LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியத்தில் இறையியல்

தமிழ் மக்கள் கண்டவை எவை, எவை என்று தொகைப்படுத்தி, வகைப்படுத்தி, கூறிய கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் தன்னுடைய நூலில் '' இசையை ஏழாக, சுவையை ஆறாக, நிலத்தை ஐந்தாக, காற்றை நான்காக, மொழியை மூன்றாக, இலக்கணத்தை இரண்டாகக் கண்ட (அகம், புறம்) தமிழ்ச் சான்றோர் தான் ஒழுக்கத்தையும் (உயர்திணை) இறைவனையும் ஒன்றாகவே கண்டவர்கள்'' என்று கூறும் கருத்திற்கு ஏற்ப, உலகமொழி அறிஞர்கள் இன்றைக்கும் கண்டு கூறாத சிறந்த கருத்துக்கள் பலவற்றை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய நம் தமிழ் அறிஞர் தொல்காப்பியர் என்றால் அது மிகையாகாது. ''தொல்காப்பியம் தமிழர்க்கு உயிர் நூல்'' என்பார் வ.சு.ப. மாணிக்கம். இப்படிப்பட்ட தொல்காப்பியத்தில் இறையியல் கருத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனை இனிக் காண்போம்.

இறை, கடவுள், தெய்வம் - சொற்பொருள்கள் விளக்கம்

(திருமந்திரம்-தொகுதி 1 மாமறை பேசுகிறது தொகுதி 1) என்ற நூலில்

இந்த மூன்று சொற்களுக்கும் விளக்கம் தரும் தவத்திரு தேமொழியார் சுவாமிகள் தனது நூல்களான திருமந்திரம் - தொகுதி - 1 மாமறை பேசுகிறது தொகுதி 1 பின்வருமாறு கூறுகின்றார். ''கடவுள் என்று சொன்னவுடனே அதில் இரண்டு வினைச்சொற்கள் உள்ளன. கட, உள் என்பவை அந்த வினைச் சொற்கள். இந்தச் சொல் மிகவும் அற்புதமான சொல். கட என்பதற்கு எல்லாவற்றையும் கட, எல்லாவற்றையும் கடந்துள்ளது. கட என்றால் செலுத்துதல், கடந்தும் உள்ளது. வைச சித்தாந்தம் சொல்லுகின்ற 36 தத்துவங்களையும் 60 தத்துவங்களையும் கடந்தது. ஆக 96 நிலைகளைக் கடந்தது. அடுத்தபடியாக உள்ள சாதி, இனம், மொழி மதம் இவற்றையெல்லாம் கடந்தது.

எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற ஒன்று கடவுள் ''சுட'' என்பது எழுந்து செயல்படுவதாகவும் ''உள்'' என்பது இருந்து செயல்படுவதாகவும் இருக்கின்றது. எல்லாவற்றினும் உள்ளிருப்பது என்றும், எல்லாவற்றையும் கடந்து நின்று உள்ளுதற்குரியது என்றே பொருள்படும் என்றும், '' இறைவன்-இறை என்பதற்கு ஒரு இலக்கணம் சொன்னார்கள் இறை என்றால் நுட்பமாக இருப்பது ''இறை நுண்மையான மேற்று'' என்று தொல்காப்பியம் பேசும். நுண்மை தன்மை உடையது எதுவோ அது இறைவன். அது எங்கெங்கே இறைந்திருக்கின்றது? நீங்கள் என்னென்ன பண்டங்களை உலகத்தில் காண்கின்றீர்களோ அந்த பண்டங்கள் எல்லாவற்றிலும் இறைந்து காணப்படுகின்றது. மலரின் அழகாய், தேனில் சுவையாய், தழையில் பசுமையாய், கொம்பில் கடினமாய், கொடியில் மென்மையாய் அப்படி எல்லாப் பொருளிலும் விரவிக் காணப்படுகிறது.

