|
||||||||
உள்ளாட்சி உங்களாட்சி 03 : வெறும் மனுதாரர்களா நாம் ? |
||||||||
![]() - திரு.நந்தகுமார் , உள்ளாட்சி ஆய்வாளர் நாம் பயணிக்கும் கிராமங்களில் சாமானிய மக்களைச் சந்திக்கும் போது, அவர்களுடனான கலந்துரையாடலில் சில கேள்விகள் நிச்சயம் இருக்கும். "இப்போ தேர்தல் தேதி அறிவிச்சாச்சுன்னு வைங்க.....தேர்தல் முடியும் வரை கவனிப்பு எப்படி இருக்கும்...? மக்கள் சிரிப்பார்கள்.
தேர்தல் முடிச்ச பிறகு நம்ம நெலம....? மலர்ந்த முகம் அப்படியே சுருங்கிவிடும்.
ஏன் அப்படி?"
சாதாரண கேள்விகள். மிகச் சாதாரண கேள்விகள். ஆனால் பதில்களோ வலியைத்தான் தருகின்றன.
தேர்தலின் போது நாம் வாக்காளர்கள்....முடிந்த பிறகு, நாம் யார் தெரியுமா? வெறும் மனுதாரர்கள். வாக்காளர்கள் பட்டியலில் இருந்தவர்கள் இப்போது பயனாளிகள் பட்டியலில்.
வாக்காளருக்கு மட்டும்தான் மரியாதையா...? அப்போ குடியானவனுக்கு ?
நாம் எவ்வளவு மக்களைச் சந்தித்து பேசினாலும் நாம் தெரிந்துகொள்ளும் விடயம்... நம் மக்கள் வாக்களிப்பதையும் தாண்டி மக்களாட்சியில் பங்கெடுக்க வேறு வழி இல்லாமல் தவிக்கிறார்கள்.... இது நமக்குத் தெரிந்ததுதான், புதியதல்ல...ஆனால் இன்னும் தொடர்கிறது என்பதுதான் நாம் கவனிக்கவேண்டிய ஒன்று.
தொழில் செய்பவர்களுக்கு கதவுகள் திறந்தே கிடக்கிறது என்கிறார்கள்....ஆனால், ஆளுகையில்(Governance) மக்கள் பங்கேற்க கதவுகள் இழுத்து மூடப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. பொருளாதார வாய்ப்புகள் பரவலாக்கப்பட்டுள்ளன . ஆனால் அதிகாரங்களும் பொறுப்புகளும் எந்த அளவிற்குப் பரவலாக்கப்பட்டுள்ளன? அதிகாரம் குவிக்கப்படவேண்டுமா?... பரவலாக்கப்பட வேண்டுமா?
அதிகாரமும் பரவலாக்கப்பட்டால்தானே மக்களுக்கான பொருளாதாரத்தை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இல்லாவிட்டால் அனைத்தும் அவர்கள் மீது திணிப்பதாகத்தானே இருக்கும். அதிகாரப்பரவலின் அவசியம் புரிகிறது...அதன் ஆணிவேர் எது தெரியுமா? கிராமசபை. உண்மையில் இருக்க வேண்டிய பொறுப்புகளை விடக் குறைவான பொறுப்புகளே தமிழக கிராமசபைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாம் அங்கிருந்தே துவங்கவேண்டியுள்ளது. இருப்பதை வைத்துக்கொண்டு பயணத்தை துவக்குவோம்.
கடந்த மே மாதம் 1 ஆம் தேதி தங்கள் கிராமத்தில் நடந்த கிராமசபையில் நம் நண்பர்கள் கலந்து கொண்டார்கள். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய ஊராட்சி அது. இதுநாள் வரை அவர்கள் ஊரில் எத்தனையோ கிராமசபை கூட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் நம் நண்பர்கள் அந்தப் பக்கமே போனதில்லை.... காரணம், அது யாருக்கானதோ என்ற எண்ணம்தான். "கட்சிக்காரர்கள் அல்லது அதிகாரிகள் நடத்தும் கூட்டம்...நாம் எதற்கு அங்கெல்லாம்..." என்ற பொதுவான மனநிலையிலேயே இருந்தார்கள். இது மக்கள் சபை, நம் பங்களிப்பு மிக மிக அவசியம் என நாம் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்ததால்.....சரி, போய்தான் பார்ப்போமே என்று, மே தின கிராமசபைக்குப் போனார்கள்.... இளைஞர்களைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அங்கிருந்த அதிகாரிகள்... கலந்து கொண்ட நண்பர்கள் சொன்னது போல "புகையிலை வாங்கித்தருவார்கள் என்பதற்காக எப்போதும் வரும் முதியவர்கள் ஒருசிலரைத்தவிர வேறுயாரும் அங்கில்லை..."
