LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- அருணகிரிநாதர் நூல்கள்

திருப்புகழ்-பாடல்-[851 -900]

பாடல் 851 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - சிந்தோளம் தாளம் - மி.ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
     இருள்பிணி துஞ்ச ...... மலமாய 
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
     இசைகொடு துங்க ...... புகழ்கூறித் 
திருமுக சந்த்ர முருகக டம்ப
     சிவசுத கந்த ...... குகவேல 
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
     திகழந டஞ்செய் ...... கழல்தாராய் 
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
     மகிழரி விண்டு ...... மருகோனே 
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
     வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா 
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
     மமலனு கந்த ...... முருகோனே 
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
     அமளிந லங்கொள் ...... பெருமாளே.
ஸஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, எனது துயரமெல்லாம் குறைந்துபோக, உனது திருவருள் பெருக, இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, குகா, வேலா, சிவசிவ என்று கூறி அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய். மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்து மகிழ்ந்த ஹரி விஷ்ணுவின் மருமகனே, உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்க வெற்றிவலம் வந்த செம்பொன் மயில்வீரனே, அருகில் தன் பாகத்தில் அமர்ந்த பார்வதியுடன் ரிஷபவாகனம் ஏறும் அமலபிரான் சிவன் விரும்பும் முருகப் பெருமானே, அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் தலத்தில் வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடனும் மலர்ப்படுக்கையில் இன்புறும் பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 852 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான
எகினி னம்பழி நாடக மாடிகள்
     மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்
          இசையி டுங்குர லார்கட னாளிகள் ...... வெகுமோகம் 
எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில்
     அலைய வுந்திரி வாரெவ ராயினும்
          இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ...... வலைவீசும் 
அகித வஞ்சக பாவனை யால்மயல்
     கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி
          யதிக முங்கொடு நாயடி யேனினி ...... யுழலாமல் 
அமுத மந்திர ஞானொப தேசமும்
     அருளி யன்புற வேமுரு காவென
          அருள்பு குந்திட வேகழ லார்கழல் ...... அருள்வாயே 
ககன விஞ்சையர் கோவென வேகுவ
     டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்
          கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே 
கரிநெ டும்புலி தோலுடை யாரெனை
     யடிமை கொண்டசு வாமிச தாசிவ
          கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ...... யருள்பாலா 
செகமு மண்டமு மோருரு வாய்நிறை
     நெடிய அம்புயல் மேனிய னாரரி
          திருவு றைந்துள மார்பக னார்திரு ...... மருகோனே 
தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி
     வளர்த னம்புதை மார்பழ காமிகு
          திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.
அன்னப் பறவைகள் கூட்டத்தை பழிக்கவல்ல நாடகம் நடிப்பவர்கள். மயில் என்று சொல்லத்தக்க செயலினை உடையவர்கள். பாம்புக்கு ஒப்பான பெண்குறியை உடையவர்கள். பண்களைக் காட்டும் குரலை உடையவர். (திரும்பிவாரா) கடன் கொள்ளுபவர்கள். மிக்க மோகம் கொண்டுள்ளோம் என்பவர் போல் மேலே விழுபவர்கள். கச்சு அணிந்த மார்பகத்தின் மீதுள்ள மேல் ஆடை அசையும்படி திரிபவர்கள். யாராக இருந்தாலும் இரங்குபவர் போல நெகிழ்ச்சியைக் காட்டும் கண்களைச் சுற்றுபவர்கள். விலைக்கு உடலை விற்கும் வேசியர். காம வலை வீசும் தீமையைத் தருவதான வஞ்சக நினைப்புள்ள நடத்தையால் மயங்கி, நான் மோகம் கொண்டு அவர்கள் வலையில் விழுந்திட, ஆசையும், நோய், பிணி இவைகளை நிரம்பக் கொண்டு நாய் போன்ற அடியேன் இனிமேல் அலைச்சல் உறாமல், அமுதம் போன்ற (சரவணபவ என்னும்) ஆறு எழுத்து மந்திரத்தையும் ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, நான் அன்பு கூடிய மனத்துடன் முருகா என்று சொல்லும்படியான கழல் அணிந்த உனது திருவடியை அருள்வாயாக. விண்ணிலுள்ள கல்வி மிக்கோர் கோ என்று அலறி இரங்க, கிரெளஞ்சமும், ஏழு மலைகளும், அசுரர்களும் அழியுமாறு, கடலும், தீவுகளும் மிக வேகுதல் உற, கொடிய நெருப்பை வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, முருகனே, யானை, பெரிய புலி ஆகியவற்றின் தோலைப் புனைந்தவர், என்னை அடிமையாகக் கொண்ட சுவாமி சதாசிவ மூர்த்திக் கடவுள், எனது தந்தை ஆகிய சிவபெருமானது (இடது) பாகத்தை விட்டுப் பிரியாத உமா தேவி அருளிய பாலகனே, உலகங்கள், அண்டங்கள் இவை முழுதிலும் ஓர் உருவாய் நிறைந்து விளங்கும் பெரிய அழகிய மேக நிறத்து மேனியராகிய திருமால், லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பை உடையவர் ஆகியவரின் அழகிய மருகனே, தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகியின் வளர்ச்சி மிகும் தனத்தில் படிந்த மார்பனே, அழகனே, மிகுந்த சிறப்பு வாய்ந்த திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 853 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -
தந்தன தனத்த தந்தன தனத்த
     தந்தன தனத்த ...... தனதான
கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த
     கொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார் 
குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட
     கொந்தள கம்வைத்த ...... மடவார்பால் 
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
     மங்கிந ரகத்தில் ...... மெலியாமல் 
வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை
     வந்தனை செய்புத்தி ...... தருவாயே 
பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி
     பண்டுள தவத்தி ...... லருள்சேயே 
பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த
     பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே 
சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த
     சங்கரர் தமக்கு ...... மிறையோனே 
சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற
     சஞ்சல மறுத்த ...... பெருமாளே.
குடத்தை ஒத்த மார்பகங்களை வளர்த்துள்ளவர்களும், கொஞ்சுகின்ற கிளியைப் போன்ற பேச்சுக்களை உடையவர்களும் ஆகிய மான் போன்ற விலைமாதர்கள், குங்குமம் ஆகிய அலங்காரத்துடன், நல்ல புனுகை விட்டு (வாரப்பட்ட), பூங்கொத்துக்களை உள்ள கூந்தலை உடைய விலைமாதர்களிடத்தில், வீண் செயல்களைச் செய்து, நட்புச் செயல்களைக் காட்டி, அழிந்து, நரகத்தில் மெலியாதவாறு, வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த உன் திருவடியை வணங்குகின்ற புத்தியைக் கொடுத்து அருளுக. செறிந்துள்ள கங்கை நதியும், (சிவனார்) பாகத்தில் பொருந்தியுள்ள ஒப்பற்ற சாமர்த்தியம் உள்ள பார்வதி தேவியும் (தத்தமது) பழைமையானத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே, பசுமையான மேகங்கள் படியும் சோலைகள் மிக்குள்ள திருப்பந்தணை நல்லூர்* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, நாவல் மரத்தடியில் (திருவானைக்காவில்) வந்து தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவனே, சங்கை ஏந்திய திருமாலும், தேவர்களும் (சூரனிடம்) கொண்ட பயத்தினால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி ஒழித்த பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 854 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -
தந்ததன தந்ததன தனதனத்
     தந்ததன தந்ததன தனதனத்
          தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான
கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
     கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
          கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ...... கொடுபோய்வண் 
கெந்தபொடி யும்புனைந் துறவணைத்
     தின்பவச னந்தருந் தொழிலடுக்
          கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந் 
தண்டைகள்க லின்கலின் கலினெனக்
     கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத்
          தண்கொலுசு டன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச் 
சந்ததமும் வந்திரும் பரிமளப்
     பங்கயப தங்களென் கொடுவினைச்
          சஞ்சலம லங்கெடும் படியருட் ...... புரிவாயே 
தொண்டர்கள்ச ரண்சரண் சரணெனக்
     கொம்புகள்கு குங்குகுங் குகுமெனத்
          துந்துமிதி மிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை 
சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக்
     கந்தகுற வஞ்சிதங் கருவனத்
          துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும் 
பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்
     கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்
          பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும் 
பந்திவரு மந்திசெண் பகமகிற்
     சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
          பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே.
கெண்டை மீனைப் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மலர் அணிந்த கொண்டைகள் குலுங்கும்படியாக நின்று, சமீபத்திலிருந்து தாழ்ந்த குரலுடன், பற்கள் தெரியும்படி குழைந்து சிரித்துப் பேசி, (நாடி வருபவரை) படுக்கையில் கொண்டு போய், நல்ல வாசனைத் தூள்களைப் பூசி, இறுக்க அணைத்து, இன்பகரமான பேச்சுக்களுடன் கூடிய செயல்களால் உண்டாகின்ற காம மயக்கில் படுகின்ற துன்பம் நீங்க, ஒளி வீசுகின்ற (உனது) காலில் அணிந்த தண்டைகள் கலின் கலின் என்று ஒலி செய்ய, கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய, அருள் பாலிக்கும் கொலுசுடன், சிலம்பும் அசைய, திருவுள்ளத்தில் அன்பு கூர்ந்து எப்போதும் (என்முன்) வந்து, பெருமை தங்கிய, நறு மணம் உள்ள தாமரை போன்ற திருவடிகள் என்னுடைய பொல்லாத வினை, மனக் கவலை, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் (இவை யாவும்) அழிந்து போகும்படி அருள் புரிவாயாக. அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க, ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என்று ஒலி செய்ய, பேரிகை திமிந் திமிந் திமின் என்று அணுகி ஓசை செய்ய, அழகிய தேவயானையைத் திருமணம் செய்த வல்லமை வாய்ந்த கந்தனே, குறப் பெண்ணாகிய வள்ளி தங்கியிருந்த அருமையான தினைக் காடு உள்ள பரிசுத்தமான வள்ளி மலையையும் காத்து, தேவர்களுக்குத் துன்பத்தை மிகவும் விளைவித்த மிண்டர்கள் (அசுரர்கள்) தோள்களும் அறுபட்டுத் தூளாகச் செய்தவனே. மிகச் சிறப்பு வாய்ந்த தேவயானை (வளர்ந்த) அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தைக் காத்தளித்து, அகழியும், மதிலும், பக்கத்தில் சூழ்ந்துள்ள, வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்த, செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை (இம் மரங்கள் எல்லாம்) பொருந்திய சோலை சூழ்ந்த திருப்பந்தணைநல்லூரில்* வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 855 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -
தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை
     யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி
          சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ...... தென்புரூவர் 
தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி
     னார்பு யங்கழையி னார்த னங்குவடு
          சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ...... புண்டா£கம் 
சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை
     யார்ச ரண்கமல நேரி ளம்பருவ
          தோகை சந்தமணி வாரு டன்கலவி ...... யின்பமூடே 
சோக முண்டுவிளை யாடி னுங்கமல
     பாத மும்புயமி ராறு மிந்துளபல்
          தோட லங்கலணி மார்ப மும்பரிவு ...... ளங்கொள்வேனே 
ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக
     நீலி கண்டிகலி யாணி விந்துவொளி
          யோசை தங்குமபி ராமி யம்பிகைப ...... யந்தவேளே 
ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்
     சேறு டன்குருதி யோட எண்டிசையும்
          ஓது கெந்தருவர் பாட நின்றுநட ...... னங்கொள்வேலா 
ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென
     தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
          மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா 
ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
     யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்
          ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
தேன் என இனிக்கும் வாயிதழ் ஊறலை உடையவர். பளிங்கு போன்று வெண்ணிறமான பற்களை உடையவர். குளிர்ந்த பேச்சை உடையவர். அம்பு போன்ற கண்ணையும் அழகு சிறந்த முகத்தையும் உடையவர். இளம் பிறை போன்றது என்று சொல்லக் கூடிய நெற்றிப் புருவத்தை உடையவர். வண்டுகள் பொருந்திய கூந்தலை உடையவர். கமுகு போன்ற கழுத்தினை உடையவர். மூங்கில் போன்ற தோளை உடையவர். மார்பகங்கள் மலையை ஒக்க சிவந்த நிறத்தை உடையவர். துவட்சி உற்ற இடையையும், தாமரை போன்ற பெண்குறியையும் கொண்டவர். மயக்கும் மந்திர வித்தையைக் கொண்டவர்கள். வாழைத் தண்டு போன்ற தொடையை உடையவர்கள். தாமரை போன்ற பாதங்களை உடையவர். இளம் பருவத்தையுடைய மயில் போன்றவர். சந்தனம் முதலியவற்றைப் பூசிக் கொள்ளுபவர்களோடு செய்யும் சேர்க்கை இன்பத்தில் சோர்வு அடைந்து விளையாடின போதும், உனது தாமரைத் திருவடிகளையும், பன்னிரண்டு தோள்களையும், கடம்பு முதலிய பலவிதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்த திருமார்பையும் அன்பு நிறைந்த என் மனத்தில் தியானிப்பேன். ஓம் நமசிவாய என்னும் அந்த சிவத்துடன் கலந்த உருவத்தினள், ஐந்து திரு முகங்களைக் கொண்ட நீலி, ரத்தின மாலை அணிந்துள்ள கல்யாணி, சிவ ஞான சக்தி, ஒளி ஓசை இவைகளுக்கு ஆதாரமாயுள்ள அழகுற்ற அம்பிகை என்ற உமாதேவி பெற்ற செவ்வேளே, பேரொலியுடன் ஆரவாரம் இட்ட அசுரர்களின் கூட்டங்களும் மங்கையர்களும் இறந்து பட, அவர்களின் உடல் சேறுடன் ரத்தமும் புரண்டு ஓட, எட்டுத் திசையிலும் இருந்து புகழும் கந்தருவர்கள் பாட, நடனம் செய்கின்ற வேலாயுதனே, தினைப் புனம் காத்த மங்கை, பரிசுத்தமான ஞான மயமான ரம்பை போன்ற அழகி, எனது தாய், சந்திரனை ஒத்த திருமுகம் உடையவள், வஞ்சிக் கொடி போன்ற குறமான் வள்ளியையும், தேவர்கள் வளர்த்த மான் ஆகிய தேவயானையையும் அணைந்து அழகு விளங்கும் திரு மார்பனே, அழகிய திருநீற்றுப் பச்சை, அறுகு, மண்டை ஓடு, கொன்றை மலர், நிலா, கங்கை ஆகியவற்றை அணிந்த சடையை உடைய சிவபெருமான் எழுந்தருளி உள்ளதும், அழகுள்ளதும், அழியாததும் ஆகிய திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே. 
* இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 856 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -
தனனந் தத்தன தனந்த தானன
     தனனந் தத்தன தனந்த தானன
          தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான
மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக
     மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென
          மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல 
மருவும் பொற்குட மெழுந்த மாமுலை
     வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென
          வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ...... தெருவூடே 
நிதமிந் தப்படி யிருந்து வாறவர்
     பொருள்தங் கப்பணி கலந்து போய்வர
          நெறிதந் திட்டவர் வசங்க ளாமென ...... வுழலாதே 
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை
     மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
          நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு ...... மருள்தாராய் 
நதிமிஞ் சச்சடை விரிந்த நாயக
     னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை
          நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர ...... னருள்பாலா 
நவகங் கைக்கிணை பகர்ந்த மாமணி
     நதிபங் கிற்குல வுகந்து காபுரி
          நகர்பொங் கித்தழை யவந்து வாழ்வுறு ...... முருகோனே 
கெதிதங் கத்தகு கணங்கள் வானவர்
     அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர்
          கிளைபொங் கக்ருபை புரிந்து வாழ்கென ...... அருள்நாதா 
கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு
     தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள்
          கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள ...... பெருமாளே.
சந்திரன் அஞ்சி நாணும்படியான பொலிவு நிறைந்த அழகிய முகத்துடன், மயிலும் (இவர்களின் சாயல் முன் நமது சாயல் எம்மாத்திரம் என்று) பயப்பட, கிளியின் கூட்டங்கள் போல விளங்கி, இனிமை தரும் பேச்சுக்களைப் பேசும் பெண்களாகிய தேவலோகத்து மேனகை, ரதி என்னும் அரம்பையர்கள் போல, பொருந்தியுள்ள தங்கக் குடம் போன்ற அழகிய மார்பகங்களுடன் விளங்கும், வஞ்சிக் கொடி நடந்து உலவுவது போல் நடந்து வருகின்ற, உயர்ந்த கடலில் தோன்றி எழுந்த லக்ஷ்மி போன்ற அழகினர் தெருவழியாக தினந்தோறும் இவ்விதமாய் இருந்து, வரும் ஆடவர்களுடைய பொருள்களை தம்மிடமே தங்கும்படியாகச் செய்து, அவர்களுடன் கலந்து, போகவும், வரவும் வழி கொடுப்பவர்களின் வசப்பட்டவன் என்று சொல்லும்படியாக நான் திரியாமல், (அருள்ச்) செல்வம் பொங்க பல தவப் பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு, நான் உன்னை ஒளி வீசும் சந்தத் தமிழ்ப் பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உனது திருவருளைத் தருவாயாக. கங்கை பொங்கி எழும் சடை விரிந்த தேவன், உமா தேவி அன்போடு செய்த பூஜையை நன்று இது என ஏற்று உள்ளம் குளிர்ந்த சிவன், பராபர மூர்த்தி அருளிய குழந்தையே, புதுமை நிறைந்த கங்கை நதிக்கு ஒப்பாகும் என்று சொல்லப்பட்ட மண்ணி ஆற்றின் பக்கத்தில் விளங்குகின்ற கந்துகாபுரி என்னும் திருப்பந்தணைநல்லூர்* என்னும் பதி செல்வம் மேம்பட்டு விளக்கமுறும் முருகனே, நற்கதி நிலை தம்மிடம் தங்குவதற்கு, பொருந்திய கணங்கள், தேவர்கள், இந்திரன், தாமரையில் வாழும் பிரமன், திருமால், புலவர்கள் இவர்களுடைய கூட்டம் சிறப்புற்று வாழ அருள் கூர்ந்து வாழுங்கள் என்று அருளிய நாதனே, கர்வம் கொண்டு பகைமை பூண்ட சூரனுடன் அவனுடைய சேனை பயப்படும்படி சண்டை செய்து, கிளம்பி தீ தாவி எழும் கிரவுஞ்ச மலையைப் பிளவுபடுத்திய வேலாயுதத்தைக் கொண்ட பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 857 - திருப்பனந்தாள்
ராகம் - ....; தாளம் -
தந்தா தத்தன தந்தா தத்தன
     தந்தா தத்தன ...... தனதான
கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை
     யென்றே செப்பிய ...... மொழிமாதர் 
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத
     னந்தா னித்தரை ...... மலைபோலே 
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம
     னந்தா னிப்படி ...... யுழலாமல் 
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்
     என்றே யிப்படி ...... அருள்வாயே 
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட
     மண்டா நற்றவர் ...... குடியோட 
எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி
     யென்றே திக்கென ...... வருசூரைப் 
பந்தா டித்தலை விண்டோ டக்களம்
     வந்தோ ரைச்சில ...... ரணகாளிப் 
பங்கா கத்தரு கந்தா மிக்கப
     னந்தா ளுற்றருள் ...... பெருமாளே.
பூங் கொத்துக்கள் நிறைந்த கரிய கூந்தலையும், சந்திரனைப் போன்ற முகத்தையும், சர்க்கரை என்றே சொல்லப்பட்ட மொழிகளையும் உடைய விலைமாதர்களின் வாசனை கொண்டதும் முத்து மாலை பூண்டதுமான மார்பகம், இந்தப் பூமியில் உள்ள மலை போல் உயர்ந்து எதிர் வந்து தோன்றிச் சுற்றி என் மனத்தைச் சூழ்ந்து கவர்ந்து பற்றினால், இந்த ஏழை மனம் இப்படியே அலைந்து அலைந்துத் திரியாமல், அழிதல் இல்லாத சிறந்ததொரு உபதேசப் பொருளை இதோ பெற்றுக்கொள், இது ஒரு அற்புதமானது என்று கூறி இவ்வண்ணம் இப்போதே அருள்வாயாக. சந்திரன் பயந்து ஓட, சூரியன் அதைக் கண்டு ஓட, காட்டில் கூட்டமாகச் செல்லும் நல்ல தவசிகளும் குடும்பத்துடன் அஞ்சி ஓடவும், எங்கே அந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள், எங்கே இந்த மலையில் இருப்பவர்கள் என்று கூறியே, திடுக்கிடும்படியாக வந்த சூரனை பந்தடிப்பது போல அடித்து விரட்டி, தலை அற்றுப் போய்ச் சிதறி விழவும், போர்க்களத்துக்கு வந்த அசுரர்களைக் கொன்று (அவர்களது உடல்களை) சில ரண தேவதைகளுக்குப் பங்கிட்டுத் தந்த கந்தனே, சிறப்பாக திருப்பனந்தாளில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்பனந்தாள் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.
பாடல் 858 - திருவிடைமருதூர்
ராகம் -.....; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
     தான தானனா தான தானனா ...... தனதன தனதான
அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு
     ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
     ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
     ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் 
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
     ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
     வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
     ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே 
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்
     மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
     சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
     வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே 
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்
     வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
     வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
     மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் 
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில
     வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
     பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
     வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் 
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்
     மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
     காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
     வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச 
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ
     ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
     ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
     ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே 
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்
     ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
     ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
     ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
அறுகம் புல்லின் நுனியில் உள்ள பனி போல சிறிய துளி ஒன்று பெரியதான ஓருடலை அடைந்ததாகி, ஒரு குழந்தை உருவம் கொண்டு வெளிவர, அந்த அருமைக் குழந்தையின் மழலை மொழிகளில் கனிவு கொண்டு அக் குழந்தையின் தாயும் தந்தையும், அதன் மீது உலக மாயையின் வசப்பட்டு வெகு வெகு அருமையாக அன்பு காட்டி வளர்க்க, மொளு மொளு என்று உடலும் வளர, கவலை அற்ற இன்ப வாழ்க்கையராய் இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர் ஒரு பெரியவராகி அழகு விளங்கும் நடையைக் கொண்டவராய, ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களில் பழகினவராய், உயிர்போல அருமை வாய்ந்த மனைவிமாருடன், விழப் போகும் சுவரை, மாதர்கள் என்னும் பெருங் குழியை நிலைத்திருக்கும் என்று எண்ணி, வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்து, அணு அளவு தவிடும் கீழே விழுந்து சிதறக் கூடாது என மன அழுத்தம் கொண்டு, ஆசைக்கு ஆளாக ஊசியின் தன்மை பூண்டவராய், அவிந்து போவதற்கு முன் ஒளி விட்டு எரியும் விளக்கைப் போல (பின் வரும் கேடு தெரியாது மகிழ்ந்திருந்து), சுத்த தரித்திரன் ஒருவனோ, தவ புருஷனோ அமுது படையுங்கள் என்று கேட்ட உடனே, மேலை வீட்டுக்குப் போங்கள், கீழை வீட்டுக்குப் போங்கள் எனச் சொல்லி, திடு திடென்று நடந்து போய், பிச்சை கேட்டவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச் சென்று அவர்கள் மேல் மிகவும் கோபித்து, நாயைப் போல் பாய்ந்து விழுந்து, தமது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப் போவதற்கான பேச்சுக்களைப் பேசும் ஒரு வீணர்களின் பேச்சே நல்லது என மேற்கொள்ளப்பட்டதாகி, வரப் போகும் விதியின் போக்கைச் சற்றும் யோசிக்காமல், மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த தேகம் முற்றும் வளைவுற்றுத் தளரவும், வீண் பொழுது போக்குபவர்களின் தரிசனத்தையே மேற் கொண்ட பாவியாகி, அம் மறு பிறப்பில் துன்பம் நேரும் என்று அறிவுரை கூறுபவரை, உம் பேச்சை நிறுத்தும், கோரைப் புல் போலத் தோன்றி மறைபவர்கள் (மறுமை என்ற ஒன்றை) காண்பார்களா என்ன என்று எதிர்த்துப் பேசியும், பாசங்களை விட்ட துறவிகளாகிய பெரியோர்களையும் வேதியர்களையும் வெடு வெடு என்று காரமாகப் பேசியும், தவில் வாத்தியம் போல் பேரொலியுடன் இரைந்து பேசி, யாளி போலத் திறந்த வாயினராய் மாதர்களுடன் புணர்ச்சி பொருந்திக் காலங் கழித்து வரும் நாளில், வறுமைகள் நெருங்கி வர, கையில் உள்ள பொருளும் விலகி ஒழிய, சில வகையான வாத சம்பந்தமான நோய்கள, உடல் வீக்கம் தரும் காமாலை, ரத்தம் இன்மையால் உடல் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய், மகோதர நோய், வயிற்று வலி, ஒரு வகையான புண் கட்டி இவையெல்லாம் வர, இரண்டு கண்களிலும் பீளை ஒழுக, கோழை மேலிட்டு எழ, வழ வழ என்று உமிழ்கின்ற கபம் கொழ கொழ என்று ஒழுகி விழ, தேகத்தில் உள்ள சதை எல்லாம் வற்றிப் போய் நாடியும் பேதப்பட்டு வேறாகி, மனையாளும் (இனி எப்படி இவர் பிழைப்பது என) மன உறுதி வேறுபட்டு கலக்கம் உற, வீட்டில் உள்ளவர்களும் சமீபத்தில் சென்று பாருங்கள் என்று சொல்லும் போது, பெண்கள் சீ என வெறுக்க, குழந்தைகள் சீ என்று அருவருக்க, கனவில் தேர் வருவது போலவும் குதிரை வருவது போலவும் காட்சிகள் தோன்ற, பெரிய சுடுகாடு வா என்று கூப்பிட, வீடு போ என்று கூற, சாமர்த்தியம் அழிய, உற்சாகம் அழிய, பேச்சுத் தடுமாறி, கண்கள் சொருகிப் போக, மேல் மூச்சு எழ உயிர் உடலை விட்டுக் கழியும் நாளில் மனிதர்கள் பல பேச்சுக்கள் பேச, இவர் இறந்த பின் நமது எல்லா வளமும் அற்றதென்று சுற்றத்தார் எல்லாம் கதறி அழ, அறியாமை கொண்ட மாதர்கள் தலையில் அடித்துக் கொண்டு மேலே விழ, என்னுடைய பொருள், என்னுடைய அடிமை ஆட்கள் என்கின்ற அறிவு சிறிதளவும் இல்லாமல போக, ஈக்கள் மொலேல் என்று உடலை மொய்க்க, (உயிர் பிரிந்ததும்) வாயை ஆ என்று திறந்து வைக்க, ஒடுங்கின ஒலி செய்யும் பறை, சிறிய பறைகள், திமிலை என்ற ஒரு வகையான பறையுடன் மேளவகை (இவை எல்லாம்) ஒலிக்க சுடு காட்டுக்கே கொணரப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு, நெருப்பில் இடப்படும் இத்தகைய வாழ்க்கையை (உனது) இரண்டு திருவடிகளைப் போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதென்றால அவர்களை உலகத்தார் இகழ மாட்டார்களா? பாச நாசம் செய்யும் பெருமாளே, (ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய, ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக. திருவிடை மருதூரில்* வீற்றிருக்கும் தனி நாயகனே, தேவர்கள் பெருமாளே. 
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.
பாடல் 859 - திருவிடைமருதூர்
ராகம் - ....; தாளம் -
தனன தனதனன தான தானதன
     தனன தனதனன தான தானதன
          தனன தனதனன தான தானதன ...... தந்ததான
இலகு குழைகிழிய வூடு போயுலவி
     யடர வருமதன னூல ளாவியெதி
          ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம் 
இனிமை கரைபுரள வாகு லாவுசரி
     நெறிவு கலகலென வாசம் வீசுகுழ
          லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக 
மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
     லிறுக இறுகியநு ராக போகமிக
          வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை 
மதுர கவியடைவு பாடி வீடறிவு
     முதிர அரியதமி ழோசை யாகவொளி
          வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ 
கலக அசுரர்கிளை மாள மேருகிரி
     தவிடு படவுதிர வோல வாரியலை
          கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக் 
கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
     பரவு மமரர்குடி யேற நாளும்விளை
          கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே 
அலகை யுடனடம தாடு தாதைசெவி
     நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்
          அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ...... ணந்தகோவே 
அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
     கருது குமரகுரு நாத நீதியுள
          தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.
விளங்குகின்ற குண்டலத்தைத் தாக்கும்படி அதனிடையே போய்ப் பாய்ந்து நெருங்கி வந்தும், காம சாஸ்திரத்தை ஆராய்ந்து எதிரே வரும் இளைஞர்களின் உயிரைக் கவர்வதற்காகவே விரித்த ஆசை நிறைந்த வலையாக அமைந்தும் உள்ள நீலோற்பலம் போன்ற கண்கள். இனிமை என்பது மிக்கெழுந்து கரை புரண்டு ஒழுக, கையில் விளங்கும் வளை வகைகள் கலகல என்று ஒலிக்க, நறு மணம் வீசுகின்ற கூந்தல் என்னும் இருளில் முகம் என்னும் நிலாவொளி மிக்கு எழுந்து விளங்க, சிறந்த ஆடை விலகிப் போக, எதிர்ப்பட்டு முட்டி மோதும் வாயிதழ் ஊறலை உண்டு காம தாகம் அடங்க, விலை மகளிரின் உடலை அழுந்தக் கட்டி அணைத்து, காமப் பற்றால் ஏற்படும் சுகம் நன்றாக வளர்ந்தும், நெகிழ்ச்சியுறும் மார்பின் பாரங்களைத் தழுவும் எனக்கு, இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவற்றையும் பாடி, வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான தமிழ் இசை பிறக்க, அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியில் சேரும்படியான உனது திருவருளைத் தர மாட்டாயோ? போர் செய்யும் அசுரர்களின் கூட்டம் மாண்டு அழிய, மேரு மலை தவிடு பொடியாக, ரத்த வெள்ளம் ஓலமிடும் கடலின் அலைகள் பேரொலி செய்ய, கோடுகளை உடைய பாம்பைத் தன் வாயினின்றும் விடாது, பசி அடங்கிய இன்பம் கொண்ட, தோகை மயில் மேல் ஏறி வந்து, வேத சன்மார்க்கத்தைப் போற்றும் தேவர்கள் தங்கள் பொன்னுலகுக்குக் குடிபுகச் செய்து, நாள்தோறும் விளைகின்ற மிகப் பொல்லாத வினை வீழ்ந்தழிய வேலாயுதத்தை ஏவுதற்கு என்று தோன்றிய செல்வமே, பேய்களுடன் நடமிடும் தந்தையாகிய சிவபெருமானுடைய காதுகள் நிரம்ப மவுன உபதேசம் செய்தவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அழகிய காட்டில் வாசம் செய்த வேடர்களின் மகளாகிய வள்ளியை திருமணம் புரிந்த தலைவனே, சமணர்கள் கழுவில் துள்ளிக் குதிக்க (சம்பந்தராக வந்து) வாதப் போர் கருதிச் செய்த குமரனே, குரு நாதனே, நீதி உள்ளவற்றை அருளிச் செய்பவனே, திருவிடை மருதூரில் வீற்றிருப்பவனே, சிறந்த முனிவர்களுக்குத் தம்பிரானே. 
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.
பாடல் 860 - திருவிடைமருதூர்
ராகம் - ...; தாளம் -
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
          தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான
படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்
     தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்
          பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப் 
பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்
     திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்
          பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச் 
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்
     குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்
          சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடித் 
தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்
     பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்
          தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ 
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்
     பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்
          கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக் 
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்
     றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்
          கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா 
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்
     பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்
          கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா 
அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்
     கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்
          றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே.
பூமியை தமது காலால் அளவிட்ட, பெரிய மேக நிறம் கொண்ட திருமாலும், யமனும், ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தவர்கள் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு அரிய அரசன், நெருப்பால் சுட்டழிக்கும் தன்மை உடையவன், செம்பொன் போன்ற மேனியை உடைய மேலானவன், அழகு கொண்ட பாம்புகளையும், கங்கை நதியையும், லக்ஷ்மி வாசம் செய்யும் தாமரையையும், நிலவையும், கொன்றையையும், பருத்த குமிழம் பூவையும், அறுகம் புல்லையும், பெருமை வாய்ந்த தும்பையையும், செம்பருத்தி மலரையும், நெருக்கமாக பிரதானமாக விளங்கும் சடை முடியில் அணிந்துள்ள நல்ல சிவபெருமான் வணங்கும் குமரன், ஆறு முகத்தவன், இனிமையான செவ்விய சொற்களைப் பேசுபவன், சரவண மடுவில் வந்த முதல்வன், (தேவ) சேனாபதி கந்தன் என்று, ஈடேறும்படிப் பாடி, குளிர்ந்த சொற்களைச் சொல்லும் வழி ஒன்றிலும் நான் சென்றவன் அல்லன். (பிறரோடு ஒன்று) பகிர்ந்து கொள்ள எண்ணி, ஒரு தினை அளவாவது ஈகைக் குணத்தைக் கொண்டு அணுகாதவன் நான். தவ வழியில் ஒழுகி நல் வழியில் சீர் பெறும் தீர்மானமான முயற்சி என் மனதில் உதிக்காதோ? கடுகைப் போல் பொடிப் பொடியாய்த் தவிடுபடும்படி, மந்திரமும், தந்திரமும் பயின்று வந்த அசுரர்களின் உடல்களைப் பிளந்து, கடல் கதறி நிரம்ப இரத்த ஆறு பொங்கி ஓடும்படியான களிப்புக்கு இடமான நிறைவைப் பார்த்து, அப்போர்க்களத்தில் சேரும்படி, கழுகும், நரியும், காகமும், கருடனும் அங்கு வந்து கூடி எங்கும் நிற்கவும், பல பேய்கள் கூடி பம்பை மேளத்தைக் கொட்டி தந்தனம் தந்தனம் என்ற ஒலிகளை எழுப்பி இசைகளைப் பொழியும் (பிணத்தை உண்ணும்) ஆசையைப் பார்த்து மகிழ்ச்சி உறுகின்ற பரிசுத்தமான வேலனே, வெற்றி விளங்கும் திருவிடைமருதூரில்* வந்து பொருந்தியிருக்கும் குணத்தில் சிறந்த குருபரனே, குமரனே, யானைகள் சென்று உறங்கும் (வள்ளிமலைக்) காட்டில் வசிக்கும் வள்ளியின் சந்தனம் விளங்கும் மார்பில் படியும் திருமார்பனே. சிவந்த ரத்தினங்கள் ஒளி வீசி விளங்கும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும், கருணை பொழிவதுமான நினது திருவடிகளின் எழிலே நமக்குப் பற்றுக்கோடு என்று உணர்ந்து உறுதி பூண்டு, அந்த நன்னெறியை அழகு வாய்க்கத் தடவிப் பற்றி, தேவர்களும் தொண்டு பூண்டுள்ள தம்பிரானே. 
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.
பாடல் 861 - திருவிடைமருதூர்
ராகம் - ...; தாளம் -
தனதனதன தான தானன தனதனதன தான தானன
     தனதனதன தான தானன ...... தந்ததான
புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன
     புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை 
பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி
     பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே 
மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன
     வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன் 
மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின்
     விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய் 
எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி
     யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக 
இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட
     ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச் 
செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக
     செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே 
திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு
     திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.
புனுகு சட்டத்தோடு பன்னீர், ஜவ்வாது இவைகளுடன் இரண்டு கைகளிலும் நிரம்பியதாய் அள்ளி, மார்பில் சந்தனம் கஸ்தூரி முதலியவற்றைப் பூசி, புளகாங்கிதம் கொண்ட அழகுள்ளதாய், அலங்காரம் பூண்டதாய் உள்ள மலை போன்ற மார்பகங்களை, பொதுவான இடத்தில் நின்று விலை கூறும் வேசிகளின் ரத்தினம் பதித்த குண்டலங்களின் மீது போர் செய்கின்ற அம்புகள் போன்ற கண்கள் ஏற்படுத்தும் கொடுமையாலே, மெழுகு போல உள்ளம் உருகி அந்த வேசியர்களுடைய உள்ளத்தே தோன்றும் சச்சரவால் மன மயக்கம் கொண்டவனாய் பலவிதமான பரிதாபம் படத் தக்க துன்பம் அடைந்து அடியேன் நெருங்கி வரும் (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் மாயை வசத்தால் மிகவும் மனக் கலக்கம் கொண்ட என் அறிவு தொலைந்து அழிய, சுவாமியே, உன்னுடைய கொடையாக சிவஞான உபதேசத்தை நீ எழுந்தருளி வந்து தந்து உதவுக. (சூரனுடைய) ஏழு மலைகளும் நிலை பெயர்ந்து ஓடவும், கடல் மொகுமொகு என்று கலங்கி அலைகள் வீசவும், மண்ணுலகத்தாரின் துன்பங்கள் கெடவும், அசுரர்களின் சேனைகள் தோற்று ஓடவும், தேவர்கள் சிறையினின்று விடுபடவும், நாய், நரி, கழுகுகள், பறவைகளின் அரசனாகிய கருடன் மேலே வட்டமிடவும், போர்க்களத்தில் பூத கண சேனைகள் நின்று உலாவவும், செழுமை வாய்ந்த பிணிமுகம்* என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமான மயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே, புகழ் ஓங்கும் கந்த வேளே, அலைகள் ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில்** வீற்றிருக்கும் தம்பிரானே. 
* முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானை வாகனமும் உண்டு.
** திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு அருகே வடக்கில் 5 மைலில் உள்ளது.
பாடல் 862 - திரிபுவனம்
ராகம் - ....; தாளம் -
தனதன தனதன தனதன தனதன
     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை
     சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித் 
தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை
     தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல் 
கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை
     கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான் 
கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு
     கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ 
முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித
     முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி 
முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட
     முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா 
அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்
     அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா 
அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ
     னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.
வில்லைப் போன்ற நெற்றியில் வியர்வை உண்டாக, கண்கள் மயங்கிக் குழியிட்டுச் சுருங்க, வளையல்கள் சப்திக்க, சில இனிமையான காமப் பேச்சுக்களைப் பேசி, தழுவுகின்ற விலைமாதர்களின் அரும்பு போன்ற மார்பினை மார்போடு பொருந்த, சர்க்கரையும் கசக்கின்றது என்று சொல்லுமாறு இனிக்கும் வாயிதழ் ஊறலை கனவிலும் பருகும் புணர்ச்சி என்னும் வலையில் நான் வசப்பட்டு, உயிர் சிக்கிக் கொண்டு அழிந்து போவது தான் நன்றோ? நற் கதி பெறுவதற்கான நல்ல விதிப் பயன் இல்லாதவன் நான். அதற்கான புத்தியும் இல்லாதவன். உன்னுடைய இரண்டு கால் பட்டிகை பொருந்திய சிறிய வெட்சி பூக்கள் பூண்ட தாமரை போன்ற திருவடியைப் பெற மாட்டேனோ? கூர்மை மிகுந்துள்ள வஜ்ராயுதனாகிய இந்திரன் மகளான தேவயானையின் கஸ்தூரி அணிந்ததும், புளகம் கொண்டதும், முத்து மாலை புனைந்ததும், அழகானதுமான மார்பின் மீது ஆசை கொண்டவனே, கடல் ஓலமிடவும், வலிமையில் முதிர்ந்த அசுரர்களின் கூட்டம் போர்க்களத்திலிருந்து பின்னிட்டு ஓடவும், யாவுமே பொடியாகவும் வெட்டிக் குத்திய சிங்க வீரனே, ஞான அனுபவங்களைக் கொடுக்க வல்லதாய் உள்ள ஒப்பற்ற ஓங்காரப் பொருளை, தந்தையாகிய சிவபெருமானுக்கு அருமையான வகையில் உபதேசித்து, அவரால் பூஜிக்கப்பட்ட தலைவனே, உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அழிந்தாலும் நிலைத்து நிற்கும் திரி புவனம்* என்னும் தலத்தில் அழகுடன் விளங்குபவனே, சித்திகளில் வல்ல சித்தர்களுக்கு எல்லாம் தம்பிரானே. 
* திரிபுவனம் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ளது.
பாடல் 863 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
     தந்ததனத் தானதனத் ...... தனதான
இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
     டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு 
எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
     றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே 
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
     கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக் 
கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
     கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே 
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
     டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை 
சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
     செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா 
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
     கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே 
கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
     கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
சந்திர மண்டலத்தின்ஒளியைச் சென்று முட்டி அங்கு சிவந்து திரண்ட நடுத்தூண் போன்ற பாகத்தில் ஒளி பட்டு, இன்பச்சுவை தரும் பால் போல் அமுதமான இனிமையை அனுபவித்து, எண்குணங்கள்* கொண்ட இறைவன் நடனம் செய்யும் நிலவொளி வீசும் இடத்தைத் தரிசித்து, என் தந்தை நடராஜன் கூத்தாடும் அழகிய சபையின்கண், பெருமை மணம் கொண்ட ப்ரணவ எழுத்தோடு கூடிய ஞானம் என்ற இதழைக் கொண்ட வாசம்மிக்க மலரை அறிவால் அறிந்து ஆனந்தக் கடலில் மூழ்கி, கந்தனே, அந்த நறுமணத்தைப் போற்றிச் செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வளைத்துள்ள பதினான்கு உலகப் பகுதிகளையும் நான் காணும்படியாக எனக்கு நீ அருள்புரிவாயாக. திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என்ற தாளத்துக்கு ஏற்ப எக்காளமும், மணியும், தவிலும் ஓசையிட, அசுரர்களின் மனம் திகைக்கும்படியாக ஏழு கடல்களும் பொங்க, சிங்கம் போன்ற சூரனின் மணிமுடியில் உள்ள பூச்செண்டைத் தள்ளி அழித்து விளையாடும் அழகிய ஒளி வீசும் வேலாயுதனே, மொய்க்கும் வண்டுகள் விரும்பும் துளசிமாலையை அணிந்தவனும், சிவந்த லக்ஷ்மியை மணந்தவனும், சந்தனக்கலவையைப் பூசுபவனும், மேகவண்ணனுமான திருமாலின் மகளாகிய வள்ளியை இந்த உலகில் கும்பிடும்பொருட்டு கைத்தாளம் போட்டுக்கொண்டு, அழகிய லக்ஷ்மியின் வடிவம்கொண்ட பாவை வள்ளியைப் புகழ்ந்து போற்றியவனே, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* இறைவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.
பாடல் 864 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -
தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்
     தந்ததனத் தானதனத் ...... தனதான
தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்
     றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர் 
தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்
     தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச் 
செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்
     செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே 
சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்
     திந்திமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ 
தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்
     சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச் 
சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்
     தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன் 
கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்
     கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண 
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்
     கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.
துதிக்கையை உடைய முகத்தைக் கொண்ட யானையின் பெருத்த தந்தம் போல வெளித்தோன்றி, காம இச்சைக்குச் சம்பந்தம் உடையது என மேலெழுகின்ற மார்பகங்களை உடைய பெருமை வாய்ந்த (விலை) மாதர்கள் வண்டுகளின் கூட்டம், மலர்ச் சோலை, மேகம், இரவின் இருட்டு இவற்றின் கரு நிறம் கொண்ட, தோகை மயிலின் அழகு இது என்று சொல்லும்படியான, கூந்தலை உடையவர்களாய், செம்பொன் இளகி விழுகின்றதோ என்னும்படியான பேச்சுடன், சங்கின் வெள் ஒளி போன்று, காமத்தைத் தூண்டும், பற்கள், சிவந்த கயல் மீனைப் போன்ற கண்களாகிய அம்புகள் கொண்டு, கண்டோர் மனதைச் சிதற வைத்து ஆளும், இன்பத்தைத் தரும் சந்திரனை ஒத்த முகத்தைக் கொண்ட, பதுமை போன்றவர்கள் தித்திம்திம் என்ற தாளங்களுக்கு நடனம் ஆடும் விலைமாதர்களுக்காக நான் வீணாக அலைச்சல் உறுவேனோ? தம்பியாகிய லக்ஷ்மணன் கூட வர, பண்பில் சிறந்த, கொம்பு போல மெலிந்த இடையை உடையவளும், லக்ஷ்மி போன்றவளுமான சீதை (கானகத்தில்) உடன் வர, (அவளைக் கண்டு) அழகிய மயில்கள் இவள் சாயலுக்கு நாம் ஈடாகோம் என்று ஒதுங்கி விலகி ஒரு புறம் போக, கடுங் கோபம் உடையவர்களான அசுரர்களின் முடிகள் தூளாகும்படி சிதறடித்து, அந்த அரக்கர்கள் மாண்டு விழ, பொன் நிறம் உடைய சீதையின் சிறையை நீக்கிய ராமனாகிய திருமால், புல்லாங்குழலை அடையாளமாகக் கொண்டவனும், விஷம் நிரம்பிய மடுவில் (காளிங்கன் மீது) திந்தம் என்று பொருந்தி நடனம் செய்வதவனும், பசுக் கூட்டங்களை ஒன்று கூட்டி வளைத்து மேய்த்து மகிழ்ந்த கண்ணனுமாகிய அந்த திருமால் பெற்ற கொஞ்சும் கிளி போன்ற பதுமையாகிய வள்ளியின் இரு மார்பகங்களைத் தழுவி மகிழ்பவனும், கும்பகோணத்தில் வீற்றிருப்பவனுமாகிய ஆறுமுகப் பெருமாளே. 
பாடல் 865 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -
தந்தனா தத்ததன தந்தனா தத்ததன
     தந்தனா தத்ததன ...... தனதான
கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை
     கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங் 
கிம்பு¡£ சக்களப கொங்கையா னைச்சிறிது
     கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும் 
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி
     வண்டனா கப்புவியி ...... லுழலாமல் 
வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது
     மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே 
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி
     ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா 
அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி
     னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக் 
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
     கொந்தியா டத்தலையை ...... யரிவோனே 
கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு
     கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே.
கெண்டை மீனுக்கு ஒப்பான கண்களை உடைய (விலை)மாதர்கள் மீதுள்ள ஆசைக் கலப்பு மிக்க நறுமணம் உள்ள புனுகின் நறுமணம் வீசும் (மார்பகம்), தந்தத்தில் பூண் அணிந்தது போல விளங்குவதும், பச்சைக் கற்பூரக் கலவை அணிந்ததுமான மார்பாகிய யானையை சிறிதளவு கண்டதும் ஆசை பெரியதாகி, அதனால் அடியேனும் விரைந்து சென்று வஞ்சகத்துக்கு இடமான புணர்ச்சி இன்பம் கொண்டு காம உணர்ச்சியில் மனம் உருகி, தீயோனாக பூமியில் நான் அலைச்சல் அடையாமல், (நீ) வந்து ஞானப் பொருளில் ஒன்றை உபதேசித்து, உனது அழகிய திருவடியை நாள் தோறும் எனக்குத் தந்தருளுக. தேவர்கள் வாழும்படி ஒளி வீசும் வலியதான மேரு மலை கலக்குண்டு விழும்படிப் போர் செய்த ஒளி வேலனே, ஐந்து பொறிகளாலும் சிவபெருமானை மனதில் ஊற வைத்து தவ நெறியில் அன்புள்ள தேவர்களைச் சிறையில் வைத்த அசுரர்களைக் கொண்டு போய், கூரிய சூலம் நெஞ்சில் ஏறப் பாயவும், கழுகுகள் கொத்தி விளையாடவும், தலையை அரிந்தவனே, மேகங்கள் சூழ்ந்த வயல்களில் சங்குகள் உலாவிப் பரந்திருக்கும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 866 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -
தந்தனா தத்தத் ...... தனதான
பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர் 
பங்கமார் தொக்கிற் ...... படியாமற் 
செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன் 
செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ 
பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர் 
பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா 
குஞ்சா£ வெற்புத் ...... தனநேயா 
கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.
பஞ்சு போல் மென்மையான பாதங்களை, நடனம் ஆடும் பாதங்களை உடைய மாதர்களின் குற்றம் நிறைந்த உடம்புத் தோலில் நான் வீழ்ந்து விடாமல், தேர்ந்தெடுத்த சொற்கள் அமைந்துள்ள அழகிய தமிழால் பாடல்களைப் பாடி செம்பொன்னுக்கு நிகரான உனது அன்பைப் பெற மாட்டேனோ? ஐந்து மலர்ப் பாணங்களைக் கொண்ட மன்மதனைச் சுட்டெரித்த தேவராகிய சிவபிரானின் இடப்பாகத்தில் வாழ்கின்ற பராசக்தியின் குமரனாம் ஈசனே, ஐராவதம் என்னும் யானை வளர்த்த தேவயானையின் மலை போன்ற மார்பை நேசித்தவனே, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 867 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -
தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த ...... தனதான
மாலைதனில் வந்து வீதிதனில் நின்று
     வாசமலர் சிந்து ...... குழல்கோதி 
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க
     மால்பெருகி நின்ற ...... மடவாரைச் 
சாலைவழி வந்து போமவர்க ணின்று
     தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித் 
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி
     சாலமிக நொந்து ...... தவியாமற் 
காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி
     காதலுமை மைந்த ...... எனவோதிக் 
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்
     காண அரு ளென்று ...... பெறுவேனோ 
கோலமுட னன்று சூர்படையின் முன்பு
     கோபமுட னின்ற ...... குமரேசா 
கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப
     கோணநகர் வந்த ...... பெருமாளே.
மாலைப் பொழுதில் வந்து வீதியில் நின்று நறு மணம் வீசும் கூந்தலை விரித்துச் சிக்கெடுத்து, கச்சு அணிந்த இரண்டு மார்பகங்களும் (அணிந்துள்ள) ஆபரணங்களுடன் குலுங்க, காமம் பெருகி நின்ற விலைமாதர்களை, தெருவின் வழியே வந்து போகின்ற ஆடவர்கள் கண்டு, (அம்மாதர்களின்) தாழ்ந்து தொங்கும் கூந்தலைப் பார்த்து தடுமாறி காம மயக்கம் கொண்டு, ஆசை இருளில் அழுந்தி மிகமிக மனம் தவிப்பு உறாமல், காலையில் எழுந்து உனது திரு நாமங்களைக் கூறி, அன்பார்ந்த உமையின் குமரனே என்று ஓதித் துதித்து, (முக்காலங்களையும்) உணரும்படியான ஞானாகாச வெளியை நான் ஞானக் கண் கொண்டு காண, உன்னுடைய அருளை என்று பெறுவேனோ? போர்க் கோலத்துடன் அன்று சூரர்களுடைய சேனைகளின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசனே, (வள்ளி, தேவயானை ஆகிய) மாதர்கள் இருவரும் இரண்டு பக்கங்களிலும் விளங்க, (கல்வி, செல்வம்) வளரும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 868 - கும்பகோணம்
ராகம் - அ.¡வேரி தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்
தனத்த தந்தன தனதன தந்தத்
     தனத்த தந்தன தனதன தந்தத்
          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
     துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
          கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற் 
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
     பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
          கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி 
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
     பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
          தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி 
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
     பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
          டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ 
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
     டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
          புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா 
