|
|||||
தகைசால் தமிழர் குமரி அனந்தன் மறைவுக்குப் புகழ் வணக்கம் - வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி |
|||||
![]()
அந்தந்த காலக்கட்டங்களில் அழுத்தமான தமிழ்ப் பங்களிப்புகளைச் செய்தவர்களை அடையாளம் கண்டு தமிழ்ச்சமூகம் நன்றியோடு அவர்கள் காலத்திற்குப் பின்பும் போற்றவேண்டும். அந்தவகையில் வாழும் காலத்தில் மொழிக்காகப் பங்களிப்பு செய்தவர் திரு குமரி அனந்தன். அவரை வலைத்தமிழ் வரலாற்றின் இன்று பகுதியில் பதிவுசெய்து கொள்கிறது.
குமரி அனந்தன் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி ஆவார். பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமை பெற்றவர். முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் இந்திய மக்களவை உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்றவர், இலக்கியப் பேச்சாற்றல் மிக்க தமிழ் இலக்கியவாதி, என்று பன்முகத் திறன் கொண்டவர்.
தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றார். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.
ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்து அழுத்தமான பங்களிப்புகளைச் செய்த அரிய அரசியல்வாதிகளுள் குமரி அனந்தன் முக்கியமானவர். அவரது பேச்சைக் கேட்டு மயங்கிய காமராஜர், இவரைப் போன்ற பேச்சாளர்கள் கட்சிக்கு அவசியம் என்று கருதி இளைஞர் காங்கிரஸின் அமைப்பாளராகச் சேர்த்துக்கொண்டார்.
அமைதியானவராக அறியப்படும் குமரி அனந்தன் நிகழ்த்திய சில காரியங்கள் அதிரடியானவை. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் தமிழில்தான் பேசுவேன் என்று அடம்பிடித்துப் பேசியவர். இன்று பலரும் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கு அடித்தளம் போட்டவர் குமரி அனந்தன்.
மணியார்டர் என்கிற பணவிடையை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை மாற்றி, தமிழிலும் பண அஞ்சல் அனுப்பும் உரிமையைப் பெற்றுத்தந்தவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன்.
காங்கிரசிலிருந்து விலகி காந்தி காமராஜ் தேசியக் காங்கிரஸை ஆரம்பித்தபோது, குமரி அனந்தன் தம்முடன் இருப்பது நல்லது என்று கலைஞர்,, எம்ஜிஆர் இருவருமே போட்டிப்போட்டது ஒரு காலம்.
தமிழகத் தலைவர்களில் நிறையப் பாத யாத்திரை சென்றவர் குமரி அனந்தன் ஆவார். இவர் 1967 ஆண்டு முதல் பல பாத யாத்திரைகளை மேற்கொண்டு வருகிறார். கடைசியாகத் திருவல்லிக்கேணி முதல் புதுச்சேரி வரையிலான 180 கி.மீ. தூரம் பாத யாத்திரையை மேற்கொண்டார். அதில் 1) பனை மரத்தைப் பாதுகாக்க வேண்டும்; 2)புதுச்சேரி மாந்தோப்பை, பாரதியின் குயில் தோப்பாக மாற்ற வேண்டும்; 3) நதிகள் இணைக்க வேண்டும். - போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
நதிகள் இணைப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வந்த இவர் வலியுறுத்திக் கூறும் கருத்துக்கள்.இவை:
1) இந்தியாவில் கிடைக்கும் மொத்த நீரில், 31 சதவீதம் தான் பயன்படுகிறது. மீதி 69 சதவீதத் தண்ணீர், கடலுக்குப் போகிறது. 2) நதிகளை இணைத்தால், நீர் வழிச்சாலை கிடைக்கும். 3) கப்பல் பயணம் எளிதாகும்.
நதி நீர் இணைப்பால் 1 லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் அளவிற்கு, மின்னுற்பத்தி செய்ய முடியும். என்று வலியுறுத்தினார்.
கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் உள்பட 29 நூல்களின் ஆசிரியர்.
விருதுகள் :
1) 2011 ஆம் ஆண்டிற்கான சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது: வெள்ளிப் பட்டயத்துடன் ரூ. 1.5 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்ட இந்த விருது குமரிஅனந்தனுக்கு வழங்கப்பட்டது.
2) சென்னை மகாஜனச் சபை வழங்கும் 2011 ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது குமரி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருது சமுதாயத் தொண்டும், தேசத் தொண்டும் ஆற்றி வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
3)தகைசால் தமிழர் விருதினை சென்னையில் 15 ஆகத்து 2024 அன்று நடைபெற்ற இந்திய விடுதலை நாள் விழாவில் தமிழ்நாட்டுக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியதற்காகத் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதல்வர் வழங்கினார்.
அறம் சார்ந்தும், நெறி பிறழாமலும் அரசியல் வேள்வியில் ஈடுபட்ட வெகுசில ஆளுமைகளுள் குமரி அனந்தன் முதன்மையானவர்! தனி வாழ்க்கை மற்றும் அரசியலில் நிறைவாழ்வு வாழ்ந்து நிறைந்த தகைசால் தமிழர் குமரி அனந்தனுக்கு புகழ் வணக்கம்!
#குமரிஅனந்தன்
|
|||||
by hemavathi on 09 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|