LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தொல்காப்பியம்

தொல்காப்பியரின் தமிழர் பண்பாடு

தொல்காப்பியம் காலத்தினால் தொன்மையானது. கருத்தின் செழுமையினால் செப்பமானது, பழந்தமிழ் நாகரீகத்தின் செம்மையினையும், செம்மாந்த பெருநிலையினையும் தெள்ளத் தெளிய விளக்கிக் காட்டும் ஒப்பற்ற ஒளி விளக்கமாகும். ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ்ச் சமுதாய வரலாற்றை அறிவதற்கு சிறந்த கருவியாக இருப்பது தொல்காப்பியமாகும்.

ஒரு சமுதாய ஆக்கக் கூறுகளை மேற்கொண்டொழுகும் தனிமனிதர்கள் தம் நடத்தைகளில் எய்தும் துய்மை அல்லது மேன்மைத் தன்மையே பண்பாடு என்று கூறப்படுகிறது. மனிதனின் நடத்தைகளில் பெரும்பாலானவை மரபு வழி அமைந்த பண்பாட்டினால் அமைகின்றன எனலாம். பண்பு என்ற சொல் தொன்றுதொட்டு வழக்கில் இருந்து வந்துள்ளன. தொல்காப்பியத்தில் பல இடங்களில் பண்பு என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இசையினும் குறிப்பினும் பண்பினுந் தோன்றி தொல்.உரியியல் -1

இந்நூற்பாவில் பண்பு என்ற சொல்லுக்கு பொறியால் உணரப்படும் குணம் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

இல்வாழ்க்கை

திருமணம் செய்துகொள்ளும் நெறி இரண்டாகும் என தொல்காப்பியர் கூறியுள்ளார். அவை களவு வெளிப்பட்ட பின்பு மணம் புரிதல் களவு வெளிப்படா முன்பு மணம் புரிதல் என்பனவாகும்.

வெளிப்பட வரைதல் படாமை வரைதலென்
றாயிரண் டென்ப வரைத லாறே

தலைவனும், தலைவியும் பத்துவகைப் பண்புகளால் ஒத்திருத்தல் வேண்டும்.

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருபு நிறுத்த காமவாயில்
நிறைய அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே

இப்பண்புகள் ஒத்தில்லாது தலைவன் மிக்கிருந்தாலும் குற்றமில்லை. ஆனால் தலைவிக்கு பண்புகள் மிக்கிருத்தல் கூடாது.
தலைவன், தலைமகளுக்குரிய பண்புகள் தொல்காப்பியத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

பெருமையும், உரனும் ஆடூஉ மேன
பழி பாவங்களை கொண்டு அஞ்சுதல், அறிவுடையவனாக இருத்தல் போன்றவை தலைமகனுக்குரிய பண்புகளாகக் கூறப்பட்டுள்ளன.

அச்சமும் மடனும் நாணும் முந்துறதல்
நிச்சமும் பெண்பாற் குரிய
அச்சம், நாணம், பேதைமை ஆகிய மூன்றும் பெண்டிர்க்குரிய இலக்கணமாகும்.

இவ்வாறு பண்புகளை உடைய தலைவனும், தலைவியும் மேற்கொள்ளும் இல்வாழ்க்கை அறம், பொருள், இன்பம் இவற்றால் சிறப்புறுவதாகும். தலைவன் இவ்வாறு தன் குடிப்பெருமை விளங்க மனைவாழ்க்கை நடத்துவான் என தொல்காப்பியம் கூறுகிறது.

நன்னெறிப் படரும் தொல் நலம் பொருளினும்
(தொல்.கற்பு.5)

நன்னெறி என்பது அறம், பொருள், இன்பம் தவறாத நெறியாகும்.

கற்புடைமை

கற்பெனப் படுவது தலைவனுக்கு தலைவியை முறையோடு திருமணம் செய்து கொடுத்தல் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

கைம்மை மகளிர் போர்க்குறிய திணைகள்

பண்டைக் காலத்தில் தமிழர் இயற்கையாகவே மறப்பண்பு படைத்தவராக விளங்கினர். அவர்களுடைய பழக்க, வழக்கம் தொழில், விளையாட்டு போன்றவை யாவும் போர்ப் பண்புடன் இருத்தலைக் காணலாம். தொல்காப்பியத்தில் புறத் திணைகள் ஏழு என்று கூறப்பட்ள்ளது. அவை வெட்சி, வஞ்சி, உழிகை, தும்பை ஆகிய திணைகள் போரைப் பற்றியும், வாகைத் திணை போரின் வெற்றியையும் கூறுகிறது. காஞ்சித் திணை நிலையாமையைப் பற்றிக் கூறுகிறது.

பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே
நிலையாமையாவது இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளது.

கலைகள்

இசை, சிற்பம், ஓவியம், நடனம் போன்ற கலைகள் உணர்வுகளின் அடிப்படையில் உருவாகின்றன. இக்கலைகள் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்துள்ளன.

பொருள்வயிற் பிரிதல்

இல்லறம் சிறப்பாக நடைபெற பொருள் மிக இன்றியமையாதது. இல்லறக் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற வெளியில் சென்று தொழில் செய்து பொருள் ஈட்டுவது தலைவனுடைய கடமையாகும். அவ்வாறு பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வான் எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே தொல்.அகம்.நூ.30

மனைவியின் கடமை இல்லத்தில் தங்கி கடமைகளைச் செம்மையாக செய்து முடித்தலாகும். தலைவன் பிரியுமிடத்துத் தலைமகளை அழைத்துக் கொண்டு கடல் கடந்து செல்வது என்பது கிடையாது.

முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை
பொருள் காரணமாகத் தலைவன் பிரிந்து செல்லுதல் ஓராண்டு என வரையறுக்கப்பட்டுள்ளது.

விருந்தோம்பல்

தம்மை நாடிவரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உண்டி முதலியவைகளை அளித்து அன்போடும் ஆர்வத்தோடும் அவர்களை உபசரிப்பது இல்வாழ்வோர்க்குரிய தலைசிறந்த பண்பாடாகத் தமிழகம் போற்றியது. இதனைத் தான் தொல்காப்பியம் விருந்து புறந்தருதல் என மனைவிக்குரிய மாண்புகளுள் ஒன்றாகக் கூறுகிறது. இல்வாழ்க்கையுடைய மகளிர்க்கு விருந்தோம்பி வாழ்வதே சிறப்புடையதாகக் கருதப்பட்டது.

விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும்
விருந்தினரோடு நல்ல செயல்களை விருப்பதோடு செய்தல் வேண்டும் என விருந்தோம்பல் பற்றி தொல்காப்பியம் கூறுகிறது.

மகளிர் மாண்பு

கணவன் இறந்த வலினாலேயே மனைவி தன் உயிரைப் போக்கிக் கொண்டாள் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

நீத்த கணவன் தீர்த்த வேலின்
பெயர்த்த மனைவி வஞ்சியானும்
போரில் புண்பட்டுக் கிடக்கும் தன் கணவனைப் போர்களத்தில் பேய்கள் நெருங்க விடாது பாதுகாத்த பெண்ணின் பெருமை பற்றி கூறப்பட்டுள்ளது.

இன்னகை மனைவி பேஅய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடா அக் காஞ்கியும்

இவ்வாறு மகளிரின் மாண்புகளை தொல்காப்பிய நூற்பாக்கள் தெளிவாக விளக்குகின்றன. மகளிரின் பண்புகளைக் கூறும் தொல்காப்பியர் மகளிர்க்கு இருக்கக் கூடாத குணங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்

அழுக்காறு, அறனழிய பிறரைச் சூழும் சூழ்ச்சி, தம்மைப் பெரியராக நினைத்தல், புறம் கூறல், கடுஞ்சொல், முயற்சியின்மை, தம் குலச்சிறப்பை எண்ணி இன்புறல், பேதைமை, மறதி, தான் காதலித்தவரை பிறரோடு ஒப்பிடல் போன்றன இருக்கக் கூடாதவையென தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.

தனிமனிதர்களிடம் தோன்றும் பண்பாடே சமுதாயப் பண்பாடாக அமைகின்றது. சமுதாயத்தின் அடிப்படை குடும்பம், தூய்மையான இல்லற ஒழுக்கத்தால் குடும்பம் மேன்மை அடைகிறது. இல்லறம் சிறப்பாக இருந்தால் சமுதாயம் சிறப்படையும். அதனால் தொல்காப்பியர் காட்டும் பண்பாடு எக்காலத்திற்கும் பொருந்துவதாக, நாடு சிறப்படைய வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.

by Swathi   on 28 Mar 2013  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
09-May-2016 23:27:44 priya said : Report Abuse
விவசாயம் பற்றிய செய்திகள் இல்லாதது வருத்தமாக உள்ளது
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.