LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (வயது 70) காலமானார்.

தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வுகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் தொ.ப. எனும் பேராசிரியர் தொ. பரமசிவன். பண்பாடு, சமயங்கள் தொடர்பான ஆய்வுகளை விரிவாக மேற்கொண்டவர்.

திராவிட சிந்தனைகளுடன் கூடிய ஆய்வு முறையை கையாண்டவர் தொ. பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன்.


மதுரை அழகர் கோவில் தொடர்பான தொ.பரமசிவத்தின் ஆய்வு நூல் இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக் கூடிய ஆகச் சிறந்த நூலாகும். மதுரை தியாகராசா கல்லூரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்தவர் தொ. பரமசிவன். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் தொ. பரமசிவன். உடல்நலக் குறைவால் பாளையங்கோட்டையில் இன்று இரவு தொ. பரமசிவன் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கும் ஆய்வு உலகத்துக்கும் மிகப் பெரிய பேரிழப்பாக்கும். மார்க்சிய, பெரியாரிய சிந்தனைகளை உள்வாங்கி தமிழ் மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என நீண்ட நெடும் பாடத்தை தன்வாழ்நாள் எல்லாம் நடத்திக் கொண்டே இருந்தவர் மறைந்த பேராசிரியர் தொ. பரமசிவன்.

பெரியார் மறைந்த நாளிலேயே மறைந்திருக்கிறார். "நாற்பதாண்டு காலமாகத் தமிழ் பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கி உழைத்தவர் .கல்வெட்டுச்சான்றுகள்,தொல்பொருள் ஆதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றை ஆராய்வதை விட்டுப் பண்பாட்டு வரலாற்றை அடித்தள மக்களின் வாழ்வு முறையிலிருந்தும் நம்பிக்கை மற்றும் அவர்களின் சடங்குகளிலிருந்தும் எழுதுபவர் தொ.பரமசிவன்"என்று பாராட்டப்பெற்றவர்.'திராவிடக் கருத்தியல் ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை ' என்று முழங்கியவர்.மதுரை யாதவர் கல்லூரி,மதுரை தியாகராசர் கலைக் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணியாற்றியவர் .பல்கலைக்கழகங்களில் பல பேர் முனைவர் பட்டம் பெறுவதற்கு நெறியாளராக இருந்தவர் என்பது மட்டுமல்ல, மற்ற நெறியாளர்களிடம் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சி செய்த பலருக்கும் கருத்து உதவிகள் செய்தவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வாராவாரம் ஒவ்வொரு புத்தகத்தைக் குறிப்பிட்டு அதன் சிறப்புகளைக் கூறிவருகிறார். அந்த வகையில் நவம்பர் தொடக்கத்தில் அந்த நிகழ்ச்சியில் தொ.பரமசிவன் எழுதிய 'அழகர் கோயில்' என்னும் நூலை பற்றி பேசினார்.

அவருடைய நூல்களும் பதிப்பகங்களும்
அறியப்படாத தமிழகம் - காலச்சுவடு பதிப்பகம்
பண்பாட்டு அசைவுகள் - காலச்சுவடு பதிப்பகம்
அழகர் கோயில் - மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம்
தெய்வம் என்பதோர் - காலச்சுவடு பதிப்பகம்
வழித்தடங்கள் - மணி பதிப்பகம்
பரண் - சந்தியா பதிப்பகம்
சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்)
சமயங்களின் அரசியல் - வானவில் புத்தகாலயம்
தொ.பரமசிவன் நேர்காணல்கள் - காலச்சுவடு பதிப்பகம்
விடு பூக்கள் - கயல்கவின் பதிப்பகம்
உரைகல் - கலப்பை பதிப்பகம்
இந்துதேசியம் - கலப்பை பதிப்பகம்
நாள்மலர்கள் - பாவை பதிப்பகம்
மானுடவாசிப்பு - தடாகம் பதிப்பகம்
பாளையங்கோட்டை - காலச்சுவடு பதிப்பகம்
மஞ்சள் மகிமை - காலச்சுவடு பதிப்பகம்
மரபும் புதுமையும் - காலச்சுவடு பதிப்பகம்
இதுவே சனநாயகம் - காலச்சுவடு பதிப்பகம்

ஐயாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்..

 

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை (FETNA )

தமிழறிஞர் தொ.பரமசிவம் அவர்களின் மறைவுக்கு பேரவையின் அஞ்சலி
மாபெரும் தமிழ் பேரறிஞர் முனைவர் தொ.பரமசிவம் அவர்கள் திருநெல்வேலியில் வியாழக்கிழமை காலமானர். அவர் அழகர் கோவில், பண்பாட்டு அசைவுகள், அறியப்படாத தமிழகம், உரைகல், செவ்வி,"இந்து" தேசியம் மற்றும் பல நூல்களை இயற்றி உள்ளார். ஆய்வுலகில் தமிழரின் பண்பாட்டு வரலாற்றை உலகிற்கு படம் பிடித்து காட்டியவர்.நாட்டார் தெய்வங்கள், பெருந்தெய்வங்கள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், கலை, சாதி, பெரியாரியம் ஆகியவை குறித்து தொ. பரமசிவன் முன்வைத்த பார்வை தற்கால தமிழ் உரையாடல்களில் மிக முக்கியமானதாக அமைந்தது.
 
