LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-32

5.06. திரு நீல நக்க நாயனார் புராணம்



1833     பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும்
காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச்
சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால்
வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு     5.6.1

1834    
நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார்
மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி
அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம்
பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை     5.6.2

1835     
ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில்
ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர்
நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை
வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்     5.6.3

1836     
சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர்
ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார்
ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர்
நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்     5.6.4

1837     
வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி
நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து
பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே
காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்     5.6.5

1838     
மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை
நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே
அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா
எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்     5.6.6

1839    
ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில்
மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத்
தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த
நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்     5.6.7

1840     
உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற
முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன
குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட
இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர்     5.6.8

1841    
அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின்
துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி
இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த
உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்     5.6.9

1842     
நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார்
மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித்
தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி
நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்     5.6.10

1843     
தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம்
கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை
நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச்
சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி     5.6.11

1844    
விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று
எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி
ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப்
பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக     5.6.12

1845     
பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம்
சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண்
புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச்
சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்     5.6.13

1846     
மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார்
புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில்
இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும்
நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்     5.6.14

1847    
மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி
தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர
முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய்
உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார்     5.6.15

1848     
மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான்
உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க
முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக்
கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்     5.6.16

1849     
அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார்
நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார்
செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு
பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார்     5.6.17

1850    
பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில்
வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி
உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக்
கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள     5.6.18

1851     
கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக்
கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத்
தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார்
அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்     5.6.19

1852    
போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம்
பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி
மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்     5.6.20

1853    
பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த
இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி
அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு
முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார்     5.6.21

1854     
அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்஢ல்
மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை
பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம்
சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார்     5.6.22

1855     
பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ
மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள்
விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார்
சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்     5.6.23

1856     
நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர்
தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர்
கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான்
மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்     5.6.24

1857     
கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து
தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள்
நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து
ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார்     5.6.25

1858     
சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம்
ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு
அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார்
பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார்     5.6.26

1859     
பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க
வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப
உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி
வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார்     5.6.27

1860     
அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக்
குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில்
இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும்
தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்     5.6.28

1861    
சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி
ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும்
காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது
நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்     5.6.29

1862    
நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன
நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்     5.6.30

1863    
ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று
ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர
தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர்
பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார்     5.6.31

1864    
கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர்
அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த
திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே
பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார்     5.6.32

1865     
பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி
அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி
எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும்
புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்     5.6.33

1866    
பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு
தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும்
வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை
உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்     5.6.34

1867     
மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும்
தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச்
சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர்
பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்     5.6.35

1868     
சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும்
நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி
வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார்
திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர்     5.6.36

1869     
பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க
வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி
ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே
திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்     5.6.37

1870     
தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில்
வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி
இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால்
ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்     5.6.38


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.