|
||||||||
வாழ்க்கையை விளையாடிப் பார்க்கிறேன் ! – சத்குரு |
||||||||
“ச்சும்மா கொஞ்ச நேரம் விளையாடிட்டு இருந்தேன்!” என்று நாம் சில சமயம் பதில் சொல்கிறோம். ஆனால் விளையாட்டு ஒன்றும் சாதாரணமானதில்லை. சத்குரு, சிறு வயது முதல் விளையாட்டின் மேல் தனக்கு இருந்த ஆர்வத்தையும், விளையாட்டால் தனது வாழ்க்கையில் எப்படி பல விஷயங்கள் சாத்தியமானது என்பதையும் இக்கட்டுரையில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்! சத்குரு: என் பள்ளிப் பருவத்தில், நான் விளையாடாத விளையாட்டே இல்லை எனலாம். பள்ளிக்கூடம் ஒன்பதரை மணிக்கு ஆரம்பமாகும். ஆனால், விளையாடுவதற்காக ஒரு மணி நேரம் முன்னதாகவே போய்விடுவேன். பல மாதங்களுக்கு பள்ளிக்கூடம் எட்டரைக்கு ஆரம்பிக்கிறது என்று என் வீட்டில் நம்பிக் கொண்டு இருந்தார்கள். கயிற்றைப் பிடித்து மேலே ஏறுவது, உடலை வளைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ், குத்துச்சண்டை, கபடி, பாட்மின்டன் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. ஒரு மாணவன் அதிகபட்சம் நான்கு அணிகளில்தான் இருக்கலாம் என்று விதிமுறை இருந்ததால், எல்லா விளையாட்டுகளிலும் பள்ளிக்காக விளையாட முடியவில்லை. சிறுவனாக இருந்தபோது, யார் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாலும் அதில் கலந்து கொள்வேன். பேட் செய்ய விட மாட்டார்கள். ஆனால், ஃபீல்டு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதிலேயே சந்தோஷம் கொள்வேன். இன்றைக்குக் கூட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தால், நானாகவே சென்று அவர்களுடன் விளையாட்டில் சேர்ந்து கொள்வேன். பத்தாம் வகுப்பின் இறுதியில் பள்ளிக்கூடத்தில் ஒரு புதிய விளையாட்டை அறிமுகம் செய்தேன். 200 பக்க நோட்டுப் புத்தகமே பேட். ஒரு ரப்பர் பந்தை வைத்து டென்னிஸ் ஆட வேண்டும். ஆரம்பித்த சில நாட்களிலேயே இந்த டென்னிஸ் பிரபலமாகிவிட்டது. கல்லூரிக்கு வந்தபிறகு, ஹாக்கி குழுவில் இடம் பெற்றேன். அந்த வயதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்துவதிலும், பறப்பதிலும் இருந்த ஆர்வம் மற்ற விளையாட்டுகளில் இருந்த ஆர்வத்தைவிட அதிகம். சில நிமிடங்கள் காற்றில் பறப்பதற்குப் பல மணி நேரங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும். விளையாட்டின் மிகப் பெரிய அம்சம் என்ன? அதில் அரை மனதாக ஈடுபட முடியாது. உடலையும், மனதையும் கூர்மையாகப் பயன்படுத்த விளையாட்டு ஒரு வாய்ப்பு. மைதானத்தில் விளையாடும் எந்த விளையாட்டானாலும் உங்கள் உடலும், மனமும் முழுமையாக அதில் ஆழ்ந்திருந்தால்தான் ஒழுங்கான விளையாட்டு நேரும். இல்லையென்றால் நரகமாகிவிடும். ஒரு பந்தைத் தூக்கி எறிய வேண்டுமானாலும் கூட அதில் முழுமையான ஈடுபாடு இல்லாவிட்டால், அது எளிதாக நேராது. நீங்கள் விரும்பிய இடத்துக்கு, விரும்பிய வேகத்தில் அது போய் சேர வேண்டுமானால், அதை எறிவதன் பின்னே ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. வாழ்க்கையும் விளையாட்டு போல்தான், வாழ்க்கையை