திரு.நந்தகுமார் .. உள்ளாட்சி ஆய்வாளர் ..
கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதிக்குள் முடிந்திருக்கவேண்டும் உள்ளாட்சி தேர்தல்கள். புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளின் முதல் கூட்டம் நடந்திருக்க வேண்டும் அன்று. ஆனால் இன்று வரை தேர்தல் நடத்தப்படவில்லை. இன்று வரை அதுபற்றி அறிவிப்பு ஏதுமில்லை. "பட்ஜெட்டில் உள்ளாட்சி தேர்தலுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம்....ஆனாலும் தேர்தல் எப்போது என்பதைப் பற்றி உடனடியாக சொல்வதற்கில்லை....வார்டுகள் மறுவரையறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தல் சாத்தியம்...." என பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தெரிவித்தார் துணை முதல்வர்.
மக்கள் ஏன் கேட்கவில்லை ?
உள்ளாட்சி தேர்தல் விரைவாக நடத்த வேண்டுமென நாம் சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த போது, சென்னை வாழ் நண்பர் ஒருவர் கேட்டார்.."சகோ, எதுக்கு சகோ இதெல்லாம்.....கவுன்சிலர் இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்லை....ஒரு விதத்தில் பார்த்த அவுங்கெல்லாம் இருந்தாத்தான் பிரச்சனையே.... நீங்க ஏன் திரும்ப கவுன்சிலர்கள் வரனும் சொல்றீங்க...." என வேகமாகக் கேட்டார்.
தனது வார்டு கவுன்சிலரின் செயல்பாடுகளை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் நண்பர். அவரிடம் சொன்னோம் "...சென்னை போன்ற ஒரு மாநகரத்தின் கவுன்சிலரோடு முடிந்துவிடுவதில்லை ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளின் தேவைகள்....மாநகர கவுன்சிலரின் பணி என்பது வேறு, ஒரு கிராம ஊராட்சி தலைவரின் பணி என்பது முற்றிலும் வேறு.... பணிகள் மட்டுமல்ல மக்களின் தேவைகளும் பெருமளவு மாறு படும். குடிநீர் விநியோகம், குளங்கள் பராமரிப்பு, பால்வாடி சீரமைப்பு, வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் துவங்கி ஈமைக்கிரியை உதவி வரை மக்களின் அன்றாட தேவைகளோடு பின்னிப்பிணைந்தது ஊராட்சி நிர்வாகம்.....சிறிய தேவைகள் முதல் நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களுக்குக் காரணமான இயற்கை வள பாதுகாப்பு வரை பல முக்கிய விஷயங்களோடு தொடர்புடையவை ஒரு ஊராட்சி நிர்வாகம்...."
"மேலும், கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்கள் இத்தனை நாள் அவர்களுக்கான ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள்.... அதை வேண்டாமென சொல்ல நாம் யார்... ? ஊராட்சி பிரதிநிதிகள் யாரும் இல்லாத நிலையில் அம்மக்கள் மீண்டும் தங்களின் அடிப்படைத் தேவைக்குக்கூட ஒரு அலுவலரை நம்பி இருக்கவேண்டும் என்பது எந்த விதத்தில் சரியான ஜனநாயகமாகும் ? அவரின் நிர்வாகத்தின் கீழ் ஊராட்சி இருக்க வேண்டுமென்று என்ன அவசியம் இருக்கிறது...?"
"...இறுதியாக ஒரு விசயம்.... இந்தியா போன்ற பறந்து விரிந்த பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில், உள்ளூர் அமைப்புகள் என்பவை மிக மிக முக்கியமானவை" என்றேன். நண்பர் அமைதியாக இருந்தார்....ஆமோதித்தார். ஆனால் நண்பர் என்னை விடுவதாக இல்லை.... "1996ல் இருந்து 20 வருசமா நம்ம ஊருள உள்ளாட்சி அமைப்புகள் இருக்கு.....பஞ்சாயத்து தலைவர்கள்....பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்கள் எனப் பல ஆயிரம் பேர் இருந்திருக்காங்க.... மக்களுக்குப் பல பணிகள் நடந்திருக்கிறது....ஆனால், இன்னும் ஏன் நம் மக்கள், 'எங்கள் கிராமத்திற்கு தலைவர் இல்லேனோ தேர்தல் நடக்கலேனோ' கேட்டக்கல?.....நீங்கள் கொஞ்ச பேர்தான் இங்க இருக்கீங்க...மக்கள் கேட்ட மாதிரியே தெரியலையே... ஏன் ?" என்றார்.
"தவறு நம் மீது தான். மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டியது நம் கடமை..."என்றேன்.
