LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

கலைஞரின் தொல்காப்பியப் பூங்காவில் வரலாற்றுச் செய்திகள்

தொல்காப்பியம் தொல்காப்பியரால் இயற்றப்பட்டது. தொல்காப்பியப்பூங்கா மு.கருணாநிதி அவர்களால் அதன் விளக்க உரையாக மலர்ந்தது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர் அறுவர். பின்னர் உரை வரைந்தோர் பலர். அவர்களுள் காலத்திற்கேற்ற புதுமைக் கருத்துக்களைக் கையாண்டு வரலாற்றுக் குறிப்புகளை ஆங்காங்குத் தந்து விளக்கம் எழுதிய தனிச்சிறப்பு கலைஞருக்கே உரியது. அவரது உரைகளில் காணப்படும் வரலாற்றுக் குறிப்புகள் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.

தொல்காப்பியப் பூங்கா

தமிழில் கிடைத்துள்ள நூல்களில் மிகத் தொன்மையானது தொல்காப்பியம். இதை ஒரு, ''மரம் அடர்ந்த காடு'' எனக் கருதி உள்நுழைய அஞ்சி நின்றனர் தமிழ் மக்கள். அது காடன்று, ''கவின் மலர்கள் மலர்ந்து மணம் கமழும் பூங்கா'' என நிறுவித் தம் கருத்துக்களை வரலாற்றுச் சான்றுகளோடு எடுத்துக்காட்டி அரிய உரை விளக்கம் தந்தவர் கலைஞர்.

''மக்கள் படிக்க விரும்பும் எளிய நடையில், படிப்பவர் ஆர்வத்தை வளர்க்கும் சுவையான கதைக் குறிப்புகளுடனும், நினைவில் நிறுத்தத் துணையாகும் வரலாற்று விளக்கச் செய்திகளுடனும் இந்தப் பூங்காவை இயற்றியுள்ளார்'' என்னும் பேராசிரியர் க.அன்பழகன் கூற்றும்.

''தொல்காப்பிய உரைகள் அனைத்தையும் பயன்படுத்தியுள்ளதோடு, நூல் பற்றியும் உரைகள் பற்றியும் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் பலவற்றையும் அகரமுதலிகள் போன்ற பிற ஆதாரங்களையும் நன்கு பயன்படுத்தி இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. என்ற புலவர் மா. நன்னனது அணிந்துரையும் இந்நூலின் சிறப்பை விளக்குவனவாகும். எனவே இவ்வுரை வரலாற்றுக் குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டது என்பது விளங்கும்.

குயிலாலுவம்

சேரன் செங்குட்டுவன் வடநாடு வரை படையெடுத்துச் சென்று கண்ணகிக்குச் சிலை எடுக்கக் கற்கொண்டு வருவதற்காகக் கனகவியசருடன் போரிட்டு வென்ற இடம் குயிலாலுவம்.

மெய் எழுத்துக்கள் எத்தனை என்று எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ளுவது என்பதற்கு, இந்நிகழ்ச்சியைக்காட்டி விளக்குகிறார் கலைஞர்.

ஆசிரியரிடம் வகுப்பில் பூங்கோடி என்ற பெண் கூறுகிறாள்,

சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலையெடுத்திடக் கல் கொண்டு வர குயிலாலுவம், என்ற இடத்தில் கனகவியாசர் என்ற ஆகிய மன்னருடன் போரிட்டு வென்றான். அவர்கள் தலையில் கல்லேற்றச் செய்தான். அப்போது அவன் முழக்கமிட்டான்.

