LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- நிர்மலா ராகவன்

இரு தந்தையர், ஒரு மகன் - நிர்மலா ராகவன்

எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும், விடுதலை அவ்வளவு சீக்கிரமாகக் கிடைக்கும் என்று மீனாட்சி நினைக்கவில்லை.


`குடல் புண்ணாகி இருக்கிறது, உயிருக்கே ஆபத்து,’ என்று டாக்டர்கள் எச்சரித்தாலும், குடியை அவன் விடவில்லை, இல்லை, குடி அவனை விடவில்லை. ஏதோ ஒன்று!


எத்தனை தடவை தன் தங்க நகைகளை அடகு வைத்து, கணவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பாள்! ஆனாலும், அவனுக்குப் புத்தி வரவேயில்லை.


`அதெல்லாம் நான் அவ்வளவு சுலபமா சாக மாட்டேண்டி! நான் செத்தா, நீ ஒடனே இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்குவே!’ அவன் சொல்லும்போதெல்லாம் அவளுக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியாது. இவன் ஒருவனையே சமாளிக்க முடியவில்லை. வீட்டிலிருந்தால் ஓயாத ஏச்சுப் பேச்சு. கொஞ்சம் வலுவிருந்தால், அவளைப் போட்டுத் துவம்சம் செய்வான். ஏதோ, மகன் பூபதிமேலாவது அன்பாக இருக்கிறாரே என்று பொறுத்துப்போனாள்.


அவளுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை, கணவன் இறந்தபோது. பிறருக்காக அழுத அழுகையைவிட நிம்மதிதான் பெரிதாக இருந்தது.

 

`பிள்ளையாவது, அப்பாவைப்போல் ஆகாமல் இருக்கவேண்டும். அதற்கு, அவனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும்!’


பெண்களின் அழகு சாதனங்களை விற்பனை செய்யும் கடையில்  வேலைக்குப் போனவள், கடை முதலாளியையே மணக்க நேரிட்டது அதிர்ஷ்டம்தான்.


“நீ ஆயுசு பூராவும் இப்படி எதுக்குத் திண்டாடணும்? நான் ஒன்னை ஏத்துக்கிறேன், நீ சரின்னு சொன்னா!”


``ஏற்றுக்கொள்கிறேன் என்கிறாரே! சும்மா வைப்பாட்டியாக வைத்திருப்பதை அப்படி நாசூக்காகச் சொல்கிறாரோ?’ மீனாட்சி குழம்பினாள்.


அவளுடைய அழகும், இளமையும் எந்த வினாடியும் ஆபத்தில் கொண்டு விடலாம் என்று உணர்ந்திருந்தாள், கணவன் இறந்த அந்த ஒரு வருடத்திற்குள்.


“எனக்கும், உனக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தம் இல்லேதான். ஆனா, நான் நாப்பத்தஞ்சு வயசாகியும் பிரம்மச்சாரியாவே இருக்கிறது நல்லதுக்குத்தான்னு இப்போ தோணுது! இல்லாட்டி, ஒன்னை மாதிரி ஒரு மனைவி எனக்குக் கிடைக்குமா?”


இவரைப்போய் சந்தேகித்தோமே! சந்திரனுடைய வழுக்கைத் தலை, பருமன், தொந்தி இதெல்லாம் மீனாட்சியைப் பாதிக்கவில்லை. ஒரு முறை வெளிப்பார்வைக்கு கவர்ச்சியாக இருந்தவனை மணந்து, அனுபவித்தது எல்லாம் போதாதா?

 

பெற்ற அப்பா இருந்திருந்தால்கூட பூபதியை அவ்வளவு கட்டுப்பாடாக வளர்த்து, நன்றாகப் படிக்க வைத்திருப்பாரோ, என்னவோ!


ஆனால், பெருந்தன்மையுடன், சட்ட பூர்வமாக அவனைத் தத்து எடுத்துக்கொண்டவர் என்ன செய்தாலும், பூபதி அவரை ஒரு எதிரியாகவே பாவிப்பதை மீனாட்சி உணராமல் இல்லை. சிறுவனாக இருந்தபோது, கண்டித்து இருக்கிறாள். அவன் என்னவோ மாறவில்லை. இரண்டாவது கல்யாணத்திற்குப்பின் தாய்க்குப் பிறந்த தம்பி தங்கைகளைக் கொஞ்சினான். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டான்.


ஆனால், அவர்களுடைய தந்தையை மட்டும் ஏற்கவேயில்லை.

 

“இன்னிக்கு சாந்தா கடைக்கு வந்திச்சு, பிள்ளையோட!” சாதாரணமாக, சாப்பிடும்போது மௌனத்தைக் கடைப்பிடிக்கும் சந்திரன் அன்று அதிசயமாகப் பேசினார். “முகமும் கண்ணும் பாக்கச் சகிக்கல. இப்படியா ஒருத்தன் பெண்டாட்டியைப் போட்டு அடிப்பான்! இவன் குணம் மொல்லேயே தெரிஞ்சிருந்தா, கல்யாணமாவது கட்டி வைக்காம இருந்திருக்கலாம்!”


`அப்பனுக்குப் பிள்ளை தப்பாம பிறந்திருக்கான்!’ என்று சொன்னால், நன்றாக இருக்காது என்று அடக்கிக்கொண்டார். தான் சட்டபூர்வமான அப்பாவாக இருந்தாலும், என்னதான் அன்பைக் கொட்டி வளர்த்தாலும், நினைவு தெரிந்த நாளாகப் பழகிய அப்பாவின் குணம்தான் அவனுக்குள் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்று புரிய, வேதனையாக இருந்தது.


