நேர்மையான, ஒழுக்கமான வேட்பாளர் உங்கள் தொகுதியில் நிற்கவில்லை என்றால், நோட்டா ஓட்டு போடுங்கள் என அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
இது குறித்து அன்னா ஹசாரே கூறியதாவது, நாட்டில் எந்த கட்சி ஆட்சி செய்தாலும் பெரிய மாற்றம் வந்து விடப்போவதில்லை. ஊழலில் ஒரு கட்சி ஆட்சியில் பட்டம் பெற்றால், மற்றொரு கட்சி ஊழலில் மேற்படிப்பு பெற்றுள்ளது. எனவே ஆட்சியாளர்கள் மாறுவதால் மட்டும் அடிப்படை மாற்றம் வந்து விடாது. மக்களால் மட்டும் தீவிரமான மாற்றத்தை கொண்டு வர முடியும். அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களாக ஊழல்வாதிகள், குண்டர்கள், கொள்ளையர்களை நிறுத்தலாம். அப்போது, வாக்காளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். கட்சிகள் செய்யும் தவறை வாக்காளர்களும் செய்து விடக்கூடாது. பணம், பரிசு பொருட்கள், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி கிரிமினல் மற்றும் ஊழல்வாதிகளை தேர்ந்தெடுத்து விடக்கூடாது.
உங்கள் தொகுதியில் நேர்மையான, ஒழுக்கமான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள். சரியான வேட்பாளர் கிடைக்காவிட்டால், மின்னணு எந்திரத்தில் உள்ள நோட்டா பட்டனை பயன்படுத்தி உங்களது எதிர்ப்பை தெரிவியுங்கள் என அன்னா ஹசாரே கூறியுள்ளார்.
|