''தேவாசுரப்போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது! இராமாயணப்பேர் பதினெட்டு மாதங்கள் நடந்தது. 1.பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது! இமயம் வந்து இந்தச் செங்குட்டுவன் நடத்திய போர் பதினெட்டு நாழிகையில் முடிந்து விட்டது என்று'', அந்த வீர உரையை நான் நினைவில் எப்போதும் வைத்திருப்பதால் அந்த உணர்வோடு, மெய் எழுத்துக்கள் பதினெட்டு என்பதை நீங்கள் கேட்டவுடன் சொல்லி விடுவேன் என்றாள். மெய் எழுத்து பதினெட்டு என்பதை விளக்கச் செங்குட்டுவன் நிகழ்த்திய போர் வரலாற்றைச் சுட்டியது குறிப்பிடத்தக்கது.

ஆரியர் நுழைவு

வாகைத்திணை பற்றிய உரை விளக்கத்தில், தமிழ்நாட்டில் ஆரியர் நுழைவு பற்றிய உரை விளக்கத்தில், தமிழ்நாட்டில் ஆரியர் நுழைவு பற்றிய வரலாற்றுக் குறிப்பைக் கலைஞர் தெளிவாகத் தருகிறார்.

''அறுவகைப்பட்ட பார்ப்பன பக்கமும்''

என்பது புறத்திணை இயல் நூற்பா. இந்நூற்பாவுக்கு விளக்கம் தரும் கலைஞர்,''

''அதென்னப் பார்ப்பன பக்கம்? தொல்காப்பியத்தில் பார்ப்பனர் எங்கே வந்தனர்? எனக் கேட்கத்தோன்றும்

அவர்கள் வந்து விட்டனர். ஆனால் அவர்கள் வரப்போகின்றனர் என்பது, சொல்லதிகாரத்திலேயே சுட்டிக்காட்டப்படுகிறது. என்று கூறி தமிழகத்தில் ஆரியர் வருகை பற்றிய காலக் குறிப்பையும் தருகிறார்.

''தொல்காப்பியர் காலம் கி.மு.ஏழாம் நூற்றாண்டு என்று ஆய்வு செய்துள்ள ஆன்றோர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். அதாவது ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பே வடமொழி மோப்பம்பார்த்து முடித்து, ஆரியர் நுழைவுக்குத் தமிழ் நிலத்தில் வழி அமைத்துக் கொடுக்கப்பட்டு விட்டது''

இரண்டாம் உலகப்போர் என்று தெளிவுறுத்துகிறார்.

இலக்கியத்தில் அரசியலைக் கலக்கக்கூடாது என்ற உறுதிப்பாட்டுடன் தொல்காப்பியப் பூங்காவுக்குள் நுழைந்தேன் என்று கூறும் கலைஞர், தம்மையும் மீறிக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றுவகை எழுத்துக்களின் பிறப்பு பற்றிக் கூறும்போது, இரண்டாம் உலகப்போரில் திரண்டு நின்ற அணிகளை உவமையாக்குகிறார்.

''இரண்டாம் உலகப்போர் நடந்தபோது அமெரிக்காவைச் சார்ந்து சில நாடுகளும், இட்லரின் ஜெர்மனியைச் சார்ந்து சில நாடுகளும் போரில் ஈடுபட நேரிட்டன. இருபுறமும் தலையாய நாடுகளாக இறுதி முடிவெடுக்கும் செல்வாக்குடன் இருந்த நாடுகளைச் சார்ந்து தான் நேச நாடுகளின் வரிசையும், அச்சு நாடுகளின் வரிசையும் அமைந்தன என்பதைக் கடந்த கால வரலாறு மறக்காது! மறுக்காது!

அந்த அணிகளில் இடம் பெற்றாக வேண்டிய அவசியமும் கட்டாயமும், தமக்கெனத் தனித்தன்மையே இல்லாத, சார்ந்து மட்டுமே இருக்கக்கூடிய நிலை இயக்கங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த இயக்கங்களின் நிலைமைதான் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று எழுத்துக்களுக்கும் அமைந்துள்ளது என்பது தெளிவான உண்மையாகும் என்று எழுதுகிறார்.

குமணன் கொடை

இலக்கிய வரலாற்றுச் சான்றுகளை ஆங்காங்குக் காட்டிச் செல்வது கலைஞருக்குக் கைவந்த கலை.

