LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் அறிவுசார் கலந்துரையாடல்

தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவருபவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவரது அறம் கதைத்தொகுப்பு பரவலாக வாசிக்கப்பட்டுப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவருடைய சொந்த முயற்சியால் சிறந்த எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. தற்போது மகாபாரதத்தை நவீன மறுஆக்கமாக வெண்முரசு என்ற மாபெரும் நாவல் தொகுப்புகளை எழுதிவருகிறார். அதில் அனைத்துத் தரப்பின் கதைகளையும், பல இந்திய ஞான மரபின் தரிசனங்களையும்,  முக்கியமாக ஒடுக்கப்பட்ட குலங்களின் குரல்களையும் பதிவு செய்திருக்கிறார். வெண்முரசு தொகுப்பில் வண்ணக்கடல் என்ற நாவலில் இந்தியாவின் அனைத்து தொன்ம அசுர குலக் கதைகளையும் இணைத்திருப்பார். அதில் சங்ககாலப் பாணன் மதுரை இளநாகன் மகாபாரத கதைமாந்தர்களின் தொன்மத்தை அறியும் பொருட்டு குமரி முதல் இமயம் வரை பல்வேறு இந்திய நிலப்பரப்பில் அலைந்து திரிந்து தொன்மக் கதைகளை கண்டடைவதாகக் காவிய நடையில் சித்தரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வாரம் சிறப்பு ஆளுமையாக எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களுடனான ஓர் உரையாடல்: 


அறம் என்றால் என்ன? 

இந்திய சிந்தனை மரபில் ஒரு குறிப்பிடத்தக்க வழி இருக்கிறது. வேர்ச்சொல் எடுத்து ஒரு சிந்தனையைத் தொடங்கி முன் செல்வது. இது தமிழ், பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் போன்ற தொல் மொழிகளுக்கு மிகவும் பொருந்தும். சைவ, வைணவ, வேதாந்த அறிஞர்களும், உ.வே.சா பாணி பழந்தமிழ் அறிஞர்களும் இந்த முறையை ஆய்வுக்குக் கொள்வதைப்  பார்க்கலாம். அறம் என்கிற வார்த்தையின் வேர்ச்சொல் எதுவாக இருக்கும்? அறுதல், அற்றம் என்பது வேர். ஆகவே அறுதியாகச் சொல்லுதல், முடிவாகச் சொல்லுதல் என்பது தொடக்கம். ஒருவரை அழிக்கும்பொருட்டு, சாபமிடுவதற்கும் அறம் பாடுதல் என்ற வார்த்தை வருகிறது. 

நான் அறம் என்ற கதைத் தொகுப்பு எழுதியிருக்கிறேன். அதில் முதல் கதையின் தலைப்பே அறம். அந்த  கதையில் இந்த இரண்டு அர்த்தத்தில் அறம் வந்திருக்கும். ஆரம்ப காலத்தில் குடி அறம், குல அறம் என்று இருந்தது. பின்னர் குடிகள் இணைந்து நாடுகள் உண்டாகும்போது நாட்டு மக்கள்  அனைவருக்குமான அறம், பின்னர் பேரறம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும். பொதுவான அறம் நோக்கி ஒரு வளர்ச்சி பரிணாமத்தில் இருக்கும். 

ஆகவே ஆரம்பகால இலக்கியத்தைப் பார்த்தால் அகத்துறைப் பாடல்களில் குடி அறமாக மூத்தோரை வழிபடுதல், பாலியல் ஒழுக்கம், கவு, கற்பு என்றும் குல அறமாகச் சடங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் என்று தொடங்கி மானுடர் அனைவருக்குமான அறம் என்று வளர்ந்து வந்திருக்கும். இந்தப் பொது அறச்சிந்தனைகள் சங்க கால இறுதியில் வந்த சில புறநானூற்றுப் பாடல்களில் குறிப்பாகப் பொருண்மொழிக்காஞ்சி துறைப் பகுதியில் காணலாம். 

