LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

ஆசிரியர் கடிதம்

அனைவருக்கும் வணக்கம், 

. தமிழகத்தில் இன்று மிகப்பெரிய அளவில் தலைதூக்கியுள்ள ஆங்கில மோகம் தமிழ் மட்டுமல்லாது இந்தியாவின் பெரும்பாலான மொழிகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து வருகிறது.  ஒருவர் பேசும்போது அவர் பேசுவதில் எத்தனை சதவீதம் அவரது தாய்மொழியில் பேசுகிறார் என்று உற்று நோக்கினால், நாம் எங்கே போகிறோம் என்று விளங்கும். இதே நோக்கில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் , இந்தி உள்ளிட்ட அனைத்து  மொழி பேசுவோரும் கவனிக்கவேண்டிய ஒன்றாகும். இன்று பெரும்பாலான தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த இழிவிற்கு அடித்தளமிட்டு வளர்த்து வருவது வருந்தத்தக்கது. ஊடகங்களில் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்குவதும் , நேர்காணல் செய்வதும், நடிகர் –நடிகைகள் ஆங்கிலம் கலந்து பேசுவதையும்  ஒரு கலாச்சாரமாக, நாகரீகமாக மாற்றி அதை இளையோர் பின்பற்ற காரணங்களாக அமைகின்றன. எந்த மொழியையும் உருப்படியாகக் கற்காத ஒரு சமூகமாக இந்திய சமூகம் மாறிவருகிறது என்பது குறித்து இந்திய மொழியியல் வல்லுநர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தி பேசுவோரும் பாதிக்குமேல் ஆங்கிலம் கலந்தே பேசுகிறார்கள். எந்த மொழிக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழியையும் வளர்க்க அரசு போதிய நிதி ஒதுக்கி தொடர் கவனம் செலுத்தவேண்டும்.  அரசு மட்டும் இதைச் செய்யமுடியாது, தனி மனிதர்கள் இதுகுறித்தான விழிப்புணர்வு பெறவேண்டும், மொழி வளர்ச்சிக்கு இயங்கும் அமைப்புகள், அறிஞர்கள் இதற்கான திட்டம் வகுத்து செயல்படுத்தவேண்டும். ஆங்கிலம் பேசுவதில் உள்ள வெற்றுப் பெருமையைக் கைவிடவேண்டும். அதே நேரம் அதன் அடிப்படையை ஆராய்வதும் அவசியம்.

ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையும் , மேலும் கல்லூரியில் மொழிப்பாடமாக ஆங்கிலம் கற்றாலும், மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் பேசத்தெரியாத நிலை ஏன் நிலவுகிறது என்று எண்ணிப்பார்க்கவேண்டும். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசத் தயங்கும் நிலையம், அதன் அழுத்தமுமே இந்த சமூகத்தை அந்த மொழி குறித்தான முக்கியத்துவத்தை நோக்கி நகர்த்துகிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.  அனைத்துப் பள்ளிகளிலும் , குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் தாய்மொழியுடன், ஆங்கிலத்தையும் சரளமாகப் பேசும் நிலை ஏற்பட்டால் ஆங்கில வழிக் கல்வியும், ஆங்கில மோகமும் இந்திய சமூகத்தை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே உணரமுடிகிறது. 

ஒவ்வொருவரும் தன் தாய்மொழியில், அதன் அழகுடன் , பிறமொழி கலப்பின்றி  பேசவேண்டும் என்பது அடிப்படை தேவை. ஒவ்வொருவரும் முழு மனிதனாக மாற , சிந்தனை வளம் பெற அவரது தாய்மொழியில் ஆழமாக இருப்பதும், அந்த மொழியில் உள்ள இலக்கியங்களை, வாழ்வியல் கருத்துகளை உள்வாங்குவதும் அவசியம் என்பதை அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.  அங்கு வசிக்கும் பல மொழி பேசும் மக்கள் குழந்தை மருத்துவரிடம் செல்லும்போது குழந்தையுடன் வீட்டில் என்ன மொழியில் குழந்தையிடம் பேசுகிறீர்கள்? என்று கேட்டு உங்கள் தாய்மொழியில் பேசுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். உங்கள் தாய்மொழி ஆங்கிலமாக இல்லாதபோது அதில் பேசாதீர்கள், பள்ளி செல்வதற்கு முன் உள்ள வகுப்பில் அல்லது பள்ளி செல்லும்போது கற்றுக்கொள்வார்கள் என்று கூறுகிறார்கள்.