அதனால் இறை என்று பெயர் என்றும், தெய்வம் என்ற சொல்லில்'' தே-என்றால் முதன்மையானது தேசுடையது முதல் தெய்வம், முதல் ஒளி என்று கூறலாம் என்கின்றார் இதே சொல்லுக்கு பேராசிரியர் இலக்குவனார் கூறும்போது ''தெய்வம் என்பது தூய தமிழ்ச்சொல்லே'' தெய்வம்'' என்ற சொல், ''தேய்'' என்பதினின்றும் தோன்றியிருக்கக்கூடும் உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்பத்தை நீக்கத்திற்காகவே. ஆதலின் ''தெய்வம்'' எனும் தமிழ்ச்சொல் ''தேய்'' என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இனி இச்சொற்கள் தொல்காப்பியத்தில் வருமிடங்களைக் காண்போம்.

கடவுள் என்னும் சொல்லாட்சி வருமிடங்கள்

தெய்வம், கடவுள், இறைவன், என்ற மூன்று சொற்களும் ஒரே பொருளை தரும் சொற்கள். தொல்காப்பியமும் திருக்குறளும் - ஓர் ஒப்பாய்வு என்ற நூலில் டாக்டர் கு. மோகனராசு என்பவர் கடவுள் என்னும் சொல்லாட்சி எந்த இடங்களில் எங்கே வருகின்றது என்று கூறும் போது,

''தொல்காப்பியம் 1610 நூற்பாக்களைக் கொண்ட இலக்கண நூல்; ஏறத்தாழ 5,947 சொற்களைக் கொண்டது என்பர். அவற்றுள் கடவுள் என்னும் சொல் மூன்று இடங்களில் வந்துள்ளது. இச்சொல் இரண்டிடங்களில் அரசன் என்ற பொருளையும் ஓரிடத்தில் தெய்வம் என்னும் சொல் ஒன்பது இடங்களில் வந்துள்ளது. இச்சொல் வழிபடுதெய்வம், வாழ், தேவர் என்னும் பொருளிலே வழங்கப்பட்டுள்ளது''. என்றும், தெய்வம் சுட்டும் பிறசொற்களும் தொடர்களும் என்ற பகுதியில்'' தொல்காப்பியத்தில் 11 சொற்கள் தெய்வத்தோடு தொடர்புடையவை என்றும் அவற்றுள் அணங்கு, அமரர், இமையோர், கூற்றம், தேவர், வானோர், வேந்தன்,'' என்னும் சொற்கள் வருகின்றன என்றும் கூறுகின்றார்.

கடவுளின் முதன்மை

முதலில் அகத்திணை இயலுள், நிலமும் பொழுதும் முதற்பொருளாகும் என விளக்கிய தொல்காப்பியர், அவற்றுள் நிலங்களை விளக்கும் போது அவற்றிற்குரிய தெய்வங்களை முன்னர் சுட்டியிருப்பது கருதத்தக்கது.

''மாயோன் மேய காடுறை உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்''

அவ்வந் நிலங்களின் இயல்பிற்கேற்ப முழு முதலுக்கு பெயரிட்டு வழங்கினர். அகத்திணை இயலுள், கருப்பெருள் இவை எனக் கூறவந்த தொல்காப்பியர் முதலில் தெய்வத்தைக் கருப்பொருளாகக் கூறுகின்றார்.

''தெய்வம், உணாவே, மா, மரம், பள், பறை
.........................................................மொழிப''

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற இந்த மூன்றனுள் கருப்பொருள்தான் முதன்மையானது. ''தெய்வம்'' முதலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடவுட் பண்புகள்

மாயோனைக் குறிப்பிடும் போது அத்தெய்வம் நிலைத்த பெரும் சிறப்பினை உடையதென்றும், தாவா விழுப்புகழை உடையது என்றும் தொல்காப்பியம் குறிப்பிடப்பட்டுள்ளது.


