LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[701 -750]

பாடல் 701 - மாடம்பாக்கம் 
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தானா தானன
     தான தந்தன தானா தானன
          தான தந்தன தானா தானன ...... தனதான
தோடு றுங்குழை யாலே கோல்வளை
     சூடு செங்கைக ளாலே யாழ்தரு
          கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே 
தூம மென்குழ லாலே யூறிய
     தேனி லங்கித ழாலே யாலவி
          லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே 
பாட கம்புனை தாளா லேமிக
     வீசு தண்பனி நீரா லேவளர்
          பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர் 
பாவ கங்களி னாலே யான்மயல்
     மூழ்கி நின்றய ராதே நூபுர
          பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ 
நாட ருஞ்சுடர் தானா வோதுசி
     வாக மங்களி னானா பேதவ
          நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி 
நால்வி தந்தரு வேதா வேதமு
     நாடி நின்றதொர் மாயா தீதம
          னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே 
வாட யங்கியவேலா லேபொரு
     சூர்த டிந்தருள் வீரா மாமயி
          லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன் 
வாச கம்பிற வாதோர் ஞானசு
     கோத யம்புகல் வாசா தேசிக
          மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
தோடு என்னும் ஆபரணமும் குண்டலங்களும் தரித்த செவிகளினாலும், திரட்சியாக உள்ள வளையல்களைத் தரித்த சிவந்த கைகளாலும், யாழைப் போல இனிய இசை கொண்ட மென்மையான குரலாலும், பரிசுத்தமான ஒளி வீசும் பற்களாலும், (அகில்) புகை ஊட்டிய மெல்லிய கூந்தலாலும், தேன் ஊறியது போல் விளங்கும் வாயிதழாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும், அவற்றின் ஒளி வீசும் அழகாலும், பாடகம் என்னும் கொலுசைப் புனைந்த கால்களாலும், மிகவும் மணக்கும் பன்னீர் பூசப்பட்டு வளர்ந்துள்ள பாரமான மார்பகங்களாலும் (ஆடவர்களை) வளைக்கும் வேசிகளுடைய வஞ்சக நடிப்பால் நான் காம மயக்கத்தில் முழுகி நின்று சோர்வு அடையாமல், (உனது) சிலம்பு அணிந்த திருவடித் தாமரையின் மேல் என்னை ஏற்றுக்கொள்வதை நீ நினைக்க மாட்டாயோ? நாடிக் காண்பதற்கு அரிதான ஜோதிப் பொருளான சிவபெருமானாக ஓதுகின்ற சிவ ஆகமங்களில், பலவிதமான பேதங்களால் போற்றப்படும், தனக்கு மேல் தலைவன் இல்லாத பரம் பொருளே, மந்திர தந்திர சாஸ்திரங்களில் கூறப்படும் சிறந்த ஞான வடிவினனாகி, ருக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நால் வகையான வேதங்களையும் ஓதித் தரும் பிரமனும், வேதங்களும் நாடி நின்றதான, ஒப்பற்ற மாயைகளைக் கடந்து நிற்கும் மன ஒடுக்கத்தை (சாந்தியைத்) தரும் நாதனே, பன்னிரு திருப்புயங்களை உடையவனே, ஒளி பொருந்திய வேலைக் கொண்டு சண்டை செய்த சூரனை அழித்தருளிய வீரனே, சிறந்த மயிலை வாகனமாகக் கொண்ட கந்தனே, விநோதனே, நீ சொல்லுக என்று கேட்க சிவபெருமானது முன்னிலையில் வாக்கால் தோற்றுவிக்க முடியாததான ஒப்பற்ற ஞான சுகத்தைப் பிறப்பிக்கும் பிரணவப் பொருளை உபதேசம் செய்த குரு மூர்த்தியே, மாடம்பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருஞ்செல்வமே, தேவர்களின் பெருமாளே. 
* மாடம்பாக்கம் தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது.
பாடல் 702 - மாடம்பாக்கம் 
ராகம் - ....; தாளம் -
தனன தத்தன தனன தத்தன
     தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
     தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
     தனந்தந் தந்த தந்தா ...... தனதனா தனனா
விலைய றுக்கவு முலைம றைக்கவு
     மணந்துன் றுஞ்செ ழுந்தார்
புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்
     விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்
விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு
     நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே 
வெளியி னிற்கவும் வலிய முட்டரை
     யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தே
யிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை
     திரும்பும் பண்ப ரன்றே
யெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி
     யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல் 
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு
     நயங்கொண் டங்கி ருந்தே
குணுகி யிட்டுள பொருள்ப றித்தற
     முனிந்தங் கொன்று கண்டே
கலக மிட்டவ ரகல டித்தபின்
     வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே 
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்
     குணங்கண் டுந்து ளங்கா
மனித னிற்சிறு பொழுது முற்றுற
     நினைந்துங் கண்டு கந்தே
கடிம லர்ப்பத மணுகு தற்கறி
     விலன் பொங் கும்பெ ரும்பா ...... தகனையா ளுவையோ 
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட
     மனந்தந் தந்த ணந்தா
மரைம லர்ப்பிர மனைந டுத்தலை
     யரிந்துங் கொண்டி ரந்தே
திரிபு ரத்தெரி புகந கைத்தருள்
     சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா 
செருவி டத்தல கைகள்தெ னத்தென
     தெனந்தெந் தெந்தெ னந்தா
எனஇ டக்கைகள் மணிக ணப்பறை
     டிகுண்டிங் குண்டி குண்டா
டிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு
     டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள் 
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு
     மிரண்டஞ் சொன்ப தொன்றேய்
பணைபு யத்தையு மொருவ கைப்பட
     வெகுண்டம் பொன்றெ றிந்தோன்
மதலை மைத்துன அசுர ரைக்குடல்
     திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய் 
வயல்க ளிற்கய லினமி குத்தெழு
     வரம்பின் கண்பு ரண்டே
பெருக யற்கொடு சொரியு நித்தில
     நிறைந்தெங் குஞ்சி றந்தே
வரிசை பெற்றுயர் தமனி யப்பதி
     யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளையநா யகனே.
விலை பேசி முடிவு செய்யவும், மார்பகத்தை (ஆடையால்) மறைக்கவும், நறு மணம் நிறைந்துள்ள செழுமை கொண்ட பூ மாலையை அணிந்துள்ள மேகம் போல் கறுத்தக் கூந்தலை அவிழ்த்து விடவும், நஞ்சு, தாமரை, அம்பு ஆகியவைகளுக்கு நிகரான கண் கொண்டு (ஆடவர்களை) விரட்டவும், பேச்சு மாற்றிப் பேசவும், மாமிசம் நிரம்பிய நீருடனும் ரத்த நீருடனும் கலந்த உடலுடன் வீட்டின் வெளியில் வந்து நிற்கவும், வேண்டுமென்றே மூடராக உள்ளவரின் எதிர்ப்பட்டு வரவும், அவர்களைப் பின் தொடர்ந்தும், வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை எடுத்துக் கொடுத்து (நீங்கள்) இடையில் அப்படியே நமது வீட்டுக்குத் திரும்பி வாரும், நற்குணத்தவர் அன்றோ என்று சொல்லி நன்மொழி பேசி அவர்களை வீட்டுக்கு வரச் செய்து, தம்முடன் அழைத்துச் சென்று அன்புடன் போய் உறங்கும் படுக்கையின் மேல் ஆடையைத் தளர விடவும், காம மோகத்தை உண்டு பண்ணவும், நயத்துடன் (உபசார வார்த்தைகள் சொல்லி) அங்கிருந்தபடியே கொஞ்சிப் பேசி, அவர்கள் கையிலுள்ள பொருள் அனைத்தையும் பறித்துப் (பொருள் வற்றிய பின்னர்) மிகவும் (வந்தவரிடம்) கோபம் கொண்டு, அச்சமயத்தில் ஏதேனும் ஒரு போலிக் காரணத்தை கற்பித்துக் கொண்டு கலகப் போர் செய்து வந்தவரை அகன்று ஓடும்படி அடித்து அனுப்பிய பின்னர், (அப்படி ஓட்டப் பட்டவர்களால்) வந்த பங்குப் பொருள் சுருங்க ஒரு புதிய ஆடவருடன் பொய்க் கதைகளைச் சொல்லவும் வல்ல சாமர்த்தியசாலிகள். (அத்தகைய விலைமாதர்களின்) குணத்தைக் கண்டும் நிலை கலங்காத மனிதர்களைப் போல சிறு பொழுதேனும் (மனம் பொருந்தி உன்னை) நினைந்தும், (உன்னைத்) தரிசித்து மனம் களித்தும், நறு மணமுள்ள மலர்கள் பொருந்திய உனது திருவடிகளை அணுகிச் சேர்வதற்கு உரிய அறிவு இல்லாதவனாய் மிக்கு எழும் பெரிய பாவியாகிய என்னை ஆண்டு அருள்வாயாக. வில்லால் நன்றாய்த் தன்னை அடிக்கும்படியான மனத்தை (அர்ச்சுனனுக்குக்) கொடுத்தும், மறையோனும் தாமரை மலரில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமனுடைய உச்சித் தலையை அரிந்தும், (அந்தத் தலையில்) பலிப் பிச்சை ஏற்றும், திரிபுரங்களில் நெருப்பு எழும்படி சிரித்தும் திருவருள் விளையாடல்களைச் செய்த சிவபெருமானுடைய (இடது) பாகத்தில் இருப்பவளாகிய பார்வதி தேவி அருளிய சிறந்த முருகனே, போர்க் களத்தில் பேய்கள் தெனத்தென தெனந்தெந்தெந் தெனந்தா என்று கூறி, இடக் கையால் கொட்டப்படும் முரசுகளும், மணிகளும், அதம ஒலி எழுப்பும் பறைகளும் டிகுண்டிங்குண் டிகுண்டா டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ இவ்வாறான ஒலிகளை எழுப்ப, ராவணனுடைய பெரிய மலை போல் விளங்கிய பத்துத் தலைகளையும் (இரண்டு ஐந்து = 10+9+1=20) இருபது பெரிய புயங்களையும் ஒரு வழிப்பட்டு ஒழியும்படி கோபித்து ஒப்பற்ற அம்பை எறிந்தவனாகிய ராமனாகிய திருமாலின் பிள்ளையாகிய மன்மதனுக்கு மைத்துன முறையினனே*, அசுரர்களுடைய குடலை வெளிப்படுத்தி, அவர்களுடைய உடலைப் பிளந்து மயிலின் மீது ஏறி வருபவனே, வயல்களில் கயல் மீன் கூட்டங்கள் மிக்கு எழுந்து வரப்பில் புரண்டு பெருகும் பக்கங்களில், சங்குகள் சொரிகின்ற முத்துக்கள் நிறைந்து எங்கும் விளக்கம் தரும் மேம்பாட்டினைப் பெற்று, உயர்ந்த மாடம்பாக்கம் என்னும் அழகிய தலத்தை இடமாகக் கொண்டு இன்புறுகின்ற மேன்மை மிக்க இளமை வாய்ந்த தலைவனே. 
* திருமாலின் மகன் மன்மதன். திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய வள்ளி. முருகன் வள்ளியின் கணவன் ஆகையால் மன்மதனுக்கு மைத்துனன் முறையினன் ஆகிறான்.
** மாடம்பாக்கம் தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது.
பாடல் 703 - கோடைநகர் 
ராகம் - மாயா மாளவ கெளளை 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான
ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்து
     ஆகமல மாகி நின்று ...... புவிமீதில் 
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
     ஆளழக னாகி நின்று ...... விளையாடிப் 
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
     பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப் 
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
     பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே 
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
     தீரனரி நார ணன்றன் ...... மருகோனே. 
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
     தேடஅரி தான வன்றன் ...... முருகோனே 
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
     கோமளிய நாதி தந்த ...... குமரேசா 
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
முதல் முதலாக எனது தாயின் உடலில் இருந்து பல அழுக்குகள் நிறைந்த உருவுடன், இந்தப் பூமியிலே பிறக்கும்போதே ஆசையுடன் பிறந்து, பெற்றோர் சுற்றத்தார் ஆகியோரின் அன்புடன் வளர்ந்து, ஆள் அழகன் என்னும்படியாக விளங்கி, விளையாடி, பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து பெண்களுடன் மருவிக் கலந்து, பூமியில் அவசியத்தின் காரணமாகப் பொருள்களைத் தேடி சுகபோகங்களில் ஈடுபட்டுத் திரிந்து பாழான நரகத்தை நான் அடையாமல், உனது மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக. சீதையைக் கவர்ந்து சென்ற அந்த ராவணனை கொன்று வென்ற தீரனாம் ஹரி, நாராயணனின் மருகனே, தேவர்கள், முநிவர்கள், மேகவண்ணன் திருமால், பிரம்மா இவர்களெல்லாம் நின்று தேடியும் காணுதற்கு அரிதாக விளங்கிய சிவனின் குழந்தையாம் முருகனே, தேவியும், கயிலைநாதனாம் சிவபிரானின் இடப்பக்கம் மேவிய அழகியும், தொடக்கமே இல்லாதவளுமான பார்வதி தந்த குமரேசனே, ஒன்றுகூடி வந்த சூரரின் மார்பை இருகூறாகக் கண்டவனே, கோடை நகரில்* வாழ்ந்திருக்கும் பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
பாடல் 704 - கோடைநகர் 
ராகம் - 
தாளம் -
தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான
சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து
     சாமளவ தாக வந்து ...... புவிமீதே 
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து
     தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப் 
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்
     பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப் 
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று
     பாதமலர் சேர அன்பு ...... தருவாயே 
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்
     ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே 
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற
     ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே 
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை
     கோவையமு தூற லுண்ட ...... குமரேசா 
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
மிகவும் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணின் கருவிலே கிடந்து அலைச்சலுற்று, சாகும் அளவிற்கான துன்பத்துக்கு ஆளாகிவந்து, இந்தப் புவிமீது பிறப்பை அடைந்த பின்னர், வீறிட்டு அழுது, கீழே கிடந்து, தரையில் தவழ்ந்து விளையாடி, பால உருவினனாகப் பேச்சுக்கள் பேசி, சர்க்கரை போல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர்களின் பெரிய மார்பகங்களை அணைந்து, பொருள் தேடவேண்டி பூமியிலே திரிந்து அலைந்து, பாழான நரகிலே போய்ச்சேராமல் பொருந்திய உனது பாத மலர்களை அடைவதற்குரிய அன்பை அருள்வாயாக. விஷத்தை அமிர்தமாக உண்ட, கங்கை நதியை சடையில் சூடியுள்ள நாதர், சந்திரனையும், படமெடுத்து ஆடும் பாம்பையும் அணிந்தவராகிய சிவபிரான் தந்த முருகனே, கஜேந்திரன் என்ற யானை அன்று குளத்தில் (முதலை வாயில் அகப்பட்டு) ஆதி மூலமே என்றும் நீயே தஞ்சம் என்றும் கூவி அழைத்த ஆதி முதல்வனான நாராயணனின் மருகனே, அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் இருந்த தினைப் புனத்தில் வாழ்ந்த பெண் வள்ளியின் கொவ்வைக் கனி போன்ற வாயின் அமுத ஊறலை உண்ட குமரனே, இரண்டு கூறாகப் பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரன் அடங்கி ஒடுங்க, கூர்மையான வேலைச் செலுத்தியவனே, கோடைநகர்* தலத்தில் வாழவந்த பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
பாடல் 705 - கோடைநகர் 
ராகம் - ...; தாளம் -
தானா தானா தானா தானா
     தானா தானா ...... தனதானா
ஏறா னாலே நீறாய் மாயா
     வேளே வாசக் ...... கணையாலே 
ஏயா வேயா மாயா வேயா
     லாமே ழோசைத் ...... தொளையாலே 
மாறா யூறா யீறாய் மாலாய்
     வாடா மானைக் ...... கழியாதே 
வாராய் பாராய் சேரா யானால்
     வாடா நீபத் ...... தொடைதாராய் 
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்
     சீரார் தோகைக் ...... குமரேசா 
தேவா சாவா மூவா நாதா
     தீரா கோடைப் ...... பதியோனே 
வேறாய் மாறா யாறா மாசூர்
     வேர்போய் வீழப் ...... பொருதோனே 
வேதா போதா வேலா பாலா
     வீரா வீரப் ...... பெருமாளே.
காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினாலும், சாம்பலாகியும் அழிவுபடாத மன்மத வேள் ஏவுகின்ற மணமுள்ள புஷ்ப பாணத்தாலும், பொருந்திப் பொருந்தி கவலையால் வருந்தி புல்லாங்குழலில் உண்டாகும் ஏழு சுரங்கள்கொண்ட இசையைத் தரும் தொளைகளாலும், எழிலும் நிறமும் மாறுதல் உற்று, துன்பமுற்று, உயிரே முடிவடைந்ததுபோல் ஆகி, ஒரே மோக மயக்கமாய் வாடுகின்ற மான்போன்ற இந்தப் பெண்ணை நீ ஒதுக்காமல், வந்து பார்த்துவிட்டு இவளுடன் சேர்வதற்கு மனம் இல்லை என்றாலும், உனது வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளுக. சீறி எழுந்து வீறுடன் மேலே பறந்து பதினான்கு உலகங்களையும் வலம் வந்த, சிறப்பு மிகுந்த, மயில் வாகனக் குமரேசா, தேவனே, இறப்பு இல்லாத மூப்பு அடையாத நாதனே, ¨தரியம் உடையவனே, கோடைப் பதியில்* வீற்றிருப்பவனே, வேறுபட்ட மாறுபட்ட வழியில் சென்றவனான பெரிய சூரன் வேரற்று அடியோடு விழும்படி சண்டை செய்தவனே, பிரமனுக்கு அறிவு ஊட்டியவனே, வேலனே, பாலனே, வீரனே, வீரம் வாய்ந்த பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.காளையும் பசுவும் சேர்ந்து வருதல், மன்மதன், மலர்க்கணை, புல்லாங்குழல் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 706 - கோடைநகர் 
ராகம் - ஹம்ஸாநந்தி 
தாளம் - அங்கதாளம் - 10 
- மிஸ்ர ஜம்பை /7 யு 0 
தகிட தக திமி-3 1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3
தான தந்த தனத்த தத்த ...... தனதானா
ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே 
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே 
ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே 
ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே 
கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா 
கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா 
கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர் 
கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.
உலகத்தை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி வளைத்து ஓயாமல் அலை ஓசையோடு இரைச்சலிடும் கடலாலே, நாள்தோறும் பெண்கள் அனைவரும் சேர்ந்து கூறும் வசைமொழிகளினாலே, விஷக்கதிர்களைச் செலுத்துகிற சந்திரன் (உன்னைப் பிரிந்து தவிக்கும்) இவள் மீது வீசும் நெருப்பாலே, அழிந்து போகாதவாறு, உன் பன்னிரண்டு புயங்களினாலும் இவளை அணைத்துக்கொள்ள நீ வரமாட்டாயா? அழகு பொருந்திய குறத்தி வள்ளியை அணைக்கும் மார்பனே, கோடைநகரில்* வந்து வீற்றிருக்கும் மயில் வீரனே, யமனும் நடுங்க கிரெளஞ்சமலையைத் தொளை செய்த முதல்வனே, தேவர்களுக்கு சூரன் பூட்டிய கால் விலங்குகளை உடைத்தெறிந்த பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 707 - கோடைநகர் 
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3 1/2
தானன தந்தன தந்த தந்தன
     தானன தந்தன தந்த தந்தன
          தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
     ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
          சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத் 
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
     ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
          சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல் 
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
     நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
          மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே 
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
     தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
          வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே 
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
     வாலியு மம்பர மும்ப ரம்பரை
          ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன் 
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
     சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
          ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே 
கோழி சிலம்பந லம்ப யின்றக
     லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
          கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா 
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
     வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
          கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.
நட்பைக் காட்டிப் பினனர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர், போதித்த நன்றியை மறந்த கீழோர், அநுஷ்டிக்க வேண்டிய விரதங்களை விலக்கிய கீழோர், பெரியோரை வைது நிந்தித்துப் பேசிய கீழோர், மற்றவர்க்குக் கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்த கீழோர், சத்திய வார்த்தை என்பதையே ஒழித்த கீழோர், எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும் கீழோர், நீதியையும், தர்மத்தையும் அழித்த கீழோர், குற்றமும், ஆணவமும் மிகுந்துள்ள கீழோர், பாசவலையால் உலகமாயையில் சிக்கி வருந்தும் கீழோர், தெய்வச் சொத்தை அபகரித்த கீழோர், இவர்கள் யாவரும் வேதனைக்கு இடமாகிய, யமனது நரகக் குழியில் வீழ்வர். மராமரம் ஏழும், வலிய குரங்காகிய வாலியும், கடலும், அசுர பரம்பரையில் வந்த ராவணனும், அவனது நால்வகைப் படையும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும், யாவுமே முன்பே வலிமை குன்றி அழியும்படியும், சந்திரனும், சிவ சூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும், ராமசரம் என்ற ராமநாமம் கொண்ட அம்பைச் செலுத்திய சிறப்பான ராமச்சந்திர மூர்த்தியின் அழகிய மருகனே, சேவல் கொடியில் இருந்து ஒலிசெய்ய, அழகிய தோகையை உடைய மயில் நடனம் செய்ய, மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும் மங்களகரமான வயலூர் வாசனே, அழகிய தேவர்களும், தொண்டர்களும், மண்டலாதிபர்களும், வேலன் என்ற பெயரை அன்புடன் புகழ்கின்ற பெருமாளே, கோடைநகர்* என்ற பதியில் வந்துள்ள பெருமாளே, இந்திரர்களுக்குப் பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
பாடல் 708 - கோடைநகர் 
ராகம் - ...; தாளம் -
தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதான
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
     சூழ்துற் றார்துற் ...... றழுவாருந் 
தூரப் போகக் கோரப் பாரச்
     சூலப் பாசச் ...... சமனாரும் 
பாடைக் கூடத் தீயிற் றேறிப்
     பாழ்பட் டேபட் ...... டழியாதே 
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
     பாதத் தேவைத் ...... தருள்வாயே 
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
     தாரச் சீறிப் ...... பொரும்வேலா 
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
     காரத் தாரைத் ...... தரும்வீரா 
கூடற் பாடிக் கோவைப் பாவைக்
     கூடப் பாடித் ...... திரிவோனே 
கோலச் சாலிச் சோலைச் சீலக்
     கோடைத் தேவப் ...... பெருமாளே.
(இறந்தவர்கள் வீட்டில்) ஒவ்வொருவரும் சுற்றி உட்கார்ந்து ஒருவர் தோள் மேல் ஒருவர் கைகோத்து அழுகின்றவர்களும் விலகிப் போகுமாறு கோரமான, பாரமான சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட யமன் வந்து சேர்கின்ற சமயத்தில், பாடை கட்டப்பட்டு நெருப்பில் கூட்டப்பட்டு, பாழ் அடைந்து குலைந்து நான் அழிந்து போகாமல், (உலக) ஆசையில் கட்டுண்ட என்னை ஞானம் உள்ளவர்களின் அழகிய திருவடியில் சேர்த்து வைத்து அருள்வாயாக. போர் புரிந்த சூரன் போரில் தோற்று ஓட, அவன் (மாமரமாய்க்) கிடந்த கடலில் மிகவும் கோபித்துச் சண்டை செய்த வேலனே, தெய்வ யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானைக்கும், காட்டில் வாழ்ந்த தேன்போன்ற வள்ளிக்கும் முத்து மாலையையும், கடப்ப மாலையையும் தந்தருளிய வீரனே, கூடல் நகரில் உள்ள தலைவனான சிவபெருமானை தேவி அங்கயற்கண்ணியுடன் கூட ஒன்று சேர்த்துப் பாடித் திரிந்த (திருஞான சம்பந்தப்) புலவனே, அழகிய நெல் வயல்களும் பொழில்களும் நிறைந்த, நல்லொழுக்கத்தார்கள் உள்ள கோடை நகரில்* வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
பாடல் 709 - கோடைநகர் 
ராகம் - ....; தாளம் -
தானத்த தான தந்த தானத்த தான தந்த
     தானத்த தான தந்த ...... தனதான
வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து
     வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக 
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற
     வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி 
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து
     ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக 
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு
     லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ 
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச
     மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா 
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி
     வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே 
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த
     கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே 
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட
     கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.
கற்றுள்ள நூல்களும் மதங்களும் விளக்கம் தர முடியாத சிவதத்துவமாகிய உண்மை ஒளியானது என்றும் நிலைத்திருக்கவேண்டி, மேகம்போல் படர்ந்த மண்டை ஓடாகிய வெளியிடத்தும், நாசிக்குள்ளும் ஓடுகின்ற பிராணவாயுவாகிய ஒன்றை, அது செல்லும் வழியை மாற்றி, சுழுமுனையில் கூட்டி*, அதனால் தளர்கின்ற உடம்பின்மீது நேசம் வைத்து, சிவயோக நிலையில் நிற்காது அலைபாய்ந்து, மயிர்த் தொளை எங்கும் உயிர் பாய்ந்து ஓடும்வண்ணம், கர்மயோகச் சமாதி நிலையைப் பூண்டு, மோகம் என்கின்ற பேய் நிரம்பியுள்ள இந்த உலகில் இறந்துபோதல் என்பது என்றைக்கும் நீங்காதோ? அலை வீசும் கடல் வலிமை குன்ற, பிரமன் என்கின்ற குயவன் அஞ்சி நிற்க, மேலே எதிர்த்துவந்த சூரனை வதம் செய்த ஒளி வேலனே, வீரம் உள்ளன என்ற புகழைப் பெற்றுள்ள (மன்மதனது) ஐந்து மலர்க் கணைகளால் காம மயக்கம் கொண்டு வேடர்குல வள்ளியின் பாதங்களில் அன்று விழுந்தவனே, அச்சம் அடைந்து போய் ஒதுங்கும்படி, மாமனாகிய தட்சனை தயங்காது தலையை அரிந்தவரும், பயனற்ற திரிபுரத்தைப் பகைத்து எரித்தவருமான சிவபெருமான் தந்த இளையோய், கோழிக்கொடியைக் கொண்ட அழகிய குமரனே, வீரனே, கோடைநகரில்** வாழ்கின்ற பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.
பாடல் 710 - திருப்பேர்ருர் 
ராகம் - ...; தாளம் -
தனத்தா தானன தானா தானன
     தனத்தா தானன தானா தானன
          தனத்தா தானன தானா தானன ...... தனதான
அனுத்தே னேர்மொழி யாலே மாமய
     லுடைத்தார் போலவு மோர்நா ளானதி
          லடுத்தே தூதுகள் நூறா றானதும் ...... விடுவார்கள் 
அழைத்தே வீடினி லேதா னேகுவர்
     நகைத்தே மோடிக ளாவார் காதலொ
          டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின் 
குனித்தே பாகிலை யீவார் பாதியில்
     கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது
          குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள் 
குறித்தே மாமய லாலே நீள்பொருள்
     பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக
          குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே 
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை
     யெடுத்தே தான்வர வேதான் யாவரும்
          வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா 
மலர்த்தே னோடையி லோர்மா வானதை
     பிடித்தே நீள்கர வாதா டாழியை
          மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே 
சினத்தே சூரர்கள் போராய் மாளவு
     மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி
          திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே 
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக
     ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள
          திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.
நல்ல தேனுக்கு ஒப்பான பேச்சுக்களால் மிக்க மோகம் கொண்டவர்கள் போல நடித்து, ஒரே தினத்தில் மேலுக்கு மேல் தூதுகளை நூற்றியாறு முறை விடுவார்கள். அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குள்ளே போவார்கள். சிரிப்புடனே பிணக்கத்தையும் செருக்கையும் காட்டுவர். பாசாங்கு அன்புடன் நெருங்கி தங்களுடைய பெரிய மார்பகங்களின் மேலே மார்பு பொருந்தும்படி அணைவார்கள். பின்பு குனிந்து பாக்கு வெற்றிலை கொடுப்பர். அங்ஙனம் கொடுக்கும்போது பாதியில் வாயிலிருப்பதைக் கடிப்பார்கள். இதழூறலைத் தேன் போலப் பாவித்துக் குடிப்பர். விதம் விதமான காம லீலைகளைச் செய்வர். ஒரு காரியத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு மிக்க மோக விளைவு ஊட்டி பெரும் பொருள் அனைத்தையும் பறிப்பார்கள். குற்றங்கள் நிறைந்த மகா பாவ குணத்தை உடையவர்கள். அத்தகைய விலைமாதர்கள் மீதுள்ள ஆசையை ஒழிக்க அருள் புரிவாயாக. காட்டில் வேடர் குலத்துப் பெண்ணாகிய மின்னல் போன்ற வள்ளியை நீ எடுத்துப் போகவே, வேடர் யாவரும் உன்னை வளைத்துச் சூழ, ஒரு வாள் கொண்டு அவர்களை வென்ற பெருமை வாய்ந்தவனே, மலர்களின் தேன் சொட்டும் ஓடையில் ஒரு பெரிய யானையை (கஜேந்திரனை)ப் பிடித்துக் கொண்டு, ஒரு நீண்ட முதலை போர் செய்ய, சக்கரத்தை (முதலையின் மீது) மனம் கொண்டு செலுத்திய சிறந்த திருமாலுக்கு மருகனே, கோபித்து சூரர்கள் போர் செய்து இறக்கும்படி ஒரு வேலை எடுத்துச் செலுத்திய தீரனே, மாலை அணிந்த அழகிய தோளனே, இரண்டு பாதத் தாமரைகளைக் கொண்ட முருகோனே, அழகிய தேரும், சூழ்ந்துள்ள மதிலும், எழில் நிறைந்த கோபுரங்களும், அடுக்கு மெத்தைகள் கொண்ட மாளிகைகளும் ஆகிய நீடிய சிறப்புகள் வாய்ந்த திருப் போரூரில்* வீற்றிருக்கும் தேவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.
பாடல் 711 - திருப்பேர்ருர் 
ராகம் - ....; தாளம் -
தனத்தா தான தந்த தனத்தா தான தந்த
     தனத்தா தான தந்த ...... தனதான
உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்
     உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம் 
உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட
     லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள் 
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப
     வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி 
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த
     அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே 
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை
     யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே 
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி
     லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா 
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற
     திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே 
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க
     திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.
ஆலையிலே உருக்கி எடுத்த அம்பு போன்ற கண்கள், மலை போன்ற, கச்சு அணிந்த, மார்பகங்கள், மகிழ்ச்சி நிரம்பும் இளம் பிறையை ஒத்த நெற்றி, நூல் போன்ற மெல்லிய உரு அமைந்த நீண்ட இடை, மூங்கில் போன்ற தோள், மேகம் போன்ற கூந்தல், (இவைகளைக் கொண்டவர்களும்), மகிழ்ச்சியாக தங்கள் மேல் விழுந்து திரிகின்றவர்களை அசட்டை செய்கின்றவர்களுமான பொது மாதர்களின் இருப்பிடத்துக்கே ஓடிச்சென்று, அந்தக் காம வலைக்கே பூண்ட மனத்தினனும், மகா பாவியுமாகிய நான் எனது அசட்டுத் தனத்தாலும், மூடுகின்ற மனக் கலக்கத்தாலும், மழுங்கும் இந்தக் கேட்டினாலும், இழிவு அடையாதவாறு அருள் புரிவாயாக. எருக்கு, ஆத்தி, அறுகு, தும்பை மலர், வாசனை பொருந்திய மலர்கள், கங்கை ஆறு இவைகளைச் சூடும் முதற் பொருளாகிய சிவபெருமானது மகனே, ரிக்வேத மந்திரத்தால் போற்றித் துதி செய்வோருடைய நாவிலும் மனதிலும் இருப்பவனே, தேவயானை அணையும் அழகிய மார்பனே, ஆணவத்தால் மிக்கு எழுந்த, கடலில் மாமரமாய் ஒளிந்து நின்ற, சூரன் அழியும்படி வென்ற வெற்றி வாய்ந்த வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, தினைப் புனத்துக்கு ஒரு காவல் கொண்டிருந்த, குறவர் குலத்துக்குத் தேன் போன்ற மாதாகிய வள்ளிக்கு மணாளனாகப் பக்கத்திலேயே உள்ளவனே, திருப்போரூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.
பாடல் 712 - திருப்பேர்ருர் 
ராகம் - ....; தாளம் -
தான தானன தானன தான தானன தானன
     தான தானன தானன ...... தனதான
சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
     சேய சாயல்க லாமதி ...... முகமானார் 
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
     சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி 
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
     சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே 
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
     தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே 
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
     காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே 
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
     கார ணாகரு ணாகர ...... முருகோனே 
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
     பூப சேவக மாமயில் ...... மிசையோனே 
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
     போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.
பெருமை விளங்கும் அன்னத்துக்கு ஒப்பான அழகிய நடை, சிறந்த மயிலுக்கு ஒப்பான செம்மை வாய்ந்த சாயல், பூரண சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட விலைமாதர்கள் தேன் போன்று இனிய அழகிய பேச்சு, மேருமலை போல இளமை விளங்கும் பெரும் மார்பகங்கள், சேல் மீன் போன்ற கூரிய கண்கள், குமிழைப் போன்ற மூக்கு, மாலை விளங்கும் நீண்ட கூந்தல், மூங்கில் போன்று வழுக்கும் தோள்களை உடையவர்கள், இவர்களின் இணக்கத்திலேயே திரிகின்ற என்னை, உனது திருவருளால், சாம வேதம் வல்ல மறையோர்களும், தேவர்களும் போற்றி தினந்தோறும் புது மலர்களைத் தூவிய உனது திருவடியில் விழுந்து வணங்கும் விவேகத்தை நிரம்ப அருள் செய்வாயாக. மேகம் உலாவும் நீண்ட புனத்தில் உள்ள வேடர்கள் வாழ்ந்த பெரிய வள்ளிமலை மேலே இருந்து, காவல் புரிந்த வள்ளி மீது ஆசை கொண்டு அவளை அணைந்தவனே, யாவரும் அறிய ஆகமம், வேதம், புராணம் பலவற்றையும் (சம்பந்தராக வந்து தேவாரமாக) ஓதித் துதித்துள்ள மூல காரணனே, கருணாகரனே, முருகனே, போர் செய்ய வந்த சூரன் மீது வேலாயுதத்தை ஏவி, கடலும் சேறு படும்படிச் செய்த அரசனே, வீரனே, அழகிய மயிலின் மீது அமர்வோனே, தாமரை மலரில் வாழ்பவன் (பிரமன்), திருமால், உமாதேவியைப் பாதி பாகத்தில் கொண்ட ஆதியாகிய சிவபிரான் ஆகிய மூவரும் தொழுகின்ற திருப் போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.
பாடல் 713 - திருப்பேர்ருர் 
ராகம் - பந்து வராளி 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனன தானன தானன தனன தானன தானன
     தனன தானன தானன ...... தனதான
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
     திமிர மேயரி சூரிய ...... திரிலோக 
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
     சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே 
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
     குணக லாநிதி நாரணி ...... தருகோவே 
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
     குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம் 
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
     பசுர பாடன பாளித ...... பகளேச 
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
     பரவு பாணித பாவல ...... பரயோக 
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
     சமய நாயக மாமயில் ...... முதுவீர 
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
     சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.
இருள் அடைந்த மனத்தையும், மிக்க அறியாமையையும் கொண்ட எனது வருத்தங்களையும், ஆணவத்தையும் விலக்கும் ஞான சூரியனே, மூவுலகங்களுக்கும் ஒளி தரும் சூரியனே, சிவனே, மூலாதாரனே, நாகாபரணரும் வேத முதல்வருமான சிவபிரானின் குமாரனே, ஹரி நாராயணனின் மருகனே, குமரியும், கருமை கலந்த பச்சை நிறத்தாளும், அன்னையும், உமா தேவியும், மாசு அற்றவளும், பச்சை வண்ணத்தாளும், நிறைந்தவளும், குணச்செல்வியும், கலைச்செல்வியுமான நாராயணி பெற்ற தலைவனே, குருநாதனே, குகனே, குமரேசனே, சரவணனே, உருவத் திருமேனி கொண்ட ஈசனே, குறவர்தம் தவப் புதல்வி வள்ளி மீது ஆசை கொண்ட மணியே, நன்றாக வண்டுகள் மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை அணிந்தவனே, ப்ரணவப் பொருளானவனே, பேரின்பப் பொருளே, பாசுரங்களை (தேவாரத்தை) பாடி உலகுக்கு பாடம் கற்பித்தவனே, செம்பட்டு அணிந்தவனே, மலைகளுக்கு அரசனே, திருநீற்றில் திருப்தி அடைபவனே, சேவலைக் கொடியில் வைத்தவனே, மேன்மை மிகுந்த பெரிய வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனே, பாடலில் வல்லவனே, மேலான யோக மூர்த்தியே, வாதப் போரிடும் புற மதங்களான புத்தம், சமணம் - இவற்றின் நசிவுக்குக் காரணனே, அகச்சமயம் ஆறிலும், புறச்சமயம் ஆறிலும்* இலங்கும் தெய்வமே, தக்க சமயத்தில் உதவும் தலைவனே, அழகிய மயில் ஏறும் பேரறிவு வீரனே, சகல உலகங்களும், குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழும் சமரமாபுரி என்ற திருப்போரூரில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* அகச் சமயம் ஆறு: வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.புறச் சமயம் ஆறு: சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம்.
** திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.இப்பாடல் முழுவதும் துதியாகவே அமைந்து, வேண்டுதல் ஏதும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
பாடல் 714 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - காபி 
தாளம் - அங்கதாளம் - 5 1/2 
- எடுப்பு - 1/2 தள்ளி 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2
தனன தனன தனதான தனன தனன தனதான
     தனன தனன தனதான ...... தனதான
சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்
     துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர் 
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்
     தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள் 
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி
     அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி 
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்
     அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே 
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக
     மகர சலதி அளறாக ...... முதுசூரும் 
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக
     மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள் 
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத
     நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி 
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு
     நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.
வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள், எட்டுத் திக்குப் பாலகர்கள் (*1), முநிவர்கள் குற்றமில்லாத ரிஷிகள் ஏழு பேர் (*2), சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள், சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள் (*3), வெகு தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள், அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக் கோடிக்கணக்கான அடியார்கள், திருமால், பிரமன், ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி, அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக. கிரெளஞ்சம் முதலிய மலைகள் தவிடு பொடியாக, அசுரர்களின் ஊர்கள் அழிவடைய, மகர மீன்கள் உள்ள கடல் சேறாக, பழைய சூரனும் அழிவுற, பேய்கள் நடனம் செய்ய, விஜய லக்ஷ்மி மகிழ்ச்சி அடைய, அசுரர்களின் தலைகள் சிதறிவிழ, இரையைத் தேடிவந்த நாய்களுடன், நரிகளும், காக்கைகளும், பசி நீங்க, ரத்த வெள்ளம் அலைமோதி ஓட, யமனும் அச்சமுற்று உனது திருவடிகளைத் துதிக்க, மயிலில் ஏறி, மகிமைவாய்ந்த திருக்கரத்து வேலாயுதத்தை விரைவாகச் செலுத்தும் முருகனே, உத்தரமேரூர் (*4) என்ற தலத்தில் வீற்றிருப்போனே, தேவர்களின் பெருமாளே. 
*1 அஷ்டதிக்குப் பாலகர்கள் (எண்திசையைக் காப்பவர்கள்) பின்வருமாறு:இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
*2 சப்தரிஷிகள் பின்வருமாறு:அகஸ்தியர், புலஸ்தியர், ஆங்கீரசர், கெளதமர், வசிஷ்டர், காச்யபர், மார்க்கண்டர்.
*3 நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்.இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
*4 உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
பாடல் 715 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - ஸிந்து பைரவி 
தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12
தான தந்த தான தந்த தான தந்த தான தந்த
     தான தந்த தான தந்த ...... தனதான
தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு
     சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான 
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து
     சோரு மிந்த நோய கன்று ...... துயராற 
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச
     னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் 
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை
     யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ 
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை
     வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே 
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து
     வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே 
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு
     வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே 
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற
     மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.
தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை, மேலே பொங்கும் ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு, பருத்த, பாவத்துக்கு இடமான, சா£ரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று, தளர்கின்ற இந்த பிறவி நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற, விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட திருமால், பிரமன், மற்றும் வேதங்கள், ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும், திருமுகங்கள் ஆறையும், பன்னிரண்டு தோள்களையும், அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு நான் தியானிப்பேனோ? இளம்பிறையைச் சூடிய சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான அம்பிகை, கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே, ஐந்து மாயை (*1), ஐந்து வேகம் (*2), ஐந்து பூதம் (*3), ஐந்து நாதம் (*4) இவை வாழ்கின்ற அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே, வேண்டிய சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு வேடர்குலப் பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே, வீர லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற உத்தர மேரூரில் (*5) ஆட்சிபுரியும் பெருமாளே. 
(*1) மாயை ஐந்து - தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்.
(*2) வேகம் ஐந்து பலவகைப்படும் - வாயுவேகம், மனோவேகம், ஒளிவேகம், ஒலிவேகம், அசுவவேகம். வேகம் சக்தியென கொண்டால் - இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, சிற்சக்தி, பராசக்தி. வேகம் புலனாகக் கொண்டால் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
(*3) ஐந்து பூதம் - நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
(*4) ஐந்து நாதம் - தோல் கருவி - மத்தளம், உடுக்கை, துளைக் கருவி - குழல், நாதஸ்வரம், நரம்புக் கருவி - யாழ், வீணை, கஞ்சக் கருவி - ஜாலரா, ஜலதரங்கம், மிடற்றுக் கருவி - வாய்ப்பாட்டு, கொன்னக்கோல்.
(*5) உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
பாடல் 716 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - ...;: தாளம் -
தானனத் தனதான தானனத் தனதான
     தானனத் தனதான ...... தனதான
நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
     நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய் 
நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
     நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே 
பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
     பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச 
பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
     பார்வைசற் றருளோடு ...... பணியாயோ 
ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
     மாகமப் பொருளோரு ...... மனைவோரும் 
ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
     மாயிரத் திருநூறு ...... மறையோரும் 
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
     வாகுசித் திரதோகை ...... மயிலேறி 
மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
     மான்மகட் குளனான ...... பெருமாளே.
நீண்ட மேகம் போல் இருண்ட கூந்தல் உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து, மிகவும் நேசம் அடைந்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாய், பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து, நீதியான மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல், பாழுக்கே உணவாயிற்று என்னும்படியாக, மற்றவர்களுடைய பெயர்களை (தலைவர்களாக) கவிதையில் வைத்து, கோடிக் கணக்கான பாடல்கள் அமையும்படி இயற்றுகின்ற மோசக்காரப் பாவியாகிய நான் எங்ஙனம் வாழ்வேன்? (உனது) அன்பர்களுக்கு நீ வைத்துள்ள பார்வையை கொஞ்சம் திருவருள் வைத்து எனக்கும் பாலிக்க மாட்டாயா? திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும், ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத்து இரு நூறு* மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூரில்** வீற்றிருந்து, அற்புதமாக, அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி, பகைவன் எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே, மான் பெற்ற மகளான வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே. 
* இவ்வாறே மற்ற ஊர்களிலும் வாழும் மறையவர் எண்ணிக்கை வருமாறு: திருப்பெருந்துறை = 300, தில்லை = 3,000, திரு ஆக்கூர் = 1,000, திருவீழிமிழலை = 500, சீகாழி = 400, மதுரை = 48,000.
** உத்தர மேரூர் செங்கற்பட்டுக்கு தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
பாடல் 717 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - ....; தாளம் -
தான தந்தன தத்தா தத்தன
     தான தந்தன தத்தா தத்தன
          தான தந்தன தத்தா தத்தன ...... தனதான
மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
     மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
          வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில் 
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
     வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
          வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி 
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
     ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
          ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ 
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
     ஆயி ரங்கலை கத்தா மத்திப
          னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே 
சாத னங்கொடு தத்தா மெத்தென
     வேந டந்துபொய் பித்தா வுத்தர
          மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே 
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
     நீதி தந்திர நற்சார் புற்றருள்
          சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே 
வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
     வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
          வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ் 
மேரு மங்கையி லத்தா வித்தக
     வேலொ டும்படை குத்தா வொற்றிய
          வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.
(விலை) மாதர்களுடைய மார்பகங்களிலும், விரிந்த அழகிய மார்பில் விளங்கும் தன்மையை உடைய முத்து மாலையிலும், நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும், சேல் மீன் போன்ற கண்ணாகிய வேலிலும், மகிமை பொருந்திய மலருக்கு ஒப்பான பாதமாகிய இடத்திலும், அழகிய வஞ்சிக் கொடி போன்ற இடையிலும், உடலில் அணிந்துள்ள மாலையிலும், வானில் உள்ள இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மோகம் கொண்டவனாய், பற்று வைத்துக் கெட்டுப் போய், ஆசைக் கடலுக்கே மிகவும் ஈடுபட்டவனாய் தவிப்புற்று, நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? பன்னிரண்டு பெருமை வாய்ந்த தோள்களை உடைய அற்புதமானவனே, ஆயிரக் கணக்கான கலைகளுக்குத் தலைவனே, சாமானிய மனிதனாய் திரிந்து அலைகின்ற எனக்கு அருள் புரிவாயாக. ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மிகத் தத்தி தத்தி நடந்து போய், பொய் பேசும் பித்தனே மறு மொழி என்ன பேசுவாய் என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி (திருமணப் பந்தலின் கீழ்) நிற்பவராய்ச் சபை நடுவில், தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை, தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, கிருபை மிகவும் கொண்டு சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவ பெருமானின் செல்வக் குழந்தையே, வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படிச் செய்த அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத் தக்க அறிவாளனே, வேற்படை முதலிய படைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே, பக்தர்களுடைய பெருமாளே. 
* உத்தர மேரூர் செங்கற்பட்டுக்கு தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
பாடல் 718 - மதுராந்தகம் 
ராகம் - ....; தாளம் -
தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான
குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
     கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர் 
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
     கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே 