"7 நாட்களுக்கு முன்பே கிராமசபை பற்றிய அறிவிப்பை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமே...அதுதானே சட்டம். நீங்கள் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை .." எனத் துவக்கினார்கள் நம் நண்பர்கள் - இளைஞர்கள். இவர்கள் இப்படி சட்டம் பேசுவார்கள் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு மாதிரியாகச் சமாளித்த அலுவலர்கள், கூட்டத்தின் அஜெண்டாவைப் படிக்கத் துவங்கினார்கள். ஏகப்பட்ட திட்டங்களின் பெயர்கள்... பல லட்சம் ரூபாய் வரவு செலவு கணக்குகள், அதற்கான ஒப்புதல், பணிகளுக்கான தணிக்கை என ஏதேதோ வாசித்தார்கள்.....இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்..... நேரம் கடந்துகொண்டே போனது... என்ன நடக்கிறது எனப் புரிந்துகொள்ள சிரமமாக இருந்தது..... ஆனால், பஞ்சாயத்து உதவியாளரோ கொஞ்சமும் நிறுத்தாமல் வாசித்துக்கொண்டே போகிறார்... அங்குதான் ஒரு இளைஞன் சுதாரித்துக்கொண்டான்.... இடைமறித்தான்... "முதலில் எங்களுக்கு விளக்கம் சொல்லுங்கள்.... நீங்கள் வாசிக்கும் பொருட்கள் பற்றிய விளக்கங்கள் சொல்லுங்கள்...திட்டங்கள் செய்யப்பட்ட முறைகள்.... செலவுசெய்யப்பட்ட நிதி விவரம்.... புரியும்படி சொல்லுங்கள்..." என ஆரம்பித்தான். ஒருவர் ஆரம்பிக்க மற்றவர்கள் ஒவ்வொருவராகப் பங்கெடுக்க முன்வந்தார்கள்.... விரிவாக விவாதிக்க ஆரம்பித்தார்கள்.... சபையின் போக்கு மக்கள் வசம் திரும்பியது..... கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது..."நமது பெயரைச் சொல்லி இதனைத் திட்டங்களா?.... உலக வாங்கி முதல் உள்ளூர் வரி வரை பல விசயம் இருக்கிறதே நம் பஞ்சாயத்தில்....? என அவர்களுக்கு ஆச்சர்யம்.
சூடுபிடித்தது கிராமசபை. மக்களுக்குத் தேவையானதை...ஊருக்குத் தேவையானவற்றை விவாதித்தார்கள்...அங்கேயே அதனைப் பதிவு செய்தார்கள்....தீர்மானமாக நிறைவேற்றினார்கள்.
அன்றைக்குத் துவங்கியது நம் நண்பர்களின் ஓட்டம். தொடர்ந்து ஒவ்வொரு பொது வேலைக்கும் பஞ்சாயத்து நிர்வாகத்துடன் இணைந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு கிராமசபையிலும் கலந்து கொள்கிறார்கள். கடந்த மே மாதம் தயக்கத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள்... இந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று நடந்த கிராமசபையில் திரளாகக் கலந்துகொண்டார்கள்..... அதுமட்டுமல்ல, அவர்கள் கிராமத்தின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய இரசாயன ஆலை பற்றி குடியரசு தின கிராமசபையில் விவாதித்து, தீர்மானங்கள் நிறைவேற்றி, தற்போது மாவட்ட நிர்வாகம் அந்த ரசாயன ஆலை மீது நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு கிராமசபையை வலுப்படுத்தி உள்ளார்கள்.
இனி அந்த ஊராட்சிக்கு யாரும் தலைவராக வரலாம். ஆனால் நிர்வாகம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இயங்க முடியுமா? நிச்சயமாக இல்லை. இதுதானே மக்களாட்சியாக இருக்க முடியும்.
ஒரு நிகழ்வை...ஒரு உரையாடலை இங்கே பகிர்ந்துகொள்வது தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமென நினைக்கிறேன் .
சில ஆண்டுகளுக்கு முன்பு, "நம்பு தம்பி நம்மால் முடியும்" மாத பத்திரிக்கையை விற்பதற்காகச் சென்ற போது, ஓய்வு பெற்ற அலுவலர் ஒருவரிடம் நடந்த உரையாடல் அது. அவர் நாங்கள் சொல்வதை நம்ப மறுத்தார். "கிராமங்களில் மக்கள் கூடி விவாதிப்பது இயல்பானது...., கிராமசபை காலம் காலமாக இருக்கும் ஒன்று. அது சட்டப்படியான அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு அல்ல..." என்றார்.
காலம் காலமாக நடக்கும் கிராம கூட்டங்கள் வேறு, தற்போதைய கிராமசபை என்பது முற்றிலும் வேறு என்பதை அவரிடம் நிதானமாக விவரித்தோம். பழங்கால பஞ்சாயத்து என்பது தற்போதைய ஊராட்சி முறைக்கு முற்றிலும் மாறானது என்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பகுதி 5; மத்திய அரசு, நாடாளுமன்றம் ஆகியவற்றின் சட்ட வரையறைகள் பற்றியும் அதிகாரங்களைப் பற்றியும் விவரிப்பது போல, பகுதி 6; மாநில அரசுகள் மற்றும் சட்ட மன்ற நடவடிக்கைகள் குறித்து விளக்குவது போல, பகுதி 9 இப்புதிய பஞ்சாயத்துகள் பற்றியும் கிராமசபையின் அதிகாரங்கள் பற்றியும் விவரிக்கிறது" என நாம் எடுத்துரைத்தபோதுதான் அவர் அதன் தன்மையை முழுமையாகப் புரிந்துகொண்டார்.
