறவை போல் விலைமாதர் வலையில் வாலிபர்கள் நன்றாகச் சிக்கி, (அந்த வேசியர்களின்) வரிசையான பற்களால் கடிபட்டு, பொன்னை வலுவில் அடைவதற்காக, அதனைத் தெளிவான வகையில் பக்குவமாகப் பேசிப் பெறுகின்ற, கொடிய சக்கரம் போன்று வட்ட வடிவமாக உள்ள மார்பகங்களை உடைய மாதர்களின் கல்லைப் போன்ற கடினமான மனம் என்ற சுத்தப் பொய்யான பித்துச் சூழலுக்குள் புகுந்து, அதில் அதிக விருப்பம் வைத்து, (தன்னைப் போல் அங்கே வரும் பிற காமுகர்களுடன்) கைக்குத்துச் சண்டையும் போட்டு சுற்றித் திரியாமல், உன்னை ஓதுதலைக் கொண்டு, நல்ல சித்தி கைகூடுதற்கு, கருணையோடு, (உன்னைத் துதிக்கும் சொற்கள்) தோன்றுமாறும், அந்தச் சொற்களை நான் ஒப்பிக்குமாறும் உனது வீரத் திருவடிகளைத் தருவாயாக. இரை கிடைக்காத வெறுப்பில் கொட்டுக் கொட்டென்னும் பசியால் வருத்தமும் திகிலும் கொண்டு, குக்குக் குக்குக்குக் குக்குக் குக்குக் என்று ஓயாமல் வயிற்றின் இரைக்காக தனது விலாப்புறத்து பக்கங்களில் சிறகை அடித்துக் கொட்டி, குறிப்புடன் கொக்கரிக்கின்ற சேவலைக் கொடியாகக் கொண்டவனே, என்றும் உள்ளவராய், அறிவே உருவானவராய், பழையவராய், ஞானியாய், அன்பு வாய்ந்த தந்தையாக நின்ற சிவபெருமானுக்கு ஓதி, எழுத்துகளின் இறை ஒலியை (தேவாரப் பாடல்களைப்) பாடிய வல்லமை வாய்ந்த சீகாழித் தலத்துத் திருஞான சம்பந்தப் பெருமானே, உடனே பற்றிக் கொள்வதும், கருவிலேயே ஊடுருவிச் செல்வதுமான பற்றை (பெண், மண், பொன் என்ற மூவாசைகளை) தடுத்து ஒழித்த மேலானதான நாக மலை என்னும் திருச்செங்கோட்டில்* உறையும் அழகிய பெருமாளே. 
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 605 - திருச்செங்கோடு 
ராகம் - சந்தர கெளன்ஸ்; தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கொடிய மறலியு மவனது கடகமு     மடிய வொருதின மிருபதம் வழிபடு          குதலை யடியவ னினதருள் கொடுபொரு ...... மமர்காண 
குறவர் மகள்புணர் புயகிரி சமுகமு     மறுமு கமும்வெகு நயனமும் ரவியுமிழ்          கொடியு மகிலமும் வெளிபட இருதிசை ...... யிருநாலும் 
படியு நெடியன எழுபுண ரியுமுது     திகிரி திகிரியும் வருகென வருதகு          பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப் 
பழய அடியவ ருடனிமை யவர்கண     மிருபு டையுமிகு தமிழ்கொடு மறைகொடு          பரவ வருமதி லருணையி லொருவிசை ...... வரவேணும் 
சடில தரவிட தரபணி தரதர     பரசு தரசசி தரசுசி தரவித          தமரு கமிருக தரவனி தரசிர ...... தரபாரத் 
தரணி தரதநு தரவெகு முககுல     தடினி தரசிவ சுதகுண தரபணி          சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே 
நெடிய வுடலுரு இருளெழ நிலவெழ     எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி          நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும் 
நிலனும் வெருவர வருநிசி சரர்தள     நிகில சகலமு மடியவொர் படைதொடு          நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே.

கொடியவனான யமனும், அவனது யமப்படையும் இறக்க, ஒருநாள் உன் இரண்டு திருவடிகளையும் வழிபட்டு நிற்கும் மழலைச் சிறுவனாகிய நான் உன் திருவருளையே துணையாகக்கொண்டு யமனோடு சண்டை செய்யும் போரினைக் காண்பதற்கு, குறமகள் வள்ளி கட்டித் தழுவும் பன்னிரு புயமலைகளும், ஆறு திருமுகங்களும், பலவான (பதினெட்டு)* கண்களும், சூரியனைக் கூவி வெளிப்படுத்தும் சேவல் இருக்கும் கொடியும், இவையாவும் பிரத்யக்ஷமாக, மேல் கீழ் என்ற இரு திசைகளோடு எட்டுத் திசைகளையும், பூமியையும், நீண்ட ஏழு கடல்களையும், பழமையான சக்ரவாளகிரியையும், வலம் செய்து வருக என்று ஆணையிட்டதும் உடனேயே ஆடிவந்து கூத்தாடுகின்ற ஒரு பச்சைமயில் வாகனத்தின் மீது ஏறி, பழமையான அடியார்களுடன், தேவர் கூட்டம் இருபுறமும் மிகுந்த தமிழ்ப் பாடல்களையும் வேதகீதங்களையும் பாடி வணங்க, முன்னொருமுறை திருவண்ணாமலையில் என்முன் வந்ததுபோல இன்னொரு முறை வந்தருளல் வேண்டும். ஜடாமுடியைத் தாங்குபவரும், ஆலகால விஷத்தைக் கண்டத்தில் தரித்தவரும், பாம்புகளை ஆபரணங்களாகப் பூண்டவரும், மேன்மையான மழுவைத் தாங்கியவரும், சந்திரனை முடியில் தரித்தவரும், தூய்மையே உருவாக நிற்பவரும், இதமாய் ஒலிக்கும் உடுக்கையையும், மானையும் திருக்கரங்களில் ஏந்தியவரும், பார்வதிதேவியை இடப்பாகத்தில் தாங்கியவரும், பிரம்மனின் சிரத்தைத் தாங்கியவரும், சுமையான இந்த பூமியைத் தாங்கியவரும், மேருமலையையே வில்லாகத் தரித்தவரும், ஆயிரம் முகங்களை உடைய சிறந்த கங்காதேவியைச் சிரத்தில் தாங்கியவரும் ஆகிய சிவ பெருமானுடைய திருப்புதல்வனே, அரும் குணங்களை உடையவனே, நாகமலை** என்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளி இருப்பவனே, தயாள மூர்த்தியே, கற்பகத் தருவுள்ள தேவநாட்டின் இந்திராணி மகள் மயிலை ஒத்த அழகி தேவயானையின் வாழ்வாக இருப்பவனே, அசுரர்களின் நீண்ட உடம்பின் கரிய வடிவத்திலிருந்து இருள் வீசவும், அவர்களின் பற்களிலிருந்து ஒளி வீசவும், சுழல்கின்ற கண்களிலிருந்து நெருப்புப் பொறி பறக்கவும், ஏழு குலகிரிகள் நெரிந்து பொடிபடவும், அதிர்கின்ற குரலிலிருந்து புகை எழவும், இடி போன்ற பேரொலி எழவும், விசாலமான ஆகாயமும், பூமியும் அச்சப்படவும் வருகின்ற அசுரர்களின் சேனைகள் சிறிதும் மீதமில்லாமல் முழுவதும் அழிந்தொழிய ஒப்பற்ற சர்வ சம்கார வேற்படையை ஏவிய தலைவனே, மேலான குருநாதனே, தேவர் கோமான் இந்திரனால் துதிக்கப் பெற்ற பெருமாளே. 
குறிப்பு: இப்பாடலில் 'தர' என்னும் சொல் 13 முறையும் 'எழ' என்னும் சொல் 6 முறையும் வந்திருப்பது சிறப்பு.
* 'சூரியன், 'சந்திரன்', 'அக்கினி' என மூன்று கண்கள் வீதம் முருகனின் ஆறு முகங்களுக்கு 18 கண்கள் உள்ளன.இதைத்தான் ஆதி சங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தில் 'அஷ்டாதச விலோசனே' என்று கூறுகிறார்.
** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது.மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.

பாடல் 606 - கொல்லிமலை 
ராகம் -...; தாளம் -

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய     தத்த தன்ன தய்ய ...... தனதான

கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்     கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி 
கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு     கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர் 
இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி     யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி 
எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி     யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான் 
முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள     முட்ட நன்மை விள்ள ...... வருவோனே 
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி     முத்தி விண்ண வல்லி ...... மணவாளா 
பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி     பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா 
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

கஷ்டங்கள் நிறைந்த சேறு போன்றதும், கொடு கொட்டி என்னும் ஆடல்போலக் கூத்தாட்டி வைத்து ஐம்புலன்களுக்கும் இருப்பான வீடு ஆகியதுமான இந்த உடலை விரும்பி, நான் கற்ற வித்தைகளைச் சொல்லி, சுலபமாக நிறைவேறும் என்று மனதில் நினைத்து, மகிழலாம் எனக் கருதி முல்லை மலர் போன்ற பற்களை உடைய விலைமாதர்களின் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி, நல்ல பொருள்களை எல்லாம் கொட்டிக் கொடுத்து, அவர்களிடம் கொடுத்த பின்னர், மேலும் கொடுப்பதற்குப் பொருள் இல்லை என்று சொல்லி வெளி வந்து, ஏமாற்றும் பொருட்டு பொய் வழிகளை யோசிக்கலுற்றும், பொன் இல்லாமையை நினைத்து இரக்கமுற்றும், இவ்வாறு மனம் வருந்துதல் தக்கதாமோ? முழு உண்மையைச் சொன்ன ருத்திர சன்மன்* என்னும் செட்டியாக அவதரித்து, சண்டையிட்ட புலவர்கள் உறுதிப் பொருளை அறிந்துகொள்ள, முழுவதும் சமாதானம் விளையும்படியாக வந்தவனே, முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும், அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான தேவயானையின் மணவாளனே, வழியில் அமைக்கப்பட்டிருந்த மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்** ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி மலை*** நாடனே, பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே. 
* மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரசன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர் - திருவிளையாடல் புராணம்.
** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம் உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது. 
*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.

பாடல் 607 - கொல்லிமலை 
ராகம் - பிருந்தாவன சாரங்கா; தாளம் - கண்டசாபு - 2 1/2

தய்யதன தானந்த தய்யதன தானந்த     தய்யதன தானந்த ...... தனதான

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்     சொல்லுகுண மூவந்த ...... மெனவாகி 
துய்யசதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து     தொய்யுபொரு ளாறங்க ...... மெனமேவும் 
பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்     பல்குதமிழ் தானொன்றி ...... யிசையாகிப் 
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த     பெளவமுற வேநின்ற ...... தருள்வாயே 
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு     கல்வருக வேநின்று ...... குழலூதுங் 
கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை     கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல் ...... கதிர்வேலா 
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று     கொள்ளைகொளு மாரன்கை ...... யலராலே 
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த     கொல்லிமலை மேனின்ற ...... பெருமாளே.

பழமையானதும் முதலானதும் தான் ஒன்றாக விளங்குவதாய், சக்தி - சிவன் என்ற மென்மையான இரண்டு பேதங்களாக விளங்குவதாய், சொல்லப்படுகின்ற மூன்று குணங்களின் (ஸத்வம், ரஜோ, தமஸ்) முடிவாக விளங்கும் மும்மூர்த்திகளாய், தூய்மையான நான்கு வேதங்கள் ஆகி, கொடிய புலன்களாகிய (சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற) ஐந்து ஆகி, சோர்வடையச் செய்யவல்ல பொருள் விளக்கங்களைக் கொண்ட ஆறு வேதாங்கங்களாகி(*1), பலப்பல நாதங்களிடையே தங்குவதாய், உயிர்த்தளைகள் நீங்க பசு, பாசம் ஆகியவற்றில் தங்குவதாய், பெருகிவரும் தமிழ் மொழியில் பொருந்தி, இன்னிசையின் வடிவாகி, பலவித உயிர்களுமாகி, முடிவில்லாத ஆனந்த உருவ சமுத்திரத்தில் மூழ்கும்படி எது செய்யவல்லதோ, அந்தப் பொருளை நீ அருள்வாயாக. கல்லும் உருகும்படியான இனிமையுடன் புல்லாங்குழல் வாசிக்க, துன்பம் அடைந்திருந்த பசுக்கள் அழகிய புகும் இடத்துக்கு வரும்படியாக, நின்று குழலூதிய கண்ணனாகிய திருமால் (முன்பொருநாள்) ரிஷபமாகிய போது அதன் மீது வாகனமாக(*2) ஏறிய பெரியவரும், தாழ்ந்த சடையருமாகிய எங்கள் தந்தை சிவபிரான் கை குவித்துத் தொழ, உண்மையான ஞானத்தை உபதேசித்த ஒளிமிக்க வேலாயுதனே, தினைக் கொல்லையில் வாழ்ந்திருந்த வள்ளியின் புனத்தில் சென்று, உயிரைக் கொள்ளை கொள்ளும் மன்மதனின் கை மலர் அம்புகளின் செயலாலே, தழைகளைக் கொய்து சென்ற(*3) கட்டழகுக் கந்தனே, கொல்லிமலை(*4) மீது நின்றருளும் பெருமாளே. 
(*1) ஆறங்கம் - வேத புருஷனுக்கு ஆறு அங்கங்கள் உண்டு. அவை:சி¨க்ஷ, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் - இவை முறையே நாசி, வாய், கால், காது, கண், கை என்பர்.
(*2) சிவபிரான் திரிபுரத்துக்கு போரிடக் கிளம்புமுன்பு விநாயகரை வேண்டாததால் அத்தேரின் அச்சு முறிந்தது.அப்போது திருமாலே சிவனுக்கு ரிஷப வாகனமாக வந்த வரலாறு குறிப்பிடப்படுகிறது.
(*3) தமிழ்நாட்டில் குறிஞ்சி நிலப் பெண்கள் தழையை உடுத்திக் கொள்வர். அகத்துறையில் தழை கொண்டு சேரல் என்ற ஒரு துறை உண்டு.அதன்படி தலைவன் தலைவிக்கு உடுக்கத் தழை கொண்டு செல்ல வேண்டும்.வள்ளிக்காக முருகன் தழை கொண்டு சென்றது குறிப்பிடப்படுகிறது.
(*4) கொல்லிமலை சேலம் மாவட்டத்தில் நாமக்கல்லுக்கு அருகில் உள்ளது.

பாடல் 608 - ராஜகெம்பீரவளநாட்டு மலை 
ராகம் - ...; தாளம் -

தானனந் தானதன தாத்த தனதன     தானனந் தானதன தாத்த தனதன          தானனந் தானதன தாத்த தனதன ...... தந்ததான

மாகசஞ் சாரமுகில் தோற்ற குழல்கொடு     போகஇந்த் ராதிசிலை தோற்ற நுதல்கொடு          மானவண் டேறுகணை தோற்ற விழிகொடு ...... கண்டுபோல 
மாலர்கொண் டாடுகனி தோற்ற இதழ்கொடு     சோலைசென் றூதுகுயில் தோற்ற இசைகொடு          வார்பொரும் பாரமலை தோற்ற முலைகொடு ...... மன்றுளாடி 
சீகரம் பேணுதுடி தோற்ற இடைகொடு     போகபண் டாரபணி தோற்ற அரைகொடு          தேனுகுஞ் சீர்கதலி தோற்ற தொடைகொடு ...... வந்துகாசு 
தேடுகின் றாரொடுமெய் தூர்த்த னெனவுற     வாடுகின் றேனைமல நீக்கி யொளிதரு          சீவனொன் றானபர மார்த்த தெரிசனை ...... வந்துதாராய் 
வேகமுண் டாகியுமை சாற்று மளவினில்     மாமகங் கூருமது தீர்க்க வடிவுடை          வீரனென் பானொருப ராக்ர னெனவர ...... அன்றுசோமன் 
மேனியுந் தேயகதிர் தோற்ற எயிறுக     ஆனுகுந் தீகையற சேட்ட விதிதலை          வீழநன் பாரதியு மூக்கு நழுவிட ...... வந்தமாயன் 
ஏகநின் றாகியமர் தோற்று வதறிட     வேகவுங் காரமொடு ஆர்க்க அலகைகள்          ஏறிவென் றாடுகள நீக்கி முநிவரர் ...... வந்துசேயென் 
றீசநண் பானபுரு ஷார்த்த தெரிசனை     தாவெனுங் கேள்விநெறி கீர்த்தி மருவிய          ராசகெம் பீரவள நாட்டு மலைவளர் ...... தம்பிரானே.

ஆகாயத்தில் உலவுகின்ற மேகத்தை தோல்வியுறும்படிச் செய்த கூந்தலைக் கொண்டும், போகங்களை அனுபவிக்கின்ற இந்திர (வான)வில்லை தோல்வி அடையும்படிச் செய்த நெற்றியைக் கொண்டும், பெருமை தங்கிய வண்டுகள் சேர்கின்ற மன்மதனுடைய மலர்ப் பாணங்களை தோல்வியுறச் செய்த கண்களைக் கொண்டும், கற்கண்டு போல இனிக்கின்றதென்று (காம) மயக்கம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற, கொவ்வைக் கனியை தோல்வியுறச் செய்த வாயிதழைக் கொண்டும், சோலையில் போய் (அங்கே) ஒலி எழுப்பும் குயிலைத் தோல்வி அடையும்படி செய்த இசை இன்பம் கொண்டும், கச்சு அணிந்து பாரமுள்ளதான, மலையைத் தோல்வி அடையும்படிச் செய்த, மார்பகங்களைக் கொண்டும், அம்பலத்தில் ஆடுகின்ற நடராஜர் திருக்கரத்தில் விரும்பி வைத்துள்ள உடுக்கையை தோல்வி அடையும்படிச் செய்த இடுப்பைக் கொண்டும், காம போகத்தின் கருவூலமாகிய, பாம்பைத் தோல்வி அடையும்படி செய்த பெண்குறியைக் கொண்டும், தேன் சொட்டும் சிறப்புள்ள வாழையைத் தோல்வியுறச் செய்த தொடையைக் கொண்டும் வெளியே வந்து, பொருளைத் தேடி நிற்கும் வேசியரோடு பொழுது போக்கும் உடல் கொண்ட பொல்லாதவனாக உறவாடுகின்ற என்னை மலங்களைப் போக்கி, ஒளி வீசும் சீவனோடு ஒன்று பட்ட பரம் பொருள் விளக்கத்தை வந்து தந்தருளுக. கோபம் தோன்றி உமை கூறியவுடனே (தக்ஷனுடைய) பெரிய வேள்வி மேற்கொண்டு நடப்பதை அழிக்கும் பொருட்டு, ஒளி நிறைந்த வீரபத்திரன் என்னும் வலிமையாளனாகிய ஒப்பற்றவன் தோன்றி வர, அன்று சந்திரன் உடல் தேய, சூரியனுக்கு உள்ள பற்கள் உதிர, யாகப் பசுவைப் பொடியாக்கும் அக்கினியின் கை அற்று விழ, முதன்மையான தக்ஷன் முடி அற்று விழ, நல்ல சரசுவதியின் மூக்கு அறுபட்டு நழுவி விழ, அங்கு வந்திருந்த திருமால் ஓட்டம் பிடிக்க, அந்த யாக சாலையில் நின்று போர் விளைத்து, (அங்கிருந்தவர்களை) வைது, கோப உங்காரத்தோடு சிவபெருமான் ஆரவாரம் செய்ய, பேய்கள் கூடி வென்று ஆடிய (அந்த) யாக சாலையை விட்டு விலக்க, முனிவர்களும் வந்து சேயே என்றும், ஈசா என்றும் போற்றி அன்பின் பாற்பட்ட நால்வகைப் புருஷார்த்தங்களின் விளக்கக் காட்சியை தந்தருளுக என வேண்டிய கேள்வி நெறியின் புகழைக் கொண்ட ராஜகெம்பீர வள நாட்டு மலையில்* விளங்கும் தம்பிரானே. 
* இது தற்போது திருக்கற்குடி என்று வழங்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் மலை என்றும் கூறுவர்.