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
     கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத 
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
     றுங்க ருத்தை யென்று ...... தருவாயே 
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
     ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே 
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
     பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா 
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
     மந்த னிற்பி றந்த ...... குமரேசா 
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
குதித்துப் பாய்ந்து ஓடும் ரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், தோலை உடையதும் ஐந்து பொறிகளை உடையதுமான இந்த உடம்பு, வினை மிகுந்து நிரம்பியுள்ள குணங்களுக்குப் பாத்திரமான இந்த உடம்புதான் சகல செல்வமுமாகும் என்று மேற்கொண்டு, அதனால் இளைத்துச் சோர்வுற்றுத் திரியாமல், மனத்திலே உதிக்கின்றதாகும் பரம்பொருளை, ஆத்ம தத்துவம் நீங்க, அழகிய கிண்கிணி, சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும் இரண்டு தாமரையை ஒத்த உன் திருவடிகளாம் தெப்பத்தை இனியாவது பற்றிக் கொண்டு வாழும் கருத்தை எனக்கு நீ எப்போது தருவாய்? கதை, சாரங்கம், வாள், பாஞ்சஜன்யம் என்ற சங்கு, வலிமை வாய்ந்த சுதர்ஸனம் என்ற சக்கரம் ஆகிய பஞ்ச ஆயுதங்களையும் தரித்த மேக நிறத்துத் திருமாலின் மருகனே, கருணையும் அஞ்சன மையும் கொண்ட தாமரையைப் போன்ற கண்களை உடைய அழகிய பசுமையான தினைப்புனத்தில் இருந்த கரும்பு போல் இனிய வள்ளியின் மணவாளனே, மன்மதனுக்கு யமனாக இருந்த சிவபிரானுக்குக் குழந்தையாக தாமரையில் பிறந்த* குமரேசனே, மதுராந்தகத்தில் உள்ள வட திருச்சிற்றம்பலம்** என்ற தலத்தில் அமர்ந்து விளங்கும் பெருமாளே. 
* சிவபிரானிடமிருந்து தோன்றிய ஆறு பொறிகளும் கங்கை வழியாக சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளாக தாமரை மீது தோன்றின - கந்த புராணம்.
** மதுராந்தகத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு வட திருச்சிற்றம்பலம் என்று பெயர்.மதுராந்தகம் செங்கற்பட்டுக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.
பாடல் 719 - மதுராந்தகம் 
ராகம் - பூர்வி கல்யாணி 
தாளம் - அங்கதாளம் - 15 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
     கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி 
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
     கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச் 
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
     த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ் 
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
     றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான் 
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
     கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ 
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
     றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல 
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
     குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா 
மதுராந்த கத்து வடதி ருச்சிற்
     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.
மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு உருகி தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய சிவனார் பலவித வரிசைக் கூத்துக்களையும், ஜதி (தாளம்) நடனங்களையும் ஆடுபவரும், ஜடாமுடியில் கங்கை ஆற்றை வைத்த நம் பெருமானும் ஆகிய சிவனாருக்கு பேச்சற்றுப் போய், செயல் இழந்து, மனம் அழியும்படியாக, என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெற நீ கூறிய உபதேசத்தை சிறியவனாகிய எனக்கும் நீ சொல்லி உதவினால் கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் பதவி குறைந்திடுமோ என்ன? வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி சமுத்திரத்தில் மாமரமாக ஒளிந்த சூரனைப் பிளந்து, தேவர்கள் வாழ்வுற, சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிய வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட, முழு நீல நிறமான மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும், பழைய சிறந்த பொன்மயமான மேருமலையை செண்டால் அடித்தவனுமான* போர் விளையாட்டை உடையவனே, மதுராந்தகத்துக்கு ++ வடக்குப் பகுதியில் திருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே. 
* முருகன் உக்கிர பாண்டியனாக அவதரித்து பாண்டிய நாட்டுப் பஞ்சத்தை தீர்க்க பொன்மயமான மேருமலையை கையிலுள்ள செண்டாயுதத்தால் அடித்து பொன் கொட்டச் செய்த வரலாறு - திருவிளையாடற் புராணம்.
** மதுராந்தகத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு வட திருச்சிற்றம்பலம் என்று பெயர்.மதுராந்தகம் செங்கற்பட்டுக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.
பாடல் 720 - மதுராந்தகம் 
ராகம் - ....; தாளம் -
தனதாந்தன தான தனந்தன
     தனதாந்தன தான தனந்தன
          தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான
மனைமாண்சுத ரான சுணங்கரு
     மனம்வேந்திணை யான தனங்களு
          மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி 
மயமாம்பல வான கணங்குல
     மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு
          வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார 
இனவாம்பரி தான்ய தனம்பதி
     விடஏன்றெனை மோன தடம்பர
          மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா 
இடவார்ந்தன சானு நயம்பெறு
     கடகாங்கர சோண வியம்பர
          இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ 
தனதாந்தன தான தனந்தன
     தெனதோங்கிட தோன துனங்கிட
          தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார் 
தமதாஞ்சுத தாப ரசங்கம
     மெனவோம்புறு தாவ னவம்படர்
          தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே 
முனவாம்பத மூடி கவந்தன
     முயல்வான்பிடி மாடி மையைங்கரர்
          முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு 
முககாம்பிர மோட மர்சம்பன
     மதுராந்தக மாந கரந்திகழ்
          முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே.
மனைவி, பெருமை பொருந்திய மக்கள் ஆகிய சோர்தலைத் தருபவர்களும் மனம் நொந்து வெந்து போவதற்கு இடம் தருவதான செல்வங்களும், இறந்து விடப் போகின்ற என்னைப் பெற்ற தெய்வத்துக்கு ஒப்பான தாய், உற்றாராய்ப் பயனற்றவர்களான பிறர் மயமான பலவகைப்பட்ட கூட்டத்தார், குலத்தார் என்கின்ற மயக்கமும், யான், எனது என்று கூடியுள்ளனவாகிய, அளவு கடந்து செல்லும் குணமும் நோக்கமும், இனிமைக்கும், தக்கதாகப் பொருந்திய தாண்டிச் செல்லும் குதிரைகள், தானியங்கள், சொத்துக்கள், இருக்கும் ஊர் இவை எல்லாம் விட்டு நீங்கும்படி, என்னை ஏற்றுக்கொண்டு, மோன நிலையையும், மேலான மிக்கு நிற்கும் தெய்வத்தையும் நான் கண்டு களிக்க, கூட்டமான பெருமை தங்கிய தேவர்கள் ஏசுதலின்றி (நன்கு பொருந்திய) இடம் கொண்டு நிறைந்துள்ள, முழந்தாள்* நல்லதான, கடகம் அணிந்துள்ள கைகள், சிவந்த உடல், (இவைகளுக்கு) மேலான இடமாகிய, பெருமை பொருந்திய உனது திருவடியை அருளும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ? தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தன என்ற ஓசைகள் ஒலிக்கும்படியான மிக மேலான நடனத்தைச் செய்கின்ற எம்பிரானாகிய சிவபெருமானுடைய குழந்தையே, அசையாப் பொருள், அசையும் பொருள் என்றவாறு அனைத்தையும் பாது காத்தல் செய்யப் படைத்தவனே, புதுமை நிறைந்த, தக்கதான, தாம்பிரசூடம்** எனப்படும் சேவலால் வணங்கப் படுபவனே, இன்பம் தருகின்ற தேவர்கள் செல்வமே, (முருக வேள் நினைக்கும்) முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை உடையவரும், பெருச்சாளி*** வணக்கம் செய்யும்படி முயற்சி எடுத்துக் கொண்டவரும், பெண் யானை போன்ற வள்ளியின் பக்கத்தில் இமைப்பொழுதில் (காட்டானையாக) ஒளி விட்டு விளங்கியவருமான, ஐங்கரருமான விநாயக மூர்த்தியின் எதிரில் தோன்றிய தம்பியே, பொருந்தியுள்ள களிப்பு நிறைந்த அழகு செய்கின்ற கூட்டமாகிய ஆறு திரு முகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற பாக்கியவானே, மதுராந்தகமாகிய சிறந்த நகரில் விளங்கும் முருகனே, நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தம்பிரானே. 
* முருக வேளின் விசுவ ரூப நிலை தேவர் கூட்டத்துக்கு சானுவில் (முழந்தாளில்) காணப்பட்டது.
** தாம்பிர சூடம் - இது சிவந்த கொண்டையை உடைய சேவலைக் குறிக்கும். சூரனின் ஒரு பகுதி சேவலாக மாறி, முருகனது கொடியில் அமர்ந்து சேவை செய்தது.
*** கஜாமுகாசுரன் பெருச்சாளி வடிவத்துடன் விநாயகரை எதிர்க்க வந்தான். அப்போது அதன் மீதேறி அவனை வீழ்த்தி வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
பாடல் 721 - சேயூர் 
ராகம் - ...; தாளம் -
தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
          தனனாதன தானன தானன ...... தனதான
முகிலாமெனும் வார்குழ லார்சிலை
     புருவார்கயல் வேல்விழி யார்சசி
          முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர் 
முலைமாலிணை கோபுர மாமென
     வடமாடிட வேகொடி நூலிடை
          முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார் 
அகிசேரல்கு லார்தொடை வாழையின்
     அழகார்கழ லார்தர வேய்தரு
          அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி 
அனமாமென யாரையு மால்கொள
     விழியால்சுழ லாவிடு பாவையர்
          அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ 
ககனார்பதி யோர்முறை கோவென
     இருள்காரசு ரார்படை தூள்பட
          கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா 
கமலாலய நாயகி வானவர்
     தொழுமீசுர னாரிட மேவிய
          கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா 
மகிழ்மாலதி நாவல்ப லாகமு
     குடனாடநி லாமயில் கோகில
          மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா 
மதிமாமுக வாவடி யேனிரு
     வினைதூள்பட வேயயி லேவிய
          வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
மேகம் என்று சொல்லத் தக்க நீண்ட கூந்தலை உடையவர்கள். வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்கள். கயல் மீன், அம்பு இவைகளைப் போன்ற கண்களை உடையவர்கள். சந்திரனைப் போன்ற முகம் உடையவர்கள். முத்துப் போன்ற பற்களைக் கொண்டு சிரிக்கின்ற விலைமாதர்கள். மார்பகங்கள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்களைப் போல் விளங்க மணி வட மாலைகள் அசைந்து விளங்க, கொடியைப் போலவும், நூல் போலவும் நுண்ணிய இடையில் வேலைப்பாடு சிறந்த பட்டுப் புடைவை விளங்கிய, மயில் போன்ற சாயலை உடையவர்கள். பாம்பை ஒத்த பெண்குறியை உடையவர்கள். வாழை போன்ற தொடை அழகினர்கள். சிலம்பு ஒலிக்க, பொருந்திய அழகியர்கள். பொன்னாலாகிய பாத கிண்கிணி ஒலி செய்ய நடந்து சென்று, அன்னப் பறவை என்னும்படி யாரையும் மோகம் கொள்ளும் கண்களால் சுழல விடுகின்ற பெண்களுடைய படுக்கையில் அடியேன் உடல் அழிபடுவேனோ? விண்ணுலக ஊரில் உள்ளவர்கள் கோ என்று முறையிட இருளைப் போலக் கரிய அசுரர்களுடைய சேனைகள் தூளாகவும் கடலும், (சூரனது )எழு கிரிகளும், பிற மலைகளும் பொடிபடும்படியாகவும் செலுத்திய வேலாயுதனே, தாமரையில் கோயில் கொண்டிருக்கும் நாயகி, தேவர்கள் தொழுகின்ற சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ளவள், கருணைக்கு இருப்பிடமானவள், ஞான பரதேவதை உமாதேவி அருளிய குழந்தையே, மகிழ மரம், மல்லிகை, நாவல் மரம், பலா, பாக்கு மரம் ஆகியவைகளில் விளையாடும் நிலா ஒளி, மயில், குயில் ஆகியவை மகிழ்ந்திருக்கும் நாட்டில் உள்ள வள்ளி மலையில் இருந்த பெருமை மிக்க வள்ளி நாயகியின் கணவனே, சந்திரனைப் போன்ற அழகிய முகத்தனே, அடியேனுடைய இருவினைகளும் தூளாகவே அம்பைச் செலுத்தியவனே, வளவா புரி என்னும் சேயூரில் வாழும் மயில் வாகனப் பெருமாளே. 
* சேயூர் இப்போது செய்யூர் என்று வழங்கப்படும். இதற்கு வளவாபுரி என்ற பெயரும் உண்டு. மதுராந்தகத்துக்கு கிழக்கே 16 மைலில் உள்ள தலம்.
பாடல் 722 - திருவக்கரை 
ராகம் - குந்தலவராளி 
தாளம் - ஆதி
தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன ...... தனதானா
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே 
கருவழிதத்திய மடுவ தனிற்புகு
     கடுநர குக்கிடை ...... யிடைவீழா 
உலகு தனிற்பல பிறவி தரித்தற
     வுழல்வது விட்டினி ...... யடிநாயேன் 
உனதடி மைத்திரள் அதனினு முட்பட
     வுபய மலர்ப்பத ...... மருள்வாயே 
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா 
குணதர வித்தக குமர புனத்திடை
     குறமக ளைப்புணர் ...... மணிமார்பா 
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
     மணிதிரு வக்கரை ...... யுறைவோனே 
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
     அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
கலகல என்ற ஆரவாரச் சத்தத்துடன் சில நூல்களை ஓதிப் பிதற்றுவது ஒழியவேண்டிய ஒன்றாகும். உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல், கருக்குழியில் வேகமாகச் செலுத்தும் பள்ளத்தில் புகுந்து பொல்லாத நரகத்தின் மத்தியில் விழுந்து விடாமல், இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து மிகவும் திரிதலை விட்டு, இனியாவது கீழான நாய் போன்ற அடியேனும் உன் அடியார் கூட்டத்தின் உள்வட்டத்தில் ஒருவனாகும்படியாக உன்னிரு மலர்ப் பாதங்களை அருள்வாயாக. கிரெளஞ்சமலைக் கூட்டங்கள் பொடியாகும்படி, அலைவீசும் கடல் நீரின்றி வற்றிப் போகும்படி, அசுரனாம் சூரனோடு போர் செய்த வேல் வீரனே, நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே, குமரனே, தினைப்புனத்தின் இடையே குறமகள் வள்ளியை மணந்த அழகிய மார்பனே, அலை வீசும் நீரிலே தவழ்கின்ற சங்குகள் பிரகாசிக்கின்ற அழகிய திருவக்கரைத்* தலத்தில் வீற்றிருப்பவனே, உன் அடியார்களுடைய மனத்தில் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ அன்ன ஆசைகளை வரவழைத்து நிறைவேற்றி அருளும் பெருமாளே. 
* திருவக்கரை தென்னாற்காடு மாவட்டத்தில் மயிலம் ரயில் நிலையத்திலிருந்து 12 மைலில் உள்ளது.
பாடல் 723 - திருவக்கரை 
ராகம் - ....; தாளம் -
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன தத்தன தத்தன
          தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்
     குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்
          பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள் 
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை
     யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்
          பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யிதழூறல் 
எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்
     இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு
          மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர் 
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்
     பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி
          இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே 
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு
     ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்
          நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர் 
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை
     நட்டர வப்பணி சுற்றிம தித்துள
          நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே 
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி
     றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு
          றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா 
கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு
     குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய
          கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே.
பச்சிலைப் பொடியைப் பூசி முகத்தை மினுக்குபவர்கள். வஞ்சகமான வித்தைகளில் மிக்க சாமர்த்தியசாலிகள். கூத்தாடும் பயனிலிகள். (வருபவருடைய) கைப் பொருளை அபகரிப்பதிலேயே எண்ணம் வைப்பவர்கள். வரிசை வரிசையாக உள்ள வெள்ளை நிற முத்துக்களை ஒத்ததான பற்களாலும், கண்களாலும் மயக்குபவர்கள். அன்பு மிகும்படியாக (மா, பலா, வாழை என்னும்) முப்பழங்களையும் சர்க்கரையையும் போன்ற வாயிதழ் ஊறலாகிய எச்சிலைக் கொடுப்பவர்கள். கச்சைக் கயிற்றாலாகிய படுக்கையில் முகஸ்துதியான வார்த்தைகளை நிரம்பப் பேசி பக்குவமாக ஏமாற்றி வஞ்சித்து அழைத்து மயக்கும் அழகிய விலைமாதர்கள் (மேலுள்ள) ஆசையால் இவ்வண்ணம் நாள் தோறும் மன வருத்தத்தை அடைந்து, உலகோர் சீ சீ என்று வெறுப்புக் காட்டத் திரிகின்ற இந்தச் செயலும், இந்தக் குணமும் நான் விட்டொழிக்க நல்ல திருவடிகளைத் தருவாயாக. விஷம் உள்ள பாம்பு (படுக்கையில்) துயில்கின்ற பச்சை மேகம் போன்றவரும், கருணைக் கடலானவரும், தாமரை மலரில் வாசம் செய்யும் லக்ஷ்மியைச் சேர்பவரும், சங்கு தரித்த கையை உடையவரும், துளசி மாலையை அணிந்த மார்பினரும், பாற்கடலின் நட்டநடு மத்தியில் பெரிய மந்தர மலையை நாட்டி, பாம்பாகிய வாசுகியை கயிறாகக் கட்டி, சுற்றிலும் மத்தால் கடைந்து, உள்ளத்தில் ஆசைப்பட்ட அமுதத்தை வரச்செய்து, தேவர்களுக்கு அளித்த திருமாலின் மருகனே, . மழலைப் பேச்சினளும், கரிய கண்களை உடையவளும், சிறிய இடையை உடையவளும், பெரிய மார்பை உடையவளும் (ஆன) குறப்பெண்ணாகிய வள்ளிக்கு மனத்தில் ஆசை கொண்ட குமரேசனே, இதழ்க் கொத்துக்கள் விரிகின்ற தாமரை மலர் நிறைந்த வயல்களும் (மருத நிலங்களும்), நன்றாக ஓடும் கடிகை என்னும் ஆற்றின் நீரும் சுற்றியுள்ள நல்ல திருவக்கரை* என்னும் ஊரில் பொருந்த வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவக்கரை தலம் மயிலத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 724 - சிறுவை 
ராகம் - ஸிந்து பைரவி 
தாளம் - கண்டசாபு - 2 1/2 
- எடுப்பு - 3/4 தள்ளி
தந்ததன தனதான தந்ததன தனதான
     தந்ததன தனதான ...... தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே 
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக 
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண 
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும் 
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா
     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா 
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா 
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா 
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.
தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில் குடிபுகச்செய்து, நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி அவர்களை மடியச்செய்து, தேவர்களின் மனம் மிகக் களிப்படையும்படி அருள்செய்து, காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய, விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படைய, பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் எதிரே நின்று கண்டு களிக்க, லக்ஷ்மியுடன் திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற, வலிமையான மயிலுடன் ஆடி என்முன் நீ வரவேண்டும். தாமரை போன்ற கண்களை உடையவனே, தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே, அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே, பொங்கிய கடலுடன், கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே, குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே, செம்பொன்னின் அழகு நிறைந்த உருவத்தோனே, நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்ட முருகேசப் பெருமானே, எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட குளிர்ந்த சிறுவைத்தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
பாடல் 725 - சிறுவை 
ராகம் - கேதாரம் 
தாளம் - அங்கதாளம் - 8 1/2 
- எடுப்பு - 1/2 தள்ளி 
தகதிமி தகதிமி-4, தகதகிட-2 1/2, தகதிமி-2
தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன
          தானன தானன தானான தானன ...... தனதான
சீதள வாரிஜ பாதாந மோநம
     நாரத கீதவி நோதாந மோநம
          சேவல மாமயில் ப்¡£தாந மோநம ...... மறைதேடுஞ் 
சேகர மானப்ர தாபாந மோநம
     ஆகம சாரசொ ரூபாந மோநம
          தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப் 
பாதக நீவுகு டாராந மோநம
     மாவசு ரேசக டோராந மோநம
          பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது 
பார்வதி யாள்தரு பாலாந மோநம
     நாவல ஞானம னோலாந மோநம
          பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய் 
போதக மாமுக னேரான சோதர
     நீறணி வேணியர் நேயாப்ர பாகர
          பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா 
போதக மாமறை ஞானாத யாகர
     தேனவிழ் நீபந றாவாரு மார்பக
          பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா 
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
     மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
          மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா 
வானவ ரூரினும் வீறாகி வீறள
     காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
          வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.
குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே, போற்றி, போற்றி, நாரதருடைய இசையில் மகிழ்பவனே, போற்றி, போற்றி, சேவற்கொடியோனே, சிறந்த மயில்மீது பிரியமானவனே, போற்றி, போற்றி, வேதங்கள் தேடும் அழகான கீர்த்தியை உடையோனே, போற்றி, போற்றி, ஆகமங்களின் சார ஸ்வரூபமாக உள்ளவனே, போற்றி, போற்றி, தேவர்களின் சேனைக்குத் தலைவனே, போற்றி, போற்றி, நற்கதி அடைய, பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே, போற்றி, போற்றி, பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக கொடுமை காட்டுபவனே, போற்றி, போற்றி, இவ்வுலகிலே ஜயவீரனாக விளங்குபவனே, போற்றி, போற்றி, மலைமகள் பார்வதி பெற்றெடுத்த செல்வமே, போற்றி, போற்றி, வாக்கிலே வித்தகனே, ஞான மனத்தில் உலவுகின்றவனே, போற்றி, போற்றி, பாலகுமாரசுவாமீ, போற்றி, போற்றி, நினதருளைத் தருவாயாக. யானையின் சிறந்த முகத்தோனுக்கு நேர் இளைய சகோதரனே, திருநீறு அணிந்த சடைப் பெருமானுக்குப் பிரியமானவனே, ஞான சூரியனே, லக்ஷ்மிதேவியின் மருமகனே, ஈசனே, பெருங் கடலைப் பகைத்து வேல் விட்ட சூரனே, சிறந்த வேதங்களை போதிக்க வல்லவனே, ஞானனே, கருணா மூர்த்தியே, தேன் சொட்டும் கடப்பமலரின் மணம் வீசும் திருமார்பை உடையவனே, பூரணச் சந்திரனைப் போல விளங்கும் ஆறு முகத்தானே, முருகேசா, தவ முநிவர்கள், தேவர்கள, அவர்களுடன் திருமாலும், தாமரை மலரின் மீதுள்ள பிரமனும், யாவரும் புகழும் நாயகனே, பெரிய உலகங்கள் ஏழிலும் மேலான தலைவனான வடிவேலனே, தேவர்களது ஊரான அமராபுரியைக் காட்டிலும் மேம்பட்ட, புகழ் பெற்ற குபேரன் ஊராகிய அளகாபுரியைக் காட்டிலும் மிகச் சிறந்த, லக்ஷ்மி வாசம் செய்யும் சிறுவாபுரித் தலத்தின் செல்வமே, தேவர் தலைவர்களுக்கெல்லாம் பெருமாளே. 
* சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
பாடல் 726 - சிறுவை 
ராகம் - பீம்பளாஸ் 
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
     தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
     பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப் 
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
     பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே 
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
     நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே 
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
     நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ 
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
     பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப் 
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
     புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே 
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்
     சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச் 
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
     சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.
இந்தப் பிறப்புக்கு என்று ஏற்பட்ட உடலிலே புகுந்து, நல்வழி இல்லாத வேறு வழிகளிலே நெருங்கிப்போய், நோய் முதலிய துக்கங்களின் வேதனையுடன் தடுமாறி, பெருகும் கெட்ட வினைகளினால் கஷ்டப்பட்டு, இவ்வாறு பிறப்புக்கள் தோறும் அலைச்சல் அடைந்து, பிறவியின் உண்மைத்தன்மை ஏதும் புலப்படாத இந்தப் பிறப்பையே நம்பி அழிந்து போகாமல், தேன் நீங்காத மலர்கள் நிரம்பியதும், அருமையான மெளன வழியைத் திறந்து காட்டுவதுமான உனது தாமரைப் பாதங்கள் என் மனத்தை விட்டு நீங்காமல், மனிதர்களும், தேவர் தலைவர்களும் வணங்குகின்ற இனிமையான உன் தரிசனத்தை விரும்பி நன்மை அடையும் பாக்கியத்தை யான் என்று பெறுவேனோ? ஐம்பொறிகளும் தவறான வழியில் போகாமல் காத்திருந்த நக்கீர முனிவர் (குகையில் அடைபட்டாலும்) தமது நித்திய அநுஷ்டானங்களை தவறாமல் நின்று காத்த குகையிலே மன அலைச்சலுற்று, குகையில் அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த ராட்சசனை* வெல்ல நினைந்த நக்கீரர் உய்யும் வழியை நாடியபோது, ஒப்பில்லாத அன்பு வழியிலே கிருபை கூர்ந்து, உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து, புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு, (நக்கீரரை குகையினின்று மீட்டு) திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே, சிறுவரான லவ, குசர் என்னும் ஸ்ரீராமரின் புதல்வர்கள் இருவரும் அந்த யானைப்படை, காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வாசகங்களுடன் வில் ஏந்திய ஸ்ரீராமருடன் எதிர்த்துப் போர் செய்து, வெற்றி பெற்ற நகரமாகிய சிறுவையில்** அமர்ந்த, குபேரப்பட்டினம் போல வளப்பம் மிக்கதான சிறுவையில் வீற்றிருந்த, வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே. 
* குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்தினின்றும் நக்கீரரை முருகன் காத்த வரலாறு.
** சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
பாடல் 727 - சிறுவை 
ராகம் - ...; தாளம் -
தான தந்தன தானன தானன
     தான தந்தன தானன தானன
          தான தந்தன தானன தானன ...... தனதான
வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
     காத லின்பொருள் மேவின பாதகர்
          வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி 
வேளை யென்பதி லாவசை பேசியர்
     வேசி யென்பவ ராமிசை மோகிகள்
          மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும் 
மால யன்பர னாரிமை யோர்முனி
     வோர் புரந்தர னாதிய ரேதொழ
          மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே 
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
     யேவி ரும்பி வினாவுட னேதொழ
          வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே 
நீல சுந்தரி கோமளி யாமளி
     நாட கம்பயில் நாரணி பூரணி
          நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி 
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
     காம சுந்தரி யேதரு பாலக
          நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச 
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
     மாநி லங்களெ லாநிலை யேதரு
          ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே 
ஆட கம்பயில் கோபுர மாமதி
     லால யம்பல வீதியு மேநிறை
          வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.
வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட கண்களை உடைய விலைமாதர்கள் ஆசையுடன் பொருளை விரும்பும் பாதகிகள் ஆவர். வந்தவரிடம் வீணாகப் பகைத்து உள்ளத்தை ஆராய்பவர். ஊமைகள் போல இருப்பவர்கள். விலை பேசி வாதாடி, நேரம் என்பது இல்லாமல் பழிப்புச் சொற்களைப் பேசுபவர். பரத்தையர் எனப்படும் இவர்கள் இசையில் ஆசை கொள்பவர். இத்தகைய விலைமாதர்கள் மீது மனம் கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும், திருமால், பிரமன், சிவனார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர் தொழும்படியான பெரிய தவத்தைப் பெற்ற உனது இரு திருவடிகளை நாள் தோறும் மறக்காமல், நல் வாழ்வைத் தரவல்ல சிவ போகத்தை விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய வழியையே நான் விரும்பி ஆராய்ச்சி அறிவுடன் தொழுது, வாழும் வரத்தைத் தருவாயாக. அடியேனுடைய வருத்தங்களை நீக்கி அருள்வாயாக. நீல நிற அழகி, இளமை வாய்ந்தவள், பச்சை நிறம் உடையவள், கூத்துக்கள் பல நிகழ்த்தும் நாரணி, நிறைந்தவள், சிறந்த ஐந்தாவது சக்தியாகிய அனுக்கிரக சக்தி, திரி சூலத்தைத் தரித்தவள், மாலையை அணிந்தவள், உமையவள், காளி, அன்பர்கள் அருகில் விளங்கி உதவும் குருக்கத்திக் கொடி போன்றவள், சிவகாம சுந்தரி ஆகிய பார்வதி ஈன்ற குழந்தையே, கங்கை நீர் தங்கும் சடையை உடைய சிவபெருமான் பெற்ற குருவாகிய முருகேசனே, ஆல் இலையில் இருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலை பெற்று வாழவும், பெரிய கிரகங்கள் எல்லாம் நிலைத்து இயங்கவும் காக்கின்ற இடையர் குலத்தோன், நமக்கு உரிய திருவூரகம்* என்னும் தலத்தில் விளங்கும், திருமாலின் மருகனே, பொன் போல விளங்கும் கோபுரம், பெரிய மதில்கள், கோயில், பல வீதிகளும் நிறைந்துள்ள அழகிய சிறுவாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிறுவாபுரியில் உள்ள திருமாலுக்கு 'திருவூரகப் பெருமாள்' என்று பெயர்.
** சிறுவைத்தலம், சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.
பாடல் 728 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -
தனதன தான தானன, தனதன தான தானன
     தனதன தான தானன ...... தனதான
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
     மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத் 
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
     யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந் 
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
     துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத் 
தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்
     துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ 
அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
     மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே 
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை
     அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே 
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
     யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர் 
விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்
     விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.
வலிமை வாய்ந்த கூரிய வேல்கள், அம்புகள் ஆகியவற்றைக் காட்டிலும் ஓடிப்பாய்வதில் நன்கு தேர்ந்த கூர்மையான கண்களாலும், காம மயக்கம் எனப்பட்ட மதயானையின் இடத்துள்ள தந்தம் போன்றதும், வினையின் அளவே அளவாகக் கொண்டதுமான, மிக்கெழுந்த மார்பகத்தாலும், அதன் தோற்றத்தை மூடி மறைக்கும் ஆடையின் அழகாலும், உடுக்கை போன்ற இடையாலும், வாலிபர்கள் துயரம் அடைய மாய வித்தையுடனும் ஒப்பற்ற ¨தரியத்துடனும் பிணங்குகின்ற பொது மகளிரைத் துணையாகக் கொண்டு, அவர்களை வணங்கி, அவர்களுடைய பாதங்களைப் புகழ்ந்து, உன்னுடைய பரம்பரையில் வந்தவன் நான் என்று கூறி, வெகு தூரம் உயர்ந்து எழும் அலையில் பட்டு அலமந்து போகும் விளக்குமாற்றுக் குச்சி போல் உயிர்ச் சுழற்சி உறுவேனோ? காட்டினுள்ளே இருந்த வேடர்களின் பெண்ணான வள்ளியுடன் உன் காதலைத் தெரிவித்துப் பேசும் பேச்சையும், அவளுடைய திருவடிகளைத் தொழுது விளையாடும் ஆண்மைக் குணத்தையும் உடையவனே, அழகிய பன்னிரு தோள்களை உடைய ஆறுமுக வேளே என்று உன்னை ஞானத்துடன் ஓதுகின்ற மகா தவசிகளுக்கு பெரிய செல்வமாக உள்ளவனே, ரிஷப வாகனத்தை உடைய சிவபெருமான் மீது அன்பு மிகவும் உள்ளத்தில் கொண்ட அடியார்களின் தீவினைகள் சிதறுண்டு தூரத்தில் விலகி ஓட, தன்னிடத்தே வந்து சேர்ந்து தரிசிப்பதான பழைமை வாய்ந்த இத்தலத்தில், நறு மணம் நிறைந்த மயில் போன்ற மாதர்கள் ஆர்வத்துடன் நடனம் ஆடுகின்ற திருஆமாத்தூர்* என்னும் தலத்தில், வீரம் வாய்ந்த மயிலின் மேல் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலயத்திலிருந்து 4 மைல் வடமேற்கே உள்ளது.
பாடல் 729 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
     தந்த தத்தன தானாதன ...... தனதான
கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது
     நன்க மைக்கின மாமாமென ...... முகையான 
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற
     விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன் 
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள்
     மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர் 
பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு
     கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் 
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு
     விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி 
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர்
     வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே 
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல
     முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித் 
தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை
     சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.
கண்ணுக்கு கயல் மீனோடும், பெண்மானோடும் சம்பந்தம் உண்டு என்றும், கரும்பு போன்ற தோள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் ஆம் ஆம் என்றும் சொல்லும்படியாக, மொட்டான தாமரை போன்று வளர்ந்து மிக்கெழுந்துள்ள கூரிய பெரிய மார்பகம் யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பானவை எனவும், நிரம்பிய இருளுக்கு ஒப்பான கருமேகம் போன்ற கூந்தல் எனவும் இவைகளைக் கொண்டு, பெருமை வாய்ந்த யமனே பெண் என்னும் ஓர் உருவுக்கு உண்டான ஆடம்பரமான வேஷத்தை இன்று எடுத்துக் கொண்டு வந்து, இளைஞோர்களின் உயிரை நன்றாகப் பிடிப்பது போல, பெரும் அழகு வாய்ந்த மாதர்களின் பிறகே தனத்தைச் செலவழிக்கும் மாமோகத்தில் விருப்பத்தை வைத்து, நான் அழிந்து போகாமல் ஒரு சிறிய அளவுக்காவது உனது திருவடிகளை விரும்ப திருவருளைத் தருவாயாக. விண்ணுலகுக்குச் சொந்தமானவனும், உடலெல்லாம் கண் கொண்டவனுமாகிய இந்திரன், பிரமனுடனும், பேரறிவாளனாகிய திருமாலுடனும் விழுந்து வணங்கும் திருவடியை உடையவர், (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறுபவர், விருப்பத்துக்கு இடமான திருமார்பை உடைய உமையாள் விரும்பி அமரும் சந்தனம் பூசிய புயங்களை உடைய அர்த்த நா¡£சுரர், கொடிய யானையின் தோலை நிரம்பின போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபெருமானின் பெரும் செல்வமே, குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருவாமாத்தூரில்* ஆசை கொண்டு வீற்றிருந்து, திருவருளால் உலகம் யாவையும் செழிப்புற்று ஓங்க, வானளாவிய பெரிய திசைகளிலும் பரந்து நிறைந்து யாவரையும் வருத்திய அசுரர்கள் கோ கோ என்று அலறி பயந்து ஓட, பெரிய மாமரத்தின் (உருவில் ஒளிந்திருந்த சூரனின்) மீது கோபமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது.
பாடல் 730 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -
தனதன தானத் தானன, தனதன தானத் தானன
     தனதன தானத் தானன ...... தனதான
கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு
     கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர் 
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
     கனதன பாரக் காரிகள் ...... செயலோடே 
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்
     பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே 
பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்
     புரிவது தானெப் போதது ...... புகல்வாயே 
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
     சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத் 
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
     தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா 
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை
     அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா 
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
     அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.
கரிய மேகம் போன்றதும் வாசனை கொண்டுள்ளதும் ஆகிய கூந்தலை உடையவர்கள். தேனில் வெல்லத்துடன், பழம், அமுதம் இவைகள் ஊறியது போன்ற இனிய பேச்சுக்களை உடையவர்கள் இந்த விலைமாதர்கள். புணர்ச்சியைத் தருதற்கு நேரான ஏற்புடையவர்கள். செருக்கு உடையவர்கள். காமமும் கோபமும் மிக்கவர்கள். வட்டமான மார்ப் பாரத்தை உடையவர்கள். வேகத்துடன் சண்டை செய்யும் கயல் மீனையும் வாளை மீனையும் கடக்க வல்ல கண்களை உடையவர்கள். கொள்ளைக்காரிகள். பொருள் எவ்வளவோ அவ்வளவுக்குத் தகுந்தபடித் தங்கள் ஆசையைச் செலுத்துபவர்கள். பூமியில் இப் பொது மகளிர் காம இன்பத்தைத் தரும் பாவிகள், ஆகிய இவர்கள் வசம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற உனது திருவடியை அருள் புரிவது தான் எப்போது என்பதைச் சொல்லி அருள்க. கற்பகத் தருவை அழித்த ¨தரியத்தை உடைய அசுரர்களும், அவர்களுடைய சுற்றத்தாரும் மாண்டு பொடிபட, யமனுடைய கொலைத் தொழில் பெருக, பருந்துகளுடன் அண்டங்காக்கைகள் (போர்க்களத்துக்கு) விரும்பி வந்து சேர, தனதன தானத் தானன என்ற இவ்வாறான சந்தங்களுடன் இசை பாடி பேய்கள் பல விதமான மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தி அனுப்பிய ஒப்பற்ற வீரனே, அரி, திருமால், சக்ராயுதன் என்று சொல்லப்படுபவனுக்குத் தங்கையும், முக்தாம்பிகை என்னும் பெயரை உடையவளும் ஆகிய அழகு உடையவள், சிவபெருமானுடைய உடலில் ஒரு பாகத்தில் உள்ள உமா தேவி ஈன்ற மகனே, பாம்புடன், பூளை என்னும் பூவால் ஆகிய மாலையையும், சந்திரனையும், அறுகம் புல்லுடன் சடையில் சூடிய அழகுடைய சிவபெருமான் இருக்கும் எழிலுடைய திருவாமாத்தூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது.
பாடல் 731 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -
தான தனதன தனதன தனதன
     தான தனதன தனதன தனதன
          தான தனதன தனதன தனதன ...... தனதான
கால முகிலென நினைவுகொ டுருவிலி
     காதி யமர்பொரு கணையென வடுவகிர்
          காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங் 
கான மமர்குழ லரிவையர் சிலுகொடு
     காசி னளவொரு தலையணு மனதினர்
          காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ் 
சால மயல்கொடு புளகித கனதன
     பார முறவண முருகவிழ் மலரணை
          சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச் 
சாதி குலமுறு படியினின் முழுகிய
     தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்
          தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே 
வேலை தனில்விழி துயில்பவ னரவணை
     வேயி னிசையது நிரைதனி லருள்பவன்
          வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே 
வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
     வேடை கெடவமு தருளிய பொழுதினில்
          வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப 
வாலி யுடனெழு மரமற நிசிசரன்
     வாகு முடியொரு பதுகர மிருபது
          மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே 
வாச முறுமலர் விசிறிய பரிமள
     மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக
          வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.
உரிய காலத்தில் பெய்த மழையைக் கண்டால் வரும் மகிழ்ச்சியைப் போல் உருவம் இல்லாதவனான மன்மதன் கொல்வதற்குப் போரிட விட்ட அம்பு எனவும், மாவடுவின் கீற்று எனவும், வந்து இதைப் பாருங்கள் என்றும் இளைஞர்கள் மிகுந்துரைக்கும் கயல் மீன் போன்ற கண்களாலும், காடு போன்ற கூந்தலை உடைய விலைமாதர்கள் சண்டைக் கூச்சலுடன், (கொடுத்த) பொருளுக்குத் தக்கபடி ஒருதலைக் காமம் பொருந்திய மனம் கொண்டவராய், இத்தகைய பொய்க்காமம் கொண்ட சில கபட நெஞ்சத்தினராய் வஞ்சனைப் பேச்சு பேசும் காமசாஸ்திரங்களாலும் மிக்க மோகம் கொண்டு, புளகாங்கிதம் பூண்ட கனத்த மார்பின் பாரம் அழுந்த, பொருந்திய வாசனை வீசுகின்ற மலர்ப் படுக்கை உள்ள துயிலில் மிக்க புணர்ச்சி இன்பத்தில் அழிவுறும் அடியேனை, சாதி குலம் முதலியவை உள்ள இப் பூமியில் வந்து பிறந்து, முற்றும் அனுபவிக்கின்ற சிறுமை நீங்க, வழி வந்து உதவுகின்ற பர வெளியில் உள்ள திருவடியை அடைவதையும், தவ நெறியை மிகவும் நினைப்பதையும் தந்து அருளுவாயாக. பாற்கடலில் ஆதி சேஷனாகிய பாம்புப் படுக்கை மேல் கண் துயில்பவன், புல்லாங்குழலின் இசையால் பசுக் கூட்டங்களுக்கு அருள் புரிபவன், வீரமுள்ள குதிரைகளைச் செலுத்தின சாரதியான கண்ணபிரான், அருச்சுனனுக்குக் குரு, வேறே உருவம் கொண்டு உறியில் இருந்த வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி உண்ணும் வேட்கை தீர அனைவருக்கும் அமுதைப் பங்கிட்டு அருளியபோதில், மாதர்களின் கையால், எறியப்பட்ட கயிற்றால் அடிபட்ட சிறுவன், மிக்க கோபம் கொண்டிருந்த வாலியுடன், ஏழு மராமரங்களும் அற்று விழவும், அரக்கனாகிய ராவணனின் அழகிய பத்துத் தலைகளும் இருபது கைகளும் அழியும்படி ஓர் அம்பை விட்ட, ஒப்பற்ற கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, நறு மணம் மிக்க மலர்கள் வீசின வாசனையைக் கொண்ட திருவாமாத்தூர்* என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஓர் ஆறுமுகனே, விண்ணுலகத்தினில் இருக்கும் அடியார்களின் துன்பம் நீங்கும்படியாக அருளிய பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலயத்திலிருந்து 4 மைல் வடமேற்கே உள்ளது.
பாடல் 732 - தச்சூர் 
ராகம் - ...; தாளம் -
தத்தா தனத்தான தாத்தத் தனந்த
     தத்தா தனத்தான தாத்தத் தனந்த
          தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான
அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த
     செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க
          ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உறவாடி 
அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க
     வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து
          அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை 
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க
     ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்
          மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ...... ளதனாலே 
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து
     புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து
          வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ 
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
     பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க
          மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே 
எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த
     முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி
          யெக்கா லுமக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா 
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
     சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து
          சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித் 
தப்பா மலிப்பூர்வ மேற்குத் தரங்கள்
     தெற்கா குமிப்பாரில் கீர்த்திக் கிசைந்த
          தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே.
வலிமை உள்ளதாய், அழுந்தப் பதிந்துள்ள இரும்பாணி போன்றதும், கடைந்து எடுக்கப்பட்ட சிமிழ் போன்றதுமான மலையாகிய மார்பகங்களை முன் காட்டியும், அம்புகளைப் போல கண்களால் நுண்மையாகப் பார்த்து மனம் நெகிழ்ச்சி காட்டி உறவாடியும், அத்தான் என அழைத்து எனக்கு ஆசையை ஏற்படுத்தி, நீ என்னை வாடும்படி வைத்து விட்டாய் என்று பேசி மூக்கை ஆசையுடன் வருடிவிட்டு, முன்பு ஒரு காலத்தில் ஆசையால் விரும்பி எம்மிடம் வந்திருந்தீர். (இப்போது உமக்கு) என்னிடம் ஆசை இல்லை. நிந்தையான பேச்சுக்கு நீ இடம் தந்து விட்டாய். யோசித்துப் பார்க்கும் பொழுது உனக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை, முருகன் முதலாக உனக்கு ஒப்பானவர்கள் யாரும் இல்லை என்று கூறி இவ்வுலகில் மூர்க்கத்தனங்கள் கொண்ட செய்கைகளாலே கரிய வெல்லக் கட்டி போல இனிக்கப் பேசி, தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் கோரைப் புல் பாயில் கிடத்தி, தக்க சமயத்தில் தனித்துக் கலவி செய்துவைக்கும் விலைமாதர்கள் மேல் மோகம் பூண்ட காரணத்தால் பைத்தியம் பிடித்துத் திரிவேனோ? (எல்லாவற்றுக்கும் கடைசியில்) எஞ்சி இருக்கும் பொருளாய் மயக்கம் கடந்தவராய் இருந்த பித்தராகிய சிவபெருமானுக்கு உபதேசித்தவனே, மனம் என்னும் கோட்டையில் விளங்கும்படி மிக அதிகமாக தியானிப்பவர்களின் பக்தி என்னும் கட்டுக்குள் அகப்பட்டு நிலைப்பவன் நீ அன்றோ? தமிழில் 'அ' என்னும் எழுத்தை (இது சிவத்தைக் குறிக்கும் என்று) ஏழையாகிய எனக்கு உபதேசித்த முக்திக்கு வித்தே, வலிய போரில் தலையிட்டு, எப்போதும் அழிந்து போகாத சூரனையும் அவன் குடும்பத்தையும் அரிந்து தள்ளின கோபம் கொண்ட வேலை ஆயுதமாகக் கொண்டவனே, (சூரனாகிய மாமரத்திலிருந்து) ஒரு தச்சனைப்* போல மயிலையும் சேவலையும் வரும்படி அதனைப் பிளந்த சித்த மூர்த்தியே, குறப் பெண்ணாகிய வள்ளியின் திருவடியைப் படிந்து வணங்கி, அவளுக்குக் கண் போல இனியனாகி, (அவள் இருக்கும் இடத்துக்குப்) போய் அவளை மணந்து, தவறுதல் இன்றி இந்தக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளைக் கொண்ட இந்த உலகில் சிறந்த பெயருடன் விளங்கும் தச்சூர் என்னும் ஊர் வடக்கே அமைந்துள்ள வழியில் (இப்போது ஆண்டார் குப்பம் என வழங்கப்படும் தலத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே. 
* எக்காலும் அழியாத வரத்தைப் பெற்று சூரன் மாமரமாக போருக்கு வந்தான். அத்தகைய மாமரத்தை முருக வேள், வேலால் இரு கூறுகளாகப் பிளந்தார். அந்த மரத்துண்டுகளைக் கொண்டு ஒரு தச்சனைப் போல் மயில், சேவல் என்னும் உருவங்களை ஆக்கினார்.
** தச்சூர் வடக்காகும் திசையில் ஆண்டார்குப்பம் என்ற பிரபல முருகத்தலம் சென்னைக்கு வடக்கே உள்ள பொன்னேரி ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.
பாடல் 733 - திருக்கோவலு஡ர் 
ராகம் - ....; தாளம் -
தான தானன தானன, தான தானன தானன
     தான தானன தானன ...... தனதான
பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ
     பாவை யாரிள நீரன ...... முலையாலும் 
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை
     பார காரன வார்குழ ...... லதனாலுஞ் 
சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித
     சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ் 
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு
     சார மாயதி லேயுற ...... லொழிவேனோ 
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி
     யாதி காணரி தாகிய ...... பரமேச 
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர
     னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத 
கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி
     கோடி யாகம மாவொலி ...... மிகவீறும் 
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத
     கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.
பாவச் செயல் செய்கின்ற விலைமாதர்கள், வீண் பொழுது போக்குபவர்கள், செருக்கு உடைய மாதர்களின் இளநீர் போன்ற மார்பகத்தாலும், கண் என்னும் மிகுந்த கூர்மையான வேலாலும், சிறந்த ரத்தினம் நிறைந்த குண்டலங்களாலும், அடர்ந்த மேகத்துக்கு ஒப்பான நீண்ட கூந்தலாலும், கொல்லுங் குணம் கொண்டுள்ளதும், செவ்விய இலவு போன்றதும் ஆன, அமுதம் நிறைந்துள்ள வாயிதழாலும், இனிமை தோன்றும் புன்சிரிப்பாலும், இதம் தரும் நிலவு போன்ற முகத்தாலும், எப்போதும் அடியேனுடைய துன்பங்கள் மிக அதிகமாக, காம மயக்கப் புத்தியே மிகுந்த இனிமை தருவதாய் நம்பி, அத்தகைய புத்தியின் வழியிலே பொருந்துதலை நான் விலக்க மாட்டேனோ? ஆக வேண்டியவற்றை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களின் முதல்வரும், மூலப் பரமரும், திருமால் முதலிய தேவர்களும் காண்பதற்கு அரியவருமான பரமேஸ்வரருமாகிய ஆதி மூர்த்தியார் பெற்றருளிய முருகேசனே, திருமாலுக்கு மருகனாகிய ஈசனே, ஆதி இல்லாதவனே, தேவர்கள் யாவரும் பணிகின்ற பாதனே, சிறப்பாக மறையோர் வேதங்கள் ஓதும் ஓசை வெள்ளமும், திருவிழாக்களின் ஒலியும், கோடிக் கணக்கான ஆகமங்களின் பேரொலியும் மிக்கு எழுகின்ற திருக்கோவலூர்* என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் வீரனே, வேல் என்னும் கூரிய ஆயுதத்தை உடையவனே, வள்ளி தேவயானையோடு வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருக்கோவலூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கோட்டைக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.
பாடல் 734 - தேவனூர் 
ராகம் - நாட்டகுறிஞ்சி 
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
     தான தான தந்த தந்த ...... தனதான
ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்
     ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும் 