உள்ளத்தில் உண்மை ஒளியும்-மாறாத உறுதியும் உடையவர்கள் எந்த அவையிலும் அஞ்சாமல் வாதாடுகின்ற ''தறுகண்'' படைத்தவர்களாயிருப்பார்கள் என்பதை,

''கல்வி தறுகண் இசைமை கொடை எனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே''

என்ற தொல்காப்பிய நூற்பா கூறுகின்றது. இதற்குக் கொடை வள்ளல் குமணனைச் சான்று தருகிறார்.

''கரும்பெடுத்துத் தமிழ் பிழிந்து மலரில்
கரும்பெடுத்து வருகின்ற தேன் கலந்து
அரும்பெடுத்துச் சிரிக்கின்ற மகளிர் கூட்டம்
எறும்பெடுத்துச் செல்கின்ற உணவு கூட
எம்மன்னன் குமண வள்ளல் தந்ததென்று
எழுச்சி நடை போடுகின்ற கொங்கு நாடு''
''அந்நாட்டு மன்னர் குமண வள்ளலின் பெயர்;
கொடை என்ற சொல்லை உதிர்த்த இடத்தில்
எல்லாம் உச்சரிக்கப்படுவதற்குக் காரணம்; அவர்
கொற்றவனாக மட்டுமின்றிக் கொடைவள்ளலாகவும்
திகழ்ந்தார் என்ற பெருமிதம் தானே!''
என்று எடுத்துரைக்கின்றார்.

அய்யர் - ஒரு விளக்கம்

ஒரு மொழியில் உள்ள சொற்கள் காலந்தோறும் பொருள் மாறுபட்டு வழங்குவது மொழியின் இயற்கை.

அய்யர் - என்ற சொல் இக்காலத்தில் பார்ப்பனர்களைக் குறிக்கும் சாதிப்பெயராக வழங்குகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறு வழங்கியதா? என்பதும் ஆய்வுக்குரியது.

''பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் காரணம் என்ப''

என்னும் தொல்காப்பிய நூற்பாவில் ''அய்யர்'' என்ற சொல் உணர்த்தும் பொருள் பற்றி அறிஞரிடையே கருத்து வேறுபாடு உண்டு.

கலைஞர் அவர்கள் பேராசிரியர் வெள்ளை வாரணனாரது உரையைச் சான்றாகக் கொண்டு, அய்யர் என்னும் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குவதாகும் என்று எழுதுகிறார். அதோடு வெள்ளை வாரணனாரது உரையை அப்படியே இடம்பெறச் செய்து அய்யர் என்ற சொல் வந்த வழியை அதாவது வரலாற்றை விளக்குகிறார்.

முடிவுரை:

உலக வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு, அரசியல் வரலாறு என்று பல வரலாறுகளையும் படித்து படிக்கின்ற விருப்பம் உள்ளவர் கலைஞர் அவர்கள் அவையில் கேள்வி கேட்கும் போதுகூட வராற்றுச் சான்றுகளோடு பதில் கூறும் திறமுடையவர் இவர். நினைத்தவாறு பல சான்றுகளையும் பொருத்தமுடன் கூறும் பாங்கு இவருக்கு இயல்பாய் அமைந்துள்ளது. ஆதலால் தான் தொல்காப்பியப் பூங்காவில் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டு கூறும்போது கூட வரலாற்றுச் செய்திகளைப் படிப்போர் வியக்கும் வண்ணம் எழுதியுள்ளார். ஒரே நேரத்தில் தொல்காப்பியரின் பெருமையையும், தமிழ்நாட்டின் பெருமையையும் இணைத்துக் கூறியிருப்பது படித்து மகிழ்தற்குரியது. தொல்காப்பியப்பூங்காவில் கூறியுள்ள பல வரலாற்றுச் செய்திகள் இலக்கண நுண் விளக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழும் வகையில் அமைந்துள்ளன என்று கூறலாம்.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.