சமூக ஆய்வாளர்கள் சமண, பௌத்த, ஆசீவகர்களின் வருகைக்குப் பிறகே இந்த மானுடருக்கான பொது அறம் வளர்ந்து வந்திருக்கும் என்கிறார்கள். சங்க இலக்கியத்தின் உச்சக்கட்ட அறப்பாடல் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆசீவகர்களின் பாடல் என்று ஆய்வாளர் நெடுஞ்செழியன் தன் “ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்” நூலில் குறிப்பிடுகிறார். சங்கம் மருவிய காலத்தில், கிமு ஒன்றாம் நூற்றாண்டில் இந்த மாற்றம் நிகழ்ந்தது. இதன் நீட்சியாகத் திருக்குறள் மானுடருக்கான அறத்தை முன்வைக்கிறது.  பின் சிலப்பதிகாரம் அறத்தை மானுடரை மீறிய ஒன்றாக உருவகிக்கிறது. அறம் என்பது நாம் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்து பின்னர் நம்மை மீறி, வரலாற்றுக்கு அப்பால் நின்று நம்மை ஆட்டுவிக்கும் பெரும் சக்தியாக மாறுகிறது. அரசியல் பிழைத்தோர்க்குக் கூற்றாக அறம் வருகிறது. அரசனைவிட உயர்வாகக் கிட்டத்தட்ட கடவுளுக்கு நிகராக உயர்கிறது. பின்னர் கம்பராமாயணத்தில் கடவுளாகவே, அறத்தின் மூர்த்தியான இராமன் என்று வருகிறது. 

ஆக நாம் குடி அறத்திலிருந்து, குல அறத்திலிருந்து, மானுட அறத்திற்கு வந்து பின்னர் மானுடரை மீறிய சக்தியாக, கடவுளாக அறம் என்ற கருத்து வளர்ந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.

அறம் ஒருவருக்கு ஒருவர், காலத்தினால் மாறுபடுமா? 

அறம் மாறுபடுமா என்ற கேள்விக்குக் காலத்திற்குக் காலம் வரும் விளக்கங்கள் மாறுபடும் ஆனால் தமிழ் மரபில் எது ஒன்று மாறாமல் மனிதரை மீறிய ஒன்றாக இருக்குமோ  அதுவே அறமாகும். அது அருவமாக வெறும் கற்பனையாகத் தோன்றும். ஆனால் நாம் யாவருமே நம் உடலுடைய இயல்பை மீறி எதுவும் செய்ய முடியாது. எல்லாச் சுதந்திரமும் மனிதனுக்குக் கிடையாது. அது போல உள்ளம் செயல்படுவதற்கும் சில நெறிகள் உள்ளன. நாம் மனிதர்களாகப் பிறக்கும்போதே இந்த எல்லைகள் உருவாக்கப்படுகின்றன. ஆகவே மனிதரை மீறிய ஒன்றாகவே அறம் இருக்கிறது. நான் அதை நம்பக் கூடியவன். 

ஏனென்றால்,  ஆப்பிக்காவில் ஒரு பனை உயரமுள்ள சிதல்(கரையான்) புற்றுக்களைக் கண்டிருக்கிறேன். மண்ணுக்குள்ளே மூன்று மடங்கு ஆழமாக செல்லக்கூடியவை. ஒரு சிதல் புற்றை ஒரு நகரம் என்று கொண்டால் நியூயார்க் நகரைப்போல் ஆயிரம் மடங்கு பெரியது. சாலமன் காலத்தில் தோன்றியவை. அதன் பொறியியலைப் படிக்க ஆய்வாளர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள். வேற்று கிரகத்தில் ஒரு இருப்பிடம் அமைப்பதென்றால் இதையே உதாரணமாக  கொள்ளலாம். உள்ளே செல்வதற்கு ஒரு வழி, வெளியே வருவதற்கு ஒரு வழி, கழிவுகளை அகற்ற, தட்ப வெட்பத்தைக் கட்டுப்படுத்த காற்றோட்டமாக உள்ள கட்டுமானம், தனித்தனி அறை கொண்டது. ஒரு சிதலின் வாழ்நாள் ஒருவாரம் மட்டுமே. ஒரு கல்லை மட்டும் பார்க்க கூடும். அதனால் ஒருபோதும் முழு சிதல் புற்றைக் கற்பனையிலும் பார்க்க முடியாது. ஆனால் அந்த சிதல் புற்றை அதுதான் கட்டுகிறது. அதன் கூட்டான அறத்தில் அந்த புற்று அமைகிறது. ஒரு சிதல் அந்த புற்றைச் சிதைக்க நினைத்தால், அந்த கூட்டத்தின் நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அந்த அறமே அழிக்கும். ஆகவே அந்த அறம் சிதலைக் கட்டுப்படுத்துகிறது. மனிதர்களுக்கும் தனித்தனியாக ஒழுக்கம் இருந்தாலும் மாறாத ஒரு பேரறத்தின்(Greater Intelligence) பகுதியாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது என் நம்பிக்கை என்பதைவிட நான் உணர்ந்து தெளிந்தது என்று சொல்லலாம்.

இல்லறத்தாருக்கு விருந்தோம்பலை ஒரு உச்ச அறமாக கொள்ளலாமா?

திருக்குறளைப் பார்த்தால் அதில் 

‘இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை’ 

என்று வருகிறது. 

திருக்குறளை அதன் பின்னணியில் வைத்து பொருள் கொள்ளக்கூடிய மரபு இருக்கிறது. அது முழுக்க நிராகரிக்கப்பட்டு பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழ் மறுகட்டமைப்பு காலத்தில் உரை ஆசிரியர்களால் தங்களுக்கு அப்போது தோன்றக்கூடிய விளக்கங்கள் எழுதப்பட்டன. இயல்புடைய மூவர் யார் என்ற கேள்விக்கு நவீன உரைகளில் பெற்றோர், பிள்ளைகள், உறவினர்கள் என்று மேம்போக்காகச் சொல்லப்படுகிறது. இல்லறத்தான் தன் குடும்பத்தினருக்கு நல்லவனாக இருக்கவேண்டும் என்று சொல்வதற்கு குறள் அவசியமில்லை. 

குறள் சூத்திரம் என்ற வடிவில் எழுதப்பட்ட நூல்.  இது சமண அறிவுப்புலத்தில் இருந்து வந்த நூல். சூத்திர நூல் என்பது ஒரு விஷயத்தைச் சொல்லக்கூடியதல்ல. பல்வேறாக சொல்லித் தெளிவுற்று அறுதி உண்மையைச் சொல்வது. ஆகவே, ஒரு காட்டை விதையாக மாற்றியது போல. மீண்டும் காடாக மாற்றவேண்டியது வாசகனின் பொறுப்பு. ஆகவே, திருக்குறள் ஒரு ஊழ்க நூல். அதைப் படிப்பதற்கு ஒரு மரபிருக்கிறது. அது குறளைப் புரிந்துகொள்வதல்ல, தியானிப்பது. அதற்கு முதலில் குறளை மனனம் செய்யவேண்டும். பிறகு சொல் எண்ணிப் படிக்கவேண்டும். ஒரு சொல்லின் கருத்தைக்கூட விடாமல் படிக்கவேண்டும். இரண்டாவதாக, ஒரு சொல்லை எடுத்து வேறொரு சொல்லை வைத்துப் படிக்கவேண்டும்.  அந்த வார்த்தையால் பொருள் எப்படி குறைகிறது என்று பார்க்கவேண்டும். 

 

உதாரணமாக, ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்கற்றனைத் தூறும் அறிவு’  என்ற குறளில் மணல் என்பதற்கு பதில் மண் என்றால் பொருள் குறைகிறது. மணலைத் தினந்தோறும் தோண்டவேண்டும் மண் என்றால்  தோண்டவேண்டாம். இப்படி சொல் மாற்றி பொருள் கொள்ளவேண்டும். 

