LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

எழுத்தாளர் ஜெயமோகனுடன் கலந்துரையாடல்  - 3  

எழுத்தாளர் ஜெயமோகனுடன் கலந்துரையாடல்  - 3  

விஜய் சத்யா,வெர்ஜீனியா,அமெரிக்கா

தமிழர் கோவில், சிற்பக் கலை, அறிவுத்தளத்தில் 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் நேர்ந்த வீழ்ச்சியைப் பற்றிப் பேசினீர்கள். அதை மீட்பதெப்படி? அதன் தற்போதைய ஆய்வுக்கு வழிகாட்டக்கூடிய அறிஞர்களை அறியப்படுத்தவும்.

இன்றைக்குத் தமிழ்ச் சிற்பக் கலையில் தேர்ந்த ஸ்தபதிகள் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் குல வரிசையாகப் பயிலக்கூடிய கணக்கு நூல்கள் தான் நாம் ஆலயத்தையும், சிற்பத்தையும் அறிந்துகொள்ளக்கூடிய மூல நூல்கள். அவர்களை வரவழைத்து இதைப் பற்றி அறிய வேண்டும். மரபான நூல்கள் வேறு இல்லை.

இதற்கு வெளியே இருக்க கூடிய நூலென்றால் குமரி மாவட்டத்தைச் சார்ந்த டி.ஏ. கோபிநாத் ராவ் ஆங்கிலத்தில் 1914-களில் எழுதிய எளமன்ட்ஸ் ஆப் ஹிந்து ஐகநோகிராபி (Elements of Hindu Iconography - T.A. Gopinatha Rao) என்ற பெரிய நூல். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் உதவியோடு இந்த ஆய்வு நடந்தது. அதன் பின் ஒட்டு மொத்தமாக ஒரு சிற்பக் கலைக் களஞ்சிய நூல் வரவேயில்லை. உண்மையாகச் சொல்வதென்றால் இவ்வளவு பெரிய சிற்பக் கலை பண்பாடு கொண்ட மொழியில் மாநிலத்தில் அதை முழுமையாக ஆவணப் படுத்தும் சிற்பக் கலைக் களஞ்சிய நூல் இல்லை என்பது வெட்கக்கேடு. வேறு எந்தப் பண்பாட்டிலும் இப்படி இருக்காது 

அகர வரிசைப்படி வரக்கூடிய ஒரு கலைக் களஞ்சியம் உருவாக்க முடியுமென்றால் அது பெரிய சொத்தாக இருக்கும். இந்த மாதிரியான வேலைகளுக்குத் தான் பணம் செலவழிக்க வேண்டும்.  1948 -1968 வரை ம. ப. பெரியசாமித்தூரன் பத்துத் தொகுதிகள் கொண்ட பெரும் தமிழ்க் கலைக் களஞ்சியம் வெளியிட்டார். இன்றுவரை அதற்கு மறுபதிப்பு வரவில்லை. இன்றைக்கு வந்தால் மேலும் 2000 புதிய தலைப்புகள் சேர்க்கவேண்டும். அப்படித்  தமிழுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் மலை போல இருக்கின்றன. செம்மொழி உயராய்வு தொடங்கப்பட்டபோது பெரும் நிதி இந்த மாதிரி வேலைகள் செய்வதற்காக ஒதுக்கப்பட்டது. பல பணிகள் திட்டமிடப்பட்டன. பல பேராசிரியர்களிடம் இந்தப் பணம் கொடுக்கப்பட்டது. மிகக் குறைவானவர்களே சில பணிகள் செய்தார்கள். பெரும் பகுதி பணம் அப்படியே காணாமல் போய்விட்டது. இதுதான் இன்றைய வருந்தத்தக்க கல்வி நிலை. 

