LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியத்தில் கல்வி

முன்னுரை

''கல்வி கரையில; கற்பவர் நாள்சில; மெல்ல நினைக்கின் பிணிபல'' என்ற வாழ்வியல் உண்மையை முற்றும் உணர்ந்த பெருந்தகை தொல்காப்பியர். இத்தகைய பண்பு நிறைந்த தொல்காப்பியம் இயற்றிய ''தொல்காப்பியம்'' கல்வி குறித்து எடுத்தியம்பியுள்ள கருத்துக்களைப் பற்றி ஈண்டு காணலாம்.

பண்பாளர் கருத்து

''பயிற்சியும் பாடத்தில் தேர்ச்சியும் பெற்று கடமையுணர்வோடும் உற்சாகத்தோடும் ஆசிரியர்கள் பணிபுரிவதோடு மாணவர்களுக்கு முன் மாதிரியாகவும் நடந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே பரஸ்பர மதிப்பும் நம்பிக்கையும் இழையோட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களைப் போன்றே நினைத்துப் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்'' என்பர் காந்தியடிகள்.

உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் கல்வியைப் பற்றி அறிவுடைமை, கல்வி, கல்லாமை, கேள்வி போன்ற அதிகாரங்களில் விளக்கமுற விளம்பியுள்ளார்.

தொல்காப்பியத்தின் தொடக்கம்

''வடவேங்கடத் தென்குமரி'' எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் முதலே கல்வியின் இன்றியமையாமை புலப்படத் தொடங்குகின்றது. முதலில் தமிழக எல்லையைக் கூறிய பனம்பாரனார். வழக்கின் கண்ணும் செய்யுளின் கண்ணும் எழுத்து, சொல், பொருள் என்னும் மூவிலக்கணத்தையும் ஆராய்ந்து செந்தமிழ் நில வழக்குடன் தான் நூலியற்றக் காரணமான முதல் நூல் கூறியவற்றைக் கண்டு அவற்றை முறைப்படி ஆய்ந்த தொல்காப்பியர் நூல் செய்ததாகக் கூறுகிறார்.

இதிலிருந்து நல்ல நூற்களைக் கற்று கல்வி வல்லாராய் விளங்குபவரால் தான் நூல் இயற்றப்பட்டது என்று தொல்காப்பியர் காலச் சூழல் புலப்படுகின்றது.

ஆசிரியரும் மாணாக்கரும்

''ஈவோன் தன்மை யீதலியற்கை
கொள்வோன் தன்மை கோடன் மரபு''

என்பதால் ஆசிரியரை ஈவோன் என்றும் அவர்தரும் கல்வியை ஏற்றுக் கொள்வதால் மாணவரைக் கொள்வோன் என்றும் தொல்காப்பியம் விளம்பியுள்ளது.

ஈவோரைக் கற்கப்படுவோர் கற்கப்படாதோர் என இரு வகையாகப் பகுப்பர். கற்கப்படுவோருக்கு உவமையாக மலை, நிலம், பூ, துலாக்கோல் ஆகியவையும் கற்கப்படாதோருக்கு உவமையாக கழற்பெய்குடம், மடற்பனை, முடத்தெங்கு, குண்டிகைப் பருத்தி ஆகியவையும் கூறப்படுகின்றன.

கொள்வோனைக் கற்பிக்கப்படுவோர் என்றும் கற்பிக்கப்படாதோர் என்றும் இருவகைப்படுத்துவர். கற்பிக்கப்படுவோரை தன்மகன், ஆசான்மகன், மன்மகன் பொரு நனி கொடுப்போன், வழிபடுவோன், உரைகோளான் என அறுவகையாகவும், கற்பிக்கப்படாதோரை மடி, மானி, பொச்சாப்பன், காமுகன், கள்வன், அடுநோய்ப்பிணியாளன், ஆறாச்சினத்தன், தடுமாறுநெஞ்சத்தவன் என எண் வகையாகவும் கூறுவர். கற்பிக்கப்படுவோருக்கு அன்னம், கிளி, நெய்யரி போன்றவையும் கற்பிக்கப்படாதோர்க்கு குரங்கெறிவிளங்காய். எருமை போன்றவையும், உவமையாகக் கூறப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது.

ஆசிரியர் இலக்கணம்

ஆசிரியருக்குப் பல உவமைகள் கூறிய தொல்காப்பியம் ''ஈதலியல்பே'' என்று தொடங்கும் நூற்பாவின் மூலம் ஆசிரியர் பாடம் கூறும் இயல்மை விளம்புகின்றது.

''பழிப்பில் பல்லுரை பயின்ற நாவினன்
புகழ்ந்த மதியிற் பொருந்தும் ஓரையில்
தெளிந்த அறிவினன்''.

என்பதால் தான் கூறக்கருதும் பொருளின் பல்வேறு பரிமாணங்களையும் உணர்ந்து, விளக்கமுற, மாணவர் புரிந்து கொள்ளும் வகையில் தக்க உவமை, உவமேயங்களுடன் கூற வேண்டும் என்கின்றது. எனவே தான் கூறக்கருதும் பொருளிள் ஐயம் திரிபற தெளிந்த அறிவும் ஆசிரியனுக்கு இன்றியமையாதது என்கின்றது. மேலும், மாணவனது அறிவுத்திறம் அவன் புரிந்து கொள்ளும் முறை ஆகியவற்றை அறிந்து, அவன் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஓர் மனநல மருத்துவன் போல் ஆசிரியர் பாடம் கற்பிக்கும் முறையும் தொல்காப்பியர் காலத்தில் செம்மையுற இருந்தமையை இதன் மூலம் நாம் உணர முடிகின்றது.

