LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியம் உணர்த்தும் தமிழ் மொழி உணர்வு !

உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்காப்பியம். காலத்தால் பழமையானது தமிழ்மொழி என்பதற்கும் சான்றாக உள்ளது. கி.மு.2-ம் நூற்றாண்டில் தோன்றியது தொல்காப்பியம் ஆகும். பண்டைத் தமிழரின் நாகரிகம், பண்பாடு, வரலாறு ஆகியனவற்றை நயமுற எடுத்துரைக்கும் நூலாகத் திகழ்வது தெல்காப்பியம். பண்டைத் தமிழரின் மொழிப்பற்றையும், இன உணர்வையும் அழகுற எடுத்துரைக்கும் நூலாகத் திகழ்வது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள தமிழ்மொழி உணர்வு, பற்றியச் சிந்தனைகள் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மொழி உணர்வு:

ஒரு சமுதாயத்தினரின் மொழி பற்றிய கருத்தாக்கமானது உணர்வோடும் அறிவோடும் இரண்டறக் கலந்ததாக உள்ளது. நம் தாய் மொழியினால் பெயர் பெற்ற நாடாகத் தமிழ்நாடும் இலங்குவதைக் காணலாம். தமிழர் தம்மைத் தம் தாய் மொழியாகிய தமிழின் வாயிலாக அடையாளம் காட்டுவதன் மூலம் தமிழ் மொழி உணர்வு, நிறைந்தவராய் திகழ்கின்றனர். அதனாலேயே சங்க காலத்துச் சேரன் செங்குட்டுவன் முதல் சமீப காலத்து தாளமுத்து, நடராஜன் வரையிலும் மொழிப் பகைவர்களுக்கெதிரான போரட்டம் தொடர்கிறது. சங்க காலத்தில் தொடங்கிய வடமொழிக்கு எதிரான எதிர்ப்புணர்வாவது சமீப காலத்தில் இந்தி போன்ற மொழிக்கு எதிரான எதிர்ப்பாகவும் வளர்ந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமைகளை விதந்துரைக்கும் பண்பானது தொல்காப்பிய நூலிலிருந்து பாவேந்தர் பாடல்களைத் தொடர்ந்தும் வந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியத்தில் தமிழ்ப் பெறும் இடம்

தொல்காப்பியத்தில் அதன் பாயிரம் தொடங்கி நூல் முடிய மொத்தம் ஐந்து இடங்களில் தமிழ் என்ற சொல்லாட்சி இடம் பெறுவதைக் காணலாம். ''தமிழ் கூறும் நல்லுலகத்து, ''செந்தமிழ் இயற்கை'' ''தமிழென் கிளவியும்'' ''செந்தமிழ் நிலத்து'' மற்றும் ''செந்தமிழ் சேர்ந்த'', என அவை இடம் பெற்று உள்ளதைக் காணலாம். தமிழ்மொழி, தமிழ்மொழியின் சிறப்பு, தமிழ்நாடு ஆகியவற்றைக் குறிப்பிடுவதற்கு இச்சொற்கள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியரும் பனம்பாரனாரும் தமிழை அடைமொழியிட்டுச் சிறப்பிப்பது தமிழின் சிறப்பை நுட்பமாகச் சிறப்பிப்பதற்காகவும், பருப்பொருள் நோக்கில் சிறப்பிப்பதாகவும் அமைந்துள்ளது.

தொல்காப்பியத்தில் தமிழ் என்னும் சொல்லாட்சி ஐந்து இடங்களில் மூன்று இடங்களில் ''செம்மை'' என்ற ஒரு சொல்லே அடைமொழியாக வருகிறது. நூற்றுக்கணக்கான அடைச்சொற்கள் தமிழைச் சிறப்பிப்பதற்காக பிற்காலத்தில் தோன்றின. அங்ஙனம் பிற்காலத்தில் எண்ணற்ற சொற்கள் தோன்றுவதற்கு முன்னோடியாக அமைந்திருப்பதைப் போல ''செம்மை'' என்ற அடைச்சொல் தொல்காப்பியத்தில் முதன்முதலில் இடம் பெற்றிருக்கின்றது.

செம்மை என்ற சொல்லுக்குத் தமிழ்ப் பேரகராதி பின்வரும் எட்டுப்பொருள்களைச் சுட்டுகிறது. ''சிவப்பு, செவ்வை, நேர்மை, மனக்கோட்டமின்மை, ஒற்றுமை, பெருமை, சுத்தம், அழகு'' என்று குறிப்பிட்டுள்ள இச்சொற்கள் தமிழில் சிறப்போடு பொருத்தமுடைய சொற்களாகத் திகழ்கின்றன.

செம்மை என்ற சொல்லானது முழுமை பெற்ற, சிறப்புப் பொருந்திய, சீரிய நெறியில் இலங்குகின்ற என்ற பொருள்களையுடைய நிலையில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியான தமிழானது முழுமை பெற்ற மொழியாகவும், எல்லாச் சிறப்புகளும் பொருந்திய மொழியாகவும் சீரிய மொழியில் இலங்குகின்ற மொழியாகவும் திகழ வேண்டும் எனத் தமிழர் விழைந்ததை அறிய முடிகிறது. செந்தமிழ் என்ற சொல்லுக்குக் கலப்பற்றத் தூய தமிழ் என்ற பொருளையும் ஈண்டு நோக்குதல் சிறப்புடையது.