நீங்கள் அமெரிக்காவில் இருக்கிறீர்கள். இங்கே  அமெரிக்கர்களுக்கென ஒரு தொழில் தர்மம் இருக்கிறது. இதை நாம் கற்பிக்கவே முடியாது. ஒரு விசயத்தை முழுமையாகச் செய்வது, உரிய நேரத்தில் செய்வது, ஒத்திசைந்து செய்வது இந்த மூன்று விசயங்களைத் தமிழர்களுக்குச் சொல்லிக் கொடுக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்றே தெரியவில்லை. ஒரு சின்ன வேலையைக் கூட மூன்று பேர் சேர்ந்து செய்வதற்குச் சாத்தியமில்லை. அவர்களுக்குள் 2000 கருத்து மோதல்கள் இருக்கும்.  நாம் அமெரிக்கா வந்து கற்றுக் கொள்வதென்றால் இந்தத் தொழில் தர்மம்தான். இந்தத் தொழில் தர்மம் போன தலைமுறைத் தமிழ் அறிஞர்களிடம் இருந்தது. தமிழில் முதல் கலைக்களஞ்சியம் அபிதான சிந்தாமணியை உருவாக்கிய ஆ. சிங்காரவேலு முதலியார், பிறகு பெரியசாமித்தூரன், அகராதியை உருவாக்கிய வையாபுரிப்பிள்ளை இவர்களிடம் தொழில் தர்மம் இருந்ததால்தான் அந்தப் பெரும் பணிகள் சாத்தியமானது. அது எப்படிப்போனது என்பது ஆச்சர்யம். இப்போது மிகக் குறைந்த ஆட்களே  அப்படி இருக்கிறார்கள். அகா. பெருமாள், குடவாயில் பாலசுப்ரமணியன், ராமச்சந்திரன் போன்றவர்களைச் சொல்லலாம். அவர்களை இணைத்துக் கொண்டு இந்த வேலைகளைச் செய்யமுடிந்தால் நன்றாக இருக்கும். 

ஹார்வர்ட் தமிழ்ப்பேராசிரியர் ஒருவர் கல்லூரிகளில் தமிழ் மொழி வகுப்புகளை மாணவர்கள் பொருட்படுத்தவில்லை, மற்ற ஆங்கிலம், அறிவியல் வகுப்புகளுக்கு அதிக அக்கறை காட்டுகிறார்கள் என்றார். அதே போல தமிழ்ச் சங்க நிகழ்வுகளுக்குச் சீரிய இலக்கிய வாசகர்கள் வருவதில்லை. இருப்பவர்களில் சிலருக்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டும் ஈடுபாடு. நவீன இலக்கியங்கள் பரிச்சியமில்லை. ஜெயமோகனை அழைத்தாலும் பல எதிர்ப்புகள். உங்கள் அறம் கதைகள், யானை டாக்டர் போன்ற கதைகளைச் சொன்னால் மிகவும் ரசிக்கிறார்கள்.  இதை எப்படிச் சரி செய்வது? 

தமிழ்க் கல்வி இப்படி இருப்பதற்குக் காரணம்,  உயர்கல்வி என்றால் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அப்படி உறுதிப்பாடு கொடுக்காவிட்டால் யாரும் வரமாட்டார்கள். இன்றைக்குள்ள அப்பட்டமான நிலை பல இலட்சங்கள் கொடுக்காமல் ஆசிரியராக முடியாது. முனைவர் பட்டம் கிடைக்கும் வரை ஊக்கத் தொகை கிடைப்பதால் பெரும்பாலும் தலித் மாணவர்கள், குறிப்பாகப் பெண்கள் படிக்கிறார்கள். இது முப்பது வயது வரை வருமானம் கிடைக்க வழி. பின் திருமணம் செய்துகொண்டு போய்விடுகிறார்கள். அவர்களில் ஆயிரத்தில் ஒருவருக்குக் கல்லூரியில் வேலை கிடைக்கும். 

இப்போது தமிழ் அறிஞன் என்று கருதக்கூடிய இளைஞர்கள் யாருக்கு வேலை கிடைத்திருக்கிறது.  “அருட்பா மருட்பா“ என்ற ஆய்வு நூலை எழுதிய ப. சரவணன். அவன் சிலப்பதிகாரம் ஆய்வுப் பதிப்பு  கொண்டுவந்திருக்கிறான். மணிமேகலையைப் பதித்திருக்கிறான். இந்தத் தலைமுறையில் தமிழ் அறிஞன். இவனை உ.வே.சா என்று சுட்டலாம்.

ஒரு காலத்தில் உவேசாவை வீட்டுக்குச் சென்று கல்லூரிப் பேராசிரியர் வேலைக்கு அழைத்தார்கள். ப. சரவணன் ஒரு பள்ளிக் கூடத்தில் வேலை பார்க்கிறான். அவன் ஒரு தமிழ்த்துறைத் தலைவனாக இருக்க வேண்டுமே? இந்த மதிப்பைத் தமிழுக்குக் கொடுக்காமல்,  தமிழ் அழிகிறதென்றால் நியாமேயில்லை. அதுபோல சு. இளங்கோவன் தமிழ் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறார். அதுபோல ஸ்டாலின் இராஜாங்கம் எவ்வளவு பெரிய ஆளுமை, சிறிய ஊதியத்திற்கு ஒரு தொகுப்பாளனாக வேலை செய்கிறான்.  ஸ்டாலின் இராஜாங்கம் போன்ற பெரிய தமிழ் ஆளுமைக்குக் கல்லூரியில் வேலையில்லை என்றால் என்னுடைய பையனை எப்படித் தமிழ் படிக்க அனுப்புவேன்? இதுதான் இன்றைய யதார்த்தம். தமிழ்க் கல்வியின் தரம்.

