LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 721 - அமைச்சியல்

Next Kural >

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
சொற்களின் தூய்மை தொகுதி அறிந்த தூய்மை உடையவர், அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவறின் அவையில் வாய்ச் சோர்ந்து பிழை சொல்லமாட்டார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வகை அறிந்து வல்லவை வாய் சோரார் - கற்று வல்ல அவை, அல்லா அவை என்னும் அவை வகையினை அறிந்து வல்ல அவைக்கண் ஒன்று சொல்லுங்கால் அச்சத்தான் வழுப்படச் சொல்லார்; சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர் - சொல்லின் தொகையெல்லாம் அறிந்த தூய்மையினை உடையார். (இருந்தாரது வன்மை அவைமேல் ஏற்றப்பட்டது. 'வல்லவை' என்பதற்கு, தாம் 'கற்றுவல்ல நூற்பொருள்களை' என்று உரைப்பாரும் உளர். 'அச்சத்தான்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'சொல்லின் தொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு (குறள் 711) மேல் உரைத்தாங்கு உரைக்க.)
மணக்குடவர் உரை:
தப்பினால் வருங் குற்றவகையை யறிந்து கற்றுவல்ல அவையின்கண் அஞ்சுதலால் சோர்வுபடச் சொல்லார், சொற்களின் தொகுதியையறிந்த தூய்மையுடையவர். இது மேற்கூறியவற்றால் கற்றவர் தப்பச் சொல்லாரென்று அக்கல்வியால் வரும் பயன்கூறிற்று.
தேவநேயப் பாவாணர் உரை:
சொல்லின் தொகை அறிந்த தூய்மையவர்-சொல்லின் தொகுதியை யறிந்த தூய மொழிநடையார்; வகை அறிந்துவல் அவை வாய் சோரார்-கற்றோர் கூடிய வல்லவை, அல்லவை என்னும் இருவகை அவைகளை அறிந்து, வல்லவைக்கண் ஒன்றைச் சொல்லுங்கால் அச்சத்தினால் மனந்தடுமாறியும் வாய் தவறியும் வழுப்படச் சொல்லார். வல்லவர் கூட்டமாதலால் வல்லவை எனப்பட்டது. அவையைக் குறிக்குஞ்சொல் இக்குறளில் வேறின்மையால், 'வல்லவை' என்பதற்குத் தாங் கற்றுவல்ல நூற்பொருள் களை என்று உரைப்பது பொருந்தாது. அச்சத்தினாலென்பது அதிகாரத்தால் வந்தது. 'சொல்லின் றொகை' 'தூய்மை' என்பவற்றிற்கு 711-ஆம் குறளில் உரைத்தவாறுரைக்க
கலைஞர் உரை:
சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராயிருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
சொல்லின்வகைகளை அறிந்துமனத்தால் சுத்தமானவர்கள், கற்றவர் அவை, கல்லாதவர் அவை என அறிந்து பேசும்போது, பயத்தால் சொல் குற்றப்படமாட்டார்கள்.
Translation
Men, pure in heart, who know of words the varied force, The mighty council's moods discern, nor fail in their discourse.
Explanation
The pure who know the classification of words having first ascertained the nature (of the court) will not (through fear) falter in their speech before the powerful body.
Transliteration
Vakaiyarindhu Vallavai Vaaisoraar Sollin Thokaiyarindha Thooimai Yavar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >