LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- தன்னம்பிக்கை (Self Confidence )

தன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல்

தன் கம்பீரத்தாலும் தமிழ் ஆளுமையாலும் சாதனை படைத்துக் கொண்டு இருக்கும் உலகமறிந்த மேடைப் பேச்சாளர் திரு. கலியமூர்த்தி ஐயாவுடன் நியூஜெர்சியில் ஓர் நேர்காணல் 

-சுபா காரைக்குடி, நியூஜெர்சி, அமெரிக்கா 

 

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த உங்களுக்குக் காவல் துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது? 

 

மிகவும் சாதாரண ஏழ்மையான குடும்பத்தில் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். காவல்துறை அதிகாரிகளைப் பார்ப்பது என்பதே அரிது. அன்று கல்லூரி நாட்களில் நண்பருடன் சென்று கொண்டிருந்த வேளையில் தஞ்சை மாவட்டத்தின் அதிகாரியாக இருந்த திரு வால்டர் தேவாரத்தை வழியில் சந்தித்தோம்.  அவர் நீங்கள் கல்லூரிக்குப் போகவில்லையா என்று கேட்டார்; உங்களைப் போல் அதிகாரியாக ஆக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். 

 

என் நண்பர் புத்தகங்கள் அதிகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்.  துப்பாக்கி சுடுவது, நன்றாக உடற்பயிற்சி செய்வது,என்.சி.சியில் சேருவது போன்று அவர் கூறிய அனைத்தையும் செய்தேன். தேர்வில் வெற்றி பெற்று எனக்குக்  காவல் துறை அதிகாரி பதவியும் கிடைத்தது. என் நண்பருக்குக் கிடைக்கவில்லை. ஆனால், என் நண்பர் எழுத்துத் தேர்வில் என்னை விட அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தார்.

 

பயிற்சி முடித்துப் பதவியேற்றுப் பல இடங்களில் பணி புரிந்து பதிவி உயர்வும் பெற்றுக் காவல் துறை அதிகாரியாக கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு என் நண்பர் கலெக்டராக இருந்தார். புத்தகம் படிப்பதன் அருமை அன்று தான் எனக்குப் புரிந்தது. எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், நாட்டுப்புற ஏழை விவசாயியின் மகனாக இருந்து, குறிக்கோளுடன் கடுமையான உழைப்பும், முயற்சியோடும்  எடுத்த நோக்கத்தை அடைய நினைத்தால் இந்தப் பிரபஞ்சம் நமக்கு வழி வகுத்து அதை நிறைவேற்றும்.

 

நம் வாழ்க்கையில் இலட்சியத்தோடு பயணித்தால் அதை அடைந்துவிடலாம் அல்லவா? அதைப் பற்றிய உங்களின் கருத்து என்ன?  

 

இலட்சியத்தோடு பயணிப்பதிலும் கவனம் வேண்டும். ஒரே ஒரு இலட்சியத்தில் தான் பயணிக்க வேண்டும். சிங்கம் மிகவும் பலசாலியானது. மான் அதைவிட பலம் குறைவானது.  ஆனால் அந்தச் சிங்கம் இரண்டு மானை ஒரே நேரத்தில் விரட்டினால் வெற்றி கிடைக்காது. அது போல இலட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும் ஆனால் அடையும் பாதை வெவ்வேறாக இருக்கலாம். 

 

ஆப்பிரிக்கக் காடுகளில் கீழ் வானம் சிவக்கும் போது ஒரு பக்கம் மான், இன்னொரு பக்கம் சிங்கம் வந்து நிற்கும். சிங்கத்திற்கு மானை உண்டு பசியாற்றிக் கொள்ளும் ஒரே ஒரு வேலை மட்டும் தான்.  ஆனால் மானுக்கோ சிங்கத்திடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் வேண்டும் அதே சமயம் தான் பசியாறவும் வேண்டும்.  

 

வலிமையுள்ள ஒரு சிங்கம் 14 முறை விரட்டினால் தான் வலிமை குறைந்த மானைப் பிடிக்க முடியும். பலசாலியான சிங்கத்திடம் இருந்து மான் பலமுறை தப்பிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் மான் உயிர்க்காக ஓடுகிறது; சிங்கம் பசிக்காக ஓடுகிறது. வாழ்க்கையில் இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் நம் ஓட்டம் உயிர்க்கான ஓட்டமாக இருக்க வேண்டும், உணவுக்கான ஓட்டமாக இருக்கக்கூடாது. தகுதியுள்ளவை மட்டுமே வாழ முடியும். வாழ்க்கையில் இலட்சியத்தை நோக்கி ஓடும்போது சிந்தனை சிதறல்கள் இல்லாமல் ஓட வேண்டும்.  