பாடல் 609 - ஞானமலை 
ராகம் - ...; தாளம் -

தானதன தான தானதன தான     தானதன தான ...... தனதான

சூதுகொலை கார ராசைபண மாதர்     தூவையர்கள் சோகை ...... முகநீலர் 
சூலைவலி வாத மோடளைவர் பாவர்     தூமையர்கள் கோளர் ...... தெருவூடே 
சாதனைகள் பேசி வாருமென நாழி     தாழிவிலை கூறி ...... தெனவோதி 
சாயவெகு மாய தூளியுற வாக     தாடியிடு வோர்க ...... ளுறவாமோ 
வேதமுநி வோர்கள் பாலகர்கள் மாதர்     வேதியர்கள் பூச ...... லெனஏகி 
வீறசுரர் பாறி வீழஅலை யேழு     வேலையள றாக ...... விடும்வேலா 
நாதரிட மேவு மாதுசிவ காமி     நாரியபி ராமி ...... யருள்பாலா 
நாரணசு வாமி யீனுமக ளோடு     ஞானமலை மேவு ...... பெருமாளே.

சூதும் கொலையும் செய்பவர்கள், பணத்தில் ஆசை கொண்ட விலைமாதர்கள், இறைச்சி உண்போர், (இரத்தக் குறைவால்) வெளுத்த முகம் உடைய விஷமிகள், சூலை நோய், வலிப்பு, வாத நோய் இவைகளோடு சம்பந்தப் படுபவர்கள், பாவிகள், தூய்மை இல்லாதவர்கள், கோள் சொல்லுபவர்கள், தெருவில் காரியம் சாதிப்பதற்கு வேண்டிய அழுத்தமான பேச்சுக்களைப் பேசி, வாரும் என அழைத்து, ஒரு நாழிகை நேரத்திற்கு (24 நிமிடங்களுக்கு) பாண்டமாகிய உடலின் விலை நிர்ணயம் இதுதான் என்று பேரம் பேசி, (வந்தவர்கள் தம் பக்கம்) சாயும்படி மிக்க மாயப் பொடியைப் படும்படி அவர்கள் மீது தூவி சா£ரத்தைத் தட்டிக் கொடுப்பவர்கள் உறவு எனக்கு என்றேனும் ஆகுமோ? வேதம் வல்ல முனிவர்கள், குழந்தைகள், பெண்கள், மறையோர் இவர்களை போர் நடக்கப் போகிறது என்று முன்னதாகவே அப்புறப்படுத்தி விட்டு, மேலெழுந்து வந்த அசுரர்கள் அழிந்து கீழே விழ, அலை கடல் ஏழும் வற்றிச் சேறாக வேலைச் செலுத்தியவனே, தலைவரான சிவபெருமானுடைய இடப் பாகத்தில் உறையும் மாது சிவகாமி, பார்வதியாகிய அழகி அருளிய குழந்தையே, நாராயண மூர்த்தி ஈன்ற மகளான வள்ளியோடு, ஞான மலையில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

பாடல் 610 - ஞானமலை 
ராகம் - ஡ணதிகெளளை; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனத்த தான தனதன தனத்த தான     தனதன தனத்த தான ...... தனதான

மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக     மகளிரு நகைக்க தாதை ...... தமரோடும் 
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்     வசைமொழி பிதற்றி நாளு ...... மடியேனை 
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி     னகமதை யெடுத்த சேம ...... மிதுவோவென் 
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது     மணுகிமு னளித்த பாத ...... மருள்வாயே 
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை     தமருக மறைக்கு ழாமு ...... மலைமோதத் 
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு     சமரிடை விடுத்த சோதி ...... முருகோனே 
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத     எழுதரிய பச்சை மேனி ...... யுமைபாலா 
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக     இலகிய சசிப்பெண் மேவு ...... பெருமாளே.

மனைவி நகைக்கவும், ஊரவர் யாவரும் நகைக்கவும், உலகத்திலுள்ள மாதர்களெல்லாம் நகைக்கவும், தந்தையும் சுற்றத்தாரும் உள்ளம் வெறுப்படையவும், என்னுடைய மனமும் மிகச் சலிப்படையவும், எல்லோரும் பழிமொழிகளை ஆராயாமல் கூறி, தினம்தோறும் என்னை அனைவரும் இகழவும், எண்ணமிடும் மனத்தில் இருள் மிகுந்து யோசித்துப் பார்த்தால் நான் பிறந்து பெற்ற பயன் இதுதானோ என்று நானும் நாள்தோறும் நினைத்து கடைசியில் உடலினின்றும் உயிரை விடத் துணிந்த சமயத்தில்* என்னருகே வந்து முன்பு நீ அளித்த பாத தீ¨க்ஷயை இப்போதும் அருள்வாயாக. தனதன தனத்த தான என்ற தாளத்தில் முரசு ஒலிக்க, வீணை, உடுக்கை, வேத கோஷங்கள் இவையாவும் அலைமோதுவது போலப் பெருக, மின்னல் போன்ற ஒளிவிடும் வேலாயுதத்தை வீசி அசுரர்கள் மாயும்படி போர்க்களத்தில் செலுத்திய ஜோதி முருகனே, என் மனத்தை உருக்கி, யோக அநுபூதியை* அளித்த திருவடிகளை உடையவனே, எழுதுதற்கு அரியதான மரகதப் பச்சை மேனியள் உமாதேவியின் பாலனே, தேவர்கள் துதிக்க ஞானமலையில்** வீற்றிருக்கும் குறத்தி வள்ளியின் மணவாளனே, விளங்குகின்ற இந்திராணியின் மகள் தேவயானை விரும்பும் பெருமாளே. 
* அருணகிரிநாதரின் வாழ்க்கை வரலாறு இங்கு குறிப்பிடப்படுகிறது. தம் வாழ்க்கைத் துன்பத்தை நினைத்து உயிர் விடத் துணிந்ததையும், முருகன் அவருக்கு பாத தீ¨க்ஷ தந்து யோக அநுபூதி அருளிய திறனையும் இங்கு விளக்குகின்றார்.
** ஞானமலை நாமக்கல்லுக்கு அருகில் இருப்பதாக நம்பப்படுகிறது.

பாடல் 611 - ஊதிமலை 
ராகம் - ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தானதன தான தந்த தானதன தான தந்த     தானதன தான தந்த ...... தனதான

ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த     ஆவுடைய மாது தந்த ...... குமரேசா 
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று     ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே 
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து     பூரணசி வாக மங்க ...... ளறியாதே 
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து     போகமுற வேவி ரும்பு ...... மடியேனை 
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து     நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச 
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர     நீலமயி லேறி வந்த ...... வடிவேலா 
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து     ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர 
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த     ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே.

முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும், அம்பாளும், தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார் பெற்றருளிய குமாரக் கடவுளே, அன்புடன் மனம் கசிந்து உருகி, முழுமுதலாகிய செம்பொருள் ஈசனே என்று துதித்து, ஆட்கொள்கின்ற உன்னை வணங்க அருள்வாய். ஐந்து பூதங்களின் மாறுபாட்டால் உண்டாகிய இந்த உடம்போடு எங்கெல்லாமோ அலைந்து, நிறைவான சிவ ஆகமங்களைத் தெரிந்துகொள்ளாமல், நகைகள் அணிந்த மார்புடைய பெண்களின் விதவிதமான ஆசைகளையே நினைந்து, இன்பம் சுகிக்கவே விரும்பும் என்னை நீ மிக்க கருணை கொண்டு இரக்கப்பட்டு அன்போடு திருவருள் புரிந்து, சைவ நீதியும் சன்மார்க்க நெறியும் விளங்குமாறு எனக்கு உபதேசம் செய்த தன்மையானது, சிவபிரானின் விளங்கும் காதில் உரைத்த ஓம் என்னும் பிரணவ மந்திரப் பொருளே ஆகும். அவ்வாறு எனக்கு உபதேசிக்க நீலமயிலில் ஏறி வந்தருளிய, கூர்மையான வேலாயுதத்தைக் கொண்ட கடவுளே, ஓதப்படும் வேதங்கள், ஆகமங்கள் ஆகியவை கூறும் சிவயோகத்தையே செய்து, விதியின் வழியை நன்கு உணரும் பெரியோர்களின் வினைகள் தீருமாறு அவர்களின் உடலோடும் உயிரோடும் கலந்து வளர்ந்து கீர்த்தியுடன் சிவானுபவ வாழ்வைத் தந்த ஊதிமலை** மேல் உள்ளம் உவந்து வாழும் பெருமாளே. 
* ஆவுடையாள் என்றால் பசு ஏறும் பிராட்டி - திருப்பரங்குன்றத்தில் உள்ள பார்வதி தேவிக்கு ஆவுடை நாயகி எனப் பெயர் உண்டு.
** ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 612 - ஊதிமலை 
ராகம் - ...; தாளம் -

தான தனத்தத் தனத்த தந்தன     தான தனத்தத் தனத்த தந்தன          தான தனத்தத் தனத்த தந்தன ...... தனதான

கோதி முடித்துக் கனத்த கொண்டையர்     சூது விதத்துக் கிதத்து மங்கையர்          கூடிய அற்பச் சுகத்தை நெஞ்சினில் ...... நினையாதே 
கோழை மனத்தைக் கெடுத்து வன்புல     ஞான குணத்தைக் கொடுத்து நின்செயல்          கூறு மிடத்துக் கிதத்து நின்றருள் ...... புரிவாயே 
நாத நிலைக்குட் கருத்து கந்தருள்     போதக மற்றெச் சகத்தை யுந்தரு          நான்முக னுக்குக் கிளத்து தந்தையின் ...... மருகோனே 
நாடு மகத்தெற் கிடுக்கண் வந்தது     தீரிடு தற்குப் பதத்தை யுந்தரு          நாயகர் புத்ரக் குருக்க ளென்றருள் ...... வடிவேலா 
தோதிமி தித்தித் திமித்த டிங்குகு     டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி          தோதிமி தித்தித் தனத்த தந்தவெ ...... னிசையோடே 
சூழ நடித்துச் சடத்தில் நின்றுயி     ரான துறத்தற் கிரக்க முஞ்சுப          சோபன முய்க்கக் கருத்தும் வந்தருள் ...... புரிவோனே 
ஓத வெழுத்துக் கடக்க முஞ்சிவ     காரண பத்தர்க் கிரக்க முந்தகு          ஓமெ னெழுத்துக் குயிர்ப்பு மென்சுட ...... ரொளியோனே 
ஓதி யிணர்த்திக் குகைக்கி டுங்கன     காபர ணத்திற் பொருட் பயன்றரு          ஊதி கிரிக்குட் கருத்து கந்தருள் ...... பெருமாளே.

மயிர் சிக்கெடுத்து முடித்த பெருத்த கூந்தல் முடியை உடையவர்கள், சூதான வழிகளுக்கு சாமர்த்தியமாக உதவி செய்யும் விலைமாதர்களைக் கூடுவதால் வரும் அற்பமான இன்பத்தை மனத்தில் நினைக்காமல், திடம் இல்லாத மனத்தை ஒழித்து, திடமுள்ள கூரிய மதியையும் ஞானத்தையும் கொண்ட குணத்தை அடையச் செய்து, உனது வீரச் செயல்கள் புகழப்பெறும் இடங்களில் இன்பமுடன் நான் நிற்கும்படியாக அருள் புரிவாயாக. நாத நிலையில் (சிவ தத்துவத்தில்) கருத்து நிலைக்கும்படி மகிழ்ந்து அருள் புரியும் ஞான குருவே, எல்லா உலகங்களையும் படைக்கும் பிரமனுக்கு தந்தை என்று போற்றப்படும் திருமாலின் மருகனே, உன்னை நாடும் அடியேனுக்கு வந்த துன்பத்தைத் தீரும்படி திருவடியையும் தந்தருளுகின்றவனே, தலைவர் சிவபிரான் அன்புடன் உன்னை மைந்தனே, தகப்பன் சாமியே என்று அழைத்தருளிய கூரிய வேலனே, தோதிமி தித்தித் திமித்த டிங்குகு டீகுகு டிக்குட் டிகுக்கு டிண்டிமி தோதி மிதித்தித் தனத்த தந்த என்ற இசையுடன் (சிவலோகத்துப்) பூதகணங்கள் சூழ நடனம் செய்து, யான் உடலினின்றும் உயிரை விடும்போது, இரக்கமும், (என்னைச்) சுப மங்கள வாழ்த்து நிலையில் சேர்ப்பதற்குத் திருவுள்ளமும் கூடிவந்து அருள் புரிவோனே, ஓதப்படும் மந்திரங்களுக்கு உட் பொருள் என்றும், சிவ சம்பந்தமான பக்தர்களிடத்தில் இரக்கமுள்ளவன் என்றும், உயர்ந்த ஓம் என்ற பிரணவ எழுத்துக்கு உயிர் நாடி என்றும் சொல்ல நின்ற பேரொளியானவனே, ஒதியமரம் பூத்துக் குகையில் மலருக்குப் பதிலாக உதிர்க்கின்ற பொன் ஆபரணம் போல அருமையான மோட்சப் பலனைத் தருகின்றவனும், ஊதி மலையில் உள்ளம் மகிழ்ந்து வீற்றிருப்பவனும் ஆகிய பெருமாளே. 
* ஊதிமலை கோவை மாவட்டத்தில் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 613 - குருடிமலை 
ராகம் -...; தாளம் -

தனன தனதன தனன தனதன     தனன தனதன ...... தனதான

கருடன் மிசைவரு கரிய புயலென     கமல மணியென ...... வுலகோரைக் 
கதறி யவர்பெயர் செருகி மனமது     கருதி முதுமொழி ...... களைநாடித் 
திருடி யொருபடி நெருடி யறிவிலர்     செவியில் நுழைவன ...... கவிபாடித் 
திரியு மவர்சில புலவர் மொழிவது     சிறிது முணர்வகை ...... யறியேனே 
வருடை யினமது முருடு படுமகில்     மரமு மருதமு ...... மடிசாய 
மதுர மெனுநதி பெருகி யிருகரை     வழிய வகைவகை ...... குதிபாயுங் 
குருடி மலையுறை முருக குலவட     குவடு தவிடெழ ...... மயிலேறுங் 
குமர குருபர திமிர தினகர     குறைவி லிமையவர் ...... பெருமாளே.

கருடன்மேல் வருகின்ற கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும், தாமரை (பதும நிதி), சிந்தாமணி நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை கூச்சலிட்டு, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில் மிக்க கருத்துடன் பழைய செஞ் சொற்களைத் தேடியும், திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து அப்பாடலில் அமைத்தும், அறிவில்லாத மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும், திரிகின்றவர்களாகிய சில புலவர்கள் கூறுவது, சற்றேனும் உணரும்படியான வழியை நான் அறிந்திலேன். மலை ஆடுகளின் கூட்டமும், கரடு முரடு உள்ள அகில், மருதம் ஆகிய மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி, மதுரம் என்ற ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி, பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற குருடி மலையில்* வீற்றிருக்கும் முருகனே, சிறந்த வட மலை ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும், குமரனே, குருபரனே, அஞ்ஞான இருளுக்கு ஓர் சூரியனே, குறைவில்லாத தேவர்களின் பெருமாளே. 
* குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.

பாடல் 614 - தென்சேரிகிரி 
ராகம் - ...; தாளம் -

தந்தான தனதனன தந்தான தனதனன     தந்தான தனதனன ...... தனதான

எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு     இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென் 
றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ     என்றாசை குழையவிழி ...... யிணையாடித் 
தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள்     சந்தேக மறவெபறி ...... கொளுமானார் 
சங்கீத கலவிநல மென்றோது முததிவிட     தண்பாரு முனதருளை ...... யருள்வாயே 
சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு     சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித் 
தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள்     தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ் 
சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள     சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச் 
செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு     தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே.

