LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-20

3.07. ஆனாய நாயனார் புராணம்



931    மாடு விரைப் பொலி சோலையின் வான் மதிவந்து ஏறச்
சூடு பரப்பிய பண்ணை வரம்பு சுரும்பேற
ஈடு பெருக்கிய போர்களின் மேகம் இளைத்தேற
நீடு வளத்தது மேன்மழ நாடெனும் நீர் நாடு     3.7.1

932    
நீவி நிதம்ப உழத்தியர் நெய்க் குழல் மைச் சூழல்
மேவி உறங்குவ மென் சிறை வண்டு விரைக் கஞ்சப்
பூவில் உறங்குவ நீள் கயல் பூமலி தேமாவின்
காவின் நறுங் குளிர் நீழல் உறங்குவ கார் மேதி     3.7.2

933    
வன்னிலை மள்ளர் உகைப்ப எழுந்த மரக்கோவை
பன் முறை வந்து எழும் ஓசை பயின்ற முழக்கத்தால்
அன்னம் மருங்குறை தண் துறை வாவி அதன் பாலைக்
கன்னல் அடும் புகையால் முகில் செய்வ கருப்பாலை     3.7.3

934    
பொங்கிய மாநதி நீடலை உந்து புனற் சங்கம்
துங்க இலைக் கதலிப் புதல் மீது தொடங்கிப் போய்
தங்கிய பாசடை சூழ் கொடி யூடு தவழ்ந்தேறிப்
பைங்கமுகின் தலை முத்தம் உதிர்க்குவ பாளையென     3.7.4

935    
அல்லி மலர்ப் பழனத்து அயல் நாகிள ஆன் ஈனும்
ஒல்லை முழுப்பை உகைப்பின் உழக்கு குழக்கன்று
கொல்லை மடக்குல மான் மறியோடு குதித்து ஓடும்
மல்கு வளத்தது முல்லை உடுத்த மருங்கோர்பால்     3.7.5

936    
கண் மலர் காவிகள் பாய இருப்பன கார் முல்லைத்
தண் நகை வெண் முகை மேவும் சுரும்பு தடஞ் சாலிப்
பண்ணை எழுங்கயல் பாய இருப்பன காயாவின்
வண்ண நறுஞ்சினை மேவிய வன் சிறை வண்டானம்     3.7.6

937    
பொங்கரில் வண்டு புறம்பலை சோலைகள் மேல் ஓடும்
வெங்கதிர் தங்க விளங்கிய மேன்மழ நன்னாடாம்
அங்கது மண்ணின் அருங்கலமாக அதற்கேயோர்
மங்கல மானது மங்கலம் ஆகிய வாழ் மூதூர்     3.7.7

938    
ஒப்பில் பெருங்குடி நீடிய தன்மையில் ஓவாமே
தப்பில் வளங்கள் பெருக்கி அறம்புரி சால்போடும்
செப்ப உயர்ந்த சிறப்பின் மலிந்தது சீர் மேவும்
அப்பதி மன்னிய ஆயர் குலத்தவர் ஆனாயர்     3.7.8

939    
ஆயர் குலத்தை விளக்கிட வந்து உதயம் செய்தார்
தூய சுடர்திரு நீறு விரும்பு தொழும்புள்ளார்
வாயினின் மெய்யின் வழுத்து மனத்தின் வினைப் பாலில்
பேயுடன் ஆடு பிரான் அடி அல்லது பேணாதார்     3.7.9

940    
ஆனிரை கூட அகன் புற வில் கொடு சென்று ஏறிக்
கானுறை தீய விலங்குறு நோய்கள் கடிந்து எங்கும்
தூநறு மென்புல் அருந்தி விரும்பிய தூ நீறுண்டு
ஊனமில் ஆயம் உலப்பில பல்க அளித்து உள்ளார்     3.7.10

941    
கன்றொடு பால் மறை நாகு கறப்பன பாலாவும்
புன்றலை மென்சிலை ஆனொடு நீடு புனிற்றாவும்
வென்றி விடைக் குலமோடும் இனந்தொறும் வெவ்வேறே
துன்றி நிறைந்துள சூழல் உடன் பல தோழங்கள்     3.7.11