 

தைரியமாக இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்று பதவி உயர்வு, ரௌடிஸ்சிம் ஒழித்து அமைதியை நிலைநாட்டிப் பல பதக்கங்கள், காவல்துறையில் மிக உயரிய விருதான ஜனாதிபதி விருது எனப் பல பதக்கங்கள், விருதுகள் வாங்கியவர் நீங்கள். உங்கள் காவல்துறை பணியில்  நீங்கள் சாதித்ததாக நினைக்கும் சாதனை, நெகிழ வைத்த தருணங்கள் எவை? 

 

காவல்துறையில் நான் நெகிழ்ந்த தருணம். திருச்சியில் ராம்ஜி நகரில் கவனத்தைத் திசைத் திருப்பி திருடும் கூட்டத்திற்கு மறு வாழ்வு கொடுத்தது. இலட்சத்தை வங்கியில் போட நிற்பவரிடம் வந்து நூறு ரூபாய் நோட்டை ஒருவர் கீழே போடுவார்.  அந்த 10 இலட்சத்தை விட்டு விட்டு நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டுப் பணத்தைக் கீழேயிருந்து எடுக்கும் தருணத்தில் திருட வந்தவன் அந்த 10 இலட்சத்தை எடுத்துவிடுவார். இது அத்தனையும் பட்டப்பகலில் கேமேரா முன் நடக்கும். ஒருவர் பணம் டெபாசிட் பண்ண நிற்பவரிடம், உங்க காரை யாரோ எடுத்துச் செல்கிறார்கள் என்று கார் நம்பரோடு சொல்வான், அவர் பணத்தைக் கேஷியரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஓடுவார். அதற்குள் பணத்தைத் திருடி விடுவார் ஒருத்தர். அதே சமயம், வங்கிக்குள் இருக்கும் கேஷியரிடம் சென்று உங்கள் மனைவிக்குச் சீரியஸாம் நீங்க இன்னும் போகவில்லையா என்று ஒருவர் சொல்வார்.  அவர் பதறி எழுந்து போக, இந்த இடத்தில் கையில் இருக்கும் பணத்தை எடுப்பார் இன்னொருத்தர். திருடும் போது வேளையில் பதட்டத்தில் நிகழும் தவறுகளைக்கூட அழகாகச் சமாளிப்பார்கள்.  

 

இதற்கு டி.ராஜேந்திரன் என்ற ஒரு டிஜிபி  திருச்சியில் நீங்கள் நினைத்தால் இதைப் பிடிக்கலாம் என்று சொன்னார். அவர்களைப் பிடிக்க ஊருக்குள் நடக்கும் திருமணத்திற்குச் சென்று அந்த வீடியோவில் உள்ள ஆட்களை சி.சி கேமிராவில் உள்ள ஆட்களுடன் ஒப்பிட்டு, பின் ஓட்டுப் போடுபவர்கள் லிஸ்டில் முகவரி எடுத்து 111 பேர்களைக் கண்டுபிடித்தோம். திருச்சியில் அவர்கள் திருடுவதற்காகத் திருவிழா எடுப்பார்கள்.  அங்குள்ள சாமி சிலையில் மாலை இருந்தால் திடுடப் போகிறார்கள் என்று அர்த்தம். ஒரு முறை, திருவிழா நாளில் அங்கிருந்த ஒரு ஆசிரமத்தை ரெய்டு பண்ணப் போகிறோம் என்று சொல்லி அவர்கள் இடத்தை வட்டமிட்டோம். அங்கு திருவிழா நடந்து முடிந்ததும் ஒரே நேரத்தில் 111 பேரையும் சிறை பிடித்தோம். மூன்று மாதம் சிறையில் இருந்தார்கள். இந்தத் திருடர்களின் புகைப்படம் ரயில் நிலையம் போன்ற பல இடங்களில் ஒட்டி விட்டதும் அவர்கள் பிள்ளைகள் இவர்களைப் பார்க்க வரவேயில்லை. பின் இவர்கள் என்னிடம் பேச வேண்டும் என்றனர். அவர்களிடம் “ நீங்கள் உயிரோடு வருவீர்களா இல்லையா என்று தெரியாமல் வீட்டில் கஷ்டப்படுவார்கள் இதெல்லாம் தேவையா?” என்று பேசினேன். அப்பொழுது அவர்கள் எங்களைத் திருடர்கள் என்று வெளியில் காண்பித்து விட்டீர்கள்; இனி இங்கு வேலை கிடைக்காது. வெளிநாட்டிற்குப் போக பாஸ்போர்ட்டும் எடுக்க முடியாது நாங்கள் என்னதான் செய்ய? என்றனர். இவர்கள் பிரச்சனையை   அப்பொழுது முதலமைச்சரான திரு.கருணாநிதி அவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தேன். என் உரையைக்கேட்டு கருணாநிதி அவர்கள் நல்லா தமிழ் பேசுகிறாய் என்றார். வங்கியில் இவர்களுக்குக் கடன் வாங்கி அவர்களுக்கு வாழ்க்கை நடத்த உதவினேன். 

