LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-24

4.04. திரு நாளைப் போவர் நாயனார் புராணம்



1046     பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும்
திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்
அகல் பணை நீர் நன்னாட்டு மேற்காநாட்டு ஆதனூர்     4.4.1

1047    
நீற்றலர் பேர் ஒளி நெருங்கும் அப்பதியின் நிறை கரும்பின்
சாற்று அலைவன் குலை வயலில் தகட்டு வரால் எழப் பகட்டேர்
ஆற்றலவன் கொழுக் கிழித்த சால் வழி போய் அசைந்து ஏறிச்
சேற்றலவன் கரு உயிர்க்க முருகுயிர்க்கும் செழுங் கமலம்     4.4.2

1048    
நனை மருவுஞ் சினை பொதுளி நறு விரை சூழ் செறி தளிரில்
தினகர மண்டலம் வருடுஞ் செழுந் தருவின் குலம் பெருகிக்
கனமருவி அசைந்து அலையக் களி வண்டு புடை சூழப்
புனல் மழையோ மதுமழையோ பொழிவு ஒழியா பூஞ்சோலை     4.4.3

1049    
பாளை விரி மணங் கமழும் பைங்காய் வன் குலைத்தெங்கின்
தாளதிர மிசை முட்டித் தடம் கிடங்கின் எழப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழமிதப்ப வண் பலவின்
நீளமுதிர் கனி கிழி தேன் நீத்தத்தில் எழுந்துகளும்     4.4.4

1050    
வயல் வளமும் செயல் படு பைந் துடவையிடை வருவளமும்
வியலிடம் எங்கணும் நிறைய மிக்க பெரும் திருவினாம்
புயலடையும் மாடங்கள் பொலிவு எய்த மலியுடைத்தாய்
அயலிடை வேறு அடி நெருங்கக் குடி நெருங்கி உளது அவ்வூர்     4.4.5

1051    
மற்றவ்வூர் புறம் பணையின் வயல் மருங்கு பெரும் குலையில்
சுற்றம் விரும்பிய கிழமைத் தொழில் உழவர் கிளை துவன்றிப்
பற்றிய பைங் கொடிச் சுரை மேல் படர்ந்த பழம் கூரையுடைப்
புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்து உளதோர் புலைப்பாடி     4.4.6

1052    
கூருகிர் மெல்லடி அலகின் குறும் பார்ப்புக் குழுச் சுழலும்
வார் பயில் முன்றிலில் நின்ற வள்ளுகிர் நாய் துள்ளு பறழ்
கார் இரும்பின் சரி செறிகைக் கரும் சிறார் கவர்ந்து ஓட
ஆர் சிறு மென் குரைப்படக்கும் அரைக்கு அசைத்த இருப்பு மணி     4.4.7

1053    
வன் சிறு தோல்மிசை உழத்தி மகவு உறக்கும் நிழல் மருதும்
தன் சினை மென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதை நீழல்
மென் சினைய வஞ்சிகளும் விசிப் பறை தூங்கின மாவும்
புன்றலை நாய்ப் புனிற்று முழைப் புடைத்து எங்கும் உடைத்து எங்கும்     4.4.8

1054    
செறிவலித் திண் கடைஞர் வினைச் செயல்புரிவை கறை யாமக்
குறி அளக்க உளைக்கும் செங் குடுமி வாரணச் சேக்கை
வெறி மலர்த் தண் சினைக் காஞ்சி விரி நீழல் மருங்கு எல்லாம்
நெறி குழல் புன் புலை மகளிர் நெற் குறு பாட்டு ஒலி பரக்கும்     4.4.9

1055    
புள்ளும் தண் புனல் கலிக்கும் பொய்கையுடைப் புடை எங்கும்
தள்ளும் தாள் நடை அசையத் தளை அவிழ் பூங்குவளை மது
விள்ளும் பைங் குழல் கதிர் நெல் மிலைச்சிய புன் புலைச்சியர்கள்
கள்ளுண்டு களி தூங்கக் கறங்கு பறையும் கலிக்கும்     4.4.10

1056    
இப்படித்து ஆகிய கடைஞர் இருப்பின் வரைப்பினின் வாழ்வார்
மெய்ப்பரிவு சிவன் கழற்கே விளைத்த உணர்வொடும் வந்தார்
அப்பதியில் ஊர் புலைமை ஆன்ற தொழில் தாயத்தார்
ஒப்பிலவர் நந்தனார் என ஒருவர் உளர் ஆனார்     4.4.11

1057    
பிறந்து உணர்வு தொடங்கிய பின் பிறைக் கண்ணிப் பெருந்தகைபால்
சிறந்த பெரும் காதலினால் செம்மை புரி சிந்தையராய்
மறந்தும் அயல் நினைவு இன்றி வரு பிறப்பின் வழி வந்த
அறம் புரி கொள்கையராயே அடித்தொண்டின் நெறி நின்றார்     4.4.12

