LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-43

7.03. சிறுத்தொண்ட நாயனார் புராணம்3660    உரு நாட்டுஞ் செயல் காமன் ஒழிய விழிபொழி செந்தீ
வரும் நாட்டத் திருநுதலார் மகிழ்து அருளும் பதிவயலில்
கருநாட்டக் கடைசியர் தம் களி நாட்டும் காவேரித்
திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டக் குடி ஆகும்     7.3.1

3661     
நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்
உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டு
மலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்
பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார்     7.3.2

3662     
ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும்
தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்று அவற்றால்
பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்பு
மேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார்     7.3.3

3663     
உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றி பயின்று அவற்றால்
தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றே
கொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்பு
பள்ளமடையாய் என்றும் பயின்று வரும் பண்புடையார்     7.3.4

3664     
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தே
ஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப்
பூசல் முனைக் களிறு உகைத்து போர் வென்று பொரும் அரசர்
தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார்     7.3.5

3665     
மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்
தொன் நகரம் துகள் ஆகத் துனைகெடும் கை வரை உகைத்துப்
பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்
இன்னை எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்     7.3.6

3666     
கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினை
அதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்களுக்கு உரைப்பார்
மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்தலி உடைமையினால்
எதிரி இவருக்கு இவ்வுலகில் இல்லை என எடுத்து உரைத்தார்     7.3.7

3667     
தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்
உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்
வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெருவுற்று
எம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்     7.3.8

3668    
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்த
திறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்கு
நிறைந்த நிதிக்குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தே
அறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான்     7.3.9

3669     
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்
எம்முடைய மனக் கருத்துக்கு இனிதாக இசைந்து உமது
மெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்
செம்மை நெறி திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான்     7.3.10

3670     
மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்து
பன்னு புகழ் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ்
சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டு
முன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார்     7.3.11

3671     
வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத்
தீதில் குடிப் பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும்
காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமை
நீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்     7.3.12

3672     
நறை இதழித் திரு முடியார் அடியாரை நாள் தோறும்
முறைமையினில் திரு அமுது முன் ஊட்டிப் பின் உண்ணும்
நிறையுடைய பெருவிருப்பில் நியதி ஆகக் கொள்ளும்
துறைவழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார்     7.3.13

3673     
தூய திரு அமுது கனி கன்னல் அறுசுவைக் கறிநெய்
பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம்
மேய படியால் அமுது செய்விக்க இசைந்து அடியார்
மாயிரு ஞாலம் போற்ற வரும் இவர் பால் மனம் மகிழ்ந்தார்     7.3.14

3674     
சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்த
நாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால்
மே தகையார் அவர் முன்புமிகச் சிறியராய் அடைந்தார்
ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்     7.3.15

3675     
கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமர
உண்ணிறை அன்பினில் பணி செய்து ஒழுவார் வழுவு இன்றி
எண்ணில் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெய
நண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண்     7.3.16

3676     
நீராரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப்
பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின்
வேராகி விளங்கும் திரு வெண்காட்டு நங்கைபால்
சீராளத் தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்     7.3.17

3677     
அருமையினில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்த
பெருமையினில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்று
வரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத்
திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப     7.3.18

3678    
மங்கல நல் இயம் முழக்கம் மறை முழக்கம் வான் அளப்ப
அங்கணர் தம் சீர் அடியார்க்கு அளவு இறந்த நிதி அளித்துத்
தங்கள் மரபினில் உரிமை சடங்கு தச தினத்தினிலும்
பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணிபுணைந்தார்     7.3.19

3679     
ஆர்வம் நிறை பெரும் சுற்றம் அகமலர அளித்தவர் தாம்
பார் பெருகும் மகிழ்ச்சி உடன் பருவ முறைப் பாராட்டுச்
சீர் பெருகச் செய்ய வளர் திருமனார் சீறடியில்
தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார்     7.3.20

3680     
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பை
மருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படைக் கையில்
பொருவில் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கை
தெருவில் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார்     7.3.21

3681     
வந்து வளர் மூவாண்டில் மயிர் வினை மங்கலம் செய்து
தந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்
சிந்தை மலர் சொல் தெளிவித்தே செழும் கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்து அவரைப் பள்ளியினில் இருத்தினார்     7.3.22

3682     
அந் நாளில் சண்பை நகர் ஆண்தகையார் எழுந்து அருள
முன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்
பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலிகாவனார்தம்
நன்னமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்     7.3.23

3683     
சண்பையர் தம் பெருமானும் தாங்க அரிய பெரும் காதல்
பண்புடைய சிறுத்தொண்டர் உடன் பயின்று மற்று அவரை
மண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்து
நண்பருளி எழுந்து அருளத் தாம் இனிது நயப்பு உற்றார்     7.3.24

3684     
இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இரும் கயிலை
அத்தர் திருவடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவர் உடைய
மெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம்
சித்தம் மகிழ் வயிரவராய்த் திருமலையின் நின்று அணைகின்றார்     7.3.25