942    
ஆவின் நிரைக் குலம் அப்படி பல்க அளித்தென்றும்
கோவலர் ஏவல் புரிந்திட ஆயர் குலம் பேணும்
காவலர் தம் பெருமான் அடி அன்புறு கானத்தின்
மேவு துளைக் கருவிக் குழல் வாசனை மேற்கொண்டார்     3.7.12

943    
முந்தை மறை நூன்மரபின் மொழிந்த முறை எழுந்தவேய்
அந்த முதல் நாலிரண்டில் அரிந்து நரம்புறு தானம்
வந்ததுளை நிரையாக்கி வாயு முதல் வழங்கு துளை
அந்தமில் சீர் இடை ஈட்டின் அங்குலி எண் களின் அமைத்து     3.7.13

944    
எடுத்த குழற் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்
தொடுத்த முறை ஏழ் இசையின் சுருதி பெற வாசித்து
அடுத்தசரா சரங்களெலாம் தங்கவருந் தங்கருணை
அடுத்த இசை அமுது அளித்துச் செல்கின்றார் அங்கு ஒரு நாள்     3.7.14

945    
வாச மலர்ப் பிணை பொங்க மயிர் நுழுதி மருங்கு உயர்ந்த
தேசுடைய சிகழிகையிற் செறி கண்ணித் தொடை செருகிப்
பாசிலை மென் கொடியின் வடம் பயில நறு விலி புனைந்து
காசுடை நாண் அதற்கயலே கருஞ்சுருளின் புறங்காட்டி     3.7.15

946    
வெண் கோடல் இலைச் சுருளிற் பைந்தோட்டு விரைத் தோன்றித்
தண் கோல மலர் புனைந்த வடி காதின் ஒளி தயங்கத்
திண் கோல நெற்றியின் மேல் திரு நீற்றின் ஒளி கண்டோ ர்
கண் கோடல் நிறைந்தாராக் கவின் விளங்க மிசை அணிந்து     3.7.16

947    
நிறைந்த நீறு அணி மார்பின் நிரை முல்லை முகை சுருக்கிச்
செறிந்த புனை வடம் தாழத் திரள் தோளின் புடை அலங்கல்
அறைந்த சுரும்பு இசை அரும்ப அரையுடுத்த மரவுரியின்
புறந்தழையின் மலி தானைப் பூம் பட்டுப் பொலிந்து அசைய     3.7.17

948    
சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்
மேவும் இசை வேய்ங்குழலும் மிக விளங்க வினை செய்யும்
காவல்புரி வல்லாயர் கன்றுடை ஆன் நிரை சூழப்
பூவலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார்     3.7.18

949    
நீலமா மஞ்ஞை ஏங்க நிரைக் கொடிப் புறவம் பாடக்
கோல வெண் முகையேர் முல்லை கோபம் வாய் முறுவல் காட்ட
ஆலு மின்னிடைச் சூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள்
ஞால நீடு அரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள்     3.7.19

950    
எம்மருங்கு நிரை பரப்ப எடுத்த கோலுடைப் பொதுவர்
தம்மருங்கு தொழுது அணையத் தண் புறவில் வருந்தலைவர்
அம்மருங்கு தாழ்ந்த சினை அலர் மருங்கு மதுவுண்டு
செம்மருந்தண் சுரும்பு சுழல் செழுங் கொன்றை மருங்கு அணைந்தார்     3.7.20

951    
சென்றணைந்த ஆனாயர் செய்த விரைத் தாமம் என
மன்றல் மலர்த்துனர் தூக்கி மருங்குதாழ் சடையார் போல்
நின்ற நறுங் கொன்றையினை நேர் நோக்கி நின்று உருகி
ஒன்றிய சிந்தையில் அன்பை உடையவர் பால் மடை திறந்தார்     3.7.21

952    
அன்பூறி மிசைப் பொங்கும் அமுத இசைக் குழல் ஒலியால்
வன்பூதப் படையாளி எழுத்து ஐந்தும் வழுத்தித் தாம்
முன்பூதி வரும் அளவின் முறைமையே எவ்வுயிரும்
என்பூடு கரைந்து உருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில்     3.7.22

953    
ஏழு விரல் இடை இட்ட இன்னிசை வங்கியம் எடுத்துத்
தாழுமலர் வரிவண்டு தாது பிடிப்பன போலச்
சூழுமுரன்று எழ நின்று தூய பெரும் தனித் துளையில்
வாழிய நந்தோன்றலார் மணி அதரம் வைத்தூத     3.7.23

954    
முத்திரையே முதல் அனைத்தும் முறைத் தானம் சோதித்து
வைத்த துளை ஆராய்ச்சி வக்கரனை வழி போக்கி
ஒத்த நிலை உணர்ந்து அதற்பின் ஒன்று முதல்படி முறையாம்
அத்தகைமை ஆரோசை அமரோசைகளின் அமைத்தார்     3.7.24

955    
மாறுமுதற் பண்ணின் பின் வளர் முல்லைப் பண்ணாக்கி
ஏறிய தாரமும் உழையும் கிழமை கொள இடுந்தானம்
ஆறுலவுஞ் சடை முடியார் அஞ்செழுத்தின் இசை பெருகக்
கூறிய பட்டடைக் குரலாங் கொடிப் பாலையினில் நிறுத்தி     3.7.25

956    
ஆய இசைப் புகல் நான்கின் அமைந்த புகல் வகை எடுத்து
மேய துளை பற்றுவன விடுபனவாம் விரல் நிரையிற்
சேய வொளியிடை அலையத் திருவாளன் எழுத்தஞ்சும்
தூய இசைக் கிளை கொள்ளுந் துறையஞ்சின் முறை விளைத்தார்     3.7.26

957    
மந்தரத்தும் மத்திமத்தும் தாரத்தும் வரன் முறையால்
தந்திரிகள் மெலிவித்தும் சமங்கொண்டும் வலிவித்தும்
அந்தரத்து விரல் தொழில்கள் அளவு பெற அசைத்தியக்கிச்
சுந்தரச் செங்கனிவாயும் துளைவாயும் தொடக்குண்ண     3.7.27

958    
எண்ணிய நூல் பெருவண்ணம் இடை வண்ணம் வனப்பென்னும்
வண்ண இசை வகை எல்லாம் மா துரிய நாதத்தில்
நண்ணிய பாணியும் இயலும் தூக்கு நடை முதற்கதியில்
பண்ணமைய எழும் ஓசை எம் மருங்கும் பரப்பினார்     3.7.28

959    
வள்ளலார் வாசிக்கும் மணித் துளைவாய் வேய்ங் குழலின்
உள்ளுறை அஞ்செழுத்தாக ஒழுகி மதுர ஒலி
வெள்ளநிறைந்து எவ்வுயிர்க்கும் மேல் அமரர் தருவிளை தேன்
தெள்ளமுதின் உடன் கலந்து செவி வார்ப்பது எனத் தேக்க     3.7.29

960    
ஆனிரைகள் அறுகருந்தி அசை விடாது அணைந்து அயரப்
பால் நுரை வாய்த் தாய் முலைப் பால் பற்றும் இளங்கன்று இனமும்
தான் உணவு மறந்து ஒழியத் தட மருப்பின் விடைக் குலமும்
மான் முதலாம் கான் விலங்கும் மயிர் முகிழ்த்து வந்து அணைய     3.7.30

961    
ஆடு மயில் இனங்களும் அங்கு அசைவு அயர்ந்து மருங்கணுக
ஊடுசெவி இசை நிறைந்த உள்ளம் ஒடு புள்ளினமும்
மாடுபடிந்து உணர்வு ஒழிய மருங்கு தொழில் புரிந்து ஒழுகும்
கூடியவண் கோவலரும் குறை வினையின் துறை நின்றார்     3.7.31

962    
பணி புவனங்களில் உள்ளார் பயில் பிலங்கள் வழி அணைந்தார்
மணிவரை வாழ் அரமகளிர் மருங்கு மயங்கினர் மலிந்தார்
தணிவில் ஒளி விஞ்சையர்கள் சாரணர் கின்னரர் அமரர்
அணிவிசும்பில் அயர்வு எய்தி விமானங்கள் மிசை அணைந்தார்     3.7.32

