LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    கட்டுரைகள்/சிறப்பு நிகழ்ச்சிகள் Print Friendly and PDF
- கிராமப்புற வளர்ச்சி

உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்

திரு.நந்தகுமார் .. உள்ளாட்சி ஆய்வாளர் ..

24 ஏப்ரல் 1993, உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்திய புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நாள். நம் ஜனநாயகத்தின் மிக முக்கியமான இந்நாள்தான், ஆண்டு தோறும் பஞ்சாயத்து ராஜ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றிய இச்சட்டம் எத்தனை நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து வந்தது தெரியுமா ?

அதிகாரிகளின் ஆதிக்கத்தாலும், தேர்தல் அரசியலின் சூழ்ச்சியாலும் சிக்கித் தவித்த மக்களாட்சிக்கு உண்மையான விடுதலைக் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒளியாக வந்தது இச்சட்டம். காரணம்; இதுநாள் வரை இல்லாத வகையில், நமது ஊரின் நிர்வாகத்தை நாம் கண்காணிக்க முடியும்....கிராமசபை என்ற புதிய அமைப்பின் மூலம் நம் ஊராட்சியில் வரிப்பணம் எப்படிச் செலவழிக்கப்பட வேண்டும் என்பதை நாம் நிர்ணயிக்க முடியும், நமது ஊருக்காக நாமே திட்டமிட முடியும் எனப் பல வண்ணக் கனவுகளை சுமந்து வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தில்லியிலும் மாநில தலைநகரங்களிலும் குவிக்கப்பட்டுக் கிடக்கிற அதிகாரங்கள் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தது.

வாக்களிப்பதையும் தாண்டி, சாமானியனுக்கும் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்குகிறது இச்சட்டம். அதிகாரம் சட்டத்தில் வந்துவிட்டது, ஆனால் நடைமுறையில் அவ்வளவு சுலபமாக வந்துவிடுமா? போராடித்தான் பெறவேண்டும்.

மாட்டு வண்டிக்கும் வேண்டும் வழி !

சுதந்திரம் அடைந்து ஓரிரு மாதங்கள்தான் முடிந்திருக்கும். காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் வருகிறது. எழுதியவர் ஒரு விவசாயி. "...இதற்குத்தான் நாம் சுதந்திரம் பெற்றோமா...? டில்லியில் இத்தனை காலமாக நான் எந்த வழியில் என் மாட்டு வண்டிகளை ஓட்டிச் சென்றேனோ அந்த வழியில் இனி நான் போகவே கூடாது என்கிறார்கள்.... அது குடியரசு தலைவர் மாளிகைக்குச் செல்லும் பிரதான சாலை என்பதால் என்னை மாட்டு வண்டியுடன் செல்ல அனுமதிக்க மறுக்கிறார்கள்....சொல்லுங்கள் பாப்பு, இதற்குத்தான் சுதந்திரம் பெற்றோமா...?"

இந்திய சுதந்திரம் யாருக்கானதாக இருக்க வேண்டும் என்பதில் காந்தியடிகள் உறுதியாக இருந்தார். ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்களுக்கானதாக இருக்கவேண்டும். புழுதியிலும் புழுதியில் இருப்பவர்களுக்கான விடுதலையாக இருக்கவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தார். ஆனால், ஒரு விவசாயியின் இந்தக் கடிதமும் அது சொல்லும் செய்தியும் காந்தியடிகள் மனதில் ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருக்க வேண்டும்.