ஒரு நிகழ்வை அவரோடு பகிர்ந்துகொண்டேன். சிறந்த ஜனநாயகவாதியும் நாடாளுமன்ற ஆளுமையுமான திரு.இரா.செழியன் அவர்களை ஒருமுறை சந்தித்துப் பேசினோம். பல விசயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பொறுமையாக விளக்கிக்கொண்டிருந்தார்.... வெள்ளைத்தாளில் பென்சிலில் ஒரு முக்கோணம் வரைந்தார்..."இந்த முக்கோணம் போல அடித்தளம் வலுவாக இருக்க வேண்டும்...ஊராட்சிகள் வலுவாக இருக்க வேண்டும். மேலே போகப் போக குறுகலாகி மையம் மிகவும் சிறியதாக இருக்க வேண்டும்....ஜெ.பி. இதைத்தான் சொன்னார்.... இன்றைக்கு இருக்கும் கட்டமைப்பு தலைகீழ் முக்கோணம்...மக்கள் மீது சுமை...சுதந்திரம் இல்லை". என்றார்
ஜெயப்பிரகாஷ் நாராயன் என்ற மிகப்பெரிய ஆளுமையிடம் பயின்றதை மிக எளிமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்...அப்போது எங்கள் குழுவினர் கேட்டனர்..."ஏன் இந்த நிலை ஐயா? எவ்வளவு முயற்சி செய்தும் ஏன் மாற்றம் வரவில்லை?” என்றனர்.... ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டுச் சொன்னார்... "போதாது...நம் முயற்சிகள் போதுமானதாக இல்லை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்னும் அதிக பணிகள் செய்ய வேண்டும். தேவையானவற்றைச் செய்தால் நிச்சயம் மாற்றம் வரும்" என்றார்... நம்பிக்கையோடு.
இன்றைய சூழல் வேறு
சுதந்திர இந்தியாவின் சூழல் என்பது வேறு இன்றைய இந்தியச் சூழல் என்பது முற்றிலும் வேறு. 1947 ல் புதிதாகப் பிறந்த இந்திய தேசத்தில் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. கிழக்கில் நாகாலாந்து, தெற்கில் ஹைதராபாத் நிஸாம், மேற்கில் கோவா, வடக்கில் காஷ்மீர் போன்ற பல சிக்கல்களைத் தாண்டி கோடிக்கணக்கான அகதிகளாக நம் மக்கள் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்தவண்ணம் இருந்தார்கள்....மேலும், வகுப்புவாத சக்திகளின் கை ஓங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவும், மதச்சார்பற்ற ஒரு நாடக, அனைவருக்குமான ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என்பதற்காகவும் அன்றைக்கு ஒரு வலுவான மத்திய அரசு தேவைப்பட்டிருக்கலாம்.....ஆனால் 70 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தச் சூழல் இருப்பதாக நாம் கருதிக்கொள்ள தேவையில்லை. நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் மிக வலுவான மாநில அரசு என்ற கூற்றுக்கூட திரும்பவும் சிக்கலையே ஏற்படுத்தும். வலுவான ஊராட்சிகள்....வலிமையான கிராமசபைகள்...சக்திபெற்ற ஒன்றியங்கள்...மகத்தான மாவட்டங்கள் என இருக்க வேண்டும். கீழிருந்து நம் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலிருந்து அல்ல.
தீர்வு உள்ளூரிலேயே இருக்கிறது
சமீபத்தில் காலமான திருமதி.ஜேசு மேரி, மக்கள் நேசித்த ஒரு தலைவர். திரு செழியன் அவர்கள் சொன்னது போல அடித்தளம் வலுவாக இருந்தால் சமூகம் எப்படி மாற்றம் பெறும் என்பதற்கு உதாரணம் திருமதி.ஜேசு மேரி அவர்களின் ஊராட்சி. அதைவிட மிக முக்கியமாக உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு உள்ளூரிலேயே இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டிய அவர் மைக்கேல்பட்டிணம் என்ற சிற்றுராட்சியின் தலைவராக இருந்தார்.
ராமநாதபுர மாவட்டத்தின் கடலோர கிராமமான மைக்கேல்பட்டிணத்தின் தண்ணீரை வாயில் வைப்பதற்கு முன்பாகவே கரிக்கும். அவ்வளவு உப்பு. இதனால் அங்கிருந்த சூழலை, மக்களின் வாழ்க்கையை அவர்கள் பட்ட கஷ்டங்களைப் புரியவைப்பது சிரமம். இந்தச் சூழலில் தலைவராக இருந்த ஜேசுமேரி என்ன செய்வதென யோசித்தார்...மக்களிடம் பேசினார்...அறிஞர்களைச் சந்தித்தார்.
அவர் ஒரு தீர்வை கண்டுபிடித்தார்....மழைநீரைச் சேமித்து நிலத்துக்குள் விட்டால் நன்னீர் கிடைக்குமென நம்பினார்...கிராமசபையில் பேசினார். மண்ணை நோக்கி வரும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க முடிவெடுத்தனர் மக்கள். தனது கிராமத்தையே முழுமையாக மழைநீரைச் சேகரிக்கும் கிராமமாக மாற்றினார். பயன்படாமல் இருந்த குடிநீர் குளம் மீண்டும் உயர் பெற்றது. மழைநீர் சேகரிப்பிற்கு முன்னோடியது மைக்கேல்பட்டிணம்.
நம்மூரிலிந்து துவங்குவோம்
இயற்கை வளங்களை மேம்படுத்த, அதனைப் பாதுகாக்க, நம்மூருக்காக நாம் திட்டமிட வேண்டும். நமது உருக்கான வளர்ச்சியை அதற்கான பொறுப்புகளை நாம் கையிலெடுக்க வேண்டும். நம் பணிகளை நாம் நமது ஊரிலிருந்து துவக்க வேண்டும். நல்ல ஊராட்சி நிர்வாகம் அமைய பணிகளைத் துவக்க வேண்டும். நாம் நம்மூரிலிந்து நம் ஊருக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தலைகீழ் முக்கோணத்தை நிலைக்குக் கொண்டுவரும் முயற்சி.... படிப்படியாக நகர்த்துவோம். ஒரு நாள் நிலைநிறுத்தப்படும் முக்கோணம். நம் மக்களாட்சியும் தான்.
|