1058    
ஊரில் விடும் பறைத் துடைவை உணவுரிமையாக்கொண்டு
சார்பில் வரும் தொழில் செய்வார் தலை நின்றார் தொண்டினால்
கூரிலைய முக் குடுமிப் படை அண்ணல் கோயில் தொறும்
பேரிகை முதலாய முகக் கருவி பிறவினுக்கும்     4.4.13

1059    
போர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை
நேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்
சேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு
ஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார்     4.4.14

1060    
இவ் வகையில் தந்தொழிலின் இயன்ற வெலாம் எவ்விடத்தும்
செய்வனவும் கோயில்களில் திரு வாயில் புறம் நின்று
மெய் விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும்
அவ்வியல்பில் பாடுதலுமாய் நிகழ்வார் அந்நாளில்     4.4.15

1061    
திருப் புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிக நினைந்து
விருப்பினோடும் தம் பணிகள் வேண்டுவன செய்வதற்கே
அருத்தியினால் ஒருப்பட்டு அங்கு ஆதனூர் தனில் நின்றும்
வருத்தமுறுங் காதலினால் வந்து அவ்வூர் மருங்கணைந்தார்    4.4.16

1062    
சீர் ஏறும் இசை பாடித் திருத் தொண்டர் திரு வாயில்
நேரே கும்பிட வேண்டும் என நினைந்தார்க்கு அது நேர்வார்
கார் ஏறும் எயில் புன் கூர்க் கண்ணுதலார் திரு முன்பு
போரேற்றை விலங்க அருள் புரிந்து அருளிப் புலப்படுத்தார்     4.4.17

1063    
சிவலோகம் உடையவர் தம் திரு வாயில் முன்னின்று
பவ லோகம் கடப்பவர் தம் பணிவிட்டுப் பணிந்து எழுந்து
சுவலோடுவார் அலையப் போவார் பின் பொரு சூழல்
அவலோடும் அடுத்தது கண்டு ஆதரித்துக் குளம் தொட்டார்     4.4.18

1064    
வடம் கொண்ட பொன் இதழி மணி முடியார் திரு அருளால்
தடம் கொண்ட குளத்து அளவு சமைத்து அதற்பின் தம் பெருமான்
இடம் கொண்ட கோயில் புறம் வலம் கொண்டு பணிந்து எழுந்து
நடம் கொண்டு விடை கொண்டு தம் பதியில் நண்ணினார்     4.4.19

1065    
இத் தன்மை ஈசர் மகிழ் பதி பலவும் சென்று இறைஞ்சி
மெய்த் திருத் தொண்டு செய்து விரவுவார் மிக்கு எழுந்த
சித்தமொடுந் திருத் தில்லைத் திரு மன்று சென்று இறைஞ்ச
உய்த்த பெருங் காதல் உணர்வு ஒழியாது வந்து உதிப்ப     4.4.20

1066    
அன்று இரவு கண் துயிலார் புலர்ந்து அதற்பின் அங்கு எய்த
ஒன்றியணை தரு தன்மை உறு குலத்தோடு இசைவு இல்லை
என்று இதுவும் எம்பெருமான் ஏவல் எனப் போக்கு ஒழிவார்
நன்றுமெழுங் காதல் மிக நாளைப் போவேன் என்பார்     4.4.21

1067    
. நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்     4.4.22

1068    
செல்கின்ற போழ்து அந்தத் திரு எல்லை பணிந்து எழுந்து
பல்கும் செந்தீ வளர்த்த பயில் வேள்வி எழும் புகையும்
மல்கு பெரும் இடையோதும் மடங்கள் நெருங்கினவும் கண்டு
அல்கும் தம் குலம் நினைந்தே அஞ்சி அணைந்திலர் நின்றார்     4.4.23

1069    
நின்றவர் அங்கு எய்தற்கு அரிய பெருமையினை நினைப்பார் முன்
சென்று இவையும் கடந்து ஊர் சூழ் எயில் திருவாயிலைப் புக்கார்
குன்று அனைய மாளிகைகள் தொறும் குலவும் வேதிகைகள்
ஒன்றிய மூவாயிரம் அங்கு உள என்பார் ஆகுகள்     4.4.24

1070    
இப்பரிசாய் இருக்க எனக்கு எய்தல் அரிது என்று அஞ்சி
அப்பதியின் மதில் புறத்தின் ஆராத பெருங் காதல்
ஒப்ப அரிதாய் வளர்ந்து ஓங்க உள் உருகிக் கை தொழுதே
செப்ப அரிய திரு எல்லை வலங் கொண்டு செல்கின்றார்     4.4.25