2016 நியுசெர்சியில் நடந்த பேரவை விழாவிற்கான விழாமலருக்கு "எங்கள் திருநெல்வேலி" என்ற தலைப்பில் கட்டுரை எழுதி கொடுத்திருந்தார். இந்த ஆண்டு பேரவையின் இணையவிழாவின் போது, அவரை சிறப்பு பேச்சாளராக அழைத்த போது உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் உரையாற்ற ஒப்பு கொண்டு, "தமிழர் தெய்வ மரபு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரின் மறைவு தமிழ் மொழிக்கு ஏற்பட்ட மிகப்பெறிய இழப்பாகும். அவரின் மறைவுக்கும் , அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் பேரவை தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
 

தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி

தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்டவர் தொ.பரமசிவன் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் நேற்று (டிச. 24) காலமானார். அவருக்கு வயது 70.

'அறியப்படாத தமிழகம்', 'அழகர் கோயில்', 'பண்பாட்டு அசைவுகள்' போன்ற இவரது நூல்கள் பரவலான கவனத்தைப் பெற்றவை. 'வழித்தடங்கள்', 'சமயங்களின் அரசியல்', 'விடுபூக்கள்', 'உரைகல்', 'மானுட வாசிப்பு', 'மஞ்சள் மகிமை', 'மரபும் புதுமையும்' உள்ளிட்ட பல நூல்களை தொ.பரமசிவன் எழுதியுள்ளார்.

தொ.பரமசிவன்: கோப்புப்படம்
அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இன்று (டிச. 25) வெளியிட்ட இரங்கல் செய்தி:

"திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பண்பாட்டு மானுடவியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், பேராசிரியரும், மாணவர்களாலும், வாசகர்களாலும் 'தொ.ப' என அன்போடு அழைக்கப்பட்ட தொ.பரமசிவன் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தொ.பரமசிவன் இளையான்குடியில் உள்ள ஜாகிர்உசேன் கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் பேராசிரியராகவும் மற்றும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராகவும் பணியாற்றியவர்.

தொ.பரமசிவன் பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், போன்ற பன்முகத்தன்மை கொண்டவர். இவர் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று வரைவுத் திட்டத்தில் உறுப்பினராக பணியாற்றியவர். பல நூல்களை எழுதியவர். இவர் எழுதிய 'அழகர் கோயில்' மற்றும் 'அறியப்படாத தமிழகம்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் 'அழகர் கோயில்' என்ற நூல், கோயில் ஆய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2017-ம் ஆண்டு உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொ.பரமசிவனுக்கு 'உலகத் தமிழ் பண்பாளர் விருது' வழங்கி கவுரவித்தது.

தமிழ் மொழியின் மீது பற்றும், பாசமும் கொண்ட தொ.பரமசிவனின் மறைவு அவர்தம் குடும்பத்திற்கும், தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் திரு.ஸ்டாலின் :
"தமிழறிஞர் - ஆய்வாளர் - தமிழர்களின் மரபியல் குறித்துப் பல நூல்களைத் தந்த படைப்பாளர் - பெரியாரிய, மார்க்சிய சிந்தனையாளர் திரு. தொ.பரமசிவன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழர்களின் பண்பாடு எத்தகைய தனித்துவமானது என்பதையும், குறிப்பாக நாட்டார் வழக்காற்றியல் குறித்தும் பல கட்டுரைகளையும், பேட்டிகளையும் வழங்கியுள்ள தொ.பரமசிவன் அவர்கள், திராவிட இயக்கமும் பெரியாரும் இந்த மண்ணில் ஏற்படுத்தியுள்ள அரசியல் - சமூக - பண்பாட்டுத் தாக்கங்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தவர்.

தந்தை பெரியார் நினைவு நாளில் தொ.ப. அவர்களும் மறைவெய்தியுள்ளார். அவரது மறைவுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான்
சென்னை: தமிழ் பேரறிஞர் 'பெருந்தமிழர்' பேராசிரியர் தொ. பரமசிவன் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: முதுபெரும் தமிழறிஞரும், மகத்தான வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளருமான எனது பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், மற்றும் உறவுகள் துயரில் நானும் ஒருவனாய்ப் பங்கெடுக்கிறேன்.

எளிய கிராமத்தில் பிறந்த என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்குக் கல்வியை மட்டுமல்லாது, தமிழுணர்வையும், மானுடச்சிந்தனையையும், சமூகப்பார்வையையும் அளித்த மகத்தான மாமனிதராவார். சமயங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் சார்ந்து அவர் நிகழ்த்தியிருக்கிற ஆய்வுகள் தமிழின அறிவுலகில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடிக் கண்டறிந்து ஆவணப்படுத்தி அவர் எழுதி இருக்கின்ற அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், சமயங்களின் அரசியல் போன்ற பல நூல்கள் தமிழினத்திற்கு அவர் வழங்கி இருக்கின்ற மகத்தான பெருங்கொடைகளாகும். இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக அவர் பணிபுரிந்த போது அவருடைய மாணவனாகப் பயின்ற அனுபவங்கள் மறக்க முடியாதவை. அவரால்தான் நான் உருவானேன். என் பேச்சில், என் எழுத்தில் என என் வாழ்வின் சகல விதத்திலும் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய எனது பேராசிரியர் மறைந்துவிட்டார் எனும் செய்தி ஏற்கவே முடியாத பெருந்துயரமாக மாறி, என்னை வாட்டுகிறது. நாம் தமிழர் என்கின்ற பெரும்படையை நாங்கள் கட்டியெழுப்பியபோது எங்களுக்கு வகுப்பெடுத்து வழிகாட்டிய பெருந்தகை அவர். மதுரை தியாகராயர் கல்லூரி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி எண்ணற்ற அறிஞர்களை, ஆய்வாளர்களை உருவாக்கிய பேரறிஞராவார். கடினமான ஆய்வு நூல்களைக்கூட எளிய தமிழில் சொல்லக்கூடிய அவரைப் போன்ற ஒரு மகத்தான எழுத்தாளுமை யாரும் இல்லை.