தமிழ் என்ற சொல் இவ்வாறு அடைமொழிகளைப் பெற்று வருவதைக் கொண்டே அதன் தனித்தன்மை, விழைவு, சமுதாயத் தாக்கம் ஆகியனவற்றை அறிய முடிகிறது. இதனை மொழியில் பேராசிரியர் செ.வை.சண்முகசுந்தரம் ''செம்மை என்னும் அடைச்சொல்லைப் பெற்று வரும் செந்தமிழ் என்னும் சொல் உணர்வு, நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துவதாகவும் செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துவதாகவும் மதிப்பீட்டு நிலையில் இலக்கணம் வற்புறுத்தாவிடில் கிளைமொழி தோன்றிப் புதுமொழியாக மாறும் என்று எச்சரிப்பதாகவும்'' விளக்குவார்.

தொல்காப்பியரும் பனம்பாரனாரும் இங்ஙனம் தமிழுக்கு அடைமொழியிட்டுச் சிறப்பிக்கக் காரணம் தமிழ்மொழியானது செம்மையான, முழுமையடைந்த மொழியாக விளங்குவதோடு தமிழ்மொழிக்கு எதிரானப் பகைக்கு எதிராக தமிழின் வலிமையையும் பொலிவையும் எடுத்துரைக்க விழைந்ததுமாகும். இதனையே ''மொழியுணர்வு, என்பது பெரும்பாலும் மொழியின் தனிச்சிறப்பை விளக்கிக் காட்டுவதில் மட்டுமின்றி மொழிக்கும் சமூகத்துக்கும் உள்ள தொடர்பினைக் காட்டுவதிலும் அடங்கியிருக்கிறது'' என்னும் செ.வை.சண்முகசுந்தரம் கூற்று நோக்கத்தக்கது.

வடமொழி ஆதிக்கமும், தொல்காப்பியரின் மொழி உணர்வும்

ஆசியாவுக்குள் ஊடுறுவிய ஆரியர்கள் வட இந்தியாவை தங்கள் வலிமையால் வீழ்த்தினர். தென்னிந்தியாவின் மீது அது நடைபெற இயலாமல் போனதால் பண்பாட்டு படையெடுப்பை நிகழ்த்தினர் ஆரியர். இந்நிலையில் செல்வாக்குப் பெற்ற அவர்தம் மொழியான சமஸ்கிருதம் தமிழ்மொழியில் கலந்து செல்வாக்குப் பெறத் தொடங்கியது. இதனை ''வடசொல்'' (பொருள் எச்ச.397), வடசொற்கிளவி (சொல் 401), ''வடவெழுத்து'' (சொல் 401) ''அந்தணர் மறை'' (சொல் 102), ''மறையோர்'' தே எத்து மன்றல் எட்டு''

(பொருள் களவு 1) ''மறையோர் ஆறு'' (செய் 186) இவற்றின் வழி அறியலாம்.

ஓர் இனத்தை வீழ்த்த வேண்டுமானால் அவர்தம் மொழியை வீழ்த்த வேண்டும் என்னும் முதுமொழிக்கேற்ப செயல்பட்ட ஆரியர் தம் வடமொழியால், தமிழின் தனித்தன்மை, தமிழரின் சிறப்பு, வரலாறு, பண்பாட்டுப் பெருமை ஆகியன அழிந்திடாமல் காக்க வேண்டும் என்ற தன்னுணர்வோடு தொல்காப்பியர் செயல்பட்டார். இதன் விளைவாகவே,


''வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ,
எழுத்தோடு புணர்ந்த சொல்லா கும்மே''
(சொல் 401)


''மொழி பெயர்த்து அதர்பட யாத்தல்''
(பொருள் மரபு 98) என்று இலக்கணம் வகுத்தார்.

தொல்காப்பியர் காலம் தொட்டு இன்று வரை தமிழ்மொழியின், தமிழ்நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்திய அயலவர், தமிழ்மொழியை ''திராவிட, திராமிட, தெசிமொலோ, தமளிக்கா எனப்பல பெயரிட்டு வழங்கிய போதும் தமிழ் என்ற சொல்லே தமிழ்மொழியே குறிப்பதற்கு இன்று வரையிலும் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் தொல்காப்பியர் தம் நூலில் தமிழ் என்னும் சொல்லை தமிழரின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் கொடியாகவும், தமிழ்ப்பகைக்கு எதிராக ஏந்திய வாளாகவும் உறுதியாகப் பற்றி நின்றதே காரணம் ஆகும்.

மேற்கூறியவற்றால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியரும், பனம்பாரனாரும் மொழியின் பெயரை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளனர். வடமொழிக்கு எதிரான விழிப்புணர்வும், தாய் மொழியைப் பாதுகாக்கவேண்டிய தொலை நோக்குப் பார்வையும் தொல்காப்பியரிடமிருந்ததை அறிய முடிகிறது. மூவாயிரமாண்டுகளாக மட்டுமல்லாமல் 21-ஆம் நூற்றாண்டிலும் சாதியாலும், சமயத்தாலும் பிளவுண்டு கிடக்கும் தமிழ்ச் சமுதாயத்தை ''தமிழ்'' என்ற சொல்லால் மட்டுமே இணைக்கமுடியும் என்பதை நமக்குயர்த்தியப் பெரும் சிந்தனையாளர் தொல்காப்பியர் ஆவார். ஆற்றுக்குக் கரைகள் காவலாக அமைவது போல தமிழ் இனத்திற்கு காவலாக அமைவது தமிழே என்பதை நமக்குணர்த்தியவர் தொல்காப்பியர் ஆவார்.

நாற்றங்காலில் நீர் நிறைந்திருப்பது போல் நமக்குள் எப்போதும் மொழிப்பற்று நிறைந்திருக்கவேண்டும் என்னும் விதையை முதலில் விதைத்த மொழிக்காவலர் தொல்காப்பியர் ஆவார்.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.