LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியர் காட்டும் பெண்கள்

தொல்காப்பியம் தமிழ்மொழியின் அமைப்பையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் பழம்பெரும் நூல் ஆகும். வேறு எந்த மொழியிலும் இல்லாத பொருளதிகாரத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமையுடையது இந்நூல் தொல்காப்பியர் காட்டும் பெண்களின் இயல்பு, தலைவியின் தன்மை, தோழியின் அறிவுத்திறம், செவிலியின் செயல், நற்றாய், பரத்தையர், பண்புகள் ஆகியவற்றைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்களின் இயல்பு

பண்டைக்காலம் முதல் இன்றுவரை பெண்கள் என்றாலே மென்மையானவள் என்ற கருத்து நிலவுகின்றது. பெண் இயல்பாகவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்ற குணங்களை உடையவள் என்று கூறப்படுகின்றது. இத்தகைய இயல்புகள் உடையவர்களாகத் தொல்காப்பியர் காலப் பெண்கள் சுட்டப்படுகின்றனர். இதனை,

''அச்சமும் நாணும் மடனும் முந்துறத்தல்
நிச்சமும் பெண்பாற்குரிய என்ப''

(களவு.8)

''உயிரும் நாணும் மடனும் என்றிவை
செயிர்தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய'' (பொருள்.7)
செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலான'' (பொருள்.15)

என்று தொல்காப்பியர் கூறுகின்றார். இவ்வியல்புகளை உடையவராக இருப்பதால்தான் தலைவி தன் காதலைத் தலைவனிடம் நேரடியாகக் கூற இயலாதவளாக இருக்கின்றாள் எனத் தெரிகின்றது. ஆணுக்கு நிகராகப் பெண்கள் இருக்கவில்லை எனத் தெரிகின்றது.

கற்பு

பெண்களுக்கு உயிர் போன்றது கற்பு, கற்பின் வழி நடப்பது பெண்களுக்குச் சிறப்பு, இதனை,

''உயிரினும் சிறந்ததன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று'' (களவு. 23)

''கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
................................
............................... கிழவோள் மாண்புகள்'' (கற்பு.11)

என்று தொல்காப்பியர் கூறுகின்றார். உடன்போக்குக்குப் பின் தலைவன் பிரிந்த போது தலைவி தோழியின் துணை கொண்டு கற்பு நெயியில் நிற்பவள் என்பதை,

''போக்குடன் அறிந்தபின் தோழியொடு கெழீஇக்
கற்பின் ஆக்கத்து நிற்றற் கண்ணும்'' (களவு.25)

என்று கூறுகின்றார். இதன் காரணமாகத்தான்,

''முந்நீர் வழக்கம் மகடூவோடில்லை'' (அகத். 34)
''எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார்'' (கற்பு.34)

என்று தொல்காப்பியர் கூறுகின்றார். தலைவன் தன் காதல் நிறைவேறாத போது தன் காதலைத் தலைவிக்கும் ஊரார்க்கும் தெரிவிக்கும் நோக்கம் மடலேறுதல். இது ஆண்களுக்கு மட்டுமே இருந்தது. இவ்வழக்கம் பெண்களுக்குச் சிறந்ததன்று என எண்ணினார்.

தலைவியின் தன்மை

தலைவி தன் விருப்பத்தை நேரடியாக உணர்த்தாமல் மறைமுகமாகக் குறிப்பதாலும், சூழ்நிலையாலும் உணர்த்தும் தன்மை உடையவள். தலைவனுக்கு எதிர் நின்று அவன் சொன்னவற்றிற்கு மறுத்துப் பேசியவளாகச் சுட்டப்படவில்லை; குறிப்பால் உணர்த்தும் தன்மையை,

''காமத்திணையில் கண்ணின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆதலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வயினான'' (களவு.17)

''கன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திற்கு இல்லை'' (களவு.27)

என்று தொல்காப்பியர் கூறுகின்றார். களவொழுக்கத்தில் தலைவி பேசிய இடங்களை (களவு.16), (களவு.20) சில நூற்பாக்களில் கூறுகின்றார். தலைவி தலைவனுக்கு எதிராக நின்று எதிர்த்துப் பேசவில்லை (களவு 19) தலைவி தன்னைப் புகழ்ந்து தலைவனுக்கு முன் பேசியதும் இல்லை (கற்பு.39) என்று கூறுகிறார். கற்பொழுக்கத்தில் தலைவி பரத்தமைக் காரணமாகவும், இல்லறம் நடத்தும் போது தலைவி அஞ்சுகின்ற அச்சத்தையும் (கற்பு. 6,7) பற்றி தொல்காப்பியர் கூறுகின்றார்.

தோழியின் அறிவுத் திறம்

தொல்காப்பியர் காட்டும் தோழி அறிவு நிரம்பியவளாகவும், உலகை நன்கு அறிந்தவளாகவும் இருக்கின்றாள்.