3685     
மடல் கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக்
கடல் மண்டி முகந்து எழுந்த காள மேகச் சுருள் போல்
தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறி
படர் துஞ்சின் கரும் குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி     7.3.26

3686     
அஞ்சனம் மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பை
மஞ்சின் இடைஎழுந்த வான மீன் பரப்பு என்னப்
புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்பத்
துஞ்சின் உனித்து தனிப் பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற     7.3.27

3687     
அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம் பிறை தன்னைப்
பெருகு சிறுமதியாக்கிப் பெயர்த்து சாத்தியது என்ன
விரிசுடர் செம்பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த்
திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப் பொட்டும் திகழ்ந்து இலங்க     7.3.28

3688     
வெவ்வருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்
அவ்வனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகை
வவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள்
செவ்வரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க     7.3.29

3689     
களம் கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுத குமிழிநிரைத்
துளங்கொளி வெண் திரட் கோவைத் தூய வடம் அணிந்தது என
உளங்கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருக
விளங்கும் திருக் கழுத்தின் இடைவெண் பளிங்கின் வடம் திகழ     7.3.30

3690     
செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப்
பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது என
தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத்தது சாத்தும்
அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க     7.3.31

3691     
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது என
அக்குமணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்
கைக்கு அணி கொள்வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும்
தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க     7.3.32

3692     
பொருவில் திருத் தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும்
பெருகருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர்
வரும் அன்பின் வழிநிற்பீர் என மறைபூண்டு அறைவனபோல்
திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப     7.3.33

3693     
அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்த
வயங்கு ஒலி மூவிலைச்சூலம் மணித்திருத் தோள்மிசைப் பொலியத்
தயங்கு சுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப்
பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட     7.3.34

3694    
அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்ப
மருள் பொழியும் மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப்
பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப்புவி ஏத்தத்
தெருள் பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டம் குடிசேர்ந்தார்     7.3.35

3695     
தண்டாத ஒரு வேட்கைப் பசி உடையார் தமைப்போலக்
கண்டாரைச் சிறுத் தொண்டர்மனை வினவிக் கடிது அணைந்து
தொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்
வண்டார் பூந்தாரார் இம்மனைக்கு உள்ளாரோ என்ன     7.3.36

3696     
வந்து அணைந்து வினவுவார் மாதவரேயாம் என்று
சந்தனம்மாம் தையலார் முன்வந்து தாள் வணங்கி
அந்தமில் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார்
எந்தமை ஆள் உடையீரே அகத்து எழுந்து அருளும் என     7.3.37

3697    
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்த
இடவகையில் தனிபுகுதோம் என்று அருள அதுகேட்டு
விட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக்
கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி     7.3.38

3698    
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்கு
எம் பெருமான் யாவரையும் கண்டிலர் தேடிப் போனார்
வம்பென நீர் எழுந்து அருளி வரும் திருவேடம் கண்டால்
தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனித்தாழார்     7.3.39

3699     
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்ன
ஒப்பில் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம்
செப்பரும் சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்
எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி     7.3.40

3700     
கண்ணுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண்
வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்தாம்
நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளி
அண்ணலார் திருவாத்தி அணைந்து அருளி அமர்ந்திருந்தார்     7.3.41

3701     
நீரார் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வமனை எய்தி
ஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும்
பாரா தரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார்     7.3.42

3702    
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார்
வடி சேர் சூல கபாலத்தார் வட தேசத்தோம் என்றார் வண்
துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்க்
கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து     7.3.43

3703     
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்திச்
சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்
நின்ற தொண்டர் தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர்
என்று திருவாய் மலர்ந்து அருள இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார்     7.3.44

3704     
பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும்
நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வார் நான் என்று
கோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில்
காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன்     7.3.45

3705     
அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் என
நெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர் உமைக் காணும்
படியால் வந்தோம் உத்தர பதியோம் எம்மைப் பரிந்து ஊட்ட
முடியா துமக்குச் செய்கை அரிது ஒண்ணா என்று மொழிந்து அருள     7.3.46

3706     
எண்ணா அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக்
கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளிச் செய்யும் கடிது அமைக்க
தண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேட
ஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார்     7.3.47

3707     
அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்ற
பெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம்
பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பது
உரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்     7.3.48

3708     
சால நன்று முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லை
ஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது என
ஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக்
காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார்     7.3.49

3709     
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்
நண்பு மிக்கீர் நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம்
உண்பதஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல் இன்னம்
புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்     7.3.50
3710    யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் என
நாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்
தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே
ஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது என மொழிந்தார்     7.3.51

3711     
அதுவும் முனைவர் மொழிந்து அருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்கு
இதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்யப் பெறில் என்று
கதுமென் விரைவில் அவர் அவர் இசையப் பெற்றுக் களிப்பால் காதலொடு
மதுமென் கமல மலர்ப் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார்     7.3.52