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற
     ஆரணாக மங்க டந்த ...... கலையான 
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி
     யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய் 
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி
     யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ 
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க
     வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை 
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து
     வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய 
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
     தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே 
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
மொத்தம் தொண்ணூற்றாறு (6+6+5+5+6+6+5+5+6+6+5+5+24+6= 96) ஆகிய துன்பங்களுக்கு காரணமான தத்துவங்களுக்கும் % வேறுபட்டதாக விளங்குகின்றதும், வேதாகமங்களைக் கடந்ததும், உபதேசக் கலையாகிய சித்தாந்தத்தால் கூட கூறுதற்கு ஒண்ணாததும், பெரும் தெய்வநிலையிலிருக்கும் நற்பொருளை ஏது (காரணம்) வேறு சொல்வதற்கு இல்லாமல் ஒப்பற்ற தானேயாக நின்று, மற்ற எல்லாமாகவும் விளங்கி, மனம் கடந்ததான மெளன இன்ப முக்தியை அடைந்து, சிந்தை ஒருமைப்பட்டு ஒடுக்கமுற்று யான் ஆசைகள் யாவும் அடங்கும் நிலையை என்று பெறுவேனோ? பகைமை பேசி வந்து எதிர்த்த சூரர் சேனை அழிய, கப்பல்கள் செல்லும் கடலினைக் கோபித்ததும், வேகமும் கோபமும் கொண்டதும், வெற்றி வாகையைச் சூடியதுமான வேலினை ஏந்தியவனே, கொன்றைமாலை, தும்பைமாலை, வில்வக் கொழுந்து, இளம் பிறைச் சந்திரன், விஷம் நிறைந்த, வாய் பிளந்த, கோபம் மிகுந்த பாம்பு, திருநீறு, கங்கை, யாவையும் சடையில் வைத்த நம் தலைவர் சிவபிரானின் குருநாதனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அனைத்துத் தேவர்களும் ஒன்று சேர்ந்து பூமியிலே வந்து வணங்கும் தேவனூர்** சிறக்க வந்த பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
பாடல் 735 - தேவனூர் 
ராகம் - வலஜி 
தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
     தான தான தந்த தந்த ...... தனதான
தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து
     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் 
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று
     தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை 
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து
     மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் 
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்
     ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ 
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க
     பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி 
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு
     பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே 
சேர வேம ணந்த நம்ப ¡£ச னாரி டஞ்சி றந்த
     சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே 
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு
     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.
தாரகாசுரன் நிலை பெயர்ந்து வீழ்ந்து இறக்க, வேருடன் பறிபட்டு மேலான மேருமலையும் நடுக்கம் கொள்ள, முற்றிய மீன்களைக் கொண்ட அழகும் ஓசையும் உடைய சமுத்திரம் கலக்கமுற்று பெரும் தீயில் பட, அன்று கூரிய வேலினைச் செலுத்திய கடம்பனே என்றும், மதநீர் ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள பெருந்தலை கொண்டதுமான மலைபோன்ற ஐராவதம் என்ற யானை மீது அமர்ந்த தேவயானை என்னும் மானைப் போன்றவளும், வள்ளிமலை என்ற குன்றத்தில் இருந்த மான் போன்ற வேடப்பெண் வள்ளியும், இருவரும் ஆசை கொள்ளும் நண்பனே என்றும், சிறந்த மயில்வாகனனே என்றும், என் ஆசை தீர என்று மனம் ஒருநிலையில் நின்று புகழ்வேனோ? (பார்வதி தேவியின்) பாரமான மார்பின் தழும்பை உடையவர், செம்பொன் போன்ற திருமேனியாளர், கங்கை நதி, வெண்ணிறத்துக் கபால மாலை, கொன்றை, தும்பை, சிறுதாளி என்னும் பூக்கள், பாரமான பாம்புகள், நொச்சிப்பூ இவற்றை மாலையாகப் பூண்டவர், எலும்பு, அடம்பு என்ற மலர், கருங்குவளை, வில்வம், கரந்தை, அறுகம்புல் இவற்றோடு சேர்ந்து விளங்கி மணக்கும் பெருமான், ஈசனார் ஆகிய சிவனின் இடது பாகத்தில் சிறந்து விளங்கும் குளிர்ந்த தாமரையில் அமரும் மாது பார்வதி தேவியின் பெருஞ் செல்வமே, தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி பூமியில் வந்து வணங்கும் தேவனூருக்கு விளக்கம் தர வந்த பெருமாளே. 
* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
பாடல் 736 - தேவனூர் 
ராகம் - மாண்ட் 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தான தானன தனனா தனதன
     தான தானன தனனா தனதன
          தான தானன தனனா தனதன ...... தந்ததான
காணொ ணாதது உருவோ டருவது
     பேசொ ணாதது உரையே தருவது
          காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக் 
காய பாசம தனிலே யுறைவது
     மாய மாயுட லறியா வகையது
          காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப் 
பேணொ ணாதது வெளியே யொளியது
     மாய னாரய னறியா வகையது
          பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப் 
பேரு மாய்கலை யறிவாய் துரியவ
     தீத மானது வினையேன் முடிதவ
          பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே 
வீணொ ணாதென அமையா தசுரரை
     நூறி யேயுயிர் நமனீ கொளுவென
          வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே 
வேத நான்முக மறையோ னொடும்விளை
     யாடி யேகுடு மியிலே கரமொடு
          வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே 
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
     மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
          சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே 
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
     ஞான யோகிக ளுளமே யுறைதரு
          தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.
கண்களால் காண்பதற்கு முடியாததும், உருவமும் அருவமுமாக இருப்பதும், பேசுதற்கு முடியாததும், பலவித விளக்கங்களுக்கும் இடம் தருவதும், காணப்படும் நான்கு வேதங்களுக்கும் முடிவான பொருளாய் நிறைந்து நிற்பதும், ஐம்பூதங்களினால் ஆன இந்த உடம்பின் மேல் உள்ள பாசத்தில் நிலைத்து நிற்பதும், மாயப் பொருளாக இப்பெரும் உடலால் அறியமுடியாத வகையில் இருப்பதும், சா£ரத்தை உடைய மனிதர்கள் எதிரே அவர்களைப் போலவே மனித உருக்கொண்டு வந்து பேசினாலும், இன்னாரென அறிந்து போற்ற முடியாததும், ஆகாய வெளியிலே ஒளிப்பிழம்பாகத் திகழ்வதும், திருமால், பிரம்மா இவர்களால் அறியமுடியாத வகையில் இருப்பதும், வேற்றுமை, ஒற்றுமை என்ற தன்மைகளோடு உலக ¡£தியாக வளர்வதும், பீடம், லிங்கம் (சக்தி - சிவம்) என்ற பேருடையதாயும், நூல்களின் சாரமாகவும், யோகியரின் உயர் நிலைக்கும் அப்பாற்பட்டதும், நல்வினையால் என் முடிந்த தவத்தின் பெரும்பயனானதும், திருவருள் நிறைவாக விளங்குகின்றதும், இந்த அத்தனையும் பொருந்தி விளங்குபவன் நீ ஒருவன்தான். வீணான காரியம் கூடாதென விலக்கி அடங்காத அசுரரை பொடியாக்கி, அவர்கள் உயிரை யமனிடம் நீ கொள்வாயாக என்று வேலினைப் பாய்ச்சிய திருக்கரத்தனே, பார்வதியின் ஞானப்பால் அருந்திய அரசனே, வேதம் கற்ற நான்முக அந்தணன் பிரமனுடன் விளையாடி அவன் குடுமியிலே கையால் பலமாகக் குட்டிய வீரனே, குறவர் வாழும் வள்ளிமலையில், மிக்க உயரத்தில் கட்டப்பட்ட பரண் மீது இருந்த பெண் வள்ளியிடம் காதல் மயக்கம் தரும் திருவிளையாடல்கள் செய்து, அவளை அணைக்க விரும்பிய திருடனே, திருவருள் பாலிக்கும் கந்தக் கடவுளே, எவரும் தம்மிடம் நெருங்க முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும் மெய்ஞ்ஞான யோகிகளின் உள்ளத்தில் விளங்கி வீற்றிருப்பவனே, தேவனூரில் எழுந்தருளியுள்ள குமரனே, தேவர்களின் தம்பிரானே. 
* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.
பாடல் 737 - திருவதிகை 
ராகம் - .... ; தாளம் -
தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்
     தனதனனத் தனதனனத் ...... தனதான
பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
     பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல் 
பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
     படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர் 
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
     துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன் 
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
     சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே 
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
     கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா 
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
     கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே 
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
     செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித் 
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
     திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.
ரேகைகளோடு கூடிய, கயல் மீன் போன்ற கண்கள் குவியவும், குயிலையும் கிளியையும் ஒத்ததான பேசும் மொழி பதற்றத்துடன் வெளி வரவும், பவளத்தின் நிறம் கொண்ட வாயிதழ்கள் விளைவிக்கும் அமுது போன்ற ஊறலை உண்டும், ஒளி வீசும் முத்து மாலை அணிந்த, (சந்தனக்) கலவை பூண்ட, மார்பாகிய மலை அசைவு தரவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனது காமசாஸ்திரக் குப்பையை உணர்ந்துள்ள பொது மாதர்களின் பூக்கள் சொருகியுள்ள கூந்தல் சரியவும், தளர்ந்துள்ள சிறிய இடை துவளவும், ஆடை விலகவும், காம ஆசையை விளைவித்து உருகி எதிரே சொரியப்பட்ட பூக்களின் வாசனை பரந்துள்ள படுக்கையில் புகுந்து இன்பம் தரும் இனிமையான புணர்ச்சியிலே சுழலுகின்ற என் மனக் கவலையை நீக்கி அருள்வாயாக. கரிய நிறம் கொண்ட அசுரனாகிய ராவணனது மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அற்று விழ, வேகமாகச் சென்று அம்பைச் செலுத்திய ராமனின் (திருமாலின்) மருகனே, குமரேசனே, கயிலை மலைக்கு உரியவனாகிய சிவ பெருமானுடைய இடது பாகத்தில் உள்ள பார்வதி விருப்பத்துடன் (கொடுக்கக்) கருதிய (பால் அமுது ஊட்டவும்), பாடல்கள் நிறையப் பாடும் திறத்தைப் பெற்ற கீர்த்தியை உடைய திருஞான சம்பந்தப் புலவனே, திரண்ட கமுகு மரத்தின் உச்சியில் இடறியும், பல வாழைகளின் குலைகள் சிதறிடவும், நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அலைபாயவும், அலைகள் வீசி, திமிதிமி எனப் பறைகள் முழங்கவும், பெருகி வரும் நீருடைய கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமாளே. 
* திருவதிகை பண்ணுருட்டிக்கு கிழக்கே 2 மைலில் கெடிலநதிக் கரையில் உள்ளது.
பாடல் 738 - திருவதிகை 
ராகம் - ....; தாளம் -
தனன தானன தனதன தனதன
     தனன தானன தனதன தனதன
          தனன தானன தனதன தனதன ...... தனதான
விடமும் வேலன மலரன விழிகளு
     மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
          விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி 
மிகவு மாண்மையு மெழினல முடையவர்
     வினையு மாவியு முடனிரு வலையிடை
          வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா 
இடரு றாதுனை நினைபவர் துணைகொள
     இனிமை போலெழு பிறவியெ னுவரியி
          னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே 
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
     ககன பூபதி யிடர்கெட அருளிய
          இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே 
படரு மார்பினி லிருபது புயமதொ
     டரிய மாமணி முடியொளி ரொருபது
          படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய் 
பரவை யூடெரி பகழியை விடுபவர்
     பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
          பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே 
அடர வேவரு மசுரர்கள் குருதியை
     அரக ராவென அலகைகள் பலியுண
          அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா 
அமர ராதிய ரிடர்பட அடர்தரு
     கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
          அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.
விஷமும், வேலும் போன்றனவாகிய, மலரை ஒத்த கண்களும், ருசியைத் தரும் அமுதம் போல் இனிய பேச்சுக்களும், உற்சாகத்தால் வளர்ந்துள்ள இரு மார்பகங்களும் இன்பம் தருவனவாய்க் கொண்டு, மிக்க அகங்காரத்தையும் அழகு நலத்தையும் உடையவர்களின் பெரிய வலையில் என் முன்வினையும், உயிரும் ஒருசேர பகிரங்கமாகச் சிக்கும்படி (அந்த வலையை) வீசுகின்ற விஷமிகளாகிய வேசிகளுடன் சேர்ந்து துன்பப்படாமல், உன்னைத் தியானிப்பவர்களின் துணையைப் பெறுதற்கு, இன்பம் போலக் காணப்படும் ஏழு பிறவிகள் என்ற கடலிடையே அகப்பட்டு அழியாமல், இனியேனும் இரு வினை (நல்வினை, தீவினை) என்கின்ற இழிந்த நிலையில் அழியாமல், தேவர்கள், முனிவர்கள், விண்ணுலக அரசனான இந்திரனின் துன்பங்கள் தொலைய அருள் புரிந்த இறைவனே, கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக. பரவி அகன்றுள்ள மார்பின் பக்கத்தில் உள்ள (ராவணனது) இருபது புயங்களும், அருமையான சிறந்த ரத்தினக் கி¡£டங்கள் விளங்கும் ஒப்பற்ற பத்து தலைகளும் பூமியில் அறுந்து விழும்படி நிகரற்ற அம்பைச் செலுத்தியவரும், சந்தர்ப்பத்தை ஆராய்ந்தறிந்து கடலின் மீது நெருப்பு வீசும் அம்பை விடுத்தவரும், தம்மைப் போற்றும் அடியவர்களின் வினைகள் கெட அருள் பாலித்து, பரந்துள்ள திருப்பாற்கடலில் பாம்பாகிய ஆதிசேஷனின் மேல் துயில்பவருமான திருமாலின் மருகனே, நெருங்கி வந்த அசுரர்களின் ரத்தத்தை அரகரா என்று கூவி பேய்கள் உணவாக உண்ண, அலைகள் வீசும் கடலும் கூச்சலிட, சண்டை செய்த மயில் வீரனே, தேவர்கள் முதலானோர் துன்பப்படும்படி நெருங்கி எதிர்த்த கொடுமையான அசுரர்கள் (வாழ்ந்திருந்த) திரிபுரங்களை எரித்த திருவதிகை** என்னும் பெரிய ஊரில் வீற்றிருப்பவனே, (இந்திரன் மனைவி) சசியின் மகளான தேவயானையின் பெருமாளே. 
* 'இசையில் நாள்தொறும்' என்ற சொற்கள் அன்வயப் படுத்தப்பட்டுள்ளன.
** சிவபெருமான் திரிபுரத்தை எரித்த தலம் திருவதிகை. இது கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 2 மைலுக்குள் உள்ளது.
பாடல் 739 - திருவர்முர் 
ராகம் - ....; தாளம் -
தான தனன தனத்தந் ...... தனதான
சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே 
சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே 
ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே 
ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான் 
மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர் 
வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா 
காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே 
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
குளிர்ந்த நிலவு வீசுகின்ற நெருப்பாலும், கோபத்துடன் மன்மதன் வளைக்கின்ற வில்லினாலும், அலைகளை வீசி அலைக்கின்ற கடலினாலும், ஊழிக்காலம் போல நீடித்துள்ள இந்த இரவை எப்படி நான் கழிப்பேன்? மாதரசி திலகவதியாரின்* புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில் வாழுகின்ற குமரேசனே, மயில் மீது வீற்றிருக்கும் குமரேசனே, அன்புள்ள அடியார்களின் கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே, யமனுடைய முதுகைப் பிளக்கும்படி அடித்து விரட்டும் பெருமாளே. 
* திலகவதியார் அப்பரின் தமக்கை. திருவாமூரில் வாழ்ந்து, அப்பரை சமணத்திலிருந்து சைவத்துக்கு மீட்டார். திருவாமூர் பண்ருட்டியிலிருந்து 5 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், அலைகடல், இரவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.
பாடல் 740 - வடுகூர் 
ராகம் - ரேவதி 
தாளம் - ஆதி
தனதன தனனா தனதன தனனா
     தனதன தனனா ...... தனதான
அரியய னறியா தவரெரி புரமூ
     ணதுபுக நகையே ...... வியநாதர் 
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ
     றழலையு மழுநேர் ...... பிடிநாதர் 
வரைமக ளொருகூ றுடையவர் மதனா
     கமும்விழ விழியே ...... வியநாதர் 
மனமகிழ் குமரா எனவுன திருதாள்
     மலரடி தொழுமா ...... றருள்வாயே 
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்
     அவனியை வலமாய் ...... வருவோனே 
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்
     அயில்தனை விசையாய் ...... விடுவோனே 
வரிசையொ டொருமா தினைதரு வனமே
     மருவியொர் குறமா ...... தணைவேடா 
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்
     வருதவ முநிவோர் ...... பெருமாளே.
திருமாலும் பிரமனும் அடி முடி காணமுடியாதவர், நெருப்பு திரிபுரத்திலும் புகுமாறு சிரித்தே எரித்த தலைவர், விளங்கும் சடை மீது கங்கை என்னும் ஒப்பற்ற மாதினைக் கொண்டு அவளது தலைவராகவும் இருப்பவர், சீறிவந்த நெருப்பையும் மழு ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்திய தலைவர், மலைமகளாம் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர், மன்மதனின் உடல் சாம்பலாக விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர், (அத்தகைய சிவபிரான்) மனமகிழும் குமரனே, என்று கூறி உன் இரண்டு தாளாகிய மலர்ப் பாதங்களை வணங்கும்படி அருள் தருவாயாக. அரிய கிரெளஞ்சமலை இரு பிளவாகும்படிச் செய்து, ஒப்பற்ற மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவனே, தேவர்களின் பகைவராம் பெரும் அசுரர்களின் தலைகள் மீது வேலை வேகமாய் எறிந்தவனே, வரிசையாக ஒப்பற்ற சிறந்த தினைச் செடிகள் வளரும் காட்டுக்குச் சென்று, ஓர் குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே, குன்று கண்ட இடங்களில் குதூகலிப்பவனே, மனம் பொருந்தி நல்ல வடுகூர்* என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின் பெருமாளே. 
* வடுகூர் பாண்டிச்சேரிக்கு 12 மைல் மேற்கே உள்ளது. அதற்கு ஆண்டார் கோயில் என்ற பெயரும் உண்டு.
பாடல் 741 - திருத்துறையூர் 
ராகம் - ....; தாளம் -
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
     தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்
     யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர 
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை
     யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள் 
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை
     கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங் 
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர
     கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ 
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
     பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி 
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
     போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா 
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
     சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா 
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
     சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.
முத்து மாலை அணிந்துள்ள அந்த மார்பின் பாரங்களை புடைவையால் மூடி, பலரும் வியந்து பார்க்க கையிலே யாழை வைத்து இசை நிரம்பப் பாடி, கூந்தலும் உடையும் சரிய, உடலில் பன்னீருடன் புனுகு கலந்து பாய, (காதில் அணிந்துள்ள) குண்டலங்கள் ஆடவும், முயற்சி செய்பவர்கள். பொட்டு அணிந்துள்ள சந்திரன் போன்ற முகத்தில் வாளாயுதம், கூர்மையான அம்பு, வேல் (இவை போன்ற) விழிகள் கயல் மீனைப் போல் சுழற்றுபவர்கள். சர்க்கரையை ஒத்த இனிய மொழிகள் வரும் கொவ்வைக் கனியை ஒத்த வாயில் பற்கள் சூரிய சந்திரன் போல் ஒளி வீசும். அழகிய குயில் போலப் பேசுபவர்கள். பட்டுப் புடைவயை நூல் போல் நுண்ணிய இடையில் அணிந்தவர்கள். சித்திரம் போல கோபச் செயல்கள் நிரம்பியுள்ள பித்துப் பிடித்தவர்களாகிய பொது மகளிர்களின் தொடர்பு எனக்கு வேண்டுமோ? நிறைந்துள்ள மார்பகப் பாரத்தையும், சடையையும், வேத சொரூபக் கூந்தலையும் உடையவள், பக்தர்கள் பூஜையை ஏற்றுக் கொள்ளுபவள், பத்தினி, சிவகாமி, பூமி, கடல், அரி, அயன், உருத்திரன் ஆகிய மூவர்க்கும் முன்னவள், பத்திர காளி ஆகிய பார்வதி அணைந்து சேரும் இன்ப அனுபவம் உடைய சிவபெருமானுக்கும் உபதேசித்து அருளிய குருநாதனே, சூரனும், கிரெளஞ்ச மலையும், கடலும் தவிடு பொடிபட, பொருத அசுரர்கள் மெலிந்து அழிய, அயற்சி இல்லாத வீரம் உள்ள ஒளி வீசும் வேலை விட்டுச் செலுத்திய வெற்றி வீரனே, மயில் போன்ற நடை உடையவள், அழகிய ஒளியுடைய குறப் பெண்ணாகிய வள்ளி என்கின்ற முத்துப்போன்ற தேவியுடன் ஒளி வீசும் துறையூர்* என்ற தலத்தை விரும்பிய பெருமாளே. 
* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது.
பாடல் 742 - திருத்துறையூர் 
ராகம் - ....; தாளம் -
தனதான தனத்தன தானன
     தனதான தனத்தன தானன
          தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய விதத்துரு வாகிய
     திறமேப ழகப்படு சாதக
          விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி 
வினையான கருக்குழி யாமெனு
     மடையாள முளத்தினின் மேவினும்
          விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல் 
தகவாம தெனைப்பிடி யாமிடை
     கயிறாலு மிறுக்கிம காகட
          சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச் 
சதிகாரர் விடக்கதி லேதிரள்
     புழுவாக நெளித்தெரி யேபெறு
          மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ 
உககால நெருப்பதி லேபுகை
     யெழவேகு முறைப்படு பாவனை
          யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி 
உலவாந ரகுக்கிரை யாமவர்
     பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
          உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித் 
தொகலாவ தெனக்கினி தானற
     வளமாக அருட்பத மாமலர்
          துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா 
துதிமாத வர்சித்தர்ம கேசுரர்
     அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு
          துறையூர்ந கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.
எண்ணிலாத மாய வகைகளால் உடலாக உருவெடுக்கும் இயல்பிலே பழகப்படுகின்ற பிறப்பு வகைகள் ஏழு கடல்களைக் காட்டிலும் பெரிதாகும். அத்தகைய பிறப்பில் சுழன்று வினைக்கு ஈடான கருக்குழி சேரும் என்கின்ற அறிகுறியானது என் உள்ளத்தில் பதிந்து இருந்த போதிலும், விதியை யாராலும் விலக்க முடியாது என்கின்ற மூத்தோர் வாசகம் பொருத்தமானது. அந்த விதி என்னைப் பிடித்து நெருங்கிய கயிற்றால் அழுத்தமாகக் கட்டி பெரிய உடம்பிலுள்ள சாக்கடை வழியே உருவம் அடைந்து (குழந்தையாய்) வெளிவர, மோசக்காரர்களாகிய ஐம்புலன்களின் சேட்டைகளுடன், மாமிசத்தில் திரண்டு புழுப் போல நெளிவுண்டு, நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல உடலை உருக்குகின்ற வேதனைகளையும் ஒழிக்க மாட்டேனோ? யுகாந்த காலத்தில் வடவாமுகா அக்னி நெருப்பில் புகை உண்டாகி வேகின்ற மாதிரி கோபக் குறிகளை (இரக்க வந்தவரிடம்) காட்டி, உலையில் புடம் வைப்பது போல் உள்ளம் கொதிப்பைப் பெற்று வெளிவருவதால், அழியாத நரகத்துக்கு இரையாகுபவர்களாகிய பலருடைய வீட்டு வாசலுக்குப் போய் அவர்கள் எதிரே நின்று, மனம் வெட்கப்பட்டு, மிகவும் குழைந்த மனத்தினனாய் அவர்களுடன் உறவு பூண்டு சேர்தல் எனக்கு இனியேனும் ஒழிவதற்காகவும், நான் செப்பம் அடையவும், உனது திருவருள் பெருகும் சிறந்த பாத மலர்களை எனக்குத் துணையாக, நான் தொழுவதற்குத் தருவாயாக, மயிலையும் வேலையும் உடையவனே, துதிக்கின்ற பெரிய தவசிகளும், சித்தர்களும், சிவன், திருமால், பிரமன் இவர்களுக்கு எல்லாம் திருவருள் பாலிக்கும், திருத்துறையூர்* என்னும் ஊரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது.
பாடல் 743 - திருநாவலு஡ர் 
ராகம் - ....; தாளம் -
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான
கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
     கோரமதன் விட்ட ...... கணையாலே 
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
     கோகிலமி குத்த ...... குரலாலே 
ஆலமென விட்டு வீசுகலை பற்றி
     ஆரழலி றைக்கு ...... நிலவாலே 
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
     மாசைகொட ணைக்க ...... வரவேணும் 
நாலுமறை கற்ற நான்முகனு தித்த
     நாரணனு மெச்சு ...... மருகோனே 
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
     நாகமற விட்ட ...... மயில்வீரா 
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
     சீரணி தனத்தி ...... லணைவோனே 
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
     தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.
அழகியவனும், அனங்கனாக உருவத்தை மறைத்து வைத்திருப்பவனும், மாலைப் பொழுதில் வந்து சேர்ந்துள்ளவனும், கொடியவனும் ஆன மன்மதன் செலுத்தும் புஷ்ப பாணங்களினாலும், குற்றமற்ற நல்ல செழிப்பான மரங்கள் நிறைந்த சோலையில் உள்ள குயிலின் பலமான ஓசையினாலும், விஷக் கதிர்களை எறிந்து வீசும் ஒளி மூலமாக மிகுத்த நெருப்பை எங்கும் அள்ளி இறைக்கும் நிலவினாலும், ஆவியானது தளர்ச்சியுற்று வாடுகின்ற என்னை நாள்தோறும் ஆசையுடனே அணைக்க நீ வரவேண்டும். நான்கு வேதங்களையும் கற்ற பிரமனைத் தோற்றுவித்த நாரணனாகிய திருமால் மெச்சிடும் மருகனே, புலவர்கள் மதிக்கும்படியாக வேலாயுதத்தை எடுத்து கிரெளஞ்ச மலையைப் பொடிபடச் செலுத்திய மயில் வீரனே, சேல் மீன் போன்ற கண்ணை உடைய வேடுவப் பெண் வள்ளியின் சீரும் அழகும் கொண்ட மார்பை அணைவோனே, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துள்ள திருநாவலூரில்* வீற்றிருக்கும், தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே. 
* திருநாவலூர் இப்போது திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு 11 மைல் மேற்கே உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக தன்னைக் கற்பனை செய்து பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், சோலைக் குயில், நெருப்பை வீசும் நிலவு - வை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
பாடல் 745 - திருப்பாதிரிப்புலியூர் 
ராகம் - பைரவி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன தனதன தத்தன
          தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான
பலபல தத்துவ மதனையெ ரித்திருள்
     பரையர ணப்படர் வடவன லுக்கிரை
          படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் 
பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு
     பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு
          பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே 
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத
     வொலிமலி யத்திரு நடனமி யற்றிய
          கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் 
கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ
     டனகச கத்துவம் வருதலு மிப்படி
          கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே 
புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை
     நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர
          புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே 
புனமலை யிற்குற மகளய லுற்றொரு
     கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய
          புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா 
மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை
     கிழவிய றச்சுக குமரித கப்பனை
          மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே 
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய
     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
          மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.
பலபல தத்துவ சேஷ்டைகளையும், அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி, நடன ஜோதியை பரந்த ஆகாச வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில் சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு வழிகளையும் மாற்றி அடைத்து, ஒப்பற்ற சூரிய ஜோதியின் பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ மயமாய் முற்றும் பரந்த பர வெளியில், கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின் ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த சுகானந்தக் கடலில் முழுகி, பார்வதி தேவி மின்னலை ஒத்த சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை எனக்குத் தந்தருளுக. இழிந்தவர்களும், திருநீற்றை விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய (திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே, தினைப் புனம் உள்ள வள்ளி மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய மார்பனே, மேரு மலையை வில்லாகப் பிடித்த சிவ பெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள், தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷ¡யாணி என்ற) உமாதேவி பெற்றருளிய முருகோனே, மகிழ்ச்சி தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூர்** என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** திருவெண்ணெய்நல்லூர் சாலை ரயில் நிலையத்துக்கு வடக்கே 4 மைலிலும், பண்ணுருட்டிக்கு மேற்கே 15 மைலிலும் உள்ளது.
பாடல் 745 - திருப்பாதிரிப்புலியூர் 
ராகம் - பைரவி 
தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தனன தனந்த தானன
     தனதன தனன தனந்த தானன
          தனதன தனன தனந்த தானன ...... தனதான
நிணமொடு குருதி நரம்பு மாறிய
     தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
          நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம் 
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
     நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
          நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும் 
உணர்விலி செபமுத லொன்று தானிலி
     நிறையிலி முறையிலி யன்பு தானிலி
          உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன் 
ஒருதிரு மரகத துங்க மாமிசை
     யறுமுக மொளிவிட வந்து நான்மறை
          யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே 
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி
          பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப் 
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
     யுறுசிலை வளைய வலிந்து நாடிய
          புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே 
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
     குலகிரி யடைய இடிந்து தூளெழ
          அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே 
அமலைமு னரிய தவஞ்செய் பாடல
     வளநகர் மருவி யமர்ந்த தேசிக
          அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.
மாமிசத்தோடு ரத்தம், நரம்பு இவை கலந்துள்ள சதை, குடல், நெருங்கியுள்ள எலும்பு, தோல் இவையாவும் வரிசை வரிசையாக நிறைந்துள்ள உடம்பு, நோய் உண்டாகும் பழைய உடல், வயதுக்குத் தக்கபடி வெவ்வேறு நிலைகளில் வடிவமும், மாசுக்களும் உண்டாகக் கூடிய இந்த உடல், ஒன்பது தொளைகள் உடைய சிறு குடிலாகிய இந்த உடலில் உயிர் இருக்கும் பொழுதே வேண்டிய முயற்சிகளைச் செய்து சிறந்த தவங்களை உய்யும் பொருட்டு உணரக்கூடிய உணர்ச்சி இல்லாதவன் யான். ஜெபம் முதலிய ஒரு நல்ல ஒழுக்கமும் இல்லாதவன் யான். ஆண்மைக் குணமோ, தர்ம நெறியோ, அன்போ இல்லாதவன் யான். மேன்மையற்றவன் யான். என்றாலும் என் நெஞ்சு நினைவு என்பதை இழக்கும் முன்னரே, ஒப்பற்ற அழகிய பச்சை நிறமுள்ள பரிசுத்த மயில் என்னும் குதிரை மேல் உனது ஆறு திருமுகங்களும் பிரகாசிக்க என் எதிரில் வந்து நான்கு வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றை எனக்கு விளங்கும்படி நீ உபதேசித்து அருள்புரிவாயாக. கடலில் கலந்து படிந்து எழுகின்ற சூரியன் பயந்து விலகும் மதில்களை உடைய இலங்கையில் வாழ்ந்த அரசன் ராவணனுடைய பொன்மயமான ரத்ன மகுடங்கள் தரித்த தலைகள் ஒரு பத்தும் நிலை பெயர்ந்து, பூமி மீது உருளும்படி கோபித்து, கூர்மையான அம்புகள் பொருந்திய வில்லை வளைத்து, முயன்று நாடிச்சென்ற மேகவண்ணன், மிக்க வீரம் வாய்ந்த ஹரி, விஷ்ணு, திருமால் எனப் பெயர் கொண்டவனின் அழகிய மருகனே, அழகுள்ள கயிலைமலை நடுநடுங்க, ஏழு குலகிரிகள்* எல்லாமுமாய் இடிந்து தூள்பறக்க, அலைவீசும் கடல் கொந்தளித்துக் குழம்ப, வேலினைச் செலுத்தும் முருகனே, தேவி முன்பு அரிய தவம் செய்த பாடலவளநகராகிய திருப்பாதிரிப்புலியூரில்** பொருந்தி வீற்றிருக்கும் குரு மூர்த்தியே, ஆறுமுகனே, குறமகள் வள்ளியின் அன்பனே, பெரிய தவசிகளின் பெருமாளே. 
* ஏழு குலகிரிகள்: இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.
** திருப்பாதிரிப்புலியூர் கூடலூருக்கு வடக்கே 3 மைலில் கெடில நதிக்கரையில் உள்ளது.
பாடல் 746 - திருமாணிகுழி 
ராகம் - ....; தாளம் -
தனத்த தானன தானான தானன
     தனத்த தானன தானான தானன
          தனத்த தானன தானான தானன ...... தந்ததான
மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக
     நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி
          மணத்த வார்குழல் மாமாத ராரிரு ...... கொங்கைமூழ்கி 
மதித்த பூதர மாமாம னோலயர்
     செருக்கி மேல்விழ நாடோறு மேமிக
          வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ...... பண்டநாயேன் 
பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொ டேகலை
          பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும் 
பணக்க லாபமும் வேலொடு சேவலும்
     வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
          படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ 
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி
          கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் ...... வஞ்சவேலா 
களித்த பேய்கண மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்
          கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா 
குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்
          குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங் 
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
          குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.
சந்திரனுக்கு ஒப்பானது என்று சொல்லக் கூடிய ஒளி பொருந்திய முகம், சிறந்த பெரிய கங்கை ஆற்றில் உலாவும் சேல் மீன் என்று சொல்லும்படியான கண்கள், நறு மணம் வீசும் நீண்ட கூந்தல் இவைகள் உடைய, அழகிய (விலை) மாதர்களுடைய இரண்டு மார்பகங்களில் முழுகி, மதிப்பு வைத்திருந்த மலைகளே இவை ஆகும் என்று அவைகளிலே மனம் வசப்பட்டவனாய், பெருமிதம் கொண்டு அவற்றின் மேல் விழுந்து தினமும், மிக நன்றாக வடித்தெடுக்கப்பட்ட தேன் போன்ற மொழியும் வாயிதழ் ஊறலுமே அனுபவிக்கின்ற ஒரு பொருளாகிய நாய் போன்ற அடியேன், சிலம்புகள் சூழ்ந்துள்ள சீரான பாதங்களாகிய சிறந்த மலர்களும், ஆயுதங்களில் ஒன்றாகப் பொருந்திய உடைவாளும், ஒளி கொண்ட பருத்த தோள்களும், பன்னிரண்டு தோடுகளாகிய காதணிகள் விளங்கும் செவிகளும், பாம்பை அடக்கும் மயிலும், வேலும், சேவலும், கூர்மையான சூலாயுதமும், ஒளி வீசும் நீண்ட வில்லைப் பிடித்த வெற்றியையும் விரும்பித் தியானிக்காது, பாழான எண்ணங்களில் நான் மயக்கம் கொள்ளலாமோ? கொதித்து மேல் எழுந்து வருகின்ற பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள சேனைகளைப் பொடியாக்கியும், குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் (இவைகளைக்) கலக்கியும், ஊர்களையும், நகரங்களையும் நெருப்பு றி எரியும்படியும் செலுத்திய வஞ்சம் கொண்ட வேலனே, மகிழ்ச்சி கொண்ட பேய்க் கூட்டங்களும், பெரிய காளியும், பெருங் கழுகுகளும் சேர்ந்து, ரணகளத்தில் திரண்டு கிடக்கும் பிணங்களின் மேல் விழுந்து மூளைகளைக் கடித்துத் தின்ற பூதங்களோடு பாடி ஆடுதலைப் பார்த்த வீரனே, குரங்குகள் குதித்து மேலே உள்ள குலைகளைக் குலைத்து, நீண்ட கமுக மரங்களிடையே ஊடாடுவதால் (அக் கமுகங் குலைகள் அறுபட்டு) வாழைக் குலைகள் மேல் விழும்படியான அழகு நிறைந்த செழுமையும், பெண்கள் குளிக்கும் குளத்தில் ஊறிய (மலர்களது) தேன்களின் சாரத்தையும், சிறந்த மகரந்தங்களையும் பருகி உலாவிய சேல் மீன்களும் நிறைந்த திருமாமணிக்குழி* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே. 
* திருமாணிக்குழி என்ற தலம் திருப்பாதிரிப்புலியூர் தலத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 747 - திருவேட்களம் 
ராகம் - பெஹாக் 
தாளம் - திஸ்ர த்ருபுடை - 7
தனனத்தன தாத்தன தானன
     தனனத்தன தாத்தன தானன
          தனனத்தன தாத்தன தானன ......தனதான
சதுரத்தரை நோக்கிய பூவொடு
     கதிரொத்திட ஆக்கிய கோளகை
          தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி 
சரணக்கழல் காட்டியெ னாணவ
     மலமற்றிட வாட்டிய ஆறிரு
          சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங் 
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு
     மயிலிற்புற நோக்கிய னாமென
          கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக் 
கனகத்தினு நோக்கினி தாயடி
     யவர்முத்தமி ழாற்புக வேபர
          கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே 
சிதறத்தரை நாற்றிசை பூதர
     நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி
          சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே 
சிவபத்தினி கூற்றினை மோதிய
     பதசத்தினி மூத்தவி நாயகி
          செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா 
விதுரற்கும ராக்கொடி யானையும்
     விகடத்துற வாக்கிய மாதவன்
          விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே 
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய
     கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய
          விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.
நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்)* குளிர்ந்து தழைய, சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து, உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன். பூமி அதிர, நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ, கடல் ஒலி செய்து வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே, சிவனது பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில் படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே, விதுரனுக்கும், பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும், (மனம்) வேறுபடும்படியான பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான், அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே, வெளியிலே எட்டுத் திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை (இறுதியில் வென்று, அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க உலவிய (பெருமாளே), வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம்** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம்.
பாடல் 748 - திருவேட்களம் 
ராகம் - மனோலயம் 
தாளம் - ஆதி
தாத்தன தானன தாத்தன தானன
     தாத்தன தானன ...... தனதான
மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
     வாழ்க்கையை நீடென ...... மதியாமல் 
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
     மாப்பரி வேயெய்தி ...... அநுபோக 
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
     பாற்படு ஆடக ...... மதுதேடப் 
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
     பாற்கட லானென ...... வுழல்வேனோ 
சாத்திர மாறையு நீத்தம னோலய
     சாத்தியர் மேவிய ...... பதவேளே 
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
     தாட்பர னார்தரு...... குமரேசா 
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
     மீக்கமு தாமயில் ...... மணவாளா 
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
     வேட்கள மேவிய ...... பெருமாளே.
ஒரு சிறிய அளவு கூட வாக்குத் தவறாத மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதியாமல், மிருகங்கள் போன்ற மனிதர்கள் யாராயிருந்தாலும் ஏற்றுக்கொண்டு அவர்களோடு அனுபவிக்கும் துர்க்குணப் பொது மாதர்களிடம் மிக்க அன்பைப் பூண்டு, வேசையர்களை அனுபவிக்கும் பாத்திரம் இவன் என்று பிறர் ஏச, மூண்டு எழுகின்ற ஆசைகளில் ஈடுபட்டு, (வேசையர்க்குக் கொடுக்கப்) பொன்னைத் தேட பூமியிலுள்ள மூர்க்க லோபிகளையே எனது கவிகளில் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே இவன் என்று வீணுக்குப் புகழ்ந்து திரிவேனோ? ஆறு* சாஸ்திரங்களையும் கடந்து, மனம் லயித்து ஒடுக்கவல்ல சாமர்த்தியசாலிகள் போற்றும் திருவடிகளை உடைய வேளே, தாத்தரி தாகிட சேக் என்ற தாளத்துக்கு ஏற்ப சிறந்த நடனம் செய்யும் பாதங்களை உடைய நடராஜப் பெருமான் தந்த குமரேசனே, அம்புக் கூட்டங்களைச் சுமந்து திரியும் வேடர்களின் மிக்க அமுதைப் போன்ற, மயிலை ஒத்த, வள்ளியின் மணவாளனே, அறியப் படுவதான வேதங்களின் கோஷம் முழங்கும் அழகிய திருவேட்களத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆறு சாஸ்திரங்கள் பின்வருமாறு:(1) வேதாந்தம் (உபநிஷதம்)(2) வைசேஷிகம் (கணாதரால் ஸ்தாபிக்கப்பட்ட தர்க்க சாஸ்திரம்)(3) பாட்டம் (குமாரில பட்டரால் பிரசாரம் செய்யப்பட்ட வேதமே தெய்வம் என்ற சாஸ்திரம்)(4) ப்ரபாகரம் (ப்ரபகரன் என்பவரால் வேத வேதாந்தப் பொருட்களை ஆராயும் சாஸ்திரம்)(5) பூர்வ மீமாம்சை (வேதத்தின் கர்ம காண்டத்தை ஆராய ஜைமினி முநிவர் இயற்றிய சாஸ்திரம்)(6) உத்தர மீமாம்சை (வேதத்தின் பிற்பகுதியான ஞான காண்டத்தை ஆராய வியாசரால் எழுதப்பட்ட பிரம்ம சூத்திரம் முதலிய சாஸ்திரம்.
** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம்.
பாடல் 749 - திருநெல்வாயில் 
ராகம் - நாட்டை 
தாளம் - அங்கதாளம் - 8 
தகிட-1 1/2, தக-1, திமி-1 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனன தானன தானனாத் தனந்த
     தனன தானன தானனாத் தனந்த
          தனன தானன தானனாத் தனந்த ...... தனதான
அறிவி லாதவ ¡£னர்பேச் சிரண்டு
     பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
          ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர் 
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
     திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
          யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத 
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
     பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
          நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி 
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
     வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
          நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே 
நறிய வார்குழல் வானநாட் டரம்பை
     மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
          நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர 
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
     தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
          நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர 
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
     கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
          வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா 
மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
     மதியு லாவிய மாடமேற் படிந்த
          வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே.
அறிவு இல்லாதவர்கள், இழிவானவர்கள், இருவிதமான பேச்சு பேசும் நாவினை உடையவர்கள், கஞ்சர்கள், கெட்ட குணங்களையே மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள், பொது மகளிருக்கு நகைகளைப் புனைந்து பார்க்கும் அறிவிலிகள், அசடர்கள், பூமியில் வீணாகக் காலத்தைப் போக்கப் பிறந்து திரிகின்ற மனிதர்கள், பெண்கள் மீது காம இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர், நீதி நூல்களின் பயன் தெரியாது, நன்னெறியில் போகாதவர்கள், சூதாட்டத்தால் மற்றவர் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் - இத்தகையோரிடம் சென்று, நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி, நினைவு தேய்ந்து, பாழ்பட்டு, வாட்டம் அடைந்து, பார்வை மங்கி, வறுமை என்ற நெருப்பின்மேல் கிடந்து நெளியும் நீண்ட புழுப்போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டருள்வாயாக. நறுமணத்துடன் கூடிய நீண்ட கூந்தலை உடைய தேவநாட்டுப் பெண்கள் தங்கள் காதலர்களுடைய தோள்களை விரும்பித் தழுவி, சிரிப்புடனே ஏழு ஸ்வரங்களிலும்* பாடி மகிழ்ந்து குலவவும், நியாயம் இல்லாதவராய், கோபம் மிக்கவராய், அழிவுப்பாதையிலே செல்லும் அசுரர்களின் மனைவியர் தங்கள் கணவரின் தோள்களைப் பிரிந்து, தமது பிரிவாற்றாமையை அடக்க முடியாமல் அழுது, தங்கள் உடலைத் தாமே துன்புறுத்தி வருத்தமே பெருகவும், அலைகள் பொங்கும் ஆழ்கடலின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டு, கிளைகள் கோடிக்கணக்காய் கடல் மேல் விரிந்து வளர்ந்த மாமரமாய் நின்ற சூரன் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த வேலாயுதனே, பொருந்திய கரு மேகங்கள் கூட்டமாக எழுந்து, நிலவொளி வீசும் உயர்ந்த மாடங்களின் மீது படியும் தலமாம், வயல்கள் சூழ்ந்த திருநெல்வாயிலில்** அமர்ந்த பெருமாளே. 
* ஏழிசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என தமிழிசையில் முறையே வழங்கும் ஸப்த ஸ்வரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகும்.
** திருநெல்வாயில் சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 மைலில் உள்ள சிவபுரி என்ற தலம் ஆகும்.
பாடல் 750 - விருத்தாசலம் 
ராகம் - ...; தாளம் -
தனத்தானன தானன தானன
     தனத்தானன தானன தானன
          தனத்தானன தானன தானன ...... தனதான
குடத்தாமரை யாமென வேயிரு
     தனத்தார்மதி வாணுத லாரிருள்
          குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக் 
குலக்கார்மயி லாமென வேகயல்
     விழித்தார்கர மேல்கொடு மாமுலை
          குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை 
படித்தார்மயி லாமென வேநடை
     நெளித்தார்பல காமுகர் வார்கலை
          பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர் 
படிக்கார்மின லாமென வேநகை
     புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
          பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ 
அடைத்தார்கட லோர்வலி ராவண
     குலத்தோடரி யோர்சர னார்சின
          மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே 
அறுத்தாரய னார்தலை யேபுர
     மெரித்தாரதி லேபுல னாருயி
          ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா 
விடத்தாரசு ரார்பதி வேரற
     அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
          விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர 
விழித்தாமரை போலழ காகுற
     மகட்கானவ ணாஎன தாயுறை
          விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
குடம் என்றும், தாமரை மொட்டு என்றும் (உவமிக்கத் தக்க) இரு மார்பகங்களை உடையவர்கள், பிறைச் சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்கள், இருண்ட மேகம் போல் கருத்த கூந்தல் காடு போல் அடர்ந்து, முதுகில் அலை மோதுவது போலப் புரள, சிறப்புற்ற மேகத்தைக் கண்ட மயிலைப் போலக் களிப்பும், கயல் மீன் போன்ற கண்களும் கொண்டவர்களாய், மாலை அணிந்த கையின் மேல் ஏந்தியுள்ள, அழகிய மார்பு போன்ற, குடத்தை ஒரு பக்கமாகக் கொண்டவர்களாய், யாழ் என்றும், கிளி என்றும் சொல்லும்படியான குயிலின் ஓசை போன்ற குரலை மிழற்றுபவர்களாய், மயில் என்று சொல்லும்படி நெளிந்த நடையினராய், பல காம தூர்த்தர்களின் பெரிய காம சாஸ்திர அறிவைப் பழிப்பவர்களாய், ஆசையை ஆபரணமாக மேற் பூண்டு வேசியர்களாய், படிந்துள்ள கருமேகத்தில் தோன்றும் மின்னல் என்று சொல்லும்படியான ஒளி கொண்ட பற்கள் தெரியச் சிரிப்பவர்களாய், பல பேர்வழிகளின் வாயிதழ் ஊறலை அனுபவிப்பவர்களாய், பொருளை அபகரிப்பவர்களாகிய பழிகாரிகளாகிய விலைமாதர்களின் உறவு எனக்குத் தகுமோ? கடலை அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வலிமை வாய்ந்த ராவணனை, அவன் குலத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) கோபத்தை இவ்வாறு அழித்து ஒழித்தவர், மேகத்துக்கு ஒப்பான கருநிறம் கொண்ட ராமபிரானின் மருகனே, பிரமனின் தலையை அறுத்துத் தள்ளியவர், திரிபுரத்தை எரித்தவர், அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள (மூன்று) அசுரத் தலைவர்களின் உயிரைக் காத்தருளியவர்* ஆகிய சிவபெருமானின் பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே, விஷம் போன்ற கொடிய குணம் வாய்ந்த அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்று விழ சம்ஹாரம் செய்தாய், ஒளி வீசும் வேலாயுதத்தால் வீரச் செயல்களைப் புரிந்தாய், தேவர்கள் சிறையும் வறுமையும் நீங்கவும், அவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் செய்வித்த தாமரை போன்ற கண்களை உடைய அழகனே, குறமகள் வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே, என்னுடைய தாயான விருத்தாம்பிகை அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே. 
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.