தோழியின் அறிவைத் தலைவன் தலைவியின் உணர்வை உணர்ந்து அதற்கேற்றாற்போல் செயல்படும் திறத்தின் மூலம் தெரிகின்றது. இதனை,

''குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
இருவரும் உள்வழி அவன்வர வுணர்தலென
மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே'' (களவு.37)

என்று கூறிகிறன்றார். தோழியின் விடாமுயற்சியைத் தலைவன் தலைவியின் நிலையை உணர்ந்த தோழி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து இருவரையும் சேர்த்து வைக்கும் ஆற்றலுடையவள் (களவு.38) என்று கூறுகின்றார். தோழியின் மனவுறுதியை,

''உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலான்
உரியதாகும் தோழிகண் உரனே'' (பொருள்.45)

என்று கூறுகின்றார். தோழி மட்டுமே தலைவன் தலைவியை புகழ்தல் (பொருள்.46), தலைவனும் தலைவியும் சந்திக்கும் இடத்தைத் தேர்வு செய்தல் (களவு.19) என்று தொல்காப்பியர் கூறுகின்றார். தலைவிக்காகத் தோழி அறத்தொடு நின்றதை (களவு.23) உடன்போக்கின் போது தோழி அடைக்கலம் தேடிக் கொடுத்ததை, ''ஓம்படக் கிளவிப் பாங்கின் கண்ணும்'' (களவு.24) என்று கூறுகின்றார். மேலும் தோழி பேசும் பல இடங்களை (அகத்.39), களவு.34) ஆகிய நூற்பாக்கள் உணர்த்துகின்றது. அறிவுமிக்கவள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியுடையவள், நினைத்ததை சாதிக்கும் தைரியம் உடையவள் எனத் தெரிகின்றது.

செவிலியின் செயல்

எதையும் ஆராய்ந்து உணர்ந்து அரிய கருத்துகளைக் குறிப்பால் அறிந்து கூறும் இயல்புடையவள். நடந்து முடிந்தது. நடக்கப் போவது, நடந்து கொண்டிருப்பது பற்றியும், தீயவை விலக்கி, நல்லவை எடுத்துக்கூறும் பாங்குடையவள். இதனை,

''கழிவினும் வரவினும் நிகழ்வினும் வழிகொள
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்
செவிலிக்குரிய ஆகும் என்ப'' (கற்பு.12)

என்று தொல்காப்பியர் கூறுகின்றார். செலிவியின் இயல்பினை (களவு.33) என்ற நூற்பாவில் கூறுகின்றார். செலிலி பேசுமிடங்களை (களவு.24) நூற்பா கூறுகின்றது. செவிலி வளர்ப்புத் தாயாக இருந்தாலும், தன் மகளை விடத் தலைவிக்கு முக்கியத்துவம் கொடுப்பவளாகவும், தலைவியை நல்வழிப்படுத்துபவளாகவும் திகழ்கின்றாள் எனத் தெரிகின்றது.

நற்றாய் புலம்பல்

உடன்போக்கில் தலைவன் தலைவியை அழைத்துச் சென்றான். தலைவியையும், தலைவனையும், தன் நிலையையும் உடன்போக்குக்குப்பின் எண்ணிப் புலம்பும் தன்மை உடையவள். இதனை,

''தன்னும் அவனும் அவளும் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
..........................
போகிய திறத்து நற்றாய்ப் புலம்பலும்
ஆகிய கிளவியும் அல்வழி உரிய'' (அகத்.36)

என்று தொல்காப்பியர் கூறுகின்றார்.

பரத்தையர் பண்பு

பரத்தையர் என்போர் ஒருவரையும் மணம் செய்து கொள்ளாமல் மன்னர், செல்வந்தர் போன்றோர்க்கும், காமுகர்க்கும் இன்பம் நல்கும் உரிமையுடையப் பெண்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தம்மை நாடி இன்பம் துய்ப்போர் தரும் பொருளில் வாழ்க்கை நடத்தினர். அதனால் பொருட்பெண்டிர் எனவும் கூறப்பட்டனர். இவர்களை காமக்கிழத்தி, பரத்தை, மாயப்பரத்தை என்றும் கூறுவர்.

காமக்கிழத்தி என்பவள் தலைவனது செல்வநிலையை அறிந்து தலைவன் மீது அன்புபூண்டு வாழ்க்கை நடத்தும் அயல் மகளிர், தலைவன் மீதும், தலைவனின் குடும்பத்தின் மீது அக்கறை உடையவளாகத் திகழ்பவள். இவர்களை இல்லக் கிழத்தி என்றும் கூறுவர். இதனை,

''காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் (கற்பு.5)
''காமக் கிழத்தி தன்மகத் தழிஇ
ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும்'' (கற்பு.7)

என்று தொல்காப்பியர் கூறுகின்றார். தலைவிக்கு அடுத்த நிலையில் தலைவனுக்காக இருப்பவள் எனத்தெரிகின்றது.

உடன்கட்டை ஏறுதல்

தொல்காப்பியர் காலப் பெண்கள் கணவன் இறந்தவுடன் தானும் இறந்தனர். இதனை பாலை நிலை என்றும், தாபதநிலை என்றும் கூறுவர். போரில் இறந்த தலைவனை, எண்ணி தலைவி வருந்துவதையும், தலைவி உடன்கட்டை ஏறுவதைப் போன்ற பல்வேறு செய்திகளைப் புறநானூற்றுப் பாடல்களால் அறியமுடிகிறது.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.