LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியம் தொன்மையும் சிறப்பும்

அன்னைத் தமிழ்மொழி மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய தொன்மைச் சிறப்பு மொழி.

இயல், இசை, நாடகம் என்னும் முத்திறத்திற்கேற்ப பல இலக்கிய இலக்கணங்களை உடையதாய் விளங்கியது. அம்மூவகையினுள் இசையும் நாடகமாகிய இரண்டன் இலக்கிய இலக்கணங்கள் மறைந்துவிட்டன. இயற்றமிழின் இலக்கிய, இலக்கணங்களே இப்பொழுது இருக்கின்றன. இயற்றமிழின் இலக்கணமானது எழுத்து, சொல் பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பகுதியினை உடையது. இவற்றுள் எழுத்து, சொல், யாப்பு, அணி என்னும் ஐந்து பகுதியினை உடையது. இவற்றுள் எழுத்து, சொல், யாப்பு, அணி என்னும் நான்கு இலக்கணங்கள் பிற மொழிகளிலும் உள. அந்நான்கனோடு பொருளுக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ்.

பண்டை இலக்கண நூல்களுள் சிறிதும் சிதையாமல் முற்றுங் கிடைத்திருப்பது தொல்காப்பியம் ஒன்றே. இலக்கண நூல்களுள் முதன்மையான நூலாகக் கொள்ளப்படுவதும் இந்நூலேயாகும்.

தொல்காப்பியம்-தமிழின் பழைமையையும் பெருமையையும் பறைசாற்றும் நூல். பண்டைக்காலத்துத் தமிழ்ப் பழங்குடிகளுள் ஒன்றான காப்பியக்குடியின் பிறந்த சிறந்தோர் ஒருவராற் செய்யப்பட்ட ஒப்பற்ற நூல்.

காப்பியம் என்பது தமிழ்நாட்டோடு தொடர்புற்றுத் தமிழ்க் குடியைக் குறிப்பதாகவே அறியப்படுகிறது,

தொல்காப்பியர் காலம் வடமொழி வியாகரணம் இயற்றிய பாணினியின் காலத்துக்கு முற்பட்டதென்பது பெரிதும் கருதத்தக்கது.

தொல்காப்பியப்பாயிரத்திலேயே ''ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'' என இவர் சிறப்பிக்கப்படுகிறார். வடமொழிக்கு ஐந்திரம் என்ற இலக்கணமே முற்பட்டிருந்ததென்பதும் அதற்குப் பின்னரே பாணினீயம் தோன்றியதென்பதும் வடநூலாரும் ஒப்புக் கொள்ளும் உண்மையாகும். தமிழிலக்கண நூலுணர்ச்சி பாயிரத்தின் முற்பகுதியில் ''முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலந் தொகுத்தோனே போக்கறுபனுவல்'' எனத் தெள்ளிதின் உரைத்தமையால், சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழிலக்கணநூல் முழுவதும் அவர் கண்டவர் என்பதும், அந்நூற்பொருள் முழுவதையும் தாம் முறைப் படுத்தினார் என்பதும், விரிந்து கிடந்த நூற்பொருளை தம் நுண்மான நுழைபுலத்தால் - அகன்ற ஆழமான அறிவால் தொகுத்துக் கூறியமையால் இந்நூல் எவ்வகைக் குற்றமற்று விளங்குகிறது என்பது தெளிந்த நீரோடை.

நூல் என்பது இக்கால இலக்கண இலக்கியங்களைக் குறித்தாலும் அக்காலத்தில் இலக்கண நூலையே குறித்தது.

நச்சினார்க்கினியரும் ''முந்துநூல் அகத்தியமும் மாபுராணமும், பூத புராணமும், இசை நுணுக்கமும்'' என உணர்த்தியமை காண்க.

பிற்காலத்துப் பவணந்தியால் செய்யப்பட்ட நன்னூலின் சிறப்புப்பாயிரத்தில் ''............முன்னோர் நூலின் வழியே நன்நூற் பெயரின் வகுத்தனன்'' என்று கூறப்படுகிறது.