3712     
அன்பு மிக்க பெரும் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மை
முன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றே
இன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாதமிசை இறைஞ்சிப்
பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ     7.3.53

3713     
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம்
உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்
கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்
பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார்     7.3.54

3714     
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்
பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு
உரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்கு
வரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும்     7.3.55

3715    
மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமை
நினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே? நேர் நின்று
தனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாதே
எனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழப்போம் யாம் என்றார்     7.3.56

3716     
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர்
இன்று தாழாது அமுது செய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம்
நன்று காண்பது என நயந்து நம்மைக் காக்க வரும் மணியை
சென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார்     7.3.57

3717     
காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனை
ஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினால் போல
நாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழிப் புதல்வன்
ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார்     7.3.58

3718     
பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்ப
பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்து இயல்பின் மேல்
கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர்
வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி     7.3.59

3719     
குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகன் நீக்கி
மஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப்
பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டி
எஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக் கொடுத்தார்     7.3.60

3720     
அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்
உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாமுண்ணார்
பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்க
மெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார்     7.3.61

3721     
ஒன்றும் மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில்
சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகை
வென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயார்     7.3.62

3722    
இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்
கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும்
நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத்
தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்     7.3.63

3723    
பொருவில் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்து
மருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார்
அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலர
இருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார்     7.3.64

3724     
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்து
மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்பு
இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டு
கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார்     7.3.65

3725     
மட்டு விரிபூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தே
அட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறோர் அரும்கலத்துப்
பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச்
சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார்     7.3.66

3726     
உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைவதற்கு
அடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூர
விடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மெல் மலரின்
புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார்     7.3.67

3727     
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால்
நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவு
பண்ணினேனாய்ப் பசித்து அருளத் தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன்
எண்ணம் வாய்ப்ப எழுந்து அருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார்     7.3.68

3728     
இறையும் தாழாது எழுந்து அருளி அமுது செய்யும் என்று இறைஞ்ச
கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார்
நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும்
குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார்     7.3.69

3729     
வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரை
முந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச்
சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்த
கந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த     7.3.70

3730     
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கி
ஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்
மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம்
ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்     7.3.71

3731     
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சி பயிரவராம்
புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின்
வனிதை யாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம்
இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க என     7.3.72

3732     
ரிசு விளங்கப் பரிகலமும் திருத்தி பாவாடையில் ஏற்றித்
தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போனகமும் கறி அமுதும்
வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல்
விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார்     7.3.73

3733     
சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எலாம் கொண்டு
மன்னு சுவையில் கறி ஆக்கிமாண அமைத்தீரே? என்ன
அன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்தோம் என்ன
அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார்     7.3.74

3734     
சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனைவியாரோடும் திகைத்து அயரச்
சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சி
வந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றே
முந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார்     7.3.75

3735     
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத் தொண்டரை நோக்கி
ஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இப்
பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர் என்று பரமர் பணித்து அருள
ஏங்கிக் கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார்     7.3.76

3736     
அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்து
முகத்தில் வாட்டம் மிகப் பெருகப் பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார்
இகத்தும் பரத்தும் இனி யாரைக் காணேன் யானும் திருநீறு
சகத்தில் இடுவார் தமைக் கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச     7.3.77

3737     
உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்று
செம்மை கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்தி
வெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார்
தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி     7.3.78

3738     
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாது
சோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம் உடன் துய்ப்ப
மாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் என
ஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார்     7.3.79

3739     
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர்
தாம் அங்கு அருளிச் செய்யத் தரியார் தலைவர் அமுது செய்து அருள
யாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவு உற்று எழுந்து அருளால்
பூ மென் குழலார் தம் மோடும் புறம் போய் அழைக்கப் புகும் போது     7.3.80

3740     
வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்
தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்
செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம்
உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட     7.3.81

3741     
பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடிவருவான் போல் வந்த
தரமில் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்து தழுவித் தம்
கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கெடுப்பக் களி கூர்ந்தார்
புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால்     7.3.82

3742     
வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்
முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச்
சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்
வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார்     7.3.83

3743     
செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும் அஞ்சுகத்துப் பயிரவர் யாம்
உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே எனத் தேடி
மையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்த
தைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்     7.3.84

3744    
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர்
முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்ப
இனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப்
பனி வெண் திங்கள் முடி துளங்க பரந்த கருணை நோக்கு அளித்தார்     7.3.85

3745     
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்
முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்
என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்
பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார்     7.3.86

3746     
கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும்
வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக் கீழ்
நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்
என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்     7.3.87

3747     
ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதா
ஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப்
பேறு பெற்றார் சே அடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள்
வேறு கழறிற்று அறிவார் தம் பெருமையும் தொழுது விளம்புவார்     7.3.88


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.