அவருடைய இழப்புத் தனிப்பட்ட அளவில் என்னை வெகுவாகப் பாதித்திருக்கிறது. இன்றளவும் எனக்கு வழிகாட்டிக்கொண்டிருந்த ஒரு ஒளி அணைந்து விட்டதே? என்று கலங்கி நிற்கும் வேளையிலும் அவர் நம்மிடம் விட்டுச்சென்றுள்ள காலத்தால் அழியாத அவரது ஆய்வு நூல்களும் அவர் கற்பித்த பாடங்களும் இன்னும் பல தலைமுறைகளுக்குத் தமிழினத்தை வழிநடத்திச்செல்லும் என்ற பேருண்மை நம்பிக்கையுடன் மீண்டெழ வைக்கிறது. ஐயாவின் மறைவு தமிழறிவுலகத்திற்கும், அரசியல் பண்பாட்டுத் துறைகளுக்கும் ‌மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்குமானப் பேரிழப்பாகும். உரிய அரசு மரியாதையோடு ஐயாவின் உடலை நல்லடக்கம் செய்ய தமிழக அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.

பெருந்தமிழர் நமது ஐயா தொ.பரமசிவன் அவர்களின் பெயர் தமிழினம் உள்ளவரை, தமிழ்மொழி வாழும் வரை மங்காத அறிவுப்பேரொளியாகச் சுடர்விடும். என் விழி முழுவதும் நிறைந்திருக்கின்ற கண்ணீரோடு என் பேராசிரியரின் பேரன்பிற்கு நன்றிப்பெருக்கோடு புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

மக்கள் வாழ்வுரிமை கட்சித்தலைவர் திரு.வேல்முருகன்
தமிழறிஞர் தொ.பரமசிவம் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல்: தமிழ் நாட்டார் வழக்கியலின் ஆகப் பெரும் பொக்கிஷம், தமிழின் தொன்ம வரலாற்றினை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்திட உடல் நலிவுற்ற தன் இறுதி காலத்திலும் அயராது உழைத்திட்ட அய்யா திரு.தொ.பரமசிவன். அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா அவர்கள் தமிழர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் திரு.கமல்ஹாசன்

தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் :

தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். தொ. பரமசிவன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றேன். தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுகளிலும், தமிழகத்தின் தொன்மையைப் புதிய கோணத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததிலும் மறக்கமுடியாத பணியாற்றியவர். இவை தொடர்பாக பேராசிரியர் பரமசிவன் அவர்கள் ஆராய்ந்து கண்டறிந்த தகவல்களும், எழுதிய நூல்களும் என்றைக்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும். அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 

வைகோ (மதிமுக )

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு!

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது.

தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான ஆவணங்கள் மூலம் ஆய்வு நூல்களை படைத்த பண்பாட்டுப் பேரறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியிருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் தமிழியல் துறை தலைவராக பணியாற்றியவர்.

பேராசிரியர், முனைவர் தொ.ப அவர்கள் பேராசிரியர் மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோரை முன்னோடியாக அவர் கருதினாலும் தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் ஆராய்ச்சி செய்வதற்கு புதிய முறையைப் பின்பற்றி முத்திரை பதித்தவர் ஆவார்.

தொ.ப .அவர்களின் ‘அழகர் கோவில் ஆய்வு’ நூல் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

புத்தகங்களில் இருந்தும், தத்துவங்களில் இருந்தும் வாதங்களை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில், தமிழ்நாட்டுத் தெருக்களில், கோவில் வாசல்களில், ஆற்றங்கரைகளில், திருவிழாக்களில், நாட்டார் தெய்வங்களின் முற்றங்களில் கள ஆய்வு செய்து, ஆய்வு உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தினார்.

அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும், சமயங்களின் அரசியல், விடுபூக்கள், பண்பாட்டு அசைவுகள், போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அவர் அளித்த கொடையாகும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் தோய்ந்து முன்னோடியாக திகழ்ந்தவர்.

மேலும் அவரது சங்க இலக்கிய ஆய்வுகளில் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் என்பதோடு மட்டுமின்றி, அதன்மீது எழுப்பப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை உருவாக்கின.

திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்றுக் கொண்ட தொ.ப., தந்தை பெரியார் சிந்தனைகள், கொள்கைகள் , தமிழினத்தின் விடியலுக்கு எல்லா காலத்திற்கும் தேவைப்படுகின்றன என்பதை இறுதி மூச்சு அடங்கும் வரையில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

பார்ப்பனியம் விழுங்கி செரிக்க முடியாத தந்தை பெரியார் கலக மரபு சிந்தனையாளர் என்று மிகச்சரியாகக் கணித்தவர் தொ.ப. அவர்கள்.

