LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-8

திருநீலகண்ட நாயனார் புராணம்360     வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்     2.2.1

361    
பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்
சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரு நீரார்     2.2.2

362    
அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்
உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்     2.2.3

363    
அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவ நின்று அடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம் தன்னைத் திரு நீல கண்டம் என்பார்     2.2.4

364    
ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்     2.2.5

365    
மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்     2.2.6

366    
ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்     2.2.7

367    
கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்     2.2.8

368    
இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார்     2.2.9

369    
இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட
மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி     2.2.10

370    
கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும்     2.2.11

371    
நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்     2.2.12

372    
நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார்     2.2.13

373    
பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்
நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின்     2.2.14

374    
எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்
உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று     2.2.15

375    
தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என     2.2.16

376    
தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
மல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்     2.2.17

377    
வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்     2.2.18

378    
சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்
சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்     2.2.19

379    
வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்     2.2.20

380    
என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயை
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்     2.2.21

381    
மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்ட
இறையில் இங்கு எய்தப் புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
கறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார்     2.2.22

380    
இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடிக் காணேன்
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப்
பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார்     2.2.23

383    
சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப்
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன்     2.2.24

384    
கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால
நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன     2.2.25

385    
ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப்
போவதும் செய்யேன் என்றான் புண்ணியப் பொருளாய் நின்றான்     2.2.26

386    
வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக்
குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான் கொடுமை இல்லான்     2.2.27

387    
ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்
பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார்     2.2.28

388    
கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதும் என     2.2.29

389    
தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
அந் தளிர்ச் செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் எனச் சென்றார்     2.2.30

390    
நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில்
எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும்
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார்     2.2.31

391    
அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்
இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத்
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார்     2.2.32

392    
நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும்
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார்
நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என     2.2.33

393    
நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
சேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார்     2.2.34

394    
திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கொடுத்தீர் ஆனால்
தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில்
மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார்     2.2.35

395    
அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும் என்று
பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார்     2.2.36

396    
மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன்
சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர்
நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார்
புனை மணி வேணுத் தண்டின் இரு தலை பிடித்துப் புக்கார்     2.2.37

397    
தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி
வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப்
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார்     2.2.38

398    
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற     2.2.39

399    
அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லை
இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார்     2.2.40

400    
கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்     2.2.41

401    
மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே     2.2.42

402    
விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள்
அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்
பெறல் அரும் இளமை பெற்றுப் பேர் இன்பம் உற்றார் அன்றே     2.2.43

403    
அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்.     2.2.44


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.