LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-50

8.04. அதிபத்த நாயனார் புராணம்3992     மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின்
தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப்
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல்
நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம்     8.4.1

3993    
தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த
தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ்
காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த
மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு     8.4.2

3994    
பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து
திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும்
தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல்
கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால்     8.4.3

3995    
நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த
பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக்
கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும்
ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர்     8.4.4

3996    
அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில்
பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர்
மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த
தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி     8.4.5

3997    
புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை
அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல்
வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள்     8.4.6

3998    
உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த
கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல்
அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து
மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும்     8.4.7

3999    
வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும்
விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும்
தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும்
அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய     8.4.8

4000    
அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து
மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார்
புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும்
வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர்     8.4.9

4001    
ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள்
ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப்
பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும்
ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார்     8.4.10

4002    
முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து
பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும்
நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர்
விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால்     8.4.11

4003    
வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால்
ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார்     8.4.12

4004    
மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம்
தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும்
பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று
மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார்     8.4.13

4005    
சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து
கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச்
சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே
ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார்     8.4.14

4006    
ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத்
தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால்
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம்
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்     8.4.15

4007    
வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற
ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத்
தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப்
பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார்     8.4.16

4008    
என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர்
பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால்
ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும்
சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார்     8.4.17

4009    
அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில்
புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த
இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல்
முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ     8.4.18

4010    
பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே
அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை
நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து
அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார்     8.4.19

4011    
தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு
மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி
மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும்
செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம்     8.4.20


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.