LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-30

5.04. காரைக்கால் அம்மையார் புராணம்



1722    மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில்
ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி
கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக்
கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்     5.4.1

1723    
வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர்
தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால்
அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து
பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்     5.4.2

1724     
வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின்
அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே
பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத்
தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்     5.4.3

1725     
பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம்
செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய
மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால்
அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்     5.4.4

1726     
வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை
அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று
தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள்
கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார்     5.4.5

1727    
நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 1
மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால்
இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும்
தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார்     5.4.6

1728     
நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண்
பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத்
தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச
மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்     5.4.7

1729     
வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து
தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த
பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு
முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்     5.4.8

1730     
மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று
உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப்
பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும்
சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்     5.4.9

1731     
மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள்
அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே
இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி
பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார்     5.4.10

1732    
அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து
தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத்
தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக்
களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்     5.4.11

1733    
மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள்
தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன்
பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன்
அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்     5.4.12

1734    
மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின்
நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும்
தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி
மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான்     5.4.13

1735     
ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற
பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ்
ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப்
பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்     5.4.14

1736    
நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும்
செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான
தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்     5.4.15

1737     
பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு
மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப
ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே
ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்     5.4.16

1738     
கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு
மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின்
பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர்
உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்     5.4.17

1739     
வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு
நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப்
பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து
ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்     5.4.18

1740     
கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட
வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே
பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும்
அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்     5.4.19

1741     
இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த
நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு
வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால்
அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்     5.4.20

1742     
மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத்
தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர்
வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப்
பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்     5.4.21

1743     
மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன்
உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப்
பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக்
கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்     5.4.22

1744     
இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின்
மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த
நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல்
அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்     5.4.23

1745    
மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி
தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன்
இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என
அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்     5.4.24

1746    
அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார்
மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான்
தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார்
கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று     5.4.25

1747     
மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில்
உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான்
முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால்
பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்     5.4.26

1748     
அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும்
செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார்
கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை
மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்     5.4.27

1749     
செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார்
மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி
எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு
மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்     5.4.28

1750     
ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான்
வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான்
தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர்
ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்     5.4.29

1751    
பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி
ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன
மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை
ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்     5.4.30

1752    
வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி
அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும்
துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்     5.4.31

1753    
விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான்
படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி
நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும்
வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்     5.4.32

1754     
கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும்
புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி
சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும்
நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான்     5.4.33

1755     
கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில்
அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி
இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப்
படர் புனல் கன்னி நாட்டோ ர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்     5.4.34

1756     
அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும்
ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து
மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற
செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்     5.4.35

1757     
பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை
அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம்
புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு
முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்     5.4.36

1758     
முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும்
இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப்
பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால்
பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்     5.4.37

1759     
மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு
உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத்
தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு
கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்     5.4.38

1760    
இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும்
கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன
தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும்
மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக     5.4.39

1761     
விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன்
வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி
அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று
கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே     5.4.40

1762     
அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும்
தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு
மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர்
கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார்     5.4.41

1763    
மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத்
தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக்
காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும்
தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார்     5.4.42

1764     
சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி
மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து
குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை
தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்     5.4.43

1765     
வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும்
சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த
பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு
முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான்     5.4.44

1766     
தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும்
மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே
யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும்
பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்     5.4.45

1767     
கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும்
அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப
உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை
மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்     5.4.46

1768     
மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர்
நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு
பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே
பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்     5.4.47

1769     
என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார்
மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக்
கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை
ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்     5.4.48

1770     
ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத்
தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால்
ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப்
பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்     5.4.49

1771     
ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்     5.4.50

1772    
மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம்
உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும்
குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற
தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்     5.4.51

1773     
உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை
அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார்
பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும்
நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி     5.4.52

1774    
ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி
ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள்
காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண
வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார்     5.4.53

1775     
கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள்
கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே
அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை
எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்     5.4.54

1776     
வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று
தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும்
படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின்
நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்    5.4.55

1777     
தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி
மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக்
கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச்
சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே     5.4.56

1778     
அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து
தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும்
எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன
நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்     5.4.57

1779     
வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப்
பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை
ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்     5.4.58

1780     
அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று
பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச்
சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால்
இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்     5.4.59

1781     
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்     5.4.60

1782     
கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும்
நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில்
ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்
பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான்     5.4.61

1783     
அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத
மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து
செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம்
நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே     5.4.62

1784     
ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற
கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு
மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி
ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்     5.4.63

1785     
மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும்
இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி
எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம்
கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்     5.4.64

1786     
மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி
கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர்
எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை
அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா     5.4.65

1787     
ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது
கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச்
சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம்
போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன்     5.4.66


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
07-Oct-2016 04:29:34 சு.காசி விசுவநாதன் said : Report Abuse
அன்புடையீர் , வணக்கம்.தங்கள் வலைத்தளத்தைப் பார்த்த பிறகு என்னிடமிருந்த ஆயிரக்கணக்கான தமிழ் இலக்கிய புத்தகங்களை திண்டுக்கல் அருகே உள்ள மேல் நிலைப் பள்ளியாக உயர்வு பெற இருக்கும் ஒரு உயர் நிலைப் பள்ளி நூல் நிலையத்திற்கு நன் கொடையாக அளித்துவிட்டேன். காரணம் அனைத்து இலக்கியங்களும் இந்த வலைத்தளத்தில் உள்ளன. இனி புத்தகங்கள் தேவை இல்லை என்று கொடுத்து விட்டேன். மிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம்.வாழ்க தங்கள் தமிழ்ப் பணி.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.