முழுமையாக்கத் தேவை தீவிரமும், ஈடுபாடும்தான். அரைகுறையாக வாழ்ந்தால், அது சித்ரவதை. உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளில் 22 பேர் பந்தை உதைப்பதைப் பார்க்க, நான்கு கோடி மக்களுக்கு மேல் உயிர்ப்புடன் காத்திக்கிறார்கள். அந்தப் பல கோடி மக்கள் மொழி, இனம் எல்லாவற்றையும் மறந்து அதில் ஆழ்ந்து போய்க் கிளர்ச்சியுறுகிறார்கள். விளையாட்டில் உள்ள தீவிரமும், ஈடுபாடும்தான் அதற்குக் காரணம். இந்த சிறப்பு வேறு எதற்கு இருக்கிறது? விறுவிறுப்பான சினிமாகூட ஒரே நேரத்தில் இவ்வளவு பேரைத் தன் பக்கம் ஈர்ப்பதில்லை. விளையாட்டுக்கு இன்னொரு முக்கிய அம்சம் உண்டு. வெற்றி பெற வேண்டும் என்பது நோக்கமாக இருந்தாலும், தோல்வியையும் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டிருந்தால்தான் விளையாட்டு முழுமையாக இருக்கும். விளையாடும்போது, முழுமையான கவனம் விளையாட்டில் இருக்க வேண்டுமே தவிர, அதன் முடிவில் இருக்கக்கூடாது. முழுமையான தீவிரமும், ஈடுபாடும் கொண்டு, வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் ஒரு விளையாட்டாகத்தான் அணுகிறேன். நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும், முழுமையாக உங்களை அதில் ஆழ்த்தித் தீவிரமாக ஈடுபட்டாலன்றி, நீங்கள் மனநிறைவைப் பெற முடியாது. வேலை செய்யும் இடம் என்று மட்டும் அல்ல… உங்கள் பெற்றோரிடத்தில், மனைவியிடத்தில், கணவரிடத்தில், குழந்தைகளிடத்தில் முழுமையான ஈடுபாடு வைக்கவில்லை என்றால், வாழ்க்கையே நீங்கள் தெரியாமல், சிக்கிக் கொண்ட ஒரு பொறியாகிவிடும். ஈடுபாடு வைத்தால், அது சொர்க்கம். ஈடுபாடு இல்லையேல் அது நரகம். முழுமையான ஈடுபாடு இல்லாமல் நீங்கள் ரசித்த அம்சம் ஒன்றாவது இருக்கிறதா, சொல்லுங்கள்…? உங்கள் மனதையும், உடலையும் முழுமையாக ஈடுபடுத்தாமல், நீங்கள் பெற்ற வெற்றிகள் ஏதாவது இருக்கிறதா என்று யோசியுங்கள். இறுகிப்போன இதயங்களோடு இருக்கும் கடினமான சிறைக் கைதிகளைக்கூட விளையாட்டு, இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததைக் கண்கூடாகப் பார்த்தவன் நான். விளையாட்டின் மேன்மை அது. சங்கரன்பிள்ளை தன் நண்பர் வீட்டுக்குப் போனார். அங்கே நண்பர் தன் நாயுடன் அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருந்தார். ‘அட, இவ்வளவு புத்திசாலி நாயை நான் பார்த்ததே இல்லை.’ என்றார், சங்கரன்பிள்ளை திகைத்துப்போய். ‘நீ நினைப்பது போல் இது ஒன்றும் அவ்வளவு புத்திசாலி அல்ல. பத்து முறை விளையாடியதில் என்னிடம் மூன்று முறை தோற்றுவிட்டது’ என்றார், நண்பர். நாய் தோற்றாலும் தொடர்ந்து அதனோடு விளையாடும் அந்த நண்பரைப் போல, நினைத்தது நடக்காத போதிலும் எரிச்சல் கொள்ளாமல், நம்பிக்கை இழக்காமல் இருந்தால்தான் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட முடியும். |
||||||||
by Swathi on 28 Mar 2014 0 Comments | ||||||||
Tags: See Playing Career Sadhguru வாழ்க்கை விளையாடி சத்குரு | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|