பாடல் 701 - மாடம்பாக்கம் 
ராகம் - ....; தாளம் -

தான தந்தன தானா தானன     தான தந்தன தானா தானன          தான தந்தன தானா தானன ...... தனதான

தோடு றுங்குழை யாலே கோல்வளை     சூடு செங்கைக ளாலே யாழ்தரு          கீத மென்குர லாலே தூமணி ...... நகையாலே 
தூம மென்குழ லாலே யூறிய     தேனி லங்கித ழாலே யாலவி          லோச னங்களி னாலே சோபித ...... அழகாலே 
பாட கம்புனை தாளா லேமிக     வீசு தண்பனி நீரா லேவளர்          பார கொங்கைக ளாலே கோலிய ...... விலைமாதர் 
பாவ கங்களி னாலே யான்மயல்     மூழ்கி நின்றய ராதே நூபுர          பாத பங்கய மீதே யாள்வது ...... கருதாயோ 
நாட ருஞ்சுடர் தானா வோதுசி     வாக மங்களி னானா பேதவ          நாத தந்த்ரக லாமா போதக ...... வடிவாகி 
நால்வி தந்தரு வேதா வேதமு     நாடி நின்றதொர் மாயா தீதம          னோல யந்தரு நாதா ஆறிரு ...... புயவேளே 
வாட யங்கியவேலா லேபொரு     சூர்த டிந்தருள் வீரா மாமயி          லேறு கந்தவி நோதா கூறென ...... அரனார்முன் 
வாச கம்பிற வாதோர் ஞானசு     கோத யம்புகல் வாசா தேசிக          மாடை யம்பதி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

தோடு என்னும் ஆபரணமும் குண்டலங்களும் தரித்த செவிகளினாலும், திரட்சியாக உள்ள வளையல்களைத் தரித்த சிவந்த கைகளாலும், யாழைப் போல இனிய இசை கொண்ட மென்மையான குரலாலும், பரிசுத்தமான ஒளி வீசும் பற்களாலும், (அகில்) புகை ஊட்டிய மெல்லிய கூந்தலாலும், தேன் ஊறியது போல் விளங்கும் வாயிதழாலும், ஆலகால விஷத்தைப் போன்ற கண்களாலும், அவற்றின் ஒளி வீசும் அழகாலும், பாடகம் என்னும் கொலுசைப் புனைந்த கால்களாலும், மிகவும் மணக்கும் பன்னீர் பூசப்பட்டு வளர்ந்துள்ள பாரமான மார்பகங்களாலும் (ஆடவர்களை) வளைக்கும் வேசிகளுடைய வஞ்சக நடிப்பால் நான் காம மயக்கத்தில் முழுகி நின்று சோர்வு அடையாமல், (உனது) சிலம்பு அணிந்த திருவடித் தாமரையின் மேல் என்னை ஏற்றுக்கொள்வதை நீ நினைக்க மாட்டாயோ? நாடிக் காண்பதற்கு அரிதான ஜோதிப் பொருளான சிவபெருமானாக ஓதுகின்ற சிவ ஆகமங்களில், பலவிதமான பேதங்களால் போற்றப்படும், தனக்கு மேல் தலைவன் இல்லாத பரம் பொருளே, மந்திர தந்திர சாஸ்திரங்களில் கூறப்படும் சிறந்த ஞான வடிவினனாகி, ருக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நால் வகையான வேதங்களையும் ஓதித் தரும் பிரமனும், வேதங்களும் நாடி நின்றதான, ஒப்பற்ற மாயைகளைக் கடந்து நிற்கும் மன ஒடுக்கத்தை (சாந்தியைத்) தரும் நாதனே, பன்னிரு திருப்புயங்களை உடையவனே, ஒளி பொருந்திய வேலைக் கொண்டு சண்டை செய்த சூரனை அழித்தருளிய வீரனே, சிறந்த மயிலை வாகனமாகக் கொண்ட கந்தனே, விநோதனே, நீ சொல்லுக என்று கேட்க சிவபெருமானது முன்னிலையில் வாக்கால் தோற்றுவிக்க முடியாததான ஒப்பற்ற ஞான சுகத்தைப் பிறப்பிக்கும் பிரணவப் பொருளை உபதேசம் செய்த குரு மூர்த்தியே, மாடம்பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருஞ்செல்வமே, தேவர்களின் பெருமாளே. 
* மாடம்பாக்கம் தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது.

பாடல் 702 - மாடம்பாக்கம் 
ராகம் - ....; தாளம் -

தனன தத்தன தனன தத்தன     தனந்தந் தந்த தந்தாதனன தத்தன தனன தத்தன     தனந்தந் தந்த தந்தாதனன தத்தன தனன தத்தன     தனந்தந் தந்த தந்தா ...... தனதனா தனனா

விலைய றுக்கவு முலைம றைக்கவு     மணந்துன் றுஞ்செ ழுந்தார்புனைமு கிற்குழல் தனைய விழ்க்கவும்     விடங்கஞ் சஞ்ச ரஞ்சேர்விழிவெ ருட்டவு மொழிபு ரட்டவு     நிணந்துன் றுஞ்ச லம்பா ...... யுதிரநீ ருடனே 
வெளியி னிற்கவும் வலிய முட்டரை     யெதிர்ந்தும் பின்தொ டர்ந்தேயிலைசு ணப்பொடி பிளவெ டுத்திடை     திரும்பும் பண்ப ரன்றேயெனவு ரைத்தவர் தமைவ ரப்பணி     யுடன்கொண் டன்பு டன்போய் ...... சயனபா யலின்மேல் 
கலைநெ கிழ்க்கவு மயல்வி ளைக்கவு     நயங்கொண் டங்கி ருந்தேகுணுகி யிட்டுள பொருள்ப றித்தற     முனிந்தங் கொன்று கண்டேகலக மிட்டவ ரகல டித்தபின்     வரும்பங் கங்கு ணங்கோர் ...... புதியபே ருடனே 
கதைகள் செப்பவும் வலச மர்த்திகள்     குணங்கண் டுந்து ளங்காமனித னிற்சிறு பொழுது முற்றுற     நினைந்துங் கண்டு கந்தேகடிம லர்ப்பத மணுகு தற்கறி     விலன் பொங் கும்பெ ரும்பா ...... தகனையா ளுவையோ 
சிலைத னைக்கொடு மிகஅ டித்திட     மனந்தந் தந்த ணந்தாமரைம லர்ப்பிர மனைந டுத்தலை     யரிந்துங் கொண்டி ரந்தேதிரிபு ரத்தெரி புகந கைத்தருள்     சிவன்பங் கங்கி ருந்தா ...... ளருளுமா முருகா 
செருவி டத்தல கைகள்தெ னத்தென     தெனந்தெந் தெந்தெ னந்தாஎனஇ டக்கைகள் மணிக ணப்பறை     டிகுண்டிங் குண்டி குண்டாடிகுகு டிக்குகு டிகுகு டிக்குகு     டிகுண்டிங் குண்டி குண்டீ ...... யெனஇரா வணனீள் 
மலையெ னத்திகழ் முடிகள் பத்தையு     மிரண்டஞ் சொன்ப தொன்றேய்பணைபு யத்தையு மொருவ கைப்பட     வெகுண்டம் பொன்றெ றிந்தோன்மதலை மைத்துன அசுர ரைக்குடல்     திறந்தங் கம்பி ளந்தே ...... மயிலின்மேல் வருவாய் 
வயல்க ளிற்கய லினமி குத்தெழு     வரம்பின் கண்பு ரண்டேபெருக யற்கொடு சொரியு நித்தில     நிறைந்தெங் குஞ்சி றந்தேவரிசை பெற்றுயர் தமனி யப்பதி     யிடங்கொண் டின்பு றுஞ்சீர் ...... இளையநா யகனே.

விலை பேசி முடிவு செய்யவும், மார்பகத்தை (ஆடையால்) மறைக்கவும், நறு மணம் நிறைந்துள்ள செழுமை கொண்ட பூ மாலையை அணிந்துள்ள மேகம் போல் கறுத்தக் கூந்தலை அவிழ்த்து விடவும், நஞ்சு, தாமரை, அம்பு ஆகியவைகளுக்கு நிகரான கண் கொண்டு (ஆடவர்களை) விரட்டவும், பேச்சு மாற்றிப் பேசவும், மாமிசம் நிரம்பிய நீருடனும் ரத்த நீருடனும் கலந்த உடலுடன் வீட்டின் வெளியில் வந்து நிற்கவும், வேண்டுமென்றே மூடராக உள்ளவரின் எதிர்ப்பட்டு வரவும், அவர்களைப் பின் தொடர்ந்தும், வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்கு இவைகளை எடுத்துக் கொடுத்து (நீங்கள்) இடையில் அப்படியே நமது வீட்டுக்குத் திரும்பி வாரும், நற்குணத்தவர் அன்றோ என்று சொல்லி நன்மொழி பேசி அவர்களை வீட்டுக்கு வரச் செய்து, தம்முடன் அழைத்துச் சென்று அன்புடன் போய் உறங்கும் படுக்கையின் மேல் ஆடையைத் தளர விடவும், காம மோகத்தை உண்டு பண்ணவும், நயத்துடன் (உபசார வார்த்தைகள் சொல்லி) அங்கிருந்தபடியே கொஞ்சிப் பேசி, அவர்கள் கையிலுள்ள பொருள் அனைத்தையும் பறித்துப் (பொருள் வற்றிய பின்னர்) மிகவும் (வந்தவரிடம்) கோபம் கொண்டு, அச்சமயத்தில் ஏதேனும் ஒரு போலிக் காரணத்தை கற்பித்துக் கொண்டு கலகப் போர் செய்து வந்தவரை அகன்று ஓடும்படி அடித்து அனுப்பிய பின்னர், (அப்படி ஓட்டப் பட்டவர்களால்) வந்த பங்குப் பொருள் சுருங்க ஒரு புதிய ஆடவருடன் பொய்க் கதைகளைச் சொல்லவும் வல்ல சாமர்த்தியசாலிகள். (அத்தகைய விலைமாதர்களின்) குணத்தைக் கண்டும் நிலை கலங்காத மனிதர்களைப் போல சிறு பொழுதேனும் (மனம் பொருந்தி உன்னை) நினைந்தும், (உன்னைத்) தரிசித்து மனம் களித்தும், நறு மணமுள்ள மலர்கள் பொருந்திய உனது திருவடிகளை அணுகிச் சேர்வதற்கு உரிய அறிவு இல்லாதவனாய் மிக்கு எழும் பெரிய பாவியாகிய என்னை ஆண்டு அருள்வாயாக. வில்லால் நன்றாய்த் தன்னை அடிக்கும்படியான மனத்தை (அர்ச்சுனனுக்குக்) கொடுத்தும், மறையோனும் தாமரை மலரில் வீற்றிருப்பவனும் ஆகிய பிரமனுடைய உச்சித் தலையை அரிந்தும், (அந்தத் தலையில்) பலிப் பிச்சை ஏற்றும், திரிபுரங்களில் நெருப்பு எழும்படி சிரித்தும் திருவருள் விளையாடல்களைச் செய்த சிவபெருமானுடைய (இடது) பாகத்தில் இருப்பவளாகிய பார்வதி தேவி அருளிய சிறந்த முருகனே, போர்க் களத்தில் பேய்கள் தெனத்தென தெனந்தெந்தெந் தெனந்தா என்று கூறி, இடக் கையால் கொட்டப்படும் முரசுகளும், மணிகளும், அதம ஒலி எழுப்பும் பறைகளும் டிகுண்டிங்குண் டிகுண்டா டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு டிகுண்டிங்குண் டிகுண்டீ இவ்வாறான ஒலிகளை எழுப்ப, ராவணனுடைய பெரிய மலை போல் விளங்கிய பத்துத் தலைகளையும் (இரண்டு ஐந்து = 10+9+1=20) இருபது பெரிய புயங்களையும் ஒரு வழிப்பட்டு ஒழியும்படி கோபித்து ஒப்பற்ற அம்பை எறிந்தவனாகிய ராமனாகிய திருமாலின் பிள்ளையாகிய மன்மதனுக்கு மைத்துன முறையினனே*, அசுரர்களுடைய குடலை வெளிப்படுத்தி, அவர்களுடைய உடலைப் பிளந்து மயிலின் மீது ஏறி வருபவனே, வயல்களில் கயல் மீன் கூட்டங்கள் மிக்கு எழுந்து வரப்பில் புரண்டு பெருகும் பக்கங்களில், சங்குகள் சொரிகின்ற முத்துக்கள் நிறைந்து எங்கும் விளக்கம் தரும் மேம்பாட்டினைப் பெற்று, உயர்ந்த மாடம்பாக்கம் என்னும் அழகிய தலத்தை இடமாகக் கொண்டு இன்புறுகின்ற மேன்மை மிக்க இளமை வாய்ந்த தலைவனே. 
* திருமாலின் மகன் மன்மதன். திருமாலின் மகள் சுந்தரவல்லியாகிய வள்ளி. முருகன் வள்ளியின் கணவன் ஆகையால் மன்மதனுக்கு மைத்துனன் முறையினன் ஆகிறான்.
** மாடம்பாக்கம் தாம்பரத்தின் அருகில் வண்டலூருக்கு 7 மைல் கிழக்கில் உள்ளது.

