|
||||||||
சிங்கப்பூரில் ஆதி மும்மூர்த்திகள் திருவுருவப்படம் திறப்பு |
||||||||
![]()
ஆதி மும்மூர்த்திகள், சீர்காழி மூவர், தமிழிசை மூவர் என்று அழைக்கப்படும் சீர்காழி முத்துத் தாண்டவர் ( 1525-1600), தில்லையாடி அருணாச்சலக் கவிராயர் , தில்லைவிடங்கன் மாரிமுத்தாப்பிள்ளை (1712-1787) ஆகியோரின் திருவுருவப் படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில், சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் 16ஆம் தளத்தில் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.
மூவேந்தர்களின் திருவுருவப்படத்தை உருவாக்கும் பணி சோழப் பெரு வேந்தன் இராசேந்திர சோழனின் உருவப்படத்தை வடிவமைத்தவரான புதுச்சேரியைச் சேர்ந்த கலைமாமணி ஓவியர், பேராசிரியர் ராஜராஜனிடம் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டு மாத காலத்தில் மூவர்களின் ஓவியம் பல்வேறு வரலாற்றுத் தரவுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அவர்கள் வாழ்ந்த காலம், அவர்களின் குடும்ப பின்னணி மற்றும் அவர்கள் இசைப்பணியின் செயல்பாடுகளை உள்வாங்கி அவர்களது ஓவியம் உருவாக்கப்பட்டது.
இந்த ஓவியத்தில் தமிழிசை மூவர்களான முத்துத் தாண்டவர், அருணாச்சலக் கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர்களின் திருவுருவங்கள், சீர்காழி சட்டைநாதர் கோவிலின் பின்னணியில் தீட்டப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குக் கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் தலைமை தாங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க மேனாள் தலைவர் திரு க.நெடுஞ்செழியன் முன்னிலை வகிக்க, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் பதிவாளரும், இந்திய மரபுடைமை நிலைய ஆலோசகருமான ஆர்.ராஜாராமன் தமிழிசை மூவரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
தமிழிசை மூவரின் இசைத்தொண்டு குறித்து முனைவர் மீனாட்சி சபாபதி சிறப்புரை ஆற்றினார். அவர் இம்மூவரும் மூத்த மும்மூர்த்திகள் என்பதைப் பல்வேறு தரவுகளோடு எடுதுரைத்து பார்வையாளர்களைக் கவர்ந்தது. தமிழிசை மூவர், இராசேந்திர சோழன் ஆகியோரின் ஓவியங்கள் உருவான அனுபவங்களையும். தமிழக ஓவியங்கள் குறித்தும் ஓவியர் ராஜராஜன் பேசியது அனைவரையும் கவர்ந்தது.
இனிவரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரில் “தமிழிசை மூவர் விழா” எடுக்கப்படும் என்று தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்தின் தலைவர் திரு.ப.புருடோத்தமன் அவர்கள் அறிவித்தார்.
அத்துடன் இவ்விழாவில் ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் பயனுறும் வகையில் முனைவர் கி.திருமாறன், திரு தியாக இரமேஷ், திரு ப.புருடோத்தமன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட “முத்தமிழ்” இணைய இதழும் தொடங்கி வைக்கப்பட்டது.
விழாவிற்குத் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழகத்தின் செயலாளர் திரு சங்கர் ராம் வரவேற்புரை அளிக்க, அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத்தின் மேனாள் தலைவர் திரு ப.கருணாநிதி அவர்கள் நன்றிகூற, கழகத்தின் துணைத்தலைவர் திரு செந்தில் சம்பந்தம் அவர்கள் தொகுத்து வழங்க இனிதே நிறைவேறியது.
நிகழ்ச்சியைத் தமிழ் வரலாற்று மரபுடைமைக் கழக நிர்வாகிகள் புருஷோத்தமன் பட்டு சாமி மற்றும் அவ்வமைப்பினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் கருணாநிதி மற்றும் தமிழ் வரலாற்று மரபுடைக்கழகத் துணைத் தலைவர் செந்தில் சம்பந்தம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
|
||||||||
by hemavathi on 09 Jun 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|