இந்துத்துவ சனாதன சக்திகள் நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முனைந்துள்ள சூழலில் மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்திற்கு கருத்து வளம் சேர்த்தவர் தொ.ப.

“மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், ரத்தக் களறிகள், பிறவகை வன்முறைகள், அனைத்திலும் இந்து என்ற கருத்தியலே மையமாகத் திகழ்கிறது. எனவே பெரியாரியப் பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தைத் தரவேண்டும்.

அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும், நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும்” என்று வலுவாகக் குரல் எழுப்பி, இந்த மண்ணில் சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்.

அவரது மறைவு தமிழினத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும், தமிழ் பண்பாட்டு ஆய்வு உலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.

பண்பாட்டுப் பேரறிஞர் தொ.ப. அவர்களுக்கு மதிமுக வீர வணக்கத்தை செலுத்துகிறது.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் திரு.பெ.மணியரசன்

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்குப் பின்னும் அவர் நூல்கள் தமிழர்களுக்கு வழிகாட்டும்!
 
தமிழறிஞர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள் 24.12.2020 அன்று பிற்பகல் திருநெல்வேலி மருத்துவமனையில் காலமான செய்தி மிகவும் துயரம் அளிக்கிறது. சமகாலத் தமிழ்ச் சமூக ஆய்வில் தமிழர் பண்பாட்டில் நிலவும் பல்வேறு கூறுகளைத் துல்லியப்படுத்தி அவற்றின் சிறப்புகளையும் தேவைகளையும் விளக்கியவர் ஐயா தொ.ப. அவர்கள். வட்டாரத் தெய்வ வழிபாடுகளில் உள்ள தனித்தன்மை, அவற்றின் ஆரிய ஆன்மிக எதிர்ப்பு, தமிழர் வீரம், தமிழர் பெருமிதம் ஆகியவற்றை நன்கு ஆய்வு செய்து நூல்கள் எழுதியுள்ளார்.
தமிழ்த்தேசியச் சிந்தனைகளைத் பல்வேறு நூல்களில் எடுத்துரைத்தார். தமிழ்வழிக் கல்விக்கானப் போராட்டங்களில் பங்கேற்று வந்தார்.
தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத வெறியர்கள் நடத்திய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து கண்டித்து வந்ததுடன், ஈழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தார். அதற்காகத் தமிழ்நாட்டில் நடந்த சனநாயக இயக்கங்களில் பங்கு கொண்டார்.
மிகச் சிறந்த ஆய்வாளராகவும், பேராசிரியராகவும் விளங்கிய தொ.ப. அவர்கள் மிகச் சாதாரணமான மனிதர்களோடும், இளைஞர்களிடமும் அன்புடனும் சமத்துவ மனநிலையுடனும் பழகி வந்த பண்பாளர். தொ.ப அவர்கள் கடந்த சில நாட்களாகவே நலக்குறைவால் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் திடீரென இயற்கை எய்தியது பேரதிர்ச்சியைத் தருகிறது.
அவர் மறைந்துவிட்டாலும் அவர் தந்திருக்கும் ஆய்வு நூல்கள் தமிழர்களுக்குத் தொடர்ந்து வெளிச்சம் தரும், ஊக்கம் தரும். தொ.ப. அவர்களின் மறைவிற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த துயரத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பேராசிரியர் ச.மாடசாமி

அருமை நண்பர். மூட்டா இயக்கத்தில் உயிருக்குயிராய் இணைந்திருந்தோம். ஒவ்வொரு போராட்டத்திலும் உடனிருப்பார். அடிப்படையில் ஒரு போராளி!பின்னர் நெல்லைப் பல்கலைக் கழகத்தில் வேறு வேறு துறைகளில் சேர்ந்து பணியாற்றினோம். பக்கத்துப் பக்கத்து அறைகளில் இருந்தோம்.தினசரி சந்திப்பு இருந்தது. அப்போது தமிழகம் அறிந்த பண்பாட்டுச் சிந்தனையாளர் அவர். எல்லாவற்றுக்கும் மேலாக நேர்மையின் வடிவம் அவர்.ஒருபோதும் மறக்கமுடியாத நண்பர் தொ.பரமசிவன். அவருடைய மரணம் தாங்கமுடியாத பேரதிர்ச்சி!....

பேராசிரியர் மு.இளங்கோவன்
பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் மறைவு!
அறியப்படாத தமிழகம் என்னும் நூலின் வழியாக ஆய்வுலகத்திற்குப் பெரும் பங்களிப்பு நல்கிய பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியறிந்து, நண்பர்களைப் போல் நானும் பெருங்கவலையுற்றேன். அன்னாரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களை முனைவர் நாக. கணேசன்(அமெரிக்கா) அவர்களுடன் 07.06.2008 இல் நெல்லையில் சந்தித்து உரையாடியுள்ளேன். பேராசிரியர் தொ.ப. அவர்களுடன் ஆதிச்சநல்லூருக்குச் சென்றமையும், அவர் எனக்கு வழங்கிய ஒரு அகல்விளக்கினைப் பெற்றுக்கொண்டமையும் இன்றும் என் மனக்கண்ணில் உள்ளது. தமிழர் பண்பாடு குறித்து ஆழமாக ஆராய்ந்த பெருமகனாரை இழந்துள்ளமை தமிழுக்குப் பேரிழப்பாகும். அவரின் ஆய்வுத் தடத்தைத் தொடர்வது அவருக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும். தொ.ப. புகழ் என்றும் நின்று நிலவும்.
படம்: ஆதிச்சநல்லூரில் தொ.ப. எனக்கு அகல் விளக்கு ஒன்றைப் பரிசாக வழங்கல்(07.06.2008).