பாடல் 703 - கோடைநகர் 
ராகம் - மாயா மாளவ கெளளை தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தானதன தான தந்த தானதன தான தந்த     தானதன தான தந்த ...... தனதான

ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி யி ருந்து     ஆகமல மாகி நின்று ...... புவிமீதில் 
ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து     ஆளழக னாகி நின்று ...... விளையாடிப் 
பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து     பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப் 
போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்     பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே 
சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற     தீரனரி நார ணன்றன் ...... மருகோனே. 
தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று     தேடஅரி தான வன்றன் ...... முருகோனே 
கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற     கோமளிய நாதி தந்த ...... குமரேசா 
கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

முதல் முதலாக எனது தாயின் உடலில் இருந்து பல அழுக்குகள் நிறைந்த உருவுடன், இந்தப் பூமியிலே பிறக்கும்போதே ஆசையுடன் பிறந்து, பெற்றோர் சுற்றத்தார் ஆகியோரின் அன்புடன் வளர்ந்து, ஆள் அழகன் என்னும்படியாக விளங்கி, விளையாடி, பூமியில் எல்லா இடங்களிலும் அலைந்து பெண்களுடன் மருவிக் கலந்து, பூமியில் அவசியத்தின் காரணமாகப் பொருள்களைத் தேடி சுகபோகங்களில் ஈடுபட்டுத் திரிந்து பாழான நரகத்தை நான் அடையாமல், உனது மலர்ப்பாதங்களை அடைய அன்பைத் தந்தருள்வாயாக. சீதையைக் கவர்ந்து சென்ற அந்த ராவணனை கொன்று வென்ற தீரனாம் ஹரி, நாராயணனின் மருகனே, தேவர்கள், முநிவர்கள், மேகவண்ணன் திருமால், பிரம்மா இவர்களெல்லாம் நின்று தேடியும் காணுதற்கு அரிதாக விளங்கிய சிவனின் குழந்தையாம் முருகனே, தேவியும், கயிலைநாதனாம் சிவபிரானின் இடப்பக்கம் மேவிய அழகியும், தொடக்கமே இல்லாதவளுமான பார்வதி தந்த குமரேசனே, ஒன்றுகூடி வந்த சூரரின் மார்பை இருகூறாகக் கண்டவனே, கோடை நகரில்* வாழ்ந்திருக்கும் பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

பாடல் 704 - கோடைநகர் 
ராகம் - தாளம் -

தானதன தான தந்த தானதன தான தந்த     தானதன தான தந்த ...... தனதான

சாலநெடு நாள்ம டந்தை காயமதி லேய லைந்து     சாமளவ தாக வந்து ...... புவிமீதே 
சாதகமு மான பின்பு சீறியழு தேகி டந்து     தாரணியி லேத வழ்ந்து ...... விளையாடிப் 
பாலனென வேமொ ழிந்து பாகுமொழி மாதர் தங்கள்     பாரதன மீத ணைந்து ...... பொருள்தேடிப் 
பார்மிசையி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லொன்று     பாதமலர் சேர அன்பு ...... தருவாயே 
ஆலமமு தாக வுண்ட ஆறுசடை நாதர் திங்கள்     ஆடரவு பூணர் தந்த ...... முருகோனே 
ஆனைமடு வாயி லன்று மூலமென வோல மென்ற     ஆதிமுதல் நார ணன்றன் ...... மருகோனே 
கோலமலர் வாவி யெங்கு மேவுபுனம் வாழ்ம டந்தை     கோவையமு தூற லுண்ட ...... குமரேசா 
கூடிவரு சூர டங்க மாளவடி வேலெறிந்த     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.

மிகவும் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணின் கருவிலே கிடந்து அலைச்சலுற்று, சாகும் அளவிற்கான துன்பத்துக்கு ஆளாகிவந்து, இந்தப் புவிமீது பிறப்பை அடைந்த பின்னர், வீறிட்டு அழுது, கீழே கிடந்து, தரையில் தவழ்ந்து விளையாடி, பால உருவினனாகப் பேச்சுக்கள் பேசி, சர்க்கரை போல இனிக்கும் சொற்களைக் கொண்ட மாதர்களின் பெரிய மார்பகங்களை அணைந்து, பொருள் தேடவேண்டி பூமியிலே திரிந்து அலைந்து, பாழான நரகிலே போய்ச்சேராமல் பொருந்திய உனது பாத மலர்களை அடைவதற்குரிய அன்பை அருள்வாயாக. விஷத்தை அமிர்தமாக உண்ட, கங்கை நதியை சடையில் சூடியுள்ள நாதர், சந்திரனையும், படமெடுத்து ஆடும் பாம்பையும் அணிந்தவராகிய சிவபிரான் தந்த முருகனே, கஜேந்திரன் என்ற யானை அன்று குளத்தில் (முதலை வாயில் அகப்பட்டு) ஆதி மூலமே என்றும் நீயே தஞ்சம் என்றும் கூவி அழைத்த ஆதி முதல்வனான நாராயணனின் மருகனே, அழகிய மலர்த் தடாகங்கள் எங்கும் இருந்த தினைப் புனத்தில் வாழ்ந்த பெண் வள்ளியின் கொவ்வைக் கனி போன்ற வாயின் அமுத ஊறலை உண்ட குமரனே, இரண்டு கூறாகப் பிளவுபட்டாலும் ஒன்றாகக் கூடிவந்த சூரன் அடங்கி ஒடுங்க, கூர்மையான வேலைச் செலுத்தியவனே, கோடைநகர்* தலத்தில் வாழவந்த பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

பாடல் 705 - கோடைநகர் 
ராகம் - ...; தாளம் -

தானா தானா தானா தானா     தானா தானா ...... தனதானா

ஏறா னாலே நீறாய் மாயா     வேளே வாசக் ...... கணையாலே 
ஏயா வேயா மாயா வேயா     லாமே ழோசைத் ...... தொளையாலே 
மாறா யூறா யீறாய் மாலாய்     வாடா மானைக் ...... கழியாதே 
வாராய் பாராய் சேரா யானால்     வாடா நீபத் ...... தொடைதாராய் 
சீறா வீறா ஈரேழ் பார்சூழ்     சீரார் தோகைக் ...... குமரேசா 
தேவா சாவா மூவா நாதா     தீரா கோடைப் ...... பதியோனே 
வேறாய் மாறா யாறா மாசூர்     வேர்போய் வீழப் ...... பொருதோனே 
வேதா போதா வேலா பாலா     வீரா வீரப் ...... பெருமாளே.

காளையும் பசுவும் கலந்து வரும் காட்சியினாலும், சாம்பலாகியும் அழிவுபடாத மன்மத வேள் ஏவுகின்ற மணமுள்ள புஷ்ப பாணத்தாலும், பொருந்திப் பொருந்தி கவலையால் வருந்தி புல்லாங்குழலில் உண்டாகும் ஏழு சுரங்கள்கொண்ட இசையைத் தரும் தொளைகளாலும், எழிலும் நிறமும் மாறுதல் உற்று, துன்பமுற்று, உயிரே முடிவடைந்ததுபோல் ஆகி, ஒரே மோக மயக்கமாய் வாடுகின்ற மான்போன்ற இந்தப் பெண்ணை நீ ஒதுக்காமல், வந்து பார்த்துவிட்டு இவளுடன் சேர்வதற்கு மனம் இல்லை என்றாலும், உனது வாடாத கடப்ப மாலையையாவது தந்து அருளுக. சீறி எழுந்து வீறுடன் மேலே பறந்து பதினான்கு உலகங்களையும் வலம் வந்த, சிறப்பு மிகுந்த, மயில் வாகனக் குமரேசா, தேவனே, இறப்பு இல்லாத மூப்பு அடையாத நாதனே, ¨தரியம் உடையவனே, கோடைப் பதியில்* வீற்றிருப்பவனே, வேறுபட்ட மாறுபட்ட வழியில் சென்றவனான பெரிய சூரன் வேரற்று அடியோடு விழும்படி சண்டை செய்தவனே, பிரமனுக்கு அறிவு ஊட்டியவனே, வேலனே, பாலனே, வீரனே, வீரம் வாய்ந்த பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.காளையும் பசுவும் சேர்ந்து வருதல், மன்மதன், மலர்க்கணை, புல்லாங்குழல் இசை முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 706 - கோடைநகர் 
ராகம் - ஹம்ஸாநந்தி தாளம் - அங்கதாளம் - 10 - மிஸ்ர ஜம்பை /7 யு 0 
தகிட தக திமி-3 1/2, தகிட தக திமி-3 1/2, தகதிமிதக-3

தான தந்த தனத்த தத்த ...... தனதானா

ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே 
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே 
ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே 
ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே 
கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா 
கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா 
கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர் 
கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.

உலகத்தை எல்லாப் பக்கங்களிலும் சுற்றி வளைத்து ஓயாமல் அலை ஓசையோடு இரைச்சலிடும் கடலாலே, நாள்தோறும் பெண்கள் அனைவரும் சேர்ந்து கூறும் வசைமொழிகளினாலே, விஷக்கதிர்களைச் செலுத்துகிற சந்திரன் (உன்னைப் பிரிந்து தவிக்கும்) இவள் மீது வீசும் நெருப்பாலே, அழிந்து போகாதவாறு, உன் பன்னிரண்டு புயங்களினாலும் இவளை அணைத்துக்கொள்ள நீ வரமாட்டாயா? அழகு பொருந்திய குறத்தி வள்ளியை அணைக்கும் மார்பனே, கோடைநகரில்* வந்து வீற்றிருக்கும் மயில் வீரனே, யமனும் நடுங்க கிரெளஞ்சமலையைத் தொளை செய்த முதல்வனே, தேவர்களுக்கு சூரன் பூட்டிய கால் விலங்குகளை உடைத்தெறிந்த பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது.கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார் ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 707 - கோடைநகர் 
ராகம் - பிருந்தாவன ஸாரங்கா தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3 1/2

தானன தந்தன தந்த தந்தன     தானன தந்தன தந்த தந்தன          தானன தந்தன தந்த தந்தன ...... தனதான

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்     ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்          சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத் 
தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்     ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்          சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல் 
வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்     நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்          மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே 
மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்     தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்          வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே 
ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்     வாலியு மம்பர மும்ப ரம்பரை          ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன் 
ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ     சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற          ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே 
கோழி சிலம்பந லம்ப யின்றக     லாப நடஞ்செய மஞ்சு தங்கிய          கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா 
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்     வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்          கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.

நட்பைக் காட்டிப் பினனர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர், போதித்த நன்றியை மறந்த கீழோர், அநுஷ்டிக்க வேண்டிய விரதங்களை விலக்கிய கீழோர், பெரியோரை வைது நிந்தித்துப் பேசிய கீழோர், மற்றவர்க்குக் கொடுப்பதைக் கண்டு அதைத் தடுத்த கீழோர், சத்திய வார்த்தை என்பதையே ஒழித்த கீழோர், எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும் கீழோர், நீதியையும், தர்மத்தையும் அழித்த கீழோர், குற்றமும், ஆணவமும் மிகுந்துள்ள கீழோர், பாசவலையால் உலகமாயையில் சிக்கி வருந்தும் கீழோர், தெய்வச் சொத்தை அபகரித்த கீழோர், இவர்கள் யாவரும் வேதனைக்கு இடமாகிய, யமனது நரகக் குழியில் வீழ்வர். மராமரம் ஏழும், வலிய குரங்காகிய வாலியும், கடலும், அசுர பரம்பரையில் வந்த ராவணனும், அவனது நால்வகைப் படையும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும், யாவுமே முன்பே வலிமை குன்றி அழியும்படியும், சந்திரனும், சிவ சூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும், ராமசரம் என்ற ராமநாமம் கொண்ட அம்பைச் செலுத்திய சிறப்பான ராமச்சந்திர மூர்த்தியின் அழகிய மருகனே, சேவல் கொடியில் இருந்து ஒலிசெய்ய, அழகிய தோகையை உடைய மயில் நடனம் செய்ய, மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும் மங்களகரமான வயலூர் வாசனே, அழகிய தேவர்களும், தொண்டர்களும், மண்டலாதிபர்களும், வேலன் என்ற பெயரை அன்புடன் புகழ்கின்ற பெருமாளே, கோடைநகர்* என்ற பதியில் வந்துள்ள பெருமாளே, இந்திரர்களுக்குப் பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

பாடல் 708 - கோடைநகர் 
ராகம் - ...; தாளம் -

தானத் தானத் தானத் தானத்     தானத் தானத் ...... தனதான

தோடப் பாமற் றோய்தப் பாணிச்     சூழ்துற் றார்துற் ...... றழுவாருந் 
தூரப் போகக் கோரப் பாரச்     சூலப் பாசச் ...... சமனாரும் 
பாடைக் கூடத் தீயிற் றேறிப்     பாழ்பட் டேபட் ...... டழியாதே 
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்     பாதத் தேவைத் ...... தருள்வாயே 
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்     தாரச் சீறிப் ...... பொரும்வேலா 
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்     காரத் தாரைத் ...... தரும்வீரா 
கூடற் பாடிக் கோவைப் பாவைக்     கூடப் பாடித் ...... திரிவோனே 
கோலச் சாலிச் சோலைச் சீலக்     கோடைத் தேவப் ...... பெருமாளே.

(இறந்தவர்கள் வீட்டில்) ஒவ்வொருவரும் சுற்றி உட்கார்ந்து ஒருவர் தோள் மேல் ஒருவர் கைகோத்து அழுகின்றவர்களும் விலகிப் போகுமாறு கோரமான, பாரமான சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட யமன் வந்து சேர்கின்ற சமயத்தில், பாடை கட்டப்பட்டு நெருப்பில் கூட்டப்பட்டு, பாழ் அடைந்து குலைந்து நான் அழிந்து போகாமல், (உலக) ஆசையில் கட்டுண்ட என்னை ஞானம் உள்ளவர்களின் அழகிய திருவடியில் சேர்த்து வைத்து அருள்வாயாக. போர் புரிந்த சூரன் போரில் தோற்று ஓட, அவன் (மாமரமாய்க்) கிடந்த கடலில் மிகவும் கோபித்துச் சண்டை செய்த வேலனே, தெய்வ யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானைக்கும், காட்டில் வாழ்ந்த தேன்போன்ற வள்ளிக்கும் முத்து மாலையையும், கடப்ப மாலையையும் தந்தருளிய வீரனே, கூடல் நகரில் உள்ள தலைவனான சிவபெருமானை தேவி அங்கயற்கண்ணியுடன் கூட ஒன்று சேர்த்துப் பாடித் திரிந்த (திருஞான சம்பந்தப்) புலவனே, அழகிய நெல் வயல்களும் பொழில்களும் நிறைந்த, நல்லொழுக்கத்தார்கள் உள்ள கோடை நகரில்* வீற்றிருக்கும், தேவர்களின் பெருமாளே. 
* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

பாடல் 709 - கோடைநகர் 
ராகம் - ....; தாளம் -

தானத்த தான தந்த தானத்த தான தந்த     தானத்த தான தந்த ...... தனதான

வாசித்த நூல்ம தங்கள் பேசிக்கொ டாத விந்து     வாய்மைப்ர காச மென்று ...... நிலையாக 
மாசிக்க பால மன்றில் நாசிக்கு ளோடு கின்ற     வாயுப்பி ராண னொன்று ...... மடைமாறி 
யோசித்த யாரு டம்பை நேசித்து றாத லைந்து     ரோமத்து வார மெங்கு ...... முயிர்போக 
யோகச்ச மாதி கொண்டு மோகப்ப சாசு மண்டு     லோகத்தில் மாய்வ தென்று ...... மொழியாதோ 
வீசப்ப யோதி துஞ்ச வேதக்கு லால னஞ்ச     மேலிட்ட சூர்த டிந்த ...... கதிர்வேலா 
வீரப்ர தாப பஞ்ச பாணத்தி னால்ம யங்கி     வேடிச்சி காலி லன்று ...... விழுவோனே 
கூசிப்பு காவொ துங்க மாமற்றி காத ரிந்த     கூளப்பு ராரி தந்த ...... சிறியோனே 
கோழிப்ப தாகை கொண்ட கோலக்கு மார கண்ட     கோடைக்குள் வாழ வந்த ...... பெருமாளே.

கற்றுள்ள நூல்களும் மதங்களும் விளக்கம் தர முடியாத சிவதத்துவமாகிய உண்மை ஒளியானது என்றும் நிலைத்திருக்கவேண்டி, மேகம்போல் படர்ந்த மண்டை ஓடாகிய வெளியிடத்தும், நாசிக்குள்ளும் ஓடுகின்ற பிராணவாயுவாகிய ஒன்றை, அது செல்லும் வழியை மாற்றி, சுழுமுனையில் கூட்டி*, அதனால் தளர்கின்ற உடம்பின்மீது நேசம் வைத்து, சிவயோக நிலையில் நிற்காது அலைபாய்ந்து, மயிர்த் தொளை எங்கும் உயிர் பாய்ந்து ஓடும்வண்ணம், கர்மயோகச் சமாதி நிலையைப் பூண்டு, மோகம் என்கின்ற பேய் நிரம்பியுள்ள இந்த உலகில் இறந்துபோதல் என்பது என்றைக்கும் நீங்காதோ? அலை வீசும் கடல் வலிமை குன்ற, பிரமன் என்கின்ற குயவன் அஞ்சி நிற்க, மேலே எதிர்த்துவந்த சூரனை வதம் செய்த ஒளி வேலனே, வீரம் உள்ளன என்ற புகழைப் பெற்றுள்ள (மன்மதனது) ஐந்து மலர்க் கணைகளால் காம மயக்கம் கொண்டு வேடர்குல வள்ளியின் பாதங்களில் அன்று விழுந்தவனே, அச்சம் அடைந்து போய் ஒதுங்கும்படி, மாமனாகிய தட்சனை தயங்காது தலையை அரிந்தவரும், பயனற்ற திரிபுரத்தைப் பகைத்து எரித்தவருமான சிவபெருமான் தந்த இளையோய், கோழிக்கொடியைக் கொண்ட அழகிய குமரனே, வீரனே, கோடைநகரில்** வாழ்கின்ற பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

பாடல் 710 - திருப்பேர்ருர் 
ராகம் - ...; தாளம் -

தனத்தா தானன தானா தானன     தனத்தா தானன தானா தானன          தனத்தா தானன தானா தானன ...... தனதான

அனுத்தே னேர்மொழி யாலே மாமய     லுடைத்தார் போலவு மோர்நா ளானதி          லடுத்தே தூதுகள் நூறா றானதும் ...... விடுவார்கள் 
அழைத்தே வீடினி லேதா னேகுவர்     நகைத்தே மோடிக ளாவார் காதலொ          டடுத்தே மாமுலை மீதே மார்புற ...... அணைவார்பின் 
குனித்தே பாகிலை யீவார் பாதியில்     கடிப்பார் வாயிதழ் வாய்நீ ரானது          குடிப்பார் தேனென நானா லீலைகள் ...... புரிவார்கள் 
குறித்தே மாமய லாலே நீள்பொருள்     பறிப்பா ராசுகள் சூழ்மா பாதக          குணத்தார் மாதர்கள் மேலா சாவிட ...... அருள்வாயே 
வனத்தே வேடுவர் மாதா மோர்மினை     யெடுத்தே தான்வர வேதான் யாவரும்          வளைத்தே சூழவு மோர்வா ளால்வெலும் ...... விறல்வீரா 
மலர்த்தே னோடையி லோர்மா வானதை     பிடித்தே நீள்கர வாதா டாழியை          மனத்தா லேவிய மாமா லானவர் ...... மருகோனே 
சினத்தே சூரர்கள் போராய் மாளவு     மெடுத்தோர் வேல்விடு தீரா தாரணி          திருத்தோ ளாஇரு பாதா தாமரை ...... முருகோனே 
திருத்தேர் சூழ்மதி ளேரார் தூபிக     ளடுக்கார் மாளிகை யேநீ ளேருள          திருப்போ ரூருறை தேவா தேவர்கள் ...... பெருமாளே.

நல்ல தேனுக்கு ஒப்பான பேச்சுக்களால் மிக்க மோகம் கொண்டவர்கள் போல நடித்து, ஒரே தினத்தில் மேலுக்கு மேல் தூதுகளை நூற்றியாறு முறை விடுவார்கள். அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டுக்குள்ளே போவார்கள். சிரிப்புடனே பிணக்கத்தையும் செருக்கையும் காட்டுவர். பாசாங்கு அன்புடன் நெருங்கி தங்களுடைய பெரிய மார்பகங்களின் மேலே மார்பு பொருந்தும்படி அணைவார்கள். பின்பு குனிந்து பாக்கு வெற்றிலை கொடுப்பர். அங்ஙனம் கொடுக்கும்போது பாதியில் வாயிலிருப்பதைக் கடிப்பார்கள். இதழூறலைத் தேன் போலப் பாவித்துக் குடிப்பர். விதம் விதமான காம லீலைகளைச் செய்வர். ஒரு காரியத்தைக் குறிப்பாக வைத்துக் கொண்டு மிக்க மோக விளைவு ஊட்டி பெரும் பொருள் அனைத்தையும் பறிப்பார்கள். குற்றங்கள் நிறைந்த மகா பாவ குணத்தை உடையவர்கள். அத்தகைய விலைமாதர்கள் மீதுள்ள ஆசையை ஒழிக்க அருள் புரிவாயாக. காட்டில் வேடர் குலத்துப் பெண்ணாகிய மின்னல் போன்ற வள்ளியை நீ எடுத்துப் போகவே, வேடர் யாவரும் உன்னை வளைத்துச் சூழ, ஒரு வாள் கொண்டு அவர்களை வென்ற பெருமை வாய்ந்தவனே, மலர்களின் தேன் சொட்டும் ஓடையில் ஒரு பெரிய யானையை (கஜேந்திரனை)ப் பிடித்துக் கொண்டு, ஒரு நீண்ட முதலை போர் செய்ய, சக்கரத்தை (முதலையின் மீது) மனம் கொண்டு செலுத்திய சிறந்த திருமாலுக்கு மருகனே, கோபித்து சூரர்கள் போர் செய்து இறக்கும்படி ஒரு வேலை எடுத்துச் செலுத்திய தீரனே, மாலை அணிந்த அழகிய தோளனே, இரண்டு பாதத் தாமரைகளைக் கொண்ட முருகோனே, அழகிய தேரும், சூழ்ந்துள்ள மதிலும், எழில் நிறைந்த கோபுரங்களும், அடுக்கு மெத்தைகள் கொண்ட மாளிகைகளும் ஆகிய நீடிய சிறப்புகள் வாய்ந்த திருப் போரூரில்* வீற்றிருக்கும் தேவனே, தேவர்களின் பெருமாளே. 
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.

பாடல் 711 - திருப்பேர்ருர் 
ராகம் - ....; தாளம் -

தனத்தா தான தந்த தனத்தா தான தந்த     தனத்தா தான தந்த ...... தனதான

உருக்கார் வாளி கண்கள் பொருப்பார் வார்த னங்கள்     உகப்பார் வால சந்த்ர ...... னுதனூலாம் 
உருச்சேர் நீண்ம ருங்குல் பணைத்தோ ளோதி கொண்ட     லுவப்பா மேல்வி ழுந்து ...... திரிவோர்கள் 
அருக்கா மாதர் தங்கள் வரைக்கே யோடி யின்ப     வலைக்கே பூணு நெஞ்ச ...... னதிபாவி 
அசட்டால் மூடு கின்ற மசக்கால் மாயு மிந்த     அவத்தா லீன மின்றி ...... யருள்வாயே 
எருக்கார் தாளி தும்பை மருச்சேர் போது கங்கை     யினைச்சூ டாதி நம்பர் ...... புதல்வோனே 
இருக்கா லேநி னைந்து துதிப்பார் நாவி னெஞ்சி     லிருப்பா யானை தங்கு ...... மணிமார்பா 
செருக்கா லேமி குந்த கடற்சூர் மாள வென்ற     திறற்சேர் வேல்கை கொண்ட ...... முருகோனே 
தினைக்கோர் காவல் கொண்ட குறத்தேன் மாது பங்க     திருப்போ ரூர மர்ந்த ...... பெருமாளே.

ஆலையிலே உருக்கி எடுத்த அம்பு போன்ற கண்கள், மலை போன்ற, கச்சு அணிந்த, மார்பகங்கள், மகிழ்ச்சி நிரம்பும் இளம் பிறையை ஒத்த நெற்றி, நூல் போன்ற மெல்லிய உரு அமைந்த நீண்ட இடை, மூங்கில் போன்ற தோள், மேகம் போன்ற கூந்தல், (இவைகளைக் கொண்டவர்களும்), மகிழ்ச்சியாக தங்கள் மேல் விழுந்து திரிகின்றவர்களை அசட்டை செய்கின்றவர்களுமான பொது மாதர்களின் இருப்பிடத்துக்கே ஓடிச்சென்று, அந்தக் காம வலைக்கே பூண்ட மனத்தினனும், மகா பாவியுமாகிய நான் எனது அசட்டுத் தனத்தாலும், மூடுகின்ற மனக் கலக்கத்தாலும், மழுங்கும் இந்தக் கேட்டினாலும், இழிவு அடையாதவாறு அருள் புரிவாயாக. எருக்கு, ஆத்தி, அறுகு, தும்பை மலர், வாசனை பொருந்திய மலர்கள், கங்கை ஆறு இவைகளைச் சூடும் முதற் பொருளாகிய சிவபெருமானது மகனே, ரிக்வேத மந்திரத்தால் போற்றித் துதி செய்வோருடைய நாவிலும் மனதிலும் இருப்பவனே, தேவயானை அணையும் அழகிய மார்பனே, ஆணவத்தால் மிக்கு எழுந்த, கடலில் மாமரமாய் ஒளிந்து நின்ற, சூரன் அழியும்படி வென்ற வெற்றி வாய்ந்த வேலாயுதத்தைக் கையில் ஏந்திய முருகனே, தினைப் புனத்துக்கு ஒரு காவல் கொண்டிருந்த, குறவர் குலத்துக்குத் தேன் போன்ற மாதாகிய வள்ளிக்கு மணாளனாகப் பக்கத்திலேயே உள்ளவனே, திருப்போரூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.

பாடல் 712 - திருப்பேர்ருர் 
ராகம் - ....; தாளம் -

தான தானன தானன தான தானன தானன     தான தானன தானன ...... தனதான

சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்     சேய சாயல்க லாமதி ...... முகமானார் 
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை     சேலு லாவிய கூர்விழி ...... குமிழ்நாசி 
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்     சார்பி லேதிரி வேனைநி ...... னருளாலே 
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய     தாளில் வீழ வினாமிக ...... அருள்வாயே 
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை     காவல் மாதினொ டாவல்செய் ...... தணைவோனே 
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய     கார ணாகரு ணாகர ...... முருகோனே 
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு     பூப சேவக மாமயில் ...... மிசையோனே 
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு     போரி மாநகர் மேவிய ...... பெருமாளே.

பெருமை விளங்கும் அன்னத்துக்கு ஒப்பான அழகிய நடை, சிறந்த மயிலுக்கு ஒப்பான செம்மை வாய்ந்த சாயல், பூரண சந்திரன் போன்ற முகம் இவைகளைக் கொண்ட விலைமாதர்கள் தேன் போன்று இனிய அழகிய பேச்சு, மேருமலை போல இளமை விளங்கும் பெரும் மார்பகங்கள், சேல் மீன் போன்ற கூரிய கண்கள், குமிழைப் போன்ற மூக்கு, மாலை விளங்கும் நீண்ட கூந்தல், மூங்கில் போன்று வழுக்கும் தோள்களை உடையவர்கள், இவர்களின் இணக்கத்திலேயே திரிகின்ற என்னை, உனது திருவருளால், சாம வேதம் வல்ல மறையோர்களும், தேவர்களும் போற்றி தினந்தோறும் புது மலர்களைத் தூவிய உனது திருவடியில் விழுந்து வணங்கும் விவேகத்தை நிரம்ப அருள் செய்வாயாக. மேகம் உலாவும் நீண்ட புனத்தில் உள்ள வேடர்கள் வாழ்ந்த பெரிய வள்ளிமலை மேலே இருந்து, காவல் புரிந்த வள்ளி மீது ஆசை கொண்டு அவளை அணைந்தவனே, யாவரும் அறிய ஆகமம், வேதம், புராணம் பலவற்றையும் (சம்பந்தராக வந்து தேவாரமாக) ஓதித் துதித்துள்ள மூல காரணனே, கருணாகரனே, முருகனே, போர் செய்ய வந்த சூரன் மீது வேலாயுதத்தை ஏவி, கடலும் சேறு படும்படிச் செய்த அரசனே, வீரனே, அழகிய மயிலின் மீது அமர்வோனே, தாமரை மலரில் வாழ்பவன் (பிரமன்), திருமால், உமாதேவியைப் பாதி பாகத்தில் கொண்ட ஆதியாகிய சிவபிரான் ஆகிய மூவரும் தொழுகின்ற திருப் போரூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.

பாடல் 713 - திருப்பேர்ருர் 
ராகம் - பந்து வராளி தாளம் - அங்கதாளம் - 5 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2

தனன தானன தானன தனன தானன தானன     தனன தானன தானன ...... தனதான

திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ     திமிர மேயரி சூரிய ...... திரிலோக 
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண     சிவசு தாவரி நாரணன் ...... மருகோனே 
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி     குணக லாநிதி நாரணி ...... தருகோவே 
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர     குறவர் மாமக ளாசைகொள் ...... மணியேசம் 
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக     பசுர பாடன பாளித ...... பகளேச 
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்     பரவு பாணித பாவல ...... பரயோக 
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத     சமய நாயக மாமயில் ...... முதுவீர 
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு     சமர மாபுரி மேவிய ...... பெருமாளே.

இருள் அடைந்த மனத்தையும், மிக்க அறியாமையையும் கொண்ட எனது வருத்தங்களையும், ஆணவத்தையும் விலக்கும் ஞான சூரியனே, மூவுலகங்களுக்கும் ஒளி தரும் சூரியனே, சிவனே, மூலாதாரனே, நாகாபரணரும் வேத முதல்வருமான சிவபிரானின் குமாரனே, ஹரி நாராயணனின் மருகனே, குமரியும், கருமை கலந்த பச்சை நிறத்தாளும், அன்னையும், உமா தேவியும், மாசு அற்றவளும், பச்சை வண்ணத்தாளும், நிறைந்தவளும், குணச்செல்வியும், கலைச்செல்வியுமான நாராயணி பெற்ற தலைவனே, குருநாதனே, குகனே, குமரேசனே, சரவணனே, உருவத் திருமேனி கொண்ட ஈசனே, குறவர்தம் தவப் புதல்வி வள்ளி மீது ஆசை கொண்ட மணியே, நன்றாக வண்டுகள் மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை அணிந்தவனே, ப்ரணவப் பொருளானவனே, பேரின்பப் பொருளே, பாசுரங்களை (தேவாரத்தை) பாடி உலகுக்கு பாடம் கற்பித்தவனே, செம்பட்டு அணிந்தவனே, மலைகளுக்கு அரசனே, திருநீற்றில் திருப்தி அடைபவனே, சேவலைக் கொடியில் வைத்தவனே, மேன்மை மிகுந்த பெரிய வேலாயுதத்தைக் கரத்தில் ஏந்தியவனே, பாடலில் வல்லவனே, மேலான யோக மூர்த்தியே, வாதப் போரிடும் புற மதங்களான புத்தம், சமணம் - இவற்றின் நசிவுக்குக் காரணனே, அகச்சமயம் ஆறிலும், புறச்சமயம் ஆறிலும்* இலங்கும் தெய்வமே, தக்க சமயத்தில் உதவும் தலைவனே, அழகிய மயில் ஏறும் பேரறிவு வீரனே, சகல உலகங்களும், குற்றமற்ற எல்லா வேதங்களும் தொழும் சமரமாபுரி என்ற திருப்போரூரில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* அகச் சமயம் ஆறு: வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.புறச் சமயம் ஆறு: சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம்.
** திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.இப்பாடல் முழுவதும் துதியாகவே அமைந்து, வேண்டுதல் ஏதும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

பாடல் 714 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - காபி தாளம் - அங்கதாளம் - 5 1/2 - எடுப்பு - 1/2 தள்ளி 
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2

தனன தனன தனதான தனன தனன தனதான     தனன தனன தனதான ...... தனதான

சுருதி மறைக ளிருநாலு திசையி லதிபர் முநிவோர்கள்     துகளி லிருடி யெழுபேர்கள் ...... சுடர்மூவர் 
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர்     தொலைவி லுடுவி னுலகோர்கள் ...... மறையோர்கள் 
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி     அரியு மயனு மொருகோடி ...... யிவர்கூடி 
அறிய அறிய அறியாத அடிக ளறிய அடியேனும்     அறிவு ளறியு மறிவூற ...... அருள்வாயே 
வரைகள் தவிடு பொடியாக நிருதர் பதியு மழிவாக     மகர சலதி அளறாக ...... முதுசூரும் 
மடிய அலகை நடமாட விஜய வனிதை மகிழ்வாக     மவுலி சிதறி இரைதேடி ...... வருநாய்கள் 
நரிகள் கொடிகள் பசியாற உதிர நதிக ளலைமோத     நமனும் வெருவி யடிபேண ...... மயிலேறி 
நளின வுபய கரவேலை முடுகு முருக வடமேரு     நகரி யுறையு மிமையோர்கள் ...... பெருமாளே.

வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள், எட்டுத் திக்குப் பாலகர்கள் (*1), முநிவர்கள் குற்றமில்லாத ரிஷிகள் ஏழு பேர் (*2), சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள், சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள் (*3), வெகு தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள், அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக் கோடிக்கணக்கான அடியார்கள், திருமால், பிரமன், ஒரு கோடி பேர் - இவர்களெல்லாம் கூடி, அறிந்து கொள்ள, அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது திருவடிகளை, அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக. கிரெளஞ்சம் முதலிய மலைகள் தவிடு பொடியாக, அசுரர்களின் ஊர்கள் அழிவடைய, மகர மீன்கள் உள்ள கடல் சேறாக, பழைய சூரனும் அழிவுற, பேய்கள் நடனம் செய்ய, விஜய லக்ஷ்மி மகிழ்ச்சி அடைய, அசுரர்களின் தலைகள் சிதறிவிழ, இரையைத் தேடிவந்த நாய்களுடன், நரிகளும், காக்கைகளும், பசி நீங்க, ரத்த வெள்ளம் அலைமோதி ஓட, யமனும் அச்சமுற்று உனது திருவடிகளைத் துதிக்க, மயிலில் ஏறி, மகிமைவாய்ந்த திருக்கரத்து வேலாயுதத்தை விரைவாகச் செலுத்தும் முருகனே, உத்தரமேரூர் (*4) என்ற தலத்தில் வீற்றிருப்போனே, தேவர்களின் பெருமாளே. 
*1 அஷ்டதிக்குப் பாலகர்கள் (எண்திசையைக் காப்பவர்கள்) பின்வருமாறு:இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
*2 சப்தரிஷிகள் பின்வருமாறு:அகஸ்தியர், புலஸ்தியர், ஆங்கீரசர், கெளதமர், வசிஷ்டர், காச்யபர், மார்க்கண்டர்.
*3 நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர்.இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
*4 உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.

பாடல் 715 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - ஸிந்து பைரவி தாளம் - ஆதி - திஸ்ர நடை - 12

தான தந்த தான தந்த தான தந்த தான தந்த     தான தந்த தான தந்த ...... தனதான

தோலெ லும்பு சீந ரம்பு பீளை துன்று கோழை பொங்கு     சோரி பிண்ட மாயு ருண்டு ...... வடிவான 
தூல பங்க காயம் வம்பி லேசு மந்து நான்மெ லிந்து     சோரு மிந்த நோய கன்று ...... துயராற 
ஆல முண்ட கோன கண்ட லோக முண்ட மால்வி ரிஞ்ச     னார ணங்க ளாக மங்கள் ...... புகழ்தாளும் 
ஆன னங்கள் மூவி ரண்டு மாறி ரண்டு தோளு மங்கை     யாடல் வென்றி வேலு மென்று ...... நினைவேனோ 
வால சந்த்ர சூடி சந்த வேத மந்த்ர ரூபி யம்பை     வாணி பஞ்ச பாணி தந்த ...... முருகோனே 
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து     வாழ்பெ ருஞ்ச ராச ரங்க ...... ளுறைவோனே 
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு     வேடர் மங்கை யோடி யஞ்ச ...... அணைவோனே 
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவு கின்ற     மேரு மங்கை யாள வந்த ...... பெருமாளே.

தோல், எலும்பு, சீழ், நரம்பு, பீளை, அடைத்திருக்கும் கோழை, மேலே பொங்கும் ரத்தம் - இவையாவும் ஒரு பிண்டமாய் உருண்டு ஒரு வடிவம் ஏற்பட்டு, பருத்த, பாவத்துக்கு இடமான, சா£ரத்தை வீணாகச் சுமந்து, நான் மெலிவுற்று, தளர்கின்ற இந்த பிறவி நோய் நீங்கி என் துயரம் முடிவுபெற, விஷத்தை உண்ட எம் தலைவன் சிவன், எல்லா உலகங்களையும் உண்ட திருமால், பிரமன், மற்றும் வேதங்கள், ஆகமங்கள் யாவும் புகழ்கின்ற உன் திருவடியும், திருமுகங்கள் ஆறையும், பன்னிரண்டு தோள்களையும், அழகிய கரத்தில் விளங்கும் வெற்றி வேலாயுதத்தையும் என்றைக்கு நான் தியானிப்பேனோ? இளம்பிறையைச் சூடிய சிவனும், வேத மந்திர ஸ்வரூபியுமான அம்பிகை, கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே, ஐந்து மாயை (*1), ஐந்து வேகம் (*2), ஐந்து பூதம் (*3), ஐந்து நாதம் (*4) இவை வாழ்கின்ற அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே, வேண்டிய சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு வேடர்குலப் பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே, வீர லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற உத்தர மேரூரில் (*5) ஆட்சிபுரியும் பெருமாளே. 
(*1) மாயை ஐந்து - தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்.
(*2) வேகம் ஐந்து பலவகைப்படும் - வாயுவேகம், மனோவேகம், ஒளிவேகம், ஒலிவேகம், அசுவவேகம். வேகம் சக்தியென கொண்டால் - இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, சிற்சக்தி, பராசக்தி. வேகம் புலனாகக் கொண்டால் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
(*3) ஐந்து பூதம் - நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
(*4) ஐந்து நாதம் - தோல் கருவி - மத்தளம், உடுக்கை, துளைக் கருவி - குழல், நாதஸ்வரம், நரம்புக் கருவி - யாழ், வீணை, கஞ்சக் கருவி - ஜாலரா, ஜலதரங்கம், மிடற்றுக் கருவி - வாய்ப்பாட்டு, கொன்னக்கோல்.
(*5) உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.

பாடல் 716 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - ...;: தாளம் -

தானனத் தனதான தானனத் தனதான     தானனத் தனதான ...... தனதான

நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி     நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய் 
நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி     நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே 
பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி     பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச 
பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான     பார்வைசற் றருளோடு ...... பணியாயோ 
ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு     மாகமப் பொருளோரு ...... மனைவோரும் 
ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு     மாயிரத் திருநூறு ...... மறையோரும் 
வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக     வாகுசித் திரதோகை ...... மயிலேறி 
மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல     மான்மகட் குளனான ...... பெருமாளே.

நீண்ட மேகம் போல் இருண்ட கூந்தல் உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து, மிகவும் நேசம் அடைந்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாய், பூமியில் பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து, நீதியான மங்களகரமான வாழ்க்கையை வாழ நினையாமல், பாழுக்கே உணவாயிற்று என்னும்படியாக, மற்றவர்களுடைய பெயர்களை (தலைவர்களாக) கவிதையில் வைத்து, கோடிக் கணக்கான பாடல்கள் அமையும்படி இயற்றுகின்ற மோசக்காரப் பாவியாகிய நான் எங்ஙனம் வாழ்வேன்? (உனது) அன்பர்களுக்கு நீ வைத்துள்ள பார்வையை கொஞ்சம் திருவருள் வைத்து எனக்கும் பாலிக்க மாட்டாயா? திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், சிவாகமத்துக்கு உரிய மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும், ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து உலவும் ஞானிகளும், ஆயிரத்து இரு நூறு* மறையவர்களும் வாழ்கின்ற உத்தரமேரூரில்** வீற்றிருந்து, அற்புதமாக, அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி, பகைவன் எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே, மான் பெற்ற மகளான வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே. 
* இவ்வாறே மற்ற ஊர்களிலும் வாழும் மறையவர் எண்ணிக்கை வருமாறு: திருப்பெருந்துறை = 300, தில்லை = 3,000, திரு ஆக்கூர் = 1,000, திருவீழிமிழலை = 500, சீகாழி = 400, மதுரை = 48,000.
** உத்தர மேரூர் செங்கற்பட்டுக்கு தென்மேற்கே 18 மைலில் உள்ளது.

