LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியம் காட்டும் பெண்மை ஆண்மை !

ஆண், பெண் பாகுபாடு பிறப்பில் வருவது. ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும் உள்ள உறுப்பு வேறுபாடுகள் (Bio-ligical factors) அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. இது இயற்கையின் அப்பாற்பட்டது. ஆனால் ஆணுக்கு என்றும், பெண்ணுக்கு என்றும் தனித்தனி மனிதன் தானே வகுத்துக் கொண்டது செயற்கையானது. பிறவியில் ஏற்படும் வேறுபாட்டினை பால் வேறுபாடு (Sex differencess) என்றும் மனிதன் கற்பித்துக் கொண்ட வேறுபாட்டினை (Gender discrimination) பாலியப் பாகுபாடு என்றும் சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சமூகம் ஆணுக்கு என்றும், பெண்ணுக்கு என்றும் தனித்தனியாக வகுத்த குணநலன்களை இலக்கண நூல்கள் ஆண்மை, பெண்மை என்ற சொற்களால் சுட்டுகின்றன.

ஆண், பெண்ணுக்குரிய குணநலன்களைத் தொல்காப்பியம் பல்வேறு நூற்பாக்களில் எடுத்துரைக்கிறது.

பெருமையும் உரனும் ஆடூஉ மே
(தொல்.பொருள்.95)

என்கிறது தொல்காப்பியம். அதாவது, குலப்பெருமையும், அறிவு மேம்பாடும் ஆண்மகனுக்குரிய குணநலன்கள் ஆகும். அதே சமயத்தில்

அச்சமும் நாணமும் மடனும் முந்துறுதல்
நிச்சமம் பெண்பாற் குரிய என்ப
(மேலது.96)

என்ற நூற்பாவின் வழி பெண்ணுக்கு அச்சம். நாணம், பேதைமை என்ற மூன்று குணநலன்களும் இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கின்றது.

இவைத்தவிர

கற்பும் காமமும் நற்பா லொழுக்கமும்
மெல்லியற் பொறையும்நிறையும் வல்லிதின்
விருந்து புறந் தருதலும் சுற்றம் ஓம்பலும்
பிறவுமன்ன கிழவோள் மாண்புகள்
(மேலது.150)

என்ற நூற்பாவில் கற்பு, காமல், நல்லொழுக்கம் மென்மை, பொறுமை, விருந்து வரவேற்றுப் பேணுதல், சுற்றத்தினரை ஓம்புதல் இவைதவிர பிறவும் திருமணமான பெண்ணுக்குரிய குணநலன்களாகச் சொல்லப்படுகின்றன.

பிற பண்புகள் என்பதற்கு நச்சினார்க்கினியர் சமைத்தல், கணவனின் பிற மனைவியரிடம் அன்பு பாராட்டி அவர்களை மன மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல், கணவனின் காமக்கிழத்தியருக்கு நல்லது செய்து அவர்களால் மதிக்கப்படுபவளாக இருப்பது மனைவியின் பண்பாகும் என்றுரைக்கின்றார். இந்நூற்பா மூலம் மனைவியிடத்துச் சமூகம் எதிர் நோக்கும் பண்புகளை அறிவதுடன் ஆண்களுக்கு ஒழுக்க வரையறை வற்புறுத்தப்படுவதில்லை என்பதையும் உடன் உணர்கின்றோம்.

மற்றொரு நூற்பாவில் தலைவன் பரத்தையரிடம் சென்று வரும்போது,

அவன் சோர்வு காத்தல் கடன்
(மேலது.172)

என்பதால் அவனது புறஒழுக்கத்தினைப் பொருட்படுத்தாது தன்னிடத்தில் அவன் வரும்போது அவனைக் காப்பது தலைவியின் கடமை என்பது எடுத்துரைக்கப்படுகின்றது. மேலும், அவன் காதல் கொண்ட பரத்தையை,

தாய் போற் கழறித் தழீஇக் கோடல்
ஆய்மனைக் கிழித்தருக்கும் உரித்தென மொழிப
(மேலது.171)

என்று போற்றிக் கொண்டாட வேண்டும் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. அஃதாவது, தலைவி காமக்கிழத்தியைத் தாய்போல் குற்றம் பொறுத்து, அன்பாக பேசி, அவளைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது.