 உ.வே.சா, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை முதல் பெரியசாமிதூரன் வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலத்திற்குப் பிறகு மேடைப் பேச்சாளர்களே தமிழ் அறிஞர்களாக அறியப்படுகிறார்கள்.  மேடைப் பேச்சாளர்களிடம் நீங்கள் கேட்க வேண்டியது, நீங்கள் எழுதிய புத்தகம் என்ன? என்பதே. மேடையில் வித்தாரமாகப் பேசக்கூடியவர்கள், அரசியல் பேச்சாளர்கள். பட்டிமன்றப் பேச்சாளர்கள் தமிழ் அறிஞராக இருக்கும்போது இன்னொருத்தர் அறிஞராக இருக்கவேண்டிய அவசியமில்லையே. தமிழில் மாபெரும் வேலை செய்த அறிஞர்களால், உதாரணமாகப் பெரியசாமி தூரனால் மேடையில் அதிகம் பேச முடியாது. 

பிறகு அரசியல் பேச்சாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் தமிழ் அறிஞராக  அங்கீகரிக்கப்பட்ட காலம் வந்தது. அந்த மேடைப் பேச்சாளர்கள் மேலோட்டமாக உள்ளீடற்ற அடுக்கு மொழியில் பேசக் கூடியவர்கள். நவீன இலக்கியவாதிகள் இந்த மைய ஓட்டத்தைப் பார்த்து அருவருத்து விலகி வந்தார்கள். அது மொத்தமாக மரபிலக்கியம் மீதும் படிந்தது. தமிழில் சிலப்பதிகாரத்தை ஒட்டி ‘கொற்றவை‘ என்ற மரபிலக்கிய நாவல் நான் வந்து தான் எழுதினேன். இது நவீன இலக்கியமா? என்று கேட்பவர்களுக்கு ஆம் இதுதான் தமிழின் முதல் நவீன இலக்கியம் என்ற ஓங்கிச் சொல்லியிருக்கிறேன். ஆகவே நவீன இலக்கிய வாசகனுக்கு இருக்கும் இந்த ஒவ்வாமை, நீங்கள் பட்டிமன்றப் பேச்சாளர்களை அந்தப் பக்கம் உட்கார வைத்தால் அவன் இந்தப் பக்கம் உட்காரமாட்டான். நீங்கள் குடவாயில் பாலசுப்ரமணியத்தை மேடையில்  உட்காரவைத்தால் அவன் இந்தப் பக்கம் உட்காருவான்.

 

சச்சரவில்லாமல் முறையாக விவாதம் செய்வதெப்படி? எதாவது மரபுவழி விவாதமுறை உள்ளதா?

விவாதம் - லாஜிக் என்பது பண்டைய கிரேக்க மரபில் தொடங்கி கிருஸ்தவ இறையியல் வழியாக மறுமலர்ச்சி காலத்தில் பொதுச் சிந்தனைத் தளத்திற்கு வந்தது. மேலைநாடுகளில் அறிவியல், மருத்துவம் மற்றும் பல அறிவுத் தளங்களில் இந்த விவாதமுறை முக்கியமானது. இந்திய விவாதமுறை நியாய சாஸ்திரத்தில் தொடங்கி சமணம், பௌத்தம், இந்து சமயங்களுக்குப் பொதுவான முறையாக இருந்தது.  அதற்குப் பௌத்தர்கள் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள். பல உரைகள் எழுதியிருக்கிறார்கள். இதை எப்படி கற்கலாமென்றால், மேலைநாட்டு முறையைப் பல்கலைக்கழகங்களிலும் அல்லது இங்குள்ள மரபுவழி குருகுலங்களில் இந்திய முறையையும் கற்கலாம். இந்த இரண்டு தர்க்க முறைகள் தெரியாத ஆட்களால்தான் விவாதங்கள் சாத்தியமில்லாமல் போகிறது. நான் குரு நித்திய சைத்தன்ய குருகுலத்தில் இந்தியத் தர்க்க முறையைக் கற்றவன்.  நான் விவாதிக்கும் முறையென்றால் முதலில் நீங்கள் சொன்ன விவாதக் கருத்தைத் திருப்பிச் சொல்வது. எல்லா விவாதத்திலும் பரபக்கத்தை முதலில் சொல்லுவேன். நீங்கள் இதைச் சொன்னீர்களென்று. அப்புறம் இதை நான்கு ஐந்து துணைக் கருத்துகளாகப் பிரிக்கிறேன்.  நீங்கள் சொல்லாதவற்றிற்கு நான் பதில் சொல்ல முடியாது. அப்புறம் விவாதம் எப்படி நடக்க வேண்டும் எனச் சில விதிமுறைகள்.

