LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[651 -700]

ராகம் - சந்த்ர கெளன்ஸ்; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2
தான தத்தன தான தானன
     தான தத்தன தான தானன
          தான தத்தன தான தானன ...... தனதான
தார ணிக்கதி பாவி யாய்வெகு
     சூது மெத்திய மூட னாய்மன
          சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக 
தாப மிக்குள வீண னாய்பொரு
     வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்
          தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப் 
பூர ணச்சிவ ஞான காவிய
     மோது தற்புணர் வான நேயர்கள்
          பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப் 
பூசி மெய்ப்பத மான சேவடி
     காண வைத்தருள் ஞான மாகிய
          போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே 
வார ணத்தினை யேக ராவுமு
     னேவ ளைத்திடு போதுமேவிய
          மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே 
வாழு முப்புர வீற தானது
     நீறெ ழப்புகை யாக வேசெய்த
          மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே 
கார ணக்குறி யான நீதிய
     ரான வர்க்குமு னாக வேநெறி
          காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா 
கான கக்குற மாதை மேவிய
     ஞான சொற்கும ராப ராபர
          காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே.
இந்த உலகிலேயே அதிக பாவியாய், மிக்க சூது நிறைந்த மூடனாய், மனத்திலே அழுந்திய திருட்டுப் புத்தியை உடையவனாய், மிகுந்த காம மயக்கத்தில் தாகம் மிக்க வீணனாய், போருக்கு உற்ற வேல் போன்ற கண்களை உடைய பொது மகளிர் தாம் பிழைப்பதற்கு உதவும் செல்வத்தை தேடித் தரும் நினைவையே கொண்டு, பரிபூரணமான சிவஞான நூல்களை ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள் பூசுகின்ற மகிமை வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய (புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை திருநீற்றைப் பூசவைத்து, உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை தரிசனம் செய்வித்து திருவருள்மயமான ஞானம் என்ற தூய அறிவும் எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக. கஜேந்திரன் என்ற யானையை முதலை முன்னொருநாள் வளைத்து இழுத்த போது அங்கு வந்து உதவிய மாயவன் திருமாலுக்கு மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே, பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின் பொலிவெல்லாம் சாம்பலாகப் போகுமாறு புகை எழச் செய்த சிறந்த திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே, யாவற்றிற்கும் மூல காரணனாகவும், இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான் சிவபிரானது சந்நிதிகளில் அறநெறியை ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளி வேலனே, காட்டில் குறப்பெண் வள்ளியை விரும்பி அடைந்த ஞான மொழி பேசும் குமரனே, யாவர்க்கும் மேலானவனே, காசித்தலத்தில்* பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.
பாடல் 652 - காசி 
ராகம் - ...; தாளம் -
தந்தத் தனதன தானன தானன
     தந்தத் தனதன தானன தானன
          தந்தத் தனதன தானன தானன ...... தனதான
மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்
     பங்கப் படமிசை யேபனி போல்மதம்
          வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி 
வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல
     பந்துப் பனைபழ மோடிள நீர்குட
          மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே 
திங்கட் பதுசெல வேதலை கீழுற
     வந்துப் புவிதனி லேமத லாயென
          சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ...... மருள்கூரச் 
செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல
     பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல
          சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ 
அங்கைத் தரியென வேயொரு பாலக
     னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை
          அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி 
அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி
     சங்குத் திகிரிக ரோனரி நாரவ
          ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே 
கங்கைச் சடைமுடி யோனிட மேவிய
     தங்கப் பவளொளி பால்மதி போல்முக
          கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா 
கந்துப் பரிமயில் வாகன மீதிரு
     கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்
          கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே.
ஒரு பெண்ணும் அவளுடைய கணவனும் வாழ்ந்து பொருந்தி, காம இச்சை என்னும் ஒரு உந்துதல் தம் மீது அடைய, (அதன் விளைவாக) பனி போல சுக்கிலம் தோன்றி உள்ளே பரவ, பிரமனது அருள் கூடி (கருவானது) வண்டு தடித்து வளருவது போல் தடித்து, நாள் பல செல்ல, பந்தின் அளவாகி, பனம் பழத்தின் அளவாகி, இள நீர் போலவும், குடம் போலவும் நெருங்கி வளர்ந்து, பின்னும் பல பல வளர்ச்சியுடன், புணர்தல் செய்த அந்த இடத்தின் வழியாக, மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து பூமியில் பிறந்து, மகன் எனப் பேர் பெற்று, மனதுக்கு இனிய குழந்தையாகி, தாயும் தந்தையும் அன்பு மிகுந்து ஆதரிக்க, செவ்விய பொலிவுள்ள பருத்த முலையில் பாலைக் குடிக்கின்ற நாட்கள் பல செல்ல, பின்பு அழகிய தவழ் நடை நாட்களும் செல்ல, பல விதமான விஷம் போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அழிந்து போவேனோ? உள்ளங்கை நெல்லிக் கனி போல எளிதில் புலப்படுவான் (இறைவன்) என்று ஒரு பிள்ளையாகிய பிரகலாதன் கூற, இன்ப அன்புடனே ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்டு நரசிங்கமாய்த் தோன்றி, இரணியாசுரனுடைய உடலைக் கிழித்து, தேவர்களுக்கு உதவி செய்த பெருமான், தம்மை விட்டு நீங்காத ஆபரணங்களான பஞ்ச ஜன்யம் என்னும் சங்கும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக் கரத்தில் கொண்டவன், (காவிரி, கொள்ளிடம் என்னும்) நதியின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் தலத்தில் (ஆதிசேஷன் என்னும்) பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் மருகனே, கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம், பவளம் இவைகளின் ஒளியைக் கொண்டவளும், பால் நிறத்து வெண் மதியைப் போல் திரு முகம் கொண்டவளும், இருள் கொண்ட கூந்தலை உடையவளுமாகிய பரமேஸ்வரி அருளிய குழந்தையே, பாய வல்ல குதிரை போன்ற மயில் வாகனத்தின் மேல், இரண்டு மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் ஆசையோடு மகிழ்கின்றவனே, கங்கை நதிக் கரையில் உள்ள தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 653 - காசி 
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1
தான தந்தன தானன ...... தனதான
     தான தந்தன தானன ...... தனதான
வேழ முண்ட விளாகனி ...... யதுபோல
     மேனி கொண்டு வியாபக ...... மயலூறி 
நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி
     நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே 
மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற
     வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா 
காள கண்ட னுமாபதி ...... தருபாலா
     காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.
வேழம்* என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல உள்ளிருக்கும் சத்து நீங்கிய உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி, தினமும் அறிவின்மை மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து, நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக. முன்பு சமணக் குருக்கள் கழுவில் ஏறி இறக்கும்படியாக வாது செய்து வென்ற (சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே, விஷமுண்ட கண்டனாகிய உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே, கங்கைநதிக் கரையிலுள்ள காசிநகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வேழம் என்ற தேரை விளாம்பழத்துக்குள் பாய்ந்தால், பழம் உள்ளீடு இல்லாமல் வெறும் ஓடாகப் போய்விடும்.
** காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.
பாடல் 654 - மாயாபுரி 
ராகம் - பந்துவராளி; தாளம் - அங்கதாளம் - 8 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனன தனந்த தானன ...... தனதான
     தனன தனந்த தானன ...... தனதான
சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம்
     சிதறி யலைந்து போவது ...... செயலாசை 
மகர நெருங்க வீழ்வது ...... மகமாய
     மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே 
அகர நெருங்கி னாமய ...... முறவாகி
     அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக் 
ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை
     கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.
சிவாயநம என்ற பஞ்சாட்சரத்திலுள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடியது சிவஞானமாகும். அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும். மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை. உன்னை தியானித்து அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக. (வீரமஹேந்திரபுரத்தின்)* வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு, மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு சூரன்அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று, ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும் உன்னிடம் தஞ்சம் புக (சூர சம்ஹாரம் செய்து) அவர்களுக்குக் கருணை பொழிந்தனையே. மாயாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* சூரனது அரசாட்சியில் அவனது தலைநகராம் வீரமஹேந்திரபுரத்தின் வழியாகச் செல்லும் சூரியன் தனது உக்ரத்தைக் குறைத்துக்கொள்ள சூரன் ஆணையிட்டதால் சூரியன் பட்ட துன்பம் முருகனால் தீர்த்துவைக்கப்பட்டது.
** மாயாபுரி முக்தித் தலங்களில் ஒன்றான ஹரித்துவாரம் - உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.
பாடல் 655 - வயிரவிவனம் 
ராகம் - ஸரஸ்வதி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
     மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே 
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
     மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே 
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
     னிருகர மிகுத்த பார ...... முருகாநின் 
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
     பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே 
சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
     சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா 
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
     துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா 
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
     வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி 
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
     வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.
அரியதான கயிலை மலையை அசைத்து எடுக்க முயன்ற வீரனான ராவணன் நெரிபடும்படி தமது விரல்களை ஊன்றிய சிவபிரானின் இடது பாகத்தில் உள்ள அன்னை பார்வதி பெற்றருளிய குழந்தையே, அலை வீசும் கடலை அணையிட்டு அடைத்த ஸ்ரீராமன் மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும், அழகிய மயிலை வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், மருமகனே, சூரியனது ஒளி தம்மிடத்தே விளங்கும் முகங்கள் ஆறும், வரிசையான தோள்களும், பன்னிரண்டு கரங்களும் உடையவனே, மிகுந்த பெருமை வாய்ந்த முருகனே, உன் திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும் கருத்தை உடைய அடியார்களின் தாள்களைப் பணிந்திடவும் எனக்கு ஞானத்தைத் தந்தருள்வாயாக. வேதங்களை ஓதும் பிரமன் சொன்ன மொழிகளுள் முதலாவதான ஓம் என்ற பிரணவத்தின் பொருளை எனக்கு நீ சொல்லுக என தந்தை சிவனார் கேட்க அவ்வாறே பொருள் உரைத்த ஞான குரு நாதனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செழிப்புடன் வாழவும், இருந்த சிறையினின்றும் தேவர்கள் யாவரும் மீளவும், வெட்டுண்டு அசுரர்கள் இறந்தொழியவும், வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு ஸரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இது பஞ்சாப் மாநிலத்தில் ஸரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாடல் 656 - வெள்ளிகரம் 
ராகம் - சாமா; தாளம் - அங்கதாளம் - 15 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதானா
அடலரி மகவு விதிவழி யொழுகு
     மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும் 
அலைகட லுலகி லலம்வரு கலக
     வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி 
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ
     டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர 
எனதற நினது கழல்பெற மவுன
     வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே 
வடமணி முலையு மழகிய முகமும்
     வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும் 
மரகத வடிவு மடலிடை யெழுதி
     வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா 
விடதர திகுணர் சசிதரர் நிமலர்
     வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா 
விகசித கமல பரிபுர முளரி
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.
வலிமை வாய்ந்த திருமாலின் பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்) குடிலாகிய உடலுடன் நாள்தோறும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, வருத்தங்களுக்கு ஆளான அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் உலகத்தில் ஈடுபடுதலில் இருந்து விடுபடவும், மயக்கம் தீரவும், எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மோன வரம்பைக் குறிப்பதாகிய ஓர் உபதேசத்தை அருள்புரிவாயாக. (வள்ளியின்) மணி வடம் அணிந்த மார்பும், அழகான முகமும், வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும், படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே, விஷத்தைக் கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில் தரித்தவர், பரிசுத்தமானவர், வெள்ளி மலையாகிய கயிலையில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே, மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே, வெள்ளிகரம்* என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
பாடல் 657 - வெள்ளிகரம் 
ராகம் - மாயாமாளவகெளளை ; தாளம் - அங்கதாளம் - 15 
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதன தனன தனதன தனன
     தய்ய தனத்த தந்த ...... தனதான
சிகரிக ளிடிய நடநவில் கலவி
     செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல் 
திருமுக சமுக சததள முளரி
     திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல் 
அகிலடி பறிய எறிதிரை யருவி
     ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன் 
றகிலமு முணர மொழிதரு மொழியி
     னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ 
நிகரிட அரிய சிவசுத பரம
     நிர்வச னப்ர சங்க ...... குருநாதா 
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய
     நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம 
வெகுமுக ககன நதிமதி யிதழி
     வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே 
விகசித கமல பரிமள கமல
     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.
அஷ்ட கிரிகளும் பொடிபடும்படியாக நடனமாடும் கலாப மயில், அன்றலர்ந்த புதிய கடப்பமலர், சிறிய வாள், வேல், ஆறு திருமுகங்களின் சேர்க்கையாம் நூறு இதழ்கள் உள்ள தாமரைகள், திவ்யமான கரத்திலே பொருந்திய போர் செய்யவல்ல சேவல், (இவையெல்லாம் விளங்க) அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும் அலைவீசும் அருவிகள் உள்ள, நெல் விளையும் வள்ளிமலையின் வஞ்சிக்கொடியனன வள்ளியின் கணவா, என்று உலகெலாம் உணரக் கூறும் சொற்களால் அல்லது உனது அழகிய திருவடிகளைப் பெற முடியுமோ? ஒப்பிடற்கு அரியரான சிவபிரானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாததான பிரணவ உபதேசத்தைச் செய்த குருநாதனே, பசுக்கூட்டங்களைக் கொண்ட இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின்* கீழே வீற்றிருந்த அழகனே, ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும், பிறையையும், கொன்றையையும், வில்வத்தையும் சடையில் முடித்த நம் சிவபெருமானின் பெருஞ் செல்வமே, மலர்ந்த தாமரைகளும், நறுமணம் மிகுந்த தாமரைகளும் நிறைந்த வெள்ளிகரத்தில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* சுவாமிமலைக்கு அருகே பூமிதேவியானவள் பார்வதியின் சாபத்தால் பலகாலம் இருந்து, ஷண்முகனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். முருகனை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே நெல்லிமரமாக நின்றாள் - சுவாமிமலை மகாத்மியம்.
** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
பாடல் 658 - வெள்ளிகரம் 
ராகம் - ...; தாளம் -
தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான
குவலய மல்கு தவலிகள் முல்லை
     குளிர்நகை சொல்லு ...... முதுபாகு 
குழையிள வள்ளை யிடைசிறு வல்லி
     குயமுலை கொள்ளை ...... விழைமேவிக் 
கவலைசெய் வல்ல தவலரு முள்ள
     கலவியில் தெள்ளு ...... கவிமாலை 
கடிமல ரைய அணிவன செய்ய
     கழலிணை பைய ...... அருள்வாயே 
தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு
     தனியுழை புள்ளி ...... யுடனாடித் 
தருபுன வள்ளி மலைமற வள்ளி
     தருதினை மெள்ள ...... நுகர்வோனே 
அவநெறி சொல்லு மவரவை கொல்லு
     மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே 
அடையலர் செல்வ மளறிடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.
உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை, பேச்சும் முதிர்ந்த வெல்லம் போன்றது, காது இளமையான வள்ளிக் கொடி போன்றது, இடுப்பு சிறிய கொடி ஒத்தது, இளமை வாய்ந்த மார்பகங்கள் பூரித்து உள்ளன (என்று எல்லாம் கூறி) விருப்பம் மிகவும் அடைந்து, மனக் கவலை தரத்தக்க குற்றம், குறை உள்ளவர்களுடன் நான் இணைந்திருந்த போதும், தெளிந்த கவி மாலைகளையும், நறு மணம் உள்ள மலர் மாலைகளையும் அழகுற அணிவிப்பதற்காக உனது திருவடி இணைகளை மெல்ல எனக்கு அருள் புரிவாயாக. முன்பு, தவ நெறியில் தியானித்து இருந்த சிவ முனிவரின் (தவத்தைக் கலைத்துத்) துள்ளிச் சென்ற, ஒப்பற்ற, புள்ளி மானுடன் கலந்து பெற்றெடுத்தவளும், தினைப்புனத்தில் இருந்தவளும், அந்த வள்ளி மலையில் இருந்த வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவளுமான வள்ளி கொடுத்த தினை மாவை மெதுவாக உண்டவனே, பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி வந்த சமணர்களின் கூட்டத்தை (கழுவில்) மாய்த்த (திருஞானசம்பந்தராக வந்து) அழகு வாய்ந்த வெள்ளிகரம்* என்னும் நகரில் வாழும் செல்வனே, பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் எல்லாம் கடல் நீரில் மூழ்கி அழியும்படி சண்டை செய்ய வல்ல பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 659 - வெள்ளிகரம் 
ராகம் - ...; தாளம் -
தனதன தய்ய தனதன தய்ய
     தனதன தய்ய ...... தனதான
பொருவன கள்ள இருகயல் வள்ளை
     புரிகுழை தள்ளி ...... விளையாடும் 
புளகித வல்லி யிளகித வல்லி
     புரியிள முல்லை ...... நகைமீதே 
உருகிட வுள்ள விரகுடை யுள்ள
     முலகுயி ருள்ள ...... பொழுதேநின் 
றுமைதரு செல்வ னெனமிகு கல்வி
     யுணர்வொடு சொல்ல ...... வுணராதோ 
மருவலர் வள்ளி புரமுள வள்ளி
     மலைமற வள்ளி ...... மணவாளா 
வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை
     மரகத நல்ல ...... மயில்வீரா 
அருவரை விள்ள அயில்விடு மள்ள
     அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே 
அடையலர் செல்வ மளறிடை செல்ல
     அமர்செய வல்ல ...... பெருமாளே.
போர் செய்யவல்ல கள்ளத்தனம் உள்ள கயல் மீன் போல் இரண்டு கண்கள் வள்ளிக் கொடி போன்ற காதுகளைத் தாக்கி விளையாடுகின்ற புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை வாய்ந்த, இளம் பெண்கள் புன்னகை புரியும் போது தெரியும் முல்லை அரும்பு போன்ற பற்களைக் கண்டு, உருகத் தக்க உற்சாகத்தை அடையும் என் மனம், இவ்வுலகில் உயிர் இருக்கும் பொழுதே நிலைத்து நின்று உமாதேவியார் பெற்றெடுத்த செல்வனே என்று உன்னை மிகுந்த கல்வி உணர்ச்சியோடு சொல்லுவதற்குத் தெரிந்து கொள்ளாதோ? வாசனை மலர்கள் உள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளி மலையில் இருக்கும் குறப்பெண் வள்ளியின் கணவனே, பெரிதாக உள்ள பூமியின் முழு எல்லையையும் (பறந்தே) அளவிட்ட, பழைய மரகதப் பச்சை நிறமுள்ள அழகிய மயில் மீதேறும் வீரனே, அரிய கிரவுஞ்ச மலை உடைபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய போர் வீரனே, அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளி நகரில் வாழும் செல்வமே, பகைவர்களின் செல்வம் எல்லாம் சேற்றிடையே படிந்து அழியுமாறு போர் செய்ய வல்ல பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 660 - வெள்ளிகரம் 
ராகம் - ...; தாளம் -
தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான
கள்ள முள்ள வல்ல வல்லி
     கையி லள்ளி ...... பொருளீயக் 
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு
     கல்வி செல்வர் ...... கிளைமாய 
அள்ளல் துள்ளி ஐவர் செல்லு
     மல்லல் சொல்ல ...... முடியாதே 
ஐய ரைய மெய்யர் மெய்ய
     ஐய செய்ய ...... கழல்தாராய் 
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு
     வள்ளி கிள்ளை ...... மொழியாலே 
மைய லெய்து மைய செய்யில்
     வையில் வெள்வ ...... ளைகளேற 
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்
     வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே 
வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.
கள்ளத் தனம் வாய்ந்த, சாமர்த்தியமான ஒரு விலைமகளின் கையிலே (நான்) அள்ளிப் பொருள்களைக் கொடுப்பதால், (என்னுடைய) நவரத்தினக் கற்களும், நெற் குவியல்களும், வெள்ளிப் பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள சுற்றத்தார்களும், எல்லாம் அழிந்து விலக, (மாயைச்) சேற்றிலிருந்து குதித்து ஐம்புலன்கள் செலுத்துகின்ற துன்பம் விவரிக்க முடியாது. முனிவர்களுக்கு முனிவனே, மெய்யர்க்கு மெய்யனே, அழகிய, சிவந்த உனது திருவடியைத் தாராய். வள்ளலே, புள்ளிகளை உடைய பெண் மான் (லக்ஷ்மி) ஈன்ற வள்ளி நாயகியாகிய கிளியின் மொழிகளைக் கேட்டு, மோகம் கொண்ட ஐயனே, வயல்களில், புல்லில் வெள்ளைச் சங்குகள் நிறைந்திட, வயலில் உழவர்கள் மெதுவாக அறுவடை செய்த நெல் மிக்க உள்ள வெள்ளிகர* நகரத்தில் வாழ்பவனே, விரும்புதற்குரிய (மேரு) மலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு, பிரணவ மொழியின் பொருளை (அவருக்குக் குருவாயிருந்து) வெற்றியுடன் மொழிய வல்ல பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 661 - வெள்ளிகரம் 
ராகம் - .......; தாளம் -
தய்ய தய்ய தய்ய தய்ய
     தய்ய தய்ய ...... தனதான
தொய்யில் செய்யில் நொய்யர் கையர்
     தொய்யு மைய ...... இடையாலுந் 
துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்
     சொல்லு கள்ள ...... விழியாலும் 
மைய செவ்வி மவ்வல் முல்லை
     மல்கு நல்ல ...... குழலாலும் 
மையல் கொள்ள எள்ளல் செய்யும்
     வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ 
செய்ய துய்ய புள்ளி நவ்வி
     செல்வி கல்வ ...... ரையிலேனல் 
தெய்வ வள்ளி மையல் கொள்ளு
     செல்வ பிள்ளை ...... முருகோனே 
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய
     வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே 
வெய்ய சைய வில்லி சொல்லை
     வெல்ல வல்ல ...... பெருமாளே.
மார்பின் மீது சந்தனத்தால் எழுதினாலே நெகிழ்ந்து தளர்பவர்கள் போல பாசாங்கு செய்யும் கீழ் மக்களான விலைமாதரின் இளைத்துள்ள, வியக்கத் தக்க (நுண்ணிய) இடையாலும், எழுந்து பாய்ந்து வள்ளைக் கொடிபோன்று காது வரை நீளும், மனத்தில் நினைந்துள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும், திருட்டுக் கண்களாலும், மை போன்று கரு நிறம் கொண்டதும், செம்மை வாய்ந்த காட்டு மல்லிகை, முல்லை நிறைந்துள்ள நல்ல கூந்தலாலும், காம இச்சை கொள்ளும்படியாக (என்னை) இகழ்கின்ற பெண்களின் பேச்சுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ? செந்நிறத்தவனே, தூயவனே, பெண் மான் போன்ற லக்ஷ்மியின் குமாரியும், கல் நிறைந்த வள்ளி மலையில் தினைப் புனத்தைக் காவல் செய்தவளுமான தெய்வ வள்ளி மேல் மோகம் கொண்ட செல்வப் பிள்ளையான முருகனே, மெய்யர்க்கு மெய்யனே, பொய்யர்க்குப் பொய்யனே, கள்ளம் இல்லாத நகராகிய வெள்ளிகரம் என்னும் தலத்தில் வாழும் செல்வனே, விரும்பத் தக்க கயிலை மலை வாசியாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை இன்னதென்று விளக்கி வெற்றியைக் கொண்ட பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 662 - வெள்ளிகரம் 
ராகம் - குமுதக்ரியா; தாளம் - ஆதி
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான
இல்லையென நாணி யுள்ளதின் மறாம
     லெள்ளினள வேனும் ...... பகிராரை 
எவ்வமென நாடி யுய்வகையி லேனை
     யெவ்வகையு நாமங் ...... கவியாகச் 
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத
     தொல்லைமுத லேதென் ...... றுணரேனைத் 
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது
     துய்யகழ லாளுந் ...... திறமேதோ 
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     மையவரை பாகம் ...... படமோது 
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்
     வள்ளிமலை வாழுங் ...... கொடிகோவே 
வெல்லுமயி லேறு வல்லகும ரேச
     வெள்ளிலுட னீபம் ...... புனைவோனே 
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.
இல்லை என்று கூற வெட்கப்பட்டு, உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல், ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து கொடுக்காதவர்களை, வெறுக்கத்தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து பிழைக்கும் வழி இல்லாத என்னை, எந்த வகையிலாவது உன் திருநாமங்களைக் கவிதையாக அமைத்துச் சொல்லும் அறிவில்லாத என்னை, முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள் இன்னது என்று உணரும் அறிவில்லாத என்னை, இளைத்துத் துவளும் உடம்பைப் போற்றும் பொய்யனாகிய என்னை, புறக்கணித்து விட்டுவிடாமல் பரிசுத்தமான உன் திருவடிகளால் ஆண்டருளும் வழி ஏதேனும் உண்டோ, யான் அறியேன். வலிமை பொருந்திய அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும், குற்றமுள்ள கிரெளஞ்சகிரி கூறுபட்டழிய மோதியவனே, இருண்ட சோலைகள், செவ்விய குளிர்ந்த மலைகள் உடைய வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளியின் மணாளனே, வெல்லும் திறல் படைத்த மயில் மீது ஏறவல்ல குமரேசா, விளாத் தளிருடன் கடப்பமலரை அணிபவனே, வெண்ணிற அழகிய மாடங்கள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய வெள்ளிகரம் என்ற வெள்ளிநகரில் அமர்ந்த பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
பாடல் 663 - வெள்ளிகரம் 
ராகம் - ....; தாளம் -
தய்யதன தான தய்யதன தான
     தய்யதன தான ...... தனதான
பையரவு போலு நொய்யஇடை மாதர்
     பையவரு கோலந் ...... தனைநாடிப் 
பையலென வோடி மையல்மிகு மோக
     பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன் 
உய்யவொரு கால மையவுப தேச
     முள்ளுருக நாடும் ...... படிபேசி 
உள்ளதுமி லாது மல்லதவி ரோத
     உல்லசவி நோதந் ...... தருவாயே 
வையமுழு தாளு மையகும ரேச
     வள்ளிபடர் கானம் ...... புடைசூழும் 
வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
     மையுததி யேழுங் ...... கனல்மூள 
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
     வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே 
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.
படம் கொண்ட பாம்பைப் போன்ற நுண்ணிய இடையை உடைய விலைமாதர்கள் சாவகாசமாகச் செய்து கொள்ளும் அலங்காரங்களை விரும்பி அற்பமான பையன் என்னும்படி ஓடி மோகம் மிக்க காமக் கடலில் விழுகின்ற, தனித்து நிற்கும் நாய் போன்றவனாகிய நான் பிழைப்பதற்கு ஒரு காலத்தில், ஐயனே, உமது உபதேசத்தை என் மனம் உருகி விரும்பும்படி ஓதி, உள்ளது என்றும் இல்லாதது என்றும், (இவை இரண்டும்) அல்லாததும் மாறுபாடு இல்லாததும், உள்ளக் களிப்பை தருவதும் ஆகிய வியப்பைத் தந்து அருளுக. உலகம் முழுவதும் ஆள்கின்ற ஐயனே, குமரேசனே, வள்ளிக் கொடி படர்ந்துள்ள காடுகள் பக்கத்தில் சூழ்ந்துள்ள வள்ளி மலையில் வாழ்கின்ற வள்ளி நாயகியின் கணவனே, கரிய கடல்கள் ஏழிலும் நெருப்பு எழ, கொடிய அசுரத் தலைவர்கள் (அவர்கள் இருந்த கிரவுஞ்சம், ஏழு கிரி ஆகிய) மலைகளுடன் மாண்டு விழ, வெற்றி கொண்ட வேலாயுதத்துடன் திருவிளையாடல் புரிந்தவனே, வெண்ணிறத்து அழகிய மாடங்கள் நிறைந்த, லக்ஷ்மிகரம் பொருந்திய வெள்ளி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தின் மேற்கே 12 மைலில் உள்ளது.
பாடல் 664 - வெள்ளிகரம் 
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா ; தாளம் - அங்கதாளம் - 23 1/2 
தகதிமிதகதிமி-4, தகதிமி தகதிமி-4 
தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 
தகதிமிதகதிமிதகதிமிதக-7, தகிடதகதிமி-3 1/2
தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த
     தானாதன தானந் தானன ...... தந்ததான
வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று
     வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும் 
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து
     மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே 
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று
     லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும் 
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து
     நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான் 
கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த
     கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக் 
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து
     ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள 
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற
     நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே 
விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த
     வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.
தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய வள்ளியின் தினைப்புனத்தில் போய் நின்று கொண்டு, நீ என்னுடன் வருவாயாக, என் ஊர் (திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல்), என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான் உள்ளது, என்று கூறி, ஒரு சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து, வள்ளி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல்* ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே, இதோ இவ்வுணவு இனிப்புடன் கலந்து இருப்பதைப் பார் என்று கூறிய வேடுவன் கண்ணப்பன் சேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று (கண்ணில் ரத்தத்துடன்) திருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே, எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும், பழைய நூல் திருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே (மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால், ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கூடி நூறாயிர பேதமாக** வருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான். (கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும் சங்கும், நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய பஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும், நந்த கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ உரலோடு கட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும் கள்வனும், மிகவும் பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக வளர்ந்து கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி மகா விரதசீல வாமனனாய் பகிரங்கமாக எதிரில் நின்றவனும் ஆகிய நாராயண மூர்த்தியாம் உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே, விளைச்சல் உள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழ்ந்தாடும் வெள்ளிநகர்*** என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதனே, உன்னைத் துதிக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே. 
* மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** சம்பந்தர் தேவாரத்தின்படி சாதம் (பிறப்பு) 84 நூறாயிரம் வகையாகும். ஊர்வன - 11, மானிடம் - 9, நீர்வாழ்வன - 10, பறவைகள் - 10, மிருகங்கள் - 10, தேவர்கள் - 14, தாவரங்கள் - 20, ஆக 84 நூறாயிரம் (8,400,000).
*** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.
பாடல் 665 - திருவல்லம் 
ராகம் - ....; தாளம் -
தனதன தானந் தனதன தானந்
     தனதன தானந் ...... தனதான
நசையொடு தோலுந் தசைதுறு நீரும்
     நடுநடு வேயென் ...... புறுகீலும் 
நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்
     றுறநடை யாருங் ...... குடிலூடே 
விசையுறு காலம் புலனெறி யேவெங்
     கனலுயிர் வேழந் ...... திரியாதே 
விழுமடி யார்முன் பழுதற வேள்கந்
     தனுமென வோதும் ...... விறல்தாராய் 
இசையுற வேயன் றசைவற வூதும்
     எழிலரி வேழம் ...... எனையாளென் 
றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்
     இடமிமை யாமுன் ...... வருமாயன் 
திசைமுக னாருந் திசைபுவி வானுந்
     திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர் 
தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்
     திருவல மேவும் ...... பெருமாளே.
ஈரத்துடன் தோலும் மாமிசமும் அடைந்துள்ள நீரும் இடையிடையே எலும்புகளைப் பூட்டியுள்ள இணைப்புக்களும் நலம் உறும் வண்ணம் பொருந்தி ஒன்று சேர, இரண்டு கால்களும் நன்கு இணைக்கப் பெற்று நடை நிரம்பிய குடிசையாகிய இந்த உடலுக்குள், வேகமான வாழ்க்கை செல்லும் காலத்தில், ஐம்புலன்களின் வழியாக கொடிய தீப் போன்றதும், மதம் நிறைந்த யானை போன்றதுமான அந்த ஐம்பொறிகளும் அலையாமல், உனது திருவடியில் விழும் அடியார்களின் முன், குற்றம் இல்லாத வகையில், வேளே கந்தனே என்று ஓதும் சக்தியைத் தந்தருளுக. முன்பு, இனிய இசை பொருந்தி அசையாமல் நிற்கும்படி, புல்லாங்குழலை ஊத வல்ல அழகிய கண்ணனும், கஜேந்திரனாகிய யானை என்னை ஆட்கொள்வாய் ஆதிமூலமே என்று துன்பத்துடனும் பேரன்புடனும் கூச்சலிட்டு அழைத்த இடத்துக்கு, கண்ணை இமைக்கும் நேரத்தில் வந்து உதவிய மாயனுமாகிய திருமாலும், நான் முகனும், பல திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், வானுலகத்தில் உள்ளவர்களும் வலம் வந்து சூழ வாழ்கின்ற சிவபெருமானுடைய பழைய ஊரும், மாதர்கள் வந்து அருமையான நடனம் புரியும் ஊருமாகிய திருவ (ல்) லத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவல்லம் வேலூருக்கு அருகில் உள்ளது. திருமாலாலும் பிரமானாலும் சிவன் வலம் செய்யப்பெற்று பூஜிக்கப்பட்டதால் திருவலம் என்ற பெயர் வந்தது.
பாடல் 666 - வேலு஡ர் 
ராகம் - ....; தாளம் -
தனன தாத்தன தானா தானன
     தனன தாத்தன தானா தானன
          தனன தாத்தன தானா தானன ...... தந்ததான
அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்
     ரசனை காட்டிக ளீயார் கூடினும்
          அகல வோட்டிகள் மாயா ரூபிகள் ...... நண்புபோலே 
அசட ராக்கிகள் மார்மே லேபடு
     முலைகள் காட்டிகள் கூசா தேவிழும்
          அழகு காட்டிக ளாரோ டாகிலு ...... மன்புபோலே 
சதிர தாய்த்திரி வோயா வேசிகள்
     கருணை நோக்கமி லாமா பாவிகள்
          தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் ...... நம்பொணாத 
சரச வார்த்தையி னாலே வாதுசெய்
     விரக மாக்கிவி டாமூ தேவிகள்
          தகைமை நீத்துன தாளே சேர்வதும் ...... எந்தநாளோ 
மதுரை நாட்டினி லேவாழ் வாகிய
     அருகர் வாக்கினி லேசார் வாகிய
          வழுதி மேற்றிரு நீறே பூசிநி ..... மிர்ந்துகூனும் 
மருவு மாற்றெதிர் வீறே டேறிட
     அழகி போற்றிய மாறா லாகிய
          மகிமை யாற்சமண் வேரோ டேகெட ...... வென்றகோவே 
புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்
     பகலி ராத்திரி யோயா ஆலைகள்
          புரள மேற்செல வூரூர் பாயஅ ...... ணைந்துபோதும் 
புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி
     லளகை போற்பல வாழ்வால் வீறிய
          புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே.
அதிகமாகப் பொருள் கொடுப்பவர் கிடைத்தால் இன்பம் காட்டுவார்கள். பொருள் கொடாதவர் கூட வந்தால் அவர்களைத் தம்மை விட்டு நீங்கும்படி ஓட்டுபவர்கள். மாயையே ஒர் உருவம் ஆனவர்கள். நட்பு பாராட்டுவது போல (வந்தவர்களை) மூடர்களாக ஆக்குபவர்கள். மார்பு மேலே உள்ள மார்பகத்தைக் காட்டுபவர்கள். கூச்சம் இல்லமால் மேலே விழுந்து தமது அழகைக் காட்டுபவர்கள். யாராக இருந்தாலும் அன்பு உள்ளவர்கள் போல் சாமர்த்தியமாக எப்போதும் திரியும் ஓய்வில்லாத விலைமாதர்கள். அருள் நோக்கம் என்பதே இல்லாத பெரிய பாவிகள். வேண்டும் என்றே வந்தவரைப் புறக்கணிப்பவர்கள். பலவித குற்றம் (பாவம்) செய்பவர்கள். நம்புதற்கு முடியாத பக்குவ வார்த்தைகளைப் பேசி வாது செய்து, காமத்தை மூட்டி, போக ஒட்டாது பிடிக்க வல்ல மூதேவிகள். (இத்தகையோருடன்) கூடுவதை ஒழித்து, உன்னுடைய திருவடியைச் சேரும் நாள் எனக்குக் கிட்டுமோ? மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டில் வாழ்ந்திருந்த சமணர்களின் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த பாண்டிய மன்னன் மீது திரு நீற்றைத் தடவி, அவனுடைய கூன் நிமிரச் செய்தும், அருகில் பாயும் வைகை ஆற்று வெள்ள நீரை எதிர்த்து இட்ட ஏடுகள் மேற் செல்லச் செய்தும், அழகு நிறைந்த பாண்டி மா தேவியாகிய மங்கையர்க்கரசி உன்னைத் துதித்துப் போற்றிய பக்தியின் சிறப்பாலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பாலும், அந்தச் சமணர்கள் வேருடன் அழியும்படி வெற்றி கொண்ட (திருஞானசம்பந்தத்) தலைவனே, புதிய மாம்பழங்களினின்று விழுகின்ற தேன் ஊறல்கள், பகலிலும், இரவிலும் ஓயாது வேலை செய்யும் கரும்பாலைகள் மேலே புரண்டு மேற் சென்று அயலில் உள்ள ஊர்களிலும் பாயும்படி சேர்ந்து போகின்ற புகழ் பெற்ற காரணத்தால், கடல் சூழ்ந்த இப் பூமியில் பல வகையான வாழ்வால் மேம்பட்ட பண்டிதர்களால் அளகாபுரி* போலப் போற்றப்பட்ட வேலூரில் வீற்றிருக்கும் தம்பிரானே. 
* அளகாபுரி நிதிக்கு காவலனான குபேரனின் தலைநகர்.
பாடல் 667 - வேலு஡ர் 
ராகம் - ...; தாளம் -
தானான தந்த தந்த தானான தந்த தந்த
     தானான தந்த தந்த ...... தனதான
சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
     சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித் 
தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து
     தீராத துன்ப இன்ப ...... முறுமாதர் 
கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு
     கூராமல் மங்கி யங்க ...... மழியாதே 
கோள்கோடி பொன்ற வென்று நாடோறு நின்றி யங்கு
     கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய் 
மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்
     வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி 
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த
     மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ 
மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க
     வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே 
வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு
     வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
சேல் மீன் போலவும், ஆலகால விஷம் போலவும் உள்ள தம் செவ்விய கண்ணாகிய வேலாலும் ஆண்களை வென்று, அவர்களுடைய சீரும் நல் வாழ்வும் மனமும் குலைந்து அழியும்படி முதலிலேயே திட்டமிட்டு, தேன் போன்றதும், செம்மை வாய்ந்ததும், இனியதுமாகிய சொற்களையே பேசிக்கொண்டு வந்து அணைந்து, முடிவு இல்லாத துன்பத்தையும் இன்பத்தையும் ஏற்படுத்துகின்ற விலைமாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து காம மயக்கம் கொண்டவனாய், உன் மீது அன்பு பெருகாமல், பொலிவு குன்றி, உடல் அழிந்து போகாமல், இடையூறுகள் கோடிக் கணக்கானவைகள் வரினும் அவை அழிந்து போகும்படி வென்று, தினமும் ஒழுக்க வழியில் செல்வதான சிறந்த உண்மைப் பக்தியை மேற்கொண்டு வணங்கும்படியாக உனது திருவருளைத் தந்தருளுக. (இன்னது செய்வது என்று தெரியாத) மயக்கத்தால் மனம் அலைப்புண்டு வருத்தத்தை நிரம்பக் கொண்ட சிறந்த மன்மதன் கையில் கொண்ட கரும்பு வில்லின் அழகுடன் அழிந்து ஒடுங்க, முன்பு நாடி அவனை எரித்த சிவ பெருமானின் செல்வப் புதல்வனான கந்தனே, முற்பட்டு, பகைமை பூண்டு வந்து நெருங்கி எதிர்த்த பெரிய சூராதிகள் அடங்க வெற்றி மயிலின் மேல் ஏறியவனே, மேலான பரம் பொருளின் தியானம் பொருந்திய விண்ணோர்கள் நின்று பரிதாபித்து வேண்ட, வேலாயுதத்தைச் செலுத்தி கிரெளஞ்ச மலையை எதிர்த்து அழித்தவனே, பச்சை மூங்கில் போல திரட்சி உள்ள தோள்களை உடைய மாதர்கள் வந்து வணங்க, வேலூர் விளங்கும்படி வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 668 - விரிஞ்சிபுரம் 
ராகம் - ....; தாளம் -
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
     தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
          தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
     தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்
          டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே 
ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்
     டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்
          டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார் 
தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்
     சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்
          தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச் 
சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்
     தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்
          சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே 
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்
     தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்
          கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா 
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்
     சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்
          கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே 
கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்
     பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்
          கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே 
கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக்
     கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்
          கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே.
ஒருவரை சிறு வீட்டின் படுக்கை மெத்தையில் படுக்க வைத்து, ஒருவரைத் தம் வீட்டு வாசலில் மனக் குழப்பத்தோடு சுழலவிட்டு, இன்னொருவரை மிகுந்த பரபரப்போடு வீதியில் அலையும்படியாக விட்டு, அத்தகையச் செயலாலே ஒருவருக்கு ஒருவர் போட்டிப் பகைமையில் போராட விட்டு, வாளை உருவி எடுத்து அறையில் மல் யுத்தம் செய்யும்படி வைத்து, உயிர் பிழைப்பதே யோசித்துப் பார்க்கில் தக்கது என்று எண்ணச் செய்கின்ற பொது மகளிர் தருகின்ற காம இச்சை மயக்கத்தினால் தவ வழிக்கு மாறுபட்டவனாகி, சரியை மார்க்கத்திலும், கிரியை மார்க்கத்திலும்* செய்வதற்குள்ள தவ ஒழுக்கம் இல்லாது போய், எனது கையிலிருந்த பொருளை வீணாகச் செலவழித்து, ஊரில் உள்ள யாவரும் இழித்துப் பேசும்படி திரிகின்ற என்னை, எல்லா வித துக்கங்களும் நீங்கவும், எல்லா வித நற் குணங்களும் கூடவும், பூமியில் நான் புகழ் அடையவும், மதிப்பைப் பெற்று உன்னுடைய அழகிய திருவடிகளை எப்போதும் அன்புடன் நான் நினைக்கும்படி உனது திருவருளைத் தந்தருள்க. தங்களுடைய குருவான பிரஹஸ்பதி சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை சிறைப்படுத்தி மிகவும் கொடுமை செய்து வந்த அசுரர்களை, முற்றிலும் கொடிய கெட்ட குணமுடைய வீணர்களை, முன்பு அவர்கள் செய்த குற்றங்களுக்காக அறுத்து எறிந்த வேலாயுதனே, குயில் போன்ற மொழியையும், கயல் மீன் போன்ற கண்களையும், பவளம் போன்ற வாயிதழையும், வில் போன்ற நெற்றியையும், சந்திரன் போன்ற முகத்தையும், புன்னகையையும், கரு மேகம் போன்ற கூந்தலையும், மலை போன்ற மார்பகங்களையும், கொடி போன்ற இடையையும், பெண் யானை போன்ற நடையையும் கொண்ட குற மகளாகிய வள்ளியை அணைபவனே, ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞரையும் வீழ்த்தும் தந்திரம் உடையவர்களும், மயிர் பறிபடும் தலையருமான சமணர்களின குலம் முன்பு பொடிபட்டு ஒடுங்க, வாதப் போர் செய்து அவர்களின் உயிருள்ள உடலை கழு முனையில் (திருஞானசம்பந்தராக வந்து) வைத்திட்டவனே, கமுக மரத்தின் குலை தன் மீது விழுதலால் வாழை மரத்தினின்றும் பழங்கள் விழ, (அந்தப் பழங்கள் தன் மீது விழும் அதிர்ச்சியால்) கரும்பினின்றும் முத்துக்கள் விழ, கயல் மீன்கள் விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக்கரபுரம்** என்ற பெயருள்ள விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு அருகில் உள்ளது.
பாடல் 669 - விரிஞ்சிபுரம் 
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதானா
குலையமயி ரோதி குவியவிழி வீறு
     குருகினிசை பாடி ...... முகமீதே 
குறுவியர்வு லாவ அமுதினினி தான
     குதலையுமொ ராறு ...... படவேதான் 
பலவிதவி நோத முடனுபய பாத
     பரிபுரமு மாட ...... அணைமீதே 
பரிவுதரு மாசை விடமனமொ வாத
     பதகனையு மாள ...... நினைவாயே 
சிலைமலைய தான பரமர்தரு பால
     சிகிபரிய தான ...... குமரேசா 
திருமதுரை மேவு மமணர்குல மான
     திருடர்கழு வேற ...... வருவோனே 
கலின்வடிவ மான அகலிகைபெ ணான
     கமலபத மாயன் ...... மருகோனே 
கழனிநெடு வாளை கமுகொடிய மோது
     கரபுரியில் வீறு ...... பெருமாளே.
கூந்தலின் மயிர் குலைந்து போக, கண்கள் குவிய, விளக்கத்துடன் கோழி முதலிய பறவைகளின் புட்குரல் இசை பாடி, முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற, அமுதம் போல் இனிமை கொண்ட குதலைச் சொற்களும் ஒரு வழியாக ஆறு போலப் பெருகவே, பல விதமான விநோதங்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் அசைந்து ஒலிக்க படுக்கையின் மேல் அன்பு எழுகின்ற ஆசையை விடுவதற்கு மனம் ஒத்துக் கொள்ளாத இந்தப் பாதகனையும் ஆண்டருள நினைந்து அருளுவாயாக. வில்லாக மேரு மலையைக் கொண்ட மேலான சிவபெருமான் ஈன்ற புதல்வனே, மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே, அழகிய மதுரையில் இருந்த சமணர் குலமான திருடர்களை கழுவில் ஏற்ற (திருஞானசம்பந்தராக) வந்தவனே, கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் மருகனே, கழனியில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் கமுக மரம் ஒடிந்து விழும்படி மோதுகின்ற கரபுரமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று.
பாடல் 670 - விரிஞ்சிபுரம் 
ராகம் - மனோலயம் ; தாளம் - அங்கதாளம் - 5 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனன தந்த தானன தனன தந்த தானன
     தனன தந்த தானன ...... தனதான
நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
     நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம் 
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
     நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம் 
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
     சமய பஞ்ச பாதக ...... ரறியாத 
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
     சரண புண்ட ¡£கம ...... தருள்வாயே 
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
     மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான 
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
     மடிய இந்தி ராதியர் ...... குடியேறச் 
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
     சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே 
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
     திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே.
ஒப்பில்லாத ஐந்து பூதங்களும், நினைக்கும் நெஞ்சும், உயிரும், நெகிழும்படி கூடுகின்ற விரோதமின்மையை ஏற்படுத்தித் தரும் ஞான சூரியனே, அழிவில்லாத மேலான பொருளே, அரசனே, அழகிய குமார வேளே என்று வேதங்கள் முழங்குவதும், சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான சமுத்திரம் போல பெருத்த சப்தத்துடன் வாதம் செய்பவராம் சமயவாதிகளான பஞ்சமா பாதகர்களால் அறியப்படாததும், ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும், கிண்கிணியும் தண்டையும் சூழ்ந்துள்ளதுமான திருவடித் தாமரையதனைத் தந்தருள்வாயாக. மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும், ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான கடல் கலக்கமுற்று, சூடாகி, கொந்தளிக்கவும், பெரிய ஆகாய* மார்க்கமாக வந்த சேனைகளும், எதிர்த்துப் போர் செய்த சூரனும் மாண்டு போக, இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற, சிகரங்களை உடைய உயர்ந்த மந்திரஜால கிரெளஞ்சமலை தகர்ந்துபோக வெற்றி வேலினை விடுத்த சிறுவனே, சந்திரனை முடியில் சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே, திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த அரசர்களும், நான்முகன் பிரம்மாவும் பரவிப் போற்றிய திருவிரிஞ்சைத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சூரனது சேனைகள் ஆகாயவழியில் வராமல் தடுக்க முருகன் அண்டவாயிலை அடைத்தான்.சூரன் அம்புகள் ஏவி அவ்வழியைத் திறக்க, சேனைகள் ஆகாய மார்க்கமாக போருக்கு வந்தன - கந்த புராணம்.** திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
பாடல் 671 - விரிஞ்சிபுரம்
ராகம் - .....; தாளம் - ..........
தனன தனதனத் தனன தனதனத்
     தனன தனதனத் தனன தனதனத்
          தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா
பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்
     தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்
          பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே 
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்
     தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்
          பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே 
சருவி யினியநட் புறவு சொலிமுதற்
     பழகு மவரெனப் பதறி யருகினிற்
          சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார் 
தமது ம்ருகமதக் களப புளகிதச்
     சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்
          தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ 
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்
     கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்
          கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா 
கமல அயனுமச் சுதனும் வருணனக்
     கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க்
          கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே 
இரையு முததியிற் கடுவை மிடறமைத்
     துழுவை யதளுடுத் தரவு பணிதரித்
          திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே 
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்
     தவனி தனிலெழிற் கரும முனிவருக்
          கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.
உன்னைப் போற்றி உனது அழகிய கைகளையும், திருமுகத்தையும், முத்து மாலை அணிந்த திருமார்பையும், உடல் ஒளியையும், நறு மணம் வீசும் திருவடிகளையும், உன்னிடம் உள்ள சேவலையும், மயிலையும் இதயத்துள் அன்புடன் அழுந்திப் படிய என் மனத்தில் நிறுத்தி, திடமான சிவ பக்தி மிகப் பெற்று, யாவரும் மகிழ்ச்சி அடையும்படி அற நெறியில் நின்று, உண்மையான பசியுடன் வருகின்றவர்களுக்கு ஒரு பிடி அளவேனும் உணவு இடாமல், கொஞ்சிக் குலாவி, இனிமையான உறவு காட்டும் வார்த்தைகளைச் சொல்லி, முதலிலேயே பழகியவர்கள் போல மாய்மாலம் செய்து, அருகில் இருந்து, காம லீலைகள் புரிந்து, அதற்குத் தக்கதான பொருளை அபகரிக்கும் பொது மகளிருடைய கஸ்தூரியும் சந்தனமும் சேர்ந்த கலவை கொண்ட, புளகாங்கிதம் தருவதுமான, மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி, தன் வசம் இழந்து மனம் உருகி அந்த மோக மயக்கத்துடன் திரிவேனோ? கறுத்த நிறமுள்ள கொடுமை வாய்ந்த அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து அவர்களின் உடல்கள் துண்டுபடவும், (அந்தப் பிணங்களைத் தின்று) கழுகுகள் பசி நீங்கவும், வேகமாக வேலைச் செலுத்திய தீரனே, தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும், வருணனும், அக்கினி தேவனும், யமனும், அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும் உடல் எல்லாம் கண் கொண்ட இந்திரனும், மற்ற எல்லா தேவர்களும் தத்தம் பதவிகள் நிலைக்கப் பெற்று விளங்கச் செய்தவனே, ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி வைத்து, புலியின் தோலை உடுத்து, பாம்பாகிய ஆபரணத்தைத் தரித்து, விளக்கம் உற ஊழிக் கூத்து நடனம் செய்யும் சிவ பெருமான் முன்பு ஈன்றருளிய உத்தம வேளே, பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள் தோறும் ஆய்ந்து உரைத்து, இப்பூமியில் தமது கடமைகளை அழகாகச் செய்யும் முனிவர்களுக்கு உகந்த தலமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது. பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
பாடல் 672 - விரிஞ்சிபுரம் 
ராகம் - மோஹனம் .
தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை - 10 1/2 
- எடுப்பு - /3/3/3 0
தனன தந்த தான தனன தந்த தான
     தனன தந்த தான ...... தனதான
மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
     மலமி தென்று போட ...... அறியாது 
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
     வகையில் வந்தி ராத ...... அடியேனும் 
உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
     உலக மென்று பேச ......அறியாத 
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
     உபய துங்க பாத ...... மருள்வாயே 
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
     அடிப ணிந்து பேசி ...... கடையூடே 
அருளு கென்ற போது பொருளி தென்று காண
     அருளு மைந்த ஆதி ...... குருநாதா 
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
     செருவ டங்க வேலை ...... விடுவோனே 
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
     திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.
பொருந்திய மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களுக்குச் சொந்தம் ஆகாத வண்ணம் இந்த உடலை அழுக்கு என்று உதறிப் போடத் தெரியாமல் மயக்கம் நிறைந்த இந்த வாழ்வு போதுமே என்று எப்போதும் அவ்வெண்ணம் நன்கு மனத்தில் தோன்றாத நானும், உள்ளம் உருகி அன்போடு தினமும் உன்னை நினைத்து, உலக விஷயங்களைப் பேசும் பேச்சே பேச அறியாத இவ்வடிவம்தான் இது என்ற கூற இயலாத நிலையை நான் அடைய உன் இரண்டு பரிசுத்தமான பாதங்களை எனக்கு நீ தந்தருள்வாயாக. திருமாலும் பிரமனும் தேடுதற்கு அரியவரான தம்பிரான் சிவபிரானும் உனது திருவடிகளில் பணிந்து பேசி, இறுதியில் அந்தப் பிரணவப் பொருளை எனக்கு அருள்க என்று கேட்க இதுதான் பொருள் என்று அவர் உணரும்படியாக உபதேசித்து அருளிய குமரனே, அந்த ஆதிசிவனுக்கும் குருநாதனே, சூரன் செல்லும் இடமெல்லாம் திரியும் விண் அளாவிய நீண்ட ஏழு மலைகளையும் பிளந்து, அசுரர்களின் போர் ஒடுங்குமாறு வேலாயுதத்தைச் செலுத்தியவனே, ஒழுங்காக ஓதப்படும் வேதத்தின் ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட திரிவிரிஞ்சைத் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.
பாடல் 673 - திருவாலங்காடு 
ராகம் - ...; தாளம் -
தனதானந் தானன தானன
     தனதானந் தானன தானன
          தனதானந் தானன தானன ...... தனதான
கனவாலங் கூர்விழி மாதர்கள்
     மனசாலஞ் சால்பழி காரிகள்
          கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே 
கசிவாருங் கீறுகி ளாலுறு
     வசைகாணுங் காளிம வீணிகள்
          களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர் 
மனவேலங் கீலக லாவிகள்
     மயமாயங் கீதவி நோதிகள்
          மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில் 
மதிமாடம் வானிகழ் வார்மிசை
     மகிழ்கூரும் பாழ்மன மாமுன
          மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ 
தனதானந் தானன தானன
     எனவேதங் கூறுசொல் மீறளி
          ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா 
தகரேறங் காரச மேவிய
     குகவீரம் பாகும ராமிகு
          தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே 
தினமாமன் பாபுன மேவிய
     தனிமானின் தோளுட னாடிய
          தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா 
திகழ்வேடங் காளியொ டாடிய
     ஜெகதீசங் கேசந டேசுரர்
          திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.
பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள். மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் களிம்பைத் தடவும் வீணிகள். ஆவேசத்தைத் தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத் தருகின்ற, அசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள். காம மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல் மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும் பாழான மனம் இது. உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ? தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே, நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே, மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே, தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப் புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன் விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே, திகழ்கின்ற வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில்* விளங்கி நிற்கும் பெருமாளே. 
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது.
பாடல் 674 - திருவாலங்காடு 
ராகம் - ---; தாளம் -
தந்தானந் தாத்தம் தனதன
     தந்தானந் தாத்தம் தனதன
          தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான
பொன்றாமன் றாக்கும் புதல்வரும்
     நன்றாமன் றார்க்கின் றுறுதுணை
          பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே 
பொங்காவெங் கூற்றம் பொதிதரு
     சிங்காரஞ் சேர்த்திங் குயரிய
          புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல 
நின்றானின் றேத்தும் படிநினை
     வுந்தானும் போச்சென் றுயர்வற
          நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன் 
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை
     விஞ்சாதென் பாற்சென் றகலிட
          நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே 
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு
     கன்றாமுன் காத்துங் குவலய
          முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே 
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற
     மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்
          கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே 
அன்றாலங் காட்டண் டருமுய
     நின்றாடுங் கூத்தன் திருவருள்
          அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே 
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்
     தம்பாவந் தீர்த்தம் புவியிடை
          அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.
அழிவில்லாத வகையில் சபையிலே புகழைப் பெருக்கும் மக்களும் கூட நல்லபடியாக நிலைத்த செல்வம் ஆகார். யாவருக்கும் இன்று உற்ற துணையாக கருதப்படும் பொருட்செல்வமும் கூட அவ்வாறே நிலையற்றது என்னும் இந்தக் கூத்தாட்டம் நிறைந்த புவி வாழ்க்கையில், கோபித்து வரும் கொடிய யமன் உயிரைக் கொண்டுபோக மறைந்து நிற்கும்போது, நன்கு அலங்காரம் செய்துகொண்டதான மேம்பட்டு நிற்கும் புன்மையான கூடாகிய உடலைக் கொண்டு, அதனுள் இருக்கின்ற உயிர் இடம் கொள்ளுமாறு இங்கு இவன் நிற்கின்றான், இன்று உன்னைப் புகழ்ந்து துதிக்கும்படியான நினைவுகூட இவனிடம் இல்லாமல் போய்விட்டது என்று, மேன்மையற்ற நிந்தனையான பேச்சு என்பது ஏற்பட்டுப் பரவுதற்கு முன்பாக, மனத்தாலும், ஐம்பொறிகளாலும் உண்டாகிப் பெருகும் வினையானது அதிகப்படாமல் என்னிடத்திலிருந்து விட்டு நீங்க, உன் திருவடிகளைத் தந்து அடியேனை ஆட்கொண்டு திருவருளைத் தர நினைந்தருள வேண்டுகிறேன். (கோவர்த்தன) மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்னாள் காத்தவரும், பூமியை உண்டவருமான திருமாலின் பாராட்டுதலை வெகுவாகப் பெற்ற மருகனே, பூங்கொத்து நிறைந்த பசுமையான மாலையைத் தரித்துள்ள, திண்ணிய மார்பகங்கள் உடைய வள்ளியாம் குறப் பெண்ணிண் நீங்காத மனத்தில் மயக்கம் கொண்டே, அவளிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று கூறியவனே, அன்று திருவாலங்காட்டில்*, தேவர்களும் பிழைப்பதற்காக, நின்று நடனம் புரிந்த சிவபெருமானது திருவருள் அங்கு கூடும்படியான (தேவாரத்) திருப்பதிகங்களின் பயனை (திருஞானசம்பந்தராக வந்து) அருளிச்செய்த செல்வமே, அன்பினால் உன்னுடைய திருவடிகளை வணங்குபவரின் பாவத்தைத் தீர்த்து, இப்பூமியில் அவர்களுக்கு அஞ்சாத நெஞ்சத்தையும், செல்வங்களையும் தரவல்ல பெருமாளே. 
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.
பாடல் 675 - திருவாலங்காடு 
ராகம் - ...; தாளம் -
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான
புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி
     புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே 
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி
     புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம் 
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி
     பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப் 
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி
     பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே 
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க
     திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே 
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற
     ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக் 
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி
     குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா 
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்
     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.
மண், நீர், காற்று இவைகளைக் கலந்தும், நெருப்பு, வான் என்ற இரண்டையும் கூடச் சேர்த்தும், புதுமை வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டியும், இவைகளுக்கு இடையே ஐம்பொறிகள், ஐம்புலன்கள் என்ற பத்து இந்திரியங்களையும் இணைத்தும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு கருவிகளைப் பிணைத்தும், சொல்லப்படுகின்ற துவாரங்களாக (வழிகளாக) ஒன்பது வாயில்களை* உண்டுபண்ணியும், இந்த உடல் ஏற்படுத்தப்படுகிறது. (இத்தகைய உடலுக்குக் காரணமான) பாவ வினைகள் பொடிபட்டு அழிதலைக்காட்டி, நல்ல அறிவை எனக்குப் பொருந்தவைத்து, பசு, பதி, பாசம் (உயிர், இறைவன், தளை) என்ற முப்பொருள்களின் இலக்கணங்களை எனக்கு விளக்கி, ஐம்புலன்களும் மாய்ந்து ஒடுங்க இந்தப் பூமிக்குப் போ என்று என்னை விரைவில் அனுப்பிய நீதான், உன் அடிமையாகிய என்னை இப்போது வந்து வாழ்த்தி, முக்தியையும் அடைவதற்கான வழியைக் காட்டி அருள்வாயாக. சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், தவம் நிறைந்த முநிவர்கள்** பார்த்து மகிழவும், திருநடனம் ஆடும் கூத்தபிரான் சிவனின் குழந்தை முருகனே, லக்ஷ்மியை மார்பில் வைத்த திருமால் போற்றவும், நான்கு திசைகளையும் நோக்கும் முகனான பிரமன் நாள்தோறும் போற்றவும், மண்ணுலகையும் விண்ணுலகையும் காக்கும் பொருட்டு மயில் மீதேறி, கிரெளஞ்சகிரியுடன் சூரன் தோல்வியுற, ஏழு கடல்களையும், மாமரத்தையும் (சூரனையும்) தாக்கி, எடுத்த கூரிய வேலினை அங்கு போர்க்களத்தில் செலுத்தின குமரேசனே, உலகெலாம் போற்ற பழையனூரிலும்***, திருவாலங்காட்டிலும் வீற்றிருந்து, குறமகளாகிய வள்ளியின் பாதம் போற்றுகின்ற பெருமாளே. 
* நவ துவாரங்கள்: இரு கண்கள், இரு செவிகள், இரு நாசிகள், ஒரு வாய், இரு கழிவுப் பாதைகள்.
** திருவாலங்காட்டில் கார்க்கோடகன், முஞ்சிகேசர் என்ற முநிவர்கள் சிவனின் அருளைப்பெற்று அவரது நடன தரிசனத்தைக் கண்டனர் - திருவாலங்காட்டுப் புராணம்.
*** பழனை என்ற பழையனூர் திருவாலங்காட்டுக்குக் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.
பாடல் 676 - திருவாலங்காடு 
ராகம் - : தாளம் -
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த
     தனதன தானந் தாத்த ...... தனதான
வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி
     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் 
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு
     மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் 
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற
     பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் 
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த
     பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே 
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்
     முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே 
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி
     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் 
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி
     யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி 
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி
     யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.
உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன் வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி, உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக. தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு* என்னும் ஊரில் முதன்மையான நடனம்** ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே. 
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.
** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.
பாடல் 677 - திருவாலங்காடு 
ராகம் - மோஹனம் 
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
     தனனாத் தானன தானம் ...... தனதான
தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
     தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ் 
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
     தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல் 
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்
     துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே 
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
     தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ 
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம் 
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
     பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச் 
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
     டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே 
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
     திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.
வில், வாள், தண்டாயுதம், சூலம் இவைகளைத் தரித்து, பல கொலைகளைச் செய்த சூரனும், வற்றாத கடல்கள் ஏழும், மலைகள் ஏழும், சருகு போலக் காய்ந்து போகும்படி எரித்த ஒளிமிக்க வேலும், சண்டை செய்யவல்ல கால்களை உடைய சேவலும், நீல நிறமானதும், நடனம் ஆடவல்லதுமான மயிலாம் குதிரையும், தினைப் புனத்தைக் காத்த, பவளம் போன்ற வாயைக்கொண்ட, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியும், தேவலோகத்தாளாகிய ஒப்பற்ற தேன் அனைய தேவயானையும், துணையாகக் கொண்டு குறைவின்றி வாழ்கின்ற கோமானே, நீ துணையாகக் காவல் செய்து ரக்ஷிப்பாய் என்று உணராத பாவிகளிடத்தில் சென்று அழிவில்லாத அருமையான பாடல்களை நானும் சொல்லித் திரியலாமோ? பிறப்பை ஒழித்து, ஆணாக இருந்த பனைமரம் காய்த்து நறுமணம் வீசும் பழங்களாக பூமியின் மீது விழும்படியாக,* வேதத்தைப் படிக்காத பாதகர்கள் (1) பாயைத் தவிர வேறு எந்த ஆடையும் உடுக்காத பேதைகள் (2) தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும் கூத்தாடிச் சமர்த்தர்கள் (3) ஆகிய சமணர் எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக, சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது (திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும், பெருமை வாய்ந்த வெள்ளைத் திருநீற்றாலும், வாதுப் போர் புரிந்த இளையோனே, செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு முத்துக்களைக் கரையிலே கொட்டும் அழகு நிறைந்த திருவோத்தூர்** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவோத்தூரில் பனைமரங்கள் ஆண்பனையாக இருந்தமை கண்டு சமணர்கள் பரிகசிக்க, அவ்வூரில் சிவனைத் தரிசித்த திருஞானசம்பந்தர் (குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என்ற) தேவாரத்தைப் பாட, ஆண்பனைகள் யாவும் குலைதள்ளி பனம் பழங்களைக் கொட்டின. பனைகளின் பிறப்பும் ஒழிந்தன.(1) (2) (3) இவையாவும் சமண குருமாரைக் குறிப்பன:(1) சமணர் வேதத்தைப் படித்ததில்லை.(2) சமணர் கோரைப் பாயைத் தவிர வேறு ஆடை உடுப்பதில்லை.(3) சமண குருமார் ஒருவனைக் குருவாக ஆக்கும்போது அவனது தலைமயிரை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பறிக்கும் வழக்கம் உண்டு.
** திருவோத்தூர் காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்கே 19 மைலில் சேயாற்றின் கரையின் உள்ளது.இங்கு சிவபிரான் தேவர்களுக்கும் முநிவர்களுக்கும் வேதத்தை ஓதுவித்ததால் திருவோத்தூர் எனப்படும்.
பாடல் 678 - பாக்கம் 
ராகம் - ...; தாளம் -
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன
     தாத்தத்த தானதன ...... தனதான
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
     காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி 
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்
     காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற் 
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு
     போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் 
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி
     கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே 
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்
     போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற் 
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது
     போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே 
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர
     னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே 
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்
     பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.
கருமேகத்துக்கு நிகரான உடல் நிறத்தை உடைய கடல் போலப் பரந்த சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து தோன்றி, நிலைத்து நிற்காத வடிவம் இந்த உடல் ஆகும். ஒரு கோடிக் கணக்கான காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவுத் தானியமாக ஆகப்போவது இந்த உடல். சுடுகாட்டில் பெரு நெருப்பில் சேரும்படி, ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை, அருகே அழைத்து, விசாரித்துத் திருவருள் பாலித்து, (உன்னைப் பாடும்படியான) வாக்கை எனக்கு அருளி, உன் திரு நாமங்களைச் சொற்களில் பாடலாக அமைப்பதற்கு வேண்டிய நூல் அறிவைத் தந்து அருளுக. சண்டைக்குச் சளைக்காத யமனைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் கூடிப் போய் திசை தோறும் இறக்கும்படியாக, கூரிய வேலினால் குத்தி, சித்தர்களும் தேவர்களும் மழை போல பூக்களை (போர்க்களத்தில்) மிகப் பொழிய உக்கிரமாகச் சண்டை செய்து, போற்றி வணங்கும் தேவர்களுடைய சிறையை நீக்கியவனே, பூமியில் வெற்றி தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு, மிக்க ஞானத்தில் சிறந்தவனாக, பக்தியை நன்கு வளர்க்க வல்ல உபதேச மொழிகளைக் கூறிய குரு மூர்த்தியாகிய செல்வமே, பாமாலைகளால் இயற்றமிழ் வல்ல புலவர்கள் விரும்பிப் பார்ப்பதற்காக, வேல் ஏந்தி, சிறந்த பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்க வல்ல பெருமாளே. 
* பாக்கம், சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.
பாடல் 679 - பாக்கம் 
ராகம் - ...; தாளம் -
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
     தாத்தத் தனந்த தந்த ...... தனதான
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
     நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும் 
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
     ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே 
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
     கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும் 
வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற
     வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ 
மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து
     வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப 
மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து
     வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும் 
பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து
     பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே 
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த
     பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.
பருந்துகளின் கூட்டங்கள் உண்டு வயிறு நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச் சுமந்து கொண்டு, ஊர்கள் தோறும் சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும், செல்வத்துக்கு வழியைத் தேடியும் இளைத்து வாடி, அங்கங்கு நின்று தளராமல், மாறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி (ஒருமைப்பட்ட மனத்தினனாய்) உன்னைப் புகழ்ந்து கொண்டு, உன் திருப்புகழையே பாடிப் பாடி உனது திருவடிகளை அடியேனாகிய நானும் விரும்பி, உன்னோடு கலந்திருந்து வருத்தங்களைக் கடந்து நின்ற மோட்ச வீட்டில் புகுந்து இருந்து மகிழ்ச்சி உறுவேனோ? உரை மாற்றுக் கடந்த பொன் விளங்கும் (நாந்தகம் என்னும்) வாளும், (சுதர்சனம் என்னும்) சக்கரமும், தெரிந்து பொருந்த அமைந்த (பாஞ்சஜன்யம் என்னும்) சங்கமும், (கெளமோதகி என்னும்) தண்டமும், (சாரங்கம் என்னும்) வில்லும், அழகிய பொன் ஆபரணங்களும் விளங்கும்படியாக நிலையாக வைத்துள்ள திருமாலை, வணங்குகின்ற நீண்ட கைகள் என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற பால் என்று சொல்லும்படியான திருப்பாற் கடலில் இடம் கொண்டு, வேல் போன்ற கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான ஆதி சேஷன் என்னும் பாம்பணையில் துயில் கொண்டவனாகிய திருமாலின் மருகனே, கமுக மரப் பாக்கையும் கரும்புகளையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.
பாடல் 680 - திருவேற்காடு 
ராகம் - ....; தாளம் -
தானந்தா தனதான தானந்தா தனதான
     தானந்தா தனதான ...... தனதான
ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல
     மாளம்போர் செயுமாய ...... விழியாலே 
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார
     ஆடம்பார் குவிநேய ...... முலையாலே 
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய
     வேளங்கார் துடிநீப ...... இடையாலே 
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு
     காலந்தா னொழிவேது ...... உரையாயோ 
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத
     மாதம்பா தருசேய ...... வயலூரா 
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர
     பாசந்தா திருமாலின் ...... மருகோனே 
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்
     வீறங்கே யிருபாலு ...... முறவீறு 
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு
     வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.
ஆலகால விஷத்தைப் போல் எழுந்து நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமர்ந்து, ரேகைகள் கொண்டு அழகு வாய்ந்து, கண்டோர் இறந்து போகும்படிச் சண்டை செய்ய வல்ல மாயம் நிறைந்த கண்களாலே, முத்து ஆரம் தம்மேல் மாலையாக மிகவும் அசைகின்ற, கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள, அன்புக்கு இடமான மார்பகங்களாலே, மிகவும் இளைத்திருப்பதும், ஆசை தரக் கூடியதாகப் பொருந்தி அங்கு ஒரு பிடி அளவே இருப்பதும், விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்ததும், உடுக்கை போன்றதுமான இடுப்பாலே, (என்னை வாழவிடாமல் செய்யும் விலைமாதரை விட்டு) வேறு புகலிடம் இல்லாதவனாய் இருக்கும் எனக்கு, நிறைய பிறப்புகளில் என் உயிரைக் கவர்ந்து சென்ற யமன் என்னை அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம் தான் நீங்குதல் என்றைக்கு எனச் சொல்ல மாட்டாயோ? பூமியின் இடமெல்லாம் கடல் நீரால் சேர்க்கை தோன்றுங்கால் (பிரளய காலத்தில்), அப்போதும் அழிவில்லாத தேவி அம்பிகை பெற்ற குழந்தையே, வயலூரில் குடிகொண்டுள்ள தெய்வமே, பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை* வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே, வேல் போலவும் அம்பு போலவும் (உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள் வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு புறமும் பொருந்த விளங்க வேதத்தின் முடிவில் இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே, திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே, பெருமாளே. 
* அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி. இவன் தேவர்களை வருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார். அவர் சூலத்தினால் அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.
** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.
பாடல் 681 - திருவேற்காடு 
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் 
தாளம் - திஸ்ர த்ருபுடை
தாத்தாதன தானன தானன
     தாத்தாதன தானன தானன
          தாத்தாதன தானன தானன ...... தனதான
கார்ச்சார்குழ லார்விழி யாரயி
     லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
          வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே 
காழ்க்காதல தாமன மேமிக
     வார்க்காமுக னாயுறு சாதக
          மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே 
பார்ப்பாயலை யோவடி யாரொடு
     சேர்ப்பாயலை யோவுன தாரருள்
          கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா 
பார்ப்பாவல ரோதுசொ லால்முது
     நீர்ப்பாரினில் மீறிய கீரரை
          யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே 
வார்ப்பேரரு ளேபொழி காரண
     நேர்ப்பாவச காரண மாமத
          ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப 
வாக்காசிவ மாமத மேமிக
     வூக்காதிப யோகம தேயுறு
          மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே 
வேற்காடவல் வேடர்கள் மாமக
     ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
          வேற்காடுறை வேதபு ¡£சுரர் ...... தருசேயே 
வேட்டார்மக வான்மக ளானவ
     ளேட்டார்திரு மாமண வாபொனி
          னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.
மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள், கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள், பால் போல் இனிய சொற்களை உடையவர்கள், இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் பொருந்திய இள நீரைப் போன்ற மார்பகங்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் மீதுள்ள மயக்கத்தாலே, திண்ணியதான அன்பு பூண்டுள்ள மனமே, மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற ஜாதகத்தை உடையவனும், மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை, உன்னுடைய திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயோ? உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உன்னுடைய பூரண அருளை நிரம்பத் தர மாட்டாயோ? உமா தேவி பெற்ற குமரேசனே, பூமியில் உள்ள புலவர்கள் ஓதும் புகழ்ச் சொற்களால் பழைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்குபவராகிய நக்கீரரை* மகிழ்ந்து ஏற்பவனே, உனது திருவருளை அதேபோலப் பாலித்து ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு அருளுவாயாக. (உலகத்துக்கு) நீடிய பேர் அருளையே பொழிந்த மூல காரணனே, நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத் துணைக் காரணமாகிய சமண மதத்தை ஏற்பாடு செய்த மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை திருஞானசம்பந்தராக வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை உடையவனே, சிறந்த சிவ மதமே பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே, யோக நிலையில் இருக்கும் பெரியவனே, சிவனது குமரனே, குகனே அடியார்களின் செல்வமே, வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியிடம் அன்பு பூண்ட நல்ல அழகிய கணவனே, திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் வேத பு¡£சுரர் பெற்ற குழந்தையே, வேள்வி நிரம்பிய யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவயானையின் சிறந்த அழகிய மணவாளனே, பொன்னுலகத்தினரான தேவர்களுடைய செல்வம் என வருகின்ற பெருமாளே. 
* சிவபிரானால் சபிக்கப்பட்டு சிறையில் இருந்த நக்கீரர், திருமுருகாற்றுப்படையைப் பாடி முருகன் அருளால் சிறை மீண்டார்.
** திருவேற்காடு சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.
பாடல் 682 - வடதிருமுல்லைவாயில் 
ராகம் - மோஹனம் ; தாளம் - அங்கதாளம் - 6 1/2 
- எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதய்ய தானன தானன
     தனதய்ய தானன தானன
          தனதய்ய தானன தானன ...... தனதான
அணிசெவ்வி யார்திரை சூழ்புவி
     தனநிவ்வி யேகரை யேறிட
          அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர 
அருள்வல்லை யோநெடு நாளின
     மிருளில்லி லேயிடு மோவுன
          தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே 
குணவில்ல தாமக மேரினை
     யணிசெல்வி யாயரு ணாசல
          குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத 
குடிலில்ல மேதரு நாளெது
     மொழிநல்ல யோகவ ரேபணி
          குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா 
பணிகொள்ளி மாகண பூதமொ
     டமர்கள்ளி கானக நாடக
          பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே 
படரல்லி மாமலர் பாணம
     துடைவில்லி மாமத னாரனை
          பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா 
மணமொல்லை யாகி நகாகன
     தனவல்லி மோகன மோடமர்
          மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா 
மருமல்லி மாவன நீடிய
     பொழில் மெல்லி காவன மாடமை
          வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.
அழகு நிறைந்த மாதர் (பெண்), கடல் சூழ்ந்த பூமி (மண்), செல்வம் (பொன்) என்ற மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான அறிவற்றவனாகிய அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய திருவருளை வலிய அருள்வாயோ? அல்லது நீண்ட காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ? உனது திருவருள் என்மீது சிறிதும் இல்லையோ? உன்அடியார் கூட்டத்தை நான் அறியவில்லையே. சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய* அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே, திண்ணிய பெரும் தவநிலையே பெறும்படியான நற்குணத்தோடு கூடிய பிறப்பில் கிடைத்த உடலாகிய வீட்டை எனக்கு நீ தரும் நாள் எதுவெனக் கூறுவாயாக. நல்ல யோகிகளே பணிகின்ற நற்குண சீலனே, சிவனே, சிவபிரானுக்கு குரு மூர்த்தியே, பாம்புகளை ஆபரணமாகப் பூண்டவளும், பெரிய கணங்களாகிய பூதங்களோடு அமர்ந்த திருடியும், காட்டில் சிவனுடன் நடனம் ஆடுகின்றவளும், மேலான மென்மையுடையவளுமான பரமேஸ்வரி பார்வதிதேவி பெற்ற தலைவனே, நீரில் படரும் அல்லி, தாமரை, நீலோற்பலம் முதலிய சிறந்த மலர்ப் பாணங்களை உடைய வில்லியாகிய அழகிய மன்மதனின் அன்னையும், பெருமை வாய்ந்த செல்வியுமாகிய லக்ஷ்மிதேவியின் மருமகனே, தெய்வ முருகேசனே, திருமணம் விரைவில் புரிந்தவளும், பெருமை வாய்ந்த மலைக் கொடியும் ஆகிய பார்வதிதேவி வசீகரத்துடன் அமர்ந்து மகிழும் சிதம்பரத்தில் பெரிய நடனம் ஆடிய சிவபிரான் அருளிய பாலனே, வாசனைமிக்க மல்லிகை பெருங்காடாக வளர்ந்துள்ள சோலையும், மென்மையான பூந்தோட்டங்களும், நீர்நிலைகளும் பக்கங்களில் சூழ்ந்து அமைந்துள்ள வடமுல்லைவாயிலில்** மேவும் பெருமாளே. 
* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.
** வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.
பாடல் 683 - வடதிருமுல்லைவாயில் 
ராகம் - ...; தாளம் -
தான தானன தானன தந்தன
     தான தானன தானன தந்தன
          தான தானன தானன தந்தன ...... தனதான
சோதி மாமதி போல்முக முங்கிளர்
     மேரு லாவிய மாமுலை யுங்கொடு
          தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே 
சோலி பேசிமு னாளிலி ணங்கிய
     மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு
          சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி 
மோதி யேகனி வாயத ரந்தரு
     நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்
          மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி 
மோச மேதரு தோதக வம்பியர்
     மீதி லேமய லாகிம னந்தளர்
          மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ 
ஆதி யேயெனும் வானவர் தம்பகை
     யான சூரனை மோதிய ரும்பொடி
          யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா 
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர
     லேறி யேயுறி மீதளை யுங்கள
          வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே 
வாதி னால்வரு காளியை வென்றிடு
     மாதி நாயகர் வீறுத யங்குகை
          வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர் 
வாச மாமல ரோனொடு செந்திரு
     மார்பில் வீறிய மாயவ னும்பணி
          மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.
ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போல முகமும், விளங்கும் மேரு மலை போன்ற பெரிய மார்பையும் கொண்டு, தூரத்தில் வருகின்ற ஆண்களின் முன் எதிர்ப்பட்டு (தங்கள்) வியாபாரப் பேச்சைப் பேசி, நீண்ட நாட்கள் பழகிய பெண்களைப் போல, அவர்களுடைய இரண்டு தோள்களிலும் விழுந்து அணைத்து, ஒரு வஞ்சனைப் பேச்சினால் வரும்படி செய்து, (அவர்களைத் தங்கள்) வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து, வலிய அணைத்து கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாட்களில் வந்தவர்களுடைய பொருளை எல்லாம் கொள்ளை அடித்து, பின்பு (அவருடைய பொருளைக் கைப்பற்றிய பின்) மெளனமாக இருந்தும், வீணாகச் சில சண்டைகள் போட்டு இகழ்ந்து பேசியும், மோசமே செய்கின்ற வஞ்சனை மிக்க துஷ்டர்கள் மேல் காம இச்சை கொண்டு மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியைப் பெறுவேனோ? ஆதி மூர்த்தியே என்று போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி அவனை நன்கு பொடியாகும்படிச் செய்து, மயிலில் ஏறி கோபித்த நெடிய வேலாயுதனே, இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று, உரலில் ஏறி உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனாகிய (கண்ணனுடைய) மருகோனே, வாது செய்ய வந்த காளியை வென்ற ஆதி நாயகர், மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும் அழகிய பாதங்களை உடைய சிவபெருமான், நறு மணமுள்ள சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு, அழகிய லக்ஷ்மி மார்பில் விளங்கும் திருமாலும் வணங்கும் (வடதிருமுல்லைவாயில் இறைவராகிய) மாசிலாமணி* ஈசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே. 
* வடதிருமுல்லைவாயிலில் இருக்கும் சிவபிரான் மாசிலாமணி என்ற நாமம் படைத்தவர்.இத்தலம் சென்னைக்கு அருகில் உள்ள ஆவடிக்குப் பக்கத்தில் இருக்கிறது.
பாடல் 684 - வடதிருமுல்லைவாயில் 
ராகம் - ...; தாளம் -
தய்யதன தான தந்தன
     தய்யதன தான தந்தன
          தய்யதன தான தந்தன ...... தனதான
மின்னிடைக லாப தொங்கலொ
     டன்னமயில் நாண விஞ்சிய
          மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே 
மெள்ளவுமு லாவி யிங்கித
     சொல்குயில்கு லாவி நண்பொடு
          வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக 
கன்னியர்கள் போலி தம்பெறு
     மின்னணிக லார கொங்கையர்
          கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான 
கண்ணியிலு ளாக சுந்தர
     பொன்னியல்ப தார முங்கொடு
          கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய் 
சென்னியிலு டாடி ளம்பிறை
     வன்னியும ராவு கொன்றையர்
          செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா 
செம்முகஇ ராவ ணன்தலை
     விண்ணுறவில் வாளி யுந்தொடு
          தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே 
துன்னியெதிர் சூரர் மங்கிட
     சண்முகம தாகி வன்கிரி
          துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே 
சொல்லுமுனி வோர்த வம்புரி
     முல்லைவட வாயில் வந்தருள்
          துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.
மின்னல் போன்ற இடையில் கலாபம் என்னும் இடை அணியும் ஆடையின் முந்தானையும் விளங்க, அன்னமும், மயிலும் வெட்கம் அடையும்படியான (சாயலும், நடை அழகும்) அவைகளின் மேம்பட்ட மாதர் கூட்டம் ஒருமித்து ஒரு தெருவிலே மெதுவாக உலாவி, இன்பகரமான சொற்களை குயில் போலக் கொஞ்சிப்பேசி விரைவில் நட்பு பாராட்டி, வில்லைப் போன்ற புருவமும், கண்கள் அம்பு போலவும் கொண்டு காமம் மிக்க பெண்கள் போல, மின்னல் போல் ஒளி வீசும் அணி கலன்களையும், செங்கழு நீர் மாலையையும் பூண்டுள்ள இன்ப நலம் பெறுகின்ற மார்பினை உடையவர்களாகிய விலைமாதர்களின் வலையில் நான் அகப்படாமல், அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி, அழகிய பொலிவு நிறைந்த தாமரைத் திருவடிகளையும் கொடுத்து, கண் திருஷ்டி வராதபடி இனிமையுடன் என்னை ஆண்டருளுக. தலையில் ஊடுருவும் இளம் பிறையையும், வன்னியையும், பாம்பையும், கொன்றை மலரையும் கொண்டவர், சிவந்த ரத்தினங்கள் விளங்கும் சடையர் எனது தந்தையாகிய சிவபெருமானின் குரு நாதனே, (ரத்தத்தால்) செந்நிறம் காட்டிய ராவணனின் தலை ஆகாயத்தில் தெறித்து விழும்படி வில்லினின்றும் அம்பைச் செலுத்தியவனும், தெய்விக பொன் மயமான (சுதர்ஸன) சக்கரத்தை ஏந்திய அழகிய கையனுமாகிய திருமாலின் மருகனே, நெருங்கி எதிர்த்து வந்த அசுரர்கள் அழிய, ஆறு திருமுகங்களுடன் விளங்கி, வலிய கிரெளஞ்ச மலை, ஏழு மலைகள் ஆகியவை பதை பதைத்து மாள, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, புகழ்பெற்ற (பிருகு, வசிஷ்டர் முதலிய) முனிவர்கள் தவம் செய்த வடதிருமுல்லை வாயிலில்* வந்தருள் பாலிக்கும், சுத்தமான மேலான ஞானமுள்ள தேவர்களின் பெருமாளே. 
* வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.
பாடல் 685 - திருவலிதாயம் 
ராகம் - ஷண்முகப்ரியா 
தாளம் - அங்கதாளம் - 8 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3
தனதய்ய தானதன ...... தனதான
மருமல்லி யார்குழலின் ...... மடமாதர் 
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல் 
இருநல்ல வாகுமுன ...... தடிபேண 
இனவல்ல மானமன ...... தருளாயோ 
கருநெல்லி மேனியரி ...... மருகோனே 
கனவள்ளி யார்கணவ ...... முருகேசா 
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே 
திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.
வாசனை வீசும் மல்லிகை மலர் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை காம மயக்கத்தால் நினைந்து நினைந்து அடிநாயேன் அலைவுறாமல், நன்மை நல்கும் உன் இரண்டு திருவடிகளை விரும்பிப் போற்ற தக்கதான பெருமையும் மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ? கருநெல்லிக்காய் போல பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே, பெருமை வாய்ந்த வள்ளி தேவியின் கணவனே, முருகேசா, திருவலிதாயம்* என்ற தலத்தில் வீற்றிருப்பவனே, விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே. 
* திருவலிதாயம் இப்போது 'பாடி' எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.
பாடல் 686 - திருவொற்றியூர் 
ராகம் - ...; தாளம் -
தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதான
கரியமுகில் போலு மிருளளக பார
     கயல்பொருத வேலின் ...... விழிமாதர் 
கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர
     களபமுலை தோய ...... அணையூடே 
விரகமது வான மதனகலை யோது
     வெறியனென நாளு ...... முலகோர்கள் 
விதரணம தான வகைநகைகள் கூறி
     விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய் 
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்
     அவர்கள்புக ழோத ...... புவிமீதே 
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ
     அமரர்குல நேச ...... குமரேசா 
சிரகரக பாலர் அரிவையொரு பாகர்
     திகழ்கநக மேனி ...... யுடையாளர் 
திருவளரு மாதி புரியதனில் மேவு
     ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.
கரு நிறமான மேகத்தைப் போன்று இருண்ட கூந்தல் பாரத்தையும், கயல் மீனுக்கு இணையான வேல் போன்ற கண்களையும் உடைய விலைமாதர்களின் காமப் புணர்ச்சியில் தோய்ந்து, கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள மார்பகங்களில் படிய, படுக்கையில் காம சம்பந்தமான இன்பரச சாஸ்திரங்களைப் படிக்கின்ற வெறி கொண்டவன் இவன் என்று என்னை நாள் தோறும் உலகத்தினர் சுருக்கு என்று தைக்கும்படியாக பரிகாசப் பேச்சுக்ளைப் பேசி இகழ்வதற்கு முன்னர் ஞான கடாட்சத்தைத் தந்து அருள்வாயாக. திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், சிவ யோகிகள் ஆகிய இவர்கள் உனது திருப்புகழைப் பரவி ஓத, பூமியில் மேம்பட்டு விளங்கும் நடராஜனாகிய சிவ பெருமான் போற்றும் குரு ராஜ மூர்த்தியே, தேவர் குலத்துக்கு அன்பனே, குமரேசனே, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், உமா தேவியை தனது இடது பக்கத்தில் வைத்திருப்பவரும், விளங்கும் பொன் நிறமான மேனியை உடையவரும் ஆகிய சிவ பெருமான் வீற்றிருக்கும் செல்வம் கொழிக்கும் ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில்* விளங்கும் வெற்றி முருகனே, தேவர்கள் பெருமாளே. 
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.
பாடல் 687 - திருவொற்றியூர் 
ராகம் - தன்யாஸி 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1
தனதத்தன தானதன தனதத்தன தானதன
     தனதத்தன தானதன ...... தனதானா
சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச
     சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா 
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித
     தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு 
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி
     களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக் 
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ
     கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ 
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்
     பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே 
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய
     குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா 
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை
     யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா 
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க
     ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.
பிரகாசமான உருவத்தை உடையவனே, சராசரம் யாவையும் கொண்ட பேருருவனே, பிரம்மப் பொருளாக நின்று, உண்மையான சுகத்தைத் தருபவனே, அந்தணரின் தேஜஸை உடையவனே, இன்ப சுபப் பொருளே, அழியாத சுத்தப் பிரகாசனே, மதங்களின் தொந்தரவைக் கடந்த இன்பம் கூடியவனே, பலவகையான பராக்கிரமத்தை உடையவனே, மாதரின் வயிற்றிடையே ஊறும் கருவில் பிறவாதபடி, உன் திருவுருவில் விரும்பத்தக்க திருவடிகளைப் போற்றும் கீத வகைகளில் மேம்பட்டவனாய் யான் ஆகி, கருணை ஒளிப்பிழம்பே, உன் திருவருள் கூடுவதால் குற்றமற்ற சிவகதியை யான் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ? நிறமுள்ள சேவல் நிறைந்து விளங்கும் கொடியை உடையவனே, போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலினை பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே, திருமாலின் மருகனே, குமரனே, கீர்த்தி உள்ளவனே, குகனே, மிகத் தூய்மையான பேரொளியோனே, குணக் குறைவுள்ளவரும் ஆசை மிகுந்தவருமான அசுரர்களின் குலத்துக்கே யமனாக நின்றவனே, லக்ஷ்மி சேர்ந்து பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில்* கடல் அலைக்குச் சமீபத்தில் இருக்கும் ஆதிசிவன் அருளிய குழந்தையே, விளக்கம் கொண்ட யோகத்திலும், தவத்திலும் மிக்க சிறப்பு அடைந்த மகா தவசிகளின் நெஞ்சம் என்னும் இடத்திலே வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.
பாடல் 688 - திருமயிலை 
ராகம் - ராமப்ரியா ; தாளம் - ஆதி
தனன தனதனன தனன தனதனன
     தனன தனதனன ...... தனதான
அமரு மமரரினி லதிக னயனுமரி
     யவரும் வெருவவரு ...... மதிகாளம் 
அதனை யதகரண விதன பரிபுரண
     மமைய னவர்கரண ...... அகிலேச 
நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
     நிமிர சமிரமய ...... நியமாய 
நிமிட மதனிலுண வலசி வசுதவர
     நினது பதவிதர ...... வருவாயே 
சமர சமரசுர அசுர விதரபர
     சரத விரதஅயில் ...... விடுவோனே 
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
     தரர ரரரரிரி ...... தகுர்தாத 
எமர நடனவித மயிலின் முதுகில்வரு
     மிமைய மகள்குமர ...... எமதீச 
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
     மெமது பரகுரவ ...... பெருமாளே.
சிறந்த தேவர்களில் மேம்பட்டவனான இந்திரன், பிரம்மா, திருமால் ஆகியோர் அஞ்சும்படி வந்த ஆலகால விஷத்தினை (அடக்குவதற்காக) மனச் சஞ்சலத்தை ஹதம் செய்பவனே, சிந்தை நிறைந்த சாந்தர் மனத்தில் இருப்பவனே, அகில உலகிற்கும் ஈசனே, எம் தாழ்வு நீங்கி யாம் நிமிர்ந்திட உன் திருவடி அருளவேண்டும், (அவ்விஷம்) எம்மை நெருங்கி வருகிறது, என்றெல்லாம் எல்லா தேவர்களும் முறையிட, நினைக்கின்ற மாத்திரத்திலேயே, வாயு வேகத்தில், (சரணடைந்தவர்களைக் காப்பதுதான்) கடமையென்று நிமிஷ நேரத்தில் (அந்த விஷத்தை) உண்டருளிய சிவனுடைய சிரேஷ்டமான குமாரனே, உனது குகசாயுஜ்ய பதவியைத் தந்திட வரவேண்டும். ஒற்றுமையான பெருந்தன்மையுள்ள தேவர்களுக்கு பகைவர்களாகிய அசுரர்கள் மேல் சத்தியமான ஆக்ஞாசக்தி வேலை விடுவோனே, (என்னும் அதே ஒலியில்) (முருகன் அடியாராகிய) எம்மவருக்கு ஏற்ற நடனவகைகள் செய்யும் மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே, இமயராஜன் மகள் பார்வதி பெற்ற குமரா, எம் இறைவனே, தகுதி வாய்ந்துள்ள திருமயிலை* நகரிலே இன்பமாக வாழும் எங்கள் மேலான குருதேவப் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
பாடல் 689 - திருமயிலை 
ராகம் -....; தாளம் -
தனனத் தனதன ...... தனதான
அயிலொத் தெழுமிரு ...... விழியாலே 
அமுதொத் திடுமரு ...... மொழியாலே 
சயிலத் தெழுதுணை ...... முலையாலே 
தடையுற் றடியனு ...... மடிவேனோ 
கயிலைப் பதியரன் ...... முருகோனே 
கடலக் கரைதிரை ...... யருகேசூழ் 
மயிலைப் பதிதனி ...... லுறைவோனே 
மகிமைக் கடியவர் ...... பெருமாளே.
வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும், அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும், மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும், வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும் இறந்து படுவேனோ? கயிலைப்பதியில் வீற்றிருக்கும் சிவபிரானின் குழந்தை முருகனே, கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும் திருமயிலைப்பதியில்* வீற்றிருப்பவனே, பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே. 