காமக்கிழத்தியைத் தன் மகனின் தாயாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். (மேலது.172) என்று மற்றொரு நூற்பா வற்புறுத்துகின்றது. கணவனின் பரத்தமை பொறுத்தலைச் சங்க இலக்கியங்கள் கடவுட் கற்பு தெய்வக் கற்பு என்று போற்றுகின்றன.

ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொள்ளவும் சமூகம் அங்கிகரித்திருக்கின்றது. இதை,


பின்முறை ஆகிய பெரும் பொருள்வதுவை
(மேலது.170)

என்ற நூற்பா வழி அறியமுடிகின்றது. இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் உரை எழுதும்போது இந்நூற்பா தலைமகனுக்குரிய மரபு உணர்த்துகிறது என்று கூறுகிறார். நச்சினார்க்கினியர், தலைவன் பொருட்செல்வம் வேண்டியும், குழந்தைச் செல்வம் வேண்டியும் மறுமணங்கள் செய்து கொள்ளலாம் என்று பொருள் கூறுகிறார். இதற்குக் காட்டாக அமைந்த பாடலில், சிறுவர் பயந்த தலைமகன்

நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியோடு
வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண்தேர் மாமணி கறங்கத்க கடைகழிந்து
(அகம்.69) சென்றான் என்று சுட்டப்படுகின்றான்.


தொல்காப்பியர் காதல் பற்றிப் பேசும்போது
ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும்காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே.
(மேலது.90)
என்று குறிப்பிடுகின்றார். ஒத்த என்பதற்கு

பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காம வாயில்
நிறையே யாருளே உணர்வொடு திருவென
முறையுறுக் கிளந்த ஒப்பினது வகையே
(மேலது.269)

என்ற நூற்பா விளக்கம் தருகிறது. அதாவது பிறப்பு, குலம், ஆண்மை, வயது, அழகு, காமநாட்டம், ஒழுக்கம் அருள், உணர்ச்சி, செல்வம் என்ற பத்து நிலையிலும் ஒத்து இருக்க வேண்டும் என்று கூறும் நூற்பா இறுதியாக ஆண்மகன் இக்குணநலன்களில் மிகுந்து இருந்தாலும் கடியப்படாது என்று சுட்டுகின்றது. அதாவது இந்தப் பத்துக் குணநலன்களில் ஏதாவது ஒன்று இரண்டோ அல்லது பத்திலும் தலைவன் தலைவியைவிட உயர்ந்தவனாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என்கிறார். ஆனால் இவற்றில் ஒன்றில்கூட தலைவி மிக்கவளாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது அன்பின் ஐந்திணை பாற்படாது என்கிறார் இளம்பூரணர். எனவே தலைவன் தலைவி இருவரும் பிறப்பு முதல் செல்வம் ஈராக ஒத்த நிலையில் இருப்பதும், தலைவன் மிக்கோனாக இருப்பதும் மட்டுமே சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறையாக இருந்திருக்கின்றது.

தொல்காப்பியர் காலச் சமூகத்தில் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும், காதலில் பெண்கள் உணர்வுக்குச் சமூகம் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆணின் காதல் ஒழுக்கத்திற்கு அவள் உடன்பட்டு நிற்கும் அளவில் அவளின் பங்கு நிலை அமைந்துள்ளது.

ஏனெனில்

காமத் திணையிற் கண்நின்று வரூஉம்
நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள்வயின் ஆன.
(மேலது.106)

என்ற றூற்பாவில், பெண்ணுக்கு நாணமும், மடமும், வற்புறுத்தப்படுவதால், அவர்கள் தங்களது காதல் வேட்கையைத் தலைவனிடம் நேரடியாகக் கூறுவதற்கு அனுமதியில்லை. இக்கருத்தையே,

தன்னறு வேட்கை கிழவன்முற்கிளத்தல்
எண்ணுங் காலைக் கிளதிக் கில்லைப்
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்நீர் போலும் உணர்விற் றென்ப.
(மேலது.116)

என்ற நூற்பாவின் மூலமும் வற்புறுத்திப் பேசுகின்றது தொல்காப்பியம். புதுகலத்தில் பெய்த நீர்போல, அவ்வுணர்வை அவள் குறிப்பால் புறம்பொசிந்து காட்ட வேண்டும் என்று கூறுகின்றது. தலைவன் காதலை உணர்த்துகின்றபோது, அதற்குத் தலைவி உடன்பட்டு நிற்கவேண்டுமேயன்றி, காதலிக்கும் உரிமைபெற்ற அவள் அதை வெளியிடும் உரிமையின்றி இருக்கிறாள்.