தொடர்புடைய பதிவுகள்:
http://muelangovan.blogspot.com/2008/06/1.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_9550.html
http://muelangovan.blogspot.com/2008/06/2.html
http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_20.html

சென்னை பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை
இந்த ஆண்டு இழப்புகளின் ஆண்டாய் அமைந்துவிட்டது. தொடர்ச்சியான துயரங்கள்; ஈடுகட்ட முடியாத பேரிழப்புகள்.
பண்பாட்டு ஆய்வுகளில் புதிய வெளிச்சம் பாய்ச்சிய அறிஞர் தொ. பரமசிவன் இப்போது நம்மிடையே இல்லை. அவரின் ஆய்வுகள் பல ஆய்வாளர்களுக்கும் முன்னோடியாக இருப்பவை; பண்பாட்டின் அசைவுகளைப் படம் பிடித்துக் காட்டியவை. இந்த இழப்புகளை எப்படி ஈடுசெய்யப் போகிறோம்! தான் பெரிதும் நேசித்த, பின்பற்றிய தந்தை பெரியாரின் நினைவு நாளிலேயே தொ.ப அவர்களும் மறைந்து விட்டார்.
அறிஞர் தொ. பரமசிவன் அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள்!


திரு.செந்தில் ஆறுமுகம் , சட்டப்பஞ்சாயத்து இயக்கம்
பெரியாரைப் போற்றிய தொ.பரம”சிவன்” ஐயா
அவர்கள் வைகுண்ட ஏகாதசி நாளிலும், பெரியார் நினைவுநாளிலும் மறைகிறார்..!!
காலத்தின் கணக்குகள் வித்தியாசமானவை..!!
”அறியப்படாத தமிழகத்தை” எழுதியவர், தமிழகம் அதிகம் அறியப்படாதவராக அமரராகிறார்..!!
புத்தகங்களை மட்டும் படித்து வரலாற்றை எழுதாமல் மக்களைப் படித்து வரலாற்றை வடித்தவர் விடைபெறுகிறார்..!!
தமிழறிஞர்-வரலாற்று அறிஞர்-மானுடவியல் ஆய்வாளர்- தொ.பரமசிவன் மறைவு - இரங்கல்..!!

முனைவர்.சொ. சங்கரபாண்டி , வாஷிங்டன் டிசி
பேராசிரியர் தொ.ப. - ஆழ்ந்த இரங்கல்!
பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களின் மறைவு தமிழ் அறிவுலகத்துக்கு ஓரு பேரிழப்பு. 2003ல் முதன்முதலாக அவருடைய ”பண்பாட்டு அசைவுகள்” நூலைப் படித்த பொழுது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எனக்கு அது முக்கியமான பண்பாட்டு வரலாற்று ஆராய்ச்சிநூலாகப் பட்டது. அதேபோல் “அழகர் கோயில்” நூலும் மதுரை மாவட்டத்தின் பண்பாட்டு வரலாற்றில் முக்கியமாகப் பட்டது.
2008ஆம் ஆண்டு சூன் மாதம் திருநெல்வேலியில் அவருடைய ”வழித்தடங்கள்” நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்டேன். எழுத்தாளர் பிரபஞ்சன் வெளியிட்டார். அதற்கு முந்தைய நாள் ”தமிழ்மணம்” வலைத்திரட்டி சார்பாக திருநெல்வேலியில் நாங்கள் ஒருங்கிணைத்த இணையத்தமிழ் கருத்தரங்கில் சிறப்புப்பேச்சாளராக அழைத்திருந்தோம். அன்று பகல் முழுவதும் எங்களுடன் செலவிட்டார். முனைவர் நாக கணேசனையும், என்னையும், புதுச்சேரி மு. இளங்கோவனையும் ஆதிச்சநல்லூருக்கு அழைத்துச் சென்று தொல்லியல் சான்றுகளைச் சுற்றிக் காண்பித்தார்.
அப்பகுதியில் ஆங்காங்கே மேலாகக் கிடந்த தொல்லியல் சான்றுகளைக்காட்டி, அது தொடர்பான தொன்மையான வரலாற்றையும், தொல்தமிழகத்தில் இரும்பையும் மண்ணையும் சேர்த்து பல்வகை மண்பாண்டங்கள் செய்யப்பட்டதற்கான தொழில்நுட்ப அறிவையும் பற்றி விளக்கிச்சொன்னார்.
அவருடன் ஆதிச்சநல்லூரில் செலவிட்ட அந்த ஐந்தாறு மணிநேரத்தில் அவர் அடிக்கடி வருந்தியது பராமரிப்பற்றும் கேட்பாரற்றும் கிடந்த அப்பகுதியைத்தான். இந்தியத் தொல்பொருள் துறை அவ்விடத்தை எடுத்துகொண்டு ஒரு தட்டியை நிற்க வைத்ததோடு சரி. ஆடு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. மனிதர்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். சில இடங்களில் மேலாகச் சிறிய அளவில் தோண்டப்பட்டுக் கிடந்தன. எவ்வித ஆராய்ச்சியோ, கண்காணிப்போ அங்கிருக்கவில்லை. இந்தியத்தொல் பொருள் துறையின் அலட்சியத்தைப் பற்றி மிகவருந்தினார்.
பேராசிரியர் தொ.ப. அவர்களை 2008 அட்லாண்டா நகரில் நடந்த பேரவையின் (ஃபெட்னா) தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு விருந்தினராக அழைத்துப் பெருமை செய்ய முடிவு செய்திருந்தோம். அவரோ தான் ஆசானென்று கருதும் அறிஞர் முனைவர் ஆ. சிவசுப்பிரமணியம் அவர்களை அழைத்துப் பெருமைப்படுத்திய பின்னரே தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதனால் அவர்கள் இருவரையுமே அழைக்கலாமென்று முடிவு செய்திருந்தோம். முனைவர் ஆ. சிவசுப்பிரமணியம் அவர்களோ தான் சிறந்த பேச்சாளர் அல்ல. தனக்கு அமெரிக்கா சுற்றுப்பயணம் செய்வதிலும் பெரிதும் ஆரவமில்லை. பேராசிரியர் தொ.ப. நல்ல பேச்சாளரும் அறிஞரும் ஆவார், அவரை மட்டுமே அழையுங்கள் என்றார்.
அமெரிக்காவில் பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் எப்படி ஒருவரையொருவர் மதித்தும், மற்றவர்களிடமும் பண்புடனும் நடந்துகொள்கிறார்களோ அதேபோல் இருவரும் மிகவும் பண்புடனும் அன்புடனும் திகழ்ந்து எங்களை வியப்பிலாழ்த்தினார்கள்.
ஓரிரு நாட்களுக்குள்ளாகவே பேராசிரியர் தொ.ப. அவர்கள் ஸ்கூட்டர் வண்டியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால் அமெரிக்கா வரமுடியவில்லை. அதன்பிறகும் அவரால் அமெரிக்கா வர இயலவில்லை. இந்த ஆண்டு பேரவை மாநாடு இணையம் மூலம் நடந்தமையால் பேராசிரியர் தொ.ப. அவர் வீட்டிலிருந்து கலந்துகொண்டு உரையாற்றினார்.
மிகச்சிறந்த அறிஞர், வாசிப்பாளர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பேச்சாளர், தமிழுணர்வாளர், அனைத்துக்கும் மேலாக மிகச்சிறந்த மனிதர்!
அவருடைய மறைவு தமிழ் அறிவுலகத்துக்குப் பேரிழப்பு! ஆழ்ந்த இரங்கல்!!
 