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
     டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
          புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா 
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
     சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
          தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச் 
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
     பரிச்சு மந்திடு குமர கடம்பத்
          திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே.
கருத்த மயிரும் வெளுத்துப் போய், எழுந்து வரிசையாக உருவு கொண்டிருந்த வெண்மை நிறமான பற்களும் எல்லாம் விழுந்து போய், உள்ளே கருத்துக்களுடன் விளங்கியிருந்த புத்தியும் மருட்சி அடைந்து, உடலைச் சுருட்டி மடக்கும் நோயால் கலக்கம் அடைந்து (இவ்வாழ்க்கை) போதும் போதும் என்னும் மன நிலை வர, நீர் வற்றிப் பழுத்த பழமாய், நிமிர்ந்து ஓங்கி நின்ற முதுகும் வளைவுற, கண்டத்தில் வந்து கோழையும், இருமலும் ஒதுங்கி நிற்க, கொழுத்திருந்த உடலானது மிகவும் வற்றிச் சுருங்கி, ஒரு தடியைக் கையில் நடுக்கத்துடன் பிடித்துக் கொள்ள, அவமானத்துக்கு இடமாகும்படி மனைவியும் என்னை இகழ, பக்கத்தில் அடுத்துள்ள பிள்ளைகளும் பழிக்க, அறிவில்லாத பொருள்போல் ஆகி, உடலெல்லாம் அழுக்கு சேர, வேதனை அடையும் உடலுக்கு இடமான சேறு போன்ற பிறவி என்கின்ற கடலில் அழிந்து போவது ஒழிந்து, பெருமை வாய்ந்த உனது திருவடிகளைச் சரணம் அடைந்து என்று நான் பொருந்தி இருப்பேனோ? வெளி இடங்கள் எல்லாம் பொடிபட்டு மிகவும் நிலை கலங்கவும், பெரும் கடலும் அதன் உட்புறமெல்லாம் குழம்பவும், (அசுரர்கள் மீது) புகவிட்டு அவர்களைத் தேய்த்துச் சிதைத்த சாமர்த்தியமுள்ள குதிரையாகிய மயிலேறும் வலிமை வாய்ந்த வீரனே. கிரெளஞ்ச மலையின் பரவி இருந்த வலிமை பிளவுபடும்படியாக வெற்றி அடைந்து, பகைவரைக் கொன்று அசுரர்களுடைய வலிய தலைகள் நெரிபட்டு அழியுமாறு நெருக்கி, உள்ளடங்கியுள்ள சதைகள், இரத்தம் எல்லாம் மேல் எழும்படியாக சண்டை செய்யும் வேலனே. சிறிய தண்டைகளை அணிந்தவனே, பிள்ளைகள் பயப்படும்படி கோபம் மிக்க சிங்கம் திரிகின்ற வள்ளி மலையில் தினைப்புனத்தில் விளங்கியிருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களை விரும்பி, அடைந்து, மகிழ்ச்சி கொண்ட மனத்தை உடைய முருகனே, மயில் என்னும் குதிரை சுமக்கின்ற குமரனே, கடம்பனே, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 
பாடல் 869 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -
தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான
செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
     விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
          செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே 
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
     இரைத்தி டுங்குல மேசில கால்படர்
          சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங் 
கனைத்தி டுங்கலி காலமி தோவென
     வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
          கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக் 
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
     இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
          கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே 
தனத்த னந்தன தானன தானன
     திமித்தி திந்திமி தீதக தோதக
          தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி 
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
     வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
          சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே 
தினைப்பு னந்தனி லேமய லாலொரு
     மயிற்ப தந்தனி லேசர ணானென
          திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே 
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
     தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
          திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.
பிறப்பு என்கின்ற பொய்ம்மையோடு கூத்து விளையாட்டு போன்றவை என்ன, ஆபாசம் என்ன, பிறப்பால் ஏற்படும் குடல், அந்தக் குடலைக் கிழித்துக்கொண்டு எழுவது போல மேல் நோக்கி எழுகின்ற ஆணவம் என்ன, அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை முதலியவை என்ன, தோன்றியுள்ள பல சாதிகள் என்ன, அதைக் குறித்து வாதிப்பவர் என்ன, கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன, சில சமயங்களில் துன்பம் கோபித்து எழுவது போல் பிறப்பு என்னும் நோய் என்றே இவ்வாழ்வை எல்லோரும் ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது என்று கூறுவது என்ன, (பிணத்தை) எடுங்கள், சுடு காட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுவதும், (அங்கே போய் பாடையிலிருந்து) கவிழ்க்கப்பட்டதுமான உடல் சாம்பலாகிவிடும் இந்த உடம்பை நான் விரும்பிப் போற்றி, (அவ்வுடலை அலங்கரிக்கக்) கடுக்கன் முதலிய சில அணிகலன்களை அணிவது என்ன, உடைகள் அணிவது என்ன, 'ரிக்கு' வேத மந்திரங்களால் பெறப்படும் சாஸ்திர நூல்களைப் படிப்பது என்ன, இவை யாவற்றையும் ஒழிக்க வல்ல சிவ யோகத்தையும் சிவ ஞானத்தையும் எனக்கு அருள்வாயாக. தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக (இதே ஒலியில்) தம்பட்டை, வீராணம் என்ற பெரிய பறை, வெற்றி முரசு இவைகளுடன் போருக்குக் கூடி வந்த அசுரர்களுடைய சேனைகளை வளைத்து, கொடிய கோபம் கொண்டு வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உள்ளவனே, உனது திறமையை தெரிந்துள்ள சிறந்த முனிவர்களுக்கு அருள் செய்பவனே, தினைப் புனத்தில் காதல் இச்சையால் ஒப்பற்ற மயில் போன்ற வள்ளியின் பாதத்தில் நான் அடைக்கலம் என்று நீ கூற, தனது அழகிய புயங்களைத் உனக்குத் தந்த மோகனமான மானை ஒத்த வள்ளியை அணைபவனே, சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே, தவம் செய்வோர் பொருட்டுப் பரனாகி வெளித் தோன்றி வந்து அருளும் குழந்தையே, கருணைத் தெய்வமே, கும்பகோணத்தில் வாழும் முருகனே, தேவர்களின் பெருமாளே. 
பாடல் 870 - சோமீச்சுரம்
ராகம் - மாண்ட் தாளம் - சது.ரத்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு - /4/4/4 0
தனனதன தனனதன தானான தானதன
     தனனதன தனனதன தானான தானதன
          தனனதன தனனதன தானான தானதன ...... தனதான
கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
     களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்
          கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல ...... கனிவாயின் 
கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு
     கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை
          கலகலென மொழிபதற மாமோக காதலது ...... கரைகாணா 
தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை
     யிருவருட லொருவரென நாணாது பாயல்மிசை
          யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு ...... மிமையாதே 
இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
     இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
          இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை ...... யருள்வாயே 
உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
     ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
          னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில் 
உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
          உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு ...... முயர்வாக 
வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
     மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
          வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட ...... மதில்சூழும் 
மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
     மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
          மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் ...... பெருமாளே.
கரு நிறம் உள்ள கூந்தல் சரிந்து விழ, முகம் வியர்வை கொள்ள, நறு மணம் உள்ள கலவைச் சாந்து அணிந்த மார்புகள் புளகாங்கிதம் கொண்டு விம்மி எழ, செவ்வையான வேலை ஒத்த கண்களாகிய கயல் மீன்கள் (காதுகளோடு) சண்டையிடும் செயலை ஒக்க பெரிய போர் செய்ய, நறு மணம் உள்ள குமுத மலரை ஒத்த அதரம் எனப்படும் இதழினின்றும் தேனைப் போன்ற ஊறல் பாய, அது நிரம்பிக் கடல் போன்ற அமுதத்தை உதவ, இரண்டு தோள்களிலும் மாலை தாழ்ந்து புரள, கையில் உள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க, வாய்ப் பேச்சு பதற்றமுடன் வெளிவர, மிக்க காம ஆசை கரை கடந்து பெருகி, தீயில் பட்ட மெழுகின் நிலையை அடைந்து இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல் இணைந்து, கூச்சமின்றி படுக்கையில் இளம் பெண்களுடன் புணர்ச்சி இன்பத்தில் நான் மூழ்கி ஆழ்ந்து இருந்தாலும், கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் தூங்கினாலும், யாரோடு பேசினாலும், இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள் வரிசையையும், இரண்டு திருவடிகளையும், ஆறு முகங்களையும் நான் ஓதும்படியான ஞானத்தைத் தந்து அருள்வாயாக. சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத கோபத்துடன், உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து, இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து, வெற்றிக் கொடி ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும், பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக, ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப, அழகுள்ள தோகையை உடைய இள மயில் நடுவில் நடனம் செய்ய, ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய மாலைபோல ஆபரணமாக விளங்க, மதில்கள் சூழ்ந்ததும், மருத நிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும்* அமைந்த (சோமீச்சுரம் என்னும்)** பதியில், மிகவும் விரும்பி இளமை வாய்ந்த ரிஷபத்தின் மேல் வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் கோயிலில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே, விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே. 
* இடைக்காலத்தில் கோயில்கள் மன்னர்களின் படைவீடாகப் பயன்பட்டன.
** சோமீச்சுரம் கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் ஒன்று.
பாடல் 871 - கொட்டையூர்
ராகம் - ....; தாளம் -
தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்
     தத்ததனத் தத்ததனத் ...... தனதான
பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்
     பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென் 
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்
     பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே 
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
     சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத் 
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
     சுத்தியணைப் பத்தரில்வைத் ...... தருள்வாயே 
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
     துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார் 
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
     சுற்றுவனத் திற்சிறைவைத் ...... திடுதீரன் 
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
     குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின் 
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
     கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே.
பட்டாலாகிய அழகிய கச்சை அழுத்தமாகக் கட்டியும் பிறகு அவிழ்த்தும், மேலாடை வரிசையை ஒட்டி முத்து மாலை நெருங்கிய, மலை போன்றவை என்று சொல்லத் தக்கனவும் தாமரையின் மொட்டுப் போன்றனவுமான கூரிய மார்பகங்ளை உடைய, கிளி போன்ற விலைமாதர்களின் கையில் அகப்பட்டு, அவர்களின் வசத்தில் சிக்கி, மனம் உருகி, கேடு தருவதும் வினையைப் பெருக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு, துஷ்டன் என்றும், துன்பத்துக்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நெறியினின்று வழுவியவன் என்றும், எங்கும் திரியும் பாவ எண்ணங்களை உடையவன் என்றும் அலைகின்ற என்னை, என் துயரங்களை நீக்கி, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், பரிசுத்தமான நல்ல பதவியை அணைந்துள்ள பக்தர் கூட்டத்தில் சேர்ப்பித்தும் அருள் புரிவாயாக. சுட்ட தங்கக் கட்டி போன்ற உடலை உடையவளும், செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமான அழகிய கொடி போன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து, ஆகாயத்தை அளாவும் வீணைக் கொடி விளங்கும் தூய்மை வாய்ந்த (புஷ்பக) ரதத்தில் அவளை எடுத்துச் சென்று, வேகமாக தெற்குத் திசையை அடைந்து அங்கு கோடியில் வளைந்தமைந்த (அசோக) வனத்தில் சிறைவைத்த (ராவணன்) என்னும் வீரனின் இறுமாப்பு அழிய, புற்றிலிருந்து சீறும் பாம்பின் கோபம் போன்ற சினம் அற்றுப்போக, குரல் ஒலியும் அடங்க, அவனது பழுதும் நீங்க, சுற்றத்தார் யாவரும் மாண்டு போக, அவனுக்கு இருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிகளும் அறுந்து போக, வீரம் காட்டிய வெற்றியாளராகிய ராமர் (திருமால்) பணிந்து நின்று பூஜித்த, கொட்டையூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கொட்டையூர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது.இங்கு திருமால் முருகனுக்கு பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.
பாடல் 872 - சிவபுரம்
ராகம் - நீலாம்பரி தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 1 தள்ளி தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான
மனமெ னும்பொருள் வானறை கால்கனல்
     புனலு டன்புவி கூடிய தோருடல்
          வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே 
வருசு கந்துய ராசையி லேயுழல்
     மதியை வென்றுப ராபர ஞானநல்
          வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய் 
செனனி சங்கரி ஆரணி நாரணி
     விமலி யெண்குண பூரணி காரணி
          சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா 
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற
     அசுரர் தங்கிளை யானது வேரற
          சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே 
கனக னங்கையி னாலறை தூணிடை
     மனித சிங்கம தாய்வரை பார்திசை
          கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே 
கதற வென்றுடல் கீணவ னாருயி
     ருதிர முஞ்சித றாதமு தாயுணு
          கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே 
தினக ரன்சிலை வேளருள் மாதவர்
     சுரர்க ளிந்திர னாருர காதிபர்
          திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே 
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை
     அகமொ டம்பொனி னாலய நீடிய
          சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே.
மனம் என்ற ஒரு பொருளுடன் ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்சபூ தங்களும் ஒரு தேகம் என்ற உருவத்தைக் கொண்டு அதில் (13ஐ 7 ஆல் பெருக்கிய) 91 தத்துவ மாற்றங்களாலே(*1) ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற என் புத்தியை நான் ஜெயித்து, மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக நாய் ஒத்த இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக. உலகங்களைப் பிறப்பித்தவள், சங்கரி, வேத முதல்வி, நாராயணி, குற்றமற்றவள், எண்குணங்களும்(*2) நிறைந்தவள், காரணமானவள், சிவை, பராபரை ஆகிய பார்வதி அருளிய குழந்தாய், சூரனின் சிறையில் இருந்த தேவர்கள், முனிவர்கள் விடுதலை பெற, அசுரக்கூட்டமெல்லாம் வேரற்று அழிய, சிவபிரான் மகிழ்ந்து உனக்குத் தந்த கூரிய வேலைச் செலுத்திய முருகப் பெருமானே, இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து நரசிம்ம உருவத்தில் மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே, அவனைக் கதறி அழும்படி வென்று, அவனது அரிய உயிரை ரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய மருமகனே, சூரியன், கரும்புவில் மன்மதன், அருள்மிகு முனிவர்கள், தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்து அதிபர்கள், பிரம்மா, செம்மை பொருந்திய சிறந்த அந்தணர்கள் ஆகியோர் போற்றிப் புகழ்கின்ற அழகனே, அஷ்டலட்சுமிகள்(*3) நிறைந்த வீடுகளும், சொக்கத் தங்கத்தால் ஆன கோயிலும் சிறப்பாக விளங்கும் சிவபுரம்(*4) என்ற தலத்தில் வாழும் குருமூர்த்திப் பெருமாளே. 
(*1) 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
(*2) எண் குணங்கள் பின்வருமாறு:தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை.
(*3) அஷ்டலட்சுமிகள் பின்வருமாறு:தன, தான்ய, ¨தரிய, வீர, வித்தியா, கீர்த்தி, விஜய, ராஜ்ய லட்சுமி.
(*4) சிவபுரம் கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் 3 மைல் தொலைவில் உள்ளது.
பாடல் 873 - திருநாகேச்சுரம்
ராகம் - ரேவதி தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி தகதிமி-4
தானான தானத் தனத்த தத்தன
     தானான தானத் தனத்த தத்தன
          தானான தானத் தனத்த தத்தன ...... தனதான
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
     மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
          ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம் 
ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
     நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
          ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங் 
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
     ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்
          கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை 
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
     ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
          கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே 
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி
     பேரார வாரச் சமுத்தி ரத்தினில்
          மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை 
வேரோடு வீழத் தறித்த டுக்கிய
     போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்
          வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா 
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
     மாயாவி காரத் தியக்க றுத்தருள்
          ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான 
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
     யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்
          நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.
ஆசார ஒழுக்கங்களில் குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துஷ்டர்கள், தாய் தந்தையரை இழிவு செய்யும் துஷ்டர்கள், பசுவின் மாமிசத்துக்காக அதைக் கொல்லும் துஷ்டர்கள், பிறர் மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த துஷ்டர்கள், பலவித தந்திரச் செயல்களைச் செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள், வெறியேற்றும் கள்ளைக் குடித்த துஷ்டர்கள், தனியாய் அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி எடுத்த துஷ்டர்கள், ஊரில் எல்லாரின் ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துஷ்டர்கள், ஆரவாரத்துடன் வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும் துஷ்டர்கள், குருவின் சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துஷ்டர்கள், மற்றவர்க்குக் கொடுக்காமல் பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள், இந்த துஷ்டர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள். பெரிய மலை போன்ற அலைகளை வீசி எடுத்து எறிகின்ற, மிக்க ஓசையை உடைய கடலின் மத்தியில் திரும்பிவரமுடியாதபடி ஓடித் துரத்தி, பயம் கொண்ட ஒரு தனி மாமரமாக ஒளிந்த சூரனை வேருடன் விழும்படியாக வெட்டிக் குவித்த போரினைச் செய்த திறமைவாய்ந்ததும், உன் திருக்கரத்தில் உள்ளதுமான வேலாயுதனே, உண்மை வாய்ந்த உனது திருப்புகழை யான் ஓதி நீ பெற்றுக் கொண்ட வயலூர்ப்பதியின் இறைவா, கேடு முதலிய தீயன விளைவிக்கும் ப்ராரப்த கர்மம் (பழவினை காரணமாக இப்பிறப்பில் தொடரும் துக்கம்) மிகுந்தவர்களுடைய மாயை சம்பந்தமான துயரம் தரும் மயக்கத்தை ஒழித்து அருளும் ஞான உபதேசம் செய்த கீர்த்தியை உடைய சற்குரு வடிவமான நாதனே என்று முன்னொரு காலத்தில் உன் தந்தை துதிசெய்ய உலகோருக்கு ஒரு ஆதாரச் சாதனம் (ப்ரமாணம்) ஆகும் பொருட்டு, ப்ரணவப் பொருள் முழுவதும் நன்றாக நீ உபதேசித்து அருளி, நாகேசன்* என்ற திருநாமத்தைக் கொண்ட உன் தந்தை சிவபெருமானால் மெச்சப் பெற்ற பெருமாளே. 
* கும்பகோணத்துக்குக் கிழக்கில் 3 மைலில் உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள சிவபெருமானின் பெயர் நாகேசர்.
பாடல் 874 - கூந்தலு¡ர்
ராகம் - லதாங்கி தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகதிமி தகதிமி-4, தகிட-1 1/2, தகதிமி-2
தனதன தனதன தாந்த தானன
     தனதன தனதன தாந்த தானன
          தனதன தனதன தாந்த தானன ...... தனதான
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
     வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
          சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி 
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
     யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
          சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை 
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
     மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
          விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை 
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
     மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
          விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே 
ஒருபது சிரமிசை போந்த ராவண
     னிருபது புயமுட னேந்து மேதியு
          மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே 
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
     ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
          உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே 
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
     களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
          குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே 
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
     மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
          குருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே.
இந்தப் புவியில் பல தீய வழிகளில் ஈடுபடும் மூடனான என்னை, குடிவெறி கொண்ட பித்தனை, நற்குணமும், பொறுமையும் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லாத, செருக்கு மிகுந்த அறிவற்றவனை, ஒருவித பெருமையும் இல்லாத தாழ்நிலையில் இருக்கும் வீணனை, நிரம்பின கேள்வி, தவ வழி இவற்றை விட்டுத் தாண்டி கண்ட வழியில் திரிகின்ற கெட்டவனை, பயனற்ற புத்தியால் கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை, வேண்டுமென்றே இனநீக்கம் செய்யப்பட்ட கதியற்றவனை, நறுமணம் கமழும் கூந்தலை உடையவர், பிடிவாதம் உள்ள பெண்கள், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தைத் தூண்டும் காம மயக்கியர், கண் என்னும் வலையை வீசும் மகளிர் - இத்தகையோருடன் அவ்வப்போது கூடிய தொழிலை உடையவனாகிய என்னை, நிரம்ப மலர்கள் கொண்டு விரும்பிப் பூஜித்தாகிலும், ஒரு பூவோ ஓர் இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து, நல்ல வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு அருள்வாயாக. பத்துத் தலைகளோடு போர் செய்ய வந்த ராவணனுடைய இருபது தோள்களும், ஏந்திய வாள் ஆயுதமும் ஒரே பாணத்தால் அற்று விழும்படி அம்பு செலுத்திய ராமனாம் மாயத் திருமாலின் மருகனே, உன்னுடைய அடியார்களின் புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முநிவர்களும், கொடைகள் செய்து பாலிப்பவர்களும், உயர்ந்த நற்கதியைப் பெற, அருள் விளங்கும் அழகிய மயிலில் அமர்ந்திருப்பவனே, ஒலிக்கின்ற தண்டையணிந்த உன்னடியைத் தாழ்மையோடு கும்பிடாமல், போர்க்களத்தில் தர்ம நெறியைக் கைவிட்ட அசுரர்களின் குல முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே, ஆலகால விஷத்தைக் கொடு என்று கூறி வாங்கியே, அழகிய கழுத்திலேயே இரு என்று அதை கண்டத்தில் தாங்கும் சிவபிரானுக்கு சிவ பெருமானின் குருமூர்த்தியாக வந்தவனே, கூந்தலூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கூந்தலூர் கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 7 மைலில், அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது.
பாடல் 875 - திருச்சத்திமுத்தம்
ராகம் - ....; தாளம் -
தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
     தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன
          தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான
கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக
     வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர்
          கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி ...... யணியாலே 
கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்
     கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை
          கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனை ...... விலகாது 
கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய
     லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு
          கயல்விழிவெ டுட்டித்து ரத்திச்செ விக்குழையின் ...... மிசைதாவுங் 
களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு
     கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள்
          கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ ...... தொழியேனோ 
அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
     மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்
          அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு ...... மழகோனே 
அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
     லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு
          மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு ...... மதிசூரா 
விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்
     உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக
          விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு ...... மொருமாயோன் 
விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
     நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய
          விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு ...... பெருமாளே.
மத யானையின் தந்தம் போல ஒளியுடன் வெளிப்பட்டு, யாவரும் மிகவும் வியக்கத்தக்க வகையில் (வேசையரின்) மார்பிடம் முழுவதும் நெருக்கமாக அடைத்துப் பருத்து வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும், பெரிதாயுள்ள ரத்தின ஆபரணத்தின் கனம் கொண்டதும், ஒளி விளங்கும் சிமிழ் போல நன்றாகத் தோன்றும்படி இன்பம் கொடுக்கும் தாமரை மொட்டுப் போன்றதும், அன்புடன் பாராட்டப்பட்டு அமைந்துள்ள மார்பகத்தை நறு மணம் கொண்ட சிவந்த நிறமான கலவைச் சாந்து, நிரம்பியுள்ள தனத்தை விட்டு நீங்காது. விஷத்தையும், மாவடுவையும் போல் அமைந்து, புருவமான வில்லின் கீழ்ச் சிக்க வைத்த செயலுக்கு ஒப்ப நின்று, ஒளி வீசிப் புரளுவதாய் மீன் போன்ற கண்களை விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின் மீது பாய, கள்ளத்தனமான மன்மதனுக்கு வெற்றியைக் கொடுத்து உலவுகின்ற, கடுமையான (விஷம் போன்ற) சொற்களைப் பேச (அதனால்) சோர்ந்து, அந்தக் கொடி போன்ற இடை உடைய விலைமாதர் வலையில் சிக்குண்டு அழுத்தப் படுவதால் நான் துன்புறுவது நீங்க மாட்டேனோ? சாம்பல் பூசுகின்ற, (சூரியன் சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சொல்லி அரிய மறைப் பொருளை உபதேசித்து, பெருத்த மயில் வாகனத்தில் ஏறி முன்பு நடத்தி உலகத்தை ஒரு கணப்பொழுதினில் சுற்றி வலம் வந்த அழகனே, வஞ்சகம் மிக்க மொழிகளைப் பேசி, பொருட் செல்வம் நிரம்ப உள்ளவர்களாய் உலகிலே எளியவர்களைப் பயமுறுத்தி ஜெகத்தில் தாம்மட்டுமே பிழைக்க எண்ணுகின்ற முட்டாள்களின் மனதைக் கலக்கி வெட்டிப் பிளந்து அவர்களை நெருக்கும் அதி சூரனே, நச்சை உடைய (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் உறங்கும் கருணா மூர்த்தியான திருமால், யானை (கஜேந்திரன்) கூச்சலிட்டதை காதில் நன்கு ஏற்றுக் கொண்டு வெகு வேகமாக கருடன் மேல் சிறக்க அன்புடன் வந்த ஒப்பற்ற திருமால் விரும்பும் மருகனே, மாமரமாக கடலில் வந்த சூரனை நெறுநெறு என்று வெட்டிய வலிமையான வேலாயுதம் என்ற ஒப்பற்ற படையை உடையவனே, சிவபெருமான் வீற்றிருக்கும் திருச்சத்திமுத்தம்* என்னும் தலத்தில் விளங்கும் பெருமாளே. 
* திருச்சத்திமுத்தம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தலம்.
பாடல் 876 - திருவலஞ்சுழி
ராகம் - ....; தாளம் -
தனன தந்தன தானா தானன
     தனன தந்தன தானா தானன
          தனன தந்தன தானா தானன ...... தனதான
மகர குண்டல மீதே மோதுவ
     வருண பங்கய மோபூ வோடையில்
          மருவு செங்கழு நீரோ நீவிடு ...... வடிவேலோ 
மதன்வி டுங்கணை யோவா ளோசில
     கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை
          மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத 
முகர வண்டின மோவான் மேலெழு
     நிலவ ருந்துபு ளோமா தேவருண்
          முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார் 
முடிவெ னுங்கட லோயா தோவென
     வுலவு கண்கொடு நேரே சூறைகொள்
          முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ 
நிகரில் வஞ்சக மா¡£ சாதிகள்
     தசமு கன்படை கோடா கோடிய
          நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய் 
நெடிய னங்கனு மானோ டேயெழு
     பதுவெ ளங்கவி சேனா சேவித
          நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே 
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
     பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
          சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனர் 
தெளியு மந்த்ரக லாபா யோகிகள்
     அயல்வி ளங்குசு வாமீ காமரு
          திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.
(முதல் 11 வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மகர மீன் போலச் செய்யப்பட்ட குண்டலத்தின் மேல் வந்து தாக்குவனவாய் தாமரைக் குளத்தில் உள்ள சிவந்த தாமரையோ? பொருந்தி உள்ள செங்கழு நீர்ப் பூவோ? நீ செலுத்தும் கூரிய வேலோ? மன்மதன் செலுத்தும் பாணமோ? வாள் தானோ? சில கயல் மீன்களோ, கெண்டை மீன்களோ, சேல் மீன்களோ? கொலைத் தொழில் புரியும் யமன் எனப்பட்டவனோ? மானோ? தேன் உண்டு இசை ஒலிக்கும் வண்டின் கூட்டமோ? ஆகாயத்தில் எழுந்து நிலவை உண்ணும் சந்திரமுகிப் புள்ளோ? சிவ பெருமான் உண்ட பழைய கொடிய ஆலகால விஷமோ? தித்திக்கும் மாம்பழ வடுவின் பிளவோ? உலகின் முடியும் பொழுது எழும் ஊழிக் கடலோ? எதுவோ என்று சொல்லும்படி உலவுகின்ற கண்களைக் கொண்டு நேரே உயிரைக் கொள்ளை அடிக்கும் வழியைத் தெரிந்துள்ள, பிசாசைப் போன்ற விலைமாதர்களின் உறவு நல்லதோ? வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மா¡£சன் முதலிய அரக்கர்கள், ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும், அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப் பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே, மேலான தேவர்கள், பகீரதன்* முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள் பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே, அழகிய நகராகிய திருவலஞ்சுழியில்** வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* பகீரதன் சூரிய வம்சத்து அரசன். கங்கையை உலகிற்கு வரவழைத்தவன். வல்லக்கோட்டையில் முருகனைப் பூஜித்தவன்.
** திருவலஞ்சுழி கும்பகோணத்துக்கு அருகே உள்ளது.
பாடல் 877 - திருப்பழையாறை
ராகம் -.....; தாளம் -
தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான
தோடுற்றுக் காதள வோடிய
     வேலுக்குத் தானிக ராயெழு
          சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே 
சோடுற்றத் தாமரை மாமுகை
     போலக்கற் பூரம ளாவிய
          தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார் 
கூடச்சிக் காயவ ரூழிய
     மேபற்றிக் காதலி னோடிய
          கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக் 
கோபித்துத் தாயென நீயொரு
     போதத்தைப் பேசவ தாலருள்
          கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும் 
வேடிக்கைக் காரவு தாரகு
     ணாபத்மத் தாரணி காரண
          வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா 
வேலைக்கட் டாணிம காரத
     சூரர்க்குச் சூரனை வேல்விடு
          வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே 
ஆடத்தக் காருமை பாதியர்
     வேதப்பொற் கோவண வாடையர்
          ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே 
ஆடப்பொற் கோபுர மேவிய
     ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை
          யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே.
தோடுகளை அணிந்த காது வரைக்கும் ஓடி வேலுக்கு ஒப்பானது என்று சொல்லும்படி விளங்கி, வஞ்சனை மிகுந்து, மன்மதனின் ரஜோ குணம் படைத்த கண்களும், இரட்டையாகப் பொருந்தி தாமரையின் அழகிய மொட்டுப் போன்ற, பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவையைப் பூசிய தோலும், முத்து மாலையும் அணிந்த, யானையின் தந்தம் போல் மேலிட்டெழுந்த மார்பகங்களும் உடைய விலைமாதர்களின் வசத்தில் அகப்பட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து ஆசையுடன் காலம் கழிக்கும் குப்பை போல் பயன் இல்லாதவனாகிய என்னை, சிற்றேவல் செய்யும் என்னை, சிற்றறிவுடன் செயல் படும் என்னை, வினைக்கு ஈடான என்னை, நீ கண்டித்து, தாய் போல நீ ஒப்பற்றதான ஒரு ஞானத்தை உபதேசிக்க, அதனால் ஞானம் பெற்றமையால் உனது திருவருளைப் புகழ்ந்து உன்னைப் பிரார்த்திக்க அடியேன் உன் திருவடியைப் பெற வேண்டுகிறேன். விநோதமான திருவிளையாடல்களைச் செய்பவனே, தாராள குணம் உடையவனே, தாமரை மலர் மாலை அணியும் மூலப்பொருளே, வீரனே, பரிசுத்தமானவனே, மகுடம் தரித்தவனே, போரில் (பகைவரைக்) கொல்லும் தீரனே, செய்யும் தொழிலில் சமர்த்தனே, ரதம் ஓட்டுவதில் வல்ல சூரர்களுக்கு எல்லாம் மேலான சூரன் மீது வேலைச் செலுத்துபவனே, ஐராவதம் என்னும் யானையின் மீது சீரான திருவருள் ஊறிய இளையவனே, கூத்தாட வல்லவர், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவர், வேதத்தையே அழகிய கோவணமாகக் கொண்டவர் ஆகிய சிவபிரான் களித்து மகிழ்ச்சி பூண்டு திருவருள் சுரந்த குழந்தை முருகனே, பொன்னாலாகிய கோபுரத்தைக் கொண்டதும், கண்ணாடிக்கு ஒப்பான மதில் சூழ்ந்த பழையாறை என்னும் தலத்தின் அழகிய கோவிலில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பழையாறை கும்பகோணத்துக்கு தென்மேற்கே 5 மைலில் உள்ளது.
பாடல் 878 - திருச்சக்கிரப்பள்ளி
ராகம் - ....; தாளம் -
தத்த தத்தன தத்தன தத்தன
     தத்த தத்தன தத்தன தத்தன
          தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான
திட்டெ னப்பல செப்பைய டிப்பன
     பொற்கு டத்தையு டைப்பன வுத்தர
          திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே 
செப்ப வத்திம ருப்பையொ டிப்பன
     புற்பு தத்தையி மைப்பில ழிப்பன
          செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய 
புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன
     சித்த முற்பொர விட்டுமு றிப்பன
          புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப் 
புக்கு டைப்பன முத்திரை யிட்டத
     னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல்
          புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே 
துட்ட நிக்ரக சத்தித ரப்ரப
     லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய
          துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச் 
சொற்க நிற்கசொ லட்சண தட்சண
     குத்த ரத்தில கத்திய னுக்கருள்
          சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத 
தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ
     ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக
          சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி 
சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்
     மிக்க ரத்நம திற்புடை சுற்றிய
          சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே.
(பெண்களின் மார்பகங்களுக்குச் செப்புக் குடத்தை உவமை கூறலாம் என்றால்) திட் திட் என்று செப்புத் தட்டை அடிபடும்படிச் செய்வன. (பொற் குடத்தை உவமை கூறலாம் என்றால்) பொன்னாலாகிய குடத்தை உடைபடும்படி செய்வன. (மேரு மலையை உவமை கூறலாம் என்றால்) வடக்கு திசையில் பெருத்த மேரு மலையும் தள்ளி விடப்பட்டது. அதற்கு உவமை தேடிச் சொல்ல யானையின் தந்தமும் உண்டு என்றால் யானையின் தந்தத்தையும் அம் மார்பகங்கள் ஒடித்துத் தள்ளுவன. நீர்க் குமிழியை (ஒப்பிடலாம் என்றால்) அவற்றை இமைப் பொழுதினில் அழியும்படிச் செய்வன. வயல்களில் உள்ள தாமரை மொட்டை (உவமை கூறலாம் என்றால்) தாமரை மொட்டை நீரில் அலையச் செய்வன. வல்லமை உடைய சக்ரவாகப் பறவையை (உவமை கூறலாம் என்றால்) அந்தப் பக்ஷியை ஆகாயத்தில் பறக்க விடுப்பன. (ஆடவர்களின்) உள்ளத்தைத் தன்னோடு சண்டை செய்ய விட்டு அதை அழியச் செய்வன. புஷ்ப பாணத்தையும் கரும்பு வில்லையும் கொண்ட மன்மதனின் கி¡£டத்தை (உவமிக்கலாம் என்றால்), (அந்த முடியையும்) குறி வைத்துத் தள்ளுவன. இளநீரை (உவமிக்கலாம் என்றால்) அதுவும் எடுத்து உடைக்கப் படுவதாகும். (இங்ஙனம் எதுவும் நமக்கு உவமையாக அமையாது என்ற உண்மையை) முத்திரை இட்டு விளக்கும் மார்பகங்களை விற்கும் விலைமாதர்களின் நிலைத்திராத புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரியும் புத்தி எனக்குப் பொருந்தி உள்ளதே. அது விலகி ஒழிந்து, நீ எப்போது அருள் புரிவாய்? துஷ்டர்களை அடக்கும் சக்தி வேலைத் தரிப்பவனே, புகழும் கீர்த்தியும் கொண்ட வல்லமை வாய்ந்தவனே, முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞான சம்பந்தராக வந்து) சீகாழிக்கு அரசு என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீட்டுப் பேறு நிலைத்து நிற்கும்படி சொன்ன அழகை உடையவனே, தெற்கு திசையில் உள்ள பூமியாகிய பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு மேன்மையாகிய வகையில் உபதேச சொல்லைச் சொன்ன குரு மூர்த்தியாகிய பெருமையை உடைய சத்துவ குணம் கொண்ட ஷண்முக நாதனே, குற்றமில்லாத வகையில் சைவ சமயத்தை வளர்ப்பவளாகிய பார்வதி, சிவபெருமான் ஆகியோரின் சந்நிதியில் உனது திருப்புகழைப் பாடும்படியான திருவருள் வலிமையை எனக்கு அருளிய வயலூரில் மயில் வாகனனாய் விளங்குபவனே, ஆறு கால்கள் கொண்ட வண்டுகளின் கூட்டம் மொய்க்கின்ற நறு மணச் சோலைகள் மிகுந்த ரத்தின மயமான மதில் பக்கங்களில் சுற்றியுள்ள திருச்சக்கிரப்பள்ளி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முக்கண்ணராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. 
இப்பாடலின் முதல் 10 வரிகள் பெண்களின் மார்பகங்களை உவமைகளைக் கூறி இன்ன காரணத்தால் அவை இணையாக மாட்டா என்று விளக்குகின்றன. இதே முறையைப் பின் வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம்.408 - கமலமொட்டை - (திருவருணை),563 - குடத்தைத்தகர் - (திருக்கற்குடி). 
* திருச்சக்கிரப்பள்ளி தஞ்சாவூருக்கு வடகிழக்கே 11 மைலில் ஐயம்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது.
பாடல் 879 - திருக்குரங்காடுதுறை
ராகம் - பாகே. தாளம் - தி.ரஏகம் - 3
தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
     தனந்தான தனத்தனனத் ...... தனதான
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
     கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும் 
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத்
     தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ் 
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
     சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந் 
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
     தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ 
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
     டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும் 
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
     திருங்கான நடக்குமவற் ...... கினியோனே 
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
     கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா 
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
     குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே.
அலங்காரமான கி¡£டமும், ஒளி நிறைந்த ஆறு திருமுகங்களில் அழகுடன் அசைந்தாடும் குண்டலங்களும், கவசமும், திரண்ட புஜங்களின் மீது போதுமானவரை சூடிய பூமாலைகள், ரத்தின மாலைகள் வரிசையாகப் புரண்டு ஆடவும், திருக்கரங்களில் அணிந்துள்ள மோதிரங்களும், புனைந்துள்ள வீரக் கடகமும், ஒளி வீசும் வேலும், சிலம்பும், அழகிய வேத ஒலியைச் செய்யும் சலங்கையும், இவைகள் ஓசை மிகுந்த ஒலி செய்ய, செந்நிறமாய், மணம்வீசும் மலர்களைப் புனைந்துள்ள திருவடிகள் திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன என்ற தாளத்துக்கு நாள்தோறும் நீ நடனம் செய்யும் அழகையும் - இவை எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லித் துதிக்க மாட்டேனோ? இலங்கைக்கு அரசனான ராவணனின் அசோக வனத்தில் அழகான குரங்காம் அனுமனை அனுப்பி இலங்கையை எரியூட்டி புகையை மூட்டிவிட்டவரும், மென்மையான மகரந்தம் கொண்ட செந்தாமரை மீது அமரும் லக்ஷ்மியாம் சீதையைச் சிறையிலிருந்து மீட்டியவரும், இளமை வாய்ந்தவரும், கருமுகிலைப் போன்ற நிறம் கொண்டவரும், கொடிய அம்பையும் வளைந்த வில்லையும் கையில் ஏந்தியவரும், தந்தை ஆணையால் இருண்ட கானகத்தில் நடந்து வனவாசம் செய்தவருமான ஸ்ரீராமனுக்கு (திருமாலுக்கு) இனியவனே, குலபலமும், கொடிய படைபலமும் படைத்த அசுரர்களின் பெரிய சேனையை அழிப்பதற்காக போர்க்களத்தில், கொடியதும், கூர்மையானதும், ஒளிமயமானதுமான வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, செழித்த சோலைகளிலும், மலர்ப் பூங்காக்களிலும் கரும்பு ஆலைகள் இயங்குவதால் ஏற்படும் ஓசை கேட்கும் திருக்குரங்காடுதுறைத் தலத்தில்* வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.
பாடல் 880 - திருக்குரங்காடுதுறை
ராகம் - ....; தாளம் -
தனத்தனந் தான தனதன
     தனத்தனந் தான தனதன
          தனத்தனந் தான தனதன ...... தனதான
குறித்தநெஞ் சாசை விரகிகள்
     நவிற்றுசங் கீத மிடறிகள்
          குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங் 
குறைப்படுங் காதல் குனகிகள்
     அரைப்பணங் கூறு விலையினர்
          கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை 
பொறித்தசிங் கார முலையினர்
     வடுப்படுங் கோவை யிதழிகள்
          பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப் 
புரித்திடும் பாவ சொருபிகள்
     உருக்குசம் போக சரசிகள்
          புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ 
நெறித்திருண் டாறு பதமலர்
     மணத்தபைங் கோதை வகைவகை
          நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா 
நெருக்குமிந்த் ராதி யமரர்கள்
     வளப்பெருஞ் சேனை யுடையவர்
          நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே 
செறித்தமந் தாரை மகிழ்புனை
     மிகுத்ததண் சோலை வகைவகை
          தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந் 
திரைக்கரங் கோலி நவமணி
     கொழித்திடுஞ் சாரல் வயலணி
          திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே.
பொருளைக் குறித்த விருப்பம் மனதில் கொண்ட காமிகள். பாடும் இசை அமைந்த குரலை உடையவர்கள். குதித்து நாடக மேடையில் ஏறி நடனம் செய்பவர்கள். யாரோடும் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி காதலை ஊட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள். அரையில் உள்ள பெண்குறியை விலை பேசி விற்பவர்கள். கொலைத் தொழிலைக் காட்டும் கண் பார்வையை உடையவர்கள். நகத்தின் குறிகள் பதியப் பெற்ற அழகிய மார்பகத்தை உடையவர்கள். காயத் தழும்புள்ள கோவைப் பழம் போன்று சிவந்த வாய் இதழை உடையவர்கள். பொருளைத் தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக மனத்தினர். தவசிகளும் சோர்ந்து போகும்படி செய்கின்ற பாவ உருவத்தினர். (உடலை) உருக்க வல்ல புணர்ச்சி லீலை செய்பவர்கள். அத்தகையோர்களின் சேர்க்கையைக் கொண்டு மகிழும் மயக்கத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? சுருண்டும், கரு நிறம் கொண்டும், ஆறு கால்கள் கொண்ட வண்டுகள் மொய்க்கும் பூக்களின் நறு மணம் கொண்டு விளங்கும் புதிய மாலைகள் பல வகையாக கட்டு தளரும், கரு மேகம் போன்ற கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, கூட்டமாக உள்ள இந்திரன் முதலிய தேவர்களுக்கும், வளப்பம் கொண்ட சேனையை உடைய மன்னர்களுக்கும், நினைத்துத் துதிக்கும் என்னைப் போன்ற அடியார்களுக்கும் பெரிய செல்வமாக விளங்குபவனே, நிறைந்துள்ள மந்தாரை மலர், மகிழம்பூ இவைகளைக் கொண்டு நிரம்பி விளங்கும் குளிர்ந்த சோலைகள் பல வகையானவையும் கலக்கி, நீர் நிறைந்து வருவதுமான ஆறு, பல துறைகளிலும் அலைகளாகிய கைகளை வளைத்து, புதிய மணி வகைகளைக் கொண்டு தள்ளுகின்ற பக்கங்களையும் வயல்களையும் அணிந்துள்ள திருக்குரங்காடுதுறை* என்ற தலத்தில் வீற்றிருக்கும பெருமாளே. 
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.
பாடல் 881 - திருக்குரங்காடுதுறை
ராகம் - ....; தாளம் -
தனந்த தனத்தான தனந்த தனத்தான
     தனந்த தனத்தான ...... தனதான
குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார
     வடங்கள் அசைத்தார ...... செயநீலங் 
குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது
     குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே 
உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி
     யுலந்து மிகக்கோலு ...... மகலாதே 
உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு
     முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே 
விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட
     விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன் 
விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு
     விளங்கு முகிற்கான ...... மருகோனே 
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை
     தழங்கு மியற்பாடி ...... யளிசூழத் 
தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு
     தலங்க ளிசைப்பான ...... பெருமாளே.
குடங்கள் வரிசையாக அமையப் பெற்றது போல விளங்கும் மார்பகங்களைக் கருத்தில் வைத்து, (ஆங்கே) முத்து மாலைகள் பொருந்த அசைத்த விலைமகளிருடைய செவிகள் இருக்கும் இடத்திலே விளக்கமுற்று நீண்ட குண்டலங்களை வெட்டுவது போலப் பாய்கின்ற, வெற்றி விளங்கும் நீலோற்பலம் போன்ற விழிப் பார்வை உடைய முகத் தோற்றம் என்னும் வலையாலே, உடல் கெட்டுப் போய் மிகவும் கூன் அடைந்து, நடையும் ஒரேயடியாகச் சரிந்து, தோலும் மிகவும் வற்றி, கையில் கோலும் நீங்காமல், தூங்கி விழித்துக் கொண்டது போன்ற, (இப்போது) பிறந்துள்ள இந்தப் பிறப்பிலாவது திண்மை (ஞானம்) பெறும்படியாக அழகிய திருவடியை அருள்வாயாக. நஞ்சு கன்னத்தில் ஏற காளிங்கனது படத்தின் மீது ஆடி நடித்தவனும், அத்தகைமை கொண்ட சிறந்த (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்பவனுமான திருமால், சிவதனுசை அழகிய கையால் முறித்து, காட்டுக்குச் சென்று, தான் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பாக்கி வைத்து விளங்கின மேக நிறமுடைய ராமனாகிய திருமாலுக்கு மருகனே, நீர் நிலைகளைக் கொண்ட மலைச் சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பேடையும் ஒலி செய்யும்படியாக பாடி முரலும் வண்டுகள் சூழ, விளங்கும் வயல் பக்கங்களைக் கொண்ட மலைச்சாரலில் குரங்குகள் குதித்து விளையாடும் (திருக்குரங்காடுதுறை* போன்ற) தலங்களில் மனம் உவந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.
பாடல் 882 - காவ்ளுர்
ராகம் - ....; தாளம் -
தான தானன தத்தன தந்தன
     தான தானன தத்தன தந்தன
          தான தானன தத்தன தந்தன ...... தனதான
மானை நேர்விழி யொத்தம டந்தையர்
     பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்
          வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும் 
மார்பு மீதினு முத்துவ டம்புரள்
     காம பூரண பொற்கட கம்பொர
          வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம் 
ஆன நேரில்வி தத்திர யங்களும்
     நாண மாறம யக்கியி யம்பவும்
          ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உறவாடி 
ஆர வாரந யத்தகு ணங்களில்
     வேளி னூல்களை கற்றவி ளம்பவும்
          ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ 
சான கீதுய ரத்தில ருஞ்சிறை
     போன போதுதொ குத்தசி னங்களில்
          தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத் 
தாரை மானொரு சுக்கிரி பன்பெற
     வாலி வாகுத லத்தில்வி ழுந்திட
          சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே 
கான வேடர்சி றுக்குடி லம்புன
     மீதில் வாழித ணத்திலு றைந்திடு
          காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா 
காவு லாவிய பொற்கமு கின்திரள்
     பாளை வீசம லர்த்தட முஞ்செறி
          காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே.
மானுக்கு ஒப்பான கண்ணோடு கூடிய மங்கையர், பாலுக்கு ஒத்த இனிய மொழியோடு கூடிய பேச்சை உடையவர், நறு மணம் வீசும் பூக்களை அணிந்துள்ள தெய்வ மகளிரை ஒத்த விலைமாதர்களின் இரண்டு தோள்கள் மீதும் மார்பின் மேலும் முத்து மாலை புரள, காம இச்சைக்கு முழு இடம் தரும் தங்கக் கடகம் என்னும் காப்பு பொருந்த, கடல்நீல நிறமுள்ள கை வளையல் ஒலி செய்ய, காமப் பற்று முற்றும் சமயத்தில், பல விதமான மருந்து வகைகளைக் கொண்டு நாணம் ஒழியும்படி (வந்தவர்களை) மயக்கி பேச்சுக்களைப் பேசவும், அணிந்துள்ள ஆடை தளர நெகிழ்த்தி, இரக்கம் காட்டுதல் போல உறவாடியும், ஆடம்பரமான நயத்தோடு கூடிய குணத்துடன் மன்மதனின் காம நூல்களில் கற்றுள்ள நுணுக்கங்களை எடுத்துச் சொல்லவும், ஏற்படுகின்ற காம மோகத்தால் வரும் ஆபத்தும் நீங்கி உன் திருவடிகளைச் சேர்வேனோ? ஜானகி துயரத்துடன் அரிய சிறைக்குச் சென்றபோது (ராமனுக்கு) உண்டான கோபத்துடன் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்குதல் பொருட்டு இலங்கை அழிந்து போகவும், தாரை என்னும் மாதினை ஒப்பற்ற நண்பன் சுக்கி¡£வன் பெறவும், வாலியின் வெற்றித் தொடர் அழிந்து அவன் பூமியில் விழவும் சாதித்த அம்பைச் செலுத்திய (ராமன்) திருமாலின் மருகனே, காட்டு வேடர்களின் சிறிய குடிசையிலும், அழகிய தினைப் புனத்திலும் (அதன் இடையே இருப்புக்காக அமைந்த) பரணிலும் வீற்றிருந்து காவலை மிக நன்றாகச் செய்த குறத்தியாகிய வள்ளியைத் தழுவிடும் அழகிய மார்பனே, சோலையிலுள்ள அழகிய கமுக மரங்களின் கூட்டங்கள் பாளைகளை வீசுவதும், (தாமரை, அல்லி போன்ற) நீர்மலர்கள் உள்ளவையுமான, குளங்கள் நிறைந்துள்ள காவளூர்* என்னும் தலத்தில் வீற்றிருந்து முத்தமிழும் தெரிந்த பெருமாளே. 
* காவளூர் தஞ்சை மாவட்டத்தில் திட்டை ரயில் நிலையத்திலிருந்து 6 மைலில் உள்ளது.
பாடல் 883 - தஞ்சை
ராகம் - ....; தாளம் -
தந்தன தானன ...... தனதான
அஞ்சன வேல்விழி ...... மடமாதர் 
அங்கவர் மாயையி ...... லலைவேனோ 
விஞ்சுறு மாவுன ...... தடிசேர 
விம்பம தாயரு ...... ளருளாதோ 
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம் 
நல்கும ராவுமை ...... யருள்பாலா 
தஞ்சென வாமடி ...... யவர்வாழத் 
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.
மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ? நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில் சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக் கூடாதோ? விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே, சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே. 
பாடல் 884 - தஞ்சை
ராகம் - ...; தாளம் -
தந்த தானனத் தந்த தானனத்
     தந்த தானனத் ...... தனதான
அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்
     தஞ்ச வேமணிக் ...... குழைவீசும் 
அங்க ணாரிடத் தின்ப சாகரத்
     தங்கி மூழ்குமிச் ...... சையினாலே 
எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்
     திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர 
இங்கு வாவெனப் பண்பி னாலழைத்
     தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய் 
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
     கொண்டல் போல்குழற் ...... கனமேருக் 
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
     கொண்ட கோலசற் ...... குணவேலா 
சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
     சம்பு போதகக் ...... குருநாதா 
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
     தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.