நான் ஒரு மையக்கருத்தை விவாதத்திற்கு முன்வைக்கிறேன் என்றால், நான் விவாதிப்பதை நீங்கள் மறுக்க முடிந்தால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்ற உறுதி. செத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றால் விவாதமே கிடையாது. நம்பிக்கைகளுடன் விவாதிக்கக் கூடாது. பத்து அவதாரம்  எடுத்தார் என்பதையோ, நபிகள் கடைசி தூதர் என்பதையோ விவாதிக்க முடியாது. இல்லை என்றால் மத நிந்தனைக்குப் போய்விடும். அப்புறம் அடிக்க வருவார்கள். விவாதத்திற்காகக் கருத்தை அதைச் சொல்பவர் முன் வைக்க வேண்டும். உதாரணமாக, புதுமைப்பித்தன் முதன்மையான நவீனத் தமிழ் எழுத்தாளர். ஏனென்றால், ஒன்று- அவர் பாரதியைப் பின் பற்றி வந்தவர். பாரதி மரபிலக்கியத்தைச் சார்ந்தவர்.  இரண்டு- புதுமைப்பித்தன் அன்றிருந்த உலக இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவந்தார். மூன்று- புதுமைப்பித்தனைத் தொடர்ந்து தமிழில் மற்ற நவீன எழுத்தாளர்கள் வந்தார்கள் என்று வரிசையாகத் தர்க்கத்தை முன் வைக்க வேண்டும். அதை மறுப்பவர் இந்த மூன்று கருத்துகளை ஒட்டியே மறுக்க வேண்டும். அதைவிட்டு புதுமைப்பித்தன் மனைவியை எப்படி நடத்தினார் தெரியுமா? அவர் திராவிட ஆட்களைத் திட்டினார் தெரியுமா? என்றால் விவாதமே கிடையாது.  ஆகவே எந்தக் கருத்தை முன் வைக்கிறாரோ அந்தக் கருத்தை மட்டும் மறுத்து, ரிவர்ஸ் செய்து விவாதிக்க வேண்டும். புதுமைப்பித்தன் நவீன இலக்கியத்திற்கு எப்படி முன்னோடியாக இருக்கிறார் என்ற மையக் கருத்தே பிரேம் ஆப் ரெபறென்ஸ். அதைவிட்டுவிட்டு புதுமைப்பித்தன் கயிற்றரவு என்ற கதை எழுதியிருக்கிறார். முதலில் அதைப் படி என்று மையக் கருத்தை விட்டு பேசுவது என்பது அடிப்படையில் கேலிக்கூத்தான விஷயம். மூன்றாவதாக, மையக் கருத்தை நிறுவத்தான் இந்த விவாதம் உதாரணங்களை மறுப்பதற்கல்ல. பாரதி மரபிலக்கியத்தைச் சார்ந்தவர் என்றால் உடனே பாரதி யார் தெரியுமா? என்று ஆரம்பித்தால் மையக் கருத்தை விட்டு விலகி விடுவீர்கள். உதாரணங்கள் பொருத்தமானதாக இல்லை என்று சொல்லலாம். ஆனால் உதாரணத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்கக் கூடாது.  இந்த மூன்றையும் பின்பற்றினால் தர்க்கப்பூர்வமாக விவாதிக்கலாம். இது மேலைநாட்டு விவாத முறைக்கும் நியாய சாஸ்திர முறைக்கும் உள்ள பொதுவான வழிகள். நியாய சாஸ்திரம் இன்னும் தெளிவான சில கருத்துகள் சொல்லும். ஐரோப்பியக் கல்வி நிலையங்களில் கடைப்பிடிக்கப்படுவது மூன்று, இது வாதிக்க முடியுமா? இதனை மறுக்கக்கூடிய தன்மை, மறுத்தால் ஏற்றுக்கொள்வது. பிரேம் ஆப் ரெபறென்ஸ், மையக் கருத்தின் பொருட்டு விவாதிப்பது. அதைவிட்டு உலகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி நம்மால் பதில் சொல்ல முடியாது.

by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.