LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1135 - களவியல்

Next Kural >

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
('இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன'? என்றாட்குச் சொல்லியது.) மாலை உழக்கும் துயர் மடலொடு - மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும், முன் அறியேன்; தொடலைக் குறுந்தொடி தந்தாள் - இது பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள். (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்' என்பது கருத்து.)
மணக்குடவர் உரை:
மாலைபோலச் செய்யப்பட்ட சிறுவளையினை யுடையாள் மடலோட கூட மாலைக்காலத்து உறுந்துயரினைத் தந்தாள். தொடலை யென்பதற்குச் சோர்ந்த வளை யெனினும் அமையும். குறுந்தொடி- பிள்ளைப்பணி. இவை ஏழும் தலைமகன் கூற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
(இவ்வாற்றாமையும் மடலேறுங் கருத்தும் நுமக்கெவ்வாறு வந்தன என்ற தோழிக்குச் சொல்லியது .) மாலை உழக்கும் துயர் மடலொடு - நான் மாலை வேளையிற் படுங்காமத் துயரினையும் அதற்கு மருந்தாகிய மடலேற்றம் பற்றிய எண்ணத்தையும் ; தொடலைக் குறுந் தொடி தந்தாள் - மாலை போல் கையை வளைந்த சிறு வளையல்களையுடைய உன் தலைவி தந்தாள் . காமநோய் ஏனைவேளைகளிலு முளதேனும் மாலைக் காலத்திலேயே மிகுதியாகத் தாக்குவதால் , ' மாலையுழக்குந் துயர் ' என்றும் , அந்நோயின் முதிர்ச்சி பற்றியே மடலேற்றத் துணிவும் வந்ததனால் ' மடலொடு ' என்றும் , நோயைத் தணிக்கும் ஆற்றலுள்ளவளாயிருந்தும் அதைத் தானாகச் செய்யத்தக்க பருவமும் உரிமையும் இல்லாத இளமையள் என்பது தோன்ற ' தொடலைக் குறுந்தொடி ' என்றும் , கூறினான் . அவள் நின் பொறுப்பிலும் ஆட்சியிலும் உள்ளமையால் , நீயே என் துயரை நீக்கவேண்டுமென்பது கருத்து . ' குறுந்தொடி ' அன்மொழித் தொகை .
கலைஞர் உரை:
மேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.
சாலமன் பாப்பையா உரை:
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
Translation
The maid that slender armlets wears, like flowers entwined, Has brought me 'horse of palm,' and pangs of eventide!.
Explanation
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night.
Transliteration
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu Maalai Uzhakkum Thuyar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >