|
||||||||
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 - திருமதி. வசந்தா |
||||||||
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 திருமதி. வசந்தா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாக்கியா நகர், உதகை. திருமதி. வசந்தா(தலைமையாசிரியர்): பாக்கியா நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இணையவழிக் கல்வியானது குழந்தைகளை முழுமையாகச் சென்றடைகிறதா என்றால் இல்லை. எனவே இவரது பள்ளி ஆசிரியர்களும், இவரும் வீடு வீடாகச் சென்று குழந்தைகளின் கற்றல்திறனை மேம்படுத்தி உதவுகின்றனர். மலைப்பகுதிகளில் காணப்படும் கட்டிடங்களுக்குக் கூடுதல் உறுதித்தன்மை வேண்டும். எனவே இவரது பள்ளியின் கட்டமைப்புத்திறனை அதிகப்படுத்த பெரும் முயற்சிகளை இவர் எடுத்துள்ளார். இவரது பள்ளியின் சுற்றுச்சுவர்கள் வண்ண வண்ண ஓவியங்களை கொண்டு திகழ்கின்றன. பள்ளிக்கான கழிப்பிட வசதி, மின்சார வசதி போன்ற வசதிகளை இவர் செய்து கொடுத்துள்ளார். இவரது அயராத முயற்சியினால் பல்வேறு அறக்கட்டளைகளின் உதவியைப் பெற்று பள்ளியின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளார். நவீன வகுப்பறையை அரசுப் பள்ளி மாணவர்களும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் நவீன வகுப்பறைகளையும் உருவாக்கியுள்ளார். மாணவர்களிடையே ‘பாராளுமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கி, சுகாதாரத்துறை, உணவுத்துறை, சுற்றுச்சூழல் துறை, கல்வித்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய துறைகளை உருவாக்கி மாணவர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்தி வருகிறார். இப்பள்ளியின் வளர்ச்சிக்கு இவரது குடும்பத்தினரும் பெரும் பங்காற்றியுள்ளனர். இறந்த இவரது தந்தை தன்னுடைய 80 வயதில் பள்ளி மாணவர்களுக்கு சீருடை இலவசமாகத் தைத்துக் கொடுத்ததாக இவர் குறிப்பிடுகிறார். இவரது கணவர், குழந்தைகள் என அனைவரும் இப்பள்ளியின் வளர்ச்சிக்காக உதவி வருகின்றனர். மிகுந்த மனநிறைவோடு இவரும் இவரது குடும்பத்தினரும் பங்காற்றி வருகின்றனர். திரு. கதிரேசன் (புரவலர் திட்டத் தலைவர்): இப்பள்ளியின் புரவலர் திட்டத் தலைவராகத் திரு. கதிரேசன் அவர்கள் செயல்படுகிறார். இப்பள்ளியின் வளர்ச்சித்திட்டங்களை அவ்வூர் மக்களுக்கு எடுத்துரைத்து பள்ளியின் மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றியவர். புரவலர் திட்டத் தலைவரான இவர் வசூலித்த பணத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தி பள்ளியின் இன்றியமையாத தேவைகளுக்கு அதனை பயன்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வருகிறார். திருமதி. கனகவள்ளி(பள்ளி மேலாண்மைக்குழு தலைவி): இப்பள்ளியின் மேலாண்மைக்குழு தலைவி திருமதி. கனகவள்ளி அவர்கள் கூறுகையில், “எங்களது உடன்பிறவா சகோதரி தலைமையாசிரியர் ஆவார். நல்லாசிரியர் விருது, அப்துல்கலாம் விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். மாநில அளவில் பள்ளியை உயர்த்திக் காட்டியுள்ளார். முதியோர் கல்வியையும் கூட சாத்தியப்படுத்திக் காட்டியவர் எங்களது தலைமையாசிரியர். தாரக மங்கை, தலைமை பொறுப்பிற்கு உகந்த ஆசிரியர். மாணவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் வள்ளல். பள்ளியின் கட்டமைப்பில் ஒவ்வொரு செங்கல்லும் சொல்லும் அவர்கள் பெயரை. என்றென்றும் எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் எங்கள் தலைமையாசிரியர்.” என்கிறார். திருமதி. ரீட்டா சகாயமேரி(PT Assistant): இப்பள்ளியின் PT Assistant திருமதி. ரீட்டா சகாயமேரி அவர்கள் கூறுகையில், “குழந்தைகளின் தனித்திறனை மட்டுமல்ல ஆசிரியர்களின் தனித்திறனையும் வெளிப்படுத்தும் ஒரு களமாக இப்பள்ளி உள்ளது. கரகாட்டம், காவடியாட்டம், கராத்தே, ஓவியம், நடனம் என மாதம் ஒருமுறை குழந்தைகளுக்கு பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. குழந்தைகளை அநேக போட்டிகளுக்கு அழைத்து சென்று வருகிறோம். குழந்தைகள் வீட்டிலிருந்து படிக்கும் இந்தக் காலகட்டத்திலும் கூட அவர்களுக்குப் போட்டிகளை நடத்திப் பரிசளித்து வருகிறோம். மரம் நடுதலையும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் எங்கள் தலைமையாசிரியரின் வழிகாட்டலால் மட்டுமே” என்கிறார். இஷாந்த் (மாணவர்): இப்பள்ளியின் மாணவர் இஷாந்த் கூறுகையில், “தண்ணீர் பற்றாக்குறை இப்பள்ளிக்கு இருந்தது. எங்களது தலைமையாசிரியரின் சீரிய முயற்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டது. சமையல் அறை, பள்ளி சுற்றுச்சுவர்களில் ஓவியம், பழமொழிகள், இவையனைத்தும் இவரால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வகுப்பிற்கும் துடப்பம், குப்பைத்தொட்டி போன்றவை இவரால் கொடுக்கப்பட்டன” என்கிறார். திரு. ராமநாதன் (ஆசிரியர்): திரு. ராமநாதன் அவர்கள் கூறுகையில், “ஒரு பள்ளியின் தலைமையாசிரியர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இப்பள்ளியின் தலைமையாசிரியர் திகழ்கின்றார்” என்கிறார். திரு. ஜெயசீலன் (ஆசிரியர்): திரு. ஜெயசீலன் அவர்கள் கூறுகையில், “வாய்ப்புகள் வரும் வரை காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்கி அவற்றை மாணவர்களுக்குக் கொடுப்பதில் தேர்ந்தவர் இப்பள்ளியின் தலைமையாசிரியர்” என்கிறார். திரு. மனோகரன்: தலைமையாசிரியர் திருமதி. வசந்தா அவர்களின் கணவர் திரு. மனோகரன் அவர்கள் கூறுகையில், “நமக்கு முன்னர் பலர் செய்த உதவியினால் தான் நாம் இன்று நலமான வாழ்க்கையை வாழ்கிறோம். இது போல நாமும் உதவி செய்தால் நமக்கு அடுத்த தலைமுறை நன்றாக வாழும். எனவே என்னால் இயன்ற உதவிகளைக் குழந்தைகளுக்குச் செய்கிறேன்” என்கிறார். |
||||||||
by Lakshmi G on 01 May 2021 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|