|
||||||||||||||||||
கவனம்-இரமா ஆறுமுகம் |
||||||||||||||||||
அமெரிக்காவில் அது ஒரு அழகான அந்தி சாயும் பொழுது. கதிரவன் தன் செங்கதிர்களை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பரப்பிக் கொண்டிருந்தான். கனடிய வாத்துகள் வழக்கம் போல் ஏக சத்தத்துடன் கூட்டமாகப் பறந்து கொண்டிருந்தன. அமுதன் வேலை முடிந்து சாலையோரத்தில் நடந்து கொண்டிருந்தான். எதையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
அவனது இருபத்தைந்தாம் வயதில் பெண் தேடும் படலம் ஆரம்பித்து முப்பத்து மூன்றாம் வயதில் தான் திருமணம் முடிந்தது. சாதி, மதம், சமூக அந்தஸ்து மற்றும் எல்லா கூட்டல் கழித்தல்களையும் பார்த்து மல்லிகாவை மணப்பதற்குள் அவன் அரைக்கிழவன் ஆகியிருந்தான். அமெரிக்கா வந்த பிறகு சாதி மத பேதங்களினால் கட்டுண்டிருக்கும் இந்தியச் சமூக அமைப்பின் மீது இருந்த வெறுப்பு பன்மடங்கு அதிகரித்திருந்தது. அமெரிக்காவில் இருப்பது போல் சாதி மத நாடு இன பேதம் இல்லாமல் திருமணம் புரியும் நிலை தன் ஊரில் என்று ஏற்படுமோ என ஏங்கினான். தன் குடும்பத்தையோ, சமூக அமைப்பையோ எதிர்த்துக் கொண்டு வாழும் தைரியத்தை அவனுடைய கல்வியோ, வளர்ப்போ, சமூகச் சூழலோ கொடுத்திருக்கவில்லை. எப்படியோ அவனுக்கும் தன் நண்பர்களைப் போலப் பெற்றோர் பெண் பார்த்து திருமணம் நடந்து விட்டது. அவ்வளவு காலம் கடந்து திருமணம் முடித்த மனைவியுடன் அவன் நான்கு வாரங்கள் தான் சேர்ந்து வாழ முடிந்தது. அதற்குள் திருமணத்திற்காக அவன் எடுத்திருந்த ஐந்து வார விடுமுறை முடிந்து அமெரிக்காவில் பணிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. மல்லிகாவிற்கு அவனுடன் அமெரிக்கா செல்வதற்கான பயண நுழைவுச்சான்று அதற்குள் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கூடுதல் விடுப்பு பெற மேலாளரிடம் எவ்வளவோ மன்றாடிப்பார்த்துத் தோல்வியுற்றான். அமெரிக்காவில் வேலை போய் விடுமோ என்ற அச்சமும், அதை நம்பி வாங்கி வைத்திருந்த வீட்டுக் கடனும் அவனை ஒருசேர அச்சுறுத்தி அவன் மனைவியுடன் சேர்ந்து வாழும் மகிழ்வான தருணங்களை வென்றன. கனத்த மனதுடன் மல்லிகாவைப் பிரிந்து வந்தான். ஓரிரு மாதங்களில் மல்லிகாவிற்கு பயணச்சான்று கிடைத்து விட்டால் அமெரிக்காவில் வசதியான வாழ்க்கை அமைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கு வந்து சேர்ந்தான். மல்லிகாவுடன் சேர்ந்து களித்திருந்த மகிழ்வான பொழுதுகளை எண்ணி நாட்களை ஓட்டினான். அவர்கள் வாழ்க்கை வாட்ஸப் மற்றும் அலைபேசியில் பேசுவதிலேயே கழிந்தது.
பணியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் அவன் ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகும் நல்ல சேதி வந்தது. மணமான ஒரு சில மாதங்களிலேயே அமுதன் தந்தையான செய்தியை அறிந்த குழந்தைக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும் நண்பர்கள் சிலர் மனதிற்குள் பொறாமையுடன் இனிக்க இனிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அவன் வேலை பார்க்கும் தொழில் நுட்பத்துறையில் வேலை அழுத்தத்தினாலோ, வாழ்க்கை முறையினாலோ குழந்தைப் பேறின்மை மிகவும் பரவலான பிரச்சினையாக மாறி இருந்தது. எந்த செலவோ, பிரச்சினையும் இல்லாமல் தந்தையாகப் போவதை எண்ணி மகிழ்ந்தான். மல்லிகா கருவுற்றிருக்கும் சமயத்தில் இங்கு வந்து தனியாகத் துன்பப்பட வேண்டாம் என்ற காரணத்திற்காக அவள் குழந்தை பிறந்த பின் இங்கு வரட்டும் என முடிவு செய்தான்.மல்லிகா கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் அனுப்பி வைத்து இவன் ஏக்கத்தைச் சிறிதளவாவது தீர்த்து வந்தாள். குழந்தை பிறக்கும் போதாவது தாய்நாட்டிற்குச் சென்று மனைவியுடன் இருக்கலாம் என நினைத்தான். எவ்வளவோ முயற்சி செய்தான். பணிச்சுமையினால் அதுவும் கைகூடவில்லை. அப்போது இந்தியா சென்றால், அமெரிக்காவிற்குத் திரும்ப வர முடியுமா எனத் தெரியவில்லை. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என அமுதனும் மல்லிகாவும் அலைபேசியிலேயே அடித்துக் கொண்டனர். கடைசியில் பெயர் வைப்பதில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என நினைத்து விட்டுக் கொடுத்து விட்டான்.
குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன. உப்பு சப்பில்லாத தன் வாழ்க்கையையும், தான் சமைத்துச் சாப்பிடும் உணவையும் நொந்து கொண்டே வேலை முடிந்து வீட்டிற்கு நடந்தான். பணம் சேமிப்பதற்காகவே மகிழுந்து வாங்குவதை ஒத்திப் போட்டுக் கொண்டே வந்திருந்தான். குளிர் அவனின் மிகக் கனமான கையுறையையும் தாண்டி ஊசி போல் குத்தியது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் அமுதனின் தந்தை, தன் மகனின் அமெரிக்க வாழ்க்கையைத் தன் நண்பரிடம் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். அமுதனுக்குத் தன் குழந்தையை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது. எப்படியாவது ஓரிரு மாதங்களில் தாய்நாடு சென்று குடும்பத்தைக் கூட்டி வந்து விட வேண்டும், மகிழுந்து வாங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டான். அலைபேசியில் மல்லிகா அனுப்பியிருந்த குழந்தையின் காணொளியை எடுத்துப் பார்க்கத் தொடங்கினான். குழந்தை இந்தியாவில் விளம்பரப் படங்களில் வரும் குழந்தை போலக் கொழு கொழு வென்றிருந்தது. அவனுக்குக் குழந்தையை எப்போது பார்ப்போம் என ஆயாசமாக இருந்தது. தன்னை மறந்து,காணொளியைப் பார்த்துக் கொண்டே சாலையின் ஓரத்திலிருந்து விலகி சற்று உள்ளேயே வந்து விட்டான். கண்ணிமைக்கும் நேரத்தில் அமுதன் உயிரை எடுப்பதற்கென்றே வந்த காலன் மகிழுந்து ரூபத்தில் வந்து உயிரைக் கவர்ந்து சென்றான். ஒரு நொடியில், அமுதன் தன்னை நம்பியிருந்தோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விட்டுச் சென்று விட்டான். அதே நேரத்தில், இந்தியாவில் அமுதனின் குழந்தை, தந்தை பாசத்துடன் யாரோ தன்னை அணைப்பது போல் உணர்ந்து சிரித்தது. அமுதனின் ஆத்மா நினைத்தவுடன் தாய்நாடு செல்வதிற்கு இப்போது எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. |
||||||||||||||||||
by Swathi on 14 Oct 2019 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|