LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

மனைவியிடம் பேசுங்கள்...!!! மனம் விட்டுப் பேசுங்கள்....!!!!! - திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

மனைவியிடம் பேசுங்கள்...!!! மனம் விட்டுப் பேசுங்கள்....!!!!!

மிகவும் உணர்வுப்பூர்வமான பகிர்வு..
============================================
- திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனிமனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய்விட்டது.

இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான். ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. 

வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள். பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. 

அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள். எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள். மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பணி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றிகொண்டு இருந்தபொது சிறிதும் முகம் சுழிக்காதவள்.

1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டிவிட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், என்னைக்கான வருவோர் அத்தனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.

பண்டிகைகளும், திருநாள்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்ததை ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை, இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது. நேரம் இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்த்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

காலம் கடந்து பயன்படுத்தினால் பயனற்றுப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது, விலையும் இருக்காது. இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். 

ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாயே...

ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்து இருந்ததை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.

நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்து அதிசயமாக புருவங்கள் இரண்டும் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிகிறவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்.... இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.

எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படாதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமே இல்லையே என சொன்னேன்.

ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோ ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன். தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்...

என் மனைவிக்கு என்னை உணர்த்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன் உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

என் வேதனை, நான்படும் துயரம்... வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை.....

by Swathi   on 17 Aug 2014  7 Comments
Tags: Trichy Siva   திருச்சி சிவா                 
 தொடர்புடையவை-Related Articles
மனைவியிடம் பேசுங்கள்...!!! திருச்சி சிவாவின்  உணர்வுப்பூர்வமான பகிர்விற்கு கவிஞர் தாமரையின் கருத்து மனைவியிடம் பேசுங்கள்...!!! திருச்சி சிவாவின் உணர்வுப்பூர்வமான பகிர்விற்கு கவிஞர் தாமரையின் கருத்து
மனைவியிடம் பேசுங்கள்...!!! மனம் விட்டுப் பேசுங்கள்....!!!!!  - திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மனைவியிடம் பேசுங்கள்...!!! மனம் விட்டுப் பேசுங்கள்....!!!!! - திருச்சி சிவா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
கருத்துகள்
27-Jul-2019 16:50:56 M panneerselvam said : Report Abuse
It is true. Why we are not appreciate them. What prevent us. Mr. Siva opened his soul. It is not too late. Speak to our better half today onwards.
 
29-Jul-2017 10:50:55 சரவணன் said : Report Abuse
ஐயா...உங்கள் மனக்குமுறல் ..எனக்கு..கண்ணீர்... வரவைத்துவிட்டது.இதனை..படிப்பவர்கள்எல்லோருக்கும். கண்டிப்பாக...உங்கள்..மனக்குமுறல்..பாடமாக..இருக்கும்... உங்கள்..அன்பை.. நீங்கள்..வெளிப்படுத்தாமல்..விட்டிருந்தாலும்..கண்டிப்பாக..உங்கள்.. மனைவி..உணர்ந்தே.. இருப்பார்கள்..கவலைப்படாதீர்கள்..
 
30-Mar-2016 02:47:29 பால்ராஜ்.R said : Report Abuse
உங்களுடைய கட்டுரை மிகவும் நன்று
 
11-Sep-2015 03:26:58 prabha said : Report Abuse
please update neeya நானா Siva videoclip
 
11-Jul-2015 12:08:13 மீனாட்சி.ஹ said : Report Abuse
ஐயா, வணக்கம். தங்களின் இக்கட்டுரையை விஜய் டிவி நீயா! நானாவில் பார்த்து, தங்கள் வாயாலேயே சொல்லக்கேட்டு மகிழ்ந்தவர்களில் மன்னிக்கவும் வருந்தியவர்களில் நானும் ஒருத்தி.இன்று தந்தி டிவியில் தங்களைப் பார்த்தவுடன் வளைத்தளத்தில் தேடி இக்கட்டுரையை பெற்றேன். 27 ஆண்டுகள் வெற்றிகரமான இல்லத்தரசியாய் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கும், என் அம்மாவை இழந்து தனிமையில் வாடும் என் தந்தைக்கும் தங்கள் வார்த்தை ஏற்படுத்திய தாக்கம் சொல்லொணாதது. இதை அறியாத, புரியாத, காலத்தே உணராத கணவன்மார்கள், மனைவிமார்கள் அனைவருக்கும் (சேர்ந்து வாழும் காலத்திலேயே ) உரக்கச் சொல்லி உணரவைக்க வேண்டும். கோபம் வந்தால் சற்றும் யோசிக்காமல் முகத்தில் அடித்தாற் போல் சொல்லத்தெரியும் மனிதர்க்கு, தனக்காகவே வாழும், வாடும் உயிர்த்துணைக்கு தன் அன்பையும், காதலையும் வெளிப்படுத்த தெரிவதில்லை.
 
28-May-2015 08:47:17 anandan said : Report Abuse
Your speech is touched my heart :) So nice of you... sharing your feelings to the entire world. Your great !!!
 
06-Nov-2014 00:10:12 தண்டபாணி.R said : Report Abuse
ஐயா வணக்கம் நன் உங்களை சென்னை புழிதிவக்கம் .திரு. யோகேஸ்வரன் ஐயா இல்லத்தில் 6-11-14 .... indru உங்களை பார்த்தேன் மிகவும் மகிச்சி ..பிறகு விட்டுக்கு வந்து உங்கள் விகிபிடிய பார்த்தேன் ..அடுத்து இதை படித்துவிட்டு மிகயும் மனம் நெகிழ்ந்தேன் ஐயா......
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.