திரு கோ. விசுவநாதன் , நிறுவனர் - தலைவர், தமிழியக்கம்

அருந்தமிழ் ஆய்வு ஊற்று
அடியோடு வற்றியதே !

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழ்த்துறை
மேனாள் தலைவர் பேராசிரியர்
முனைவர் தொ. பரமசிவம்
24.12.2020 அன்று மறைவுற்றார் என்ற செய்தி நெஞ்சில் இடியென இறங்கியது. ஆய்வுப்புலமும், அரிய அறிவுசார் தமிழ் உலகும் கண்ணுக்குள் கடல் பெருக்கிக் கலங்கி நிற்கின்றன. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் நெஞ்சநெருக்கம் பெற்றவர். பகுத்தறிவு, சுயமரியாதை, இனவுணர்வுக் கொள்கைகளை இறுதிவரை கடைப்பிடித்து மேற்கோள் மனிதராகப் பின்பற்றப்பட்டவர்.

காய்தல், உவத்தல் இன்றி மார்க்சிய நெறியில் ஆய்வுப்பாதை அமைத்துக்கொண்டவர். தமிழகக் கோவில்கள் பற்றிய அவரின் ஆராய்ச்சிகள் புதிய தடங்களை, தடயங்களை வெளிப்படுத்தி உள்ளன. பண்பாட்டுத் தளத்தில் முதல் ஏர் பூட்டிய எழுத்தாளர் அவர். அழகர் கோவில், பண்பாட்டு அசைவுகள், பரண், அறியப்படாத தமிழகம் உள்ளிட்ட 14 நூல்கள் அவரின் ஆழ்நிலை ஆய்வுகளுக்கு எழுத்து ஆவணமாக இலங்குகின்றன.

நாட்டார் வழக்காற்றியல் குறித்த இவரின் ஆய்வுகள் காலத்தால் அழியாத கல்வெட்டுப் பதிவுகள். இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி, மதுரை தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக அவர் ஆற்றிய பணிகள் அவரின் மாணவர்கள் மனதில் கமழ்ந்த வண்ணம் இருக்கும். தலைசிறந்த இலக்கிய ஆளுமையை இழந்த துயரம் என்றும் ஈரம் உலராமல் நம் இதயத்துள் இருக்கும். அன்னாரின் தமிழ்ப்
பணிகளுக்கு வீரவணக்கம் செலுத்தித்
தமிழியக்கம் தன் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்கிறது.

 

எழுத்தாளர் சு.வெங்கடேசன் , நாடாளுமன்ற உறுப்பினர்

அறியப்படாத தமிழகத்தை அறியச் செய்த மேதமை ஐயா தொ.ப அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.