வேறு வேறு சாத்தியங்களைப்  புரிந்து கொள்ளவேண்டும். இந்த முறையே சுவாத்தியாயம், மீண்டும் மீண்டும் படித்தல் என்பதாகும். பிறகு வாழ்க்கையின் வேறொரு தருணத்தில் குறள் நினைவுக்கு வரும். வேறு எந்த எழுத்தாளரையும் விட இதை ஜெயகாந்தன் அற்புதமாகக் கையாள்வார். அவர் குறளைப் பண்டிதத்தனமாகச் சொன்னது கிடையாது. வாழ்க்கையின் தருணத்திற்கு ஏற்ப குறள் நினைவுக்கு வரும். அப்போது வேறொரு குறளாக இருக்கும். முற்றிலும் புதிய அழகோடு இருக்கும். அதைத்தான் நான் குறளைப் படிக்கும் வழியாகச் சொல்வேன். 

ஆகவே, இயல்புடைய மூவர் யார் என்ற வரிக்கு நமக்கு தோன்றக்கூடிய மூவரைச்  சொல்லக்கூடாது. அடுத்த குறளில் விடை வருகிறது. 

‘துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை’

அம்மூவர், துறந்தார்- துறவி, சாமியார் அல்ல. இந்த சமூகத்தின் பொருட்டு தன் வாழ்க்கையையே துறந்தவர்.  துவ்வாதவர் - தான் துறக்காதவர்க்குத் தன்னால் துறக்கப்பட முடியாதவற்கு, யார் என்றால் இரவினர், இழியோர், ஏழை எளியவர். இறந்தார்க்கு - குறளுடைய தரிசனத்தில் மிகவும் முக்கியமானது. இன்று இருப்பவன் நேற்று இருந்தவருடைய கடனை மீட்டுக்கொண்டே இருப்பது. தென்புலத்தார் தெய்வம் .. என்று வருவதில் முதலில் வைக்கக்கூடியது தென்புலத்தார்.  இறந்தார்க்கு ஈமக் கடன்களைச் செய்யக்கூடியது என்று பரிமேலழகர் சொன்னால்கூட அதை நாம் இன்னும் விரிந்த பொருளில் எடுத்துக்கொள்ளலாம். நேற்று இருந்தவருடைய கனவுகளை, லட்சியங்களை அவர்கள் விட்டுச் சென்றவற்றை வளர்ப்பதை, பேணுவதை எடுத்துக்கொள்ளலாம். 

ஆகவே, இம்மூன்றும் தான் இல்லறத்தானின் கடமையாக கொள்ளலாம். விருந்தோம்புதல்  மட்டுமல்ல. விருந்தோம்பலை இதன் ஒரு பகுதியாகக்கொள்ளலாம்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை  -என்ற குறளுக்கு அவர் வினைப் பயனுக்கேற்ப வாழ்க்கை அமையும் என்பதாக சிலர் பொருளுரைக்கிறார்களே? இப்படி படிப்பது சரியா? உங்கள் கருத்து? 

நான் ஏற்கனவே சொன்னதுபோல திருக்குறளைப் படிப்பது என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்கம். மரபாக நூல்களை இப்படிப் படிப்பது கிடையாது. நான் இந்திய மரபு சார்ந்த, வேதாந்த மரபு சார்ந்த நாராயண குருவினுடைய பள்ளியின் வழி வந்தவன். இதன் பொருட்டு எழுதப்பட்ட நூல்களை நாம் பஸ்ஸில் போகும்போது புரட்டிப் படிப்பது போலில்லை.  உதாரணமாக பதஞ்சலி யோகசூத்திரத்தை ஒரு பஸ்ஸில் ஏறி இறங்குவதற்குள் படித்துவிடலாம். ஆனால் அது ஒரு பெரிய அறிவுத்தளத்தின் உச்சத்தில் சொல்லப்பட்ட ஒரு வரி. பெரும்பாலான சூத்திரத்திரங்கள் நான்கு வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும். நான்கு வார்த்தைகளைக் கொண்டு ஒரு முழுச்சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அங்கே இருக்கிறது. 