 

காவல் துறை பணி என்பது பல நெருக்கடிகள் நிறைந்த சவாலான ஒன்று. இன்றைய சமுதாயத்தில் அனைவரும் அன்றாட வாழ்க்கையில் அலுவலகங்களில் மற்றும் பல இடங்களில் பல நெருக்கடிகளைக் கையாள வேண்டி இருக்கின்றது. இந்த நெருக்கடிகளை நீங்கள் எப்படிக் கையாண்டு வெற்றி பெற்றீர்கள்? 

எந்த ஒரு பணியும் இதயப் பூர்வமாக நேசித்துச் செய்யும் போது எதையும் சமாளிக்கலாம். பிரச்சனைகள் வரும் போது தடுமாறாமல் மாற்றி யோசிக்க வேண்டும். வித்தியாசமான சிந்தனையால்தான் வெற்றி பெற முடியும்.

 

35 ஆண்டுகள் காவல்துறையில் குற்றவாளிகள், துப்பாக்கி, விசாரணை என்ற வட்டத்துக்குள் வாழ்ந்த நீங்கள் இன்று மேடைப் பேச்சில்  ஈடுபடும் ஆர்வம் எப்படி வந்தது?  

 

சாதாரணமாக நான் பேசுவதைப் பார்த்து மிகப் பெரிய ஆட்கள் எல்லாம் என்னைப் பேச ஊக்குவிக்கும் போது நிறையப் பேச ஆரம்பித்தேன். பின் தமிழ் இலக்கியம் படித்துப் பட்டம் பெற்றேன். உண்மையான அனுபவங்களையும் இலக்கியத்தையும் சேர்த்து நன்றாகத் தயார் செய்து பேச ஆரம்பித்தேன். அது நல்ல வரவேற்பைக் கொடுத்தது. 

 

உங்கள் பேச்சு கல்விப் பாடமாக மாறியிருக்கின்றது. அது மிகப் பெரிய சாதனை. இந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்களேன். 

 

பல கல்வியாளர்கள் இருக்கும்  போது காவல்துறை அதிகாரியின் கல்வி சம்பந்தமான பேச்சு பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருப்பது என்பது மிகவும் நெகிழ்ச்சியானது. அதற்காகத் திரு உதயசந்திரன் ஐ.எ.எஸ் அவர்களுக்கு என் நன்றி.

 

காவல்துறையில் சாதனை புரிந்து நீங்கள் மேடைப் பேச்சிலும்  அங்கீகாரம் பெற்று உலக சாதனை படைத்திருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்களேன்.

 

100 நாட்களில் வேறுபட்ட இடங்களில் 1000 பேருக்கும் மேல் இருக்கும் இடத்தில் ஒரு மணி நேரத்திற்குள் மாறுபட்ட தலைப்பில் பேசினால் உலக சாதனை என்று சொன்னார்கள். நான் உலக சாதனை படைக்க வேண்டும் என்று பேசவில்லை. தானாக நடந்த சாதனை இது.

 

காவல்துறையில் நீங்கள் இன்ஸ்பெக்ட்டராக பணியில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி ஐ.பி.எஸ் ஆக வளர்ந்திருக்கிறீர்கள். தங்களைப்போல் வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது என்ன? 

 

இலட்சியம், முயற்சி, கடுமையான உழைப்பு மற்றும் எந்தவிதமான சிந்தனை சிதறல்களும் இல்லாமல் ஒழுக்கத்தை அடிப்படையாக வைத்து, வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இல்லாமல் பயணித்தால் வெற்றிக் கதவைத் தட்டும்.

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆராய்ச்சி ஆராய்ச்சி
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.