1071    
இவ் வண்ணம் இரவு பகல் வலம் செய்து அங்கு எய்து அரிய
அவ் வண்ணம் நினைந்து அழிந்த அடித் தொண்டர் அயர்வு எய்தி
மை வண்ணத்து திரு மிடற்றார் மன்றில் நடம் கும்பிடுவது
எவ் வண்ணம் என நினைந்தே ஏசறவினெடுந் துயில்வார்     4.4.26

1072    
இன்னல் தரும் இழி பிறவி இது தடை என்றே துயில்வார்
அந் நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்து அருளி
மன்னு திருத் தொண்டர் அவர் வருத்தம் எல்லாம் தீர்ப்பதற்கு
முன் அணைந்து கனவின் கண் முறுவலோடும் அருள் செய்வார்     4.4.27

1073    
இப் பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி
முப்புரி நூல் மார்பர் உடன் முன் அணைவாய் என்ன மொழிந்து
அப் பரிசே தில்லை வாய் அந்தணர்க்கும் எரி அமைக்க
மெய்ப் பொருள் ஆனார் அருளி அம்பலத்தே மேவினார்     4.4.28

1074    
தம் பெருமான் பணி கேட்ட தவ மறையோர் எல்லாரும்
அம்பலவர் திருவாயின் முன்பு அச்சமுடன் ஈண்டி
எம்பெருமான் அருள் செய்த பணி செய்வோம் என்று ஏத்தித்
தம் பரிவு பெருக வரும் திருத் தொண்டர் பால் சார்ந்தார்     4.4.29

1075    
ஐயரே அம்பலவர் அருளால் இப் பொழுது அணைந்தோம்
வெய்ய அழல் அமைத்து உமக்குத் தர வேண்டி என விளம்ப
நையும் மனத் திருத் தொண்டர் நான் உய்ந்தேன் எனத் தொழுதார்
தெய்வ மறை முனிவர்களும் தீ அமைத்த படி மொழிந்தார்     4.4.30

1076    
மறையவர்கள் மொழிந்து அதன் பின் தென் திசையின் மதில் புறத்துப்
பிறை உரிஞ்சும் திருவாயில் முன்பாக பிஞ்ஞகர் தம்
நிறை அருளால் மறையவர்கள் நெருப்பு அமைத்த குழி எய்தி
இறையவர் தாள் மனம் கொண்டே எரி சூழ வலம் கொண்டார்     4.4.31

1077    
கை தொழுது நடமாடுங் கழலுன்னி அழல் புக்கார்
எய்திய அப் பொழுதின் கண் எரியின் கண் இம்மாயப்
பொய் தகையும் உருவொழித்துப் புண்ணிய மா முனி வடிவாய்
மெய் திகழ் வெண்ணூல் விளங்க வேணி முடி கொண்டு எழுந்தார்     4.4.32

1078    
செந்தீ மேல் எழும் பொழுது செம்மலர் மேல் வந்து எழுந்த
அந்தணன் போல் தோன்றினார் அந்தரத்து துந்துபி நாதம்
வந்து எழுந்தது இரு விசும்பில் வானவர்கள் மகிழ்ந்து ஆர்த்துப்
பைந்துணர் மந்தாரத்தின் பனி மலர்மாரிகள் பொழிந்தார்     4.4.33

1079    
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கை தொழுதார்
பரவரிய தொண்டர்களும் பணிந்து மனம் களிப் பயின்றார்
அருமறை சூழ் திரு மன்றில் ஆடுகின்ற கழல் வணங்க
வருகின்றார் திரு நாளைப் போவாராம் மறை முனிவர்     4.4.34

1080    
தில்லை வாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்தி
ஒல்லை மான் மறிக் கரத்தார் கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி
ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு உய்ய நடம் ஆடும்
எல்லையினைத் தலைப்பட்டார் யாவர் களும் கண்டிலரால்     4.4.35

1081    
அந்தணர்கள் அதிசயத்தார் அருமுனிவர் துதி செய்தார்
வந்தணைந்த திருத் தொண்டர் தம்மை வினை மாசு அறுத்து
சுந்தரத் தாமரை புரையும் துணை அடிகள் தொழுது இருக்க
அந்தம் இலா ஆனந்தப் பெரும் கூத்தர் அருள் புரிந்தார்     4.4.36

1082    
மாசு உடம்பு விடத் தீயின் மஞ்சனம் செய்து அருளி எழுந்து
ஆசில் மறை முனியாகி அம்பலவர் தாள் அடைந்தார்
தேசுடைய கழல் வாழ்த்தித் திருக் குறிப்புத் தொண்டவிளைப்
பாசம் உற முயன்றவர்தம் திருத் தொண்டின் பரிசு உரைப்பாம்     4.4.37


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.