பாடல் 717 - உ த்தர஧ம்ருர் 
ராகம் - ....; தாளம் -

தான தந்தன தத்தா தத்தன     தான தந்தன தத்தா தத்தன          தான தந்தன தத்தா தத்தன ...... தனதான

மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு     மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்          வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில் 
மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்     வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்          வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி 
ஆத ரங்கொடு கெட்டே யிப்படி     ஆசை யின்கட லுக்கே மெத்தவும்          ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ 
ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத     ஆயி ரங்கலை கத்தா மத்திப          னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே 
சாத னங்கொடு தத்தா மெத்தென     வேந டந்துபொய் பித்தா வுத்தர          மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே 
தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்     நீதி தந்திர நற்சார் புற்றருள்          சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே 
வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்     வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்          வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ் 
மேரு மங்கையி லத்தா வித்தக     வேலொ டும்படை குத்தா வொற்றிய          வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.

(விலை) மாதர்களுடைய மார்பகங்களிலும், விரிந்த அழகிய மார்பில் விளங்கும் தன்மையை உடைய முத்து மாலையிலும், நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும், சேல் மீன் போன்ற கண்ணாகிய வேலிலும், மகிமை பொருந்திய மலருக்கு ஒப்பான பாதமாகிய இடத்திலும், அழகிய வஞ்சிக் கொடி போன்ற இடையிலும், உடலில் அணிந்துள்ள மாலையிலும், வானில் உள்ள இளம் பிறைக்கு ஒப்பான நெற்றியிலும் மோகம் கொண்டவனாய், பற்று வைத்துக் கெட்டுப் போய், ஆசைக் கடலுக்கே மிகவும் ஈடுபட்டவனாய் தவிப்புற்று, நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ? பன்னிரண்டு பெருமை வாய்ந்த தோள்களை உடைய அற்புதமானவனே, ஆயிரக் கணக்கான கலைகளுக்குத் தலைவனே, சாமானிய மனிதனாய் திரிந்து அலைகின்ற எனக்கு அருள் புரிவாயாக. ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மிகத் தத்தி தத்தி நடந்து போய், பொய் பேசும் பித்தனே மறு மொழி என்ன பேசுவாய் என்று சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி (திருமணப் பந்தலின் கீழ்) நிற்பவராய்ச் சபை நடுவில், தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை, தான் தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, நீதி முறையால் நல்ல காரணங்களைக் கூறி, கிருபை மிகவும் கொண்டு சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவ பெருமானின் செல்வக் குழந்தையே, வேதப் பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும் பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படிச் செய்த அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற உத்தரமேரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத் தக்க அறிவாளனே, வேற்படை முதலிய படைகளைக் கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய வள்ளியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே, பக்தர்களுடைய பெருமாளே. 
* உத்தர மேரூர் செங்கற்பட்டுக்கு தென்மேற்கே 18 மைலில் உள்ளது.

பாடல் 718 - மதுராந்தகம் 
ராகம் - ....; தாளம் -

தனதாந்த தத்த தனன தத்தத்     தந்த தத்த தந்த ...... தனதான

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்     கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர் 
குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்     கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே 
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்     கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத 
உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்     றுங்க ருத்தை யென்று ...... தருவாயே 
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்     ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே 
கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்     பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா 
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்     மந்த னிற்பி றந்த ...... குமரேசா 
மதுராந்த கத்து வடதி ருச்சிற்     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.

குதித்துப் பாய்ந்து ஓடும் ரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், தோலை உடையதும் ஐந்து பொறிகளை உடையதுமான இந்த உடம்பு, வினை மிகுந்து நிரம்பியுள்ள குணங்களுக்குப் பாத்திரமான இந்த உடம்புதான் சகல செல்வமுமாகும் என்று மேற்கொண்டு, அதனால் இளைத்துச் சோர்வுற்றுத் திரியாமல், மனத்திலே உதிக்கின்றதாகும் பரம்பொருளை, ஆத்ம தத்துவம் நீங்க, அழகிய கிண்கிணி, சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும் இரண்டு தாமரையை ஒத்த உன் திருவடிகளாம் தெப்பத்தை இனியாவது பற்றிக் கொண்டு வாழும் கருத்தை எனக்கு நீ எப்போது தருவாய்? கதை, சாரங்கம், வாள், பாஞ்சஜன்யம் என்ற சங்கு, வலிமை வாய்ந்த சுதர்ஸனம் என்ற சக்கரம் ஆகிய பஞ்ச ஆயுதங்களையும் தரித்த மேக நிறத்துத் திருமாலின் மருகனே, கருணையும் அஞ்சன மையும் கொண்ட தாமரையைப் போன்ற கண்களை உடைய அழகிய பசுமையான தினைப்புனத்தில் இருந்த கரும்பு போல் இனிய வள்ளியின் மணவாளனே, மன்மதனுக்கு யமனாக இருந்த சிவபிரானுக்குக் குழந்தையாக தாமரையில் பிறந்த* குமரேசனே, மதுராந்தகத்தில் உள்ள வட திருச்சிற்றம்பலம்** என்ற தலத்தில் அமர்ந்து விளங்கும் பெருமாளே. 
* சிவபிரானிடமிருந்து தோன்றிய ஆறு பொறிகளும் கங்கை வழியாக சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளாக தாமரை மீது தோன்றின - கந்த புராணம்.
** மதுராந்தகத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு வட திருச்சிற்றம்பலம் என்று பெயர்.மதுராந்தகம் செங்கற்பட்டுக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.

பாடல் 719 - மதுராந்தகம் 
ராகம் - பூர்வி கல்யாணி தாளம் - அங்கதாளம் - 15 
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமி-2 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதாந்த தத்த தனன தத்தத்     தந்த தத்த தந்த ...... தனதான

சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்     கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி 
சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்     கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச் 
செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்     த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ் 
சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்     றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான் 
அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்     கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ 
அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்     றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல 
மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்     குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா 
மதுராந்த கத்து வடதி ருச்சிற்     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.

மலை மகளாகிய பார்வதியின் பக்திக்கு உருகி தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய சிவனார் பலவித வரிசைக் கூத்துக்களையும், ஜதி (தாளம்) நடனங்களையும் ஆடுபவரும், ஜடாமுடியில் கங்கை ஆற்றை வைத்த நம் பெருமானும் ஆகிய சிவனாருக்கு பேச்சற்றுப் போய், செயல் இழந்து, மனம் அழியும்படியாக, என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெற நீ கூறிய உபதேசத்தை சிறியவனாகிய எனக்கும் நீ சொல்லி உதவினால் கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் பதவி குறைந்திடுமோ என்ன? வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி சமுத்திரத்தில் மாமரமாக ஒளிந்த சூரனைப் பிளந்து, தேவர்கள் வாழ்வுற, சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் சுற்றிய வலிமை வாய்ந்த, கடுமை கொண்ட, முழு நீல நிறமான மயிலைப் பாய்ந்தோடச் செய்தவனும், பழைய சிறந்த பொன்மயமான மேருமலையை செண்டால் அடித்தவனுமான* போர் விளையாட்டை உடையவனே, மதுராந்தகத்துக்கு ++ வடக்குப் பகுதியில் திருச்சிற்றம்பலம் என்னும் திருக்கோயிலில் அமர்ந்த பெருமாளே. 
* முருகன் உக்கிர பாண்டியனாக அவதரித்து பாண்டிய நாட்டுப் பஞ்சத்தை தீர்க்க பொன்மயமான மேருமலையை கையிலுள்ள செண்டாயுதத்தால் அடித்து பொன் கொட்டச் செய்த வரலாறு - திருவிளையாடற் புராணம்.
** மதுராந்தகத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு வட திருச்சிற்றம்பலம் என்று பெயர்.மதுராந்தகம் செங்கற்பட்டுக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.

பாடல் 720 - மதுராந்தகம் 
ராகம் - ....; தாளம் -

தனதாந்தன தான தனந்தன     தனதாந்தன தான தனந்தன          தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான

மனைமாண்சுத ரான சுணங்கரு     மனம்வேந்திணை யான தனங்களு          மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி 
மயமாம்பல வான கணங்குல     மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு          வணவாம்பிர மாத குணங்குறி ...... யின்பசார 
இனவாம்பரி தான்ய தனம்பதி     விடஏன்றெனை மோன தடம்பர          மிகுதாம்பதி காண கணங்கன ...... வும்பரேசா 
இடவார்ந்தன சானு நயம்பெறு     கடகாங்கர சோண வியம்பர          இடமாங்கன தாள ருளும்படி ...... யென்றுதானோ 
தனதாந்தன தான தனந்தன     தெனதோங்கிட தோன துனங்கிட          தனவாம்பர மான நடம்பயில் ...... எம்பிரானார் 
தமதாஞ்சுத தாப ரசங்கம     மெனவோம்புறு தாவ னவம்படர்          தகுதாம்பிர சேவி தரஞ்சித ...... வும்பர்வாழ்வே 
முனவாம்பத மூடி கவந்தன     முயல்வான்பிடி மாடி மையைங்கரர்          முகதாம்பின மேவு றுசம்ப்ரம ...... சங்கணாறு 
முககாம்பிர மோட மர்சம்பன     மதுராந்தக மாந கரந்திகழ்          முருகாந்திர மோட மரும்பர்கள் ...... தம்பிரானே.

மனைவி, பெருமை பொருந்திய மக்கள் ஆகிய சோர்தலைத் தருபவர்களும் மனம் நொந்து வெந்து போவதற்கு இடம் தருவதான செல்வங்களும், இறந்து விடப் போகின்ற என்னைப் பெற்ற தெய்வத்துக்கு ஒப்பான தாய், உற்றாராய்ப் பயனற்றவர்களான பிறர் மயமான பலவகைப்பட்ட கூட்டத்தார், குலத்தார் என்கின்ற மயக்கமும், யான், எனது என்று கூடியுள்ளனவாகிய, அளவு கடந்து செல்லும் குணமும் நோக்கமும், இனிமைக்கும், தக்கதாகப் பொருந்திய தாண்டிச் செல்லும் குதிரைகள், தானியங்கள், சொத்துக்கள், இருக்கும் ஊர் இவை எல்லாம் விட்டு நீங்கும்படி, என்னை ஏற்றுக்கொண்டு, மோன நிலையையும், மேலான மிக்கு நிற்கும் தெய்வத்தையும் நான் கண்டு களிக்க, கூட்டமான பெருமை தங்கிய தேவர்கள் ஏசுதலின்றி (நன்கு பொருந்திய) இடம் கொண்டு நிறைந்துள்ள, முழந்தாள்* நல்லதான, கடகம் அணிந்துள்ள கைகள், சிவந்த உடல், (இவைகளுக்கு) மேலான இடமாகிய, பெருமை பொருந்திய உனது திருவடியை அருளும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ? தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தன என்ற ஓசைகள் ஒலிக்கும்படியான மிக மேலான நடனத்தைச் செய்கின்ற எம்பிரானாகிய சிவபெருமானுடைய குழந்தையே, அசையாப் பொருள், அசையும் பொருள் என்றவாறு அனைத்தையும் பாது காத்தல் செய்யப் படைத்தவனே, புதுமை நிறைந்த, தக்கதான, தாம்பிரசூடம்** எனப்படும் சேவலால் வணங்கப் படுபவனே, இன்பம் தருகின்ற தேவர்கள் செல்வமே, (முருக வேள் நினைக்கும்) முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை உடையவரும், பெருச்சாளி*** வணக்கம் செய்யும்படி முயற்சி எடுத்துக் கொண்டவரும், பெண் யானை போன்ற வள்ளியின் பக்கத்தில் இமைப்பொழுதில் (காட்டானையாக) ஒளி விட்டு விளங்கியவருமான, ஐங்கரருமான விநாயக மூர்த்தியின் எதிரில் தோன்றிய தம்பியே, பொருந்தியுள்ள களிப்பு நிறைந்த அழகு செய்கின்ற கூட்டமாகிய ஆறு திரு முகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற பாக்கியவானே, மதுராந்தகமாகிய சிறந்த நகரில் விளங்கும் முருகனே, நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தம்பிரானே. 
* முருக வேளின் விசுவ ரூப நிலை தேவர் கூட்டத்துக்கு சானுவில் (முழந்தாளில்) காணப்பட்டது.
** தாம்பிர சூடம் - இது சிவந்த கொண்டையை உடைய சேவலைக் குறிக்கும். சூரனின் ஒரு பகுதி சேவலாக மாறி, முருகனது கொடியில் அமர்ந்து சேவை செய்தது.
*** கஜாமுகாசுரன் பெருச்சாளி வடிவத்துடன் விநாயகரை எதிர்க்க வந்தான். அப்போது அதன் மீதேறி அவனை வீழ்த்தி வாகனமாக ஆக்கிக் கொண்டார்.

பாடல் 721 - சேயூர் 
ராகம் - ...; தாளம் -

தனனாதன தானன தானன     தனனாதன தானன தானன          தனனாதன தானன தானன ...... தனதான

முகிலாமெனும் வார்குழ லார்சிலை     புருவார்கயல் வேல்விழி யார்சசி          முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர் 
முலைமாலிணை கோபுர மாமென     வடமாடிட வேகொடி நூலிடை          முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார் 
அகிசேரல்கு லார்தொடை வாழையின்     அழகார்கழ லார்தர வேய்தரு          அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி 
அனமாமென யாரையு மால்கொள     விழியால்சுழ லாவிடு பாவையர்          அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ 
ககனார்பதி யோர்முறை கோவென     இருள்காரசு ரார்படை தூள்பட          கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா 
கமலாலய நாயகி வானவர்     தொழுமீசுர னாரிட மேவிய          கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா 
மகிழ்மாலதி நாவல்ப லாகமு     குடனாடநி லாமயில் கோகில          மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா 
மதிமாமுக வாவடி யேனிரு     வினைதூள்பட வேயயி லேவிய          வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.

மேகம் என்று சொல்லத் தக்க நீண்ட கூந்தலை உடையவர்கள். வில்லைப் போன்ற புருவத்தை உடையவர்கள். கயல் மீன், அம்பு இவைகளைப் போன்ற கண்களை உடையவர்கள். சந்திரனைப் போன்ற முகம் உடையவர்கள். முத்துப் போன்ற பற்களைக் கொண்டு சிரிக்கின்ற விலைமாதர்கள். மார்பகங்கள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்களைப் போல் விளங்க மணி வட மாலைகள் அசைந்து விளங்க, கொடியைப் போலவும், நூல் போலவும் நுண்ணிய இடையில் வேலைப்பாடு சிறந்த பட்டுப் புடைவை விளங்கிய, மயில் போன்ற சாயலை உடையவர்கள். பாம்பை ஒத்த பெண்குறியை உடையவர்கள். வாழை போன்ற தொடை அழகினர்கள். சிலம்பு ஒலிக்க, பொருந்திய அழகியர்கள். பொன்னாலாகிய பாத கிண்கிணி ஒலி செய்ய நடந்து சென்று, அன்னப் பறவை என்னும்படி யாரையும் மோகம் கொள்ளும் கண்களால் சுழல விடுகின்ற பெண்களுடைய படுக்கையில் அடியேன் உடல் அழிபடுவேனோ? விண்ணுலக ஊரில் உள்ளவர்கள் கோ என்று முறையிட இருளைப் போலக் கரிய அசுரர்களுடைய சேனைகள் தூளாகவும் கடலும், (சூரனது )எழு கிரிகளும், பிற மலைகளும் பொடிபடும்படியாகவும் செலுத்திய வேலாயுதனே, தாமரையில் கோயில் கொண்டிருக்கும் நாயகி, தேவர்கள் தொழுகின்ற சிவபெருமானுடைய இடது பக்கத்தில் உள்ளவள், கருணைக்கு இருப்பிடமானவள், ஞான பரதேவதை உமாதேவி அருளிய குழந்தையே, மகிழ மரம், மல்லிகை, நாவல் மரம், பலா, பாக்கு மரம் ஆகியவைகளில் விளையாடும் நிலா ஒளி, மயில், குயில் ஆகியவை மகிழ்ந்திருக்கும் நாட்டில் உள்ள வள்ளி மலையில் இருந்த பெருமை மிக்க வள்ளி நாயகியின் கணவனே, சந்திரனைப் போன்ற அழகிய முகத்தனே, அடியேனுடைய இருவினைகளும் தூளாகவே அம்பைச் செலுத்தியவனே, வளவா புரி என்னும் சேயூரில் வாழும் மயில் வாகனப் பெருமாளே. 
* சேயூர் இப்போது செய்யூர் என்று வழங்கப்படும். இதற்கு வளவாபுரி என்ற பெயரும் உண்டு. மதுராந்தகத்துக்கு கிழக்கே 16 மைலில் உள்ள தலம்.

பாடல் 722 - திருவக்கரை 
ராகம் - குந்தலவராளி தாளம் - ஆதி

தனதன தத்தன தனதன தத்தன     தனதன தத்தன ...... தனதானா

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே 
கருவழிதத்திய மடுவ தனிற்புகு     கடுநர குக்கிடை ...... யிடைவீழா 
உலகு தனிற்பல பிறவி தரித்தற     வுழல்வது விட்டினி ...... யடிநாயேன் 
உனதடி மைத்திரள் அதனினு முட்பட     வுபய மலர்ப்பத ...... மருள்வாயே 
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட     நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா 
குணதர வித்தக குமர புனத்திடை     குறமக ளைப்புணர் ...... மணிமார்பா 
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு     மணிதிரு வக்கரை ...... யுறைவோனே 
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன     அவைதரு வித்தருள் ...... பெருமாளே.

கலகல என்ற ஆரவாரச் சத்தத்துடன் சில நூல்களை ஓதிப் பிதற்றுவது ஒழியவேண்டிய ஒன்றாகும். உன்னைக் கொஞ்சமேனும் துதிக்காமல், கருக்குழியில் வேகமாகச் செலுத்தும் பள்ளத்தில் புகுந்து பொல்லாத நரகத்தின் மத்தியில் விழுந்து விடாமல், இவ்வுலகில் பல பிறப்புக்களை எடுத்து மிகவும் திரிதலை விட்டு, இனியாவது கீழான நாய் போன்ற அடியேனும் உன் அடியார் கூட்டத்தின் உள்வட்டத்தில் ஒருவனாகும்படியாக உன்னிரு மலர்ப் பாதங்களை அருள்வாயாக. கிரெளஞ்சமலைக் கூட்டங்கள் பொடியாகும்படி, அலைவீசும் கடல் நீரின்றி வற்றிப் போகும்படி, அசுரனாம் சூரனோடு போர் செய்த வேல் வீரனே, நற்குணத்தவனே, ஞானமூர்த்தியே, குமரனே, தினைப்புனத்தின் இடையே குறமகள் வள்ளியை மணந்த அழகிய மார்பனே, அலை வீசும் நீரிலே தவழ்கின்ற சங்குகள் பிரகாசிக்கின்ற அழகிய திருவக்கரைத்* தலத்தில் வீற்றிருப்பவனே, உன் அடியார்களுடைய மனத்தில் என்னென்ன விருப்பங்கள் உள்ளனவோ அன்ன ஆசைகளை வரவழைத்து நிறைவேற்றி அருளும் பெருமாளே. 
* திருவக்கரை தென்னாற்காடு மாவட்டத்தில் மயிலம் ரயில் நிலையத்திலிருந்து 12 மைலில் உள்ளது.

பாடல் 723 - திருவக்கரை 
ராகம் - ....; தாளம் -

தத்தன தத்தன தத்தன தத்தன     தத்தன தத்தன தத்தன தத்தன          தத்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான

பச்சிலை யிட்டுமு கத்தைமி னுக்கிகள்     குத்திர வித்தைமி குத்தச மர்த்திகள்          பப்பர மட்டைகள் கைப்பொருள் பற்றிட ...... நினைவோர்கள் 
பத்திநி ரைத்தவ ளத்தர ளத்தினை     யொத்தந கைப்பில்வி ழிப்பில்ம யக்கிகள்          பக்ஷமி குத்திட முக்கனி சர்க்கரை ...... யிதழூறல் 
எச்சி லளிப்பவர் கச்சணி மெத்தையில்     இச்சக மெத்தவு ரைத்துந யத்தொடு          மெத்திய ழைத்துஅ ணைத்தும யக்கிடு ...... மடமாதர் 
இச்சையி லிப்படி நித்தம னத்துயர்     பெற்றுல கத்தவர் சிச்சியெ னத்திரி          இத்தொழி லிக்குணம் விட்டிட நற்பத ...... மருள்வாயே 
நச்சர விற்றுயில் பச்சைமு கிற்கரு     ணைக்கடல் பத்மம லர்த்திரு வைப்புணர்          நத்துதரித்தக ரத்தர்தி ருத்துள ...... வணிமார்பர் 
நட்டந டுக்கட லிற்பெரு வெற்பினை     நட்டர வப்பணி சுற்றிம தித்துள          நத்தமு தத்தையெ ழுப்பிய ளித்தவர் ...... மருகோனே 
கொச்சைமொ ழிச்சிக றுத்தவி ழிச்சிசி     றுத்தஇ டைச்சிபெ ருத்தத னத்திகு          றத்தித னக்கும னப்ரிய முற்றிடு ...... குமரேசா 
கொத்தவிழ் பத்மம லர்ப்பழ னத்தொடு     குற்றம றக்கடி கைப்புனல் சுற்றிய          கொட்புள நற்றிரு வக்கரை யுற்றுறை ...... பெருமாளே.

பச்சிலைப் பொடியைப் பூசி முகத்தை மினுக்குபவர்கள். வஞ்சகமான வித்தைகளில் மிக்க சாமர்த்தியசாலிகள். கூத்தாடும் பயனிலிகள். (வருபவருடைய) கைப் பொருளை அபகரிப்பதிலேயே எண்ணம் வைப்பவர்கள். வரிசை வரிசையாக உள்ள வெள்ளை நிற முத்துக்களை ஒத்ததான பற்களாலும், கண்களாலும் மயக்குபவர்கள். அன்பு மிகும்படியாக (மா, பலா, வாழை என்னும்) முப்பழங்களையும் சர்க்கரையையும் போன்ற வாயிதழ் ஊறலாகிய எச்சிலைக் கொடுப்பவர்கள். கச்சைக் கயிற்றாலாகிய படுக்கையில் முகஸ்துதியான வார்த்தைகளை நிரம்பப் பேசி பக்குவமாக ஏமாற்றி வஞ்சித்து அழைத்து மயக்கும் அழகிய விலைமாதர்கள் (மேலுள்ள) ஆசையால் இவ்வண்ணம் நாள் தோறும் மன வருத்தத்தை அடைந்து, உலகோர் சீ சீ என்று வெறுப்புக் காட்டத் திரிகின்ற இந்தச் செயலும், இந்தக் குணமும் நான் விட்டொழிக்க நல்ல திருவடிகளைத் தருவாயாக. விஷம் உள்ள பாம்பு (படுக்கையில்) துயில்கின்ற பச்சை மேகம் போன்றவரும், கருணைக் கடலானவரும், தாமரை மலரில் வாசம் செய்யும் லக்ஷ்மியைச் சேர்பவரும், சங்கு தரித்த கையை உடையவரும், துளசி மாலையை அணிந்த மார்பினரும், பாற்கடலின் நட்டநடு மத்தியில் பெரிய மந்தர மலையை நாட்டி, பாம்பாகிய வாசுகியை கயிறாகக் கட்டி, சுற்றிலும் மத்தால் கடைந்து, உள்ளத்தில் ஆசைப்பட்ட அமுதத்தை வரச்செய்து, தேவர்களுக்கு அளித்த திருமாலின் மருகனே, . மழலைப் பேச்சினளும், கரிய கண்களை உடையவளும், சிறிய இடையை உடையவளும், பெரிய மார்பை உடையவளும் (ஆன) குறப்பெண்ணாகிய வள்ளிக்கு மனத்தில் ஆசை கொண்ட குமரேசனே, இதழ்க் கொத்துக்கள் விரிகின்ற தாமரை மலர் நிறைந்த வயல்களும் (மருத நிலங்களும்), நன்றாக ஓடும் கடிகை என்னும் ஆற்றின் நீரும் சுற்றியுள்ள நல்ல திருவக்கரை* என்னும் ஊரில் பொருந்த வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவக்கரை தலம் மயிலத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 724 - சிறுவை 
ராகம் - ஸிந்து பைரவி தாளம் - கண்டசாபு - 2 1/2 - எடுப்பு - 3/4 தள்ளி

தந்ததன தனதான தந்ததன தனதான     தந்ததன தனதான ...... தனதான

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற     அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே 
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர     ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக 
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு     மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண 
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற     மைந்துமயி லுடனாடி ...... வரவேணும் 
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா     புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா 
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு     பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா 
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப     தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா 
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான     தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

தேவேந்திரன் மீண்டும் தேவலோகத்தில் குடிபுகச்செய்து, நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி அவர்களை மடியச்செய்து, தேவர்களின் மனம் மிகக் களிப்படையும்படி அருள்செய்து, காளியுடன் நடனமாடுகின்ற சிவபெருமான் மகிழ்ச்சி அடைய, விநாயகனும், உமாதேவியும் மிகக் களிப்படைய, பூமியில் உள்ளோரும், முநிவர்களும், எட்டுத்திசையில் உள்ளோரும், இந்திரனும், பிரமனும் எதிரே நின்று கண்டு களிக்க, லக்ஷ்மியுடன் திருமாலும் தம்மகிழ்ச்சியை இன்பமாகக் கூற, வலிமையான மயிலுடன் ஆடி என்முன் நீ வரவேண்டும். தாமரை போன்ற கண்களை உடையவனே, தேவர்கள் வளர்த்த மகள் தேவயானையின் மணவாளனே, அறிவு நிறைந்த மெய்ஞ்ஞானியே, உயர்ந்த புயங்களை உடையவனே, பொங்கிய கடலுடன், கிரெளஞ்சமலையையும் பிளவுபடச் செய்து ஏழு மலைகளின் வலிமையையும் பாய்ந்து அழித்த பொன்னொளி பரப்பிச் சுடர் வீசும் கூரிய வேலாயுதனே, குளிர்ந்த முத்துமாலையை அணிந்த மார்பனே, செம்பொன்னின் அழகு நிறைந்த உருவத்தோனே, நல்ல தமிழில் மிகுந்த நேசம் கொண்ட முருகேசப் பெருமானே, எப்போதும் உன் அடியார்களின் சிந்தையிலே குடிகொண்ட குளிர்ந்த சிறுவைத்தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.

பாடல் 725 - சிறுவை 
ராகம் - கேதாரம் தாளம் - அங்கதாளம் - 8 1/2 - எடுப்பு - 1/2 தள்ளி 
தகதிமி தகதிமி-4, தகதகிட-2 1/2, தகதிமி-2

தானன தானன தானான தானன     தானன தானன தானான தானன          தானன தானன தானான தானன ...... தனதான

சீதள வாரிஜ பாதாந மோநம     நாரத கீதவி நோதாந மோநம          சேவல மாமயில் ப்¡£தாந மோநம ...... மறைதேடுஞ் 
சேகர மானப்ர தாபாந மோநம     ஆகம சாரசொ ரூபாந மோநம          தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப் 
பாதக நீவுகு டாராந மோநம     மாவசு ரேசக டோராந மோநம          பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது 
பார்வதி யாள்தரு பாலாந மோநம     நாவல ஞானம னோலாந மோநம          பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய் 
போதக மாமுக னேரான சோதர     நீறணி வேணியர் நேயாப்ர பாகர          பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா 
போதக மாமறை ஞானாத யாகர     தேனவிழ் நீபந றாவாரு மார்பக          பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா 
மாதவர் தேவர்க ளோடேமு ராரியு     மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்          மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா 
வானவ ரூரினும் வீறாகி வீறள     காபுரி வாழ்வினு மேலாக வேதிரு          வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.

குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே, போற்றி, போற்றி, நாரதருடைய இசையில் மகிழ்பவனே, போற்றி, போற்றி, சேவற்கொடியோனே, சிறந்த மயில்மீது பிரியமானவனே, போற்றி, போற்றி, வேதங்கள் தேடும் அழகான கீர்த்தியை உடையோனே, போற்றி, போற்றி, ஆகமங்களின் சார ஸ்வரூபமாக உள்ளவனே, போற்றி, போற்றி, தேவர்களின் சேனைக்குத் தலைவனே, போற்றி, போற்றி, நற்கதி அடைய, பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே, போற்றி, போற்றி, பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக கொடுமை காட்டுபவனே, போற்றி, போற்றி, இவ்வுலகிலே ஜயவீரனாக விளங்குபவனே, போற்றி, போற்றி, மலைமகள் பார்வதி பெற்றெடுத்த செல்வமே, போற்றி, போற்றி, வாக்கிலே வித்தகனே, ஞான மனத்தில் உலவுகின்றவனே, போற்றி, போற்றி, பாலகுமாரசுவாமீ, போற்றி, போற்றி, நினதருளைத் தருவாயாக. யானையின் சிறந்த முகத்தோனுக்கு நேர் இளைய சகோதரனே, திருநீறு அணிந்த சடைப் பெருமானுக்குப் பிரியமானவனே, ஞான சூரியனே, லக்ஷ்மிதேவியின் மருமகனே, ஈசனே, பெருங் கடலைப் பகைத்து வேல் விட்ட சூரனே, சிறந்த வேதங்களை போதிக்க வல்லவனே, ஞானனே, கருணா மூர்த்தியே, தேன் சொட்டும் கடப்பமலரின் மணம் வீசும் திருமார்பை உடையவனே, பூரணச் சந்திரனைப் போல விளங்கும் ஆறு முகத்தானே, முருகேசா, தவ முநிவர்கள், தேவர்கள, அவர்களுடன் திருமாலும், தாமரை மலரின் மீதுள்ள பிரமனும், யாவரும் புகழும் நாயகனே, பெரிய உலகங்கள் ஏழிலும் மேலான தலைவனான வடிவேலனே, தேவர்களது ஊரான அமராபுரியைக் காட்டிலும் மேம்பட்ட, புகழ் பெற்ற குபேரன் ஊராகிய அளகாபுரியைக் காட்டிலும் மிகச் சிறந்த, லக்ஷ்மி வாசம் செய்யும் சிறுவாபுரித் தலத்தின் செல்வமே, தேவர் தலைவர்களுக்கெல்லாம் பெருமாளே. 
* சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.

பாடல் 726 - சிறுவை 
ராகம் - பீம்பளாஸ் தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12

தனன தான தனன தந்த தனன தான தனன தந்த     தனன தான தனன தந்த ...... தனதான

பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து     பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப் 
பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி     பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே 
நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த     நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே 
நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி     நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ 
பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று     பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப் 
பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து     புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே 
சிறுவ ராகி யிருவ ரந்த கரிப தாதி கொடுபொ ருஞ்சொல்     சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச் 
செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த     சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.

இந்தப் பிறப்புக்கு என்று ஏற்பட்ட உடலிலே புகுந்து, நல்வழி இல்லாத வேறு வழிகளிலே நெருங்கிப்போய், நோய் முதலிய துக்கங்களின் வேதனையுடன் தடுமாறி, பெருகும் கெட்ட வினைகளினால் கஷ்டப்பட்டு, இவ்வாறு பிறப்புக்கள் தோறும் அலைச்சல் அடைந்து, பிறவியின் உண்மைத்தன்மை ஏதும் புலப்படாத இந்தப் பிறப்பையே நம்பி அழிந்து போகாமல், தேன் நீங்காத மலர்கள் நிரம்பியதும், அருமையான மெளன வழியைத் திறந்து காட்டுவதுமான உனது தாமரைப் பாதங்கள் என் மனத்தை விட்டு நீங்காமல், மனிதர்களும், தேவர் தலைவர்களும் வணங்குகின்ற இனிமையான உன் தரிசனத்தை விரும்பி நன்மை அடையும் பாக்கியத்தை யான் என்று பெறுவேனோ? ஐம்பொறிகளும் தவறான வழியில் போகாமல் காத்திருந்த நக்கீர முனிவர் (குகையில் அடைபட்டாலும்) தமது நித்திய அநுஷ்டானங்களை தவறாமல் நின்று காத்த குகையிலே மன அலைச்சலுற்று, குகையில் அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த ராட்சசனை* வெல்ல நினைந்த நக்கீரர் உய்யும் வழியை நாடியபோது, ஒப்பில்லாத அன்பு வழியிலே கிருபை கூர்ந்து, உன் மயில் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து, புளகாங்கிதம் கொள்ளுமாறு மிக்க மகிழ்ச்சி கொண்டு, (நக்கீரரை குகையினின்று மீட்டு) திருமுருகாற்றுப்படை என்ற தமிழ் மாலையைப் புனைந்த முருகனே, சிறுவரான லவ, குசர் என்னும் ஸ்ரீராமரின் புதல்வர்கள் இருவரும் அந்த யானைப்படை, காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வாசகங்களுடன் வில் ஏந்திய ஸ்ரீராமருடன் எதிர்த்துப் போர் செய்து, வெற்றி பெற்ற நகரமாகிய சிறுவையில்** அமர்ந்த, குபேரப்பட்டினம் போல வளப்பம் மிக்கதான சிறுவையில் வீற்றிருந்த, வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே. 
* குதிரை முகத்தைக் கொண்ட ஒரு பெண் பூதத்தினின்றும் நக்கீரரை முருகன் காத்த வரலாறு.
** சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.

பாடல் 727 - சிறுவை 
ராகம் - ...; தாளம் -

தான தந்தன தானன தானன     தான தந்தன தானன தானன          தான தந்தன தானன தானன ...... தனதான

வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்     காத லின்பொருள் மேவின பாதகர்          வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி 
வேளை யென்பதி லாவசை பேசியர்     வேசி யென்பவ ராமிசை மோகிகள்          மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும் 
மால யன்பர னாரிமை யோர்முனி     வோர் புரந்தர னாதிய ரேதொழ          மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே 
வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி     யேவி ரும்பி வினாவுட னேதொழ          வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே 
நீல சுந்தரி கோமளி யாமளி     நாட கம்பயில் நாரணி பூரணி          நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி 
நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ     காம சுந்தரி யேதரு பாலக          நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச 
ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற     மாநி லங்களெ லாநிலை யேதரு          ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே 
ஆட கம்பயில் கோபுர மாமதி     லால யம்பல வீதியு மேநிறை          வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.

வேல் இரண்டு என்று கூறும்படியான நீண்ட கண்களை உடைய விலைமாதர்கள் ஆசையுடன் பொருளை விரும்பும் பாதகிகள் ஆவர். வந்தவரிடம் வீணாகப் பகைத்து உள்ளத்தை ஆராய்பவர். ஊமைகள் போல இருப்பவர்கள். விலை பேசி வாதாடி, நேரம் என்பது இல்லாமல் பழிப்புச் சொற்களைப் பேசுபவர். பரத்தையர் எனப்படும் இவர்கள் இசையில் ஆசை கொள்பவர். இத்தகைய விலைமாதர்கள் மீது மனம் கசிதலுற்று அழியும் ஆசையில் திரிகின்ற சிறியேனும், திருமால், பிரமன், சிவனார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர் தொழும்படியான பெரிய தவத்தைப் பெற்ற உனது இரு திருவடிகளை நாள் தோறும் மறக்காமல், நல் வாழ்வைத் தரவல்ல சிவ போகத்தை விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய வழியையே நான் விரும்பி ஆராய்ச்சி அறிவுடன் தொழுது, வாழும் வரத்தைத் தருவாயாக. அடியேனுடைய வருத்தங்களை நீக்கி அருள்வாயாக. நீல நிற அழகி, இளமை வாய்ந்தவள், பச்சை நிறம் உடையவள், கூத்துக்கள் பல நிகழ்த்தும் நாரணி, நிறைந்தவள், சிறந்த ஐந்தாவது சக்தியாகிய அனுக்கிரக சக்தி, திரி சூலத்தைத் தரித்தவள், மாலையை அணிந்தவள், உமையவள், காளி, அன்பர்கள் அருகில் விளங்கி உதவும் குருக்கத்திக் கொடி போன்றவள், சிவகாம சுந்தரி ஆகிய பார்வதி ஈன்ற குழந்தையே, கங்கை நீர் தங்கும் சடையை உடைய சிவபெருமான் பெற்ற குருவாகிய முருகேசனே, ஆல் இலையில் இருந்தபடியே உலகத்தில் உள்ளவர்கள் நிலை பெற்று வாழவும், பெரிய கிரகங்கள் எல்லாம் நிலைத்து இயங்கவும் காக்கின்ற இடையர் குலத்தோன், நமக்கு உரிய திருவூரகம்* என்னும் தலத்தில் விளங்கும், திருமாலின் மருகனே, பொன் போல விளங்கும் கோபுரம், பெரிய மதில்கள், கோயில், பல வீதிகளும் நிறைந்துள்ள அழகிய சிறுவாபுரியில்** வீற்றிருக்கும் பெருமாளே. 
* சிறுவாபுரியில் உள்ள திருமாலுக்கு 'திருவூரகப் பெருமாள்' என்று பெயர்.
** சிறுவைத்தலம், சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே 7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'.'லவ - குசர்' ஆகிய சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.

பாடல் 728 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -

தனதன தான தானன, தனதன தான தானன     தனதன தான தானன ...... தனதான

அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு     மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத் 
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை     யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந் 
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு     துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத் 
தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்     துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ 
அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு     மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே 
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை     அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே 
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை     யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர் 
விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்     விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.

வலிமை வாய்ந்த கூரிய வேல்கள், அம்புகள் ஆகியவற்றைக் காட்டிலும் ஓடிப்பாய்வதில் நன்கு தேர்ந்த கூர்மையான கண்களாலும், காம மயக்கம் எனப்பட்ட மதயானையின் இடத்துள்ள தந்தம் போன்றதும், வினையின் அளவே அளவாகக் கொண்டதுமான, மிக்கெழுந்த மார்பகத்தாலும், அதன் தோற்றத்தை மூடி மறைக்கும் ஆடையின் அழகாலும், உடுக்கை போன்ற இடையாலும், வாலிபர்கள் துயரம் அடைய மாய வித்தையுடனும் ஒப்பற்ற ¨தரியத்துடனும் பிணங்குகின்ற பொது மகளிரைத் துணையாகக் கொண்டு, அவர்களை வணங்கி, அவர்களுடைய பாதங்களைப் புகழ்ந்து, உன்னுடைய பரம்பரையில் வந்தவன் நான் என்று கூறி, வெகு தூரம் உயர்ந்து எழும் அலையில் பட்டு அலமந்து போகும் விளக்குமாற்றுக் குச்சி போல் உயிர்ச் சுழற்சி உறுவேனோ? காட்டினுள்ளே இருந்த வேடர்களின் பெண்ணான வள்ளியுடன் உன் காதலைத் தெரிவித்துப் பேசும் பேச்சையும், அவளுடைய திருவடிகளைத் தொழுது விளையாடும் ஆண்மைக் குணத்தையும் உடையவனே, அழகிய பன்னிரு தோள்களை உடைய ஆறுமுக வேளே என்று உன்னை ஞானத்துடன் ஓதுகின்ற மகா தவசிகளுக்கு பெரிய செல்வமாக உள்ளவனே, ரிஷப வாகனத்தை உடைய சிவபெருமான் மீது அன்பு மிகவும் உள்ளத்தில் கொண்ட அடியார்களின் தீவினைகள் சிதறுண்டு தூரத்தில் விலகி ஓட, தன்னிடத்தே வந்து சேர்ந்து தரிசிப்பதான பழைமை வாய்ந்த இத்தலத்தில், நறு மணம் நிறைந்த மயில் போன்ற மாதர்கள் ஆர்வத்துடன் நடனம் ஆடுகின்ற திருஆமாத்தூர்* என்னும் தலத்தில், வீரம் வாய்ந்த மயிலின் மேல் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலயத்திலிருந்து 4 மைல் வடமேற்கே உள்ளது.