ஆகவே, திருக்குறள் உட்பட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் கிபி ஒன்றாம் நூற்றாண்டில் சமணர்கள் அறிவுத்தளத்தில் ஆதிக்கம் செலுத்திய தொடக்க காலத்தில் உருவானவை. அவர்களுடைய வழிமுறை என்பது கல்விக் கொடை, அன்னக் கொடை, மருத்துவக் கொடை. மூன்றுக்கும்  நூல்கள் எழுதினார்கள். கல்விக்கு நெறி நூல்கள், இலக்கண நூல்கள் எழுதினார்கள். இந்தியா முழுக்க அனைத்து மொழிகளிலும் இவ்வாறு நூல்கள் எழுதியிருக்கிறார்கள். அப்படி எழுதப்பட்ட நெறி நூல்கள் ஏற்கனவே தமிழ்ச் சமூகத்தில் புழங்கப்பட்ட நெறிகளை வகுத்துரைப்பதாகவும் புது நெறிகளைத் தொகுத்துச் சொல்லக்கூடியதாகவும் இருக்கும். குறளில் உள்ள ஒவ்வொரு வரியும் குறளாசிரியன் நின்றிருந்த ஒரு பின்னணியில் நிறுத்திப்பார்க்காமல் தனியாக எடுக்கும்போது வரும் இடர்கள் இவை.  

கணியன் பூங்குன்றனாரின்  ‘யாதும் ஊரே பாடலில் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்று சொல்லி, தொடர்ந்து சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்று சேர்த்துப்பார்க்கும்போது பொருள் வந்துவிடும். ஏனென்றால் திருக்குறள் தொடர்ந்து சொல்லக்கூடிய ஊழ், மற்றும் ஊழ் என்பது தொடர்ந்து அறநெறியின் பாற்பட்டு ஒழுகும் ஒன்றின் விழைவாக வருவது.  இந்த விஷயத்தின் திரிபு உரை முதலில் பரிமேலழகரால், முன்னை வினைப்பயன் ஆகவே சுமக்கிறார் என்று உரைக்கப்பட்டது. இது முழுப்பொய் என்றால் நிற்காது. அரைப்பொய் என்பதால் நின்றுவிட்டது. வள்ளுவர் சொல்ல வருவது என்னவென்றால் அறத்தின் வழி இதுவே என என்னாதே. நீ மேலே இருக்கிறாய் அவன் கீழே இருக்கிறான். இப்போது இப்படி இருக்கலாம். உனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது அவனுக்கும்  ஒரு பொறுப்பு இருக்கிறது. அறம் எப்போது வேண்டுமானால் உன்னையும் சுமக்க வைக்கும். 

இதோடு இணையக்கூடிய 15 குறள்கள் வேறிடத்தில் இருக்கிறது.

‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்’ 

தீயவன் வளர்வதும் நல்லவன் வீழ்வதும் எங்கோ நினைவில் இருக்கும். எங்கு இருக்கும்? அறத்தின் நினைவில் இருக்கும். நீ ஆடக்கூடிய நாடகத்தின் பாத்திரம் மட்டும் உன்னுடையது. திரைக்கதை அறத்தால், ஊழால் எழுதப்படுகிறது. அந்த அறம் நன்மை தீமைகளுக்கு, சிறிய விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது.

திருக்குறளில் வருகின்ற ‘நற்றாள் தொழாஅர் எனின்’, ‘மாணடி சேர்ந்தார்’, ‘இலானடி சேர்ந்தார்க்கு’, ‘தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்’  தாள், அடி என்ற கருத்து சமண மதம் சார்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் வைணவத்திலும் திருவடி, பரமபதம் என்ற கருத்து இருக்கிறது. இதை எப்படி புரிந்துகொள்வது?

குறள் பக்தி நூல் அல்ல. திருவாசகம் பக்தி நூல். அது காதலால் கசிந்துருகி படிப்பவர்க்கு வேறு அர்த்தத்தை அளிக்கும். குறள், ஆய்ந்து அறிய வேண்டிய அறிவு நூலே ஒழிய நம்பி ஒழுக வேண்டிய பக்தி நூல் அல்ல. உதாரணமாக ‘சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை’ என்ற குறள் வரியை சமண மெய்ஞானப் பின்புலத்தில் வைத்து பார்த்தால் வரக்கூடிய விழுப்பொருள், மறுபிறப்பு கொள்கையை மட்டும் சொல்லும் வைணவ பின்புலத்தில் பார்த்தால் ஒரு குறைவு வரும். ஆகவே எந்த மரபைச் சார்ந்தது என்று வகுத்துக்கொள்வது அவசியம். 