கடலில் உள்ள கெண்டை மீன், சேல் மீன் பயந்து ஒளிந்திடுமாறு, ரத்தினக் குண்டலங்கள் உள்ள காதுவரை பாய்ந்தோடும் அழகிய கண்களை உடைய மாதர்களிடம் கிடைக்கும் இன்பக்கடல் போன்ற நெருப்பில் முழுகும் காம விருப்பால், எம்பெருமானே, உன்னை நான் தியானிக்காத வண்ணம் என்னைப் பிரிக்கும் மாயவித்தை போன்ற இந்த மயக்க அறிவு நீங்க, இங்கே வா என்று ஆட்கொள்ளும் முறையில் அழைத்து, எங்கும் நிறைந்துள்ளதான உண்மைப் பொருளை உபதேசித்து அருள்க. கொடி போன்ற மெல்லிய இடுப்பு, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாய் இதழ், மேகம் போன்ற கூந்தல், பருத்த மேருமலையைப் போன்ற மார்பகம் - இவற்றை உடைய அழகிய வேட்டுவப் பெண் வள்ளியை மணம்கொண்ட அழகிய நற்குண வேலனே, மன்மதனைக்* கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு உபதேசம் செய்த குருநாதனே, திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால் கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 'சம்பரன்' என்ற அசுரனை மன்மதன் தனது மறு பிறப்பில் கொன்றதால், 'சம்பராரி' என்று மன்மதனுக்குப் பெயர் உண்டு.
பாடல் 885 - தஞ்சை
ராகம் - ....; தாளம் -
தந்த தானன தான தான தத்த தந்த
     தந்த தானன தான தான தத்த தந்த
          தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான
கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து
     மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து
          கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே 
கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து
     வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து
          கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி 
வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து
     கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி
          மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு 
மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
     மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
          வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே 
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
     சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
          னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே 
எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
     கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
          வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா 
சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
     முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
          தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா 
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
     கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
          தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.
நறு மணம் வீசும் நீண்ட கூந்தலைச் சிக்கெடுத்து வாரி, மாலையைச் சூடிக்கொண்டு, மஞ்சளை அழகுடன் உடலில் நிரம்பப் பூசி, கழுத்தில் மாலைகளாக உயர்தரமான முத்து மாலைகளை அணிந்து, தெருவில் பார்த்த பேர்வழிகளை எல்லாம் ஆசையுடன் அழைத்துக் கொண்டு வந்து, வளப்பம் உள்ள, கனத்த மேரு மலையை ஒத்த மார்பகங்களைத் திறந்து காட்டி, கண்கள் என்னும் கூர்மையான வேலாயுதத்தை வேகமாகச் செலுத்தி, (தமக்கு வேண்டிய) விலையைப் பேசி, வந்தவர்களைக் கையால் எடுத்துத் தழுவிக் கொண்டு, தேன் போல் இனிக்கும் வாயிதழ் ஊறலை உதடுகளில் வைத்துக் குடிக்கச்செய்து, தென்றல் வீசும் படுக்கையில் புணர்ந்து காம மயக்கம் கொள்ளும், விலைமாதர்களுடன் அநுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புகள் எல்லாம் தொலைந்து போகும்படி, ஞான வித்தையைக் கொடுத்து, வண்டுகள் உலாவும் கடப்ப மாலை என் முன் சற்றே விளங்க வருவாயாக. இந்திரலோகத்து கற்பக விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும் கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே, எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும் நிறைந்து விளங்கும் கந்தனே, தாருகாசுரனும் அவன் சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ் கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே, சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக் கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே, அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன் வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே. 
பாடல் 886 - சப்த.தானம்
ராகம் - ....; தாளம் -
தனன தானன தான தனத்தன
     தனன தானன தான தனத்தன
          தனன தானன தான தனத்தன ...... தனதான
மருவு லாவிடு மோதி குலைப்பவர்
     சமர வேலெனு நீடு விழிச்சியர்
          மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர் 
மதன னோடுறழ் பூச லிடைச்சியர்
     இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்
          மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே 
சருவி யாரையும் வாவெ னழைப்பவர்
     பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்
          சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே 
சலச மேவிய பாத நினைத்துமுன்
     அருணை நாடதி லோது திருப்புகழ்
          தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே 
அரிய கானக மேவு குறத்திதன்
     இதணி லேசில நாளு மனத்துடன்
          அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா 
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
     உழவர் சாகர மோடி யொளித்திட
          அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே 
திருவின் மாமர மார்ப ழனப்பதி
     அயிலு சோறவை யாளு துறைப்பதி
          திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச் 
சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
     பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
          திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.
நறுமணம் உலவும் கூந்தலை வேண்டுமென்றே அவிழ்ப்பவர்கள், போருக்கு உற்ற வேல் என்று சொல்லத் தக்க நீண்ட கண்களை உடையவர்கள், உள்ளத்தில் வஞ்சனை ஊர்கின்ற வேசியர்கள், ரதியின் கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும்*, போருக்கு ஏற்றதுமான இடையை உடையவர்கள், இளைஞர்களின் அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற மார்பகங்களை உடையவர்கள், இனிமையான பெரிய பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள், தெருவில் கொஞ்சிக் குலாவி யாரையும் (வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள், பொருள் பெறுவதிலேயே மிக்க ஆசை பரந்துள்ள மனத்தினர்கள், எல்லா விதமான வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய வேசியரை நான் நெருங்காமல், தாமரையை ஒத்த உனது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை மனம் குளிர மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக. அருமையான (வள்ளி மலைக்) காட்டில் இருந்த குறப்பெண்ணின் பரண் மீது சிறிது காலம் மனம் வைத்து, (சந்தனக்காடு, சண்பகக் காடு முதலிய) பல காடுகள் தோறும் வாழ்ந்து உலவிய பத்தினி வள்ளியின் காதல் கணவனே, அசுரர்கள் இருப்பிடம் யாவும் பொடியாக, அசுரப் படை வீரர்கள் கடலுள் ஓடி ஒளிந்து கொள்ள, தேவர்களின் பொன்னுலகத்தில் பொன் மழை மிகப் பொழிய நினைந்து உதவியவனே, லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் (1) என்னும் தலம், உண்பதற்குரிய திருச்சோற்றுத்துறை (2) என்ற தலம், திசைகள் தோறும் நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய திருவேதிக்குடி (3) என்ற தலம், பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்) கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் (4) என்ற தலம், தாமரையில் வாழும் நாயகனான சூரியன் பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி (5) என்ற தலம், திருநெய்த்தானம் (6), திருவையாறு (7) என்ற தலங்களுடன், ஏழு திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே. 
* இடைக்கு மன்மதனை உவமித்த காரணம், மன்மதன் சிவசாபம் காரணமாக அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியான், பெண்களின் இடை மெலிந்து அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியாது.
** இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள் - தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.
பாடல் 887 - திருவையாறு
ராகம் - ....; தாளம் -
தனன தானன தானன தானன
     தனன தானன தானன தானன
          தனன தானன தானன தானன ...... தனதான
சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்
     சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி
          சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை 
துவர தோஇல வோதெரி யாஇடை
     துகளி லாவன மோபிடி யோநடை
          துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உரையாடிப் 
பரிவி னாலெனை யாளுக நானொரு
     பழுதி லானென வாணுத லாரொடு
          பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப் 
பரவை மீதழி யாவகை ஞானிகள்
     பரவு நீள்புக ழேயது வாமிகு
          பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே 
கரிய மேனிய னானிரை யாள்பவன்
     அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
          கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக் 
கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
     கணையி னால்நில மீதுற நூறிய
          கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே 
திரிபு ராதிகள் தூளெழ வானவர்
     திகழ வேமுனி யாவருள் கூர்பவர்
          தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே 
சிகர பூதர நீறுசெய் வேலவ
     திமிர மோகர வீரதி வாகர
          திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே.
கூந்தல் மழையாய் சொரிந்து விழும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ? கண்கள் ஒளிகொண்ட இரு வாள்களோ, அல்லது மானின் கண்களோ? தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ? வாயிதழ் கொவ்வைக் கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ? இவர்களின் இடுப்பு கண்ணுக்கே தெரியாததோ? நடை குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ? மார்பகங்கள் இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ? - என்றெல்லாம் உவமைகள் எடுத்துப் பேசி, அன்புடன் என்னை ஆண்டருளுக, நான் ஒரு குற்றமும் இல்லாதவன் என்று ஒளி மிக்க நெற்றியை உடைய மாதர்களுடன் வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத துன்பத்துக்கு இடமான (இந்தப் பிறவிச் சுழல்) என்னும் மாயக் கடலில் அழியாதபடி, ஞானிகள் போற்றுகின்ற பெரும் புகழே உருவான சிறந்த மேலான மோட்சத்தைச் சேர்வதும், அங்ஙனம் சேரத் தகுந்தவன் ஆவதுமான, ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? கரு நிற உடல் உடையவன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், திருமால், (ஆதிசேஷன் என்ற) பாம்பணையின் மேல் (துயில்) வளர் கரிய மேகம் போன்றவன், பொன்னிறம் படைத்த கனகன் (இரணியனுடைய) மார்பைப் பிளந்த நரசிம்மன், வலிமையான மாயங்களில் வல்ல வஞ்சகனாகிய ராவணனின் சிறந்த பத்து முடிகளும் ஒரே பாணத்தால் நிலத்தின் மேல் விழும்படி தூளாக்கிய கருணை மிகுத்த திருமால், (வாலி என்னும்) குரங்கைக் கோபித்தவனும், கிருபைக்கு இடமானவனுமான விஷ்ணுவின் மருகனே, திரிபுர அசுரர்கள் பொடியாகுமாறும், தேவர்கள் விளங்கும் பொருட்டும், (திரிபுராதிகள் மீது) கோபித்து (தேவர்களுக்கு) அருள் பாலிப்பவர், உமா தேவிக்குத் தன் உடலில் பாதியைக் கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையை தூளாக்கி அழித்த வேலவனே, அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்க வல்ல வீர ஞானபானுவே, திருவையாற்றில்* வீற்றிருக்கும் தேவனே, கிருபாகர மூர்த்தியே, பெருமாளே. 
* திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் காவேரி ஆற்றின் கரையில் உள்ளது.
பாடல் 888 - திருப்பூந்துருத்தி
ராகம் - ....; தாளம் -
தாந்த தத்தன தானா தானன
     தாந்த தத்தன தானா தானன
          தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான
வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை
     சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர
          வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் ...... உண்டுதோயா 
வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன
     வாஞ்சை யிற்களி கூரா வாள்விழி
          மேம்ப டக்குழை மீதே மோதிட ...... வண்டிராசி 
ஓங்கு மைக்குழல் சாதா வீறென
     வீந்து புட்குரல் கூவா வேள்கலை
          யோர்ந்தி டப்பல க்¡£டா பேதமு ...... யங்குமாகா 
ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை
     தீர்ந்து னக்கெளி தாயே மாதவ
          மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ...... ழங்குவாயே 
தாங்கு நிற்சரர் சேனா நீதரு
     னாங்கு ருத்ரகு மாரா கோஷண
          தாண்ட வற்கருள் கேகீ வாகன ...... துங்கவீரா 
சாங்கி பற்சுகர் சீநா தீசுர
     ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
          சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ ...... லங்கன்மார்பா 
பூங்கு ளத்திடை தாரா வோடன
     மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
          போன்ற விக்ரக சூரா ¡£பகி ...... ரண்டரூபா 
போந்த பத்தர்பொ லாநோய் போயிட
     வேண்ட நுக்ரக போதா மேவிய
          பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.
பருமனான பச்சை இளநீர் போல உள்ள பெரிய மார்பகங்களை சேர்ந்து அணைத்து எதிரில் உள்ள மார்பில் அழுந்தும்படி பொருந்த வைத்து, விரும்பத் தக்க சர்க்கரை, பால், தேன் இவைகளுக்கு ஒப்பான வாயிதழை உண்டு தோய்ந்து, விரும்பத் தக்க மோகப் பேச்சுக்களைப் பேசி, ஆடையும் வேறாக, காம மயக்க ஆசையில் மகிழ்ச்சி அடைந்து, ஒளி பொருந்திய கண்கள் மேலிட்டு காதில் உள்ள குண்டலங்கள் மீது மோதிட, வண்டின் கூட்டங்கள் மிக்குள்ள கரிய கூந்தல் எப்போதும் சதமென (அதன்மேல்) விழுந்து, புட்குரல் ஒலியைக் கூவச் செய்து, மன்மதனின் காம சாத்திர நூல்களை அறியும்படி பலவகையான லீலைகளின் பேதங்களை முயற்சி செய்தல் ஆகுமோ? (கூடாது என்றபடி), ஆன்மா அனுபவிக்க வேண்டிய சுக துக்க நுகர்ச்சியும், மாயை சம்பந்தமாக ஏற்படும் துன்பங்களும் ஒழிந்து உன் திருவடிக்கே எளிதான வகையில் சிறந்த தவ நிலை ஊன்றிப் பொருந்துவதற்கு மெய்ஞ்ஞான ஆசார ஒழுக்கத்தைத் தந்து அருள்வாயாக. (ஜைன மதக் கொள்கைகளை அனுஷ்டித்துத்) தாங்கி நின்ற குருமார்களின் கூட்டமாகிய நீசர்கள் ஆழ்ந்து நினைக்கக் காரணமாக இருந்து, அங்கு (மதுரையில் திருஞானசம்பந்தராக) வந்த சிவ குமாரனே, பேரொலியுடன் நடனம் செய்த சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய மயில் வாகனனே, உயர்ந்த வீரனே, ஆத்ம தத்துவத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரம ரிஷி, லக்ஷ்மியின் நாதராகிய திருமால், சிவபெருமான், தேவேந்திரன் ஆகியோர் மெச்சிப் போற்றிய வேலனே, உபதேச குருவே, சாந்தமூர்த்தியே, அறிஞனே, சுவாமியே, கடப்ப மாலை அணிந்த மார்பனே, தாமரைப் பூ உள்ள குளத்தில் குள்ள வாத்துக்களுடன் அன்னப் பறவைகளும் மேய்ந்த வயலூர்ப் பெருமானே, பெரிய மலை போன்ற உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவனே, வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தனே, (உன் அடியை வேண்டி) வந்த அடியார்களின் பொல்லாத பிறவியாகிய நோய் ஓடிப் போக வேண்டிய அருள் செய்த அறிஞனே, பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வமே, தேவர்கள் தம்பிரானே. 
* திருப்பூந்துருத்தி தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று.
பாடல் 889 - திருநெய்த்தானம்
ராகம் - ....; தாளம் -
தனனத் தானத் தனதன தனதன
     தனனத் தானத் தனதன தனதன
          தனனத் தானத் தனதன தனதன ...... தனதான
முகிலைக் காரைச் சருவிய குழலது
     சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர
          முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ 
முனையிற் காதிப் பொருகணை யினையிள
     வடுவைப் பானற் பரிமள நறையிதழ்
          முகையைப் போலச் சமர்செயு மிருவிழி ...... குழைமோதத் 
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்
     பருகிக் காதற் றுயரற வளநிறை
          துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...... களிகூரச் 
சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத
     நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை
          துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே 
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
     திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
          குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே 
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
     குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
          குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா 
செகசெச் சேசெச் செகவென முரசொலி
     திகழச் சூழத் திருநட மிடுபவர்
          செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே 
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
     கலசத் தாமத் தனகிரி தழுவிய
          திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே.
மேகத்தையும் இருளையும் கூடி நின்ற கூந்தலானது சரிந்து விழ, இடை அணியும் பூ மாலை வகைகளும் தளர்ந்து நெகிழ, தாமரை மலரையும் குளிர்ந்த சந்திரனையும் ஒத்த முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்ற, நுனியால் வெட்டுதல் போல முட்டுகின்றதும், போருக்கு உற்றதுமான அம்பை, இள மா வடுவை, கருங் குவளையை, நறுமணமும் தேனும் நிறைந்த தாமரை மொட்டின் இதழைப் போல் விளங்கி, போர் புரியும் இரண்டு கண்களும் காதில் உள்ள குண்டலங்களை மோத, பவளத்தையும் கொவ்வைக் கனியையும் ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு காம வருத்தம் நீங்க, வளப்பம் நிறைந்த இரண்டு அழகிய தோள்களிலும் என் உள்ளம் உருகி நின்று மகிழ்ச்சி மிகுந்திட, ஒளி வீசும் முத்து மாலையாகிய ஆபரணத்தை அணிந்துள்ளதும், கஸ்தூரி நிறைந்ததும், அழகுள்ளதும் கனம் உள்ளதும், நெகிழ்ச்சி கொண்டதும், குவிந்து தோன்றும் மார்பகங்கள் துவட்சியுறும்படி (பொது மகளிருடன்) கூடித் தூங்கினாலும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென்றும், திமிதித் தீதித் திமிதி என்றும் இவ்வாறான ஒலிகளுடன் பறைகள் ஒன்று கூடிக் கோபத்தோடு முழங்க, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில் கூச்சலிட்டு பெருங் கழுகுகளின் கூட்டம் கூட, அஷ்ட பைரவர்கள் ஒன்று கூடி வர, பேய்கள் கொக்கரித்து ஆரவாரத்துடன் ஆடி தம் பசியை ஆற்றிக் கொள்ள, வேலைச் செலுத்திய குமரேசனே, செகசெச் சேசெச் செக என்று பறைகள் இவ்வாறு ஒலியை எழுப்பி முழங்கித் தம்மைச் சூழத் திரு நடனம் செய்பவர், (செவி உணர்ச்சியும்) கூடிய, கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை அணியாகச் சூடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடையதும், பருத்துப் பாரமுள்ளதுமான (வள்ளி) மலையில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் குடம் போன்றதும், பூ மாலை அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவனே, திருநெய்த்தானத்தில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் பெருமாளே. 
* திருநெய்த்தானம் திருவையாறுக்கு அருகில் உள்ளது.
பாடல் 890 - திருப்பழுவூர்
ராகம் - ....; தாளம் -
தனன தந்தன தாத்த தானன
     தனன தந்தன தாத்த தானன
          தனன தந்தன தாத்த தானன ...... தனதான
விகட சங்கட வார்த்தை பேசிகள்
     அவல மங்கைய ரூத்தை நாறிகள்
          விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம் 
விதம்வி தங்களை நோக்கி யாசையி
     லுபரி தங்களை மூட்டி யேதம
          இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர் 
சகல மஞ்சன மாட்டி யேமுலை
     படவ ளைந்திசை மூட்டி யேவரு
          சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே 
சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது
     மலர வுந்தியை வாட்டி யேயிடை
          தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ 
திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு
     தமையர் தம்பியர் மூத்த தாதையர்
          திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான 
செனம டங்கலு மாற்றி யேயுடல்
     தகர அங்கவர் கூட்டை யேநரி
          திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி 
அகடு துஞ்சிட மூட்டு பாரத
     முடிய அன்பர்க ளேத்த வேயரி
          யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே 
அமர ரந்தணர் போற்ற வேகிரி
     கடல திர்ந்திட நோக்கு மாமயில்
          அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே.
பரிகாசமானதும் துன்பம் தரக் கூடியதுமான வார்த்தைகளைப் பேசுபவர்கள். துன்பத்துக்கு காரணமான விலைமாதர்கள். அழுக்கு நாற்றம் வீசுபவர்கள். செல்வப் பெருக்கு ஒடுங்கி நிலை மாறுவதற்கு வாய்ப்பு இதுதான் என்று, வருவோர்களுடைய அப்போதைக்கு அப்போது உள்ள நிலைமையைக் கவனித்து, ஆசை காரணமாக, காம இச்சைகளை எழுப்பி தாங்கள் இடுகின்ற மருந்தோடு சோற்றைக் கலந்து கொடுக்கின்றவர்களாகிய விலைமாதர்கள். எல்லா வித நீராடல்களையும் ஆட்டி, மார்பகங்கள் படும்படி குனிந்து, இசை ஞானத்தைக் காட்டி, அதனால் வருகின்ற காம சேட்டை முதலிய இனிமையான முறைப்பட்ட சுழற்சியான ஆடலாலே, தாள ஒத்து முழங்க, வாயில் இசைப் பாடல்கள் பிறக்க, வயிற்றை ஒழுங்காக அசைத்து, இடை தளரவும், கண்களை ஆட்டி அசைக்கும் விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச் செய்து*, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும் மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும், துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும், நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து, அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள் திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில் நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய, அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன் ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே, தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச் செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில்** எழுந்தருளி இருக்கும் பெருமாளே. 
* பாரதப் போரில் 13-ம் நாள் ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய பிள்ளை அபிமன்யுவைக் கொன்று விட்டான். உடனே அர்ச்சுனன் நாளை சூரியன் அஸ்தமிப்பதற்குள் ஜயத்ரதனைக் கொல்வேன் இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான். சூரியன் அஸ்தமிக்கு முன் கண்ணன் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்தார். சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜயத்ரதன் வெளியே வர, அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தை விட்டு அவனைக் கொன்றான்.
** திருப்பழுவூர் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.
பாடல் 891 - பெரும்புலியூர்
ராகம் - ....; தாளம் -
தனந்தனன தானத் தனந்தனன தானத்
     தனந்தனன தானத் ...... தனதான
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
     சரங்களொளி வீசப் ...... புயமீதே 
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
     சரங்கண்மறி காதிற் ...... குழையாட 
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
     றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ 
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
     றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே 
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
     சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே 
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
     சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே 
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
     ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா 
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
     பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.
கிண்கிணி, ரத்தினம் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட, மணி வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாட, தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில் குண்டலங்கள் ஆட, இனிமை வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி, ரம்பை போன்ற அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் நெருங்கிப் பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என் மீது, நீ கொஞ்சம் இரக்கம் கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக. சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல் வீற்றிருப்பவனே, சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து, அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே, பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே. பெரிய வள்ளி மலைத் தினைப் புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும் புலியூரில்* வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
* பெரும்புலியூர் திருவையாற்றுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.
பாடல் 892 - நெடுங்களம்
ராகம் - ....; தாளம் -
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
     தந்ததன தந்ததன ...... தந்ததான
பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்
     பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப் 
பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி
     பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக் 
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ
     கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங் 
கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை
     கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய் 
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல
     இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல் 
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள
     இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம் 
அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள
     அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா 
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்
     அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.
(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களும், பழைமையாக வரும் நல் வினை, தீ வினைகளும், நோய்களும் பஞ்சு எரிவது போல எரிந்து, பொடி வடிவம் ஆகி முதலிலேயே அற்றுப் போக, தாமதம் இன்றி பழைய அடியார்களுடன் பழகி, சுவாதிஷ்டானத்தில் பிரமனும், மணி பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் ருத்திரரும், விசுத்தியில் மகேசுரரும், ஆக்ஞையில் சதாசிவமும்* விளங்க, (ஆறாவது ஆதாரமாகிய மூலாதாரத்தில்) யானை முக விநாயகரும் சீருடன் அமர்ந்திட, (ஆக, ஆறு ஆதாரங்களிலும்) அவரவர்க்கு உரிய உறைவிடங்களில் வந்து விளங்க, (அப்போது) கொஞ்சுவது போன்ற இனிய சிலம்பின் ஓசை, கழலின் ஓசை, விந்து சம்பந்தமான நாத ஒலி இவை எல்லாம் இனிமையாக ஒலிக்க, மயிலின் முதுகின் மேல் நீ வந்து காட்சி கொடுத்து, என் மனக் கவலையை ஒழித்து, உனது திருவடியை இன்று தருவாயாக. இடையும் மெலிவுற்றுச் சுழல, அம்பு போன்ற கண்களும் சுழல, இன்பச் சுவை நிறைந்த மார்பகங்களைக் கரத்தில் கொள்ள முடியாத வகையில் விம்மி நிற்க, ஆடை குலைய, அதிவேகத்துடன் அமுத ரசம் பெருக, பிறை போன்ற நெற்றியும் சுருங்க, இருளும் மேகமும் பயப்படும்படி அவ்வளவு கறுத்த கூந்தல் புரண்டு அலைய, பொற் குண்டலங்களும் ஊசலாட, அழகிய பொன் உருவம் விளங்கும் மங்கை தேவயானையை திருமணம் செய்து கொண்ட குமரனே, அன்பர்கள் விளங்கும் திருநெடுங்களம்** என்னும் வளப்பம் பொருந்திய தலத்தில், தேவர்களும், பிரமனும் போற்றும் தம்பிரானே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** நெடுங்களம் திருச்சிக்கு அடுத்த திருவெறும்பியூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 7 மைலில் உள்ளது.
பாடல் 893 - குறட்டி
ராகம் - ....; தாளம் -
தானன தனத்த தான, தானன தனத்த தான
     தானன தனத்த தான ...... தனதான
கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான
     கோடத னில்மெத்த வீறு ...... முலையாலுங் 
கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால
     கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும் 
சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய்
     சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர் 
சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை
     சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ 
தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான
     ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச் 
சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி
     தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே 
வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண
     மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே 
வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ¡£கை
     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
கூர்மை கொண்ட கடைக்கண்ணாலும், மேரு மலை போல மிகவும் மேம்பட்டு எழுகின்ற மார்பகத்தாலும், (இந்த்ரகோபம் என்ற) தம்பலப் பூச்சி போன்ற சிவந்த வாயிதழ்களாலும், பொருந்தியுள்ள தன்மையில் ஆல் இலை போன்ற அழகிய வயிற்றாலும், பேச்சினாலும், சிறந்த வளையல்களை அணிந்த கைகளாலும், மேகலை என்னும் இடையணியை நெகிழ்ந்து விழும்படிச் செய்கின்ற அழகு அமைந்த மெல்லிய இடையினாலும், பொது மகளிர் என்கின்ற சேற்றிலே நான் நாள் தோறும் முழுகி, வாழ் நாளை வீணிலே செலவழித்து, மாயை பொருந்திய அறிவு கொண்டவனாகித் திரிவேனோ? பூமிதனில் மிகுந்த அகந்தை உடையவனாகி போர் செய்யும் துஷ்டனான ராவணனுடைய பெரிய சேனை பொடிபட்டு அழியுமாறு தாக்கிய, கருடக் கொடியைக் கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர் மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே, (கஜமுகாசுரன் என்ற) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட* சிவபெருமானின் மகன் முருகனே, கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும் கொண்ட அழகு வாய்ந்த குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாதவர்களாகப் பல வேள்விகளைப் புரிந்து வந்தனர். இவர்கள் செருக்கை அடக்க, திருமால் மோகினியாகவும், சிவபெருமான் பிச்சை எடுத்தும் அவ்வனத்துக்குச் செல்ல, முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தனர். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு ரிஷி பத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர் - சிவ புராணம்.
** குறட்டி புதுக்கோட்டைக்கு கிழக்கே 5 மைலில் உள்ளது.
பாடல் 894 - குறட்டி
ராகம் - ....; தாளம் -
தானன தனத்த தான தானன தனத்த தான
     தானன தனத்த தான ...... தனதான
நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல
     நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் 
நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு
     நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ 
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு
     பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் 
பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான
     பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ 
நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத
     நாயக ரிடத்து காமி ...... மகமாயி 
நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத
     நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி 
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக
     வாணுத லளித்த வீர ...... மயிலோனே 
மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை
     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.
நீர் இழிவு, குஷ்ட நோய், கோழை, வாயு இவைகளோடு பித்த நோய், வெகு நாளாக உள்ள குளிர் நோய், சுர நோய், மற்ற நோய்கள், வேர் ஊன்றி இருப்பதுவாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய், பிரமனால் படைக்கப்பட்டது (இந்த உடலாகிய) வீடு. நெடிதாய்ப் பரவி இருக்கும் ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் ஆகியவைகள் பொருந்திய பருத்த, ஒன்பது துவாரங்களை உடைய, நாற்றம் மிகுந்த, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வழியால் ஏற்படுகின்ற பிணி இவைகளால் ஆக்கப்பட்ட பொம்மை. நரியும் நாயும் பேயும் பருந்தும் கழுகுகளும் கோட்டான்களும் இவைகள் உண்ணுவதற்கு உரிய பாழான இந்த உடலை நான் எடுத்து வீண் பொழுது போக்கித் திரிவேனோ? துர்க்கை, முப்பத்திரண்டு அறங்களைப்* புரிந்த தேவி, ஆறு சமயங்களையும் சார்ந்தவள், பூத கணங்களுக்குத் தலைவரான சிவபெருமானுடைய இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி, நடனங்களைச் செய்பவள், அழகிய நீல நிறம் உடையவள், வேதத் தலைவி, உமையம்மை, காளி, முத்தலைச் சூலத்தைக் கொண்டவள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், ஞானத்தைப் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத் தலைவி, மலை மகளாகிய, ஒளி வீசும் நெற்றியைக் கொண்ட பார்வதி தேவி பெற்ற வீரனே, மயில் வாகனனே, மாடங்களும் மதில்களும் முத்து இழைத்த மேடான தளங்களும் கோபுரங்களும் நறு மணம் வீசுகின்ற சோலைகளும் அழகாக வாய்ந்துள்ள குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** குறட்டி புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.
பாடல் 895 - அத்திப்பட்டு
ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தத்தத் தத்ததன
     தனதனன தனதனன தத்தத் தத்ததன
          தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான
கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்
     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட
          கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக் 
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு
     கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்
          கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் ...... வழியேபோய் 
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு
     மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற
          மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே 
மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக
     மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி
          வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ...... தருவாயே 
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்
     புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்
          புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும் 
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி
     புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்
          பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே 
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட
     லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற
          அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ...... மிளையோனே 
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு
     மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்
          அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ...... பெருமாளே.
உடல் கருகித் தீய்ந்தது போல் ஆகி, அறிவும் நீங்கி, உயிர் பிரிந்தவுடன் சுற்றத்தார் உள்ளம் நைந்து கதறி அழ, (இழவு வீட்டுக்கு) வந்து சேர்ந்த பறைகள் யாவும் சப்திக்க, பொன்னும் மணியும் துலங்கும் பல்லக்கில் அமர்த்தி, விறகுக் கட்டைகளின் நடுவில் போடப்பட்டு, உறவினர்களின் மலரன்ன கைகளால் வாய்க்கு அரிசியிடப்பட்டு, அழகுள்ள மேல்துணியும் விலக்கப்பட்டு, உடலின் மறைவான இடங்களிலும் பிடிக்கின்ற நெருப்பு பற்றிக்கொண்டு கண கண என்று எரிய, உடல் இவ்வாறு சுடப்பட்டு, பக்கத்தில் இருந்தவர்கள் தாம் வந்த வழியே திரும்பிப் போய் நன்றாக நீரில் குளித்து, வீட்டுக்குப் போய் துக்கம் நீங்கினர். மனிதர்களை இன்ன உறவு இவர் என்று உறவின் முறையைக் குறித்து அத்தகைய குறிப்பால் மகிழ்ச்சி பூணவும், அழுதிடவும் (என்னை) வைத்து, அந்தத் துஷ்டனாகிய மன்மதனுடைய மலர் அம்பால், காம உணர்ச்சி உண்டாக, பெண்கள் கையில் அகப்பட்டு இளைத்து, மிகவும் மனம் நொந்து அழிகின்ற அடிமையாகிய என்னை நீ நினைத்து, உன் பாதங்களாகிய பொன் உலகுக்குப் போகும் வழியை இதுதான் வழி என்று சொல்லிக் காட்டி, உனது அழகிய திருவடியைத் தந்தருளுக. நிகர் இல்லாத பர்வத அரசன் (இமவான்) பெற்ற பச்சைநிற அழகு மயில், திரி புரம் எரி பட பொன் வில்லைத் தன் கையில் பற்றியவள், இடைவிடாத அன்புடன் அதிசயமான வகையில் ஊக்கத்துடன், அருமையான தவத்தை மேற் கொண்டு காஞ்சிப் பதியில் பொருந்தி விளங்கும் புகழ் பெற்ற தேவி பார்வதி பெற்ற மகனே, (ராவணனின்) பத்துக் கொத்தான தலைகளும், இருபது புயங்களும் அற்று விழ அம்பைச் செலுத்தியவனும், சக்ராயுதத்தை ஏந்தியவனுமாகிய கடவுள், புள்ளிகளைக் கொண்ட ஆதி சேஷன் என்னும் பாம்பின் மேல் பள்ளி கொள்ளும் சுத்தமான பச்சை நிற மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே, அருமையான மரகதப் பச்சை நிறமான மயில் மீது வீற்றிருந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி, அசுரர்களின் கூட்டம் கட்டோடு ஒழிய, தேவர்கள் தலைவனான இந்திரன் சுகத்துடன் குடி ஏறுதற்கு தக்கபடி ஏற்பாடு செய்த, மிக்க இளையவனே. செம்மணிகள் பத்துத் திக்குகளிலும் ஒளி வீசும், மிக்க அழகு நிறைந்து செழிப்புடன் விளங்கும் கி¡£ட மணி முடியை உடையவனே, தாவித் தாவி வளர்கின்ற வரிசையாக உள்ள கயல் மீன்கள் குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* புதுக்கோட்டைக்கு அடுத்த கந்தர்வ கோட்டையிலிருந்து 7 மைலில் அத்திப்பட்டு உள்ளது.
பாடல் 896 - அத்திக்கரை
ராகம் - ....; தாளம் -
தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை
     சுற்றிக்கல னிட்டுக் கடிதரு
          சொக்குப்புலி யப்பிப் புகழுறு ...... களியாலே 
சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
     சொற்றப்பிய கத்தைப் புரிபுல
          சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல் 
முக்குற்றம கற்றிப் பலகலை
     கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்
          முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே 
முத்தித்தவ சுற்றுக் கதியுறு
     சத்தைத்தெரி சித்துக் கரையகல்
          முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே 
திக்கெட்டும டக்கிக் கடவுள
     ருக்குப்பணி கற்பித் தருளறு
          சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர் 
செச்சைப்புய மற்றுப் புகவொரு
     சத்திப்படை விட்டுச் சுரர்பதி
          சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே 
அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
     அச்சத்தையொ ழித்துக் கரிவரும்
          அத்தத்தில ழைத்துப் பரிவுட ...... னணைவோனே 
அப்பைப்பிறை யைக்கட் டியசடை
     அத்தர்க்கரு மைப்புத் திரவிரி
          அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே.
உடலின் தோலைக் கழுவி, அழகுள்ள ஆடையைக் கட்டிக்கொண்டு, ஆபரணங்களை அணிந்து, வாசனை வீசுகின்ற, மயக்கி வசப்படுத்தவல்ல சாந்தைப் பூசிக் கொள்பவர்களாகிய விலைமாதர்களைப் புகழ்ந்து, அதனால் வரும் மகிழ்ச்சியால், பரிசுத்தமான நிலையை நீக்கிவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதியைக் கேளாது நடந்து, பாபச் செயல்களைச் செய்யும் ஐம்புலன்கள் முதலான பல சுற்றத்தார்கள் அழைத்துச் செல்லும் வழியில் சென்று, இந்தப் பூமியில் (நான்) திரியாமல், காமம், வெகுளி, மயக்கம் எனப்படும் மூன்று குற்றங்களையும் நீக்கி, கலை நூல்கள் பலவற்றைக் கற்று, பிழையான வழிகளை நீக்கி, தன்னை அறிந்த பரிசுத்தமான ஞானிகளுக்கு அடிமை பூண்டு, (அத்தகைய ஒழுக்கத்தால்) விளக்கம் உறும் அறிவைக் கொண்டு, முக்தியை அளிக்கக் கூடிய தவ நிலையை அடைந்து, வீடு பேற்றைத் தரவல்ல சத்தியமான பொருளைத் தரிசித்து, எல்லையில்லாத முக்தி என்னும் சமுத்திரத்தில் நான் புகுமாறு வரத்தை எனக்குத் தந்து அருள்க. எட்டு திசைகளையும் அடக்கி வெற்றி கொண்டு, தேவர்கள் அனைவருக்கும் வேலைகளைக் கட்டளை இட்டு, கருணை என்பதே இல்லாத கடின மனத்துடன் நெருங்கிவந்து, படையைக் கொண்டு போர்க்களத்தில் சண்டை செய்யும் சூரர்களின் ரத்தத்தால் சிவந்த தோள்கள் அற்று விழும்படி ஒப்பற்ற சக்தி வேற் படையைச் செலுத்தி, தேவர்கள் தலைவனான இந்திரன் மனத் துயரத்தை நீக்கி, பொன்னுலகை மீண்டும் பெற அருளியவனே, சங்கு மாலையை அணிந்த, பாமர குலத்தவளாகிய குறப் பெண் வள்ளியின் பயத்தை நீக்கி, (கணபதியாகிய) யானை எதிரில் வந்த சிறு சந்தில் அவளைத் தன்னிடம் அழைத்து, அன்பாக அணைந்தவனே, கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் முடித்துள்ள சடைப் பெருமானாகிய சிவனுக்கு அருமைப் பிள்ளையே, விளக்கமுற்றுப் பொலியும் அத்திக்கரை** என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 
* புலி நால்வகைச் சாந்துகளில் ஒன்று (பீதம், கலவை, வட்டிகை, புலி).
** அத்திக்கரை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.
பாடல் 897 - கந்தனூர்
ராகம் - பூர்விகல்யாணி தாளம் - கண்டசாபு - 2 1/2 தகிட-1 1/2, தக-1
தந்தனா தத்தனா தந்தனா தத்தனா
     தந்தனா தத்தனா ...... தந்ததான
விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
     மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி 
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
     மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே 
வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
     வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற 
மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
     வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ 
அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
     மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள 
அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்
     அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா 
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
     எந்தைபா கத்துறையு ...... மந்தமாது 
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
     எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே.
சுக்கில விந்து வெவ்வேறான உருவங்களாய் எல்லாத் திசைகளிலும், ஒளிவாய்ந்த அசையும் அசையாப் பொருள் என்ற கூட்டமாய் இவ்வுலகில் தோன்றி காலம் கழித்து, பின்பு பிரிந்து போய் உடலை விடுவதை என் மனம் ஆராய்ந்து அறியும். இவ்வாறு மிகுதியாக நீ எனக்கு அளித்த வடிவங்களில் பிறப்பெடுத்து நான் வந்து நாயினும் கீழ்ப்பட்டவனாக மனம் நொந்து, ஞான நிலையை இந்தக் கணத்திலேயே வந்து கொடு என்று உன்னிடம் முறையிடுகிறேன். குழந்தைகள் தாவி நின்று புகழ்ந்தால் தாயும் தந்தையும் அம்மொழிகளைக் கேட்டு மனம் உருகி அக்குழந்தைகளை ஓடிவந்து தழுவிக்கொள்ளும் பான்மையை உன் மனம் சற்று நினைக்கக் கூடாதா? பேரிருளில் இடி இடிப்பதுபோல் வாய்விட்டுக் கூச்சலிட்டு வருகின்ற, கண்களில் நெருப்புப் பொறி பறக்கும் இழிகுலத்தரான அசுரர் ஒடுங்கி மாண்டுபோக, அழகிய கையிலிருக்கும் வேலைச் செலுத்தி அருளி, இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள் மீண்டும் குடியேற அருள்புரிந்த குமரனே, என் உயிருக்கு உதவி புரிந்தவரும்*, சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள ஜடையை உடையவரும், என் தந்தையும் ஆகிய சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய பார்வதிதேவி ஆகிய இருவரும் எங்கும் நிறைந்து விளங்கும் ஒப்பற்ற கந்தனூரில்**, பராசக்தி புகழும் எந்தை பரமசிவன் பூஜித்து மகிழும் தம்பிரானே. 
* அருணகிரியாரின் வாழ்வில் அருணாசலேஸ்வரரே அவர் முன்பு தரிசனம் தந்து திருநீறு அளித்து ஆட்கொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பது.
** கந்தனூர் புதுக்கோட்டைக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.
பாடல் 898 - வாலிகொண்டபுரம்
ராகம் - மத்யமாவதி தாளம் - சது.ரத்ருபுடை - 4 களை - 32 தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான
ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
     காக முண்பவுட லேசு மந்துஇது
          ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ...... வும்பல்போலே 
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
     மேவி நம்பியிது போது மென்கசில
          ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச் 
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
     வீச மங்கையர்க ளாட வெண்கவரி
          சீற கொம்புகுழ லூத தண்டிகையி ...... லந்தமாகச் 
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
     மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
          சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்புதாராய் 
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
     சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
          சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச் 
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
     மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
          சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர 
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
     லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
          மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ...... னங்கொள்வோனே 
வாச கும்பதன மானை வந்துதினை
     காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
          வாலி கொண்டபுர மர்ந்துவளர் ...... தம்பிரானே.
ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, காகம் இவைகள் கடைசியில் உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை போலே எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி, சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, பொருட் செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள் பேசி, குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்கள் நடனமாட, வெண்சாமரங்கள் வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர, பல்லக்கில் அழகாக நான் வீற்றிருக்கும் பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும் ஆசையானது வெந்தழிய, உன்மீது ஆசை மிகுந்து, மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, உன் திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக. வஞ்சத் தொழில்களுக்கு இடமான மலைப்பிளவுகளைக் கொண்டு மிக இருண்ட மலையான கிரெளஞ்சகிரியும், அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ, சூரியனது குதிரைகள் பூட்டிய தேர் (சூரனது ஆட்சிக்கு முன்பு போல) சென்று நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட*, ஒளி பொருந்திய அந்தப் பிரமனும், இந்திரனும், முதல் தேவரிலிருந்து கடைசித் தேவர்வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க, கனகசபையில் நடனமாடும் எந்தை, முழுமுதல் கடவுள், சிவபிரான் மகிழ்ந்து அன்புகூர்ந்து நிற்க, போருக்கு என்று வாதுசெய்து வந்த அசுரர்கள் மாண்டு அழிய, உனது செவ்விய கையில் உள்ள வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள் தம்நாட்டில் குடியேற, வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ, போர்க்களத்திலே நின்று நடனம் புரிந்தவனே, மணம் வீசும் குடம் போன்ற மார்புடைய, மான் சாயல் உள்ள, வள்ளியிடம் வந்து, தினைப்புனத்தைக் காவல் காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகனே, மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம்** என்ற தலத்தில் வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே. 
* சூரனது ஆட்சியில் சூரியன் வானின் நடுவில் செல்லத் தடை இருந்தது.சூர சம்ஹாரம் ஆனபிறகே சூரியன் நடுவானில் செல்ல முடிந்தது - கந்த புராணம்.
** வாலிகொண்டபுரம் திருச்சிக்கு வடக்கே 40 மைலில் பெரம்பலூருக்கு அருகில் உள்ளது.
பாடல் 899 - திருமாந்துறை
ராகம் - ஆசிரி தாளம் - ஆதி
தாந்தன தனந்த தாந்தன தனந்த
     தாந்தன தனந்த ...... தனதான
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
     ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி 
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து
     ஆண்டுபல சென்று ...... கிடையோடே 
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து
     ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் 
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து
     ஊன்றிய பதங்கள் ...... தருவாயே 
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த
     வேந்திழையி னின்ப ...... மணவாளா 
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
     வேண்டிய பதங்கள் ...... புரிவோனே 
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து
     மாண்புநெல் விளைந்த ...... வளநாடா 
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற
     மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.
நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற திருமாந்துறைத்* தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமாந்துறை திருச்சியை அடுத்த திருவானைக்காவுக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.
பாடல் 900 - வயலு¡ர்
ராகம் - கேதாரம் தாளம் - சது.ர ரூபகம் - 6 - எடுப்பு - 1/2 இடம்
தனதன தானான தானந் தனதன தானான தானந்
     தனதன தானான தானந் ...... தனதான
அரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்
     றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் 
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்
     றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை 
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்
     பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் 
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்
     பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் 
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்
     கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் 
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்
     களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் 
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்
     குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா 
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்
     குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.
திருமாலின் மருமகனே போற்றி என்றும், முடிவு என்பது அற்றவனே போற்றி என்றும், ஆறுமுகக் கடவுளே போற்றி என்றும், உனது பாதத்தில், பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும், தேவர்களின் செல்வமே போற்றி என்றும், செந்நிறத்துச் சொரூபனே போற்றி என்றும், பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கிறது. வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே, தேவேந்திரன் பெற்ற மகள் தேவயானையின் நாதனே, பாம்பின் பகையான மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே, ஒரு நாளேனும் நினைத்துச் சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி சிறிதளவு கூட எதுவும் அறியாத ஏழை நான் உன் திருவாயால் பதி, பசு, பாசம்* ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும். கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே, முன்னொரு நாள், கடல் போலப் பேரோலியும் கொடிய கள்ளைக் குடித்தலும் உடைய துர்க்கை ஆடவும், யானையை (ஐராவதம்) வாகனமாகக் கொண்ட இந்திரனும் ஜெய ஜெய சேனாபதியே என்று ஆரவாரம் செய்யவும், போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால் பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும், நாயும், பேயும், பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும் அவனது குடலைக் கீறித் தின்னவும், சண்டை செய்த பல தோள்களை உடையவனே, மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம் போன்று பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்த குளிர்ந்த வயலூரில்* உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* பதி - கடவுள், பசு - ஜீவாத்மா, பாசம் - மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயை.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