தொல்காப்பியப்பாயிரத்தின் முற்பகுதியில்

''வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி''

என இலக்கியங்களெல்லாம் செய்யுள் என்று குறிக்கப்பட்டு போந்தமையால் நூல் என்பது இலக்கணத்தையே குறித்தது என்பது தெளிவு.

ஆகவே, தொல்காப்பியம் - உலக வழக்கையுணர்ந்து, பண்டைத் தமிழிலக்கியங்கைள ஆராய்ந்து, எழுத்து, சொல், பொருள், என்பவற்றின் அமைதிகளை உணர்ந்து சிறந்த அகத்திய முதலாகிய இலக்கணங்களையும் தெளிந்து செய்யப்பட்டது என்பது பேருண்மையாம்.

எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றும் முறையே மூன்று அதிகாரத்தில் கூறப்படுகின்றன.

எழுத்தும் சொல்லும் தமிழ்மொழியின் அமைதியை விளக்குகின்றன.

பொருளின் சிறப்பு யாதெனின் தமிழரே உலகத் தோற்றத்தில் முதற்கண் நிலைபெற்ற பண்டைப் பெருங்குடி என்பது தெளிவாக உணர்த்துவதாகும்.

ஆம்.....உலகத்தே முதலில் மக்கள் மரஞ்செறிந்த மலையிடத்தே தோன்றி, எதிர்பட்ட விலங்குகளைக் கொன்றுண்டு வாழ்க்கை நடத்தி பின் காலப்போக்கில் முல்லை நிலத்தே வந்து தங்கி சில தானியங்களை உண்டு வாழ்ந்து பின் மருத நிலத்தே ஆற்று நீரைத் தேக்கிப் பயன் கொண்டு மேம்பட்ட உழுதொழில் செய்து வாழ்ந்து பின் தொழில்பெருக்கி, நெய்தல் நிலத்தே பட்டினமைத்துக் கடல் கடந்து நாவாய் (படகு) மூலம் சென்று வாணிகம் புரிந்து இன்று வரை மேம்பாடு அடைந்து வருவது வரலாற்று உண்மை தானே?

''கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோற்றி மூத்த குடி''

என்று கூறி நானிலப்பகுதியில் குறிஞ்சி நிலத்தையே மக்கட் தோற்றத்திற்கான முதலிடமாகக் குறிப்பிட்டமையும் காண்க.

மக்கட் பெருக்கத்திற்குக் காரணமாயிருந்த இத் தழிழ்க் குடியினரிடத்தே, அத்தன்மைக்கேற்பக் காதலும் வீரமும் சிறந்திருந்தமையால் அவ்விரண்டையும் நுனித்தறிந்து வரையறை செய்து விரித்து பேசுவதே பொருளதிகாரம்.

காதலைத் தூயமுறையில் நுணித்தறியும் பேருணர்வுடன் உலகில் தோன்றிய பழங்கலை மக்கட் கூட்டத்தினரிடையே மேம்பட்டுத் தோன்றுவதற்கான குணமாய வீரவுணர்வு வாய்ந்த தனி நாகரிகம் தமிழ் மக்கள் என்பதை உணர்த்தும் இத்தொல்காப்பியம் தமிழரின் பழம் பெருமையைப் பண்பாட்டை உணர்த்த வந்த ஒரு ஒப்பற்ற நூல் என்பதும் நாம் ஒவ்வொருவரும் உணரத்தக்கது.

2700 ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்கு மட்டுமின்றி மனித வாழ்விற்கும் இலக்கணம் சொன்ன நம் தொல்காப்பியம் போன்ற பிறிதொரு நூல் உலக மொழிகளில் எங்கும் இல்லை என பன்மொழிப் புலவர்களும் பேரறிஞர்களும் ஆய்வாளர்களும் கண்டு தெளிந்து நமக்கு உணர்த்தியுள்ளமையும் ஈண்டு நோக்கி சிந்திக்கத் தக்கது.........''நான் தமிழன்'' என நாம் ஒவ்வொருவரும் மார்தட்டிக் கொள்ள பெருமை கொள்ள மகத்தான நூல் தொல்காப்பியம் என்றால் அது மிகை இல்லையன்றோ?

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.