பாடல் 729 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -

தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன     தந்த தத்தன தானாதன ...... தனதான

கண்க யற்பிணை மானோடுற வுண்டெ னக்கழை தோளானது     நன்க மைக்கின மாமாமென ...... முகையான 
கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுற     விஞ்சு மைப்பொரு கார்கோதைகொ ...... டுயர்காலன் 
பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள்     மன்பி டிப்பது போல்நீள்வடி ...... வுடைமாதர் 
பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறு     கிஞ்சி லத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய் 
விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடு     விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி 
வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர்     வெங்க யத்துரி யார்போர்வையர் ...... மிகுவாழ்வே 
தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதல     முங்கி ளைத்திட வானீள்திசை ...... யொடுதாவித் 
தண்ட ரக்கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசை     சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.

கண்ணுக்கு கயல் மீனோடும், பெண்மானோடும் சம்பந்தம் உண்டு என்றும், கரும்பு போன்ற தோள் நல்ல மூங்கிலுக்கு ஒப்பாகும் ஆம் ஆம் என்றும் சொல்லும்படியாக, மொட்டான தாமரை போன்று வளர்ந்து மிக்கெழுந்துள்ள கூரிய பெரிய மார்பகம் யானையின் இரண்டு தந்தங்களுக்கு ஒப்பானவை எனவும், நிரம்பிய இருளுக்கு ஒப்பான கருமேகம் போன்ற கூந்தல் எனவும் இவைகளைக் கொண்டு, பெருமை வாய்ந்த யமனே பெண் என்னும் ஓர் உருவுக்கு உண்டான ஆடம்பரமான வேஷத்தை இன்று எடுத்துக் கொண்டு வந்து, இளைஞோர்களின் உயிரை நன்றாகப் பிடிப்பது போல, பெரும் அழகு வாய்ந்த மாதர்களின் பிறகே தனத்தைச் செலவழிக்கும் மாமோகத்தில் விருப்பத்தை வைத்து, நான் அழிந்து போகாமல் ஒரு சிறிய அளவுக்காவது உனது திருவடிகளை விரும்ப திருவருளைத் தருவாயாக. விண்ணுலகுக்குச் சொந்தமானவனும், உடலெல்லாம் கண் கொண்டவனுமாகிய இந்திரன், பிரமனுடனும், பேரறிவாளனாகிய திருமாலுடனும் விழுந்து வணங்கும் திருவடியை உடையவர், (நந்தியாகிய) ரிஷப வாகனத்தின் மேல் ஏறுபவர், விருப்பத்துக்கு இடமான திருமார்பை உடைய உமையாள் விரும்பி அமரும் சந்தனம் பூசிய புயங்களை உடைய அர்த்த நா¡£சுரர், கொடிய யானையின் தோலை நிரம்பின போர்வையாகக் கொண்டவர் ஆகிய சிவபெருமானின் பெரும் செல்வமே, குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருவாமாத்தூரில்* ஆசை கொண்டு வீற்றிருந்து, திருவருளால் உலகம் யாவையும் செழிப்புற்று ஓங்க, வானளாவிய பெரிய திசைகளிலும் பரந்து நிறைந்து யாவரையும் வருத்திய அசுரர்கள் கோ கோ என்று அலறி பயந்து ஓட, பெரிய மாமரத்தின் (உருவில் ஒளிந்திருந்த சூரனின்) மீது கோபமும் வலிமையும் கொண்ட வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது.

பாடல் 730 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -

தனதன தானத் தானன, தனதன தானத் தானன     தனதன தானத் தானன ...... தனதான

கருமுகில் போல்மட் டாகிய அளகிகள் தேனிற் பாகொடு     கனியமு தூறித் தேறிய ...... மொழிமாதர் 
கலவிகள் நேரொப் பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்     கனதன பாரக் காரிகள் ...... செயலோடே 
பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக் காரிகள்     பொருளள வாசைப் பாடிகள் ...... புவிமீதே 
பொதுவிகள் போகப் பாவிகள் வசமழி வேனுக் கோரருள்     புரிவது தானெப் போதது ...... புகல்வாயே 
தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ     சமனிலை யேறப் பாறொடு ...... கொடிவீழத் 
தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல     தசையுண வேல்விட் டேவிய ...... தனிவீரா 
அரிதிரு மால்சக் ராயுத னவனிளை யாள் முத் தார்நகை     அழகுடை யாள்மெய்ப் பாலுமை ...... யருள்பாலா 
அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய     அழகர்தென் மாதைக் கேயுறை ...... பெருமாளே.

கரிய மேகம் போன்றதும் வாசனை கொண்டுள்ளதும் ஆகிய கூந்தலை உடையவர்கள். தேனில் வெல்லத்துடன், பழம், அமுதம் இவைகள் ஊறியது போன்ற இனிய பேச்சுக்களை உடையவர்கள் இந்த விலைமாதர்கள். புணர்ச்சியைத் தருதற்கு நேரான ஏற்புடையவர்கள். செருக்கு உடையவர்கள். காமமும் கோபமும் மிக்கவர்கள். வட்டமான மார்ப் பாரத்தை உடையவர்கள். வேகத்துடன் சண்டை செய்யும் கயல் மீனையும் வாளை மீனையும் கடக்க வல்ல கண்களை உடையவர்கள். கொள்ளைக்காரிகள். பொருள் எவ்வளவோ அவ்வளவுக்குத் தகுந்தபடித் தங்கள் ஆசையைச் செலுத்துபவர்கள். பூமியில் இப் பொது மகளிர் காம இன்பத்தைத் தரும் பாவிகள், ஆகிய இவர்கள் வசம் அழிகின்ற எனக்கு ஒப்பற்ற உனது திருவடியை அருள் புரிவது தான் எப்போது என்பதைச் சொல்லி அருள்க. கற்பகத் தருவை அழித்த ¨தரியத்தை உடைய அசுரர்களும், அவர்களுடைய சுற்றத்தாரும் மாண்டு பொடிபட, யமனுடைய கொலைத் தொழில் பெருக, பருந்துகளுடன் அண்டங்காக்கைகள் (போர்க்களத்துக்கு) விரும்பி வந்து சேர, தனதன தானத் தானன என்ற இவ்வாறான சந்தங்களுடன் இசை பாடி பேய்கள் பல விதமான மாமிசங்களை உண்ணும்படி வேலைச் செலுத்தி அனுப்பிய ஒப்பற்ற வீரனே, அரி, திருமால், சக்ராயுதன் என்று சொல்லப்படுபவனுக்குத் தங்கையும், முக்தாம்பிகை என்னும் பெயரை உடையவளும் ஆகிய அழகு உடையவள், சிவபெருமானுடைய உடலில் ஒரு பாகத்தில் உள்ள உமா தேவி ஈன்ற மகனே, பாம்புடன், பூளை என்னும் பூவால் ஆகிய மாலையையும், சந்திரனையும், அறுகம் புல்லுடன் சடையில் சூடிய அழகுடைய சிவபெருமான் இருக்கும் எழிலுடைய திருவாமாத்தூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வடமேற்கில் 4 மைலில் உள்ளது.

பாடல் 731 - திருவாமாத்தூர் 
ராகம் - ....; தாளம் -

தான தனதன தனதன தனதன     தான தனதன தனதன தனதன          தான தனதன தனதன தனதன ...... தனதான

கால முகிலென நினைவுகொ டுருவிலி     காதி யமர்பொரு கணையென வடுவகிர்          காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங் 
கான மமர்குழ லரிவையர் சிலுகொடு     காசி னளவொரு தலையணு மனதினர்          காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ் 
சால மயல்கொடு புளகித கனதன     பார முறவண முருகவிழ் மலரணை          சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச் 
சாதி குலமுறு படியினின் முழுகிய     தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்          தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே 
வேலை தனில்விழி துயில்பவ னரவணை     வேயி னிசையது நிரைதனி லருள்பவன்          வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே 
வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது     வேடை கெடவமு தருளிய பொழுதினில்          வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப 
வாலி யுடனெழு மரமற நிசிசரன்     வாகு முடியொரு பதுகர மிருபது          மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே 
வாச முறுமலர் விசிறிய பரிமள     மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக          வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.

உரிய காலத்தில் பெய்த மழையைக் கண்டால் வரும் மகிழ்ச்சியைப் போல் உருவம் இல்லாதவனான மன்மதன் கொல்வதற்குப் போரிட விட்ட அம்பு எனவும், மாவடுவின் கீற்று எனவும், வந்து இதைப் பாருங்கள் என்றும் இளைஞர்கள் மிகுந்துரைக்கும் கயல் மீன் போன்ற கண்களாலும், காடு போன்ற கூந்தலை உடைய விலைமாதர்கள் சண்டைக் கூச்சலுடன், (கொடுத்த) பொருளுக்குத் தக்கபடி ஒருதலைக் காமம் பொருந்திய மனம் கொண்டவராய், இத்தகைய பொய்க்காமம் கொண்ட சில கபட நெஞ்சத்தினராய் வஞ்சனைப் பேச்சு பேசும் காமசாஸ்திரங்களாலும் மிக்க மோகம் கொண்டு, புளகாங்கிதம் பூண்ட கனத்த மார்பின் பாரம் அழுந்த, பொருந்திய வாசனை வீசுகின்ற மலர்ப் படுக்கை உள்ள துயிலில் மிக்க புணர்ச்சி இன்பத்தில் அழிவுறும் அடியேனை, சாதி குலம் முதலியவை உள்ள இப் பூமியில் வந்து பிறந்து, முற்றும் அனுபவிக்கின்ற சிறுமை நீங்க, வழி வந்து உதவுகின்ற பர வெளியில் உள்ள திருவடியை அடைவதையும், தவ நெறியை மிகவும் நினைப்பதையும் தந்து அருளுவாயாக. பாற்கடலில் ஆதி சேஷனாகிய பாம்புப் படுக்கை மேல் கண் துயில்பவன், புல்லாங்குழலின் இசையால் பசுக் கூட்டங்களுக்கு அருள் புரிபவன், வீரமுள்ள குதிரைகளைச் செலுத்தின சாரதியான கண்ணபிரான், அருச்சுனனுக்குக் குரு, வேறே உருவம் கொண்டு உறியில் இருந்த வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி உண்ணும் வேட்கை தீர அனைவருக்கும் அமுதைப் பங்கிட்டு அருளியபோதில், மாதர்களின் கையால், எறியப்பட்ட கயிற்றால் அடிபட்ட சிறுவன், மிக்க கோபம் கொண்டிருந்த வாலியுடன், ஏழு மராமரங்களும் அற்று விழவும், அரக்கனாகிய ராவணனின் அழகிய பத்துத் தலைகளும் இருபது கைகளும் அழியும்படி ஓர் அம்பை விட்ட, ஒப்பற்ற கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே, நறு மணம் மிக்க மலர்கள் வீசின வாசனையைக் கொண்ட திருவாமாத்தூர்* என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஓர் ஆறுமுகனே, விண்ணுலகத்தினில் இருக்கும் அடியார்களின் துன்பம் நீங்கும்படியாக அருளிய பெருமாளே. 
* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலயத்திலிருந்து 4 மைல் வடமேற்கே உள்ளது.

பாடல் 732 - தச்சூர் 
ராகம் - ...; தாளம் -

தத்தா தனத்தான தாத்தத் தனந்த     தத்தா தனத்தான தாத்தத் தனந்த          தத்தா தனத்தான தாத்தத் தனந்த ...... தனதான

அச்சா யிறுக்காணி காட்டிக் கடைந்த     செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்க          ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உறவாடி 
அத்தா னெனக்காசை கூட்டித் தயங்க     வைத்தா யெனப்பேசி மூக்கைச் சொறிந்து          அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை 
வைச்சா யெடுப்பான பேச்சுக் கிடங்க     ளொப்பா ருனக்கீடு பார்க்கிற் கடம்பன்          மட்டோ எனப்பாரின் மூர்க்கத் தனங்க ...... ளதனாலே 
மைப்பா கெனக்கூறி வீட்டிற் கொணர்ந்து     புற்பா யலிற்காலம் வீற்றுக் கலந்து          வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ 
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த     பிச்சா சருக்கோதி கோட்டைக் கிலங்க          மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே 
எட்டா மெழுத்தேழை யேற்குப் பகர்ந்த     முத்தா வலுப்பான போர்க்குட் டொடங்கி          யெக்கா லுமக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா 
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த     சித்தா குறப்பாவை தாட்குட் படிந்து          சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித் 
தப்பா மலிப்பூர்வ மேற்குத் தரங்கள்     தெற்கா குமிப்பாரில் கீர்த்திக் கிசைந்த          தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே.

வலிமை உள்ளதாய், அழுந்தப் பதிந்துள்ள இரும்பாணி போன்றதும், கடைந்து எடுக்கப்பட்ட சிமிழ் போன்றதுமான மலையாகிய மார்பகங்களை முன் காட்டியும், அம்புகளைப் போல கண்களால் நுண்மையாகப் பார்த்து மனம் நெகிழ்ச்சி காட்டி உறவாடியும், அத்தான் என அழைத்து எனக்கு ஆசையை ஏற்படுத்தி, நீ என்னை வாடும்படி வைத்து விட்டாய் என்று பேசி மூக்கை ஆசையுடன் வருடிவிட்டு, முன்பு ஒரு காலத்தில் ஆசையால் விரும்பி எம்மிடம் வந்திருந்தீர். (இப்போது உமக்கு) என்னிடம் ஆசை இல்லை. நிந்தையான பேச்சுக்கு நீ இடம் தந்து விட்டாய். யோசித்துப் பார்க்கும் பொழுது உனக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை, முருகன் முதலாக உனக்கு ஒப்பானவர்கள் யாரும் இல்லை என்று கூறி இவ்வுலகில் மூர்க்கத்தனங்கள் கொண்ட செய்கைகளாலே கரிய வெல்லக் கட்டி போல இனிக்கப் பேசி, தமது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் கோரைப் புல் பாயில் கிடத்தி, தக்க சமயத்தில் தனித்துக் கலவி செய்துவைக்கும் விலைமாதர்கள் மேல் மோகம் பூண்ட காரணத்தால் பைத்தியம் பிடித்துத் திரிவேனோ? (எல்லாவற்றுக்கும் கடைசியில்) எஞ்சி இருக்கும் பொருளாய் மயக்கம் கடந்தவராய் இருந்த பித்தராகிய சிவபெருமானுக்கு உபதேசித்தவனே, மனம் என்னும் கோட்டையில் விளங்கும்படி மிக அதிகமாக தியானிப்பவர்களின் பக்தி என்னும் கட்டுக்குள் அகப்பட்டு நிலைப்பவன் நீ அன்றோ? தமிழில் 'அ' என்னும் எழுத்தை (இது சிவத்தைக் குறிக்கும் என்று) ஏழையாகிய எனக்கு உபதேசித்த முக்திக்கு வித்தே, வலிய போரில் தலையிட்டு, எப்போதும் அழிந்து போகாத சூரனையும் அவன் குடும்பத்தையும் அரிந்து தள்ளின கோபம் கொண்ட வேலை ஆயுதமாகக் கொண்டவனே, (சூரனாகிய மாமரத்திலிருந்து) ஒரு தச்சனைப்* போல மயிலையும் சேவலையும் வரும்படி அதனைப் பிளந்த சித்த மூர்த்தியே, குறப் பெண்ணாகிய வள்ளியின் திருவடியைப் படிந்து வணங்கி, அவளுக்குக் கண் போல இனியனாகி, (அவள் இருக்கும் இடத்துக்குப்) போய் அவளை மணந்து, தவறுதல் இன்றி இந்தக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்னும் நான்கு திசைகளைக் கொண்ட இந்த உலகில் சிறந்த பெயருடன் விளங்கும் தச்சூர் என்னும் ஊர் வடக்கே அமைந்துள்ள வழியில் (இப்போது ஆண்டார் குப்பம் என வழங்கப்படும் தலத்தில்) வீற்றிருக்கும் பெருமாளே. 
* எக்காலும் அழியாத வரத்தைப் பெற்று சூரன் மாமரமாக போருக்கு வந்தான். அத்தகைய மாமரத்தை முருக வேள், வேலால் இரு கூறுகளாகப் பிளந்தார். அந்த மரத்துண்டுகளைக் கொண்டு ஒரு தச்சனைப் போல் மயில், சேவல் என்னும் உருவங்களை ஆக்கினார்.
** தச்சூர் வடக்காகும் திசையில் ஆண்டார்குப்பம் என்ற பிரபல முருகத்தலம் சென்னைக்கு வடக்கே உள்ள பொன்னேரி ரயில் நிலையத்துக்கு அருகே உள்ளது.

பாடல் 733 - திருக்கோவலு஡ர் 
ராகம் - ....; தாளம் -

தான தானன தானன, தான தானன தானன     தான தானன தானன ...... தனதான

பாவ நாரிகள் மாமட மாதர் வீணிக ளாணவ     பாவை யாரிள நீரன ...... முலையாலும் 
பார்வை யாமிகு கூரயி லாலு மாமணி யார்குழை     பார காரன வார்குழ ...... லதனாலுஞ் 
சாவ தாரவி தாரமு தார்த ராவித ழாலித     சாத மூரலி தாமதி ...... முகமாலுஞ் 
சார்வ தாவடி யேனிடர் வீற மாலறி வேமிகு     சார மாயதி லேயுற ...... லொழிவேனோ 
ஆவ ஆர்வன நான்மறை யாதி மூல பராவரி     யாதி காணரி தாகிய ...... பரமேச 
ஆதி யாரருள் மாமுரு கேச மால்மரு கேசுர     னாதி தேவர்க ளியாவர்கள் ...... பணிபாத 
கோவ தாமறை யோர்மறை யோது மோதம்வி ழாவொலி     கோடி யாகம மாவொலி ...... மிகவீறும் 
கோவை மாநகர் மேவிய வீர வேலயி லாயுத     கோதை யானையி னோடமர் ...... பெருமாளே.

பாவச் செயல் செய்கின்ற விலைமாதர்கள், வீண் பொழுது போக்குபவர்கள், செருக்கு உடைய மாதர்களின் இளநீர் போன்ற மார்பகத்தாலும், கண் என்னும் மிகுந்த கூர்மையான வேலாலும், சிறந்த ரத்தினம் நிறைந்த குண்டலங்களாலும், அடர்ந்த மேகத்துக்கு ஒப்பான நீண்ட கூந்தலாலும், கொல்லுங் குணம் கொண்டுள்ளதும், செவ்விய இலவு போன்றதும் ஆன, அமுதம் நிறைந்துள்ள வாயிதழாலும், இனிமை தோன்றும் புன்சிரிப்பாலும், இதம் தரும் நிலவு போன்ற முகத்தாலும், எப்போதும் அடியேனுடைய துன்பங்கள் மிக அதிகமாக, காம மயக்கப் புத்தியே மிகுந்த இனிமை தருவதாய் நம்பி, அத்தகைய புத்தியின் வழியிலே பொருந்துதலை நான் விலக்க மாட்டேனோ? ஆக வேண்டியவற்றை நிரம்பக் கூறும் நான்கு வேதங்களின் முதல்வரும், மூலப் பரமரும், திருமால் முதலிய தேவர்களும் காண்பதற்கு அரியவருமான பரமேஸ்வரருமாகிய ஆதி மூர்த்தியார் பெற்றருளிய முருகேசனே, திருமாலுக்கு மருகனாகிய ஈசனே, ஆதி இல்லாதவனே, தேவர்கள் யாவரும் பணிகின்ற பாதனே, சிறப்பாக மறையோர் வேதங்கள் ஓதும் ஓசை வெள்ளமும், திருவிழாக்களின் ஒலியும், கோடிக் கணக்கான ஆகமங்களின் பேரொலியும் மிக்கு எழுகின்ற திருக்கோவலூர்* என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் வீரனே, வேல் என்னும் கூரிய ஆயுதத்தை உடையவனே, வள்ளி தேவயானையோடு வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருக்கோவலூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கோட்டைக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.

பாடல் 734 - தேவனூர் 
ராகம் - நாட்டகுறிஞ்சி தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த     தான தான தந்த தந்த ...... தனதான

ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ஆறு மாறு மஞ்சு மஞ்சும்     ஆறு மாறு மஞ்சு மஞ்சும் ...... அறுநாலும் 
ஆறு மாய சஞ்ச லங்கள் வேற தாவி ளங்கு கின்ற     ஆரணாக மங்க டந்த ...... கலையான 
ஈறு கூற ரும்பெ ருஞ்சு வாமி யாயி ருந்த நன்றி     யேது வேறி யம்ப லின்றி ...... யொருதானாய் 
யாவு மாய்ம னங்க டந்த மோன வீட டைந்தொ ருங்கி     யான வாவ டங்க என்று ...... பெறுவேனோ 
மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வங்க     வாரி மேல்வெ குண்ட சண்ட ...... விததாரை 
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவி ளங்கொ ழுந்து     வால சோம னஞ்சு பொங்கு ...... பகுவாய 
சீறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்     தேசி காக டம்ப லங்கல் ...... புனைவோனே 
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.

மொத்தம் தொண்ணூற்றாறு (6+6+5+5+6+6+5+5+6+6+5+5+24+6= 96) ஆகிய துன்பங்களுக்கு காரணமான தத்துவங்களுக்கும் % வேறுபட்டதாக விளங்குகின்றதும், வேதாகமங்களைக் கடந்ததும், உபதேசக் கலையாகிய சித்தாந்தத்தால் கூட கூறுதற்கு ஒண்ணாததும், பெரும் தெய்வநிலையிலிருக்கும் நற்பொருளை ஏது (காரணம்) வேறு சொல்வதற்கு இல்லாமல் ஒப்பற்ற தானேயாக நின்று, மற்ற எல்லாமாகவும் விளங்கி, மனம் கடந்ததான மெளன இன்ப முக்தியை அடைந்து, சிந்தை ஒருமைப்பட்டு ஒடுக்கமுற்று யான் ஆசைகள் யாவும் அடங்கும் நிலையை என்று பெறுவேனோ? பகைமை பேசி வந்து எதிர்த்த சூரர் சேனை அழிய, கப்பல்கள் செல்லும் கடலினைக் கோபித்ததும், வேகமும் கோபமும் கொண்டதும், வெற்றி வாகையைச் சூடியதுமான வேலினை ஏந்தியவனே, கொன்றைமாலை, தும்பைமாலை, வில்வக் கொழுந்து, இளம் பிறைச் சந்திரன், விஷம் நிறைந்த, வாய் பிளந்த, கோபம் மிகுந்த பாம்பு, திருநீறு, கங்கை, யாவையும் சடையில் வைத்த நம் தலைவர் சிவபிரானின் குருநாதனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அனைத்துத் தேவர்களும் ஒன்று சேர்ந்து பூமியிலே வந்து வணங்கும் தேவனூர்** சிறக்க வந்த பெருமாளே. 
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
** தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.

பாடல் 735 - தேவனூர் 
ராகம் - வலஜி தாளம் - ஆதி - திஸ்ரநடை - 12

தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த     தான தான தந்த தந்த ...... தனதான

தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து     சாதி பூத ரங்கு லுங்க ...... முதுமீனச் 
சாக ரோதை யங்கு ழம்பி நீடு தீகொ ளுந்த அன்று     தாரை வேல்தொ டுங்க டம்ப ...... மததாரை 
ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து     மானை யாளு நின்ற குன்ற ...... மறமானும் 
ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும்     ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ 
பார மார்த ழும்பர் செம்பொன் மேனி யாளர் கங்கை வெண்க     பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி 
பார மாசு ணங்கள் சிந்து வார வார மென்ப டம்பு     பானல் கூவி ளங்க ரந்தை ...... அறுகோடே 
சேர வேம ணந்த நம்ப ¡£ச னாரி டஞ்சி றந்த     சீத ளார விந்த வஞ்சி ...... பெருவாழ்வே 
தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைஞ்சு     தேவ னூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.

தாரகாசுரன் நிலை பெயர்ந்து வீழ்ந்து இறக்க, வேருடன் பறிபட்டு மேலான மேருமலையும் நடுக்கம் கொள்ள, முற்றிய மீன்களைக் கொண்ட அழகும் ஓசையும் உடைய சமுத்திரம் கலக்கமுற்று பெரும் தீயில் பட, அன்று கூரிய வேலினைச் செலுத்திய கடம்பனே என்றும், மதநீர் ஒழுகும் வாயையும், ஆரவாரத்தை உடையதும், தேவலோகத்தில் உள்ள பெருந்தலை கொண்டதுமான மலைபோன்ற ஐராவதம் என்ற யானை மீது அமர்ந்த தேவயானை என்னும் மானைப் போன்றவளும், வள்ளிமலை என்ற குன்றத்தில் இருந்த மான் போன்ற வேடப்பெண் வள்ளியும், இருவரும் ஆசை கொள்ளும் நண்பனே என்றும், சிறந்த மயில்வாகனனே என்றும், என் ஆசை தீர என்று மனம் ஒருநிலையில் நின்று புகழ்வேனோ? (பார்வதி தேவியின்) பாரமான மார்பின் தழும்பை உடையவர், செம்பொன் போன்ற திருமேனியாளர், கங்கை நதி, வெண்ணிறத்துக் கபால மாலை, கொன்றை, தும்பை, சிறுதாளி என்னும் பூக்கள், பாரமான பாம்புகள், நொச்சிப்பூ இவற்றை மாலையாகப் பூண்டவர், எலும்பு, அடம்பு என்ற மலர், கருங்குவளை, வில்வம், கரந்தை, அறுகம்புல் இவற்றோடு சேர்ந்து விளங்கி மணக்கும் பெருமான், ஈசனார் ஆகிய சிவனின் இடது பாகத்தில் சிறந்து விளங்கும் குளிர்ந்த தாமரையில் அமரும் மாது பார்வதி தேவியின் பெருஞ் செல்வமே, தேவர்கள் யாவரும் ஒன்றுகூடி பூமியில் வந்து வணங்கும் தேவனூருக்கு விளக்கம் தர வந்த பெருமாளே. 
* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.

பாடல் 736 - தேவனூர் 
ராகம் - மாண்ட் தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தான தானன தனனா தனதன     தான தானன தனனா தனதன          தான தானன தனனா தனதன ...... தந்ததான

காணொ ணாதது உருவோ டருவது     பேசொ ணாதது உரையே தருவது          காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக் 
காய பாசம தனிலே யுறைவது     மாய மாயுட லறியா வகையது          காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப் 
பேணொ ணாதது வெளியே யொளியது     மாய னாரய னறியா வகையது          பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப் 
பேரு மாய்கலை யறிவாய் துரியவ     தீத மானது வினையேன் முடிதவ          பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே 
வீணொ ணாதென அமையா தசுரரை     நூறி யேயுயிர் நமனீ கொளுவென          வேல்க டாவிய கரனே யுமைமுலை ...... யுண்டகோவே 
வேத நான்முக மறையோ னொடும்விளை     யாடி யேகுடு மியிலே கரமொடு          வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே 
சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை     மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து          சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே 
சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்     ஞான யோகிக ளுளமே யுறைதரு          தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.

கண்களால் காண்பதற்கு முடியாததும், உருவமும் அருவமுமாக இருப்பதும், பேசுதற்கு முடியாததும், பலவித விளக்கங்களுக்கும் இடம் தருவதும், காணப்படும் நான்கு வேதங்களுக்கும் முடிவான பொருளாய் நிறைந்து நிற்பதும், ஐம்பூதங்களினால் ஆன இந்த உடம்பின் மேல் உள்ள பாசத்தில் நிலைத்து நிற்பதும், மாயப் பொருளாக இப்பெரும் உடலால் அறியமுடியாத வகையில் இருப்பதும், சா£ரத்தை உடைய மனிதர்கள் எதிரே அவர்களைப் போலவே மனித உருக்கொண்டு வந்து பேசினாலும், இன்னாரென அறிந்து போற்ற முடியாததும், ஆகாய வெளியிலே ஒளிப்பிழம்பாகத் திகழ்வதும், திருமால், பிரம்மா இவர்களால் அறியமுடியாத வகையில் இருப்பதும், வேற்றுமை, ஒற்றுமை என்ற தன்மைகளோடு உலக ¡£தியாக வளர்வதும், பீடம், லிங்கம் (சக்தி - சிவம்) என்ற பேருடையதாயும், நூல்களின் சாரமாகவும், யோகியரின் உயர் நிலைக்கும் அப்பாற்பட்டதும், நல்வினையால் என் முடிந்த தவத்தின் பெரும்பயனானதும், திருவருள் நிறைவாக விளங்குகின்றதும், இந்த அத்தனையும் பொருந்தி விளங்குபவன் நீ ஒருவன்தான். வீணான காரியம் கூடாதென விலக்கி அடங்காத அசுரரை பொடியாக்கி, அவர்கள் உயிரை யமனிடம் நீ கொள்வாயாக என்று வேலினைப் பாய்ச்சிய திருக்கரத்தனே, பார்வதியின் ஞானப்பால் அருந்திய அரசனே, வேதம் கற்ற நான்முக அந்தணன் பிரமனுடன் விளையாடி அவன் குடுமியிலே கையால் பலமாகக் குட்டிய வீரனே, குறவர் வாழும் வள்ளிமலையில், மிக்க உயரத்தில் கட்டப்பட்ட பரண் மீது இருந்த பெண் வள்ளியிடம் காதல் மயக்கம் தரும் திருவிளையாடல்கள் செய்து, அவளை அணைக்க விரும்பிய திருடனே, திருவருள் பாலிக்கும் கந்தக் கடவுளே, எவரும் தம்மிடம் நெருங்க முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும் மெய்ஞ்ஞான யோகிகளின் உள்ளத்தில் விளங்கி வீற்றிருப்பவனே, தேவனூரில் எழுந்தருளியுள்ள குமரனே, தேவர்களின் தம்பிரானே. 
* தேவனூர் தென்னாற்காடு மாவட்டத்தில் செஞ்சிக்கு வடகிழக்கில் 5 மைல் தொலைவில் திருக்கோவிலூருக்கு 2 மைலில் உள்ள தலமாகும்.

பாடல் 737 - திருவதிகை 
ராகம் - .... ; தாளம் -

தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத்     தனதனனத் தனதனனத் ...... தனதான

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்     பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல் 
பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்     படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர் 
சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்     துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன் 
சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்     சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே 
கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்     கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா 
கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்     கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே 
திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்     செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித் 
திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்     திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.

ரேகைகளோடு கூடிய, கயல் மீன் போன்ற கண்கள் குவியவும், குயிலையும் கிளியையும் ஒத்ததான பேசும் மொழி பதற்றத்துடன் வெளி வரவும், பவளத்தின் நிறம் கொண்ட வாயிதழ்கள் விளைவிக்கும் அமுது போன்ற ஊறலை உண்டும், ஒளி வீசும் முத்து மாலை அணிந்த, (சந்தனக்) கலவை பூண்ட, மார்பாகிய மலை அசைவு தரவும், ஐந்து மலர்ப் பாணங்களை உடைய மன்மதனது காமசாஸ்திரக் குப்பையை உணர்ந்துள்ள பொது மாதர்களின் பூக்கள் சொருகியுள்ள கூந்தல் சரியவும், தளர்ந்துள்ள சிறிய இடை துவளவும், ஆடை விலகவும், காம ஆசையை விளைவித்து உருகி எதிரே சொரியப்பட்ட பூக்களின் வாசனை பரந்துள்ள படுக்கையில் புகுந்து இன்பம் தரும் இனிமையான புணர்ச்சியிலே சுழலுகின்ற என் மனக் கவலையை நீக்கி அருள்வாயாக. கரிய நிறம் கொண்ட அசுரனாகிய ராவணனது மகுடம் அணிந்த தலைகள் பத்தும் அற்று விழ, வேகமாகச் சென்று அம்பைச் செலுத்திய ராமனின் (திருமாலின்) மருகனே, குமரேசனே, கயிலை மலைக்கு உரியவனாகிய சிவ பெருமானுடைய இடது பாகத்தில் உள்ள பார்வதி விருப்பத்துடன் (கொடுக்கக்) கருதிய (பால் அமுது ஊட்டவும்), பாடல்கள் நிறையப் பாடும் திறத்தைப் பெற்ற கீர்த்தியை உடைய திருஞான சம்பந்தப் புலவனே, திரண்ட கமுகு மரத்தின் உச்சியில் இடறியும், பல வாழைகளின் குலைகள் சிதறிடவும், நிறைந்த வயல்களில் நெற்கதிர்கள் அலைபாயவும், அலைகள் வீசி, திமிதிமி எனப் பறைகள் முழங்கவும், பெருகி வரும் நீருடைய கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமாளே. 
* திருவதிகை பண்ணுருட்டிக்கு கிழக்கே 2 மைலில் கெடிலநதிக் கரையில் உள்ளது.

பாடல் 738 - திருவதிகை 
ராகம் - ....; தாளம் -

தனன தானன தனதன தனதன     தனன தானன தனதன தனதன          தனன தானன தனதன தனதன ...... தனதான

விடமும் வேலன மலரன விழிகளு     மிரத மேதரு மமுதெனு மொழிகளும்          விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி 
மிகவு மாண்மையு மெழினல முடையவர்     வினையு மாவியு முடனிரு வலையிடை          வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா 
இடரு றாதுனை நினைபவர் துணைகொள     இனிமை போலெழு பிறவியெ னுவரியி          னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே 
இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்     ககன பூபதி யிடர்கெட அருளிய          இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே 
படரு மார்பினி லிருபது புயமதொ     டரிய மாமணி முடியொளி ரொருபது          படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய் 
பரவை யூடெரி பகழியை விடுபவர்     பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ          பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே 
அடர வேவரு மசுரர்கள் குருதியை     அரக ராவென அலகைகள் பலியுண          அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா 
அமர ராதிய ரிடர்பட அடர்தரு     கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த          அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.

விஷமும், வேலும் போன்றனவாகிய, மலரை ஒத்த கண்களும், ருசியைத் தரும் அமுதம் போல் இனிய பேச்சுக்களும், உற்சாகத்தால் வளர்ந்துள்ள இரு மார்பகங்களும் இன்பம் தருவனவாய்க் கொண்டு, மிக்க அகங்காரத்தையும் அழகு நலத்தையும் உடையவர்களின் பெரிய வலையில் என் முன்வினையும், உயிரும் ஒருசேர பகிரங்கமாகச் சிக்கும்படி (அந்த வலையை) வீசுகின்ற விஷமிகளாகிய வேசிகளுடன் சேர்ந்து துன்பப்படாமல், உன்னைத் தியானிப்பவர்களின் துணையைப் பெறுதற்கு, இன்பம் போலக் காணப்படும் ஏழு பிறவிகள் என்ற கடலிடையே அகப்பட்டு அழியாமல், இனியேனும் இரு வினை (நல்வினை, தீவினை) என்கின்ற இழிந்த நிலையில் அழியாமல், தேவர்கள், முனிவர்கள், விண்ணுலக அரசனான இந்திரனின் துன்பங்கள் தொலைய அருள் புரிந்த இறைவனே, கீதத்துடன் தினமும், உனது பன்னிரண்டு புயங்களைப் போற்றிச் செய்து உரைக்க (எனக்கும்) அருள் புரிவாயாக. பரவி அகன்றுள்ள மார்பின் பக்கத்தில் உள்ள (ராவணனது) இருபது புயங்களும், அருமையான சிறந்த ரத்தினக் கி¡£டங்கள் விளங்கும் ஒப்பற்ற பத்து தலைகளும் பூமியில் அறுந்து விழும்படி நிகரற்ற அம்பைச் செலுத்தியவரும், சந்தர்ப்பத்தை ஆராய்ந்தறிந்து கடலின் மீது நெருப்பு வீசும் அம்பை விடுத்தவரும், தம்மைப் போற்றும் அடியவர்களின் வினைகள் கெட அருள் பாலித்து, பரந்துள்ள திருப்பாற்கடலில் பாம்பாகிய ஆதிசேஷனின் மேல் துயில்பவருமான திருமாலின் மருகனே, நெருங்கி வந்த அசுரர்களின் ரத்தத்தை அரகரா என்று கூவி பேய்கள் உணவாக உண்ண, அலைகள் வீசும் கடலும் கூச்சலிட, சண்டை செய்த மயில் வீரனே, தேவர்கள் முதலானோர் துன்பப்படும்படி நெருங்கி எதிர்த்த கொடுமையான அசுரர்கள் (வாழ்ந்திருந்த) திரிபுரங்களை எரித்த திருவதிகை** என்னும் பெரிய ஊரில் வீற்றிருப்பவனே, (இந்திரன் மனைவி) சசியின் மகளான தேவயானையின் பெருமாளே. 
* 'இசையில் நாள்தொறும்' என்ற சொற்கள் அன்வயப் படுத்தப்பட்டுள்ளன.
** சிவபெருமான் திரிபுரத்தை எரித்த தலம் திருவதிகை. இது கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 2 மைலுக்குள் உள்ளது.

பாடல் 739 - திருவர்முர் 
ராகம் - ....; தாளம் -

தான தனன தனத்தந் ...... தனதான

சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே 
சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே 
ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே 
ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான் 
மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர் 
வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா 
காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே 
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.

குளிர்ந்த நிலவு வீசுகின்ற நெருப்பாலும், கோபத்துடன் மன்மதன் வளைக்கின்ற வில்லினாலும், அலைகளை வீசி அலைக்கின்ற கடலினாலும், ஊழிக்காலம் போல நீடித்துள்ள இந்த இரவை எப்படி நான் கழிப்பேன்? மாதரசி திலகவதியாரின்* புகழை வளர்க்கும் தலமாம் திருவாமூரில் வாழுகின்ற குமரேசனே, மயில் மீது வீற்றிருக்கும் குமரேசனே, அன்புள்ள அடியார்களின் கருத்தில் உறையும் பெருஞ் செல்வமே, யமனுடைய முதுகைப் பிளக்கும்படி அடித்து விரட்டும் பெருமாளே. 
* திலகவதியார் அப்பரின் தமக்கை. திருவாமூரில் வாழ்ந்து, அப்பரை சமணத்திலிருந்து சைவத்துக்கு மீட்டார். திருவாமூர் பண்ருட்டியிலிருந்து 5 மைலில் உள்ளது.இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் அமைந்தது.நிலவு, மன்மதன், அலைகடல், இரவு முதலியவை தலைவனின் பிரிவை மிகவும் அதிகமாக்கும் பொருட்கள்.

பாடல் 740 - வடுகூர் 
ராகம் - ரேவதி தாளம் - ஆதி

தனதன தனனா தனதன தனனா     தனதன தனனா ...... தனதான

அரியய னறியா தவரெரி புரமூ     ணதுபுக நகையே ...... வியநாதர் 
அவிர்சடை மிசையோர் வனிதையர் பதிசீ     றழலையு மழுநேர் ...... பிடிநாதர் 
வரைமக ளொருகூ றுடையவர் மதனா     கமும்விழ விழியே ...... வியநாதர் 
மனமகிழ் குமரா எனவுன திருதாள்     மலரடி தொழுமா ...... றருள்வாயே 
அருவரை யிருகூ றிடவொரு மயில்மேல்     அவனியை வலமாய் ...... வருவோனே 
அமரர்க ளிகல்நீ டசுரர்கள் சிரமேல்     அயில்தனை விசையாய் ...... விடுவோனே 
வரிசையொ டொருமா தினைதரு வனமே     மருவியொர் குறமா ...... தணைவேடா 
மலைகளில் மகிழ்வாய் மருவிநல் வடுகூர்     வருதவ முநிவோர் ...... பெருமாளே.