மாணாக்கன் இயல்பு

மாணாக்கன் ஆசிரியர் கூறிய காலத்தில், குறித்த இடத்திற்கு உரிய நேரத்தில் சென்று கல்வி கற்கும் ஆர்வம் மிக்கவனாய் இருத்தல் அவசியம் என்று கூறுவதோடு அவன் ''அன்பொடு புணர்ந்தாங்கு காசற உணர்ந்தான்'' என்றும் தொல்காப்பியம் கூறியதால் ஆசிரியரிடம் அன்புடன் பழகிய இயல்பும் அதன் (அன்பின்) மூலமே தனது உள்ள ஐயங்களைப் போக்கிக் கொண்ட இயல்பும் வெள்ளிடைமலை.

முழுமைக் கல்வி

''உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்களன் அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்''

என்பது வள்ளுவம் தான் கற்றவற்றை அவைக்கு அஞ்சி அவையோர் ஏற்பச் சொல்ல இயலாதவர் உயிரோடு இருப்பினும் இறந்தவருக்கு ஒப்பாவர் என்பது இக்குறளின் பொருள். இவ்வாறு இல்லாமல் கற்ற கல்வியின் பயன் உடையவராகத் திகழத் தொல்காப்பியம் வழி கூறுகின்றது.

''ஆசா னுரைத்தவை யமைவுரக் கொளினும்
காற் கூறல்லது பற்றலனாகும்''

''அவ்வினையாளரொடு பயில்வகை யொருபால்
செவ்விதின் உரைப்ப அவ்விரு பாலும்
மையறு புலமை மாண்புநனி யுடைத்தே''

என்ற நூற்பாக்கள் மூலம் ஆசிரியர் கூறியதை மனம் நிறைய ஏற்றுக் கொண்டாலும் ஆசிரியரின் புலமையில் கால்பங்கு மட்டுமே பெற முடியும் என்பதும் தன்னுடன் பயிலும் மாணவருடன் பழகுவதால் கால்பங்கும் தான் கற்றதை பிறருக்கு எடுத்துக்கூறுவதால் அரைப்பங்கும் புலமை பெறுவான் என்பதும் உணர்த்தப்படுகின்றது.

ஆண்களுக்கே கல்வி

உணர்திணை, அஃறிணை என்று உலக உயிர்களைப் பிரித்த தொல்காப்பியர் உயர்திணைக்குரியோராக ஆடுஉ, மகடூஉ, பலர் ஆகியோரைக் கூறினார். கல்வி என்பது மக்கட்குப் பொது. ஆனால் தொல்காப்பியர் பெருமையும் உரனும் ஆடூஉமென'' என்பதால் கல்வியில் பெண்களை ஒதுக்கி விட்டு ஆண்களுக்கு மட்டுமே சிறப்பிடம் தந்துள்ளார். பெருமிதம் என்பதன் மெய்ப்பாட்டு வாயில்களாக ''கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே'' எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது. பெண்களுக்குக் கல்வி அக்காலத்தில் வழங்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவு. அதற்கான காரணம் ஆராயத்தக்கது. தொல்காப்பியர் பெருமையும் உரனும் ஆண்களுக்கு மட்டுமே உரியவையாகக் கூறியமை மனநெருடலைத் தருகின்றது. அவை பெண்களுக்கும் உரியவையாகக் கூறியிருப்பின் தொல்காப்பியம் மேலும் பொலிவுற்றிருக்கும்.

நால்வகை வருணம்

''ஓதல் பகையே தூதிவை பிரிவே'' என்று பிரிவின் வகைகளைக் கூறிய தொல்காப்பியர் ஓதலும் தூதும் அரசர் அந்தணர். வணிகர், வேளாளர் என்ற நால்வகையோரிலும் உயர்ந்தோர்க்குரியனவாகவும் ''உயர்ந்தோரக்குரிய ஓத்தினான'' என்பதில் மூலம் பின்னோரில் உயர்ந்தோராகிய வணிகர்க்கும் ஓதுதல் நிமித்தமாகப் பிரியும் பிரிவு உண்டு என்பதாலும் அக்கால வருணாசிரம முறைபற்றி அறிய முடிகின்றது. ''கீழ்ப்பால் ஒருவன் கல்வி கற்பின் மேற்பாலானும் அவன் கண்படுமே'' என்ற நிலை தொல்காப்பியர் காலத்தில் இல்லை என்பது தெரிகின்றது.

முடிவுரை

தொல்காப்பியர் காலத்தில் குருகுல வழியில் கல்வி போதிக்கப்பட்டமையும் தொல்காப்பியம் வழி அறிய முடிகின்றது. தொல்காப்பியத்தில் கல்விக்குரிய காலமாக மூன்றாண்டுகள் கூறப்பட்டுள்ளன. பெருமிதம் தோன்றும் வாயிலாகவும், நகை தோன்றும் வாயிலாகவும் கல்வி கூறப்படுகின்றது. ''கற்றது கையளவு கல்லாதது உலகளவு'' என்ற நிலையில் பெண் கல்வி மற்றும் வேளாளர் கல்வி பற்றி தொல்காப்பியத்தின் வழி நாம் அறிய வருபவை அக்கால சமுதாயச் சூழலே என்பது தெரிகின்றது.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.