பாடல் 690 - திருமயிலை 
ராகம் - பூர்வி கல்யாணி 
தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2 
தகதிமி-2, தகதிமிதக-3
தனன தானன தானன தந்தத் ...... தனதான
அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே 
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே 
திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத் 
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே 
விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா 
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே 
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா 
மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
தர்மமே இல்லாத மிக்க பாவம் நிறைந்த வஞ்சனை கொண்ட செயல்களாலே, அடியவனாகிய நான் உடல் தளர்ச்சி அடைந்தும் மனம் மட்டும் கொஞ்சமும் சோர்வு அடையாமல், வெற்றி விளங்கும் உனது செவ்விய பாதமலர்களை வணங்கிப் போற்றி உன் திருவருள் கிடைக்குமாறு நாள்தோறும் நல்ல வாழ்வு ஏற்படும் இன்பத்தைத் தந்தருள்வாயாக. வீரமுள்ள அசுரர்களின் படைகள் பயப்படும்படியாகப் போர் புரிந்த வேலனே, பரிசுத்தமானவனே, தாயார் அபிராமி தந்த செந்நிறத்துக் குழந்தையே, வேடர்குலத்தில் ஒளிபடைத்த நெற்றியுள்ள வள்ளிமீது வேட்கை கொண்ட அழகிய தோள்கள் அமைந்த வீரனே, திருமயிலை* மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
பாடல் 691 - திருமயிலை 
ராகம் - கீரவாணி 
தாளம் - அங்தாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான
இகல வருதிரை பெருகிய சலநிதி
     நிலவு முலகினி லிகமுறு பிறவியி
          னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர 
இசையு முனதிரு பதமலர் தனைமன
     மிசைய நினைகிலி யிதமுற வுனதரு
          ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உமைபாகர் 
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி
     மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி
          வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர் 
மயம தடரிட இடருறு மடியனு
     மினிமை தருமுன தடியவ ருடனுற
          மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே 
சிகர தனகிரி குறமக ளினிதுற
     சிலத நலமுறு சிலபல வசனமு
          திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத 
சிரண புரணவி தரணவி சிரவண
     சரணு சரவண பவகுக சயனொளி
          திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத 
அகர உகரதி மகரதி சிகரதி
     யகர அருளதி தெருளதி வலவல
          அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே 
அழகு மிலகிய புலமையு மகிமையும்
     வளமு முறைதிரு மயிலையி லநுதின
          மமரு மரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.
மாறுபட்டு எழும் அலைகள் பெருகிய கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப் பெறவும், வருகின்ற துன்பத்தோடு மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கவும், இணைந்த உன்னிரு பாத மலர்களை மனம் பொருந்த நினையாதவன் யான். இன்பமுற உன் திருவருள் கைகூட உருகித் துதியாதவன் யான். பக்தியால் தளர்ச்சி அடையாதவனும், வணங்காதவனும் யான். உமாதேவியைப் பாகத்தில் வைத்த சிவபிரான் மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன் யான். திருப்தியே இல்லாத, பேதைமை குறையாதவன் யான். அறிவும், தெளிவும் அறியாதவன் யான். பேச்சற்றுப்போய் மெளன நிலையினில் இருக்காதவன் யான். அழகிய பெண்களின் மயக்கும் எழிலானது மனத்தில் இடம் பிடிக்க, அதனால் துன்பம் அடைகிற அடியேனும், இன்பத்தை நல்கும் உன் அடியார்களுடன் கூடிப் பொருந்தும் திருவருளைத் தரும் உன் கிருபைக்கு ஆளாகும் ஒரு நாளும் கிடைக்குமோ? உயர்ந்த மார்பினளான குறப்பெண் வள்ளி இனிமை அடையுமாறு தோழன் போன்று அவளிடம் நன்மைமிக்க சில பல வார்த்தைகளை அமுதமென அள்ளி வீசி, பேச்சுப் பயின்ற ஆறுமுக வேளே, நிறைந்து விளங்கும் அருள் கொண்ட நீதிமானே, பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள குணமுடையோனே, நிரம்பிய கேள்வி உடையவனே, அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, குகனே, சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே, அதிக மேன்மை உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே, அகரம் போன்ற முதற்பொருளே, உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத் தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே, யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே, மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட அசுரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனே, அழகும், விளங்கும் கல்வி ஞானமும், பெருமையும், செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும் வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே, அடியவர்கள்தம் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
பாடல் 692 - திருமயிலை 
ராகம் -....; தாளம் -
தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான
இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு
     இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி 
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த
     இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப் 
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு
     பருவரதி போல வந்த ...... விலைமானார் 
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற
     படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ 
கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க
     கலபமயில் மேலு கந்த ...... குமரேசா 
கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு
     கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே 
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த
     மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக 
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து
     மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
தமக்கு ஒப்பில்லாதனவான இரண்டு கயல் மீன்கள் என்னும்படி புரண்டு இரண்டு காதுகளின் மேலே நெருங்கிப் போர் தொடுத்து, விளங்கும் வில்லை உடைய மன்மதன் செலுத்திய மலர் அம்பைக் காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும், கச்சணிந்த அதிக பாரமான பெரும் மார்பகங்களின் மீது முத்து மாலை அணிந்தவர்களும், விளங்கும் இளமை வாய்ந்த (மன்மதனின் மனைவி) ரதியைப் போல வந்தவர்களும் ஆகிய விலைமாதர்கள் மேற்கொள்ளும் தொழிலில் நான் சுழன்று அலைந்து, அவர்கள் மீது காம இச்சை என்னும் பெருங்குழியிலே மயங்கி விழலாமோ? கண கண என்ற ஓசையோடு ஒலிக்கும் வீர தண்டைகள் திருவடிகளில் விளங்க, தோகை மயிலின் மேல் மகிழ்ந்து ஏறும் குமரேசா, கோபித்து வந்த சூரனுடைய உடல் இரண்டு பிளவாகப் பிரியும்படிச் செய்து, அவன் அலறி விழும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, அழகிய முடியாகிய சடையில், கொன்றை, அறுகம்புல், பிறைச் சந்திரன், கங்கை இவற்றை அணிந்துள்ள, (மேரு) மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது ஒரு பாகத்தில் உள்ள, மலை அரசனாகிய பர்வத ராஜனுடைய மகளான, பார்வதியின் செல்லக் குழந்தை என்னும்படி வளர்ந்து, திருமயிலைத்தலம் சிறப்புடன் வாழும்படியாக அங்கு வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
பாடல் 693 - திருமயிலை 
ராகம் - ....; தாளம் -
தனதனன தான தத்த தனதனன தான தத்த
     தனதனன தான தத்த ...... தனதான
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
     கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங் 
கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற
     கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும் 
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி
     வனிதைமடல் நாடி நித்த ...... நலியாதே 
வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி
     மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும் 
துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப
     துயிலதர னாத ரித்த ...... மருகோனே 
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர
     துரகதக லாப பச்சை ...... மயில்வீரா 
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப
     அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா 
அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து
     அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.
கலவைச் சாந்தும் மணி மாலையும் கொண்ட, தாமரை மொட்டுப் போன்ற மார்பின் மீது, வீரம் வாய்ந்தவனும், குழப்பத்தை உண்டு பண்ணும் காம விகாரம் தருபவனுமாகிய மன்மதன் செலுத்திய அம்புகளாலும், இனிமையான மொழிகளை உடைய மின்னல் போன்ற ஒளி கொண்ட மாதர்கள் அனைவரும் வேண்டுமென்றே பழிச் சொற்களைப் பேசுவதாலும், சேர்ந்துள்ள நெருப்புப் போல உலவி வரும் பூரண நிலவாலும், செழுமை கொண்ட, விரிந்த மலர்களால் அமைந்த படுக்கையின் மெத்தை மீது உருகும் இப்பெண் மடலேற* விரும்பி நாள் தோறும் துன்பம் அடையாமல், ரேகைகள் கொண்ட வண்டுகள் உலவி நெருங்கியுள்ள (மாலையை அணிந்த) இரண்டு புயங்களாலும் கலந்து, அவளது எண்ணம் வெற்றி பெற இந்த மலர்ப்படுக்கையில் நீ அணைக்க வர வேண்டுகின்றேன். துளசி மாலை அணிந்த மார்பன், சக்கரம் தரித்தவன், விஷ்ணு, முராசுரனைக் கொன்ற முராரி, ஆதிசேஷன் என்னும் பாம்பின்மேல் துயில் கொள்ளுபவன் விரும்புகின்ற மருகனே, வேதம், உபநிஷதம், வேள்வி இவை நிரம்பிய திருமயிலையில்** வீற்றிருப்பவனும், உக்ரமான குதிரையாகிய, தோகையுடைய பச்சை மயில் ஏறும் வீரனே, அளகாபுரி நகரத்துச் செல்வம் கொண்ட செட்டிக் குலத்தில் பிறந்த (பூம்பாவை என்னும்) பெண்ணின் உயிரை மீளும்படி அழைக்க வேண்டி இறைவன் திருவருள் பரவிய பதிகத்தை (ஞான சம்பந்தராக அவதரித்துச்) சொன்ன குமரேசனே, அருமையான கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, அசுரர்களை வேரோடு அழித்து, தேவர்களைப் பொன்னுலகில் வாழ வைத்த பெருமாளே. 
* கடவுள் சம்பந்தமாக மட்டும் பெண்பாலோர் மடலேறுதல் கூறப்படும்.மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
** திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, ஊராரின் வசைப் பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 694 - திருமயிலை 
ராகம் - கல்யாண வஸந்தம் 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
     கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர் 
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு
     கனவி கார மேபேசி ...... நெறி பேணாக் 
கொடிய னேது மோராது விரக சால மேமூடு
     குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே 
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு
     குவளை வாகும் நேர்காண ...... வருவாயே 
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட
     பணமு மாட வேநீடு ...... வரைசாடிப் 
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு
     பதிய தாக வேலேவு ...... மயில்வீரா 
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை
     வனச வாவி பூவோடை ...... வயலோடே 
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான
     மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.
கடுமையான கோபம் குறையாத சங்கற்பங்களை உடைய வஞ்சகர்கள், கீழ்க்குணத்தவர்கள், கலகத்தையே செய்கின்ற பாழான மூடர்கள், தீவினையையே விரும்புவோர்கள், வஞ்சனை கொண்ட இழிந்தவர்கள், (இத்தன்மையருடைய) நல்லது ஆகாத முறைகளை விரும்பியே, மிக மோசமான அவலட்சணங்களையே பேசி நன்னெறியைப் போற்றாத கொடியவனாகிய நான் எதையும் ஆராய்ந்து பார்க்காமல், வெறும் ஆசை ஜாலமே மூடியுள்ள இந்தக் குடிசையாகிய உடலில் இருந்து கொண்டே தினந்தோறும் அழிவுறாமல், விளங்கும் மயிலின் மீது ஆறுமுகங்களும், வேலும், பன்னிரண்டு குவளை மலர்மாலை அணிந்த தோள்களும், அடியேன் நேரில் கண்டு தரிசிக்குமாறு நேர் எதிரே வருவாயாக. பூமியோடு, பெரிய மேருமலை அதிரும்படியாகச் செலுத்தி, ஆதிசேஷனின் பணாமகுடங்கள் அசைவுறவும், பெருமலைகளை மோதி, பரந்த கடலில் நீர் கொந்தளித்து மோதவும், அசுரர்கள் இறக்கவும், தேவர்களின் நாடு செழிப்பான நகராகவும், வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, அழகோடு வளர்ந்து ஆகாயம் வரை ஓங்கி மிளிரும் பலா மரங்களின் பெரிய சோலைகளும், தாமரைக் குளமும், நீர்ப் பூக்கள் நிறைந்த ஓடைகளும், வயல்களும், அழகிய மாடங்களும், சிறந்த மேடைகளும், கோபுரங்களும் ஒன்று கூடி விளங்கும் மயிலாப்பூரில்* வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
பாடல் 695 - திருமயிலை 
ராகம் - சுபபந்துவராளி 
தாளம் - கண்ட ஏகம் - 5
தனனா தனனாதன தனனா தனனாதன
     தனனா தனனாதன ...... தனதான
திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு
     திரிவே னுனையோதுதல் ...... திகழாமே 
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ
     சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால் 
வரைமா துமையாள் தரு மணியே குகனேயென
     அறையா வடியேனுமு ...... னடியாராய் 
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு
     மகநா ளுளதோசொல ...... அருள்வாயே 
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு
     மிழிவா கிமுனேயிய ...... லிலராகி 
இருளா மனதேயுற அசுரே சர்களேமிக
     இடரே செயவேயவ ...... ரிடர்தீர 
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ
     மதமா மிகுசூரனை ...... மடிவாக 
வதையே செயுமாவலி யுடையா யழகாகிய
     மயிலா புரிமேவிய ...... பெருமாளே.
அலைகள் கொண்ட நீண்ட கடலால் சூழப்பட்ட பூமியிலே உலகத்தாரோடு உன்னை ஓதிப் புகழ்தல் இன்றித் திரிகின்றேன். நாள்தோறும் முன்னதாகத் துதிக்கும் மனநிலை நிரம்பப் பெற்று, அப்படிப்பட்ட மனம் வாய்த்த பின்னர், சிவகுமாரனே, மும்மூர்த்திகளின் தலைவனே, இமயமலை மாதரசி உமையாள் பெற்ற மணியே, குகனே என்று ஓதி அடியேனும், உன் தொண்டர்களாய் வழிபடும் அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற விசேஷமான நாளும் எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக. தலைமையான யானை ஐராவதத்தின் தேவனாம் இந்திரனும், ஏனைய தேவர்கள் அனைவரும், தாழ்ந்த நிலையை அடைந்து, முன்னர் தமது தகுதியை இழந்தவராகி, மயக்க இருளடைந்த மனத்தினராகி, அசுரத் தலைவர்கள் மிகவும் துன்பங்கள் செய்யவே, அந்த தேவர்களது துயரம் நீங்க, வீரமிக்க சிறந்த வேலினைக் கொண்டு உடல் இரண்டு கூறுபட, ஆணவமிக்க சூரனை, அவன் மாமரமாக உருமாறினும், அழித்து வதை செய்த பெரும் வலிமையை உடையவனே, அழகு வாய்ந்த மயிலாப்பூர்* தலத்தில் வாழ்கின்ற பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
பாடல் 696 - திருமயிலை 
ராகம் -....; தாளம் -
தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான
நிரைதரு மணியணி யார்ந்த பூரித
     ம்ருகமத களபகில் சாந்து சேரிய
          இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே 
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி
     முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை
          யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர 
விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர
     மிசைதர இலவிதழ் மோந்து வாயமு
          தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும் 
வினையனை யிருவினை யீண்டு மாழ்கட
     லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி
          யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ...... மொருநாளே 
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை
     யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி
          பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி 
பகவதி யிருசுட ரேந்து காரணி
     மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி
          படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே 
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க
     ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ
          முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே 
குலநறை மலரளி சூழ்ந்து லாவிய
     மயிலையி லுறைதரு சேந்த சேவக
          குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
வரிசையாய் அமைந்த ரத்தின அணி கலன்கள் நிறைந்ததாய், மிக்கெழுந்ததாய், கஸ்தூரி சந்தனம் அகில் இவைகளின் சாந்து சேர்ந்துள்ள இள முலைகள் மார்பின் மேல் அணைந்து நல்ல மலர்ப் படுக்கையின் மேல் இடுப்பில் உள்ள ஆடை தளர்ந்து (தரையில்) விழுந்திட, நல்ல சந்திரனைப் போன்ற முகத்தில் வியர்வு எழ, கண்கள் பாய்ந்து நீண்ட குண்டலங்கள் உள்ள காதுகளோடு சண்டை செய்ய, இரண்டு கைகளில் அணிந்த பெரிய வளையல்கள் ஒலி மிகச் செய்ய, நறு மணம் உள்ள மலர்கள் நிறைந்த கூந்தல் சரிவுற்று, (கால்களில் உள்ள) சிலம்பு ஒலி செய்ய, இலவ மலர் போன்ற சிவந்த வாயிதழை முத்தமிட்டு வாயிதழின் அமுதம் போன்ற ஊறலை முறையே பருகும் விருப்பத்தையே தக்க ஒழுக்கமாகத் தேடும் வினைக்கு ஈடானவனை, நல்வினை தீவினை என்பவற்றில் இப்பிறப்பிலும் ஆழ்ந்த கடல் போன்ற துன்பப் படுகின்ற நீர்ச்சுழியான தீக் குணத்தில் தாழ்ந்து போகின்ற என் புத்தி நல்ல கதியைப் பெறுமாறு உனது திருவருளைப் பெற்று வாழ்வதும் ஒரு நாள் கிடைக்குமோ? பரா சக்தி, சிவத்தினின்று பிரிவு படாதவள், சிவன் தேவி, சம்புவின் சக்தி உமை, எல்லா உலகங்களையும் அருளிய அருள் கொண்ட அழகி, அச்சம் தருபவள், மும் மூர்த்திகளுக்கும் மூத்தவள், நூற்றுக் கணக்கான நூல்களும், உபதேச ரகசியப் பொருள்களும் ஆய்ந்துள்ள பகவதி, சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களும் தரிக்கின்ற மூல தேவதை, இமய மலை அரசன் மகள் கெளரி, பல உருவினவளான அழகி, படர்ந்த சடையை உடைய சிவபெருமானது இடது பாகத்தில் நீங்காது விளங்கும் பார்வதி தேவி பெற்ற தலைவனே, ஒலிக்கின்ற கடல் கலங்க, கோபம் பொங்கி எழுந்த சூரர்களின் படைகள் அழிய, பெரிய கிரெளஞ்ச மலை வீழ்ந்து பொடிபட, வேகமாகச் செல்லும் மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, நல்ல தேன் உள்ள மலர்களில் உள்ள வண்டுகள் சூழ்ந்து உலாவும் மயிலாப்பூரில்* வீற்றிருக்கும் முருகனே, வீரம் வாய்ந்த குகனே, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, பொருந்திய தேவர்களின் பெருமாளே. 
* மயிலாப்பூர் சென்னை நகரின் மையத்தில் உள்ளது.
பாடல் 697 - திருமயிலை 
ராகம் - ....; தாளம் -
தனதன தத்தன தானா தானன
     தனதன தத்தன தானா தானன
          தனதன தத்தன தானா தானன ...... தனதான
வருமயி லொத்தவ ¡£வார் மாமுக
     மதியென வைத்தவர் தாவா காமிகள்
          வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர் 
மயலினி லுற்றவர் மோகா வாரிதி
     யதனிடை புக்கவ ராளாய் நீணிதி
          தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி 
தருபர வுத்தம வேளே சீருறை
     அறுமுக நற்றவ லீலா கூருடை
          அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக 
சரவண வெற்றிவி நோதா மாமணி
     தருமர வைக்கடி நீதா வாமணி
          மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ 
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி
     தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு
          திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ 
தெனவரி மத்தள மீதார் தேமுழ
     திடுவென மிக்கியல் வேதா வேதொழு
          திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம் 
உரை செயு முத்தம வீரா நாரணி
     உமையவ ளுத்தர பூர்வா காரணி
          உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே 
உயர்வர முற்றிய கோவே யாரண
     மறைமுடி வித்தக தேவே காரண
          ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
அசைந்து வரும் மயில் போன்றவர்கள், பொருள் கொடுப்பவர்கள் வந்தால் (அவர் முன்பு தமது) அழகிய முகத்தை பூரண நிலவைப் போல வைத்துக் கொள்பவர்கள், எதிர் பாய்தல் இல்லாத (உண்மையில் மோகம் கொள்ளாத) ஆசைக்காரிகள், ஒருவிதமான ஒழுங்கைக் கைப்பிடிக்கும், அழகு நிறைந்த, தகுதி வாய்ந்த மென்மையான (விலை) மாதர்கள், காம வசப்பட்டு அவர்களுடைய மோகம் என்னும் கடலில் புகுந்து அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டு (என்னுடைய) பெரிய சொத்துக்களை எல்லாம் தத்தம் செய்தும், மரம் போன்று அருட் குணம் இல்லாத லோபிகளாகிய விலைமாதர்கள், இவ் வேசையர் மாட்டு ஈடுபட்டு, நல்ல அறிவு அறவே அற்று மூழ்கிக் கிடப்பவன் நான். திருவருளைத் தரும் மேலான உத்தமனே, பெருமை வாய்ந்த ஆறு முகனே, நல்ல தவ விளையாடல்களை புரிபவனே, கூர்மை கொண்ட வேலைப் பிடித்த கரத்தனே, தரும மூர்த்தியே, பரிபூரணனே, மேலான யோக மூர்த்தியே, சரவண பவனே, வெற்றி விநோதனே, உயர்ந்த மணியைத் தருகின்ற பாம்பை அடக்குகின்ற, நீதியாயுள்ள, அழகிய மயிலின் மேல் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, உனது பற்றுக் கோடு என்னும் பெருமையைப் பெறுவேனோ? திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என்ற இவ்வாறான ஒலிகளுடன் திருமால் மத்தளம் மீது நிரம்ப வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று வாசிக்க, மிகுந்த தகுதி வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச் செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே, நாராயணி, உமையவள், வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற குழந்தையே, உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே, ஒப்பற்ற மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.
பாடல் 698 - திருவான்மியூர் 
ராகம் - தர்மவதி 
தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதான தானதன தனதான தானதன
     தனதான தானதன ...... தனதான
குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை
     குடிலான ஆல்வயிறு ...... குழையூடே 
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்
     குழல்கார தானகுண ...... மிலிமாதர் 
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி
     புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப் 
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை
     பொலிவான பாதமல ...... ரருள்வாயே 
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு
     நிகழ்பொத மானபர ...... முருகோனே 
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு
     நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா 
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி
     சிவநாத ராலமயில் ...... அமுதேசர் 
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்
     திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.
மார்பு எனப்பட்ட நிறைந்துள்ள மலை, தாமரையின் அழகிய நுண்ணிய நூல் போன்ற இடை, கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற வயிறு, காதின் குண்டலங்களுக்கு குறி போகின்ற மீன் போன்ற கண்கள், சந்திரனைப் போன்ற அழகிய முகமாகிய நிறைந்த மலர், மேகத்தைப் போன்ற கூந்தல் என்ற நற்குணமில்லாத பொது மகளிரின் தோள்களை அணைக்கும் ஆசையால் என் மனம் உன்னை நாடாதபடி, இழிந்தவனாகிய நான் இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழியிலே மிகுந்த சேர்க்கையாகி, புகழ் பெற்ற இப்பூமியிலே அழிவுற்று முடிந்துபோகாதபடி உன் பிரகாசமான பாதத் தாமரையைத் தந்தருள்வாயாக. மெய்யான நாராயணமூர்த்தியின் அழகிய மருகனே, உள்ளக் களிப்பை மிகுத்து உண்டாக்கும் ஞான சொரூபமான மேலான முருகனே, பொக்கிஷம் போன்ற சிறந்த ஞான மந்திரத்தை, சிவபிரானுடைய இரண்டு செவிகளிலும் உபதேசித்து அருளிய சாமர்த்தியசாலியே, அசுரர்களின் குலத்துக்கே யமனாக இருந்தவனே, நான்கு திசைகளிலும் முகத்தைக் காட்டும் பிரமன், சுதர்ஸனம் என்ற சக்ரதாரியான திருமால், இந்திரன் முதலான தேவர்கள் பணிகின்ற சிவபெருமான், விஷத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசருடைய விளக்கம் வாய்ந்த குழந்தையே, ஆகாயத்தை அளாவும்படியான அழகிய மாளிகை மாடங்கள் உயர்ந்துள்ள திருவான்மியூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவான்மியூர் சென்னையின் ஒரு பகுதி. மயிலாப்பூருக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.
பாடல் 699 - கோசைநகர் 
ராகம் -....; தாளம் -
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன ...... தனதான
ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற
     தாலிலையெ னாமதன ...... கலைலீலை 
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி
     லாசைமிக வாயடிய ...... னலையாமல் 
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு
     னானபத மாமலரை ...... நலமாக 
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை
     நாடியரு ளேயருள ...... வருவாயே 
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு
     சீதசல மாசடில ...... பரமேசர் 
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ
     சீறிவரு மாவசுரர் ...... குலகாலா 
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு
     பாலுமுற வீறிவரு ...... குமரேசா 
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு
     வேசமுரு காவமரர் ...... பெருமாளே.
அன்பும் இன்பமும் தருவதான கனத்த மார்பகங்கள், விலைமாதர்களுடைய இடுப்பு நூலைப் போன்றது, வயிறு ஆலின் இலையைப் போன்றது, என்று உவமை கூறி, மன்மதனுடைய காம சாஸ்திர விளையாடல்கள் எல்லாம் உண்டாகும் குழியான முக்கோணமான பெண்குறியில் மிக்க ஆசை கொண்டு அடியேன் அலைச்சல் உறாமல், நாதனே, நூறு கோடி ஆகம மந்திர உபதேசப் பொருள்களை சத்தத்தால் தெரிவிக்கும் சிலம்புகள் முன்னதாகவே விளங்கும் பாதத் தாமரைத் திருவடிகளை நன்மை பெறுமாறு, நான் நாள்தோறும் நினைக்கும்படி, உனது கருணையை நாடிவரும்படி, உனது திருவருளை அருள் புரிய வருவாயாக. குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு, அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர் (இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான் உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே, நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம் உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும் பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே, கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே, முருகனே, தேவர்களின் பெருமாளே. 
* கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.
பாடல் 700 - பெருங்குடி 
ராகம் - ....; தாளம் -
தனந்தன தனந்தன தனந்தன தனந்தன
     தனந்தன தனந்தன ...... தனதான
தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்
     தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ் 
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்
     தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந் 
துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர்
     தொடுந்தொழி லுடன்தம ...... க்ரகபாரஞ் 
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்
     சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ 
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு
     ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி 
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
     எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே 
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி
     ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலூரா 
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய
     பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.
பூமியில் உள்ள இடங்களில் இருக்கிற பெரிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மாதர்களின் பூரித்துள்ள வயிற்றில் செம்மையாக பத்து மாதங்கள் வளர்ந்து இருந்தனர். பின்னர் (குழந்தையாகப்) பிறந்தனர், படுக்கையில் கிடந்தனர், உட்கார்ந்தனர், அதன் பின் தவழ்ந்து சென்றனர், பிறகு நடக்கலுற்றனர். பின்பு சில காலம் கழிந்ததும், விளக்கமுற்ற நற்குணமுள்ள பெண்களோடு பொருந்தி இருந்தனர், அவர்கள் மீது மோக மயக்கம் கொண்டனர். தாம் மேற் கொண்ட தொழிலைச் செய்து, தமது இல்லற வாழ்க்கையைச் சுமந்தனர். அவ்வாழ்க்கையிலேயே உடன்பட்டு இருந்தனர். (தமது தொழில், பொலிவு, வலிமை இவை எல்லாம்) குன்றியவுடன் முடிவில் இறந்தனர். (இப்பிணத்தைச்) சுட்டு எரிக்கவும் இனி என்று மற்றவர்களின் வாயால் சொல்லக்கூடிய இப்பிறப்பை ஒழிக்க மாட்டேனோ? இலங்கையில் திகழ்ந்திருந்த வீடுகளுள் முழுமையான அன்பு இல்லாத எல்லா இடத்திலும், அக்கினியே, பற்றி எரிவாயாக என்று நீதியை எடுத்துரைத்து, நெருப்பை வைத்த குரங்காகிய அனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளுமாறு கோபத்துடன் எழுந்தருளிய ராமனாகிய திருமாலின் மருகனே, பலத்துடன், கிரெளஞ்ச மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம் கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே. பெரிய சோலைகளும் கரும்பும் வாழையும் நிறைந்த பெருங்குடிக்கு* அருகில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெருங்குடி சென்னைக்கு அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலம்.

ராகம் - சந்த்ர கெளன்ஸ்; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2 தகிட-1 1/2, தகதிமி-2

தான தத்தன தான தானன     தான தத்தன தான தானன          தான தத்தன தான தானன ...... தனதான

தார ணிக்கதி பாவி யாய்வெகு     சூது மெத்திய மூட னாய்மன          சாத னைக்கள வாணி யாயுறு ...... மதிமோக 
தாப மிக்குள வீண னாய்பொரு     வேல்வி ழிச்சிய ராகு மாதர்கள்          தாமு யச்செயு மேது தேடிய ...... நினைவாகிப் 
பூர ணச்சிவ ஞான காவிய     மோது தற்புணர் வான நேயர்கள்          பூசு மெய்த்திரு நீறி டாஇரு ...... வினையேனைப் 
பூசி மெய்ப்பத மான சேவடி     காண வைத்தருள் ஞான மாகிய          போத கத்தினை யேயு மாறருள் ...... புரிவாயே 
வார ணத்தினை யேக ராவுமு     னேவ ளைத்திடு போதுமேவிய          மாய வற்கித மாக வீறிய ...... மருகோனே 
வாழு முப்புர வீற தானது     நீறெ ழப்புகை யாக வேசெய்த          மாம திப்பிறை வேணி யாரருள் ...... புதல்வோனே 
கார ணக்குறி யான நீதிய     ரான வர்க்குமு னாக வேநெறி          காவி யச்சிவ நூலை யோதிய ...... கதிர்வேலா 
கான கக்குற மாதை மேவிய     ஞான சொற்கும ராப ராபர          காசி யிற்பிர தாப மாயுறை ...... பெருமாளே.

இந்த உலகிலேயே அதிக பாவியாய், மிக்க சூது நிறைந்த மூடனாய், மனத்திலே அழுந்திய திருட்டுப் புத்தியை உடையவனாய், மிகுந்த காம மயக்கத்தில் தாகம் மிக்க வீணனாய், போருக்கு உற்ற வேல் போன்ற கண்களை உடைய பொது மகளிர் தாம் பிழைப்பதற்கு உதவும் செல்வத்தை தேடித் தரும் நினைவையே கொண்டு, பரிபூரணமான சிவஞான நூல்களை ஓதுதலில் விருப்பம் கொண்டுள்ள அன்பர்கள் பூசுகின்ற மகிமை வாய்ந்த திருநீற்றை இட்டுக் கொள்ளாத இருவினையாளனாகிய (புண்ணிய பாப வினையாளனாகிய) அடியேனை திருநீற்றைப் பூசவைத்து, உண்மைப்பதவியாகிய உன் திருவடிகளை தரிசனம் செய்வித்து திருவருள்மயமான ஞானம் என்ற தூய அறிவும் எனக்குக் கிட்டுமாறு அருள் புரிவாயாக. கஜேந்திரன் என்ற யானையை முதலை முன்னொருநாள் வளைத்து இழுத்த போது அங்கு வந்து உதவிய மாயவன் திருமாலுக்கு மனம் மகிழச்செய்யும்படி விளங்கும் மருமகனே, பெருவாழ்வு வாழ்ந்த திரிபுரங்களின் பொலிவெல்லாம் சாம்பலாகப் போகுமாறு புகை எழச் செய்த சிறந்த திங்கட்பிறை அணிந்த சடைப் பெருமான்சிவபிரான் அருளிய புதல்வனே, யாவற்றிற்கும் மூல காரணனாகவும், இலக்காகவும் உள்ள நீதிப் பெருமான் சிவபிரானது சந்நிதிகளில் அறநெறியை ஓதும் பிரபந்தங்களான சிவநூலாகிய தேவாரத்தை, திருஞானசம்பந்தராக அவதரித்து, ஓதின ஒளி வேலனே, காட்டில் குறப்பெண் வள்ளியை விரும்பி அடைந்த ஞான மொழி பேசும் குமரனே, யாவர்க்கும் மேலானவனே, காசித்தலத்தில்* பிரபலமாக வீற்றிருக்கும் பெருமாளே. 
* காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது.ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.

பாடல் 652 - காசி 
ராகம் - ...; தாளம் -

தந்தத் தனதன தானன தானன     தந்தத் தனதன தானன தானன          தந்தத் தனதன தானன தானன ...... தனதான

மங்கைக் கணவனும் வாழ்சிவ ணாமயல்     பங்கப் படமிசை யேபனி போல்மதம்          வந்துட் பெருகிட வேவிதி யானவ ...... னருள்மேவி 
வண்டுத் தடிகைபொ லாகியெ நாள்பல     பந்துப் பனைபழ மோடிள நீர்குட          மண்டிப் பலபல வாய்வினை கோலும ...... வழியாலே 
திங்கட் பதுசெல வேதலை கீழுற     வந்துப் புவிதனி லேமத லாயென          சிந்தைக் குழவியெ னாவனை தாதையு ...... மருள்கூரச் 
செம்பொற் றடமுலை பால்குடி நாள்பல     பண்புத் தவழ்நடை போய்வித மாய்பல          சிங்கிப் பெருவிழி யாரவ மாயதி ...... லழிவேனோ 
அங்கைத் தரியென வேயொரு பாலக     னின்பக் கிருபைய தாயொரு தூண்மிசை          அம்பற் கொடுவரி யாயிரண் யாசுர ...... னுடல்பீறி 
அண்டர்க் கருள்பெரு மான்முதி ராவணி     சங்குத் திகிரிக ரோனரி நாரவ          ரங்கத் திருவணை மேல்துயில் நாரணன் ...... மருகோனே 
கங்கைச் சடைமுடி யோனிட மேவிய     தங்கப் பவளொளி பால்மதி போல்முக          கங்குற் றரிகுழ லாள்பர மேசுரி ...... யருள்பாலா 
கந்துப் பரிமயில் வாகன மீதிரு     கொங்கைக் குறமக ளாசையொ டேமகிழ்          கங்கைப் பதிநதி காசியில் மேவிய ...... பெருமாளே.

ஒரு பெண்ணும் அவளுடைய கணவனும் வாழ்ந்து பொருந்தி, காம இச்சை என்னும் ஒரு உந்துதல் தம் மீது அடைய, (அதன் விளைவாக) பனி போல சுக்கிலம் தோன்றி உள்ளே பரவ, பிரமனது அருள் கூடி (கருவானது) வண்டு தடித்து வளருவது போல் தடித்து, நாள் பல செல்ல, பந்தின் அளவாகி, பனம் பழத்தின் அளவாகி, இள நீர் போலவும், குடம் போலவும் நெருங்கி வளர்ந்து, பின்னும் பல பல வளர்ச்சியுடன், புணர்தல் செய்த அந்த இடத்தின் வழியாக, மாதங்கள் பத்து கழிந்த பின் தலை கீழாக வந்து பூமியில் பிறந்து, மகன் எனப் பேர் பெற்று, மனதுக்கு இனிய குழந்தையாகி, தாயும் தந்தையும் அன்பு மிகுந்து ஆதரிக்க, செவ்விய பொலிவுள்ள பருத்த முலையில் பாலைக் குடிக்கின்ற நாட்கள் பல செல்ல, பின்பு அழகிய தவழ் நடை நாட்களும் செல்ல, பல விதமான விஷம் போன்ற பெரிய கண்களை உடைய விலைமாதர்களோடு பொழுது போக்கும் பயனற்ற வாழ்க்கையில் அழிந்து போவேனோ? உள்ளங்கை நெல்லிக் கனி போல எளிதில் புலப்படுவான் (இறைவன்) என்று ஒரு பிள்ளையாகிய பிரகலாதன் கூற, இன்ப அன்புடனே ஒரு தூணிலிருந்து அழகிய பற்களைக் கொண்டு நரசிங்கமாய்த் தோன்றி, இரணியாசுரனுடைய உடலைக் கிழித்து, தேவர்களுக்கு உதவி செய்த பெருமான், தம்மை விட்டு நீங்காத ஆபரணங்களான பஞ்ச ஜன்யம் என்னும் சங்கும், சுதர்சனம் என்னும் சக்கரத்தையும் திருக் கரத்தில் கொண்டவன், (காவிரி, கொள்ளிடம் என்னும்) நதியின் கரையில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் தலத்தில் (ஆதிசேஷன் என்னும்) பெரிய படுக்கை மேல் பள்ளி கொள்ளும் திருமாலின் மருகனே, கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமானுடைய இடது பக்கத்தில் பொருந்தியுள்ளவளும், தங்கம், பவளம் இவைகளின் ஒளியைக் கொண்டவளும், பால் நிறத்து வெண் மதியைப் போல் திரு முகம் கொண்டவளும், இருள் கொண்ட கூந்தலை உடையவளுமாகிய பரமேஸ்வரி அருளிய குழந்தையே, பாய வல்ல குதிரை போன்ற மயில் வாகனத்தின் மேல், இரண்டு மார்பகங்களை உடைய குறப் பெண்ணாகிய வள்ளியுடன் ஆசையோடு மகிழ்கின்றவனே, கங்கை நதிக் கரையில் உள்ள தலமாகிய காசியில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 653 - காசி 
ராகம் - சாரங்கா; தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2, தக-1

தான தந்தன தானன ...... தனதான     தான தந்தன தானன ...... தனதான

வேழ முண்ட விளாகனி ...... யதுபோல     மேனி கொண்டு வியாபக ...... மயலூறி 
நாளு மிண்டர்கள் போல்மிக ...... அயர்வாகி     நானு நைந்து விடாதருள் ...... புரிவாயே 
மாள அன்றம ணீசர்கள் ...... கழுவேற     வாதில் வென்ற சிகாமணி ...... மயில்வீரா 
காள கண்ட னுமாபதி ...... தருபாலா     காசி கங்கையில் மேவிய ...... பெருமாளே.

வேழம்* என்ற பழங்களுக்கு ஏற்படும் நோய் தாக்கிய விளாம்பழம் போல உள்ளிருக்கும் சத்து நீங்கிய உடலை அடைந்து, எங்கும் காம இச்சை ஊறிப் பரவி, தினமும் அறிவின்மை மிகுந்த மூடர்கள் போன்று மிகுந்த தளர்ச்சியடைந்து, நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயாக. முன்பு சமணக் குருக்கள் கழுவில் ஏறி இறக்கும்படியாக வாது செய்து வென்ற (சம்பந்தராக வந்த) சிகாமணியே, மயில் வீரனே, விஷமுண்ட கண்டனாகிய உமாநாதன் சிவபிரான் தந்த குமரனே, கங்கைநதிக் கரையிலுள்ள காசிநகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வேழம் என்ற தேரை விளாம்பழத்துக்குள் பாய்ந்தால், பழம் உள்ளீடு இல்லாமல் வெறும் ஓடாகப் போய்விடும்.
** காசி என்ற 'வாரணாசி' கங்கைக் கரையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழு முக்தித் தலங்களுள் காசியும் ஒன்று.

பாடல் 654 - மாயாபுரி 
ராகம் - பந்துவராளி; தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3

தனன தனந்த தானன ...... தனதான     தனன தனந்த தானன ...... தனதான

சிகர மருந்த வாழ்வது ...... சிவஞானம்     சிதறி யலைந்து போவது ...... செயலாசை 
மகர நெருங்க வீழ்வது ...... மகமாய     மருவி நினைந்தி டாவருள் ...... புரிவாயே 
அகர நெருங்கி னாமய ...... முறவாகி     அவச மொடுங்கை யாறொடு ...... முனமேகிக் 
ககன மிசைந்த சூரியர் ...... புகமாயை     கருணை பொழிந்து மேவிய ...... பெருமாளே.

சிவாயநம என்ற பஞ்சாட்சரத்திலுள்ள 'சி'கரம் ஆகிய எழுத்தை உச்சரிப்பதால் கிடைக்கக்கூடியது சிவஞானமாகும். அந்த உச்சரிப்பால் அலைந்து அழிந்து போவன மனம், வாக்கு, காயம் இவற்றின் செயலும் ஆசைகளும் ஆகும். மகரம் என்னும் எழுத்தை நெருங்க உச்சரிக்கும்போது வீழ்ந்து அழிவதுதான் மஹாமாயை. உன்னை தியானித்து அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக. (வீரமஹேந்திரபுரத்தின்)* வீதிகளுக்கு மிக அருகே வந்தால் துன்பம் ஏற்பட்டு, மயக்கத்துடனும், தன்செயல் அற்றும் முன்பு சூரன்அரசாண்ட காலத்தில் அவதியுற்றுச் சென்று, ஆகாயத்தில் இருந்த பன்னிரண்டு சூரியர்களும் உன்னிடம் தஞ்சம் புக (சூர சம்ஹாரம் செய்து) அவர்களுக்குக் கருணை பொழிந்தனையே. மாயாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* சூரனது அரசாட்சியில் அவனது தலைநகராம் வீரமஹேந்திரபுரத்தின் வழியாகச் செல்லும் சூரியன் தனது உக்ரத்தைக் குறைத்துக்கொள்ள சூரன் ஆணையிட்டதால் சூரியன் பட்ட துன்பம் முருகனால் தீர்த்துவைக்கப்பட்டது.
** மாயாபுரி முக்தித் தலங்களில் ஒன்றான ஹரித்துவாரம் - உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.

பாடல் 655 - வயிரவிவனம் 
ராகம் - ஸரஸ்வதி ; தாளம் - அங்கதாளம் - 5 1/2 தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தனத்த தான தனதன தனத்த தான     தனதன தனத்த தான ...... தனதான

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு     மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே 
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு     மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே 
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப     னிருகர மிகுத்த பார ...... முருகாநின் 
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்     பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே 
சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி     சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா 
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள     துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா 
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்     வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி 
வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு     வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.

அரியதான கயிலை மலையை அசைத்து எடுக்க முயன்ற வீரனான ராவணன் நெரிபடும்படி தமது விரல்களை ஊன்றிய சிவபிரானின் இடது பாகத்தில் உள்ள அன்னை பார்வதி பெற்றருளிய குழந்தையே, அலை வீசும் கடலை அணையிட்டு அடைத்த ஸ்ரீராமன் மிக்க மனமகிழ்ச்சி கொள்ளும், அழகிய மயிலை வாகனமாகக் கொண்டு எட்டுத் திக்கிலும் நடத்திச் செல்லும், மருமகனே, சூரியனது ஒளி தம்மிடத்தே விளங்கும் முகங்கள் ஆறும், வரிசையான தோள்களும், பன்னிரண்டு கரங்களும் உடையவனே, மிகுந்த பெருமை வாய்ந்த முருகனே, உன் திருவடி மலரை உள்ளத்தில் தினமும் நினைத்துத் தொழுதிருக்கும் கருத்தை உடைய அடியார்களின் தாள்களைப் பணிந்திடவும் எனக்கு ஞானத்தைத் தந்தருள்வாயாக. வேதங்களை ஓதும் பிரமன் சொன்ன மொழிகளுள் முதலாவதான ஓம் என்ற பிரணவத்தின் பொருளை எனக்கு நீ சொல்லுக என தந்தை சிவனார் கேட்க அவ்வாறே பொருள் உரைத்த ஞான குரு நாதனே, தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செழிப்புடன் வாழவும், இருந்த சிறையினின்றும் தேவர்கள் யாவரும் மீளவும், வெட்டுண்டு அசுரர்கள் இறந்தொழியவும், வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, வாசனை மலர்கள் மணம் வீசும் நறுமணம் நிறைந்துள்ள மரங்கள் சூழ்ந்த வயல்கள் பக்கத்தில் உள்ள நீலோத்பல மலர்கள் மலர்ந்துள்ள நீர்நிலைகளின் செழிப்பு வாய்ந்த கரைகளோடு ஸரஸ்வதி என்னும் ஆற்றினிடத்தே விளங்குகின்ற வயிரவிவனம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* இது பஞ்சாப் மாநிலத்தில் ஸரஸ்வதி நதிக்கரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

பாடல் 656 - வெள்ளிகரம் 
ராகம் - சாமா; தாளம் - அங்கதாளம் - 15 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதன தனன தனதன தனன     தய்ய தனத்த தந்த ...... தனதானா

அடலரி மகவு விதிவழி யொழுகு     மைவ ருமொய்க்கு ரம்பை ...... யுடனாளும் 
அலைகட லுலகி லலம்வரு கலக     வைவர் தமக்கு டைந்து ...... தடுமாறி 
இடர்படு மடிமை யுளமுரை யுடலொ     டெல்லை விடப்ர பஞ்ச ...... மயல்தீர 
எனதற நினது கழல்பெற மவுன     வெல்லை குறிப்ப தொன்று ...... புகல்வாயே 
வடமணி முலையு மழகிய முகமும்     வள்ளை யெனத்த யங்கு ...... மிருகாதும் 
மரகத வடிவு மடலிடை யெழுதி     வள்ளி புனத்தில் நின்ற ...... மயில்வீரா 
விடதர திகுணர் சசிதரர் நிமலர்     வெள்ளி மலைச்ச யம்பு ...... குருநாதா 
விகசித கமல பரிபுர முளரி     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.

வலிமை வாய்ந்த திருமாலின் பிள்ளையாகிய பிரமன் எழுதிவிட்ட விதியின் வழியின்படி செல்லுகின்ற சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்து உணர்ச்சிகளும் நெருங்கி (வேலை செய்யும்) குடிலாகிய உடலுடன் நாள்தோறும் அலைகளை உடைய கடல் சூழ்ந்த உலகத்தில் துன்பம் உண்டாக்கி கலகம் செய்யும் ஐந்து (மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய) இந்திரியங்களால் மனம் உடைந்து தடுமாற்றம் அடைந்து, வருத்தங்களுக்கு ஆளான அடிமையாகிய நான் மனம், வாக்கு, காயம் இவை மூன்றும் உலகத்தில் ஈடுபடுதலில் இருந்து விடுபடவும், மயக்கம் தீரவும், எனது எனப்படும் பாசம் (மமகாரம்) நீங்கவும், உனது திருவடியைப் பெறவும், மோன வரம்பைக் குறிப்பதாகிய ஓர் உபதேசத்தை அருள்புரிவாயாக. (வள்ளியின்) மணி வடம் அணிந்த மார்பும், அழகான முகமும், வள்ளைக் கொடி போல விளங்கும் இரண்டு காதுகளும், மரகத நிறமும், படத்தில் எழுதி வள்ளியினுடைய தினைப்புனத்தில் நின்ற மயில் வீரனே, விஷத்தைக் கண்டத்தில் தரித்தவர், மேலான குணத்தை உடையவர், சந்திரனைச் சடையில் தரித்தவர், பரிசுத்தமானவர், வெள்ளி மலையாகிய கயிலையில் வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனே, மலர்ந்த தாமரை போன்ற, சிலம்பணிந்த தாமரை மலர் போன்ற, திருவடியை உடையவனே, வெள்ளிகரம்* என்னும் தலத்தில் அமர்ந்த பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

பாடல் 657 - வெள்ளிகரம் 
ராகம் - மாயாமாளவகெளளை ; தாளம் - அங்கதாளம் - 15 தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2 தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதன தனன தனதன தனன     தய்ய தனத்த தந்த ...... தனதான

சிகரிக ளிடிய நடநவில் கலவி     செவ்வி மலர்க்க டம்பு ...... சிறுவாள்வேல் 
திருமுக சமுக சததள முளரி     திவ்ய கரத்தி ணங்கு ...... பொருசேவல் 
அகிலடி பறிய எறிதிரை யருவி     ஐவன வெற்பில் வஞ்சி ...... கணவாஎன் 
றகிலமு முணர மொழிதரு மொழியி     னல்லது பொற்பதங்கள் ...... பெறலாமோ 
நிகரிட அரிய சிவசுத பரம     நிர்வச னப்ர சங்க ...... குருநாதா 
நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய     நெல்லி மரத்த மர்ந்த ...... அபிராம 
வெகுமுக ககன நதிமதி யிதழி     வில்வ முடித்த நம்பர் ...... பெருவாழ்வே 
விகசித கமல பரிமள கமல     வெள்ளி கரத்த மர்ந்த ...... பெருமாளே.