திருமாலும் பிரமனும் அடி முடி காணமுடியாதவர், நெருப்பு திரிபுரத்திலும் புகுமாறு சிரித்தே எரித்த தலைவர், விளங்கும் சடை மீது கங்கை என்னும் ஒப்பற்ற மாதினைக் கொண்டு அவளது தலைவராகவும் இருப்பவர், சீறிவந்த நெருப்பையும் மழு ஆயுதத்தையும் நேராகக் கையில் ஏந்திய தலைவர், மலைமகளாம் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர், மன்மதனின் உடல் சாம்பலாக விழ நெற்றிக் கண்னை ஏவிய தலைவர், (அத்தகைய சிவபிரான்) மனமகிழும் குமரனே, என்று கூறி உன் இரண்டு தாளாகிய மலர்ப் பாதங்களை வணங்கும்படி அருள் தருவாயாக. அரிய கிரெளஞ்சமலை இரு பிளவாகும்படிச் செய்து, ஒப்பற்ற மயில் மீது ஏறி உலகை வலமாக வந்தவனே, தேவர்களின் பகைவராம் பெரும் அசுரர்களின் தலைகள் மீது வேலை வேகமாய் எறிந்தவனே, வரிசையாக ஒப்பற்ற சிறந்த தினைச் செடிகள் வளரும் காட்டுக்குச் சென்று, ஓர் குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே, குன்று கண்ட இடங்களில் குதூகலிப்பவனே, மனம் பொருந்தி நல்ல வடுகூர்* என்ற தலத்தில் வருகிற தவமுனிவர்களின் பெருமாளே. 
* வடுகூர் பாண்டிச்சேரிக்கு 12 மைல் மேற்கே உள்ளது. அதற்கு ஆண்டார் கோயில் என்ற பெயரும் உண்டு.

பாடல் 741 - திருத்துறையூர் 
ராகம் - ....; தாளம் -

தானத்தன தானத்தன தானத்தன தானத்தன     தானத்தன தானத்தன ...... தனதான

ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக்கையில்     யாழ்வைத்திசை கூரக்குழ ...... லுடைசோர 
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை யாடப்பிரை     யாசப்படு வார்பொட்டணி ...... சசிநேர்வாள் 
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை     கோவைக்கனி வாய்பற்கதி ...... ரொளிசேருங் 
கோலக்குயி லார்பட்டுடை நூலொத்திடை யார்சித்திர     கோபச்செய லார்பித்தர்க ...... ளுறவாமோ 
பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்     பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி 
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்     போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா 
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட     சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா 
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு     சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.

முத்து மாலை அணிந்துள்ள அந்த மார்பின் பாரங்களை புடைவையால் மூடி, பலரும் வியந்து பார்க்க கையிலே யாழை வைத்து இசை நிரம்பப் பாடி, கூந்தலும் உடையும் சரிய, உடலில் பன்னீருடன் புனுகு கலந்து பாய, (காதில் அணிந்துள்ள) குண்டலங்கள் ஆடவும், முயற்சி செய்பவர்கள். பொட்டு அணிந்துள்ள சந்திரன் போன்ற முகத்தில் வாளாயுதம், கூர்மையான அம்பு, வேல் (இவை போன்ற) விழிகள் கயல் மீனைப் போல் சுழற்றுபவர்கள். சர்க்கரையை ஒத்த இனிய மொழிகள் வரும் கொவ்வைக் கனியை ஒத்த வாயில் பற்கள் சூரிய சந்திரன் போல் ஒளி வீசும். அழகிய குயில் போலப் பேசுபவர்கள். பட்டுப் புடைவயை நூல் போல் நுண்ணிய இடையில் அணிந்தவர்கள். சித்திரம் போல கோபச் செயல்கள் நிரம்பியுள்ள பித்துப் பிடித்தவர்களாகிய பொது மகளிர்களின் தொடர்பு எனக்கு வேண்டுமோ? நிறைந்துள்ள மார்பகப் பாரத்தையும், சடையையும், வேத சொரூபக் கூந்தலையும் உடையவள், பக்தர்கள் பூஜையை ஏற்றுக் கொள்ளுபவள், பத்தினி, சிவகாமி, பூமி, கடல், அரி, அயன், உருத்திரன் ஆகிய மூவர்க்கும் முன்னவள், பத்திர காளி ஆகிய பார்வதி அணைந்து சேரும் இன்ப அனுபவம் உடைய சிவபெருமானுக்கும் உபதேசித்து அருளிய குருநாதனே, சூரனும், கிரெளஞ்ச மலையும், கடலும் தவிடு பொடிபட, பொருத அசுரர்கள் மெலிந்து அழிய, அயற்சி இல்லாத வீரம் உள்ள ஒளி வீசும் வேலை விட்டுச் செலுத்திய வெற்றி வீரனே, மயில் போன்ற நடை உடையவள், அழகிய ஒளியுடைய குறப் பெண்ணாகிய வள்ளி என்கின்ற முத்துப்போன்ற தேவியுடன் ஒளி வீசும் துறையூர்* என்ற தலத்தை விரும்பிய பெருமாளே. 
* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது.

பாடல் 742 - திருத்துறையூர் 
ராகம் - ....; தாளம் -

தனதான தனத்தன தானன     தனதான தனத்தன தானன          தனதான தனத்தன தானன ...... தனதான

வெகுமாய விதத்துரு வாகிய     திறமேப ழகப்படு சாதக          விதமேழ்க டலிற்பெரி தாமதில் ...... சுழலாகி 
வினையான கருக்குழி யாமெனு     மடையாள முளத்தினின் மேவினும்          விதியாரும் விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல் 
தகவாம தெனைப்பிடி யாமிடை     கயிறாலு மிறுக்கிம காகட          சலதாரை வெளிக்கிடை யேசெல ...... வுருவாகிச் 
சதிகாரர் விடக்கதி லேதிரள்     புழுவாக நெளித்தெரி யேபெறு          மெழுகாக வுருக்குமு பாதிகள் ...... தவிர்வேனோ 
உககால நெருப்பதி லேபுகை     யெழவேகு முறைப்படு பாவனை          யுறவேகு கையிற்புட மாய்விட ...... வெளியாகி 
உலவாந ரகுக்கிரை யாமவர்     பலவோர்கள் தலைக்கடை போயெதிர்          உளமாழ்கி மிகக்குழை வாகவு ...... முறவாடித் 
தொகலாவ தெனக்கினி தானற     வளமாக அருட்பத மாமலர்          துணையேப ணியத்தரு வாய்பரி ...... மயில்வேலா 
துதிமாத வர்சித்தர்ம கேசுரர்     அரிமால்பி ரமர்க்கருள் கூர்தரு          துறையூர்ந கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.

எண்ணிலாத மாய வகைகளால் உடலாக உருவெடுக்கும் இயல்பிலே பழகப்படுகின்ற பிறப்பு வகைகள் ஏழு கடல்களைக் காட்டிலும் பெரிதாகும். அத்தகைய பிறப்பில் சுழன்று வினைக்கு ஈடான கருக்குழி சேரும் என்கின்ற அறிகுறியானது என் உள்ளத்தில் பதிந்து இருந்த போதிலும், விதியை யாராலும் விலக்க முடியாது என்கின்ற மூத்தோர் வாசகம் பொருத்தமானது. அந்த விதி என்னைப் பிடித்து நெருங்கிய கயிற்றால் அழுத்தமாகக் கட்டி பெரிய உடம்பிலுள்ள சாக்கடை வழியே உருவம் அடைந்து (குழந்தையாய்) வெளிவர, மோசக்காரர்களாகிய ஐம்புலன்களின் சேட்டைகளுடன், மாமிசத்தில் திரண்டு புழுப் போல நெளிவுண்டு, நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல உடலை உருக்குகின்ற வேதனைகளையும் ஒழிக்க மாட்டேனோ? யுகாந்த காலத்தில் வடவாமுகா அக்னி நெருப்பில் புகை உண்டாகி வேகின்ற மாதிரி கோபக் குறிகளை (இரக்க வந்தவரிடம்) காட்டி, உலையில் புடம் வைப்பது போல் உள்ளம் கொதிப்பைப் பெற்று வெளிவருவதால், அழியாத நரகத்துக்கு இரையாகுபவர்களாகிய பலருடைய வீட்டு வாசலுக்குப் போய் அவர்கள் எதிரே நின்று, மனம் வெட்கப்பட்டு, மிகவும் குழைந்த மனத்தினனாய் அவர்களுடன் உறவு பூண்டு சேர்தல் எனக்கு இனியேனும் ஒழிவதற்காகவும், நான் செப்பம் அடையவும், உனது திருவருள் பெருகும் சிறந்த பாத மலர்களை எனக்குத் துணையாக, நான் தொழுவதற்குத் தருவாயாக, மயிலையும் வேலையும் உடையவனே, துதிக்கின்ற பெரிய தவசிகளும், சித்தர்களும், சிவன், திருமால், பிரமன் இவர்களுக்கு எல்லாம் திருவருள் பாலிக்கும், திருத்துறையூர்* என்னும் ஊரில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருத்துறையூர் இப்போது திருத்தளூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு வடமேற்கே 5 மைலில் உள்ளது.

பாடல் 743 - திருநாவலு஡ர் 
ராகம் - ....; தாளம் -

தானதன தத்த தானதன தத்த     தானதன தத்த ...... தனதான

கோல மறை யொத்த மாலைதனி லுற்ற     கோரமதன் விட்ட ...... கணையாலே 
கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற     கோகிலமி குத்த ...... குரலாலே 
ஆலமென விட்டு வீசுகலை பற்றி     ஆரழலி றைக்கு ...... நிலவாலே 
ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த     மாசைகொட ணைக்க ...... வரவேணும் 
நாலுமறை கற்ற நான்முகனு தித்த     நாரணனு மெச்சு ...... மருகோனே 
நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து     நாகமற விட்ட ...... மயில்வீரா 
சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி     சீரணி தனத்தி ...... லணைவோனே 
சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற     தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.

அழகியவனும், அனங்கனாக உருவத்தை மறைத்து வைத்திருப்பவனும், மாலைப் பொழுதில் வந்து சேர்ந்துள்ளவனும், கொடியவனும் ஆன மன்மதன் செலுத்தும் புஷ்ப பாணங்களினாலும், குற்றமற்ற நல்ல செழிப்பான மரங்கள் நிறைந்த சோலையில் உள்ள குயிலின் பலமான ஓசையினாலும், விஷக் கதிர்களை எறிந்து வீசும் ஒளி மூலமாக மிகுத்த நெருப்பை எங்கும் அள்ளி இறைக்கும் நிலவினாலும், ஆவியானது தளர்ச்சியுற்று வாடுகின்ற என்னை நாள்தோறும் ஆசையுடனே அணைக்க நீ வரவேண்டும். நான்கு வேதங்களையும் கற்ற பிரமனைத் தோற்றுவித்த நாரணனாகிய திருமால் மெச்சிடும் மருகனே, புலவர்கள் மதிக்கும்படியாக வேலாயுதத்தை எடுத்து கிரெளஞ்ச மலையைப் பொடிபடச் செலுத்திய மயில் வீரனே, சேல் மீன் போன்ற கண்ணை உடைய வேடுவப் பெண் வள்ளியின் சீரும் அழகும் கொண்ட மார்பை அணைவோனே, குளிர்ந்த வயல்கள் சூழ்ந்துள்ள திருநாவலூரில்* வீற்றிருக்கும், தேவர்களைச் சிறையினின்றும் மீட்ட பெருமாளே. 
* திருநாவலூர் இப்போது திருநாமநல்லூர் என்று வழங்கப்படுகிறது. பண்ருட்டிக்கு 11 மைல் மேற்கே உள்ளது.இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவியாக தன்னைக் கற்பனை செய்து பாடியது.மன்மதன், மலர்க் கணைகள், சோலைக் குயில், நெருப்பை வீசும் நிலவு - வை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

பாடல் 745 - திருப்பாதிரிப்புலியூர் 
ராகம் - பைரவி தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதன தத்தன தனதன தத்தன     தனதன தத்தன தனதன தத்தன          தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான

பலபல தத்துவ மதனையெ ரித்திருள்     பரையர ணப்படர் வடவன லுக்கிரை          படநட நச்சுடர் பெருவெளி யிற்கொள ...... விடமேவிப் 
பவனமொ ழித்திரு வழியைய டைத்தொரு     பருதிவ ழிப்பட விடல்கக னத்தொடு          பவுரிகொ ளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே 
கலகலெ னக்கழல் பரிபுர பொற்பத     வொலிமலி யத்திரு நடனமி யற்றிய          கனகச பைக்குளி லுருகிநி றைக்கட ...... லதில்மூழ்கிக் 
கவுரிமி னற்சடை யரனொடு நித்தமொ     டனகச கத்துவம் வருதலு மிப்படி          கழியந லக்கினி நிறமென விற்றுட ...... லருள்வாயே 
புலையர்பொ டித்தளும் அமணரு டற்களை     நிரையில்க ழுக்களி லுறவிடு சித்திர          புலவனெ னச்சில விருதுப டைத்திடு ...... மிளையோனே 
புனமலை யிற்குற மகளய லுற்றொரு     கிழவனெ னச்சுனை தனிலவ ளைப்புய          புளகித முற்றிபம் வரவணை யப்புணர் ...... மணிமார்பா 
மலைசிலை பற்றிய கடவுளி டத்துறை     கிழவிய றச்சுக குமரித கப்பனை          மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே 
மகிழ்பெணை யிற்கரை பொழில்முகில் சுற்றிய     திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத          மயிலின்மி சைக்கொடு திருநட மிட்டுறை ...... பெருமாளே.

பலபல தத்துவ சேஷ்டைகளையும், அஞ்ஞான இருளையும் எரித்து, சிவசக்தியே காவலாக துக்கங்களை வடவா முகாக்கினிக்கு இரையாகும்படி ஆக்கி, நடன ஜோதியை பரந்த ஆகாச வெளியில் கண்டு கொள்ளும்படியாக (விந்து நாதம் கூடும்) முகப்பில் சேர்ந்து, வாயுவை அடக்கி, இடகலை, பிங்கலை* என்ற இரண்டு வழிகளையும் மாற்றி அடைத்து, ஒப்பற்ற சூரிய ஜோதியின் பிரகாச நிலையில் அமைந்து, ஆகாய வெளியில் நடனம் கொள்ள சிவ மயமாய் முற்றும் பரந்த பர வெளியில், கலகல என்று கழலுகின்ற சிலம்பும் அழகிய திருவடியின் ஒலி நிரம்ப, திரு நடனம் புரிந்த பொன் அம்பலத்தில் உருகி, நிறைந்த சுகானந்தக் கடலில் முழுகி, பார்வதி தேவி மின்னலை ஒத்த சடையையுடைய சிவபெருமான் ஆகியவரோடு தினந்தோறும் குற்றமற்ற உலக தத்துவமே நீயாகத் தோன்றும் நிலை வந்து கூடவும், இவ்வாறு கழியும்படியான நன்மையால், இனி புகழொளி எனக் கூறப்படும் உடலை எனக்குத் தந்தருளுக. இழிந்தவர்களும், திருநீற்றை விலக்கித் தள்ளுபவர்களும் ஆகிய சமணர்களின் உடல்களை கழு முனை வரிசைகளில் பொருந்தவிட்டவனும், சித்திரக் கவி பாடவல்ல புலமை கொண்டவன் என்று சில வெற்றிச் சின்னங்களைப் பெற்றவனுமாகிய (திருஞானசம்பந்தர் என்னும்) இளையவனே, தினைப் புனம் உள்ள வள்ளி மலையில் குறப் பெண் வள்ளியின் பக்கத்தில் சென்று, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, சுனையில் அவளுடைய அழகிய புயத்தை புளகாங்கிதத்துடன், யானை வந்து எதிர்ப்பட, தழுவிப் புணர்ந்த அழகிய மார்பனே, மேரு மலையை வில்லாகப் பிடித்த சிவ பெருமானது இடது பாகத்தில் இருக்கின்ற உரிமை வாய்ந்தவள், தருமமே புரியும் சுக குமரி, பிதாவாகிய தக்ஷனை மழுவைக் கொண்டு வெட்டிய தூய்மையானவள் ஆகிய (தாக்ஷ¡யாணி என்ற) உமாதேவி பெற்றருளிய முருகோனே, மகிழ்ச்சி தரும் பெண்ணையாற்றின் கரையில், சோலையும் மேகங்களும் சூழ்ந்த திருவெண்ணெய்நல்லூர்** என்னும் நல்ல ஊரில், புகழ் விளங்க அற்புதமான மயிலின் மீது வீற்றிருந்து திரு நடனம் புரிந்து விளங்கும் பெருமாளே. 
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** திருவெண்ணெய்நல்லூர் சாலை ரயில் நிலையத்துக்கு வடக்கே 4 மைலிலும், பண்ணுருட்டிக்கு மேற்கே 15 மைலிலும் உள்ளது.

பாடல் 745 - திருப்பாதிரிப்புலியூர் 
ராகம் - பைரவி தாளம் - அங்கதாளம் - 7 1/2 
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2

தனதன தனன தனந்த தானன     தனதன தனன தனந்த தானன          தனதன தனன தனந்த தானன ...... தனதான

நிணமொடு குருதி நரம்பு மாறிய     தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை          நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம் 
நிலைநிலை யுருவ மலங்க ளாவது     நவதொளை யுடைய குரம்பை யாமிதில்          நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும் 
உணர்விலி செபமுத லொன்று தானிலி     நிறையிலி முறையிலி யன்பு தானிலி          உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன் 
ஒருதிரு மரகத துங்க மாமிசை     யறுமுக மொளிவிட வந்து நான்மறை          யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே 
புணரியில் விரவி யெழுந்த ஞாயிறு     விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி          பொலமணி மகுட சிரங்கள் தாமொரு ...... பதுமாறிப் 
புவியிடை யுருள முனிந்து கூர்கணை     யுறுசிலை வளைய வலிந்து நாடிய          புயலதி விறலரி விண்டு மால்திரு ...... மருகோனே 
அணிதரு கயிலை நடுங்க வோரெழு     குலகிரி யடைய இடிந்து தூளெழ          அலையெறி யுததி குழம்ப வேல்விடு ...... முருகோனே 
அமலைமு னரிய தவஞ்செய் பாடல     வளநகர் மருவி யமர்ந்த தேசிக          அறுமுக குறமக ளன்ப மாதவர் ...... பெருமாளே.

மாமிசத்தோடு ரத்தம், நரம்பு இவை கலந்துள்ள சதை, குடல், நெருங்கியுள்ள எலும்பு, தோல் இவையாவும் வரிசை வரிசையாக நிறைந்துள்ள உடம்பு, நோய் உண்டாகும் பழைய உடல், வயதுக்குத் தக்கபடி வெவ்வேறு நிலைகளில் வடிவமும், மாசுக்களும் உண்டாகக் கூடிய இந்த உடல், ஒன்பது தொளைகள் உடைய சிறு குடிலாகிய இந்த உடலில் உயிர் இருக்கும் பொழுதே வேண்டிய முயற்சிகளைச் செய்து சிறந்த தவங்களை உய்யும் பொருட்டு உணரக்கூடிய உணர்ச்சி இல்லாதவன் யான். ஜெபம் முதலிய ஒரு நல்ல ஒழுக்கமும் இல்லாதவன் யான். ஆண்மைக் குணமோ, தர்ம நெறியோ, அன்போ இல்லாதவன் யான். மேன்மையற்றவன் யான். என்றாலும் என் நெஞ்சு நினைவு என்பதை இழக்கும் முன்னரே, ஒப்பற்ற அழகிய பச்சை நிறமுள்ள பரிசுத்த மயில் என்னும் குதிரை மேல் உனது ஆறு திருமுகங்களும் பிரகாசிக்க என் எதிரில் வந்து நான்கு வேதங்கள், உபநிடதங்கள் ஆகியவற்றை எனக்கு விளங்கும்படி நீ உபதேசித்து அருள்புரிவாயாக. கடலில் கலந்து படிந்து எழுகின்ற சூரியன் பயந்து விலகும் மதில்களை உடைய இலங்கையில் வாழ்ந்த அரசன் ராவணனுடைய பொன்மயமான ரத்ன மகுடங்கள் தரித்த தலைகள் ஒரு பத்தும் நிலை பெயர்ந்து, பூமி மீது உருளும்படி கோபித்து, கூர்மையான அம்புகள் பொருந்திய வில்லை வளைத்து, முயன்று நாடிச்சென்ற மேகவண்ணன், மிக்க வீரம் வாய்ந்த ஹரி, விஷ்ணு, திருமால் எனப் பெயர் கொண்டவனின் அழகிய மருகனே, அழகுள்ள கயிலைமலை நடுநடுங்க, ஏழு குலகிரிகள்* எல்லாமுமாய் இடிந்து தூள்பறக்க, அலைவீசும் கடல் கொந்தளித்துக் குழம்ப, வேலினைச் செலுத்தும் முருகனே, தேவி முன்பு அரிய தவம் செய்த பாடலவளநகராகிய திருப்பாதிரிப்புலியூரில்** பொருந்தி வீற்றிருக்கும் குரு மூர்த்தியே, ஆறுமுகனே, குறமகள் வள்ளியின் அன்பனே, பெரிய தவசிகளின் பெருமாளே. 
* ஏழு குலகிரிகள்: இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஹேமகூடம், நீலகிரி, கந்தமாதனம்.
** திருப்பாதிரிப்புலியூர் கூடலூருக்கு வடக்கே 3 மைலில் கெடில நதிக்கரையில் உள்ளது.

பாடல் 746 - திருமாணிகுழி 
ராகம் - ....; தாளம் -

தனத்த தானன தானான தானன     தனத்த தானன தானான தானன          தனத்த தானன தானான தானன ...... தந்ததான

மதிக்கு நேரெனும் வாண்மூகம் வான்மக     நதிக்கு மேல்வரு சேலேனு நேர்விழி          மணத்த வார்குழல் மாமாத ராரிரு ...... கொங்கைமூழ்கி 
மதித்த பூதர மாமாம னோலயர்     செருக்கி மேல்விழ நாடோறு மேமிக          வடித்த தேன்மொழி வாயூற லேநுகர் ...... பண்டநாயேன் 
பதித்த நூபுர சீர்பாத மாமலர்     படைக்குள் மேவிய சீராவொ டேகலை          பணைத்த தோள்களொ டீராறு தோடுகள் ...... தங்குகாதும் 
பணக்க லாபமும் வேலொடு சேவலும்     வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை          படைத்த வாகையு நாடாது பாழில்ம ...... யங்கலாமோ 
கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி          கலக்கி யூர்பதி தீமூள வேவிடும் ...... வஞ்சவேலா 
களித்த பேய்கண மாகாளி கூளிகள்     திரட்பி ரேதமெ லேமேவி மூளைகள்          கடித்த பூதமொ டேபாடி யாடுதல் ...... கண்டவீரா 
குதித்து வானர மேலேறு தாறுகள்     குலைத்து நீள்கமு கூடாடி வாழைகொள்          குலைக்கு மேல்விழ வேரேறு போகமும் ...... வஞ்சிதோயுங் 
குளத்தி லூறிய தேனூறல் மாதுகள்     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்          குழிக்குள் மேவிய வானோர்க ளேதொழு ...... தம்பிரானே.

சந்திரனுக்கு ஒப்பானது என்று சொல்லக் கூடிய ஒளி பொருந்திய முகம், சிறந்த பெரிய கங்கை ஆற்றில் உலாவும் சேல் மீன் என்று சொல்லும்படியான கண்கள், நறு மணம் வீசும் நீண்ட கூந்தல் இவைகள் உடைய, அழகிய (விலை) மாதர்களுடைய இரண்டு மார்பகங்களில் முழுகி, மதிப்பு வைத்திருந்த மலைகளே இவை ஆகும் என்று அவைகளிலே மனம் வசப்பட்டவனாய், பெருமிதம் கொண்டு அவற்றின் மேல் விழுந்து தினமும், மிக நன்றாக வடித்தெடுக்கப்பட்ட தேன் போன்ற மொழியும் வாயிதழ் ஊறலுமே அனுபவிக்கின்ற ஒரு பொருளாகிய நாய் போன்ற அடியேன், சிலம்புகள் சூழ்ந்துள்ள சீரான பாதங்களாகிய சிறந்த மலர்களும், ஆயுதங்களில் ஒன்றாகப் பொருந்திய உடைவாளும், ஒளி கொண்ட பருத்த தோள்களும், பன்னிரண்டு தோடுகளாகிய காதணிகள் விளங்கும் செவிகளும், பாம்பை அடக்கும் மயிலும், வேலும், சேவலும், கூர்மையான சூலாயுதமும், ஒளி வீசும் நீண்ட வில்லைப் பிடித்த வெற்றியையும் விரும்பித் தியானிக்காது, பாழான எண்ணங்களில் நான் மயக்கம் கொள்ளலாமோ? கொதித்து மேல் எழுந்து வருகின்ற பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள சேனைகளைப் பொடியாக்கியும், குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் (இவைகளைக்) கலக்கியும், ஊர்களையும், நகரங்களையும் நெருப்பு றி எரியும்படியும் செலுத்திய வஞ்சம் கொண்ட வேலனே, மகிழ்ச்சி கொண்ட பேய்க் கூட்டங்களும், பெரிய காளியும், பெருங் கழுகுகளும் சேர்ந்து, ரணகளத்தில் திரண்டு கிடக்கும் பிணங்களின் மேல் விழுந்து மூளைகளைக் கடித்துத் தின்ற பூதங்களோடு பாடி ஆடுதலைப் பார்த்த வீரனே, குரங்குகள் குதித்து மேலே உள்ள குலைகளைக் குலைத்து, நீண்ட கமுக மரங்களிடையே ஊடாடுவதால் (அக் கமுகங் குலைகள் அறுபட்டு) வாழைக் குலைகள் மேல் விழும்படியான அழகு நிறைந்த செழுமையும், பெண்கள் குளிக்கும் குளத்தில் ஊறிய (மலர்களது) தேன்களின் சாரத்தையும், சிறந்த மகரந்தங்களையும் பருகி உலாவிய சேல் மீன்களும் நிறைந்த திருமாமணிக்குழி* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, தேவர்கள் தொழுகின்ற தம்பிரானே. 
* திருமாணிக்குழி என்ற தலம் திருப்பாதிரிப்புலியூர் தலத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 747 - திருவேட்களம் 
ராகம் - பெஹாக் தாளம் - திஸ்ர த்ருபுடை - 7

தனனத்தன தாத்தன தானன     தனனத்தன தாத்தன தானன          தனனத்தன தாத்தன தானன ......தனதான

சதுரத்தரை நோக்கிய பூவொடு     கதிரொத்திட ஆக்கிய கோளகை          தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி 
சரணக்கழல் காட்டியெ னாணவ     மலமற்றிட வாட்டிய ஆறிரு          சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங் 
கதிர்சுற்றுக நோக்கிய பாதமு     மயிலிற்புற நோக்கிய னாமென          கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக் 
கனகத்தினு நோக்கினி தாயடி     யவர்முத்தமி ழாற்புக வேபர          கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே 
சிதறத்தரை நாற்றிசை பூதர     நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி          சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே 
சிவபத்தினி கூற்றினை மோதிய     பதசத்தினி மூத்தவி நாயகி          செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா 
விதுரற்கும ராக்கொடி யானையும்     விகடத்துற வாக்கிய மாதவன்          விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே 
வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய     கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய          விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே.

நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்)* குளிர்ந்து தழைய, சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து, உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன். பூமி அதிர, நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ, கடல் ஒலி செய்து வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே, சிவனது பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில் படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே, விதுரனுக்கும், பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும், (மனம்) வேறுபடும்படியான பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான், அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே, வெளியிலே எட்டுத் திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை (இறுதியில் வென்று, அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க உலவிய (பெருமாளே), வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம்** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் ** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம்.

பாடல் 748 - திருவேட்களம் 
ராகம் - மனோலயம் தாளம் - ஆதி

தாத்தன தானன தாத்தன தானன     தாத்தன தானன ...... தனதான

மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்     வாழ்க்கையை நீடென ...... மதியாமல் 
மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்     மாப்பரி வேயெய்தி ...... அநுபோக 
பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்     பாற்படு ஆடக ...... மதுதேடப் 
பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி     பாற்கட லானென ...... வுழல்வேனோ 
சாத்திர மாறையு நீத்தம னோலய     சாத்தியர் மேவிய ...... பதவேளே 
தாத்தரி தாகிட சேக்கெனு மாநட     தாட்பர னார்தரு...... குமரேசா 
வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்     மீக்கமு தாமயில் ...... மணவாளா 
வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு     வேட்கள மேவிய ...... பெருமாளே.

ஒரு சிறிய அளவு கூட வாக்குத் தவறாத மனைவியுடன் நடத்தும் இல்லற வாழ்க்கையைப் பெரிதென மதியாமல், மிருகங்கள் போன்ற மனிதர்கள் யாராயிருந்தாலும் ஏற்றுக்கொண்டு அவர்களோடு அனுபவிக்கும் துர்க்குணப் பொது மாதர்களிடம் மிக்க அன்பைப் பூண்டு, வேசையர்களை அனுபவிக்கும் பாத்திரம் இவன் என்று பிறர் ஏச, மூண்டு எழுகின்ற ஆசைகளில் ஈடுபட்டு, (வேசையர்க்குக் கொடுக்கப்) பொன்னைத் தேட பூமியிலுள்ள மூர்க்க லோபிகளையே எனது கவிகளில் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே இவன் என்று வீணுக்குப் புகழ்ந்து திரிவேனோ? ஆறு* சாஸ்திரங்களையும் கடந்து, மனம் லயித்து ஒடுக்கவல்ல சாமர்த்தியசாலிகள் போற்றும் திருவடிகளை உடைய வேளே, தாத்தரி தாகிட சேக் என்ற தாளத்துக்கு ஏற்ப சிறந்த நடனம் செய்யும் பாதங்களை உடைய நடராஜப் பெருமான் தந்த குமரேசனே, அம்புக் கூட்டங்களைச் சுமந்து திரியும் வேடர்களின் மிக்க அமுதைப் போன்ற, மயிலை ஒத்த, வள்ளியின் மணவாளனே, அறியப் படுவதான வேதங்களின் கோஷம் முழங்கும் அழகிய திருவேட்களத்** தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* ஆறு சாஸ்திரங்கள் பின்வருமாறு:(1) வேதாந்தம் (உபநிஷதம்)(2) வைசேஷிகம் (கணாதரால் ஸ்தாபிக்கப்பட்ட தர்க்க சாஸ்திரம்)(3) பாட்டம் (குமாரில பட்டரால் பிரசாரம் செய்யப்பட்ட வேதமே தெய்வம் என்ற சாஸ்திரம்)(4) ப்ரபாகரம் (ப்ரபகரன் என்பவரால் வேத வேதாந்தப் பொருட்களை ஆராயும் சாஸ்திரம்)(5) பூர்வ மீமாம்சை (வேதத்தின் கர்ம காண்டத்தை ஆராய ஜைமினி முநிவர் இயற்றிய சாஸ்திரம்)(6) உத்தர மீமாம்சை (வேதத்தின் பிற்பகுதியான ஞான காண்டத்தை ஆராய வியாசரால் எழுதப்பட்ட பிரம்ம சூத்திரம் முதலிய சாஸ்திரம்.
** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம்.

பாடல் 749 - திருநெல்வாயில் 
ராகம் - நாட்டை தாளம் - அங்கதாளம் - 8 
தகிட-1 1/2, தக-1, திமி-1 தகிட-1 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2

தனன தானன தானனாத் தனந்த     தனன தானன தானனாத் தனந்த          தனன தானன தானனாத் தனந்த ...... தனதான

அறிவி லாதவ ¡£னர்பேச் சிரண்டு     பகரு நாவினர் லோபர்தீக் குணங்க          ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர் 
அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து     திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி          யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத 
நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து     பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச          நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி 
நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து     வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து          நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே 
நறிய வார்குழல் வானநாட் டரம்பை     மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி          நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர 
நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த     தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து          நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர 
மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து     கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து          வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா 
மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து     மதியு லாவிய மாடமேற் படிந்த          வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே.

அறிவு இல்லாதவர்கள், இழிவானவர்கள், இருவிதமான பேச்சு பேசும் நாவினை உடையவர்கள், கஞ்சர்கள், கெட்ட குணங்களையே மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள், பொது மகளிருக்கு நகைகளைப் புனைந்து பார்க்கும் அறிவிலிகள், அசடர்கள், பூமியில் வீணாகக் காலத்தைப் போக்கப் பிறந்து திரிகின்ற மனிதர்கள், பெண்கள் மீது காம இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர், நீதி நூல்களின் பயன் தெரியாது, நன்னெறியில் போகாதவர்கள், சூதாட்டத்தால் மற்றவர் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், ஆசைப் பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் - இத்தகையோரிடம் சென்று, நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி, நினைவு தேய்ந்து, பாழ்பட்டு, வாட்டம் அடைந்து, பார்வை மங்கி, வறுமை என்ற நெருப்பின்மேல் கிடந்து நெளியும் நீண்ட புழுப்போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டருள்வாயாக. நறுமணத்துடன் கூடிய நீண்ட கூந்தலை உடைய தேவநாட்டுப் பெண்கள் தங்கள் காதலர்களுடைய தோள்களை விரும்பித் தழுவி, சிரிப்புடனே ஏழு ஸ்வரங்களிலும்* பாடி மகிழ்ந்து குலவவும், நியாயம் இல்லாதவராய், கோபம் மிக்கவராய், அழிவுப்பாதையிலே செல்லும் அசுரர்களின் மனைவியர் தங்கள் கணவரின் தோள்களைப் பிரிந்து, தமது பிரிவாற்றாமையை அடக்க முடியாமல் அழுது, தங்கள் உடலைத் தாமே துன்புறுத்தி வருத்தமே பெருகவும், அலைகள் பொங்கும் ஆழ்கடலின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டு, கிளைகள் கோடிக்கணக்காய் கடல் மேல் விரிந்து வளர்ந்த மாமரமாய் நின்ற சூரன் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த வேலாயுதனே, பொருந்திய கரு மேகங்கள் கூட்டமாக எழுந்து, நிலவொளி வீசும் உயர்ந்த மாடங்களின் மீது படியும் தலமாம், வயல்கள் சூழ்ந்த திருநெல்வாயிலில்** அமர்ந்த பெருமாளே. 
* ஏழிசை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என தமிழிசையில் முறையே வழங்கும் ஸப்த ஸ்வரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகும்.
** திருநெல்வாயில் சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 மைலில் உள்ள சிவபுரி என்ற தலம் ஆகும்.

பாடல் 750 - விருத்தாசலம் 
ராகம் - ...; தாளம் -

தனத்தானன தானன தானன     தனத்தானன தானன தானன          தனத்தானன தானன தானன ...... தனதான

குடத்தாமரை யாமென வேயிரு     தனத்தார்மதி வாணுத லாரிருள்          குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக் 
குலக்கார்மயி லாமென வேகயல்     விழித்தார்கர மேல்கொடு மாமுலை          குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை 
படித்தார்மயி லாமென வேநடை     நெளித்தார்பல காமுகர் வார்கலை          பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர் 
படிக்கார்மின லாமென வேநகை     புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்          பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ 
அடைத்தார்கட லோர்வலி ராவண     குலத்தோடரி யோர்சர னார்சின          மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே 
அறுத்தாரய னார்தலை யேபுர     மெரித்தாரதி லேபுல னாருயி          ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா 
விடத்தாரசு ரார்பதி வேரற     அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்          விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர 
விழித்தாமரை போலழ காகுற     மகட்கானவ ணாஎன தாயுறை          விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.

குடம் என்றும், தாமரை மொட்டு என்றும் (உவமிக்கத் தக்க) இரு மார்பகங்களை உடையவர்கள், பிறைச் சந்திரன் போன்ற ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்கள், இருண்ட மேகம் போல் கருத்த கூந்தல் காடு போல் அடர்ந்து, முதுகில் அலை மோதுவது போலப் புரள, சிறப்புற்ற மேகத்தைக் கண்ட மயிலைப் போலக் களிப்பும், கயல் மீன் போன்ற கண்களும் கொண்டவர்களாய், மாலை அணிந்த கையின் மேல் ஏந்தியுள்ள, அழகிய மார்பு போன்ற, குடத்தை ஒரு பக்கமாகக் கொண்டவர்களாய், யாழ் என்றும், கிளி என்றும் சொல்லும்படியான குயிலின் ஓசை போன்ற குரலை மிழற்றுபவர்களாய், மயில் என்று சொல்லும்படி நெளிந்த நடையினராய், பல காம தூர்த்தர்களின் பெரிய காம சாஸ்திர அறிவைப் பழிப்பவர்களாய், ஆசையை ஆபரணமாக மேற் பூண்டு வேசியர்களாய், படிந்துள்ள கருமேகத்தில் தோன்றும் மின்னல் என்று சொல்லும்படியான ஒளி கொண்ட பற்கள் தெரியச் சிரிப்பவர்களாய், பல பேர்வழிகளின் வாயிதழ் ஊறலை அனுபவிப்பவர்களாய், பொருளை அபகரிப்பவர்களாகிய பழிகாரிகளாகிய விலைமாதர்களின் உறவு எனக்குத் தகுமோ? கடலை அணையிட்டு அடைத்தவராய், ஒப்பற்ற வலிமை வாய்ந்த ராவணனை, அவன் குலத்தோடு அறுத்துத் தள்ளிய ஓர் அம்பைக் கொண்டவர், (அசுரர்களின்) கோபத்தை இவ்வாறு அழித்து ஒழித்தவர், மேகத்துக்கு ஒப்பான கருநிறம் கொண்ட ராமபிரானின் மருகனே, பிரமனின் தலையை அறுத்துத் தள்ளியவர், திரிபுரத்தை எரித்தவர், அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள (மூன்று) அசுரத் தலைவர்களின் உயிரைக் காத்தருளியவர்* ஆகிய சிவபெருமானின் பாதி உடலில் உள்ள உமாதேவி அருளிய குழந்தையே, விஷம் போன்ற கொடிய குணம் வாய்ந்த அசுரர்களுடைய ஊர்கள் வேருடன் அற்று விழ சம்ஹாரம் செய்தாய், ஒளி வீசும் வேலாயுதத்தால் வீரச் செயல்களைப் புரிந்தாய், தேவர்கள் சிறையும் வறுமையும் நீங்கவும், அவர்கள் பொன்னுலகுக்குக் குடி போகவும் செய்வித்த தாமரை போன்ற கண்களை உடைய அழகனே, குறமகள் வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே, என்னுடைய தாயான விருத்தாம்பிகை அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே. 
* வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு இவைகளால் ஆகிய திரிபுரங்கள் என்ற பறக்கும் பட்டணங்களைக் கொண்டு அனைவரின் மேலே விழுந்துத் துன்புறுத்தினர். ஆதலால் சிவபெருமான் அவர்களை எரித்தபோது, சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில், இருவர் கோயில் காவலாளர் ஆனார்கள். மற்றவர் முழவு முழக்கும் பேற்றினை அடைந்தார்.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.