பாடல் 851 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - சிந்தோளம் தாளம் - மி.ரசாபு - 3 1/2 தகதிமி-2, தகிட-1 1/2

தனதன தந்த தனதன தந்த     தனதன தந்த ...... தனதான

இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச     இருள்பிணி துஞ்ச ...... மலமாய 
எனதிடர் மங்க வுனதருள் பொங்க     இசைகொடு துங்க ...... புகழ்கூறித் 
திருமுக சந்த்ர முருகக டம்ப     சிவசுத கந்த ...... குகவேல 
சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு     திகழந டஞ்செய் ...... கழல்தாராய் 
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு     மகிழரி விண்டு ...... மருகோனே 
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற     வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா 
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து     மமலனு கந்த ...... முருகோனே 
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை     அமளிந லங்கொள் ...... பெருமாளே.

ஸஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக, இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக, இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய, எனது துயரமெல்லாம் குறைந்துபோக, உனது திருவருள் பெருக, இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி, சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே, முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா, குகா, வேலா, சிவசிவ என்று கூறி அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய். மருதமரம், கம்சன் இவர்களது உயிரை மாய்த்து மகிழ்ந்த ஹரி விஷ்ணுவின் மருமகனே, உயிர்களைக் கொன்ற அசுரர்கள் ஒடுங்க வெற்றிவலம் வந்த செம்பொன் மயில்வீரனே, அருகில் தன் பாகத்தில் அமர்ந்த பார்வதியுடன் ரிஷபவாகனம் ஏறும் அமலபிரான் சிவன் விரும்பும் முருகப் பெருமானே, அருள் நிறைந்த திருப்பந்தணைநல்லூர் தலத்தில் வள்ளி, தேவயானை ஆகிய இரு தேவிமாருடனும் மலர்ப்படுக்கையில் இன்புறும் பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 852 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனன தந்தன தானன தானன     தனன தந்தன தானன தானன          தனன தந்தன தானன தானன ...... தனதான

எகினி னம்பழி நாடக மாடிகள்     மயிலெ னுஞ்செய லாரகி நேரல்குல்          இசையி டுங்குர லார்கட னாளிகள் ...... வெகுமோகம் 
எனவி ழுந்திடு வார்முலை மேல்துகில்     அலைய வுந்திரி வாரெவ ராயினும்          இளகு கண்சுழல் வார்விலை வேசியர் ...... வலைவீசும் 
அகித வஞ்சக பாவனை யால்மயல்     கொடுவி ழுந்திட ராகமு நோய்பிணி          யதிக முங்கொடு நாயடி யேனினி ...... யுழலாமல் 
அமுத மந்திர ஞானொப தேசமும்     அருளி யன்புற வேமுரு காவென          அருள்பு குந்திட வேகழ லார்கழல் ...... அருள்வாயே 
ககன விஞ்சையர் கோவென வேகுவ     டவுணர் சிந்திட வேகடல் தீவுகள்          கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே 
கரிநெ டும்புலி தோலுடை யாரெனை     யடிமை கொண்டசு வாமிச தாசிவ          கடவு ளெந்தையர் பாகம்வி டாவுமை ...... யருள்பாலா 
செகமு மண்டமு மோருரு வாய்நிறை     நெடிய அம்புயல் மேனிய னாரரி          திருவு றைந்துள மார்பக னார்திரு ...... மருகோனே 
தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி     வளர்த னம்புதை மார்பழ காமிகு          திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.

அன்னப் பறவைகள் கூட்டத்தை பழிக்கவல்ல நாடகம் நடிப்பவர்கள். மயில் என்று சொல்லத்தக்க செயலினை உடையவர்கள். பாம்புக்கு ஒப்பான பெண்குறியை உடையவர்கள். பண்களைக் காட்டும் குரலை உடையவர். (திரும்பிவாரா) கடன் கொள்ளுபவர்கள். மிக்க மோகம் கொண்டுள்ளோம் என்பவர் போல் மேலே விழுபவர்கள். கச்சு அணிந்த மார்பகத்தின் மீதுள்ள மேல் ஆடை அசையும்படி திரிபவர்கள். யாராக இருந்தாலும் இரங்குபவர் போல நெகிழ்ச்சியைக் காட்டும் கண்களைச் சுற்றுபவர்கள். விலைக்கு உடலை விற்கும் வேசியர். காம வலை வீசும் தீமையைத் தருவதான வஞ்சக நினைப்புள்ள நடத்தையால் மயங்கி, நான் மோகம் கொண்டு அவர்கள் வலையில் விழுந்திட, ஆசையும், நோய், பிணி இவைகளை நிரம்பக் கொண்டு நாய் போன்ற அடியேன் இனிமேல் அலைச்சல் உறாமல், அமுதம் போன்ற (சரவணபவ என்னும்) ஆறு எழுத்து மந்திரத்தையும் ஞான உபதேசத்தையும் எனக்கு அருளி, நான் அன்பு கூடிய மனத்துடன் முருகா என்று சொல்லும்படியான கழல் அணிந்த உனது திருவடியை அருள்வாயாக. விண்ணிலுள்ள கல்வி மிக்கோர் கோ என்று அலறி இரங்க, கிரெளஞ்சமும், ஏழு மலைகளும், அசுரர்களும் அழியுமாறு, கடலும், தீவுகளும் மிக வேகுதல் உற, கொடிய நெருப்பை வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, முருகனே, யானை, பெரிய புலி ஆகியவற்றின் தோலைப் புனைந்தவர், என்னை அடிமையாகக் கொண்ட சுவாமி சதாசிவ மூர்த்திக் கடவுள், எனது தந்தை ஆகிய சிவபெருமானது (இடது) பாகத்தை விட்டுப் பிரியாத உமா தேவி அருளிய பாலகனே, உலகங்கள், அண்டங்கள் இவை முழுதிலும் ஓர் உருவாய் நிறைந்து விளங்கும் பெரிய அழகிய மேக நிறத்து மேனியராகிய திருமால், லக்ஷ்மி வாசம் செய்யும் மார்பை உடையவர் ஆகியவரின் அழகிய மருகனே, தினைப் புனத்தில் வாழ்ந்த வள்ளி நாயகியின் வளர்ச்சி மிகும் தனத்தில் படிந்த மார்பனே, அழகனே, மிகுந்த சிறப்பு வாய்ந்த திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 853 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -

தந்தன தனத்த தந்தன தனத்த     தந்தன தனத்த ...... தனதான

கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த     கொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார் 
குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட     கொந்தள கம்வைத்த ...... மடவார்பால் 
வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து     மங்கிந ரகத்தில் ...... மெலியாமல் 
வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை     வந்தனை செய்புத்தி ...... தருவாயே 
பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி     பண்டுள தவத்தி ...... லருள்சேயே 
பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த     பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே 
சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த     சங்கரர் தமக்கு ...... மிறையோனே 
சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற     சஞ்சல மறுத்த ...... பெருமாளே.

குடத்தை ஒத்த மார்பகங்களை வளர்த்துள்ளவர்களும், கொஞ்சுகின்ற கிளியைப் போன்ற பேச்சுக்களை உடையவர்களும் ஆகிய மான் போன்ற விலைமாதர்கள், குங்குமம் ஆகிய அலங்காரத்துடன், நல்ல புனுகை விட்டு (வாரப்பட்ட), பூங்கொத்துக்களை உள்ள கூந்தலை உடைய விலைமாதர்களிடத்தில், வீண் செயல்களைச் செய்து, நட்புச் செயல்களைக் காட்டி, அழிந்து, நரகத்தில் மெலியாதவாறு, வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த உன் திருவடியை வணங்குகின்ற புத்தியைக் கொடுத்து அருளுக. செறிந்துள்ள கங்கை நதியும், (சிவனார்) பாகத்தில் பொருந்தியுள்ள ஒப்பற்ற சாமர்த்தியம் உள்ள பார்வதி தேவியும் (தத்தமது) பழைமையானத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே, பசுமையான மேகங்கள் படியும் சோலைகள் மிக்குள்ள திருப்பந்தணை நல்லூர்* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, நாவல் மரத்தடியில் (திருவானைக்காவில்) வந்து தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவனே, சங்கை ஏந்திய திருமாலும், தேவர்களும் (சூரனிடம்) கொண்ட பயத்தினால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி ஒழித்த பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 854 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -

தந்ததன தந்ததன தனதனத்     தந்ததன தந்ததன தனதனத்          தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான

கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்     கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்          கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ...... கொடுபோய்வண் 
கெந்தபொடி யும்புனைந் துறவணைத்     தின்பவச னந்தருந் தொழிலடுக்          கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந் 
தண்டைகள்க லின்கலின் கலினெனக்     கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத்          தண்கொலுசு டன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச் 
சந்ததமும் வந்திரும் பரிமளப்     பங்கயப தங்களென் கொடுவினைச்          சஞ்சலம லங்கெடும் படியருட் ...... புரிவாயே 
தொண்டர்கள்ச ரண்சரண் சரணெனக்     கொம்புகள்கு குங்குகுங் குகுமெனத்          துந்துமிதி மிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை 
சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக்     கந்தகுற வஞ்சிதங் கருவனத்          துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும் 
பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்     கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்          பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும் 
பந்திவரு மந்திசெண் பகமகிற்     சந்துசெறி கொன்றைதுன் றியவனப்          பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே.

கெண்டை மீனைப் போன்ற கண்களை உடைய விலைமாதர்கள் மலர் அணிந்த கொண்டைகள் குலுங்கும்படியாக நின்று, சமீபத்திலிருந்து தாழ்ந்த குரலுடன், பற்கள் தெரியும்படி குழைந்து சிரித்துப் பேசி, (நாடி வருபவரை) படுக்கையில் கொண்டு போய், நல்ல வாசனைத் தூள்களைப் பூசி, இறுக்க அணைத்து, இன்பகரமான பேச்சுக்களுடன் கூடிய செயல்களால் உண்டாகின்ற காம மயக்கில் படுகின்ற துன்பம் நீங்க, ஒளி வீசுகின்ற (உனது) காலில் அணிந்த தண்டைகள் கலின் கலின் என்று ஒலி செய்ய, கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய, அருள் பாலிக்கும் கொலுசுடன், சிலம்பும் அசைய, திருவுள்ளத்தில் அன்பு கூர்ந்து எப்போதும் (என்முன்) வந்து, பெருமை தங்கிய, நறு மணம் உள்ள தாமரை போன்ற திருவடிகள் என்னுடைய பொல்லாத வினை, மனக் கவலை, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் (இவை யாவும்) அழிந்து போகும்படி அருள் புரிவாயாக. அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க, ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என்று ஒலி செய்ய, பேரிகை திமிந் திமிந் திமின் என்று அணுகி ஓசை செய்ய, அழகிய தேவயானையைத் திருமணம் செய்த வல்லமை வாய்ந்த கந்தனே, குறப் பெண்ணாகிய வள்ளி தங்கியிருந்த அருமையான தினைக் காடு உள்ள பரிசுத்தமான வள்ளி மலையையும் காத்து, தேவர்களுக்குத் துன்பத்தை மிகவும் விளைவித்த மிண்டர்கள் (அசுரர்கள்) தோள்களும் அறுபட்டுத் தூளாகச் செய்தவனே. மிகச் சிறப்பு வாய்ந்த தேவயானை (வளர்ந்த) அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தைக் காத்தளித்து, அகழியும், மதிலும், பக்கத்தில் சூழ்ந்துள்ள, வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்த, செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை (இம் மரங்கள் எல்லாம்) பொருந்திய சோலை சூழ்ந்த திருப்பந்தணைநல்லூரில்* வீற்றிருக்கும் சரவணப் பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 855 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -

தான தந்ததன தான தந்ததன     தான தந்ததன தான தந்ததன          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

தேனி ருந்தஇத ழார்ப ளிங்குநகை     யார்கு ளிர்ந்தமொழி யார்ச ரங்கள்விழி          சீர்சி றந்தமுக வாரி ளம்பிறைய ...... தென்புரூவர் 
தேன மர்ந்தகுழ லார்க ளங்கமுகி     னார்பு யங்கழையி னார்த னங்குவடு          சேர்சி வந்தவடி வார்து வண்டஇடை ...... புண்டா£கம் 
சூனி யங்கொள்செய லார ரம்பைதொடை     யார்ச ரண்கமல நேரி ளம்பருவ          தோகை சந்தமணி வாரு டன்கலவி ...... யின்பமூடே 
சோக முண்டுவிளை யாடி னுங்கமல     பாத மும்புயமி ராறு மிந்துளபல்          தோட லங்கலணி மார்ப மும்பரிவு ...... ளங்கொள்வேனே 
ஓந மந்தசிவ ரூபி யஞ்சுமுக     நீலி கண்டிகலி யாணி விந்துவொளி          யோசை தங்குமபி ராமி யம்பிகைப ...... யந்தவேளே 
ஓல மொன்றவுணர் சேனை மங்கையர்கள்     சேறு டன்குருதி யோட எண்டிசையும்          ஓது கெந்தருவர் பாட நின்றுநட ...... னங்கொள்வேலா 
ஏனல் மங்கைசுசி ஞான ரம்பையென     தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற          மானொ டும்பர்தரு மான ணைந்தழகி ...... லங்குமார்பா 
ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி     யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்          ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.

தேன் என இனிக்கும் வாயிதழ் ஊறலை உடையவர். பளிங்கு போன்று வெண்ணிறமான பற்களை உடையவர். குளிர்ந்த பேச்சை உடையவர். அம்பு போன்ற கண்ணையும் அழகு சிறந்த முகத்தையும் உடையவர். இளம் பிறை போன்றது என்று சொல்லக் கூடிய நெற்றிப் புருவத்தை உடையவர். வண்டுகள் பொருந்திய கூந்தலை உடையவர். கமுகு போன்ற கழுத்தினை உடையவர். மூங்கில் போன்ற தோளை உடையவர். மார்பகங்கள் மலையை ஒக்க சிவந்த நிறத்தை உடையவர். துவட்சி உற்ற இடையையும், தாமரை போன்ற பெண்குறியையும் கொண்டவர். மயக்கும் மந்திர வித்தையைக் கொண்டவர்கள். வாழைத் தண்டு போன்ற தொடையை உடையவர்கள். தாமரை போன்ற பாதங்களை உடையவர். இளம் பருவத்தையுடைய மயில் போன்றவர். சந்தனம் முதலியவற்றைப் பூசிக் கொள்ளுபவர்களோடு செய்யும் சேர்க்கை இன்பத்தில் சோர்வு அடைந்து விளையாடின போதும், உனது தாமரைத் திருவடிகளையும், பன்னிரண்டு தோள்களையும், கடம்பு முதலிய பலவிதமான மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை அணிந்த திருமார்பையும் அன்பு நிறைந்த என் மனத்தில் தியானிப்பேன். ஓம் நமசிவாய என்னும் அந்த சிவத்துடன் கலந்த உருவத்தினள், ஐந்து திரு முகங்களைக் கொண்ட நீலி, ரத்தின மாலை அணிந்துள்ள கல்யாணி, சிவ ஞான சக்தி, ஒளி ஓசை இவைகளுக்கு ஆதாரமாயுள்ள அழகுற்ற அம்பிகை என்ற உமாதேவி பெற்ற செவ்வேளே, பேரொலியுடன் ஆரவாரம் இட்ட அசுரர்களின் கூட்டங்களும் மங்கையர்களும் இறந்து பட, அவர்களின் உடல் சேறுடன் ரத்தமும் புரண்டு ஓட, எட்டுத் திசையிலும் இருந்து புகழும் கந்தருவர்கள் பாட, நடனம் செய்கின்ற வேலாயுதனே, தினைப் புனம் காத்த மங்கை, பரிசுத்தமான ஞான மயமான ரம்பை போன்ற அழகி, எனது தாய், சந்திரனை ஒத்த திருமுகம் உடையவள், வஞ்சிக் கொடி போன்ற குறமான் வள்ளியையும், தேவர்கள் வளர்த்த மான் ஆகிய தேவயானையையும் அணைந்து அழகு விளங்கும் திரு மார்பனே, அழகிய திருநீற்றுப் பச்சை, அறுகு, மண்டை ஓடு, கொன்றை மலர், நிலா, கங்கை ஆகியவற்றை அணிந்த சடையை உடைய சிவபெருமான் எழுந்தருளி உள்ளதும், அழகுள்ளதும், அழியாததும் ஆகிய திருப்பந்தணை நல்லூரில்* வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே. 
* இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 856 - திருப்பந்தணை நல்லு¡ர்
ராகம் - ....; தாளம் -

தனனந் தத்தன தனந்த தானன     தனனந் தத்தன தனந்த தானன          தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான

மதியஞ் சத்திரு நிறைந்த மாமுக     மயிலஞ் சக்கிளி யினங்க ளாமென          மதுரஞ் செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல 
மருவும் பொற்குட மெழுந்த மாமுலை     வளர்வஞ் சிக்கொடி நடந்த வாறென          வருதுங் கக்கட லணங்கு போல்பவர் ...... தெருவூடே 
நிதமிந் தப்படி யிருந்து வாறவர்     பொருள்தங் கப்பணி கலந்து போய்வர          நெறிதந் திட்டவர் வசங்க ளாமென ...... வுழலாதே 
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை     மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை          நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு ...... மருள்தாராய் 
நதிமிஞ் சச்சடை விரிந்த நாயக     னுமையன் பிற்செயு மிகுந்த பூசனை          நலமென் றுட்குளிர் சிவன்ப ராபர ...... னருள்பாலா 
நவகங் கைக்கிணை பகர்ந்த மாமணி     நதிபங் கிற்குல வுகந்து காபுரி          நகர்பொங் கித்தழை யவந்து வாழ்வுறு ...... முருகோனே 
கெதிதங் கத்தகு கணங்கள் வானவர்     அரிகஞ் சத்தவர் முகுந்தர் நாவலர்          கிளைபொங் கக்ருபை புரிந்து வாழ்கென ...... அருள்நாதா 
கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு     தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள்          கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள ...... பெருமாளே.

சந்திரன் அஞ்சி நாணும்படியான பொலிவு நிறைந்த அழகிய முகத்துடன், மயிலும் (இவர்களின் சாயல் முன் நமது சாயல் எம்மாத்திரம் என்று) பயப்பட, கிளியின் கூட்டங்கள் போல விளங்கி, இனிமை தரும் பேச்சுக்களைப் பேசும் பெண்களாகிய தேவலோகத்து மேனகை, ரதி என்னும் அரம்பையர்கள் போல, பொருந்தியுள்ள தங்கக் குடம் போன்ற அழகிய மார்பகங்களுடன் விளங்கும், வஞ்சிக் கொடி நடந்து உலவுவது போல் நடந்து வருகின்ற, உயர்ந்த கடலில் தோன்றி எழுந்த லக்ஷ்மி போன்ற அழகினர் தெருவழியாக தினந்தோறும் இவ்விதமாய் இருந்து, வரும் ஆடவர்களுடைய பொருள்களை தம்மிடமே தங்கும்படியாகச் செய்து, அவர்களுடன் கலந்து, போகவும், வரவும் வழி கொடுப்பவர்களின் வசப்பட்டவன் என்று சொல்லும்படியாக நான் திரியாமல், (அருள்ச்) செல்வம் பொங்க பல தவப் பேற்றின் பயனால் உன்னைப் புகழும்படியான அறிவு புலப்பட்டு, நான் உன்னை ஒளி வீசும் சந்தத் தமிழ்ப் பாக்களை நிரம்பப் பொழிந்து பாடவும் உனது திருவருளைத் தருவாயாக. கங்கை பொங்கி எழும் சடை விரிந்த தேவன், உமா தேவி அன்போடு செய்த பூஜையை நன்று இது என ஏற்று உள்ளம் குளிர்ந்த சிவன், பராபர மூர்த்தி அருளிய குழந்தையே, புதுமை நிறைந்த கங்கை நதிக்கு ஒப்பாகும் என்று சொல்லப்பட்ட மண்ணி ஆற்றின் பக்கத்தில் விளங்குகின்ற கந்துகாபுரி என்னும் திருப்பந்தணைநல்லூர்* என்னும் பதி செல்வம் மேம்பட்டு விளக்கமுறும் முருகனே, நற்கதி நிலை தம்மிடம் தங்குவதற்கு, பொருந்திய கணங்கள், தேவர்கள், இந்திரன், தாமரையில் வாழும் பிரமன், திருமால், புலவர்கள் இவர்களுடைய கூட்டம் சிறப்புற்று வாழ அருள் கூர்ந்து வாழுங்கள் என்று அருளிய நாதனே, கர்வம் கொண்டு பகைமை பூண்ட சூரனுடன் அவனுடைய சேனை பயப்படும்படி சண்டை செய்து, கிளம்பி தீ தாவி எழும் கிரவுஞ்ச மலையைப் பிளவுபடுத்திய வேலாயுதத்தைக் கொண்ட பெருமாளே. 
* இத்தலம் திருவிடைமருதூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 857 - திருப்பனந்தாள்
ராகம் - ....; தாளம் -

தந்தா தத்தன தந்தா தத்தன     தந்தா தத்தன ...... தனதான

கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை     யென்றே செப்பிய ...... மொழிமாதர் 
கொங்கார் முத்துவ டந்தா னிட்டத     னந்தா னித்தரை ...... மலைபோலே 
வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம     னந்தா னிப்படி ...... யுழலாமல் 
மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்     என்றே யிப்படி ...... அருள்வாயே 
இந்தோ டக்கதிர் கண்டோ டக்கட     மண்டா நற்றவர் ...... குடியோட 
எங்கே யக்கிரி யெங்கே யிக்கிரி     யென்றே திக்கென ...... வருசூரைப் 
பந்தா டித்தலை விண்டோ டக்களம்     வந்தோ ரைச்சில ...... ரணகாளிப் 
பங்கா கத்தரு கந்தா மிக்கப     னந்தா ளுற்றருள் ...... பெருமாளே.