அஷ்ட கிரிகளும் பொடிபடும்படியாக நடனமாடும் கலாப மயில், அன்றலர்ந்த புதிய கடப்பமலர், சிறிய வாள், வேல், ஆறு திருமுகங்களின் சேர்க்கையாம் நூறு இதழ்கள் உள்ள தாமரைகள், திவ்யமான கரத்திலே பொருந்திய போர் செய்யவல்ல சேவல், (இவையெல்லாம் விளங்க) அகில் மரத்தின் வேரைப் பறித்து எறியும் அலைவீசும் அருவிகள் உள்ள, நெல் விளையும் வள்ளிமலையின் வஞ்சிக்கொடியனன வள்ளியின் கணவா, என்று உலகெலாம் உணரக் கூறும் சொற்களால் அல்லது உனது அழகிய திருவடிகளைப் பெற முடியுமோ? ஒப்பிடற்கு அரியரான சிவபிரானின் சேயே, பரமனே, வாக்குக்கு எட்டாததான பிரணவ உபதேசத்தைச் செய்த குருநாதனே, பசுக்கூட்டங்களைக் கொண்ட இடையர்கள் செல்லும் வழியில் உள்ள பழைய நெல்லி மரத்தின்* கீழே வீற்றிருந்த அழகனே, ஆயிரம் முகங்களோடு ஓடும் ஆகாய கங்கை நதியையும், பிறையையும், கொன்றையையும், வில்வத்தையும் சடையில் முடித்த நம் சிவபெருமானின் பெருஞ் செல்வமே, மலர்ந்த தாமரைகளும், நறுமணம் மிகுந்த தாமரைகளும் நிறைந்த வெள்ளிகரத்தில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* சுவாமிமலைக்கு அருகே பூமிதேவியானவள் பார்வதியின் சாபத்தால் பலகாலம் இருந்து, ஷண்முகனை வணங்கி சாப விமோசனம் பெற்றாள். முருகனை விட்டுப் பிரிய மனமில்லாது அங்கேயே நெல்லிமரமாக நின்றாள் - சுவாமிமலை மகாத்மியம்.
** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

பாடல் 658 - வெள்ளிகரம் 
ராகம் - ...; தாளம் -

தனதன தய்ய தனதன தய்ய     தனதன தய்ய ...... தனதான

குவலய மல்கு தவலிகள் முல்லை     குளிர்நகை சொல்லு ...... முதுபாகு 
குழையிள வள்ளை யிடைசிறு வல்லி     குயமுலை கொள்ளை ...... விழைமேவிக் 
கவலைசெய் வல்ல தவலரு முள்ள     கலவியில் தெள்ளு ...... கவிமாலை 
கடிமல ரைய அணிவன செய்ய     கழலிணை பைய ...... அருள்வாயே 
தவநெறி யுள்ளு சிவமுனி துள்ளு     தனியுழை புள்ளி ...... யுடனாடித் 
தருபுன வள்ளி மலைமற வள்ளி     தருதினை மெள்ள ...... நுகர்வோனே 
அவநெறி சொல்லு மவரவை கொல்லு     மழகிய வெள்ளி ...... நகர்வாழ்வே 
அடையலர் செல்வ மளறிடை செல்ல     அமர்செய வல்ல ...... பெருமாளே.

உலகில் நிறைந்துள்ள, ஒழுக்கக் குறைபாடுகள் உள்ள விலைமாதர்களின் பற்கள் குளிர்ந்த முல்லை மலர் போன்றவை, பேச்சும் முதிர்ந்த வெல்லம் போன்றது, காது இளமையான வள்ளிக் கொடி போன்றது, இடுப்பு சிறிய கொடி ஒத்தது, இளமை வாய்ந்த மார்பகங்கள் பூரித்து உள்ளன (என்று எல்லாம் கூறி) விருப்பம் மிகவும் அடைந்து, மனக் கவலை தரத்தக்க குற்றம், குறை உள்ளவர்களுடன் நான் இணைந்திருந்த போதும், தெளிந்த கவி மாலைகளையும், நறு மணம் உள்ள மலர் மாலைகளையும் அழகுற அணிவிப்பதற்காக உனது திருவடி இணைகளை மெல்ல எனக்கு அருள் புரிவாயாக. முன்பு, தவ நெறியில் தியானித்து இருந்த சிவ முனிவரின் (தவத்தைக் கலைத்துத்) துள்ளிச் சென்ற, ஒப்பற்ற, புள்ளி மானுடன் கலந்து பெற்றெடுத்தவளும், தினைப்புனத்தில் இருந்தவளும், அந்த வள்ளி மலையில் இருந்த வேட்டுவ குலத்தைச் சேர்ந்தவளுமான வள்ளி கொடுத்த தினை மாவை மெதுவாக உண்டவனே, பயனற்ற மார்க்கத்தைச் சொல்லி வந்த சமணர்களின் கூட்டத்தை (கழுவில்) மாய்த்த (திருஞானசம்பந்தராக வந்து) அழகு வாய்ந்த வெள்ளிகரம்* என்னும் நகரில் வாழும் செல்வனே, பகைவர்களாகிய அசுரர்களின் செல்வம் எல்லாம் கடல் நீரில் மூழ்கி அழியும்படி சண்டை செய்ய வல்ல பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 659 - வெள்ளிகரம் 
ராகம் - ...; தாளம் -

தனதன தய்ய தனதன தய்ய     தனதன தய்ய ...... தனதான

பொருவன கள்ள இருகயல் வள்ளை     புரிகுழை தள்ளி ...... விளையாடும் 
புளகித வல்லி யிளகித வல்லி     புரியிள முல்லை ...... நகைமீதே 
உருகிட வுள்ள விரகுடை யுள்ள     முலகுயி ருள்ள ...... பொழுதேநின் 
றுமைதரு செல்வ னெனமிகு கல்வி     யுணர்வொடு சொல்ல ...... வுணராதோ 
மருவலர் வள்ளி புரமுள வள்ளி     மலைமற வள்ளி ...... மணவாளா 
வளர்புவி யெல்லை யளவிடு தொல்லை     மரகத நல்ல ...... மயில்வீரா 
அருவரை விள்ள அயில்விடு மள்ள     அணிவயல் வெள்ளி ...... நகர்வாழ்வே 
அடையலர் செல்வ மளறிடை செல்ல     அமர்செய வல்ல ...... பெருமாளே.

போர் செய்யவல்ல கள்ளத்தனம் உள்ள கயல் மீன் போல் இரண்டு கண்கள் வள்ளிக் கொடி போன்ற காதுகளைத் தாக்கி விளையாடுகின்ற புளகாங்கிதம் கொண்ட, கொடி போல் இடை வாய்ந்த, இளம் பெண்கள் புன்னகை புரியும் போது தெரியும் முல்லை அரும்பு போன்ற பற்களைக் கண்டு, உருகத் தக்க உற்சாகத்தை அடையும் என் மனம், இவ்வுலகில் உயிர் இருக்கும் பொழுதே நிலைத்து நின்று உமாதேவியார் பெற்றெடுத்த செல்வனே என்று உன்னை மிகுந்த கல்வி உணர்ச்சியோடு சொல்லுவதற்குத் தெரிந்து கொள்ளாதோ? வாசனை மலர்கள் உள்ள வள்ளிபுரத்தில் உள்ள வள்ளி மலையில் இருக்கும் குறப்பெண் வள்ளியின் கணவனே, பெரிதாக உள்ள பூமியின் முழு எல்லையையும் (பறந்தே) அளவிட்ட, பழைய மரகதப் பச்சை நிறமுள்ள அழகிய மயில் மீதேறும் வீரனே, அரிய கிரவுஞ்ச மலை உடைபடுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய போர் வீரனே, அழகிய வயல்கள் சூழ்ந்த வெள்ளி நகரில் வாழும் செல்வமே, பகைவர்களின் செல்வம் எல்லாம் சேற்றிடையே படிந்து அழியுமாறு போர் செய்ய வல்ல பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 660 - வெள்ளிகரம் 
ராகம் - ...; தாளம் -

தய்ய தய்ய தய்ய தய்ய     தய்ய தய்ய ...... தனதான

கள்ள முள்ள வல்ல வல்லி     கையி லள்ளி ...... பொருளீயக் 
கல்லு நெல்லு வெள்ளி தெள்ளு     கல்வி செல்வர் ...... கிளைமாய 
அள்ளல் துள்ளி ஐவர் செல்லு     மல்லல் சொல்ல ...... முடியாதே 
ஐய ரைய மெய்யர் மெய்ய     ஐய செய்ய ...... கழல்தாராய் 
வள்ளல் புள்ளி நவ்வி நல்கு     வள்ளி கிள்ளை ...... மொழியாலே 
மைய லெய்து மைய செய்யில்     வையில் வெள்வ ...... ளைகளேற 
மெள்ள மள்ளர் கொய்யு நெல்லின்     வெள்ள வெள்ளி ...... நகர்வாழ்வே 
வெய்ய சைய வில்லி சொல்லை     வெல்ல வல்ல ...... பெருமாளே.

கள்ளத் தனம் வாய்ந்த, சாமர்த்தியமான ஒரு விலைமகளின் கையிலே (நான்) அள்ளிப் பொருள்களைக் கொடுப்பதால், (என்னுடைய) நவரத்தினக் கற்களும், நெற் குவியல்களும், வெள்ளிப் பொருள்களும், தெளிந்த கல்விச் செல்வமும், செல்வமுள்ள சுற்றத்தார்களும், எல்லாம் அழிந்து விலக, (மாயைச்) சேற்றிலிருந்து குதித்து ஐம்புலன்கள் செலுத்துகின்ற துன்பம் விவரிக்க முடியாது. முனிவர்களுக்கு முனிவனே, மெய்யர்க்கு மெய்யனே, அழகிய, சிவந்த உனது திருவடியைத் தாராய். வள்ளலே, புள்ளிகளை உடைய பெண் மான் (லக்ஷ்மி) ஈன்ற வள்ளி நாயகியாகிய கிளியின் மொழிகளைக் கேட்டு, மோகம் கொண்ட ஐயனே, வயல்களில், புல்லில் வெள்ளைச் சங்குகள் நிறைந்திட, வயலில் உழவர்கள் மெதுவாக அறுவடை செய்த நெல் மிக்க உள்ள வெள்ளிகர* நகரத்தில் வாழ்பவனே, விரும்புதற்குரிய (மேரு) மலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கு, பிரணவ மொழியின் பொருளை (அவருக்குக் குருவாயிருந்து) வெற்றியுடன் மொழிய வல்ல பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 661 - வெள்ளிகரம் 
ராகம் - .......; தாளம் -

தய்ய தய்ய தய்ய தய்ய     தய்ய தய்ய ...... தனதான

தொய்யில் செய்யில் நொய்யர் கையர்     தொய்யு மைய ...... இடையாலுந் 
துள்ளி வள்ளை தள்ளி யுள்ளல்     சொல்லு கள்ள ...... விழியாலும் 
மைய செவ்வி மவ்வல் முல்லை     மல்கு நல்ல ...... குழலாலும் 
மையல் கொள்ள எள்ளல் செய்யும்     வல்லி சொல்லை ...... மகிழ்வேனோ 
செய்ய துய்ய புள்ளி நவ்வி     செல்வி கல்வ ...... ரையிலேனல் 
தெய்வ வள்ளி மையல் கொள்ளு     செல்வ பிள்ளை ...... முருகோனே 
மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய     வெள்ளை வெள்ளி ...... நகர்வாழ்வே 
வெய்ய சைய வில்லி சொல்லை     வெல்ல வல்ல ...... பெருமாளே.

மார்பின் மீது சந்தனத்தால் எழுதினாலே நெகிழ்ந்து தளர்பவர்கள் போல பாசாங்கு செய்யும் கீழ் மக்களான விலைமாதரின் இளைத்துள்ள, வியக்கத் தக்க (நுண்ணிய) இடையாலும், எழுந்து பாய்ந்து வள்ளைக் கொடிபோன்று காது வரை நீளும், மனத்தில் நினைந்துள்ள வஞ்சக எண்ணத்தை வெளிப்படுத்தும், திருட்டுக் கண்களாலும், மை போன்று கரு நிறம் கொண்டதும், செம்மை வாய்ந்த காட்டு மல்லிகை, முல்லை நிறைந்துள்ள நல்ல கூந்தலாலும், காம இச்சை கொள்ளும்படியாக (என்னை) இகழ்கின்ற பெண்களின் பேச்சுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ? செந்நிறத்தவனே, தூயவனே, பெண் மான் போன்ற லக்ஷ்மியின் குமாரியும், கல் நிறைந்த வள்ளி மலையில் தினைப் புனத்தைக் காவல் செய்தவளுமான தெய்வ வள்ளி மேல் மோகம் கொண்ட செல்வப் பிள்ளையான முருகனே, மெய்யர்க்கு மெய்யனே, பொய்யர்க்குப் பொய்யனே, கள்ளம் இல்லாத நகராகிய வெள்ளிகரம் என்னும் தலத்தில் வாழும் செல்வனே, விரும்பத் தக்க கயிலை மலை வாசியாகிய சிவபெருமானுக்கு பிரணவத்தின் பொருளை இன்னதென்று விளக்கி வெற்றியைக் கொண்ட பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 662 - வெள்ளிகரம் 
ராகம் - குமுதக்ரியா; தாளம் - ஆதி

தய்யதன தான தய்யதன தான     தய்யதன தான ...... தனதான

இல்லையென நாணி யுள்ளதின் மறாம     லெள்ளினள வேனும் ...... பகிராரை 
எவ்வமென நாடி யுய்வகையி லேனை     யெவ்வகையு நாமங் ...... கவியாகச் 
சொல்லவறி யேனை யெல்லைதெரி யாத     தொல்லைமுத லேதென் ...... றுணரேனைத் 
தொய்யுமுடல் பேணு பொய்யனைவி டாது     துய்யகழ லாளுந் ...... திறமேதோ 
வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ     மையவரை பாகம் ...... படமோது 
மையுலவு சோலை செய்யகுளிர் சாரல்     வள்ளிமலை வாழுங் ...... கொடிகோவே 
வெல்லுமயி லேறு வல்லகும ரேச     வெள்ளிலுட னீபம் ...... புனைவோனே 
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.

இல்லை என்று கூற வெட்கப்பட்டு, உள்ள பொருளின் அளவுக்கு மறுக்காமல், ஓர் எள்ளின் அளவாவது பகிர்ந்து கொடுக்காதவர்களை, வெறுக்கத்தக்கவர்கள் என்று ஆராய்ந்தறிந்து பிழைக்கும் வழி இல்லாத என்னை, எந்த வகையிலாவது உன் திருநாமங்களைக் கவிதையாக அமைத்துச் சொல்லும் அறிவில்லாத என்னை, முடிவெல்லை காண முடியாத பழைய மூலப்பொருள் இன்னது என்று உணரும் அறிவில்லாத என்னை, இளைத்துத் துவளும் உடம்பைப் போற்றும் பொய்யனாகிய என்னை, புறக்கணித்து விட்டுவிடாமல் பரிசுத்தமான உன் திருவடிகளால் ஆண்டருளும் வழி ஏதேனும் உண்டோ, யான் அறியேன். வலிமை பொருந்திய அசுரர்கள் மாளவும், நல்ல தேவர்கள் வாழவும், குற்றமுள்ள கிரெளஞ்சகிரி கூறுபட்டழிய மோதியவனே, இருண்ட சோலைகள், செவ்விய குளிர்ந்த மலைகள் உடைய வள்ளிமலையில் வாழும் குறக்குலக் கொடியாகிய வள்ளியின் மணாளனே, வெல்லும் திறல் படைத்த மயில் மீது ஏறவல்ல குமரேசா, விளாத் தளிருடன் கடப்பமலரை அணிபவனே, வெண்ணிற அழகிய மாடங்கள் நிறைந்த செல்வச் செழிப்புள்ள வீதிகளை உடைய வெள்ளிகரம் என்ற வெள்ளிநகரில் அமர்ந்த பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

பாடல் 663 - வெள்ளிகரம் 
ராகம் - ....; தாளம் -

தய்யதன தான தய்யதன தான     தய்யதன தான ...... தனதான

பையரவு போலு நொய்யஇடை மாதர்     பையவரு கோலந் ...... தனைநாடிப் 
பையலென வோடி மையல்மிகு மோக     பவ்வமிசை வீழுந் ...... தனிநாயேன் 
உய்யவொரு கால மையவுப தேச     முள்ளுருக நாடும் ...... படிபேசி 
உள்ளதுமி லாது மல்லதவி ரோத     உல்லசவி நோதந் ...... தருவாயே 
வையமுழு தாளு மையகும ரேச     வள்ளிபடர் கானம் ...... புடைசூழும் 
வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள     மையுததி யேழுங் ...... கனல்மூள 
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ     வெல்லயில்வி நோதம் ...... புரிவோனே 
வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி     வெள்ளிநகர் மேவும் ...... பெருமாளே.

படம் கொண்ட பாம்பைப் போன்ற நுண்ணிய இடையை உடைய விலைமாதர்கள் சாவகாசமாகச் செய்து கொள்ளும் அலங்காரங்களை விரும்பி அற்பமான பையன் என்னும்படி ஓடி மோகம் மிக்க காமக் கடலில் விழுகின்ற, தனித்து நிற்கும் நாய் போன்றவனாகிய நான் பிழைப்பதற்கு ஒரு காலத்தில், ஐயனே, உமது உபதேசத்தை என் மனம் உருகி விரும்பும்படி ஓதி, உள்ளது என்றும் இல்லாதது என்றும், (இவை இரண்டும்) அல்லாததும் மாறுபாடு இல்லாததும், உள்ளக் களிப்பை தருவதும் ஆகிய வியப்பைத் தந்து அருளுக. உலகம் முழுவதும் ஆள்கின்ற ஐயனே, குமரேசனே, வள்ளிக் கொடி படர்ந்துள்ள காடுகள் பக்கத்தில் சூழ்ந்துள்ள வள்ளி மலையில் வாழ்கின்ற வள்ளி நாயகியின் கணவனே, கரிய கடல்கள் ஏழிலும் நெருப்பு எழ, கொடிய அசுரத் தலைவர்கள் (அவர்கள் இருந்த கிரவுஞ்சம், ஏழு கிரி ஆகிய) மலைகளுடன் மாண்டு விழ, வெற்றி கொண்ட வேலாயுதத்துடன் திருவிளையாடல் புரிந்தவனே, வெண்ணிறத்து அழகிய மாடங்கள் நிறைந்த, லக்ஷ்மிகரம் பொருந்திய வெள்ளி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கே 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தின் மேற்கே 12 மைலில் உள்ளது.

பாடல் 664 - வெள்ளிகரம் 
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா ; தாளம் - அங்கதாளம் - 23 1/2 தகதிமிதகதிமி-4, தகதிமி தகதிமி-4 தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2 தகதிமிதகதிமிதகதிமிதக-7, தகிடதகதிமி-3 1/2

தனன தனாதன தனன தனாதன தய்ய தனத்த தந்த     தானாதன தானந் தானன ...... தந்ததான

வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று     வாராய்பதி காதங் காதரை ...... யொன்றுமூரும் 
வயலு மொரேவிடை யெனவொரு காவிடை வல்லப மற்றழிந்து     மாலாய்மட லேறுங் காமுக ...... எம்பிரானே 
இதவிய காணிவை ததையென வேடுவ னெய்திடு மெச்சில் தின்று     லீலாசல மாடுந் தூயவன் ...... மைந்தநாளும் 
இளையவ மூதுரை மலைகிழ வோனென வெள்ள மெனக் கலந்து     நூறாயிர பேதஞ் சாதமொ ...... ழிந்தவாதான் 
கதைகன சாபதி கிரிவளை வாளொடு கைவசி வித்தநந்த     கோபாலம கீபன் தேவிம ...... கிழ்ந்துவாழக் 
கயிறொ டுலூகல முருள வுலாவிய கள்வ னறப் பயந்து     ஆகாயக பாலம் பீறநி ...... மிர்ந்துநீள 
விதரண மாவலி வெருவ மகாவ்ருத வெள்ள வெளுக்க நின்ற     நாராயண மாமன் சேயைமு ...... னிந்தகோவே 
விளைவய லூடிடை வளைவிளை யாடிய வெள்ளிநகர்க் கமர்ந்த     வேலாயுத மேவுந் தேவர்கள் ...... தம்பிரானே.

தாமரை போன்ற முகமும், அம்பு போன்ற கண்களும் உடைய வள்ளியின் தினைப்புனத்தில் போய் நின்று கொண்டு, நீ என்னுடன் வருவாயாக, என் ஊர் (திருத்தணிகை) இரண்டரை காதம் தூரம்தான் (25 மைல்), என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன, இடையில் ஒரே ஒரு வயல்தான் உள்ளது, என்று கூறி, ஒரு சோலையிலே உன் வலிமை எல்லாம் இழந்து, வள்ளி மீது மிக்க மயக்கம் கொண்டு மடல்* ஏறிய மோகம் நிறைந்த எம்பெருமானே, இதோ இவ்வுணவு இனிப்புடன் கலந்து இருப்பதைப் பார் என்று கூறிய வேடுவன் கண்ணப்பன் சேர்ப்பித்த எச்சில் உணவைத் தின்று (கண்ணில் ரத்தத்துடன்) திருவிளையாடல் ஆடிய சுத்த சிவன் மகனே, எப்போதும் இளமையுடன் இருப்பவனே என்றும், பழைய நூல் திருமுருகாற்றுப்படையில் சொன்னபடி மலை கிழவோனே (மலைகளுக்கு உரியவனே) என்றும் ஓதினால், ஒரு பெரிய எண்ணிக்கையாகக் கூடி நூறாயிர பேதமாக** வருவதாகிய பிறப்புக்கள் ஒழிந்து போயினவே, இது பெரிய அற்புதந்தான். (கெளமோதகி என்னும்) கதாயுதமும், பெருமை பொருந்திய சாரங்கம் என்னும் வில்லும், சுதர்சனம் என்னும் சக்கரமும், பாஞ்ச சன்யம் என்னும் சங்கும், நாந்தகம் என்னும் வாளும் (ஆகிய பஞ்ச ஆயுதங்களை) கைகளில் ஏந்தியவனும், நந்த கோபாலன் என்ற கோகுலத்து மன்னனது தேவி யசோதை மகிழ்ந்து வாழ உரலோடு கட்டப்பெற்ற கயிறோடு அந்த உரலை இழுத்தவண்ணம் உலாவியனும், வெண்ணெய் திருடும் கள்வனும், மிகவும் பயப்படும்படியாக ஆகாயத்தையும் தனது தலை கிழிக்கும்படி உயரமாக வளர்ந்து கொடையிற் சிறந்த மகாபலிச் சக்கரவர்த்தி அஞ்சும்படி மகா விரதசீல வாமனனாய் பகிரங்கமாக எதிரில் நின்றவனும் ஆகிய நாராயண மூர்த்தியாம் உன் மாமனின் மகனாகிய பிரமனைக் கோபித்த தலைவனே, விளைச்சல் உள்ள வயல்களின் இடையில் சங்குகள் தவழ்ந்தாடும் வெள்ளிநகர்*** என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் வேலாயுதனே, உன்னைத் துதிக்கும் தேவர்களுக்கெல்லாம் தலைவனே. 
* மடல் எழுதுதல்: தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில் மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல் ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார் தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.
** சம்பந்தர் தேவாரத்தின்படி சாதம் (பிறப்பு) 84 நூறாயிரம் வகையாகும். ஊர்வன - 11, மானிடம் - 9, நீர்வாழ்வன - 10, பறவைகள் - 10, மிருகங்கள் - 10, தேவர்கள் - 14, தாவரங்கள் - 20, ஆக 84 நூறாயிரம் (8,400,000).
*** வெள்ளிகரம் அரக்கோணத்துக்கு வடக்கில் 22 மைலில் உள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்தினின்று மேற்கே 10 மைலில் உள்ளது.

பாடல் 665 - திருவல்லம் 
ராகம் - ....; தாளம் -

தனதன தானந் தனதன தானந்     தனதன தானந் ...... தனதான

நசையொடு தோலுந் தசைதுறு நீரும்     நடுநடு வேயென் ...... புறுகீலும் 
நலமுறு வேயொன் றிடஇரு கால்நன்     றுறநடை யாருங் ...... குடிலூடே 
விசையுறு காலம் புலனெறி யேவெங்     கனலுயிர் வேழந் ...... திரியாதே 
விழுமடி யார்முன் பழுதற வேள்கந்     தனுமென வோதும் ...... விறல்தாராய் 
இசையுற வேயன் றசைவற வூதும்     எழிலரி வேழம் ...... எனையாளென் 
றிடர்கொடு மூலந் தொடர்வுட னோதும்     இடமிமை யாமுன் ...... வருமாயன் 
திசைமுக னாருந் திசைபுவி வானுந்     திரிதர வாழுஞ் ...... சிவன்மூதூர் 
தெரிவையர் தாம்வந் தருநட மாடுந்     திருவல மேவும் ...... பெருமாளே.

ஈரத்துடன் தோலும் மாமிசமும் அடைந்துள்ள நீரும் இடையிடையே எலும்புகளைப் பூட்டியுள்ள இணைப்புக்களும் நலம் உறும் வண்ணம் பொருந்தி ஒன்று சேர, இரண்டு கால்களும் நன்கு இணைக்கப் பெற்று நடை நிரம்பிய குடிசையாகிய இந்த உடலுக்குள், வேகமான வாழ்க்கை செல்லும் காலத்தில், ஐம்புலன்களின் வழியாக கொடிய தீப் போன்றதும், மதம் நிறைந்த யானை போன்றதுமான அந்த ஐம்பொறிகளும் அலையாமல், உனது திருவடியில் விழும் அடியார்களின் முன், குற்றம் இல்லாத வகையில், வேளே கந்தனே என்று ஓதும் சக்தியைத் தந்தருளுக. முன்பு, இனிய இசை பொருந்தி அசையாமல் நிற்கும்படி, புல்லாங்குழலை ஊத வல்ல அழகிய கண்ணனும், கஜேந்திரனாகிய யானை என்னை ஆட்கொள்வாய் ஆதிமூலமே என்று துன்பத்துடனும் பேரன்புடனும் கூச்சலிட்டு அழைத்த இடத்துக்கு, கண்ணை இமைக்கும் நேரத்தில் வந்து உதவிய மாயனுமாகிய திருமாலும், நான் முகனும், பல திசைகளில் உள்ளவர்களும், உலகில் உள்ளவர்களும், வானுலகத்தில் உள்ளவர்களும் வலம் வந்து சூழ வாழ்கின்ற சிவபெருமானுடைய பழைய ஊரும், மாதர்கள் வந்து அருமையான நடனம் புரியும் ஊருமாகிய திருவ (ல்) லத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவல்லம் வேலூருக்கு அருகில் உள்ளது. திருமாலாலும் பிரமானாலும் சிவன் வலம் செய்யப்பெற்று பூஜிக்கப்பட்டதால் திருவலம் என்ற பெயர் வந்தது.

பாடல் 666 - வேலு஡ர் 
ராகம் - ....; தாளம் -

தனன தாத்தன தானா தானன     தனன தாத்தன தானா தானன          தனன தாத்தன தானா தானன ...... தந்ததான

அதிக ராய்ப்பொரு ளீவார் நேர்படில்     ரசனை காட்டிக ளீயார் கூடினும்          அகல வோட்டிகள் மாயா ரூபிகள் ...... நண்புபோலே 
அசட ராக்கிகள் மார்மே லேபடு     முலைகள் காட்டிகள் கூசா தேவிழும்          அழகு காட்டிக ளாரோ டாகிலு ...... மன்புபோலே 
சதிர தாய்த்திரி வோயா வேசிகள்     கருணை நோக்கமி லாமா பாவிகள்          தருமு பேட்சைசெய் தோஷா தோஷிகள் ...... நம்பொணாத 
சரச வார்த்தையி னாலே வாதுசெய்     விரக மாக்கிவி டாமூ தேவிகள்          தகைமை நீத்துன தாளே சேர்வதும் ...... எந்தநாளோ 
மதுரை நாட்டினி லேவாழ் வாகிய     அருகர் வாக்கினி லேசார் வாகிய          வழுதி மேற்றிரு நீறே பூசிநி ..... மிர்ந்துகூனும் 
மருவு மாற்றெதிர் வீறே டேறிட     அழகி போற்றிய மாறா லாகிய          மகிமை யாற்சமண் வேரோ டேகெட ...... வென்றகோவே 
புதிய மாக்கனி வீழ்தே னூறல்கள்     பகலி ராத்திரி யோயா ஆலைகள்          புரள மேற்செல வூரூர் பாயஅ ...... ணைந்துபோதும் 
புகழி னாற்கடல் சூழ்பார் மீதினி     லளகை போற்பல வாழ்வால் வீறிய          புலவர் போற்றிய வேலூர் மேவிய ...... தம்பிரானே.

அதிகமாகப் பொருள் கொடுப்பவர் கிடைத்தால் இன்பம் காட்டுவார்கள். பொருள் கொடாதவர் கூட வந்தால் அவர்களைத் தம்மை விட்டு நீங்கும்படி ஓட்டுபவர்கள். மாயையே ஒர் உருவம் ஆனவர்கள். நட்பு பாராட்டுவது போல (வந்தவர்களை) மூடர்களாக ஆக்குபவர்கள். மார்பு மேலே உள்ள மார்பகத்தைக் காட்டுபவர்கள். கூச்சம் இல்லமால் மேலே விழுந்து தமது அழகைக் காட்டுபவர்கள். யாராக இருந்தாலும் அன்பு உள்ளவர்கள் போல் சாமர்த்தியமாக எப்போதும் திரியும் ஓய்வில்லாத விலைமாதர்கள். அருள் நோக்கம் என்பதே இல்லாத பெரிய பாவிகள். வேண்டும் என்றே வந்தவரைப் புறக்கணிப்பவர்கள். பலவித குற்றம் (பாவம்) செய்பவர்கள். நம்புதற்கு முடியாத பக்குவ வார்த்தைகளைப் பேசி வாது செய்து, காமத்தை மூட்டி, போக ஒட்டாது பிடிக்க வல்ல மூதேவிகள். (இத்தகையோருடன்) கூடுவதை ஒழித்து, உன்னுடைய திருவடியைச் சேரும் நாள் எனக்குக் கிட்டுமோ? மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டில் வாழ்ந்திருந்த சமணர்களின் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த பாண்டிய மன்னன் மீது திரு நீற்றைத் தடவி, அவனுடைய கூன் நிமிரச் செய்தும், அருகில் பாயும் வைகை ஆற்று வெள்ள நீரை எதிர்த்து இட்ட ஏடுகள் மேற் செல்லச் செய்தும், அழகு நிறைந்த பாண்டி மா தேவியாகிய மங்கையர்க்கரசி உன்னைத் துதித்துப் போற்றிய பக்தியின் சிறப்பாலும், இந்த நிகழ்ச்சியின் சிறப்பாலும், அந்தச் சமணர்கள் வேருடன் அழியும்படி வெற்றி கொண்ட (திருஞானசம்பந்தத்) தலைவனே, புதிய மாம்பழங்களினின்று விழுகின்ற தேன் ஊறல்கள், பகலிலும், இரவிலும் ஓயாது வேலை செய்யும் கரும்பாலைகள் மேலே புரண்டு மேற் சென்று அயலில் உள்ள ஊர்களிலும் பாயும்படி சேர்ந்து போகின்ற புகழ் பெற்ற காரணத்தால், கடல் சூழ்ந்த இப் பூமியில் பல வகையான வாழ்வால் மேம்பட்ட பண்டிதர்களால் அளகாபுரி* போலப் போற்றப்பட்ட வேலூரில் வீற்றிருக்கும் தம்பிரானே. 
* அளகாபுரி நிதிக்கு காவலனான குபேரனின் தலைநகர்.

பாடல் 667 - வேலு஡ர் 
ராகம் - ...; தாளம் -

தானான தந்த தந்த தானான தந்த தந்த     தானான தந்த தந்த ...... தனதான

சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்     சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித் 
தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து     தீராத துன்ப இன்ப ...... முறுமாதர் 
கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு     கூராமல் மங்கி யங்க ...... மழியாதே 
கோள்கோடி பொன்ற வென்று நாடோறு நின்றி யங்கு     கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய் 
மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்     வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி 
வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த     மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ 
மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க     வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே 
வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு     வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.

சேல் மீன் போலவும், ஆலகால விஷம் போலவும் உள்ள தம் செவ்விய கண்ணாகிய வேலாலும் ஆண்களை வென்று, அவர்களுடைய சீரும் நல் வாழ்வும் மனமும் குலைந்து அழியும்படி முதலிலேயே திட்டமிட்டு, தேன் போன்றதும், செம்மை வாய்ந்ததும், இனியதுமாகிய சொற்களையே பேசிக்கொண்டு வந்து அணைந்து, முடிவு இல்லாத துன்பத்தையும் இன்பத்தையும் ஏற்படுத்துகின்ற விலைமாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து காம மயக்கம் கொண்டவனாய், உன் மீது அன்பு பெருகாமல், பொலிவு குன்றி, உடல் அழிந்து போகாமல், இடையூறுகள் கோடிக் கணக்கானவைகள் வரினும் அவை அழிந்து போகும்படி வென்று, தினமும் ஒழுக்க வழியில் செல்வதான சிறந்த உண்மைப் பக்தியை மேற்கொண்டு வணங்கும்படியாக உனது திருவருளைத் தந்தருளுக. (இன்னது செய்வது என்று தெரியாத) மயக்கத்தால் மனம் அலைப்புண்டு வருத்தத்தை நிரம்பக் கொண்ட சிறந்த மன்மதன் கையில் கொண்ட கரும்பு வில்லின் அழகுடன் அழிந்து ஒடுங்க, முன்பு நாடி அவனை எரித்த சிவ பெருமானின் செல்வப் புதல்வனான கந்தனே, முற்பட்டு, பகைமை பூண்டு வந்து நெருங்கி எதிர்த்த பெரிய சூராதிகள் அடங்க வெற்றி மயிலின் மேல் ஏறியவனே, மேலான பரம் பொருளின் தியானம் பொருந்திய விண்ணோர்கள் நின்று பரிதாபித்து வேண்ட, வேலாயுதத்தைச் செலுத்தி கிரெளஞ்ச மலையை எதிர்த்து அழித்தவனே, பச்சை மூங்கில் போல திரட்சி உள்ள தோள்களை உடைய மாதர்கள் வந்து வணங்க, வேலூர் விளங்கும்படி வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 668 - விரிஞ்சிபுரம் 
ராகம் - ....; தாளம் -

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்     தனதனத் தனதனத் தனதனத் தனதனத்          தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான

ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்     தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்          டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே 
ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்     டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்          டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார் 
தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்     சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்          தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச் 
சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்     தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்          சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே 
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்     தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்          கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா 
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்     சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்          கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே 
கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்     பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்          கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே 
கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக்     கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்          கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே.