இது சமண நூல் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்  அனைத்துமே சமண பௌத்த மரபை சார்ந்தது, இது கிபி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டில், களப்பிரர் காலத்தில் உருவானது. அந்தக் காலத்தைச் சார்ந்த வேறொரு சைவ, வைணவ நூல் இல்லாததும் ஒரு காரணம். குறள் சமணர்களால் கல்வி பின்புலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. ‘பள்ளி யானையின் உயிர்த்து’ என்ற கபிலரின் குறுந்தொகைப் பாடலில் வரும் பள்ளி படுக்கையைக் குறிக்கும். சமண முனிவர்கள் படுக்கக்கூடிய இடம் பள்ளி. அந்த இடத்தில் அரசர்கள் அவர்களுக்கு படுக்கை வெட்டி கொடுப்பார்கள். அங்கு கல்வி கற்பதால் அதற்குப் பள்ளிக்கூடம் என்று பெயர் வந்தது. குறளில் உள்ள பெயர்கள், ஆதிநாதர் தொடங்கி நேரடியாகவே சமண முனிவர்களைச் சுட்டுகிறது. ‘ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி’ என்ற குறளுக்கு கௌதம முனிவர் இந்திரனை சபித்தாகச் சில உரையாசிரியர்கள் சொல்வதை ஏற்க முடியாது. ஐம்புலன்களை அவித்தவன் என்று மனைவியோடு வாழ்ந்த கௌதம முனிவரை சொல்லமுடியாது. வைதீகமான மரபில் முனிவர் என்றால் வேறு பொருள். ஐந்தவித்தான் என்பது சமண முனிவர்களைக் குறிக்கும் ஜின்னர் என்ற சொல்லின் நேரடி தமிழாக்கம். ஜின்னர் என்றால் ஐம்புலன்களை வெற்றிகொண்டவன். முனிவர்களின் தவத்தைக் களைக்கும் இந்திரனுக்கு கௌதமர் இட்ட சாபம் என்றால் பொருள் குறைகிறது.  

நெடுநாட்கள் குறள் சமண நூலாகவும் வைதீக மதத்திற்கு வெளியே இருக்கக்கூடிய நூலாகவும் இருந்தது.  அதனுடைய ஏட்டுச்சுவடி அயோத்திதாசரின் தந்தை கட்டப்பண்டிதரிடமிருந்து எல்லிஸ்துரைக்கு கிடைக்கிறது. சைவ மடங்களில் அதைக் கற்பிக்க தடை இருந்தது. முழுமையாக அந்த தடை இருந்ததா என்றால் இல்லை. வெவ்வேறு சைவ மடங்களில் குறள் கற்பிக்கப்பட்டாலும் பொதுவாக அது புற சமய நூலாக கருதப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் மறுமலர்ச்சி வரும்போது இந்நூல் கண்டடையப்படுகிறது. அப்போதுதான் மதச் சார்பற்ற, ஜனநாயக விழுமியங்கள் வந்து சேர்கின்றன.  குறள் இந்த விழுமியங்களுக்கு மிக அருகில் வருவதால் இதை உரிமை கொள்ளவேண்டிய ஆசை எல்லோருக்கும் வந்தது. கா.சு.பிள்ளை திருக்குறள் சைவ நூலே என்று விவாதித்து ஒரு பெரிய நூலை எழுதுகிறார். தமிழ் நாவல்கள் சரிதை போன்ற நூல்களை மேற்கோள்காட்டி மருங்காபுரி ஜமீன்தாரிணி இலட்சுமி அம்மாள் உரையாகிய திருக்குறள் தீபாலங்காரம் என்ற நூல் எழுதப்பட்டது. அதனுடைய முன்னுரையில்தான் வாசுகி அம்மாள், திருவள்ளுவர் நெசவாளர் என்று அனைத்தும் தொன்மக் கதைகளும் அச்சேறுகிறது. 