 

திரு.பாமயன்

தமிழின் பண்பாட்டுச் சொத்து மறைந்துவிட்டது
தொ.பரமசிவன் என்ற தமிழகத்தின் பண்பாட்டுச் சொத்து மறைந்துவிட்டது. அன்பையும் தமிழ் அறிவையும் ஒருங்கே கொண்டிருந்த ஆளுமை இன்று நம்மைவிட்டுச் சென்றுவிட்டது. ஆம் 24.12.2020ஆம் நாள் தனது இமைகளை இமைக்க மறந்துவிட்டது. மதுரை அன்பு அச்சகத்தில் அவருடன் தமிழையும், அரசியலையும் பருகிக் கொண்ட நாட்கள் நினைவிற்கு வருகின்றன. ஒப்புரவு இதழில் அவர் எழுதிய நுட்பமான கட்டுரைகள் அதற்காக நான் அவரது இல்லத்திற்குச் சென்று பல நாட்கள் எழுதிய நேரங்கள், சாப்பிட வைத்து, பேருந்து நிறுத்தம் வரை வந்து வழியனுப்பிய நிகழ்வுகள், பாளையங்கோட்டை தெருக்களின் வரலாற்றைப் புரிய வைத்த நிமிடங்கள் மனக்கண்ணில் வந்து செல்கின்றன. எங்கள் ஆருயிர் அண்ணனை என்று, எங்கு காண்போமோ? கண்ணீர்த் துளிகளால் வணங்குகிறேன்.
 
பூவுலகின் சுந்தர்ராஜன்
அறியப்படாத தமிழ்நாட்டை உலகுக்கு உரைத்த அறிஞருக்கு தலைவர்கள் அஞ்சலி
 
 திரு பாலகிருஷ்ணன் IAS (Retd).
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே"
-புறநானூறு 165
 
 
எழுத்தாளர், பதிப்பாளர் திரு.ஆழி. செந்தில்நாதன்
அறிஞர் தொ.பவை தமிழ் உலகம் நினைந்துபார்க்கிறது. கண்ணீர் சிந்துகிறது. ஓர் அறிஞரை இந்தக் காலத்தில் இழந்துவிட்டோமே என்று ஆற்றாமையில் வாடுகிறது.
அறிவுஜீவிகள் நிறைந்திருந்தாலும் அவர்கள் மீது பெரும்பாலும் பாராமை பாராட்டும் இத்தமிழுலகில் தொ.பவுக்கு மட்டும் ஏன் இப்படி ஓர் இரங்கல்?
ஏனென்றால், அவர் மக்களோடு நின்றார். மக்கள் பக்கம் நின்றவர்களின் சித்தாந்தத்தை வலுப்படுத்தினார். போர்முனையில் ஓர் அறிவு ஈட்டியை நமக்கு உருவாக்கித்தந்தார். திரு பாலகிருஷ்ணன் Balakrishnan R ஐஏஎஸ் தன் இரங்கல் குறிப்பில் புறநானூற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார்:
"மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே"
நிலையற்ற இந்த உலகில் நிலைத்து நிற்கவேண்டும் என்று விரும்புபவர்கள் தங்கள் புகழை நிலைநிறுத்திவிட்டு அதன் பின் மாய்ந்துபோகிறார்கள் என்பதுதான் சங்கப் புலவன் பெருந்தலைச் சாத்தனின் கருத்து. தொ.ப. அதைத்தான் செய்திருக்கிறார். அவர் அந்த ஆயுதங்களை நிலையாக நம்மிடம் தந்துவிட்டுதான் விடைபெற்றிருக்கிறார்.
 
விடுதலை சிறுத்தைகள் திரு.தொல் . திருமாவளவன்
வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. பெரியாரிய மார்க்சிய பார்வையைக் கொண்ட அவருடைய ஆய்வுகள்,பண்பாட்டுத் தளத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆய்வுத் தளத்தில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவருக்கு எமது வீரவணக்கம்.
 