எங்கேயாவது ஒருவர் வரக் கண்டால் அங்கே கண் கொண்டு இனிமையாகப் பார்த்து, இங்கு யார் தான் உன் மீது மோகம் கொள்ள மாட்டார்கள் என்று கூறி, இதோ என்னுடைய இனிமையான வாயிதழ் கொடுக்கின்றேன், என்னைப் பொருந்தித் தழுவுவாயாக என்று ஆசை மொழிகளை மனம் குழையக் கூறி, இரண்டு கண்களையும் உருட்டி அசைத்து, சற்றும் தயங்காமல் வந்தவர்களிடம் உள்ளதான பொருளையும், உயிரையும் சந்தேகம் இல்லாமல் அபகரித்துக் கொள்ளும், மான் போன்ற விலை மகளிருடைய சங்கீதமும் சேர்க்கையும் நித்யசுகம் தரும் என்று எண்ணி மூழ்குகின்ற காமக் கடலினின்று நான் கரை ஏறுவதற்கு, குளிர்ச்சி பொருந்திய உனது திருவருளைத் தந்து அருள்வாயாக. சங்கும் சக்கரமும் கைகளின் ஏந்தியவனும், பொருந்திய பசுக் கூட்டங்களின் பின்னே (கண்ணனாகச்) சென்று தொளைகள் நிரம்பிய, மூங்கில் புல்லாங்குழலை ஊதியவனும், தம் மேல் கொண்ட ஆசையை கடக்க மனம் எழுச்சியைக் கொண்ட பெண்களின் ஆடையை எடுத்துக் கொண்டு (குருந்த) மரத்தின் மேல் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமாகிய திருமாலின் மருகனே, தாமரை மலரில் வாழும் பிரமனும் மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து, யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும் தொழுது வணங்க, தென் சேரி கிரியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 615 - தென்சேரிகிரி 
ராகம் - ...; தாளம் -

தந்தானத் தந்த தனதன     தந்தானத் தந்த தனதன          தந்தானத் தந்த தனதன ...... தனதான

கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு     கண்டாரைச் சிந்து விழிகொடு          கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக் 
குன்றோடொப் பென்ற முலைகொடு     நின்றோலக் கஞ்செய் நிலைகொடு          கொம்பாயெய்ப் புண்ட விடைகொடு ...... பலரோடும் 
பண்டாடச் சிங்கி யிடுமவர்     விண்டாலிக் கின்ற மயிலன          பண்பாலிட் டஞ்செல் மருளது ...... விடுமாறு 
பண்டேசொற் றந்த பழமறை     கொண்டேதர்க் கங்க ளறவுமை          பங்காளர்க் கன்று பகர்பொருள் ...... அருள்வாயே 
வண்டாடத் தென்றல் தடமிசை     தண்டாதப் புண்ட ரிகமலர்          மங்காமற் சென்று மதுவைசெய் ...... வயலூரா 
வன்காளக் கொண்டல் வடிவொரு     சங்க்ராமக் கஞ்சன் விழவுதை          மன்றாடிக் கன்பு தருதிரு ...... மருகோனே 
திண்டாடச் சிந்து நிசிசரர்     தொண்டாடக் கண்ட வமர்பொரு          செஞ்சேவற் செங்கை யுடையசண் ...... முகதேவே 
சிங்காரச் செம்பொன் மதிளத     லங்காரச் சந்த்ர கலைதவழ்          தென்சேரிக் குன்றி லினிதுறை ...... பெருமாளே.

புகழ்ந்து பேசி, கொஞ்சிப் பயிலும் மொழிகளைக் கொண்டும், தாம் சந்தித்துப் பார்த்தவர்களை (மனதை) வெட்டி அழிப்பது போன்ற கண் கொண்டும், பூங்கொத்துகள் நிறைந்த கூந்தலைக் கொண்டும், வடக்கில் உள்ள மேரு மலைக்கு நிகரான மார்பினைக் கொண்டும், சபாமண்டபத்தில் நிலைத்து கொலு வீற்றிருப்பது போன்ற தோரணையைக் கொண்டும், கொடி போல இளைத்துப் போன மெல்லிய இடுப்பைக் கொண்டும், எல்லாரிடத்தும் பழகும் சரசம் விளங்க வசப்படுத்தும் பொது மகளிரின் வாய் விட்டுக் கூவுகின்ற மயில் போன்ற நடிப்பால், எனது விருப்பம் அவர்களிடம் செல்லுகின்ற மயக்கம் நீங்கும்படி, தொன்மை வாய்ந்த சொற்களால் அமைந்த பழைய வேதமொழியைக் கொண்டு, தர்க்க வாதங்களுக்கு இடமில்லாதபடி, உமையை இடப் பாகத்தில் கொண்ட சிவபிரானுக்கு முன்பு உபதேசித்தப் பிரணவப் பொருளை (எனக்கும்) அருள்வாயாக. வண்டுகள் களித்து விளையாட, தென்றல் காற்று வீசும் குளத்தை விட்டு நீங்காது, தாமரை மலர்கள் வாடிப் போகாமல் அவைகளிடம் போய் தேனைப் பருகும் வயலூரில் உறைபவனே, வலிய கரிய மேகத்தின் வடிவு உடையவனாய், போர் செய்யும் எண்ணமுடைய கம்சன் இறந்து விழும்படி தாக்கி உதைத்துப் போராடிய கண்ணபிரானிடம் அன்பு காட்டும் லக்ஷ்மியின் மருகனே, சிதறுண்ட அசுரர்கள் திண்டாடும் படியாகவும், அடிமை பூணும்படியாகவும் செய்து, அவர்களுடன் சண்டை செய்த செந்நிறமான வேலைச் செங்கையில் உடைய சண்முகத் தேவனே, அழகிய செம்பொன் மதிலின் அலங்காரம் கொண்டதாய், அதனைச் சந்திரனுடைய கதிர்கள் தழுவுவதான தென்சேரிகிரி* மலையில் இன்பத்துடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 616 - கொங்கணகிரி 
ராகம் - மனோலயம்; தாளம் - ஆதி - கண்டநடை - 2

தந்ததன தத்ததன தந்ததன தத்ததன     தந்ததன தத்ததன ...... தனதான

ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள     ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே 
அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை     அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே 
தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற     சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே 
தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்     சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே 
மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன     முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே 
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி     வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே 
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள்     கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே 
குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு     கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே.

ஐந்து கரங்களை உடைய விநாயகரைப் போன்ற மனமும் (மனோவேகத்துக்கு விநாயகர் அகிலத்தையும் எளிதாக வலம் வந்த வேகத்தைத் தான் ஒப்பிட முடியும்) ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நினைவினை அருள் புரிவாயாக. இந்தப் பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மன நிலையை அருள் புரிவாயாக. நிலைபெற்ற தவநிலை உணர்ச்சியைக் கொடுத்து உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக. பல்லக்கு, பெருமை, கெளரவம் இவைகளை எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக மாதர்கள் தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக நாட்டுக் காவலர்கள் இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*) (அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக. யானைமுகப் பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற கொங்கணகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது.திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று அருணகிரியார் வேண்டுகிறார்.

பாடல் 617 - தீர்த்தமலை 
ராகம் - சங்கரானந்தப்ரியா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தாத்த தனதன தாத்த தனதன     தாத்த தனதன தாத்த தனதன          தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை     கூற்று வருவழி பார்த்து முருகிலை          பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம் 
பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை     நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை          பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் ...... வழிபோக 
மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை     யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை          பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ...... னிதுகேளாய் 
வாக்கு முனதுள நோக்கு மருளுவ     னேத்த புகழடி யார்க்கு மெளியனை          வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ 
ஆட்டி வடவரை வாட்டி யரவொடு     பூட்டி திரிபுர மூட்டி மறலியி          னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய் 
ஆக்கி மகமதை வீட்டி யொருவனை     யாட்டின் முகமதை நாட்டி மறைமக          ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா 
சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற     ஓட்டி யழல்பசை காட்டி சமணரை          சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா 
தீர்த்த எனதக மேட்டை யுடனினை     ஏத்த அருளுட னோக்கி அருளுதி          தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.

மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து உருகுதல் இல்லை, பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும் உருகுதல் இல்லை, யமன் வரும் வழியைக் கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை, கஷ்டங்களை தினமும் அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை, நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ இன்பத்தை விரும்புவதும் இல்லை, நுனி நாக்காலாவது இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை, பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே, நீ நல்ல வழியிலே போகமாட்டேன் என்று சொல்கிறாய். உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விடுகின்றதாக நீ இல்லை, ஏட்டில் உனக்கென எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை, உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் - இதை நீ கேட்பாயாக. அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான். அடியார்களுக்கு அவன் வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால் நல்வினை தீவினை இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக. உலகையே ஆட்டி வைப்பவரான சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி, யமனுடைய ஆணவம் அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி, மன்மதனுடைய உடலைச் சாம்பலாகும்படி எரித்து தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி, வேதவல்லி ஸரஸ்வதிதேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும், உமாதேவியின் கணவருமான சிவபிரான் அருளிய பாலனே, திருப்பாசுரம் எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக ஓட்டியும், நெருப்பிலே இட்ட ஏடு பச்சைநிறத்துடன் விளங்கும்படி காட்டியும், (வாது செய்து தோற்ற) சமணர்களைக் கோபித்துக் கழுவேற வைத்தும், அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த) குருநாதனே, பரிசுத்தனே, என் மனம் விருப்பத்துடன் உன்னை துதிக்கும்படி நீ திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும். தீர்த்தமலை** நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள் தேவயானையின் பெருமாளே. 
* தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷ¡யணியையும் மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில் வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில் பொருத்தினார். யாகத்துக்கு வந்த ஸரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன் காயம் ஏற்படுத்தினார் - கந்த புராணம்.
** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.

பாடல் 618 - கநகமலை 
ராகம் - ஸாவேரி ; தாளம் - அங்கதாளம் - 6 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதனன தனன தந்தத்     தனதனன தனன தந்தத்          தனதனன தனன தந்தத் ...... தனதான

அரிவையர்கள் தொடரு மின்பத்     துலகுநெறி மிகம ருண்டிட்          டசடனென மனது நொந்திட் ...... டயராமல் 
அநுதினமு முவகை மிஞ்சிச்     சுகநெறியை விழைவு கொண்டிட்          டவநெறியின் விழையு மொன்றைத் ...... தவிர்வேனோ 
பரிதிமதி நிறைய நின்ற·     தெனவொளிரு முனது துங்கப்          படிவமுக மவைகள் கண்டுற் ...... றகமேவும் 
படர்கள்முழு வதும கன்றுட்     பரிவினொடு துதிபு கன்றெற்          பதயுகள மிசைவ ணங்கற் ...... கருள்வாயே 
செருவிலகு மசுரர் மங்கக்     குலகிரிகள் நடுந டுங்கச்          சிலுசிலென வலைகு லுங்கத் ...... திடமான 
செயமுதவு மலர்பொ ருங்கைத்     தலமிலகு மயில்கொ ளுஞ்சத்          தியைவிடுதல் புரியு முன்பிற் ...... குழகோனே 
கருணைபொழி கிருபை முந்தப்     பரிவினொடு கவுரி கொஞ்சக்          கலகலென வருக டம்பத் ...... திருமார்பா 
கரிமுகவர் தமைய னென்றுற்     றிடுமிளைய குமர பண்பிற்          கநககிரி யிலகு கந்தப் ...... பெருமாளே.

மாதர்களைப் பின் தொடர்ந்து செல்லும் சிற்றின்பம் சார்ந்த உலகநெறியில் மிகுந்த மோகம் கொண்டு, அசடன் எனக் கருதப்பட்டு, மனம் வேதனைப்பட்டுச் சோர்வுறாமல், நாள் தோறும் களிப்பு மிகுந்து, அற்ப சுகவழியிலேயே விருப்பம் கொண்டு நடந்து, பாவ வழியிலே செல்ல விரும்பும் புத்தியை நான் நீக்க மாட்டேனோ? சூரியனும் சந்திரனும் சேர்ந்து நிற்கும் தன்மையை ஒத்து ஒளிருகின்ற உன் பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு, என் மனத்திலுள்ள துயரம் யாவும் நீங்கப் பெற்று, உள்ளத்தில் அன்போடு உன்னைத் துதித்து, ஒளி பொருந்திய உன் திருவடிகள் மீது வணங்குதற்கு அருள் புரிவாயாக. போர்க்களத்தில் பின்னடையும் அசுரர்களின் பெருமை மங்க, பெருமை தங்கிய (கிரெளஞ்சம் முதலிய) மலைகளெல்லாம் நடுநடுங்க, சிலுசிலுவென்று கடல் அலைகள் கலங்க, உறுதி வாய்ந்ததும், வெற்றி தருவதும், மலர் போன்றதுமான திருக்கரத்தில் விளங்கும் கூர்மையான சக்திவேலாயுதத்தை செலுத்தும் பெருமை வாய்ந்த இளையோனே, கருணை பொழியும் அருளே முந்துவதால் அன்போடு கெளரி (பார்வதி) கொஞ்சி நிற்க, கலகல என்று தண்டை ஒலிக்க வரும் கடப்ப மாலை அணி மார்பனே, யானைமுகக் கணபதியைத் தமையனாகப் பெற்று விளங்கும் இளைய சகோதரக் குமரனே, அழகோடு கனககிரி* (பொன்மலை) யில் வாழும் கந்தப் பெருமாளே. 
* கனகமலை வட ஆற்காடு மாவட்டத்தில் போரூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 9 மைலில் தேவிகாபுரத்தின் அருகே உள்ளது.

பாடல் 619 - புகழிமலை 
ராகம் - ...; தாளம் -

தனனதன தான தனனதன தான     தனனதன தான ...... தனதான

மருவுமலர் வாச முறுகுழலி னாலும்     வரிவிழியி னாலு ...... மதியாலும் 
மலையினிக ரான இளமுலைக ளாலு     மயல்கள்தரு மாதர் ...... வகையாலும் 
கருதுபொரு ளாலு மனைவிமக வான     கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ 
கமலபத வாழ்வு தரமயிலின் மீது     கருணையுட னேமுன் ...... வரவேணும் 
அருமறைக ளோது பிரமன்முதல் மாலும்     அமரர்முநி ராசர் ...... தொழுவோனே 
அகிலதல மோது நதிமருவு சோலை     அழகுபெறு போக ...... வளநாடா 
பொருதவரு சூரர் கிரியுருவ வாரி     புனல்சுவற வேலை ...... யெறிவோனே 
புகலரிய தான தமிழ்முநிவ ரோது     புகழிமலை மேவு ...... பெருமாளே.

தலையில் வைத்துள்ள பூங்கொத்துக்களின் நறுமணம் வீசும் கூந்தலினாலும், செவ்வரி ஓடிய விழிகளாலும், சந்திரன் போன்ற முகத்தாலும், மலையை ஒத்த இளம் மார்பகங்களாலும், வகைவகையான விதங்களில் மோகத்தைத் தருகின்ற பெண்களாலும், பேராசையுடன் விரும்பிச் சேர்க்கிற செல்வத்தாலும், மனைவி, மக்கள் என்ற சம்சார சாகர அலைகளில் மூழ்கி அல்லல் அடைவேனோ? உன் தாமரையைப் போன்ற திருவடிகளில் படியும் வாழ்வைத் தர, மயில் மீது ஏறி கருணையுடன் என்முன்பு நீ வர வேண்டும். அரிய வேதங்களை ஓதும் பிரமன் முதலாக, திருமாலும் மற்ற தேவர்களும், முநிவர்களும், அரசர்களும் தொழப்பெற்றோனே, உலகத்துத் தலங்களில் உள்ள யாவரும் புகழும் நதியின் அருகிலுள்ள சோலைகளால் அழகு பெறும் செல்வ வளங்கள் கூடிய நாடனே, போர் செய்ய வந்த சூரர்களையும், கிரெளஞ்ச மலையையும் ஊடுருவும்படியும், கடலில் நீர் வற்றவும் வேலைச் செலுத்தியவனே, சொல்லுதற் அரிதான தமிழ் முநிவராகிய அகஸ்தியர் புகழ்கின்ற புகழிமலையில்* வீற்றிருக்கின்ற பெருமாளே. 
* புகழிமலை திருச்சி மாவட்டத்தில் புகலூர் ரயில் நிலையத்துக்கு 2 மைலில் உள்ளது.

பாடல் 620 - பூம்பறை 
ராகம் - ...; தாளம் -

தாந்ததன தான தாந்ததன தான     தாந்ததன தான ...... தனதான

மாந்தளிர்கள் போல வேய்ந்தவுடல் மாதர்     வாந்தவிய மாக ...... முறைபேசி 
வாஞ்சைபெரு மோக சாந்திதர நாடி     வாழ்ந்தமனை தேடி ...... உறவாடி 
ஏந்துமுலை மீது சாந்துபல பூசி     ஏங்குமிடை வாட ...... விளையாடி 
ஈங்கிசைகள் மேவ லாஞ்சனையி லாமல்     ஏய்ந்தவிலைமாதர் ...... உறவாமோ 
பாந்தண்முடி மீது தாந்ததிமி தோதி     தாஞ்செகண சேசெ ...... எனவோசை 
பாங்குபெறு தாள மேங்கநட மாடு     பாண்டவர்ச காயன் ...... மருகோனே 
பூந்தளிர்கள் வீறு வேங்கைகள்ப லாசு     பூங்கதலி கோடி ...... திகழ்சோலை 
பூந்தடமு லாவு கோம்பைகள்கு லாவு     பூம்பறையின் மேவு ...... பெருமாளே.

மாந்தளிர் போல் நிறமுள்ள தோலால் மூடப்பட்ட உடலை உடைய விலைமாதர்கள் (காமுகரிடம்) உறவு முறைகள் பலவற்றை உரிமையுடன் பேசிக் காட்ட வல்லவர். அவர்கள் மீது விருப்பமும், பெருத்த மோகமும் ஏற்பட்டு, அதற்கு அமைதியைத் தர வேண்டி (அப்பொது மகளிர்) வாழ்ந்த வீடுகளைத் தேடி, அவர்களோடு உறவாடி, உயர்ந்து நிற்கும் மார்பில் சந்தனம் முதலிய பல நறு மணங்களைப் பூசி, இளைத்து நிற்கும் இடை ஒடுங்க சரசமாக விளையாடிப் (பின்னர்), உபத்திரவங்கள் (ஹிம்சைகள்) உண்டாக, வெட்கம் இன்றிக் கூடிய வேசையர்களின் உறவு நன்றோ? (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம் ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய மருகனே, பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும், பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன், அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும் இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* கோம்பை - செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.
** பூம்பறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.

பாடல் 621 - கொடுங்குன்றம் 
ராகம் - ...; தாளம் -

தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான

அனங்க னம்பொன் றஞ்சுந் தங்குங் ...... கண்களாலே 
அடர்ந்தெ ழும்பொன் குன்றங் கும்பங் ...... கொங்கையாலே 
முனிந்து மன்றங் கண்டுந் தண்டும் ...... பெண்களாலே 
முடங்கு மென்றன் தொண்டுங் கண்டின் ...... றின்புறாதோ 
தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா 
செறிந்த டர்ந்துஞ் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக் 
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் ...... துன்றுசோலை 
கொழுங்கொ டுந்திண் குன்றந் தங்குந் ...... தம்பிரானே.