ஒருவரை சிறு வீட்டின் படுக்கை மெத்தையில் படுக்க வைத்து, ஒருவரைத் தம் வீட்டு வாசலில் மனக் குழப்பத்தோடு சுழலவிட்டு, இன்னொருவரை மிகுந்த பரபரப்போடு வீதியில் அலையும்படியாக விட்டு, அத்தகையச் செயலாலே ஒருவருக்கு ஒருவர் போட்டிப் பகைமையில் போராட விட்டு, வாளை உருவி எடுத்து அறையில் மல் யுத்தம் செய்யும்படி வைத்து, உயிர் பிழைப்பதே யோசித்துப் பார்க்கில் தக்கது என்று எண்ணச் செய்கின்ற பொது மகளிர் தருகின்ற காம இச்சை மயக்கத்தினால் தவ வழிக்கு மாறுபட்டவனாகி, சரியை மார்க்கத்திலும், கிரியை மார்க்கத்திலும்* செய்வதற்குள்ள தவ ஒழுக்கம் இல்லாது போய், எனது கையிலிருந்த பொருளை வீணாகச் செலவழித்து, ஊரில் உள்ள யாவரும் இழித்துப் பேசும்படி திரிகின்ற என்னை, எல்லா வித துக்கங்களும் நீங்கவும், எல்லா வித நற் குணங்களும் கூடவும், பூமியில் நான் புகழ் அடையவும், மதிப்பைப் பெற்று உன்னுடைய அழகிய திருவடிகளை எப்போதும் அன்புடன் நான் நினைக்கும்படி உனது திருவருளைத் தந்தருள்க. தங்களுடைய குருவான பிரஹஸ்பதி சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை சிறைப்படுத்தி மிகவும் கொடுமை செய்து வந்த அசுரர்களை, முற்றிலும் கொடிய கெட்ட குணமுடைய வீணர்களை, முன்பு அவர்கள் செய்த குற்றங்களுக்காக அறுத்து எறிந்த வேலாயுதனே, குயில் போன்ற மொழியையும், கயல் மீன் போன்ற கண்களையும், பவளம் போன்ற வாயிதழையும், வில் போன்ற நெற்றியையும், சந்திரன் போன்ற முகத்தையும், புன்னகையையும், கரு மேகம் போன்ற கூந்தலையும், மலை போன்ற மார்பகங்களையும், கொடி போன்ற இடையையும், பெண் யானை போன்ற நடையையும் கொண்ட குற மகளாகிய வள்ளியை அணைபவனே, ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞரையும் வீழ்த்தும் தந்திரம் உடையவர்களும், மயிர் பறிபடும் தலையருமான சமணர்களின குலம் முன்பு பொடிபட்டு ஒடுங்க, வாதப் போர் செய்து அவர்களின் உயிருள்ள உடலை கழு முனையில் (திருஞானசம்பந்தராக வந்து) வைத்திட்டவனே, கமுக மரத்தின் குலை தன் மீது விழுதலால் வாழை மரத்தினின்றும் பழங்கள் விழ, (அந்தப் பழங்கள் தன் மீது விழும் அதிர்ச்சியால்) கரும்பினின்றும் முத்துக்கள் விழ, கயல் மீன்கள் விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக்கரபுரம்** என்ற பெயருள்ள விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு அருகில் உள்ளது.

பாடல் 669 - விரிஞ்சிபுரம் 
ராகம் - ....; தாளம் -

தனதனன தான தனதனன தான     தனதனன தான ...... தனதானா

குலையமயி ரோதி குவியவிழி வீறு     குருகினிசை பாடி ...... முகமீதே 
குறுவியர்வு லாவ அமுதினினி தான     குதலையுமொ ராறு ...... படவேதான் 
பலவிதவி நோத முடனுபய பாத     பரிபுரமு மாட ...... அணைமீதே 
பரிவுதரு மாசை விடமனமொ வாத     பதகனையு மாள ...... நினைவாயே 
சிலைமலைய தான பரமர்தரு பால     சிகிபரிய தான ...... குமரேசா 
திருமதுரை மேவு மமணர்குல மான     திருடர்கழு வேற ...... வருவோனே 
கலின்வடிவ மான அகலிகைபெ ணான     கமலபத மாயன் ...... மருகோனே 
கழனிநெடு வாளை கமுகொடிய மோது     கரபுரியில் வீறு ...... பெருமாளே.

கூந்தலின் மயிர் குலைந்து போக, கண்கள் குவிய, விளக்கத்துடன் கோழி முதலிய பறவைகளின் புட்குரல் இசை பாடி, முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற, அமுதம் போல் இனிமை கொண்ட குதலைச் சொற்களும் ஒரு வழியாக ஆறு போலப் பெருகவே, பல விதமான விநோதங்களுடன் இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் அசைந்து ஒலிக்க படுக்கையின் மேல் அன்பு எழுகின்ற ஆசையை விடுவதற்கு மனம் ஒத்துக் கொள்ளாத இந்தப் பாதகனையும் ஆண்டருள நினைந்து அருளுவாயாக. வில்லாக மேரு மலையைக் கொண்ட மேலான சிவபெருமான் ஈன்ற புதல்வனே, மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே, அழகிய மதுரையில் இருந்த சமணர் குலமான திருடர்களை கழுவில் ஏற்ற (திருஞானசம்பந்தராக) வந்தவனே, கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின் மருகனே, கழனியில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் கமுக மரம் ஒடிந்து விழும்படி மோதுகின்ற கரபுரமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று.

பாடல் 670 - விரிஞ்சிபுரம் 
ராகம் - மனோலயம் ; தாளம் - அங்கதாளம் - 5 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2

தனன தந்த தானன தனன தந்த தானன     தனன தந்த தானன ...... தனதான

நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு     நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம் 
நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர     நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம் 
சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்     சமய பஞ்ச பாதக ...... ரறியாத 
தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன     சரண புண்ட ¡£கம ...... தருள்வாயே 
மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி     மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான 
வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு     மடிய இந்தி ராதியர் ...... குடியேறச் 
சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு     சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே 
திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய     திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே.

ஒப்பில்லாத ஐந்து பூதங்களும், நினைக்கும் நெஞ்சும், உயிரும், நெகிழும்படி கூடுகின்ற விரோதமின்மையை ஏற்படுத்தித் தரும் ஞான சூரியனே, அழிவில்லாத மேலான பொருளே, அரசனே, அழகிய குமார வேளே என்று வேதங்கள் முழங்குவதும், சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள் உள்ளதுமான சமுத்திரம் போல பெருத்த சப்தத்துடன் வாதம் செய்பவராம் சமயவாதிகளான பஞ்சமா பாதகர்களால் அறியப்படாததும், ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும், கிண்கிணியும் தண்டையும் சூழ்ந்துள்ளதுமான திருவடித் தாமரையதனைத் தந்தருள்வாயாக. மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும், அலைகள் உள்ளதும், ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான கடல் கலக்கமுற்று, சூடாகி, கொந்தளிக்கவும், பெரிய ஆகாய* மார்க்கமாக வந்த சேனைகளும், எதிர்த்துப் போர் செய்த சூரனும் மாண்டு போக, இந்திராதி தேவர்கள் மீண்டும் விண்ணுலகில் குடியேற, சிகரங்களை உடைய உயர்ந்த மந்திரஜால கிரெளஞ்சமலை தகர்ந்துபோக வெற்றி வேலினை விடுத்த சிறுவனே, சந்திரனை முடியில் சூடிய சிவபிரானின் பெருஞ் செல்வமே, திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த அரசர்களும், நான்முகன் பிரம்மாவும் பரவிப் போற்றிய திருவிரிஞ்சைத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சூரனது சேனைகள் ஆகாயவழியில் வராமல் தடுக்க முருகன் அண்டவாயிலை அடைத்தான்.சூரன் அம்புகள் ஏவி அவ்வழியைத் திறக்க, சேனைகள் ஆகாய மார்க்கமாக போருக்கு வந்தன - கந்த புராணம்.** திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.

பாடல் 671 - விரிஞ்சிபுரம்
ராகம் - .....; தாளம் - ..........

தனன தனதனத் தனன தனதனத்     தனன தனதனத் தனன தனதனத்          தனன தனதனத் தனன தனதனத் ...... தனதானா

பரவி யுனதுபொற் கரமு முகமுமுத்     தணியு முரமுமெய்ப் ப்ரபையு மருமலர்ப்          பதமும் விரவுகுக் குடமு மயிலுமுட் ...... பரிவாலே 
படிய மனதில்வைத் துறுதி சிவமிகுத்     தெவரு மகிழ்வுறத் தரும நெறியின்மெய்ப்          பசியில் வருமவர்க் கசன மொருபிடிப் ...... படையாதே 
சருவி யினியநட் புறவு சொலிமுதற்     பழகு மவரெனப் பதறி யருகினிற்          சரச விதமளித் துரிய பொருள்பறித் ...... திடுமானார் 
தமது ம்ருகமதக் களப புளகிதச்     சயில நிகர்தனத் திணையின் மகிழ்வுறத்          தழுவி யவசமுற் றுருகி மருளெனத் ...... திரிவேனோ 
கரிய நிறமுடைக் கொடிய அசுரரைக்     கெருவ மதமொழித் துடல்கள் துணிபடக்          கழுகு பசிகெடக் கடுகி அயில்விடுத் ...... திடுதீரா 
கமல அயனுமச் சுதனும் வருணனக்     கினியு நமனுமக் கரியு லுறையுமெய்க்          கணனு மமரரத் தனையு நிலைபெறப் ...... புரிவோனே 
இரையு முததியிற் கடுவை மிடறமைத்     துழுவை யதளுடுத் தரவு பணிதரித்          திலகு பெறநடிப் பவர்மு னருளுமுத் ...... தமவேளே 
இசையு மருமறைப் பொருள்கள் தினமுரைத்     தவனி தனிலெழிற் கரும முனிவருக்          கினிய கரபுரப் பதியி லறுமுகப் ...... பெருமாளே.

உன்னைப் போற்றி உனது அழகிய கைகளையும், திருமுகத்தையும், முத்து மாலை அணிந்த திருமார்பையும், உடல் ஒளியையும், நறு மணம் வீசும் திருவடிகளையும், உன்னிடம் உள்ள சேவலையும், மயிலையும் இதயத்துள் அன்புடன் அழுந்திப் படிய என் மனத்தில் நிறுத்தி, திடமான சிவ பக்தி மிகப் பெற்று, யாவரும் மகிழ்ச்சி அடையும்படி அற நெறியில் நின்று, உண்மையான பசியுடன் வருகின்றவர்களுக்கு ஒரு பிடி அளவேனும் உணவு இடாமல், கொஞ்சிக் குலாவி, இனிமையான உறவு காட்டும் வார்த்தைகளைச் சொல்லி, முதலிலேயே பழகியவர்கள் போல மாய்மாலம் செய்து, அருகில் இருந்து, காம லீலைகள் புரிந்து, அதற்குத் தக்கதான பொருளை அபகரிக்கும் பொது மகளிருடைய கஸ்தூரியும் சந்தனமும் சேர்ந்த கலவை கொண்ட, புளகாங்கிதம் தருவதுமான, மலையைப் போன்ற மார்பகங்களில் மகிழ்ச்சியுடன் தழுவி, தன் வசம் இழந்து மனம் உருகி அந்த மோக மயக்கத்துடன் திரிவேனோ? கறுத்த நிறமுள்ள கொடுமை வாய்ந்த அசுரர்களின் கர்வத்தையும் ஆணவத்தையும் ஒழித்து அவர்களின் உடல்கள் துண்டுபடவும், (அந்தப் பிணங்களைத் தின்று) கழுகுகள் பசி நீங்கவும், வேகமாக வேலைச் செலுத்திய தீரனே, தாமரையில் உள்ள பிரமனும், திருமாலும், வருணனும், அக்கினி தேவனும், யமனும், அந்த வெள்ளை யானையாகிய ஐராவதத்தில் ஏறி வரும் உடல் எல்லாம் கண் கொண்ட இந்திரனும், மற்ற எல்லா தேவர்களும் தத்தம் பதவிகள் நிலைக்கப் பெற்று விளங்கச் செய்தவனே, ஒலிக்கின்ற பாற்கடலில் எழுந்த ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்தி வைத்து, புலியின் தோலை உடுத்து, பாம்பாகிய ஆபரணத்தைத் தரித்து, விளக்கம் உற ஊழிக் கூத்து நடனம் செய்யும் சிவ பெருமான் முன்பு ஈன்றருளிய உத்தம வேளே, பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள் தோறும் ஆய்ந்து உரைத்து, இப்பூமியில் தமது கடமைகளை அழகாகச் செய்யும் முனிவர்களுக்கு உகந்த தலமாகிய விரிஞ்சிபுரத்தில்* வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* கரபுரம் என்ற விரிஞ்சிபுரம் வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது. பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.

பாடல் 672 - விரிஞ்சிபுரம் 
ராகம் - மோஹனம் .தாளம் - திஸ்ர த்ருவம் - திஸ்ரநடை - 10 1/2 - எடுப்பு - /3/3/3 0

தனன தந்த தான தனன தந்த தான     தனன தந்த தான ...... தனதான

மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது     மலமி தென்று போட ...... அறியாது 
மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்     வகையில் வந்தி ராத ...... அடியேனும் 
உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்     உலக மென்று பேச ......அறியாத 
உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர     உபய துங்க பாத ...... மருள்வாயே 
அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்     அடிப ணிந்து பேசி ...... கடையூடே 
அருளு கென்ற போது பொருளி தென்று காண     அருளு மைந்த ஆதி ...... குருநாதா 
திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்     செருவ டங்க வேலை ...... விடுவோனே 
செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி     திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.

பொருந்திய மண், நீர், தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களுக்குச் சொந்தம் ஆகாத வண்ணம் இந்த உடலை அழுக்கு என்று உதறிப் போடத் தெரியாமல் மயக்கம் நிறைந்த இந்த வாழ்வு போதுமே என்று எப்போதும் அவ்வெண்ணம் நன்கு மனத்தில் தோன்றாத நானும், உள்ளம் உருகி அன்போடு தினமும் உன்னை நினைத்து, உலக விஷயங்களைப் பேசும் பேச்சே பேச அறியாத இவ்வடிவம்தான் இது என்ற கூற இயலாத நிலையை நான் அடைய உன் இரண்டு பரிசுத்தமான பாதங்களை எனக்கு நீ தந்தருள்வாயாக. திருமாலும் பிரமனும் தேடுதற்கு அரியவரான தம்பிரான் சிவபிரானும் உனது திருவடிகளில் பணிந்து பேசி, இறுதியில் அந்தப் பிரணவப் பொருளை எனக்கு அருள்க என்று கேட்க இதுதான் பொருள் என்று அவர் உணரும்படியாக உபதேசித்து அருளிய குமரனே, அந்த ஆதிசிவனுக்கும் குருநாதனே, சூரன் செல்லும் இடமெல்லாம் திரியும் விண் அளாவிய நீண்ட ஏழு மலைகளையும் பிளந்து, அசுரர்களின் போர் ஒடுங்குமாறு வேலாயுதத்தைச் செலுத்தியவனே, ஒழுங்காக ஓதப்படும் வேதத்தின் ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட திரிவிரிஞ்சைத் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.பிரமன் பூஜித்ததால் 'விரிஞ்சன்புரம்' ஆகி, 'விரிஞ்சிபுரம்' என்று பெயர் மருவிற்று.

பாடல் 673 - திருவாலங்காடு 
ராகம் - ...; தாளம் -

தனதானந் தானன தானன     தனதானந் தானன தானன          தனதானந் தானன தானன ...... தனதான

கனவாலங் கூர்விழி மாதர்கள்     மனசாலஞ் சால்பழி காரிகள்          கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே 
கசிவாருங் கீறுகி ளாலுறு     வசைகாணுங் காளிம வீணிகள்          களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர் 
மனவேலங் கீலக லாவிகள்     மயமாயங் கீதவி நோதிகள்          மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில் 
மதிமாடம் வானிகழ் வார்மிசை     மகிழ்கூரும் பாழ்மன மாமுன          மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ 
தனதானந் தானன தானன     எனவேதங் கூறுசொல் மீறளி          ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா 
தகரேறங் காரச மேவிய     குகவீரம் பாகும ராமிகு          தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே 
தினமாமன் பாபுன மேவிய     தனிமானின் தோளுட னாடிய          தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா 
திகழ்வேடங் காளியொ டாடிய     ஜெகதீசங் கேசந டேசுரர்          திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே.

பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள். மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் களிம்பைத் தடவும் வீணிகள். ஆவேசத்தைத் தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத் தருகின்ற, அசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள். காம மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல் மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும் பாழான மனம் இது. உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ? தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே, நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே, மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே, தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப் புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன் விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே, திகழ்கின்ற வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில்* விளங்கி நிற்கும் பெருமாளே. 
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது.

பாடல் 674 - திருவாலங்காடு 
ராகம் - ---; தாளம் -

தந்தானந் தாத்தம் தனதன     தந்தானந் தாத்தம் தனதன          தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான

பொன்றாமன் றாக்கும் புதல்வரும்     நன்றாமன் றார்க்கின் றுறுதுணை          பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே 
பொங்காவெங் கூற்றம் பொதிதரு     சிங்காரஞ் சேர்த்திங் குயரிய          புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல 
நின்றானின் றேத்தும் படிநினை     வுந்தானும் போச்சென் றுயர்வற          நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன் 
நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை     விஞ்சாதென் பாற்சென் றகலிட          நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே 
குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு     கன்றாமுன் காத்துங் குவலய          முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே 
கொந்தார்பைந் தார்த்திண் குயகுற     மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல்          கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே 
அன்றாலங் காட்டண் டருமுய     நின்றாடுங் கூத்தன் திருவருள்          அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே 
அன்பால்நின் தாட்கும் பிடுபவர்     தம்பாவந் தீர்த்தம் புவியிடை          அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே.

அழிவில்லாத வகையில் சபையிலே புகழைப் பெருக்கும் மக்களும் கூட நல்லபடியாக நிலைத்த செல்வம் ஆகார். யாவருக்கும் இன்று உற்ற துணையாக கருதப்படும் பொருட்செல்வமும் கூட அவ்வாறே நிலையற்றது என்னும் இந்தக் கூத்தாட்டம் நிறைந்த புவி வாழ்க்கையில், கோபித்து வரும் கொடிய யமன் உயிரைக் கொண்டுபோக மறைந்து நிற்கும்போது, நன்கு அலங்காரம் செய்துகொண்டதான மேம்பட்டு நிற்கும் புன்மையான கூடாகிய உடலைக் கொண்டு, அதனுள் இருக்கின்ற உயிர் இடம் கொள்ளுமாறு இங்கு இவன் நிற்கின்றான், இன்று உன்னைப் புகழ்ந்து துதிக்கும்படியான நினைவுகூட இவனிடம் இல்லாமல் போய்விட்டது என்று, மேன்மையற்ற நிந்தனையான பேச்சு என்பது ஏற்பட்டுப் பரவுதற்கு முன்பாக, மனத்தாலும், ஐம்பொறிகளாலும் உண்டாகிப் பெருகும் வினையானது அதிகப்படாமல் என்னிடத்திலிருந்து விட்டு நீங்க, உன் திருவடிகளைத் தந்து அடியேனை ஆட்கொண்டு திருவருளைத் தர நினைந்தருள வேண்டுகிறேன். (கோவர்த்தன) மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்னாள் காத்தவரும், பூமியை உண்டவருமான திருமாலின் பாராட்டுதலை வெகுவாகப் பெற்ற மருகனே, பூங்கொத்து நிறைந்த பசுமையான மாலையைத் தரித்துள்ள, திண்ணிய மார்பகங்கள் உடைய வள்ளியாம் குறப் பெண்ணிண் நீங்காத மனத்தில் மயக்கம் கொண்டே, அவளிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று கூறியவனே, அன்று திருவாலங்காட்டில்*, தேவர்களும் பிழைப்பதற்காக, நின்று நடனம் புரிந்த சிவபெருமானது திருவருள் அங்கு கூடும்படியான (தேவாரத்) திருப்பதிகங்களின் பயனை (திருஞானசம்பந்தராக வந்து) அருளிச்செய்த செல்வமே, அன்பினால் உன்னுடைய திருவடிகளை வணங்குபவரின் பாவத்தைத் தீர்த்து, இப்பூமியில் அவர்களுக்கு அஞ்சாத நெஞ்சத்தையும், செல்வங்களையும் தரவல்ல பெருமாளே. 
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.

பாடல் 675 - திருவாலங்காடு 
ராகம் - ...; தாளம் -

தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த     தனதன தானந் தாத்த ...... தனதான

புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி     புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே 
பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி     புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம் 
பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி     பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப் 
படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி     பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே 
சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க     திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே 
திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற     ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக் 
குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி     குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா 
குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில்     குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே.

மண், நீர், காற்று இவைகளைக் கலந்தும், நெருப்பு, வான் என்ற இரண்டையும் கூடச் சேர்த்தும், புதுமை வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டியும், இவைகளுக்கு இடையே ஐம்பொறிகள், ஐம்புலன்கள் என்ற பத்து இந்திரியங்களையும் இணைத்தும், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு கருவிகளைப் பிணைத்தும், சொல்லப்படுகின்ற துவாரங்களாக (வழிகளாக) ஒன்பது வாயில்களை* உண்டுபண்ணியும், இந்த உடல் ஏற்படுத்தப்படுகிறது. (இத்தகைய உடலுக்குக் காரணமான) பாவ வினைகள் பொடிபட்டு அழிதலைக்காட்டி, நல்ல அறிவை எனக்குப் பொருந்தவைத்து, பசு, பதி, பாசம் (உயிர், இறைவன், தளை) என்ற முப்பொருள்களின் இலக்கணங்களை எனக்கு விளக்கி, ஐம்புலன்களும் மாய்ந்து ஒடுங்க இந்தப் பூமிக்குப் போ என்று என்னை விரைவில் அனுப்பிய நீதான், உன் அடிமையாகிய என்னை இப்போது வந்து வாழ்த்தி, முக்தியையும் அடைவதற்கான வழியைக் காட்டி அருள்வாயாக. சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், தவம் நிறைந்த முநிவர்கள்** பார்த்து மகிழவும், திருநடனம் ஆடும் கூத்தபிரான் சிவனின் குழந்தை முருகனே, லக்ஷ்மியை மார்பில் வைத்த திருமால் போற்றவும், நான்கு திசைகளையும் நோக்கும் முகனான பிரமன் நாள்தோறும் போற்றவும், மண்ணுலகையும் விண்ணுலகையும் காக்கும் பொருட்டு மயில் மீதேறி, கிரெளஞ்சகிரியுடன் சூரன் தோல்வியுற, ஏழு கடல்களையும், மாமரத்தையும் (சூரனையும்) தாக்கி, எடுத்த கூரிய வேலினை அங்கு போர்க்களத்தில் செலுத்தின குமரேசனே, உலகெலாம் போற்ற பழையனூரிலும்***, திருவாலங்காட்டிலும் வீற்றிருந்து, குறமகளாகிய வள்ளியின் பாதம் போற்றுகின்ற பெருமாளே. 
* நவ துவாரங்கள்: இரு கண்கள், இரு செவிகள், இரு நாசிகள், ஒரு வாய், இரு கழிவுப் பாதைகள்.
** திருவாலங்காட்டில் கார்க்கோடகன், முஞ்சிகேசர் என்ற முநிவர்கள் சிவனின் அருளைப்பெற்று அவரது நடன தரிசனத்தைக் கண்டனர் - திருவாலங்காட்டுப் புராணம்.
*** பழனை என்ற பழையனூர் திருவாலங்காட்டுக்குக் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.

பாடல் 676 - திருவாலங்காடு 
ராகம் - : தாளம் -

தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த     தனதன தானந் தாத்த ...... தனதான

வடிவது நீலங் காட்டி முடிவுள காலன் கூட்டி     வரவிடு தூதன் கோட்டி ...... விடுபாசம் 
மகனொடு மாமன் பாட்டி முதலுற வோருங் கேட்டு     மதிகெட மாயந் தீட்டி ...... யுயிர்போமுன் 
படிமிசை தாளுங் காட்டி யுடலுறு நோய்பண் டேற்ற     பழவினை பாவந் தீர்த்து ...... னடியேனைப் 
பரிவொடு நாளுங் காத்து விரிதமி ழாலங் கூர்த்த     பரபுகழ் பாடென் றாட்கொ ...... டருள்வாயே 
முடிமிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங் காட்டில்     முதிர்நட மாடுங் கூத்தர் ...... புதல்வோனே 
முருகவிழ் தாருஞ் சூட்டி யொருதனி வேழங் கூட்டி     முதல்மற மானின் சேர்க்கை ...... மயல்கூர்வாய் 
இடியென வேகங் காட்டி நெடிதரு சூலந் தீட்டி     யெதிர்பொரு சூரன் தாக்க ...... வரஏகி 
இலகிய வேல்கொண் டார்த்து உடலிரு கூறன் றாக்கி     யிமையவ ரேதந் தீர்த்த ...... பெருமாளே.

உடலின் நிறத்தை கருநீலமாகக் காட்டி, முடிவு காலத்தில் வரும் யமன்அழைத்து வர அனுப்புகின்ற அவனுடைய தூதன் வளைத்து எறிகின்ற பாசக் கயிற்றினால் (மரணம் அடைகின்ற பொழுது), மகனும், மாமன், பாட்டி முதலான உறவினர்களும் (மரண நிலையைக்) கேட்டு புத்தி கலங்கும்படி, உலக மாயை அதிகமாகி உயிர் போவதற்கு முன்பு, இந்தப் பூமியில் உனது திருவடிகளைக் காட்டி, உடலுக்கு ஏற்பட்ட நோய்கள், முன் செய்த கர்மப் பயனால் அடைந்துள்ள பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து, உனது அடியேனாகிய என்னை அன்புடன் நாள்தோறும் காத்தளித்து, விரிந்த அழகிய தமிழ் மொழியால் அழகு மிக்க மேலான திருப்புகழைப் பாடுவாயாக என்று ஆட்கொண்டு அருள் புரிவாயாக. தலையில் சந்திரனைத் தரித்து, அழகுள்ள திருவாலங்காடு* என்னும் ஊரில் முதன்மையான நடனம்** ஆடுகின்ற கூத்தர் நடராஜனின் மகனே, நறுமணம் கமழும் மாலையையும் சூட்டி, ஒப்பற்றுத் தனித்து வர யானையையும் (விநாயகரையும்) வரவழைத்து முன்பு, வேடர்குலப் பெண்ணாகிய வள்ளியோடு சேர்தலில் மோகம் மிக்கவனே, இடியைப் போல வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் கொண்ட சூலாயுதத்தைக் கையில் எடுத்து, எதிர்த்து வந்த சூரன் சண்டைக்கு வர, அவனை எதிர்த்துச் சென்று விளங்குகின்ற வேலாயுதத்தை ஆரவாரத்துடன் செலுத்தி, அவன் உடலை இரண்டு பிளவாக அன்று ஆக்கி, தேவர்களுடைய துன்பத்தை நீக்கிய பெருமாளே. 
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை.
** திருவாலங்காட்டில் செய்யப்பட்ட நடனம் சண்ட தாண்டவம் (ஊர்த்துவ தாண்டவம்). இது ஆகாய உச்சியை நோக்கி மேலே செல்லும்படியாக இடது பாதத்தைத் தூக்கி வலது பாதத்தை ஊன்றிச் செய்யப்படும் சம்ஹார தாண்டவமாகும். இது பிறவியை நீக்கும் என்பது கோட்பாடு.

பாடல் 677 - திருவாலங்காடு 
ராகம் - மோஹனம் தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6

தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்     தனனாத் தானன தானம் ...... தனதான

தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்     தணியாச் சாகர மேழுங் ...... கிரியேழுஞ் 
சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்     தரிகூத் தாடிய மாவுந் ...... தினைகாவல் 
துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுந்     துணையாத் தாழ்வற வாழும் ...... பெரியோனே 
துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்     தொலையாப் பாடலை யானும் ...... புகல்வேனோ 
பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்     பழமாய்ப் பார்மிசை வீழும் ...... படிவேதம் 
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்     பறிகோப் பாளிகள் யாருங் ...... கழுவேறச் 
சிவமாய்த் தேனமுதூறுந் திருவாக் காலொளி சேர்வெண்     டிருநீற் றாலம ராடுஞ் ...... சிறியோனே 
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்     திருவோத் தூர்தனில் மேவும் ...... பெருமாளே.

வில், வாள், தண்டாயுதம், சூலம் இவைகளைத் தரித்து, பல கொலைகளைச் செய்த சூரனும், வற்றாத கடல்கள் ஏழும், மலைகள் ஏழும், சருகு போலக் காய்ந்து போகும்படி எரித்த ஒளிமிக்க வேலும், சண்டை செய்யவல்ல கால்களை உடைய சேவலும், நீல நிறமானதும், நடனம் ஆடவல்லதுமான மயிலாம் குதிரையும், தினைப் புனத்தைக் காத்த, பவளம் போன்ற வாயைக்கொண்ட, வேடர் குலத்து மான் போன்ற வள்ளியும், தேவலோகத்தாளாகிய ஒப்பற்ற தேன் அனைய தேவயானையும், துணையாகக் கொண்டு குறைவின்றி வாழ்கின்ற கோமானே, நீ துணையாகக் காவல் செய்து ரக்ஷிப்பாய் என்று உணராத பாவிகளிடத்தில் சென்று அழிவில்லாத அருமையான பாடல்களை நானும் சொல்லித் திரியலாமோ? பிறப்பை ஒழித்து, ஆணாக இருந்த பனைமரம் காய்த்து நறுமணம் வீசும் பழங்களாக பூமியின் மீது விழும்படியாக,* வேதத்தைப் படிக்காத பாதகர்கள் (1) பாயைத் தவிர வேறு எந்த ஆடையும் உடுக்காத பேதைகள் (2) தலைமயிரைப் பிய்த்துப் பறிக்கும் கூத்தாடிச் சமர்த்தர்கள் (3) ஆகிய சமணர் எல்லாருமாகக் கழுவில் ஏறும்படியாக, சிவமயமானதும், தேனும் அமுதும் ஊறினது போலத் தித்திக்கும் உனது (திருஞானசம்பந்தரது) திருவாக்கினாலும் தேவாரப் பாடல்களினாலும், பெருமை வாய்ந்த வெள்ளைத் திருநீற்றாலும், வாதுப் போர் புரிந்த இளையோனே, செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட சேயாறு முத்துக்களைக் கரையிலே கொட்டும் அழகு நிறைந்த திருவோத்தூர்** என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவோத்தூரில் பனைமரங்கள் ஆண்பனையாக இருந்தமை கண்டு சமணர்கள் பரிகசிக்க, அவ்வூரில் சிவனைத் தரிசித்த திருஞானசம்பந்தர் (குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர் என்ற) தேவாரத்தைப் பாட, ஆண்பனைகள் யாவும் குலைதள்ளி பனம் பழங்களைக் கொட்டின. பனைகளின் பிறப்பும் ஒழிந்தன.(1) (2) (3) இவையாவும் சமண குருமாரைக் குறிப்பன:(1) சமணர் வேதத்தைப் படித்ததில்லை.(2) சமணர் கோரைப் பாயைத் தவிர வேறு ஆடை உடுப்பதில்லை.(3) சமண குருமார் ஒருவனைக் குருவாக ஆக்கும்போது அவனது தலைமயிரை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் பறிக்கும் வழக்கம் உண்டு.
** திருவோத்தூர் காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்கே 19 மைலில் சேயாற்றின் கரையின் உள்ளது.இங்கு சிவபிரான் தேவர்களுக்கும் முநிவர்களுக்கும் வேதத்தை ஓதுவித்ததால் திருவோத்தூர் எனப்படும்.

பாடல் 678 - பாக்கம் 
ராகம் - ...; தாளம் -

தாத்தத்த தானதன தாத்தத்த தானதன     தாத்தத்த தானதன ...... தனதான

கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி     காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி 
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்     காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற் 
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு     போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் 
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி     கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே 
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்     போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற் 
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது     போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே 
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர     னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே 
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்     பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே.

கருமேகத்துக்கு நிகரான உடல் நிறத்தை உடைய கடல் போலப் பரந்த சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து தோன்றி, நிலைத்து நிற்காத வடிவம் இந்த உடல் ஆகும். ஒரு கோடிக் கணக்கான காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவுத் தானியமாக ஆகப்போவது இந்த உடல். சுடுகாட்டில் பெரு நெருப்பில் சேரும்படி, ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை, அருகே அழைத்து, விசாரித்துத் திருவருள் பாலித்து, (உன்னைப் பாடும்படியான) வாக்கை எனக்கு அருளி, உன் திரு நாமங்களைச் சொற்களில் பாடலாக அமைப்பதற்கு வேண்டிய நூல் அறிவைத் தந்து அருளுக. சண்டைக்குச் சளைக்காத யமனைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் கூடிப் போய் திசை தோறும் இறக்கும்படியாக, கூரிய வேலினால் குத்தி, சித்தர்களும் தேவர்களும் மழை போல பூக்களை (போர்க்களத்தில்) மிகப் பொழிய உக்கிரமாகச் சண்டை செய்து, போற்றி வணங்கும் தேவர்களுடைய சிறையை நீக்கியவனே, பூமியில் வெற்றி தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு, மிக்க ஞானத்தில் சிறந்தவனாக, பக்தியை நன்கு வளர்க்க வல்ல உபதேச மொழிகளைக் கூறிய குரு மூர்த்தியாகிய செல்வமே, பாமாலைகளால் இயற்றமிழ் வல்ல புலவர்கள் விரும்பிப் பார்ப்பதற்காக, வேல் ஏந்தி, சிறந்த பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்க வல்ல பெருமாளே. 
* பாக்கம், சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.

பாடல் 679 - பாக்கம் 
ராகம் - ...; தாளம் -

தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த     தாத்தத் தனந்த தந்த ...... தனதான

பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை     நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும் 
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து     ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே 
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு     கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும் 
வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற     வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ 
மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து     வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப 
மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து     வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும் 
பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து     பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே 
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த     பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.

பருந்துகளின் கூட்டங்கள் உண்டு வயிறு நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச் சுமந்து கொண்டு, ஊர்கள் தோறும் சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும், செல்வத்துக்கு வழியைத் தேடியும் இளைத்து வாடி, அங்கங்கு நின்று தளராமல், மாறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி (ஒருமைப்பட்ட மனத்தினனாய்) உன்னைப் புகழ்ந்து கொண்டு, உன் திருப்புகழையே பாடிப் பாடி உனது திருவடிகளை அடியேனாகிய நானும் விரும்பி, உன்னோடு கலந்திருந்து வருத்தங்களைக் கடந்து நின்ற மோட்ச வீட்டில் புகுந்து இருந்து மகிழ்ச்சி உறுவேனோ? உரை மாற்றுக் கடந்த பொன் விளங்கும் (நாந்தகம் என்னும்) வாளும், (சுதர்சனம் என்னும்) சக்கரமும், தெரிந்து பொருந்த அமைந்த (பாஞ்சஜன்யம் என்னும்) சங்கமும், (கெளமோதகி என்னும்) தண்டமும், (சாரங்கம் என்னும்) வில்லும், அழகிய பொன் ஆபரணங்களும் விளங்கும்படியாக நிலையாக வைத்துள்ள திருமாலை, வணங்குகின்ற நீண்ட கைகள் என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற பால் என்று சொல்லும்படியான திருப்பாற் கடலில் இடம் கொண்டு, வேல் போன்ற கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான ஆதி சேஷன் என்னும் பாம்பணையில் துயில் கொண்டவனாகிய திருமாலின் மருகனே, கமுக மரப் பாக்கையும் கரும்புகளையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.