மிரட்சியிலிருந்து மகிழ்ச்சிக்கு

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் ஊராட்சிக்கு நான் பல முறை சென்றிருக்கிறேன். ஊராட்சிக்கு உள்ள பொறுப்புகளையும் அதிகாரங்களையும் உள்வாங்கிச் செயல்படும் ஊராட்சிகளில் அதிகத்தூரும் ஒன்று. ஊராட்சியின் பொதுவான பணிகளைத் தாண்டி ஒரு சிறப்பு முயற்சியில் எப்போதும் ஈடுபடும் ஊர் அது. அவ்ஊராட்சியின் முன்னாள் தலைவர் திரு.சிதம்பரநாதனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அங்குள்ள பழங்குடியின மக்களுக்கான புதிய குடியிருப்பு பகுதிக்குச் சென்றோம். அந்த ஊரைப் பூர்விகமாக கொண்டிராத இந்த மக்கள் எப்படி அவர்களுள் ஒருவராக மாறிப்போனார்கள் என்பதைச் சொன்னார் சிதம்பரநாதன். அம்மக்கள் அதிகத்தூருக்கு வந்த சுழலலை விவரித்தார்...."அன்று இரவு சுமார் 7 மணி இருக்கும். பழைய பள்ளிகூடக் கட்டிடத்தில் இவர்கள் இருப்பதாகச் செய்தி வந்தது....கட்டிடத்தை நெருங்க நெருங்கக் கூச்சல் சத்தத்தையும் அழுகுரல்களையும் கேட்க முடிந்தது.... உள்ளே சென்றவுடன் நாம் கண்ட காட்சி...மங்கலான வெளிச்சத்துடன் எரிந்துகொண்டிருந்த மின் விளக்கு.. கைக்குழந்தைகளுடனும் சொற்ப துணிமணிகளுடனும் சுமார் 20 குடும்பங்கள்....செங்குன்றம் பகுதியில் இருந்த அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள்.....பார்த்தாலே தெரிந்தது, அவர்கள் தலைமுறை தலைமுறையாக ஆலைகளில் அடைபட்டுகிடந்தவர்கள் என்று. அவர்களை மீட்டக் குழுவினர் அவர்களை இங்கே அழைத்து வந்திருந்தார்கள்.... எந்த ஆதரவோ அடைக்கலமோ இல்லாதவர்கள்....அவர்களை இங்கேயே தங்க சொல்லிவிட்டோம்...." என்றார். சற்று நேரம் என்னால் எதுவும் பேசமுடியவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இங்கு வந்த சுழிநிலையை பார்க்கும் போது , இன்றைக்கு அவர்கள் எவ்வளவோ முன்னேறியிருந்தார்கள்.... குழந்தைகள் படிக்கிறார்கள், நல்ல குடியிருப்பு, வாழ்வதற்கான நல்ல சூழல்....

நாம் பெற்ற சுதந்திரம் யாருக்கானதாக இருக்க வேண்டும் என்பதற்கு அதிகத்தூரின் இப்பணி ஒரு முன்னுதாரணம்.

கடந்த முறை உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வந்தபோது அதிகத்தூர் ஊராட்சியின் தலைவர் பதவி ஒரு பழங்குடியின பெண்ற்கு ஒதுக்கப்பட்டது. ரைஸ் மில்லிலேயே தன் இளமைக் காலத்தை கழித்த, பல ஆண்டுகளுக்கு முன் எங்கு வந்திருக்கிறோம் என்று கூட தெரியாமல், கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டு அதிகத்தூருக்கு வந்த ஒரு பெண்தான் ஊராட்சி தலைவர் பதவிக்கு விண்ணப்பித்தார். வேட்பு மனு தாக்கல் செய்த போது அவர் கண்களில் இருந்த நம்பிக்கையைப் பார்த்த எவருக்கும் நம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை பிறக்கும். இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் அவசியம் புரியும்.
நாம் பெற்ற சுதந்திரம் நிச்சயம் ஒரு நாள் கடைக்கோடி மனிதருக்கும் முழுமையாகச் சென்றடையும் என்ற நம்பிக்கையை நமக்களிக்கும் நாள், ஏப்ரல் 24. வாழ்க மக்களாட்சி.

by Swathi   on 23 Apr 2018  0 Comments
Tags: சாமானியன்   அதிகாரம்   உள்ளாட்சி   பஞ்சாயத்து தினம்   தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்   Panchayati Raj Day   Ullatchi  
 தொடர்புடையவை-Related Articles
உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம் உள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்
உள்ளாட்சி உங்களாட்சி 05 :  தலைகீழாக இருக்கிறது முக்கோணம் ! உள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் !
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.