LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பன்னிரண்டாம் திருமுறை-9

2.03. இயற்பகை நாயனார் புராணம்



404     சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர்
நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம்     2.3.1

405    
அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார்
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார்     2.3.2

406    
ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில்     2.3.3

407    
ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம்
தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்    2.3.4

408    
வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார்     2.3.5

409    
என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர்
கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டே
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார்     2.3.6

410    
என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்     2.3.7

411    
இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக்
கதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை
விதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன
மது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார்     2.3.8

412    
இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று
தன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்     2.3.9

413    
மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்     2.3.10

414    
என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல்
ஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப்
பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி     2.3.11

415    
வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க
ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரை
நீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்     2.3.12

416    
மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்
இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்     2.3.13

417    
வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க
காலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப்
பாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்வம் பொங்க
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார்     2.3.14

418    
வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப்
பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்     2.3.15

419    
. மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம்
தறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று     2.3.16

420    
பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல்
எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்     2.3.17

421    
ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று
பாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ
கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஓட்டோ ம் என்றார்     2.3.18

422    
மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி
முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர்     2.3.19

423    
நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும்
சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி
ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் (அன்றே.     2.3.20

424    
சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார்     2.3.21

425    
மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
வேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக்
காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்     2.3.22

426    
சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும்
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித்
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்     2.3.23

427    
மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்     2.3.24

428    
திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார்     2.3.25

429    
இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித்
திரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே     2.3.26

430    
தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி
இவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்     2.3.27

431    
செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்     2.3.28

432    
இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்     2.3.29

433    
அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக்
குழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்     2.3.30

434    
சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்
பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்ன
தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்     2.3.31

435    
சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி
தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன     2.3.32

436    
விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று     2.3.33

437    
திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப்
பொரு விடைப் பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார்     2.3.34

438    
வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்     2.3.35

439    
இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்     2.3.36


திருச்சிற்றம்பலம்

by C.Malarvizhi   on 27 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.