பூங் கொத்துக்கள் நிறைந்த கரிய கூந்தலையும், சந்திரனைப் போன்ற முகத்தையும், சர்க்கரை என்றே சொல்லப்பட்ட மொழிகளையும் உடைய விலைமாதர்களின் வாசனை கொண்டதும் முத்து மாலை பூண்டதுமான மார்பகம், இந்தப் பூமியில் உள்ள மலை போல் உயர்ந்து எதிர் வந்து தோன்றிச் சுற்றி என் மனத்தைச் சூழ்ந்து கவர்ந்து பற்றினால், இந்த ஏழை மனம் இப்படியே அலைந்து அலைந்துத் திரியாமல், அழிதல் இல்லாத சிறந்ததொரு உபதேசப் பொருளை இதோ பெற்றுக்கொள், இது ஒரு அற்புதமானது என்று கூறி இவ்வண்ணம் இப்போதே அருள்வாயாக. சந்திரன் பயந்து ஓட, சூரியன் அதைக் கண்டு ஓட, காட்டில் கூட்டமாகச் செல்லும் நல்ல தவசிகளும் குடும்பத்துடன் அஞ்சி ஓடவும், எங்கே அந்த மலையில் ஒளிந்திருப்பவர்கள், எங்கே இந்த மலையில் இருப்பவர்கள் என்று கூறியே, திடுக்கிடும்படியாக வந்த சூரனை பந்தடிப்பது போல அடித்து விரட்டி, தலை அற்றுப் போய்ச் சிதறி விழவும், போர்க்களத்துக்கு வந்த அசுரர்களைக் கொன்று (அவர்களது உடல்களை) சில ரண தேவதைகளுக்குப் பங்கிட்டுத் தந்த கந்தனே, சிறப்பாக திருப்பனந்தாளில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருப்பனந்தாள் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.

பாடல் 858 - திருவிடைமருதூர்
ராகம் -.....; தாளம் -

தனதனன தனதனன தனதனன தனதனன     தான தானனா தான தானனாதனதனன தனதனன தனதனன தனதனன     தான தானனா தான தானனாதனதனன தனதனன தனதனன தனதனன     தான தானனா தான தானனா ...... தனதன தனதான

அறுகுநுனி பனியனைய சிறியதுளி பெரியதொரு     ஆக மாகியோர் பால ரூபமாய்அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய     ஆயி தாதையார் மாய மோகமாய்அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர     ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய் 
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி     ஆவி யாயவோர் தேவி மாருமாய்விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென     வீடு வாசலாய் மாட கூடமாய்அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி     ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே 
வெறுமிடிய னொருதவசி யமுதுபடை யெனுமளவில்     மேலை வீடுகேள் கீழை வீடுகேள்திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு     சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு     வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே 
மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்     வீணர் சேவையே பூணு பாவியாய்மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு     வார்கள் போகுவார் காணு மோஎனாவிடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென     மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில் 
வறுமைகளு முடுகிவர வுறுபொருளு நழுவசில     வாத மூதுகா மாலை சோகைநோய்பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்     பீளை சாறிடா ஈளை மேலிடாவழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ     வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய் 
மறுகமனை யுறுமவர்கள் நணுகுநணு கெனுமளவில்     மாதர் சீயெனா வாலர் சீயெனாகனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு     காடு வாவெனா வீடு போவெனாவலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி     வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச 
இறுதியதொ டறுதியென உறவின்முறை கதறியழ     ஏழை மாதராள் மோதி மேல்விழாஎனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற     ஈமொ லேலெனா வாயை ஆவெனாஇடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய     ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே 
இணையடிகள் பரவுமுன தடியவர்கள் பெறுவதுவும்     ஏசி டார்களோ பாச நாசனேஇருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற     ஏக போகமாய் நீயு நானுமாய்இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்     ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.

அறுகம் புல்லின் நுனியில் உள்ள பனி போல சிறிய துளி ஒன்று பெரியதான ஓருடலை அடைந்ததாகி, ஒரு குழந்தை உருவம் கொண்டு வெளிவர, அந்த அருமைக் குழந்தையின் மழலை மொழிகளில் கனிவு கொண்டு அக் குழந்தையின் தாயும் தந்தையும், அதன் மீது உலக மாயையின் வசப்பட்டு வெகு வெகு அருமையாக அன்பு காட்டி வளர்க்க, மொளு மொளு என்று உடலும் வளர, கவலை அற்ற இன்ப வாழ்க்கையராய் இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர் ஒரு பெரியவராகி அழகு விளங்கும் நடையைக் கொண்டவராய, ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களில் பழகினவராய், உயிர்போல அருமை வாய்ந்த மனைவிமாருடன், விழப் போகும் சுவரை, மாதர்கள் என்னும் பெருங் குழியை நிலைத்திருக்கும் என்று எண்ணி, வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்து, அணு அளவு தவிடும் கீழே விழுந்து சிதறக் கூடாது என மன அழுத்தம் கொண்டு, ஆசைக்கு ஆளாக ஊசியின் தன்மை பூண்டவராய், அவிந்து போவதற்கு முன் ஒளி விட்டு எரியும் விளக்கைப் போல (பின் வரும் கேடு தெரியாது மகிழ்ந்திருந்து), சுத்த தரித்திரன் ஒருவனோ, தவ புருஷனோ அமுது படையுங்கள் என்று கேட்ட உடனே, மேலை வீட்டுக்குப் போங்கள், கீழை வீட்டுக்குப் போங்கள் எனச் சொல்லி, திடு திடென்று நடந்து போய், பிச்சை கேட்டவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச் சென்று அவர்கள் மேல் மிகவும் கோபித்து, நாயைப் போல் பாய்ந்து விழுந்து, தமது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப் போவதற்கான பேச்சுக்களைப் பேசும் ஒரு வீணர்களின் பேச்சே நல்லது என மேற்கொள்ளப்பட்டதாகி, வரப் போகும் விதியின் போக்கைச் சற்றும் யோசிக்காமல், மினுகு மினுகு என்று செழிப்புற்றிருந்த தேகம் முற்றும் வளைவுற்றுத் தளரவும், வீண் பொழுது போக்குபவர்களின் தரிசனத்தையே மேற் கொண்ட பாவியாகி, அம் மறு பிறப்பில் துன்பம் நேரும் என்று அறிவுரை கூறுபவரை, உம் பேச்சை நிறுத்தும், கோரைப் புல் போலத் தோன்றி மறைபவர்கள் (மறுமை என்ற ஒன்றை) காண்பார்களா என்ன என்று எதிர்த்துப் பேசியும், பாசங்களை விட்ட துறவிகளாகிய பெரியோர்களையும் வேதியர்களையும் வெடு வெடு என்று காரமாகப் பேசியும், தவில் வாத்தியம் போல் பேரொலியுடன் இரைந்து பேசி, யாளி போலத் திறந்த வாயினராய் மாதர்களுடன் புணர்ச்சி பொருந்திக் காலங் கழித்து வரும் நாளில், வறுமைகள் நெருங்கி வர, கையில் உள்ள பொருளும் விலகி ஒழிய, சில வகையான வாத சம்பந்தமான நோய்கள, உடல் வீக்கம் தரும் காமாலை, ரத்தம் இன்மையால் உடல் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய், மகோதர நோய், வயிற்று வலி, ஒரு வகையான புண் கட்டி இவையெல்லாம் வர, இரண்டு கண்களிலும் பீளை ஒழுக, கோழை மேலிட்டு எழ, வழ வழ என்று உமிழ்கின்ற கபம் கொழ கொழ என்று ஒழுகி விழ, தேகத்தில் உள்ள சதை எல்லாம் வற்றிப் போய் நாடியும் பேதப்பட்டு வேறாகி, மனையாளும் (இனி எப்படி இவர் பிழைப்பது என) மன உறுதி வேறுபட்டு கலக்கம் உற, வீட்டில் உள்ளவர்களும் சமீபத்தில் சென்று பாருங்கள் என்று சொல்லும் போது, பெண்கள் சீ என வெறுக்க, குழந்தைகள் சீ என்று அருவருக்க, கனவில் தேர் வருவது போலவும் குதிரை வருவது போலவும் காட்சிகள் தோன்ற, பெரிய சுடுகாடு வா என்று கூப்பிட, வீடு போ என்று கூற, சாமர்த்தியம் அழிய, உற்சாகம் அழிய, பேச்சுத் தடுமாறி, கண்கள் சொருகிப் போக, மேல் மூச்சு எழ உயிர் உடலை விட்டுக் கழியும் நாளில் மனிதர்கள் பல பேச்சுக்கள் பேச, இவர் இறந்த பின் நமது எல்லா வளமும் அற்றதென்று சுற்றத்தார் எல்லாம் கதறி அழ, அறியாமை கொண்ட மாதர்கள் தலையில் அடித்துக் கொண்டு மேலே விழ, என்னுடைய பொருள், என்னுடைய அடிமை ஆட்கள் என்கின்ற அறிவு சிறிதளவும் இல்லாமல போக, ஈக்கள் மொலேல் என்று உடலை மொய்க்க, (உயிர் பிரிந்ததும்) வாயை ஆ என்று திறந்து வைக்க, ஒடுங்கின ஒலி செய்யும் பறை, சிறிய பறைகள், திமிலை என்ற ஒரு வகையான பறையுடன் மேளவகை (இவை எல்லாம்) ஒலிக்க சுடு காட்டுக்கே கொணரப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு, நெருப்பில் இடப்படும் இத்தகைய வாழ்க்கையை (உனது) இரண்டு திருவடிகளைப் போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதென்றால அவர்களை உலகத்தார் இகழ மாட்டார்களா? பாச நாசம் செய்யும் பெருமாளே, (ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய, ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக. திருவிடை மருதூரில்* வீற்றிருக்கும் தனி நாயகனே, தேவர்கள் பெருமாளே. 
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.

பாடல் 859 - திருவிடைமருதூர்
ராகம் - ....; தாளம் -

தனன தனதனன தான தானதன     தனன தனதனன தான தானதன          தனன தனதனன தான தானதன ...... தந்ததான

இலகு குழைகிழிய வூடு போயுலவி     யடர வருமதன னூல ளாவியெதி          ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம் 
இனிமை கரைபுரள வாகு லாவுசரி     நெறிவு கலகலென வாசம் வீசுகுழ          லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக 
மலையு மிதழ்பருகி வேடை தீரவுட     லிறுக இறுகியநு ராக போகமிக          வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை 
மதுர கவியடைவு பாடி வீடறிவு     முதிர அரியதமி ழோசை யாகவொளி          வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ 
கலக அசுரர்கிளை மாள மேருகிரி     தவிடு படவுதிர வோல வாரியலை          கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக் 
கலப மயிலின்மிசை யேறி வேதநெறி     பரவு மமரர்குடி யேற நாளும்விளை          கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே 
அலகை யுடனடம தாடு தாதைசெவி     நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்          அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ...... ணந்தகோவே 
அமணர் கழுவில்விளை யாட வாதுபடை     கருது குமரகுரு நாத நீதியுள          தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.

விளங்குகின்ற குண்டலத்தைத் தாக்கும்படி அதனிடையே போய்ப் பாய்ந்து நெருங்கி வந்தும், காம சாஸ்திரத்தை ஆராய்ந்து எதிரே வரும் இளைஞர்களின் உயிரைக் கவர்வதற்காகவே விரித்த ஆசை நிறைந்த வலையாக அமைந்தும் உள்ள நீலோற்பலம் போன்ற கண்கள். இனிமை என்பது மிக்கெழுந்து கரை புரண்டு ஒழுக, கையில் விளங்கும் வளை வகைகள் கலகல என்று ஒலிக்க, நறு மணம் வீசுகின்ற கூந்தல் என்னும் இருளில் முகம் என்னும் நிலாவொளி மிக்கு எழுந்து விளங்க, சிறந்த ஆடை விலகிப் போக, எதிர்ப்பட்டு முட்டி மோதும் வாயிதழ் ஊறலை உண்டு காம தாகம் அடங்க, விலை மகளிரின் உடலை அழுந்தக் கட்டி அணைத்து, காமப் பற்றால் ஏற்படும் சுகம் நன்றாக வளர்ந்தும், நெகிழ்ச்சியுறும் மார்பின் பாரங்களைத் தழுவும் எனக்கு, இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவற்றையும் பாடி, வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான தமிழ் இசை பிறக்க, அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியில் சேரும்படியான உனது திருவருளைத் தர மாட்டாயோ? போர் செய்யும் அசுரர்களின் கூட்டம் மாண்டு அழிய, மேரு மலை தவிடு பொடியாக, ரத்த வெள்ளம் ஓலமிடும் கடலின் அலைகள் பேரொலி செய்ய, கோடுகளை உடைய பாம்பைத் தன் வாயினின்றும் விடாது, பசி அடங்கிய இன்பம் கொண்ட, தோகை மயில் மேல் ஏறி வந்து, வேத சன்மார்க்கத்தைப் போற்றும் தேவர்கள் தங்கள் பொன்னுலகுக்குக் குடிபுகச் செய்து, நாள்தோறும் விளைகின்ற மிகப் பொல்லாத வினை வீழ்ந்தழிய வேலாயுதத்தை ஏவுதற்கு என்று தோன்றிய செல்வமே, பேய்களுடன் நடமிடும் தந்தையாகிய சிவபெருமானுடைய காதுகள் நிரம்ப மவுன உபதேசம் செய்தவனே, கடப்ப மாலையை அணிந்தவனே, அழகிய காட்டில் வாசம் செய்த வேடர்களின் மகளாகிய வள்ளியை திருமணம் புரிந்த தலைவனே, சமணர்கள் கழுவில் துள்ளிக் குதிக்க (சம்பந்தராக வந்து) வாதப் போர் கருதிச் செய்த குமரனே, குரு நாதனே, நீதி உள்ளவற்றை அருளிச் செய்பவனே, திருவிடை மருதூரில் வீற்றிருப்பவனே, சிறந்த முனிவர்களுக்குத் தம்பிரானே. 
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.

பாடல் 860 - திருவிடைமருதூர்
ராகம் - ...; தாளம் -

தனதனன தனதனன தந்தனந் தந்தனந்     தனதனன தனதனன தந்தனந் தந்தனந்          தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தந்ததான

படியையள விடுநெடிய கொண்டலுஞ் சண்டனும்     தமரசது மறையமரர் சங்கமுஞ் சம்புவும்          பரவரிய நிருபன்விர கன்சுடுஞ் சம்பனன் ...... செம்பொன்மேனிப் 
பரமனெழில் புனையுமர வங்களுங் கங்கையுந்     திருவளரு முளரியொடு திங்களுங் கொன்றையும்          பரியகுமி ழறுகுகன தும்பையுஞ் செம்பையுந் ...... துன்றுமூலச் 
சடைமுடியி லணியுநல சங்கரன் கும்பிடுங்     குமரனறு முகவன்மது ரந்தருஞ் செஞ்சொலன்          சரவணையில் வருமுதலி கொந்தகன் கந்தனென் ...... றுய்ந்துபாடித் 
தணியவொலி புகலும்வித மொன்றிலுஞ் சென்றிலன்     பகிரவொரு தினையளவு பண்புகொண் டண்டிலன்          தவநெறியி லொழுகிவழி பண்படுங் கங்கணஞ் ...... சிந்தியாதோ 
கடுகுபொடி தவிடுபட மந்திரந் தந்திரம்     பயிலவரு நிருதருட லம்பிளந் தம்பரங்          கதறிவெகு குருதிநதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் ...... கண்டுசேரக் 
கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்     றலகைபல திமிலைகொடு தந்தனந் தந்தனங்          கருதியிசை பொசியுநசை கண்டுகண் டின்புறுந் ...... துங்கவேலா 
அடல்புனையு மிடைமருதில் வந்திணங் குங்குணம்     பெரியகுரு பரகுமர சிந்துரஞ் சென்றடங்          கடவிதனி லுறைகுமரி சந்திலங் குந்தனந் ...... தங்குமார்பா 
அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்கயங்     கருணைபொழி வனகழலி லந்தமுந் தம்பமென்          றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ...... தம்பிரானே.

பூமியை தமது காலால் அளவிட்ட, பெரிய மேக நிறம் கொண்ட திருமாலும், யமனும், ஒலியுடன் ஓதப்படும் நான்கு வேதங்களும், தவர்கள் கூட்டமும், பிரமனும் போற்றுதற்கு அரிய அரசன், நெருப்பால் சுட்டழிக்கும் தன்மை உடையவன், செம்பொன் போன்ற மேனியை உடைய மேலானவன், அழகு கொண்ட பாம்புகளையும், கங்கை நதியையும், லக்ஷ்மி வாசம் செய்யும் தாமரையையும், நிலவையும், கொன்றையையும், பருத்த குமிழம் பூவையும், அறுகம் புல்லையும், பெருமை வாய்ந்த தும்பையையும், செம்பருத்தி மலரையும், நெருக்கமாக பிரதானமாக விளங்கும் சடை முடியில் அணிந்துள்ள நல்ல சிவபெருமான் வணங்கும் குமரன், ஆறு முகத்தவன், இனிமையான செவ்விய சொற்களைப் பேசுபவன், சரவண மடுவில் வந்த முதல்வன், (தேவ) சேனாபதி கந்தன் என்று, ஈடேறும்படிப் பாடி, குளிர்ந்த சொற்களைச் சொல்லும் வழி ஒன்றிலும் நான் சென்றவன் அல்லன். (பிறரோடு ஒன்று) பகிர்ந்து கொள்ள எண்ணி, ஒரு தினை அளவாவது ஈகைக் குணத்தைக் கொண்டு அணுகாதவன் நான். தவ வழியில் ஒழுகி நல் வழியில் சீர் பெறும் தீர்மானமான முயற்சி என் மனதில் உதிக்காதோ? கடுகைப் போல் பொடிப் பொடியாய்த் தவிடுபடும்படி, மந்திரமும், தந்திரமும் பயின்று வந்த அசுரர்களின் உடல்களைப் பிளந்து, கடல் கதறி நிரம்ப இரத்த ஆறு பொங்கி ஓடும்படியான களிப்புக்கு இடமான நிறைவைப் பார்த்து, அப்போர்க்களத்தில் சேரும்படி, கழுகும், நரியும், காகமும், கருடனும் அங்கு வந்து கூடி எங்கும் நிற்கவும், பல பேய்கள் கூடி பம்பை மேளத்தைக் கொட்டி தந்தனம் தந்தனம் என்ற ஒலிகளை எழுப்பி இசைகளைப் பொழியும் (பிணத்தை உண்ணும்) ஆசையைப் பார்த்து மகிழ்ச்சி உறுகின்ற பரிசுத்தமான வேலனே, வெற்றி விளங்கும் திருவிடைமருதூரில்* வந்து பொருந்தியிருக்கும் குணத்தில் சிறந்த குருபரனே, குமரனே, யானைகள் சென்று உறங்கும் (வள்ளிமலைக்) காட்டில் வசிக்கும் வள்ளியின் சந்தனம் விளங்கும் மார்பில் படியும் திருமார்பனே. சிவந்த ரத்தினங்கள் ஒளி வீசி விளங்கும் தண்டைகள் அணிந்த அழகிய தாமரை போன்றதும், கருணை பொழிவதுமான நினது திருவடிகளின் எழிலே நமக்குப் பற்றுக்கோடு என்று உணர்ந்து உறுதி பூண்டு, அந்த நன்னெறியை அழகு வாய்க்கத் தடவிப் பற்றி, தேவர்களும் தொண்டு பூண்டுள்ள தம்பிரானே. 
* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.

பாடல் 861 - திருவிடைமருதூர்
ராகம் - ...; தாளம் -

தனதனதன தான தானன தனதனதன தான தானன     தனதனதன தான தானன ...... தந்ததான

புழுகொடுபனி நீர்ச வாதுட னிருகரமிகு மார்பி லேபன     புளகிதஅபி ராம பூஷித ...... கொங்கையானை 
பொதுவினில்விலை கூறு மாதர்கள் மணியணிகுழை மீது தாவடி     பொருவனகணை போல்வி லோசன ...... வந்தியாலே 
மெழுகெனவுரு காவ னார்தம திதயகலக மோடு மோகன     வெகுவிதபரி தாப வாதனை ...... கொண்டுநாயேன் 
மிடைபடுமல மாயை யால்மிக கலவியஅறி வேக சாமிநின்     விதரணசிவ ஞான போதகம் ...... வந்துதாராய் 
எழுகிரிநிலை யோட வாரிதி மொகுமொகுவென வீச மேதினி     யிடர்கெடஅசு ரேசர் சேனைமு ...... றிந்துபோக 
இமையவர்சிறை மீள நாய்நரி கழுகுகள்கக ராசன் மேலிட     ரணமுககண பூத சேனைகள் ...... நின்றுலாவச் 
செழுமதகரி நீல கோமள அபிநவமயி லேறு சேவக     செயசெயமுரு காகு காவளர் ...... கந்தவேளே 
திரைபொருகரை மோது காவிரி வருபுனல்வயல் வாவி சூழ்தரு     திருவிடைமரு தூரில் மேவிய ...... தம்பிரானே.

புனுகு சட்டத்தோடு பன்னீர், ஜவ்வாது இவைகளுடன் இரண்டு கைகளிலும் நிரம்பியதாய் அள்ளி, மார்பில் சந்தனம் கஸ்தூரி முதலியவற்றைப் பூசி, புளகாங்கிதம் கொண்ட அழகுள்ளதாய், அலங்காரம் பூண்டதாய் உள்ள மலை போன்ற மார்பகங்களை, பொதுவான இடத்தில் நின்று விலை கூறும் வேசிகளின் ரத்தினம் பதித்த குண்டலங்களின் மீது போர் செய்கின்ற அம்புகள் போன்ற கண்கள் ஏற்படுத்தும் கொடுமையாலே, மெழுகு போல உள்ளம் உருகி அந்த வேசியர்களுடைய உள்ளத்தே தோன்றும் சச்சரவால் மன மயக்கம் கொண்டவனாய் பலவிதமான பரிதாபம் படத் தக்க துன்பம் அடைந்து அடியேன் நெருங்கி வரும் (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களின் மாயை வசத்தால் மிகவும் மனக் கலக்கம் கொண்ட என் அறிவு தொலைந்து அழிய, சுவாமியே, உன்னுடைய கொடையாக சிவஞான உபதேசத்தை நீ எழுந்தருளி வந்து தந்து உதவுக. (சூரனுடைய) ஏழு மலைகளும் நிலை பெயர்ந்து ஓடவும், கடல் மொகுமொகு என்று கலங்கி அலைகள் வீசவும், மண்ணுலகத்தாரின் துன்பங்கள் கெடவும், அசுரர்களின் சேனைகள் தோற்று ஓடவும், தேவர்கள் சிறையினின்று விடுபடவும், நாய், நரி, கழுகுகள், பறவைகளின் அரசனாகிய கருடன் மேலே வட்டமிடவும், போர்க்களத்தில் பூத கண சேனைகள் நின்று உலாவவும், செழுமை வாய்ந்த பிணிமுகம்* என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமான மயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே, புகழ் ஓங்கும் கந்த வேளே, அலைகள் ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில்** வீற்றிருக்கும் தம்பிரானே. 
* முருகனுக்குப் பிணிமுகம் என்னும் யானை வாகனமும் உண்டு.
** திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு அருகே வடக்கில் 5 மைலில் உள்ளது.

பாடல் 862 - திரிபுவனம்
ராகம் - ....; தாளம் -

தனதன தனதன தனதன தனதன     தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான

தனுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை     சத்திக் கச்சில தித்திக் கப்படும் ...... அன்புபேசித் 
தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை     தைக்கச் சர்க்கரை கைக்கப் பட்டன ...... தொண்டையூறல் 
கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை     கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி ...... கின்றதோதான் 
கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு     கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப ...... தம்பெறேனோ 
முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித     முத்தச் சித்ரத னத்துக் கிச்சித ...... அம்புராசி 
முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட     முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும ...... டங்கல்வீரா 
அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள்     அப்பர்க் கப்படி யொப்பித் தர்ச்சனை ...... கொண்டநாதா 
அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ     னத்துப் பொற்புறு சித்திச் சித்தர்கள் ...... தம்பிரானே.

வில்லைப் போன்ற நெற்றியில் வியர்வை உண்டாக, கண்கள் மயங்கிக் குழியிட்டுச் சுருங்க, வளையல்கள் சப்திக்க, சில இனிமையான காமப் பேச்சுக்களைப் பேசி, தழுவுகின்ற விலைமாதர்களின் அரும்பு போன்ற மார்பினை மார்போடு பொருந்த, சர்க்கரையும் கசக்கின்றது என்று சொல்லுமாறு இனிக்கும் வாயிதழ் ஊறலை கனவிலும் பருகும் புணர்ச்சி என்னும் வலையில் நான் வசப்பட்டு, உயிர் சிக்கிக் கொண்டு அழிந்து போவது தான் நன்றோ? நற் கதி பெறுவதற்கான நல்ல விதிப் பயன் இல்லாதவன் நான். அதற்கான புத்தியும் இல்லாதவன். உன்னுடைய இரண்டு கால் பட்டிகை பொருந்திய சிறிய வெட்சி பூக்கள் பூண்ட தாமரை போன்ற திருவடியைப் பெற மாட்டேனோ? கூர்மை மிகுந்துள்ள வஜ்ராயுதனாகிய இந்திரன் மகளான தேவயானையின் கஸ்தூரி அணிந்ததும், புளகம் கொண்டதும், முத்து மாலை புனைந்ததும், அழகானதுமான மார்பின் மீது ஆசை கொண்டவனே, கடல் ஓலமிடவும், வலிமையில் முதிர்ந்த அசுரர்களின் கூட்டம் போர்க்களத்திலிருந்து பின்னிட்டு ஓடவும், யாவுமே பொடியாகவும் வெட்டிக் குத்திய சிங்க வீரனே, ஞான அனுபவங்களைக் கொடுக்க வல்லதாய் உள்ள ஒப்பற்ற ஓங்காரப் பொருளை, தந்தையாகிய சிவபெருமானுக்கு அருமையான வகையில் உபதேசித்து, அவரால் பூஜிக்கப்பட்ட தலைவனே, உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் அழிந்தாலும் நிலைத்து நிற்கும் திரி புவனம்* என்னும் தலத்தில் அழகுடன் விளங்குபவனே, சித்திகளில் வல்ல சித்தர்களுக்கு எல்லாம் தம்பிரானே. 
* திரிபுவனம் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ளது.

பாடல் 863 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -

தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்     தந்ததனத் தானதனத் ...... தனதான

இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்     டின்பரசப் பாலமுதச் ...... சுவைமேவு 
எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்     றெந்தைநடித் தாடுமணிச் ...... சபையூடே 
கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்     கண்டுகளித் தேயமுதக் ...... கடல்மூழ்கிக் 
கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்     கண்டமதைக் காணஎனக் ...... கருள்வாயே 
திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்     டிந்தமெனக் காளமணித் ...... தவிலோசை 
சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்     செண்டுகுலைத் தாடுமணிக் ...... கதிர்வேலா 
குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்     கொண்டல்நிறத் தோன்மகளைத் ...... தரைமீதே 
கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்     கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.

சந்திர மண்டலத்தின்ஒளியைச் சென்று முட்டி அங்கு சிவந்து திரண்ட நடுத்தூண் போன்ற பாகத்தில் ஒளி பட்டு, இன்பச்சுவை தரும் பால் போல் அமுதமான இனிமையை அனுபவித்து, எண்குணங்கள்* கொண்ட இறைவன் நடனம் செய்யும் நிலவொளி வீசும் இடத்தைத் தரிசித்து, என் தந்தை நடராஜன் கூத்தாடும் அழகிய சபையின்கண், பெருமை மணம் கொண்ட ப்ரணவ எழுத்தோடு கூடிய ஞானம் என்ற இதழைக் கொண்ட வாசம்மிக்க மலரை அறிவால் அறிந்து ஆனந்தக் கடலில் மூழ்கி, கந்தனே, அந்த நறுமணத்தைப் போற்றிச் செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வளைத்துள்ள பதினான்கு உலகப் பகுதிகளையும் நான் காணும்படியாக எனக்கு நீ அருள்புரிவாயாக. திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட் டிந்தம் என்ற தாளத்துக்கு ஏற்ப எக்காளமும், மணியும், தவிலும் ஓசையிட, அசுரர்களின் மனம் திகைக்கும்படியாக ஏழு கடல்களும் பொங்க, சிங்கம் போன்ற சூரனின் மணிமுடியில் உள்ள பூச்செண்டைத் தள்ளி அழித்து விளையாடும் அழகிய ஒளி வீசும் வேலாயுதனே, மொய்க்கும் வண்டுகள் விரும்பும் துளசிமாலையை அணிந்தவனும், சிவந்த லக்ஷ்மியை மணந்தவனும், சந்தனக்கலவையைப் பூசுபவனும், மேகவண்ணனுமான திருமாலின் மகளாகிய வள்ளியை இந்த உலகில் கும்பிடும்பொருட்டு கைத்தாளம் போட்டுக்கொண்டு, அழகிய லக்ஷ்மியின் வடிவம்கொண்ட பாவை வள்ளியைப் புகழ்ந்து போற்றியவனே, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. 
* இறைவனின் எண் குணங்கள்:1. தன்வயத்தனாதல்,2. தூய உடம்பினன் ஆதல்,3. இயற்கை உணர்வினன் ஆதல்,4. முற்றும் உணர்தல்,5. இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல்,6. பேரருள் உடைமை,7. முடிவிலா ஆற்றல் உடைமை,8. வரம்பிலா இன்பம் உடைமை.

பாடல் 864 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -

தந்ததனத் தானதனத் தந்ததனத் தானதனத்     தந்ததனத் தானதனத் ...... தனதான

தும்பிமுகத் தானைபணைக் கொம்பதெனத் தாவிமயற்     றொந்தமெனப் பாயுமுலைக் ...... கனமாதர் 
தும்பிமலர்ச் சோலைமுகிற் கங்குலிருட் காரினிறத்     தொங்கல்மயிற் சாயலெனக் ...... குழல்மேவிச் 
செம்பொனுருக் கானமொழிச் சங்கினொளிக் காமநகைச்     செங்கயலைப் போலும்விழிக் ...... கணையாலே 
சிந்தைதகர்த் தாளுமிதச் சந்த்ரமுகப் பாவையர்தித்     திந்திமனுற் றாடுமவர்க் ...... குழல்வேனோ 
தம்பிவரச் சாதிதிருக் கொம்புவரக் கூடவனச்     சந்தமயிற் சாய்விலகிச் ...... சிறைபோகச் 
சண்டர்முடித் தூள்கள்படச் சிந்தியரக் கோர்கள்விழத்     தங்கநிறத் தாள்சிறையைத் ...... தவிர்மாயோன் 
கொம்புகுறிக் காளமடுத் திந்தமெனுற் றாடிநிரைக்     கொண்டுவளைத் தேமகிழச் ...... சுதனீண 
கொஞ்சுசுகப் பாவையிணைக் கொங்கைதனிற் றாவிமகிழ்க்     கும்பகொணத் தாறுமுகப் ...... பெருமாளே.

துதிக்கையை உடைய முகத்தைக் கொண்ட யானையின் பெருத்த தந்தம் போல வெளித்தோன்றி, காம இச்சைக்குச் சம்பந்தம் உடையது என மேலெழுகின்ற மார்பகங்களை உடைய பெருமை வாய்ந்த (விலை) மாதர்கள் வண்டுகளின் கூட்டம், மலர்ச் சோலை, மேகம், இரவின் இருட்டு இவற்றின் கரு நிறம் கொண்ட, தோகை மயிலின் அழகு இது என்று சொல்லும்படியான, கூந்தலை உடையவர்களாய், செம்பொன் இளகி விழுகின்றதோ என்னும்படியான பேச்சுடன், சங்கின் வெள் ஒளி போன்று, காமத்தைத் தூண்டும், பற்கள், சிவந்த கயல் மீனைப் போன்ற கண்களாகிய அம்புகள் கொண்டு, கண்டோர் மனதைச் சிதற வைத்து ஆளும், இன்பத்தைத் தரும் சந்திரனை ஒத்த முகத்தைக் கொண்ட, பதுமை போன்றவர்கள் தித்திம்திம் என்ற தாளங்களுக்கு நடனம் ஆடும் விலைமாதர்களுக்காக நான் வீணாக அலைச்சல் உறுவேனோ? தம்பியாகிய லக்ஷ்மணன் கூட வர, பண்பில் சிறந்த, கொம்பு போல மெலிந்த இடையை உடையவளும், லக்ஷ்மி போன்றவளுமான சீதை (கானகத்தில்) உடன் வர, (அவளைக் கண்டு) அழகிய மயில்கள் இவள் சாயலுக்கு நாம் ஈடாகோம் என்று ஒதுங்கி விலகி ஒரு புறம் போக, கடுங் கோபம் உடையவர்களான அசுரர்களின் முடிகள் தூளாகும்படி சிதறடித்து, அந்த அரக்கர்கள் மாண்டு விழ, பொன் நிறம் உடைய சீதையின் சிறையை நீக்கிய ராமனாகிய திருமால், புல்லாங்குழலை அடையாளமாகக் கொண்டவனும், விஷம் நிரம்பிய மடுவில் (காளிங்கன் மீது) திந்தம் என்று பொருந்தி நடனம் செய்வதவனும், பசுக் கூட்டங்களை ஒன்று கூட்டி வளைத்து மேய்த்து மகிழ்ந்த கண்ணனுமாகிய அந்த திருமால் பெற்ற கொஞ்சும் கிளி போன்ற பதுமையாகிய வள்ளியின் இரு மார்பகங்களைத் தழுவி மகிழ்பவனும், கும்பகோணத்தில் வீற்றிருப்பவனுமாகிய ஆறுமுகப் பெருமாளே. 

பாடல் 865 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -

தந்தனா தத்ததன தந்தனா தத்ததன     தந்தனா தத்ததன ...... தனதான

கெண்டைநே ரொத்தவிழி மங்கைமோ கக்கலவை     கெந்தவா சப்புழுகு ...... மணநாறுங் 
கிம்பு¡£ சக்களப கொங்கையா னைச்சிறிது     கிஞ்சுகா ணப்பெருகி ...... யடியேனும் 
மண்டிமோ சக்கலவி கொண்டுகா மித்துருகி     வண்டனா கப்புவியி ...... லுழலாமல் 
வந்துஞா னப்பொருளி லொன்றுபோ தித்துனது     மஞ்சுதா ளைத்தினமு ...... மருள்வாயே 
அண்டர்வா ழப்பிரபை சண்டமே ருக்கிரியி     ளைந்துவீ ழப்பொருத ...... கதிர்வேலா 
அஞ்சுவா யிற்பரனை நெஞ்சிலூ றித்தவசி     னன்புளா ரைச்சிறையி ...... டசுரோரைக் 
கொண்டுபோய் வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு     கொந்தியா டத்தலையை ...... யரிவோனே 
கொண்டல்சூ ழக்கழனி சங்குலா விப்பரவு     கும்பகோ ணத்திலுறை ...... பெருமாளே.

கெண்டை மீனுக்கு ஒப்பான கண்களை உடைய (விலை)மாதர்கள் மீதுள்ள ஆசைக் கலப்பு மிக்க நறுமணம் உள்ள புனுகின் நறுமணம் வீசும் (மார்பகம்), தந்தத்தில் பூண் அணிந்தது போல விளங்குவதும், பச்சைக் கற்பூரக் கலவை அணிந்ததுமான மார்பாகிய யானையை சிறிதளவு கண்டதும் ஆசை பெரியதாகி, அதனால் அடியேனும் விரைந்து சென்று வஞ்சகத்துக்கு இடமான புணர்ச்சி இன்பம் கொண்டு காம உணர்ச்சியில் மனம் உருகி, தீயோனாக பூமியில் நான் அலைச்சல் அடையாமல், (நீ) வந்து ஞானப் பொருளில் ஒன்றை உபதேசித்து, உனது அழகிய திருவடியை நாள் தோறும் எனக்குத் தந்தருளுக. தேவர்கள் வாழும்படி ஒளி வீசும் வலியதான மேரு மலை கலக்குண்டு விழும்படிப் போர் செய்த ஒளி வேலனே, ஐந்து பொறிகளாலும் சிவபெருமானை மனதில் ஊற வைத்து தவ நெறியில் அன்புள்ள தேவர்களைச் சிறையில் வைத்த அசுரர்களைக் கொண்டு போய், கூரிய சூலம் நெஞ்சில் ஏறப் பாயவும், கழுகுகள் கொத்தி விளையாடவும், தலையை அரிந்தவனே, மேகங்கள் சூழ்ந்த வயல்களில் சங்குகள் உலாவிப் பரந்திருக்கும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 866 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -

தந்தனா தத்தத் ...... தனதான

பஞ்சுசேர் நிர்த்தப் ...... பதமாதர் 
பங்கமார் தொக்கிற் ...... படியாமற் 
செஞ்சொல்சேர் சித்ரத் ...... தமிழாலுன் 
செம்பொனார் வத்தைப் ...... பெறுவேனோ 
பஞ்சபா ணத்தற் ...... பொருதேவர் 
பங்கில்வாழ் சத்திக் ...... குமரேசா 
குஞ்சா£ வெற்புத் ...... தனநேயா 
கும்பகோ ணத்திற் ...... பெருமாளே.

பஞ்சு போல் மென்மையான பாதங்களை, நடனம் ஆடும் பாதங்களை உடைய மாதர்களின் குற்றம் நிறைந்த உடம்புத் தோலில் நான் வீழ்ந்து விடாமல், தேர்ந்தெடுத்த சொற்கள் அமைந்துள்ள அழகிய தமிழால் பாடல்களைப் பாடி செம்பொன்னுக்கு நிகரான உனது அன்பைப் பெற மாட்டேனோ? ஐந்து மலர்ப் பாணங்களைக் கொண்ட மன்மதனைச் சுட்டெரித்த தேவராகிய சிவபிரானின் இடப்பாகத்தில் வாழ்கின்ற பராசக்தியின் குமரனாம் ஈசனே, ஐராவதம் என்னும் யானை வளர்த்த தேவயானையின் மலை போன்ற மார்பை நேசித்தவனே, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 867 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -

தானதன தந்த தானதன தந்த     தானதன தந்த ...... தனதான

மாலைதனில் வந்து வீதிதனில் நின்று     வாசமலர் சிந்து ...... குழல்கோதி 
வாரிருத னங்கள் பூணொடுகு லுங்க     மால்பெருகி நின்ற ...... மடவாரைச் 
சாலைவழி வந்து போமவர்க ணின்று     தாழ்குழல்கள் கண்டு ...... தடுமாறித் 
தாகமயல் கொண்டு மாலிருள ழுந்தி     சாலமிக நொந்து ...... தவியாமற் 
காலையிலெ ழுந்து னாமமெமொ ழுந்தி     காதலுமை மைந்த ...... எனவோதிக் 
காலமுமு ணர்ந்து ஞானவெளி கண்கள்     காண அரு ளென்று ...... பெறுவேனோ 
கோலமுட னன்று சூர்படையின் முன்பு     கோபமுட னின்ற ...... குமரேசா 
கோதையிரு பங்கின் மேவவளர் கும்ப     கோணநகர் வந்த ...... பெருமாளே.

மாலைப் பொழுதில் வந்து வீதியில் நின்று நறு மணம் வீசும் கூந்தலை விரித்துச் சிக்கெடுத்து, கச்சு அணிந்த இரண்டு மார்பகங்களும் (அணிந்துள்ள) ஆபரணங்களுடன் குலுங்க, காமம் பெருகி நின்ற விலைமாதர்களை, தெருவின் வழியே வந்து போகின்ற ஆடவர்கள் கண்டு, (அம்மாதர்களின்) தாழ்ந்து தொங்கும் கூந்தலைப் பார்த்து தடுமாறி காம மயக்கம் கொண்டு, ஆசை இருளில் அழுந்தி மிகமிக மனம் தவிப்பு உறாமல், காலையில் எழுந்து உனது திரு நாமங்களைக் கூறி, அன்பார்ந்த உமையின் குமரனே என்று ஓதித் துதித்து, (முக்காலங்களையும்) உணரும்படியான ஞானாகாச வெளியை நான் ஞானக் கண் கொண்டு காண, உன்னுடைய அருளை என்று பெறுவேனோ? போர்க் கோலத்துடன் அன்று சூரர்களுடைய சேனைகளின் முன்பு கோபமுடன் நின்ற குமரேசனே, (வள்ளி, தேவயானை ஆகிய) மாதர்கள் இருவரும் இரண்டு பக்கங்களிலும் விளங்க, (கல்வி, செல்வம்) வளரும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 868 - கும்பகோணம்
ராகம் - அ.¡வேரி தாளம் - ஆதி - எடுப்பு - 3/4 இடம்

தனத்த தந்தன தனதன தந்தத்     தனத்த தந்தன தனதன தந்தத்          தனத்த தந்தன தனதன தந்தத் ...... தனதான

கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்     துருத்த வெண்பலு மடைய விழுந்துட்          கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் ...... சுருள்நோயாற் 
கலக்க முண்டல மலமுற வெண்டிப்     பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்          கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக் ...... கொழுமேனி 
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்     பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்          தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச் ...... சடமாகி 
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்     பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்          டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற் ...... றிடுவேனோ 
புறத்த லம்பொடி படமிக வுங்கட்     டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்          புகட்ட ரங்கிய விரக துரங்கத் ...... திறல்வீரா 
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்     டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்          புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப் ...... பொரும்வேலா 
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்     சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்          தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக் ...... கிரிமேவிச் 
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்     பரிச்சு மந்திடு குமர கடம்பத்          திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் ...... பெருமாளே.

