|
||||||||
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை நேர்காணல் |
||||||||
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றமும் வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சியும் இணைந்து புதிதாக "வட அமெரிக்க வரவேற்பறை" நேர்காணல் நிகழ்வைத் தொடங்கி உள்ளனர். பிற நாட்டு இலக்கியவாதிகள் வட அமெரிக்கா வரும்போது அவர்களை அடையாளம் கண்டு நேர்காணல் செய்து ஆவணப்படுத்தி நல்லுறவு பேண வேண்டும் என்ற இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. பென்சில்வேனியா வந்துள்ள சிங்கப்பூர் எழுத்தாளர், இதழாசிரியர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களை வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றம் சார்பாகச் செப்டெம்பர் 20-ஆம் நாள் வெள்ளிக் கிழமை நேர்காணல் நிகழ்த்தப்பட்டது. இதற்கு கிரேஸ் பிரதிபா, புதுவை முருகு (முருகவேலு வைத்தியநாதன்) சேர்ந்து நெறியாள்கை புரிந்தனர். கவிஞர் மருதயாழினி பிரதீபா வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் தனது இளைமை கால தமிழ் உணர்வு, முதல் கவிதை அனுபவம், அவரது திருச்சி வானொலி நிகழ்ச்சி தொகுப்பு சிங்கப்பூர் பயணம் எனச் சிறப்பாக விவரித்தார். பிச்சினிக்காடு இளங்கோ, தஞ்சை அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சினிக்காட்டில் 1952-இல் பிறந்தார். கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பயின்றவர். பள்ளியில் படிக்கும் இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் உடையவராயிருந்தார். தமிழக அரசு வேளாண்மைத் துறையிலும், திருச்சி அனைத்திந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும், சிங்கப்பூரில் எண்டியுசி பண்பலை வானொலியிலும் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் தமிழர் பேரவை நடத்திய திங்களிதழான சிங்கைச் சுடரில் ஒற்றை ஆசிரியராகப் பொறுப்பேற்று, “தமிழ்தான் தமிழரின் முகவரி” என்ற முழக்க வரியை உருவாக்கிப் பணியாற்றினார். இளங்கோ அவர்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். சிங்கப்பூரில் கவிமாலை என்ற கவிதை இலக்கிய அமைப்பைத் தொடங்கிப் பல புதிய இளந்தலை முறைக் கவிஞர்களை உருவாக்கியவர். திருச்சி வானொலியிலும் சிங்கை பண்பலை வானொலியிலும் இவர் முத்திரை பதித்த நிகழ்ச்சிகள் ஏராளம். திருச்சி வானொலியில், வானம்பாடி கிராமிய இசைப்பாடல்களை வாரந்தோறும் எழுதி ஒலிபரப்பினார். ‘கொட்டும் முரசு’ நிகழ்ச்சியையும் எழுதிப் படைத்தார். கிராமம் போவோமே, ஊர்க்கூட்டம், ஊர்மணம், நாடகம் முதலான வானொலி நிகழ்ச்சிகள் இவர் படைப்பில் ஒலிபரப்பாகின. ‘காடு’ பற்றிக் கன்னடத்தில் எழுதி ஒலிபரப்பான பாடல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்தார். அந்தப் பாடல்கள் தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பப் பட்டன. இவர் படைத்தளித்த “எளிமை இது இனிமை” தமிழ் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி 101 வாரமும் “பாடல் தரும் பாடம்” என்ற திரைப்பாடல் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி 42 வாரமும் “வாழ நினைத்தால் வாழலாம்” தன்முன்னேற்ற நிகழ்ச்சி 51 வாரமும் ஒலிபரப்பாகிச் சாதனை படைத்தன.
பிச்சினிக்காடு முதல் அமெரிக்கா வரை பயணம் செய்து தமிழ் வளரப் பெரும் பங்காற்றும் கவிஞர் இளங்கோ அவர்களை முதல் சிறப்பு விருந்தினராக வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றமும் வலைத்தமிழும் இணைந்து நேர்காணல் செய்ததைப் பெருமையாகக் கருதுகிறது.
இந்த நேர்காணலின் முழு காணொளியைக் காண கீழே உள்ள இணைப்பைத் தொடரவும்.
நமது செய்தியாளர் – முருகவேலு வைத்தியநாதன் |
||||||||
by Swathi on 21 Sep 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|