இன்னொரு காரணம் சமண மரபில் துறவிகளை அடிகள் என்று குறிப்பிடப்படுவதில்லை. பெருமாள் திருவடி குறிப்பிடப்படுகிறது, சரணம் என்ற அர்த்தத்தில். சமண மதத்தில்தான் மனிதருடைய அடிகள் முக்கியத்துவம் பெறுகிறது. சமணத் துறவிகள் உண்ணாவிரதம் இருந்தது இறப்பதற்கு முன் அவர்களுடைய காலடிகள் அளவெடுக்கப்பட்டு கல்லில் செதுக்கி வழிபடப்படும். இந்தியா முழுவதும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அடிகள் இருக்கின்றன. இன்றும் சிரவணபெலகொளாவில் ஏகப்பட்ட சமணத் துறவிகளின் திருவடிகள் பூசைக்கு உள்ளன. 

கடைசியாகச் சமணர்களைப் பொறுத்தவரை குந்துகுந்தாச்சாரியர் என்ற சமண முனிவரின் நேரடி மாணவர் திருவள்ளுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. அவர்கள் நூல்களிலும் அது  சொல்லப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகில் பொன்னூர் என்ற ஊரில் திருவள்ளுவரின் அடிகள் பதிக்கப்பட்டுள்ளன எனச் சிலர் நம்புகிறார்கள். அவர்களுடைய கோவில் அங்கே இருக்கிறது. இப்பொழுதும்  பூசைகள் நடக்கின்றன. நானும் பலமுறை அங்கே சென்றிருக்கிறேன். ஆகவே திருக்குறள் சமணத்தைச் சார்ந்த நூல். ஆனால் மத நூல் அல்ல, பொது நெறி நூல். இது இந்தியாவின் ஒட்டுமொத்த அறிவுப்பின்புலத்தில் இருந்து வந்த நூல். இந்த அறை முழுவதும் நீராவியால் நிரம்பியிருக்கும்போது கண்ணாடியில் ஒருதுளி நீர் வருவது போல ஒரு பெரிய அறிவுத்தளத்தின் பின்னணியில் ஒரு நூல் வருகிறது. அதற்கு பின்னால் பல அறிஞர்கள் இருப்பார்கள். குந்துகுந்தாச்சாரியரே ஒரு பெரிய தர்ம நூலை எழுதியிருக்கிறார். நம்முடைய கல்வெட்டுக்களைப் பார்த்தால் இருபது மேல் சமண முனிவர்களின் பெயர் கிடைக்கிறது. ஆகவே குறள் சமண நூலே. அது தனித்தமிழ் அடையாளத்துடன் இன்பச் சுவையும் கொண்டுள்ளது. காமத்துப்பால் இருப்பதால் இது சமண நூல் இல்லை என்பார்கள். ஆனால் முழுக்க இன்பச் சுவை கொண்ட சீவக சிந்தாமணி ஒரு சமண நூலே. மேலும் குறளில் வீடு பேறு இல்லை என்பார்கள். ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்’ அதுவே வீடு பேறுக்கு சமானம்.

ஆகவே, ஒரு வைணவர் குறளை வைணவநூல் என்று ஏற்றுக்கொண்டால் அவரைக் குறைச் சொல்லமாட்டேன். சைவரும் ஏற்றுக்கொண்டால் அதுவும் நன்றே. ஆனால் மதவெறியின் பாற்பட்டு அதை குறுக்க முற்பட்டால் அது கண்டிக்கத்தக்கது. 

 

 -விஜய் சத்தியா

 

by Swathi   on 14 Oct 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மாந்து செயல்படும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்
நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு நாவல்கள், சிறுகதைகளின் வளர்ச்சி- 19ம் நூற்றாண்டு இறுதி 20ம் நூற்றாண்டின் முதல் கால் நூற்றாண்டு
சுவாரசிய தகவல்கள் சுவாரசிய தகவல்கள்
சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் கணையாழியின் கடைசி பக்கங்கள்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.