திருமணத்திற்குப் பின்பு தலைவி கற்பு பேண வேண்டும். கற்பு என்பது அவள் உயிரினும் மேலானது.

உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செயிர்தீர் காட்சிக்கற்புச்சிறந்த தற்றெனத்
தொல்லோர் கிளவி.....
(மேலது.111) என்கின்றது நூற்பா.

தலைவி எக்காரணம் கொண்டும் தலைவன் முன்னர் தன்னைப் பாராட்டிக் கொள்ளலாகாது. (மேலது.178)

தலைவிக்கு மறுக்கப்பட்ட அவ்வுரிமை, தலைவனுக்கு மட்டும்உண்டு என்பதை,

கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப.
(மேலது.179)
என்ற நூற்பா எடுத்துரைக்கின்றது.

அதுபோன்றே, உவமை கூறும் போது தலைவி மருதம், நெய்தல் என்ற இரண்டு நிலத்திலேயே உவமை கூறுவதற்கு உரிமை உடையவள். அதுவும்

கிழவி சொல்லின் அவளறி கிளவி (மேலது.297)

என்ற வரையறையும் உண்டு. தலைவி அவள் கண்டறிந்த பொருட்களை வைத்துதான் உவமைக் கூறவேண்டுமே தவிர, தன் அறிவு வெளிப்படும் விதமாக உவமை கூறுதல் கூடாது. ஆனால்,

கிழவோற் காயின் உரனொடு கிளக்கும்
(மேலது.299)

என்ற நூற்பா கூறுகிறது. தலைவன் அறிவோடு சிந்தித்துக்கூறுவதற்கு உரியவன் என்கிறது தொல்காப்பியம். இதன்மூலம், தலைவி பேசுவதற்குக்கூட கட்டுப்பாடுகள் இருந்தன என்று பெறப்படுகிறது. அதுபோல, அவள் இயக்கத்திற்கும் கட்டுப்பாடுகள் இருந்தன. தலைவி கடல் கடந்து செல்லுதல் கூடாது. பாசறைக்கு செல்லுதல் கூடாது. இதை,


முந்நீர் வழக்கம் மகடூஉ வோடு இல்லை
(மேலது.37) என்ற நூற்பாவும்


எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரா
(மேலது.173) என்ற நூற்பாவும் எடுத்துரைக்கின்றன.

அதுபோன்றே பெண்கள் ஆண்மக்களைப்போல் தம் காதலை வெளிப்படுத்த மடலேறுதல் இயலாது.

எத்திணை மருக்கினம் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை இன்மை யான.
(மேலது.38) என்று சுட்டப்படுகின்றது.

தொகுப்புரை

இக்கட்டுரை மூலம், தொல்காப்பியர் காலத்தில் ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும் தனித்தனி சமூக எதிர்பார்ப்பும், ஒழுக்க விதிமுறைகளும் இருந்தன என்பது பெறப்படுகிறது.

பெண்ணை அறியாமையுடையவளாகவும் ஆணை அறிவுடையவாகவும் சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. பெண்ணுக்கு அறிவுத்திறனை வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

சமூகம், ஆணுக்கென்றும், பெண்ணுக்கென்றும் விதித்துள்ள வரன்முறைகள் அவர்களிþடையே வேற்றுமையை வளர்ப்பவனாக அமைந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக இவற்றை நோக்கும்போது அக்கால சமூகத்தில் ஆணாதிக்கமும், பெண் அடக்குமுறையும் நிலவியிருந்ததை அறிய முடிகின்றது.

by Swathi   on 28 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.