கருத்த மயிரும் வெளுத்துப் போய், எழுந்து வரிசையாக உருவு கொண்டிருந்த வெண்மை நிறமான பற்களும் எல்லாம் விழுந்து போய், உள்ளே கருத்துக்களுடன் விளங்கியிருந்த புத்தியும் மருட்சி அடைந்து, உடலைச் சுருட்டி மடக்கும் நோயால் கலக்கம் அடைந்து (இவ்வாழ்க்கை) போதும் போதும் என்னும் மன நிலை வர, நீர் வற்றிப் பழுத்த பழமாய், நிமிர்ந்து ஓங்கி நின்ற முதுகும் வளைவுற, கண்டத்தில் வந்து கோழையும், இருமலும் ஒதுங்கி நிற்க, கொழுத்திருந்த உடலானது மிகவும் வற்றிச் சுருங்கி, ஒரு தடியைக் கையில் நடுக்கத்துடன் பிடித்துக் கொள்ள, அவமானத்துக்கு இடமாகும்படி மனைவியும் என்னை இகழ, பக்கத்தில் அடுத்துள்ள பிள்ளைகளும் பழிக்க, அறிவில்லாத பொருள்போல் ஆகி, உடலெல்லாம் அழுக்கு சேர, வேதனை அடையும் உடலுக்கு இடமான சேறு போன்ற பிறவி என்கின்ற கடலில் அழிந்து போவது ஒழிந்து, பெருமை வாய்ந்த உனது திருவடிகளைச் சரணம் அடைந்து என்று நான் பொருந்தி இருப்பேனோ? வெளி இடங்கள் எல்லாம் பொடிபட்டு மிகவும் நிலை கலங்கவும், பெரும் கடலும் அதன் உட்புறமெல்லாம் குழம்பவும், (அசுரர்கள் மீது) புகவிட்டு அவர்களைத் தேய்த்துச் சிதைத்த சாமர்த்தியமுள்ள குதிரையாகிய மயிலேறும் வலிமை வாய்ந்த வீரனே. கிரெளஞ்ச மலையின் பரவி இருந்த வலிமை பிளவுபடும்படியாக வெற்றி அடைந்து, பகைவரைக் கொன்று அசுரர்களுடைய வலிய தலைகள் நெரிபட்டு அழியுமாறு நெருக்கி, உள்ளடங்கியுள்ள சதைகள், இரத்தம் எல்லாம் மேல் எழும்படியாக சண்டை செய்யும் வேலனே. சிறிய தண்டைகளை அணிந்தவனே, பிள்ளைகள் பயப்படும்படி கோபம் மிக்க சிங்கம் திரிகின்ற வள்ளி மலையில் தினைப்புனத்தில் விளங்கியிருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் மார்பகங்களை விரும்பி, அடைந்து, மகிழ்ச்சி கொண்ட மனத்தை உடைய முருகனே, மயில் என்னும் குதிரை சுமக்கின்ற குமரனே, கடம்பனே, கும்பகோணத்தில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே. 

பாடல் 869 - கும்பகோணம்
ராகம் - ....; தாளம் -

தனத்த தந்தன தானன தானன     தனத்த தந்தன தானன தானன          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்     விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய          செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு ...... முடலூடே 
தெளித்தி டும்பல சாதியும் வாதியும்     இரைத்தி டுங்குல மேசில கால்படர்          சினத்தி டும்பவ நோயென வேயிதை ...... யனைவோருங் 
கனைத்தி டுங்கலி காலமி தோவென     வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென          கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு ...... முடல்பேணிக் 
கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்     இருக்கி டுங்கலை யேபல வாசைகள்          கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு ...... மருள்வாயே 
தனத்த னந்தன தானன தானன     திமித்தி திந்திமி தீதக தோதக          தகுத்து துந்துமி தாரைவி ராணமொ ...... டடல்பேரி 
சமர்த்த மொன்றிய தானவர் சேனையை     வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக          சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள் ...... புரிவோனே 
தினைப்பு னந்தனி லேமய லாலொரு     மயிற்ப தந்தனி லேசர ணானென          திருப்பு யந்தரு மோகன மானினை ...... யணைவோனே 
சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய     தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர          திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.

பிறப்பு என்கின்ற பொய்ம்மையோடு கூத்து விளையாட்டு போன்றவை என்ன, ஆபாசம் என்ன, பிறப்பால் ஏற்படும் குடல், அந்தக் குடலைக் கிழித்துக்கொண்டு எழுவது போல மேல் நோக்கி எழுகின்ற ஆணவம் என்ன, அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை முதலியவை என்ன, தோன்றியுள்ள பல சாதிகள் என்ன, அதைக் குறித்து வாதிப்பவர் என்ன, கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன, சில சமயங்களில் துன்பம் கோபித்து எழுவது போல் பிறப்பு என்னும் நோய் என்றே இவ்வாழ்வை எல்லோரும் ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது என்று கூறுவது என்ன, (பிணத்தை) எடுங்கள், சுடு காட்டுக்குச் செல்லுங்கள் என்று கூறுவதும், (அங்கே போய் பாடையிலிருந்து) கவிழ்க்கப்பட்டதுமான உடல் சாம்பலாகிவிடும் இந்த உடம்பை நான் விரும்பிப் போற்றி, (அவ்வுடலை அலங்கரிக்கக்) கடுக்கன் முதலிய சில அணிகலன்களை அணிவது என்ன, உடைகள் அணிவது என்ன, 'ரிக்கு' வேத மந்திரங்களால் பெறப்படும் சாஸ்திர நூல்களைப் படிப்பது என்ன, இவை யாவற்றையும் ஒழிக்க வல்ல சிவ யோகத்தையும் சிவ ஞானத்தையும் எனக்கு அருள்வாயாக. தனத்த னந்தன தானன தானன திமித்தி திந்திமி தீதக தோதக (இதே ஒலியில்) தம்பட்டை, வீராணம் என்ற பெரிய பறை, வெற்றி முரசு இவைகளுடன் போருக்குக் கூடி வந்த அசுரர்களுடைய சேனைகளை வளைத்து, கொடிய கோபம் கொண்டு வேலாயுதத்தைச் செலுத்திய வலிமை உள்ளவனே, உனது திறமையை தெரிந்துள்ள சிறந்த முனிவர்களுக்கு அருள் செய்பவனே, தினைப் புனத்தில் காதல் இச்சையால் ஒப்பற்ற மயில் போன்ற வள்ளியின் பாதத்தில் நான் அடைக்கலம் என்று நீ கூற, தனது அழகிய புயங்களைத் உனக்குத் தந்த மோகனமான மானை ஒத்த வள்ளியை அணைபவனே, சிவனிடத்தினின்றும் தோன்றிய செவ்விய சுடரே, தவம் செய்வோர் பொருட்டுப் பரனாகி வெளித் தோன்றி வந்து அருளும் குழந்தையே, கருணைத் தெய்வமே, கும்பகோணத்தில் வாழும் முருகனே, தேவர்களின் பெருமாளே. 

பாடல் 870 - சோமீச்சுரம்
ராகம் - மாண்ட் தாளம் - சது.ரத்ருவம் - கண்டநடை - 35 - எடுப்பு - /4/4/4 0

தனனதன தனனதன தானான தானதன     தனனதன தனனதன தானான தானதன          தனனதன தனனதன தானான தானதன ...... தனதான

கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு     களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்          கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல ...... கனிவாயின் 
கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு     கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை          கலகலென மொழிபதற மாமோக காதலது ...... கரைகாணா 
தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை     யிருவருட லொருவரென நாணாது பாயல்மிசை          யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு ...... மிமையாதே 
இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்     இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்          இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை ...... யருள்வாயே 
உரியதவ நெறியில்நம நாராய ணாயவென     ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட          னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு ...... னுறுதூணில் 
உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை          உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு ...... முயர்வாக 
வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள     மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ          வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட ...... மதில்சூழும் 
மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக     மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்          மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் ...... பெருமாளே.

கரு நிறம் உள்ள கூந்தல் சரிந்து விழ, முகம் வியர்வை கொள்ள, நறு மணம் உள்ள கலவைச் சாந்து அணிந்த மார்புகள் புளகாங்கிதம் கொண்டு விம்மி எழ, செவ்வையான வேலை ஒத்த கண்களாகிய கயல் மீன்கள் (காதுகளோடு) சண்டையிடும் செயலை ஒக்க பெரிய போர் செய்ய, நறு மணம் உள்ள குமுத மலரை ஒத்த அதரம் எனப்படும் இதழினின்றும் தேனைப் போன்ற ஊறல் பாய, அது நிரம்பிக் கடல் போன்ற அமுதத்தை உதவ, இரண்டு தோள்களிலும் மாலை தாழ்ந்து புரள, கையில் உள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க, வாய்ப் பேச்சு பதற்றமுடன் வெளிவர, மிக்க காம ஆசை கரை கடந்து பெருகி, தீயில் பட்ட மெழுகின் நிலையை அடைந்து இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல் இணைந்து, கூச்சமின்றி படுக்கையில் இளம் பெண்களுடன் புணர்ச்சி இன்பத்தில் நான் மூழ்கி ஆழ்ந்து இருந்தாலும், கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் தூங்கினாலும், யாரோடு பேசினாலும், இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள் வரிசையையும், இரண்டு திருவடிகளையும், ஆறு முகங்களையும் நான் ஓதும்படியான ஞானத்தைத் தந்து அருள்வாயாக. சரியான தவ நெறியிலிருந்து, நமோ நாராயணாய என்று ஒப்பற்ற குழந்தையாகிய (பிரகலாதன்) சொன்னதும், எண்ணமுடியாத கோபத்துடன், உன்னுடைய கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே, அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து, இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, நகங்களைப் புதைத்து மார்பைக் கிழித்துப் பிளந்து, வெற்றிக் கொடி ஏற்றினவரும், கருடனுக்குத் தலைவருமான நெடிய திருமாலும், பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக, ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப, அழகுள்ள தோகையை உடைய இள மயில் நடுவில் நடனம் செய்ய, ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய மாலைபோல ஆபரணமாக விளங்க, மதில்கள் சூழ்ந்ததும், மருத நிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும்* அமைந்த (சோமீச்சுரம் என்னும்)** பதியில், மிகவும் விரும்பி இளமை வாய்ந்த ரிஷபத்தின் மேல் வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் கோயிலில் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் முருகனே, விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே. 
* இடைக்காலத்தில் கோயில்கள் மன்னர்களின் படைவீடாகப் பயன்பட்டன.
** சோமீச்சுரம் கும்பகோணத்தில் உள்ள சிவாலயங்களில் ஒன்று.

பாடல் 871 - கொட்டையூர்
ராகம் - ....; தாளம் -

தத்ததனத் தத்ததனத் தத்ததனத் தத்ததனத்     தத்ததனத் தத்ததனத் ...... தனதான

பட்டுமணிக் கச்சிருகக் கட்டியவிழ்த் துத்தரியப்     பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென் 
பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப்     பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே 
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்     சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத் 
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்     சுத்தியணைப் பத்தரில்வைத் ...... தருள்வாயே 
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்     துக்கமுறச் சொர்க்கமுறக் ...... கொடியாழார் 
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்     சுற்றுவனத் திற்சிறைவைத் ...... திடுதீரன் 
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்     குற்றமறச் சுற்றமறப் ...... பலதோளின் 
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்     கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் ...... பெருமாளே.

பட்டாலாகிய அழகிய கச்சை அழுத்தமாகக் கட்டியும் பிறகு அவிழ்த்தும், மேலாடை வரிசையை ஒட்டி முத்து மாலை நெருங்கிய, மலை போன்றவை என்று சொல்லத் தக்கனவும் தாமரையின் மொட்டுப் போன்றனவுமான கூரிய மார்பகங்ளை உடைய, கிளி போன்ற விலைமாதர்களின் கையில் அகப்பட்டு, அவர்களின் வசத்தில் சிக்கி, மனம் உருகி, கேடு தருவதும் வினையைப் பெருக்குவதுமான செயல்களில் ஈடுபட்டு, துஷ்டன் என்றும், துன்பத்துக்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நெறியினின்று வழுவியவன் என்றும், எங்கும் திரியும் பாவ எண்ணங்களை உடையவன் என்றும் அலைகின்ற என்னை, என் துயரங்களை நீக்கி, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், பரிசுத்தமான நல்ல பதவியை அணைந்துள்ள பக்தர் கூட்டத்தில் சேர்ப்பித்தும் அருள் புரிவாயாக. சுட்ட தங்கக் கட்டி போன்ற உடலை உடையவளும், செங்கமலத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமான அழகிய கொடி போன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து, ஆகாயத்தை அளாவும் வீணைக் கொடி விளங்கும் தூய்மை வாய்ந்த (புஷ்பக) ரதத்தில் அவளை எடுத்துச் சென்று, வேகமாக தெற்குத் திசையை அடைந்து அங்கு கோடியில் வளைந்தமைந்த (அசோக) வனத்தில் சிறைவைத்த (ராவணன்) என்னும் வீரனின் இறுமாப்பு அழிய, புற்றிலிருந்து சீறும் பாம்பின் கோபம் போன்ற சினம் அற்றுப்போக, குரல் ஒலியும் அடங்க, அவனது பழுதும் நீங்க, சுற்றத்தார் யாவரும் மாண்டு போக, அவனுக்கு இருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிகளும் அறுந்து போக, வீரம் காட்டிய வெற்றியாளராகிய ராமர் (திருமால்) பணிந்து நின்று பூஜித்த, கொட்டையூரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கொட்டையூர் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது.இங்கு திருமால் முருகனுக்கு பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாடல் 872 - சிவபுரம்
ராகம் - நீலாம்பரி தாளம் - அங்கதாளம் - 7 1/2 - எடுப்பு - 1 தள்ளி தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2

தனன தந்தன தானன தானன     தனன தந்தன தானன தானன          தனன தந்தன தானன தானன ...... தனதான

மனமெ னும்பொருள் வானறை கால்கனல்     புனலு டன்புவி கூடிய தோருடல்          வடிவு கொண்டதி லேபதி மூணெழு ...... வகையாலே 
வருசு கந்துய ராசையி லேயுழல்     மதியை வென்றுப ராபர ஞானநல்          வழிபெ றும்படி நாயடி யேனைநி ...... னருள்சேராய் 
செனனி சங்கரி ஆரணி நாரணி     விமலி யெண்குண பூரணி காரணி          சிவைப ரம்பரை யாகிய பார்வதி ...... அருள்பாலா 
சிறைபு குஞ்சுரர் மாதவர் மேல்பெற     அசுரர் தங்கிளை யானது வேரற          சிவனு கந்தருள் கூர்தரு வேல்விடு ...... முருகோனே 
கனக னங்கையி னாலறை தூணிடை     மனித சிங்கம தாய்வரை பார்திசை          கடல்க லங்கிட வேபொரு தேயுகிர் ...... முனையாலே 
கதற வென்றுடல் கீணவ னாருயி     ருதிர முஞ்சித றாதமு தாயுணு          கமல வுந்திய னாகிய மால்திரு ...... மருகோனே 
தினக ரன்சிலை வேளருள் மாதவர்     சுரர்க ளிந்திர னாருர காதிபர்          திசைமு கன்செழு மாமறை யோர்புக ...... ழழகோனே 
திரும டந்தையர் நாலிரு வோர்நிறை     அகமொ டம்பொனி னாலய நீடிய          சிவபு ரந்தனில் வாழ்குரு நாயக ...... பெருமாளே.

மனம் என்ற ஒரு பொருளுடன் ஆகாயம், வீசும் காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகிய பஞ்சபூ தங்களும் ஒரு தேகம் என்ற உருவத்தைக் கொண்டு அதில் (13ஐ 7 ஆல் பெருக்கிய) 91 தத்துவ மாற்றங்களாலே(*1) ஏற்படும் இன்பம், துன்பம், ஆசை இவற்றிலே உழல்கின்ற என் புத்தியை நான் ஜெயித்து, மேலான ஞானமென்னும் நல்ல நெறியை அடையும்படியாக நாய் ஒத்த இந்த அடியேனுக்கு உன் திருவருளைச் சேர்ப்பாயாக. உலகங்களைப் பிறப்பித்தவள், சங்கரி, வேத முதல்வி, நாராயணி, குற்றமற்றவள், எண்குணங்களும்(*2) நிறைந்தவள், காரணமானவள், சிவை, பராபரை ஆகிய பார்வதி அருளிய குழந்தாய், சூரனின் சிறையில் இருந்த தேவர்கள், முனிவர்கள் விடுதலை பெற, அசுரக்கூட்டமெல்லாம் வேரற்று அழிய, சிவபிரான் மகிழ்ந்து உனக்குத் தந்த கூரிய வேலைச் செலுத்திய முருகப் பெருமானே, இரணியன் தன் உள்ளங்கையால் அறைந்த தூணிலிருந்து நரசிம்ம உருவத்தில் மலை, பூமி, திசைகள், கடல் இவையாவும் கலங்கிடத் தோன்றி, இரணியனுடன் போர்செய்து தன் நகத்தின் நுனியாலே, அவனைக் கதறி அழும்படி வென்று, அவனது அரிய உயிரை ரத்தம் சிந்தாவண்ணம் அமுதுபோல் அருந்திய தாமரை ஒத்த வயிறுடைய திருமாலின் அழகிய மருமகனே, சூரியன், கரும்புவில் மன்மதன், அருள்மிகு முனிவர்கள், தேவர்கள், இந்திரர்கள், நாகலோகத்து அதிபர்கள், பிரம்மா, செம்மை பொருந்திய சிறந்த அந்தணர்கள் ஆகியோர் போற்றிப் புகழ்கின்ற அழகனே, அஷ்டலட்சுமிகள்(*3) நிறைந்த வீடுகளும், சொக்கத் தங்கத்தால் ஆன கோயிலும் சிறப்பாக விளங்கும் சிவபுரம்(*4) என்ற தலத்தில் வாழும் குருமூர்த்திப் பெருமாளே. 
(*1) 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. 
(*2) எண் குணங்கள் பின்வருமாறு:தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவிலா ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை.
(*3) அஷ்டலட்சுமிகள் பின்வருமாறு:தன, தான்ய, ¨தரிய, வீர, வித்தியா, கீர்த்தி, விஜய, ராஜ்ய லட்சுமி.
(*4) சிவபுரம் கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் 3 மைல் தொலைவில் உள்ளது.

பாடல் 873 - திருநாகேச்சுரம்
ராகம் - ரேவதி தாளம் - அங்கதாளம் - 8 1/2 தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி தகதிமி-4

தானான தானத் தனத்த தத்தன     தானான தானத் தனத்த தத்தன          தானான தானத் தனத்த தத்தன ...... தனதான

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்     மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்          ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம் 
ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்     நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்          ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங் 
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்     ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்          கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை 
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்     ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்          கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே 
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி     பேரார வாரச் சமுத்தி ரத்தினில்          மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை 
வேரோடு வீழத் தறித்த டுக்கிய     போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்          வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா 
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்     மாயாவி காரத் தியக்க றுத்தருள்          ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான 
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி     யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்          நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.

ஆசார ஒழுக்கங்களில் குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துஷ்டர்கள், தாய் தந்தையரை இழிவு செய்யும் துஷ்டர்கள், பசுவின் மாமிசத்துக்காக அதைக் கொல்லும் துஷ்டர்கள், பிறர் மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த துஷ்டர்கள், பலவித தந்திரச் செயல்களைச் செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள், வெறியேற்றும் கள்ளைக் குடித்த துஷ்டர்கள், தனியாய் அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி எடுத்த துஷ்டர்கள், ஊரில் எல்லாரின் ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துஷ்டர்கள், ஆரவாரத்துடன் வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும் துஷ்டர்கள், குருவின் சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துஷ்டர்கள், மற்றவர்க்குக் கொடுக்காமல் பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள், இந்த துஷ்டர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள். பெரிய மலை போன்ற அலைகளை வீசி எடுத்து எறிகின்ற, மிக்க ஓசையை உடைய கடலின் மத்தியில் திரும்பிவரமுடியாதபடி ஓடித் துரத்தி, பயம் கொண்ட ஒரு தனி மாமரமாக ஒளிந்த சூரனை வேருடன் விழும்படியாக வெட்டிக் குவித்த போரினைச் செய்த திறமைவாய்ந்ததும், உன் திருக்கரத்தில் உள்ளதுமான வேலாயுதனே, உண்மை வாய்ந்த உனது திருப்புகழை யான் ஓதி நீ பெற்றுக் கொண்ட வயலூர்ப்பதியின் இறைவா, கேடு முதலிய தீயன விளைவிக்கும் ப்ராரப்த கர்மம் (பழவினை காரணமாக இப்பிறப்பில் தொடரும் துக்கம்) மிகுந்தவர்களுடைய மாயை சம்பந்தமான துயரம் தரும் மயக்கத்தை ஒழித்து அருளும் ஞான உபதேசம் செய்த கீர்த்தியை உடைய சற்குரு வடிவமான நாதனே என்று முன்னொரு காலத்தில் உன் தந்தை துதிசெய்ய உலகோருக்கு ஒரு ஆதாரச் சாதனம் (ப்ரமாணம்) ஆகும் பொருட்டு, ப்ரணவப் பொருள் முழுவதும் நன்றாக நீ உபதேசித்து அருளி, நாகேசன்* என்ற திருநாமத்தைக் கொண்ட உன் தந்தை சிவபெருமானால் மெச்சப் பெற்ற பெருமாளே. 
* கும்பகோணத்துக்குக் கிழக்கில் 3 மைலில் உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள சிவபெருமானின் பெயர் நாகேசர்.

பாடல் 874 - கூந்தலு¡ர்
ராகம் - லதாங்கி தாளம் - அங்கதாளம் - 7 1/2 தகதிமி தகதிமி-4, தகிட-1 1/2, தகதிமி-2

தனதன தனதன தாந்த தானன     தனதன தனதன தாந்த தானன          தனதன தனதன தாந்த தானன ...... தனதான

தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை     வெறியனை நிறைபொறை வேண்டி டாமத          சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை ...... மிகுகேள்வி 
தவநெறி தனைவிடு தாண்டு காலியை     யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்          சமடனை வலியஅ சாங்க மாகிய ...... தமியேனை 
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்     மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்          விழிவலை மகளிரொ டாங்கு கூடிய ...... வினையேனை 
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு     மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை          விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ ...... அருள்வாயே 
ஒருபது சிரமிசை போந்த ராவண     னிருபது புயமுட னேந்து மேதியு          மொருகணை தனிலற வாங்கு மாயவன் ...... மருகோனே 
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின     ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்          உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி ...... லுறைவோனே 
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு     களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்          குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ ...... முனிவோனே 
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு     மிடறினி லிருவென ஏந்து மீசுரர்          குருபர னெனவரு கூந்த லூருறை ...... பெருமாளே.

இந்தப் புவியில் பல தீய வழிகளில் ஈடுபடும் மூடனான என்னை, குடிவெறி கொண்ட பித்தனை, நற்குணமும், பொறுமையும் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இல்லாத, செருக்கு மிகுந்த அறிவற்றவனை, ஒருவித பெருமையும் இல்லாத தாழ்நிலையில் இருக்கும் வீணனை, நிரம்பின கேள்வி, தவ வழி இவற்றை விட்டுத் தாண்டி கண்ட வழியில் திரிகின்ற கெட்டவனை, பயனற்ற புத்தியால் கேடுகளும் தீமைகளும் செய்யும் குணம்கெட்டவனை, வேண்டுமென்றே இனநீக்கம் செய்யப்பட்ட கதியற்றவனை, நறுமணம் கமழும் கூந்தலை உடையவர், பிடிவாதம் உள்ள பெண்கள், சந்திரனை ஒத்த முகத்தை உடைய மாதர், விருப்பத்தைத் தூண்டும் காம மயக்கியர், கண் என்னும் வலையை வீசும் மகளிர் - இத்தகையோருடன் அவ்வப்போது கூடிய தொழிலை உடையவனாகிய என்னை, நிரம்ப மலர்கள் கொண்டு விரும்பிப் பூஜித்தாகிலும், ஒரு பூவோ ஓர் இலையோ கொண்டாகிலும் நான் உன்னை நினைத்து, நல்ல வகையில் அன்போடு கீழே விழுந்து உனது திருவடிகளைத் தொழுமாறு அருள்வாயாக. பத்துத் தலைகளோடு போர் செய்ய வந்த ராவணனுடைய இருபது தோள்களும், ஏந்திய வாள் ஆயுதமும் ஒரே பாணத்தால் அற்று விழும்படி அம்பு செலுத்திய ராமனாம் மாயத் திருமாலின் மருகனே, உன்னுடைய அடியார்களின் புகழை ஆராய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும், முநிவர்களும், கொடைகள் செய்து பாலிப்பவர்களும், உயர்ந்த நற்கதியைப் பெற, அருள் விளங்கும் அழகிய மயிலில் அமர்ந்திருப்பவனே, ஒலிக்கின்ற தண்டையணிந்த உன்னடியைத் தாழ்மையோடு கும்பிடாமல், போர்க்களத்தில் தர்ம நெறியைக் கைவிட்ட அசுரர்களின் குல முழுமையும் யாவருமாக மாண்டு போய்ப் பொடியாகும்படிக் கோபித்தவனே, ஆலகால விஷத்தைக் கொடு என்று கூறி வாங்கியே, அழகிய கழுத்திலேயே இரு என்று அதை கண்டத்தில் தாங்கும் சிவபிரானுக்கு சிவ பெருமானின் குருமூர்த்தியாக வந்தவனே, கூந்தலூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* கூந்தலூர் கும்பகோணத்துக்கு தென் கிழக்கே 7 மைலில், அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது.

பாடல் 875 - திருச்சத்திமுத்தம்
ராகம் - ....; தாளம் -

தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன     தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன          தனதனன தத்தத்த தத்தத்த தத்ததன ...... தனதான

கடகரிம ருப்பிற்க திர்த்துப்ர மிக்கமிக     வுரமிடநெ ருக்கிப்பி டித்துப்பு டைத்துவளர்          கனககுட மொத்துக்க னத்துப்பெ ருத்தமணி ...... யணியாலே 
கதிர்திகழு செப்பைக்க திக்கப்ப தித்துமகிழ்     கமலமுகை பட்சத்தி ருத்திப்பொ ருத்துமுலை          கமழ்விரைகொள் செச்சைக்க லப்பைப்பொ தித்ததனை ...... விலகாது 
கடுவைவடு வைப்பற்றி விற்சிக்க வைத்தசெய     லெனநிறமி யற்றிக்கு யிற்றிப்பு ரட்டிவரு          கயல்விழிவெ டுட்டித்து ரத்திச்செ விக்குழையின் ...... மிசைதாவுங் 
களமதன னுக்குச்ச யத்தைப்ப டைத்துலவு     கடுமொழிப யிற்றக்க ளைத்துக்கொ டிச்சியர்கள்          கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ ...... தொழியேனோ 
அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு     மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்          அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு ...... மழகோனே 
அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி     லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு          மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு ...... மதிசூரா 
விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்     உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக          விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு ...... மொருமாயோன் 
விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை     நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய          விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு ...... பெருமாளே.

மத யானையின் தந்தம் போல ஒளியுடன் வெளிப்பட்டு, யாவரும் மிகவும் வியக்கத்தக்க வகையில் (வேசையரின்) மார்பிடம் முழுவதும் நெருக்கமாக அடைத்துப் பருத்து வளர்ந்திருக்கும் பொன் குடம் போன்றதும், பெரிதாயுள்ள ரத்தின ஆபரணத்தின் கனம் கொண்டதும், ஒளி விளங்கும் சிமிழ் போல நன்றாகத் தோன்றும்படி இன்பம் கொடுக்கும் தாமரை மொட்டுப் போன்றதும், அன்புடன் பாராட்டப்பட்டு அமைந்துள்ள மார்பகத்தை நறு மணம் கொண்ட சிவந்த நிறமான கலவைச் சாந்து, நிரம்பியுள்ள தனத்தை விட்டு நீங்காது. விஷத்தையும், மாவடுவையும் போல் அமைந்து, புருவமான வில்லின் கீழ்ச் சிக்க வைத்த செயலுக்கு ஒப்ப நின்று, ஒளி வீசிப் புரளுவதாய் மீன் போன்ற கண்களை விரட்டியும், ஓட்டியும் காதில் உள்ள குண்டலங்களின் மீது பாய, கள்ளத்தனமான மன்மதனுக்கு வெற்றியைக் கொடுத்து உலவுகின்ற, கடுமையான (விஷம் போன்ற) சொற்களைப் பேச (அதனால்) சோர்ந்து, அந்தக் கொடி போன்ற இடை உடைய விலைமாதர் வலையில் சிக்குண்டு அழுத்தப் படுவதால் நான் துன்புறுவது நீங்க மாட்டேனோ? சாம்பல் பூசுகின்ற, (சூரியன் சந்திரன், அக்கினி என்ற) மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு பிரணவப் பொருளைச் சொல்லி அரிய மறைப் பொருளை உபதேசித்து, பெருத்த மயில் வாகனத்தில் ஏறி முன்பு நடத்தி உலகத்தை ஒரு கணப்பொழுதினில் சுற்றி வலம் வந்த அழகனே, வஞ்சகம் மிக்க மொழிகளைப் பேசி, பொருட் செல்வம் நிரம்ப உள்ளவர்களாய் உலகிலே எளியவர்களைப் பயமுறுத்தி ஜெகத்தில் தாம்மட்டுமே பிழைக்க எண்ணுகின்ற முட்டாள்களின் மனதைக் கலக்கி வெட்டிப் பிளந்து அவர்களை நெருக்கும் அதி சூரனே, நச்சை உடைய (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் உறங்கும் கருணா மூர்த்தியான திருமால், யானை (கஜேந்திரன்) கூச்சலிட்டதை காதில் நன்கு ஏற்றுக் கொண்டு வெகு வேகமாக கருடன் மேல் சிறக்க அன்புடன் வந்த ஒப்பற்ற திருமால் விரும்பும் மருகனே, மாமரமாக கடலில் வந்த சூரனை நெறுநெறு என்று வெட்டிய வலிமையான வேலாயுதம் என்ற ஒப்பற்ற படையை உடையவனே, சிவபெருமான் வீற்றிருக்கும் திருச்சத்திமுத்தம்* என்னும் தலத்தில் விளங்கும் பெருமாளே. 
* திருச்சத்திமுத்தம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தலம்.

பாடல் 876 - திருவலஞ்சுழி
ராகம் - ....; தாளம் -

தனன தந்தன தானா தானன     தனன தந்தன தானா தானன          தனன தந்தன தானா தானன ...... தனதான

மகர குண்டல மீதே மோதுவ     வருண பங்கய மோபூ வோடையில்          மருவு செங்கழு நீரோ நீவிடு ...... வடிவேலோ 
மதன்வி டுங்கணை யோவா ளோசில     கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை          மறலி யென்பவ னோமா னோமது ...... நுகர்கீத 
முகர வண்டின மோவான் மேலெழு     நிலவ ருந்துபு ளோமா தேவருண்          முதிய வெங்கடு வோதே மாவடு ...... வகிரோபார் 
முடிவெ னுங்கட லோயா தோவென     வுலவு கண்கொடு நேரே சூறைகொள்          முறைய றிந்தப சாசே போல்பவ ...... ருறவாமோ 
நிகரில் வஞ்சக மா¡£ சாதிகள்     தசமு கன்படை கோடா கோடிய          நிருத ரும்பட வோரே வேவியெ ...... யடுபோர்செய் 
நெடிய னங்கனு மானோ டேயெழு     பதுவெ ளங்கவி சேனா சேவித          நிருப னம்பரர் கோமான் ராகவன் ...... மருகோனே 
சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்     பிரபை யொன்றுபி ராசா தாதிகள்          சிவச டங்கமொ டீசா னாதிகள் ...... சிவமோனர் 
தெளியு மந்த்ரக லாபா யோகிகள்     அயல்வி ளங்குசு வாமீ காமரு          திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே.

(முதல் 11 வரிகள் வேசையரின் கண்களை வர்ணிக்கின்றன). மகர மீன் போலச் செய்யப்பட்ட குண்டலத்தின் மேல் வந்து தாக்குவனவாய் தாமரைக் குளத்தில் உள்ள சிவந்த தாமரையோ? பொருந்தி உள்ள செங்கழு நீர்ப் பூவோ? நீ செலுத்தும் கூரிய வேலோ? மன்மதன் செலுத்தும் பாணமோ? வாள் தானோ? சில கயல் மீன்களோ, கெண்டை மீன்களோ, சேல் மீன்களோ? கொலைத் தொழில் புரியும் யமன் எனப்பட்டவனோ? மானோ? தேன் உண்டு இசை ஒலிக்கும் வண்டின் கூட்டமோ? ஆகாயத்தில் எழுந்து நிலவை உண்ணும் சந்திரமுகிப் புள்ளோ? சிவ பெருமான் உண்ட பழைய கொடிய ஆலகால விஷமோ? தித்திக்கும் மாம்பழ வடுவின் பிளவோ? உலகின் முடியும் பொழுது எழும் ஊழிக் கடலோ? எதுவோ என்று சொல்லும்படி உலவுகின்ற கண்களைக் கொண்டு நேரே உயிரைக் கொள்ளை அடிக்கும் வழியைத் தெரிந்துள்ள, பிசாசைப் போன்ற விலைமாதர்களின் உறவு நல்லதோ? வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மா¡£சன் முதலிய அரக்கர்கள், ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும் அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும், அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப் பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே, மேலான தேவர்கள், பகீரதன்* முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள் பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே, அழகிய நகராகிய திருவலஞ்சுழியில்** வாழ்பவனே, தேவர்களின் பெருமாளே. 
* பகீரதன் சூரிய வம்சத்து அரசன். கங்கையை உலகிற்கு வரவழைத்தவன். வல்லக்கோட்டையில் முருகனைப் பூஜித்தவன்.
** திருவலஞ்சுழி கும்பகோணத்துக்கு அருகே உள்ளது.

பாடல் 877 - திருப்பழையாறை
ராகம் -.....; தாளம் -

தானத்தத் தானன தானன     தானத்தத் தானன தானன          தானத்தத் தானன தானன ...... தனதான

தோடுற்றுக் காதள வோடிய     வேலுக்குத் தானிக ராயெழு          சூதத்திற் காமனி ராசத ...... விழியாலே 
சோடுற்றத் தாமரை மாமுகை     போலக்கற் பூரம ளாவிய          தோல்முத்துக் கோடென வீறிய ...... முலைமானார் 
கூடச்சிக் காயவ ரூழிய     மேபற்றிக் காதலி னோடிய          கூளச்சித் தாளனை மூளனை ...... வினையேனைக் 
கோபித்துத் தாயென நீயொரு     போதத்தைப் பேசவ தாலருள்          கோடித்துத் தானடி யேனடி ...... பெறவேணும் 
வேடிக்கைக் காரவு தாரகு     ணாபத்மத் தாரணி காரண          வீரச்சுத் தாமகு டாசமர் ...... அடுதீரா 
வேலைக்கட் டாணிம காரத     சூரர்க்குச் சூரனை வேல்விடு          வேழத்திற் சீரரு ளூறிய ...... இளையோனே 
ஆடத்தக் காருமை பாதியர்     வேதப்பொற் கோவண வாடையர்          ஆலித்துத் தானரு ளூறிய ...... முருகோனே 
ஆடப்பொற் கோபுர மேவிய     ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை          யாறைப்பொற் கோயிலின் மேவிய ...... பெருமாளே.

தோடுகளை அணிந்த காது வரைக்கும் ஓடி வேலுக்கு ஒப்பானது என்று சொல்லும்படி விளங்கி, வஞ்சனை மிகுந்து, மன்மதனின் ரஜோ குணம் படைத்த கண்களும், இரட்டையாகப் பொருந்தி தாமரையின் அழகிய மொட்டுப் போன்ற, பச்சைக் கற்பூரம் சேர்ந்த கலவையைப் பூசிய தோலும், முத்து மாலையும் அணிந்த, யானையின் தந்தம் போல் மேலிட்டெழுந்த மார்பகங்களும் உடைய விலைமாதர்களின் வசத்தில் அகப்பட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்து ஆசையுடன் காலம் கழிக்கும் குப்பை போல் பயன் இல்லாதவனாகிய என்னை, சிற்றேவல் செய்யும் என்னை, சிற்றறிவுடன் செயல் படும் என்னை, வினைக்கு ஈடான என்னை, நீ கண்டித்து, தாய் போல நீ ஒப்பற்றதான ஒரு ஞானத்தை உபதேசிக்க, அதனால் ஞானம் பெற்றமையால் உனது திருவருளைப் புகழ்ந்து உன்னைப் பிரார்த்திக்க அடியேன் உன் திருவடியைப் பெற வேண்டுகிறேன். விநோதமான திருவிளையாடல்களைச் செய்பவனே, தாராள குணம் உடையவனே, தாமரை மலர் மாலை அணியும் மூலப்பொருளே, வீரனே, பரிசுத்தமானவனே, மகுடம் தரித்தவனே, போரில் (பகைவரைக்) கொல்லும் தீரனே, செய்யும் தொழிலில் சமர்த்தனே, ரதம் ஓட்டுவதில் வல்ல சூரர்களுக்கு எல்லாம் மேலான சூரன் மீது வேலைச் செலுத்துபவனே, ஐராவதம் என்னும் யானையின் மீது சீரான திருவருள் ஊறிய இளையவனே, கூத்தாட வல்லவர், உமா தேவியைப் பாகத்தில் கொண்டவர், வேதத்தையே அழகிய கோவணமாகக் கொண்டவர் ஆகிய சிவபிரான் களித்து மகிழ்ச்சி பூண்டு திருவருள் சுரந்த குழந்தை முருகனே, பொன்னாலாகிய கோபுரத்தைக் கொண்டதும், கண்ணாடிக்கு ஒப்பான மதில் சூழ்ந்த பழையாறை என்னும் தலத்தின் அழகிய கோவிலில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பழையாறை கும்பகோணத்துக்கு தென்மேற்கே 5 மைலில் உள்ளது.

பாடல் 878 - திருச்சக்கிரப்பள்ளி
ராகம் - ....; தாளம் -

தத்த தத்தன தத்தன தத்தன     தத்த தத்தன தத்தன தத்தன          தத்த தத்தன தத்தன தத்தன ...... தனதான

திட்டெ னப்பல செப்பைய டிப்பன     பொற்கு டத்தையு டைப்பன வுத்தர          திக்கி னிற்பெரு வெற்பைவி டுப்பன ...... வதின்மேலே 
செப்ப வத்திம ருப்பையொ டிப்பன     புற்பு தத்தையி மைப்பில ழிப்பன          செய்த்த லைக்கம லத்தைய லைப்பன ...... திறமேய 
புட்ட னைக்கக னத்தில்வி டுப்பன     சித்த முற்பொர விட்டுமு றிப்பன          புட்ப விக்கன்மு டிக்குறி யுய்ப்பன ...... இளநீரைப் 
புக்கு டைப்பன முத்திரை யிட்டத     னத்தை விற்பவர் பொய்க்கல விக்குழல்          புத்தி யுற்றமை யற்றிட எப்பொழு ...... தருள்வாயே 
துட்ட நிக்ரக சத்தித ரப்ரப     லப்ர சித்தச மர்த்தத மிழ்த்ரய          துட்க ரக்கவி தைப்புக லிக்கர ...... செனுநாமச் 
சொற்க நிற்கசொ லட்சண தட்சண     குத்த ரத்தில கத்திய னுக்கருள்          சொற்கு ருத்வம கத்துவ சத்வஷண் ...... முகநாத 
தட்ட றச்சமை யத்தைவ ளர்ப்பவ     ளத்தன் முற்புகழ் செப்பவ நுக்ரக          சத்து வத்தைய ளித்திடு செய்ப்பதி ...... மயிலேறி 
சட்ப தத்திரள் மொய்த்தம ணப்பொழில்     மிக்க ரத்நம திற்புடை சுற்றிய          சக்கி ரப்பளி முக்கணர் பெற்றருள் ...... பெருமாளே.

(பெண்களின் மார்பகங்களுக்குச் செப்புக் குடத்தை உவமை கூறலாம் என்றால்) திட் திட் என்று செப்புத் தட்டை அடிபடும்படிச் செய்வன. (பொற் குடத்தை உவமை கூறலாம் என்றால்) பொன்னாலாகிய குடத்தை உடைபடும்படி செய்வன. (மேரு மலையை உவமை கூறலாம் என்றால்) வடக்கு திசையில் பெருத்த மேரு மலையும் தள்ளி விடப்பட்டது. அதற்கு உவமை தேடிச் சொல்ல யானையின் தந்தமும் உண்டு என்றால் யானையின் தந்தத்தையும் அம் மார்பகங்கள் ஒடித்துத் தள்ளுவன. நீர்க் குமிழியை (ஒப்பிடலாம் என்றால்) அவற்றை இமைப் பொழுதினில் அழியும்படிச் செய்வன. வயல்களில் உள்ள தாமரை மொட்டை (உவமை கூறலாம் என்றால்) தாமரை மொட்டை நீரில் அலையச் செய்வன. வல்லமை உடைய சக்ரவாகப் பறவையை (உவமை கூறலாம் என்றால்) அந்தப் பக்ஷியை ஆகாயத்தில் பறக்க விடுப்பன. (ஆடவர்களின்) உள்ளத்தைத் தன்னோடு சண்டை செய்ய விட்டு அதை அழியச் செய்வன. புஷ்ப பாணத்தையும் கரும்பு வில்லையும் கொண்ட மன்மதனின் கி¡£டத்தை (உவமிக்கலாம் என்றால்), (அந்த முடியையும்) குறி வைத்துத் தள்ளுவன. இளநீரை (உவமிக்கலாம் என்றால்) அதுவும் எடுத்து உடைக்கப் படுவதாகும். (இங்ஙனம் எதுவும் நமக்கு உவமையாக அமையாது என்ற உண்மையை) முத்திரை இட்டு விளக்கும் மார்பகங்களை விற்கும் விலைமாதர்களின் நிலைத்திராத புணர்ச்சி இன்பத்தை வேண்டித் திரியும் புத்தி எனக்குப் பொருந்தி உள்ளதே. அது விலகி ஒழிந்து, நீ எப்போது அருள் புரிவாய்? துஷ்டர்களை அடக்கும் சக்தி வேலைத் தரிப்பவனே, புகழும் கீர்த்தியும் கொண்ட வல்லமை வாய்ந்தவனே, முத்தமிழில் முடிப்பதற்கு அருமையான (தேவாரப்) பாடல்களை (திருஞான சம்பந்தராக வந்து) சீகாழிக்கு அரசு என்னும் புகழ் பெற்று, (அப்பாடல்களைக் கற்றவர்களுக்கு) வீட்டுப் பேறு நிலைத்து நிற்கும்படி சொன்ன அழகை உடையவனே, தெற்கு திசையில் உள்ள பூமியாகிய பொதிகை மலையில் அகத்திய முனிவருக்கு மேன்மையாகிய வகையில் உபதேச சொல்லைச் சொன்ன குரு மூர்த்தியாகிய பெருமையை உடைய சத்துவ குணம் கொண்ட ஷண்முக நாதனே, குற்றமில்லாத வகையில் சைவ சமயத்தை வளர்ப்பவளாகிய பார்வதி, சிவபெருமான் ஆகியோரின் சந்நிதியில் உனது திருப்புகழைப் பாடும்படியான திருவருள் வலிமையை எனக்கு அருளிய வயலூரில் மயில் வாகனனாய் விளங்குபவனே, ஆறு கால்கள் கொண்ட வண்டுகளின் கூட்டம் மொய்க்கின்ற நறு மணச் சோலைகள் மிகுந்த ரத்தின மயமான மதில் பக்கங்களில் சுற்றியுள்ள திருச்சக்கிரப்பள்ளி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் முக்கண்ணராகிய சிவபெருமான் பெற்றருளிய பெருமாளே. 
இப்பாடலின் முதல் 10 வரிகள் பெண்களின் மார்பகங்களை உவமைகளைக் கூறி இன்ன காரணத்தால் அவை இணையாக மாட்டா என்று விளக்குகின்றன. இதே முறையைப் பின் வரும் திருப்புகழ்ப் பாடல்களிலும் காணலாம்.408 - கமலமொட்டை - (திருவருணை),563 - குடத்தைத்தகர் - (திருக்கற்குடி). 
* திருச்சக்கிரப்பள்ளி தஞ்சாவூருக்கு வடகிழக்கே 11 மைலில் ஐயம்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது.