மன்மதனுடைய பொருந்திய மலர்ப் பாணங்கள் ஐந்தும் தங்குகின்ற கண்களாலே, நெருங்கி எழுந்துள்ள பொன் மலை, குடம் போன்ற மார்பகங்களாலே, கோபித்தும், பொதுச்சபை ஏறியும் தமக்கு உரிய பொருளைக் கண்டிப்புடன் வசூலிக்கும் விலைமாதர்களால், (உனக்கு நான் செய்யும்) தொண்டு தடைபடுவதை இரக்கத்துடன் பார்த்து, இன்று (உனது) திருவுள்ளம் இன்பம் அடையாதோ? தெனந் தெனந் தெந்தெந்தெந் தெந்தெந் தெந்தென் என்ற ஒலிகளைச் செய்து, கூடி நெருங்கிச் சென்று, நல்ல முறையில் வண்டுகள் இசைக்க, வளைந்து விளங்கும் கிளைகளும், பூங்கொத்துகளும் நெருங்கிய சோலைகள் (சூழ்ந்துள்ள) செழுமையான திண்ணிய கொடுங்குன்றம் என்னும் பிரான் மலையில்* வீற்றிருக்கும் தம்பிரானே. 
* கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.

பாடல் 622 - கொடுங்குன்றம் 
ராகம் - ...; தாளம் -

தனதனன தனதனன தத்தத்த தந்ததன     தத்தத்த தந்ததனதனதனன தனதனன தத்தத்த தந்ததன     தத்தத்த தந்ததனதனதனன தனதனன தத்தத்த தந்ததன     தத்தத்த தந்ததன ...... தந்ததான.

எதிர்பொருது கவிகடின கச்சுக்க ளும்பொருது     குத்தித்தி றந்துமலையிவைகளென வதிம்ருகம தப்பட்டு நின்றொழுகி     முத்துச்செ றிந்தவடமெனுநிகள மவையறவு தைத்திட்ட ணைந்துகிரி     னிற்கொத்து மங்குசநெ ...... ருங்குபாகர் 
எதிர்பரவ உரமிசைது கைத்துக்கி டந்துடல்ப     தைக்கக்க டிந்துமிகஇரதிபதி மணிமவுலி யெற்றித்ரி யம்பகனு     முட்கத்தி ரண்டிளகியிளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு     டைத்துச்சி னந்துபொரு ...... கொங்கையானை 
பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி     யொக்கத்து வண்டமளிபுகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்     செக்கச்சி வந்தமுதுபொதியுமொழி பதறஅள கக்கற்றை யுங்குலைய     முத்தத்து டன்கருணை ...... தந்துமேல்வீழ் 
புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்     தட்டுப்ப டுந்திமிரபுணரியுத தியில்மறுகி மட்டற்ற இந்திரிய     சட்டைக்கு ரம்பையழிபொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி     னிர்த்தச்ச ரண்களைம ...... றந்திடேனே 
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி     தத்தத்த தந்ததததெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத     திக்கட்டி கண்டிகடஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித     தக்கத்த குந்தகுர்த ...... திந்திதீதோ 
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட     டக்கட்ட கண்டகடடிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட     டுட்டுட்டு டுண்டுடுடுதிகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு     குக்குக்கு குங்குகுகு ...... என்றுதாளம் 
முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு     டுக்கைப்பெ ரும்பதலைமுழவுபல மொகுமொகென வொத்திக்கொ டும்பிரம     கத்திக்க ளும்பரவமுகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய     மிக்கக்க வந்தநிரை ...... தங்கியாட 
முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர     வுக்ரப்பெ ருங்குருதிமுழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ     டிக்கத்து ணிந்ததிரமுடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி     வெட்டிக்க ளம்பொருத ...... தம்பிரானே.

எதிர் நோக்கி போர் புரிந்து மூடப்படும் வலிய ரவிக்கையுடன் போரிட்டு துணியைக் குத்தித் திறந்து, இவை மலைகளே என்னும்படி இருக்கின்றனவும், கஸ்தூரி பூசப்பட்டு நின்று ஒழுகுவனவும், முத்து நிறைந்த மாலை என்கிற யானையைக் கட்டும் சங்கிலிகள் அவைகள் இற்றுப் போகும்படி இடித்து அணைந்து, நகங்களாகிய கொத்துகின்ற அங்குசத்துடன நெருங்குகின்ற யானையைச் செலுத்துவோர் (அணைதற்கு வரும் காமுகர்கள்) எதிரிலே நின்று போற்ற, மார்பை மிதித்துழக்கிக் கிடந்து (பார்த்தோர்) உடல் பதைக்கும்படி அடக்குவனவும், நன்றாக, ரதியின் கணவனான மன்மதனது மணி முடியை மோதி, முக்கண்ணனும் அஞ்சும்படி திரண்டும் நெகிழ்ந்தும் இளைஞர்தம் உயிரை உண்ணும் கவளமாக வட்ட வடிவுடன் நின்று அசைந்து, முன்னே பருத்து, கோபித்துப் பொருதற்கு உற்றனவுமான யானை போன்ற மார்பகங்கள். பொதுவில் (நின்று உடலை) விற்கும் விலைமாதரின் தாமரை போன்ற கரங்களைத் தழுவி, ஒரு சேர நெகிழ்ந்து படுக்கையில் புகுந்து சல்லாபிக்க, ஒழுங்கான ரேகைகள பரந்துள்ள விஷமுள்ள கரிய கயல் மீன் போன்ற கண்கள் செக்கச் சிவந்து, அமுதம் பொதிந்த சொற்கள் பதற்றத்துடன் வர, கூந்தல் கட்டும் அவிழ, முத்தத்துடன் அன்பு பாராட்டி மேலே விழுகின்ற அதிசயத்தைத் தருகின்ற புணர்ச்சி வலையில் அகப்பட்டு அழுந்தி, உயிர்த் தடை ஏற்பட்டு, அலைச்சல் உறும் இருள் சேர்ந்த கடலில் கலக்கம் உற்று, அளவில்லாத இந்திரியங்களால் ஆன மானிடச் சட்டையாகிய இந்த உடல் அழிகின்ற காலத்திலும், அருள் புரியும் முருகனே, பரிசுத்தமான கொடுங்கிரி என்ற பிரான் மலை* என்னும் தலத்தில் (நீ காட்சி தந்த) நடன பாதங்களை மறக்க மாட்டேன்**. மேற்கூறிய ஜதிகளுக்கு எற்ற வகையில் தாளம் முற்பட்டு ஒலிக்கும் திமிலை என்ற ஒரு வகைப்பறை, கரடி கத்தினாற்போல் ஒலிக்கும் ஓசை உடைய பறை, வளைவுள்ள துடி, இடை சுருங்கிய பறை, பகுவாய்ப்பறை, முரசு எனறு பல தாள வாத்தியங்கள் கூடி மொகுகொகு என்று ஒன்றோடொன்று பொருந்தி ஒலி செய்ய, பேயுருவங்கள் பரவிப் போற்ற, மேலே ஆகாயத்தில் பல கொடிகளும் பக்கங்களில் பறந்தெழுந்து அலைய, அதிகமாக தலையற்ற உடல் வரிசைகள் ஆங்காங்கு தங்கி ஆட, வயதான கழுகுகள், காகங்கள், கருடன்கள் இவையெல்லாம் ஒன்று கூடித் திரண்டு வர, உக்கிரத்துடன் ரத்த வெள்ளத்தில் முழுகி எழுகின்ற பைரவர்கள் நடனம் செய்து, அண்டங்கள் எல்லாம் வெடிபட, துணிவு கொண்டு எதிர்த்து வந்த அசுரர்களைத் தாக்கி, அவர்களது தலைகளைத் திருகியும் வெட்டியும் போர்க்களத்தில் சண்டை செய்த தம்பிரானே. 
* கொடுங்குன்றம் என்ற பிரான் மலை ராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு 22 மைல் தூரத்திலுள்ள திருப்பத்தூர் நகருக்கு வடமேற்கே 15 மைலில் உள்ளது.
** இத்தலத்தில் அருணகிரிநாதருக்கு முருகன் நிர்த்த தரிசனம் தந்த வரலாறு குறிக்கப்படுகிறது.

பாடல் 623 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -

தனன தந்த தந்த தனன தந்த தந்த     தனன தந்த தந்த ...... தனதான

அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த     அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே 
அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ     டணிச தங்கை கொஞ்சு ...... நடையாலே 
சுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்து     தொடுமி ரண்டு கண்க ...... ளதனாலே 
துணைநெ ருங்கு கொங்கை மருவு கின்ற பெண்கள்     துயரை யென்றொ ழிந்து ...... விடுவேனோ 
எழுது கும்ப கன்பி னிளைய தம்பி நம்பி     யெதிர டைந்தி றைஞ்சல் ...... புரிபோதே 
இதம கிழ்ந்தி லங்கை யசுர ரந்த ரங்க     மொழிய வென்ற கொண்டல் ...... மருகோனே 
மழுவு கந்த செங்கை அரனு கந்தி றைஞ்ச     மநுவி யம்பி நின்ற ...... குருநாதா 
வளமி குந்த குன்ற நகர்பு ரந்து துங்க     மலைவி ளங்க வந்த ...... பெருமாளே.

அழகு வீசும் நிலாப் போன்ற முக வட்டத்தினின்றும் வருகின்ற அமுதம் போன்ற திரண்ட இனிய உரைப் பேச்சினாலும், பாதத்தில் நெளிந்து கிடக்கும் தண்டையும், கலில் என்று சப்தம் செய்யும் சிலம்பும், அழகிய சதங்கையும் கொஞ்சி ஒலிக்கின்ற நடையாலும், மனம் நீர்ச்சுழி போல் சுழற்சி உறும்படிச் செய்யும் விஷம் கலந்து செலுத்தும் கண்களினாலும், ஒன்றோடொன்று இணைந்து நெருங்கும் மார்பகங்கள் பொருந்தி உள்ள விலைமாதர்களின் காமத் துயரை என்றைக்கு ஒழித்து விடுவோனோ? (அடைக்கலம் புக) எழுந்து வந்து கும்பகர்ணனின் இளைய தம்பியாகிய விபீடணன் ராமனது எதிரில் வந்து வணங்கிய அந்தச் சமயத்திலேயே, மனம் மகிழ்ந்து இலங்கை அசுரர்களின் (ராணுவ) ரகசியங்களைச் சொல்ல, வெற்றி பெற்ற மேக நிறத்தினனாகிய ராமனின் மருகனே, மழு ஆயுதத்தை விரும்பி ஏந்தும் சிவபிரான் ஆர்வத்துடன் வணங்க, பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, வளப்பம் மிக்க குன்றக்குடி* ஊரைக் காத்து, பரிசுத்தமானஅவ்வூர் மலை மீது வீற்றிருக்கும் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.

பாடல் 624 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -

தனதனன தனதனன தனதனன தனதனனதந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன     தனதனன தனதனன தனதனன தனதனன     தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன          தனதனன தனதனன தனதனன தனதனன          தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா

ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடையதந்தத்தி னைத்தடிவ தொந்தத்தி ரத்தையுள     அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்     அம்பொற்ப தத்தர்தநு வம்பொற்பொ ருப்படர்வ          களபபரி மளமெழுகும் எழிலில்முழு குவமுளரி          யஞ்சப்பு டைத்தெழுவ வஞ்சக்க ருத்துமத ...... னபிஷேகங் 
கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவஇன்பச்சு டர்க்கனக கும்பத்த ரச்செருவ     பிருதில்புள கிதசுகமு மிருதுளமும் வளரிளைஞர்     புந்திக்கி டர்த்தருவ பந்தித்த கச்சடர்வ          கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்          சங்கிப்பி முத்தணிவ பொங்கிக்க னத்தொளிர்வ ...... முலைமாதர் 
வகுளமலர் குவளையிதழ் தருமணமு மிருகமதமொன்றிக்க றுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்     அசையருசி யமுர்தக்ருத வசியமொழி மயில்குயிலெ     னும்புட்கு ரற்பகர வம்புற்ற மற்புரிய          வருமறலி யரணமொடு முடுகுசமர் விழியிணைகள்          கன்றிச்சி வக்கமகிழ் நன்றிச்ச மத்துநக ...... நுதிரேகை 
வகைவகைமெ யுறவளைகள் கழலவிடை துவளவிதழ்உண்டுட்ப்ர மிக்கநசை கொண்டுற்ற ணைத்தவதி     செறிகலவி வலையிலென தறிவுடைய கலைபடுதல்     உந்திப்பி றப்பறநி னைந்திட்ட முற்றுனடி          வயலிநகர் முருகசெரு முயல்பனிரு கரகுமர          துன்றட்ட சிட்டகுண குன்றக்கு டிக்கதிப ...... அருளாதோ 
தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகுதங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு     சகணசக சகசகண செகணசெக செகசெகெண     சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண          தனனதன தனதனன தெனனதென தெனதெனன          தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா 
தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதிதங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு     டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி     டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி          தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி          தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... யெனதாளந் 
தொகுதிவெகு முரசுகர டிகைடமரு முழவுதவில்தம்பட்ட மத்தளமி னம்பட்ட டக்கைபறை     பதலைபல திமிலைமுத லதிரவுதிர் பெரியதலை     மண்டைத்தி ரட்பருகு சண்டைத்தி ரட்கழுகு          துடர்நிபிட கருடனடர் தரகரட மொகுமொகென          வந்துற்றி டக்குடர்நி ணந்துற்றி சைத்ததிர ...... முதுபேய்கள் 
சுனகனரி நெறுநெறென வினிதினிது தினவினைசெய்வெங்குக்கு டத்தகொடி துங்குக்கு குக்குகென     வடனமிடு திசைபரவி நடனமிட வடலிரவி     திங்கட்ப்ர பைக்கதிர்கள் மங்கப்ர சித்தகுல          துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்          மிண்டைக்கு லைத்தமர்செய் தண்டர்க்கு ரத்தையருள் ...... பெருமாளே.

(முதல் 12 வரிகள் வேசைகளின் மார்பகங்களை வர்ணிக்கின்றன. அடுத்த 12 வரிகள் அவர்களுடனான கலவியை விவரிக்கின்றன. மூன்றாம் 12 வரிகள் தாளங்களின் ஒலிகளைத் தொகுக்கின்றன. கடைசி 12 வரிகள் போர்க்களத்தின் பின்னிகழ்வுகளைக் கூறுகின்றன ). திசைகளின் நிலையைக் குலைக்க வல்ல வலிமை மிகுந்த யானையின் பலத்த தந்தங்களை அழிக்க வல்லனவும், ஆலிங்கனத்துக்கு உரிய வலிமையைக் கொண்டனவும், எல்லா வேதங்களும் போற்றுகின்ற பரமரும், சிலம்பு கல கல கல் என்று ஓசை செய்யும் அழகிய பொலிவுள்ள பாதங்களை உடையவருமாகிய சிவபெருமான் ஏந்திய வில்லாகிய அழகிய பொன் மலை மேருவைத் தாக்க வல்லனவும், நறு மணமுள்ள களபச் சாந்து பூசப்பட்டனவும், அழகில் முழுகுவனவும், தாமரை மொட்டு பயப்படும்படி பெருத்து எழுவனவும், வஞ்சனையான எண்ணமுடைய மன்மதனின் கி¡£டத்தை அடக்க வல்லனவும், பொல்லாத கொலைத் தொழிலுக்கு இடம் கொடுப்பனவும், கொடிதான மேல் ஆடை அணிவனவும், இன்பம் தரும் ஒளி பொருந்திய தங்கக் குடத்துடன் தக்க முறையில் போர் புரிய வல்லனவும், வெற்றிச் சின்னமாக விளங்கி, புளகாங்கித சுகத்தாலும் மென்மையாலும், வளர்கின்ற இளைஞர்களின் புத்திக்குத் துன்பத்தைக் கொடுப்பனவும், கட்டப்பட்ட ரவிக்கையால் நெருக்கப்படுவனவும், கயல் மீன், மகர மீன் இவைகளின் கூட்டம் மிக்குச் சிறப்பு பொருந்திய ஆற்றில் நிறைந்த சங்கு, சிப்பி, முத்து இவைகளை அணிவனவும், மேலெழுந்து பாரம் கொண்டு விளங்குவனவும் ஆகிய மார்பகங்களை உடைய விலைமாதர்கள். மகிழம்பூ, குவளை மலரின் இதழ் ஆகியவைகள் கொடுக்கின்ற நறு மணமும், கஸ்தூரியும் கலந்த, கருநிறத்தால் மேகத்தையும் வெற்றி கொண்டு, வாசனை எண்ணெய் பூசப்பட்ட கூந்தல் அசைய, இனிப்புள்ள அமுதத்தாலாகியதும், தன்வசப்படுத்தக் கூடிய இனிய மொழிகள் மயில் குயில் ஆகிய பறைவகளின் புட்குரலைச் சொல்ல, கலவிப் போர் செய்ய, வருகின்ற யமனுடைய வேலுடன் ஒத்து முடுகிப் போர் செய்கின்ற கண்கள் இரண்டும் மிகவும் சிவக்க, மகிழ்ந்து நன்றியைப் பாராட்டுவது போன்று நகத்தின் நுனி ரேகைக் குறிகள் வகை வகையாக உடலில் பதிய, கைவளைகள் கழன்று விழ, அவர்களது இடை துவண்டு சரிய, வாயிதழ் ஊறலை உண்டு உள்ளம் பிரமிக்க ஆசை பூண்டு அணைக்கும் துன்பம் நிறைந்த புணர்ச்சி வலையில் என்னுடைய புத்தி கொண்டுள்ள நூலறிவு சிதறுதல் நீங்கி, பிறவி ஒழிவதற்கான வழியை (நீ) விரும்பி நினைத்து, உனது திருவடிகளை, வயலூரில் வீற்றிருக்கும் முருகனே, போருக்கு உற்ற பன்னிரண்டு கைகளை உடையவனே, குமரனே, பொருந்திய சிறந்த எட்டு குணங்களை உடையவனே, குன்றக்குடி என்னும் தலத்துக்குத் தலைவனே, எனக்கு அருள் செய்திடாயோ? மேற்கூறிய தாளங்களின் கூட்டத்தில் பல முரச வாத்தியங்கள, கரடிகை, டமரு, முழவு தவில், தம்பட்டம், மத்தள இனம் பட்ட டக்கை, பறை, பதலை, பல திமிலை, முதலிய வாத்தியங்கள் அதிர்ச்சியான ஓசைகளைச் செய்ய, போரில் அறுந்து விழும் மண்டை ஓடுகளின் கூட்டத்தை உண்ணுவதற்குச் சண்டை இடும் கூட்டமான கழுகுகளும் அவைகளைத் தொடர்ந்து நெருங்கி வரும் கருடன்கள் கூட்டமாய் வர, காக்கைகள் மொகு மொகு என்று வந்து சேர, குடல், மாமிசம் இவைகளை உண்டு இசைகள் பாடிக் கூச்சலிட்டு பழம் பேய்கள், நாய், நரி ஆகியவை நெறு நெறு என்ற ஒலியுடன் உண்ண மிக ருசியாக இருக்கிறது என்று சாப்பிடும் தொழிலைச் செய்ய, கோபமிக்க கோழிக் கொடி துங்குக் குகுக்குகு என்று ஒலிக்க, வெளிப்படும் உணவு கிடைக்கின்ற திசையைப் போற்றி கூத்தாட, வலிமை வாய்ந்த சூரியன், சந்திரன இவைகளின் ஒளிக் கிரணங்கள் (போர்ப்பழுதியில்) மங்கிப் போக, சிறப்புடைய குதிரை, யானை, தேர், வலிமை வாய்ந்த கோட்டை மதில் இவைகளைக் கொண்ட அசுரர்களின் வலிமையையும் துடுக்கையும் அடக்கி, போர் செய்து, வானவர்களுக்கு வலிமையை அருள் செய்த பெருமாளே. 
* இறைவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.