963    
சுரமகளிர் கற்பகப் பூஞ்சோலைகளின் மருங்கிருந்து
கர மலரின் அமுது ஊட்டும் கனி வாய் மென் கிள்ளையுடன்
விரவு நறுங்குழல் அலைய விமானங்கள் விரைந்து ஏறிப்
பரவிய ஏழிசை அமுதம் செவி மடுத்துப் பருகினார்     3.7.32

964    
நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்திலினால்
மலிவாய்வெள் எயிற்று அரவம் மயில் மீது மருண்டு விழும்
சலியாத நிலை அரியும் தடம் கரியும் உடன் சாரும்
புலி வாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும்     3.7.34

965    
மருவிய கால் விசைத்து அசையா மரங்கள் மலர்ச் சினை சலியா
கருவரை வீழ் அருவிகளும் கான்யாறும் கலித்து ஓடா
பெரு முகிலின் குலங்கள் புடை பெயர்வு ஒழியப் புனல் சோரா
இரு விசும்பின் இடை முழங்கா எழுகடலும் இடை துளும்பா     3.7.35

966    
இவ்வாறு நிற்பனமும் சரிப்பனவும் இசை மயமாய்
மெய் வாழும் புலன் கரண மேவிய ஒன்று ஆயினவால்
மொய்வாச நறுங்கொன்றை முடிச் சடையார் அடித் தொண்டர்
செவ்வாயின் மிசை வைத்த திருக்குழல் வாசனை உருக்க     3.7.36

967    
மெய்யன்பர் மனத்து அன்பின் விளைந்த இசைக் குழல் ஓசை
வையம் தன்னையும் நிறைத்து வானம் தன் வயமாக்கிப்
பொய் அன்புக்கு எட்டாத பொற் பொதுவில் நடம் புரியும்
ஐயன் தன் திருச் செவியின் அருகணைய பெருகியதால்     3.7.37

968    
ஆனாயர் குழல் ஓசை கேட்டு அருளி அருள் கருணை
தானாய திரு உள்ளம் உடைய தவ வல்லியுடன்
கானாதி காரணராம் கண்ணுதலார் விடையுகைத்து
வானாறு வந்தணைந்தார் மதி நாறுஞ் சடை தாழ     3.7.38

969    
திசை முழுதுங் கணநாதர் தேவர்கட்கு முன் நெருங்கி
மிசை மிடைந்து வரும் பொழுது வேற்று ஒலிகள் விரவாமே
அசைய எழுங்குழல் நாதத்து அஞ்செழுத்தால் தமைப் பரவும்
இசை விரும்பும் கூத்தனார் எழுந்தருளி எதிர் நின்றார்     3.7.39

970    
முன் நின்ற மழவிடை மேல் முதல்வனார் எப்பொழுதும்
செந்நின்ற மனப் பெரியோர் திருக் குழல் வாசனை கேட்க
இந்நின்ற நிலையே நம்பால் அணைவாய் என அவரும்
அந்நின்ற நிலை பெயர்ப்பார் ஐயர் திரு மருங்கு அணைந்தார்     3.7.40

971    
விண்ணவர்கள் மலர் மாரி மிடைந்து உலகமிசை விளங்க
எண்ணில் அருமுனிவர் குழாம் இருக்கு மொழி எடுத்து ஏத்த
அண்ணலார் குழல் கருவி அருகு இசைத்து அங்கு உடன் செல்லப்
புண்ணியனார் எழுந்து அருளிப் பொற் பொதுவின் இடைப் புக்கார்     3.7.41



972    
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி

தீது கொள் வினைக்கு வாரோம் செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காது கொள் குழைகள் வீசும் கதிர் நிலவு இருள் கால் சீப்ப
மாது கொள் புலவி நீக்க மனையிடை இரு கால் செல்லத்
தூது கொள்பவராம் நம்மைத் தொழும்பு கொண்டு உரிமை கொள்வார்     3.7.42


திருச்சிற்றம்பலம்


இலை மலிந்த சருக்கம் முற்றிற்று.

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.