பாடல் 879 - திருக்குரங்காடுதுறை
ராகம் - பாகே. தாளம் - தி.ரஏகம் - 3

தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்     தனந்தான தனத்தனனத் ...... தனதான

அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்     கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும் 
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத்     தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ் 
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்     சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந் 
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்     தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ 
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்     டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும் 
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்     திருங்கான நடக்குமவற் ...... கினியோனே 
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்     கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா 
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்     குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே.

அலங்காரமான கி¡£டமும், ஒளி நிறைந்த ஆறு திருமுகங்களில் அழகுடன் அசைந்தாடும் குண்டலங்களும், கவசமும், திரண்ட புஜங்களின் மீது போதுமானவரை சூடிய பூமாலைகள், ரத்தின மாலைகள் வரிசையாகப் புரண்டு ஆடவும், திருக்கரங்களில் அணிந்துள்ள மோதிரங்களும், புனைந்துள்ள வீரக் கடகமும், ஒளி வீசும் வேலும், சிலம்பும், அழகிய வேத ஒலியைச் செய்யும் சலங்கையும், இவைகள் ஓசை மிகுந்த ஒலி செய்ய, செந்நிறமாய், மணம்வீசும் மலர்களைப் புனைந்துள்ள திருவடிகள் திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன என்ற தாளத்துக்கு நாள்தோறும் நீ நடனம் செய்யும் அழகையும் - இவை எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லித் துதிக்க மாட்டேனோ? இலங்கைக்கு அரசனான ராவணனின் அசோக வனத்தில் அழகான குரங்காம் அனுமனை அனுப்பி இலங்கையை எரியூட்டி புகையை மூட்டிவிட்டவரும், மென்மையான மகரந்தம் கொண்ட செந்தாமரை மீது அமரும் லக்ஷ்மியாம் சீதையைச் சிறையிலிருந்து மீட்டியவரும், இளமை வாய்ந்தவரும், கருமுகிலைப் போன்ற நிறம் கொண்டவரும், கொடிய அம்பையும் வளைந்த வில்லையும் கையில் ஏந்தியவரும், தந்தை ஆணையால் இருண்ட கானகத்தில் நடந்து வனவாசம் செய்தவருமான ஸ்ரீராமனுக்கு (திருமாலுக்கு) இனியவனே, குலபலமும், கொடிய படைபலமும் படைத்த அசுரர்களின் பெரிய சேனையை அழிப்பதற்காக போர்க்களத்தில், கொடியதும், கூர்மையானதும், ஒளிமயமானதுமான வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே, செழித்த சோலைகளிலும், மலர்ப் பூங்காக்களிலும் கரும்பு ஆலைகள் இயங்குவதால் ஏற்படும் ஓசை கேட்கும் திருக்குரங்காடுதுறைத் தலத்தில்* வீற்றிருக்கும் குமரப் பெருமாளே. 
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.

பாடல் 880 - திருக்குரங்காடுதுறை
ராகம் - ....; தாளம் -

தனத்தனந் தான தனதன     தனத்தனந் தான தனதன          தனத்தனந் தான தனதன ...... தனதான

குறித்தநெஞ் சாசை விரகிகள்     நவிற்றுசங் கீத மிடறிகள்          குதித்தரங் கேறு நடனிகள் ...... எவரோடுங் 
குறைப்படுங் காதல் குனகிகள்     அரைப்பணங் கூறு விலையினர்          கொலைக்கொடும் பார்வை நயனிகள் ...... நகரேகை 
பொறித்தசிங் கார முலையினர்     வடுப்படுங் கோவை யிதழிகள்          பொருட்டினந் தேடு கபடிகள் ...... தவர்சோரப் 
புரித்திடும் பாவ சொருபிகள்     உருக்குசம் போக சரசிகள்          புணர்ச்சிகொண் டாடு மருளது ...... தவிர்வேனோ 
நெறித்திருண் டாறு பதமலர்     மணத்தபைங் கோதை வகைவகை          நெகிழ்க்குமஞ் சோதி வனசரி ...... மணவாளா 
நெருக்குமிந்த் ராதி யமரர்கள்     வளப்பெருஞ் சேனை யுடையவர்          நினைக்குமென் போலு மடியவர் ...... பெருவாழ்வே 
செறித்தமந் தாரை மகிழ்புனை     மிகுத்ததண் சோலை வகைவகை          தியக்கியம் பேறு நதியது ...... பலவாறுந் 
திரைக்கரங் கோலி நவமணி     கொழித்திடுஞ் சாரல் வயலணி          திருக்குரங் காடு துறையுறை ...... பெருமாளே.

பொருளைக் குறித்த விருப்பம் மனதில் கொண்ட காமிகள். பாடும் இசை அமைந்த குரலை உடையவர்கள். குதித்து நாடக மேடையில் ஏறி நடனம் செய்பவர்கள். யாரோடும் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லி காதலை ஊட்டிக் கொஞ்சிப் பேசுபவர்கள். அரையில் உள்ள பெண்குறியை விலை பேசி விற்பவர்கள். கொலைத் தொழிலைக் காட்டும் கண் பார்வையை உடையவர்கள். நகத்தின் குறிகள் பதியப் பெற்ற அழகிய மார்பகத்தை உடையவர்கள். காயத் தழும்புள்ள கோவைப் பழம் போன்று சிவந்த வாய் இதழை உடையவர்கள். பொருளைத் தினந்தோறும் தேடுகின்ற வஞ்சக மனத்தினர். தவசிகளும் சோர்ந்து போகும்படி செய்கின்ற பாவ உருவத்தினர். (உடலை) உருக்க வல்ல புணர்ச்சி லீலை செய்பவர்கள். அத்தகையோர்களின் சேர்க்கையைக் கொண்டு மகிழும் மயக்கத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? சுருண்டும், கரு நிறம் கொண்டும், ஆறு கால்கள் கொண்ட வண்டுகள் மொய்க்கும் பூக்களின் நறு மணம் கொண்டு விளங்கும் புதிய மாலைகள் பல வகையாக கட்டு தளரும், கரு மேகம் போன்ற கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் கணவனே, கூட்டமாக உள்ள இந்திரன் முதலிய தேவர்களுக்கும், வளப்பம் கொண்ட சேனையை உடைய மன்னர்களுக்கும், நினைத்துத் துதிக்கும் என்னைப் போன்ற அடியார்களுக்கும் பெரிய செல்வமாக விளங்குபவனே, நிறைந்துள்ள மந்தாரை மலர், மகிழம்பூ இவைகளைக் கொண்டு நிரம்பி விளங்கும் குளிர்ந்த சோலைகள் பல வகையானவையும் கலக்கி, நீர் நிறைந்து வருவதுமான ஆறு, பல துறைகளிலும் அலைகளாகிய கைகளை வளைத்து, புதிய மணி வகைகளைக் கொண்டு தள்ளுகின்ற பக்கங்களையும் வயல்களையும் அணிந்துள்ள திருக்குரங்காடுதுறை* என்ற தலத்தில் வீற்றிருக்கும பெருமாளே. 
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.

பாடல் 881 - திருக்குரங்காடுதுறை
ராகம் - ....; தாளம் -

தனந்த தனத்தான தனந்த தனத்தான     தனந்த தனத்தான ...... தனதான

குடங்கள் நிரைத்தேறு தடங்கள் குறித்தார     வடங்கள் அசைத்தார ...... செயநீலங் 
குதம்பை யிடத்தேறு வடிந்த குழைக்காது     குளிர்ந்த முகப்பார்வை ...... வலையாலே 
உடம்பு மறக்கூனி நடந்து மிகச்சாறி     யுலந்து மிகக்கோலு ...... மகலாதே 
உறங்கி விழிப்பாய பிறந்த பிறப்பேனு     முரங்கொள பொற்பாத ...... மருள்வாயே 
விடங்கள் கதுப்பேறு படங்க ணடித்தாட     விதங்கொள் முதற்பாய ...... லுறைமாயன் 
விலங்கை முறித்தோடி யிடங்கள் வளைத்தேறு     விளங்கு முகிற்கான ...... மருகோனே 
தடங்கொள் வரைச்சாரல் நளுங்கு மயிற்பேடை     தழங்கு மியற்பாடி ...... யளிசூழத் 
தயங்கு வயற்சாரல் குரங்கு குதித்தாடு     தலங்க ளிசைப்பான ...... பெருமாளே.

குடங்கள் வரிசையாக அமையப் பெற்றது போல விளங்கும் மார்பகங்களைக் கருத்தில் வைத்து, (ஆங்கே) முத்து மாலைகள் பொருந்த அசைத்த விலைமகளிருடைய செவிகள் இருக்கும் இடத்திலே விளக்கமுற்று நீண்ட குண்டலங்களை வெட்டுவது போலப் பாய்கின்ற, வெற்றி விளங்கும் நீலோற்பலம் போன்ற விழிப் பார்வை உடைய முகத் தோற்றம் என்னும் வலையாலே, உடல் கெட்டுப் போய் மிகவும் கூன் அடைந்து, நடையும் ஒரேயடியாகச் சரிந்து, தோலும் மிகவும் வற்றி, கையில் கோலும் நீங்காமல், தூங்கி விழித்துக் கொண்டது போன்ற, (இப்போது) பிறந்துள்ள இந்தப் பிறப்பிலாவது திண்மை (ஞானம்) பெறும்படியாக அழகிய திருவடியை அருள்வாயாக. நஞ்சு கன்னத்தில் ஏற காளிங்கனது படத்தின் மீது ஆடி நடித்தவனும், அத்தகைமை கொண்ட சிறந்த (ஆதிசேஷன் என்ற) பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்பவனுமான திருமால், சிவதனுசை அழகிய கையால் முறித்து, காட்டுக்குச் சென்று, தான் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்பாக்கி வைத்து விளங்கின மேக நிறமுடைய ராமனாகிய திருமாலுக்கு மருகனே, நீர் நிலைகளைக் கொண்ட மலைச் சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பேடையும் ஒலி செய்யும்படியாக பாடி முரலும் வண்டுகள் சூழ, விளங்கும் வயல் பக்கங்களைக் கொண்ட மலைச்சாரலில் குரங்குகள் குதித்து விளையாடும் (திருக்குரங்காடுதுறை* போன்ற) தலங்களில் மனம் உவந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில் உள்ளது.தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.

பாடல் 882 - காவ்ளுர்
ராகம் - ....; தாளம் -

தான தானன தத்தன தந்தன     தான தானன தத்தன தந்தன          தான தானன தத்தன தந்தன ...... தனதான

மானை நேர்விழி யொத்தம டந்தையர்     பாலை நேர்மொழி யொத்துவி ளம்பியர்          வாச மாமலர் கட்டும ரம்பைய ...... ரிருதோளும் 
மார்பு மீதினு முத்துவ டம்புரள்     காம பூரண பொற்கட கம்பொர          வாரி நீலவ ளைக்கைபு லம்பிட ...... அநுராகம் 
ஆன நேரில்வி தத்திர யங்களும்     நாண மாறம யக்கியி யம்பவும்          ஆடை சோரநெ கிழ்த்தியி ரங்கவும் ...... உறவாடி 
ஆர வாரந யத்தகு ணங்களில்     வேளி னூல்களை கற்றவி ளம்பவும்          ஆகு மோகவி பத்துமொ ழிந்துனை ...... யடைவேனோ 
சான கீதுய ரத்தில ருஞ்சிறை     போன போதுதொ குத்தசி னங்களில்          தாப சோபமொ ழிப்பஇ லங்கையு ...... மழிவாகத் 
தாரை மானொரு சுக்கிரி பன்பெற     வாலி வாகுத லத்தில்வி ழுந்திட          சாத வாளிதொ டுத்தமு குந்தனன் ...... மருகோனே 
கான வேடர்சி றுக்குடி லம்புன     மீதில் வாழித ணத்திலு றைந்திடு          காவல் கூருகு றத்திபு ணர்ந்திடு ...... மணிமார்பா 
காவு லாவிய பொற்கமு கின்திரள்     பாளை வீசம லர்த்தட முஞ்செறி          காவ ளூர்தனில் முத்தமி ழுந்தெரி ...... பெருமாளே.

மானுக்கு ஒப்பான கண்ணோடு கூடிய மங்கையர், பாலுக்கு ஒத்த இனிய மொழியோடு கூடிய பேச்சை உடையவர், நறு மணம் வீசும் பூக்களை அணிந்துள்ள தெய்வ மகளிரை ஒத்த விலைமாதர்களின் இரண்டு தோள்கள் மீதும் மார்பின் மேலும் முத்து மாலை புரள, காம இச்சைக்கு முழு இடம் தரும் தங்கக் கடகம் என்னும் காப்பு பொருந்த, கடல்நீல நிறமுள்ள கை வளையல் ஒலி செய்ய, காமப் பற்று முற்றும் சமயத்தில், பல விதமான மருந்து வகைகளைக் கொண்டு நாணம் ஒழியும்படி (வந்தவர்களை) மயக்கி பேச்சுக்களைப் பேசவும், அணிந்துள்ள ஆடை தளர நெகிழ்த்தி, இரக்கம் காட்டுதல் போல உறவாடியும், ஆடம்பரமான நயத்தோடு கூடிய குணத்துடன் மன்மதனின் காம நூல்களில் கற்றுள்ள நுணுக்கங்களை எடுத்துச் சொல்லவும், ஏற்படுகின்ற காம மோகத்தால் வரும் ஆபத்தும் நீங்கி உன் திருவடிகளைச் சேர்வேனோ? ஜானகி துயரத்துடன் அரிய சிறைக்குச் சென்றபோது (ராமனுக்கு) உண்டான கோபத்துடன் துன்பத்தையும் துக்கத்தையும் நீக்குதல் பொருட்டு இலங்கை அழிந்து போகவும், தாரை என்னும் மாதினை ஒப்பற்ற நண்பன் சுக்கி¡£வன் பெறவும், வாலியின் வெற்றித் தொடர் அழிந்து அவன் பூமியில் விழவும் சாதித்த அம்பைச் செலுத்திய (ராமன்) திருமாலின் மருகனே, காட்டு வேடர்களின் சிறிய குடிசையிலும், அழகிய தினைப் புனத்திலும் (அதன் இடையே இருப்புக்காக அமைந்த) பரணிலும் வீற்றிருந்து காவலை மிக நன்றாகச் செய்த குறத்தியாகிய வள்ளியைத் தழுவிடும் அழகிய மார்பனே, சோலையிலுள்ள அழகிய கமுக மரங்களின் கூட்டங்கள் பாளைகளை வீசுவதும், (தாமரை, அல்லி போன்ற) நீர்மலர்கள் உள்ளவையுமான, குளங்கள் நிறைந்துள்ள காவளூர்* என்னும் தலத்தில் வீற்றிருந்து முத்தமிழும் தெரிந்த பெருமாளே. 
* காவளூர் தஞ்சை மாவட்டத்தில் திட்டை ரயில் நிலையத்திலிருந்து 6 மைலில் உள்ளது.

பாடல் 883 - தஞ்சை
ராகம் - ....; தாளம் -

தந்தன தானன ...... தனதான

அஞ்சன வேல்விழி ...... மடமாதர் 
அங்கவர் மாயையி ...... லலைவேனோ 
விஞ்சுறு மாவுன ...... தடிசேர 
விம்பம தாயரு ...... ளருளாதோ 
நஞ்சமு தாவுணு ...... மரனார்தம் 
நல்கும ராவுமை ...... யருள்பாலா 
தஞ்சென வாமடி ...... யவர்வாழத் 
தஞ்சையில் மேவிய ...... பெருமாளே.

மை பூசிய வேல் போன்ற கண்கள் உள்ள அழகிய விலைமாதர்களிடத்தில் மாயை மயக்கத்தில் அலைச்சல் உறுவேனோ? நான் மேம்பட்டு விளங்குமாறு உனது திருவடியில் சேர்வதற்கு ஒளி உருவமாக உனது திருவருள் எனக்கு அருளக் கூடாதோ? விஷத்தை அமுதமாக உண்ட சிவபெருமானுடைய நல்ல மகனே, உமாதேவி பெற்றருளிய பாலனே, சரணம் நீயே எனக் கொண்டுள்ள அடியார்கள் வாழ தஞ்சையில் வீற்றிருக்கும் பெருமாளே. 

பாடல் 884 - தஞ்சை
ராகம் - ...; தாளம் -

தந்த தானனத் தந்த தானனத்     தந்த தானனத் ...... தனதான

அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்     தஞ்ச வேமணிக் ...... குழைவீசும் 
அங்க ணாரிடத் தின்ப சாகரத்     தங்கி மூழ்குமிச் ...... சையினாலே 
எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்     திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர 
இங்கு வாவெனப் பண்பி னாலழைத்     தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய் 
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்     கொண்டல் போல்குழற் ...... கனமேருக் 
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்     கொண்ட கோலசற் ...... குணவேலா 
சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்     சம்பு போதகக் ...... குருநாதா 
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்     தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.

கடலில் உள்ள கெண்டை மீன், சேல் மீன் பயந்து ஒளிந்திடுமாறு, ரத்தினக் குண்டலங்கள் உள்ள காதுவரை பாய்ந்தோடும் அழகிய கண்களை உடைய மாதர்களிடம் கிடைக்கும் இன்பக்கடல் போன்ற நெருப்பில் முழுகும் காம விருப்பால், எம்பெருமானே, உன்னை நான் தியானிக்காத வண்ணம் என்னைப் பிரிக்கும் மாயவித்தை போன்ற இந்த மயக்க அறிவு நீங்க, இங்கே வா என்று ஆட்கொள்ளும் முறையில் அழைத்து, எங்கும் நிறைந்துள்ளதான உண்மைப் பொருளை உபதேசித்து அருள்க. கொடி போன்ற மெல்லிய இடுப்பு, கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாய் இதழ், மேகம் போன்ற கூந்தல், பருத்த மேருமலையைப் போன்ற மார்பகம் - இவற்றை உடைய அழகிய வேட்டுவப் பெண் வள்ளியை மணம்கொண்ட அழகிய நற்குண வேலனே, மன்மதனைக்* கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு உபதேசம் செய்த குருநாதனே, திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால் கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* 'சம்பரன்' என்ற அசுரனை மன்மதன் தனது மறு பிறப்பில் கொன்றதால், 'சம்பராரி' என்று மன்மதனுக்குப் பெயர் உண்டு.

பாடல் 885 - தஞ்சை
ராகம் - ....; தாளம் -

தந்த தானன தான தான தத்த தந்த     தந்த தானன தான தான தத்த தந்த          தந்த தானன தான தான தத்த தந்த ...... தனதான

கந்த வார்குழல் கோதி மாலை யைப்பு னைந்து     மஞ்ச ளாலழ காக மேனி யிற்றி மிர்ந்து          கண்ட மாலைக ளான ஆணி முத்த ணிந்து ...... தெருவூடே 
கண்ட பேரையெ லாம வாவி னிற்கொ ணர்ந்து     வண்ப யோதர பார மேரு வைத்தி றந்து          கண்க ளாகிய கூர வேலை விட்டெ றிந்து ...... விலைகூறி 
வந்த பேர்களை யேகை யாலெ டுத்த ணைந்து     கொண்டு தேனித ழூறு வாயை வைத்த ருந்தி          மந்த மாருதம் வீசு பாய லிற்பு ணர்ந்து ...... மயல்பூணு 
மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்     மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து          வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க ...... வருவாயே 
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த     சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க          னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் ...... மருகோனே 
எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு     கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க          வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு ...... கதிர்வேலா 
சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட     முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை          தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு ...... மணிமார்பா 
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து     கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த          தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

நறு மணம் வீசும் நீண்ட கூந்தலைச் சிக்கெடுத்து வாரி, மாலையைச் சூடிக்கொண்டு, மஞ்சளை அழகுடன் உடலில் நிரம்பப் பூசி, கழுத்தில் மாலைகளாக உயர்தரமான முத்து மாலைகளை அணிந்து, தெருவில் பார்த்த பேர்வழிகளை எல்லாம் ஆசையுடன் அழைத்துக் கொண்டு வந்து, வளப்பம் உள்ள, கனத்த மேரு மலையை ஒத்த மார்பகங்களைத் திறந்து காட்டி, கண்கள் என்னும் கூர்மையான வேலாயுதத்தை வேகமாகச் செலுத்தி, (தமக்கு வேண்டிய) விலையைப் பேசி, வந்தவர்களைக் கையால் எடுத்துத் தழுவிக் கொண்டு, தேன் போல் இனிக்கும் வாயிதழ் ஊறலை உதடுகளில் வைத்துக் குடிக்கச்செய்து, தென்றல் வீசும் படுக்கையில் புணர்ந்து காம மயக்கம் கொள்ளும், விலைமாதர்களுடன் அநுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புகள் எல்லாம் தொலைந்து போகும்படி, ஞான வித்தையைக் கொடுத்து, வண்டுகள் உலாவும் கடப்ப மாலை என் முன் சற்றே விளங்க வருவாயாக. இந்திரலோகத்து கற்பக விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும் கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே, எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும் நிறைந்து விளங்கும் கந்தனே, தாருகாசுரனும் அவன் சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ் கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே, சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக் கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே, அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன் வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே. 

பாடல் 886 - சப்த.தானம்
ராகம் - ....; தாளம் -

தனன தானன தான தனத்தன     தனன தானன தான தனத்தன          தனன தானன தான தனத்தன ...... தனதான

மருவு லாவிடு மோதி குலைப்பவர்     சமர வேலெனு நீடு விழிச்சியர்          மனதி லேகப டூரு பரத்தைய ...... ரதிகேள்வர் 
மதன னோடுறழ் பூச லிடைச்சியர்     இளைஞ ராருயிர் வாழு முலைச்சியர்          மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே 
சருவி யாரையும் வாவெ னழைப்பவர்     பொருளி லேவெகு ஆசை பரப்பிகள்          சகல தோதக மாயை படிப்பரை ...... யணுகாதே 
சலச மேவிய பாத நினைத்துமுன்     அருணை நாடதி லோது திருப்புகழ்          தணிய வோகையி லோத எனக்கருள் ...... புரிவாயே 
அரிய கானக மேவு குறத்திதன்     இதணி லேசில நாளு மனத்துடன்          அடவி தோறுமெ வாழி யல்பத்தினி ...... மணவாளா 
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட     உழவர் சாகர மோடி யொளித்திட          அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட ...... நினைவோனே 
திருவின் மாமர மார்ப ழனப்பதி     அயிலு சோறவை யாளு துறைப்பதி          திசையி னான்மறை தேடி யமுற்குடி ...... விதியாதிச் 
சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி     பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி          திருவை யாறுட னேழு திருப்பதி ...... பெருமாளே.

நறுமணம் உலவும் கூந்தலை வேண்டுமென்றே அவிழ்ப்பவர்கள், போருக்கு உற்ற வேல் என்று சொல்லத் தக்க நீண்ட கண்களை உடையவர்கள், உள்ளத்தில் வஞ்சனை ஊர்கின்ற வேசியர்கள், ரதியின் கணவனான மன்மதனுக்கு ஒப்பானதும்*, போருக்கு ஏற்றதுமான இடையை உடையவர்கள், இளைஞர்களின் அருமையான உயிர் தங்கி வாழ்கின்ற மார்பகங்களை உடையவர்கள், இனிமையான பெரிய பேச்சுக்களைப் பேசும் குணம் கொண்டவர்கள், தெருவில் கொஞ்சிக் குலாவி யாரையும் (வீட்டுக்கு) வரும்படி அழைப்பவர்கள், பொருள் பெறுவதிலேயே மிக்க ஆசை பரந்துள்ள மனத்தினர்கள், எல்லா விதமான வஞ்சக மாய வித்தைகளையும் கற்றவர்களாகிய வேசியரை நான் நெருங்காமல், தாமரையை ஒத்த உனது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை மனம் குளிர மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக. அருமையான (வள்ளி மலைக்) காட்டில் இருந்த குறப்பெண்ணின் பரண் மீது சிறிது காலம் மனம் வைத்து, (சந்தனக்காடு, சண்பகக் காடு முதலிய) பல காடுகள் தோறும் வாழ்ந்து உலவிய பத்தினி வள்ளியின் காதல் கணவனே, அசுரர்கள் இருப்பிடம் யாவும் பொடியாக, அசுரப் படை வீரர்கள் கடலுள் ஓடி ஒளிந்து கொள்ள, தேவர்களின் பொன்னுலகத்தில் பொன் மழை மிகப் பொழிய நினைந்து உதவியவனே, லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம் (1) என்னும் தலம், உண்பதற்குரிய திருச்சோற்றுத்துறை (2) என்ற தலம், திசைகள் தோறும் நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய திருவேதிக்குடி (3) என்ற தலம், பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்) கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் (4) என்ற தலம், தாமரையில் வாழும் நாயகனான சூரியன் பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி (5) என்ற தலம், திருநெய்த்தானம் (6), திருவையாறு (7) என்ற தலங்களுடன், ஏழு திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே. 
* இடைக்கு மன்மதனை உவமித்த காரணம், மன்மதன் சிவசாபம் காரணமாக அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியான், பெண்களின் இடை மெலிந்து அருவமாக இருப்பதால் கண்ணுக்குத் தெரியாது.
** இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள் - தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.

பாடல் 887 - திருவையாறு
ராகம் - ....; தாளம் -

தனன தானன தானன தானன     தனன தானன தானன தானன          தனன தானன தானன தானன ...... தனதான

சொரியு மாமுகி லோஇரு ளோகுழல்     சுடர்கொள் வாளிணை யோபிணை யோவிழி          சுரர்த மாரமு தோகுயி லோமொழி ...... யிதழ்கோவை 
துவர தோஇல வோதெரி யாஇடை     துகளி லாவன மோபிடி யோநடை          துணைகொள் மாமலை யோமுலை தானென ...... உரையாடிப் 
பரிவி னாலெனை யாளுக நானொரு     பழுதி லானென வாணுத லாரொடு          பகடி யேபடி யாவொழி யாஇடர் ...... படுமாயப் 
பரவை மீதழி யாவகை ஞானிகள்     பரவு நீள்புக ழேயது வாமிகு          பரம வீடது சேர்வது மாவது ...... மொருநாளே 
கரிய மேனிய னானிரை யாள்பவன்     அரிய ராவணை மேல்வளர் மாமுகில்          கனகன் மார்பது பீறிய வாளரி ...... கனமாயக் 
கபடன் மாமுடி யாறுட னாலுமொர்     கணையி னால்நில மீதுற நூறிய          கருணை மால்கவி கோபக்ரு பாகரன் ...... மருகோனே 
திரிபு ராதிகள் தூளெழ வானவர்     திகழ வேமுனி யாவருள் கூர்பவர்          தெரிவை பாதியர் சாதியி லாதவர் ...... தருசேயே 
சிகர பூதர நீறுசெய் வேலவ     திமிர மோகர வீரதி வாகர          திருவை யாறுறை தேவக்ரு பாகர ...... பெருமாளே.

கூந்தல் மழையாய் சொரிந்து விழும் இருண்ட மேகமோ அல்லது இருளே தானோ? கண்கள் ஒளிகொண்ட இரு வாள்களோ, அல்லது மானின் கண்களோ? தேவர்களுடைய அருமையான அமுதமோ, அல்லது குயிலின் குரல் தானோ? வாயிதழ் கொவ்வைக் கனி தானோ, பவளமோ, அல்லது இலவ மலரோ? இவர்களின் இடுப்பு கண்ணுக்கே தெரியாததோ? நடை குற்றம் இல்லாத அன்னப் பறவையினதோ, அல்லது பெண் யானையோ? மார்பகங்கள் இரட்டையாயுள்ள பெரிய மலைகளோ? - என்றெல்லாம் உவமைகள் எடுத்துப் பேசி, அன்புடன் என்னை ஆண்டருளுக, நான் ஒரு குற்றமும் இல்லாதவன் என்று ஒளி மிக்க நெற்றியை உடைய மாதர்களுடன் வெளி வேஷப் பேச்சுக்களையே பேசிப் படித்து, நீங்காத துன்பத்துக்கு இடமான (இந்தப் பிறவிச் சுழல்) என்னும் மாயக் கடலில் அழியாதபடி, ஞானிகள் போற்றுகின்ற பெரும் புகழே உருவான சிறந்த மேலான மோட்சத்தைச் சேர்வதும், அங்ஙனம் சேரத் தகுந்தவன் ஆவதுமான, ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ? கரு நிற உடல் உடையவன், பசுக் கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், திருமால், (ஆதிசேஷன் என்ற) பாம்பணையின் மேல் (துயில்) வளர் கரிய மேகம் போன்றவன், பொன்னிறம் படைத்த கனகன் (இரணியனுடைய) மார்பைப் பிளந்த நரசிம்மன், வலிமையான மாயங்களில் வல்ல வஞ்சகனாகிய ராவணனின் சிறந்த பத்து முடிகளும் ஒரே பாணத்தால் நிலத்தின் மேல் விழும்படி தூளாக்கிய கருணை மிகுத்த திருமால், (வாலி என்னும்) குரங்கைக் கோபித்தவனும், கிருபைக்கு இடமானவனுமான விஷ்ணுவின் மருகனே, திரிபுர அசுரர்கள் பொடியாகுமாறும், தேவர்கள் விளங்கும் பொருட்டும், (திரிபுராதிகள் மீது) கோபித்து (தேவர்களுக்கு) அருள் பாலிப்பவர், உமா தேவிக்குத் தன் உடலில் பாதியைக் கொடுத்தவர், சாதி என்பதே இல்லாதவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையை தூளாக்கி அழித்த வேலவனே, அஞ்ஞானம் என்னும் இருளைப் போக்க வல்ல வீர ஞானபானுவே, திருவையாற்றில்* வீற்றிருக்கும் தேவனே, கிருபாகர மூர்த்தியே, பெருமாளே. 
* திருவையாறு தஞ்சாவூருக்கு வடக்கே 6 மைலில் காவேரி ஆற்றின் கரையில் உள்ளது.

பாடல் 888 - திருப்பூந்துருத்தி
ராகம் - ....; தாளம் -

தாந்த தத்தன தானா தானன     தாந்த தத்தன தானா தானன          தாந்த தத்தன தானா தானன ...... தந்ததான

வீங்கு பச்சிள நீர்போல் மாமுலை     சேர்ந்த ணைத்தெதிர் மார்பூ டேபொர          வேண்டு சர்க்கரை பால்தே னேரிதழ் ...... உண்டுதோயா 
வேண்டு ரைத்துகில் வேறாய் மோகன     வாஞ்சை யிற்களி கூரா வாள்விழி          மேம்ப டக்குழை மீதே மோதிட ...... வண்டிராசி 
ஓங்கு மைக்குழல் சாதா வீறென     வீந்து புட்குரல் கூவா வேள்கலை          யோர்ந்தி டப்பல க்¡£டா பேதமு ...... யங்குமாகா 
ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை     தீர்ந்து னக்கெளி தாயே மாதவ          மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ ...... ழங்குவாயே 
தாங்கு நிற்சரர் சேனா நீதரு     னாங்கு ருத்ரகு மாரா கோஷண          தாண்ட வற்கருள் கேகீ வாகன ...... துங்கவீரா 
சாங்கி பற்சுகர் சீநா தீசுர     ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக          சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ ...... லங்கன்மார்பா 
பூங்கு ளத்திடை தாரா வோடன     மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை          போன்ற விக்ரக சூரா ¡£பகி ...... ரண்டரூபா 
போந்த பத்தர்பொ லாநோய் போயிட     வேண்ட நுக்ரக போதா மேவிய          பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.

பருமனான பச்சை இளநீர் போல உள்ள பெரிய மார்பகங்களை சேர்ந்து அணைத்து எதிரில் உள்ள மார்பில் அழுந்தும்படி பொருந்த வைத்து, விரும்பத் தக்க சர்க்கரை, பால், தேன் இவைகளுக்கு ஒப்பான வாயிதழை உண்டு தோய்ந்து, விரும்பத் தக்க மோகப் பேச்சுக்களைப் பேசி, ஆடையும் வேறாக, காம மயக்க ஆசையில் மகிழ்ச்சி அடைந்து, ஒளி பொருந்திய கண்கள் மேலிட்டு காதில் உள்ள குண்டலங்கள் மீது மோதிட, வண்டின் கூட்டங்கள் மிக்குள்ள கரிய கூந்தல் எப்போதும் சதமென (அதன்மேல்) விழுந்து, புட்குரல் ஒலியைக் கூவச் செய்து, மன்மதனின் காம சாத்திர நூல்களை அறியும்படி பலவகையான லீலைகளின் பேதங்களை முயற்சி செய்தல் ஆகுமோ? (கூடாது என்றபடி), ஆன்மா அனுபவிக்க வேண்டிய சுக துக்க நுகர்ச்சியும், மாயை சம்பந்தமாக ஏற்படும் துன்பங்களும் ஒழிந்து உன் திருவடிக்கே எளிதான வகையில் சிறந்த தவ நிலை ஊன்றிப் பொருந்துவதற்கு மெய்ஞ்ஞான ஆசார ஒழுக்கத்தைத் தந்து அருள்வாயாக. (ஜைன மதக் கொள்கைகளை அனுஷ்டித்துத்) தாங்கி நின்ற குருமார்களின் கூட்டமாகிய நீசர்கள் ஆழ்ந்து நினைக்கக் காரணமாக இருந்து, அங்கு (மதுரையில் திருஞானசம்பந்தராக) வந்த சிவ குமாரனே, பேரொலியுடன் நடனம் செய்த சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய மயில் வாகனனே, உயர்ந்த வீரனே, ஆத்ம தத்துவத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரம ரிஷி, லக்ஷ்மியின் நாதராகிய திருமால், சிவபெருமான், தேவேந்திரன் ஆகியோர் மெச்சிப் போற்றிய வேலனே, உபதேச குருவே, சாந்தமூர்த்தியே, அறிஞனே, சுவாமியே, கடப்ப மாலை அணிந்த மார்பனே, தாமரைப் பூ உள்ள குளத்தில் குள்ள வாத்துக்களுடன் அன்னப் பறவைகளும் மேய்ந்த வயலூர்ப் பெருமானே, பெரிய மலை போன்ற உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவனே, வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தனே, (உன் அடியை வேண்டி) வந்த அடியார்களின் பொல்லாத பிறவியாகிய நோய் ஓடிப் போக வேண்டிய அருள் செய்த அறிஞனே, பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வமே, தேவர்கள் தம்பிரானே. 
* திருப்பூந்துருத்தி தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று.

பாடல் 889 - திருநெய்த்தானம்
ராகம் - ....; தாளம் -

தனனத் தானத் தனதன தனதன     தனனத் தானத் தனதன தனதன          தனனத் தானத் தனதன தனதன ...... தனதான

முகிலைக் காரைச் சருவிய குழலது     சரியத் தாமத் தொடைவகை நெகிழ்தர          முளரிப் பூவைப் பனிமதி தனைநிகர் ...... முகம்வேர்வ 
முனையிற் காதிப் பொருகணை யினையிள     வடுவைப் பானற் பரிமள நறையிதழ்          முகையைப் போலச் சமர்செயு மிருவிழி ...... குழைமோதத் 
துகிரைக் கோவைக் கனிதனை நிகரிதழ்     பருகிக் காதற் றுயரற வளநிறை          துணைபொற் றோளிற் குழைவுற மனமது ...... களிகூரச் 
சுடர்முத் தாரப் பணியணி ம்ருகமத     நிறைபொற் பாரத் திளகிய முகிழ்முலை          துவளக் கூடித் துயில்கினு முனதடி ...... மறவேனே 
குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென     திமிதித் தீதித் திமிதியென் முரசொடு          குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள் ...... களமீதே 
குழறிக் கூளித் திரளெழ வயிரவர்     குவியக் கூடிக் கொடுவர அலகைகள்          குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு ...... குமரேசா 
செகசெச் சேசெச் செகவென முரசொலி     திகழச் சூழத் திருநட மிடுபவர்          செறிகட் காளப் பணியணி யிறையவர் ...... தருசேயே 
சிகரப் பாரக் கிரியுறை குறமகள்     கலசத் தாமத் தனகிரி தழுவிய          திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ...... பெருமாளே.

மேகத்தையும் இருளையும் கூடி நின்ற கூந்தலானது சரிந்து விழ, இடை அணியும் பூ மாலை வகைகளும் தளர்ந்து நெகிழ, தாமரை மலரையும் குளிர்ந்த சந்திரனையும் ஒத்த முகத்தில் வியர்வைத் துளிகள் தோன்ற, நுனியால் வெட்டுதல் போல முட்டுகின்றதும், போருக்கு உற்றதுமான அம்பை, இள மா வடுவை, கருங் குவளையை, நறுமணமும் தேனும் நிறைந்த தாமரை மொட்டின் இதழைப் போல் விளங்கி, போர் புரியும் இரண்டு கண்களும் காதில் உள்ள குண்டலங்களை மோத, பவளத்தையும் கொவ்வைக் கனியையும் ஒத்த வாயிதழ் ஊறலை உண்டு காம வருத்தம் நீங்க, வளப்பம் நிறைந்த இரண்டு அழகிய தோள்களிலும் என் உள்ளம் உருகி நின்று மகிழ்ச்சி மிகுந்திட, ஒளி வீசும் முத்து மாலையாகிய ஆபரணத்தை அணிந்துள்ளதும், கஸ்தூரி நிறைந்ததும், அழகுள்ளதும் கனம் உள்ளதும், நெகிழ்ச்சி கொண்டதும், குவிந்து தோன்றும் மார்பகங்கள் துவட்சியுறும்படி (பொது மகளிருடன்) கூடித் தூங்கினாலும் உன் திருவடிகளை மறக்க மாட்டேன். குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென்றும், திமிதித் தீதித் திமிதி என்றும் இவ்வாறான ஒலிகளுடன் பறைகள் ஒன்று கூடிக் கோபத்தோடு முழங்க, போர் புரிகின்ற அசுரர்கள் போர்க் களத்தில் கூச்சலிட்டு பெருங் கழுகுகளின் கூட்டம் கூட, அஷ்ட பைரவர்கள் ஒன்று கூடி வர, பேய்கள் கொக்கரித்து ஆரவாரத்துடன் ஆடி தம் பசியை ஆற்றிக் கொள்ள, வேலைச் செலுத்திய குமரேசனே, செகசெச் சேசெச் செக என்று பறைகள் இவ்வாறு ஒலியை எழுப்பி முழங்கித் தம்மைச் சூழத் திரு நடனம் செய்பவர், (செவி உணர்ச்சியும்) கூடிய, கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை அணியாகச் சூடிய சிவபெருமான் பெற்ற குழந்தையே, சிகரங்களை உடையதும், பருத்துப் பாரமுள்ளதுமான (வள்ளி) மலையில் வசிக்கும் குறப் பெண்ணாகிய வள்ளியின் குடம் போன்றதும், பூ மாலை அணிந்ததுமான மலை போன்ற மார்பகங்களைத் தழுவியவனே, திருநெய்த்தானத்தில்* வீற்றிருப்பவனே, தேவர்கள் பெருமாளே. 
* திருநெய்த்தானம் திருவையாறுக்கு அருகில் உள்ளது.

பாடல் 890 - திருப்பழுவூர்
ராகம் - ....; தாளம் -

தனன தந்தன தாத்த தானன     தனன தந்தன தாத்த தானன          தனன தந்தன தாத்த தானன ...... தனதான

விகட சங்கட வார்த்தை பேசிகள்     அவல மங்கைய ரூத்தை நாறிகள்          விரிவ டங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம் 
விதம்வி தங்களை நோக்கி யாசையி     லுபரி தங்களை மூட்டி யேதம          இடும ருந்தொடு சோற்றை யேயிடு ...... விலைமாதர் 
சகல மஞ்சன மாட்டி யேமுலை     படவ ளைந்திசை மூட்டி யேவரு          சரச இங்கித நேத்தி யாகிய ...... சுழலாலே 
சதிமு ழங்கிட வாய்ப்ப ணானது     மலர வுந்தியை வாட்டி யேயிடை          தளர வுங்கணை யாட்டும் வேசிய ...... ருறவாமோ 
திகிரி கொண்டிரு ளாக்கி யேயிரு     தமையர் தம்பியர் மூத்த தாதையர்          திலக மைந்தரை யேற்ற சூரரை ...... வெகுவான 
செனம டங்கலு மாற்றி யேயுடல்     தகர அங்கவர் கூட்டை யேநரி          திருகி யுண்டிட ஆர்த்த கூளிக ...... ளடர்பூமி 
அகடு துஞ்சிட மூட்டு பாரத     முடிய அன்பர்க ளேத்த வேயரி          யருளு மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே 
அமர ரந்தணர் போற்ற வேகிரி     கடல திர்ந்திட நோக்கு மாமயில்          அழகொ டும்பழு வூர்க்குள் மேவிய ...... பெருமாளே.