பாடல் 625 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -

தனதனன தந்த தானன தனதனன தந்த தானன     தனதனன தந்த தானன ...... தனதான

கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு     கலவிதரு கின்ற மாதரொ ...... டுறவாடிக் 
கனவளக பந்தி யாகிய நிழல்தனிலி ருந்து தேனுமிழ்     கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே 
துடியிடைநு டங்க வாள்விழி குழைபொரநி ரம்ப மூடிய     துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை 
தொனியெழவி ழைந்து கூரிய கொடுநகமி சைந்து தோள்மிசை     துயிலவச இன்ப மேவுத ...... லொழிவேனோ 
இடிமுரச றைந்து பூசல்செய் அசுரர்கள்மு றிந்து தூளெழ     எழுகடல்ப யந்து கோவென ...... அதிகோப 
எமபடரு மென்செய் வோமென நடுநடுந டுங்க வேல்விடு     இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே 
வடிவுடைய அம்பி காபதி கணபதிசி றந்து வாழ்தட     வயலிநகர் குன்ற மாநக ...... ருறைவோனே 
வகைவகைபு கழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்     வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.

வலிமையுள்ளதும், அகலமானதும், குடத்துக்கு ஒப்பானதுமான வளர்கின்ற இரண்டு மார்பகங்களின் மேலே விழுகின்ற புணர்ச்சி தருகின்ற விலைமாதருடன் உறவு பூண்டு, கனத்த கூந்தல் கட்டாகிய நிழலில் இருந்து, தேனின் இனிப்பைத் தருகின்ற கொவ்வைக் கனி போன்ற வாயிதழை மென்று, காம சாஸ்திரப்படி தட்டுகை என்னும் செயல் செய்து, உடுக்கை போன்ற இடை துவள, வாள் போன்ற கண்கள் குண்டலங்கள் அளவும் சென்று போர் புரிய, முழுதும் மூடியிருக்கும் புடவை தளர்ந்து விழ, வண்டு, குயில், மயில், காடை இவைகளின் புட்குரல் ஒலிக்க, விரும்பி, கூர்மையான வளைந்த நகக் குறிகளை வைத்து, தோளின் மேல் தூங்கும் மயக்க இன்பத்தை நாடுதலை நான் தவிர்க்க மாட்டேனோ? இடி போல் முழங்கும் பேரிகையை ஒலித்துப் போர் செய்யும் அசுரர்கள் தோல்வி உற்று முறிபட்டுப் பொடியாக, ஏழு கடல்களும் அஞ்சி கோ என்று ஒலிக்க, மிகவும் கோபமுள்ள யம தூதர்களும் என்ன செய்வோம் என்று மிக நடு நடுங்க, வேலைச் செலுத்தி, போர்க்களத்தில் பெருங்காற்று போலச் சிறகை வீசிப் பறக்கும் மயில் மீது அமர்ந்த வீரனே, அழகிய அக்கினீசுரர் என்னும் சிவபெருமானும், பொய்யாக் கணபதியும்* சிறந்து விளங்கும் இடமாகிய வயலூரிலும்*, குன்றக்குடியிலும்** வாழ்பவனே, வித விதமாக உன்னைப் புகழ்ந்து இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரும் சந்திரனும் சூரியனும் வழிபடுவதைப் பார்த்து அவர்களுக்கு வாழ்வு அருளிய பெருமாளே. 
* வயலூர் சிவபெருமானுக்கு 'அக்கினீசுர்' என்று பெயர். கணபதிக்குப் 'பொய்யாக் கணபதி' என்று பெயர்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது. இதற்கு 'மயூரமலை' என்ற பெயரும் உண்டு.

பாடல் 626 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -

தானா தானா தந்தன தத்தன     தானா தானா தந்தன தத்தன          தானா தானா தந்தன தத்தன ...... தனதான

நேசா சாரா டம்பர மட்டைகள்     பேசா தேயே சுங்கள மட்டைகள்          நீசா ளோடே யும்பழ கிக்கவர் ...... பொருளாலே 
நீயே நானே யென்றொரு சத்தியம்     வாய்கூ சாதோ துங்க படத்திகள்          நேரா லேதா னின்றுபி லுக்கிகள் ...... எவர்மேலும் 
ஆசா பாசா தொந்தரை யிட்டவர்     மேல்வீழ் வார்பால் சண்டிகள் கட்டழ          காயே மீதோ லெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம் 
ஆகா தாவே சந்தரு திப்பொழு     தோகோ வாவா வென்று பகட்டிக          ளாகா மோகா வம்பிகள் கிட்டிலு ...... முறவாமோ 
பேசா தேபோய் நின்றுமி யிற்றுயிர்     வாயா வாவா வென்று குடித்தருள்          பேரா லேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது 
பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு     வாய்நீள் மானா ளுஞ்சர ளத்தொடு          பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் ...... மருகோனே 
மாசூ டாடா டும்பகை யைப்பகை     சூரா ளோடே வன்செரு வைச்செறு          மாசூ ராபா ரெங்கும ருட்பொலி ...... முருகோனே 
வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு     தேனா றேசூழ் துங்க மலைப்பதி          மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.

அன்பு, ஆசாரம், ஆடம்பரம் இவை பொருந்திய பயனிலிகள், பேசாமலிருந்து கொண்டே பிறரைப் பழிக்கின்ற கள்ள வீணிகள், கீழ்க் குலத்து இழிந்தோர்களோடும் பழக, பறிக்கின்ற பொருளாலே, உன் மேல் ஆணை, என் மேல் ஆணை என்று ஆணையிட்டு வாய் கூசாமல் பேசுகின்ற வஞ்சக எண்ணத்தினர், எதிரிலேயே நின்று தளுக்கு, ஆடம்பரம் செய்பவர்கள், யார் மேலும் ஆசையாகிய பந்தத்தைக் காட்டித் தொந்தரவு செய்து, அவர்கள் மேல் விழுபவர்களிடம் சண்டித்தனம் செய்பவர்கள், நல்ல பேரழகுடனே மேலே தோல் எங்கும் மினுக்குபவர்கள், அதிக மோகம் வைக்கலாகாது, காம மயக்கம் இப்போது உண்டாகிறது, ஓகோ வாரும் வாரும் என்று (ஒரு பக்கம்) கூறி (மறு பக்கம்) வஞ்சிப்பவர்கள், பொருந்தாத மோகம் தரும் வீணர்கள் ஆகிய வேசைகளின் அருகிலும் உறவு சம்பந்தம் ஆகுமோ? எவருக்கும் தெரியாமல் போய் நின்று, உறியிலிருந்த தயிரை ஆஹா ஆஹா என்று பருகி, அருள் பேர் அளவுக்கு மாத்திரம் (உண்மையில் அருள் இல்லாது) வைத்து, பெரும் கம்சன் அனுப்பி எதிரில் விடுத்த தூதுவளாகிய, பெரிய வாயைக் கொண்ட (பூதனை என்னும்) பேய், பரந்த வியக்கத் தக்க பிளந்த வாயைக் கொண்ட பெரிய பெண்ணும் எளிதாகவே பேய் ரூபம் எடுத்தவளாகிய அந்த அரக்கியின் போரை வென்று எதிர் நின்றவனாகிய கண்ணனின் மருகனே, குற்றத்தில் ஊடாடி ஆடுகின்ற பகைவர்களையும், பகைத்து நின்ற சூரர்களையும் வலிய போரில் அழித்த மகா சூரனே, பூமி முழுவதும் அருள் பாலித்து விளங்கும் முருகனே, வானாடு முதலான ஏழு பூமியும் புகழ்பெற்று விளங்கும் தேனாறு என்னும் நதி சூழ்ந்த பரிசுத்த மயூரமலைப் பதியில் உறைபவனே, தழைக்கும் குன்றக்குடியில்* வீற்றருளும் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இதற்கு மயூரமலை என்ற பெயரும் உண்டு.

பாடல் 627 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -

தனதன தந்தத் தனதன தந்தத்     தனதன தந்தத் ...... தனதான

பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப்     பருவம தன்கைச் ...... சிலையாலே 
பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப்     பெருவழி சென்றக் ...... குணமேவிச் 
சிறுமைபொ ருந்திப் பெருமைமு டங்கிச்     செயலும ழிந்தற் ...... பமதான 
தெரிவையர் தங்கட் கயலைவி ரும்பிச்     சிலசில பங்கப் ...... படலாமோ 
கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக்     கிலுமெதிர் சண்டைக் ...... கெழுசூரன் 
கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்     கிழிபட துன்றிப் ...... பொருதோனே 
குறுமுநி யின்பப் பொருள்பெற அன்றுற்     பனமநு வுஞ்சொற் ...... குருநாதா 
குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்     குடிவளர் கந்தப் ...... பெருமாளே.

ஞானிகள் அல்லாத பிறர் புகழும், இனிய சொல்லைப் பேசும் வாலிபப் பருவமுள்ள மன்மதனுடைய கையில் உள்ள வில்லால், பிறவியினால் உண்டாகும் சிக்கல்கள் பெருகும் பொய்யான பெரிய (காம) வழியில் போய் அந்தப் பொய்க் குணத்திலே பொருந்தி, அதனால் சிறுமை அடைந்து, பெருமை சுருங்கி, செயல்கள் அழிந்து, அற்ப குணமுள்ள மாதர்களின் கயல் மீன் போன்ற கண்ணை விரும்பி, (அதனால்) சில சில அவமானங்களை அடையலாமோ? கர்வமும், வஞ்சக எண்ணமும், சூதும் கொண்டு, எட்டுத் திசைகளிலும் எதிர்த்து போருக்கு எழுந்த சூரன் அவனுடைய சுற்றத்தாருடன் மங்கி அழிய, அவர்கள் தலை முடிகள் சிதைந்து கிழிபட, நெருங்கிச் சண்டை செய்தவனே, குட்டை வடிவு உள்ள (அகத்திய) முனிவர் உண்மைப் பொருளை அறியும்படி அன்று மனத்தில் தோன்றிய மந்திரத்தை உபதேசித்த குருநாதனே, விளங்கும் மலையாக, பரிசுத்தமான மலையாக மேம்பட்டு விளங்கும் குன்றக் குடியில்* வீற்றிருந்து அருளும் கந்தப் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.

பாடல் 628 - குன்றக்குடி 
ராகம் -...; தாளம் -

தனன தனன தனத்தந் ...... தனதான

தவள மதிய மெறிக்குந் ...... தணலாலே 
சரச மதனன் விடுக்குங் ...... கணையாலே 
கவன மிகவு முரைக்குங் ...... குயிலாலே 
கருதி மிகவு மயக்கம் ...... படவோநான் 
பவள நிகரு மிதழ்ப்பைங் ...... குறமானின் 
பரிய வரையை நிகர்க்குந் ...... தனமேவுந் 
திவளு மணிகள் கிடக்குந் ...... திருமார்பா 
திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.

வெண்ணிறமுள்ள சந்திரன் வீசும் நெருப்பாலும், காமலீலைக்கு இடம் தரும் மன்மதன் செலுத்தும் பாணத்தாலும், சோகத்தை மிகவும் தெரியப்படுத்தும் குயிலாலும், எனது மனதில் மிகவும் நினைத்து நான் மயக்கத்தை அடையலாமோ? பவளத்தை ஒத்த வாயிதழை உடைய பச்சை நிறமுள்ள குறத்தியான வள்ளியின் பருத்த மலை போன்ற மார்பகங்களின் மீது புரளும் ஒளி வீசும் மணி மாலைகள் பொருந்தும் அழகிய மார்பனே, விளங்குகின்ற மயூரகிரி என்கின்ற குன்றக்குடியில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது. நிலவு, மன்மதன், பாணங்கள், குயில், முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 629 - குன்றக்குடி 
ராகம் - ...; தாளம் -

தானான தனதான தானான தனதான     தானான தனதான ...... தனதான

நாமேவு குயிலாலு மாமார னயிலாலு     நாடோறு மதிகாயும் ...... வெயிலாலும் 
நார்மாதர் வசையாலும் வேயூது மிசையாலு     நாடாசை தருமோக ...... வலையூடே 
ஏமாறி முழுநாளு மாலாகி விருதாவி     லேவாரும் விழிமாதர் ...... துயரூடே 
ஏகாம லழியாத மேலான பதமீதி     லேகீயு னுடன்மேவ ...... அருள்தாராய் 
தாமோக முடனூறு பால்தேடி யுரலூடு     தானேறி விளையாடு ...... மொருபோதில் 
தாயாக வருசோதை காணாது களவாடு     தாமோத ரன்முராரி ...... மருகோனே 
மாமாது வனமாது கார்மேவு சிலைமாது     மாலாகி விளையாடு ...... புயவீரா 
வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ     மாயூர கிரிமேவு ...... பெருமாளே.

நாவால் கூவி இசைக்கும் குயிலின் பாட்டாலும், சிறந்த மன்மதனுடைய கூரிய பாணங்களாலும், நாள் தோறும் வெய்யில் போல் காய்கின்ற நிலவின் ஒளியாலும், அன்பும் அக்கரையும் உள்ள மாதர்கள் பேசும் வசை மொழியாலும், புல்லாங்குழல் ஊதும் இசையாலும், விரும்புகிற ஆசையால் வரும் மோகம் என்கின்ற வலைக்குள், ஏமாற்றம் அடைந்து நாள் முழுதும் காம இச்சையால் வீணாகவே நீண்ட கண்களை உடைய மாதர்களால் ஏற்படும் ஏச்சுத் துயரத்துக்குள் வீழாமல், அழிவில்லாததும், மேலானதுமான நிலையை அடைந்து உன்னுடன் நான் பொருந்தி இருக்க அருள் புரிவாயாக. தாம் ஆசையுடன் கறந்த பாலைத் தேடி உரலுடன் ஏறி விளையாடும் ஒரு பொழுதில், தாயாக (அங்கு) வந்த யசோதை (அந்தப்) பாலைக் காண முடியாதபடி திருடிய தாமோதரன்* (ஆகிய) திருமாலின் மருகனே, சிறந்த லக்ஷ்மி போன்ற மாது, காட்டில் வளர்ந்த மாது, மேகம் தவழும் (வள்ளி) மலையில் வாழ்ந்த மாது ஆகிய வள்ளி ஆசை பூண்டு விளையாடுகின்ற புயங்களை உடைய வீரனே, விண்ணோர்களும் புகழும் நாட்டில் தேனாறு பக்கத்தில் சூழ்ந்து வரும் மாயூர கிரி எனப்படும் குன்றக் குடியில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* தாமம் = கயிறு, உதரம் = வயிறு, கயிற்றினால் வயிற்றில் கட்டப்பட்டதால் தாமோதரன் ஆயினான்.
** குன்றக்குடி ராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு மேற்கே 7 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் புலவர் தம்மையே நாயகியாக எண்ணிப் பாடியது.குயிலின் இசை, நிலவு, மன்மதன், அவனது அம்புகள், வசை பேசும் மாதர், புல்லாங்குழலின் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 630 - பொதியமலை 
ராகம் - ...; தாளம் -

தத்த தத்த தான தான தத்த தத்த தான தான     தத்த தத்த தான தான ...... தனதான

மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி     மட்டு முற்ற கோதை போத ...... முடிசூடி 
மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னூடு     வட்ட மிட்ட வாரு லாவு ...... முலைமீதே 
இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரை     யெத்தி முத்த மாடும் வாயி ...... னிசைபேசி 
எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவி     யெய்த்து நித்த மான வீன ...... முறலாமோ 
துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசை     தொக்க திக்க தோத தீத ...... வெனவோதச் 
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதி     சொற்கு நிற்கு மாறு தார ...... மொழிவோனே 
திக்கு மிக்க வானி னூடு புக்க விக்க மூடு சூரர்     திக்க முட்டி யாடு தீர ...... வடிவேலா 
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடு     செப்பு வெற்பில் சேய தான ...... பெருமாளே.