திரு வைகோ ,பொதுச் செயலாளர்,மறுமலர்ச்சி தி.மு.க
 
பண்பாட்டுப் பேரறிஞர் தொ.பரமசிவன் மறைவு
தமிழினத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..!
திரு வைகோ
அவர்கள் இரங்கல்
தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து தமிழின, மொழி, பண்பாடு, மரபுகளைக் காப்பாற்றுவதற்கு ஆய்வுத் துறையில் வெளிச்சம் பாய்ச்சிய ஒளிச்சுடர் அணைந்தது.
தமிழர் வாழ்வியலில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சிறப்புற்று விளங்கிய பண்பாட்டு மரபுகளை அசைக்கமுடியாத அழுத்தமான ஆவணங்கள் மூலம் ஆய்வு நூல்களை படைத்த பண்பாட்டுப் பேரறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாக தாக்கியிருக்கிறது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் தமிழியல் துறை தலைவராக பணியாற்றியவர்.
பேராசிரியர், முனைவர் தொ.ப அவர்கள் பேராசிரியர் மு.ராகவையங்கார், மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார், பேராசிரியர் நா.வானமாமலை ஆகியோரை முன்னோடியாக அவர் கருதினாலும் தமிழ் இலக்கியத்தையும், பண்பாட்டையும் ஆராய்ச்சி செய்வதற்கு புதிய முறையைப் பின்பற்றி முத்திரை பதித்தவர் ஆவார்.
தொ.ப .அவர்களின் ‘அழகர் கோவில் ஆய்வு’ நூல் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
புத்தகங்களில் இருந்தும், தத்துவங்களில் இருந்தும் வாதங்களை முன்வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட சூழலில், தமிழ்நாட்டுத் தெருக்களில், கோவில் வாசல்களில், ஆற்றங்கரைகளில், திருவிழாக்களில், நாட்டார் தெய்வங்களின் முற்றங்களில் கள ஆய்வு செய்து, ஆய்வு உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தினார்.
அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும், சமயங்களின் அரசியல், விடுபூக்கள், பண்பாட்டு அசைவுகள், போன்ற ஆய்வு நூல்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அவர் அளித்த கொடையாகும். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் தோய்ந்து முன்னோடியாக திகழ்ந்தவர்.
மேலும் அவரது சங்க இலக்கிய ஆய்வுகளில் எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் என்பதோடு மட்டுமின்றி, அதன்மீது எழுப்பப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை உருவாக்கின.
திராவிட இயக்கத்தின் மீது தீராத பற்றுக் கொண்ட தொ.ப., தந்தை பெரியார் சிந்தனைகள், கொள்கைகள் , தமிழினத்தின் விடியலுக்கு எல்லா காலத்திற்கும் தேவைப்படுகின்றன என்பதை இறுதி மூச்சு அடங்கும் வரையில் சொல்லிக்கொண்டே இருந்தார்.
பார்ப்பனியம் விழுங்கி செரிக்க முடியாத தந்தை பெரியார் கலக மரபு சிந்தனையாளர் என்று மிகச்சரியாகக் கணித்தவர் தொ.ப. அவர்கள்.
இந்துத்துவ சனாதன சக்திகள் நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைக்க முனைந்துள்ள சூழலில் மதச்சார்பற்ற சக்திகளின் போராட்டத்திற்கு கருத்து வளம் சேர்த்தவர் தொ.ப.
“மதத்தின் பெயரால் ஏற்படும் பதற்றங்கள், ரத்தக் களறிகள், பிறவகை வன்முறைகள், அனைத்திலும் இந்து என்ற கருத்தியலே மையமாகத் திகழ்கிறது. எனவே பெரியாரியப் பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தைத் தரவேண்டும்.
அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும், நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும்” என்று வலுவாகக் குரல் எழுப்பி, இந்த மண்ணில் சமய நல்லிணக்கம் தழைக்க வேண்டும் என்று ஓங்கிக் குரல் எழுப்பியவர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள்.
அவரது மறைவு தமிழினத்திற்கும், திராவிட இயக்கத்திற்கும், தமிழ் பண்பாட்டு ஆய்வு உலகுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு ஆகும்.
பண்பாட்டுப் பேரறிஞர் தொ.ப. அவர்களுக்கு மதிமுக வீர வணக்கத்தை செலுத்துகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய நண்பர்கள், ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சித்தமருத்துவர் கு.சிவராமன்
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை, பட்டுக் குஞ்சங்களை விலக்கி, பாமர வாழ்வியலில் இருந்து விளக்கிச் சொல்லும் ஒரு மாபெரும் வரலாற்று ஆசானை இழந்து விட்டோம்.
சித்த மருத்துவத்தை சிவபெருமான் - நந்தி தேவர் - சைவ சித்தாந்தம் என்ற ஒரே நேர்கோட்டில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல ஆய்வாளர்களை சமணத்துக்குள்ளே, குலதெய்வ மரபுக்குள்ளே, திணைக் கோட்பாட்டுக்குள்ளே எட்டிப் பார்த்து யோசிக்க வைத்த நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர் அவர்.
"பண்பாட்டு அசைவுகள்" நூல் என்னைப் போல பலருக்கும் ஒரு புதிய திறவுகோல். கடைசியாய் நான் அவர் எழுதிய "பாளையங்கோட்டை வரலாறு" நூலை வாசித்தபோது, என் ஊர் தாமிரவருணி நதியைத்தாண்டி, காலகாலமாய் எத்தனை ஆளுமைகள் ஒடிச் செழித்த ஊர் என நான் திமிர் கொண்டது உண்மை.
நேற்று காலையில்தான் மனுஷ்ய புத்திரனின் கருணாவிற்கான நினைவுக் கவியை வாசித்து நெகிழ்ந்திருந்தேன். அந்த கவிதையின் கடைசி வரி இந்த ஆசானுக்கும் பொருந்தும்.
"ஒவ்வொரு ஆட்டத்திலும்
யாரோ முக்கியமான ஒருத்தன் இல்லாமல்
ஒரு கை குறைவாக
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
ரொம்ப நாள்
இப்படியே ஆடமுடியாது சார்
முன் வரிசை ஆட்டக்காரர்கள்
சாகக்கூடாது என தடை விதியுங்கள்"
-மனுஷ்ய புத்திரன்
தமிழ் உலகின் ஒரு காலமானார் பேரா. தொ.அவர்கள். அன்னாரின் மறைவிற்கும் அவர் பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும் ஏராளமான மாணாக்கர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
 
by Swathi   on 24 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி இனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி
ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு
கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி கீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி
பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம் பூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம்
விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை விக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை
அனைத்துலக சிறந்த படைப்பாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ நாவல் தேர்வு அனைத்துலக சிறந்த படைப்பாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ நாவல் தேர்வு
மலர்ந்தது 38- வது மாவட்டம்  மயிலாடுதுறை மலர்ந்தது 38- வது மாவட்டம் மயிலாடுதுறை
தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்! தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.