|
|||||
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? |
|||||
![]()
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? முனைவர்.கண்ணபிரான் இரவிசங்கர் , பாரிஸ்
வள்ளுவன், நெஞ்சை அள்ளுவன்! அது என்ன வாய்-மை? மெய்-ம்மை? உண்-மை? மூன்றும் ஒன்று தானே? “ஆங்கிலத்தில் ஒரே சொல், Truth! ஏன்யா தமிழில் மட்டும், ஒரு சொல்லுக்கு இத்தனை சொல்லுப் போட்டுக் குழப்பறீங்க? Why can’t u be simple like English? This Tamil is so hard ya!” என்று அங்கலாய்த்துக் கொள்வோர் நம்மிடையே உண்டு!:) வாருங்கள் பார்த்து விடலாம், தமிழின் எளிமையை & குறளின் நுட்பத்தை!
தீமை இலாத சொலல் (அறம்: வாய்மை: 291)
மெய்ப் பொருள் காண்பது அறிவு (பொருள்: அறிவுடைமை: 423)
உண்மை அறிவே மிகும் (அறம்: ஊழ்: 373)
1) வாய்-மை வாய்மை எனப்படுவது யாது? = தீமை இல்லாத சொலல்! சொலல் -ன்னா வாயால் தானே சொல்ல முடியும்? அதான் “வாய்”மை என்று பெயர்! வாயால் மட்டுமே உரைக்கப்படுவது வாய்மை! யாருக்குச் சொலல்? நமக்குத் தீமை வராத சொலல்! அதானே? அல்ல! நம் தன்னலம் பற்றி நல்லாத் தெரியும் ஐயன் வள்ளுவனுக்கு:) அதான் “யாது ஒன்றும்” தீமை வராத -ன்னு சொன்னாரு! பிறர்க்கு + நமக்கு = யார் ஒருவருக்குமே, “யாது ஒன்றும்” தீமை வராத சொலல்! வாய்மை எனப்படுவது யாதெனின் – யாதொன்றும் தீமை இலாத சொலல்! வாயால் உரைக்கப்படுவது வாய்மை! அது யார் ஒருவருக்கும் எத்தீமையும் இலாததைச் சொலல்!
2) மெய்-ம்மை ஒருவர் “வாய்”மையே சொன்னாலும்… எப்பொருள், யார்யார் “வாய்”க் கேட்பினும்… அவர்கள், “மெய்யாலும்” அப்படி நடந்து காட்டுறாங்களா? இல்லை வெறும் வாய்-அளவில் தானா? அவர்கள் உரைப்பது உதட்டளவுக் கொள்கையா? உயிரளவுக் கொள்கையா? மெய் = உடல்; உடலாலும் (தன் செய்கைகளாலும், கடைப்பிடித்தலாலும்) நடந்து காட்டுவது! அந்த “மெய்ப்”- பொருளைக் காண்பது அறிவு!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் – அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு.
பிறர் வாயால் பலப் பல உரைத்தாலும், அவர்களின் மெய்யான கடைப்பிடித்தல்களால், அவை தகுமா? தகாதா? என்ற மெய்ப்பொருளைக் காண்பதே அறிவு ஆகும்! 3) உண்-மை இப்படி, வாயாலும் மெய்யாலும் பல இருக்கலாம்! அவையெல்லாம் புறம் = வெளி உலகக் கட்டுப்பாடுகள்! ஆனால், அகம்? நம் உள்ளத்துக்கு மட்டுமே நம்மைப் பற்றி, நம் நடிப்பைப் பற்றி நன்கு தெரியும்! அதான், உள்+மை = உண்மை! எவ்வளவு தான் நுண்ணிய நூல் பல படித்து இருந்தாலும், அதைச் சொற்பொழிவுகளில் மேற்கோள் காட்டினாலும், ஒருவரின் “உண்மை” அறிவே = உள்ளத்து அறிவே மிஞ்சும்! மற்றவை ஊருக்கு முன், புற வேடங்களே! அதான்…
பொய்ம்மையும் “வாய்”மை இடத்த -என்று சொன்னார் ஐயன்! பொய்ம்மையும் “உண்”மை இடத்த -ன்னு சொல்லலை பாருங்க?
புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின், வாயால் பிறரிடம் பொய் சொல்லலாம்; அது Exception மட்டுமே; ஆனால் அதை நம் உள்ளம் அறியும் அல்லவா? அதான், பொய்ம்மையும் ‘உண்’மை இடத்த என்று சொல்லவில்லை! வெறுமனே ‘வாய்’மை இடத்த! வாயோடு முடிந்து போயிற்று; உள்ளத்துக்கும் ஏற்றிக் கொள்ளாதே!
ஆங்கிலத்தில் ஒரே சொல், Truth! தமிழில் மட்டும் ஏன் மூன்று? வாய்மை, மெய்ம்மை, உண்மை!. ஏனெனில் தமிழ், உளவியல் மொழி! உள்ளத்தால் பொய்யாமொழி! இது “திருக்”-குறள்! திரு மிகுந்த குறள்! உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் குறள்! |
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 11 Dec 2019 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|