மை பூசிய கண் கரும்பு வில்லை உடைய மன்மதனுடைய பாணங்கள் போல வேலை செய்ய, உள்ளே இருக்கும் கள்ளக் குணத்தை வேறாக மறைத்து வைத்து விருப்பம் காட்டி, வாசனை உள்ள மாலையை செவ்வையாக தலை முடியில் அணிந்து, யானையின் மத்தகத்தில் நீண்டதாக இருக்கும் தந்தங்கள் வைத்ததை ஒத்து அழகிய மார்பில் வட்ட வடிவாய் கச்சு அணிந்த மார்பகத்தின் மேல் தடையாக இருக்கும் ஆடை விழ வெட்கப்பட்டு, தம் குறிப்பின் வழி நடக்கும் ஆட்களை வஞ்சகித்து, (தங்களுக்கு இசைந்தவர்களை) முத்தமிடுகின்ற வாயால் உடன் படுதலைப் பேசி அணுகும் துஷ்ட குணம் உள்ள விலைமாதர்களின் படுக்கையில் ஆசைப் பட்டு என்னுடைய உடலும், உயிரும் களைத்துப் போய் நாள் தோறும் அவமானம் அடையலாமோ? துர்க்கை, முக்கிளையாகப் பிரிந்த திரிசூலத்தை ஏந்திய காளியின் செங்கையில் உள்ள தாளத்தின் ஓசை தொக்க திக்க தோத தீத இவ்வாறு சப்திக்க, சுழன்று வெற்றியுடன் பாதங்கள் (சுத்தமான சொக்கம் என்னும்) நடனத்தை ஆடுகின்ற முதல்வராகிய சிவபெருமானுடைய (நீ உபதேசிப்பாயாக என்று சொன்ன) சொல்லுக்கு இணங்கும் மறு மொழியை மொழிந்தவனே, எல்லா திக்குகளிலும், பெரிய வானத்திலும் சென்ற கர்வம் மிகுந்த சூரர்கள் பல வழியாகச் சிதற, அவர்களைத் தாக்கிப் போர் புரிந்த தீரனே, கூரிய வேலாயுதனே, வெட்சி, பிச்சிப்பூ இவைகளால் ஆகிய மாலையை அணிந்த மார்பனே, அறிவுள்ள கொச்சையான சொல் கொஞ்சிப் பேசும் மாதாகிய வள்ளியுடன் பொதிய மலையில்*, சிவந்த முருகனாக விளங்கும் பெருமாளே. 
* பொதிய மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 631 - பொதியமலை 
ராகம் - ...; தாளம் -

தனத்த தானன தனத்த தானன     தனத்த தானன தனத்த தானன          தனத்த தானன தனத்த தானன ...... தந்ததான

வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி     விழித்து மேகலை பதித்து வார்தொடு          மிகுத்த மாமுலை யசைத்து நூலின்ம ...... ருங்கினாடை 
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளை     துலக்கி யேவிள நகைத்து கீழ்விழி          மிரட்டி யாரையு மழைத்து மால்கொடு ...... தந்தவாய்நீர் 
குடித்து நாயென முடக்கு மேல்பிணி     யடுத்து பாதிகள் படுத்த தாய்தமர்          குலத்தர் யாவரு நகைக்க வேயுடல் ...... மங்குவேனைக் 
குறித்து நீயரு கழைத்து மாதவர்     கணத்தின் மேவென அளித்து வேல்மயில்          கொடுத்து வேதமு மொருத்த னாமென ...... சிந்தைகூராய் 
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோவென     திகுத்த தீதிகு திகுர்த்த தாவென          உடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமி ...... ரங்குபோரில் 
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரி     துடிப்ப நீள்கட லெரித்து சூர்மலை          யுடைத்து நீதிகள் பரப்பி யேயவ ...... ரும்பராரை 
அடைத்த மாசிறை விடுத்து வானுல     களிக்கு மாயிர திருக்க ணானர          சளித்து நாளுமெ னுளத்தி லேமகி ...... ழுங்குமாரா 
அளித்த தாதையு மிகுத்த மாமனும்     அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்          அகத்ய மாமுநி பொருப்பின் மேவிய ...... தம்பிரானே.

நறுமணம் கமழும் நீண்ட கூந்தலை விரித்து, வேல் போன்ற கண்களை விழித்து, இடுப்பிலே ஒட்டியாணத்தை அணிந்து, கச்சு அணிந்த மிகப் பெரிய மார்பகத்தை அசைத்து, நூல் போல் மெல்லிய இடையில் ஆடையை மினுக்கியும், காதோலைகளைப் போலி ஒளியாகக் காட்டியும், கை வளைகளை ஆட்டி ஒலிக்கச் செய்தும், வெளிப்படையாய்ச் சிரித்தும், கீழ்க் கண்ணால் மிரட்டி யாரையும் வா என அழைத்தும், மோகத்துடன் கொடுத்த வாயிதழ் ஊறலைப் பருகியும், (இவ்வேசைகள் எனக்கு) நாய் போல முடக்கத்தை விளைவிக்கும் நோய்கள் தந்துவிட, வேதனைகள் உண்டாக, தாயும், சுற்றத்தார்களும், குலத்தைச் சேர்ந்தவர் எல்லோரும் பரிகசித்துச் சிரிக்க உடல் வாட்டம் உறுகின்ற என்னை, கவனித்து நீ உன் அருகில் வரச் செய்து பெரிய தவசிகள் கூட்டத்தில் சேர்வாயாக என்று எனக்கு அருள் புரிந்து, வேல், மயில் ஆகிய அடையாளங்களைப் பொறித்து, வேதங்களும் என்னை இவனொரு ஒப்பற்றவன் என்று கூறும்படி மனம் கூர்ந்து அருள்வாயாக. உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ என்றும், திகுத்த தீதிகு திகுர்த்த தா என்றும் இவ்வாறான ஒலிகளை உடுக்கை, பேரிகை, தவில் இவைகளின் கூட்டங்கள் ஒலிக்கும் போர்க்களத்தில், உலோபிகளும், கீழோரும் ஆகிய அசுரர்கள் பதைபதைக்க, பெரிய யானைகள் துடிக்க, நீண்ட கடலை எரித்து, சூரனையும், கிரவுஞ்ச மலையையும் உடைத்துப் பொடியாக்கி, நீதியை நிலை நிறுத்தி எங்கும் பரப்பி, அந்த அசுரர்கள் தேவர்களை அடைத்து வைத்த பெரிய சிறையினின்றும் விடுவித்து, (தேவர்களுக்குத்) தேவ லோகத்தை அளித்தவனே, ஆயிரம் அழகிய கண்களை உடைய இந்திரனுக்கு அரசாட்சியை அளித்து, நாள் தோறும் என் உள்ளத்தில் இருந்து மகிழும் குமரனே, ஈன்ற தந்தையாகிய சிவபெருமானும், பேர்பெற்ற மாமனாகிய திருமாலும் மற்றும் எல்லோரும் மதிக்கும்படி, மகிழ்ச்சியுடன் அகத்திய முனிவரின் மலையாகிய பொதிய மலையில்* வீற்றிருக்கும் தம்பிரானே. 
* பொதிய மலை திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 632 - கழுகுமலை 
ராகம் - ....; தாளம் -

தனன தனதனா தனத்த தானன     தனன தனதனா தனத்த தானன          தனன தனதனா தனத்த தானன ...... தனதான

குதலை மொழியினார் நிதிக்கொள் வாரணி     முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்          கொடிது கொடிததால் வருத்த மாயுறு ...... துயராலே 
மதலை மறுகிவா லிபத்தி லேவெகு     பதகர் கொடியவா ளிடத்தி லேமிக          வறுமை புகல்வதே யெனக்கு மோஇனி ...... முடியாதே 
முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல்     மடிய அயிலையே விடுத்த வாகரு          முகிலை யனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே 
கதலி கமுகுசூழ் வயற்கு ளேயளி     யிசையை முரலமா வறத்தில் மீறிய          கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.

மழலைச் சொல் போலப் பேசுபவர்கள், பிறரது பொருளைப் பறிப்பவர்கள், அழகிய மார்பகத்தை விலைக்கு விற்பவர்கள் (ஆகிய விலைமாதர்கள்) மீது உள்ள பெரிய மயக்கம் மிகவும் பொல்லாதது. அந்த மயக்கத்தால் ஏற்படும் வருத்தம் தரும் துன்பத்தால் சிறு பிள்ளையாகிய நான் கலக்கம் உற்று, இளமையில் மிக பாபிகளாகிய கொடியவர்களிடம் சென்று, என்னுடைய தரித்திர நிலையைக் கூறி நிற்பது என்னால் இனி முடியாது. முதல்வனே, கட்டப்பட்ட வில்லோடு எதிர்த்த சூரனுடைய உடல் அழிய வேலைச் செலுத்தியவனே. கரிய மேகத்தை ஒத்த நிறம் உடைய திருமாலின் திரு மருகனே, வாழை, கமுகு இவைகள் சூழ்ந்துள்ள வயலில் வண்டுகள் இசைகளை எழுப்ப, பெரிய தருமச் செயல்களில் மேம்பட்டு விளங்கும் கழுகு மலை* என்ற சிறந்த நகரில் விரும்பி எழுந்தருளி இருக்கும் பெருமாளே. 
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.

பாடல் 633 - கழுகுமலை 
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தத் தனத்த தானன     தனதன தத்தத் தனத்த தானன          தனதன தத்தத் தனத்த தானன ...... தனதான

முலையை மறைத்துத் திறப்ப ராடையை     நெகிழ வுடுத்துப் படுப்பர் வாயிதழ்          முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ...... ரணைமீதே 
அலைகுலை யக்கொட் டணைப்ப ராடவர்     மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி          தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக ...... ளுறவாமோ 
தலைமுடி பத்துத் தெறித்து ராவண     னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு          தநுவைவ ளைத்துத் தொடுத்த வாளியன் ...... மருகோனே 
கலைமதி யப்புத் தரித்த வேணிய     ருதவிய வெற்றித் திருக்கை வேலவ          கழுகும லைக்குட் சிறக்க மேவிய ...... பெருமாளே.

மார்பினை மூடி மூடித் திறப்பார்கள். ஆடையைத் தளர உடுத்துப் படுப்பார்கள். வாயிதழ் ஊறலை மாற்றி மாற்றி முத்தத்தைக் கொடுப்பார்கள். பொலிவுள்ள மலர்ப் படுக்கையின் மேல் (வருபவரை) நிலை குலையக் கொண்டு தழுவுவார்கள். ஆண்களின் மன வலிமையைக் கலங்க வைப்பார்கள். மோக மயக்கம் பெரிதாகத் தந்து கைப்பொருளைப் பறிப்பார்கள். இத்தகைய விலை மகளிரின் நட்பு எனக்கு நல்லதாகுமோ? ராவணனுடைய தலைகள் பத்தையும் சிதறடித்து உடல் தொளைபட்டுத் துடித்திடவே, ஒப்பற்ற வில்லை வளைத்துச் செலுத்திய அம்பை உடையவனாகிய ராமனின் மருகனே, ஒற்றைக் கலையில் நின்ற சந்திரன், நீர் (கங்கை) இவைகளைத் தரித்த சடையை உடைய சிவபெருமான் அளித்த வெற்றி வேலைக் கையில் ஏந்திய வேலனே, கழுகு மலையில்* சிறப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.

பாடல் 634 - கழுகுமலை 
ராகம் - ....; தாளம் -

தாந்த தனன தனன தாந்த தனன தனன     தாந்த தனன தனனந் ...... தனதான

கோங்க முகையு மெலிய வீங்கு புளக களப     மேந்து குவடு குழையும் ...... படிகாதல் 
கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவு மினிய     தேங்கு கலவி யமுதுண் ...... டியல்மாதர் 
வாங்கு பகழி விழியை மோந்து பகலு மிரவும்     வாய்ந்த துயிலை மிகவுந் ...... தணியாத 
வாஞ்சை யுடைய அடிமை நீண்ட பிறவி யலையை     நீந்தி அமல அடிவந் ...... தடைவேனோ 
ஓங்க லனைய பெரிய சோங்கு தகர மகர     மோங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும் 
ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்     ஊர்ந்து மயில துலவுந் ...... தனிவேலா 
வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக     வேங்கை வடிவு மருவுங் ...... குமரேசா 
வேண்டு மடியர் புலவர் வேண்ட அரிய பொருளை     வேண்டு மளவி லுதவும் ...... பெருமாளே.

கோங்க மரத்தின் மொட்டும் மெலியும்படியாக பருத்து, புளகாங்கிதத்தையும் (சந்தனக்) கலவையையும் கொண்ட மலை போன்ற மார்பகங்கள் குழையும்படியாக காதல் மிகுந்து, தளிர் மலர் விரித்த படுக்கையில் தோய்ந்து குலவுகின்ற இனிமையானதும், நிறைந்ததுமான சேர்க்கை அமுதத்தை உண்டு, அழகிய விலைமாதர்கள் செலுத்திய பாணமாகிய கண்களை மோந்து, பகலும் இரவும் ஏற்படும் தூக்கம் அதிகரித்து, குறைவுபடாத விருப்பம் பூண்ட அடிமையாகிய நான், பெரிய பிறவிக் கடலை நீந்தி, குற்றமற்ற உனது திருவடியை சேரப் பெறுவேனோ? மலை போன்ற பெரிய கப்பல்களும், ஆண் சுறா மீன்களும், அந்த மகர மீன்களும் நிறைந்துள்ள கடலில் (மாமரமாக) முழுகிச் சண்டை செய்த சூரனும் தளர்ச்சி அடைய, பிரமன் அஞ்ச, அழகு அமைந்த கழுகு மலையில்* மயில் ஏறி உலவுகின்ற ஒப்பற்ற வேலனே, புலிகள் உள்ள காட்டில் வேடர்கள் திகைக்க, வள்ளியாகிய பெண்ணின் மனம் உருக, வேங்கை மர உருவத்தை எடுத்த குமரேசா, வேண்டி நிற்கும் அடியார்களும் புலவர்களும் உன்னை வேண்ட, வேண்டுதற்கு அருமையான பொருளை (அவர்களுக்கு) வேண்டிய அளவுக்குத் தந்து உதவும் பெருமாளே. 
* கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகில் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் உள்ளது.

பாடல் 635 - வள்ளியூர் 
ராகம் - அடாணா ; தாளம் - அங்கதாளம் - 6 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தய்ய தானன ...... தனதான

அல்லில் நேருமி ...... னதுதானும் 
அல்ல தாகிய ...... உடல்மாயை 
கல்லி னேரஅ ...... வழிதோறுங் 
கையு நானுமு ...... லையலாமோ 
சொல்லி நேர்படு ...... முதுசூரர் 
தொய்ய வூர்கெட ...... விடும்வேலா 
வல்லி மாரிரு ...... புறமாக 
வள்ளி யூருறை ...... பெருமாளே.

இரவில் தோன்றும் மின்னல் நிலைக்கும் நேரம்கூட நிலைக்காத இந்த உடல் வெறும் மாயை. கல் நிறைந்த அந்த மாய வாழ்க்கை வழியில் என் ஒழுக்க நெறியும் அடியேனும் நிலைகுலையலாமோ? தம் வீரதீரத்தைச் சொல்லிக்கொண்டு எதிர்த்த பெரும்சூரர் அழிய, அவர்கள் ஊர் பாழ்பட செலுத்திய வேலாயுதனே, கொடிபோன்ற தேவிமார் (வள்ளி, தேவயானை) இருபுறமும் ஆக வள்ளியூரில்* குடிகொண்ட பெருமாளே. 
* வள்ளியூர் திருநெல்வேலிக்கு தென்கிழக்கே 28 மைலில் உள்ளது.

பாடல் 636 - கதிர்காமம் 
ராகம் - குந்தல வராலி; தாளம் - ஆதி

தனதனன தான தனதனன தான     தனதனன தான ...... தனதான

திருமக ளுலாவு மிருபுய முராரி     திருமருக நாமப் ...... பெருமாள்காண் 
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்     தெரிதரு குமாரப் ...... பெருமாள்காண் 
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு     மரகதம யூரப் ...... பெருமாள்காண் 
மணிதரளம் வீசி யணியருவி சூழ     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண் 
அருவரைகள் நீறு படஅசுரர் மாள     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண் 
அரவுபிறை வாரி விரவுசடை வேணி     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண் 
இருவினையி லாத தருவினைவி டாத     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண் 
இலகுசிலை வேடர் கொடியினதி பார     இருதனவி நோதப் ...... பெருமாளே.

லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு புயங்களும் உடைய திருமாலின் அழகிய மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான். மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்) பாடல்களை அளித்தருளிய (ஞானசம்பந்த) குமாரப்பெருமான் நீதான். வணங்கும் அடியார்களின் மனதிலே விளையாடும் பச்சை மயில் ஏறும் பெருமான் நீதான். மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி* சூழ்ந்து விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீதான். பெருமலைகள் பொடிபட, அசுரர்கள் இறக்க போர் புரிந்த வீரப் பெருமான் நீதான். பாம்பு நிலவு, கங்கை நீர் இவை கலந்த சடையுடைய பரிசுத்தமான சிவனுக்கு குருநாதப்பெருமான் நீதான். நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும் கற்பகத் தருவை விட்டு நீங்காதவர்களுமான தேவர்களின் குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீதான். விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக் கொடி வள்ளியின் அதிக பாரமான இரு மார்பிலும் களிக்கும் பெருமாளே. 
* அருவி - கதிர்காமத்துக்கு அருகில் மாணிக்க நதியில் உள்ளது.

பாடல் 637 - கதிர்காமம் 
ராகம் - ....; தாளம் -

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி     அடைவில் ஞாளி கோமாளி ...... அறமீயா 
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்     அருளி லாத தோடோய ...... மருளாகிப் 
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு     பருவ மேக மேதாரு ...... வெனயாதும் 
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாத     பரிசில் தேடி மாயாத ...... படிபாராய் 
இலகு வேலை நீள்வாடை யெரிகொள் வேலை மாசூரி     லெறியும் வேலை மாறாத ...... திறல்வீரா 
இமய மாது பாகீர திநதி பால காசார     லிறைவி கான மால்வேடர் ...... சுதைபாகா 
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீத     கதிர காம மூதூரி ...... லிளையோனே 
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

(யான் ஒரு) விளக்குமாறு, மாறுதல் இல்லாத மூதேவி, பூதம், காளி, தகுதி இல்லாத நாய், கோணங்கி, தருமம் செய்யாமல் அழிவைத் தேடிக் கொள்ளுபவன், எனக்குச் சிறிதும் வெட்கம் இல்லாமல், புனுகு போன்ற வாசனைகளைப் பூசி வாழும் விலைமாதர்களின் அன்பு இல்லாத தோள்களைச் சேர வேண்டி, காம மயக்கம் கொண்டு (அவர்களுக்குக் கொடுக்கப் பொருள் தேடி, மற்றவர்களை) பல கலைகளுக்கும் இருப்பிடமானவனே, மேரு மலை போன்ற புயமலைகளை உடையவனே, மழை வீசும் பருவ காலத்து மேகமே, கற்பக மரமே என்று (பலவிதமாகக்) கூறினாலும் ஒரு சிறிதும் அன்பு இல்லாத மகா பாதகர்களின் பெருமைகளைப் புகழ்ந்து பாடி, ஓய்வே இல்லாமல் பரிசுப் பொருளைத் தேடி நான் இறந்து போகா வண்ணம் கண் பார்த்து அருளுக. விளங்கும் வேலாயுதத்தை பெரிய வடமுகாக்கினியைக் கொண்ட கடல் மீதும், மாமரமாகிய சூரன் மீதும் செலுத்திய தொழிலைக் கைவிடாத திறமையான வீரனே, இமவான் மகள் பார்வதி, கங்கை நதி இவர்கள் இருவருக்கும் பாலகனே, வள்ளி மலைச் சாரலில் இருந்த தலைவியும், காட்டில் இருந்த பெருமை வாய்ந்த வேடர் (நம்பிராஜனின்) புதல்வியுமான வள்ளியைப் பக்கத்தில் கொண்டவனே, பேரொலி கொண்ட கடல் போல் அலை மோதி வரும் வடக்கு திசையிலிருந்து வரும் மாணிக்க கங்கை என்னும் அழகிய ஆறு சூழ்ந்து குளிர்ச்சி தரும் கதிர் காமம் என்னும் பழைய நகரில் வீற்றிருக்கும் இளையோனே, பொன்னுலகு இருப்பிடமான தேவ யானைக்கு வாழ்வாய் அமைந்த கருணை மேருவே, தேவர்கள் பெருமாளே. 

