|
|||||
உணர்வுகளை அழகுற வெளிப்படுத்தும் Tourist Family’ |
|||||
![]() ‘Tourist Family’ அனைத்து உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தும் குடும்பப்படம். 100-500 கோடிகள் போட்டு திரைத்துறையைக் கபளீகரம் செய்யும் சூழலில் மலையாளப் படங்கள் போன்று அழகாக வெளிவரும் அதிக செலவில்லாத இதுபோன்ற படங்கள் அதிகம் வெற்றிபெற்று புதிய இயக்குநர்கள் , புதிய இளைஞர்கள், புதிய சிந்தனைகள், குறைந்த முதலீட்டில் வர நம்பிக்கையை ஏற்படுத்தும். படத்தில் அனைத்தும் அருமை. 25 வயது அபிசன் ஜீவிந்த் எழுதி இயக்கிய முதல் படம் என்பது நம்பமுடியவில்லை. இளைஞர்கள் மேல் நம்பிக்கை வைக்கவேண்டும்.
'சில்லுக் கருப்பட்டி' என்ற படத்தை மிகவும் இரசித்தேன். அதைப்போன்று பல படங்கள் வருகிறது. அந்த வரிசையில் ‘‘Tourist Family’’ குடும்பமாகப் பார்க்க வேண்டிய படம்.
ஈழத்தமிழ் உறவுகளின் வாழ்க்கை சிக்கல்கள் , புலம்பெயரும் அவலம், மொழி, உழைப்பு, வெற்றி, குடும்பத்தின் பிணைப்பு, அன்பு என்று ஆழமாக உள்வாங்கப்பட்ட திரைக்கதை.
நாங்கள் பேசும் தமிழ் பிரச்சினையா, தமிழ் பேசுவதே பிரச்சினையா என்று வரும் வசனங்கள் உட்படப் பல நுணுக்கமான தமிழ் அரசியலைப் பேசும் படம்...
அழகான அளவான நகைச்சுவை அருமையாகக் கதையோடு ஒட்டிப் பயணிக்கிறது. காதல், சோகம், சிக்கல், தவிப்பு, எதிர்பாராத திருப்பங்கள் என்று அனைத்தையும் உள்ளடக்கிய கதை.
ஒட்டுமொத்தக் குழுவிற்கும் வாழ்த்துகள்..
குறை சொல்லவேண்டுமென்றால் கதையில் சொல்வதற்கு எதுவும் இல்லை,
இவ்வளவு அருமையான கதையை, தமிழ்க் களத்தில் நிகழும் கதையைப் பேசத் திரைப்படத்தின் தலைப்பை " தமிழில் வைத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். ஆங்கிலத்தில் படத்தலைப்பு வைத்தால் அழகாக உள்ளது என்ற மனோபாவம் தமிழ்த் திரைத்துறையில் உள்ளது. அது உண்மையில்லை என்பதைப் பல படங்கள் உறுதிசெய்துவருகிறது.
இயக்குநர்கள் , தயாரிப்பாளர்களுக்கு , திரைப்படத் துறையினருக்கு "உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்" , "வணிகத் தமிழ்ப்பெயர்கள் இயக்கம்" அமைப்புகளின் வழியாக ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதவும், ஒவ்வொரு ஆண்டும் தூய தமிழில் பெயர் வைத்து வெளிவரும் திரைப்படங்களுக்கு ஒரு சிறப்புப் பாராட்டு வழங்க ஏற்பாடு செய்யவேண்டும் .
மேலும் தமிழ்நாடு அரசு தமிழில் பெயர் வைத்தால் வழங்கிய மானியத்தைத் திரைப்படங்களுக்கு மீண்டும் வழங்குவதன் தேவை உள்ளது என்ற கோரிக்கையை அரசுக்கும் முன்வைப்போம். ஆங்கிலம் பல மொழிகளை விழுங்கிவிட்டது. இந்த இராட்சச அலையில் தமிழ் அடித்துச்சென்றுவிடாமல் அவரவர் நிலையில் முடிந்ததைச் செய்யவேண்டும்.
|
|||||
by hemavathi on 14 May 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|