“நீங்க சாப்பிடுங்க. நான் போய் விசாரிக்கிறேன்!” மீனாட்சி அவரைச் சமாதானப்படுத்தினாலும், உள்ளுக்குள் பகீரென்றது.

 

மருமகளைப் பார்த்த மீனாட்சி திடுக்கிட்டாள். “என்ன சாந்தா இது! ஒன்மேல கை வைக்கிற அளவுக்குப் போயிட்டானா, அவன்! வரட்டும், பேசிக்கறேன்!” என்று கறுவினாள். ஆனால், மனதுக்குள், `இவனாவது, பிறர் சொல்றதைக் கேக்கறதாவது!’ என்ற நிராசைதான் எழுந்தது.


“அதிகப் படிப்பில்லாத என்னை விரும்பிக் கட்டினாரேன்னு அப்போ சந்தோஷப்பட்டேன், அத்தே. இப்போ இல்ல தெரியுது! இந்த மாதிரி, `கடவுள் பக்தி, பெரியவங்ககிட்ட மரியாதை’ன்னு இருக்கிறவதான் நாம்ப என்ன கொடுமை செஞ்சாலும் பொறுத்துப் போவாள்னு கணக்குப் போட்டிருக்காரு!”


“அவனை நீ ஒண்ணும் தட்டிக் கேக்கறதில்லையா?”


“சொல்லிப் பாத்தேன், அத்தே. `நான் ஒண்ணும் மட்டமான தண்ணி எல்லாம் குடிக்கிறதில்ல. நானும் எங்கப்பா மாதிரி சின்ன வயசிலேயே செத்துடுவேன், நீயும் எங்கம்மா மாதிரி இன்னொரு கல்யாணம் செய்துக்கிட்டு மினுக்கலாம்னு கனா காணாதே,’ அப்படின்னு கன்னா பின்னான்னு பேசறாரு!”


மீனாட்சிக்கு வருத்தமாக இருந்தது. “பூபதி அவங்கப்பா மாதிரி ஆயிட்டான். நான் அவருக்காக காலமெல்லாம் அழலியேங்கிற ஆத்திரம்!. எதுக்காக போலியா அழறது? அவரு போனது எனக்கு நிம்மதியாத்தான் இருந்திச்சு!”  மனம்விட்டுப் பேசினாள். “நான் அவர்கிட்ட தினம் தினம் அடிபட்டுச் சாகறதை அவன் எவ்வளவோ பாத்திருக்கான். கத்தியால முகத்தில கீறியிருக்கார். ஒரு தடவை, என் முன்பல்லு ரெண்டையும் பேத்து, அப்புறம் பொய்ப்பல் வெச்சுக்கிட்டேன்,” நினைத்துப் பார்க்கவும் பிடிக்காததை வாய்விட்டுச் சொல்ல வேண்டி வந்துவிட்டதே என்றிருந்தது. சற்று யோசித்துவிட்டுச் சொன்னாள். “அப்போ எல்லாம் பூபதி பயந்து அழுவான்!”


“பின்னே ஏன் அத்தே அதே தப்பை அவரும் செய்யறாரு?”


“யாரு கண்டாங்க! பரம்பரைப் புத்தியோ, என்னவோ! நாளைக்கு ஒன் மகனும் தாத்தா, அப்பா மாதிரித்தான் ஆவான்!”


“ஐயோ! ஒங்க வாயால அப்படிச் சொல்லாதீங்க, அத்தே!”


“அவன் ஒழுங்கா வளரணும்னா, அதுக்கு ஒரே வழிதான் இருக்கு. நீ ஒன் பிள்ளையைக் கூட்டிட்டு, ஒங்கம்மா வீட்டுக்குப் போயிடு”.


ஏதோ, கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டதைப்போல சாந்தா வாயைப் பொத்திக்கொண்டாள். 


“உன்னோட அருமை, பிள்ளைப்பாசம் இதெல்லாம் அந்தப் பாவிக்குப் புரிஞ்சா, தானே மாறிடுவான். புரியாட்டிப் போவுது! நீயாவது, அடி, ஒதை வாங்காம, நிம்மதியா இருக்கலாம். போயிடு!”

 

வாசலிலேயே நின்றபடி, “என்ன ஆச்சு?” என்று அக்கறையாக விசாரித்த கணவரிடம், “அவனை விட்டுத் தொலைன்னுட்டு வந்தேன்!” என்றாள் மீனாட்சி.


வியப்புடன் புருவத்தை உயர்த்தினார் சந்திரன்.“பின்னே என்னங்க! பொண்டாட்டியை அன்பா, மரியாதையா நடத்தத் தெரியாதவன் எல்லாம் என்ன ஆம்பளை!” என்றபடி, அவரைக் காதலுடன் பார்த்தாள்.


(நயனம், 1997)

 

- நிர்மலா ராகவன் (nirurag@gmail.com)

 

by Swathi   on 03 Dec 2014  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
11-Dec-2014 00:30:23 கருணாகரன் said : Report Abuse
கதை அருமை. வாழ்த்துக்கள். வார்த்தைகள் வரவில்லை. மீண்டும் வாழ்த்துக்கள்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.