பஞ்சாயத்துகளை, "அமைப்புகள்" என்று சொல்லாமல் "உள் சுயாட்சி அரசுகள்" என்று சட்டம் அங்கீகரிக்கிறது என்றும் 29 துறைகளில் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்கிறது என்றும் நாம் விளக்கியபோது அதன் ஆழத்தையும் ஜனநாயகத்தில் நமக்குள்ள வாய்ப்பையும் புரிந்துகொண்டார்.
இன்றும் நாம் கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்திக்கும்போது "கிராமசபை என்பது ஒரு அரசு திட்டமல்ல... அது மக்கள் அமைப்பு !", என்பதே மக்களிடம் நாம் பகிரும் பிரதான செய்தியாக இருக்கும். மேலும், "பஞ்சாயத்தில் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கிராமசபையின் ஒப்புதல் வேண்டும், பஞ்சாயத்தின் திட்ட பணிகளையும், வரவு - செலவு கணக்குகளையும் கிராமசபையில் மக்கள் ஆய்வு செய்யலாம்" என நாம் சொல்லும் போது மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள்.
எப்போது கிராமசபையின் போக்கு மக்கள் வசம் வருகிறதோ அப்போதே பஞ்சாயத்து நிர்வாகமும் மக்கள் வசம் வரத்துவங்கிவிட்டது என நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
இனி நாம் வாக்களித்த பிறகும் அதிகாரம் படைத்தவர்களே..... வெறும் மனுதாரர்கள் அல்ல...கிராமசபை உறுப்பினர்கள். சட்ட மன்ற உறுப்பினரை அங்கீகரிக்கும் அதே சட்டம்தான் கிராமசபை உறுப்பினரையும் அங்கீகரிக்கிறது. அதன் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது.
ஆம் நண்பர்களே... மக்களுக்குப் பக்கத்தில் ஒரு அரசாங்கம் இயங்குகிறது. உண்மையான மக்களாட்சிக்கான வாய்ப்பு ஒவ்வொரு சிற்றூரிலிருந்து துவங்குகிறது. அது நமக்கான அரசாங்கம். அது மூன்றாவது அரசாங்கம்.
தொடர்ந்து பயணிப்போம். #உள்ளாட்சி_உங்களாட்சி
குறிப்பு: மத்திய பட்டியல் (Central List), மாநில பட்டியல்(State List), ஒருங்கிணைந்த பட்டியல் (Concurrent List) ஆகியவை கேள்விப்பட்டிருப்போம். பஞ்சாயத்துகளுக்கும் நம் சட்டத்தில் ஒரு பட்டியல் இருக்கிறது. அது இணைப்புப் பட்டியல் 11 (Schedule 11 of our Constitution).
29 துறை பொறுப்புகள்: 1. வேளாண்மை (வேளாண்மை விரிவாக்கம் உட்பட) 2. நில மேம்பாடு, நிலச் சீர்திருத்தத்தை கொண்டுவருதல், நிலா ஒருங்கிணைப்பு மற்றும் மண் வளம் காத்தல் 3. சிறு பாசனம், நீர் மேலாண்மை மற்றும் நீர்ப்பிடிப்பு மேம்பாடு 4.கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை மற்றும் கோழிப் பண்ணை 5. மீன்வளம் 6. சமூகக் காடுகள் மற்றும் பண்ணைக் காடுகள் 7. சிறிய காடுகளின் உற்பத்திப் பொருள்கள் 8. உணவைப் பதப்படுத்தும் தொழில், உள்ளடங்கலான சிறு தொழில்கள் 9. கதர் கிராம மற்றும் குடிசைத் தொழில்கள் 10. ஊரக வீட்டு வசதி 11. குடிநீர் 12. எரிபொருள் மற்றும் தீவனம் 13. சாலைகள், சிறுபாலங்கள், பாலங்கள், நீர்வழிகள் மற்றும் பிற தகவல் தொடர்பு வழிகள் 14. மின்சார விநியோகம் உட்பட ஊரக மின்மயமாக்கல் 15. மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் 16. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் 17. தொடக்கப் பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகள் உள்ளடக்கிய கல்வி 18. தொழில் நுட்பப் பயிற்சி மற்றும் தொழில் கல்வி 19. வயது வந்தோர் மற்றும் முறைசாராக் கல்வி 20. நூலகங்கள் 21. கலாச்சார செயல்பாடுகள் 22. சந்தைகள் மற்றும் கண்காட்சிகள் 23. மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் உள்ளடக்கிய சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகள் 24. குடும்ப நல வாழ்வு 25. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு 26. உடல் ஊனமுற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலம் உள்ளடக்கிய சமூக நலன் 27. நலிவுற்ற பிரிவினர்களின் நலம், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் நலம் 28. பொது விநியோக முறை 29. சமூகச் சொத்துக்களைப் பராமரித்தல் |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 16 Feb 2018 8 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|