பிறமொழி கலப்பில் அதிகம் பாதிக்கப்படுவது தமிழை விட மற்ற இந்திய மொழிகள்தான். சில ஆண்டுகளுக்கு முன் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில்  முன்பின் அறியாத ஒருவர் கலந்துகொண்டார். புதியவர்களைப் பார்த்து அவர் எந்த பகுதியில் வசிக்கிறார் என்று அறிமுகம் செய்துகொள்ளும் வழக்கத்தில் வினவியபோது, அவர் அப்பகுதி தெலுங்கு சங்கத்தின் தலைவர்  என்றும், நீங்கள் ஆங்கிலம், இந்தி இல்லாமல் எப்படி தமிழில் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள் என்று அறிந்துகொள்ள வந்துள்ளேன் என்றும் கூறினார். ஆம், உற்றுநோக்கினால், புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் மொழியை , அதன் தனித்துவத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அமெரிக்காவில் 230 க்கும் மேற்பட்ட  தமிழ்ப்பள்ளிகளை உருவாக்கி, 60 க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்கங்களை உருவாக்கி, தமிழ் மொழிக்காகப் பாடத்திட்டம் உருவாக்க இரு அமைப்புகளை உருவாக்கி, தமிழிசை வளர்ச்சிக்கு ஒரு அமைப்பு பாடத்திட்டத்தை உருவாக்கி மிகப்பெரிய அடித்தளத்தைப் பெற்றுள்ளது. வேறு பல நாடுகளிலும் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் இதைப்போன்றே மொழிமேல் அக்கறை கொண்டுள்ளதை அறிவோம். தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் ஆங்கிலம், இந்தி அல்லது மொழிச்சிதைவு செய்வதை எந்தத் தமிழ் அமைப்பும் ஏற்றுக்கொள்வதில்லை.  ஆனால், புலம்பெயர்ந்த ஆந்திர, கேரள, கர்நாடக, இந்தி அமைப்புகள்/சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் சென்று பார்த்தால், அங்கு எத்தனை சதவீதம் அவர்களின் தாய்மொழி இருக்கிறது என்பதும், அது மொழியின் பெயரால் கூடிக் கலையும் அமைப்புகளாக இருப்பதை பலரும் கண்டிருப்பீர்கள். அந்த அளவிற்கு தமிழ் புலம்பெயர்ந்த நாடுகளில் இல்லை என்று ஓரளவு நிறைவடையலாம். ஆனால் தமிழகத்தின் நிலை நாளுக்குநாள் மிகவும் கவலை தரத்தக்கப் போக்கில் செல்வதை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டியது அவசியமாகிறது. 

அனைவருக்கும் அவரவர் மொழியின் போக்கு குறித்த ஆங்கில தாக்கம் குறித்த கவலை உள்ளது.  அதில் ஓரளவு முன்னோடிகளாகத் தமிழ்பேசும் மக்களும், அமைப்புகளும் , இருந்தாலும் மொழிச்சிதைவு இல்லை என்று கூறமுடியாது.  அன்பிற்குரியவர்களே, நீங்களும், உங்கள் குழந்தைகளும் பேசும் மொழியைச் சற்று கவனியுங்கள், அதில் பிறமொழி கலப்பு எத்தனை சதவீதம் என்று சிரத்தை எடுத்துச் சிந்தியுங்கள்.  பெற்றோர்கள்தான் குழந்தைகளை செதுக்கும் முதல் சிற்பிகள். நீங்கள் மம்மி-டாடி என்று குழந்தை அழைப்பதை நினைத்து பெறுப்படுகிறீர்களா? அப்பா-அம்மா என்று உங்கள் அடையாளத்துடன் தாய்மொழியில் அழைப்பதை வலியுறுத்துகிறீர்களா என்பதைப்பொறுத்தே அடுத்த தலைமுறைக்கான  பயணம் தொடங்குகிறது. 

கீழடி குறித்து பெருமை கொள்ளும்  சமூகமாக நம் வாழ்வியலை மறுபரிசீலனை செய்து தாய்மொழியில் தன்னை தகவமைத்துக்கொள்வோம்.  மொழி என்பது நம் அடையாளம், அது உயர்வு தாழ்வு கொள்ளக்கூடிய ஒன்று அல்ல. ஒரு மொழியை இன்னொரு மொழியுடன் கலந்து பேசுவது அந்த மொழிக்கும், அதன் வளத்திற்கும், அழகிற்கும் செய்யும் இழிவாகப் பார்க்கவேண்டும்.  நம் விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப, வசிக்கும் இடத்திற்கு ஏற்ப எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் தாய்மொழியுடன் சேர்த்துக் கற்றுக்கொள்வோம். ஆனால் அந்தந்த மொழியை அதன் சிறப்புடன், உச்சரிப்புடன் கலப்பு இல்லாமல் பேசுவோம். ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேசுவோம், தமிழைத் தமிழாகப் பேசுவோம்.  

தேவையான , விருப்பமான அனைத்து மொழிகளையும் கற்போம், நம் அன்னை மொழியைக் காப்போம்.  

 வாழ்க தமிழ்... 

மீண்டும் அடுத்த இதழில்  சந்திப்போம்.

அன்புடன்,

ச.பார்த்தசாரதி

ஆசிரியர்.   

வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ் 

Magazine@ValaiTamil.Com

 

அக்டோபர் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் கருத்துகளை பகிரவும்.

October month ValaiTamil Magazine published:
To read as a book: https://issuu.com/valaita…/docs/valaitamil-magazine-oct-2019
To go from ValaiTamil Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
To download: https://drive.google.com/open…

LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/

by Swathi   on 14 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.