பாடல் 680 - திருவேற்காடு 
ராகம் - ....; தாளம் -

தானந்தா தனதான தானந்தா தனதான     தானந்தா தனதான ...... தனதான

ஆலம்போ லெழுநீல மேலங்காய் வரிகோல     மாளம்போர் செயுமாய ...... விழியாலே 
ஆரம்பால் தொடைசால ஆலுங்கோ புரவார     ஆடம்பார் குவிநேய ...... முலையாலே 
சாலந்தாழ் வுறுமால ஏலங்கோர் பிடியாய     வேளங்கார் துடிநீப ...... இடையாலே 
சாரஞ்சார் விலனாய நேகங்கா யமன்மீறு     காலந்தா னொழிவேது ...... உரையாயோ 
பாலம்பால் மணநாறு காலங்கே யிறிலாத     மாதம்பா தருசேய ...... வயலூரா 
பாடம்பார் திரிசூல நீடந்தா கரவீர     பாசந்தா திருமாலின் ...... மருகோனே 
வேலம்பார் குறமாது மேலும்பார் தருமாதும்     வீறங்கே யிருபாலு ...... முறவீறு 
வேதந்தா வபிராம நாதந்தா வருள்பாவு     வேலங்கா டுறைசீல ...... பெருமாளே.

ஆலகால விஷத்தைப் போல் எழுந்து நீலோற்பல மலருக்கும் மேலானதாக அங்கு அமர்ந்து, ரேகைகள் கொண்டு அழகு வாய்ந்து, கண்டோர் இறந்து போகும்படிச் சண்டை செய்ய வல்ல மாயம் நிறைந்த கண்களாலே, முத்து ஆரம் தம்மேல் மாலையாக மிகவும் அசைகின்ற, கோபுரம் போல் எழுந்து ஆடம்பரமாகக் குவிந்துள்ள, அன்புக்கு இடமான மார்பகங்களாலே, மிகவும் இளைத்திருப்பதும், ஆசை தரக் கூடியதாகப் பொருந்தி அங்கு ஒரு பிடி அளவே இருப்பதும், விருப்பத்துக்கு அங்கு இடமாய் நிறைந்ததும், உடுக்கை போன்றதுமான இடுப்பாலே, (என்னை வாழவிடாமல் செய்யும் விலைமாதரை விட்டு) வேறு புகலிடம் இல்லாதவனாய் இருக்கும் எனக்கு, நிறைய பிறப்புகளில் என் உயிரைக் கவர்ந்து சென்ற யமன் என்னை அதிகாரம் செய்து வென்று செல்லும் காலம் தான் நீங்குதல் என்றைக்கு எனச் சொல்ல மாட்டாயோ? பூமியின் இடமெல்லாம் கடல் நீரால் சேர்க்கை தோன்றுங்கால் (பிரளய காலத்தில்), அப்போதும் அழிவில்லாத தேவி அம்பிகை பெற்ற குழந்தையே, வயலூரில் குடிகொண்டுள்ள தெய்வமே, பெருமை வாய்ந்த அம்பு போல கூர்மை வாய்ந்த முத்தலைச் சூலத்தால், மேம்பட்டு நின்ற அந்தகாசுரனை* வருத்தின வீரனாகிய சிவன் மீது அன்பைப் பொழியும் திருமாலின் மருகனே, வேல் போலவும் அம்பு போலவும் (உள்ள கண்களைக் கொண்ட) குறப் பெண்ணாகிய வள்ளியும், தேவர்கள் வளர்த்த தேவயானை அம்மையும் பெருமிதத்துடன் அங்கே இரண்டு புறமும் பொருந்த விளங்க வேதத்தின் முடிவில் இருப்பவனே, அழகனே, ஒலியின் முடிவில் இருப்பவனே, திருவருளைப் பரப்பும் திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் தூயவனே, பெருமாளே. 
* அந்தகாசுரன் அரக்கன் இரணியனுக்கு மைந்தன், பிரகலாதனுக்குத் தம்பி. இவன் தேவர்களை வருத்த, சிவபெருமான் பைரவ மூர்த்தியை ஏவினார். அவர் சூலத்தினால் அந்தகாசுரனைக் குத்தி அடக்கினார்.
** திருவேற்காடு, சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.

பாடல் 681 - திருவேற்காடு 
ராகம் - ஸிம்மேந்திர மத்யமம் தாளம் - திஸ்ர த்ருபுடை

தாத்தாதன தானன தானன     தாத்தாதன தானன தானன          தாத்தாதன தானன தானன ...... தனதான

கார்ச்சார்குழ லார்விழி யாரயி     லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு          வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் ...... மயலாலே 
காழ்க்காதல தாமன மேமிக     வார்க்காமுக னாயுறு சாதக          மாப்பாதக னாமடி யேனைநி ...... னருளாலே 
பார்ப்பாயலை யோவடி யாரொடு     சேர்ப்பாயலை யோவுன தாரருள்          கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு ...... குமரேசா 
பார்ப்பாவல ரோதுசொ லால்முது     நீர்ப்பாரினில் மீறிய கீரரை          யார்ப்பாயுன தாமரு ளாலொர்சொ ...... லருள்வாயே 
வார்ப்பேரரு ளேபொழி காரண     நேர்ப்பாவச காரண மாமத          ஏற்பாடிக ளேயழி வேயுற ...... அறைகோப 
வாக்காசிவ மாமத மேமிக     வூக்காதிப யோகம தேயுறு          மாத்தாசிவ பாலகு காவடி ...... யர்கள்வாழ்வே 
வேற்காடவல் வேடர்கள் மாமக     ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு          வேற்காடுறை வேதபு ¡£சுரர் ...... தருசேயே 
வேட்டார்மக வான்மக ளானவ     ளேட்டார்திரு மாமண வாபொனி          னாட்டார்பெரு வாழ்வென வேவரு ...... பெருமாளே.

மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள், கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள், பால் போல் இனிய சொற்களை உடையவர்கள், இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் பொருந்திய இள நீரைப் போன்ற மார்பகங்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் மீதுள்ள மயக்கத்தாலே, திண்ணியதான அன்பு பூண்டுள்ள மனமே, மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற ஜாதகத்தை உடையவனும், மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை, உன்னுடைய திருவருள் கொண்டு பார்க்க மாட்டாயோ? உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உன்னுடைய பூரண அருளை நிரம்பத் தர மாட்டாயோ? உமா தேவி பெற்ற குமரேசனே, பூமியில் உள்ள புலவர்கள் ஓதும் புகழ்ச் சொற்களால் பழைய கடல் சூழ்ந்த இவ்வுலகில் மேம்பட்டு விளங்குபவராகிய நக்கீரரை* மகிழ்ந்து ஏற்பவனே, உனது திருவருளை அதேபோலப் பாலித்து ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு அருளுவாயாக. (உலகத்துக்கு) நீடிய பேர் அருளையே பொழிந்த மூல காரணனே, நேரிட்டு எதிர்த்த பாவத்துக்குத் துணைக் காரணமாகிய சமண மதத்தை ஏற்பாடு செய்த மதக் குருக்கள் அழிபட (தேவாரப் பாடல்களை திருஞானசம்பந்தராக வந்து) கூறிய, கோபம் கொண்ட திருவாக்கை உடையவனே, சிறந்த சிவ மதமே பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே, யோக நிலையில் இருக்கும் பெரியவனே, சிவனது குமரனே, குகனே அடியார்களின் செல்வமே, வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியிடம் அன்பு பூண்ட நல்ல அழகிய கணவனே, திருவேற்காட்டில்** வீற்றிருக்கும் வேத பு¡£சுரர் பெற்ற குழந்தையே, வேள்வி நிரம்பிய யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவயானையின் சிறந்த அழகிய மணவாளனே, பொன்னுலகத்தினரான தேவர்களுடைய செல்வம் என வருகின்ற பெருமாளே. 
* சிவபிரானால் சபிக்கப்பட்டு சிறையில் இருந்த நக்கீரர், திருமுருகாற்றுப்படையைப் பாடி முருகன் அருளால் சிறை மீண்டார்.
** திருவேற்காடு சென்னையின் அருகிலுள்ள ஆவடி ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கில் 4 மைலில் உள்ளது.

பாடல் 682 - வடதிருமுல்லைவாயில் 
ராகம் - மோஹனம் ; தாளம் - அங்கதாளம் - 6 1/2 - எடுப்பு - 1/2 அக்ஷரம் தள்ளி 
தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2

தனதய்ய தானன தானன     தனதய்ய தானன தானன          தனதய்ய தானன தானன ...... தனதான

அணிசெவ்வி யார்திரை சூழ்புவி     தனநிவ்வி யேகரை யேறிட          அறிவில்லி யாமடி யேனிட ...... ரதுதீர 
அருள்வல்லை யோநெடு நாளின     மிருளில்லி லேயிடு மோவுன          தருளில்லை யோஇன மானவை ...... யறியேனே 
குணவில்ல தாமக மேரினை     யணிசெல்வி யாயரு ணாசல          குருவல்ல மாதவ மேபெறு ...... குணசாத 
குடிலில்ல மேதரு நாளெது     மொழிநல்ல யோகவ ரேபணி          குணவல்ல வாசிவ னேசிவ ...... குருநாதா 
பணிகொள்ளி மாகண பூதமொ     டமர்கள்ளி கானக நாடக          பரமெல்லி யார்பர மேசுரி ...... தருகோவே 
படரல்லி மாமலர் பாணம     துடைவில்லி மாமத னாரனை          பரிசெல்வி யார்மரு காசுர ...... முருகேசா 
மணமொல்லை யாகி நகாகன     தனவல்லி மோகன மோடமர்          மகிழ்தில்லை மாநட மாடின ...... ரருள்பாலா 
மருமல்லி மாவன நீடிய     பொழில் மெல்லி காவன மாடமை          வடமுல்லை வாயிலின் மேவிய ...... பெருமாளே.

அழகு நிறைந்த மாதர் (பெண்), கடல் சூழ்ந்த பூமி (மண்), செல்வம் (பொன்) என்ற மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான அறிவற்றவனாகிய அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய திருவருளை வலிய அருள்வாயோ? அல்லது நீண்ட காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ? உனது திருவருள் என்மீது சிறிதும் இல்லையோ? உன்அடியார் கூட்டத்தை நான் அறியவில்லையே. சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய* அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே, திண்ணிய பெரும் தவநிலையே பெறும்படியான நற்குணத்தோடு கூடிய பிறப்பில் கிடைத்த உடலாகிய வீட்டை எனக்கு நீ தரும் நாள் எதுவெனக் கூறுவாயாக. நல்ல யோகிகளே பணிகின்ற நற்குண சீலனே, சிவனே, சிவபிரானுக்கு குரு மூர்த்தியே, பாம்புகளை ஆபரணமாகப் பூண்டவளும், பெரிய கணங்களாகிய பூதங்களோடு அமர்ந்த திருடியும், காட்டில் சிவனுடன் நடனம் ஆடுகின்றவளும், மேலான மென்மையுடையவளுமான பரமேஸ்வரி பார்வதிதேவி பெற்ற தலைவனே, நீரில் படரும் அல்லி, தாமரை, நீலோற்பலம் முதலிய சிறந்த மலர்ப் பாணங்களை உடைய வில்லியாகிய அழகிய மன்மதனின் அன்னையும், பெருமை வாய்ந்த செல்வியுமாகிய லக்ஷ்மிதேவியின் மருமகனே, தெய்வ முருகேசனே, திருமணம் விரைவில் புரிந்தவளும், பெருமை வாய்ந்த மலைக் கொடியும் ஆகிய பார்வதிதேவி வசீகரத்துடன் அமர்ந்து மகிழும் சிதம்பரத்தில் பெரிய நடனம் ஆடிய சிவபிரான் அருளிய பாலனே, வாசனைமிக்க மல்லிகை பெருங்காடாக வளர்ந்துள்ள சோலையும், மென்மையான பூந்தோட்டங்களும், நீர்நிலைகளும் பக்கங்களில் சூழ்ந்து அமைந்துள்ள வடமுல்லைவாயிலில்** மேவும் பெருமாளே. 
* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.
** வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.

பாடல் 683 - வடதிருமுல்லைவாயில் 
ராகம் - ...; தாளம் -

தான தானன தானன தந்தன     தான தானன தானன தந்தன          தான தானன தானன தந்தன ...... தனதான

சோதி மாமதி போல்முக முங்கிளர்     மேரு லாவிய மாமுலை யுங்கொடு          தூர வேவரு மாடவர் தங்கள்மு ...... னெதிராயே 
சோலி பேசிமு னாளிலி ணங்கிய     மாதர் போலிரு தோளில்வி ழுந்தொரு          சூதி னால்வர வேமனை கொண்டவ ...... ருடன்மேவி 
மோதி யேகனி வாயத ரந்தரு     நாளி லேபொருள் சூறைகள் கொண்டுபின்          மோன மாயவ மேசில சண்டைக ...... ளுடனேசி 
மோச மேதரு தோதக வம்பியர்     மீதி லேமய லாகிம னந்தளர்          மோட னாகிய பாதக னுங்கதி ...... பெறுவேனோ 
ஆதி யேயெனும் வானவர் தம்பகை     யான சூரனை மோதிய ரும்பொடி          யாக வேமயி லேறிமு னிந்திடு ...... நெடுவேலா 
ஆயர் வாழ்பதி தோறுமு கந்துர     லேறி யேயுறி மீதளை யுங்கள          வாக வேகொடு போதநு கர்ந்தவன் ...... மருகோனே 
வாதி னால்வரு காளியை வென்றிடு     மாதி நாயகர் வீறுத யங்குகை          வாரி ராசனு மேபணி யுந்திரு ...... நடபாதர் 
வாச மாமல ரோனொடு செந்திரு     மார்பில் வீறிய மாயவ னும்பணி          மாசி லாமணி யீசர்ம கிழ்ந்தருள் ...... பெருமாளே.

ஒளி பொருந்திய சிறந்த நிலவைப் போல முகமும், விளங்கும் மேரு மலை போன்ற பெரிய மார்பையும் கொண்டு, தூரத்தில் வருகின்ற ஆண்களின் முன் எதிர்ப்பட்டு (தங்கள்) வியாபாரப் பேச்சைப் பேசி, நீண்ட நாட்கள் பழகிய பெண்களைப் போல, அவர்களுடைய இரண்டு தோள்களிலும் விழுந்து அணைத்து, ஒரு வஞ்சனைப் பேச்சினால் வரும்படி செய்து, (அவர்களைத் தங்கள்) வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் அவர்களுடன் பொருந்தி இருந்து, வலிய அணைத்து கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தருகின்ற நாட்களில் வந்தவர்களுடைய பொருளை எல்லாம் கொள்ளை அடித்து, பின்பு (அவருடைய பொருளைக் கைப்பற்றிய பின்) மெளனமாக இருந்தும், வீணாகச் சில சண்டைகள் போட்டு இகழ்ந்து பேசியும், மோசமே செய்கின்ற வஞ்சனை மிக்க துஷ்டர்கள் மேல் காம இச்சை கொண்டு மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியைப் பெறுவேனோ? ஆதி மூர்த்தியே என்று போற்றிய தேவர்களுடைய பகைவனாகிய சூரனைத் தாக்கி அவனை நன்கு பொடியாகும்படிச் செய்து, மயிலில் ஏறி கோபித்த நெடிய வேலாயுதனே, இடையர்கள் வாழ்ந்திருந்த ஊர்கள் தோறும் மகிழ்ந்து சென்று, உரலில் ஏறி உறி மேல் உள்ள வெண்ணெயை திருட்டுத்தனமாகக் கொண்டு போய் வேண்டிய அளவு உண்டவனாகிய (கண்ணனுடைய) மருகோனே, வாது செய்ய வந்த காளியை வென்ற ஆதி நாயகர், மேலிட்டு விளங்கி கும்பிட்டு வீழும் கைகள் போல் வருகின்ற பெரும் அலைகளை உடைய கடல் அரசனாகிய வருணனும் வணங்கும் அழகிய பாதங்களை உடைய சிவபெருமான், நறு மணமுள்ள சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரமனோடு, அழகிய லக்ஷ்மி மார்பில் விளங்கும் திருமாலும் வணங்கும் (வடதிருமுல்லைவாயில் இறைவராகிய) மாசிலாமணி* ஈசர் மகிழ்ந்து அருளிய பெருமாளே. 
* வடதிருமுல்லைவாயிலில் இருக்கும் சிவபிரான் மாசிலாமணி என்ற நாமம் படைத்தவர்.இத்தலம் சென்னைக்கு அருகில் உள்ள ஆவடிக்குப் பக்கத்தில் இருக்கிறது.

பாடல் 684 - வடதிருமுல்லைவாயில் 
ராகம் - ...; தாளம் -

தய்யதன தான தந்தன     தய்யதன தான தந்தன          தய்யதன தான தந்தன ...... தனதான

மின்னிடைக லாப தொங்கலொ     டன்னமயில் நாண விஞ்சிய          மெல்லியர்கு ழாமி சைந்தொரு ...... தெருமீதே 
மெள்ளவுமு லாவி யிங்கித     சொல்குயில்கு லாவி நண்பொடு          வில்லியல்பு ரூர கண்கணை ...... தொடுமோக 
கன்னியர்கள் போலி தம்பெறு     மின்னணிக லார கொங்கையர்          கண்ணியில்வி ழாம லன்பொடு ...... பதஞான 
கண்ணியிலு ளாக சுந்தர     பொன்னியல்ப தார முங்கொடு          கண்ணுறுவ ராம லின்பமொ ...... டெனையாள்வாய் 
சென்னியிலு டாடி ளம்பிறை     வன்னியும ராவு கொன்றையர்          செம்மணிகு லாவு மெந்தையர் ...... குருநாதா 
செம்முகஇ ராவ ணன்தலை     விண்ணுறவில் வாளி யுந்தொடு          தெய்விகபொ னாழி வண்கையன் ...... மருகோனே 
துன்னியெதிர் சூரர் மங்கிட     சண்முகம தாகி வன்கிரி          துள்ளிடவெ லாயு தந்தனை ...... விடுவோனே 
சொல்லுமுனி வோர்த வம்புரி     முல்லைவட வாயில் வந்தருள்          துல்யபர ஞான வும்பர்கள் ...... பெருமாளே.

மின்னல் போன்ற இடையில் கலாபம் என்னும் இடை அணியும் ஆடையின் முந்தானையும் விளங்க, அன்னமும், மயிலும் வெட்கம் அடையும்படியான (சாயலும், நடை அழகும்) அவைகளின் மேம்பட்ட மாதர் கூட்டம் ஒருமித்து ஒரு தெருவிலே மெதுவாக உலாவி, இன்பகரமான சொற்களை குயில் போலக் கொஞ்சிப்பேசி விரைவில் நட்பு பாராட்டி, வில்லைப் போன்ற புருவமும், கண்கள் அம்பு போலவும் கொண்டு காமம் மிக்க பெண்கள் போல, மின்னல் போல் ஒளி வீசும் அணி கலன்களையும், செங்கழு நீர் மாலையையும் பூண்டுள்ள இன்ப நலம் பெறுகின்ற மார்பினை உடையவர்களாகிய விலைமாதர்களின் வலையில் நான் அகப்படாமல், அன்புடன் ஞான பதமான வலையினுள் அகப்படும்படி, அழகிய பொலிவு நிறைந்த தாமரைத் திருவடிகளையும் கொடுத்து, கண் திருஷ்டி வராதபடி இனிமையுடன் என்னை ஆண்டருளுக. தலையில் ஊடுருவும் இளம் பிறையையும், வன்னியையும், பாம்பையும், கொன்றை மலரையும் கொண்டவர், சிவந்த ரத்தினங்கள் விளங்கும் சடையர் எனது தந்தையாகிய சிவபெருமானின் குரு நாதனே, (ரத்தத்தால்) செந்நிறம் காட்டிய ராவணனின் தலை ஆகாயத்தில் தெறித்து விழும்படி வில்லினின்றும் அம்பைச் செலுத்தியவனும், தெய்விக பொன் மயமான (சுதர்ஸன) சக்கரத்தை ஏந்திய அழகிய கையனுமாகிய திருமாலின் மருகனே, நெருங்கி எதிர்த்து வந்த அசுரர்கள் அழிய, ஆறு திருமுகங்களுடன் விளங்கி, வலிய கிரெளஞ்ச மலை, ஏழு மலைகள் ஆகியவை பதை பதைத்து மாள, வேலாயுதத்தைச் செலுத்தியவனே, புகழ்பெற்ற (பிருகு, வசிஷ்டர் முதலிய) முனிவர்கள் தவம் செய்த வடதிருமுல்லை வாயிலில்* வந்தருள் பாலிக்கும், சுத்தமான மேலான ஞானமுள்ள தேவர்களின் பெருமாளே. 
* வடதிருமுல்லைவாயில் சென்னை அருகில் ஆவடிக்கு வடகிழக்கில் 3 மைலில் உள்ளது.

பாடல் 685 - திருவலிதாயம் 
ராகம் - ஷண்முகப்ரியா தாளம் - அங்கதாளம் - 8 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகதிமிதக-3

தனதய்ய தானதன ...... தனதான

மருமல்லி யார்குழலின் ...... மடமாதர் 
மருளுள்ளி நாயடிய ...... னலையாமல் 
இருநல்ல வாகுமுன ...... தடிபேண 
இனவல்ல மானமன ...... தருளாயோ 
கருநெல்லி மேனியரி ...... மருகோனே 
கனவள்ளி யார்கணவ ...... முருகேசா 
திருவல்லி தாயமதி ...... லுறைவோனே 
திகழ்வல்ல மாதவர்கள் ...... பெருமாளே.

வாசனை வீசும் மல்லிகை மலர் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்களை காம மயக்கத்தால் நினைந்து நினைந்து அடிநாயேன் அலைவுறாமல், நன்மை நல்கும் உன் இரண்டு திருவடிகளை விரும்பிப் போற்ற தக்கதான பெருமையும் மானமும் உள்ள மனதினை அருளமாட்டாயோ? கருநெல்லிக்காய் போல பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே, பெருமை வாய்ந்த வள்ளி தேவியின் கணவனே, முருகேசா, திருவலிதாயம்* என்ற தலத்தில் வீற்றிருப்பவனே, விளங்குகின்ற பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே. 
* திருவலிதாயம் இப்போது 'பாடி' எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.

பாடல் 686 - திருவொற்றியூர் 
ராகம் - ...; தாளம் -

தனதனன தான தனதனன தான     தனதனன தான ...... தனதான

கரியமுகில் போலு மிருளளக பார     கயல்பொருத வேலின் ...... விழிமாதர் 
கலவிகளில் மூழ்கி ம்ருகமதப டீர     களபமுலை தோய ...... அணையூடே 
விரகமது வான மதனகலை யோது     வெறியனென நாளு ...... முலகோர்கள் 
விதரணம தான வகைநகைகள் கூறி     விடுவதன்முன் ஞான ...... அருள்தாராய் 
அரிபிரமர் தேவர் முனிவர்சிவ யோகர்     அவர்கள்புக ழோத ...... புவிமீதே 
அதிகநட ராஜர் பரவுகுரு ராஜ     அமரர்குல நேச ...... குமரேசா 
சிரகரக பாலர் அரிவையொரு பாகர்     திகழ்கநக மேனி ...... யுடையாளர் 
திருவளரு மாதி புரியதனில் மேவு     ஜெயமுருக தேவர் ...... பெருமாளே.

கரு நிறமான மேகத்தைப் போன்று இருண்ட கூந்தல் பாரத்தையும், கயல் மீனுக்கு இணையான வேல் போன்ற கண்களையும் உடைய விலைமாதர்களின் காமப் புணர்ச்சியில் தோய்ந்து, கஸ்தூரி, சந்தனம் இவைகளின் கலவையைப் பூசியுள்ள மார்பகங்களில் படிய, படுக்கையில் காம சம்பந்தமான இன்பரச சாஸ்திரங்களைப் படிக்கின்ற வெறி கொண்டவன் இவன் என்று என்னை நாள் தோறும் உலகத்தினர் சுருக்கு என்று தைக்கும்படியாக பரிகாசப் பேச்சுக்ளைப் பேசி இகழ்வதற்கு முன்னர் ஞான கடாட்சத்தைத் தந்து அருள்வாயாக. திருமால், நான்முகன், தேவர்கள், முனிவர்கள், சிவ யோகிகள் ஆகிய இவர்கள் உனது திருப்புகழைப் பரவி ஓத, பூமியில் மேம்பட்டு விளங்கும் நடராஜனாகிய சிவ பெருமான் போற்றும் குரு ராஜ மூர்த்தியே, தேவர் குலத்துக்கு அன்பனே, குமரேசனே, பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், உமா தேவியை தனது இடது பக்கத்தில் வைத்திருப்பவரும், விளங்கும் பொன் நிறமான மேனியை உடையவரும் ஆகிய சிவ பெருமான் வீற்றிருக்கும் செல்வம் கொழிக்கும் ஆதிபுரி எனப்படும் திருவொற்றியூரில்* விளங்கும் வெற்றி முருகனே, தேவர்கள் பெருமாளே. 
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.

பாடல் 687 - திருவொற்றியூர் 
ராகம் - தன்யாஸி தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதிமிதக-3, தகிட-1 1/2, தக-1

தனதத்தன தானதன தனதத்தன தானதன     தனதத்தன தானதன ...... தனதானா

சொருபப்பிர காசவிசு வருபப்பிர மாகநிச     சுகவிப்பிர தேசரச ...... சுபமாயா 
துலியப்பிர காசமத சொலியற்றர சாசவித     தொகைவிக்ரம மாதர்வயி ...... றிடையூறு 
கருவிற்பிற வாதபடி யுருவிற்பிர மோதஅடி     களையெத்திடி ராகவகை ...... யதின்மீறிக் 
கருணைப்பிர காசவுன தருளுற்றிட ஆசில்சிவ     கதிபெற்றிட ரானவையை ...... யொழிவேனோ 
குருகுக்குட வாரகொடி செருவுக்கிர ஆதபயில்     பிடிகைத்தல ஆதியரி ...... மருகோனே 
குமரப்பிர தாபகுக சிவசுப்பிர மாமணிய     குணமுட்டர வாவசுரர் ...... குலகாலா 
திருவொற்றியு றாமருவு நகரொற்றியுர் வாரிதிரை     யருகுற்றிடு மாதிசிவ ...... னருள்பாலா 
திகழுற்றிடு யோகதவ மிகுமுக்கிய மாதவர்க     ளிதயத்திட மேமருவு ...... பெருமாளே.

பிரகாசமான உருவத்தை உடையவனே, சராசரம் யாவையும் கொண்ட பேருருவனே, பிரம்மப் பொருளாக நின்று, உண்மையான சுகத்தைத் தருபவனே, அந்தணரின் தேஜஸை உடையவனே, இன்ப சுபப் பொருளே, அழியாத சுத்தப் பிரகாசனே, மதங்களின் தொந்தரவைக் கடந்த இன்பம் கூடியவனே, பலவகையான பராக்கிரமத்தை உடையவனே, மாதரின் வயிற்றிடையே ஊறும் கருவில் பிறவாதபடி, உன் திருவுருவில் விரும்பத்தக்க திருவடிகளைப் போற்றும் கீத வகைகளில் மேம்பட்டவனாய் யான் ஆகி, கருணை ஒளிப்பிழம்பே, உன் திருவருள் கூடுவதால் குற்றமற்ற சிவகதியை யான் பெற்று, துன்பங்கள் யாவையும் கடக்க மாட்டேனோ? நிறமுள்ள சேவல் நிறைந்து விளங்கும் கொடியை உடையவனே, போரில் உக்கிரமாக, வெயில் ஒளி வீசும் வேலினை பிடித்துள்ள திருக்கரங்களை உடைய ஆதியே, திருமாலின் மருகனே, குமரனே, கீர்த்தி உள்ளவனே, குகனே, மிகத் தூய்மையான பேரொளியோனே, குணக் குறைவுள்ளவரும் ஆசை மிகுந்தவருமான அசுரர்களின் குலத்துக்கே யமனாக நின்றவனே, லக்ஷ்மி சேர்ந்து பொருந்தி இருக்கும் நகரமான திருவொற்றியூரில்* கடல் அலைக்குச் சமீபத்தில் இருக்கும் ஆதிசிவன் அருளிய குழந்தையே, விளக்கம் கொண்ட யோகத்திலும், தவத்திலும் மிக்க சிறப்பு அடைந்த மகா தவசிகளின் நெஞ்சம் என்னும் இடத்திலே வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவொற்றியூர் சென்னைக்கு வடக்கே 3 மைலில் உள்ளது.

பாடல் 688 - திருமயிலை 
ராகம் - ராமப்ரியா ; தாளம் - ஆதி

தனன தனதனன தனன தனதனன     தனன தனதனன ...... தனதான

அமரு மமரரினி லதிக னயனுமரி     யவரும் வெருவவரு ...... மதிகாளம் 
அதனை யதகரண விதன பரிபுரண     மமைய னவர்கரண ...... அகிலேச 
நிமிர வருள்சரண நிபிட மதெனவுன     நிமிர சமிரமய ...... நியமாய 
நிமிட மதனிலுண வலசி வசுதவர     நினது பதவிதர ...... வருவாயே 
சமர சமரசுர அசுர விதரபர     சரத விரதஅயில் ...... விடுவோனே 
தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு     தரர ரரரரிரி ...... தகுர்தாத 
எமர நடனவித மயிலின் முதுகில்வரு     மிமைய மகள்குமர ...... எமதீச 
இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு     மெமது பரகுரவ ...... பெருமாளே.

சிறந்த தேவர்களில் மேம்பட்டவனான இந்திரன், பிரம்மா, திருமால் ஆகியோர் அஞ்சும்படி வந்த ஆலகால விஷத்தினை (அடக்குவதற்காக) மனச் சஞ்சலத்தை ஹதம் செய்பவனே, சிந்தை நிறைந்த சாந்தர் மனத்தில் இருப்பவனே, அகில உலகிற்கும் ஈசனே, எம் தாழ்வு நீங்கி யாம் நிமிர்ந்திட உன் திருவடி அருளவேண்டும், (அவ்விஷம்) எம்மை நெருங்கி வருகிறது, என்றெல்லாம் எல்லா தேவர்களும் முறையிட, நினைக்கின்ற மாத்திரத்திலேயே, வாயு வேகத்தில், (சரணடைந்தவர்களைக் காப்பதுதான்) கடமையென்று நிமிஷ நேரத்தில் (அந்த விஷத்தை) உண்டருளிய சிவனுடைய சிரேஷ்டமான குமாரனே, உனது குகசாயுஜ்ய பதவியைத் தந்திட வரவேண்டும். ஒற்றுமையான பெருந்தன்மையுள்ள தேவர்களுக்கு பகைவர்களாகிய அசுரர்கள் மேல் சத்தியமான ஆக்ஞாசக்தி வேலை விடுவோனே, (என்னும் அதே ஒலியில்) (முருகன் அடியாராகிய) எம்மவருக்கு ஏற்ற நடனவகைகள் செய்யும் மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே, இமயராஜன் மகள் பார்வதி பெற்ற குமரா, எம் இறைவனே, தகுதி வாய்ந்துள்ள திருமயிலை* நகரிலே இன்பமாக வாழும் எங்கள் மேலான குருதேவப் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 689 - திருமயிலை 
ராகம் -....; தாளம் -

தனனத் தனதன ...... தனதான

அயிலொத் தெழுமிரு ...... விழியாலே 
அமுதொத் திடுமரு ...... மொழியாலே 
சயிலத் தெழுதுணை ...... முலையாலே 
தடையுற் றடியனு ...... மடிவேனோ 
கயிலைப் பதியரன் ...... முருகோனே 
கடலக் கரைதிரை ...... யருகேசூழ் 
மயிலைப் பதிதனி ...... லுறைவோனே 
மகிமைக் கடியவர் ...... பெருமாளே.

வேலை நிகர்த்து எழுந்துள்ள இரண்டு கண்களாலும், அமுதத்துக்கு ஒப்பான அருமையான பேச்சினாலும், மலைக்கு இணையாக எழுந்துள்ள இரு மார்பகங்களாலும், வாழ்க்கை தடைப்பட்டு, அடியேனும் இறந்து படுவேனோ? கயிலைப்பதியில் வீற்றிருக்கும் சிவபிரானின் குழந்தை முருகனே, கடலின் கரையும், அலையும் அருகிலே சூழ்ந்திருக்கும் திருமயிலைப்பதியில்* வீற்றிருப்பவனே, பெருமை பொருந்திய அடியவர்களின் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 690 - திருமயிலை 

ராகம் - பூர்வி கல்யாணி தாளம் - அங்கதாளம் - 10 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2 தகதிமி-2, தகதிமிதக-3

தனன தானன தானன தந்தத் ...... தனதான

அறமி லாவதி பாதக வஞ்சத் ...... தொழிலாலே 
அடிய னேன்மெலி வாகிம னஞ்சற் ...... றிளையாதே 
திறல்கு லாவிய சேவடி வந்தித் ...... தருள்கூடத் 
தினமு மேமிக வாழ்வுறு மின்பைத் ...... தருவாயே 
விறல்நி சாசரர் சேனைக ளஞ்சப் ...... பொரும்வேலா 
விமல மாதபி ராமித ருஞ்செய்ப் ...... புதல்வோனே 
மறவர் வாணுதல் வேடைகொ ளும்பொற் ...... புயவீரா 
மயிலை மாநகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.

தர்மமே இல்லாத மிக்க பாவம் நிறைந்த வஞ்சனை கொண்ட செயல்களாலே, அடியவனாகிய நான் உடல் தளர்ச்சி அடைந்தும் மனம் மட்டும் கொஞ்சமும் சோர்வு அடையாமல், வெற்றி விளங்கும் உனது செவ்விய பாதமலர்களை வணங்கிப் போற்றி உன் திருவருள் கிடைக்குமாறு நாள்தோறும் நல்ல வாழ்வு ஏற்படும் இன்பத்தைத் தந்தருள்வாயாக. வீரமுள்ள அசுரர்களின் படைகள் பயப்படும்படியாகப் போர் புரிந்த வேலனே, பரிசுத்தமானவனே, தாயார் அபிராமி தந்த செந்நிறத்துக் குழந்தையே, வேடர்குலத்தில் ஒளிபடைத்த நெற்றியுள்ள வள்ளிமீது வேட்கை கொண்ட அழகிய தோள்கள் அமைந்த வீரனே, திருமயிலை* மாநகரில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 691 - திருமயிலை 
ராகம் - கீரவாணி தாளம் - அங்தாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தனதன தனதன தனதன     தனன தனதன தனதன தனதன          தனன தனதன தனதன தனதன ...... தனதான

இகல வருதிரை பெருகிய சலநிதி     நிலவு முலகினி லிகமுறு பிறவியி          னினிமை பெறவரு மிடருறு மிருவினை ...... யதுதீர 
இசையு முனதிரு பதமலர் தனைமன     மிசைய நினைகிலி யிதமுற வுனதரு          ளிவர வுருகிலி அயர்கிலி தொழுகிலி ...... உமைபாகர் 
மகிழு மகவென அறைகிலி நிறைகிலி     மடமை குறைகிலி மதியுணர் வறிகிலி          வசன மறவுறு மவுனமொ டுறைகிலி ...... மடமாதர் 
மயம தடரிட இடருறு மடியனு     மினிமை தருமுன தடியவ ருடனுற          மருவ அருள்தரு கிருபையின் மலிகுவ ...... தொருநாளே 
சிகர தனகிரி குறமக ளினிதுற     சிலத நலமுறு சிலபல வசனமு          திறைய அறைபயி லறுமுக நிறைதரு ...... மருணீத 
சிரண புரணவி தரணவி சிரவண     சரணு சரவண பவகுக சயனொளி          திரவ பரவதி சிரமறை முடிவுறு ...... பொருணீத 
அகர உகரதி மகரதி சிகரதி     யகர அருளதி தெருளதி வலவல          அரண முரணுறு மசுரர்கள் கெடஅயில் ...... விடுவோனே 
அழகு மிலகிய புலமையு மகிமையும்     வளமு முறைதிரு மயிலையி லநுதின          மமரு மரகர சிவசுத அடியவர் ...... பெருமாளே.