பாடல் 638 - கதிர்காமம் 
ராகம் - காம்போதி; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தனத்தத் தனதான தானன     தனத்தத் தனதான தானன          தனத்தத் தனதான தானன ...... தனதான

உடுக்கத் துகில்வேணு நீள்பசி     யவிக்கக் கனபானம் வேணுநல்          ஒளிக்குப் புனலாடை வேணுமெய் ...... யுறுநோயை 
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்     இருக்கச் சிறுநாரி வேணுமொர்          படுக்கத் தனிவீடு வேணுமிவ் ...... வகையாவுங் 
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய     மயக்கக் கடலாடி நீடிய          கிளைக்குப் பரிபால னாயுயி ...... ரவமேபோம் 
க்ருபைச்சித் தமுஞான போதமு     மழைத்துத் தரவேணு மூழ்பவ          கிரிக்குட் சுழல்வேனை யாளுவ ...... தொருநாளே 
குடக்குச் சிலதூதர் தேடுக     வடக்குச் சிலதூதர் நாடுக          குணக்குச் சிலதூதர் தேடுக ...... வெனமேவிக் 
குறிப்பிற் குறிகாணு மாருதி     யினித்தெற் கொருதூது போவது          குறிப்பிற் குறிபோன போதிலும் ...... வரலாமோ 
அடிக்குத் திரகார ராகிய     அரக்கர்க் கிளையாத தீரனு          மலைக்கப் புறமேவி மாதுறு ...... வனமேசென் 
றருட்பொற் றிருவாழி மோதிர     மளித்துற் றவர்மேல் மனோகர          மளித்துக் கதிர்காம மேவிய ...... பெருமாளே.

உடுப்பதற்கு உடைகள் வேண்டும். பெரும் பசியைத் தணிக்க உயர்ந்த சுவைநீர் வேண்டும். தேகம் நல்ல ஒளிவீசும் பொருட்டு நீரும் பட்டாடையும் வேண்டும். உடல் நோயை அகற்ற மருந்துகள் வேண்டும். வீட்டுக்குள் இருக்க இளமையான மனைவி வேண்டும். படுத்துக்கொள்ள ஒரு தனி வீடும் வேண்டும். இத்தனை நலன்கள் யாவும் எனக்குக் கிடைக்கப் பெற்று குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் மூழ்கி, பெரிய சுற்றத்தார் கூட்டத்தைக் காப்பாற்றுபவனாகி முடிவில் என்னுயிர் வீணாகக் கழிந்து விடும். கருணை உள்ளத்தையும் சிவஞான போதத்தையும் நீ என்னைக் கூப்பிட்டு வைத்துத் தந்தருள வேண்டும். ஊழ்வினையால் வரும் பிறவி என்ற மலைச் சூழலில் சுழலும் என்னை ஆட்கொள்ளும் நாள் ஒன்றும் உண்டோ? மேற்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், வடக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும், கிழக்குத் திசையில் சில தூதர்கள் தேடட்டும் என்றும் அனுப்பி குறிப்பினால் குறிப்பை உணரும் அனுமனை இனி தெற்கு திசையில் தூதனாக அனுப்ப வேண்டியது. சொல்லி வைத்த குறிப்பின்படி தேடும் பொருள் (சீதை) கிடைக்காமல் போனாலும் தோல்வியுடன் வரலாமோ? (வருதல் நன்றன்று என சுக்¡£வன் சொல்லி அனுப்ப), அடியோடு வஞ்சகர்களாகிய அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனாகிய அனுமனும் அலை கடலைத் தாண்டி அப்புறம் உள்ள இலங்கைக்குச் சென்று, சீதாபிராட்டி இருந்த அசோகவனத்தை அடைந்து, ராமபிரானது அழகிய பொன் மோதிரத்தை அன்னைக்கு அளித்து மீண்டு வந்த அந்த அனுமனுக்கு அனுக்கிரகத்தைத் தந்தருளி*, கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* அசோகவனத்தை அழித்து, பின்பு இலங்கையை நெருப்புக்கு இரையாக்கி, கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க கங்கை நதியில் முழுகி கதிர்காம வேலனை வழிபட்டு அனுமார் முருகனின் அருள் பெற்றார்.

பாடல் 639 - கதிர்காமம் 
ராகம் - சக்ரவாஹம்; தாளம் - திஸ்ர்ருபகம் - திஸ்ரநடை - 7 1/2 - எடுப்பு - /3 0

தனன தான தத்த ...... தனதான     தனன தான தத்த ...... தனதான

எதிரி லாத பத்தி ...... தனைமேவி     இனிய தாள்நி னைப்பை ...... யிருபோதும் 
இதய வாரி திக்கு ...... ளுறவாகி     எனது ளேசி றக்க ...... அருள்வாயே 
கதிர காம வெற்பி ...... லுறைவோனே     கனக மேரு வொத்த ...... புயவீரா 
மதுர வாணி யுற்ற ...... கழலோனே     வழுதி கூனி மிர்த்த ...... பெருமாளே.

சமானம் இல்லாத அன்புடையவனாகி இனிமையைத் தரும் உன் திருவடிகளின் தியானத்தை இரவும் பகலும் இதயமாகிற கடலுக்குள்ளே பதியவைத்து என் உள்ளத்திலே உன் நினைப்பு சிறக்குமாறு அருள்வாயாக. கதிர்காமம் என்ற திருமலையில் எழுந்தருளி வாழ்பவனே, பொன் மேரு மலையை ஒத்த தோள்களை உடைய வீரனே, இனிய மொழிகள் உள்ள ஸரஸ்வதி வந்து போற்றும் பாதனே, பாண்டியனது கூனை சம்பந்தராக வந்து நிமிர்த்திய பெருமாளே. 

பாடல் 640 - கதிர்காமம் 
ராகம் - தோடி; தாளம் - ஆதி - 2 களை

தனதன தனதன தனதன தனதன     தானத் தனந்தந் ...... தனதான

கடகட கருவிகள் தபவகி ரதிர்கதிர்     காமத் தரங்கம் ...... மலைவீரா 
கனகத நககுலி புணரித குணகுக     காமத் தனஞ்சம் ...... புயனோட 
வடசிக ரகிரித விடுபட நடமிடு     மாவிற் புகுங்கந் ...... தவழாது 
வழிவழி தமரென வழிபடு கிலனென     வாவிக் கினம்பொன் ...... றிடுமோதான் 
அடவியி ருடியபி நவகும ரியடிமை     யாயப் புனஞ்சென் ...... றயர்வோனே 
அயிலவ சமுடன ததிதிரி தருகவி     யாளப் புயங்கொண் ...... டருள்வோனே 
இடமொரு மரகத மயில்மிசை வடிவுள     ஏழைக் கிடங்கண் ...... டவர்வாழ்வே 
இதமொழி பகரினு மதமொழி பகரினு     மேழைக் கிரங்கும் ...... பெருமாளே.

கடகட என்று சப்திக்கும் பறைகளின் பேரொலியும் அடங்குமாறு வரிப்புலிகளின் ஒலி அதிர்கின்ற கதிர்காமத்துக் கடவுளே, அலைகள் வீசும் கடலினை உனது வேலால் அலைவுறச் செய்த வீரனே, பெருமையையும் கோபத்தையும் உடைய மலை போன்ற யானை வளர்த்த தேவயானையை மணந்த இனிய குணத்தோனே, என் இதய குகையில் இருக்கும் குகனே, மன்மதனின் தந்தை திருமால் பயப்பட, பிரம்மா ஓடிட, வட மேரு மலைச் சிகரம் தவிடுபொடியாக நடனம் செய்யும் குதிரை போன்ற மயில் மீது ஏறி வருகின்ற கந்தக் கடவுளே, தவறாமல் வழிவழியாக வந்த உறவினன் என்னும்படி யான் வழிபடுகின்றவனாக இல்லேன் எனினும் எனது மூவாசைகளும் துன்பங்களும் அழிந்து ஒழிந்திடுமோ? காட்டில் சிவமுனிவர் உருவத்தில் தவத்திலிருந்த ரிஷியின்அற்புதப் புதுமையான குமாரி* வள்ளிக்கு அடிமையாகிச் சென்று அவள் இருந்த தினைப்புனத்துக்குப் போய், தளர்ச்சி அடைந்தவனே, மயக்கத்துடன் ஒருநாள் காட்டிலே திரிந்து கொண்டிருந்த கவியாகிய பொய்யாமொழிப் புலவரை ஆண்டருள** வேலினைத் தோளில் ஏந்திச் சென்று அருள் புரிந்தவனே, தம் உடலின் இடது பாகத்தில் ஓர் மரகத மயிலை மிஞ்சிய அழகுள்ள ஏந்திழையாம் பார்வதிக்கு இடம் தந்தவரான சிவபிரானின் செல்வனே, அடியேன் இனிய மொழிகளைக் கூறினாலும், ஆணவம் தொனிக்கும் பேச்சுக்களைப் பேசினாலும், இந்த ஏழையினிடத்தில் கருணை காட்டும் பெருமாளே. 
* சிவமுநிவராக உருவெடுத்த திருமால் காட்டில் தவம் செய்த போது திருமகள் மானின் உருக்கொண்டு எதிர்ப்பட, முநிவர் திருஷ்டி மான் மீது பட்டு, மான் கருவுற்று வள்ளிக்கிழங்குக் குழியில் பெண் குழந்தையை ஈன்றுவிட்டு ஓடியது. வேடர் தலைவன் குழந்தையைக் கண்டு வள்ளி எனப் பெயரிட்டான்.
** சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து கவி தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.

பாடல் 641 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -

தனதனன தானத்த தனதனன தானத்த     தனதனன தானத்த ...... தனதான தானனா

சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட     தனமசைய வீதிக்குள் ...... மயில்போலு லாவியே 
சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர்     தமையுணர ராகத்தின் ...... வசமாக மேவியே 
உமதடிய னாருக்கு மனுமரண மாயைக்கு     முரியவர்ம காதத்தை ...... யெனுமாய மாதரார் 
ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு     முனதருள்க்ரு பாசித்த ...... மருள்கூர வேணுமே 
இமகிரிகு மாரத்தி யநுபவைப ராசத்தி     யெழுதரிய காயத்ரி ...... யுமையாள்கு மாரனே 
எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து     இதணருகு சேவிக்கு ...... முருகாவி சாகனே 
அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு     மதிகவித சாமர்த்ய ...... கவிராஜ ராஜனே 
அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த     அரியகதிர் காமத்தி ...... லுரியாபி ராமனே.

போர்முகத்துக்கு என்ற கூர்மை நிறைந்த வேல் போன்ற கண்கள் புரள, கச்சு அணிந்த மார்பகங்கள் அசைய, தெருவில் மயில் உலவுவது போல, சரியை, கிரியை, யோகம், (ஞானம்) என்னும் நான்கு வழிகளில்* நிற்கின்ற, அருளும் பரிசுத்தமும் வாய்ந்த பெரியோர்களும் தம்மை மோகிக்கும்படியாக ஆசை காட்டும் வழிகளில் பொருந்தி, உமது திருவடியை நினையாதவருக்கும், மரணத்தோடு கூடிய மாயையின் வசப்பட்டவருக்கும் உரியவராய், சிறந்த கிளிகள் எனப்படும் மாயைகளில் வல்ல விலைமாதர்களுடைய ஒளி மிகுந்த படுக்கையிடத்தே சிக்கிக் கொண்ட எனக்கும் உமது திருவருள் பிரசாதத்தை அருள் கூர்ந்து அளிக்க வேண்டும். இமய மலை அரசனுடைய மகள், எப்போதும் இன்ப அனுபவத்தைத் தருபவள், பராசக்தி, எழுதற்கரிய காயத்திரி மந்திரத்தின் உருவினள் (ஆகிய) உமாதேவியின் மகனே, வேடர்களின் அழகிய மான் போன்ற வள்ளிக்காக மடல் எழுதி* ஆசைப்பட்டு, அவள் இருந்த பரண் அருகே சேவித்து நின்ற முருகனே, விசாகனே, தேவர்களைச் சிறையினின்றும் மீட்கும் பொருட்டுப் போரிட்டு, கீர்த்தியுற்ற, மிக மேலான திறமை வாய்ந்த ராஜகவிகளுக்குள் சக்கரவர்த்தியே, அழுது (திருஞான சம்பந்தராகத் தோன்றி பார்வதி தேவியின் திருமுலைப்பால் உண்டு) தேவாரப் பாடல்களால் உலகை வாழ்வித்த கவுணிய குலத்தைச் சார்ந்த ஞான சூரியனே, அருமை வாய்ந்த கதிர்காமத்துக்கு உரிய அழகனே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம். 
** மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.

பாடல் 642 - கதிர்காமம் 
ராகம் - காபி; தாளம் - ஆதி - கண்டநடை - 20 - எடுப்பு - அதீதம்

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா     தனத்தா தனத்தா ...... தனதான

சரத்தே யுதித்தா யுரத்தே குதித்தே     சமர்த்தா யெதிர்த்தே ...... வருசூரைச் 
சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய்     தகர்த்தா யுடற்றா ...... னிருகூறாச் 
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்     செகுத்தாய் பலத்தார் ...... விருதாகச் 
சிறைச்சேவல் பெற்றாய் வலக்கார முற்றாய்     திருத்தா மரைத்தா ...... ளருள்வாயே 
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்     பொரத்தா னெதிர்த்தே ...... வருபோது 
பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார்     பொரித்தார் நுதற்பார் ...... வையிலேபின் 
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்     கருத்தார் மருத்தூர் ...... மதனாரைக் 
கரிக்கோல மிட்டார் கணுக்கான முத்தே     கதிர்க்காம முற்றார் ...... முருகோனே.

நாணல் காட்டிலே பிறந்தவனே (சரவணபவனே), வலிமையோடு குதித்து சாமர்த்தியமாய் எதிர்த்துவந்த சூரனை ஒழுங்காக நடந்துகொண்ட வரைக்கும் விட்டுவைத்தாய், சரியில்லாத போது அடுத்து வந்து அவனை நெருக்கினாய், உடலை இரு கூறுகள் ஆகுமாறு பிளந்தாய், தலையையும் மார்பையும் அறுத்துக் குவித்தாய், கொன்றெறிந்தாய், பல மாலைகளை விருதுகளாகவும், சிறகுடைய சேவல் ஒன்றையும் பரிசாகப் பெற்றாய், வெற்றியை அடைந்தாய், உனது அழகிய தாமரைப் பாதங்களைத் தந்தருள்க. திரிபுரத்தில் இருந்த வரம்பெற்ற மூன்று அசுரர்களும் அம்புக் கூட்டங்கள் கொண்டவர்களாக சண்டை செய்யவே எதிர்த்து வரும்போது முதலில் பொறுமையோடு இருந்தார், பிறகு போர்க்கோலம் தரித்தார், பின்பு சிரித்தார், திரிபுரத்தை எரித்தார், பொரிபடச் செய்தார் தனது நெற்றிக்கண் பார்வையாலேயே. பின்பு (கஜமுகாசுரனான) யானையின் தோலை உரித்தார், அதனை விரித்து ஆடையாக அணிந்து கொண்டார். (தேவர்கள் கேட்டுக்கொண்டபடி தம்மீது அம்பு எய்யும்) கருத்தோடு தென்றலைத் தேராகக்கொண்டு ஊர்ந்துவந்த மன்மதனை சாம்பல் அலங்காரமாக ஆக்கிய பரமசிவனாரின் கண்மணியான முத்தையனே, கதிர்காமம் என்ற தலத்தில் சென்று விளங்கிய முருகனே. 

பாடல் 643 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -

தனதனா தத்தனத் தனதனா தத்தனத்     தனதனா தத்தனத் ...... தனதான

சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்     சகலயோ கர்க்குமெட் ...... டரிதாய 
சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப்பொருட்     டருபரா சத்தியிற் ...... பரமான 
துரியமே லற்புதப் பரமஞா னத்தனிச்     சுடர்வியா பித்தநற் ...... பதிநீடு 
துகளில்சா யுச்சியக் கதியையீ றற்றசொற்     சுகசொரூ பத்தையுற் ...... றடைவேனோ 
புரிசைசூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்யசற்     புருஷவீ ரத்துவிக் ...... ரமசூரன் 
புரளவேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்     புகழையோ தற்கெனக் ...... கருள்வோனே 
கரியயூ கத்திரட் பலவின்மீ திற்சுளைக்     கனிகள்பீ றிப்புசித் ...... தமராடிக் 
கதலிசூ தத்தினிற் பயிலுமீ ழத்தினிற்     கதிரகா மக்கிரிப் ...... பெருமாளே.

சரியை மார்க்கத்தில்* இருப்பவர்களுக்கும், அந்தக் கிரியை மார்க்கத்தில் இருப்பவர்களுக்கும், நல்ல எல்லாவித யோக நிலையில் இருப்பவர்களுக்கும் எட்டுதற்கு முடியாததும், வேறுபட்ட சமயங்களினால் நெருங்க முடியாததுமான உண்மை ஞானத்தைத் தர வல்ல பராசக்தியினும் மேலானதானதும், யோகியர் தன்மயமாய் நிற்பதுவும், அதற்கும் மேம்பட்டதான துரியாதீத நிலையானதும் ஆகி, பரம ஞானத் தனி ஒளியாகப் பரந்துள்ளதாய், சிறந்த இடமாய், குற்றமில்லாததாய், இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையை, முடிவில்லாததும், புகழப்படுவதுமான பேரின்ப நிலையை, நான் பொருந்தி அடைவேனோ? மதில் சூழ்ந்துள்ள வயலூருக்கு உரிய வல்லவனே, உத்தமனே, வீரமும் வலிமையும் கொண்ட சூரன் புரண்டு விழ, வேலைச் செலுத்திய திருக்கரத்தை உடைய குமரனே, மேன்மை பொருந்திய திருப்புகழை ஓதுவதற்கு எனக்கு அருள் செய்தவனே, கருங்குரங்குகளின் கூட்டங்கள் பலா மரத்தின் மீது இருந்து சுளைப் பழங்களைக் கீறிக் கிழித்து உண்டு சண்டை இட்டு, வாழை மரங்களிலும், மாமரங்களிலும் நெருங்கி விளையாடும் ஈழ நாட்டில் உள்ள கதிர்காம மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.