பரிகாசமானதும் துன்பம் தரக் கூடியதுமான வார்த்தைகளைப் பேசுபவர்கள். துன்பத்துக்கு காரணமான விலைமாதர்கள். அழுக்கு நாற்றம் வீசுபவர்கள். செல்வப் பெருக்கு ஒடுங்கி நிலை மாறுவதற்கு வாய்ப்பு இதுதான் என்று, வருவோர்களுடைய அப்போதைக்கு அப்போது உள்ள நிலைமையைக் கவனித்து, ஆசை காரணமாக, காம இச்சைகளை எழுப்பி தாங்கள் இடுகின்ற மருந்தோடு சோற்றைக் கலந்து கொடுக்கின்றவர்களாகிய விலைமாதர்கள். எல்லா வித நீராடல்களையும் ஆட்டி, மார்பகங்கள் படும்படி குனிந்து, இசை ஞானத்தைக் காட்டி, அதனால் வருகின்ற காம சேட்டை முதலிய இனிமையான முறைப்பட்ட சுழற்சியான ஆடலாலே, தாள ஒத்து முழங்க, வாயில் இசைப் பாடல்கள் பிறக்க, வயிற்றை ஒழுங்காக அசைத்து, இடை தளரவும், கண்களை ஆட்டி அசைக்கும் விலைமாதர்களின் உறவு நல்லதாகுமோ? சக்கரத்தைக் கொண்டு பகலை இருளாகச் செய்து*, (கர்ணன், துரியோதனன் ஆகிய) இரண்டு தமையன்களையும் மற்ற தம்பிமார்களையும், துரோணர், பீஷ்மர் ஆகிய பெரியோர்களையும், துரியோதனன் பிள்ளை லக்ஷண குமரன் முதலிய சிறந்த பிள்ளைகளையும், போரை ஏற்று வந்த சூரர்களான பகைவர்களையும், நிறைந்த பகைவராகிய மக்கள் எல்லாரையும் அழிவு செய்து, அவர்களுடைய உடல் பொடியாக, அங்கே அவற்றை நரிகள் திருகி உண்டிட, பேரொலி செய்த பேய்கள் நிறைந்த போர்க் களத்தில் நடுப்பாகம் சேதப்பட, மூள்வித்த பாரதப் போர் முடிய, அன்பர்கள் துதி செய்ய யமன், வாயு, இந்திரன் ஈன்ற தருமன், வீமன், அருசுனன் ஆகியவர்கள் வாழ்த்தித் துதிக்கும் திருமாலின் மருகனே, தேவர்களும் அந்தணர்களும் போற்ற, மலைகளும் கடலும் அதிரும்படிச் செய்ய வல்ல சிறந்த மயிலின் மேல் அழகுடனேஅமர்ந்து பழுவூரில்** எழுந்தருளி இருக்கும் பெருமாளே. 
* பாரதப் போரில் 13-ம் நாள் ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய பிள்ளை அபிமன்யுவைக் கொன்று விட்டான். உடனே அர்ச்சுனன் நாளை சூரியன் அஸ்தமிப்பதற்குள் ஜயத்ரதனைக் கொல்வேன் இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சபதம் செய்தான். சூரியன் அஸ்தமிக்கு முன் கண்ணன் தமது சக்கரத்தால் சூரியனை மறைத்தார். சூரியன் அஸ்தமித்து விட்டது என்று ஜயத்ரதன் வெளியே வர, அர்ச்சுனன் பாசுபதாஸ்திரத்தை விட்டு அவனைக் கொன்றான்.
** திருப்பழுவூர் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.

பாடல் 891 - பெரும்புலியூர்
ராகம் - ....; தாளம் -

தனந்தனன தானத் தனந்தனன தானத்     தனந்தனன தானத் ...... தனதான

சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்     சரங்களொளி வீசப் ...... புயமீதே 
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்     சரங்கண்மறி காதிற் ...... குழையாட 
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்     றிரம்பையழ கார்மைக் ...... குழலாரோ 
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்     றிரங்கியிரு தாளைத் ...... தருவாயே 
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்     சிறந்தமயில் மேலுற் ...... றிடுவோனே 
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்     சினந்தசுரர் வேரைக் ...... களைவோனே 
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்     ப்ரசண்டஅபி ராமிக் ...... கொருபாலா 
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்     பெரும்புலியுர் வாழ்பொற் ...... பெருமாளே.

கிண்கிணி, ரத்தினம் அமைக்கப் பெற்ற வீரச் சிலம்பு இனிய இசை பாட, மணி வடங்கள் ஒளியைப் பரப்ப, தோள் மேல் மார்பகங்களாகிய மலைகள் அசைந்தாட, தேமல் படர்ந்த மார்பகங்கள் ஆசையை விளைவிக்க, அழகிய அம்பு போன்ற கண்கள் தடுத்துத் தாக்குகின்ற காதுகளில் குண்டலங்கள் ஆட, இனிமை வாய்ந்த மயிலின் அழகைக் கொண்டு மகிழ்ச்சியைக் காட்டும் சிரிப்புடன் பேசி, ரம்பை போன்ற அழகை உடையவர்களும் கரிய கூந்தலை உடையவர்களும் ஆகிய விலைமாதர்களுடன் நெருங்கிப் பழகி படுக்கையே இடமாகப் பொருந்தி அதில் அழுந்திக் கிடக்கும் என் மீது, நீ கொஞ்சம் இரக்கம் கொண்டு உனது இரண்டு திருவடிகளைத் தந்து அருள்வாயாக. சிதம்பரத்தில் உறையும் சிவ பெருமானுடைய குமாரனே, கடப்ப மாலை ஆட சிறப்புற்ற மயிலின் மேல் வீற்றிருப்பவனே, சிவந்த கழுகு களிப்புடன் ஆட, பிணங்கள் மலை மலையாகச் சாய்ந்து (போர்க்களத்தில்) குவியும்படி கோபித்து, அசுரர்களை வேரோடு களைந்து எறிந்தவனே, பெதும்பைப் பருவத்தின் இளமை அழகு தன்னிடத்தே வெற்றியுடன் விளங்கும் சிவகாமி (என்னும்) வீரம் மிக்க அபிராமிக்கு ஒப்பற்ற பாலனே. பெரிய வள்ளி மலைத் தினைப் புனத்துக்குச் சென்று, குறப்பெண்ணாகிய வள்ளியுடன் சேர்ந்து, பெரும் புலியூரில்* வீற்றிருக்கும் அழகிய பெருமாளே. 
* பெரும்புலியூர் திருவையாற்றுக்கு மேற்கே 3 மைலில் உள்ளது.

பாடல் 892 - நெடுங்களம்
ராகம் - ....; தாளம் -

தந்ததன தந்ததன தந்ததன தந்ததன     தந்ததன தந்ததன ...... தந்ததான

பஞ்சபுல னும்பழைய ரண்டுவினை யும்பிணிகள்     பஞ்செனஎ ரிந்துபொடி ...... யங்கமாகிப் 
பண்டறவு டன்பழைய தொண்டர்களு டன்பழகி     பஞ்சவர்வி யன்பதியு ...... டன்குலாவக் 
குஞ்சரமு கன்குணமொ டந்தவனம் வந்துலவ     கொஞ்சியசி லம்புகழல் ...... விந்துநாதங் 
கொஞ்சமயி லின்புறமெல் வந்தருளி யென்கவலை     கொன்றருள்நி றைந்தகழ ...... லின்றுதாராய் 
எஞ்சியிடை யுஞ்சுழல அம்புவிழி யுஞ்சுழல     இன்பரச கொங்கைகர ...... முங்கொளாமல் 
எந்தவுடை சிந்தபெல மிஞ்சியமு தம்புரள     இந்துநுத லும்புரள ...... கங்குல்மேகம் 
அஞ்சுமள கம்புரள மென்குழைக ளும்புரள     அம்பொனுரு மங்கைமண ...... முண்டபாலா 
அன்பர்குல வுந்திருநெ டுங்களவ ளம்பதியில்     அண்டரய னும்பரவு ...... தம்பிரானே.

(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும்) ஐம்புலன்களும், பழைமையாக வரும் நல் வினை, தீ வினைகளும், நோய்களும் பஞ்சு எரிவது போல எரிந்து, பொடி வடிவம் ஆகி முதலிலேயே அற்றுப் போக, தாமதம் இன்றி பழைய அடியார்களுடன் பழகி, சுவாதிஷ்டானத்தில் பிரமனும், மணி பூரகத்தில் திருமாலும், அநாகதத்தில் ருத்திரரும், விசுத்தியில் மகேசுரரும், ஆக்ஞையில் சதாசிவமும்* விளங்க, (ஆறாவது ஆதாரமாகிய மூலாதாரத்தில்) யானை முக விநாயகரும் சீருடன் அமர்ந்திட, (ஆக, ஆறு ஆதாரங்களிலும்) அவரவர்க்கு உரிய உறைவிடங்களில் வந்து விளங்க, (அப்போது) கொஞ்சுவது போன்ற இனிய சிலம்பின் ஓசை, கழலின் ஓசை, விந்து சம்பந்தமான நாத ஒலி இவை எல்லாம் இனிமையாக ஒலிக்க, மயிலின் முதுகின் மேல் நீ வந்து காட்சி கொடுத்து, என் மனக் கவலையை ஒழித்து, உனது திருவடியை இன்று தருவாயாக. இடையும் மெலிவுற்றுச் சுழல, அம்பு போன்ற கண்களும் சுழல, இன்பச் சுவை நிறைந்த மார்பகங்களைக் கரத்தில் கொள்ள முடியாத வகையில் விம்மி நிற்க, ஆடை குலைய, அதிவேகத்துடன் அமுத ரசம் பெருக, பிறை போன்ற நெற்றியும் சுருங்க, இருளும் மேகமும் பயப்படும்படி அவ்வளவு கறுத்த கூந்தல் புரண்டு அலைய, பொற் குண்டலங்களும் ஊசலாட, அழகிய பொன் உருவம் விளங்கும் மங்கை தேவயானையை திருமணம் செய்து கொண்ட குமரனே, அன்பர்கள் விளங்கும் திருநெடுங்களம்** என்னும் வளப்பம் பொருந்திய தலத்தில், தேவர்களும், பிரமனும் போற்றும் தம்பிரானே. 
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம் 
** நெடுங்களம் திருச்சிக்கு அடுத்த திருவெறும்பியூர் ரயில் நிலையத்துக்கு கிழக்கே 7 மைலில் உள்ளது.

பாடல் 893 - குறட்டி
ராகம் - ....; தாளம் -

தானன தனத்த தான, தானன தனத்த தான     தானன தனத்த தான ...... தனதான

கூரிய கடைக்க ணாலு மேருநி கரொப்ப தான     கோடத னில்மெத்த வீறு ...... முலையாலுங் 
கோபவ தரத்தி னாலு மேவிடு விதத்து ளால     கோலவு தரத்தி னாலு ...... மொழியாலும் 
சீரிய வளைக்கை யாலு மேகலை நெகிழ்ச்சி யேசெய்     சீருறு நுசுப்பி னாலும் ...... விலைமாதர் 
சேறுத னினித்த மூழ்கி நாளவ மிறைத்து மாயை     சேர்தரு முளத்த னாகி ...... யுழல்வேனோ 
தாரணி தனக்குள் வீறி யேசம ரதுட்ட னான     ராவணன் மிகுத்த தானை ...... பொடியாகச் 
சாடுமு வணப்ப தாகை நீடுமு கிலொத்த மேனி     தாதுறை புயத்து மாயன் ...... மருகோனே 
வாரண முரித்து மாதர் மேகலை வளைக்கை நாண     மாபலி முதற்கொ ணாதன் ...... முருகோனே 
வாருறு தனத்தி னார்கள் சேரும திளுப்ப ¡£கை     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

கூர்மை கொண்ட கடைக்கண்ணாலும், மேரு மலை போல மிகவும் மேம்பட்டு எழுகின்ற மார்பகத்தாலும், (இந்த்ரகோபம் என்ற) தம்பலப் பூச்சி போன்ற சிவந்த வாயிதழ்களாலும், பொருந்தியுள்ள தன்மையில் ஆல் இலை போன்ற அழகிய வயிற்றாலும், பேச்சினாலும், சிறந்த வளையல்களை அணிந்த கைகளாலும், மேகலை என்னும் இடையணியை நெகிழ்ந்து விழும்படிச் செய்கின்ற அழகு அமைந்த மெல்லிய இடையினாலும், பொது மகளிர் என்கின்ற சேற்றிலே நான் நாள் தோறும் முழுகி, வாழ் நாளை வீணிலே செலவழித்து, மாயை பொருந்திய அறிவு கொண்டவனாகித் திரிவேனோ? பூமிதனில் மிகுந்த அகந்தை உடையவனாகி போர் செய்யும் துஷ்டனான ராவணனுடைய பெரிய சேனை பொடிபட்டு அழியுமாறு தாக்கிய, கருடக் கொடியைக் கொண்ட, பெரிய கரு மேகத்தை ஒத்த உடலையும், தாது மலர் மாலையை அணிந்துள்ள புயங்களையும் கொண்ட திருமாலின் மருகனே, (கஜமுகாசுரன் என்ற) யானையைக் கொன்று அதன் தோலை உரித்து (போர்த்தி), (தாருகா வனத்து ரிஷி) பத்தினிகளின் இடையணி, கைவளைகள், நாணம் இவை மூன்றையும் அழகிய பிச்சையால் முன்னாளில் கொண்ட* சிவபெருமானின் மகன் முருகனே, கச்சு அணிந்த மார்பகங்களை உடைய மாதர்கள் சேர்ந்து வாழும் மதிலையும் மேல் மாடங்களையும் கொண்ட அழகு வாய்ந்த குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* தாருகா வனத்து முனிவர்கள் சிவபெருமானிடத்தில் அன்பு இல்லாதவர்களாகப் பல வேள்விகளைப் புரிந்து வந்தனர். இவர்கள் செருக்கை அடக்க, திருமால் மோகினியாகவும், சிவபெருமான் பிச்சை எடுத்தும் அவ்வனத்துக்குச் செல்ல, முனிவர்கள் மோகினியின் அழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தனர். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு ரிஷி பத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர் - சிவ புராணம்.
** குறட்டி புதுக்கோட்டைக்கு கிழக்கே 5 மைலில் உள்ளது.

பாடல் 894 - குறட்டி
ராகம் - ....; தாளம் -

தானன தனத்த தான தானன தனத்த தான     தானன தனத்த தான ...... தனதான

நீரிழிவு குட்ட மீளை வாதமொடு பித்த மூல     நீள்குளிர் வெதுப்பு வேறு ...... முளநோய்கள் 
நேருறு புழுக்கள் கூடு நான்முக னெடுத்த வீடு     நீடிய விரத்த மூளை ...... தசைதோல்சீ 
பாரிய நவத்து வார நாறுமு மலத்தி லாறு     பாய்பிணி யியற்று பாவை ...... நரிநாய்பேய் 
பாறோடு கழுக்கள் கூகை தாமிவை புசிப்ப தான     பாழுட லெடுத்து வீணி ...... லுழல்வேனோ 
நாரணி யறத்தி னாரி ஆறுச மயத்தி பூத     நாயக ரிடத்து காமி ...... மகமாயி 
நாடக நடத்தி கோல நீலவ ருணத்தி வேத     நாயகி யுமைச்சி நீலி ...... திரிசூலி 
வாரணி முலைச்சி ஞான பூரணி கலைச்சி நாக     வாணுத லளித்த வீர ...... மயிலோனே 
மாடம தில்முத்து மேடை கோபுர மணத்த சோலை     வாகுள குறட்டி மேவு ...... பெருமாளே.

நீர் இழிவு, குஷ்ட நோய், கோழை, வாயு இவைகளோடு பித்த நோய், வெகு நாளாக உள்ள குளிர் நோய், சுர நோய், மற்ற நோய்கள், வேர் ஊன்றி இருப்பதுவாய், புழுக்களுக்கு இருப்பிடமானதாய், பிரமனால் படைக்கப்பட்டது (இந்த உடலாகிய) வீடு. நெடிதாய்ப் பரவி இருக்கும் ரத்தம், மூளை, மாமிசம், தோல், சீழ் ஆகியவைகள் பொருந்திய பருத்த, ஒன்பது துவாரங்களை உடைய, நாற்றம் மிகுந்த, ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் வழியால் ஏற்படுகின்ற பிணி இவைகளால் ஆக்கப்பட்ட பொம்மை. நரியும் நாயும் பேயும் பருந்தும் கழுகுகளும் கோட்டான்களும் இவைகள் உண்ணுவதற்கு உரிய பாழான இந்த உடலை நான் எடுத்து வீண் பொழுது போக்கித் திரிவேனோ? துர்க்கை, முப்பத்திரண்டு அறங்களைப்* புரிந்த தேவி, ஆறு சமயங்களையும் சார்ந்தவள், பூத கணங்களுக்குத் தலைவரான சிவபெருமானுடைய இடது பாகத்தில் விரும்பி இருப்பவள், மகமாயி, நடனங்களைச் செய்பவள், அழகிய நீல நிறம் உடையவள், வேதத் தலைவி, உமையம்மை, காளி, முத்தலைச் சூலத்தைக் கொண்டவள், கச்சு அணிந்த மார்பகங்களை உடையவள், ஞானத்தைப் பூரணமாகக் கொண்டவள், கலைகளுக்குத் தலைவி, மலை மகளாகிய, ஒளி வீசும் நெற்றியைக் கொண்ட பார்வதி தேவி பெற்ற வீரனே, மயில் வாகனனே, மாடங்களும் மதில்களும் முத்து இழைத்த மேடான தளங்களும் கோபுரங்களும் நறு மணம் வீசுகின்ற சோலைகளும் அழகாக வாய்ந்துள்ள குறட்டி** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
** குறட்டி புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.

பாடல் 895 - அத்திப்பட்டு
ராகம் - ....; தாளம் -

தனதனன தனதனன தத்தத் தத்ததன     தனதனன தனதனன தத்தத் தத்ததன          தனதனன தனதனன தத்தத் தத்ததன ...... தனதான

கருகியறி வகலவுயிர் விட்டுக் கிக்கிளைஞர்     கதறியழ விரவுபறை முட்டக் கொட்டியிட          கனகமணி சிவிகையில மர்த்திக் கட்டையினி ...... லிடைபோடாக் 
கரமலர்கொ டரிசியினை யிட்டுச் சித்ரமிகு     கலையைபுரி செய்துமறைகள் பற்றப் பற்றுகனல்          கணகணென எரியவுடல் சுட்டுக் கக்ஷியவர் ...... வழியேபோய் 
மருவுபுனல் முழுகிமனை புக்குத் துக்கமறு     மனிதர்தமை யுறவுநிலை சுட்டுச் சுட்டியுற          மகிழ்வுசெய்து அழுதுபட வைத்தத் துட்டன்மதன் ...... மலராலே 
மயல்விளைய அரிவையர்கள் கைப்பட் டெய்த்துமிக     மனமழியு மடிமையைநி னைத்துச் சொர்க்கபதி          வழியையிது வழியெனவு ரைத்துப் பொற்கழல்கள் ...... தருவாயே 
பொருவின்மலை யரையனருள் பச்சைச் சித்ரமயில்     புரமெரிய இரணியத னுக்கைப் பற்றியியல்          புதியமுடு கரியதவ முற்றுக் கச்சியினி ...... லுறமேவும் 
புகழ்வனிதை தருபுதல்வ பத்துக் கொத்துமுடி     புயமிருப தறவுமெய்த சக்ரக் கைக்கடவுள்          பொறியரவின் மிசைதுயிலு சுத்தப் பச்சைமுகில் ...... மருகோனே 
அரியமர கதமயிலி லுற்றுக் கத்துகட     லதுசுவற அசுரர்கிளை கெட்டுக் கட்டையற          அமரர்பதி யினியகுடி வைத்தற் குற்றமிகு ...... மிளையோனே 
அருணமணி வெயில்பரவு பத்துத் திக்குமிகு     மழகுபொதி மதர்மகுட தத்தித் தத்திவளர்          அணியகய லுகளும்வயல் அத்திப் பட்டிலுறை ...... பெருமாளே.

உடல் கருகித் தீய்ந்தது போல் ஆகி, அறிவும் நீங்கி, உயிர் பிரிந்தவுடன் சுற்றத்தார் உள்ளம் நைந்து கதறி அழ, (இழவு வீட்டுக்கு) வந்து சேர்ந்த பறைகள் யாவும் சப்திக்க, பொன்னும் மணியும் துலங்கும் பல்லக்கில் அமர்த்தி, விறகுக் கட்டைகளின் நடுவில் போடப்பட்டு, உறவினர்களின் மலரன்ன கைகளால் வாய்க்கு அரிசியிடப்பட்டு, அழகுள்ள மேல்துணியும் விலக்கப்பட்டு, உடலின் மறைவான இடங்களிலும் பிடிக்கின்ற நெருப்பு பற்றிக்கொண்டு கண கண என்று எரிய, உடல் இவ்வாறு சுடப்பட்டு, பக்கத்தில் இருந்தவர்கள் தாம் வந்த வழியே திரும்பிப் போய் நன்றாக நீரில் குளித்து, வீட்டுக்குப் போய் துக்கம் நீங்கினர். மனிதர்களை இன்ன உறவு இவர் என்று உறவின் முறையைக் குறித்து அத்தகைய குறிப்பால் மகிழ்ச்சி பூணவும், அழுதிடவும் (என்னை) வைத்து, அந்தத் துஷ்டனாகிய மன்மதனுடைய மலர் அம்பால், காம உணர்ச்சி உண்டாக, பெண்கள் கையில் அகப்பட்டு இளைத்து, மிகவும் மனம் நொந்து அழிகின்ற அடிமையாகிய என்னை நீ நினைத்து, உன் பாதங்களாகிய பொன் உலகுக்குப் போகும் வழியை இதுதான் வழி என்று சொல்லிக் காட்டி, உனது அழகிய திருவடியைத் தந்தருளுக. நிகர் இல்லாத பர்வத அரசன் (இமவான்) பெற்ற பச்சைநிற அழகு மயில், திரி புரம் எரி பட பொன் வில்லைத் தன் கையில் பற்றியவள், இடைவிடாத அன்புடன் அதிசயமான வகையில் ஊக்கத்துடன், அருமையான தவத்தை மேற் கொண்டு காஞ்சிப் பதியில் பொருந்தி விளங்கும் புகழ் பெற்ற தேவி பார்வதி பெற்ற மகனே, (ராவணனின்) பத்துக் கொத்தான தலைகளும், இருபது புயங்களும் அற்று விழ அம்பைச் செலுத்தியவனும், சக்ராயுதத்தை ஏந்தியவனுமாகிய கடவுள், புள்ளிகளைக் கொண்ட ஆதி சேஷன் என்னும் பாம்பின் மேல் பள்ளி கொள்ளும் சுத்தமான பச்சை நிற மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே, அருமையான மரகதப் பச்சை நிறமான மயில் மீது வீற்றிருந்து, ஒலிக்கும் கடல் வற்றும்படி, அசுரர்களின் கூட்டம் கட்டோடு ஒழிய, தேவர்கள் தலைவனான இந்திரன் சுகத்துடன் குடி ஏறுதற்கு தக்கபடி ஏற்பாடு செய்த, மிக்க இளையவனே. செம்மணிகள் பத்துத் திக்குகளிலும் ஒளி வீசும், மிக்க அழகு நிறைந்து செழிப்புடன் விளங்கும் கி¡£ட மணி முடியை உடையவனே, தாவித் தாவி வளர்கின்ற வரிசையாக உள்ள கயல் மீன்கள் குதிக்கும் வயல்கள் உள்ள அத்திப்பட்டில்* வீற்றிருக்கும் பெருமாளே. 
* புதுக்கோட்டைக்கு அடுத்த கந்தர்வ கோட்டையிலிருந்து 7 மைலில் அத்திப்பட்டு உள்ளது.

பாடல் 896 - அத்திக்கரை
ராகம் - ....; தாளம் -

தத்தத்தன தத்தத் தனதன     தத்தத்தன தத்தத் தனதன          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

தொக்கைக்கழு விப்பொற் றகுமுடை     சுற்றிக்கல னிட்டுக் கடிதரு          சொக்குப்புலி யப்பிப் புகழுறு ...... களியாலே 
சுத்தத்தைய கற்றிப் பெரியவர்     சொற்றப்பிய கத்தைப் புரிபுல          சுற்றத்துட னுற்றிப் புவியிடை ...... யலையாமல் 
முக்குற்றம கற்றிப் பலகலை     கற்றுப்பிழை யற்றுத் தனையுணர்          முத்தர்க்கடி மைப்பட் டிலகிய ...... அறிவாலே 
முத்தித்தவ சுற்றுக் கதியுறு     சத்தைத்தெரி சித்துக் கரையகல்          முத்திப்புண ரிக்குட் புகவர ...... மருள்வாயே 
திக்கெட்டும டக்கிக் கடவுள     ருக்குப்பணி கற்பித் தருளறு          சித்தத்தொட டுத்துப் படைகொடு ...... பொருசூரர் 
செச்சைப்புய மற்றுப் புகவொரு     சத்திப்படை விட்டுச் சுரர்பதி          சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே 
அக்கைப்புனை கொச்சைக் குறமகள்     அச்சத்தையொ ழித்துக் கரிவரும்          அத்தத்தில ழைத்துப் பரிவுட ...... னணைவோனே 
அப்பைப்பிறை யைக்கட் டியசடை     அத்தர்க்கரு மைப்புத் திரவிரி          அத்திக்கரை யிச்சித் துறைதரு ...... பெருமாளே.

உடலின் தோலைக் கழுவி, அழகுள்ள ஆடையைக் கட்டிக்கொண்டு, ஆபரணங்களை அணிந்து, வாசனை வீசுகின்ற, மயக்கி வசப்படுத்தவல்ல சாந்தைப் பூசிக் கொள்பவர்களாகிய விலைமாதர்களைப் புகழ்ந்து, அதனால் வரும் மகிழ்ச்சியால், பரிசுத்தமான நிலையை நீக்கிவிட்டு, பெரியோர்கள் சொல்லும் புத்திமதியைக் கேளாது நடந்து, பாபச் செயல்களைச் செய்யும் ஐம்புலன்கள் முதலான பல சுற்றத்தார்கள் அழைத்துச் செல்லும் வழியில் சென்று, இந்தப் பூமியில் (நான்) திரியாமல், காமம், வெகுளி, மயக்கம் எனப்படும் மூன்று குற்றங்களையும் நீக்கி, கலை நூல்கள் பலவற்றைக் கற்று, பிழையான வழிகளை நீக்கி, தன்னை அறிந்த பரிசுத்தமான ஞானிகளுக்கு அடிமை பூண்டு, (அத்தகைய ஒழுக்கத்தால்) விளக்கம் உறும் அறிவைக் கொண்டு, முக்தியை அளிக்கக் கூடிய தவ நிலையை அடைந்து, வீடு பேற்றைத் தரவல்ல சத்தியமான பொருளைத் தரிசித்து, எல்லையில்லாத முக்தி என்னும் சமுத்திரத்தில் நான் புகுமாறு வரத்தை எனக்குத் தந்து அருள்க. எட்டு திசைகளையும் அடக்கி வெற்றி கொண்டு, தேவர்கள் அனைவருக்கும் வேலைகளைக் கட்டளை இட்டு, கருணை என்பதே இல்லாத கடின மனத்துடன் நெருங்கிவந்து, படையைக் கொண்டு போர்க்களத்தில் சண்டை செய்யும் சூரர்களின் ரத்தத்தால் சிவந்த தோள்கள் அற்று விழும்படி ஒப்பற்ற சக்தி வேற் படையைச் செலுத்தி, தேவர்கள் தலைவனான இந்திரன் மனத் துயரத்தை நீக்கி, பொன்னுலகை மீண்டும் பெற அருளியவனே, சங்கு மாலையை அணிந்த, பாமர குலத்தவளாகிய குறப் பெண் வள்ளியின் பயத்தை நீக்கி, (கணபதியாகிய) யானை எதிரில் வந்த சிறு சந்தில் அவளைத் தன்னிடம் அழைத்து, அன்பாக அணைந்தவனே, கங்கை நீரையும், பிறைச் சந்திரனையும் முடித்துள்ள சடைப் பெருமானாகிய சிவனுக்கு அருமைப் பிள்ளையே, விளக்கமுற்றுப் பொலியும் அத்திக்கரை** என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. 
* புலி நால்வகைச் சாந்துகளில் ஒன்று (பீதம், கலவை, வட்டிகை, புலி).
** அத்திக்கரை புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது.

பாடல் 897 - கந்தனூர்
ராகம் - பூர்விகல்யாணி தாளம் - கண்டசாபு - 2 1/2 தகிட-1 1/2, தக-1

தந்தனா தத்தனா தந்தனா தத்தனா     தந்தனா தத்தனா ...... தந்ததான

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு     மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி 
விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு     மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே 
வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி     வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற 
மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி     வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ 
அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு     மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள 
அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்     அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா 
எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்     எந்தைபா கத்துறையு ...... மந்தமாது 
எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்     எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே.

சுக்கில விந்து வெவ்வேறான உருவங்களாய் எல்லாத் திசைகளிலும், ஒளிவாய்ந்த அசையும் அசையாப் பொருள் என்ற கூட்டமாய் இவ்வுலகில் தோன்றி காலம் கழித்து, பின்பு பிரிந்து போய் உடலை விடுவதை என் மனம் ஆராய்ந்து அறியும். இவ்வாறு மிகுதியாக நீ எனக்கு அளித்த வடிவங்களில் பிறப்பெடுத்து நான் வந்து நாயினும் கீழ்ப்பட்டவனாக மனம் நொந்து, ஞான நிலையை இந்தக் கணத்திலேயே வந்து கொடு என்று உன்னிடம் முறையிடுகிறேன். குழந்தைகள் தாவி நின்று புகழ்ந்தால் தாயும் தந்தையும் அம்மொழிகளைக் கேட்டு மனம் உருகி அக்குழந்தைகளை ஓடிவந்து தழுவிக்கொள்ளும் பான்மையை உன் மனம் சற்று நினைக்கக் கூடாதா? பேரிருளில் இடி இடிப்பதுபோல் வாய்விட்டுக் கூச்சலிட்டு வருகின்ற, கண்களில் நெருப்புப் பொறி பறக்கும் இழிகுலத்தரான அசுரர் ஒடுங்கி மாண்டுபோக, அழகிய கையிலிருக்கும் வேலைச் செலுத்தி அருளி, இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள் மீண்டும் குடியேற அருள்புரிந்த குமரனே, என் உயிருக்கு உதவி புரிந்தவரும்*, சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள ஜடையை உடையவரும், என் தந்தையும் ஆகிய சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய பார்வதிதேவி ஆகிய இருவரும் எங்கும் நிறைந்து விளங்கும் ஒப்பற்ற கந்தனூரில்**, பராசக்தி புகழும் எந்தை பரமசிவன் பூஜித்து மகிழும் தம்பிரானே. 
* அருணகிரியாரின் வாழ்வில் அருணாசலேஸ்வரரே அவர் முன்பு தரிசனம் தந்து திருநீறு அளித்து ஆட்கொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பது.
** கந்தனூர் புதுக்கோட்டைக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.

பாடல் 898 - வாலிகொண்டபுரம்
ராகம் - மத்யமாவதி தாளம் - சது.ரத்ருபுடை - 4 களை - 32 தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1

தான தந்ததன தான தந்ததன     தான தந்ததன தான தந்ததன          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு     காக முண்பவுட லேசு மந்துஇது          ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத ...... வும்பல்போலே 
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு     மேவி நம்பியிது போது மென்கசில          ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச ...... னங்கள்பேசிச் 
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்     வீச மங்கையர்க ளாட வெண்கவரி          சீற கொம்புகுழ லூத தண்டிகையி ...... லந்தமாகச் 
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு     மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ          சேவை கண்டுனது பாத தொண்டனென ...... அன்புதாராய் 
சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி     சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ          சூரி யன்புரவி தேர்ந டந்துநடு ...... பங்கினோடச் 
சோதி யந்தபிர மாபு ரந்தரனு     மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது          சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத ...... லன்புகூர 
வாது கொண்டவுணர் மாள செங்கையயி     லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்          மாதர் சிந்தைகளி கூர நின்றுநட ...... னங்கொள்வோனே 
வாச கும்பதன மானை வந்துதினை     காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய          வாலி கொண்டபுர மர்ந்துவளர் ...... தம்பிரானே.

ஈ, எறும்பு, நரி, நாய், பேய், கழுகு, காகம் இவைகள் கடைசியில் உண்ணப்போகும் இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என நினைத்து ஆணவ மொழிகளையே பேசி, மதயானை போலே எல்லாமே என்னுடைய ஆட்சியில் அடங்கியவை என்னும்படியான சுகநிலையை அடைந்து, இது நிலைத்திருக்கும் என நம்பி, சிலர் இந்த ஆடம்பரங்கள் இவனுக்குப் போதுமோ என்று கூறும்படியாக, பொருட் செல்வங்களால், ஒப்பற்ற கர்வம் மிக்க எண்ணங்களுடன் பேச்சுக்கள் பேசி, குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்துகொண்டு அவற்றின் நறுமணம் வீச, மங்கையர்கள் நடனமாட, வெண்சாமரங்கள் வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலியவை ஊதிவர, பல்லக்கில் அழகாக நான் வீற்றிருக்கும் பகட்டான பெரிய வாழ்வைத் தேடிக்கொண்டு திரியும் ஆசையானது வெந்தழிய, உன்மீது ஆசை மிகுந்து, மங்களகரமான உனது தரிசனத்தைக் கண்டு அனுபவித்து, உன் திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பை எனக்குத் தருவாயாக. வஞ்சத் தொழில்களுக்கு இடமான மலைப்பிளவுகளைக் கொண்டு மிக இருண்ட மலையான கிரெளஞ்சகிரியும், அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்து விழ, சூரியனது குதிரைகள் பூட்டிய தேர் (சூரனது ஆட்சிக்கு முன்பு போல) சென்று நேர்வழியில் வானின் நடுப்பாகத்தில் ஓட*, ஒளி பொருந்திய அந்தப் பிரமனும், இந்திரனும், முதல் தேவரிலிருந்து கடைசித் தேவர்வரை எல்லாத் தேவர்களும் வணங்கிச் சூழ்ந்து நிற்க, கனகசபையில் நடனமாடும் எந்தை, முழுமுதல் கடவுள், சிவபிரான் மகிழ்ந்து அன்புகூர்ந்து நிற்க, போருக்கு என்று வாதுசெய்து வந்த அசுரர்கள் மாண்டு அழிய, உனது செவ்விய கையில் உள்ள வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள் தம்நாட்டில் குடியேற, வித்தியாதரர்களின் மாதர்கள் மனம் மிக மகிழ, போர்க்களத்திலே நின்று நடனம் புரிந்தவனே, மணம் வீசும் குடம் போன்ற மார்புடைய, மான் சாயல் உள்ள, வள்ளியிடம் வந்து, தினைப்புனத்தைக் காவல் காக்கும் தொழிலை மேற்கொண்ட முருகனே, மதிக்கத்தக்க பெருமைவாய்ந்த வாலிகொண்டபுரம்** என்ற தலத்தில் வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே. 
* சூரனது ஆட்சியில் சூரியன் வானின் நடுவில் செல்லத் தடை இருந்தது.சூர சம்ஹாரம் ஆனபிறகே சூரியன் நடுவானில் செல்ல முடிந்தது - கந்த புராணம்.
** வாலிகொண்டபுரம் திருச்சிக்கு வடக்கே 40 மைலில் பெரம்பலூருக்கு அருகில் உள்ளது.

பாடல் 899 - திருமாந்துறை
ராகம் - ஆசிரி தாளம் - ஆதி

தாந்தன தனந்த தாந்தன தனந்த     தாந்தன தனந்த ...... தனதான

ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து     ஆய்ஞ்சுதளர் சிந்தை ...... தடுமாறி 
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து     ஆண்டுபல சென்று ...... கிடையோடே 
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து     ஓய்ந்துணர் வழிந்து ...... உயிர்போமுன் 
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து     ஊன்றிய பதங்கள் ...... தருவாயே 
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த     வேந்திழையி னின்ப ...... மணவாளா 
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச     வேண்டிய பதங்கள் ...... புரிவோனே 
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து     மாண்புநெல் விளைந்த ...... வளநாடா 
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற     மாந்துறை யமர்ந்த ...... பெருமாளே.

நன்றாக இருந்த குடல் வளைவுற்று கூன்விழுந்து, விழவேண்டிய பற்கள் தளர்ச்சி அடைந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து, வரவேண்டிய கடன்களை வாங்கவேண்டிய இடங்களில் வாங்கி, இவ்வாறே பல ஆண்டுகள் செல்ல, படுத்த படுக்கையாகி, மிகுந்த இருமல் நோய் ஏற்பட்டு, வீங்கும் குடலும் நோவுற்று, சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, உயிர் போவதற்கு முன்பு, விளங்கி நிற்கும் மயில் மீது நீ வந்து யான் விண்ணுலகை அடைவதற்கு நீ மனம் இணங்கி, நிலைபெற்ற உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக. வேங்கை மரங்களும் உயரமான, இனிய தினைப்பயிர்களும் மிகுந்த வயலிலே இருந்த அழகிய தேவி வள்ளியின் இனிய மணவாளனே, வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய திருவடிகளை அருள் புரிபவனே, மாம்பழம் உடைந்து அதன் சாறு வயலில் நிறைந்து, சிறந்த நெற்பயிர் விளையும் வளமான சோழ நாடனே, மனிதர்களும், தவசிகளும், தேவேந்திரனும் பரவிப் போற்ற நின்ற திருமாந்துறைத்* தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. 
* திருமாந்துறை திருச்சியை அடுத்த திருவானைக்காவுக்கு வடகிழக்கில் 10 மைலில் உள்ளது.

பாடல் 900 - வயலு¡ர்
ராகம் - கேதாரம் தாளம் - சது.ர ரூபகம் - 6 - எடுப்பு - 1/2 இடம்

தனதன தானான தானந் தனதன தானான தானந்     தனதன தானான தானந் ...... தனதானஅரிமரு கோனே நமோவென் றறுதியி லானே நமோவென்     றறுமுக வேளே நமோவென் ...... றுனபாதம் 
அரகர சேயே நமோவென் றிமையவர் வாழ்வே நமோவென்     றருண சொரூபா நமோவென் ...... றுளதாசை 
பரிபுர பாதா சுரேசன் றருமக ணாதா வராவின்     பகைமயில் வேலா யுதாடம் ...... பரநாளும் 
பகர்தலி லாதாளை யேதுஞ் சிலதறி யாவேழை நானுன்     பதிபசு பாசோப தேசம் ...... பெறவேணும் 
கரதல சூலாயு தாமுன் சலபதி போலார வாரங்     கடினசு ராபான சாமுண் ...... டியுமாடக் 
கரிபரி மேலேறு வானுஞ் செயசெய சேனா பதீயென்     களமிசை தானேறி யேயஞ் ...... சியசூரன் 
குரல்விட நாய்பேய்கள் பூதங் கழுகுகள் கோமாயு காகங்     குடல்கொள வேபூச லாடும் ...... பலதோளா 
குடதிசை வாராழி போலும் படர்நதி காவேரி சூழுங்     குளிர்வய லூரார மேவும் ...... பெருமாளே.

திருமாலின் மருமகனே போற்றி என்றும், முடிவு என்பது அற்றவனே போற்றி என்றும், ஆறுமுகக் கடவுளே போற்றி என்றும், உனது பாதத்தில், பாவம் தீர்க்கும் சிவன் மகனே போற்றி என்றும், தேவர்களின் செல்வமே போற்றி என்றும், செந்நிறத்துச் சொரூபனே போற்றி என்றும், பலவிதமாக உன்னைத் துதித்து வணங்க எனக்கு ஆசை இருக்கிறது. வெற்றிச் சிலம்பு அணிந்த பாதனே, தேவேந்திரன் பெற்ற மகள் தேவயானையின் நாதனே, பாம்பின் பகையான மயிலையும் வேலாயுதத்தையும் கொண்ட ஆடம்பரக் கோலாகலனே, ஒரு நாளேனும் நினைத்துச் சொல்லாத உன் திருவடிகளைப் பற்றி சிறிதளவு கூட எதுவும் அறியாத ஏழை நான் உன் திருவாயால் பதி, பசு, பாசம்* ஆகியவற்றைப் பற்றிய உபதேசம் பெறவேண்டும். கையிலே சூலாயுதத்தை ஏந்தியவனே, முன்னொரு நாள், கடல் போலப் பேரோலியும் கொடிய கள்ளைக் குடித்தலும் உடைய துர்க்கை ஆடவும், யானையை (ஐராவதம்) வாகனமாகக் கொண்ட இந்திரனும் ஜெய ஜெய சேனாபதியே என்று ஆரவாரம் செய்யவும், போர்க்களத்தின் மேல் நீ புகுந்ததால் பயந்து நடுங்கிய சூரன் கூக்குரலிடவும், நாயும், பேயும், பூதங்களும், கழுகுகளும், நரிகளும், காகங்களும் அவனது குடலைக் கீறித் தின்னவும், சண்டை செய்த பல தோள்களை உடையவனே, மேற்குத் திசையில் பெரிய சமுத்திரம் போன்று பரவி வரும் காவேரி ஆறு சூழ்ந்த குளிர்ந்த வயலூரில்* உள்ளம் நிறைந்து வீற்றிருக்கும் பெருமாளே. 
* பதி - கடவுள், பசு - ஜீவாத்மா, பாசம் - மும்மலம் ஆகிய ஆணவம், கன்மம், மாயை.
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

by Swathi   on 28 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.