மாறுபட்டு எழும் அலைகள் பெருகிய கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் இம்மையிலுள்ள பிறப்பின் இன்பத்தைப் பெறவும், வருகின்ற துன்பத்தோடு மோதும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகள் நீங்கவும், இணைந்த உன்னிரு பாத மலர்களை மனம் பொருந்த நினையாதவன் யான். இன்பமுற உன் திருவருள் கைகூட உருகித் துதியாதவன் யான். பக்தியால் தளர்ச்சி அடையாதவனும், வணங்காதவனும் யான். உமாதேவியைப் பாகத்தில் வைத்த சிவபிரான் மகிழ்கின்ற குழந்தையே என்று கூறாதவன் யான். திருப்தியே இல்லாத, பேதைமை குறையாதவன் யான். அறிவும், தெளிவும் அறியாதவன் யான். பேச்சற்றுப்போய் மெளன நிலையினில் இருக்காதவன் யான். அழகிய பெண்களின் மயக்கும் எழிலானது மனத்தில் இடம் பிடிக்க, அதனால் துன்பம் அடைகிற அடியேனும், இன்பத்தை நல்கும் உன் அடியார்களுடன் கூடிப் பொருந்தும் திருவருளைத் தரும் உன் கிருபைக்கு ஆளாகும் ஒரு நாளும் கிடைக்குமோ? உயர்ந்த மார்பினளான குறப்பெண் வள்ளி இனிமை அடையுமாறு தோழன் போன்று அவளிடம் நன்மைமிக்க சில பல வார்த்தைகளை அமுதமென அள்ளி வீசி, பேச்சுப் பயின்ற ஆறுமுக வேளே, நிறைந்து விளங்கும் அருள் கொண்ட நீதிமானே, பெருமை நிறைந்த பூரண நிறைவே, தயாள குணமுடையோனே, நிரம்பிய கேள்வி உடையவனே, அடைக்கலம் புகுதற்குரிய இறைவனே, சரவணப்பொய்கையில் தோன்றியவனே, குகனே, சிவபிரானின் ஒளியின் சாரமே, பரனே, அதிக மேன்மை உடையோனே, வேதத்தின் முடிவான பொருளாக விளங்கும் நீதியனே, அகரம் போன்ற முதற்பொருளே, உகர சிவசக்தியாக விளங்கும் நல்லறிவே, மமகாரமாகிய ஆணவத்தைத் தகிப்பவனே, சிவமாகிய தூய அறிவே, யகரமாகிய ஜீவாத்மாவில் விளங்குபவனே, அதிகமான அருளே, மிகுந்த ஞானமே, மிகுந்த வல்லமை படைத்த காவற் கோட்டையில் இருந்த பகைமை பூண்ட அசுரர்கள் அழியும்படி வேலைச் செலுத்தியவனே, அழகும், விளங்கும் கல்வி ஞானமும், பெருமையும், செழிப்பும் நிலைத்த மயிலாப்பூரில் நாள் தோறும் வீற்றிருக்கும், ஹர ஹர கோஷத்துக்கு உரியவருமான, சிவபிரானின் மைந்தனே, அடியவர்கள்தம் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 692 - திருமயிலை 
ராகம் -....; தாளம் -

தனதனன தான தந்த தனதனன தான தந்த     தனதனன தான தந்த ...... தனதான

இணையதில தாமி ரண்டு கயல்களென வேபு ரண்டு     இருகுழையின் மீத டர்ந்து ...... அமராடி 
இலகுசிலை வேள்து ரந்த கணையதிலு மேசி றந்த     இருநயனர் வாரி ணங்கு ...... மதபாரப் 
பணைமுலையின் மீத ணிந்த தரளமணி யார்து லங்கு     பருவரதி போல வந்த ...... விலைமானார் 
பயிலுநடை யாலு ழன்று அவர்களிட மோக மென்ற     படுகுழியி லேம யங்கி ...... விழலாமோ 
கணகணென வீர தண்டை சரணமதி லேவி ளங்க     கலபமயில் மேலு கந்த ...... குமரேசா 
கறுவிவரு சூர னங்க மிருபிளவ தாக விண்டு     கதறிவிழ வேலெ றிந்த ...... முருகோனே 
மணிமகுட வேணி கொன்றை அறுகுமதி யாற ணிந்த     மலையவிலி னாய கன்றன் ...... ஒருபாக 
மலையரையன் மாது தந்த சிறுவனென வேவ ளர்ந்து     மயிலைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

தமக்கு ஒப்பில்லாதனவான இரண்டு கயல் மீன்கள் என்னும்படி புரண்டு இரண்டு காதுகளின் மேலே நெருங்கிப் போர் தொடுத்து, விளங்கும் வில்லை உடைய மன்மதன் செலுத்திய மலர் அம்பைக் காட்டிலும் சிறந்த இரு கண்களை உடையவர்களும், கச்சணிந்த அதிக பாரமான பெரும் மார்பகங்களின் மீது முத்து மாலை அணிந்தவர்களும், விளங்கும் இளமை வாய்ந்த (மன்மதனின் மனைவி) ரதியைப் போல வந்தவர்களும் ஆகிய விலைமாதர்கள் மேற்கொள்ளும் தொழிலில் நான் சுழன்று அலைந்து, அவர்கள் மீது காம இச்சை என்னும் பெருங்குழியிலே மயங்கி விழலாமோ? கண கண என்ற ஓசையோடு ஒலிக்கும் வீர தண்டைகள் திருவடிகளில் விளங்க, தோகை மயிலின் மேல் மகிழ்ந்து ஏறும் குமரேசா, கோபித்து வந்த சூரனுடைய உடல் இரண்டு பிளவாகப் பிரியும்படிச் செய்து, அவன் அலறி விழும்படி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, அழகிய முடியாகிய சடையில், கொன்றை, அறுகம்புல், பிறைச் சந்திரன், கங்கை இவற்றை அணிந்துள்ள, (மேரு) மலையையே வில்லாகக் கொண்ட தலைவரான சிவபெருமானது ஒரு பாகத்தில் உள்ள, மலை அரசனாகிய பர்வத ராஜனுடைய மகளான, பார்வதியின் செல்லக் குழந்தை என்னும்படி வளர்ந்து, திருமயிலைத்தலம் சிறப்புடன் வாழும்படியாக அங்கு வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 693 - திருமயிலை 
ராகம் - ....; தாளம் -

தனதனன தான தத்த தனதனன தான தத்த     தனதனன தான தத்த ...... தனதான

களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற     கலகமத வேள்தொ டுத்த ...... கணையாலுங் 
கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்ற     கனலெனவு லாவு வட்ட ...... மதியாலும் 
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கி     வனிதைமடல் நாடி நித்த ...... நலியாதே 
வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றி     மலரணையில் நீய ணைக்க ...... வரவேணும் 
துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்ப     துயிலதர னாத ரித்த ...... மருகோனே 
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ர     துரகதக லாப பச்சை ...... மயில்வீரா 
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்ப     அருள்பரவு பாடல் சொற்ற ...... குமரேசா 
அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்து     அமரர்பதி வாழ வைத்த ...... பெருமாளே.

கலவைச் சாந்தும் மணி மாலையும் கொண்ட, தாமரை மொட்டுப் போன்ற மார்பின் மீது, வீரம் வாய்ந்தவனும், குழப்பத்தை உண்டு பண்ணும் காம விகாரம் தருபவனுமாகிய மன்மதன் செலுத்திய அம்புகளாலும், இனிமையான மொழிகளை உடைய மின்னல் போன்ற ஒளி கொண்ட மாதர்கள் அனைவரும் வேண்டுமென்றே பழிச் சொற்களைப் பேசுவதாலும், சேர்ந்துள்ள நெருப்புப் போல உலவி வரும் பூரண நிலவாலும், செழுமை கொண்ட, விரிந்த மலர்களால் அமைந்த படுக்கையின் மெத்தை மீது உருகும் இப்பெண் மடலேற* விரும்பி நாள் தோறும் துன்பம் அடையாமல், ரேகைகள் கொண்ட வண்டுகள் உலவி நெருங்கியுள்ள (மாலையை அணிந்த) இரண்டு புயங்களாலும் கலந்து, அவளது எண்ணம் வெற்றி பெற இந்த மலர்ப்படுக்கையில் நீ அணைக்க வர வேண்டுகின்றேன். துளசி மாலை அணிந்த மார்பன், சக்கரம் தரித்தவன், விஷ்ணு, முராசுரனைக் கொன்ற முராரி, ஆதிசேஷன் என்னும் பாம்பின்மேல் துயில் கொள்ளுபவன் விரும்புகின்ற மருகனே, வேதம், உபநிஷதம், வேள்வி இவை நிரம்பிய திருமயிலையில்** வீற்றிருப்பவனும், உக்ரமான குதிரையாகிய, தோகையுடைய பச்சை மயில் ஏறும் வீரனே, அளகாபுரி நகரத்துச் செல்வம் கொண்ட செட்டிக் குலத்தில் பிறந்த (பூம்பாவை என்னும்) பெண்ணின் உயிரை மீளும்படி அழைக்க வேண்டி இறைவன் திருவருள் பரவிய பதிகத்தை (ஞான சம்பந்தராக அவதரித்துச்) சொன்ன குமரேசனே, அருமையான கிரெளஞ்ச மலையைத் தூளாக்கி, அசுரர்களை வேரோடு அழித்து, தேவர்களைப் பொன்னுலகில் வாழ வைத்த பெருமாளே. 
* கடவுள் சம்பந்தமாக மட்டும் பெண்பாலோர் மடலேறுதல் கூறப்படும்.மடல் ஏறுதல்: காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.
** திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் நாயகியின் நற்றாய் கூறுவதுபோல அமைந்தது.மன்மதன், மலர்ப் பாணங்கள், நிலவு, ஊராரின் வசைப் பேச்சு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 694 - திருமயிலை 
ராகம் - கல்யாண வஸந்தம் தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தான தானான தனன தான தானான     தனன தான தானான ...... தனதான

கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்     கலக மேசெய் பாழ்மூடர் ...... வினைவேடர் 
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடு     கனவி கார மேபேசி ...... நெறி பேணாக் 
கொடிய னேது மோராது விரக சால மேமூடு     குடிலின் மேவி யேநாளு ...... மடியாதே 
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறு     குவளை வாகும் நேர்காண ...... வருவாயே 
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேட     பணமு மாட வேநீடு ...... வரைசாடிப் 
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடு     பதிய தாக வேலேவு ...... மயில்வீரா 
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலை     வனச வாவி பூவோடை ...... வயலோடே 
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகான     மயிலை மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.

கடுமையான கோபம் குறையாத சங்கற்பங்களை உடைய வஞ்சகர்கள், கீழ்க்குணத்தவர்கள், கலகத்தையே செய்கின்ற பாழான மூடர்கள், தீவினையையே விரும்புவோர்கள், வஞ்சனை கொண்ட இழிந்தவர்கள், (இத்தன்மையருடைய) நல்லது ஆகாத முறைகளை விரும்பியே, மிக மோசமான அவலட்சணங்களையே பேசி நன்னெறியைப் போற்றாத கொடியவனாகிய நான் எதையும் ஆராய்ந்து பார்க்காமல், வெறும் ஆசை ஜாலமே மூடியுள்ள இந்தக் குடிசையாகிய உடலில் இருந்து கொண்டே தினந்தோறும் அழிவுறாமல், விளங்கும் மயிலின் மீது ஆறுமுகங்களும், வேலும், பன்னிரண்டு குவளை மலர்மாலை அணிந்த தோள்களும், அடியேன் நேரில் கண்டு தரிசிக்குமாறு நேர் எதிரே வருவாயாக. பூமியோடு, பெரிய மேருமலை அதிரும்படியாகச் செலுத்தி, ஆதிசேஷனின் பணாமகுடங்கள் அசைவுறவும், பெருமலைகளை மோதி, பரந்த கடலில் நீர் கொந்தளித்து மோதவும், அசுரர்கள் இறக்கவும், தேவர்களின் நாடு செழிப்பான நகராகவும், வேலாயுதத்தைச் செலுத்திய மயில் வீரனே, அழகோடு வளர்ந்து ஆகாயம் வரை ஓங்கி மிளிரும் பலா மரங்களின் பெரிய சோலைகளும், தாமரைக் குளமும், நீர்ப் பூக்கள் நிறைந்த ஓடைகளும், வயல்களும், அழகிய மாடங்களும், சிறந்த மேடைகளும், கோபுரங்களும் ஒன்று கூடி விளங்கும் மயிலாப்பூரில்* வீற்றிருந்து வாழும் தேவர் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 695 - திருமயிலை 
ராகம் - சுபபந்துவராளி தாளம் - கண்ட ஏகம் - 5

தனனா தனனாதன தனனா தனனாதன     தனனா தனனாதன ...... தனதான

திரைவார் கடல்சூழ்புவி தனிலே யுலகோரொடு     திரிவே னுனையோதுதல் ...... திகழாமே 
தினநா ளுமுனேதுதி மனதா ரபினேசிவ     சுதனே திரிதேவர்கள் ...... தலைவாமால் 
வரைமா துமையாள் தரு மணியே குகனேயென     அறையா வடியேனுமு ...... னடியாராய் 
வழிபா டுறுவாரொடு அருளா தரமாயிடு     மகநா ளுளதோசொல ...... அருள்வாயே 
இறைவா ரணதேவனு மிமையோ ரவரேவரு     மிழிவா கிமுனேயிய ...... லிலராகி 
இருளா மனதேயுற அசுரே சர்களேமிக     இடரே செயவேயவ ...... ரிடர்தீர 
மறமா வயிலேகொடு வுடலே யிருகூறெழ     மதமா மிகுசூரனை ...... மடிவாக 
வதையே செயுமாவலி யுடையா யழகாகிய     மயிலா புரிமேவிய ...... பெருமாளே.

அலைகள் கொண்ட நீண்ட கடலால் சூழப்பட்ட பூமியிலே உலகத்தாரோடு உன்னை ஓதிப் புகழ்தல் இன்றித் திரிகின்றேன். நாள்தோறும் முன்னதாகத் துதிக்கும் மனநிலை நிரம்பப் பெற்று, அப்படிப்பட்ட மனம் வாய்த்த பின்னர், சிவகுமாரனே, மும்மூர்த்திகளின் தலைவனே, இமயமலை மாதரசி உமையாள் பெற்ற மணியே, குகனே என்று ஓதி அடியேனும், உன் தொண்டர்களாய் வழிபடும் அடியார்களோடு அருளன்பு கூடியவனாக ஆகின்ற விசேஷமான நாளும் எனக்கு உண்டோ? உன் நாமங்களைச் சொல்ல நீ அருள் புரிவாயாக. தலைமையான யானை ஐராவதத்தின் தேவனாம் இந்திரனும், ஏனைய தேவர்கள் அனைவரும், தாழ்ந்த நிலையை அடைந்து, முன்னர் தமது தகுதியை இழந்தவராகி, மயக்க இருளடைந்த மனத்தினராகி, அசுரத் தலைவர்கள் மிகவும் துன்பங்கள் செய்யவே, அந்த தேவர்களது துயரம் நீங்க, வீரமிக்க சிறந்த வேலினைக் கொண்டு உடல் இரண்டு கூறுபட, ஆணவமிக்க சூரனை, அவன் மாமரமாக உருமாறினும், அழித்து வதை செய்த பெரும் வலிமையை உடையவனே, அழகு வாய்ந்த மயிலாப்பூர்* தலத்தில் வாழ்கின்ற பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 696 - திருமயிலை 
ராகம் -....; தாளம் -

தனதன தனதன தாந்த தானன     தனதன தனதன தாந்த தானன          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

நிரைதரு மணியணி யார்ந்த பூரித     ம்ருகமத களபகில் சாந்து சேரிய          இளமுலை யுரமிசை தோய்ந்து மாமல ...... ரணைமீதே 
நெகிழ்தர அரைதுகில் வீழ்ந்து மாமதி     முகம்வெயர் வெழவிழி பாய்ந்து வார்குழை          யொடுபொர இருகர மேந்து நீள்வளை ...... யொலிகூர 
விரைமலர் செறிகுழல் சாய்ந்து நூபுர     மிசைதர இலவிதழ் மோந்து வாயமு          தியல்பொடு பருகிய வாஞ்சை யேதக ...... வியனாடும் 
வினையனை யிருவினை யீண்டு மாழ்கட     லிடர்படு சுழியிடை தாழ்ந்து போமதி          யிருகதி பெறஅருள் சேர்ந்து வாழ்வது ...... மொருநாளே 
பரையபி நவைசிவை சாம்ப வீயுமை     யகிலமு மருளரு ளேய்ந்த கோமளி          பயிரவி திரிபுரை யாய்ந்த நூல்மறை ...... சதகோடி 
பகவதி யிருசுட ரேந்து காரணி     மலைமகள் கவுரிவி தார்ந்த மோகினி          படர்சடை யவனிட நீங்கு றாதவள் ...... தருகோவே 
குரைகடல் மறுகிட மூண்ட சூரர்க     ளணிகெட நெடுவரை சாய்ந்து தூளெழ          முடுகிய மயில்மிசை யூர்ந்து வேல்விடு ...... முருகோனே 
குலநறை மலரளி சூழ்ந்து லாவிய     மயிலையி லுறைதரு சேந்த சேவக          குகசர வணபவ வாய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.

வரிசையாய் அமைந்த ரத்தின அணி கலன்கள் நிறைந்ததாய், மிக்கெழுந்ததாய், கஸ்தூரி சந்தனம் அகில் இவைகளின் சாந்து சேர்ந்துள்ள இள முலைகள் மார்பின் மேல் அணைந்து நல்ல மலர்ப் படுக்கையின் மேல் இடுப்பில் உள்ள ஆடை தளர்ந்து (தரையில்) விழுந்திட, நல்ல சந்திரனைப் போன்ற முகத்தில் வியர்வு எழ, கண்கள் பாய்ந்து நீண்ட குண்டலங்கள் உள்ள காதுகளோடு சண்டை செய்ய, இரண்டு கைகளில் அணிந்த பெரிய வளையல்கள் ஒலி மிகச் செய்ய, நறு மணம் உள்ள மலர்கள் நிறைந்த கூந்தல் சரிவுற்று, (கால்களில் உள்ள) சிலம்பு ஒலி செய்ய, இலவ மலர் போன்ற சிவந்த வாயிதழை முத்தமிட்டு வாயிதழின் அமுதம் போன்ற ஊறலை முறையே பருகும் விருப்பத்தையே தக்க ஒழுக்கமாகத் தேடும் வினைக்கு ஈடானவனை, நல்வினை தீவினை என்பவற்றில் இப்பிறப்பிலும் ஆழ்ந்த கடல் போன்ற துன்பப் படுகின்ற நீர்ச்சுழியான தீக் குணத்தில் தாழ்ந்து போகின்ற என் புத்தி நல்ல கதியைப் பெறுமாறு உனது திருவருளைப் பெற்று வாழ்வதும் ஒரு நாள் கிடைக்குமோ? பரா சக்தி, சிவத்தினின்று பிரிவு படாதவள், சிவன் தேவி, சம்புவின் சக்தி உமை, எல்லா உலகங்களையும் அருளிய அருள் கொண்ட அழகி, அச்சம் தருபவள், மும் மூர்த்திகளுக்கும் மூத்தவள், நூற்றுக் கணக்கான நூல்களும், உபதேச ரகசியப் பொருள்களும் ஆய்ந்துள்ள பகவதி, சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்களும் தரிக்கின்ற மூல தேவதை, இமய மலை அரசன் மகள் கெளரி, பல உருவினவளான அழகி, படர்ந்த சடையை உடைய சிவபெருமானது இடது பாகத்தில் நீங்காது விளங்கும் பார்வதி தேவி பெற்ற தலைவனே, ஒலிக்கின்ற கடல் கலங்க, கோபம் பொங்கி எழுந்த சூரர்களின் படைகள் அழிய, பெரிய கிரெளஞ்ச மலை வீழ்ந்து பொடிபட, வேகமாகச் செல்லும் மயிலின் மேல் ஏறி வேலாயுதத்தைச் செலுத்திய முருகனே, நல்ல தேன் உள்ள மலர்களில் உள்ள வண்டுகள் சூழ்ந்து உலாவும் மயிலாப்பூரில்* வீற்றிருக்கும் முருகனே, வீரம் வாய்ந்த குகனே, சரவணப் பொய்கையில் அவதரித்தவனே, பொருந்திய தேவர்களின் பெருமாளே. 
* மயிலாப்பூர் சென்னை நகரின் மையத்தில் உள்ளது.

பாடல் 697 - திருமயிலை 
ராகம் - ....; தாளம் -

தனதன தத்தன தானா தானன     தனதன தத்தன தானா தானன          தனதன தத்தன தானா தானன ...... தனதான

வருமயி லொத்தவ ¡£வார் மாமுக     மதியென வைத்தவர் தாவா காமிகள்          வரிசையின் முற்றிய வாகா ராமியல் ...... மடமாதர் 
மயலினி லுற்றவர் மோகா வாரிதி     யதனிடை புக்கவ ராளாய் நீணிதி          தருவிய லுத்தர்கள் மாடா மாமதி ...... மிகமூழ்கி 
தருபர வுத்தம வேளே சீருறை     அறுமுக நற்றவ லீலா கூருடை          அயிலுறை கைத்தல சீலா பூரண ...... பரயோக 
சரவண வெற்றிவி நோதா மாமணி     தருமர வைக்கடி நீதா வாமணி          மயிலுறை வித்தவு னாதா ராமணி ...... பெறுவேனோ 
திரிரிரி தித்திதி தீதீ தீதிதி     தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு          திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி ...... தொதிதீதோ 
தெனவரி மத்தள மீதார் தேமுழ     திடுவென மிக்கியல் வேதா வேதொழு          திருநட மிட்டவர் காதே மூடிய ...... குருபோதம் 
உரை செயு முத்தம வீரா நாரணி     உமையவ ளுத்தர பூர்வா காரணி          உறுஜக ரக்ஷணி நீரா வாரணி ...... தருசேயே 
உயர்வர முற்றிய கோவே யாரண     மறைமுடி வித்தக தேவே காரண          ஒருமயி லைப்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

அசைந்து வரும் மயில் போன்றவர்கள், பொருள் கொடுப்பவர்கள் வந்தால் (அவர் முன்பு தமது) அழகிய முகத்தை பூரண நிலவைப் போல வைத்துக் கொள்பவர்கள், எதிர் பாய்தல் இல்லாத (உண்மையில் மோகம் கொள்ளாத) ஆசைக்காரிகள், ஒருவிதமான ஒழுங்கைக் கைப்பிடிக்கும், அழகு நிறைந்த, தகுதி வாய்ந்த மென்மையான (விலை) மாதர்கள், காம வசப்பட்டு அவர்களுடைய மோகம் என்னும் கடலில் புகுந்து அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்டு (என்னுடைய) பெரிய சொத்துக்களை எல்லாம் தத்தம் செய்தும், மரம் போன்று அருட் குணம் இல்லாத லோபிகளாகிய விலைமாதர்கள், இவ் வேசையர் மாட்டு ஈடுபட்டு, நல்ல அறிவு அறவே அற்று மூழ்கிக் கிடப்பவன் நான். திருவருளைத் தரும் மேலான உத்தமனே, பெருமை வாய்ந்த ஆறு முகனே, நல்ல தவ விளையாடல்களை புரிபவனே, கூர்மை கொண்ட வேலைப் பிடித்த கரத்தனே, தரும மூர்த்தியே, பரிபூரணனே, மேலான யோக மூர்த்தியே, சரவண பவனே, வெற்றி விநோதனே, உயர்ந்த மணியைத் தருகின்ற பாம்பை அடக்குகின்ற, நீதியாயுள்ள, அழகிய மயிலின் மேல் வீற்றிருக்கும் ஞான மூர்த்தியே, உனது பற்றுக் கோடு என்னும் பெருமையைப் பெறுவேனோ? திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திரிரிரி தித்திதி தீதீ தீதிதி தொகுதொகு தொத்தொகு தோதோ தோதிகு திமிதிமி தித்திமி ஜேஜே தீதிமி தொதிதீதோ என்ற இவ்வாறான ஒலிகளுடன் திருமால் மத்தளம் மீது நிரம்ப வாசிக்கும் இடத்தில் முழவு வாத்தியத்தை திடு திடு என்று வாசிக்க, மிகுந்த தகுதி வாய்ந்த பிரமனும் (தாளம் போட்டுத்) தொழுகின்ற போது, திரு நடனம் செய்கின்ற சிவபெருமான் தமது செவிகளை (உபதேசம் கேட்க) பொத்தச் செய்த ஞானகுருவாக இருந்து ஞானப் பொருளை உபதேசித்த மேலானவனே, வீரனே, நாராயணி, உமையவள், வடக்கு கிழக்கு முதலிய திசைகளின் ஆதி தேவதை, உலகை மிகவும் காப்பவள், மறைக்கின்ற (திரோதான) சக்திக் குணம் உடையவள் ஈன்ற குழந்தையே, உயர்ந்த வரங்களைத் தரும் தலைவனே, வேத உபநிஷதங்களின் முடிவில் விளங்கும் ஞானியே, மூல காரணனே, ஒப்பற்ற மயிலாப்பூரில்* வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மையத்தில் இருக்கிறது.

பாடல் 698 - திருவான்மியூர் 
ராகம் - தர்மவதி தாளம் - அங்கதாளம் - 5 
தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தனதான தானதன தனதான தானதன     தனதான தானதன ...... தனதான

குசமாகி யாருமலை மரைமாநு ணூலினிடை     குடிலான ஆல்வயிறு ...... குழையூடே 
குறிபோகு மீனவிழி மதிமாமு காருமலர்     குழல்கார தானகுண ...... மிலிமாதர் 
புசவாசை யால்மனது உனைநாடி டாதபடி     புலையேனு லாவிமிகு ...... புணர்வாகிப் 
புகழான பூமிமிசை மடிவாயி றாதவகை     பொலிவான பாதமல ...... ரருள்வாயே 
நிசநார ணாதிதிரு மருகாவு லாசமிகு     நிகழ்பொத மானபர ...... முருகோனே 
நிதிஞான போதமர னிருகாதி லேயுதவு     நிபுணாநி சாசரர்கள் ...... குலகாலா 
திசைமாமு காழியரி மகவான்மு னோர்கள்பணி     சிவநாத ராலமயில் ...... அமுதேசர் 
திகழ்பால மாகமுற மணிமாளி மாடமுயர்     திருவான்மி யூர்மருவு ...... பெருமாளே.

மார்பு எனப்பட்ட நிறைந்துள்ள மலை, தாமரையின் அழகிய நுண்ணிய நூல் போன்ற இடை, கருவுக்கு இருப்பிடமான ஆலிலை போன்ற வயிறு, காதின் குண்டலங்களுக்கு குறி போகின்ற மீன் போன்ற கண்கள், சந்திரனைப் போன்ற அழகிய முகமாகிய நிறைந்த மலர், மேகத்தைப் போன்ற கூந்தல் என்ற நற்குணமில்லாத பொது மகளிரின் தோள்களை அணைக்கும் ஆசையால் என் மனம் உன்னை நாடாதபடி, இழிந்தவனாகிய நான் இங்கும் அங்கும் உலவித் திரிந்து, தீய வழியிலே மிகுந்த சேர்க்கையாகி, புகழ் பெற்ற இப்பூமியிலே அழிவுற்று முடிந்துபோகாதபடி உன் பிரகாசமான பாதத் தாமரையைத் தந்தருள்வாயாக. மெய்யான நாராயணமூர்த்தியின் அழகிய மருகனே, உள்ளக் களிப்பை மிகுத்து உண்டாக்கும் ஞான சொரூபமான மேலான முருகனே, பொக்கிஷம் போன்ற சிறந்த ஞான மந்திரத்தை, சிவபிரானுடைய இரண்டு செவிகளிலும் உபதேசித்து அருளிய சாமர்த்தியசாலியே, அசுரர்களின் குலத்துக்கே யமனாக இருந்தவனே, நான்கு திசைகளிலும் முகத்தைக் காட்டும் பிரமன், சுதர்ஸனம் என்ற சக்ரதாரியான திருமால், இந்திரன் முதலான தேவர்கள் பணிகின்ற சிவபெருமான், விஷத்தை உண்ட அமுதைப் போன்ற ஈசருடைய விளக்கம் வாய்ந்த குழந்தையே, ஆகாயத்தை அளாவும்படியான அழகிய மாளிகை மாடங்கள் உயர்ந்துள்ள திருவான்மியூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவான்மியூர் சென்னையின் ஒரு பகுதி. மயிலாப்பூருக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.

பாடல் 699 - கோசைநகர் 
ராகம் -....; தாளம் -

தானதன தானதன தானதன தானதன     தானதன தானதன ...... தனதான

ஆதவித பாரமுலை மாதரிடை நூல்வயிற     தாலிலையெ னாமதன ...... கலைலீலை 
யாவும்விளை வானகுழி யானதிரி கோணமதி     லாசைமிக வாயடிய ...... னலையாமல் 
நாதசத கோடிமறை யோலமிடு நூபுரமு     னானபத மாமலரை ...... நலமாக 
நானநுதி னாதினமு மேநினைய வேகிருபை     நாடியரு ளேயருள ...... வருவாயே 
சீதமதி யாடரவு வேரறுகு மாஇறகு     சீதசல மாசடில ...... பரமேசர் 
சீர்மைபெற வேயுதவு கூர்மைதரு வேலசிவ     சீறிவரு மாவசுரர் ...... குலகாலா 
கோதைகுற மாதுகுண தேவமட மாதுமிரு     பாலுமுற வீறிவரு ...... குமரேசா 
கோசைநகர் வாழவரு மீசடியர் நேசசரு     வேசமுரு காவமரர் ...... பெருமாளே.

அன்பும் இன்பமும் தருவதான கனத்த மார்பகங்கள், விலைமாதர்களுடைய இடுப்பு நூலைப் போன்றது, வயிறு ஆலின் இலையைப் போன்றது, என்று உவமை கூறி, மன்மதனுடைய காம சாஸ்திர விளையாடல்கள் எல்லாம் உண்டாகும் குழியான முக்கோணமான பெண்குறியில் மிக்க ஆசை கொண்டு அடியேன் அலைச்சல் உறாமல், நாதனே, நூறு கோடி ஆகம மந்திர உபதேசப் பொருள்களை சத்தத்தால் தெரிவிக்கும் சிலம்புகள் முன்னதாகவே விளங்கும் பாதத் தாமரைத் திருவடிகளை நன்மை பெறுமாறு, நான் நாள்தோறும் நினைக்கும்படி, உனது கருணையை நாடிவரும்படி, உனது திருவருளை அருள் புரிய வருவாயாக. குளிர்ச்சியான நிலா, ஆடும் பாம்பு, அழகிய அறுகம் புல், கொக்கின் இறகு, குளிர்ந்த கங்கை நீர் (இவைகளைக் கொண்ட) அழகிய சடையை உடைய சிவபெருமான் உலகங்கள் செம்மை பெறவே தந்த கூரிய வேலனே, சிவனே, கோபித்து வரும் பெரிய அசுரர்கள் குலத்துக்கு யமனே, நல்லவளான குறப் பெண் வள்ளி, நற்குணம் உள்ள தேவநாட்டு அழகிய மாது (தேவயானை) இரண்டு பக்கமும் பொருந்த விளக்கத்துடன் வரும் குமரேசனே, கோசை நகர்* எனப்படும் கோயம்பேட்டில் வீற்றிருக்கும் ஈசனே, அடியார்களுக்கு அன்பனே, சர்வேசனே, முருகனே, தேவர்களின் பெருமாளே. 
* கோயம்பேடு சென்னை நகரின் ஒரு பகுதி.

பாடல் 700 - பெருங்குடி 
ராகம் - ....; தாளம் -

தனந்தன தனந்தன தனந்தன தனந்தன     தனந்தன தனந்தன ...... தனதான

தலங்களில் வருங்கன இலங்கொடு மடந்தையர்     தழைந்தவு தரந்திகழ் ...... தசமாதஞ் 
சமைந்தனர் பிறந்தனர் கிடந்தன ரிருந்தனர்     தவழ்ந்தனர் நடந்தனர் ...... சிலகாலந் 
துலங்குந லபெண்களை முயங்கினர் மயங்கினர்     தொடுந்தொழி லுடன்தம ...... க்ரகபாரஞ் 
சுமந்தன ரமைந்தனர் குறைந்தன ரிறந்தனர்     சுடும்பினை யெனும்பவ ...... மொழியேனோ 
இலங்கையி லிலங்கிய இலங்களு ளிலங்கரு     ளிலெங்கணு மிலங்கென ...... முறையோதி 
இடுங்கனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட     எழுந்தருள் முகுந்தனன் ...... மருகோனே 
பெலங்கொடு விலங்கலு நலங்கஅ யில்கொண்டெறி     ப்ரசண்டக ரதண்டமிழ் ...... வயலூரா 
பெரும்பொழில் கரும்புக ளரம்பைகள் நிரம்பிய     பெருங்குடி மருங்குறை ...... பெருமாளே.

பூமியில் உள்ள இடங்களில் இருக்கிற பெரிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மாதர்களின் பூரித்துள்ள வயிற்றில் செம்மையாக பத்து மாதங்கள் வளர்ந்து இருந்தனர். பின்னர் (குழந்தையாகப்) பிறந்தனர், படுக்கையில் கிடந்தனர், உட்கார்ந்தனர், அதன் பின் தவழ்ந்து சென்றனர், பிறகு நடக்கலுற்றனர். பின்பு சில காலம் கழிந்ததும், விளக்கமுற்ற நற்குணமுள்ள பெண்களோடு பொருந்தி இருந்தனர், அவர்கள் மீது மோக மயக்கம் கொண்டனர். தாம் மேற் கொண்ட தொழிலைச் செய்து, தமது இல்லற வாழ்க்கையைச் சுமந்தனர். அவ்வாழ்க்கையிலேயே உடன்பட்டு இருந்தனர். (தமது தொழில், பொலிவு, வலிமை இவை எல்லாம்) குன்றியவுடன் முடிவில் இறந்தனர். (இப்பிணத்தைச்) சுட்டு எரிக்கவும் இனி என்று மற்றவர்களின் வாயால் சொல்லக்கூடிய இப்பிறப்பை ஒழிக்க மாட்டேனோ? இலங்கையில் திகழ்ந்திருந்த வீடுகளுள் முழுமையான அன்பு இல்லாத எல்லா இடத்திலும், அக்கினியே, பற்றி எரிவாயாக என்று நீதியை எடுத்துரைத்து, நெருப்பை வைத்த குரங்காகிய அனுமனோடு, பெரிய கடலும் நடுக்கம் கொள்ளுமாறு கோபத்துடன் எழுந்தருளிய ராமனாகிய திருமாலின் மருகனே, பலத்துடன், கிரெளஞ்ச மலையும் தூளாகும்படியாக வேல் கொண்டு எறிந்த மிக்க வீரம் கொண்டவனே, தண்ணிய தமிழ் விளங்கும் வயலூரானே. பெரிய சோலைகளும் கரும்பும் வாழையும் நிறைந்த பெருங்குடிக்கு* அருகில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெருங்குடி சென்னைக்கு அருகே பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தலம்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.