பாடல் 644 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -

தானதன தத்தத்த தானதன தத்தத்த     தானதன தத்தத்த ...... தனதான

பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப     யோதர நெருக்குற்ற ...... இடையாலே 
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப     பாணவிழி யிற்பொத்தி ...... விடுமாதர் 
காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த     காதில்முக வட்டத்தி ...... லதிமோக 
காமுகன கப்பட்ட வாசையைம றப்பித்த     கால்களைம றக்கைக்கும் ...... வருமோதான் 
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெ     சாசிரனை மர்த்தித்த ...... அரிமாயன் 
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி     கோணசயி லத்துக்ர ...... கதிர்காம 
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்கு     மேகலையி டைக்கொத்தி ...... னிருதாளின் 
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை     வேல்களில கப்பட்ட ...... பெருமாளே.

பாரமானதும், முத்து மாலை அணிந்ததும், சந்தனம் பூசியதும், புளகாங்கிதம் கொண்டதும், அழகியதுமான மார்பகங்களாலும், நெருங்கி மெலிதாக உள்ள இடையாலும், சர்க்கரைப் பாகு போல் இனிக்கும் இசை மொழியாலும், (மன்மதனுடைய) மலர்ப் பாணம் போல் தைக்கும் கண்களாலும், காம மயக்கால் மூடி விடுகின்ற விலைமாதர்களின் மேகம் போன்ற கூந்தல் கட்டினாலும், மகர மீன் போன்ற (குண்டல அலங்காரம் உள்ள) காதினாலும், முக மண்டலத்தாலும் அதிக மோகம் கொண்ட காமுகனாகிய நான் சிக்கிக் கிடந்த காம இச்சையை அடியோடு மறக்கச் செய்த உனது திருவடிகளை என்னால் மறக்கவும் கூடுமோ? தேரில் எழுந்தருளும் சூரியன் (ராவணனுக்கு) அஞ்சி உள்ளே புகாத பழைய ஊராகிய இலங்கையில் பத்து தலைகளை உடைய ராவணனை கலக்கிப் பிசைந்த மாயோனாகிய திருமாலின் சீரான மருகனே, மிக வலிமையான யானைகள் எதிர்ப்படும், ரத்தினங்கள் கிடைக்கும் திருக்கோண மலையிலும், உக்கிரமான கதிர்காமத்திலும் வீற்றிருக்கும் வீரனே, தினைப் புனம் உள்ள வள்ளி மலையில் மயில் போன்ற வேடப் பெண் வள்ளியின் மேகலை அணிந்த இடையின் கொத்திலும், இரண்டு பாதங்களிலும், வாசனை தங்கிய மேகம் போன்ற கூந்தலிலும், பசுமையான மூங்கிலை ஒத்த தோள்களிலும், சிவந்த கிரணங்களைக் கொண்ட வேல் போன்ற கண்களிலும் சிக்கிக் கொண்ட பெருமாளே. 
* ராவணனுக்குப் பயந்து, அவனது ஆணைப்படி சூரியன் இலங்கை நகர் வழியாகத் தன் தேரைச் செலுத்தாமல் இருந்தான்.

பாடல் 645 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -

தனதனா தத்த தனதனா தத்த     தனதனா தத்த ...... தனதான

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை     வலிசெயா நிற்கு ...... மதனாலும் 
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட     மதிசுடா நிற்கு ...... மதனாலும் 
இருகணால் முத்த முதிரயா மத்தி     னிரவினால் நித்த ...... மெலியாதே 
இடருறா மெத்த மயல்கொளா நிற்கு     மிவளைவாழ் விக்க ...... வரவேணும் 
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி     கலவிகூர் சித்ர ...... மணிமார்பா 
கனகமா ணிக்க வடிவனே மிக்க     கதிரகா மத்தி ...... லுறைவோனே 
முருகனே பத்த ரருகனே முத்தி     முதல்வனே பச்சை ...... மயில்வீரா 
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு     முறியவேல் தொட்ட ...... பெருமாளே.

வாசனை நீங்காததும், வெற்றியே பெறுவதுமான மலர்ப் பாணங்களை தொடுத்து, (கரும்பு) வில்லைக் கையில் வைத்து வலிமையுடன் நிற்கும் மன்மதனாலும், மதில்களைத் தாண்டி வரும் கிரணங்களைக் கொண்ட வட்ட வடிவமான சந்திரன் கதிர்களால் (இவளைச்) சுட்டுக்கொண்டு நிற்பதனாலும், இரண்டு கண்களிலிருந்தும் முத்துப் போன்ற கண்ணீர் சிந்தி, யாமங்கள்* தோறும் இரவில் தினமும் மெலியாதபடி, துன்பம் அடைந்து மிகவும் காம மயக்கம் கொண்டு நிற்கும் இந்தப் பெண்ணை வாழ்விக்க நீ வந்து அருள வேண்டும். யானைகள் கூடியுள்ள (வள்ளி) மலையில் அருமையான வேடப் பெண் வள்ளியுடன் சேர்ந்து இன்பம் துய்க்கும் அழகிய மணி மார்பனே, பொன், மாணிக்கம் போன்ற உருவத்தனே, சிறந்த கதிர்காமம் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, முருகனே, பக்தர்களுக்கு அருகில் இருப்பவனே, முக்தி தரும் முதன்மையானவனே, பச்சை மயில் வீரனே, விரைந்து வந்து மேல் எதிர்த்த பொல்லாத சூரன் கேடு உற்று அழிபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* யாமம் = மூன்று மணி நேரம். மாலையும் இரவும் சேர்ந்து மொத்தம் நான்கு யாமங்கள்.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், சந்திரன் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 646 - கதிர்காமம் 
ராகம் - குந்தல வராலி; தாளம் - அங்கதாளம் - 7 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தானதன தானத் ...... தனதான

மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும் 
மாதவமெ ணாமற் ...... றிரிவாரும் 
தீதகல வோதிப் ...... பணியாரும் 
தீநரக மீதிற் ...... றிகழ்வாரே 
நாதவொளி யேநற் ...... குணசீலா 
நாரியிரு வோரைப் ...... புணர்வேலா 
சோதிசிவ ஞானக் ...... குமரேசா 
தோமில் கதிர்காமப் ...... பெருமாளே.

பெண்களின் வசப்பட்டுத் திரிபவர்களும், சிறந்த தவத்தை நினைக்காமல் அலைபவர்களும், தீமைகள் விலகும்படி திருமுறையை ஓதிப் பணியாதவர்களும், கொடிய நரகத்திலே உழன்று கிடப்பார்கள். ஒலியும் ஒளியுமாக விளங்குபவனே, நல்ல அருட்குண சீலனே, வள்ளி, தேவயானை என்ற இரு தேவியரை மணந்த வேலனே, ஜோதியான சிவஞானத்தைத் தரும் குமரக் கடவுளே, குற்றமற்ற கதிர்காமத்தில் வாழும் பெருமாளே. 

பாடல் 647 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -

தனன தான தான தத்த தனன தான தான தத்த     தனன தான தான தத்த ...... தனதான

முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி     முனியு மார வார முற்ற ...... கடலாலே 
முடிவி லாத தோர்வ டக்கி லெரியு மால மார்பி டத்து     முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே 
வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும்     வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே 
விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற     விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும் 
கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த     கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா 
கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி     ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா 
அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க     அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே 
அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி     அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே.

மன்மதனுக்கு உரிய அன்பு முதிர்ந்த நட்புடன் விளங்கும் கடலாலும் (ஏனெனில் மன்மதனும், கடலும் இவளிடம் பிணங்கி உள்ளனர்), நிறைந்த அந்த முத்துக்களை வீசிக் கோபிக்கும் (அலைகளின்) பேரொலி பொருந்திய கடல் ஓசையாலும், அழிவு இல்லாததாய், ஒப்பற்ற (கடலின்) வடக்குப் பக்கத்தில் (ஊழித் தீயாகிய) வடவா முகாக்கினி போல் எரிவதாய், விஷம் நிறைந்து தோன்றிய இடமாகிய கடலில் முழுகி, விண்ணில் ஏறி கிரணங்களை மேலே வீசும் நிலவினாலும், மூங்கிலில் இடையர்கள் வாயை வைத்து இனிமையான ராகங்களை நெடு நேரம் வாசித்து எழுப்பும் இசையின் ஒலியினாலும், தமது (வசை கூறும்) தொழிலை விடாது செய்யும் தாய்மார்களினாலும் அழிவில்லாமல், உண்டாகும் காம போகமே நிரம்பி அளவு கடந்த ஆசை கொண்டுள்ள இந்த அழகிய பெண்ணை நீ தழுவ வந்தருள வேண்டும். கதிர்காமம் என்னும் பெரிய ஊருக்குள் ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே, தோகை அழகு வாய்ந்த மயில் வீரனே, கயல் மீன் போன்ற கண்களை உடையவள், கலவைச் சாந்து அணிந்த மார்பை உடையவள், விண்ணுலகத்தில் வீற்றிருந்தவள் ஆகிய ஒப்பற்றவளாகிய தேவயானையின் கணவனே, அதிரும்படியாக காலை வீசி நடனம் ஆடுகின்றவரும், வெற்றி வாய்ந்த (நந்தி) ரிஷபத்தின் மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமான் அறியும்படி, அருமையான ஞான உபதேசத்தை அவருக்கு அருளியவனே, எல்லா உலகங்களின் மீதும் உலவி வலம் வந்து, அசுரர் உலகத்தைப் பொடியாக்கி, தேவலோகத்தை வாழ வைத்த பெருமாளே. இப்பாடலின் ஒவ்வொரு அடியின் பிற் பாகங்கள் ஒன்று சேர, பிறிதொரு பாடல் அமைகின்றதைக் காணலாம். கடலாலே நிலவாலே மழியாதே வரவேணும் மயில்வீரா மணவாளா யருள்வோனே பெருமாளே. 
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது செவிலித் தாய் பாடியது.மன்மதன், கடல் அலைகள், நிலவு, குழல் ஓசை, மாதர்களின் வசைப் பேச்சு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 648 - கதிர்காமம் 
ராகம் - பீம்பளாஸ்; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த ...... தனதான

வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று     மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது 
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று     வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள் 
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து     கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான் 
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு     கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான் 
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்     பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா 
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற     பதமடியர் காண வந்த ...... கதிர்காமா 
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை     யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே 
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு     மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே.

யமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருகின்ற காலதூதர்கள் நாங்கள் யமனுடைய தூதர்கள் எனக் கூறி மடியில் கை போட்டுப் பிடிப்பவர்கள் போல நின்று என்னை விடாமல் தொடர்கின்றபோது (என்னைப் பற்றி) இவன் மயக்கமுடைய பொல்லாத வம்புக்காரன் என்றும், வஞ்சனைக்காரன் என்றும், வசைச் சொற்கள் கூறி என்னை நெருங்குவார்கள். ஆயுதங்களினால் என்னைச் சித்திரவதை செய்து, என் சதைகளைத் துண்டுதுண்டாகச் சேதித்து, இரும்பை உருக்கிய கரு நீரை என் வாயிலே விட்டு, கழுவின் முனையிலேயே கிட என்று என்னைக் கிடத்தி, என்னைத் துன்புறுத்தும் அந்த வேளையில் என் இடரைக் கண்டு, அடியேன் முன் விரைவில் ஓடோடி நீ வந்தருளவேண்டும். திருப்பரங்குன்றத்திலும், திருவுலா இடையறாது நிகழும் திருச்செந்தூரிலுள்ள சந்தன மலையிலும், இடும்பனால்* கொண்டுவரப்பட்ட பழநிமலையிலும் எழுந்தருளிய குமரேசக் கடவுளே, பல்லாயிரம் திருத்தலங்களிலும், பல கோடி மலைகளிலும் நிலையாக இருந்து, திருவடியைக் கண்டு அடியார்கள் நலம்பெற வந்த கதிர்காமனே, பாம்பையும், பிறைச் சந்திரனையும், பூளை தும்பை மலர்களையும், வில்வத்தையும், அருகம்புல்லையும், கொன்றைப்பூவையும், அணிகின்ற சடையர் சிவபிரான் தந்தருளிய முருகனே, பாவங்களை நீக்குபவரும், சிவாய என்ற மூன்றெழுத்துக்களை உடையவரும், சுகத்தைத் தருபவருமான சிவனாரின் குருநாதனே, நீயே கதி என்று நம்பியுள்ள அடியார்களை ஆட்கொள்ள வந்தருளிய பெருமாளே. 
* இடும்பன் சூரர்களின் போர்ப் பயிற்சி குரு. சிவ பக்தன். அகத்தியரின் ஆணைப்படி வடக்கே இருந்த சிவ கிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளையும் காவடியாகத் தூக்கி பொதிய மலைக்குச் செல்லும் வேளையில் முருகனின் லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத் தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை. இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருக தரிசனம் செய்யும் முறை ஏற்பட்டது.

பாடல் 649 - கதிர்காமம் 
ராகம் - ...; தாளம் -

தனத்த தானன தனத்த தானன     தனத்த தானன தனத்த தானன          தனத்த தானன தனத்த தானன ...... தனதான

தொடுத்த வாளென விழித்து மார்முலை     யசைத்து மேகலை மறைத்து மூடிகள்          துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர் 
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ     முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்          துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப் 
படுத்த பாயலி லணைத்து மாமுலை     பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்          கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே 
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை     வெளுத்து வாய்களு மலத்தி னாயென          பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ 
வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை     விடுத்து யாகமும் நடத்தி யேயொரு          மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே 
விதித்து ஞாலம தளித்த வேதனை     யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்          விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா 
அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி     நடுக்க மாமலை பிளக்க வேகவ          டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா 
அறத்தில் வாழுமை சிறக்க வேயறு     முகத்தி னோடணி குறத்தி யானையொ          டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.

செலுத்தப்பட்ட வாளாயுதம் என்று சொல்லும்படி விழித்து, மார்பிலுள்ள தனத்தை அசைத்து, புடவையைக் கொண்டு மறைத்து மூடும் மாதர்கள். துடித்து எதிரே புடவையைத் தளர்த்தி, (ஆண்களின்) நல்ல ஒழுக்கத்தைப் பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதர்கள். மகிழ்ச்சியாக ஹா என்று நகைத்து மேலே விழ, முடித்திருந்த நீண்ட கூந்தலை விரித்து, வாயிதழ் சிவந்த வாய்க்குள் வெற்றிலைச் சுருளை அடக்கிக்கொண்டு, காம ஆசையைக் கொடுக்கின்ற அந்த வழியிலே சென்று, படுத்த படுக்கையில் தழுவி, அழகிய தங்கள் மார்பை மார்போடு அழுத்தி, வாயிதழைக் கடித்து நாணத்தை அழித்த பாவிகளின் வலையில் உண்டாகிய நோய்ப் பிணியால் படுக்கை உற்று, பாயில் கிடப்பதால் உடல் வெளுத்து, வாய்களும் மலம் தின்னும் நாய் போல் நாற்றம் எடுத்து, பசியும் தாகமும் உற்று எடுத்திட்ட உயிருடன் அலைச்சல் உறுவேனோ? வெடுவெடுப்புடன் வந்த தாடகையின் கோபத்தை ஓர் அம்பைச் செலுத்தி ஒழித்து, (முனிகளின்) யாகத்தை நடத்தியும், ஒரு சிறப்பான நீண்ட (சிவதனுசு என்ற) வில்லை முறித்தவரும் ஆகிய (ராமனாம்) திருமாலின் மருகனே, படைத்து உலகத்தைத் தந்த பிரமனைக் கலங்க வைத்து, (அவனுடைய) ஒரு தலையை தமது கையில் கபாலமாகக் கொண்டு திரிந்தவரும், நெற்றிக் கண்ணை விழித்து மன்மதனை எரித்தவரும், தந்தையுமாகிய சிவபெருமானின் குருநாதனே, வரிசையாயுள்ள, விஷம் கொண்ட, ஆயிரம் படங்களைக் கொண்ட ஆதிசேஷன் நடுக்கம் கொள்ளவும், கிரெளஞ்ச மலை பிளவுபட்டுத் தூளாகவும், வஞ்சக அரக்கர்களின் பெரிய தலைகள் பதைக்கவும் சண்டை செய்த மயில் வீரனே, அறங்களை வளர்த்து வாழ்ந்த உமா தேவியார் மகிழ்ச்சியுற, ஆறு திருமுகங்களுடன் விளங்கி அழகிய குறத்தியாகிய வள்ளியுடனும், யானை வளர்த்த தேவயானையோடும் அருக்கொணாமலை* என்னும் தலத்தில் களிப்புடன் உலாவிய பெருமாளே. 
* அருக்கொணாமலை இலங்கையில் கதிர்காமத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 650 - திருக்கோணமலை 
ராகம் - ...; தாளம் -

தனத்த தானன தனத்தான தானன     தனத்த தானன தனத்தான தானன          தனத்த தானன தனத்தான தானன ...... தனதான

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி 
மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்     நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல          வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக் 
கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு     பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை          கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே 
கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும் 
மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே 
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே 
நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்     திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே 
நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.

தக்க விலை பெறும் பொருட்டு, உடலில் அழகிய வடங்களும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து, ஆடையுடனும் ரத்தின ஆபரணங்களுடனும் மினுக்குகின்ற விலைமாதர்களிடம் காம மயக்கில் மூழ்கி, மோகத்தில் அழுந்தி, பெரிய காம லோலன் என்று உலகில் உள்ளவர்கள் என் எதிரே சிரிப்பதற்காகவே இந்த உடலை எடுத்து, துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்து களைப்புக் கொள்ளும் கொடியவனாகிய என்னை, கலக்க நெஞ்சினனாய், (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலக் கூடாகிய இந்த உடலில் நிரம்ப நோய்களுக்குள்ளாகி தவிக்க வைக்காமல், உன்னை பாட்டில் அமைத்து ஈடேறச் செய்யும் ஒப்பற்ற அருள் செல்வமாகிய வாழ்வைத் தந்து, நற்கதியை தருகின்ற நாதன் நீ, உன்னைத் தேடி உனது திருப்புகழை உரைக்கும் நாய் போன்ற சிறியேனை உன் அருள் பார்வையால் உன் திருவடியைக் கூடுவதற்காகவே சிறந்ததான தாய் அன்பை எனக்கு அருள் புரிய வேண்டும். எல்ல மலைகளுக்கும் தலைவனே, சிவகாமி அம்மையின் தலைவராகிய சிவபெருமானின் அழகிய குமாரனே, ஆறு திரு முகங்களை உடைய குருமூர்த்தியே, வடிவழகுள்ள மாதாகிய குறப் பெண் வள்ளி மகிழும் வேளே, வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள், அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே, அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில் விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே, நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும் கடல் வற்றிப் போய் அழிய, திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு (பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி, நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும் பெருமாளே. 
* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று - திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை.கிளிப்பாடு பூதி என்பது திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.