''மாயோன் மேய மன்பெரும் சிறப்பின்
தாவா விழுப்புரம் பூவை நிலையும்''

(தொல்.பொரு. புற.5)

கடவுள், தெய்வம் என்னும் சொற்களில் மட்டும் இறைமையை தொல்காப்பியர் கூறியதோடு நில்லாமல், தொல்காப்பியம் முழுமையும் இறையியல் நிறையியலாக நிறைந்திருப்பதைக் காணலாம். (எ.கா) எழுத்ததிகாரத்தில்,

''தமிழில் உயிர், மெய், உயிர் மெய் என அமைந்த அற்புதச் செய்தி எண்ணுவதற்கு இனிமை பயப்பதாகும்.

''உயிர்'' என்பது ''ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியும் அழிவில் பொருளை'' ''மெய்'' என்பது சாருகின்ற பண்டங்கள் தோறும் சார்ந்ததின் வண்ணமாய்க் காணப்படும் ஆன்மாவை, ''உயிர்மெய்' என்பது கடவுளும் பரிபக்குவம் எய்திய ஆன்மாவும் இரண்டறக் கலந்த நிலையாகும்'' என்றும்.

''ஆன்மாவின் இயற்கை ஆணவத்தோடு நிற்றல், இதை தொல்காப்பியர் ''மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்'' என்றார். ஆன்மாவின் இயக்கமும் அதன் அனுபவ விளைவும் இறைவனால் நடைபெறுகின்றது. இந்த உண்மையைத் தொல்காப்பியர்'' மெய்யின் இயக்கம் அகரமொடு சிவனும்'' என்றார். ''க்'' என்ற மெய்யெழுத்தில் உள்ள புள்ளியே ஆணவமாகும். மெய் என்ற ஆன்மாவில் ஆணவம் என்ற புள்ளி அகல அகரம் அவற்றோடு ஒன்றாக வேண்டும். அப்போது ''க்'' என்ற புள்ளி இயல்பாக நீங்கி ''க'' என்று உயிரின் அளவாய் ஒலிக்கும். அதுபோல அகரமாகிய இறைவன் மெய்யாகிய ஆன்மாவில் கலந்து கொண்டால் ஆன்மா ஆணவம் நீங்கி அவன் அளவினதாய் நிற்கும்'' என்று கூறிய தவத்திரு தேமொழியார் சுவாமிகளின் கருத்து இங்கு ஆராயத்தக்கது. (மாமறை பேசுகிறது)

தொல்காப்பியம் ஒரு ''மொழி இலக்கண நூல்'' எனக்கூறி மருளுவோர் பலர். அஃது ஒரு பைந்தமிழ் வாழ்க்கை இலக்கியம் என்ற அளவில் பெருமையுறுவோர் மற்றொரு சாரார். ஆயினும் ஆழப்புதைந்து கிடக்கும் அரிய நுண்பொருள்களை அகழ்ந்து ஆய்ந்தால், பண்டைத்தமிழ் மகனின் இறைப்பற்று வெளிப்படும். பேரின்ப வேட்கை தெளிவுறும், நிறைவான வாழ்க்கையின் உண்மை இலக்கணம் உணரப் பெறும், வாழ்வின் முடிந்த முடிவான நிலை தெளிவாகும். அதனை அடைவதற்கான நெறிமுறைகளும் புலனாகும்.

எனவே தொல்காப்பியம், கவிஞன் ஒருவனது கற்பனைக் காவியமன்று; நமது ''உண்மை இன்ப வாழ்வு'' க்கு உறுதுணை புரிகிற ஓர் உயர் தனி இலக்கணம்'' வலிமையுள்ளது காலத்தை வென்று வாழும்'' என்பதற்கு ஏற்ப தொல்காப்பியம் காலவெள்ளத்தை வென்று வாழ்ந்தது; வாழ்கின்றது இனியும் வாழும்.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.