|
|||||
உன் சமயலறையில் - திரை விமர்சனம் !! |
|||||
![]() இயக்குனர் : பிரகாஷ்ராஜ் நடிகர் : பிரகாஷ் ராஜ் நடிகை : சினேகா இசை : இளையராஜா தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரகாஷ் ராஜ், திருமண வயதை தாண்டியும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகிறார். அவருக்கு ருசியான சமையல் மீது ஆர்வம் அதிகம். டப்பிங் ஆர்ட்டிஸ்டாக வரும் சினேகாவும், திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கிறார். சினேகாவும், ஊர்வசி மற்றும் சம்யுக்தா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். ஒருநாள் ஊர்வசி, சினேகாவிடம் ஒரு ஓட்டல் போன் நம்பரை கொடுத்து உனக்கு ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால், இந்த நம்பருக்கு போன் பண்ணி ஆர்டர் பண்ணிக்கொள் என்று சொல்கிறார். சினேகாவும் டப்பிங் பேசிவிட்டு, பசிக்கிறதே என்று ஊர்வசி கொடுத்த நம்பருக்கு போன் செய்கிறார். ஆனால், நம்பர் மாறிப்போய் பிரகாஷ் ராஜூக்கு சென்றுவிடுகிறது. சினேகாவும், ஓட்டல்தான் என்று எண்ணி மளமளவென்று தனது ஆர்டரை சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விடுகிறார். சினேகாவின் போனால், செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ் ராஜுக்கு, தான் கொடுத்த ஆர்டர் இன்னும் வரவில்லையே என்று சினேகா மறுபடியும் போன் செய்கிறார். இந்த முறை பிரகாஷ்ராஜ் இது ஓட்டல் இல்லை என்று அவரிடம் விளக்க, அதற்கு சினேகா இதை முதலிலேயே சொல்லவேண்டியதுதானே என அவரிடம் சண்டைக்கு போக, இருவருக்கும் வாக்குவாதம் வந்து அது சண்டையில் போய் முடிகிறது. இந்நிலையில் பிரகாஷ் ராஜ் வீட்டிற்கு அவரது அக்கா பையன் தேஜஸ் வருகிறார். அவரிடம் நடந்த விஷயத்தை பிரகாஷ்ராஜ் விளக்க, பிரகாஷ் ராஜூக்கு தெரியாமலேயே அவருடைய செல்போனில் இருந்து சினேகாவிற்கு ஸாரி என்று மெசேஸ் அனுப்புகிறார் தேஜஸ். இதைபார்க்கும் சினேகாவின் தங்கையான சம்யுக்தா, பதிலுக்கு சினேகாவை பிரகாஷ்ராஜிடம் பேசி சமாதானமாகுமாறு வற்புறுத்துகிறார். அதன் பிறகு மோதல் காதாலாக மாறுகிறது. இருவரும் போன் மூலமாக இவர்கள் காதலை வளர்த்துக் கொள்கிறார்கள். ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்க ஆசைப்படுகின்றனர். இருந்தாலும், ஒருத்தரை ஒருத்தர் தங்கள் வயதையும், தோற்றத்தையும் கருத்தில் கொண்டு நேரில் சந்திக்க பயப்படுகின்றனர். அதற்காக பிரகாஷ் ராஜ் தனது அக்கா பையனான தேஜஸையும், சினேகா தனது தங்கை சம்யுக்தாவையும் அனுப்பி வைக்கிறார்கள். சம்யுக்தாவை நேரில் சந்திக்கும் தேஜஸ், அவள்தான் பிரகாஷ்ராஜிடம் இவ்வளவு நாள் பேசியவள் என்று நினைத்துக் கொள்கிறார். அதேபோல், தேஜஸ்தான் இதுநாள்வரை சினேகாவிடம் பேசிக் கொண்டிருந்தவர் என நினைத்துக் கொள்கிறாள் சம்யுக்தா. இருவரும் சந்தித்து பேசிவிட்டு, பிறகு பிரகாஷ் ராஜிடம் சென்று தேஜஸ் உன்னைவிட அவள் வயதில் சிறியவள் என்று கூறுகிறார். அதேபோல், சம்யுக்தாவும் சினேகாவிடம் சென்று அவர் உன்னைவிட வயதில் சிறியவர் என்று கூறுகிறாள். இருவரும் தவறுதலாக ஜோடியை தேர்ந்தெடுத்துவிட்டோமா? என மனசுக்குள்ளே எண்ணி புழுங்குகிறார்கள். இதற்கிடையில், இவர்களுக்காக தூதுபோன தேஜஸும், சம்யுக்தாவும் காதலிக்க தொடங்கிவிடுகிறார்கள். ஒருகட்டத்தில், என்ன ஆனாலும் பரவாயில்லை என்று பிரகாஷ்ராஜ் சினேகாவை சந்திக்க நினைக்கிறார். இறுதியில், பிரகாஸ் ராஜும், சினேகாவும் ஒருவரை ஒருவர் சந்தித்து கொண்டார்களா... காதல் ஜோடிகள் இணைந்தார்களா என்பது தான் உன் சமயலறையில் படத்தின் மீதி கதை. பிரகாஷ்ராஜ் தனக்குரிய பாணியில் கலக்கி இருக்கிறார். சினேகாவோ, கோபம், விரக்தி, சோகம் என அனைத்து நிலைகளிலும் நல்ல நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார். தேஜஸ், சம்யுக்தா ஆகியோரின் நடிப்பு பரவாயில்லை.. ஊர்வசி, தம்பி ராமையா, குமரவேல் என காமெடி நடிகர்கள் இருந்தாலும் காமெடி காட்சிகள் இல்லாதது ஏமாற்றமே. இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் "உன் சமையலறையில்" ஒரு முறை பார்க்கலாம். |
|||||
by Swathi on 06 Jun 2014 0 Comments | |||||
Tags: உன் சமயலறையில் Un Samayal Arayil | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|